– 2018 – March | தன்னம்பிக்கை

Home » 2018 » March

 
 • Categories


 • Archives


  Follow us on

  உயர்வுக்கு மூலதனம் தன்னம்பிக்கை…

  “வேகமாகச் செல், வேகமாகச் செல். உன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேகமாகச் செல்”. இந்த எழுத்துக்கள் எட்டாம் ஹென்றியின் காôலத்தில் தபால் உறையின் மீது எழுதப்பட்டிருந்தது.

  தபால் போக்குவரத்து இல்லாத அந்தக் காலத்தில் அரசாங்கத் தூதுவர்களே கடிதங்களை எடுத்துக் கொண்டு செல்வார்கள். அவர்கள் வழியில் தாமதித்தால் என்ன தண்டனை தெரியுமா?

  மரண தண்டனை

  நாம் இன்று சில மணிநேரத்தில் கடந்து செல்லக்கூடிய தூரத்தை, அன்று பல நாட்கள் நடந்து செல்ல வேண்டிய அந்தக் காலத்தில் கூட அனாவசிய தாமதமானது பெரும் குற்றமாகக் கருதப்பட்டது.

  அந்தக் காலத்தில் உள்ளவர்கள் ஒரு வாரத்தில் செய்யக்கூடிய காரியத்தை இன்று ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்கும் வகையில் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது

  அன்று அனாவசியத் தாமதத்திற்கு மரண தண்டனை என்றால் இன்று அவ்விதக் குற்றத்திற்கு என்ன தண்டனை அளிக்கப்பட வேண்டும்?

  சோம்பேறித்தனத்தின் காரணமாக ஏற்பட்ட அனாவசிய தாமதத்தால் உலகில் ஏற்பட்ட அழிவுகள் அளவிட முடியாதவை.

  எத்தனை பேரரசுகள் சரிந்து சாம்பலாகி இருக்கின்றன. எத்தனை முடியரசுகள் கவிழ்ந்து இருக்கின்றன.

  எனவே தான் நெப்போலியன் கூறினார், “இழந்துவிட்ட ஒவ்வொரு நிமிடமும் துன்பத்திற்கும், துயரத்திற்கும் சந்தர்ப்பம் அளிக்கிறது”.

  உடனுக்கு உடன் காரியங்களை ஒழுங்காகச் செய்து முடிப்பது போன்று, நமக்கு வெற்றி மாலை சூட்டக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.

  இதே போன்று

  செய்ய வேண்டியதை ஒத்திப் போட்டுக் கொண்டே போவது போன்று துன்பப்படு குழியில் தள்ளக் கூடியதும் வேறு ஒன்றும் இல்லை.

  காலம் என்றகடிகாரத்தில் ஒரே ஒரு சொல் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால் “இப்பொழுதே” என்பது தான்.

  இதுதான் வெற்றி வீரனின் தாராக மந்திரமாகும். பின்பு என்பது தோல்வியின் தோழமைச் சொல்லாகும்.

  அன்றாடம் செய்யப்பட்டிருக்க வேண்டிய வேலைகள் ஒத்திப் போடப்பட்டதன் காரணமாக மலைபோல் குவிந்து மலைக்க வைத்துவிடும்.

  இவ்வாறு நம்முடைய வாழ்வில் ஒழுங்கீனம், தன்னுடைய கொடிய உருவத்தைக் காட்டத் தொடங்குகிறது. அதனால் நம்முடைய வாழ்வு சிறப்பு இன்றி சீதனம் குன்றி அமைந்து விடுகிறது.

  செய்ய வேண்டிய வேலையை உடனுக்கு உடன் செய்யாமல், வந்திருக்கும் மடலுக்கு பதில் எழுதாமலும் இருப்பது, வாழ்க்கைச் சக்கரத்தை ஓடச் செய்யாமல் தடைபோட்டு விடும்.

  ஒரு வேலையை ஒத்திப்போடுவது தான் என்றால் என்ன? அதைப் புதைகுழியில் போட்டு மூடிவிடுவது என்பது தான்.

  பின்பு பார்ப்போம் என்றால் பின்பு ஒரு போதும் அதனை ஏறிட்டுப் பார்ப்பது இல்லை என்பது தான்.

  ஒரு வேலையைச் செய்வது, விதையை விதைப்பது போலாகும். அது உரிய காலத்தில் நடப்படவில்லை ன்றால் அது காலம் தவறிய நடவு தானே.

  காலம் தவறிய நடவின் பயன் அதற்கு ஏற்றால் போலதான் இருக்கும். எனவே இப்பொழுது என்பது நமக்கு அருளப்பட்டிருக்கும் மாணிக்கமாகும்.

  இந்த இதழை மேலும்

  வரலாற்றில் ஓளிவீசும் தைரியத் திலகங்கள்

  ஈரம் இருக்கும் வரை மரத்தை விட்டு

  இலைகள் உதிர்வதில்லை.

  மனதில் தைரியம் இருக்கும் வரை

  மனிதன் தோற்பதில்லை.

  வாழ்வில் துன்பங்கள், துயரங்கள்,நமக்கு போராடும் எண்ணத்தைத் தருகிறது. ஒருவரின் மனதைரியத்தின் அளவுதான் அவர்களது வாழ்வு விரிவடைவதையோ, சுருங்கி விடுவதையோ தீர்மானிக்கிறது.

  சிக்கலான தருணங்களில் வலி, வேதனை, ஆபத்து, பயம் யாவற்றையும் எதிர்த்து நிற்கும் திறனே தைரியமாகும். இடர்பாடுகளை பயமின்றி சந்திக்கத் தயாராகும் மனதைரியம் லட்சியத்தை வென்று முடிக்கிறது. ‘ரிஸ்க்’ எடுக்க போதுமான தைரியம் இல்லாதவர்கள் வாழ்வில் என்றும் எதையும் செய்து முடிப்பதில்லை. வேகமாக பாய்ந்து ஓடும் நீரில் செத்த மீன் கூட எளிதாக மிதந்து செல்லலாம். ஆனால், எதிர்நீச்சல் போட்டு செல்ல வேண்டும் என்கிறஇலக்கிற்குத் தான் உறுதியும் முயற்சியும் தைரியமும் தேவை.

  தைரியம் என்கிற நெருப்புதான் வாழ்வின் இடர்களை பொசுக்கி சாம்பலாக்குகிறது. தைரியம்தான் நம்மை எதிரியிடம் புறங்காட்டி ஓடாமல் போராடச் செய்கிறது. படை வலிமையைவிட வெற்றிக்கு முதலிடம் வகிப்பது போர் வீரனின் தைரியமே. பெண்களுக்கு சிறந்த பாதுகாப்பு அவர்களது தைரியம்தான். தைரியமிக்கவர்கள் சவாலை ஏற்றுக் கொள்கிறார்கள். அழுது புலம்புவதில்லை. புதிய பாதையில், வித்தியாசமாக சிந்தித்து, சிக்கலான சவால்களை வெல்கிறார்கள். தான் செய்த தவறைஒத்துக் கொள்ளும் வருந்தும் தைரியம் ஒருவருக்கு இருந்தால் அந்த தவறு மன்னிக்கப்படக் கூடியதே.

  நம்மைக் கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடியும் நல்ல விடியலுக்கான வாய்ப்புகள். சவால்களற்றவாழ்க்கை சுவையற்றஉணவைப் போன்றது. விறுவிறுப்பில்லாத திரைப்படம் போன்றது. மன தைரியம் இல்லாதவர்களால் எந்த ஒரு விசயத்தையும் எதிர் கொள்ள முடிவதில்லை. சங்கராபரணம் பாடினால் தைரியம் வரும் என்கிறார்கள். தன்னம்பிக்கையின் மறுபெயர் தைரியம். கோழையாக பல ஆண்டுகள் வாழ்வதை விட வீரனாக ஒரு நாள் வாழ்வதே மேலானது என்பர். நம் தந்தைதான் நமக்கு தைரியத்தைத் தருவது. உண்மையை உரக்கச் சொல்லும் தைரியம் பலருக்கும் இருப்பதில்லை. மனஉறுதி உடையவர்களே நிமிர்ந்து நிற்கிறார்கள்.

  நிலவில் முதலில் காலடி வைத்தவர் ஆம்ஸ்ட்ராங்க். அவரது துணிச்சல் வெற்றியின் அடையாளமாகும். நிலவில் முதலில் காலடி வைத்திருக்க வேண்டிய ஆல்டிரின் அரிய வாய்ப்பை தைரியமின்மையால் தவறவிட்டார். பகைநாட்டின் ராணுவ ஊடுருவலை, ஆக்ரமிப்பை தடுக்கும், எதிர்க்கும் தைரியம் தாய்நாட்டு வீரர்களுக்கு, குடிமக்களுக்கு எப்போதும் தேவை. எதுவும் அழிந்து போவதில்லை. ஆனால் மாறும். மாற்றம் ஒன்றேமாறாதது. காலத்திற்கேற்ப மாறாதது எதுவும் நிலைப்பதில்லை. பல நேரங்களில் எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று நொந்து கொள்பவர்கள் எப்போதாவது பல மகிழ்ச்சியான தருணங்களில் எப்படி இது சாத்தியமானது என சிந்தித்து பார்ப்பதில்லை. மனம் நிறைவடைவதில்லை.

  தைரியம் என்பது விழாமல் போராடியவர்கள் பற்றியல்ல, வீழ்ந்தும்  போராடி எழுந்தவர்களையே குறிக்கிறது. உங்கள் இலட்சியத்தை தைரியமாக பின்தொடரும்போது உங்கள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். இவ்வுலகில் நாம் எதையும் தைரியமின்றி சாதிக்க முடியாது. பத்தோடு பதிறொன்றாக, கூட்டத்தில் ஒருவராக நிற்பது எளிதானது. கூட்டத்திற்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல ஆற்றலும் தைரியமும் தேவை. நாம் கலங்குவதற்கு கண்ணீர் சிந்துவதற்கு சில சூழலைத் தரும் வாழ்வுதான் நாம் புன்னகைப்பதற்கு, மகிழ்வதற்கு பல வழிகளைக் காட்டி இருக்கிறது. நான் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றேன், பெரிய கட்டிடத்தை கட்டி முடித்தேன். பெரிய நிறுவனத்தை உருவாக்கி விட்டேன் என்பதல்ல அற்புதம். அதை நம்பிக்கையுடன் தைரியமாக தொடங்கிய முதற்படியே அற்புதமான தருணமாகும்.

  சூழ்நிலை புயலில் சிக்கிக் கொண்ட பலரது அழகிய வாழ்க்கை கப்பல்  உடைந்து சிதறி இருக்கிறது. தோல்விகள் வாழ்வில் சாதாரணமானது. அது தரும் பாடம் நமது வாழ்க்கையை அழகாக்குகிறது. போராட்டமே இல்லாத வாழ்வு வாழத் தகுந்ததாக ஒருபோதும் இருக்காது. வாழ்க்கை தைரியமற்றகோழைகளுக்கு மகத்தான இடம் தருவதில்லை.

  கிரேக்கத் தத்துவஞானி சாக்ரடீஸ் தனது கருத்துக்களை, நம்பிக்கைகளை கைவிடுவதற்கு, மாற்றிக் கொள்வதற்கு பதிலாக, அரச தண்டனையை சாவை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்ததால்தான்; வி’க் கோப்பையை ஏந்தினார். சாக்ரடீஸ் போன்றதைரியசாலிகள் உலக வரலாற்றில் மிகக் குறைவு.

  துணிவுடன் பிரிட்டனை எதிர்த்து அமெரிக்க புரட்சிக்கு தலைமை தாங்கிய ஜார்ஜ் வாசிங்டன் தான் பின்னாளில் அமெரிக்காவின் முதல் அதிபரானார்.

  பேரலைகள் போல் வந்த எதிர்ப்புகளை  கண்டு அஞ்சாமல் தைரியமாக நின்று அடிமை முறையை ஒழித்தவர் அமெரிக்காவின் 16-வது அதிபர் ஆபிரகாம் லிங்கன்.

  அபாயங்களைக் கண்டு அஞ்சி அநீதிக்கு எதிராக, மௌனமாக பலர் இருக்கலாம். எதிர்த்து தைரியமாக குரல் கொடுக்கும் போதுதான் மார்டின் லூதர் கிங், நெல்சன் மன்டேலா போன்றதலைவர்கள் உருவாகுகிறார்கள். சூழ்நிலையை மாற்றுகிறார்கள். ஆங்கிலேயரின் காலனி ஆதிக்கத்தை எதிர்த்து, வலிமை வாய்ந்த பிரிட்டி’ட்ரை காந்தியடிகள் அகிம்சை, சத்தியாகிரக வழியில் தைரியமாக எதிர்த்து போராடியதால்தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது.

  பெண்களும் ஆண்களுக்கு இணையான வீரத்தில் தாழ்ந்து போனதில்லை என்பதை வரலாறு உணர்த்தி இருக்கிறது. பிரிட்டிட்ருக்கு எதிராக சிவகங்கை ராணி வேலு நாச்சியார், பேகம் ஹசரத் மகால், ஜான்சி ராணி லட்சுமிபாய, போன்றோர் போராடியது விவேகத்துடன் கூடிய தைரியமாகும். தன் நாட்டின் மீது அவர்களுக்கு இருந்த நாட்டுப்பற்றும் தைரியமும்தான் அவர்களை ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு அரண்மனையில் முடங்காமல் போராட வைத்தது. சுதந்திரம், உரிமைக்கு அவர்கள் கொடுத்த விலை அவர்களது வாழ்க்கை.

  நாட்டை ஆளும் மன்னனாக இருந்தாலும் பாண்டிய நாட்டு மன்னன் அவையில் கையில் காற்சிலம்புடன் குற்றம் குற்றமே என்று உண்மைக்காக, நேர்மைக்காக துணிந்து தைரியமுடன் போராடிய கண்ணகி இலக்கியத்தில் போற்றப்படுகிறார். குழந்தைப் பருவத்தில் நோய் தாக்கியதால்,  குருடாகவும்,  செவிடாகவும்,  ஊமையாகவும் இருந்தே தீர வேண்டிய நிலையிலும், ஹெலன் கெல்லர் ஊனத்தையும் வெற்றி  காண முடியும் என உலகுக்கு காட்டினார்.

  உயிரை துச்சமாக நினைத்து தைரியமாக போராடுபவர்கள் பயத்தை வெல்கிறார்கள். ஈரம் இருக்கும் வரை மரத்தை விட்டு இலைகள் உதிர்வதில்லை. மனதில் தைரியம் இருக்கும் வரை மனிதன் தோற்பதில்லை. வாழ்வின் இடர்களை தைரியமுடன் எதிர்கொண்டால் நம் வாழ்க்கையும் நாளை ஓரு புத்தகமாகலாம். அநீதி கண்டு சிங்கம் போல் சிலிர்த்தெழுந்தவர்கள் வரலாறு படைக்கிறார்கள். அவர்களது தைரியம் எப்போதும் மறக்கப்படுவதில்லை. எலி போல் வலைக்குள் பயந்து பதுங்கியவர்கள் புதைந்து போகிறார்கள். எவரெஸ்ட் சிகரத்தை மனிதனால் எப்படி தொட முடிந்தது? தைரியம் என்றமுதுகெலும்பு, வாழ்வில் மனிதனை நிமிர்ந்து நிற்க வைக்கிறது. முடிவெடுக்காமல் இருப்பதைவிட சில சமயங்களில் தவறான முடிவுகள் கூட மேலானதாக இருக்கிறது. தைரியத்திற்கு இணையான பொருள் உலகின் எந்த சந்தையிலும் இல்லை. தைரியசாலி காந்தக்கல் போல அனைவரையும் கவர்ந்து இழுக்கிறான். அவர்களது மகத்தான செயல்பாடுகளால் உலகமெங்கும் அவர்களது புகழ் பரவுகிறது. என்றென்றும், எப்போதும் மக்களை நன்றியுடன் நினைக்க வைக்கிறது.

  வெட்ட வெட்ட துளிர்க்கும் மரங்கள் தன்னம்பிக்கை

  சிலந்தி வலை அகப்பட்ட மனிதன் சோம்போறி

  மாலை முழுவதும் விளையாட்டு ஆரோக்கியமில்லை கணினி

  இந்த இதழை மேலும்

  மனிதர் புனிதர்

  அன்னை தெரசா – ஒரு அதிசிய தேவதை

  அன்னை தெரசா  அவர்கள் அன்பின் திருவுருவம்,  கருணையின் மறுவடிவம்,  தியாகத்தின்  சின்னம், கடவுளின் குழந்தை அனாதைகளின்  ரட்சகர், சேவைகளுக்கென்றே தன்னை கரைத்துக் கொண்ட ஒரு கற்பூர தீபம், ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்ட  கனகமணிச்சரவிளக்கு, ஆதரவற்றோர்களுக்கும், கைவிடப்பட்டோருக்கும், நோயாளிகளுக்கும், முதியோர்களுக்கும்  கிடைத்த வரப்பிரசாதமான  வற்றாத ஒரு  அமுத சுரபி.

  அன்னை தெரசா அவர்கள்  1910ம் ஆண்டு  ஆகஸ்ட் 26ம்  தேதி  மாசிடோனியா (யுகொஸ்லேவியா)  நாட்டில்  அதன்  தலைநகரான  ஸ்கோப்ஜேயில் பிறந்தார்,  18 ஆண்டு காலம்  மாசிடோனியாவில் வாழ்ந்த பின்பு,  1928ம் ஆண்டு தனது  18 வது  வயதில் கன்னித் துறவியாகி டப்ளினில் லொரோடா  (அயர்லாந்து)- ல் கன்னித் துறவிகளோடு சேர்ந்து கொண்டார். ஓராண்டு பயிற்சி பெற்றார்.  ஆங்கிலம் கற்றுத் தேர்ந்து 1929ல் கல்கத்தா வந்தார்,  புனித மேரி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஆனார்,  24 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து 1944ம் ஆண்டு அப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆனார்.  பல வருடங்கள் அப்பள்ளியின்    தலைவராகப்  பணியாற்றினார்.

  ஆசிரியர் தொழிலை அவர் மிகவும் நேசித்திருந்தாலும் கூட, கல்கத்தாவிலுள்ள வறுமையும், பிணியும்  1943ல் கல்கத்தாவில் ஏற்பட்ட பஞ்சமும், 1946ல் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்  போது   ஏற்பட்ட வன்முறைகளும்,  அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும், அவர் மனதில்  அதிர்வினை ஏற்படுத்தி,   பாதிக்கப்பட்டோர் அனைவருக்கும் உதவ வேண்டுமென்றஎண்ணம் உருவாயிற்று.

  10.09. 1946 ல்  ஏசு பிரான் அவரிடமிருந்து ஒரு அழைப்பை  அன்னை தெரசா பெற்றார். அந்நாளை அவர் ‘ பரவச நாள்’ என்றும் ‘ தீர்ப்பு நாள்’ என்றும் வர்ணிக்கிறார்.   “ உன் உடைமைகளைத் துறக்க வேண்டும். இறைவனைப் பின் தொடர்ந்து சேரிகளுக்குச் சென்று ஏழைகளுக்கும்  ஏழையான அவனுக்கு சேவை செய்ய வேண்டும்  ” என்பதே அக்கட்டளை.

  அதற்கேற்ப  பாட்னாவில் உள்ள  அமெரிக்க மருத்துவக் கழகத்தினரோடு   மூன்று மாத தீவிர  நர்ஸ் பயிற்சி பெற்றார்.  1948ல் அன்னை தெரசா தமக்கென சேரிப் பணிகளை ஆரம்பித்தார். தர்மஸ்தாபன மதபோதகர்களின்  சங்கம்  ஆரம்பிக்கும் உத்தரவும் அவருக்கு வந்தது.

  அவரோடு அவருடைய நம்பிக்கைக்குரிய மாணவியாகிய  சுபாஷினி தாஸ் ‘ சிஸ்டர் அக்னிஸ்’ என்றபெயருடன்  இவருடன் சேர்ந்தார், இவர்களுடன் உதவி செய்ய சில பெண்களும் சேர்ந்து கொண்டார்கள்.  அரசிடமிருந்தும் / மக்களிடமிருந்தும் உதவிகளைப் பெற்று, அனாதை  ஆசிரமங்கள், நோயுற்றோருக்கு விடுதிகள்,  Leprosy Homes என ஊனமுற்றோர்களுக்கும், எல்லா அனாதைகளுக்கு கைவிடப்பட் டோருக்கும், ஆதரவில்லாதவர் களுக்கும், சேவையும், பணிவிடையும் செய்ய   தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.  இறைமனப் பான்மையோடு  ஏழைகளோடு  ஏழையாக  வாழ்ந்து  உதவிகள் செய்தார்.

  1950ல்  இவரால் ஆரம்பிக்கப்பட்ட  தர்மஸ்தாபனத்தில் (Missionaries of  charity) 2012ம் ஆண்டு கணக்குபடி  4500 சிஸ்டர்கள்  சேவைப் பணியில்  ஈடுபட்டுள்ளார்கள். 133 நாடுகளில் இச்சங்கம் அறப்பணியை செய்து கொண்டுள்ளது.

  தன்னுடைய   நாட்குறிப்பில், ஒரு  செய்தியை  இவர் எழுதி இருக்கிறார்.  “சேவைக்கு தன்னை அர்பணித்துக்  கொண்ட  முதல் ஆண்டு   மிக கடுமையானதாக, சிரமுள்ளதாக இருந்தது,  வருமானம்  ஏதும் இல்லை.  மற்றவர்களின் உணவிற்காக உதவுவதற்கு  பிச்சை எடுக்க வேண்டிய சூழல், மனதிலே இது முடியுமா? என்றசந்தேகம் வந்தது. தனிமை வாட்டியது, ஒரு சில நேரங்களில் வசதியாக முன்பிருந்த கான்வென்ட் வாழ்க்கைக்கு திரும்பி விடலாமா? என்று யோசித்தேன் ஆனால் இயேசுவின் அருளால் இப்பணியைச் செய்ய முடியும் என்றநம்பிக்கை பிறந்தது,  ஆதலின்  இச்சேவை பணியை   தொடர  முடிவு செய்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.  இறையும்,  தன்னம்பிக்கையும்தான்   இவருக்கு வழி காட்டியது.

  அன்னை ஒரு முறைசேவைக்கு பணம் இல்லாமல், கடை கடையாக யாசிக்கிறார். ஒரு கடைக்காரரிடம் பணம் கேட்டு  கையை நீட்டுகிறார். கடைக்காரர் கோபித்துக் கொண்டு பணம் தருவதற்கு பதிலாக அன்னை நீட்டிய கையில் காறி எச்சில் உமிழ்ந்து  விட்டு. “இதை வைத்துக் கொண்டு  சேவை செய் என்கிறார். அந்த  அவமானத்தை அன்னை பொறுமையோடு ஏற்றுக் கொண்டு, சிரித்தபடி “இந்த எச்சில் எனக்கு இருக்கட்டும்” ஏழைகளுக்கு பணம் ஏதாவது தாருங்கள்” என்று கேட்டார், இந்த பொறுமையும், கருணையும் தான்  அவரை உலகிற்கு  கருணையின் ஓளி விளக்காக, பொறுமையின் சின்னமாக உயர்த்திக்  காட்டியது.

  அன்னை தெரசாவின் தன்னலமற்றசேவையைப் பாராட்டி, 1962ம் ஆண்டு  இந்திய அரசின் “ பத்ம ஸ்ரீ   விருது” இவருக்கு கிடைத்தது.

  அதே ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் “  மாகசேசே  ” விருதையும் பெற்றார்.

  1971ல்   “ போப் ஆண்டவர் பரிசைப்  ”  பெற்றார்.

  1971ல் செப்டம்பரில்  அமெரிக்கா  நாட்டின்   “ குட்  சாமரிட்டன் விருது ”  இவருக்குக் கிடைத்தது

  1971ல் அக்டோபரில்  “ ஜான் கென்னடி அனைத்துலகப் பரிசு  ” இவருக்குக் கிடைத்தது.

  1971ல் அக்டோபரில்  அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் “ சிறப்பு டாக்டர்” பட்டம் பெற்றார்.

  1972ல்  “ ஜவஹர்லால் நேரு உலக ஒப்புரவுப் பரிசு  ”  வழங்கப்பட்டது.

  1972ல் லண்டனில்   “ டெம்பிள்டன் பரிசைப் ”  பெற்றார்.

  1978ல் பிரிட்டன்  அரசு  “Order of  British Empire” என்ற உயரிய விருதை வழங்கி சிறப்பித்தது.

  1979 மார்ச் – ல்  ‘ பால்சன்  அனைத்துலக  விருது ‘ அன்னை தெரசாவை நாடி வந்தது,

  1979ம் ஆண்டு  மிகப் பெரிய அரிய   விருதான ‘ நோபல் பரிசு’ இவரை கௌரவித்தது.

  *இந்திய அரசு அவரது முகத்தோற்றம் அமைந்த அஞ்சல் தலையை வெளியிட்டது.

  2002ல் வாடிகன் நகரத்தில் போப் ஆண்டவர் இவர் நிகழ்த்திய அதிசயத்தை அங்கீகரித்து ஆசிர்வதித்தார். மோனிகா பஸ்ரா என்ற இந்தியப் பெண்மணி அன்னை தெரசாவை வேண்டி வணங்கியதால் அவர்  வயிற்றுலுள்ள  புற்றுநோய் குணமடைந்தது  இதற்காக 2003 அக்டோபர்  19ம் தேதி போப் ஜான்பால் II  அவர்கள்  அன்னை தெரசா  அவர்களை  ‘சொர்க்கத்தின் தேவதை’ என ஆசிர்வதித்தார்.

  அன்னை தெரசா அவர்கள் ஓர் இரண்டாவது அதிசயத்தை நிகழ்த்தினார்.

  பெருசிலியம் என்றநகரத்தைச் சேர்ந்த மார்சிலியோ ஆண்டலியோ என்பவர் குணப்படுத்த முடியாத மூளை நோயால் பாதிக்கப்பட்டு கோமா நிலையை அடைந்துவிட்டார். அவருடைய மனைவியும், குடும்பத்தாரும், நண்பர்களும் அன்னை தெரசாவை பணிந்து பிரார்தித்தார்கள், அந்த மனிதனை அவசர அறுவை சிகிக்சைக்காக கொண்டு  செல்லும் போது நோயிலிருந்து விடுபட்டு எழுந்து நின்றான். நோய்க்குரிய அறிகுறிகள் முமுவதும்  மறைந்து  போயிருந்தன.  முற்றிலும் குணமானார்,  இது அன்னை தெரசாவை பிரார்தித்ததில்  வந்த அற்புத  விளைவு.  இது   அன்னை  நடத்திக் காட்டிய    இரண்டாவது அதிசயம்.

  இதனால் 2016ம் ஆண்டில்  செப்டம்பர்  4ம் தேதி அன்னை  தெரசாவின் 19ம் ஆண்டு நடந்த நினைவு தினத்தில் “புனிதப்படுத்தும் நிகழ்ச்சியில் ” போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் அவர்கள், அன்னை தெரசாவை ஒரு புனிதராக, மகானாக ‘Saint’  ஆக  பிரகடனப்படுத்தினார்,  உலகம்  இதனால்  பெருமையுற்றது.

  ‘சொர்க்த்தின் தேவதை அன்னை தெசரா அடிக்கடி சொல்வார் ‘ .

  “பிறப்பால் நான்   “ அல்பேனியன் ”

  குடிமகளாக நான்   “ இந்தியன் ”

  இறைநம்பிக்கையில் நான்   “கத்தோலிக்க கன்னியாஸ்திரி”

  சேவைக்கு எனில்   “ உலகம் முழுமையும்  எனக்குச் சொந்தம் ”,

  அர்பணிப்பதில் நான்  இயேசுபிரானின் இதயத்தோடு  முழுமையாக ஒன்றி கலந்தவள்   என்று   பெருமைப்படுவார் .

  இத்தனை புகழுக்கும், பெருமைக்குரிய கடவுளின் குழந்தை, தர்மத்தின்  வாரிசு, அன்னை தெரசா அவர்கள் கல்கத்தா நகரில் உடல் நலம் குன்றி 1997ம் ஆண்டு செப்படம்பர்  5ம் நாள் தன்னுடைய  87ம் வயதில்  கர்த்தருக்குள் இரண்டறகலந்தார்.

  மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’  என்ற வாக்கு  அன்னைக்கு  முற்றிலும் பொருந்தும், ‘அன்னை மனித  வடிவில் அவதரித்த தெய்வம்’ .

  இந்த மாபெரும் மனிதப் புனிதர் தெய்வத்தின் திருவடிவம்,    அன்னை தெரசா அவர்களின் அதிசயங்கள்  தொடர்ந்து  நடக்க  வேண்டும், எல்லோருக்கும் அவர்கள் ஆசிகள் கிடைக்க வேண்டும் என அன்னையை  மனமுருகி  பிராத்திக்கிறேன்.

  இந்த இதழை மேலும்

  நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 11)

  நெல் (Rice) உலகின் மிக முக்கிய பயிர் தாவரங்களில் (Crop plants) ஒன்றாகும். இப்பூமியில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களில் சரிபாதி உணவு அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளம் மூலமே பெறப்படுகிறது. அவற்றில் நெல் (அரிசி) முதன்மை இடம் வகிக்கிறது. அத்தகைய  நெல் பயிரின் ஜீனோம் பற்றிய தகவல்களை இந்த இதழில் காண்போம். நெல் ஓரைசா சட்டைவா (Oryza sativa) எனும் அறிவியல் பெயரில் அழைக்கப்படுகிறது. நெல் முதன் முதலில் மரபாகராதி திட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பயிர் தாவரமாகும் (Crop plant). இந்த திட்டம் பல நாடுகளின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்பட்டது.

  முதலில், பன்னாட்டு நெல் மரபாகராதி வரிசையாக்க திட்டம் (The International Rice Genome Sequencing Project (IRGSP)) 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஏறத்தாழ 11 நாடுகள் (ஜப்பான், தைவான், தாய்லாந்து, கொரியா, சீனா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், கனடா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன்) இத்திட்டத்தில் இணைந்து செயல் பட முன்வந்தது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து 2006-ஆம் ஆண்டு நெல் பயிரின் முதல் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. பிறகு, சமீபத்திய வாரியாக்கம் தொழில்நுட்பத்தால் இந்த ஜீனோம் தரவுகள் பலமடங்கு மெருகூட்டப்பட்டு இன்று உயர் தரமான (high quality) டி.என்.எ. வரிசை (genome sequence) தரவுகளை கொண்ட முக்கிய மற்றும் தானிய வகை பயிர்களுக்கு (Cereal crops) மாதிரியாகவும் (model) திகழ்கிறது.

  நெற்பயிற்றில் 24 குரோமோசோம்களை உள்ளடக்கி ஏறத்தாழ 350 (Mb) அளவில் (genome size) நியூக்கிளியோடைடு வரிசைகளை கொண்டுள்ளது. நெல் ஜீனோம், சோளம் (sorghum) மற்றும் மக்காசோளம் (maize) போன்ற பயிர்களுடன் ஒத்த டி.என்.எ. வரிசை தளங்கள் (Conserved synteny) கொண்டிருப்பதாக பிற்காலத்தில் கண்டறியப்பட்டன. இதனால், இந்த உயர் தரமான நெல் ஜீனோம் மற்ற முக்கிய தானிய வகை பயிர்களின் மேம்பாட்டிற்கும் தனது இன்றியமையா பங்களிப்பை ஆற்றுகிறது. 1990 முதல் 1994-ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 30 மேற்பட்ட ஆய்வுகளில் நெல்லில் உள்ள ஜீன்கள் குளோனிங் (cloning) மூலம் பிரதியெடுத்து அவற்றின் பண்புகளை கண்டறிந்து அவற்றை நெல் பயிர் உற்பத்தி பெருக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, நெற்பயிர் புயல் காலங்களில் பெருமளவில் நீர் புகுவதினால் பயிர்கள் நிலத்திலே மூழ்கி மடிகின்றன. நெல் ஜீனோம் திட்டத்தின் விளைவால், நீரினால் மூழ்கடிப்பட்ட நிலையிலும் செழித்து வளர காரணமாகும் ஜீன்கள் நெல்லில் கண்டறியப்பட்டு அவை குளோனிங் செய்து உறுதிசெய்ப்பட்டதன் விளைவால் இன்று புயல் காலங்களிலும் தங்கி வளரும் (subermergence tolerance) நெல் ரகங்களை உருவாக்கப்பட்டுள்ளன. இதுபோல், வறட்சி, உப்பு நிலம், குளிர் பிரதேசம் என அனைத்து வகையான நில பரப்பிற்கும், தட்பவெப்ப நிலைகளுக்கும் ஏற்றவாறான நெல் ரகங்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில், பெரும்பான்மையானவற்றில்  சாதித்தும் காட்டியுள்ளனர் தற்காலத்து விஞ்ஞானிகள். தற்போதைய காலசூழலில், உலகளவில் வேளாண் செய்ய தேவையான நிலப்பரப்பு குறைந்துகொண்டே வருகிறது. ஆனால் மக்கள் தொகை பல மடக்கில் பெருகிக்கொண்டே வருகிறது. 2050-ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 9.7 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. இது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய உணவு பஞ்ச அச்சுறுத்தலாக இருக்கிறது.

  மரபணு மாற்று முறையில் (Transgenic) புதிய நெல் ரகங்களை உருவாக்குவது சாத்தியம் எனினும், அவற்றை வேளாண் செய்வதில் என்ற சட்ட சிக்கல்கள் மற்றும் இயற்கை நெறி சிதைவு என பல விளைவுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஆகவே, தற்போது இதற்கான தீர்வை இயற்கை முறையில் பெற முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றனர். அதாவது, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நெல் ரகங்களை (major accessions) ஜீனோம் வரிசையாக்கம் (whole genome sequencing) செய்து, அவைகளை முறையாக ஒப்பீடு செய்து (comparative genomics), ஒவ்வொரு நெல் ரகத்தின் தனித்துவமான பண்புகளுக்கான மரபு காரணிகளை (genetic variations) கண்டறிந்து அவற்றை பயன்படுத்தி உலகின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தியை பெருக்குவதே இதன் குறிக்கோளாகும். தற்போது, இந்த முயற்சி அரிசோனா ஜீனோம் ஆராய்ச்சி கூடத்தில் (Arizona Genome Institute, USA) இருக்கும்   ராட் விங் (Rod wing) தலைமையில், பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

  மேலும் இத்தகைய ஆராய்ச்சிகளால், நெல்லின் பரிணாம வளர்ச்சி (evolution), வேளாண்மையிர்பயன்படுத்துதல் (domestication) குறித்த தகவல்களையும் பெற முடிகிறது. இதன் மூலம் நெல்லின் உடலியல் செயல் (physiological responses) மற்றும் தோற்றவகைமைக்கான (phenotype) மரபியல் காரணிகளையும் கண்டறிந்து அதன் மூலம்  பல்வேறு மேம்பட்ட நெல் ரகங்களை, உதாரணமாக சர்க்கரை குறைவான, வைட்டமின் மற்றும் புரதம் நிறைந்த மற்றும் தற்கால வாழ்க்கை முறைக்கேற்ப உகந்த நெல் ரகங்களை உருவாக்கி மனிதனுக்கு தேவையான உணவை பெற வழி செய்கிறது. இத்தகைய முயற்சிகளின் வெற்றி நெல் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி தற்கால மனித வாழ்க்கைக்கும் மிக முக்கியமான ஒன்று என்பதற்கு மாற்று கருத்து இல்லை என்ற கூறவேண்டும் !!!.

  இந்த இதழை மேலும்

  ஆயுளைக் கூட்டும் உணவுகள்

  நாம் நீள் ஆயுளோடு வாழ வேண்டுமாயின் நம் உணவுகள் சத்து மிக்கதாகவும், செரிக்க மிக எளிதாகவும், கழிவுக் குறைவாகவும் இருக்க வேண்டும். அவ்வித உணவுகள் எவை எவை என்று இனிப் பார்போம்.

  1. முழுமை உணவுகள்: கைகுற்றல் அரிசி, அவல், பொரி, கோதுமை உணவுகள், மக்காச் சோளம், சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, சாமை முழு உளுந்து, முழு பாசிப்பயறு, தோலுள்ள பாசிப் பருப்பு, முழு பொட்டுக்கடலை, தேன், முட்டை உள்ளிட்டவைகள் சத்துமிக்க உணவுகளாகும். இவைகளில் பி-உயிர்ச்சத்தும், அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இருக்கின்றன.
  2. சைவ உணவுகள்: சைவ உணவுகளில் 65 விழுக்காடு சக்தியும், 35 விழுக்காடு கழிவும் உள்ளன. அதுவே அசைவ உணவில் 35 விழுக்காடு சக்தியும் 65 விழுக்காடு கழிவும் உள்ளன. ஆக, சைவ உணவைச் செரிப்பதற்கும் அதன் குறைவான கழிவை வெளியேற்றுவதற்கும் செலவு செய்த சக்தி போக கணிசமான சக்தி நம் உடல் ஆக்கத்திற்கும் சேமிப்பதற்கும் இருக்கும். அதுவே அசைவ உணவு செரிக்கவும் அதன் அதிகப்படியான கழிவை வெளியேற்றவும் செரிமானம் மூலம் கிடைத்த சக்தி போதாமல் சேமிப்பாக உள்ள சக்தியையும் எடுத்துக் கொள்ளும். எது வேண்டும் என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.
  3. உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகள்: உலர் திராட்சை, பேரீச்சம், பாதாம், அக்ரூட், பிஸ்தா உள்ளிட்ட கொட்டை வகைகள் சத்துக்களைத் திணிவாகக் கொண்டுள்ளன. இவைகளைச் சிறிய அளவில் எடுத்தாலும் பலன் அதிகம் தரும். இவற்றை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் மிகவும் எளிதாகச் செரிக்கும்.
  4. முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறுகள்: தானியங்கள் மற்றும் பயறுகளை முளைக் கட்டுவதால் அவற்றின் சத்தி ஏழு மடங்காக உயர்த்தப்படவும், சத்துக்கள் மேம்படுத்தப்படவும் செய்கின்றன. இதனால் இவைகள் மிக எளிதாகச் செரித்து மிக அதிகமானச் சக்தியைத் தருகின்றன. ஆறு மணிநேரம் தண்ணீரில் ஊறிய நிலக்கடலையும் முளைகட்டிய பாசிப்பயறும் சத்தும் சக்தியும் மிக்க உணவுகளாகும்.
  5. பச்சைக் காய்கறி சாலட்: காய்கறிகளில் செரிமானத்திற்கு வேண்டிய உயிர்ச் சத்துக்கள் மற்றும் தாதுச் சத்துக்கள் அதிகமாகவும், கழிவுகள் மிகக் குறைவாகவும் கொண்டுள்ளன. இவைகளில் உள்ள நார்ச் சத்துக்கள் மலச்சிக்கலைப் போக்கும். சமைத்த காய்கறிகளைவிட அதிக சக்தியைக் கொண்டுள்ளன.
  6. சமைத்த காய்கறிகள் மற்றும் கீரைகள்: இவைகள் தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் கொழுப்பு உணவுகளில் உள்ள மாவுச்சத்து, புரதச்சத்து மற்றும் கொழுப்புச் சத்துக்கள் தரமாகச் செரிக்கவும், செரித்தபின் கிரகிக்கவும் மிகவும் உதவியாக இருக்கும். நாம் சாப்பிடும் மூன்று வேளை உணவுகளிலும் கணிசமான அளவில் காய்கறிகள் அவசியம் இருக்க வேண்டும்.
  7. கனிந்த பழங்கள்: பழங்கள் மிக அதிகச் சக்தியினையும் மிகக் குறைவான கழிவுகளையும் கொண்டுள்ள ஒரு முழுமை உணவாகும். வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டு (Fruitarian) நாம் இளமையாக இருக்க முடியும். பழங்கள் அதிக அளவுத் தண்ணீரைக் கொண்டுள்ளதால் நம் அன்றாட உழைப்புத் தேவைக்கு அதிக அளவுகளில் நாம் எடுக்க வேண்டியிருக்கும். பழங்களில் பச்சை வாழைப் பழமும் தர்பூஸ் பழமும் சாப்பிடக் கூடாது. காரணம் இவைகள் எதிர்மறை சக்தியைக் கொண்டுள்ளதால் அவைகளை சாப்பிட்டால் நம் உடலின் சக்தியைக் குறைக்கும்.
  8. நெல்லிக் கனி: ஔவைக்கு அதியமான் கொடுத்த நெல்லிக் கனியானது நம் ஆயுளையும் நீட்டிக்கும். இதில் அதிக அளவில் உள்ள சி-உயிர்ச் சத்தானது நம் உடலின் நீரில் கரையும் கழிவுகளை வெளியேற்றி நம்மைச் சுத்தமாக்கி நீடித்த ஆயுளைத் தரும்.
  9. துவர்ப்பு மற்றும் கார உணவுகள்: துவர்ப்பு உணவுகளான வாழைப்பூ, வாழைத் தண்டு, அத்திக்காய் மற்றும் பாக்கும், புகையிலை சேர்க்காத வெற்றிலை காரமும் நம் மண்ணீரல் மற்றும் கல்லீரலைக் காக்கும்.

  மண்ணான மண்ணீரலையும், மரமான கல்லீரலையும்

  காக்கும் உணவுகளை உண்போம்.

  அன்பான உள்ளமும், வளமான உடல் உறுதியும் கொண்ட

  நீள் ஆயுள் காண்போம்.

  இந்த இதழை மேலும்

  உள்ளத்திலே உள்ளது உலகம்

  ஆமாம்..

  பகவத் கீதையில் “யத்பாவம் தத்பவதி” என்ற ஒரே வரியில் மொத்த பிரபஞ்ச வாழ்க்கையும் அடங்குவது போல,‘உள்ளத்திலே உள்ளதுதான் உலகம்’ என்ற ஒற்றை வார்த்தையில்தான் ஒட்டு மொத்த மனிதர்களின் 100 வருட வாழ்க்கையும் ஆடுகிறது. அடங்குகிறது..

  எதை எப்படி பாவிக்கிறாயோ, அப்படியே ஆகும் என்பதுதான் இதன் விளக்கம்! அப்படித்தான் இந்தப் பிரபஞ்சமும் படைக்கப்பட்டுள்ளது. அதாவது, அதிக வலிமை கொண்ட விந்தணு, எப்படி கரு முட்டையைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று உருவமாகிறதோ, அதேபோல், அதிக ஆதிக்கம் கொண்ட எண்ணமானது. ஆழ்மனதை அடைந்து செயல் வடிவம் பெறுகிறது.

  நாம் வாழ்கின்ற இந்தப் பிரபஞ்சத்தில் பல விதமான விதிகள் உண்டு. நாம், நல்லவரோ, கெட்டவரோ யாராக இருந்தாலும் நெருப்பு சுடும். அது போல நாம் நல்லது நினைத்தாலும் கெட்டது நினைத்தாலும், அதை நிச்சியம் அனுபவித்தாக வேண்டும், என்பது நியதி. அப்படியிருக்க வருகின்ற எண்ணத்திற்கெல்லாம் வலிமை சேர்த்தால் வாழ்க்கை வலிமை இழந்து விடும். இதுவரை எதை பதிய வைத்திருக்கிறீர்களோ..அதுவே இன்றைய நம் வாழ்க்கை அனுபவமாகிவிடும். அதனால் எண்ணஅணுக்கள் பதிவதை மனதில் கொண்டு நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும். கவனமாக விழிப்புணர்ச்சியுடன் எண்ணங்களை நினைக்க வேண்டும்.

  ‘லைப்’ எப்படி போய்கிட்டிருக்கு.?”-என்று கேட்டதும் நாம் சொல்லும் உடன் பதில்,

  “கஷ்டந்தான் என்னை மாதிரி கஷ்டப்படறவங்க உலகத்திலெ யாருமில்லே”

  “எனக்கு வந்த வாழ்க்கை மாதிரி, யாருக்கும் அமையக்கூடாது.”

  “என் நிலைமை எதிராளிக்கும் வரவே கூடாது,ரொம்ப கொடுமையாக இருக்கு” என்றுதான், மற்றவர்களுக்கு நம் வாழ்க்கையை அறிமுகப்படுத்தி வருகிறோம்.

  நம் ஆழ்மனத்தின் தகவல்களால் நம் வாழ்க்கை எப்படி போற்றப்படுகிறதோ?அல்லது தூற்றப்படுகிறதோ?அப்படியே வாழ்க்கை சம்பவங்கள் அமையும்.

  அதே போல், ஏழைகள் ஏழைகளாகவே பிறப்பதில்லை. இருக்கவேண்டிய அவசியமுமில்லை. “நான் ஒரு ஏழை” என்ற பதிவும்,“நான் பணக்காரன்”; என்ற எண்ணப்பதிவுதான், அவர்களை அதே இடத்தில் வைத்திருக்கின்றது.

  இதுபற்றி,மகான்கள் சொல்வது,

  வாழ்க்கை துக்கம் என்று நினைத்தவுடன், துக்கமான சம்பவங்கள் மட்டுமே பார்ப்பீரகள்! இதுதான் ‘இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டும் மனோபாவம்’

  உதாரணமாக…!

  ஒரு பிரபலமான பாடலை பாடிய பாடகரை நம் மனதில் கொண்டு வந்து, அந்தப் பாடலை நாம் பாடினால், நமக்கு அதே குரலில், பாவனையில் பாடுவது போலவே தோன்றும்!.

  இந்த மனோபாவம்!‘நாம் நன்றாகப் பாடுகிறோம்’ என்ற எண்ணத்தை உருவாக்கும். ஆனால், வெளியே நம் பாட்டைக்  கேட்பவர்களுக்கோ, கேட்க பிடிக்காது. போட்டிகளில் பாடவந்து, பாடியவிதம் சரியில்லையென்று நிராகரிக்கப்படுவதும் இப்படித்தான்.

  ஆதனால்,, ஒரு முறை வாழ்க்கை என்பது, ஏமாற்றம், துக்கம், துயரம் நிறைந்தது என்று முடிவுசெய்து விட்டோம் என்றால், நம் மனம் வாழ்க்கையை அப்படியே துக்கமாகவே பார்க்கும். அதேசமயம். ஆதிர்ஷ்டவசமாக ஒரு அதிசயம், அற்புதம் நடந்து விட்டால்;, அதை அனுபவிக்காமல்,ஏற்றுக் கொள்ளாமல்“இது ஏதோ ஆறுதலுக்கு  வந்தது’ என்று புறந்தள்ளி விடுகிறோம்.

  உதாரணமாக.. நடந்த உண்மை சம்பவம்

  ஒரு நண்பருக்கு கவிதை எழுதும் திறமை இருந்தது. ஆனால், அவரின் கவிதைகள் ஒன்று கூட பிரசுரமாகவில்லை. ஒரு முறை என்னிடம், தன் கவிதைகளை பத்திரிக்கையில் வருவதற்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்றார்.

  நானும் எனக்குத் தெரிந்த பத்திரிக்கையில், அவரைப் பற்றி சொல்லி, கவிதையை வெளியிட உதவி செய்தேன்.

  கவிதை பிரசுரமும் ஆனது. பலர் கவிதையைப் பாராட்டியும் இருந்தனர். ஆனால்…அந்த நண்பர் தொடர்ந்து எழுதுவதை விட்டுவிட்டார். ஒருமுறைநேரில் சந்தித்து, காரணம் கேட்ட போது..,“ என்னதான் என் கவிதை பிரசுரமானாலும், அது உங்களுக்காகத்தானே பிரசுரித்தார்கள். என் கவிதைக்காக இல்லையே, அதனால் நான் எழுதுவதை விட்டு விட்டேன்” என்றார். அதுமட்டுமின்றி இன்றுவரை எதற்கும் யாருடைய சிபாரிசும் தேவையில்லை என்ற முடிவில் இன்று வரை சந்தாஷமாக இருக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்.’

  இந்தா மனோபாவம் உள்ளவர்களால், எப்படி முன்னேற முடியும்?. இப்படித்தான் இன்னும் பலர்பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் தனக்கு மதிப்பு, தானாக வர வேண்டும் என்று நினைத்து, அவர்கள் நிலையைத்தாண்டி வராமல், வாழ்க்கையை எதிர்மறை எண்ணத்திலேயே கொண்டு செல்கிறவர்கள். எத்தனை திறமை இருந்தாலும் வாய்ப்பு என்பது, வாய்க்காதவரை திறமைகள் ஜெயிப்பதில்லை! வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாதவர்கள், வாழ்க்கையில் வளர்ச்சியடைவதும் சிரமம்.

  நாம் நேசிக்கும் நபரைத் தவிர வேறுயார் நல்லவர்களாக, சிறந்தவர்களாக இருந்தாலும், மனம் நாம் நேசிப்பவரைதான் நாடும். அதுபோல.. நாம், துக்கத்தை நேசிப்பதால், இடையில் வரும் எந்த ஒரு சந்தோஷத்தையும், வாய்ப்பையும் ஏற்கவோ, அனுபவிக்கவோ முடியாது.! துக்கத்தை எதிர்பார்க்கின்ற மனநிலை இருப்பதால், துக்கத்தையே எதிர்பார்க்கிறோம். கருவாட்டு கடையில் நின்று கொண்டு,அங்கிருந்து வெளிவராமல், அங்கேயே பூவாசத்தை எதிர்பார்ப்பதுப் போல, நாம் சில விஷயங்களிலிருந்து வெளி வராமல், விரும்பும் அனைத்தும், நாம் நினைக்கும் வட்டத்தக்குள்  அடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இது நடக்க கூடிய காரியமல்ல.

  தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சி வேண்டுமோ, அதை மனம் நினைத்தால்;, கையில் உள்ள ‘ரிமோட்டை’ இயக்கி, மாற்றி, நாம் விரும்பிய காட்சியை கொண்டு வருவது போல, வாழ்க்கையில் எது நடக்க  வேண்டும் என்று மனம் எதிர்ப்பார்க்கிறதோ, அதுதான் நடக்கும்.. துக்கத்தை, கக்கத்தில் வைத்துக் கொண்டு பக்கத்தில் பால், பலகாரம் வைத்தாலும், கசப்பாக, வேண்டா வெறுப்பாகத்தான் மனம் நினைக்கும். இந்த பாலே விஷமாக இருந்தாலாவது, குடித்து விடலாம் என்று, நல்ல பாலையும் விஷமாக்க நினைக்கும்.. மிரண்டவனுக்கு, இருண்டதெல்லாம் பேயாக தெரிவதுபோல,‘கஷ்டப்படவே நான் பிறந்தேன்’,என்று தன் வாழ்க்கையை  நிர்ணயிப்பவருக்கு, வாழ்க்கையில் சொர்க்கமான மாற்றங்கள் ; வந்தாலும்,கூட நரகமாக மாற்றிக் கொள்வார்கள்.

  எனக்கு மட்டும் ஏன் இப்படி?

  எனது நண்பர், தன் தந்தையின் மரண செய்தி கேட்டு, வாகனம் ஓட்டிச் சென்றார்.  திடீரென்று செல்லும்; வழியில் சிறு விபத்து ஏற்பட்டு விட்டது. எந்த வித காயமோ, சேதமோ இல்லைதான். ஆனால் அவர்,‘எங்க குடும்பத்துக்கே கெட்ட நேரம் ஆரம்பமாயிடுச்சு’ என்று புலம்பி  தீர்த்தார்.

  ஆறுமாதமாகியும்,அந்த ‘கெட்ட நேர எண்ணத்திலிருந்து வெளிவராமல்(வெளி வர முடியாமல்;) பயத்தில் கோவில், கோவிலாகச் சென்று வருகிறார். காய்ச்சல், தலைவலி என்று வந்தாலும், அவர் குழந்தை விளையாடும் போது கீழே விழுந்தால் கூட துடித்து போகிறார். இதனால் வீட்டிலுள்ளவர்களுக்கும் கட்டுப்பாடுகள் அதிகரித்து விட்டது.

  இவர் கொஞ்சம் சிந்தித்து…

  “தனக்கு ஏற்பட்ட விபத்தில் சிறு காயமின்றி தப்பியதை, தெய்வாதீனமாகவோ, புண்ணியமாகவோ, அதிர்ஷ்டமாகவோ நல்ல வேளையாகவோ எண்ணத்தை வளர்த்திருந்தால்…தொடர்ந்து வரும் எதிர்பாராத துர்சம்பவங்களில் தடுமாறாமல், தானும் இருந்து, குடும்பத்தவர்களையும், தண்டிக்காமல் இயல்பாக இருந்திருக்க முடியுமே!

  அவரைப்போல இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது

  “நம் வாழ்க்கையின் அமைப்பே, நல்லது, கெட்டது அதிசயம், அதிர்ச்சி, அபாயம் என்று, மாறி மாறித்தான் நடக்கும். இரண்டுமே எதிர்பாராத நிகழ்வுகள்.அதை எப்படி பார்க்கிறோம்? என்பது நம் மனதை பொறுத்தது. துக்கம் உள்ள மனதில், சந்தோஷம் நுழையாது. ஆனால் பால் அடைத்த பாக்கெட்டில், தயிர் நுழைய இடம் அனுமதித்தால்..அத்தனை பாலும்…தயிராவது போல, நமது நிர்ணயம், அபிப்ராயத்தால் அடைபட்ட எண்ணங்களில் கொஞ்சம்,வலிமையான நேர்மறை எண்ணத்தை  அனுமதித்தால் போதும், பொய் கண்ணோட்டங்கள் காணாமல் போகும்.. துக்கமும், துச்சமாகும்.. ஆனால் நம்மில் பலர், “நீ மாறு.. “நான்; இப்படித்தான் எனை மாற்றிக் கொள்ள முடியாது. மாற்ற வேண்டிய தேவையில்லை” என்று பிடிவாதமாக, தனக்கென்று ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு, அந்த வட்டத்துக்குள் மற்றவர்கள் வரட்டும் எனக்காத்திருப்பார்கள். மற்றவர்கள் ‘இவர்’ வரட்டும் என காத்திருக்கிறார்கள்’இதன் முடிவென்ன?

  வாழ்க்கையில் அனுபவிக்க முடியாத அவலம்தான் தொடரும்; அதுமட்டுமின்றி! உடல் ரீதியாக பெரும் வியாதிகளையும் உண்டு பண்ணி விடும். ஒரு சிலருக்கு எந்த விதமான கெட்;;ட பழக்கங்களும் இருக்காது. ஆனால் பெரிய கொடிய வியாதிகளில் மாட்டிக் கொள்வார்கள்.பிறகு,‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ என்ற கேள்விதான் பதில் தெரியாமல் நிற்கும். காரணம் என்ன?

  புரிந்து கொள்ள வேண்டியது!

  நம் செயல்பாடுகள் எல்லாம் நம் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளால் நடக்கிறது. அதாவது நம் மனதிலிருந்து உருவாகும் எண்ணங்களும், நம் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் உள்ள தொடர்பை நம் மனம்தான் நிர்ணயிக்கிறது. பல சமயங்களில், நம் வாழ்வில் வெவ்வேறு பருவங்களில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும் போது தான் “எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்ற கேள்வி எழுகிறது. பொதுவாக நமக்கு விருப்பமில்லாத எதிர்மறையான நிகழ்வுகள் நடக்கும் போது, மற்றவர்களையோ அல்லது கடவுளையோ குற்றம் சொல்வோம் ஆனால்; உண்மையில், நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கு யார் பொறுப்பாளி?

  வெளியே நம்மை சுற்றியுள்ள மனிதர்களும் சூழ்நிலைகளும் காரணமா? இல்லை நாம்தான் காரணமா? நிச்சியமாக.. நம் வாழ்க்கையில் நடக்கும் அத்தனைக்கும் நாம்தான் முக்கிய பொறுப்பாளி! நம்மனதிற்கும்,வௌல் உலகிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மனது, வெளியுலகில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அது போலவே வெளி உலகம் மனதில் பாதிப்பை தருகின்றது. ஆனால் மனமோ.. மிகவும் சக்தி வாய்ந்தது. மனதிற்கு உருவாகும் சக்தி அதிகம்! இந்த உலகமே சில சட்ட திட்டங்களுக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டது. இதுவே மனித வாழ்க்கையின் அடிப்படையாகும் வெளியுலகிற்கு விஞ்ஞான ரீதியான விதிமுறைகள் எப்படியோ அப்படியே நம் வாழ்க்கையை செயல் விதிமுறைகளும் கட்டுப்படுத்துகிறது.. இதுதான் உலக நிதியும் கூட…

  அதன்படி நம் உள்ளத்திலிருந்து வெளிப்படும், எண்ணங்களின் ஆதிக்கம்தான்  இந்த உலகம். நாம் சந்திக்கும் மனிதர்கள், பிரச்சனைகள், பலவிதமான வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் நம் உள்ளத்தில் இருப்பதை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்! அதாவது நம்முடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை நாம்தான் உருவாக்குகிறோம். நாம்தான் அதை உருவகப்படுத்துகிறோம். நம்முடைய அபிப்ராயங்களும், கண்ணோட்டங்களும்,  நம் வெளியுலகை வடிகட்டுகிறது. ஆகையால் நாம் என்ன நினைக்கிறோமோ நாம் அவைகளாகவோ மாறுகிறோம் என்பதுதான் இன்றளவும் நமக்குள் நடக்கிறது. இதை நாம் உணராததால்தான். ‘நாம்தான் உருவாக்குகிறோம்’ என்பதை நம்மால் உணரமுடியவில்லை.

  நம் உலகை,பிரச்சனையை நாம்தான் உருவாக்குகிறோம். இதற்கு யாரும் காரணமல்ல. இந்த உலகம் நம் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், பிரதிபலிக்கறது. மலை உச்சியில் நின்று உரக்க “நீ முட்டாள்” என்று கத்தினால் மலையும்  “நீ முட்டாள்” என்று, மறு குரலாய் எதிரொலிக்கும்

  உண்மையில் இதில் யார் முட்டாள்?

  நாம் உள்ளே ஒருவிதமாக இருந்து கொண்டு, வெளியுலகை வேறு விதமாக அனுபவிக்க முடியாது.

  உள்ளிருப்பதுதான் வௌல்யே எதிரொலிக்கிறது. “நீங்கள் நினைப்பது போலவே நடக்கிறது” என்பதற்கு இதுதான் அர்த்தம். நாம் விரும்புவதையும் வெறுப்பதையும்தான் நாம்

  நேர்மறையாக சிந்திப்பவர்கள் எப்போதும்.‘வாழ்க்கையில் தனக்கு என்ன கிடைக்கவில்லை?’ என்று பார்க்காமல.; ‘என்ன கிடைத்திருக்கிறது?’ என்று தான் பார்ப்பார்கள். இவர்கள்,தங்கள் வாழ்க்கையை, ஒவ்வொரு வினாடியம் அனுபவிப்பதோடு வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கும் நன்றி சொல்வார்கள். ஆகவே! நம்முடைய பிரச்சனையிலிருந்து விடுபட உலகம் அமைதிபெற நமது உள்ளத்து உலகம் அமைதி பெற வேண்டும்.

  இந்த இதழை மேலும்

  முயன்றேன் வென்றேன்

  திருமதி. அம்பிகா குமரவேல் BA., BBM.,

  பள்ளி ஆசிரியர், கொடுவாய்

  “வலிகள் அனைத்தையும் வழிகளாக மாற்றுங்கள்” என்ற அவரது வாக்கியத்தோடு நமது பயணம் அவருடன் தொடர்கின்றது.

  திருப்பூர் மாவட்டம் மாதப்பூர் என்னும் குக்கிராமத்தில் மளிகை கடை வியாபாரியான சக்திவேல் தனலட்சமி தம்பதியனருக்கு மகளாகப் பிறந்தேன். தம்பி முத்துரத்தினம். எனது இளமை காலம் மிகவும் எளிமையானதும் சற்று பிரச்சனையானதும் கூட. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எனது தாயாருக்கு உடல் நலம் பாதிப்பு அடைந்தது. அவரது மருத்துவ செலவிற்கு தான் எனது தந்தையின் பொருளாதாரம் சரியாக அமைந்தது. எனது படிப்பிற்கு நான் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எனது தந்தை என்னை படித்து பெரும் நிலைக்கு கொண்டுவர எண்ணினார். அவ்வேலையில் என் தாயின் உடல் நிலை குறைப்பாட்டால் எங்களால் மேலும் படிப்பை தொடரயியலவில்லை. ஆனால் வேலை பார்த்துக்கொண்டே நான் படித்தேன். அச்சூழ்நிலையில் என் தம்பியை படிக்க வைப்பது என் கடமையாயிற்று. என் தாய் சற்று உடல் நிலை தேறினார்.

  பள்ளிப்படிப்பை நான் தேறிய நிலை. கல்லூரிப் படிப்பிற்கு செல்ல நான் தையல் செய்தே செல்ல எண்ணினேன். தொலைத்தூரக் கல்வியை கற்றேன். தையல் எந்திரம் மூலமே நான் படிப்பதைத் தொடர்ந்தேன் என்று கூறுவது மிகையாகாது. எனக்குத் திருமணம் முடிந்து பின் தான் நான் கவிதை எழுதுவேன் என்று எனது குடும்பமே அறிந்தது.

  எனது முதல் ரசிகர் என்று கூற வேண்டும் என்றால் என் கணவர் குமரவேல் சுப்புரமணியன் மட்டுமே! என்னால் முடியாது என்று நான் எண்ணும் ஒவ்வொரு கணமும் அவர் மட்டுமே என்னால் எதையும் சாதிக்க இயலும் என்று எனக்கு பெரும் நம்பிக்கையை ஊட்டுவார். என் சொந்தங்கள் அனைத்தும் நான் கவிதை எழுத என்னை பெரும் விமர்சனப்பொருளாகவே பார்த்தனர். என்னை விமர்சிக்க அவர்களுக்கு இதுவரை அயர்ச்சி கண்டதே இல்லை. எவ்வித விமர்சனங்களையும் என்னை தாக்கா வண்ணம் என்னை காத்தவர் என் கணவர் மட்டுமே! என்னை தாய் என்ற ஸ்தானத்திற்கு அழைத்து சென்ற என் மகள் சகானா என் கவிதைகளை ரசித்து பொருள் பிழையற்ற கவிதையாய் உருவாக்குவாள்.

  நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை எனது தாயின் அம்மையார் வீட்டிலிருந்து தான் படித்தேன். எனக்கு இளம் வயதிலிருந்தே தமிழ் மீது பற்று அதிகம். எனக்குத் தமிழ் பாடம் என்றால் ஆலாதிய பிரியம் உண்டு. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது தான் முதன் முதலில் கவிதை எழுதினேன். இன்று பள்ளியில் ஆங்கிலப் பாடத்திற்கு ஆசிரியராய் பணி புரிந்து வருகின்றேன்.

  மற்றப்பாடங்களை விட தமிழானது உள்ளார்ந்து படித்து புரிந்து உணர்வை தொடுவதாய் அமையும். நான் தமிழ்ப்பட்டறை குழுமத்தை நடத்தி வரும் சேக்கிழார் அப்பாசாமியிடம் தான் மரபு கவிதையின் மொழி நடையை அறிந்து கொண்டேன். என் கவிதைகளின் வரி அமைப்பையும் அவரிடமே கற்று அறிந்து கொண்டேன். என் வாழ் நாளில் நான் மறக்க எண்ணாத ஒரு நபர் என்றால் அது என் உடன்பிறாவா சகோதரி சத்தியா மட்டுமே! நான் எவ்விதமான போட்டிகளில் பங்கெடுக்க வேண்டுமேனினும் என்னிடம் அதற்கான வசதி இல்லை. அவர் மட்டுமே எனது திறமையை கணித்து என்னை அவர் செலவில் அழைத்துச் செல்வார். எனது சுகத்துக்கங்களை பங்கெடுத்து எனக்கு பெரும் ஆருதலாய் இன்று வரை அவர் திகழ்கின்றார்.

  நான் எனது பள்ளிப்பருவத்தை முடிக்கவே பெரும் சிரமம் கொண்டேன். எனது கவிதைகளை என் தாய் , தந்தை பார்த்தால் திட்டக்கூடும் என்ற பயத்தில் அலமாரியின் இடுக்குகளில் மறைத்து வைத்துக் கொள்வேன். எனது கவிதை ஆர்வம் பற்றி அறியாத என் பெற்றோர்களுக்கு என் படைப்பை காட்ட நான் எண்ணினேன். நான் எக்கணமும் என் இன்பங்களை துன்பங்களை பகிரும் நல்ல நண்பர் நாகராஜ் தான் என்னை ஊக்குவிப்பவர். என்னால் ஒன்றை சாதிக்க முடியும் என்று எதிர் பார்ப்பவர். என்னால் என் வாழ்வில் என்றுமே எக்கணமும் மறக்க இயலாது என்றால் இவர் தான். நான் மேடையில் தமிழ்ப்பட்டறை குழுமம் வழங்கிய “தமிழ் அறிஞர்” என்ற விருதின் மூலமே நான் கவிஞை என்று என் தாய், தந்தையர் அறிந்தனர். அன்று முதல் எனது ரசிகர்களாய் என்னை ரசித்தனர். என்னை பெரும் கவிஞயராய் காண எண்ணிய தம்பி பாண்டியராஜ் என்ற கவிஞரையும் என்னால் குறிப்பிடாமல் இருக்க இயலாது.

  பலர் என்னை விமர்சிக்க, நானோ என் மீதான நம்பிக்கையை இழக்க என் நண்பரான காதர் என்பவர் என் திறமையின் பலத்தை நிருபித்தார். நான் அக்கணம் தான் “வைரத்தின் நிழல்கள்” என்ற விருதை பெற்றேன் பெரும் கவிஞர் வைரமுத்துவிடமிருந்து. இதனை தொடர்ந்து “புதுமை பித்தன்” “தமிழ்மாமணி” “எம்.ஜி.ஆர் விருது” “கவிச்சுடர்”  “கவிவாரிதி” போன்ற பட்டங்களைப் பெற்றேன். சேக்கிழார் அப்பாசாமி நடத்திவரும் தமிழ்ப்பட்டறை என்ற அமைப்பு பெரும் நல்ல நோக்கோடும் நல்ல எதிர் பார்ப்போடும் இயங்கி வருகின்றது. அவர் எவ்வித எதிர்பார்ப்பும் அற்ற பொது நலத்தோடு நல்ல கவிஞர்களை உருவாக்கி வருகின்றார். நல்ல நல்ல கவிஞர்களை உருவாக்கும் அவருக்கு இக்கணம் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

  இன்றைய இளம் மங்கையர்களுக்கு எவ்வித அறிவுரைகளையும் வழங்க இயலாது. நாம் பதினெட்டு வயதில் தெரிந்து கொண்ட அனைத்தையும் அவர்கள் பத்து வயதிலேயே அறிந்து கொண்டுவிட்டனர். அவர்களது கைகளில் உலகத்தை வைத்து கொண்டு அழைகின்றனர். அனைத்து துறைகளிலும் ஒருவிதமான தொல்லைகளை அனுபவிக்கின்றனர் நமது பெண்கள். அவர்களது திறமைகளை மட்டம் தட்டவே பெரும் குழுவே அழைகின்றது. எவ்விதமான துறை என்றாலும் அவர்கள் பாலியல் ரீதியான தொல்லைகளை அனுபவிக்கின்றனர். இத்தொல்லைகளில் இருந்து அவர்கள் விலக அவர்கள் நடைமுறைகளே அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து உதவும். எவ்விதமான தொல்லைகளும் அவரவர் நடைமுறைகளை பொறுத்தே வந்து அமையும். ஒரு துறைக்குள் செல்லும் முன் நாம் நம்மை வலுப்படுத்திக் கொண்டு தான் செல்ல வேண்டும். அதுவே நான் அவர்களை பார்த்துக் கூறுகின்றேன்.

  இன்றை சமுதாயத்தையே சீரழிக்கும் பெரும் சமுதாயசீர்கேடாய் மதுவும், அதிகமாய் நெகிழியை பயன் படுத்துவதும் தான் அமைகின்றது. “நாளையத் திருப்பூர்” என்ற அமைப்பில் நான் ஒரு உறுப்பினாராய் இருந்து நெகிழிகளை உபயோகிக்கும் பழக்கத்தை தடுத்து ஒழித்து “நெகிழி இல்லா திருப்பூராய்” மாற்ற நந்தகுமார் என்றவர் தலைமையில் இயங்கி வருகின்றோம். இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி நெகிழியை ஒழிக்க திட்டம் தீட்டியுள்ளோம். கோயில்களில் காகிதங்களில், கூடைகளில் பிரசாதத்தை வழங்க ஏற்பாடு செய்கின்றோம்.

  பள்ளி குழந்தைகளை அவர்கள் இல்லங்களில் உள்ள நெகிழிகளை கொணரக்கூறி அவைகளை மறுசுழற்சிக்கு அனுப்பி நெகிழிகளை அழிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம். பல இளைஞர்களின் போராட்டமான சல்லிக்கட்டிற்கு ஒத்துழைப்பு தர என் குடும்பமே எனக்குத் துணையாய் நின்றது. இன்றைய பள்ளி, கல்லூரி மாணக்கர்கள் பெரும் மன உலைச்சலே இக்காலகட்டதில் பெரும் சமுதாயசீர் கேடாய் உள்ளது.

  “தமிழ் இனி மெல்லச்சாகும் என்றோர் மடைமை தனை அழிப்போம்” என்றார் முட்டாசு கவிஞர். ஆனால் தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற வாக்கியத்தை கொண்டோருக்கு ஒன்றை கூறுகின்றேன். இம்மண்ணில் கடைசித் தமிழன் வாழும் வரை தமிழ் என்றுமே சாகாது. வாழ வைக்கவும், வாழ்வைத் தரவும் இயன்ற ஒரே மொழி நம் தாய் தமிழ் மட்டுமே! தமிழ் மொழி நமக்கு பயிற்றுவிப்பது தமிழை மட்டுமில்லை ஆன்மீகத்தையும் தான். நமது தமிழ் மொழியில் கற்கும் ஆன்மீகமானது நமக்கு பெரும் நல் அனுபவங்களை தருகின்றன. கோபதாபங்களை போக்கி, உணர்வுகளை அடக்கி காரணமற்ற வெறுப்பில் பிரிந்த உறவுகளை நம்மிடம் மீண்டும் சேர்கின்றன. வாரியார், தேசமங்கையர்கரசி, சசிகுமார், போன்றோர் பயிற்று ஆன்மீகமானது நமக்கு நல் வழியை காட்டுகின்றது.

  நான் இன்றைய இளைஞர்களிடம் நாட்டுப்பற்றுடன் நல் மொழிபற்றையும் காண்கின்றேன். ஆங்கிலமொழி ஆதிக்கத்தை தவிடு பொடி ஆக்கும் வகையில் இன்றைய இளைஞர்களிடம் மொழிப்பற்று உயர்கின்றது. இதனை நான் “தமிழ்ப்பட்டறை இலக்கியப் பேரவை”யின் இலக்கிய மன்ற மாவட்டத் தலைவராய் பொறுபேற்றப் போது அறிந்து கொண்டேன். இன்று கண்ணதாசன் பேரவையின் பொருளாளராய் நான் பெருமை அடைகின்றேன்.  ஆண்களின் தாக்கம் மட்டுமே நிறைந்த இந்த திரையுலகில் நான் கால் பதித்து நிற்க எண்ணினேன். இந்நிலையில் தான் தெலுக்கு படமான பிரம்மோட்சவம் என்ற படத்தை தமிழில் மொழிப் பெயர்த்து அனிருத் என்ற திரைப்படத்திற்கு பாடல் வரிகளை எழுத வாய்ப்பு கிடைத்தது.

  “அந்த மான் கண்ணுக்காரி

  அரிசிமாவு பல்லுக் காரி

  ஆத்தோரம் ஏன் போன நில்லு

  அத்த மக என்ன சொன்ன சொல்லு”

  என்ற வரிகளில் தொடங்கிய என் பாடலே இதற்கு அடிகோலியது.

  நான் கவிதை எழுத, மேடைகளில் ஏறி என் திறமையை எடுத்துரைக்க பெரும்  தாக்கமாய் அமைந்தது கண்ணதாசரும் அவரது வரிகளுமே தான்.

  தன்னம்பிக்கை வாசகர்களுக்கு என்றுமே ஒரு துறையினை தேர்வு செய்து அவரவர் திறமைகளை அதில் காட்ட வேண்டும். திறமைகளை ஊக்குவிக்கவே தன்னம்பிக்கை போன்ற இதழ்கள் செயல்பட்டு வருகின்றன. வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் ஒரு கணத்தை கடக்க வேண்டும் என்றாலும் நம்பிக்கை மிகவும் இன்றியமையாதது. அதிலும் தன்மீது கொண்ட நம்பிக்கை மிகவும் அவசியம். அதனால் ஒவ்வொரிவரும் நம்பிக்கையோடும், தன்னம்பிக்கையோடும் வாழ வேண்டும்.

  இந்த இதழை மேலும்

  முயற்சியே முன்னேற்றம்

  முயற்சி என்பது என்ன? உடல் அளவில் இருக்கும் இடத்திலிருந்து சிறு அசைவு மனதளவில் மேல் நோக்கிய சிந்தனை- இது தான் முயற்சி சிறு உதாரணம் மூலம் பார்ப்போம்.

  ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலிருந்து 23 வயது பெண் தள்ளிவிடப்பட்டார். இவர் ஒரு தேர்வு எழுத லக்னோவிலிருந்து டெல்லிக்குச் சென்று கொண்டிருந்தார்.விடிந்தால் தேர்வு எழுத வேண்டும். நடுஇரவில் கீழே தள்ளிவிடப்பட்ட இவர் காதில் வேறு ஒரு ரயில்வரும் சப்தம், பக்கத்து தண்டவாளத்தின் மீது விழுந்து இருந்து கிடந்ததை உணர்ந்தார். ரயில் வருவதைப் பார்த்தார். முயற்சி செய்து உடலை தண்டவாளத்தின் மிதிருந்த வெளிப்புறமாக நகர்த்தினார். ஆனால் முழங்காலை எடுக்கு முன் ரயில் அவர் கால் மீது ஏறியது.

  கீழே விழுந்த அதிர்ச்சியில் மயக்கமடைந்திருந்ததால் மரணம் தான். காதில் சப்தம் விழ, கண்கள் ரயில் வருவதைப் பார்க்க, உயிர்மேல் ஆசை ; உடனடி முயற்சியாக உடலை நகர்த்தினார்.

  தலைக்கு வந்தது தலைப்பாகைவுடன் போயிற்று என்ற பழமொழிப்படி, மரணம் தோற்றது ; ஆனால் இடது கால் முழங்காலுக்கு கீழே வெட்டப்பட்டது. இதன் விலை இவர் அணிந்திருந்த தங்கச் செயினும், கையில் வைத்திருந்த பையும் என்றால் மிகையாகாது.

  இவர் பெயர் அருணிமா சின்ஹா. 1988 ல் உத்திரப்பிரதேசம் அம்பேத்கார் நகரில் பிறந்த இவர் , கல்லூரிப் படிப்பை முடித்து, டெல்லிக்கு பத்மாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 12. 04. 2011 அன்று பயணம்  செய்த சமயம் அன்று இரவில் திருடர்களுக்கு தான்  அணிந்திருந்த தங்கச்சங்கலியும் கைப்பையும் தர மறுத்ததால், அவர்களால் கீழே தள்ளி விடப்பட்டார்.

  இடது காலை இழந்தாலும் எதிர்காலம் இருக்கும் வரை இழப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை எனத்திடமாக நம்பினார். முயன்றார் சாதாரண முயற்சியல்ல.

  இது விபத்தல்ல, தற்கொலை முயற்சி அல்லது ரயில் பாதையை அஜாக்கிராதையாகக் கடந்திருக்கலாம் என்ற பொய் வாதத்தை வழக்கில் தன்னம்பிக்கையுடன் விவரித்து உண்மையைக் கூறி வென்றார். இதற்கு துணையாக அமைந்தது சுவாமி விவேகானந்திரின் உந்துதல் வார்த்தைகள் தான்.

  கால் துண்டிக்கப்படும் முன் வலிதெரியாமல் இருக்க அனஸ்திசியா கொடுக்க  வேண்டிய டாக்டர் இல்லை.  காலம் கடந்தால் முழுக்காலையும் இழக்க வேண்டிய நிலை வரலாம் என்பதால், மயக்க மருந்து கொடுக்காமலேயே காலைத் துண்டித்து அறுவை சிகிச்சையை முடிக்குமாறு கூறுமளவுக்கு தைரியம் நிறைந்தவர்.

  1984- ம் ஆண்டில் முதன் முதலில் உலகின் உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய இந்தியப் பெண் என்ற பெருமைக்குரிய பச்சேந்திரி பால் என்பவர் வழிகாட்டுதலில் செயற்கைக் கால் பொருத்தி, எவரெஸ்ட் சிகரத்தை ஏற வேண்டும் என்பதை வாழ்வின் இலட்சியமாகக் கொண்டார்.

  கடுமையான பயிற்சிகள் முடிந்து, முழுஈடுபாட்டுடனும் மனோதைரியத்துடனும் 2012 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எவரெஸ்ட் சிகரம் ஏறும் சாதனைப் பணியைப் துவங்கினார். பல சவால்கள்.

  அப்போதெல்லாம் பச்சேந்திரபாலின் அறிவுரை காதில் முழங்கியது.

  அருணிமா, இலக்கை அடைய முடியுமா என எப்போதாவது சந்தேகம் உண்டானால், உடனே பின் பக்கம் திரும்பிப் பார்த்தால் போதும். எவ்வளவு தொலைவைத் தாண்டிவிட்டேன். இனி சிறிது தூரம் மட்டும் தானே செல்ல வேண்டும்  என்பதை உணர முடியும், அந்த  உணர்தலே உங்களை இலக்கிற்கு வழிநடத்தும்.

  இந்த வார்த்தைகள்  காதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தன. உடன் வந்த வழிகாட்டிகள் பலமுறை திரும்பிவிடலாம் என்று வலியுறுத்தினார்கள்.

  கடுமையான பிடிவாதத்துடன் பயணத்தைத் தொடர்ந்தார். திரும்பி விடலாம் என முரண்டு பிடித்த வழிகாட்டியிடம், மிகவும் துணிச்சலாக, நான் திரும்பத் தயாராயில்லை; வேண்டுமானால் நீங்கள் திரும்பிப் போகலாம் என்றார்.

  இந்தத் துணிச்சல் மட்டும் இருந்தால் எந்த முயற்சியுமே நம்மை முன்னேறச் செய்யும் ஒருநாள் 2 நாள் அல்ல- 52 நாட்கள் கடும்பனியில் பயணித்து, இறுதியாக  21. 05. 2013 காலை 10.55 மணியளவில் உலகின் உச்சியில், எவரெஸ்ட் சிகரத்தில் தன் காலடியைப் பதித்தார்.

  மலை உச்சியில் நம் நாட்டின் மூவண்ணக் கொடியை உயர்த்தி வீசினார். சுவாமி விவேகானந்தர் மற்றும் பல கடவுளின் சிறிய சிலைகளை அங்கே நிறுவினார்.

  பிறகு கீழ்க்கண்டவாறு வேண்டிக் கொண்டார். இங்கு வரும் உலக மக்கள் யாராக இருந்தாலும், அவர்கள் என்ன ஜெபித்தாலும் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  விளையாட்டு வீராங்கனையாக விரும்பிய இவர் விபத்தால் எவரெஸ்ட் சிகரத்தை செயற்கைக் காலுடன் ஏறிய முதல் பெண் என்ற பெருமைக்குச் சொந்தமானார்.

  2014 ல் இயலாதவை எதுவுமேயில்லை ( NOTHING IS IMPOSSIBLE)  என்ற இவரது வீரமிக்க சுயசரிதையை உலகப் புகழ்பெற்ற வெளீயீட்டு நிறுவனம் BORN AGAIN ON THE MOUNTAIN (மீண்டும் மலை மீது பிறந்தார். என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட அதை இந்தியப் பிரதமர் திருமிகு நரேந்திர மோடி அவர்கள் வெளியிட்டார். அப்போதைய ஜனாதிபதி திருமிகு பிரணாப் முகர்ஜியும் பாராட்டினார்.

  இப்புத்தகத்திற்கு முன்னுரையாக அருணிமா எழுதிய வார்த்தைகள் இதோ.

  இது இழந்த எல்லாவற்றையும் திரும்பப்  பெற்ற கதையாகும். தேவையறிந்து உதவும் எண்ணற்ற இந்தியர்களுக்கு இந்தப்புத்தகத்தை அர்ப்பணிக்கிறேன்.

  2015 ல் பத்மஸ்ரீ விருது வழங்கி, இந்திய அரசு, இவரது சாதனையை அங்கீகாரம் செய்தது.

  ஆண், பெண் இருபாலரிடையே வலிமை நிறைந்த பெண்கள் பல நாட்டிலிருந்தும் வந்து, உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தை ஏறியதைப் படிக்கும் போது, நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்றே நம் மனம் சொல்லும்.

  1953ல் எட்மண்ட் ஹிலாரி, டென்சிங் நார்கே ஏறினர்.

  1975ல் ஜூங்கோதபாய் என்ற ஜப்பானியப் பெண் ஏறினார்.

  1984ல் பச்சேந்திரிபால் என்ற இந்தியப் பெண் ஏறினார்.

  1988ல் லிடியா பிரேடி என்ற நீயூஸிலாந்து பெண் ஏறினார். மீண்டும் 2008, 2013 மற்றும் 2016 லும் ஏறினார்.

  1992 சந்தோஷ் யாதவ் என்ற இந்தியப் பெண் ஏறினார். 1993 லும் மீண்டும் ஏறினார்.

  2011ல் பிரேம்லதா அகர்வால் என்ற இந்தியப்பெண் ஏறினார்.

  இவர்களை யெல்லாம் விட மாலாவத் பூர்ணா என்ற சிறுமி தன் 14 வது வயதில் 2014 ல் எவரெஸ்ட் சிகரம் எறி சாதனை படைத்தார். தெலுங்கானா மாநிலத்தில் 9 ம் வகுப்பு படிக்கும் போது இச்சாதனையைச் செய்தார்.

  1978 ல் எவரெஸ்ட் எறிய போலந்து நாட்டுப் பெண் வாண்டா ருட்கிவிஸ் 1992 ல் மலையேறி காணாமல் போய், அங்கேயே இறந்து விட்டார். அவரது உடலைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

  இவ்வளவு தனிநபர் சாதனையா என்ற எண்ணம் வரும். பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் சிறப்பாக, பிரச்சனைகளில்லாமல் வாழ்வதற்கான முயற்சிகளை ஆர்வத்துடன் செய்ய வேண்டாமா?

  அருணிமாவிடம் உங்களை ரயிலிலிருந்து தள்ளிவிட்ட திருடர்களை மீண்டும் சந்தித்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டனர். அவர்களை உறுதியாக மன்னிக்கிறேன். எனக்கு மலையேறத் திறமை தந்த இறைவன், அவர்களுக்கும் நல்ல காரியங்களைச் செய்வதற்கு திறமையைக் கொடுக்க  வேண்டும் என்றார்.

  முயற்சியே முன்னேற்றம் -தொடரும்.

  இந்த இதழை மேலும்

  கரியடுப்பிலிருந்து கணினி வரை

  ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்கிற உண்மை தான். அதே நேரத்தில் ஒவ்வோரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் நிற்கிற பெண்ணின் மனம் ஏன்  தனது வெற்றிக்குப் பின்னாலும் நிற்க்க் கூடாது என்கிற கேள்வியை எழுப்பிப் பார்த்த பெண்கள் தான் இன்றைக்கு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள்.  கரியடுப்பில் தொடங்கிய பெண்களின் வாழ்க்கை பயணம் இன்று கணினி வரை வருவதற்கு அவர்கள் அரும்பாடுபட்டிருக்கிறார்கள். கணினி,சாலை போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, விளையாட்டு, விண்வெளி, கலை ,இலக்கியம், மருத்துவம் ,தத்துவம், கல்வி ,சட்டம் என இன்றைக்கு பெண்கள் பங்களிப்பு இல்லாத துறை என்றெதுவும் இல்லை. ஆண்களால் மட்டுமே முடியும் என்பதையெல்லாம் உடைத்தெறிந்து இந்த அரியச் சாதனைகளையெல்லாம்  படைப்பதற்கு அவர்கள் கடந்து வந்த பாதைகளில் சந்தித்த போராட்டங்களும் வலிகளும் ஏராளம்.

  ஆணாதிக்கச் சிந்தனையாலும், சமூக மூட நம்பிக்கைகளாலும் மறுக்கப்பட்ட கல்வியை கற்பதற்கு அவர்கள் சந்தித்த போராட்டங்கள், பாலியல் தொல்லைகள் , அழகு பொருளாக மட்டுமே பெண்ணை பாவித்து அடிமையாக்கப்பட்ட அவலங்கள் என்று நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

  ஒவ்வொரு  ஆணும் பிறப்பிலிருந்து தான் கடந்து வந்த பெண்களை எண்ணிப் பார்த்தாலே அவர்கள் பேராற்றல் இருந்தும் கூட அளவற்ற சகிப்புத் தன்மையோடு அளப்பரிய தியாகத்தையும் செய்துள்ளார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

  கரியடுப்பிலும் விறகடுப்பிலும் ஊதுகுழலை ஊதி ஊதி நெருப்பை பற்ற வைத்து கண்ணிர் சிந்த வியர்வை சிந்த அந்த வெக்கைக்குள்ளேயே தன் வாழ்நாளை கழித்துக் கொண்ட அம்மாக்களை நாம் எண்ணிப் பார்த்ததுண்டா ? பின் தூங்கி முன் எழுந்து தன் குடும்பத்தை கட்டிக்காத்த அந்த அம்மாக்களுக்கு ஆற்றல் இல்லை என சொல்லுதல் அறமாகுமா? அந்த அம்மாக்களின் ஆசையை என்றாவது ஒரு நாள் நாம் எண்ணிப் பார்த்ததுண்டா?

  பிறந்த வீட்டில் மகாராணி போல் வலம் வந்துவிட்டு புகுந்தவீடு சென்றவுடனே ஒரு செவிலிப் பெண்ணைப் போல் சேவை செய்து கொண்டு புகுந்த வீட்டின் அத்தனை உறவுகளையும் பேணிக் காத்துக் கொண்டு இருந்த போதும் கூட தன் கணவனோடு இருக்கிற புகைப்படத்தில் தன் கணவன் அமர்ந்திருக்க தான் நின்று கொண்டு சிரிக்கும் அக்காக்களின் மனதில் உள்ள வலியை உணரந்த்துண்டா? அந்த அக்காக்களுக்கு ஆற்றலில்லை என்று சொல்லுதல் அறமாகுமா? அவர்களுடைய ஆசைகள் புதைந்து போனதெங்கே என்று அகழ்வாராய்ச்சி செய்த துண்டா ?

  திருமணம் முடித்த பின்பு பிள்ளைகளை மட்டும் வரிசையாய் பெற்றுவிட்டு வெளிநாடு சென்ற கணவன் தன் பிள்ளைகளின் திருமணத்திற்கு தான் திரும்பி வருவான் எனத் தெரிந்தும் தனியாளாய் பிள்ளைகளை போற்றி வளர்த்த துணிச்சலும் பாசமும்  மிகுந்த பெண்கள் நம் அத்தையாகவோ, சித்தியாகவோ, ஏதோ ஒரு உறவுகளாய் இருந்திருக்கக்கூடும். பார்த்ததுண்டா? அப்படிப் பட்ட அத்தைகளாய்,சித்திகளாய் வலம் வந்த பெண்கள் ஆற்றல் இல்லாதிருந்தார்கள் என்பது அறமாகுமா?  அவர்களின் ஆசைகள் ஏன் நாடு கடத்தப்பட்டன ?

  தன் கணவனின் வெற்றிக்காக அத்தனை நகைகளையும் கழற்றிக் கொடுத்துவிட்டு மிஞ்சியிருப்பது மிஞ்சி தான் என்று தன் கணவனின் வெற்றியையே தனது வெற்றியாகக் கருதிக் கொண்ட அந்த மனைவிகளுக்கென்று தனித்த ஆசை தனியாத ஆசை இல்லாமலா  போயிருக்கும். இப்படி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் பேராற்றல் மிக்கப் பெண்களை நாம் கடந்து தான் வந்திருக்கிறோம். ஆனாலும் அவரகளின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருந்த பல காரணிகளை உடைத்தெறிந்து ஊக்கம் பெற்று கல்வியிலும் நிர்வாகத்திலும் சிறந்து விளங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னமும் கூட அவர்கள் உடைத்தெறிய வேண்டிய தடைகள் நிறைய உள்ளன.

  புகைப்படத்தில் கூட கணவன் அருகில் பெண் அமரக்கூடாது என்கிற அடிமைத்தனம் இருந்த காலத்திலேயே , பாரதி தான் நின்று கொண்டு தன் மனைவி செல்லம்மாளை அமரவைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

  ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

  அறவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம் என்றும்

  பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

  பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

  எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்

  இளைப்பில்லை காணென்று கும்மியடி என்றும் ஓங்கிக் குரல் கொடுத்தான் பாரதி.

  ஆக, தன் முன்னால் நின்ற தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து வெற்றிக்கணி பறித்த பெண்களை பாரட்டுகிற அதே நேரத்தில்  இன்னமும் அவர்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிற அனைத்து மூடநம்பிக்கைகளயும் கடந்து வெளிவர வேண்டும். பெரியார் சொல்வது போல தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதீத அக்கறை காட்டுவதை விடுத்து தோற்றப் பொலிவிற்கான அளவில் மட்டுமே அதனை செய்து கொண்டு தான் அழகு பொம்மைகள் அல்ல ,அறிவாற்றல் மிகுந்தவர்கள் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்.

  அழகு, அறிவு, ஆற்றல் என்கிற வரிசை அறிவு, ஆற்றல,, பிற்பாடே அழகு என்கிற வரிசையில் வாழ்க்கையில் வெற்றிநடை போடவேண்டும். அவர்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளை தாண்டியும் பல்வேறு இலக்கியம், வரலாறு, தத்துவம், பொருளாதாரம் என பல நூல்களையும் கற்க முனையவேண்டும் இன்றைக்கு இப்படி எல்லாத்துறையிலும் தங்கள் கொடியை பறக்கவிடுகிற பெண்கள் தான் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள. பெண்கள் தன் லட்சியப் பயணத்தில் எதிர்கொள்கிற தோல்விகளை தோல்விகளாக கருதாமல்

  தோல்விகள் ஓவ்வோன்றும் நம் தோளுக்கு மாலையாக வந்து சேரும் உதிரிப்பூக்கள். தொடுத்து மாலையாக்குவோம் வெற்றி மாலையாக்குவோம். இனி நம் விழி திரும்பும் திசையெல்லாம் விழா எடுக்கும் உலகம் என்ற சிந்தனையோடு  மேன்மேலும் வெற்றிகள் பெற ,வானளாவிய புகழ் பெற அனைத்து பெண்களுக்கும் எனது மனமகிழ்ந்த மகளிர்தின வாழ்த்துகள்.

  இந்த இதழை மேலும்

  இளைஞனால் முடியாதது உண்டா? மனிதனால் முடியாதது உண்டா?

  இந்திய இளைஞர்களே செய் அல்லது செய்துகொண்டே இரு

  இது தான் வெற்றியின் தத்துவம். சாதனையின் மகத்துவம்.

  சமுதாயம் உன்னைக் கொடுமைப்படுத்தினாலும் இந்த உலகத்திற்கு நன்மையை மட்டுமே செய்.

  புலன்களை அடக்கு அதுவே உனக்கு அதிக பலன்களைக் கொடுக்கும்.

  உலகம் உன்னை முட்டாள் பைத்தியக்காரன் என்றெல்லாம் சொல்லும். சொன்னாலும் உன் கொள்கையை உன் இலட்சியத்தைச்  சொல்கிறார்கள் என்பதற்காக மாற்றிக் கொள்ளாதே.

  தாமஸ் ஆல்வா எடிசன் உலகிற்கு பெரிதும் பயன்படக்கூடிய மின்சாரப் பல்பைக் கண்டுபிடிக்கும் போதும், கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க பயணம் மேற் கொண்ட போதும், பில் கிளிண்டன் சிறுவனாக இருக்கையில் அன்றைய அமெரிக்க அதிபர் கென்னடியைப் பார்த்தபொழுது உங்களைப் போல் நானும் ஒருநாள் அமெரிக்க அதிபராவேன் என்று சொன்னபோதும், குக்லிமோ மார்கோனி ரேடியோவைக் கண்டுபிடிக்க முயன்றபோதும், ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக வேண்டும் என்று எண்ணியபோதும், குற்றாலீஸ்வரன் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோதும் இந்த உலகம் அவர்களை கேலியும் கிண்டலுமாக பைத்தியக்காரன் முட்டாள் என்றெல்லாம் சொன்னார்கள். சொன்ன இந்த உலகமே இவர்களது சாதனையைக் கண்டு, இன்று இவர்களைப் பார்த்து வாயைப் பிளந்து வியந்து கொண்டிருக்கிறது.

  உலகம் எதை எதையோ வேண்டாததை சொல்கிறதென்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, தனது இலட்சியத்தை மேற்கண்டவர்கள் விட்டு விட்டிருந்தார்கள் என்றால் வியத்தகு பெரிய சாதனைகளை அன்று செய்திருக்க முடியுமா?

  அனைவரும் பாராட்டித் துதிக்கும் வகையில் தனக்கென்று ஒரு சரித்திரத்தை படைத்திருக்க முடியுமா?

  நினைப்பதைச் செய், செய்வதைச் செய், நினைப்பது நடக்கும். நடப்பது நடக்கும்.

  நடப்பதும் நடந்ததும், நடக்கப்போவதும், எல்லாம் உன் நன்மைக்காகவே.

  கொள்கையில் வீரனாய் இருந்து விடு, உன்கொள்கையின் கதவுகளைத் திறந்திடு, சிந்தித்தது போதும் செயல்படு.

  இதுவா இளைஞர் சமுதாயம்?

  கடந்த சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகையில் கோவை சிறைத்துறை உயர் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் சிறையில் உள்ளவர்களில் 90 சதவிகிதம் பேர் இளைஞர்கள்.

  இன்டர்நெட்டில் ஆபாச வலைதளங்களின் பிடியில் ஒரு பகுதியினர், அரசியல்வாதிகளின் நாட்டிற்கு வேண்டாத செயலைச் செய்ய ஒரு குரூப், காதல் காதல் என்று படிக்கின்ற காலத்திலேயே பைத்தியக்காரர்களாய்த் திரிகின்றனர். மேலும் ரசிகர் மன்றம் என்ற பெயரில் நடிகையை துதிப்பதற்கென்று ஒரு பகுதியினர். இப்படி சரியான கொள்கையில்லா இளைஞர்கள் இந்தியாவில் என்றும் அதிகம்.

  இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இப்படியிருக்கும் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியின் விரோதச் செயல்களை மாற்றித்திருத்தும் சினிமா, தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் இளைஞர்களது மனதில் காதல்,  காமம், வன்முறை போன்ற செயல்களை மிகவும் நன்றாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

  கொண்ட கொள்கையில் இன்னல்கள் வரும்பொழுது கொள்கையை விட்டுவிடும் விடாமுயற்சி இல்லாதவர்கள் இளைஞர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

  மனிதன் என்பதற்குப் பொருள் அனைத்து, விசயங்களையும் அலசி ஆராய்ந்து, நன்மை தீமை எதுவென்று உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் மனிதன் என்பதை தெரிந்தறிய வேண்டும்.

  உலகில் உயர்ந்த உயிரினம் மனிதனே

  மற்ற உயிரினங்களை எடுத்துக் கொள்ளுங்கள் ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்பு அவை தோன்றிய பொழுது எப்படி இருந்தனவோ அனைத்திலும் அப்படியேதான் இன்றும் இருக்கின்றன.

  ஆனால் மனிதன் மட்டும் அப்படியல்ல. 500 வருடங்களுக்கு முன் இருந்ததை விட மனிதன், கல்வி, மருத்துவம், சமூக அறிவு, விளையாட்டு, விஞ்ஞானம், போக்குவரத்து, நாகரீகம், தகவல் தொடர்பு, கணிதம், தமிழ், தொழில், வணிகம், அரசியல், அழகியல், இலக்கணம், இலக்கியம், உற்பத்தி, எதிலும் விழிப்புணர்ச்சி, பாலின கல்வியில் தெளிவு, பத்திரிக்கை, சினிமா, சட்டம், அனைத்திலும் அபிவிருத்தி என்று போன்றவற்றில் எல்லாம் வியக்கத்தக்க வகையில் எவ்வளவோ முன்னேறியிருக்கிறான்.

  அன்று எங்கு சென்றாலும் நடை பயணமாகவே சென்ற மனிதன், தன் சிந்தனையாலும், அந்த சிந்தனை செயல்  ஆனதாலும் இன்று கப்பல், ரயில், விமானம், கார், பஸ் மற்றும் பல சொகுசு வாகனங்களில் உலகை இன்று வலம் வருகின்றான்.

  திரி விளக்கில் அன்று இருட்டை விரட்டியவன் இன்று படிப்படியாக உயர்ந்து மின்சாரத்தால் உலகில் எங்கும் உள்ள இருட்டை அகற்றுகிறான்.

  அன்று சிக்கிமுக்கிக் கல்லில் சிதறிய நெருப்பை குளிர் காயவும், சமைக்கவும் பயன்படுத்தி வந்த மனிதன் இன்று மின்சார அடுப்பு, எரிவாயு அடுப்பு, சூரிய வெப்ப அடுப்பு போன்றவற்றை உணவு சமைக்கப் பயன்படுத்துகிறான்.

  அன்று தகவல் தொடர்பில் தூது செல்ல புறாவை மட்டுமே பயன்படுத்தியவன் இன்றோ இமயமலைபோல் உயர்ந்து பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், புத்தகங்கள், பாடல்கள், மேடைப்பேச்சுகள், வாட்ஸ்அப், செல்போன், இன்டர்நெட், Facebook, Twitter, SMS, மின்னஞ்சல் வழி என பல வகையாகவும், பல வழிகளிலும் தகவல்களைப் பரப்பி வருகிறான்.

  முன்பு ஓலைச் சுவடியில் ஆணியில் மற்றும் தரையில் மணலில் தன் விரல்களினால் எழுதிக் கொண்டிருந்தவன் இன்று எப்படியெல்லாம் எழுதுகிறான் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

  தெருக்கூத்து, நாடகம் போன்றவற்றை பொழுதுபோக்கிற்காக வைத்திருந்தவன், சீ.டி. பென்ரைவ், 4G, 5G, Android, ஹோம்தியேட்டர், போன்றவற்றின் மூலமாக உலகை வீட்டிற்குள்ளேயே கொண்டு வந்து ரசித்து மகிழ்கிறான்.

  குருகுலக் கல்வி முறை, திண்ணைப் பள்ளி போன்றவற்றை கல்வி முறையாக வைத்துப் படித்துக் கற்று வந்தவன் இன்றோ, மருத்துவம், தொழில், சட்டம், பத்திரிகை, வரலாறு, அறிவியல், புவியியல், பொறியியல், பொருளாதாரம் உடற்கல்வி, விளையாட்டு என பலவாறாக பிரித்து அனைத்துத் துறைக் கல்வியையும் எளிதாக, எளிதான முறையில் கற்று வருகிறான்.

  வானத்தை அதிசயமாகப் பார்த்துக்  கொண்டிருந்தவன் இப்பொழுது விண்வெளிக்குச் சுற்றுலா சென்று வருகிறான். ராக்கெட் மற்றும் ஏவுகணை தயாரித்து விண்வெளிக்குக் குறிப்பிட்ட இடத்திற்குச் செலுத்தி இமாலய சாதனை படைத்துவிட்டான்.

  இயற்கை காற்று இல்லாத இடத்தில் காற்றாடி மூலம் செயற்கைக் காற்றை விசுவிசுவென்று வரவழைத்துக் கொண்டான்.

  செயற்கை குளிர்சாதனக் கருவியை பயன்படுத்தி மனிதன் இருக்கும் அத்தனை இடங்களையும் குளிர்விக்கிறான்.

  உலக வெப்பத்தை தன் அறைக்குள் இருக்க விடாமல் அடியோடு அகற்றுகிறான்…

  அன்று முதல் இன்று வரை உலகில் நடந்த அனைத்து முன்னேற்றங்களையும் வைத்து ஆராய்ந்த பொழுதுதான் தெரிகிறது மனிதனாலும் இளைஞனாலும் உலகில் முடியாதது எதுவும் இல்லை என்பது.

  இந்த இதழை மேலும்