Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி…?

எதையும் சாதிக்க முடியவில்லை என்ற ஆதங்கம், எனக்கு நீண்ட காலமாக ஒரு கேள்விக்குறியாய் இருந்து கொண்டே இருக்கிறது. நான் என்ன தான் செய்ய வேண்டும்?                                          

பூபதிராஜா

உடற்கல்வித்துறை

நீங்கள் எதைச் சாதிக்க முயன்றீர்கள், அதில் என்ன சாதித்தீர்கள், என்ன சாதிக்க தவறினீர்கள், உங்கள் வயது என்ன போன்ற குறிப்புகள் என்னிடத்தில் இல்லை. இருப்பினும் இதை ஒரு பொதுவான ஆதங்கமாக கருதி உங்கள் கேள்விக்கு பதில் காண முயல்வோம்.

பெரியதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் உண்டு. சிலர் சிறு வயதில் எதாவது சாதனை நிகழ்த்தி விடுகிறார்கள். மாநிலத்தில் முதல் மதிப்பெண், மருத்துவக்கல்லூரியில் இடம், IAS பணி, கிரிக்கெட் விளையாட்டு, சினிமா, வெளிநாட்டில் நல்ல வேலை, தொழிலில் வெற்றி என்று சாதித்து விடுகிறார்கள். இன்னும் சிலர் சற்று கால தாமதமாக சாதித்துக் காட்டுவார்கள். விஞ்ஞானி, பல்கலைக்கழக துணைவேந்தர், நூலாசிரியர், அமைச்சர்கள், மருத்துவ வல்லுநர், இந்த வகையைச் சார்ந்தவர்கள். எதுவாக இருந்தாலும் இவர்கள் தங்களை ஒரு பணியில் அர்பணித்து, நேரம் ஒதுக்கி, முயற்சி செய்து இந்த நிலையை அடைந்திருக்கிறார்கள்.

இப்படி எதாவது ஒன்றை சாதித்தவர்கள் கூட எதையும் சாதிக்கவில்லை என்று புலம்புகிறார்கள். ஆக, சாதனை என்பது தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று தோன்றுகிறது.

பல வழிகள் உண்டு:

உங்களிடத்தில் இப்படி ஒரு உணர்வு இருப்பது மிகவும் நல்லது. ஒரு பெரிய சாதனை செய்வதற்கு இந்த உந்துகோலே போதுமானது. உங்களுக்கு சாதனை படைக்க பல வழிகள் உள்ளன.

1. ஒரு உடற்கல்வித் துறையைச் சேர்ந்தவர் என்ற முறையில் திறமை மிக்க ஒரு நூறு குழந்தைகளுக்கு விளையாட்டுப் பயிற்சி தரலாம். அதில் தடகளம், கையுந்துபந்து, கால்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள் என்றால் அவை ஒலிம்பிக் விளையாட்டுக்கள். உங்களது மாணவன் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றால் அது உங்களுக்கு எவ்வளவு பெருமையாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். உங்களது மாணவனுக்கு அர்ஜூணா விருது அளிக்கப்படும்போது, உங்களுக்கு துரோணாச்சார்யா விருது கிடைக்கும்.

2. ஒரு உடற்பயிற்சிக் கூடத்தை உருவாக்குங்கள். அதில் ஆயிரம் பேருக்கு உடற்பயிற்சி அளியுங்கள். உடற்பயிற்சியின் நன்மைகளை அவர்களுக்கு கற்பியுங்கள். ஒரு உடற்பயிற்சி மையம் ஒரு மருத்துவமனைக்கு இணையானது. உடற்பயிற்சியால் நோய்கள் வருவது தடுக்கப்படுகின்றன. அந்த உடற்பயிற்சி கூடத்தில் 100 உடற்பயிற்சி பயிற்சியாளர்களை உருவாக்குங்கள். உடற்கல்வி பற்றிய ஆராய்ச்சி செய்யுங்கள். அந்த ஆராய்ச்சியின் மூலம் விளைந்த உண்மைகளை நூல்களாக எழுதி மக்களுக்குள் எடுத்துச் செல்லுங்கள். அந்த ஆராய்ச்சி திறம்படச் செய்ய நீங்களும் மாரத்தான் ஓடுங்கள், உங்களது அனுபவத்தையும் எழுதுங்கள். நீங்கள் மறைந்த பின்னரும் இந்த ஆய்வுக் குறிப்புகள் மறையாது.

3. ஓரளவுக்குப் பொருள் ஈட்டிய பிறகு அதன் பெரும்பகுதியை ஏழைகளுக்குக் கொடுங்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய சாதனை உணர்வைத் தரும்.

4. ஒரு லட்சம் மரக்கன்றுகள் உங்கள் பகுதியில் நடுங்கள். இது நிச்சயம் சாத்தியமானதே! இந்த உலகை விட்டு மறைந்தாலும் அடுத்த 100 ஆண்டுகளில் இந்த மரங்கள் உங்கள் ஊரை ஒரு வனப்பகுதியாக மாற்றியிருக்கும்.

மகிழ்ச்சியே நிரந்தர சாதனை:

இவை தவிர சாதனைகளும் சாதனையாளர்களும் உண்டு. அதுவே உண்மையான சாதனையாகும். ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் தனக்குரிய கடமைகளை தவறாமல் செய்வதே அந்த சாதனை என்பேன். ஒரு ஆசிரியர் என்றால் அவரது பணியைச் சரியாக செய்து முடித்திருந்தால் அது சாதனை. ஒரு அரசு ஊழியர் அவரது பணியினை அற்புதமாக செய்து முடித்திருந்தால் அதுவும் ஒரு சாதனை. அலுவலகத்தில் அவருக்கு நல்லதொரு பெயர் கிடைக்கும். ஒரு தாய் இரண்டு பிள்ளைகளை ஆரோக்கியமாக வளர்த்து கல்வி கொடுத்து நல்ல மனிதர்களாக மாற்றினார் என்றால் அதுவும் ஒரு பெரிய சாதனை என்பதில் சந்தேகமில்லை. இப்படி கடமைகளை சிறப்பாக ஆற்றுவது மிகப்பெரிய மகிழ்ச்சி ஆகும். அது போன்ற மனநிலை தான் நிரந்தர மகிழ்ச்சி என்று உறுதியாக கூற முடியும். கடமைகள் ஆற்றுவதில் தான் நிரந்தர மகிழ்ச்சியும் இருக்கிறது.

சாதனையாளர்கள் என்று நீங்கள் நினைத்திருக்கும் பலரும் மகிழ்ச்சியாகவே இல்லை! பல சினிமா நட்சத்திரங்கள் தற்கொலை செய்வதை நாம் பார்க்கிறோம். சாதனை படைத்தாலும் இவர்களிடம் மகிழ்ச்சி இல்லை. தினம் தினம் நாம் செய்யும் செயல்கள் தான் நமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. அவை பிற்காலத்தில் பெரிய சாதனைகளாகவும் உருவாகிறது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2018

மனமே நலம்! மாற்றமே வளம்!!
ஆறும் நீரும்
ஒன்பது வயதிற்குள் முதல் நூல் வெளியிட்ட முதல் சிறுவன்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
உள்ளத்தோடு உள்ளம்
“வாழ நினைத்தால் வாழலாம்” – 12
புதிய வருடமே புகழைச் சேர்…
தன்னம்பிக்கை மேடை
நம்பிக்கைக்கு… உயிர் கொடுப்போம்!
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
நவீனஜீனோமிக்ஸ் (பகுதி -9)
திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும்…
தமிழர் வீரத்தின் அடையாளம் கபாடி…
மேம்படட்டும் மனிதவளம்
அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
கோபப்படுவதில் நீங்கள் எந்த வகை?
வெற்றி உங்கள் கையில் – 49
ஒத்திப் போடும் குணம் நன்மை தருமா? தீமை தருமா?
துபாய் வாங்க!