Home » Cover Story » மனமே நலம்! மாற்றமே வளம்!!

 
மனமே நலம்! மாற்றமே வளம்!!


ஆசிரியர் குழு
Author:

டாக்டர்  க. மாதேஸ்வரன்

மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்

நிறுவனர், ராயல் கேர் ஸ்பெஸாலிட்டி மருத்துவமனை, கோயம்புத்தூர்.

மனிதன் தன் வாழ்வில் வெற்றி பெற, சாதனைகள் புரிய, பல்வேறு துறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு துறையிலும் வல்லமை படைத்தவர்கள் பலர் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள்தான் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு முன் மாதிரியாக வடிவம் பெறுகிறார்கள். அந்த வகையில் இவர் தலை சிறந்தவர் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

கோவைப் பகுதியில் தலைசிறந்த மருத்துவர்கள் பட்டியலில் இவரைத் தவிர்க்க முடியாது என்பது நிதர்சனம். மருத்துவத் துறையில் காலத்தின் தேவையை அறிந்து, அனைத்து அதிநவீன வசதிகளையும் கொடுக்கும் மருத்துவமனையை நிறுவி மக்களின் தேவையைப் பூர்த்தி செய்து வருபவர்.

தொடங்கும் எல்லா செயலிலும் வெற்றி, அதற்கு காரணம் இவரின் கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்புத் தன்மை, தூய எண்ணம் போன்ற நல்லொழுக்கங்களைக் கொண்டவர்.

இத்தனை நற்பண்புகளைக் கொண்டு விளங்கும் ராயல் கேர் ஸ்பெஸாலிட்டி மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர்  க. மாதேஸ்வரன் அவர்களை ஒரு அழகிய மாலைப் பொழுதில் நேர்முகம் கண்டோம் அவர்களின் வாழ்க்கையில் நடந்த அனுபவத்தை அழகிய கொங்குத் தமிழில் சொன்னார். அதிலிருந்து இனி உங்களோடு பயணிப்போம். கே. உங்களின் பிறப்பும், படிப்பும் பற்றிச் சொல்லுங்கள்?

ஈரோடு மாவட்டத்திலுள்ள  சித்தோடு பகுதியில் தான் பிறந்தேன். பெற்றோர். திரு. கருப்பண்ணசாமி, திருமதி. வள்ளியாத்தாள். விவசாயப் பின்னணி உடைய குடும்பம்.  என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். அண்ணன் ஒருவர், தம்பி ஒருவர். நான் நடுப்பையன். என்னுடைய மனைவி ஸ்ரீகலா இல்லத்தரசி. மூத்தமகள் மினுமாதேஸ்வரன் காது மூக்கு தொண்டை சம்மந்தமான நிபுணத்துவத் துறையைப் படித்து வருகிறார். இளைய மகள் லலித் சித்ரா பி. எஸ். சி படித்து வருகிறார்.

எங்கள் குடும்பம் என்று எடுத்துக் கொண்டால், விவசாயத்தைத் தவிர வேறு தொழில் அறியாதவர்கள் என்றே சொல்லலாம். வீட்டில் பால் தரும் கறவை மாடுகளும், தேங்காயும் எப்பொழுதும் இருக்கும். இது தான் எங்கள் குடும்பத்தின் வருமானம்.

நான் படித்தது என்று பார்த்தால் கோவையிலுள்ள ‘மைக்கேல்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தான் படித்தேன். நான் படிக்கின்ற காலத்தில் எனக்கும் என் பெற்றோருக்கும் இடையிலான உறவுமுறை சற்று தூரமாகவே இருந்தது. காரணம் நான் முதல் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை விடுதியிலேயே படிக்கும் சூழல் ஏற்பட்டது. விழாக்காலங்களில் மட்டுமே வீட்டிற்குச் செல்வேன். அப்பொழுது நானும்  என் தந்தையுடன் சேர்ந்து விவசாயம் செய்வேன். 11 ஆம் வகுப்பு முடித்தவுடன் பி.யு.சி பட்டப்படிப்பை ஈரோடு சிக்கய நாயக்கர் கல்லூரியல் படித்தேன். நாங்கள் தான் பி.யு.சி பட்டப்படிப்பை இறுதியாகப் படித்தவர்கள்.

கே. மருத்துவர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் எவ்வாறு எழுந்தது?

பெற்றோரின் ஆசையை நிறைவேற்றுவது தான் பிள்ளைகளுக்குப் பெருமை என்று சொல்வார்கள். என் தாயாரின் விருப்பம் தான் என்னை ஒரு மருத்துவராக மாற்றியது.

என் தாயாருக்கு நீண்ட நாள் ஆசை. நம் குடும்பத்தில்  யாராவது ஒருவர் மருத்துவர் ஆக வேண்டும் என்பது.  முதலில் என் அண்ணாவிடம் கேட்டார், அவர் மறுத்துவிட்டார். அடுத்து என் தம்பி ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட்டார். இதனால் என்னைக் கேட்ட பொழுது எவ்வித மறுப்பும் சொல்லாமல் சரி என்று சொல்லி விட்டேன்.

சின்ன வயதிலிருந்தே டாக்டர் என்ற என் தாயாரின் ஆசை என் மனதில் பசுமரத்தாணி போல மனதில் பதிந்து விட்டது. இதனால் எந்நேரமும் படிப்பு படிப்பு என்றே ஆகிவிட்டது.

பி.யு.சி முடித்தவுடன் பெங்களூரிலுள்ள எம். எஸ் இராமய்யா மெடிக்கல் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பைப் படித்தேன். படிக்கின்றபோது மருத்துவத்தின் மகத்துவத் தையும், தனித்துவத்தையும் அறிந்தும், புரிந்தும் படித்தேன். மருத்துவராக விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு துறையில் தனித்து அடையாளத் துடன்  வர வேண்டும் என்ற கனவும், ஆசையும் இருக்கும். அதில் எனக்கு மூளைச் சார்ந்த அறுவை சிகிச்சை நிபுணராக வர வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.

அதன் பிறகு மதுரையில்  நீயூரோ சர்ஜரி துறையைப் படித்தேன். இத்துறையை 5 வருடம் படிக்க வேண்டும். இதையும் வெற்றிகரமாக 2002 ஆம் ஆண்டு முடித்தேன். கே . உங்களின் முதல் மருத்துவர் பணியைப் பற்றிச் சொல்லுங்கள்?

எம். சி. எச் படிப்பை முடித்தவுடன் தூத்துக்குடியில் மெடிக்கல் கல்லூரியில்  பணியில் முதன் முதலாகச் சேர்ந்தேன். நான் சேர்ந்த பொழுது எனக்குள்ளே சில வரையறைகளை வகுத்துக் கொண்டேன். அது என்னவென்றால்.

எவ்வித பாகுபாடுமின்றி, நான் கற்றதையும், மருத்துவத்தில் பெற்றதையும் அவ்வாறே வெளிபடுத்த வேண்டும்.

மருத்துவம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. இங்கு உயர்வு, தாழ்வு, ஏற்ற இறக்கம், நல்லவர், கெட்டவர் என்ற எந்த பாகுபாடுமில்லை. தன்னை நாடி, வருபவர்களை நோயற்றவர்களாக மாற்றவேண்டும் என்பது மட்டுமே சிந்தனையாக இருக்க வேண்டும். இது தான் நான் எடுத்துக் கொண்ட உறுதிமொழி. இன்றும், இனியும் இதையே கடைபிடிப்பேன்.

தூத்துக்குடியில் பணியாற்றிய பின்னர் 2004 ஆம் ஆண்டு கோவைப்பகுதிக்கு வந்து பயிற்சி மேற்கொண்டேன்.

கே. ராயல் கேர் ஸ்பெஸாலிட்டி மருத்துவமனை உதயமானது குறித்துச் சொல்லுங்கள்?

உன் மீது நம்பிக்கை இருந்தால்  வானையும் அளக்கலாம், கடலையும் கடக்கலாம் என்பது தன்னம்பிக்கை பழமொழி. இந்த மருத்துவமனையின் உதயத்திற்கு இது தான் காரணம்.

நான் மதுரையில் பணியாற்றும் பொழுது டாக்டர் விஜயன் அவர்களின் நட்பு கிடைத்தது. அவரும் நானும் இணைந்து முதலில் ஈரோட்டில் தான் மருத்துவமனை தொடங்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் ஏதோ ஒரு தவிர்க்க முடியாது சூழலில் அது தடைப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே எண்ணம் உதயமாயின. ஆனால் இந்த முறை எவ்வித சவால்களையும் சந்தித்து விட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதன் பிறகு தான் கோவையைத் தேர்ந்தெடுத்தேன்.

2012 ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு மருத்துவமனையைத் தொடங்க வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டேன். இதனால் கட்டடம் கட்ட வேண்டும் முதலில் நிலம் வாங்க வேண்டும், அந்த நிலமும் சரியான இடத்தில் வாங்க வேண்டும், கட்டடம் கட்ட அனுமதி வாங்க வேண்டும், விதிமுறைகளுக்கு உட்பட்டது என்று சான்றிதழ் வாங்க வேண்டும் எப்படி நிறைய வேலைகள் இருக்கிறது. அனைத்தையும் முறையாக கையாண்டு 14 மாதத்திற்குள் கட்டடம் முடிந்து 2016ல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

கே . தனியார் மருத்துவமனை என்றாலே கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கருத்து நிலவுகிறது, அது பற்றி?

இக்கருத்தை ஏற்றுக் கொண்டாலும் இதிலுள்ள உண்மைத்தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஒரு மருத்துவமனை கட்ட வேண்டுமென்றால் வங்கியில் மற்ற தொழிற் நிறுவனங்களுக்கு என்ன அடிப்படையில் பணம் கொடுப்பார்களோ அதே அடிப்படையில் தான் இதற்கும் பணம் கொடுக்கிறார்கள்.

தற்போது அனைவரின் பார்வையும் மருத்துவமனை என்றாலே பணம் சம்பாதிக்கும் தொழிலாகவே பார்க்கிறார்கள். அது மட்டுமின்றி கார்ப்பரேட் மருத்துவமனை என்றால் ஏதோ ஒரு தவறு செய்யும் கூடாரமாகவே பார்க்கப் படுகிறது. நாம் ஒரு தரமான மருத்துவத்தை குறைந்த செலவில்  கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும், மருத்துவ பொருட்களின் விலை மிகவும் அதிகம். இவ்வளவு விலை கொடுத்து ஒரு இயந்திரம் தேவைதானா என்ற வினா கூட எழலாம். ஆனால் இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் இயந்திரத்தில் சிகிச்சையை மிக சுலபமாக பின் விளைவின்றி கையாளலாம்.

எந்த மருத்துவமனையும் 100 சதவிதம் விலை கூடுதலாகவும் இலாப நோக்கோடும் நடத்த மாட்டார்கள். அதே சமயத்தில் நஷ்டத்திலும் நடத்த மாட்டார்கள். ஒட்டு மொத்த  செலவையும் கருத்தில் கொண்டு கட்டணம் வசூலிக்கப் படுகின்றன. ஒவ்வொரு மருத்துவமனையும் அவர்களுக்கு என்று ஒரு கட்டண மதிப்பீடு இருக்கும்.

கே . ஒரு மருத்துவமனையின் நிர்வாகம்  எவ்வாறு இருந்தால் அது சாலச் சிறந்தது?

பிரச்சனைகள் என்பது யாரிடமும் சொல்லிவிட்டு வராது, எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் வரலாம். அவ்வாறு இரவு 12 மணிக்கு வந்தாலும் அவர்களை முறையாக அணுகி,  பிரச்சனையைக் கேட்டறிந்து சிகிச்சை அளித்தல் வேண்டும்.

மருத்துவமனையை நாடி வருபவர்களின் தேவையை அறிந்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை முதலில் போக்கிக் கொள்ள வேண்டும்.

அதே போல் சிகிச்சைக்கு வந்தவர்கள் உங்கள் மருத்துவமனையிலிருந்து வெளியேற விரும்புகிறேன் என்று சொன்னால் அடுத்த 30 நிமிடத்தில் அவர்களை அனுப்பி வைக்க வேண்டும்.

நோயாளிகளை அலைகழிக்கக் கூடாது. செவிலியர்களும் நோயாளிகளிடம் அன்பாகவும் அரவணைப்பாகவும் பழகுதல் வேண்டும்.

இவ்வாறு இருப்பின் மருத்துவமனையின் நற்பெயரை நிலைநிறுத்திக் கொள்ளலாம். கே . மருத்துவர் நோயாளிகளின் உறவு முறை பற்றிச் சொல்லுங்கள்?

எந்த நோயாளியும் மருத்துவமனைக்கு வருவதற்கு முன் டாக்டர் என்ன சொல்லி விடுகிறாரோ, என்று மனதில் பயத்துடனும், கவலையுடனும் தான் வருவார்கள்.

முதலில் அவர்களைச் சந்தித்து ஆறுதலாகவும், அன்பாகவும் சில வார்த்தைகளைச் சொல்லி அவர்களின் பயத்தை முதலில் போக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

நோயாளி டாக்டரைப் பார்க்க உள்ளே வந்தவுடன் அந்தப் பரிசோதனை செய்து விட்டதா? இந்தப் பரிசோதனை செய்து விட்டதா? என்று முதலில் அதை செய்து வாருங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தல் கூடாது.

மருத்துவமனைக்கு வந்த பின்னர் தான் அவரவர் விருப்பமான கடவுளையே நாடிச் செல்வர். அப்படியிருக்கும் போது நம்முடைய நடத்தையும் பேச்சும் அவர்களை பாதி நோயிலிருந்து விடுவிக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

டாக்டரிடம் உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும். டாக்டரும் இதை கடைபிடிக்க வேண்டும்.

எந்த மருத்துவரும் தன்னிடம் வரும் நோயாளி முழுமையாக குணம் ஆகிவிடக் கூடாது என்று நினைக்கமாட்டார். தன்னை நாடி வருபவர்கள் அனைவரும் முழு உடல் நலத்துடன் செல்ல வேண்டும் என்பதை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டே இருப்பார்.

நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லில் தான் இந்த உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது. அந்த வகையில் நம்பிக்கையான வார்த்தை தான் நல்ல வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

மருத்துவர்களும் மனிதர்கள் தான். என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கே. ஆங்கில மருத்துவமனையின் தனித்தன்மைகள் பற்றிச் சொல்லுங்கள்?

ஆங்கில மருத்துவ முறைஎன்று சொல்வதை விட “விஞ்ஞான மருத்துவ முறை’ என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

விஞ்ஞானம் என்பது அறிவியல் பூர்வமாக அறியப்படும் கண்டுபிடிப்பு. இதன் அடிப்படையில் தான் தற்போது மருத்துவ முறைகள் நடை பெற்று வருகிறது. சாதாரண மனிதனுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது என்றால் அவருக்கு அது இதயம் சார்ந்தது மட்டும் தான் தெரியும் ஆனால் ஒரு விஞ்ஞான மருத்துவர் அதை ஆராயும் போது தான் இன்ன பிற பிரச்சனைகள் இருப்பதும் புலப்படும்.

சர்க்கரை நோயாளிக்கு ஹார்ட் அட்டாக் பிரச்சனை வரும் போது வலிதெரியாது. இதை மற்ற எந்த மருத்துவ முறையிலும் கண்டுபிடிக்க முடியாது. நம் மருத்துவ முறையில் தான் கண்டுபிடிக்க முடியும்.

ஒருவர் சாலையில் மிதிவண்டியில் பயணித்து வருவதாக வைத்துக் கொள்ளலாம். அப்போது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி வருகிறது, என்றால் அவருக்கு முதல் உதவி கொடுக்கும் விதமாக, நிச்சயம் விஞ்ஞான மருத்துவரால் மட்டுமே அதற்கான சரியான தீர்வு காண முடியும்.

24 மணி நேரமும்  டாக்டர்கள், செவிலியர்கள் எப்போதும் இந்த மருத்துவமுறையில்  தான் இயங்கிக் கொண்டேயிருப்பார்கள்.

கே .மருத்துவ துறையிலுள்ள சிக்கல்கள் அதை எவ்வாறு எதிர் கொள்கிறீர்கள்?

நிச்சயம், சிக்கல்கள் நிறைந்த துறைதான்.  உதாரணமாக ஒருவர் இரவு 12 மணிக்கு சாலை விபத்தில் அடிப்பட்டு உயிருக்குப்  போராடிக் கொண்டிருக்கிறார். அந்த வழியாக சென்ற யாரோ ஒருவர் அவரை எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வருகிறார்.

அவர் யார், முகவரி என்ன, எந்த ஊரைச் சார்ந்தவர் என்று எதுவும் தெரியாது. அவரிடமும் அவர் சார்ந்த எந்த அடையாளமும் இல்லை. இத்தருணத்தில் ஒரு மருத்துவராய் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காப்பாற்றியாக வேண்டும் இது தான் மருத்துவர் என்பதின் மகிமை.

அவரின் உயிரைக் காப்பாற்றிய பின்னர், ஏதேனும் ஒரு முறையில் அவரின் வீட்டின் முகவரியை அறிந்து. அவரின் குடும்பத்தினருக்கு தகவல் சொல்லி அவர்கள் வந்த பின்னர், சிகிச்சை செலவை சொல்லும் போது அவர்களின் வறுமையின் காரணமாக கட்டமுடியாத சூழல் ஏற்படலாம். இதை எல்லாம் சமாளித்து தான் ஆக வேண்டும்.

இப்படித்தான் நிறைய மருத்துவமனைகள் இப்படிப்பட்ட சவால்களை சந்தித்து வருகிறது.

சில ஊடகங்களும் செவிவழியாக சில செய்தியைக் கேட்டறிந்து தவறான தகவல்களைப் பரப்ப முற்படுகிறது.

அதே போல் எங்கள் மருத்துவமனை மிகப்பெரிய ஊழியர்களைக் கொண்டது. 1200  பேர் பணியாற்றுகிறார்கள். கூட்டம் எங்கு மிகுதியாக இருக்கிறதோ அங்கு பிரச்சனைகள் மிகுதியாக இருக்கும். அவற்றையும் சமாளித்து ஆக வேண்டும்.

இப்படி நிறைய சவால்களை சந்தித்தால் தான் சாதனைப் பக்கத்தில் இடம் பிடிக்க முடியும்.

கே. உங்களின் நேர நிர்வாகம் பற்றிச் சொல்லுங்கள்?

24 மணி நேரமும் ஓய்வில்லாமல் உழைப்பவர்கள் மூவர், மருத்துவர், காவல் துறையினர், பத்திரிக்கையாளர்கள். இவர்களுக்கு எப்போதும்  ஓய்வென்பதே இல்லை.

நான் விடுமுறை என்றோ, விழா என்றோ எதற்கும் விடுப்பு எடுத்தது கிடையாது. குடும்பத்தின் இடையே நேர செலவழிப்பு என்பது மிகவும் குறைவு. அதை என்னுடைய மனைவியும் மகள்களும் புரிந்து கொள்வார்கள்.

ஓய்வென்றே நினைக்க முடியாத தொழில். நான் ஒரு நான்கு நாட்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்கு முன்பே என்னைத் தயார் படுத்திக்  கொள்ள வேண்டும். அதற்கு என்னிடம் வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை திட்டமிட்டு குறைத்துக் கொள்ள வேண்டும்..

அறுவை சிகிச்சை செய்த அடுத்த நாளே வெளியூருக்குச்  செல்ல முடியாது. காரணம் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் வினா எழுப்புவார். டாக்டர் அடுத்த நாளே சென்று விட்டார் என்று வருத்தமும் கொள்வார். இதை எல்லாம் பார்த்து தான் ஒரு மருத்துவர் செயல்பட வேண்டும்.

கே. உங்கள் மருத்துவர் வாழ்வில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு என்று நீங்கள் நினைப்பது?

அப்படிச் சொல்ல வேண்டுமென்றால் நிறைய இருக்கிறது. நான் ஒரு மூளை அறுவை சிகிச்சை நிபுணர் என்பதால் நிறைய சிகிச்சை செய்திருக்கிறேன். வயதானவர்கள் முதல் பச்சிளம் குழந்தை வரை சிகிச்சை அளித்துள்ளேன்.

அதிலும்  ஒரு 14 மாதம் குழந்தைக்கு மூளையில் கட்டியை அகற்றி சிகிச்சை அளித்தது சற்று சவாலாக இருந்தது.

ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு வந்தேன். பணம் கட்டும் இடத்திலிருந்து ஒரு பெண் குரல் டாக்டர் என்றது. திரும்பி பார்த்தேன் ஒரு 20 வயது மதிப்புத்தக்க பெண் என்னைப் பார்த்து ஓடிவந்து என்னை அடையாளம் தெரிகிறதா என்று கேட்டார். எனக்குச் சரியாக நினைவில்லை என்று சொல்லிவிட்டேன். நீங்கள் தான் ஒரு 10 வருடத்திற்கு முன்னால் என்னுடைய மூளையில் ஏற்பட்ட கட்டியை அகற்றுனீர்கள் என்று தற்போது நான் கல்லூரியல் படிக்கிறேன் என்ற தகவலையும் சொன்னார் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஓரு மருத்துவராய் இதைத் தவிர என்ன மகிழ்ச்சி இருக்கப் போகிறது. இப்படி எண்ணற்ற நிகழ்வு இருக்கிறது.

கே . இத்தருணத்தில் நன்றிக்குரியவர்கள் என்று நீங்கள் பார்ப்பது?

என்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் நன்றிக்குரியவர்கள் என்று பார்த்தால் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் என்னுடைய பெற்றோர்கள், அவர்கள் இல்லை என்றால் இன்று ஒரு மருத்துவராக நிச்சயம் ஆகியிருக்க முடியாது. அடுத்து என்னுடைய மனைவி ஸ்ரீகலா, மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்று சொல்வது உண்மை தான். என் வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களையும், ஏற்ற இறக்கங்களையும் அறிந்து நான் சோர்ந்து போகும் காலத்தில் எல்லாம் என்னுடைய கரமாக இருந்து செயல்படுத்தியவர். வீட்டில் நல்ல மனைவியாக, குழந்தைகளுக்கு நல்ல தாயாக இருந்து வழி நடத்துவதில் சிறப்பு பெற்றவர்.

ராயல் கேர் மருத்துவமனையின் முதலாம் ஆண்டு விழாவில் ராயல் கேர் என்ற பெயரில் சுகாதார பராமரிப்பு தொடர்பான செய்தி மடலை நரம்பியல் நிபுணர் டாக்டர் கே.விஜயன் வெளியிட மருத்துவ இயக்குனர் டாக்டர் பரந்தாமன் சேதுபதி அவர்கள் பெற்றுக் கொண்டார். இந்த செய்தி கடிதம் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு வரும். என்னுடைய மச்சான் கே.பி. அளகேசன், டாக்டர் கே.சொக்கலிங்கம் இருதய சிகிச்சை நிபுணர் இவர்கள் இருவரும் ராயல் கேர் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இப்பொழுது வரை மருத்துவ மனைக்கு தூண்டுகோளாய் விளங்குகிறார்கள்.

மிகவும் போற்றுதலுக்கும், மரியாதைக்கும் உரிய கே.எம்.சி. எச் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் நல்ல பழனிச்சாமி அவர்களை நிச்சயம் இந்த இடத்தில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

கே. இன்றைய இளம் மருத்துவர்களுக்கு உங்களின் ஆலோசனை?

எதைச் செய்தாலும் 100 சதவீதம் உண்மையாகச் செய்தல் வேண்டும். மருத்துவர் என்பவர் கடவுளுக்கு ஒப்பானவர். இப்படியிருக்கும் போது இதன் மகத்துவத்தை புரிந்து நடத்துதல் வேண்டும்.

நோயாளி குறித்தான அத்துணைத் தகவல்களையும் அவரின் உறவினரிடையே முன் கூட்டியே சொல்லி விட வேண்டும்.

நாமும் எந்த நோயாளிக்கு என்ன சிகிச்சை அளிக்க போகிறோம் என்பதையும் சொல்லி விட வேண்டும்.

கே. தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

ஒரு முறைமட்டும் முயன்றவர்கள் யாராலும் வெற்றி பெறமுடியாது. தொடர்ந்து யார் முயன்று கொண்டேயிருக்கிறார்களோ அவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெருகிறார்கள். இதனால் எதையும் முடிக்க முடியும் என்ற உத்வேகம் உங்களுக்குள் எப்போதும் இருக்க வேண்டும்.

ஒரு வேலையை எடுத்துக் கொண்டால்  அதை வெற்றி பெறும் வரை அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கே. நீங்கள் செய்த, செய்கின்ற சமூக சேவைகள் பற்றி?

எங்கள் மருத்துவமனையில் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் எங்களுக்கு உதவி செய்த மற்றும் எங்களிடம் சிகிச்சை பெற்றவர்களை அழைத்து 1000 பேர் கொண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்தோம்.

அவ்விழாவில் “”உயிரின் சுவாசம்” என்ற தலைப்பில் ஒரு அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் மரம் நடுதல் பணியைச் செய்து வருகிறோம்.

முதல் கட்டமாக 10000 த்திற்கும் மேற்பட்ட மரங்கள் நட்டுயிருக்கிறோம். 2022 ஆம் ஆண்டுக்குள் கோவை மற்றும் ஈரோடு பகுதியில் 2 கோடி மரங்கள் நட வேண்டும் நிச்சயம் இதை நடத்தி காட்ட வேண்டும்  என்ற வேகத்துடன் செயல்பட்டுவருகிறோம்.

மாதம் 3 இலட்சம் மரம் வீதம் நடவேண்டும். இதை எல்லாம் என்னுடைய மருத்துவமனையில் நான் செய்யும் வேலையில் கிடைக்கும் வருமானத்தில் 20 சதவீதம் இதற்காக செலவிடுகிறேன்.

ராயல் கேர் உயர் சிறப்பு மருத்துவமனையின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா சமீபத்தில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி மருத்துவமனை வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. பொது மக்கள் பயன் பெரும் வகையில் 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை மருத்துவமனையில் பதினைந்து சிறப்பு மருத்துவப் பிரிவுகள் சார்பில் சிறப்பு மருத்துவக் கண்காட்சி நடைபெற்றது.

பல்லாயிரக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவத் துறையின் நவீன சிகிச்சை முறைகளை அறிந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் நடைபெற்றவிழாவில் சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில் திருமதி. தாரிணி, திரு. பாலசுப்ரமணியம், கோவை மண்டல மேலாளர், மற்றும் மேலாளர் மற்றும் சூலூர் பஞ்சாயத்தின் முன்னாள் தலைவர் மாதப்பூர் பாலு கலந்து கொண்டார்.

விழாவில் முத்தாய்ப்பாக மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சையின் மூலம் மறுவாழ்வு அடைந்தார்கள் மருத்துவ காப்பீட்டின் முக்கியத்துவத்தை அறியும் வகையில் 150 நபர்களுக்கு மூன்று இலட்சம் கட்டணமில்லா சிகிச்சை பெரும் ஸ்டார் மருத்துவக் காப்பீடு பத்திரத்தை மருத்துவமனையின் தலைவர் டாக்டர் மாதேஸ்வரன் இலவசமாக வழங்கினார். மேலும் ஊழியர்கள் கலை மற்றும் விளையாட்டுத் துறையில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2018

மனமே நலம்! மாற்றமே வளம்!!
ஆறும் நீரும்
ஒன்பது வயதிற்குள் முதல் நூல் வெளியிட்ட முதல் சிறுவன்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
உள்ளத்தோடு உள்ளம்
“வாழ நினைத்தால் வாழலாம்” – 12
புதிய வருடமே புகழைச் சேர்…
தன்னம்பிக்கை மேடை
நம்பிக்கைக்கு… உயிர் கொடுப்போம்!
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
நவீனஜீனோமிக்ஸ் (பகுதி -9)
திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும்…
தமிழர் வீரத்தின் அடையாளம் கபாடி…
மேம்படட்டும் மனிதவளம்
அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
கோபப்படுவதில் நீங்கள் எந்த வகை?
வெற்றி உங்கள் கையில் – 49
ஒத்திப் போடும் குணம் நன்மை தருமா? தீமை தருமா?
துபாய் வாங்க!