Home » Articles » இளைஞனால் முடியாதது உண்டா? மனிதனால் முடியாதது உண்டா?

 
இளைஞனால் முடியாதது உண்டா? மனிதனால் முடியாதது உண்டா?


செல்வராஜ் P.S.K
Author:

இந்திய இளைஞர்களே செய் அல்லது செய்துகொண்டே இரு

இது தான் வெற்றியின் தத்துவம். சாதனையின் மகத்துவம்.

சமுதாயம் உன்னைக் கொடுமைப்படுத்தினாலும் இந்த உலகத்திற்கு நன்மையை மட்டுமே செய்.

புலன்களை அடக்கு அதுவே உனக்கு அதிக பலன்களைக் கொடுக்கும்.

உலகம் உன்னை முட்டாள் பைத்தியக்காரன் என்றெல்லாம் சொல்லும். சொன்னாலும் உன் கொள்கையை உன் இலட்சியத்தைச்  சொல்கிறார்கள் என்பதற்காக மாற்றிக் கொள்ளாதே.

தாமஸ் ஆல்வா எடிசன் உலகிற்கு பெரிதும் பயன்படக்கூடிய மின்சாரப் பல்பைக் கண்டுபிடிக்கும் போதும், கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க பயணம் மேற் கொண்ட போதும், பில் கிளிண்டன் சிறுவனாக இருக்கையில் அன்றைய அமெரிக்க அதிபர் கென்னடியைப் பார்த்தபொழுது உங்களைப் போல் நானும் ஒருநாள் அமெரிக்க அதிபராவேன் என்று சொன்னபோதும், குக்லிமோ மார்கோனி ரேடியோவைக் கண்டுபிடிக்க முயன்றபோதும், ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாக வேண்டும் என்று எண்ணியபோதும், குற்றாலீஸ்வரன் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோதும் இந்த உலகம் அவர்களை கேலியும் கிண்டலுமாக பைத்தியக்காரன் முட்டாள் என்றெல்லாம் சொன்னார்கள். சொன்ன இந்த உலகமே இவர்களது சாதனையைக் கண்டு, இன்று இவர்களைப் பார்த்து வாயைப் பிளந்து வியந்து கொண்டிருக்கிறது.

உலகம் எதை எதையோ வேண்டாததை சொல்கிறதென்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, தனது இலட்சியத்தை மேற்கண்டவர்கள் விட்டு விட்டிருந்தார்கள் என்றால் வியத்தகு பெரிய சாதனைகளை அன்று செய்திருக்க முடியுமா?

அனைவரும் பாராட்டித் துதிக்கும் வகையில் தனக்கென்று ஒரு சரித்திரத்தை படைத்திருக்க முடியுமா?

நினைப்பதைச் செய், செய்வதைச் செய், நினைப்பது நடக்கும். நடப்பது நடக்கும்.

நடப்பதும் நடந்ததும், நடக்கப்போவதும், எல்லாம் உன் நன்மைக்காகவே.

கொள்கையில் வீரனாய் இருந்து விடு, உன்கொள்கையின் கதவுகளைத் திறந்திடு, சிந்தித்தது போதும் செயல்படு.

இதுவா இளைஞர் சமுதாயம்?

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகையில் கோவை சிறைத்துறை உயர் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் சிறையில் உள்ளவர்களில் 90 சதவிகிதம் பேர் இளைஞர்கள்.

இன்டர்நெட்டில் ஆபாச வலைதளங்களின் பிடியில் ஒரு பகுதியினர், அரசியல்வாதிகளின் நாட்டிற்கு வேண்டாத செயலைச் செய்ய ஒரு குரூப், காதல் காதல் என்று படிக்கின்ற காலத்திலேயே பைத்தியக்காரர்களாய்த் திரிகின்றனர். மேலும் ரசிகர் மன்றம் என்ற பெயரில் நடிகையை துதிப்பதற்கென்று ஒரு பகுதியினர். இப்படி சரியான கொள்கையில்லா இளைஞர்கள் இந்தியாவில் என்றும் அதிகம்.

இந்தியாவின் வளர்ச்சிக்குத் தடையாக இப்படியிருக்கும் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியின் விரோதச் செயல்களை மாற்றித்திருத்தும் சினிமா, தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் இளைஞர்களது மனதில் காதல்,  காமம், வன்முறை போன்ற செயல்களை மிகவும் நன்றாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

கொண்ட கொள்கையில் இன்னல்கள் வரும்பொழுது கொள்கையை விட்டுவிடும் விடாமுயற்சி இல்லாதவர்கள் இளைஞர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மனிதன் என்பதற்குப் பொருள் அனைத்து, விசயங்களையும் அலசி ஆராய்ந்து, நன்மை தீமை எதுவென்று உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் மனிதன் என்பதை தெரிந்தறிய வேண்டும்.

உலகில் உயர்ந்த உயிரினம் மனிதனே

மற்ற உயிரினங்களை எடுத்துக் கொள்ளுங்கள் ஆயிரமாயிரம் வருடங்களுக்கு முன்பு அவை தோன்றிய பொழுது எப்படி இருந்தனவோ அனைத்திலும் அப்படியேதான் இன்றும் இருக்கின்றன.

ஆனால் மனிதன் மட்டும் அப்படியல்ல. 500 வருடங்களுக்கு முன் இருந்ததை விட மனிதன், கல்வி, மருத்துவம், சமூக அறிவு, விளையாட்டு, விஞ்ஞானம், போக்குவரத்து, நாகரீகம், தகவல் தொடர்பு, கணிதம், தமிழ், தொழில், வணிகம், அரசியல், அழகியல், இலக்கணம், இலக்கியம், உற்பத்தி, எதிலும் விழிப்புணர்ச்சி, பாலின கல்வியில் தெளிவு, பத்திரிக்கை, சினிமா, சட்டம், அனைத்திலும் அபிவிருத்தி என்று போன்றவற்றில் எல்லாம் வியக்கத்தக்க வகையில் எவ்வளவோ முன்னேறியிருக்கிறான்.

அன்று எங்கு சென்றாலும் நடை பயணமாகவே சென்ற மனிதன், தன் சிந்தனையாலும், அந்த சிந்தனை செயல்  ஆனதாலும் இன்று கப்பல், ரயில், விமானம், கார், பஸ் மற்றும் பல சொகுசு வாகனங்களில் உலகை இன்று வலம் வருகின்றான்.

திரி விளக்கில் அன்று இருட்டை விரட்டியவன் இன்று படிப்படியாக உயர்ந்து மின்சாரத்தால் உலகில் எங்கும் உள்ள இருட்டை அகற்றுகிறான்.

அன்று சிக்கிமுக்கிக் கல்லில் சிதறிய நெருப்பை குளிர் காயவும், சமைக்கவும் பயன்படுத்தி வந்த மனிதன் இன்று மின்சார அடுப்பு, எரிவாயு அடுப்பு, சூரிய வெப்ப அடுப்பு போன்றவற்றை உணவு சமைக்கப் பயன்படுத்துகிறான்.

அன்று தகவல் தொடர்பில் தூது செல்ல புறாவை மட்டுமே பயன்படுத்தியவன் இன்றோ இமயமலைபோல் உயர்ந்து பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், புத்தகங்கள், பாடல்கள், மேடைப்பேச்சுகள், வாட்ஸ்அப், செல்போன், இன்டர்நெட், Facebook, Twitter, SMS, மின்னஞ்சல் வழி என பல வகையாகவும், பல வழிகளிலும் தகவல்களைப் பரப்பி வருகிறான்.

முன்பு ஓலைச் சுவடியில் ஆணியில் மற்றும் தரையில் மணலில் தன் விரல்களினால் எழுதிக் கொண்டிருந்தவன் இன்று எப்படியெல்லாம் எழுதுகிறான் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

தெருக்கூத்து, நாடகம் போன்றவற்றை பொழுதுபோக்கிற்காக வைத்திருந்தவன், சீ.டி. பென்ரைவ், 4G, 5G, Android, ஹோம்தியேட்டர், போன்றவற்றின் மூலமாக உலகை வீட்டிற்குள்ளேயே கொண்டு வந்து ரசித்து மகிழ்கிறான்.

குருகுலக் கல்வி முறை, திண்ணைப் பள்ளி போன்றவற்றை கல்வி முறையாக வைத்துப் படித்துக் கற்று வந்தவன் இன்றோ, மருத்துவம், தொழில், சட்டம், பத்திரிகை, வரலாறு, அறிவியல், புவியியல், பொறியியல், பொருளாதாரம் உடற்கல்வி, விளையாட்டு என பலவாறாக பிரித்து அனைத்துத் துறைக் கல்வியையும் எளிதாக, எளிதான முறையில் கற்று வருகிறான்.

வானத்தை அதிசயமாகப் பார்த்துக்  கொண்டிருந்தவன் இப்பொழுது விண்வெளிக்குச் சுற்றுலா சென்று வருகிறான். ராக்கெட் மற்றும் ஏவுகணை தயாரித்து விண்வெளிக்குக் குறிப்பிட்ட இடத்திற்குச் செலுத்தி இமாலய சாதனை படைத்துவிட்டான்.

இயற்கை காற்று இல்லாத இடத்தில் காற்றாடி மூலம் செயற்கைக் காற்றை விசுவிசுவென்று வரவழைத்துக் கொண்டான்.

செயற்கை குளிர்சாதனக் கருவியை பயன்படுத்தி மனிதன் இருக்கும் அத்தனை இடங்களையும் குளிர்விக்கிறான்.

உலக வெப்பத்தை தன் அறைக்குள் இருக்க விடாமல் அடியோடு அகற்றுகிறான்…

அன்று முதல் இன்று வரை உலகில் நடந்த அனைத்து முன்னேற்றங்களையும் வைத்து ஆராய்ந்த பொழுதுதான் தெரிகிறது மனிதனாலும் இளைஞனாலும் உலகில் முடியாதது எதுவும் இல்லை என்பது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2018

உயர்வுக்கு மூலதனம் தன்னம்பிக்கை…
வரலாற்றில் ஓளிவீசும் தைரியத் திலகங்கள்
மனிதர் புனிதர்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 11)
ஆயுளைக் கூட்டும் உணவுகள்
உள்ளத்திலே உள்ளது உலகம்
முயன்றேன் வென்றேன்
முயற்சியே முன்னேற்றம்
கரியடுப்பிலிருந்து கணினி வரை
இளைஞனால் முடியாதது உண்டா? மனிதனால் முடியாதது உண்டா?
தீக்காயம்
விடியலை நோக்கும் மண்ணின் விதைகள்
வாழ நினைத்தால் வாழலாம்- 14
வெற்றி உங்கள் கையில்
பாயும் ஆறு
பெண் இனத்தின் பெருமை பெண்மணிகள்
என்று மடியும் பெண்ணடிமை?
தன்னம்பிக்கை மேடை
மனதின் மலர்ச்சி! மாற்றத்தின் வளர்ச்சி!!
உள்ளத்தோடு உள்ளம்