Home » Articles » கரியடுப்பிலிருந்து கணினி வரை

 
கரியடுப்பிலிருந்து கணினி வரை


வாஞ்சிநாதன் வீ
Author:

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்கிற உண்மை தான். அதே நேரத்தில் ஒவ்வோரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் நிற்கிற பெண்ணின் மனம் ஏன்  தனது வெற்றிக்குப் பின்னாலும் நிற்க்க் கூடாது என்கிற கேள்வியை எழுப்பிப் பார்த்த பெண்கள் தான் இன்றைக்கு பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள்.  கரியடுப்பில் தொடங்கிய பெண்களின் வாழ்க்கை பயணம் இன்று கணினி வரை வருவதற்கு அவர்கள் அரும்பாடுபட்டிருக்கிறார்கள். கணினி,சாலை போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, விளையாட்டு, விண்வெளி, கலை ,இலக்கியம், மருத்துவம் ,தத்துவம், கல்வி ,சட்டம் என இன்றைக்கு பெண்கள் பங்களிப்பு இல்லாத துறை என்றெதுவும் இல்லை. ஆண்களால் மட்டுமே முடியும் என்பதையெல்லாம் உடைத்தெறிந்து இந்த அரியச் சாதனைகளையெல்லாம்  படைப்பதற்கு அவர்கள் கடந்து வந்த பாதைகளில் சந்தித்த போராட்டங்களும் வலிகளும் ஏராளம்.

ஆணாதிக்கச் சிந்தனையாலும், சமூக மூட நம்பிக்கைகளாலும் மறுக்கப்பட்ட கல்வியை கற்பதற்கு அவர்கள் சந்தித்த போராட்டங்கள், பாலியல் தொல்லைகள் , அழகு பொருளாக மட்டுமே பெண்ணை பாவித்து அடிமையாக்கப்பட்ட அவலங்கள் என்று நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒவ்வொரு  ஆணும் பிறப்பிலிருந்து தான் கடந்து வந்த பெண்களை எண்ணிப் பார்த்தாலே அவர்கள் பேராற்றல் இருந்தும் கூட அளவற்ற சகிப்புத் தன்மையோடு அளப்பரிய தியாகத்தையும் செய்துள்ளார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

கரியடுப்பிலும் விறகடுப்பிலும் ஊதுகுழலை ஊதி ஊதி நெருப்பை பற்ற வைத்து கண்ணிர் சிந்த வியர்வை சிந்த அந்த வெக்கைக்குள்ளேயே தன் வாழ்நாளை கழித்துக் கொண்ட அம்மாக்களை நாம் எண்ணிப் பார்த்ததுண்டா ? பின் தூங்கி முன் எழுந்து தன் குடும்பத்தை கட்டிக்காத்த அந்த அம்மாக்களுக்கு ஆற்றல் இல்லை என சொல்லுதல் அறமாகுமா? அந்த அம்மாக்களின் ஆசையை என்றாவது ஒரு நாள் நாம் எண்ணிப் பார்த்ததுண்டா?

பிறந்த வீட்டில் மகாராணி போல் வலம் வந்துவிட்டு புகுந்தவீடு சென்றவுடனே ஒரு செவிலிப் பெண்ணைப் போல் சேவை செய்து கொண்டு புகுந்த வீட்டின் அத்தனை உறவுகளையும் பேணிக் காத்துக் கொண்டு இருந்த போதும் கூட தன் கணவனோடு இருக்கிற புகைப்படத்தில் தன் கணவன் அமர்ந்திருக்க தான் நின்று கொண்டு சிரிக்கும் அக்காக்களின் மனதில் உள்ள வலியை உணரந்த்துண்டா? அந்த அக்காக்களுக்கு ஆற்றலில்லை என்று சொல்லுதல் அறமாகுமா? அவர்களுடைய ஆசைகள் புதைந்து போனதெங்கே என்று அகழ்வாராய்ச்சி செய்த துண்டா ?

திருமணம் முடித்த பின்பு பிள்ளைகளை மட்டும் வரிசையாய் பெற்றுவிட்டு வெளிநாடு சென்ற கணவன் தன் பிள்ளைகளின் திருமணத்திற்கு தான் திரும்பி வருவான் எனத் தெரிந்தும் தனியாளாய் பிள்ளைகளை போற்றி வளர்த்த துணிச்சலும் பாசமும்  மிகுந்த பெண்கள் நம் அத்தையாகவோ, சித்தியாகவோ, ஏதோ ஒரு உறவுகளாய் இருந்திருக்கக்கூடும். பார்த்ததுண்டா? அப்படிப் பட்ட அத்தைகளாய்,சித்திகளாய் வலம் வந்த பெண்கள் ஆற்றல் இல்லாதிருந்தார்கள் என்பது அறமாகுமா?  அவர்களின் ஆசைகள் ஏன் நாடு கடத்தப்பட்டன ?

தன் கணவனின் வெற்றிக்காக அத்தனை நகைகளையும் கழற்றிக் கொடுத்துவிட்டு மிஞ்சியிருப்பது மிஞ்சி தான் என்று தன் கணவனின் வெற்றியையே தனது வெற்றியாகக் கருதிக் கொண்ட அந்த மனைவிகளுக்கென்று தனித்த ஆசை தனியாத ஆசை இல்லாமலா  போயிருக்கும். இப்படி நம் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் பேராற்றல் மிக்கப் பெண்களை நாம் கடந்து தான் வந்திருக்கிறோம். ஆனாலும் அவரகளின் முன்னேற்றத்திற்கு தடையாய் இருந்த பல காரணிகளை உடைத்தெறிந்து ஊக்கம் பெற்று கல்வியிலும் நிர்வாகத்திலும் சிறந்து விளங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னமும் கூட அவர்கள் உடைத்தெறிய வேண்டிய தடைகள் நிறைய உள்ளன.

புகைப்படத்தில் கூட கணவன் அருகில் பெண் அமரக்கூடாது என்கிற அடிமைத்தனம் இருந்த காலத்திலேயே , பாரதி தான் நின்று கொண்டு தன் மனைவி செல்லம்மாளை அமரவைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம் என்றும்

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண்

இளைப்பில்லை காணென்று கும்மியடி என்றும் ஓங்கிக் குரல் கொடுத்தான் பாரதி.

ஆக, தன் முன்னால் நின்ற தடைகளையெல்லாம் தகர்த்தெறிந்து வெற்றிக்கணி பறித்த பெண்களை பாரட்டுகிற அதே நேரத்தில்  இன்னமும் அவர்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிற அனைத்து மூடநம்பிக்கைகளயும் கடந்து வெளிவர வேண்டும். பெரியார் சொல்வது போல தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் அதீத அக்கறை காட்டுவதை விடுத்து தோற்றப் பொலிவிற்கான அளவில் மட்டுமே அதனை செய்து கொண்டு தான் அழகு பொம்மைகள் அல்ல ,அறிவாற்றல் மிகுந்தவர்கள் என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும்.

அழகு, அறிவு, ஆற்றல் என்கிற வரிசை அறிவு, ஆற்றல,, பிற்பாடே அழகு என்கிற வரிசையில் வாழ்க்கையில் வெற்றிநடை போடவேண்டும். அவர்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளை தாண்டியும் பல்வேறு இலக்கியம், வரலாறு, தத்துவம், பொருளாதாரம் என பல நூல்களையும் கற்க முனையவேண்டும் இன்றைக்கு இப்படி எல்லாத்துறையிலும் தங்கள் கொடியை பறக்கவிடுகிற பெண்கள் தான் நாளைய நம்பிக்கை நட்சத்திரங்கள. பெண்கள் தன் லட்சியப் பயணத்தில் எதிர்கொள்கிற தோல்விகளை தோல்விகளாக கருதாமல்

தோல்விகள் ஓவ்வோன்றும் நம் தோளுக்கு மாலையாக வந்து சேரும் உதிரிப்பூக்கள். தொடுத்து மாலையாக்குவோம் வெற்றி மாலையாக்குவோம். இனி நம் விழி திரும்பும் திசையெல்லாம் விழா எடுக்கும் உலகம் என்ற சிந்தனையோடு  மேன்மேலும் வெற்றிகள் பெற ,வானளாவிய புகழ் பெற அனைத்து பெண்களுக்கும் எனது மனமகிழ்ந்த மகளிர்தின வாழ்த்துகள்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2018

உயர்வுக்கு மூலதனம் தன்னம்பிக்கை…
வரலாற்றில் ஓளிவீசும் தைரியத் திலகங்கள்
மனிதர் புனிதர்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 11)
ஆயுளைக் கூட்டும் உணவுகள்
உள்ளத்திலே உள்ளது உலகம்
முயன்றேன் வென்றேன்
முயற்சியே முன்னேற்றம்
கரியடுப்பிலிருந்து கணினி வரை
இளைஞனால் முடியாதது உண்டா? மனிதனால் முடியாதது உண்டா?
தீக்காயம்
விடியலை நோக்கும் மண்ணின் விதைகள்
வாழ நினைத்தால் வாழலாம்- 14
வெற்றி உங்கள் கையில்
பாயும் ஆறு
பெண் இனத்தின் பெருமை பெண்மணிகள்
என்று மடியும் பெண்ணடிமை?
தன்னம்பிக்கை மேடை
மனதின் மலர்ச்சி! மாற்றத்தின் வளர்ச்சி!!
உள்ளத்தோடு உள்ளம்