Home » 2018 » March (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  தீக்காயம்

  ஆபத்தான தீக்காயங்களிருந்து சிறிய தீக்காயங்களை வேறுபடுத்த முதலில் உடல்திசுக்களைத் தீக்காயம் எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதை அறிய வேண்டும். தீக்காயத்தை முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை தீக்காயங்களாகப் பிரிக்கலாம்.

  முதல் நிலை தீக்காயம்

  தோலின் மேல்புறம் (epidermic) மட்டுமே பாதிப் படைவதால் அதிக ஆபத்தில்லாதது. தோல் சிவப்பாகவும், வீக்கமாகவும், சிலநேரத்தில் வலியுடனும் இருக்கும் தீக்காயம். கைகளிலோ, பாதங்களிலோ, முகத்திலோ, பின்புறத்திலோ, வேறு முக்கியமான இடங்களிலோ பரவாமல் இருந்தால் சாதாரண சிகிச்சை செய்வதுடன் குணமாக்கலாம். இல்லையெனில் உடனடி மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.

  இரண்டாம் நிலை தீக்காயம்

  தோலின் முதல் அடுக்கு முழுவதுமாக எரிந்தும், இரண்டாம் அடுக்குத் (dermis) தோலும் எரிந்தால் இரண்டாம் நிலை தீக்காயமாகும்.

  • தோலில் கொப்புளங்கள் ஏற்படும்.
  • தோல் மிகவும் சிவப்பானதாகவும், வலியுடன் வீக்கமும் இருக்கும்.

  இரண்டாம் நிலை தீக்காயம் 3 இஞ்ச் அளவுக்கு குறைந்ததாக இருந்தால் அதை சிறிய தீக்காயமாகவே நினைத்து சிகிச்சை அளித்தால் போதுமானது. அளவில் 3 இஞ்ச்க்கு அதிகமானதாக இருந்தாலும், முகம், கை, கால், பின்புறம் போன்ற முக்கியமான இடங்களில் பரவி யிருந்தாலும் உடனடி மருத்துவ வசதியை அணுகுவது அவசியம்.

  சிறிய தீக்காயங்களைக் குணப்படுத்த

  (முதல் நிலை, சிறிய இரண்டாம் நிலை தீக்காயம்)

  தீக்காயத்தைக் குளுமைப்படுத்த வேண்டும்

  தீக்காயம் பட்ட இடத்தைக் குளுமையான ஓடும் தண்ணீரில் நனைக்க வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் அல்லது வலி குறையும் வரையில் வைத்திருக்கலாம். இவ்வாறு குளுமையான தண்ணீரில் வைத்தால் தோலிருந்து வெப்பம் வெளியேறி வீக்கம் குறையும். தீக்காயத்தின் மேல் ஐஸ் கட்டியை வைக்கக்கூடாது.

  இந்த இதழை மேலும்

  விடியலை நோக்கும் மண்ணின் விதைகள்

  “உயிர் கொடுத்து

  உதிரம் கொடுத்து

  பெற்றெடுத்து காத்து

  நிற்கும் பெண்மை..!

  விதைத்த இடத்தில்

  மரமாய் நிற்கின்றதோ?

  பேதை மகள் பெற்ற உறவு”

  உதிரம் கொடுத்தவள் தேடும் பெரும் புதையல் ஒன்று தான். தன் திறன் என்ன? தன்னால் இயன்றது என்ன? தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் என்ன? விடியல் என்று வரும்?

  காலம் எவருக்கும் சில தடைகளை விதிக்கும். விடியலிற்கும் ஒரு தடை விதித்தது. அது தான் இருட்காலம். பலருக்கு நாம் எதில் சிறந்தவர் என்று கூற தெரிவது இல்லை. இது தான் அவர்களுட்கு காலம் விதித்த தடை. தடையை உடைக்கும் தன்மை எளிதில் கிட்டாது. சிலருக்கு இளம் வயதிலேலோ வரும். சிலருக்கு நாற்பது வயதில் வரும். பலருக்கு வராமலே போகும்.

  அமேசான் காடுகளுக்குள் புக முடியாத விடியல் போல் இறுதிவரை அவர்கள் எதில் சிறந்தவர் என்று அறிய முடியாது. விடியலை நோக்கி மண்ணில் புதைந்துள்ள விதைகளிலிருந்து, வயிற்றில் துள்ளும் மழலை வரை துடிக்கும். பலகாலம் தொட்டு பல பெண்கள் அடுபங்கரையில் அமர்ந்து விடியலை எண்ணித் துடித்தனர். பெண்கள் சமைக்கவே பிறந்தவர்கள் என்று எண்ணும் பெரும் ஆண் மக்கள் வாழும் பூமியில் நாட்டையே ஆண்ட பெண்மணிகள் பலர் வாழ்ந்தனர். நாட்டிற்கு விடி விளக்காய் பலரும் திகழ்கின்றனர்.

  “விட்டு கொடு

  விடிவெள்ளியாய்

  வலைய வருவாய்”

  பலரும் பல சூழ்நிலைகளில் தங்கள் திறமைகளை தைரியமாக எடுத்துக் கூறும் வல்லைமையை தாய்மார்கள் தரும் ஊக்கத்தில் தான் வளர்கின்றது. அவ்வாறு இருக்கையில் இன்று பல பெண்கள் என்று விடியல் வரும் என்று எதிர் பார்த்து காத்திருக்கின்றனர். பலருக்கு விடிவிளக்காய் திகழும் பகலன் விடியலை இருளில் தேடுவது போல், பெண்கள் இன்று விடியலை நாடுகின்றனர். என்றுமே விட்டு கொடுத்து மட்டுமே வாழும் மங்கையர் உலகம் பெரும் பரப்பைக் கொண்டது. அது பசும்பிக் பெருங்கடல் ஆழ்குழியை விட பெரியது. அதில் உரைந்திருக்கும் சிந்தனைகள், கவலைகள், சுகங்கள், நிகழ்வுகள் என்று எவ்விதக் கருத்துகளையும் அறியமுடியாது. முன்னேற்றத்தை நாடும் உலகம், எழுந்து நிற்க துடித்தும் பெண்களின் விடியலை தடுத்து மறைத்து நிற்கின்றதோ?. நதி முதல் இறைவன் வரை பெண்கள் வைத்து வணங்கும் நாடு அவர்களது விடியலை முன்னிறுத்துவது இல்லை ஏன்? எழுந்து நிற்கும் பெண்களை அடித்து நொறுக்குவது ஏன்? அவர்கள் வளரும் முன்பே ஆழ்குழிக்குள் முடுக்குவது ஏன்?

  இந்த இதழை மேலும்

  வாழ நினைத்தால் வாழலாம்- 14

  பூவையர்

  வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

  தன்னம்பிக்கை வாசகர் ஒருவர் “நன்றி”யை பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையில் பெண்களைப்பற்றி ஒரு வார்த்தைகூட இல்லையே? என்று என்னிடம் கேட்டார்.  நான் சொன்னேன் “நன்றி” என்ற ஒரு வார்த்தைக்குள் அடைக்கப்படும் அணுவல்ல பெண்.  அதிகாரத்துக்கும் அபரிமிதமான அதிகாரம்.  அகராதிக்கும் அப்பாற்பட்ட அகராதி.  அவர்களை பற்றி எழுத முற்பட்டால் பக்கங்கள் பத்தாது – இருந்தும் முயல்கிறேன்” என்று முடித்தேன்.

  “பெண்கள் நாட்டின் கண்கள்” எனும் பெருமை வாசகம், “பாரத மாதா” என்று தாய்க்கும் மேலான கவுரவம், நதிகளுக்கு பெண்களின் பெயரை சூட்டி பெருமிதம், “சக்தி இல்லையேல் சிவம் இல்லை” என்று பிரபஞ்ச சக்திக்கே பெருமை சேர்க்கும் பண்பு – இப்படி சில வரிகளில் சிக்கனமாக முடிக்கப்பட்ட பெண்களின் பங்களிப்பு, அவர்களின்மீது முழுமையான வெளிச்சத்தை இன்னும் வீசவில்லை என்பதே எதார்த்த உண்மை.

  “படைத்தலுக்கும், அழித்தலுக்கும் விதைப்புள்ளியாய் இருப்பவள்” – என்று பக்திக்காவியங்கள் பறைசாற்றுவது பெண்களைத்தான்.

  ஆனைமுகனின் அவதாரமாகட்டும், அழகு கந்தனின் வெற்றிகளாகட்டும் – பின்புலமாய் இருந்து இயக்கியது பார்வதிதேவி என்று புராணம் சொல்கிறது.

  கொடுமைகளையும், கொடியவர்களையும் அழிக்க புறப்பட்ட ஆதிசக்தி – பராசக்தி என்று ஆன்மீக உலகம் அடிக்கோடிட்டு காட்டுகின்றது.

  அக்கினியை மட்டுமல்ல, அன்பையும் வர்ஷிக்கும் நெஞ்சம் என்று சொல்லி – “அமாவாசை அன்று முழுநிலவை முன் நிறுத்துவாள், தன் பக்தனின் பரவசமான பக்திக்கு பலனாக – என்று அவள் பாசத்தின் பக்கங்களை படிக்க சொல்கிறது அனுபவங்கள்.

  நம்ப மறுக்கும் நாத்திகவாதிகளின் சிந்தையில் நங்கூரம் போடும் விதமாக – வள்ளுவனின் குரலுக்கு வாசுகி ஓடிவந்த போது தண்ணீர் குடம் அந்தரத்தில் நின்றது, என்று வாசுகியின் கற்ப்புக்கு கவுரவம் கொடுத்தது ஒரு வரலாற்று பதிவு.

  ஆம்.  வள்ளுவனின் “குரலுக்கு” மட்டுமல்ல அவன் “குறளுக்கும்” பெருமை சேர்த்தது வாசுகி எனும் பெண் என்பதை மடையறும் மறுக்கமாட்டார்கள்.

  பெண் இந்த பிரபஞ்சத்தின் பெருங்கொடை.

  சிவாஜியை “வீர சிவாஜி” என்று உலகம் பாராட்டும்படி உருவாக்கிய பெருமை – அவனை பெற்ற அன்னைக்கு உண்டு.

  அன்பை போதித்த வள்ளலார், வீரத்தையும், பெண் விடுதலையையும் போதித்த பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி, ஓங்காரத்தில் இருக்குது ரீங்காரம் என்று ஓங்கி ஒலித்த ஓஷோ – இவர்களின் புகழ் பூக்களில் மகிழ்ச்சி மணமாக இருப்பது அவர்களின் தாயின் ஆனந்தக்கண்ணீர் தான்.

  “Behind Every Successful Man – there is a Women”  – என்பதை உலகமே ஒப்புக்கொள்ள காரணம், எல்லா நாட்டிலும், வெற்றியாளனையும், சாதனையாளனையும் உருவாகியது ஒரு பெண் தான்.

  தாயாக, தாரமாக, சகோதரியாக, மூதாட்டியாக – அரிதாரம் பூசாத அவதாரமாக பலரின் வாழ்விலும்.

  இந்த இதழை மேலும்

  வெற்றி உங்கள் கையில்

  பலமா? பலவீனமா?

  நான் ஒன்றுக்கும் உதவாதவன். 

  என்னால் எப்போதுமே வெற்றி பெற முடியாது.

  என் உடலில் பல குறைகள் இருக்கின்றன.

  உடல் ஊனமுற்ற என்னால் எப்படி சாதிக்க முடியும்?

  – இவ்வாறு  பல்வேறு “பலம்” (Strength) இழந்த கூக்குரல்களை நாம் கேட்கலாம்.

  “என்னால் முடியாது” என்று முழுவதுமாக செயலைச் செய்ய மறுப்பவர்களும் உண்டு.

  உடலில் ஊனம். அப்பா இல்லை. அம்மா இறந்துவிட்டாள். உழைக்க வழியில்லை. இந்தச் சூழலில் கூட உயிர்வாழ விரும்பி பிழைக்க வழிதேடி ‘அநாதை’ முத்திரையோடு அலைபவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள்.

  ஆனால், அதேவேளையில் கை, கால்கள் திடமாக இருக்கிறது. கண், காது, மூக்கு, வாய் – என்ற முக்கிய உறுப்புகளும் நலமாக இருக்கிறது. உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அன்பான அப்பா. ஆதரவுதந்து அரவணைக்கும் அம்மா. உரிமையோடு அன்புகாட்டும் அக்கா, தங்கை. உண்மையான உறவை வெளிப்படுத்தும் பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சித்தி, அத்தை, மாமா – என நெருங்கிய உறவுகள், உதவும் ஊர்க்காரர்கள். இப்படி எத்தனையோ உறவுகள் இருந்தும், ‘தற்கொலை’ செய்து வாழ்வை முடித்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

  இந்த உலகில் இனிமையாக வாழ்வதற்குக் கிடைத்த அற்புதமான வரத்தை சாபமாக மாற்றி, உயிரைத் தானாகவே மாய்த்துக்கொள்வது வேதனையை விளைவிக்கும் செயல் அல்லவா?

  தன்னிடமுள்ள பலங்களை அறியாதவர்கள்தான், தங்கள் பலவீனங்களை நாள்தோறும் நினைத்து வருந்தி சோகக்குழிக்குள் புதைந்துபோகிறார்கள்.

  ஜப்பான் நாட்டில் நடந்ந ஒரு உண்மைச் சம்பவம் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

  அவன் ஒரு ஊனமுற்ற சிறுவன். சுமார் 10 வயது நிரம்பியவன். இடது கை அவனுக்குக் கிடையாது.

  இளம்வயதிலேயே அவனுக்கு ஒரு விசித்திரமான ஆசை இருந்தது.

  “எப்படியாவது நான் ஒரு ஜூடோ சாம்பியனாக மாற வேண்டும்” – என நினைத்தான்..

  தனது எண்ணத்தை சிலரிடம் சொன்னான்.

  “ஒரு கை இல்லாத சிறுவனால் எப்படி ஜூடோவில் சிறந்து விளங்க முடியும்?” – என அவர்கள் சிரித்தார்கள்.

  சில ஜூடோ மாஸ்டர்களை நேரில் சந்தித்து அவன் தனது விருப்பத்தைச் சொன்னான். “உனக்கே கை இல்லை. ஜூடோவுக்கு முக்கியமே கைதான். இடது கை இல்லாத உன்னால் எப்படி வெற்றி பெற முடியும்?” என்றுசொல்லி அவர்களும் அவனை மேலும் பலவீனப்படுத்தினார்கள்.

  சிறுவன் அவனது தன்னம்பிக்கையை தளரவிடவில்லை. மீண்டும் சில ஜூடோ மாஸ்டர்களிடம் நேரில் சென்று தனது எதிர்காலக் குறிக்கோளைத் தெரிவித்தான்.

  ஜூடோ மாஸ்டர்களில் சிலர் கோபப்பட்டார்கள். எரிச்சல்பட்டார்கள். முடிவில், ஒரு ஜூடோ மாஸ்டர் அவனுக்கு உதவினார்.

  ஜூடோ பயிற்சி ஆரம்பமானது. தினந்தோறும் அவனுக்கு பயிற்சி வழங்கினார் ஜூடோ மாஸ்டர்.

  வாரங்கள், மாதங்களாகி ஆண்டாக மாறியது. ஆனால், ஓராண்டு முடிந்தபின்பும் ஒரே ஒரு தாக்குதல் பயிற்சியை மட்டுமே சிறுவனுக்கு கற்றுத் தந்திருந்தார் மாஸ்டர். வேறு எந்தவித யுக்தியையும் அவனுக்கு மாஸ்டர் கற்றுத்தரவில்லை.

  சிறுவனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

  “ஒரு வருடமாக பயிற்சி செய்தபின்பும், எனக்கு ஒரே ஒரு தாக்குதல் முறையை மட்டும் மாஸ்டர் கற்றுத் தந்திருக்கிறார். இந்தத் தாக்குதல் முறையை மட்டும் தெரிந்துகொண்டு, என்னால் எப்படி வெற்றி பெற முடியும்?” – என சோர்வடைந்தான்.

  தனது எண்ணத்தை வார்த்தைகளாக்கி ஜூடோ மாஸ்டரான குருவிடம் நேரடியாகவே கேட்டான்.

  “குருவே… எனக்கு ஒரே ஒரு தாக்குதல் பயிற்சி மட்டும் கற்றுத் தந்திருக்கிறீர்கள். இது மட்டும் எனக்குப் போதுமா? வேறு தாக்குதல் பயிற்சி வேண்டுமல்லவா?” – என வினா எழுப்பினான்.

  சிறுவனது ஆர்வத்தை அறிந்த ஜூடோ மாஸ்டர், “நீ கவலைப்படாதே. நீ திறமையானவன். நீ கற்றுக்கொண்ட ஒரே ஒரு தாக்குதல் வித்தை மட்டுமே உனது வெற்றியை உனக்குப் பெற்றுத்தரும்” என்றார்.

  குருவின் வாக்கை வேதவாக்காக எண்ணி, தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டான் சிறுவன்.

  இந்த இதழை மேலும்

  பாயும் ஆறு

  தொடர்ச்சி

  ‘லா-பெட்ரோஸா’ என்றால் தெரியாதவர்களுக்கு தமிழ்நாட்டு பட்டிதொட்டியெல்லாம் கூட சினிமா கதாநாயகர்களுக்கு இணையாக டீ சர்ட்டில் (T-Shirt) இடம்பிடித்த “சே-குவேராவை” தெரிந்து இருக்கும்.  எர்னெஸ்டோ     செ-குவேரா… ஆரம்ப காலங்களில் தென் அமெரிக்கா கண்டத்தில் தெற்கு வடக்காக அர்ஜெண்டினா, பெரு, சிலி வழியாக இருசக்கர வாகனத்தில் (நோர்ட்டன்) Norten-make பயணித்த நினைவுகளை அவர் தனது தானியங்கி இருசக்கர வண்டி நாட்குறிப்புகள் (Motor Cycle – Diaries) என்று எழுதி உள்ளார்.  அவரது அந்த இருசக்கர வாகனத்துக்கு அவரே வைத்திருந்த செல்லப் பெயர்தான் “லா-பெட்ரோஸா” (La Poderosa -“The Mighty One“) என்பது  சக்திவாய்ந்த – The Powerful என்பதாகும்.    யமஹா – தல – 100  வாகனம்… இதை காண்கையில் எல்லாம் கல்லூரியில் நண்பன் கணா என்கின்ற கணபதியின் வாகனத்தை ஓஸி-வாங்கி ஓட்ட எத்தனித்த (ஓட்டினோம் என்று சொல்லிவிட மனம்வரவில்லை – ஆனால் காயமின்றி தப்பினோம் – என்று காலரை தூக்கிவிட்டு சொல்லலாம்)  நாட்கள் ஞாபகம் வருகின்றன.  பொதுவாக வாகனங்களை நாம் பக்குவமாக பயன்படுத்த உறுதி எடுத்துக்கொள்வோம் ஆகுக.

  ஆறுமட்டுமா அழகு:-

  காவிரியாறு தன்னுடைய தாகத்தை தீர்த்த மகிழ்ச்சியில் தளும்புவதாக தோன்றியது.  ஆங்காங்கே சிறுசிறு பாறைகளில் குதித்துத் துள்ளிய நீரில் இருந்து துடித்துத் துள்ளிய மீன்களை சில சிறுவர்கள் ‘லபக்’ என்று பிடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தனர்.  அப்படியொரு காட்சிப் பின்புலத்தில் வானம்பார்த்தவாறு ஒரு வாகான பாறையில் சாய்ந்து புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்தபொழுது நண்பர்கள் நிறையபேர்… மகிழ்ச்சியாக பின்னூட்டம் (Feedback) கொடுத்திருந்தனர்.  வால்டன் ஏரி அருகே தோரோ (Thoreau) சென்று வாழ்ந்த காலக்கட்டத்தின் பதிவுகளை அந்தக் காட்சிப்பதிவு அசைபோட வைத்தது காவிரி சிறு சிறு கற்குவியல்களில் பட்டு நெளிவதைப்போல நம் கட்டுரையும் நுரைத்துக்கொண்டு ஓடுவதே அழகுதான்.

  நீல நிற உடையில் போடப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்திற்கு ஆற்றங்கரையில் நினைவோடை – ஓடுமிடம் கொடுமுடி அருகே என்று எழுதி ஆங்கில தலைப்பிட்டு இருந்தோம் அறு நூற்றை தாண்டிய நண்பர்கள் விரும்பிய (Like) புகைப்படம் நாம் செய்கின்ற இடத்தில் எல்லாம் அதை ஏற்கனவே பார்த்திருந்த நண்பர்கள் அதுகுறித்து விசாரித்த வண்ணம் முக மலர்ச்சியுடன் பேச வைத்தது.  அதில் ஒரு நண்பர் “ஆறு மட்டுமா அழகு?” என்று ஒரு இருபொருள்படும் கேள்வி ஒன்றை பதிவிட்டு இருந்தார்.  இது பலபேரால் பார்க்கப்படும் பொழுது பல பொருள்களில் புரிந்துகொள்ளப்படும்.  ஒரு சில அர்த்தங்களில் நாமும் அழகு ‘வெட்கம்’ வரும் வகையில் கூட புரிந்துகொள்ளலாம்.  ஆனால், அவர் அதை சொல்லவில்லையே.  அழகு… என்பதே… சொல்லாமல் விடுகின்ற சொற்களில்தானே இருக்கின்றது? ஆங்கில கவிஞன் வோட்ஸ்வொத்தும், கீட்ஸூம், மனதில் வார்த்தை ஆறுகளை ஓடவிட்டனர்.  இதற்கு பதில் தரும்பொழுது அனைவரும் மேலும் ‘முகம் சிவக்கும்’ வண்ணமும், மேலும் முகம் மலரும் வண்ணமும், உடனே பதில் கூறும் வேகத்திலும் பதில் பதிவிட வேண்டும் என்று சற்றே மூளையை கசக்கி ஒரு பதிவிட்டோம், அது மிகவும் நன்றாக வந்திருந்தது.  முகநூலை கண்டவர் சிலரே!  இக்கட்டுரையை படித்துக்கொண்டு இருப்பவர்களோ பலர்… எனவே அந்த முகநூல் பதிவை எழுத்துப் பதிவாக்கும் எண்ணம் தோன்றியது.

  சொற்கள் மிகுந்த கவனத்துடன் கையாளப்படவேண்டிய

  வாழ்க்கைக் கட்டிடத்தைக் கட்டப் பயன்படும் கற்கள்

  என்று சிந்தனை ஓடுகிறது.

  “சொல்லுக சொல்லை பிறிதோர்சொல் அச்சொல்லை

  வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து”

  என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.  அவ்வாறு, ஒரு பதிலை எழுதலாம் என்கின்ற நம் முயற்சியில் இதைப்படிக்கின்ற உங்கள் மனதில் ஆற்றின் மடியில் ஒய்யாரமாய் தலைவைத்து விண்ணைத் தாண்டி விழிகளை வானெங்கும் பரப்பி சாய்ந்திருக்கும் படத்திற்கு, “ஆறு மட்டுமா அழகு” என்று ஒரு பதிவிட்டால்… அதைப் பதிவிட்டவருக்கும் புல்லரிக்கும் வண்ணம், என்ன பதில் எழுதலாம் என்று யோசனை செய்து சொல்லுங்கள்.

  இந்த இதழை மேலும்

  பெண் இனத்தின் பெருமை பெண்மணிகள்

  “பெண்ணிற்கு பெருந்தக்க யாஉள கற்பென்னும்

  திண்மை உண்டாகப் பெறின்”

  கற்பு என்னும் கலங்கா நிலைமை மட்டும் அமைந்திருந்தால் அக்கற்புடைய பெண்ணை விடப் பெருமை உடையவை வேறு எவை உள்ளன? என்ற கேள்வியுடன் வள்ளுவர் பெருந்தகை பெண்ணின் சிறப்பு பற்றி கூறுயுள்ளார். “அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது” என்ற வாசகம் மனிதன் ஒரு உயரிய படைப்பு என்று அறிவுறுத்துகின்றது. அதிலும் “மாந்தர்களாய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்” என்ற வாசகம் பெண் இனத்தின் பெருமையை ஒருபடி உயர்த்தி காட்டுகின்றது. நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி, பெண்கள் அறிவுதிறனிலும், ஆன்மீகத்திலும் மற்றும் பல்வேறு செயல்பாடுகளிலும் ஆண்களுக்கு இணையானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். “பெண் ஒரு இயற்கையின் சீதனம்” என்றும் “பெண் இல்லாமல் உலகில் சுகம் இல்லை” என்ற கவிஞர்களின் வாக்கியங்கள் பெண்ணின் சிறப்பை மேலும் வலுவூட்டுகின்றன. அப்படிப்பட்ட பெண் இனத்திற்கு பெருமை சேர்க்கும் புகழ் பெற்ற இந்திய முதல் பெண்மணிகள் சிலரின் வாழ்க்கை குறிப்புகள் பற்றி இக்கட்டுரை விவரிக்கின்றது. “முதல்” என்ற வார்த்தையின் மகிமை அனைவரும் அறிந்தது. இக்கட்டுரை மதல் பெண் எழுத்தாளர், ஆளுநர், விண்வெளி பயணி, IAS அதிகாரி, மற்றும் IPS அதிகாரி பற்றி விவரிக்க உள்ளது.

  சுவர்ணகுமாரி தேவி முதல் வங்காளப் பெண் எழுத்தாளர் ஆவார். இவர் தாகூர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது ஆயுட்காலம் 1885 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி முதல் 1932ம் வருடம் ஜூலை மாதம் 3ம் தேதி வரை தான்.  இவர் பிராலி என்ற தாழ்த்தப்பட்ட பிராமிணர் குடும்பத்தில் பிறந்தவர். ஜாணகிநாத் கோசல் என்ற ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவரை மணந்தார். கோசல், மற்ற பிராமணர்கள் சுவர்ண குமாரியை தாழ்ந்த ஜாதி என்று கருதியதால், தன் குடும்பத்தை விட்டு பிரிந்து தன் உழைப்பால் உயர்ந்து சுவர்ணகுமாரி மற்றும் தன் குழந்தைகளுடன் இன்புற்று வாழ்ந்தார். சுவர்ணகுமாரியின் பாட்டனார், தாய், தந்தை, சகோதிரிகள் அனைவரும் பல்வேறு துறைகளில் சிறப்புப் பெற்றவர்கள். ரவிந்தரநாத் தாகூர் இவருடைய இளைய சகோதரர் ஆவார். அவர் தன் குறிப்பில் “நாங்கள் வெளி உலகில் கற்றதை விட எங்கள் இல்லத்தில் கற்றக் கொண்டவை தான் அதிகம்” என்று குறிப்பிட்டுள்ளார். சுவர்ணகுமாரியின் முதல் நாவல் “தீப்நிர்பன்”1876ல் வெளியிடப்பட்டது. இந்தூல் தேசபக்தி எழுப்பவதாக அமைந்துள்ளது. இவர் 12 நாவல்கள், 4 நாடகங்கள், 3 கவிதைகள் மற்றும் விஞ்ஞானக் குறிப்புகள் நிறைந்த கட்டுரை ஒன்றும் எழுதியுள்ளார். 1896ல் இவர் “சக்தி சமீதி” என்ற இயக்கதை துவங்கி அதில் விதவைப்பெண்கள், ஆனதைக் குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து வந்தார். பெண்கல்வியை இங்கு ஊக்குவித்தார். இவருக்கு ஹிரன் மோயி என்ற பெண்மணி ஒத்துழைப்பு நல்கி வந்தார். இவ்வியக்கம் இன்றும் ஹிரன் மோயி மகள் கல்யாணி மாலிக் மூலம் நன்றாக இயங்கி வருகின்றது. கோழிக்கோடு பல்கலைக்கழகம் சுவர்ணகுமாரியை 1927ம் ஆண்டு ஜெகத்தாரணி தங்கப்பதக்கம் அளித்து கொரவித்தது. பாரதி என்னும் பத்திரிக்கையின் எடிட்டராக பல ஆண்டுகள் பணிபுரிந்த பெருமையும் இவருக்கு உண்டு.

  சரோஜினி நாயுடு இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் முதல் பெண் ஆளுநர் ஆவார். இவர் 1879 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் நான் ஹைதாராபாத்தில் ஒரு வங்காளக் குடும்பத்தில் பிறந்தார். இவர் தன் கல்வியை சென்னை, லண்டன், கேம்பிரிஜ்யில் பெற்றார். டாக்டர். கோவிந்த ராஜீலு இவருடைய கணவர் ஆவார். இவர் கவிதை எழுதுவதில் அதிக நாட்டம் கொண்டவர். அதனால் இவர் இந்தியாவின் “கவிகுயிலி” (நைட்டிங்கேல்) என்றப்பட்டதிற்கும் “பாரதீய கோகிலா” என்ற பட்டதிற்கும் உரியவரானார். இவர் ஒரு கவிஞர் மட்டுமல்லாது ஒரு பேச்சாளர், எழுத்தாளர், சமூகசேவகர் மற்றும் சுதந்திரப் போராட்டவீரரும் ஆவார். காந்தியடிகளுடன் பலப்போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கும் சென்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவராகவும் பதவி வகித்தார். இந்தியப் பெண்களை தங்கள் சமையல் அறையில் இருந்து வெளியில் வந்து அவர்களை விழிப்படையச் செய்தவர் இவர் தான். 1947ல் உத்திரப்பிரதேசத்தின் முதல் பெண் ஆளுஞராகப் பதவி ஏற்றார். 1949ம் ஆண்டு லக்னோவில் உள்ள தன்னுடைய அலுவலக்கத்தில் இருதயவலியால் உயிர் நீத்தார். இவரது நினைவாக நிறைய நிறுவனங்கள் நிறுவப்பட்டு இன்று வரை செயலாற்றி வருகின்றன. இவருடைய பல்வேறு செயல்பாடுகளை கருத்தில் கொண்டு ஹைதராபாத் பல்கலைக்கழகம் சரோஜினி நாயுடுவின் பெயரில் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகின்றது.

  இந்த இதழை மேலும்

  என்று மடியும் பெண்ணடிமை?

  இறைவனின் அற்புதப் படைப்பு ஆணும் பெண்ணும்,  இருவருமே சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.  இதைத்தான், ‘சிவம் பாதி, சக்தி பாதி’ என்று புராணங்கள் கூறுகின்றன.  பெண்களைப் போற்றுவதும், மதிப்பதும் பாரதத்தின் பண்பாடு. கல்விக்கு ‘கலைமகள்’, செல்வத்திற்கு ‘இலட்சுமி’, வீரத்திற்கு ‘மலைமகள்’ என்று அனைத்துச் செல்வங்களுக்கும் பெண்பாற் கடவுளர்களையே அதிபதிகளாகச் சித்தரித்துள்ளனர்.  நதிகளுக்கும் ‘கங்கை’, ‘யமுனை’,‘காவேரி’ என்ற பெண்பாற் பெயர்களையே சூட்டியுள்ளனர்.

  அரசியல் உரிமைக்காகக் களம் இறங்கிய ஜான்சி ராணி, லட்சுமிபாய், கல்வி உரிமைக்காகப் போராடிய முத்துலட்சுமி ரெட்டி, அண்ணல் காந்தியோடு அரும்பணியாற்றிய தில்லையாடி வள்ளியம்மை, இலக்கியத் தளத்தில் சாதனை படைத்த சரோஜினி நாயுடு, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட அன்னிபெசன்ட், புற்றுநோய்க்குத் தீர்வு கண்டு நோபல் பரிசு பெற்ற கியூரி போன்றோர் வரலாறு படைத்தவர்கள்.

  கருணையுள்ளம் கொண்ட அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற அன்னை தெரசா, இசைமேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, உலக அளவிலான புக்கர் பரிசைப் பெற்ற அருந்ததி ராய், விண்வெளியில் பறந்து தீபமாய் ஓளிவிடும் கல்பனா சாவ்லா, திகார் சிறையில் சாதனைகள் பல புரிந்த கிரண் பேடி, இசைத்துறையில் பிரகாசிக்கும் லதா மங்கேஷ்கர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா போன்றோர் சாதனை படைத்த, படைத்துக் கொண்டிருக்கும் மங்கையர்களே.

  நாட்டின் குடியரசுத் தலைவராக, பிரதமராக, முதல்வராக, கட்சிகளின் தலைவர்களாக, பல்கலைக்கழகத் துணை வேந்தர்களாக, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக, மருத்துவர்களாக, விஞ்ஞானிகளாக, உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களில் இயக்குனர்களாகப் பல்வேறு துறைகளிலும் உயர் பதவிகளை வகித்து சாதனை புரிந்து வருகின்றனர்.

  கடந்த 2017ஆம் ஆண்டிலும் சாதனை படைத்த பெண்கள் பலர், ‘லட்சுமி எனும் பயணி’ என்ற தன் முதல் நூலுக்கே ‘ஸ்பாரோ’ விருதைப் பெற்றார் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமி அம்மா. நாட்டின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றார்.  இந்திய விண்வெளியில் ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) 104 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் செலுத்த எட்டு பெண் விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.  திருநங்கைகளின் உரிமைக்காகப் போராடி வரும் திருநங்கை அகாய் பத்மாஷலி இந்தியாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளார்.  பேட்மிண்டன்  விளையாட்டு என்றாலே பி.வி.சிந்து என்கிற அளவுக்கு அவர் சாதனை படைத்து உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்,  உலக அழகியாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பெண் ஒருவர்  ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இத்தகைய சாதனைகளுக்குப் பல சோதனைகளும் போராட்டங்களும் மறைந்துள்ளன.

  இந்த இதழை மேலும்

  தன்னம்பிக்கை மேடை

  நேயர் கேள்வி…

  செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பதில்கள்

  தேவையைப் பூர்த்தி செய்யாமல் தேவையற்றவை மட்டுமே நமக்கு கிடைக்கிறது, அதனால் தான் புரட்சி, வன்முறை போன்றவை ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். இது சரிதானா?

  அருள்மொழிநாச்சியார், கணக்கர், மதுரை.

  தேவைகள் கிடைப்பதில்லை, தேவையற் றவை கிடைக்கின்றன, எனவே தான் புரட்சி, வன்முறை போன்றவை ஏற்படுகின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அது சரிதானா என்று ஆராய்வோம்.

  மனிதனுக்கு என்னென்ன தேவை என்பதைப் பார்ப்போம். உணவு, உடை, இருப்பிடம், உடல்நலம், சுகாதாரம், மருந்துகள், தூய காற்று, சிறந்த வேலை, நல்ல குடும்பம், நண்பர்கள், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை, மகிழ்ச்சி போன்றவை எல்லா மனிதர்களுக்கும் தேவைப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் இந்தியாவில் வாழும் நமக்கு கிடைக்கிறதா என்று கேட்டால், பலருக்கு கிடைக்கவில்லை என்று தான் கூறமுடியும்.

  வறுமை :

  நமது நாட்டில் 138 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இதில் 27 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ளனர் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இவர்களது தினசரி வருமானம் ரூ. 75-ஐ விடவும் குறைவானது. ஆக, இந்த சொற்ப வருமானத்தை வைத்து அவர்களால் என்ன செய்ய முடியும்? இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் 5 ஆண்டுகள் முடியும் முன்னர் இறந்து போகிறார்கள். வறுமை நிலை அந்த அளவு கொடுமையாக இருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள்.

  சமீபத்திய ஒரு அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அதாவது, கடந்த சில ஆண்டுகளில் நமது நாட்டில் உருவான வருவாயில் 70 சதம் ஒரு சதம் பணக்காரர்கள் கைகளுக்கே சென்றுள்ளது. அதாவது பணக்காரர்கள் பெரிய பணக்காரர்களாகவும், ஏழைகள் இன்னும் பெரிய ஏழைகளாகவும் மாறி வருகிறார்கள். இந்தியாவில் தனிமனித வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மேல் என்று கணக்கு காட்டும் நபர்கள் 76 லட்சம் பேர். அதாவது ஆயிரம் இந்தியர்களில் 6 பேர் வசதி வாய்ப்புடன் வாழ்கிறார்கள். இந்த ஆறு பேர்களில் இரண்டு பேர்தான் உண்மையிலேயே பணக்காரர்கள், 4 பேர் அரசு ஊழியர்கள். அரசு ஊழியர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. அதாவது ஆயிரத்தில் இரண்டு பேர் தேசத்தின் சொத்துக்களைக் குவித்து வைத்துள்ளனர்.

  நம்மைப் போன்றவறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் நிலைமை மிகவும் பாராட்டும் வகையிலும் இல்லை. படித்திருந்தாலும் வேலை இல்லை, வேலை இருந்தாலும் போதிய சம்பளம் இல்லை, விலைவாசியோ மிக அதிகம். பல குடும்பங்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல்தான் காலத்தை ஓட்டுகின்றனர். எனவே, நம்மில் பலருக்கும் தேவைகள் போதுமானதாகக் கிடைப்பதில்லை என்பது சரியெனத் தென்படுகிறது.

  தேவையற்றவை :

  இனி, நமக்கு தேவையற்றவை என்னென்ன கிடைக்கிறது என்பதையும் ஆராய்வோம். நம் நாட்டு மக்களுக்கு வெட்டிப்பேச்சு பேச வாய்ப்பு தாராளமாகக் கிடைக்கிறது, அதை கேட்கவும் ஆட்கள் கிடைக்கிறார்கள். நமது நாட்டில் இறைவழிபாடு மக்களுக்கு தடையின்றிக் கிடைக்கின்றன, அதற்கான இடங்களும் தெருவிற்கு தெரு இருக்கின்றன. சிலர் வீட்டின் மதில் சுவரில் கூட ஒரு வழிபாட்டு இடத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்து அனைத்து சேனல்களையும் எண்ணுங்கள். அதில் எத்தனை சேனல்கள் மதங்களைப் பற்றியது என்பதைப் பாருங்கள். இவை அனைத்தும் நமக்கு தேவைதானா என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். அறிவியல் போதிக்க ஒரு சேனலாவது உண்டா என்றும் சிந்தித்துப் பாருங்கள். அதோடு, நமக்கு தேவைக்கும் அதிகமான சினிமாக்கள் மற்றும் சீரியல்கள் கிடைக்கின்றன. அவற்றில் உள்ள நாட்டம் பலருக்கு வேறு எதிலும் இல்லை. இவைதான் மக்களின் பொழுதுபோக்கும் கூட. இதோடு சேர்த்து சினிமா பற்றிய செய்திகள், துணுக்குகள், சினிமா பாட்டு, அவற்றைப் பற்றிய ஆராய்ச்சி என்று தேவையற்றவை அதிகமாகவே கிடைக்கின்றன. இதற்குமேல் கிரிக்கெட் கிடைக்கிறது, அதுவும் தாராளமாக கிடைக்கிறது. இதில் பல இளைஞர்கள் பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கிறார்கள்.

  அறிவியல் உண்மையில்லாத மருத்துவமுறைமலிந்து கிடக்கின்றன. எந்த மருத்துவ உண்மையும் தெரியாத, எந்த நவீன மருத்துவ அறிவை பல்கலைக்கழகங்களில் பயிலாத அல்லது அறிவியல் மருத்துவ பழக்கம் இல்லாதவர்கள் எல்லாம் மருத்துவர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு மக்களுக்கு உடல்நலம் பற்றிய கருத்துக்கள் சொல்வதும், அதற்கான மருந்துகள் விற்பனை செய்வதும் தாராளமாக நடந்து வருகிறது. இந்த ஆபத்தான மருத்துவமுறைகளை உலகின் வேறு எந்த நாகரீக மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் நம் நாட்டு மக்கள் இந்த மகான்களை பின்பற்றுகிறார்கள். படிக்காதவர்கள் மட்டும் அல்ல, படித்து பட்டம் பெற்றவர்கள் கூட இப்படிப்பட்ட போலி அறிவியல் மருத்துவர் களிடம் சிக்கிக் கொண்டு, அவற்றை பாமரர்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

  இன்னொன்று மிகவும் ஆபத்தானது. புகையிலை, சிகரெட் மற்றும் மது, இவை தாராளமாகக் கிடைக்கின்றன. பலர் இதற்கு அடிமையாகிவிட்டனர்.

  இப்படி இன்றைய நாகரீக மனிதர்களுக்கு தேவையற்றபல விஷயங்கள் நமது மக்களுக்கு தாராளமாக கிடைப்பதுடன் அவற்றில் மக்கள் ஈடுபட்டு, மகிழ்ச்சியாக இருப்பது போலவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவுதான் வறுமை, கல்வியின்மை, சிந்தனையின்மை, வேலை திறமையின்மை, மனிதர்கள் மீது வெறுப்பு போன்றவை.

  புரட்சி, வன்முறை:

  இனி உங்களது கேள்வியின் இரண்டாவது பாகத்திற்கு வருவோம். இப்படியாக தேவையானவை கிடைக்காமல் போனதாலும், தேவையற்றவை நிறைய கிடைப்பதாலும்தான் புரட்சி மற்றும் வன்முறைஏற்படுகிறது என்றஉங்கள் கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை. விரும்பத்தகாத சில புரட்சிகள் ஏற்பட்டன. ஆனால், விரும்பத்தக்கப் புரட்சிகள் பெரியதாக ஒன்றும் ஏற்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. பசுமை புரட்சி, கல்விப்புரட்சி, அறிவியல் புரட்சி, சிந்தனை புரட்சி, செயல்திறன் புரட்சி, மொழி வல்லமை புரட்சி போன்றவை ஏற்பட்டிருந்தால் நாம் அதைப் பாராட்டலாம்.

  இந்த இதழை மேலும்

  மனதின் மலர்ச்சி! மாற்றத்தின் வளர்ச்சி!!

  திருமதி. சித்ரா பார்த்தசாரதி

  ஐசால்வ் & க்யாட் க்ரூப், இயக்குனர் & முதன்மை நிதி மேலாளர்

  நேர்காணல் : செந்தில் நடேசன்

  விக்ரன் ஜெயராமன்

  பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

  பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

  எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்

  இளைப்பில்லை காணென்று கும்மியமடி

  என்பார் பாரதி. கல்வி ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி நிகர் சமம். ஆண்களைப் போலவே பெண்களும் கல்வி கற்று இந்த உலகில் சாதிக்க முடியும் என்றவாக்கிற்கிணங்க வாழ்ந்து வருபவர்.

  ஒரு பெண் இந்த சமுதாயத்தில் எவ்வாறு எல்லாம் சாதிக்கலாம், சாதிக்க என்னென்ன வழிகள் எல்லாம் இருக்கிறது என்பதை முறையாகப் பின்பற்றி நவீன உலகில் தனக்கென்று ஒரு இடத்தைப்பிடித்து தடம் பதித்து வருபவர்.

  சாப்ட்வேர் துறைமற்றும் இணையதள தொழிற்நுட்பத்துறையில் பல சாதனைகள் செய்து இன்று உலகம் முழுவதும் வலம் வரும் வரலாற்றுப் பெண்மணி.

  நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் என்றவாக்கிற்கிணங்க பல தொழிற்நுட்பத் துறைகள் தொடங்கி அதனால் சமுதாயத்திற்கு பல நன்மைகள் செய்து வரும் திருமதி சித்ரா அவர்களை நேர்முகம் கண்டதிலிருந்து இனி…

  கே. உங்களின் பிறப்பும் பின்புலமும் பற்றிச்  சொல்லுங்கள்?

  நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே கோயமுத்தூரில். ஒரு பாரம்பரியமான குடும்பத்தில்  பிறந்தேன். என் பெற்றோர்கள் பெயர் திரு. ராஜகோபால், திருமதி. சுந்தரி அவர்கள். எனக்கு ஒரு அண்ணன் திரு. ராமசாமி வங்கியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அண்ணி ராதிகா அவர்கள். என்னுடைய கணவர் திரு. ரா. பார்த்தசாரதி. CADD Centre, isolve Group, ikix Group Chairman & CEO.  எங்களுக்கு இரட்டைக் குழந்தைகள். பிரித்விக், ரித்விக். இவர்கள் ஐரோப்பாவில் எம். எஸ் படித்துள்ளனர்.

  என்னுடைய தந்தை கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். குறிப்பாகப் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று நினைத்தார். இதனால் கோவை மாவட்டத்தில் நல்ல புகழ் பெற்றஅவிலா கான்வென்ட் பள்ளியில் படித்தேன்.

  மிகவும் ஒழுக்கமும் உயர்ந்த பண்பும் போதிக்கும் சிறப்பான பள்ளி. கல்லூரிப் படிப்பை  திரு. அவிநாசிலிங்கம் கல்லூரியிலும் எம். பி. ஏ பட்ட மேற்படிப்பை பாரதியார் பல்கலைகழகத்தில் பயின்றேன்.

  கே. உங்கள் வாழ்க்கையில் யார் முன்னோடியாக இருந்தார்கள்?

  பள்ளி, கல்லூரி மற்றும் மேற்படிப்பு படிக்கும் போது எல்லா ஆசிரியர்கள், பேராசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதை தான் பின்பற்றினேன். ஆனால் குறிப்பாக பள்ளி பருவத்தில் எனது மாமாவின் மனைவி (அத்தை) திருமதி. இராஜலஷ்மி வாசன் எங்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் முன்மாதிரி ஆக இருந்தார்.

  அதன் பின்பு அவிநாசிலிங்கம் கல்லூரியில் படிக்கும் போது டாக்டர். இராஜம்மாள். பி. தேவதாஸ் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவர் தான் என் பல லட்சியங்களுக்கு ரோல் மாடல் என்று சொல்லலாம். கல்லூரியில் நான் படித்த வணிகவியல் துறையின் அனைத்துப் பேராசிரியர்களும் என்னுடைய இலட்சியங்கள் அடைவதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்கள். எனக்கு இங்கு படிக்கும் போது சிறந்த மாணவிக்கான விருதை (தங்க பதக்கம்) பெற்றேன்.

  பாரதியார் பல்கலை கழகத்தில் மேற்படிப்பின் போதும் அனைத்து பேராசிரியர்களும் நாங்கள் எதிர்காலத்தில் நல்ல மேலாளர்களாக வருவதற்கு நல்ல பயிற்சி அளித்தனர். 2015 ஆம் ஆண்டு “Distinguished Alumini Achiever Award” என்றவிருதையும் பெற்றேன். இப்போது, பெப்ஸி நிறுவனத்தின் இந்திரா நூயி எனக்கு பெரிய முன் மாதிரியாக இருக்கிறார்.

  கே. நீங்கள் படிக்கும் போதே எதிர்காலத்தில் ஒரு தொழிற் நிறுவனம் தொடங்க வேண்டும் என்று நினைத்தீர்களா?

  எனக்கு ஆர்வம் எல்லாமே IAS படிக்க வேண்டும் என்பது தான். ஆனால் அந்த காலத்தில் பெண்கள் அத்துறைக்கு போவது சிறிது கடினம் தான் என்று என் பெற்றோர்க்கு இருந்தது. அதனால் அடுத்து என்ன என்று நினைத்து கொண்டிருந்த போது, கல்லூரியில் விருது வழங்க வந்த சிறப்பு விருந்தினர் எம்.பி.ஏ படிக்கலாமே என்று அறிவறுத்தினார். அதன் பின்பு தான் அதனைப் பற்றி ஆராய்ச்சி செய்த போது அத்துறையிலும் நான் சிறந்து விளங்கலாம் என்று எம்.பி.ஏ படித்தேன். ஆனால் படிக்கும் போது எதிர்காலத்தில் ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை.

  கே. நீங்கள் படிக்கின்றகாலத்திலும் தற்போதும் பெண்கல்வி எவ்வாறு மாறுதல்கள் அடைந்துள்ளது?

  நிச்சயமாக, நிறைய மாறுதல்கள் அடைந்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் படிக்கின்ற காலத்தில் பெண்களை அதிகமாகப் படிக்க வைக்க மாட்டார்கள். ஆனால், தற்போது நிலை மாறிவிட்டது. நான் படிக்கின்றகாலத்தில் எனது வகுப்பில் மொத்தம் 35 பேர். அதில் என்னையும் சேர்த்து 10 பெண்கள் மட்டுமே படித்தோம். அப்போது ஆண், பெண் இருபாலரும் இணைந்து படிக்கும் கல்லூரிகளும், பள்ளிகளும் அதிகளவில் இல்லை. ஆனால் இப்போது எல்லாமே இயல்பாகிவிட்டது.

  ஆண்களைப் போலவே பெண்களும் எல்லாத்துறையிலும் படித்து சாதனை புரிந்து வருகிறார்கள். பெற்றோர்கள் தங்களின் பெண் பிள்ளைகளை வெளிநாட்டிற்கு கூட அனுப்பி வைக்கிறார்கள். இதற்கு பெற்றோர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இது தற்போது பெண் கல்வியின் வளர்ச்சிதானே.

  கே. மேலாண்மை படிப்பு மிகவும் கடினமாக இருந்ததா? எப்படி அதை மேற்கொண்டீர்கள்?

  ஆம், முதலில் கடினமாக தான் இருந்தது. மேலாண்மை படிப்பில் எல்லா பாடங்களும் இருக்கும் (Accounting, Engineering, Economics, Computer Science etc). அப்படிப்பட்ட துறையைத் தேர்ந்தெடுத்து படிப்பது என்பது சற்று சவாலாக இருந்தது. அனைத்து பேராசிரியர்களும் புரியாத பாடங்களைத் திரும்பத் திரும்ப புரியும் வரை எங்களுக்குச் சொல்லி கொடுத்தார்கள். பல நேரங்களில் பல்வேறு துறைகளில் இருந்து வந்த நண்பர்களுடன் குழுப் படிப்பை செய்து புரிந்து கொள்வோம். என் வாழ்க்கையில் எம்.பி.ஏ படித்ததை ஒரு பெரிய பெருமையாகக் கருதுகிறேன்.

  கே. படித்த உடனே தொழில் தொடங்கினீர்களா? உங்களின் முதல் வேலை அனுபவம் பற்றி சொல்லுங்கள்?

  படித்தவுடனேயே தொழில் தொடங்கவில்லை. பிரிக்கால் நிறுவனத்தில் (Pricol) என்னுடைய மேலாண்மை ஆய்வை செய்தேன். செய்யும் பொழுது அங்கேயே வேலை கிட்டியது.

  அப்போது சில நிறுவனங்கள் கேம்பஸ் இண்டர்வியூக்கு வருவார்கள். நான் படித்து கொண்டிருந்த போது சிட்டி பேங்க்கிலிருந்து வந்தார்கள். நான் தான் பிரிக்கால் பணி கிடைத்து விட்டதே, இனி எதற்கு சிட்டி பேங்க் நடத்தும் நேர்முகத் தேர்விற்குப் போக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய பேராசிரியர்கள் என்னை அழைத்து உனக்கு கிடைக்கிறதோ இல்லையோ அதுவும் ஒரு அனுபவம். நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என்று ஆலோசனை வழங்கினார்கள்.

  அவர்களின் ஆலோசனை படி நானும் சென்றேன். அங்கு குழு கலந்துரையாடல், நேர்முகம் போன்றவை நடைப் பெற்றது. இறுதியாக இரண்டு பேரை மட்டும் தேர்ந்தெடுத்தார்கள். அதில் நானும் ஒருவர். ஆனால் வேலை மும்பையில், இதை என்  பெற்றோர்கள் எப்படி நினைப்பார்கள் என்று என் மனதில் ஒரு தயக்கம். ஆனால் என்னுடைய தந்தை மிகவும் ஊக்குவித்தார். மும்பை மட்டும் செல்ல அனுமதியளிக்கவில்லை. சென்னையில் சிட்டி பேங்க் அலுவலகம் இருந்தது. அங்கே சென்று பணியில் சேர்ந்தேன். நான்கு ஆண்டுகள் சென்னையி லேயே பணியாற்றினேன்.

  பிறகு பேங்க் ஆப் அமெரிக்காவில் பணியில் சேர்ந்தேன். அதன் பின் அஆச அம்ழ்ர் பேங்கில் சேர்ந்தேன். மொத்தம் 12 வருடங்கள் வங்கிகளில் பணி புரிந்தேன்.

  கே. உங்களின் தனித்தன்மை பற்றிச் சொல்லுங்கள்?

  நான் எதை செய்தாலும் ஒரு முறைக்கு பல முறைநன்கு யோசித்து அதன் பிறகு தான் செயல்பட முனைவேன்.

  திட்டமிட்டு செய்யும் எந்த பணியும் சோர்வும், தோல்வியும் அடையாது என்று நம்புவேன். அந்த வகையில் திட்டுமிடுதலை நான் முறையாக கடைப்பிடிப்பேன்.

  Measure twice cut once, என்பது எனக்குப் பிடித்த பழமொழி. எங்கு சென்றாலும் என்னை நன்கு தயார் படுத்திக் கொண்டு செல்வேன். மீட்டிங், கருத்தரங்கம் போன்றவற்றிர்க்கு போகும் பொழுது என்னை நானே தயார் படுத்திக் கொள்வேன். எனக்குள் பல கேள்விகளைக் கேட்டுக் கொள்வேன்.

  எந்த வினாவிற்கும் விடை தெரியாது என்று முடிந்தவரை சொல்லாமல் இருக்க வேண்டும் என்பது என் ஆசை.

  இந்த இதழை மேலும்

  உள்ளத்தோடு உள்ளம்

  மனித இனம் தோன்றியதிலிருந்து இன்று வரை ஆணும் பெண்ணும் சமுதாயத்தின் இருகண்களாகாவே இருந்து வருகிறார்கள்.

  இங்கு ஆணும் பெண்ணும் சமம் என்று சட்டமிருந்தாலும் இன்றளவிலும் அதை ஏனோ நடைமுறை படுத்தவே முடியவில்லை. காரணம் பெண்ணிற்கு சுதந்திரம் வேண்டும் என்று ஒரு பெண் நினைப்பதை விட ஒரு ஆண் நினைத்தாலே நிச்சயம் பெண் விடுதலை கிடைத்துவிடும்.

  ஆணாதிக்கச் சமுதாயம் ஒரு பெண்ணை எவ்வாறு சித்தரிக்கிறது என்றால் திருமணம் ஆகுவதற்கு முன் தந்தையின் அரவணைப்பிலும், திருமணம் ஆன பின்னர் கணவனின் அரவணைப்பிலும், குழந்தைப் பெற்ற பின்னர் தன் மகனின் அரவணைப்பிலும் இருக்க வேண்டும், இது தான் பெண்ணிய கட்டமைப்பு என்று சிலர் கூறுகிறார்கள்.

  இந்நிலை மாற வேண்டும் என்று தான் கவிஞர்களும், எழுத்தாளர்களும், பெண் விடுதலையாளர்களும் எழுதியும் போராடியும் வருகிறார்கள், ஆனாலும் இன்னும் மாற்றம் வராமல் எத்தனையோ பெண்கள் வீட்டின் வாசலைக்கூட தாண்ட முடியாத நிலையில் தான் இருக்கிறார்கள்.

  ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு  பெண் இருக்கிறார் என்று பெருமையாகச் சொல்வதை விட உன்னுடைய வெற்றிக்குப் பின்னால் நான் இருக்கிறேன் என்று ஒரு பெண்ணை ஊக்கப்படுத்தினாலே போதும், அவர்கள் வாழ்வில் உயர்ந்து விடுவார்கள், அவர்களின் நிச்சயம் குடும்பத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றே சொல்லலாம்.

  தற்போது எல்லாத் துறையிலும் பெண்கள் ஆணுக்கு இணையாக முன்னேறிக் கொண்டு தான் வருகிறார்கள். அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற நிலை மாறி இன்று பெண்கள் வேலைக்குச் செல்வதால் தான் எத்தனையோ வீட்டில் அடுப்பு எரிந்து கொண்டிருக்கிறது என்பதை பெருமையாகச்  சொல்லலாம்.

  பெண்ணினத்தைப் போற்றுவோம்… பெருமை கொள்வோம்…

  அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.