![]() |
Author: முருகார்த்திக்
|
நெல் (Rice) உலகின் மிக முக்கிய பயிர் தாவரங்களில் (Crop plants) ஒன்றாகும். இப்பூமியில் உற்பத்தியாகும் உணவுப்பொருட்களில் சரிபாதி உணவு அரிசி, கோதுமை மற்றும் மக்காச்சோளம் மூலமே பெறப்படுகிறது. அவற்றில் நெல் (அரிசி) முதன்மை இடம் வகிக்கிறது. அத்தகைய நெல் பயிரின் ஜீனோம் பற்றிய தகவல்களை இந்த இதழில் காண்போம். நெல் ஓரைசா சட்டைவா (Oryza sativa) எனும் அறிவியல் பெயரில் அழைக்கப்படுகிறது. நெல் முதன் முதலில் மரபாகராதி திட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட பயிர் தாவரமாகும் (Crop plant). இந்த திட்டம் பல நாடுகளின் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்பட்டது.
முதலில், பன்னாட்டு நெல் மரபாகராதி வரிசையாக்க திட்டம் (The International Rice Genome Sequencing Project (IRGSP)) 1997-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. ஏறத்தாழ 11 நாடுகள் (ஜப்பான், தைவான், தாய்லாந்து, கொரியா, சீனா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், கனடா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன்) இத்திட்டத்தில் இணைந்து செயல் பட முன்வந்தது. கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து 2006-ஆம் ஆண்டு நெல் பயிரின் முதல் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. பிறகு, சமீபத்திய வாரியாக்கம் தொழில்நுட்பத்தால் இந்த ஜீனோம் தரவுகள் பலமடங்கு மெருகூட்டப்பட்டு இன்று உயர் தரமான (high quality) டி.என்.எ. வரிசை (genome sequence) தரவுகளை கொண்ட முக்கிய மற்றும் தானிய வகை பயிர்களுக்கு (Cereal crops) மாதிரியாகவும் (model) திகழ்கிறது.
நெற்பயிற்றில் 24 குரோமோசோம்களை உள்ளடக்கி ஏறத்தாழ 350 (Mb) அளவில் (genome size) நியூக்கிளியோடைடு வரிசைகளை கொண்டுள்ளது. நெல் ஜீனோம், சோளம் (sorghum) மற்றும் மக்காசோளம் (maize) போன்ற பயிர்களுடன் ஒத்த டி.என்.எ. வரிசை தளங்கள் (Conserved synteny) கொண்டிருப்பதாக பிற்காலத்தில் கண்டறியப்பட்டன. இதனால், இந்த உயர் தரமான நெல் ஜீனோம் மற்ற முக்கிய தானிய வகை பயிர்களின் மேம்பாட்டிற்கும் தனது இன்றியமையா பங்களிப்பை ஆற்றுகிறது. 1990 முதல் 1994-ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ 30 மேற்பட்ட ஆய்வுகளில் நெல்லில் உள்ள ஜீன்கள் குளோனிங் (cloning) மூலம் பிரதியெடுத்து அவற்றின் பண்புகளை கண்டறிந்து அவற்றை நெல் பயிர் உற்பத்தி பெருக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, நெற்பயிர் புயல் காலங்களில் பெருமளவில் நீர் புகுவதினால் பயிர்கள் நிலத்திலே மூழ்கி மடிகின்றன. நெல் ஜீனோம் திட்டத்தின் விளைவால், நீரினால் மூழ்கடிப்பட்ட நிலையிலும் செழித்து வளர காரணமாகும் ஜீன்கள் நெல்லில் கண்டறியப்பட்டு அவை குளோனிங் செய்து உறுதிசெய்ப்பட்டதன் விளைவால் இன்று புயல் காலங்களிலும் தங்கி வளரும் (subermergence tolerance) நெல் ரகங்களை உருவாக்கப்பட்டுள்ளன. இதுபோல், வறட்சி, உப்பு நிலம், குளிர் பிரதேசம் என அனைத்து வகையான நில பரப்பிற்கும், தட்பவெப்ப நிலைகளுக்கும் ஏற்றவாறான நெல் ரகங்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில், பெரும்பான்மையானவற்றில் சாதித்தும் காட்டியுள்ளனர் தற்காலத்து விஞ்ஞானிகள். தற்போதைய காலசூழலில், உலகளவில் வேளாண் செய்ய தேவையான நிலப்பரப்பு குறைந்துகொண்டே வருகிறது. ஆனால் மக்கள் தொகை பல மடக்கில் பெருகிக்கொண்டே வருகிறது. 2050-ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 9.7 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. இது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய உணவு பஞ்ச அச்சுறுத்தலாக இருக்கிறது.
மரபணு மாற்று முறையில் (Transgenic) புதிய நெல் ரகங்களை உருவாக்குவது சாத்தியம் எனினும், அவற்றை வேளாண் செய்வதில் என்ற சட்ட சிக்கல்கள் மற்றும் இயற்கை நெறி சிதைவு என பல விளைவுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஆகவே, தற்போது இதற்கான தீர்வை இயற்கை முறையில் பெற முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றனர். அதாவது, உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நெல் ரகங்களை (major accessions) ஜீனோம் வரிசையாக்கம் (whole genome sequencing) செய்து, அவைகளை முறையாக ஒப்பீடு செய்து (comparative genomics), ஒவ்வொரு நெல் ரகத்தின் தனித்துவமான பண்புகளுக்கான மரபு காரணிகளை (genetic variations) கண்டறிந்து அவற்றை பயன்படுத்தி உலகின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தியை பெருக்குவதே இதன் குறிக்கோளாகும். தற்போது, இந்த முயற்சி அரிசோனா ஜீனோம் ஆராய்ச்சி கூடத்தில் (Arizona Genome Institute, USA) இருக்கும் ராட் விங் (Rod wing) தலைமையில், பல்வேறு நாடுகளின் கூட்டமைப்பில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
மேலும் இத்தகைய ஆராய்ச்சிகளால், நெல்லின் பரிணாம வளர்ச்சி (evolution), வேளாண்மையிர்பயன்படுத்துதல் (domestication) குறித்த தகவல்களையும் பெற முடிகிறது. இதன் மூலம் நெல்லின் உடலியல் செயல் (physiological responses) மற்றும் தோற்றவகைமைக்கான (phenotype) மரபியல் காரணிகளையும் கண்டறிந்து அதன் மூலம் பல்வேறு மேம்பட்ட நெல் ரகங்களை, உதாரணமாக சர்க்கரை குறைவான, வைட்டமின் மற்றும் புரதம் நிறைந்த மற்றும் தற்கால வாழ்க்கை முறைக்கேற்ப உகந்த நெல் ரகங்களை உருவாக்கி மனிதனுக்கு தேவையான உணவை பெற வழி செய்கிறது. இத்தகைய முயற்சிகளின் வெற்றி நெல் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி தற்கால மனித வாழ்க்கைக்கும் மிக முக்கியமான ஒன்று என்பதற்கு மாற்று கருத்து இல்லை என்ற கூறவேண்டும் !!!.
இந்த இதழை மேலும்
Share

March 2018




















No comments
Be the first one to leave a comment.