Home » Articles » “வாழ நினைத்தால் வாழலாம்” – 12

 
“வாழ நினைத்தால் வாழலாம்” – 12


மித்ரன் ஸ்ரீராம்
Author:

நன்றி

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

புதுமைகள் புதையலாய் கிடைக்கட்டும் என்ற என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றி

நமக்கான வார்த்தையா? இல்லை, பேசத்தெரியாத ஒரு ஜீவராசிக்கு சொந்தமானதா?

கவியரசர் என்றால் கண்ணதாசன்.  நடிகர் திலகம் என்றால் சிவாஜி, கலைஞர் என்றால் கருணாநிதி.

அதேபோல், உங்களுக்கான அடைமொழி என்ன?

மானத்துக்கு மான், வீரத்துக்கு சிங்கம், ஞாபகசக்திக்கு யானை, மனிதனுக்கு என்ன?

கேள்வியின் முதல் பாதி எழும்போதே விடையான மறுபாதி மனதில் தோன்றுகின்றதே!

அதேபோல், நன்றி என்ற முதல் பாதியின் அடையாளமாக மனிதன் என்ற மறுபாதி இயற்கையாக எழும்புவதற்கு வேண்டிய எல்லாவற்றையும் – மனித சமூகம் செய்திருக்கிறதா?

இந்தியக்குடிமகன்கள் அனைவரும் கடன் பட்டவர்களே – பொருளாதாரம் சொல்கிறது.

நன்றிக்கடன் பட்டவர்களா என்பது எதார்த்தமான கேள்வியா? அல்லது ஏளனமான கேள்வியா?

இதோ, ஒரு சராசரி மனிதனின் கடன் பட்டியல்!

பெற்றவர்களுக்கு கடன் பட்டிருக்கிறேன் – இந்த உலகை நான் கண்டு ரசிக்க உதவியதற்க்கு.

ஆசிரியர்களுக்கு கடன் பட்டிருக்கிறேன் – கல்வி என்ற அறிவை நான் அறிய உதவியதற்க்கு.

குருவிற்கு கடன் பட்டிருக்கிறேன் – ஞானம் என்ற தெளிவை நான் உணர உதவியதற்க்கு.

இறைவனுக்கு கடன் பட்டிருக்கிறேன் – அனுபவம் என்ற சொல் மூலம் நான் செம்மைப்பட உதவியதற்க்கு.

அவை நச்சென்ற நான்கு வரிகள்!

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று – என்று ஒன்றரை வரியில் உணர்த்த நமது முன்னோர் ஒருவர் முயன்றதை பள்ளிகளில் படித்திருக்கிறோம்.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் சிறப்பிற்கும் இடம் தேவை என்று உணர்பவர்கள் நன்றி – என்ற வார்த்தைக்கு நண்பர்களாகவே இருப்பார்கள்.

நன்றி – உணர்சிகளில் மேன்மையானது.

நன்றி – சுயனலக்கூட்டத்தின் அகராதியில் இடம்பிடிக்காத வார்த்தை.

நன்றி நன்மைகள் பல விதைக்கும் நயமான வார்த்தை.

நன்றிஎதிரியையும் எரிக்கும் எச்சரிக்கை வார்த்தை.

நன்றிவாழ்க்கையை மேம்படுத்தும் வசந்தம்.

நன்றிவளங்களை வர்ஷிக்கும் மழை மேகம்.

நன்றிதன்னைமட்டுமே எண்ணுபவனை தலைகுனிய வைக்கும்.

ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் – முன்னூற்றி அறுபத்து ஐந்து நாளுக்கும் முன்னோட்டமாக – எத்தனையோ சத்தியங்கள், லட்சியங்கள், தீர்மானங்கள், திட்டங்கள், சபதங்கள் – பட்டியல் பெரிது தான். 

இந்த வருடம் – இந்த நொடி எதார்த்தத்தை அறிய முயல்வோம்.

ஒற்றையடிப்பாதையாக இருந்த பல இடங்கள் தார் சாலைகளாக மாறி நமது சவுகரியமான பயணத்துக்கு சாமரம் வீசுவதில் மகிழ்ந்து பயணிக்கிறோமே – தொழிலாளியின் உழைப்பிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்  அல்லவா?

சூரியனையும், சந்திரனையும் விண்ணில் பார்த்துத்தான் பகலென்றும் இரவென்றும் அறிந்துகொண்டிருந்த காலங்கள் போய் – இந்தியாவில் இரவாக இருக்கும்போது, அமெரிக்காவில் ஆதவன் ஒளிவீசி இருப்பான் – என்று அறியவைத்த விஞ்ஞானத்திற்கு நன்றி சொலல் தேவை தானே?

எறும்பு கடித்தால்கூட என்ன செய்வது என்று தெரியாத காலத்திலிருந்து – இன்று இருதய அறுவை சிகிச்சை செய்து, இன்னும் பல காலம் இனிது வாழலாம் என்று மரணத்தோடு மல்யுத்தம் நடத்தி ஜெயிக்கும் மருத்துவத்துறைக்கு நமது நன்றியை நவில்தல் – ஞாயம் தானே?

குறிப்பிட்ட சிலருக்கே கல்வி என்ற நிலை மாறி – இன்று அனைவருக்கும் உண்டு என்பது உரிமையின் மீது நாம் நன்றி காட்டத்தேவை என்று உணர்த்தவில்லையா?

ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த நிலையில் – ஒரு ஆகஸ்ட் 15 அர்த்தமுள்ள நாளாக ஆனதற்கு எத்தனையோ தியாகிகளின் தன்னலமற்ற சேவை தேவைப்பட்டிருக்கிறது.  அவர்களது தேசபக்தி – நன்றிக்குரியது தானே?

ஒருநாள் நடுநிசி நேரம்.  கர்ப்பிணி பெண்ணொருத்தி இடுப்புவலி கொண்டு துடித்துக்கொண்டிருந்தாள்.  அவள் தாய் அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுனரிடம் மருத்துவமனைக்கு போக வேண்டும் என்று மன்றாடிக்கொண்டிருந்தாள்.  மழை வேறு!

பலநேர போராட்டத்துக்கு பிறகு – பாதி வெற்றி பெற்றாள்.  50 ரூபாய் கூட ஆகாத தூரத்துக்கு 5௦௦ ரூபாய் கேட்டான் ஆட்டோ ஓட்டுனர்.  பாசம் பணத்தைவிட பெரியது.  சம்மதித்தாள் தாய்.

கர்ப்பிணி பெண்ணை கவனமாய் ஏற்றினார்கள்.  வழிநெடுகிலும் அவளது அலறல் சத்தம் அவனை என்னவோ செய்தது.  மருத்துவமனை வந்தது.  செவிலியர்கள் செயலில் இறங்கினர்.  தாய் தன்னிச்சையாக உள்ளே ஓடினாள்.

சிறிது நேரத்தில் மகிழ்ச்சிபொங்க வெளியில் வந்து ரொம்ப ரொம்ப நன்றிப்பா!  நீ இன்று இரண்டு உயிரை காப்பாற்றி இருக்க.  நீ கடவுளுக்கு சமமானவன்.  நீயும் உன் குடும்பமும் நல்லா இருக்கணும்! – என்று மனதார வாழ்த்தி ஐநூறு ரூபாயை கொடுத்தாள்.

ஆட்டோ ஓட்டுனரின் கண்கள் குளமானது.  மனம் நெகிழ மறுத்தான். 

அம்மா- எனக்கு இந்த பணம் வேண்டாம்.  உங்களுடைய துடிப்பை பார்க்கும்போது என் மீது என் தாய் கொண்ட பாசம் நினைவுக்கு வந்தது.  உங்கள் மகளின் வேதனை அலறல்களை கேட்டபோது – என் சகோதரி தான் என் நினைவுக்கு வந்தாள்.  இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் – என் பிறப்பும் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று கவலை வந்தது.  எனக்குள் இதுவரை உறங்கிக்கொண்டிருந்த இறக்க குணத்தை ஜனிக்கவைத்த தாய் நீங்கள்.  பணத்தைவிட அன்புதான் நிறைவை தரும் என்று புரியவைத்த புண்ணியவதி நீங்கள்.

நன்றி என்று நீங்கள் என்னிடம் சொல்வதைவிட – என்னை மனிதனாக்கிய உங்களுக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும்.  இனி என் தங்கையின் குழந்தையுடன் விளையாட தினமும் உங்கள் வீட்டுக்கு வருவேன்! – என்றான்.

நன்றி – கொடுப்பதிலும் இன்பம் பெறுவதிலும் இன்பம் – சரிதானே!

இன்றைய நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது?

சரியாகவா? சராசரியாகவா?

குடும்பத்தில் சண்டை.  சொத்துக்கு வழக்கு.  கணவன் மனைவிக்குள் கருத்து வேற்றுமை.  அலுவலகத்தில் அவலம்.  சமூகத்தில் ஒத்துப்போக முடியாமை.  நட்புக்குள் விரிசல்.  பக்கத்து வீட்டுக்காரன் பலருக்கு பக்கத்து நாட்டுக்காரன் போல – அத்தனை பகை!  கட்டுக்குள் அடங்காத கடன்.  விண்ணையே முட்டும் விலைவாசி ஏற்றம்.  துரோகம், வஞ்சம், சூது என்று கால் வைக்கும் இடமெல்லாம் கன்னிவெடி – பாதை முழுவதும் பள்ளங்கள்.

கூடா நட்பு இல்லை – இப்போது கூடும் நட்பும் கேடாகவே முடியும் எதார்த்தம்.  உறவுகளை உதாசீனம் செய்யச்சொல்லும் தொலைக்காட்சியின் பல தொடர்கள்,  செய்திகள் என்ற பெயரில் ஒரு பக்க பார்வை.  விவாதங்கள் என்ற பெயரில் வெறும் வாதங்கள்.  ஆண்மீகவாதிகளுக்கும் அரசியல் அரிதாரங்கள்.  தலைவனை தேடும் தலைவனைப்போல் தலைமுறை தேடும் தலைமுறைகளாக மொத்தமாக மாறிக்கொண்டிருக்கும் அவலம்.

மனிதசமூகம் இன்று எதைநோக்கி பயணப்பட்டு கொண்டிருக்கின்றது.  வழிநெடுகிலும் குழிகளால் இருக்கும் வாழ்க்கைப்பாதையில் – முறையாக வழிநடத்திக்கொண்டிருப்பவன் யார்?

பாம்பா – பழுதா என்று புரிந்துகொள்ள முடியாமல் புத்தி மழுங்கிப்போனது எப்படி?

பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் நம்புவதா – வெம்புவதா என்று முடிவெடுக்க முடியாமல் முடங்கிப்போனது எப்படி?

அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச்செல்வது என்பதை விடுங்கள்.  உங்கள் அடுத்த நொடிக்கு எதை எடுப்பது, ஏற்ப்பது என்ற குழப்பத்திலிருந்து விடுபடுவது எப்படி?

பயமே பயங்கொள்ளும் பயங்கரமாக வாழ்க்கை ஆனதன் காரணம் என்ன?

இப்படியே போனால் இதன் இறுதிக்கட்டம் தான் என்ன?

சிந்தியுங்கள்!

மனம் விட்டு சிரிக்கும் பிறவியாக மனிதன் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஆனந்தமாக வாழ்வை வாழும் பிரஜையாக ஜீவிக்க என்ன செய்ய வேண்டும்?

நிரந்தர சுவாசம் இல்லையென்றாலும் – நிம்மதி சுவாசம் சுவாசிக்க என்ன செய்ய வேண்டும்?

நல்ல வாழ்வை தந்தார் என் தந்தை – என பிள்ளைகள் பாராட்ட என்ன செய்ய வேண்டும்?

ஒரு நல்ல வழிகாட்டி என்று அடுத்த தலைமுறை ஆசானாக ஏற்க என்ன செய்ய வேண்டும்?

சுலபம்! மிகவும் சுலபம்!

உங்கள் நெஞ்சில், சிந்தையில், செயலில் – நன்றியுணர்வை நங்கூரமாக பதியுங்கள்.

நேர்மையான வழியிலேதான் என் பயணம் என்று ஒவ்வொரு அடியையும் அளந்து வையுங்கள்.

மற்றவரின் சூழ்சிகளுக்கும், வசீகர வார்த்தைகளுக்கும் என்மனம் மசியாது – என்று தெளிவை கொள்ளுங்கள்.

பார்ப்பது, கேட்பது, படிப்பது – இவைகளிலிருந்து நல்லனவற்றை மட்டும் பிரித்தெடுக்கும் சூட்சுமத்தை புரியுங்கள் – அன்னப்பறவையிடம் ஆலோசனை பெற்றதுபோல்!

நன்றி சொல்லுங்கள்!  நன்றி செலுத்துங்கள்!

நன்றி கொடுப்பதிலும் இன்பம், பெறுவதிலும் இன்பம்.

பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்பதுபோல் – தரமான மனிதர்களுக்கு நன்றி கொடுங்கள்.

தரம் தரமானது என்பதால் பெறுவதில் எப்போதும் பிரச்சினை இருக்காது.

தெளிவை தீர்வாக கொடுக்கும் ஒரு புத்தகத்தை படித்தால் – அதன் ஆசிரியருக்கு நன்றி சொல்லுங்கள்.

மனித நேயத்துடன் வாழும் மனிதர்களை காணும்போது – உங்கள் மகிழ்ச்சியில் நன்றி கலந்திருக்கட்டும்.

உங்கள் ஆலய தரிசனம் – ஆன்மபலத்தை சேர்ப்பதுபோல, கடவுளுக்கு நீங்கள் காணிக்கையிடும் கண்நீர்த்துளியோடு நன்றித்துளியும் சேர்ந்தே இருக்கட்டும்.

உங்களுடைய செயல் – மற்றவர் எப்பொதும் நன்றியுடன் நினைப்பதுபோல் – நயமாக இருக்கட்டும், நலமாக இருக்கட்டும், நன்றாக இருக்கட்டும்.

உங்களுக்கான தகுந்த சூழ்நிலையையும் சுற்றத்தையும் உருவாக்கிக்கொள்ளுங்கள்.  அனைவரின் கரங்களும் உதவும் கரங்களாக, சிந்தையில், செழுமையில், அறிவில், ஆன்மபலத்தில், எண்ணத்தில் – உயர்வான விஷயங்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி என்ற எச்சரிக்கை பலகை எல்லைக்கொடாய்.

வரப்புயர நெல் உயரும் நெல் உயர குடி உயரும் குடி உயர கோல் உயரும் கோல் உயர கோன் உயர்வான் என்பதுபோல் உயர்வுக்கு மேலே உயர்வு – உங்கள் மொத வாழ்க்கையையும் உயர்த்தியே வைக்கும்.

நன்றி உணர்வு அடித்தளமாய் இருக்கட்டும்.

முறையாக வாழத்தெரியாமல் துன்ப சாகரத்தில் சிக்கித்தவிக்கும் – அதேநேரம், அதனின்று வெளியே வர வழி தேடும் தோழர்களுக்கு – தொலைவில், உயரத்தில் நீங்கள் ஒரு கலங்கரை விளக்காய் காட்சி தருவீர்கள்.

அதுதான் உங்கள் ஆனந்த வாழ்வுக்கான ஆதாரம்!  அத்தாட்சி!

நன்றியுடன் வாழ துவங்கும்போது குளத்திலே தண்ணியில்லே கொக்குமில்லே மீனுமில்லே பெட்டியிலே பணமில்லே பெத்த பிள்ள சொந்தமில்லே – என்று புலம்பும் சராசரி மானிடரிடமிருந்து வேறுபட்ட ஒருவராக இருப்பீர்கள்.

இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றான் அவன் விடுவானா – உறவைசொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா – என்று கவலைப்படும் மனிதர்க்கு மத்தியில் நமக்கும் மேலே ஒருவனடா அவன் நாளும் தெரிந்த தலைவனடா தினம் நாடகமாடும் கலைஞனடா என்று எதையும் நன்றியோடு ஏற்க வைக்கும்.

பணத்தின்மீதுதான் பக்தி என்றபின் பந்தபாசமே ஏனடா, பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா – என்று அனைவரையும் சகோதர பாவத்துடன் ஏற்க வைப்பது நன்றி

இனிமையான வாழ்வில் இறைவனுக்கு நன்றி செலுத்தி இன்பம் காண்பது மட்டுமல்ல, இறுதி மூச்சுக்குப்பின்பும் – இடுகாடுவரை இட்டுச்செல்லும், நம்மையும், நம்மைபற்றின நினைவுகளையும் சேர்த்து சுமக்கும் நாலு பேருக்கு நன்றி என்று கூற வைப்பது நன்றியுணர்ச்சியே.

எனவே,

வையுங்கள் !  நினைவில் வையுங்கள் !  நன்றியை நினைவில் வையுங்கள் !

வைத்தால்,

வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்

வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2018

மனமே நலம்! மாற்றமே வளம்!!
ஆறும் நீரும்
ஒன்பது வயதிற்குள் முதல் நூல் வெளியிட்ட முதல் சிறுவன்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
உள்ளத்தோடு உள்ளம்
“வாழ நினைத்தால் வாழலாம்” – 12
புதிய வருடமே புகழைச் சேர்…
தன்னம்பிக்கை மேடை
நம்பிக்கைக்கு… உயிர் கொடுப்போம்!
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
நவீனஜீனோமிக்ஸ் (பகுதி -9)
திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும்…
தமிழர் வீரத்தின் அடையாளம் கபாடி…
மேம்படட்டும் மனிதவளம்
அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
கோபப்படுவதில் நீங்கள் எந்த வகை?
வெற்றி உங்கள் கையில் – 49
ஒத்திப் போடும் குணம் நன்மை தருமா? தீமை தருமா?
துபாய் வாங்க!