– 2018 – January | தன்னம்பிக்கை

Home » 2018 » January

 
 • Categories


 • Archives


  Follow us on

  மனமே நலம்! மாற்றமே வளம்!!

  டாக்டர்  க. மாதேஸ்வரன்

  மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்

  நிறுவனர், ராயல் கேர் ஸ்பெஸாலிட்டி மருத்துவமனை, கோயம்புத்தூர்.

  மனிதன் தன் வாழ்வில் வெற்றி பெற, சாதனைகள் புரிய, பல்வேறு துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் வல்லமை படைத்தவர்கள் பலர் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள்தான் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு முன் மாதிரியாக வடிவம் பெறுகிறார்கள். அந்த வகையில் இவர் தலை சிறந்தவர் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

  கோவைப் பகுதியில் தலைசிறந்த மருத்துவர்கள் பட்டியலில் இவரைத் தவிர்க்க முடியாது என்பது நிதர்சனம். மருத்துவத் துறையில் காலத்தின் தேவையை அறிந்து, அனைத்து அதிநவீன வசதிகளையும் கொடுக்கும் மருத்துவமனையை நிறுவி மக்களின் தேவையைப் பூர்த்தி செய்து வருபவர்.

  தொடங்கும் எல்லா செயலிலும் வெற்றி, அதற்கு காரணம் இவரின் கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்புத் தன்மை, தூய எண்ணம் போன்ற நல்லொழுக்கங்களைக் கொண்டவர்.

  இத்தனை நற்பண்புகளைக் கொண்டு விளங்கும் ராயல் கேர் ஸ்பெஸாலிட்டி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர்  க. மாதேஸ்வரன் அவர்களை ஒரு அழகிய மாலைப் பொழுதில் நேர்முகம் கண்டோம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை அழகிய கொங்குத் தமிழில் சொன்னார். அதிலிருந்து இனி உங்களோடு பயணிப்போம். கே. உங்களின் பிறப்பும், படிப்பும் பற்றிச் சொல்லுங்கள்?

  ஈரோடு மாவட்டத்திலுள்ள  சித்தோடு பகுதியில் தான் பிறந்தேன். பெற்றோர். திரு. கருப்பண்ணசாமி, திருமதி. வள்ளியாத்தாள். விவசாயப் பின்னணி உடைய குடும்பம்.  என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். அண்ணன் ஒருவர், தம்பி ஒருவர். நான் நடுப்பையன். என்னுடைய மனைவி ஸ்ரீகலா இல்லத்தரசி. மூத்தமகள் மினுமாதேஸ்வரன் காது மூக்கு தொண்டை சம்மந்தமான நிபுணத்துவத் துறையைப் படித்து வருகிறார். இளைய மகள் லலித் சித்ரா பி. எஸ். சி படித்து வருகிறார்.

  எங்கள் குடும்பம் என்று எடுத்துக் கொண்டால், விவசாயத்தைத் தவிர வேறு தொழில் அறியாதவர்கள் என்றே சொல்லலாம். வீட்டில் பால் தரும் கறவை மாடுகளும், தேங்காயும் எப்பொழுதும் இருக்கும். இது தான் எங்கள் குடும்பத்தின் வருமானம்.

  நான் படித்தது என்று பார்த்தால் கோவையிலுள்ள ‘மைக்கேல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தான் படித்தேன். நான் படிக்கின்ற காலத்தில் எனக்கும் என் பெற்றோருக்கும் இடையிலான உறவுமுறை சற்று தூரமாகவே இருந்தது. காரணம் நான் முதல் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை விடுதியிலேயே படிக்கும் சூழல் ஏற்பட்டது. விழாக்காலங்களில் மட்டுமே வீட்டிற்குச் செல்வேன். அப்பொழுது நானும்  என் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்வேன். 11 ஆம் வகுப்பு முடித்தவுடன் பி.யு.சி பட்டப்படிப்பை ஈரோடு சிக்கய நாயக்கர் கல்லூரியல் படித்தேன். நாங்கள் தான் பி.யு.சி பட்டப்படிப்பை இறுதியாகப் படித்தவர்கள்.

  கே. மருத்துவர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் எவ்வாறு எழுந்தது?

  பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுவது தான் பிள்ளைகளுக்குப் பெருமை என்று சொல்வார்கள். என் தாயாரின் விருப்பம் தான் என்னை ஒரு மருத்துவராக மாற்றியது.

  என் தாயாருக்கு நீண்ட நாள் ஆசை. நம் குடும்பத்தில்  யாராவது ஒருவர் மருத்துவர் ஆக வேண்டும் என்பது.  முதலில் என் அண்ணாவிடம் கேட்டார், அவர் மறுத்துவிட்டார். அடுத்து என் தம்பி ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட்டார். இதனால் என்னைக் கேட்ட பொழுது எவ்வித மறுப்பும் சொல்லாமல் சரி என்று சொல்லி விட்டேன்.

  சின்ன வயதிலிருந்தே டாக்டர் என்ற என் தாயாரின் ஆசை என் மனதில் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விட்டது. இதனால் எந்நேரமும் படிப்பு படிப்பு என்றே ஆகிவிட்டது.

  பி.யு.சி முடித்தவுடன் பெங்களூரிலுள்ள எம். எஸ் இராமய்யா மெடிக்கல் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பைப் படித்தேன். படிக்கின்றபோது மருத்துவத்தின் மகத்துவத் தையும், தனித்துவத்தையும் அறிந்தும், புரிந்தும் படித்தேன். மருத்துவராக விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு துறையில் தனித்து அடையாளத் துடன்  வர வேண்டும் என்ற கனவும், ஆசையும் இருக்கும். அதில் எனக்கு மூளைச் சார்ந்த அறுவை சிகிச்சை நிபுணராக வர வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.

  அதன் பிறகு மதுரையில்  நீயூரோ சர்ஜரி துறையைப் படித்தேன். இத்துறையை 5 வருடம் படிக்க வேண்டும். இதையும் வெற்றிகரமாக 2002 ஆம் ஆண்டு முடித்தேன். கே . உங்களின் முதல் மருத்துவர் பணியைப் பற்றிச் சொல்லுங்கள்?

  எம். சி. எச் படிப்பை முடித்தவுடன் தூத்துக்குடியில் மெடிக்கல் கல்லூரியில்  பணியில் முதன் முதலாகச் சேர்ந்தேன். நான் சேர்ந்த பொழுது எனக்குள்ளே சில வரையறைகளை வகுத்துக் கொண்டேன். அது என்னவென்றால்.

  எவ்வித பாகுபாடுமின்றி, நான் கற்றதையும், மருத்துவத்தில் பெற்றதையும் அவ்வாறே வெளிபடுத்த வேண்டும்.

  மருத்துவம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. இங்கு உயர்வு, தாழ்வு, ஏற்ற இறக்கம், நல்லவர், கெட்டவர் என்ற எந்த பாகுபாடுமில்லை. தன்னை நாடி, வருபவர்களை நோயற்றவர்களாக மாற்றவேண்டும் என்பது மட்டுமே சிந்தனையாக இருக்க வேண்டும். இது தான் நான் எடுத்துக் கொண்ட உறுதிமொழி. இன்றும், இனியும் இதையே கடைபிடிப்பேன்.

  தூத்துக்குடியில் பணியாற்றிய பின்னர் 2004 ஆம் ஆண்டு கோவைப்பகுதிக்கு வந்து பயிற்சி மேற்கொண்டேன்.

  கே. ராயல் கேர் ஸ்பெஸாலிட்டி மருத்துவமனை உதயமானது குறித்துச் சொல்லுங்கள்?

  உன் மீது நம்பிக்கை இருந்தால்  வானையும் அளக்கலாம், கடலையும் கடக்கலாம் என்பது தன்னம்பிக்கை பழமொழி. இந்த மருத்துவமனையின் உதயத்திற்கு இது தான் காரணம்.

  நான் மதுரையில் பணியாற்றும் பொழுது டாக்டர் விஜயன் அவர்களின் நட்பு கிடைத்தது. அவரும் நானும் இணைந்து முதலில் ஈரோட்டில் தான் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் ஏதோ ஒரு தவிர்க்க முடியாது சூழலில் அது தடைப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே எண்ணம் உதயமாயின. ஆனால் இந்த முறை எவ்வித சவால்களையும் சந்தித்து விட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதன் பிறகு தான் கோவையைத் தேர்ந்தெடுத்தேன்.

  2012 ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு மருத்துவமனையைத் தொடங்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டேன். இதனால் கட்டடம் கட்ட வேண்டும் முதலில் நிலம் வாங்க வேண்டும், அந்த நிலமும் சரியான இடத்தில் வாங்க வேண்டும், கட்டடம் கட்ட அனுமதி வாங்க வேண்டும், விதிமுறைகளுக்கு உட்பட்டது என்று சான்றிதழ் வாங்க வேண்டும் எப்படி நிறைய வேலைகள் இருக்கிறது. அனைத்தையும் முறையாக கையாண்டு 14 மாதத்திற்குள் கட்டடம் முடிந்து 2016ல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

  கே . தனியார் மருத்துவமனை என்றாலே கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கருத்து நிலவுகிறது, அது பற்றி?

  இக்கருத்தை ஏற்றுக் கொண்டாலும் இதிலுள்ள உண்மைத்தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஒரு மருத்துவமனை கட்ட வேண்டுமென்றால் வங்கியில் மற்ற தொழிற் நிறுவனங்களுக்கு என்ன அடிப்படையில் பணம் கொடுப்பார்களோ அதே அடிப்படையில் தான் இதற்கும் பணம் கொடுக்கிறார்கள்.

  தற்போது அனைவரின் பார்வையும் மருத்துவமனை என்றாலே பணம் சம்பாதிக்கும் தொழிலாகவே பார்க்கிறார்கள். அது மட்டுமின்றி கார்ப்பரேட் மருத்துவமனை என்றால் ஏதோ ஒரு தவறு செய்யும் கூடாரமாகவே பார்க்கப் படுகிறது. நாம் ஒரு தரமான மருத்துவத்தை குறைந்த செலவில்  கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும், மருத்துவ பொருட்களின் விலை மிகவும் அதிகம். இவ்வளவு விலை கொடுத்து ஒரு இயந்திரம் தேவைதானா என்ற வினா கூட எழலாம். ஆனால் இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் இயந்திரத்தில் சிகிச்சையை மிக சுலபமாக பின் விளைவின்றி கையாளலாம்.

  எந்த மருத்துவமனையும் 100 சதவிதம் விலை கூடுதலாகவும் இலாப நோக்கோடும் நடத்த மாட்டார்கள். அதே சமயத்தில் நஷ்டத்திலும் நடத்த மாட்டார்கள். ஒட்டு மொத்த  செலவையும் கருத்தில் கொண்டு கட்டணம் வசூலிக்கப் படுகின்றன. ஒவ்வொரு மருத்துவமனையும் அவர்களுக்கு என்று ஒரு கட்டண மதிப்பீடு இருக்கும்.

  கே . ஒரு மருத்துவமனையின் நிர்வாகம்  எவ்வாறு இருந்தால் அது சாலச் சிறந்தது?

  பிரச்சனைகள் என்பது யாரிடமும் சொல்லிவிட்டு வராது, எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் வரலாம். அவ்வாறு இரவு 12 மணிக்கு வந்தாலும் அவர்களை முறையாக அணுகி,  பிரச்சனையைக் கேட்டறிந்து சிகிச்சை அளித்தல் வேண்டும்.

  மருத்துவமனையை நாடி வருபவர்களின் தேவையை அறிந்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை முதலில் போக்கிக் கொள்ள வேண்டும்.

  அதே போல் சிகிச்சைக்கு வந்தவர்கள் உங்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேற விரும்புகிறேன் என்று சொன்னால் அடுத்த 30 நிமிடத்தில் அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

  நோயாளிகளை அலைகழிக்கக் கூடாது. செவிலியர்களும் நோயாளிகளிடம் அன்பாகவும் அரவணைப்பாகவும் பழகுதல் வேண்டும்.

  இவ்வாறு இருப்பின் மருத்துவமனையின் நற்பெயரை நிலைநிறுத்திக் கொள்ளலாம். கே . மருத்துவர் நோயாளிகளின் உறவு முறை பற்றிச் சொல்லுங்கள்?

  எந்த நோயாளியும் மருத்துவமனைக்கு வருவதற்கு முன் டாக்டர் என்ன சொல்லி விடுகிறாரோ, என்று மனதில் பயத்துடனும், கவலையுடனும் தான் வருவார்கள்.

  முதலில் அவர்களைச் சந்தித்து ஆறுதலாகவும், அன்பாகவும் சில வார்த்தைகளைச் சொல்லி அவர்களின் பயத்தை முதலில் போக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

  நோயாளி டாக்டரைப் பார்க்க உள்ளே வந்தவுடன் அந்தப் பரிசோதனை செய்து விட்டதா? இந்தப் பரிசோதனை செய்து விட்டதா? என்று முதலில் அதை செய்து வாருங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தல் கூடாது.

  மருத்துவமனைக்கு வந்த பின்னர் தான் அவரவர் விருப்பமான கடவுளையே நாடிச் செல்வர். அப்படியிருக்கும் போது நம்முடைய நடத்தையும் பேச்சும் அவர்களை பாதி நோயிலிருந்து விடுவிக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

  டாக்டரிடம் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும். டாக்டரும் இதை கடைபிடிக்க வேண்டும்.

  எந்த மருத்துவரும் தன்னிடம் வரும் நோயாளி முழுமையாக குணம் ஆகிவிடக் கூடாது என்று நினைக்கமாட்டார். தன்னை நாடி வருபவர்கள் அனைவரும் முழு உடல் நலத்துடன் செல்ல வேண்டும் என்பதை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டே இருப்பார்.

  நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லில் தான் இந்த உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. அந்த வகையில் நம்பிக்கையான வார்த்தை தான் நல்ல வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

  மருத்துவர்களும் மனிதர்கள் தான். என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

  கே. ஆங்கில மருத்துவமனையின் தனித்தன்மைகள் பற்றிச் சொல்லுங்கள்?

  ஆங்கில மருத்துவ முறைஎன்று சொல்வதை விட “விஞ்ஞான மருத்துவ முறை’ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

  விஞ்ஞானம் என்பது அறிவியல் பூர்வமாக அறியப்படும் கண்டுபிடிப்பு. இதன் அடிப்படையில் தான் தற்போது மருத்துவ முறைகள் நடை பெற்று வருகிறது. சாதாரண மனிதனுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது என்றால் அவருக்கு அது இதயம் சார்ந்தது மட்டும் தான் தெரியும் ஆனால் ஒரு விஞ்ஞான மருத்துவர் அதை ஆராயும் போது தான் இன்ன பிற பிரச்சனைகள் இருப்பதும் புலப்படும்.

  சர்க்கரை நோயாளிக்கு ஹார்ட் அட்டாக் பிரச்சனை வரும் போது வலிதெரியாது. இதை மற்ற எந்த மருத்துவ முறையிலும் கண்டுபிடிக்க முடியாது. நம் மருத்துவ முறையில் தான் கண்டுபிடிக்க முடியும்.

  ஒருவர் சாலையில் மிதிவண்டியில் பயணித்து வருவதாக வைத்துக் கொள்ளலாம். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி வருகிறது, என்றால் அவருக்கு முதல் உதவி கொடுக்கும் விதமாக, நிச்சயம் விஞ்ஞான மருத்துவரால் மட்டுமே அதற்கான சரியான தீர்வு காண முடியும்.

  24 மணி நேரமும்  டாக்டர்கள், செவிலியர்கள் எப்போதும் இந்த மருத்துவமுறையில்  தான் இயங்கிக் கொண்டேயிருப்பார்கள்.

  கே .மருத்துவ துறையிலுள்ள சிக்கல்கள் அதை எவ்வாறு எதிர் கொள்கிறீர்கள்?

  நிச்சயம், சிக்கல்கள் நிறைந்த துறைதான்.  உதாரணமாக ஒருவர் இரவு 12 மணிக்கு சாலை விபத்தில் அடிப்பட்டு உயிருக்குப்  போராடிக் கொண்டிருக்கிறார். அந்த வழியாக சென்ற யாரோ ஒருவர் அவரை எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்.

  அவர் யார், முகவரி என்ன, எந்த ஊரைச் சார்ந்தவர் என்று எதுவும் தெரியாது. அவரிடமும் அவர் சார்ந்த எந்த அடையாளமும் இல்லை. இத்தருணத்தில் ஒரு மருத்துவராய் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றியாக வேண்டும் இது தான் மருத்துவர் என்பதின் மகிமை.

  அவரின் உயிரைக் காப்பாற்றிய பின்னர், ஏதேனும் ஒரு முறையில் அவரின் வீட்டின் முகவரியை அறிந்து. அவரின் குடும்பத்தினருக்கு தகவல் சொல்லி அவர்கள் வந்த பின்னர், சிகிச்சை செலவை சொல்லும் போது அவர்களின் வறுமையின் காரணமாக கட்டமுடியாத சூழல் ஏற்படலாம். இதை எல்லாம் சமாளித்து தான் ஆக வேண்டும்.

  இப்படித்தான் நிறைய மருத்துவமனைகள் இப்படிப்பட்ட சவால்களை சந்தித்து வருகிறது.

  சில ஊடகங்களும் செவிவழியாக சில செய்தியைக் கேட்டறிந்து தவறான தகவல்களைப் பரப்ப முற்படுகிறது.

  அதே போல் எங்கள் மருத்துவமனை மிகப்பெரிய ஊழியர்களைக் கொண்டது. 1200  பேர் பணியாற்றுகிறார்கள். கூட்டம் எங்கு மிகுதியாக இருக்கிறதோ அங்கு பிரச்சனைகள் மிகுதியாக இருக்கும். அவற்றையும் சமாளித்து ஆக வேண்டும்.

  இப்படி நிறைய சவால்களை சந்தித்தால் தான் சாதனைப் பக்கத்தில் இடம் பிடிக்க முடியும்.

  கே. உங்களின் நேர நிர்வாகம் பற்றிச் சொல்லுங்கள்?

  24 மணி நேரமும் ஓய்வில்லாமல் உழைப்பவர்கள் மூவர், மருத்துவர், காவல் துறையினர், பத்திரிக்கையாளர்கள். இவர்களுக்கு எப்போதும்  ஓய்வென்பதே இல்லை.

  நான் விடுமுறை என்றோ, விழா என்றோ எதற்கும் விடுப்பு எடுத்தது கிடையாது. குடும்பத்தின் இடையே நேர செலவழிப்பு என்பது மிகவும் குறைவு. அதை என்னுடைய மனைவியும் மகள்களும் புரிந்து கொள்வார்கள்.

  ஓய்வென்றே நினைக்க முடியாத தொழில். நான் ஒரு நான்கு நாட்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்கு முன்பே என்னைத் தயார் படுத்திக்  கொள்ள வேண்டும். அதற்கு என்னிடம் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை திட்டமிட்டு குறைத்துக் கொள்ள வேண்டும்..

  அறுவை சிகிச்சை செய்த அடுத்த நாளே வெளியூருக்குச்  செல்ல முடியாது. காரணம் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் வினா எழுப்புவார். டாக்டர் அடுத்த நாளே சென்று விட்டார் என்று வருத்தமும் கொள்வார். இதை எல்லாம் பார்த்து தான் ஒரு மருத்துவர் செயல்பட வேண்டும்.

  கே. உங்கள் மருத்துவர் வாழ்வில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு என்று நீங்கள் நினைப்பது?

  அப்படிச் சொல்ல வேண்டுமென்றால் நிறைய இருக்கிறது. நான் ஒரு மூளை அறுவை சிகிச்சை நிபுணர் என்பதால் நிறைய சிகிச்சை செய்திருக்கிறேன். வயதானவர்கள் முதல் பச்சிளம் குழந்தை வரை சிகிச்சை அளித்துள்ளேன்.

  அதிலும்  ஒரு 14 மாதம் குழந்தைக்கு மூளையில் கட்டியை அகற்றி சிகிச்சை அளித்தது சற்று சவாலாக இருந்தது.

  ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வந்தேன். பணம் கட்டும் இடத்திலிருந்து ஒரு பெண் குரல் டாக்டர் என்றது. திரும்பி பார்த்தேன் ஒரு 20 வயது மதிப்புத்தக்க பெண் என்னைப் பார்த்து ஓடிவந்து என்னை அடையாளம் தெரிகிறதா என்று கேட்டார். எனக்குச் சரியாக நினைவில்லை என்று சொல்லிவிட்டேன். நீங்கள் தான் ஒரு 10 வருடத்திற்கு முன்னால் என்னுடைய மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்றுனீர்கள் என்று தற்போது நான் கல்லூரியல் படிக்கிறேன் என்ற தகவலையும் சொன்னார் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

  ஓரு மருத்துவராய் இதைத் தவிர என்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது. இப்படி எண்ணற்ற நிகழ்வு இருக்கிறது.

  கே . இத்தருணத்தில் நன்றிக்குரியவர்கள் என்று நீங்கள் பார்ப்பது?

  என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் நன்றிக்குரியவர்கள் என்று பார்த்தால் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் என்னுடைய பெற்றோர்கள், அவர்கள் இல்லை என்றால் இன்று ஒரு மருத்துவராக நிச்சயம் ஆகியிருக்க முடியாது. அடுத்து என்னுடைய மனைவி ஸ்ரீகலா, மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று சொல்வது உண்மை தான். என் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களையும், ஏற்ற இறக்கங்களையும் அறிந்து நான் சோர்ந்து போகும் காலத்தில் எல்லாம் என்னுடைய கரமாக இருந்து செயல்படுத்தியவர். வீட்டில் நல்ல மனைவியாக, குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருந்து வழி நடத்துவதில் சிறப்பு பெற்றவர்.

  ராயல் கேர் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு விழாவில் ராயல் கேர் என்ற பெயரில் சுகாதார பராமரிப்பு தொடர்பான செய்தி மடலை நரம்பியல் நிபுணர் டாக்டர் கே.விஜயன் வெளியிட மருத்துவ இயக்குனர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்த செய்தி கடிதம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு வரும். என்னுடைய மச்சான் கே.பி. அளகேசன், டாக்டர் கே.சொக்கலிங்கம் இருதய சிகிச்சை நிபுணர் இவர்கள் இருவரும் ராயல் கேர் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இப்பொழுது வரை மருத்துவ மனைக்கு தூண்டுகோளாய் விளங்குகிறார்கள்.

  மிகவும் போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரிய கே.எம்.சி. எச் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் நல்ல பழனிச்சாமி அவர்களை நிச்சயம் இந்த இடத்தில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

  கே. இன்றைய இளம் மருத்துவர்களுக்கு உங்களின் ஆலோசனை?

  எதைச் செய்தாலும் 100 சதவீதம் உண்மையாகச் செய்தல் வேண்டும். மருத்துவர் என்பவர் கடவுளுக்கு ஒப்பானவர். இப்படியிருக்கும் போது இதன் மகத்துவத்தை புரிந்து நடத்துதல் வேண்டும்.

  நோயாளி குறித்தான அத்துணைத் தகவல்களையும் அவரின் உறவினரிடையே முன் கூட்டியே சொல்லி விட வேண்டும்.

  நாமும் எந்த நோயாளிக்கு என்ன சிகிச்சை அளிக்க போகிறோம் என்பதையும் சொல்லி விட வேண்டும்.

  கே. தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

  ஒரு முறைமட்டும் முயன்றவர்கள் யாராலும் வெற்றி பெறமுடியாது. தொடர்ந்து யார் முயன்று கொண்டேயிருக்கிறார்களோ அவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெருகிறார்கள். இதனால் எதையும் முடிக்க முடியும் என்ற உத்வேகம் உங்களுக்குள் எப்போதும் இருக்க வேண்டும்.

  ஒரு வேலையை எடுத்துக் கொண்டால்  அதை வெற்றி பெறும் வரை அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

  கே. நீங்கள் செய்த, செய்கின்ற சமூக சேவைகள் பற்றி?

  எங்கள் மருத்துவமனையில் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் எங்களுக்கு உதவி செய்த மற்றும் எங்களிடம் சிகிச்சை பெற்றவர்களை அழைத்து 1000 பேர் கொண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்தோம்.

  அவ்விழாவில் “”உயிரின் சுவாசம்” என்ற தலைப்பில் ஒரு அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் மரம் நடுதல் பணியைச் செய்து வருகிறோம்.

  முதல் கட்டமாக 10000 த்திற்கும் மேற்பட்ட மரங்கள் நட்டுயிருக்கிறோம். 2022 ஆம் ஆண்டுக்குள் கோவை மற்றும் ஈரோடு பகுதியில் 2 கோடி மரங்கள் நட வேண்டும் நிச்சயம் இதை நடத்தி காட்ட வேண்டும்  என்ற வேகத்துடன் செயல்பட்டுவருகிறோம்.

  மாதம் 3 இலட்சம் மரம் வீதம் நடவேண்டும். இதை எல்லாம் என்னுடைய மருத்துவமனையில் நான் செய்யும் வேலையில் கிடைக்கும் வருமானத்தில் 20 சதவீதம் இதற்காக செலவிடுகிறேன்.

  ராயல் கேர் உயர் சிறப்பு மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சமீபத்தில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பொது மக்கள் பயன் பெரும் வகையில் 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மருத்துவமனையில் பதினைந்து சிறப்பு மருத்துவப் பிரிவுகள் சார்பில் சிறப்பு மருத்துவக் கண்காட்சி நடைபெற்றது.

  பல்லாயிரக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவத் துறையின் நவீன சிகிச்சை முறைகளை அறிந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் நடைபெற்றவிழாவில் சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில் திருமதி. தாரிணி, திரு. பாலசுப்ரமணியம், கோவை மண்டல மேலாளர், மற்றும் மேலாளர் மற்றும் சூலூர் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் மாதப்பூர் பாலு கலந்து கொண்டார்.

  விழாவில் முத்தாய்ப்பாக மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சையின் மூலம் மறுவாழ்வு அடைந்தார்கள் மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவத்தை அறியும் வகையில் 150 நபர்களுக்கு மூன்று இலட்சம் கட்டணமில்லா சிகிச்சை பெரும் ஸ்டார் மருத்துவக் காப்பீடு பத்திரத்தை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் இலவசமாக வழங்கினார். மேலும் ஊழியர்கள் கலை மற்றும் விளையாட்டுத் துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

  இந்த இதழை மேலும்

  ஆறும் நீரும்

  ஆறாகஆசை:-

  ஆற்றின் அழகைபாடாத அருந்தமிழ் கவிஞர்கள் இல்லை.  அது பிரமிக்கச் செய்கின்றது.  ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்ற பழமொழி நாம் அறிந்ததே.  வாழ்க்கையே ஒரு ஆற்றைப் போலத்தான் என்று கனியன் பூங்குன்றனார் கூறியுள்ளார்.  அதை உணர ஆசைப்படுகின்றோம்.  அதுவே ஆறாக ஆசை, அதுவும், ஆறாத ஆசை!  ஆறும் நீரும் என்கின்ற இக்கட்டுரை, வழக்கத்திலிருந்து சற்றே மாறுபட்ட பயணக்கட்டுரை.

  இக்கட்டுரையில்  ஆரம்பிக்கும் பொழுது ஒருகாவிரி ஆற்றை நோக்கிய பயணம் இருக்கும்.  அதில் இடையிடையே கற்பனை கலந்த மருத்துவ சிகிச்சை குறித்த கதை ஒன்று சேர்க்கப்பட்டு உள்ளது.  இரண்டுமே உண்மைக்கதை இல்லை.  கற்பனையானதே.  உண்மை போல தோன்றினால் அது கற்பனையின் வெற்றியே. இலக்கியச் சுவைக்காக மட்டுமே இக்கட்டுரை படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துக் கொண்டு ஆற்றில் நீந்துவதை தொடர்கிறோம்… 

  ஆற்றின்போக்கு:-

  சென்னை வாழ் வாழ்க்கையிலிருந்து காரணம் ஏதுமின்றி காரணாம் பாளையம் செல்வோம் என்று நமக்கு தெரியாது. காரணாம் பாளையம்… 17.09.2017… அந்த தேதியில் அந்த ஊரில் இருப்போம் என்பது கொஞ்ச நாட்களுக்கு முன்பு யாராவது சொல்லி இருந்தால் நகைச் சுவையாக இருந்திருக்கும்.  நிஜத்தில் எந்த நாளில் எந்த ஊரில்  இருப்போம் என்பது யாருக்கும் தெரிவதில்லை.  புதுப்புது செய்திகள் நமக்கு திடீரென தெரிய வருகின்றன. 

  இப்படித்தான் நம் நண்பர் வான் முகில் உடைய தந்தைக்கு பெரைட்டல் பகுதியில் மூளையில் கட்டி ஒன்று இருப்பது திடீரென ஒரு அதிகாலையில் கண்டறியப்பட்டது.  அது அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த கண்டுபிடிப்பு.  அந்த சமயத்தில் மருத்துவமனை பதிவு ஆவணங்களை படித்தோம். அதிலுள்ள ஆங்கில வாசகங்களில் சுயநினைவோடும் குழப்பத்திலும் இருக்கிறார் என்று எழுதப்பட்டு இருந்தது.  குழப்பம் என்பது என்ன?  என்று கலந்துரையாடல் வளர்ந்தது.  உடன் மருத்துவம் படித்த நண்பர் இருந்தார்.   அறிவுச்செல்வன் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் பத்தாண்டுகளுக்கு முன்பு மருத்துவப் படிப்பை தவமாக மேற்கொண்டவர்.  தான் ஒரு நடமாடும், பெயருக்குரிய, உதாரணமாக நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் வலம் வருபவர்.  நண்பர் மருத்துவர் அறிவுச்செல்வனுக்கு அறிமுகம் கொடுக்கவே தனியாக ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்றாலும் சூழ்நிலையின் தீவிரம் கருதி சூளகிரி அருகேயுள்ள பால கொண்ட ராயனதுர்கம் மலை மீது ஏறிய பொழுது சக மலையேற்றப் பயணி அங்கயற்கண்ணி அவர்கள் மயங்கி விழுந்த பொழுது… இதுதான்… 

  அப்பொழுதுதான்…  சின்கோ பல்ஷாக்… (Syncopal shock) இரத்தச் சுற்றோட்ட அளவு குறைவதால் ஏற்படும் அதிர்ச்சி என்கின்ற தொழில் நுட்பச் சொல்லை பரிட்சயப்படுத்தி வைத்தார் அறிவுச்செல்வன்.  அத்தோடன்றி பதட்டப்பட வேண்டாம் என்று கைகால்களை சூடுபறக்கத் தேய்த்து, தரையில் சாய்வாக படுக்கச்செய்து… தரையில்… செய்து… அதன் பின் கைகால்களை என வரவேண்டும்.  சற்று கண்களை திறந்தவுடன் அங்கயற்கண்ணியை மீதி மலையும் நடந்து இறங்கி கடக்க வைத்த அற்புதச் செல்வன் ஆபத்பாந்தவன் இந்த மருத்துவர்.  இப்படி நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் சின்னச்சின்ன அறிமுகக்கதைகள் சொல்லுமளவு நம்வாழ்க்கை ஆறுகொப்பளித்துக் கொண்டு அதன் போக்கில் போய்க் கொண்டிருக்கின்றது. 

  இக்கட்டுரையில் காரணாம் பாளையத்திற்கு நண்பர் அறிவுச்செல்வனை அழைத்த பொழுது விட்டுவிட்டு அதன் பின்னர் காரணமின்றி அழைத்துச் செல்லவில்லையே என்றுஅ ன்புக் கோபம் காட்டினார்… அவரது ஜிம் அறிவுரைகள் மூலமாக உடற்பயிற்ச்சிக்கு உதாரணம் காட்டினார்…  இப்படி பல செய்திகளை சொல்ல வேண்டும் என்றாலும்… இந்த நடமாடும் உண்ணத் தேவையில்லாத, உணரத் தேவைப்படுகின்ற ஊக்க மருந்தை விட்டு…  நம்கதைக்குள் செல்வோம்…

  நரம்புச் செயலியல் மற்றும் நரம்புஅறுவைசிகிச்சை:-

  வான்முகில் அவருடைய தந்தையின் பெயர் சொற்கோ.  சொற்கோ அவர்களின் பாத்திரப்படைப்பு இன்னும் சற்றுத் தள்ளி காட்டப்படும்.  இங்கே அவரது மருத்துவப் பரிசோதனையின் ஆரம்பநிலையை எழுதியிருக்கிறோம்.  நியூரேபிஸிஷியன்கள் இப்படி தங்களது ஆரம்ப முதல் கட்ட விவரங்களை குறிக்கின்றனர்.   தான் எங்க இருக்கிறோம், தனது பெயர் என்ன?  இன்றைய நாள் என்ன போன்ற அடிப்படை விவரங்களை மூளை தனது நினைவு சேமிப்பிலிருந்து உடனுக்குடன் எடுத்து தரவில்லை… என்கின்ற பட்சத்தில் குழப்பத்தில்… அதாவது ஒருங்கிணைப்பு இல்லாத நிலையில் இருக்கிறோம் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.  அந்த நிலை ஒருமோன நிலை என்று மூளையில் காணும் கட்டி கண்டறியப்படாத நிலையில் கருதலாம்.  ஆனால் சாதாரண சி.டி. ஊடு கதிர் தேடல் பதிவிலும், அடர்த்தி அல்லது பண்பு வேறுபடுத்தி அறியும் கான்ட்ராஸ்ட் (Contrast) ஊடு கதிர் நிழல் படத்திலும் மூளையின் பின்பாகத்தில் ஒரு ஆரஞ்சுப்பழ அளவிற்கான கட்டி இருப்பது நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன், உள்ளங்கை நெல்லிக்கனியென தெரியவந்தது எங்கள் அனைவர் மனதிலும் ஒரு பெரிய அழுத்தத்தை கொடுத்துக் கொண்டே இருந்தது.

  சொற்கோ அவர்கள், எழுபது வயதை தாண்டியிருக்கிறார். பூரண ஆரோக்கியமாக அவர், எனக்கு அறுவை சிகிச்சை செய்துவிடப் போகிறீர்கள்  வேண்டவே, வேண்டாம்…” என்று வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கலக்கத்துடன் அறிவுறுத்திக் கொண்டே இருந்தார்.  சிறுகுழந்தை போல காணப்பட்டார்.  அறுவை சிகிச்சை தவிர வேறுவழி இருப்பதற்கான சாத்தியக் கூறுகளை மருத்துவர்களால் மிக குறைவாகவே கண்டறிய முடிந்தது.  மூக்கின் வழியாக எதாவது நுண்குழாய் செலுத்தி துளையிட்டு அந்த கட்டுப்பாடின்றி வளர்ந்துள்ள கட்டியினை எடுத்துவிட இயலுமா?  எனில் அதற்கான வாய்ப்பு நெற்றிப்பகுதியில் இருக்கின்ற கட்டிகள் என்றால் அகற்ற முடியும்.  ஆனால் பின் மூளையில் வளரும் இந்தக் கட்டியை மண்டை ஓட்டை பிரித்துத்தான் அணுக முடியும் என்று பேச்சு வளர்ந்தது.

  சொற்கோ அவர்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்திருக்கிறார். இரண்டு நாட்கள் முன்பு, வழக்கமான சுற்றுப்பயணத்தில், அமெரிக்காவில் இருந்த பொழுது சற்றே தலைவலி, கொஞ்சம் ஞாபக குழப்பம் மற்றும் சிறு சிறு கைகால் இயக்ககுளறுபடிகள் தோன்றியிருக்கின்றன.  அந்த வயதிற்கான சாதாரண நிகழ்வுகள் என்று விடுபட்டுப் போயிருக்கலாம். 

  இருந்தாலும் ஒரு பரிசோதனை செய்து பார்த்துவிடலாம் என்று மருத்துவமனையை அனுகிய பொழுது தான் மேற்கண்ட சிக்கல் தெரிய வருகின்றது.  வாழ்க்கை என்பதுஎன்ன?  வெறும் நினைவுகள் தானே?

  வழியும் வலியும் அறியா மூளை:-

  தான் யாரென மறந்து போய் விடில் பிறகு வாழ்வில் என்ன மீதம் இருக்கும்?  என்பது போன்ற தத்துவ நினைவுகள் அந்த நவீன மருத்துவமனையின் விதவிதமான கருவிகளுக்கு இடையே நினைவில் வந்துபோயின.  மூளை செல்களுக்கு உணர்ச்சி நரம்புகள் இல்லாததால் அது வெட்டி எடுக்கப்படும் பொழுது வலியை நாம் உணர்வதில்லை என்கின்ற மருத்துவரின் குரல் நம்மை கற்பனை உலகத்திலிருந்து நனவுலகத்திற்கு அழைத்துவந்தது.  சில நேரங்களில் தேவையான அளவும் வடிவமும் உள்ள மண்டை ஓட்டு துண்டை வெட்டி எடுத்து குளிர்பதன பெட்டியில் வைத்துவிட்டு உள்ளே உள்ள மூளையின் நோய்வாய்ப்பட்ட புற்றுநோய் செல்களை பயாப்ஸி செய்து எடுத்து அந்த செல்களின் பேதாலஜிக்கல்சேஞ்சஸ் (Pathological Changes) என்ன என்ன என்று பார்க்க கொடுத்துவிடுவார்களாம்.  அந்த பரிசோதனை எல்லாம் முடிவுற்ற பிறகு அதற்குரிய மருத்துவ முறைகளை முடிவு செய்து புற்று நோய்ப் பகுதியை முழுவதுமாகவோ அல்லது சிறிது சிறிதாகவோ ஒரே சமயத்திலோ அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியிலோ அதனை வெட்டியோ, உறுஞ்சியோ எடுக்கவேண்டும் என்று முடிவு செய்வார்கள்.  இலத்தீன் மொழியில் இருந்து ஆங்கில மொழிக்கு வந்து தமிழ் மொழிக்குள் நிறம்மாறி இறங்கிக் கொண்டிருக்கின்ற அறிவியல் கலைச்சொற்களை இயன்ற அளவு தவிர்க்கலாம் என்று தான் முயற்சித்தோம்.  ஆனாலும் அவை விடுவதாக இல்லை.

  இந்த இதழை மேலும்

  ஒன்பது வயதிற்குள் முதல் நூல் வெளியிட்ட முதல் சிறுவன்

  சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், முத்தம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த  செல்வக்குமார்-விஜயலட்சுமி தம்பதியருக்கு பிறந்த மகன் பெயர் மதுரம் ராஜ்குமார் மகள் ஜெசிகா. வாழப்பாடி ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படிக்கும் “செ. மதுரம் ராஜ்குமார்”இளம் கவிஞராவார்.

  தலைப்பு  ஒன்று கொடுத்து “கவிதை தா”என்றால் உடனே கவிதை எழுதி தரும் திறன்  இவருக்கு உண்டு. இது வரை பள்ளி அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகள் , கட்டுரைப் போட்டிகள் ஓவியப் போட்டிகள், கவிதைப் போட்டிகள் ,கையெழுத்துப் போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் கலந்து கொண்டு பல பரிசுகளும் பாராட்டுச் சான்றுகளும் பெற்றிருக்கிறார்.

  குழந்தை “எனும் கவிதைத் தொகுப்பு நூலில் இவரது முதல் கவிதை வெளியானது. இதில் அவர் எழுதிய,

  அம்மாவில் பாதி அப்பா

  அப்பாவில் பாதி அம்மா

  இரண்டும் சேர்ந்த கலவைதான்

  குழந்தை’

  வரிகள் பாராட்டப்பட்டன.

  தொடர்ந்து வாசித்தும் கவனித்தும் எழுதி வந்தவர். கடந்த 26.11. 2017 அன்று கோவையில் நடந்த விழா ஒன்றில் தனது முதல் கவிதை நூலினை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தினார்.

  ஒன்பது வயதில் முதல் நூல் வெளியிட்ட முதல் சிறுவன் இவராகத்தான் இருக்கும். 64 பக்கங்களுடன் உள்ள நூல் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும். எழுத்தில் இருக்கும் முதிர்ச்சியைக் கண்டு  நிச்சயம் பெரியவர்களும் வியக்க கூடும்.

  இளம் கவிஞர் செ. மதுரம் ராஜ்குமார் அவர்கள் இளம் வயதில் நூல் வெளியிட்டதை பாராட்டுகிற வேளையில் நம் குடும்பத்தில் இருக்கும் குழந்தைகள் சிறுவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் படைப்புகள் ஆகியவற்றை ஊக்குவிக்க வேண்டும். 

  நம் பிள்ளைகள் நம்மை விட சாதனையாளர்களாக வர வேண்டும் என்று ஒவ்வொரு தாய்- தந்தையும் கனவு கண்டால், வரும் காலத்தில் சிறுவர்களுக்கான இலக்கியம் சிறுவர்களிடத்தில் இருந்தே கிடைக்கும் என்பது உண்மை.

  இளம் கவிஞர் செ. மதுரம் ராஜ்குமார் இன்னும் பல நூல்களும் காவியங்களும் படைக்க வாழ்த்துகிறோம்.

  மகனின் கவிதைகளை நூலாக கொண்டு வந்த அவரது தந்தை செல்வக்குமார் தனியார்  பால் பண்ணை ஒன்றில் பாதுகாவலராகப் பணியாற்றி வருகிறார். ஒழுகும் கூரை வீட்டில் இருந்தாலும் தன் மகனின் கவிதையை புத்தகமாக்கிய அவருக்கும் கவிதை மீது மிகுந்த ஆர்வம் உண்டு.

  இளம் கவிஞர் செ. மதுரம் ராஜ்குமாருக்கு  தாய்-தந்தை மற்றும் குடும்பத்தார் அனைவரும் அனைத்து விதத்திலும் உற்ற நண்பர்களாக இருக்கிறார்கள்.

  நூல் வெளியிட்டு வாழ்த்திய திரு. மு. ஆனந்தன் வழக்கறிஞர், த. மு. எ. கலைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் அவர்கள் பதிவு செய்த வாழ்த்து செய்தி:

  9 வயது சிறுவனின் கவிதை நூல் வெளியீட்டு விழா என்று அழைத்தார்கள்… சிறுவன் என்றவுடனே மகிழ்ச்சியுடன் ஒத்துக்கொண்டேன்..   அவன் பெயர் மதுரம் ராஜ்குமார்.. கவிதை நூல் – நல்விதையின் முதல் தளிர். நேற்று விழாவிற்கு போய் பார்த்தால் அதிர்ச்சி.. ஆச்சரியம்..  அந்தக் கவிஞர் சிறுவன் இல்லை..  குழந்தை.. பால் முகம் மாறாத 9 வயது குழந்தைக் கவிஞர்..  மேடை பக்கமே வராமல் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.. நூல் வெளியிடும் போது அழைத்து வந்தார்கள்..  அப்படியே அவனை நான் தூக்கிக் கொண்டேன்..  இந்தக் குழந்தைக் கவியை தூக்கி வைத்து கொண்டாடுவதுதானே சரியாக இருக்கும்… 

  இந்த இதழை மேலும்

  இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்

  இளம்பருவ நிலை என்பது குழந்தையின் மனநிலைக்கும், சுதந்திரமாக செயல்படும் முதிர் பருவத்திற்கும் இடைப்பட்டது. ஹார்மோன் சுரப்பியினால் பருவநிலை அடையும் போது இந்த இடைப்பட்ட நிலை ஏற்படுகிறது. இந்த காலத்தில் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. சூழ்நிலையினைப் பொறுத்து சந்தோஷம், கவலை நிலைமை ஏற்படுகிறது. சில சூழ்நிலைகள் மனநிலை பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

  முன் இளம்பருவத்தில் குழந்தைகள் பெற்றோர்களைச் சார்ந்தும் பின் இளம் பருவத்தில் அதிகமாக நண்பர்களிடமும்  நேரம் செலவிடுவார்கள். நண்பர்களிடம் வெளிப்படையாகப் பேசுவதின் மூலம் திருப்தி யடைவார்கள்.

  இளம்பருவத்தில் ஏற்படும் மனநிலை மாற்றம் சாதாரணமாக அனைவருக்கும் ஏற்படும். இதைப்பற்றி சமூகத்தில் அவ்வளவாக அக்கறைகாட்டுவது இல்லை. இந்நிலையில் ஏற்படும் மனநிலைக்கு ஆதரவு கண்டிப்பாக அவசியம்.

  இந்நிலையில் இளம்பருவத்தினர் அடுத்தவரிடம் உதவிகளை ஏற்கமாட்டார்கள். அதேசமயம் தனிமையாக ரகசியமாக, நம்பிக்கை இருக்கும் போது அவர்களுடைய மனநிலையை வெளிப்படுத்துவார்கள்.

  முதல்நிலை உதவியாளர்கள் அவர்களுடைய கடமை, மனநிலையை ஆராய்ந்து அதற்கான தேவைகளை நிறைவேற்றவேண்டும்.

  மனஅழுத்தம் இளம்பருவத்தில் ஏற்படும்போது அவர்கள் புகைபிடிப்பது, குடிப்பது, சத்தான உணவு சரியான நேரத்தில் எடுக்காமல் மற்றும் அடிக்கடி உடற்பயிற்சி, இதனால் நோய்வாய்ப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. அதனால் சரியான நேரத்தில் ஆராய்ந்து, சிகிச்சை அளிப்பதினால் இதைத் தவிர்க்கலாம்.

  குழந்தை மருத்துவர், சூழ்நிலையின் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள் (குடும்பத்தில் படிப்பு, வேலை, நண்பர்களின் பழக்கத்தில், மருந்து, உடலுறவு, தற்கொலை, மன அழுத்தம்) ஆராய வேண்டும். குழந்தை மருத்துவர் குழந்தையின் உணர்ச்சி கட்டுபாட்டு நிலையை ஆராய்ந்து அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும்.

  பொதுவாக இளைஞர்களுக்கு உருவாகும் மனநோய்

  இளைஞர்களுக்கு உருவாகும் மனநோயின் வரையறை

  • சிறுவயதில் தெரியாத மனநோய் இளமை பருவத்தில் தெரியவரும்.
  • (எ.கா) சுபாவத்தில் ஏற்படும் குறைபாடு, அதிவேக திறன் கொண்ட எண்ணச்சிதைவு நோய் பொதுவாக இளைஞர்களுக்கு ஏற்படும் மனநோய்
  • இளமைப் பருவத்தில் தோன்றும் சில குறைபாடுகள் நோயாளியை முழு நோயாளியாகவும், மேலும் இறப்புக்கும் இட்டுச் செல்லும். மனஅழுத்தம், கோபம், எண்ண சுழற்சி, மன அளவில் உடலில் நோய் இருப்பதாகக் கருதுதல் போன்றவை சரியான முறையில் கண்டுபிடித்துக் குணப்படுத்தலாம்.
  • இளமைப் பருவத்தின் தொடக்கத்திலேயே மனநோயின் அறிகுறிகள் தெரியவரும். அவை மனச்சிதைவு, மனமாற்றநோய். இந்த வகையான நோய்கள் இங்கே ஏதும் கூறப்படவில்லை.
  • மேலோட்டமாகக் காணப்படும் இரண்டாம் வகை மனநோயை நோயாளியின் தோற்றம், மருத்துவக் கண்டுபிடிப்புகளின் மூலம் குழந்தை மன நல மருத்துவர் கண்டுபிடிக்கலாம்.
  • நோயாளியின் குறைபாட்டை பெற்றோர் மூலமாகவோ அல்லது இளம் பருவத்தினரின் நடைமுறையிலோ கண்டறியலாம்.
  • பெற்றோர், சக நண்பர்கள், ஆசிரியர் மூலமாகவோ நோயாளியின் மன நலக் குறைபாடு அதிகபட்சம் சமூகத்திற்குத் தெரியவரும்.
  • மேலும் இந்த அறிகுறிகள், மனநலக் கண்டுபிடிப்பு ஆகியவற்றைக் கொண்டு மனநோயைச் சரிசெய்வதே நோக்கமாகும்.

  இளைஞர்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம்

  இளைஞர்களுக்கு ஏற்படும்  மனஅழுத்தம் வயது, பால், சமூக வகுப்புகளுக்குத் தொடர்பு உடையவை.

  வயது வந்த பெண்கள் 2-3 முறைஆண்களைவிட அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். வறுமை நிலையும் மனஅழுத்தம் நோய் வர ஒரு காரணமாகும்.

  குடும்பத்தில் யாரேனும் மனஅழுத்தத்தால் பாதிக்கப் பட்டால், அந்த குடும்ப நபர்களுக்கும் நோய் வரும் வாய்ப்பு உள்ளது.

  சுற்றுச்சூழல் காரணிகளான வருமானம், குடும்பத்தில் ஏற்படும் நிலையற்றதன்மை, ஒதுக்குதல், பெற்றோர்கள் பிரிந்திருத்தல், விவாகரத்து போன்றவையும் முக்கியக் காரணங்களாகும். 

  மனஅழுத்தத்தின் காரணிகள்

  மன அழுத்தத்தின் முக்கிய காரணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் குறைந்தது ஐந்து அறிகுறிகள் இரண்டு வாரங்கள் இருந்திருக்க வேண்டும்.

  ï தனிமை

  ï சோர்வு

  ï விரக்தி

  ï வேலைகளில் ஈடுபாடு இல்லாமை

  ï பொழுதுபோக்குகளில் விருப்பம் இல்லாமை

  ï எடை குறைதல் (சிலருக்கு)

  ï எடை கூடும் (சிலருக்கு 5 கிலோ வரை)

  ï பசியின்மை (சிலருக்கு)

  ï பசி அதிகரித்தல் (சிலருக்கு)

  ï தூக்கமின்மை (சிலருக்கு)

  ï தூக்கம் அதிகரித்தல் (சிலருக்கு)

  ï தேவையற்றஅச்சம்

  ï கல்வியில் பின்தங்கி இருத்தல்

  ï சமுதாயத்திலும், வேலைகளிலும் ஈடுபாடு இன்மை

  ï பிரியமானவர்களின் இழப்பின் காரணமாகவும் வரலாம்

  ï தற்கொலைக்கு முயற்சித்தல்

  ï மனநோய்க்கான அறிகுறிகள் வரலாம்

  மனஅழுத்தத்திற்கான காரணங்களை நான்கு வகையாக பிரிக்கலாம்

  ï பழக்கவழக்கம் (ஈடுபாடின்மை)

  ï சிந்தனைகள் (முடிவுஎடுக்க இயலாமை)

  ï உடல்ரீதியான (தூக்கமின்மை, அதிகமான தூக்கம்)

  ï மனரீதியான (செயலற்றதன்மை)

  குழந்தைகளுக்கான மனஅழுத்த காரணிகள்

  ï கல்வியில் பின்தங்குதல்

  ï விருப்பம் இல்லாமை

  ï ஊக்கம் இன்மை

  ï சோர்வு

  ï அதிகமான தூக்கம்

  தவறான நம்பிக்கை மற்றும் தவறாகப் புரிந்து கொள்ளுதல். இவை இரண்டும் மனநோய்க்கான காரணங்கள்.

  பரிசோதனை

  மனச்சோர்வை கண்டறிய ஆய்வுக்கூடச் சோதனை முறை பயனளிக்காது. ஆனால் தைராய்டு, இரத்தசோகை போன்றவற்றைக் கண்டறிய உதவும். மனஅழுத்தம் போன்று தோன்றும் மற்ற நோய்கள் (Differential Diagnosis)

  ஒத்திசைவில்லா மனநிலை (Adjustment disorder)

  மனச்சோர்விற்கான அறிகுறி மூன்று மாதங்கள் வரை இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் மேலோங்கிய நிலையில் காணப்படும்.

  அதிவிரைவு செயல்திறன் குறைபாடு

  எதையும் யோசிக்காது, எதிலும் கவனமின்றி வேகமான முறையில் வேலையில் ஈடுபடுதல்.

  கற்றலில் திறன்குறைவு (Specific learning disability)

  கற்றலில் தன்திறனை மேம்படுத்த முயலாத நிலையில் அது குறித்த சிந்தை இன்றி மனச்சோர்வடைதல்.

  நன்னடத்தை இல்லா மனநிலை (Conduct disorder)

  தன்நிலை மறந்து உடன் இருப்போர், விலங்குகள், பொது சொத்துகள் மீது வன்முறை பிரயோகிப்பது. திருட்டுக் குற்றங்களில் ஈடுபடுதல் மிகக் கொடூரமான முறையில் வன்முறை பிரயோகிக்கும் மனநிலையில் சமூக, சுயஅறிவு முதலிய விஷயங்கள் முறைஇன்றி இளம் வயதினரிடையே ஏற்படுத்தும் மாறுபட்ட மனநிலை இது.

  இந்த இதழை மேலும்

  உள்ளத்தோடு உள்ளம்

  2018 ஆம் ஆண்டின் வருகைக்காகக் காத்திருக்கும் அன்பு தன்னம்பிக்கை வாசக நண்பர்களே! அன்பர்களே..!

  2017 ஆம் ஆண்டில் நாம் என்ன சாதித்தோம், போதித்தோம். நம் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என்ன ஏற்றம் என்ன, நாம் சந்தித்த மனிதர்கள், அவர்களிடமிருந்து கற்றுக்  கொண்டது என்ன என்பதை மீண்டும் ஒரு முறை சிந்தியுங்கள், இதுவரை சிந்திக்கவில்லை என்றால் மீண்டும் உங்களுக்கு ஒரு நிமிடம் தருகிறேன், சிந்தித்துக் கொள்ளுங்கள்.

  இந்த உலகமே நம்பிக்கையின் அடிப்படையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் ஒரு பாதையில் பயணம் செய்து நமக்கான வழியைத் தேடிக் கொள்கிறோம்.

  மனிதர்களுக்குள் ஏற்ற இறக்கம், உயர்வு தாழ்வு இருக்கக்கூடாது. உன்னை போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும். ஐந்தறிவு உயிரினங்களே, அன்பைப் போதிக்கும் பொழுது. அறிவு என்னும் ஆறாம் அறிவை நாம் பெற்றிருக்கிறோம்.  மற்ற உயிரினங்களைக் காட்டிலும் மனித இனம் மகத்தானது. அதன் உண்மையை நாம் தான் உணர வேண்டும்.

  நாம் அனைவரும் தன்னம்பிக்கையுள்ளவர்கள், மண்ணை முட்டும் விதையாய், புதிதாய் ஈன்ற கன்றாய், முட்டையை உடைத்தெரிந்து வரும் பறவையாய், எதிர்நீச்சல் போடும் மீனாய் நாமும் இவ்வுலகத்தை வெல்ல வேண்டும் என்றால் போராடி தான் ஆக வேண்டும். ஒரு முறை போராடி வென்று பார், இவ்வுலகம் எத்தகைய இன்பமானது என்று தெரியும்

  இந்நேரத்தில் எங்களின் கரங்களாக செயல்பட்டு வரும் வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், கட்டுரை ஆசிரியர்களுக்கும், இதழுக்கு உறுதுணையாக நிற்கும் பிற நல் உள்ளங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  புதிய வருடமே புகழைச் சேர்…

  புதிய வருடமே வருக ! புத்துணர்வுத் தருக!

  புதுமையும் புத்துணர்ச்சியும் மேலோங்க

  எண்ணிய செயல்கள் அனைத்தும் நிறைவேற

  ஏற்றமிகு வாழ்வு வளம் பெற நலம் பெற…

  நோய் நொடியற்ற நல்ல தேக ஆரோக்கியம் கிடைக்க

  தெளிவான முடிவும் தெவிட்டாத இன்பமும் அமைய

  மும்மாரி பொழிந்து வேளாண்மை செழிந்து

  விவசாயும் வளர்ந்து கவலைகள் கலைந்து

  எங்கு சுவாசித்தாலும் வறுமை வாசனையின்றி

  வளமை வாசனையோடு வளத்தையும் வசதியும் தருக

  உணவில்லாமல் எங்கும் குழந்தைகளின் அழகுரல்

  ஓசை காதில் கேட்கா வண்ணம் அன்னத்தை அருள்க

  அன்பும் அரவனைப்பும் பண்பும் பாசப்பிணைப்பும்

  எல்லா உயிர்களிடத்திலும் முழுமையாக செலுத்த

  கோபம் தாபமில்லா உற்றார் உறவினரை நேசிக்க

  உயர்ந்தோர் தாழ்ந்தோர் வேற்றுமை கலைந்திட

  பொய் பேராசை களவு காமம் தகர்த்தெரிந்து

  அன்பு பண்பு பாசம் நேசம் குறிப்பறிந்து

  அளவில்லாமல் அனைவரிடத்திலும் செலுத்துவோம்

  அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  “வாழ நினைத்தால் வாழலாம்” – 12

  நன்றி

  வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

  புதுமைகள் புதையலாய் கிடைக்கட்டும் என்ற என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  நன்றி

  நமக்கான வார்த்தையா? இல்லை, பேசத்தெரியாத ஒரு ஜீவராசிக்கு சொந்தமானதா?

  கவியரசர் என்றால் கண்ணதாசன்.  நடிகர் திலகம் என்றால் சிவாஜி, கலைஞர் என்றால் கருணாநிதி.

  அதேபோல், உங்களுக்கான அடைமொழி என்ன?

  மானத்துக்கு மான், வீரத்துக்கு சிங்கம், ஞாபகசக்திக்கு யானை, மனிதனுக்கு என்ன?

  கேள்வியின் முதல் பாதி எழும்போதே விடையான மறுபாதி மனதில் தோன்றுகின்றதே!

  அதேபோல், நன்றி என்ற முதல் பாதியின் அடையாளமாக மனிதன் என்ற மறுபாதி இயற்கையாக எழும்புவதற்கு வேண்டிய எல்லாவற்றையும் – மனித சமூகம் செய்திருக்கிறதா?

  இந்தியக்குடிமகன்கள் அனைவரும் கடன் பட்டவர்களே – பொருளாதாரம் சொல்கிறது.

  நன்றிக்கடன் பட்டவர்களா என்பது எதார்த்தமான கேள்வியா? அல்லது ஏளனமான கேள்வியா?

  இதோ, ஒரு சராசரி மனிதனின் கடன் பட்டியல்!

  பெற்றவர்களுக்கு கடன் பட்டிருக்கிறேன் – இந்த உலகை நான் கண்டு ரசிக்க உதவியதற்க்கு.

  ஆசிரியர்களுக்கு கடன் பட்டிருக்கிறேன் – கல்வி என்ற அறிவை நான் அறிய உதவியதற்க்கு.

  குருவிற்கு கடன் பட்டிருக்கிறேன் – ஞானம் என்ற தெளிவை நான் உணர உதவியதற்க்கு.

  இறைவனுக்கு கடன் பட்டிருக்கிறேன் – அனுபவம் என்ற சொல் மூலம் நான் செம்மைப்பட உதவியதற்க்கு.

  அவை நச்சென்ற நான்கு வரிகள்!

  நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று – என்று ஒன்றரை வரியில் உணர்த்த நமது முன்னோர் ஒருவர் முயன்றதை பள்ளிகளில் படித்திருக்கிறோம்.

  பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் சிறப்பிற்கும் இடம் தேவை என்று உணர்பவர்கள் நன்றி – என்ற வார்த்தைக்கு நண்பர்களாகவே இருப்பார்கள்.

  நன்றி – உணர்சிகளில் மேன்மையானது.

  நன்றி – சுயனலக்கூட்டத்தின் அகராதியில் இடம்பிடிக்காத வார்த்தை.

  நன்றி நன்மைகள் பல விதைக்கும் நயமான வார்த்தை.

  நன்றிஎதிரியையும் எரிக்கும் எச்சரிக்கை வார்த்தை.

  நன்றிவாழ்க்கையை மேம்படுத்தும் வசந்தம்.

  நன்றிவளங்களை வர்ஷிக்கும் மழை மேகம்.

  நன்றிதன்னைமட்டுமே எண்ணுபவனை தலைகுனிய வைக்கும்.

  ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் – முன்னூற்றி அறுபத்து ஐந்து நாளுக்கும் முன்னோட்டமாக – எத்தனையோ சத்தியங்கள், லட்சியங்கள், தீர்மானங்கள், திட்டங்கள், சபதங்கள் – பட்டியல் பெரிது தான். 

  இந்த வருடம் – இந்த நொடி எதார்த்தத்தை அறிய முயல்வோம்.

  ஒற்றையடிப்பாதையாக இருந்த பல இடங்கள் தார் சாலைகளாக மாறி நமது சவுகரியமான பயணத்துக்கு சாமரம் வீசுவதில் மகிழ்ந்து பயணிக்கிறோமே – தொழிலாளியின் உழைப்பிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்  அல்லவா?

  சூரியனையும், சந்திரனையும் விண்ணில் பார்த்துத்தான் பகலென்றும் இரவென்றும் அறிந்துகொண்டிருந்த காலங்கள் போய் – இந்தியாவில் இரவாக இருக்கும்போது, அமெரிக்காவில் ஆதவன் ஒளிவீசி இருப்பான் – என்று அறியவைத்த விஞ்ஞானத்திற்கு நன்றி சொலல் தேவை தானே?

  எறும்பு கடித்தால்கூட என்ன செய்வது என்று தெரியாத காலத்திலிருந்து – இன்று இருதய அறுவை சிகிச்சை செய்து, இன்னும் பல காலம் இனிது வாழலாம் என்று மரணத்தோடு மல்யுத்தம் நடத்தி ஜெயிக்கும் மருத்துவத்துறைக்கு நமது நன்றியை நவில்தல் – ஞாயம் தானே?

  குறிப்பிட்ட சிலருக்கே கல்வி என்ற நிலை மாறி – இன்று அனைவருக்கும் உண்டு என்பது உரிமையின் மீது நாம் நன்றி காட்டத்தேவை என்று உணர்த்தவில்லையா?

  ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த நிலையில் – ஒரு ஆகஸ்ட் 15 அர்த்தமுள்ள நாளாக ஆனதற்கு எத்தனையோ தியாகிகளின் தன்னலமற்ற சேவை தேவைப்பட்டிருக்கிறது.  அவர்களது தேசபக்தி – நன்றிக்குரியது தானே?

  ஒருநாள் நடுநிசி நேரம்.  கர்ப்பிணி பெண்ணொருத்தி இடுப்புவலி கொண்டு துடித்துக்கொண்டிருந்தாள்.  அவள் தாய் அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனரிடம் மருத்துவமனைக்கு போக வேண்டும் என்று மன்றாடிக்கொண்டிருந்தாள்.  மழை வேறு!

  பலநேர போராட்டத்துக்கு பிறகு – பாதி வெற்றி பெற்றாள்.  50 ரூபாய் கூட ஆகாத தூரத்துக்கு 5௦௦ ரூபாய் கேட்டான் ஆட்டோ ஓட்டுனர்.  பாசம் பணத்தைவிட பெரியது.  சம்மதித்தாள் தாய்.

  கர்ப்பிணி பெண்ணை கவனமாய் ஏற்றினார்கள்.  வழிநெடுகிலும் அவளது அலறல் சத்தம் அவனை என்னவோ செய்தது.  மருத்துவமனை வந்தது.  செவிலியர்கள் செயலில் இறங்கினர்.  தாய் தன்னிச்சையாக உள்ளே ஓடினாள்.

  சிறிது நேரத்தில் மகிழ்ச்சிபொங்க வெளியில் வந்து ரொம்ப ரொம்ப நன்றிப்பா!  நீ இன்று இரண்டு உயிரை காப்பாற்றி இருக்க.  நீ கடவுளுக்கு சமமானவன்.  நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கணும்! – என்று மனதார வாழ்த்தி ஐநூறு ரூபாயை கொடுத்தாள்.

  ஆட்டோ ஓட்டுனரின் கண்கள் குளமானது.  மனம் நெகிழ மறுத்தான். 

  அம்மா- எனக்கு இந்த பணம் வேண்டாம்.  உங்களுடைய துடிப்பை பார்க்கும்போது என் மீது என் தாய் கொண்ட பாசம் நினைவுக்கு வந்தது.  உங்கள் மகளின் வேதனை அலறல்களை கேட்டபோது – என் சகோதரி தான் என் நினைவுக்கு வந்தாள்.  இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் – என் பிறப்பும் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று கவலை வந்தது.  எனக்குள் இதுவரை உறங்கிக்கொண்டிருந்த இறக்க குணத்தை ஜனிக்கவைத்த தாய் நீங்கள்.  பணத்தைவிட அன்புதான் நிறைவை தரும் என்று புரியவைத்த புண்ணியவதி நீங்கள்.

  நன்றி என்று நீங்கள் என்னிடம் சொல்வதைவிட – என்னை மனிதனாக்கிய உங்களுக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.  இனி என் தங்கையின் குழந்தையுடன் விளையாட தினமும் உங்கள் வீட்டுக்கு வருவேன்! – என்றான்.

  நன்றி – கொடுப்பதிலும் இன்பம் பெறுவதிலும் இன்பம் – சரிதானே!

  இன்றைய நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது?

  சரியாகவா? சராசரியாகவா?

  குடும்பத்தில் சண்டை.  சொத்துக்கு வழக்கு.  கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை.  அலுவலகத்தில் அவலம்.  சமூகத்தில் ஒத்துப்போக முடியாமை.  நட்புக்குள் விரிசல்.  பக்கத்து வீட்டுக்காரன் பலருக்கு பக்கத்து நாட்டுக்காரன் போல – அத்தனை பகை!  கட்டுக்குள் அடங்காத கடன்.  விண்ணையே முட்டும் விலைவாசி ஏற்றம்.  துரோகம், வஞ்சம், சூது என்று கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி – பாதை முழுவதும் பள்ளங்கள்.

  கூடா நட்பு இல்லை – இப்போது கூடும் நட்பும் கேடாகவே முடியும் எதார்த்தம்.  உறவுகளை உதாசீனம் செய்யச்சொல்லும் தொலைக்காட்சியின் பல தொடர்கள்,  செய்திகள் என்ற பெயரில் ஒரு பக்க பார்வை.  விவாதங்கள் என்ற பெயரில் வெறும் வாதங்கள்.  ஆண்மீகவாதிகளுக்கும் அரசியல் அரிதாரங்கள்.  தலைவனை தேடும் தலைவனைப்போல் தலைமுறை தேடும் தலைமுறைகளாக மொத்தமாக மாறிக்கொண்டிருக்கும் அவலம்.

  மனிதசமூகம் இன்று எதைநோக்கி பயணப்பட்டு கொண்டிருக்கின்றது.  வழிநெடுகிலும் குழிகளால் இருக்கும் வாழ்க்கைப்பாதையில் – முறையாக வழிநடத்திக்கொண்டிருப்பவன் யார்?

  பாம்பா – பழுதா என்று புரிந்துகொள்ள முடியாமல் புத்தி மழுங்கிப்போனது எப்படி?

  பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் நம்புவதா – வெம்புவதா என்று முடிவெடுக்க முடியாமல் முடங்கிப்போனது எப்படி?

  அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச்செல்வது என்பதை விடுங்கள்.  உங்கள் அடுத்த நொடிக்கு எதை எடுப்பது, ஏற்ப்பது என்ற குழப்பத்திலிருந்து விடுபடுவது எப்படி?

  பயமே பயங்கொள்ளும் பயங்கரமாக வாழ்க்கை ஆனதன் காரணம் என்ன?

  இப்படியே போனால் இதன் இறுதிக்கட்டம் தான் என்ன?

  சிந்தியுங்கள்!

  மனம் விட்டு சிரிக்கும் பிறவியாக மனிதன் இருக்க என்ன செய்ய வேண்டும்?

  ஆனந்தமாக வாழ்வை வாழும் பிரஜையாக ஜீவிக்க என்ன செய்ய வேண்டும்?

  நிரந்தர சுவாசம் இல்லையென்றாலும் – நிம்மதி சுவாசம் சுவாசிக்க என்ன செய்ய வேண்டும்?

  நல்ல வாழ்வை தந்தார் என் தந்தை – என பிள்ளைகள் பாராட்ட என்ன செய்ய வேண்டும்?

  ஒரு நல்ல வழிகாட்டி என்று அடுத்த தலைமுறை ஆசானாக ஏற்க என்ன செய்ய வேண்டும்?

  சுலபம்! மிகவும் சுலபம்!

  உங்கள் நெஞ்சில், சிந்தையில், செயலில் – நன்றியுணர்வை நங்கூரமாக பதியுங்கள்.

  நேர்மையான வழியிலேதான் என் பயணம் என்று ஒவ்வொரு அடியையும் அளந்து வையுங்கள்.

  மற்றவரின் சூழ்சிகளுக்கும், வசீகர வார்த்தைகளுக்கும் என்மனம் மசியாது – என்று தெளிவை கொள்ளுங்கள்.

  பார்ப்பது, கேட்பது, படிப்பது – இவைகளிலிருந்து நல்லனவற்றை மட்டும் பிரித்தெடுக்கும் சூட்சுமத்தை புரியுங்கள் – அன்னப்பறவையிடம் ஆலோசனை பெற்றதுபோல்!

  நன்றி சொல்லுங்கள்!  நன்றி செலுத்துங்கள்!

  நன்றி கொடுப்பதிலும் இன்பம், பெறுவதிலும் இன்பம்.

  பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பதுபோல் – தரமான மனிதர்களுக்கு நன்றி கொடுங்கள்.

  தரம் தரமானது என்பதால் பெறுவதில் எப்போதும் பிரச்சினை இருக்காது.

  தெளிவை தீர்வாக கொடுக்கும் ஒரு புத்தகத்தை படித்தால் – அதன் ஆசிரியருக்கு நன்றி சொல்லுங்கள்.

  மனித நேயத்துடன் வாழும் மனிதர்களை காணும்போது – உங்கள் மகிழ்ச்சியில் நன்றி கலந்திருக்கட்டும்.

  உங்கள் ஆலய தரிசனம் – ஆன்மபலத்தை சேர்ப்பதுபோல, கடவுளுக்கு நீங்கள் காணிக்கையிடும் கண்நீர்த்துளியோடு நன்றித்துளியும் சேர்ந்தே இருக்கட்டும்.

  உங்களுடைய செயல் – மற்றவர் எப்பொதும் நன்றியுடன் நினைப்பதுபோல் – நயமாக இருக்கட்டும், நலமாக இருக்கட்டும், நன்றாக இருக்கட்டும்.

  உங்களுக்கான தகுந்த சூழ்நிலையையும் சுற்றத்தையும் உருவாக்கிக்கொள்ளுங்கள்.  அனைவரின் கரங்களும் உதவும் கரங்களாக, சிந்தையில், செழுமையில், அறிவில், ஆன்மபலத்தில், எண்ணத்தில் – உயர்வான விஷயங்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி என்ற எச்சரிக்கை பலகை எல்லைக்கொடாய்.

  வரப்புயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோல் உயரும் கோல் உயர கோன் உயர்வான் என்பதுபோல் உயர்வுக்கு மேலே உயர்வு – உங்கள் மொத வாழ்க்கையையும் உயர்த்தியே வைக்கும்.

  நன்றி உணர்வு அடித்தளமாய் இருக்கட்டும்.

  முறையாக வாழத்தெரியாமல் துன்ப சாகரத்தில் சிக்கித்தவிக்கும் – அதேநேரம், அதனின்று வெளியே வர வழி தேடும் தோழர்களுக்கு – தொலைவில், உயரத்தில் நீங்கள் ஒரு கலங்கரை விளக்காய் காட்சி தருவீர்கள்.

  அதுதான் உங்கள் ஆனந்த வாழ்வுக்கான ஆதாரம்!  அத்தாட்சி!

  நன்றியுடன் வாழ துவங்கும்போது குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே பெட்டியிலே பணமில்லே பெத்த பிள்ள சொந்தமில்லே – என்று புலம்பும் சராசரி மானிடரிடமிருந்து வேறுபட்ட ஒருவராக இருப்பீர்கள்.

  இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றான் அவன் விடுவானா – உறவைசொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா – என்று கவலைப்படும் மனிதர்க்கு மத்தியில் நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாளும் தெரிந்த தலைவனடா தினம் நாடகமாடும் கலைஞனடா என்று எதையும் நன்றியோடு ஏற்க வைக்கும்.

  பணத்தின்மீதுதான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏனடா, பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா – என்று அனைவரையும் சகோதர பாவத்துடன் ஏற்க வைப்பது நன்றி

  இனிமையான வாழ்வில் இறைவனுக்கு நன்றி செலுத்தி இன்பம் காண்பது மட்டுமல்ல, இறுதி மூச்சுக்குப்பின்பும் – இடுகாடுவரை இட்டுச்செல்லும், நம்மையும், நம்மைபற்றின நினைவுகளையும் சேர்த்து சுமக்கும் நாலு பேருக்கு நன்றி என்று கூற வைப்பது நன்றியுணர்ச்சியே.

  எனவே,

  வையுங்கள் !  நினைவில் வையுங்கள் !  நன்றியை நினைவில் வையுங்கள் !

  வைத்தால்,

  வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்

  வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்

  இந்த இதழை மேலும்

  தன்னம்பிக்கை மேடை

  நேயர் கேள்வி…?

  எதையும் சாதிக்க முடியவில்லை என்ற ஆதங்கம், எனக்கு நீண்ட காலமாக ஒரு கேள்விக்குறியாய் இருந்து கொண்டே இருக்கிறது. நான் என்ன தான் செய்ய வேண்டும்?                                          

  பூபதிராஜா

  உடற்கல்வித்துறை

  நீங்கள் எதைச் சாதிக்க முயன்றீர்கள், அதில் என்ன சாதித்தீர்கள், என்ன சாதிக்க தவறினீர்கள், உங்கள் வயது என்ன போன்ற குறிப்புகள் என்னிடத்தில் இல்லை. இருப்பினும் இதை ஒரு பொதுவான ஆதங்கமாக கருதி உங்கள் கேள்விக்கு பதில் காண முயல்வோம்.

  பெரியதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. சிலர் சிறு வயதில் எதாவது சாதனை நிகழ்த்தி விடுகிறார்கள். மாநிலத்தில் முதல் மதிப்பெண், மருத்துவக்கல்லூரியில் இடம், IAS பணி, கிரிக்கெட் விளையாட்டு, சினிமா, வெளிநாட்டில் நல்ல வேலை, தொழிலில் வெற்றி என்று சாதித்து விடுகிறார்கள். இன்னும் சிலர் சற்று கால தாமதமாக சாதித்துக் காட்டுவார்கள். விஞ்ஞானி, பல்கலைக்கழக துணைவேந்தர், நூலாசிரியர், அமைச்சர்கள், மருத்துவ வல்லுநர், இந்த வகையைச் சார்ந்தவர்கள். எதுவாக இருந்தாலும் இவர்கள் தங்களை ஒரு பணியில் அர்பணித்து, நேரம் ஒதுக்கி, முயற்சி செய்து இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள்.

  இப்படி எதாவது ஒன்றை சாதித்தவர்கள் கூட எதையும் சாதிக்கவில்லை என்று புலம்புகிறார்கள். ஆக, சாதனை என்பது தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று தோன்றுகிறது.

  பல வழிகள் உண்டு:

  உங்களிடத்தில் இப்படி ஒரு உணர்வு இருப்பது மிகவும் நல்லது. ஒரு பெரிய சாதனை செய்வதற்கு இந்த உந்துகோலே போதுமானது. உங்களுக்கு சாதனை படைக்க பல வழிகள் உள்ளன.

  1. ஒரு உடற்கல்வித் துறையைச் சேர்ந்தவர் என்ற முறையில் திறமை மிக்க ஒரு நூறு குழந்தைகளுக்கு விளையாட்டுப் பயிற்சி தரலாம். அதில் தடகளம், கையுந்துபந்து, கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் என்றால் அவை ஒலிம்பிக் விளையாட்டுக்கள். உங்களது மாணவன் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றால் அது உங்களுக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். உங்களது மாணவனுக்கு அர்ஜூணா விருது அளிக்கப்படும்போது, உங்களுக்கு துரோணாச்சார்யா விருது கிடைக்கும்.

  2. ஒரு உடற்பயிற்சிக் கூடத்தை உருவாக்குங்கள். அதில் ஆயிரம் பேருக்கு உடற்பயிற்சி அளியுங்கள். உடற்பயிற்சியின் நன்மைகளை அவர்களுக்கு கற்பியுங்கள். ஒரு உடற்பயிற்சி மையம் ஒரு மருத்துவமனைக்கு இணையானது. உடற்பயிற்சியால் நோய்கள் வருவது தடுக்கப்படுகின்றன. அந்த உடற்பயிற்சி கூடத்தில் 100 உடற்பயிற்சி பயிற்சியாளர்களை உருவாக்குங்கள். உடற்கல்வி பற்றிய ஆராய்ச்சி செய்யுங்கள். அந்த ஆராய்ச்சியின் மூலம் விளைந்த உண்மைகளை நூல்களாக எழுதி மக்களுக்குள் எடுத்துச் செல்லுங்கள். அந்த ஆராய்ச்சி திறம்படச் செய்ய நீங்களும் மாரத்தான் ஓடுங்கள், உங்களது அனுபவத்தையும் எழுதுங்கள். நீங்கள் மறைந்த பின்னரும் இந்த ஆய்வுக் குறிப்புகள் மறையாது.

  3. ஓரளவுக்குப் பொருள் ஈட்டிய பிறகு அதன் பெரும்பகுதியை ஏழைகளுக்குக் கொடுங்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய சாதனை உணர்வைத் தரும்.

  4. ஒரு லட்சம் மரக்கன்றுகள் உங்கள் பகுதியில் நடுங்கள். இது நிச்சயம் சாத்தியமானதே! இந்த உலகை விட்டு மறைந்தாலும் அடுத்த 100 ஆண்டுகளில் இந்த மரங்கள் உங்கள் ஊரை ஒரு வனப்பகுதியாக மாற்றியிருக்கும்.

  மகிழ்ச்சியே நிரந்தர சாதனை:

  இவை தவிர சாதனைகளும் சாதனையாளர்களும் உண்டு. அதுவே உண்மையான சாதனையாகும். ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தனக்குரிய கடமைகளை தவறாமல் செய்வதே அந்த சாதனை என்பேன். ஒரு ஆசிரியர் என்றால் அவரது பணியைச் சரியாக செய்து முடித்திருந்தால் அது சாதனை. ஒரு அரசு ஊழியர் அவரது பணியினை அற்புதமாக செய்து முடித்திருந்தால் அதுவும் ஒரு சாதனை. அலுவலகத்தில் அவருக்கு நல்லதொரு பெயர் கிடைக்கும். ஒரு தாய் இரண்டு பிள்ளைகளை ஆரோக்கியமாக வளர்த்து கல்வி கொடுத்து நல்ல மனிதர்களாக மாற்றினார் என்றால் அதுவும் ஒரு பெரிய சாதனை என்பதில் சந்தேகமில்லை. இப்படி கடமைகளை சிறப்பாக ஆற்றுவது மிகப்பெரிய மகிழ்ச்சி ஆகும். அது போன்ற மனநிலை தான் நிரந்தர மகிழ்ச்சி என்று உறுதியாக கூற முடியும். கடமைகள் ஆற்றுவதில் தான் நிரந்தர மகிழ்ச்சியும் இருக்கிறது.

  சாதனையாளர்கள் என்று நீங்கள் நினைத்திருக்கும் பலரும் மகிழ்ச்சியாகவே இல்லை! பல சினிமா நட்சத்திரங்கள் தற்கொலை செய்வதை நாம் பார்க்கிறோம். சாதனை படைத்தாலும் இவர்களிடம் மகிழ்ச்சி இல்லை. தினம் தினம் நாம் செய்யும் செயல்கள் தான் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. அவை பிற்காலத்தில் பெரிய சாதனைகளாகவும் உருவாகிறது. 

  எனவே மகிழ்ச்சி ஏற்பட நீங்கள் கீழ்கண்டவற்றைச் செய்யலாம்:

  1.தினமும் கண்ணாடி முன்னால் நின்று கொண்டு நீ ஒரு நல்ல மனிதன் என்று உங்களுக்குள் சொல்லுங்கள்.

  2. இன்று நல்ல நாள், இன்று செய்ய வேண்டிய அனைத்தும் இன்றே செய்வேன் என்று காலையில் பிரகடனப்படுத்துங்கள்

  3. மனைவி, மகன், மகள் என்று ஒருவரைப் பார்த்து நான் உன்னை நேசிக்கிறேன் என்று கூறுங்கள்.

  4. உங்கள் மாணவன், மாணவி, சக ஆசிரியர் என்று ஒருவரையாவது அவர் செய்த நல்ல காரியத்திற்காக அவரைப் பாராட்டுங்கள்.

  5. உங்கள் தந்தை, அண்ணன், அக்கா, நண்பன், ஆசிரியர் என்று உதவி செய்த ஒருவரை நன்றியோடு நினைவு கூறுங்கள்.

  6. நான் உனக்கு உதவலாமா? என்று ஒருவரையாவது கேளுங்கள். முடிந்தவரை உதவுங்கள், மற்றவர் வாழ்க்கையில் விளக்கு ஏற்றுங்கள்.

  7. எதாவது லட்சியத்தை அடைய முற்படும்போது என்னால் இது முடியும், என்று கூறுங்கள்.

  8. இன்றுபோல் என்றும் இருக்கும் என்று எண்ணி வருந்திவிடாதீர்கள். தடைகள் நீங்கும், மாற்றம் வரும். உங்களது வாழ்விலும் வசந்தம் வரும் என்று நம்புங்கள். எதிர்காலத்தை நிச்சயம் மாற்றிக்காட்டலாம்.

  9. வாழ்க்கை மிகமிக அரியது, உயிருடன் இருப்பது கூட பெரிய காரியம் என்பதை நம்புங்கள்.

  10. இன்றைய தினம் உங்களுக்கு உதவி செய்தவர்கள் யாராக இருந்தாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் அவர்களுக்கு மிக்க நன்றி என்று சொல்லுங்கள். சின்ன சின்ன விஷயம் என்றாலும், அவர்கள் சிறியவர்கள் என்றாலும் நன்றி சொல்லுங்கள்.

  இவற்றை தினமும் செய்தால் ஒவ்வொரு நாளும் மிகுந்த திருப்தியுடன் படுக்கைக்குச் செல்லலாம்.

  இன்றும் சாதனையாளரே :

  மேலே சொன்ன எதையும் செய்யவில்லை என்றாலும் சாதிக்கவில்லை என்ற உங்கள் கவலையில் பொருள் இல்லை. ஏனென்றால் 460 கோடி ஆண்டுகள் ஆன இந்த பூமியில் ஒரு மனிதனாகப் பிறந்திருப்பதே ஒரு பெரிய சாதனைதான். உங்களது முன்னோர்கள் பல லட்சம் தலைமுறையாக வெற்றிகரமாக வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்கள் அனைவரும் பிறந்து வளர்ந்து குழந்தைக்குத் தாயாகி அல்லது தந்தையாகி பின்னரே மறைந்துள்ளனர். இல்லை என்றால், நீங்கள் பிறந்திருக்க மாட்டீர்கள். இன்றைய நாளில் கூட நீங்கள் திருடவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை,  யாருக்கும் கெடுதல் செய்யவில்லை, லஞ்சம் வாங்கவில்லை, பொய் பிரச்சாரம் செய்யவில்லை என்கிறபோது நீங்கள் ஒரு சாதனையாளர் அல்லவா? இவற்றை எல்லாம் செய்யும் அயோக்கினே இன்று சாதனையாளாகளாக வலம் வரும்போது நல்லவனாகிய நீங்கள் ஏன் சாதிக்கவில்லை என்று நினைக்க வேண்டும்? ஒரு நல்லவனாக, பிறருக்கும் இந்த பூமிக்கும், நம்மைப் போன்று இந்த பூமியில் தோன்றிய உயிரினங்களுக்கும் எந்த இடையூறும் செய்யாமல் வாழ்வதே பெரிய சாதனை வாழ்க்கைதான்.

  முடிவு:

  பெரிய பதவி, அதிக பணம், நல்ல புகழ் போன்றவை மட்டும் சாதனைகள் அல்ல. நல்ல மனிதனாக இருப்பதும் சாதனைதான். இருப்பினும் உங்களுக்கு சாதிக்கவில்லை என்ற ஒரு உணர்வு இருப்பதால், நல்லதுதான். பெரியதான சாதனை ஒன்றைச் செய்ய முற்படுங்கள், அதில் தவறில்லை. அது போன்ற ஒரு சாதனை செய்வதற்கு வயது ஒரு தடையில்லை!.

  வாழ்த்துக்கள்

  இந்த இதழை மேலும்

  நம்பிக்கைக்கு… உயிர் கொடுப்போம்!

  றைவன் முதல், மனிதர்கள் வரை நம்மிடம், எப்போதும், எதிர்ப்பார்த்து வரவேற்பது, நம் புத்திசாலித்தனமான சிந்தனைகளையும், செயல்களையும்தான்

  நம்பிக்கை(யில்)தான் வாழ்க்கை என்பதும், நம் அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்தில், நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது என்பதும், உண்மைதான். ஆனால்.அந்த ஒரு சில நம்பிக்கைகளில் நாம் சரியாக, புத்திசாலித்தனமாக இருந்து, ஜெயித்திருக்கிறோமா?  என்றால், பலருக்கும் கேள்விக்குறிதான். காரணம்…  நமக்குள் இருக்கும் நம்பிக்கை செலற்று இருப்பதுதான். நம்பிக்கை புத்தியற்று, செயலற்று இருந்தால், வாழ்க்கையும் உயிரற்று போகும். அதாவது,  ஒரு கோமா நிலையில் இருக்கும் நோயாளி, செயலற்ற நிலையில் உயிருடன் இருந்தாலும் அவர் வாழ்கிறார் என்று சொல்ல முடியுமா? 

  அதுபோல், நமக்குள் நம்பிக்கை செயலற்று இருந்து, அந்த நம்பிக்கை வாழ்க்கைக்கு உதவாமல் இருப்பதால்தான், வாழ்க்கையின் மீதே சலிப்பும், சங்கடங்களும் வருகின்றனது. வாழ்க்கை வெறுமையாக அர்த்தமற்றதாக தோன்றுகிறது. ஒரு சிலரிடம், அவர்கள் வாழ்க்கையைப்பற்றி கேட்டால் எப்படியோ தோன்றுகிறது, என்று வாழ்க்கையின் சலிப்பை, வார்த்தையில் கொட்டுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நம்பிக்கை செயலற்று, உயர்த்திருப்பவர்கள்தான். 

  வாழ்க்கை என்பது வாழ்வதற்கா? வீழ்வதற்கா? எப்படியோ வாழ்ந்து போவதற்கா? இந்த சலிப்புத்தன்மை, வாழ்வை அனுபவித்து, வயது முடிந்த வயோதிகளிடமிருந்து வருவதைவிட, இன்றைய இளைய சமூகத்தினரிடமிருந்துதர்ன அதிகம் வருகிறது. வானத்தில் பறக்கும் விமானம், போக்குவரத்துத் தடை இலலா கோளாறு ஏற்பட்டால், புத்திசாலித்தனமாக தரை இறக்கி, தவறுகளை பழுதுகளை சரிசெய்து கொண்டு, மீண்டும் பயணப்படுவது போல

  நம்பிக்கையில் சிறு தடை ஏற்பட்டால், உடனே சரி செய்வதற்காக சற்று இடைவெளி விட்டு, அந்த இடைவெளியில், நம்பிக்கையின் மீதான சலிப்பை, சரி செய்து கொண்டு சலிப்பின்றி தொடர்ந்தால், நம்பிக்கை உயிர்த்திருக்கும். நம்பிக்கை உயிர்த்திருக்கும் வாழ்க்கைதான் நம்பகத்தன்மையுடன் இருக்கும். சாதனையாளர்களின் வெற்றியின் சூட்சுமம். சூத்திரம் இதுதான். ஆனால், சாதனை படைத்த மனிதர்கள் போல வாழ ஆசைப்படும் பலரும், அவர்கள் சந்தித்த துன்பங்களை ஏற்கத் தயங்குகிறோம். இதுவும் நம்பிக்கை செயலற்று போகக் காரணமாகிறது. உதாரணமாக

  காட்டில், பட்டுப்போன மரங்களை வெட்டி எடுக்கும் நிறுவனத்தில் ஒரு இளைஞன் வேலைக்குச் சேர்ந்தான். எவ்வளவு வெட்டுகிறார்களோ, அதற்கேற்ற கூலி. நீண்ட நாட்கள் காட்டில் இருக்க வேண்டிய வேலை என்பதால், அந்த குழுவில் பலரும் வயதானவர்களே இருந்தார்கள். இளைஞனுக்கு அனுபவம் இல்லை, என்றாலும் வயதானவர்களை விட, தான் இரண்டு மடங்கு மரங்களை வெட்டி நிறைய சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் உறுதி கொண்டான்

  மற்றவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஓய்வெடுத்து வெட்டினார்கள். ஆனால், இளைஞன் சாப்பிடும் நேரம் போக, ஓய்வின்றி முதல் நாள் வெட்டினான். அவர்கள் ஓய்வெடுக்க அழைத்தாலும் போகவில்லை. அதன் பின். இரண்டு நாட்களுக்கு பிறகு, அவனால் எவ்வளவு முயற்சித்தும் தொடர்ந்து வெட்ட முடியவில்லை. வயதானவர்கள் வெட்டும் அளவை விட, குறைவாகவே வெட்டிய இளைஞனுக்கு வேலையில் சலிப்பு வந்தது. அவன் நிலையறிந்து, அவர்கள் டீ குடிக்க வற்புறுத்தி அழைத்ததும் போனான், அவனுக்கு ஒரு உண்மை புரிந்தது. அங்கே போனப்பின்தான் புரிந்தது. அவர்கள் ஓய்வெடுத்த நேரம், வெட்டியாக பேசிக்கொண்டிருக்காமல் தங்களது கோடாரிகளை தீட்டிக்கொண்டிருந்தார்கள்

  வெறும் உடல் பலத்தை மட்டும் நம்பாதே, நம்பிக்கையை, புத்திசாலித்தனமாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்றனர். அந்த ஓய்வு நேரத்தில், தன் தவறை சரிசெய்து கொண்டதும், அவனுள் இழந்த நம்பிக்கை உயிர்பெற்றது.

  ஆக, எல்லாம் நமக்கு எதிராக அமைந்து விட்டால், இதற்கு மேல் இனி முடியாது என்றோ, இனி ஒரு நிமிடம் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்றோ, ஒரு நிமிடம் நம்பிக்கை இழந்தால் கூட அடுத்த நிமிடம், அதுவே சரியான வெற்றியாகவும், திருப்புமுனையாகவும் அமைய இருந்த வாய்ப்பை இழக்க நேரலாம். நம்பிக்கை ஒளியைத் தூண்டி விடாமல், கண்ணீராலும், பெருமூச்சாலும் அனைத்து விட்டு, மனதை இருளில் மூழ்க விட்டு, திக்கு திசைத் தெரியாமல், விடியலையும், வெளிச்சத்தையும் தேடுவதில் தான் கவனத்தை செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

  நம்பிக்கை என்பதே முடிந்தது என்ற நிலையில் இருந்து இனியும் தொடரும் என்ற நிலைக்கு உயர்வதுதான். உடல் பலம், பண பலம், பதவி, வயது என்பதெல்லாம் முடிந்து போனாலே, வாழ்க்கையே முடிந்து விட்டதாக முடிவுக்கு வருகிறோம். ஆனால், மேற்சொன்ன அத்தனையும் தன்னம்பிக்கையில் வந்தது என்பதை மறந்து விடுவதோடு, இருந்த தன்னம்பிக்கையையும், அவநம்பிக்கையாக மாற்றி விடுகிறோம். இதை புதுப்பிக்கும் வகையில், சலிப்பின்றி, இது முடிவல்ல ஆரம்பம் என்று தொடரச் செய்வதில்தான், நம்பிக்கையின் பிறப்பும், சிறப்பும் இருக்கிறது.

  ஆக நம்பிக்கை இருக்கிறது என்பது முக்கியமலல அது அறிவுடன் செயல்படும் வகையில் உயிர்த்திருக்கிறதா? என்பதுதான் முக்கியம். அதற்கு, நமக்கு நம்பிக்கை வழுவிழக்கும் சமயங்களில், அதனை கூர்மைப்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். உண்மையில், நம்பிக்கை என்பது ஒரு வெற்றியின் முற்றுப்புள்ளியல்ல. தொடர் வெற்றிக்கான தொடர்ச்சி புள்ளி என்பது வெற்றியாளர்களின் அனுபவம். இனியேனும், உயிரற்ற நம்பிக்கை உயிரற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கும் எனபதை நினைவில் கொண்டு, நம்பிக்கைக்கு உயிர் கொடுத்து, வாழ்வாங்கு வாழ்வோமாக… 

  இந்த இதழை மேலும்

  சத்துச் சேமிப்புக் கூடங்கள்

  ஒரு நாட்டில் பஞ்சம் ஏற்பட்டால், சேமிப்புக் கிடங்குகளில் சேமிப்பாக இருக்கும் உணவு தானியங்களை வைத்துச் சமாளிக்க முடியும். சிறிய அளவு உணவுத் தட்டுப்பாடு வரும்போது குறுகிய கால சேமிப்பாக இருக்கும் அரிசியையும், கொங்சம் கடுமையான பற்றாக்குறை ஏற்படும்போது இடைப்பட்ட காலச் சேமிப்பாக இருக்கும் கோதுமையையும், கடுமையான பஞ்சம் ஏற்படும் போது நீண்ட காலச் சேமிப்பாக இருக்கும் கேழ்வரகு, திணை மற்றும் வரகையும்  ஆளும் அரசாங்கம் வெளிக்கொணர்ந்து மக்களைக் காக்கும். அதுபோலவே, நமக்கு ஏற்படும் சத்து பற்றாக்குறைகளைச் சமாளிக்க மூன்று விதமான சத்து சேமிப்புக் கிடங்குகள் நம் உடலில் இருக்கின்றன. அது பற்றி இனி பார்ப்போம். மூன்று விதமான சத்து சேமிப்புக் கிடங்குகள் நம் உடலில் இருக்கின்றன. அது பற்றி இனி பார்ப்போம்.

  கல்லீரல் கிளைக்கோஜன்:

  நம் மண்ணீரல் செரிமானம் மூலம் கிடைக்கும் குளுக்கோஸ் மாவுச்சத்தில் உடல் உழைப்பிற்கும் உடல் உறுப்பிற்கும் போக மீதம் உள்ளதை கிளைக்கோஜனாக (Glycogen) உருமாற்றம் செய்து கல்லீரலில் சேமித்து வைத்துக்கொள்ளும். இதிலும் தரமான மண்ணீரல் செரிமானத்தால் உண்டான தரமான குளுக்கோஸைத்தான் கிளைக்கோஜனாக மாற்றம் செய்ய முடியும். தரமற்ற மண்ணீரல் செரிமானத்தால்  உண்டான தரக் குறைவான குளுக்கோஸானது உடலுக்கும் சக்தியளிக்க முடியாமல், கிளைக்கோஜனாகவும் மாற்றமடையாமல், வெறுமனே இரத்தத்தில் தேங்கிக்கிடக்கும் தன்மைக்குத் தான் நீரழிவு நோய் என்று கூறுகிறார்கள். இதனால்தான் நீரழிவு நோயாளி சாப்பிட்ட சற்று நேரத்திற்கெல்லாம் பசி எடுக்க ஆரம்பிக்கும். காரணம், செரிமானம் மூலம் நல்ல குளுக்கோஸும் கிடைக்காமல், சேமிப்பாக கிளைக்கோஜனும் இல்லாமல் தவிப்பதுவே நீரழிவு நோயாளியின் வெளிப்பாடாகும். சரி, நாம் விஷயத்திற்கு வருவோம். கல்லீரலில் சேமிப்பாக இருக்கும் கிளைக்கோஜன்தான் நம் தற்காலிக ஒரு வேளை உண்ணா விரதத்திற்கு ஈடுசெய்ய குளுக்கோஸாக மாற்றம் ஆகி நம் உழைப்பிற்கும் உள் உறுப்புகளுக்கும் சக்தியளிக்கிறது.

  சதையில் சேமிப்பாக இருக்கும் புரதம்:

  நம் உடலில் ஏற்படும் நோய் மற்றும் விபத்துக்களால் ஏற்படும் உடல் சிதைவுகளுக்குத் தேவையான இடைக்காலப் புரத நிவாரணங்களுக்கு நம் சதையில் சேமிப்பாக உள்ளகொலாஜன் (Collagen) புரதம் கைகொடுக்கிறது. ஆனால், நாம் அடிக்கடி நோய்வாய்ப்படுவதும், விபத்துச் சிதைவுகள் நடப்பதும் இருக்குமாயின் நம் உடலின் சதைப்பற்று கணிசமாக காலியாகி நம் உடலின் உறுதி குலைந்து நீண்ட ஆயுள் கனவைக் கலைத்துவிடும்.

  உடல் கொழுப்பாக சத்து சேமிப்பு:

  நம் உடலில் சதைக்கும் எலும்பிற்கும் இடைப்பட்ட பகுதிகளில் நல்ல கொழுப்புச் சேமிப்பாக கிளைக்கோலிப்பிட்ஸ் (Glycolipids) இருக்கும். அதுவே, சேமிக்கப்பட்டது கெட்ட கொழுப்பாக இருப்பின், அது சதையோடும் எலும்போடும் இரண்டறக் கலந்த தன்மையில் எது சதை, எது கொழுப்பு என்று பிரிக்க முடியாத தன்மையில் இருக்கும். ஒரு ஆரோக்கிய மனிதன் அதிகபட்சமாக 48 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கக்கூடிய அளவில் நல்லக் கொழுப்பைக் கொண்டிருப்பர். அதுவே, கெட்ட கொழுப்பே உடலில் அதிகமாக இருப்பின்  ஒரு வேளை கூட விரதமிருக்க முடியாத நிலையில் இருப்பர். ஆக நம் உடலின் நல்ல கொழுப்புச் சேமிப்பு என்பது நம் உடலின் நீண்டகால நோய்க் காலம் அல்லது பற்றாக்குறை காலத்தில் சமாளிக்கவே என்று புரிந்தால் போதும்.

  அன்பு நண்பர்களே! இந்த மூன்று வகை சத்து சேமிப்புகளோடு நான்காவதாக ஒரு சமாளிப்பு இருக்கிறது. அது எப்படிப்பட்டது என்றால் நம் நாட்டில் சேமிப்பாக எதுவும் இல்லையென்றால் அடுத்த நாட்டை நோக்கி கையேந்தும் நிலைமையாகும். அப்படி கொடுக்கும் நாட்டிற்கு நாம் கடன்படவோ அல்லது அடிமைப்படவோ வேண்டியதிருக்கும். அது போல நம் உடலில் மிக ஆபத்துக்கால உபயோகிப்பாக இருப்பதுதான் நம் எலும்புகளில் சேமிப்பாக இருக்கும் புரதம், கொழுப்பு மற்றும் தாதுக்களாகும். அன்பு நண்பர்களே! இதனில் கை வைப்பது என்பது நம் நீள் ஆயுள் வரத்தை நாமே சாபமாக மாற்றுவதாகும். இதுவும் ஒரு வித கடன்தான் என்று புரிந்துகொள்ள வேண்டும். இது நாம் நோய்க்கு அடிமையாகப் போகும் கடனாகும்.

  நம் நீள் ஆயுள் காப்பீடுகள்தான்

  கிளைக்கோஜன், கொலாஜன் மற்றும் கிளைக்கோலிபிட்ஸ்.

  நம் கீழான வாழ்க்கை முறையால் அவற்றையெல்லாம்

  காலி செய்து காலாவதியாகிறோம்.   

  இந்த இதழை மேலும்