– 2019 – September | தன்னம்பிக்கை

Home » 2019 » September (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  வெற்றியின் முகவரி நீ !

  கோபி பயிலரங்கம்

  ஒரு ஊரில் ஒரு கையை இழந்திருந்த ஊனமுற்ற மனிதன் அவ்வூரில் குத்துச் சண்டை கற்பிக்கும் ஆசிரியரிடம் மாணவர்கள் பயிற்சி பெறுவதைக் காண்கிறான். தானும் குத்துச் சண்டை வீரனாக ஆசைப்படுகிறான் அந்த ‘ஒரு கை  மனிதன்’. ஆசிரியரிடம் ஆசையைக் கூற அவனுக்கு ஆசிரியர் நடப்பு சாம்பியனை வெல்ல ஒரே ஒரு குத்து வித்தையை மட்டும் கற்றுத்தந்து களத்தில் மோதவிட்டார். போட்டி துவங்கியதும் ஒரு கை மனிதன் ஓங்கி ஒரு குத்தை நடப்பு சாம்பியன் மீது குத்த, அவனால் எழமுடியவில்லை. ஒரு கை மனிதன் வென்றான். இக்குத்திலிருந்து எதிராளி தப்பிக்க குத்தியவனின் மற்றொரு கையைப் பிடித்து திருகியிருந்தால் மட்டுமே முடியும். ஆனால், எங்கே திருகுவது? குத்தியவனுக்கோ இருப்பது ஒரு கை மட்டுமே. ஆசிரியர் எதிர்மறை என்ற ஊனத்தை நேர்மறையாக்கி வெல்ல வைத்தார்.

  இன்றைய இளைய தலைமுறையும் இதுபோல தன்னிடமுள்ள குறையை நிறையாக மாற்றி தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள தன்னம்பிக்கை மாத இதழ் தனது விற்பனையில் ஒரு மைல்கல்லை அடைந்திருக்கும் கோபிசெட்டிபாளையத்தில் இலவச சுயமுன்னேற்றப் பயிலரங்கை நடத்த தீர்மானித்தது.

  இதன்படி தன்னம்பிக்கை மாத இதழ், பசுமை நகராம் கோபியில் பல்துறை கல்வியை பல்லாண்டுகாலம் நாட்டின் எட்டுத்திக்கு மாணவ, மாணவியருக்கு திறமையான நிர்வாகிகளால் அனுபவ ஆசிரியர்களைக் கொண்டு கல்விக் கண்ணை ஊற்றாக வழங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்கள், கோபியுடன்  இணைந்து, கடந்த 20.08.2019 அன்று கல்லூரி கலையரங்கில் ‘வெற்றியின் முகவரி நீ’ என்ற தலைப்பில் சுயமுன்னேற்றப் பயிலரங்கை நடத்தியது.

  பயிலரங்கில் கல்லூரி முதல்வர் டாக்டர் P.தங்கவேல் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அவர் தம் உரையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் Additional Director General of Police திரு. சந்தீப் ராய் ரத்தோர் IPS அவர்கள், மறைந்த பத்மஸ்ரீ M.P.நாச்சிமுத்து அவர்களின் மகளான திருமதி.C.லோகநாயகி, மருமகனும் நீல்கிரீஸ் நிறுவன முன்னாள் சேர்மனுமான திரு.M.செல்லையா, மகன் திரு.P.N.பாலசுந்தரம் ஆகியோரையும் கல்லுரியின் டிரஸ்டி திரு.K.R.கவியரசு, துணைமுதல்வர் டாக்டர்.S.பிரகாசம் உள்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், தன்னம்பிக்கை மாத இதழின் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.M.நம்பிராஜன் ஆகியோரையும் தனித்தனியே வரவேற்றுப் பேசி சிறப்பான வரவேற்புரை நிகழ்த்தினார்.

  மேலும் அவர் தம் உரையில் ADGP அவர்கள், புகழாரம் பெறும் மறைந்த பத்மஸ்ரீ M.P.நாச்சிமுத்து அவர்களின் சிறப்புக்களை குறித்துப் பேசினார்.

  அடுத்து, தன்னம்பிக்கை மாத இதழின் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.M.நம்பிராஜன் விருந்தினர் அறிமுக உரையில், திரு. சந்தீப் ராய் ரத்தோர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பைப் பின் வருமாறு கவிதை வடிவில் பேசினார்.

  வாழ்க்கையில் படித்து முன்னுக்கு வந்தவர்கள் ஏராளமாய் உள்ளனர். ஆனால், வாழ்க்கையைப் படித்து முன்னுக்கு வந்தவர்கள் ஒரு சிலரே உள்ளனர். ஐயா அதில் நீங்களும் ஒருவர்.

  உங்களுக்குப் பின்னால் காவலர்கள் அணிவகுப்பதைப் போலவே உங்கள் பெயருக்குப் பின்னால் பட்டங்களும், விருதுகளும் அணிவகுக்கின்றன. அழுகோ அழகு…

  பன்முகத் திறமை கொண்ட தங்களைத் தேடித் தேடி விருதுகள் ஓடி வந்து என்னை ஏற்றுக்கொள் ஏற்றுக்கொள் என ஏங்கியல்லவா வந்துள்ளன.

  மனிதர்களைப் பிடிக்கும் ஏழரைச்சனி அவர்கள் முன்னேற்றத்தைத் தடுக்கின்றது. ஆனால், தோல்வியே அறியா தொடர் வெற்றியாளராக உள்ள தங்களைக் கண்டால் குற்றவாளி போல் ஏழரைச்சனியும் ஓடியல்லவா ஒளிந்துள்ளது.

  தேசத்தின் வருங்காலத்திடம் பாசத்துடன் அளாவிய பெருமகனார் மேதகு அப்துல்கலாம் அவர்கள். அவர் வழியில் கேட்டதும் சட்டென ஒப்புதல் கொடுத்து ‘வெற்றியின் முகவரி நீ’ என எழுச்சி உரை ஆற்ற உள்ள தங்களுக்கு என் பணிவான வாழ்த்துக்கள் ஐயா எனக் கூறி முடித்தார்.

  அடுத்து M.நம்பிராஜன் அவர்கள் பத்மஸ்ரீ M.P.நாச்சிமுத்து அவர்களுக்கு கவிதை வடிவில் புகழாரம் சூட்டினார்.

  நாடு போற்றும் நற்றமிழர் M.P.நாச்சிமுத்து ஐயாவை வணங்குகிறேன்.[hide]

  பூமணமும், புத்துணர்வும் பொழுதுவரை தானிருக்கும் என்பதால் பாவோட்டும் கைத்தறி நெசவுக்கு புகழ் சேர்த்த அண்ணலுக்கு பாமாலை அணிவித்து புகழாரம் சூட்டுகின்றேன்.

  மானம் தான் பெரிதென்று மனித இனம் கருதுவதால் ஊனுடம்பை மறைக்கின்ற உடையின்றி யார் இருப்பார்? அம்மானத்தை காக்கின்ற மகத்தான நெசவுதனில் மனதாரப் பாடுபட்டு… காலியக்கி…கையியக்கி… கச்சிதமாய் நூலியக்கி… கிடைக்கின்ற சொற்பக் கூலியிலே காலமெல்லாம் வாழ்வியக்கி கவலையிலே மெலிந்திருந்த கைத்தறி நெசவாளர் வாழ்வில் ஒளியேற்றிய கலங்கரை விளக்கமன்றோ நாச்சிமுத்து அவர்கள்.

  கூட்டுறவாம் சென்டெக்ûஸ நிறுவி வளர்த்தெடுத்து சென்னிமலை நகருக்கு சிறப்புச் சேர்த்தவரே!.

  பாரதத்தின் உயர் விருதாம் பத்மஸ்ரீ பெற்றவரே! தன் குடும்பத்திற்கு நேரம் தராமல் எந்நேரமும் கைத்தறிக்கு காவல் தந்தவரே!.

  குஞ்சக் கயிறிழுத்த கைத்தறியாளருக்கு நெஞ்சக் கனவு நனவாக வாதிட்ட வழக்கறிஞரே!.

  குண்டேந்தி பீரங்கி வந்தாலும் குன்றாத் துணிவோடு கைத்தறி உரிமைக்குப் போராடிய கைத்தறிக் காவலரே!.

  உன் குடும்பமும், உன் பெயரும் பல்லாண்டு பல்லாண்டு பெருவாழ்வு வாழட்டும்! பல கோடி நூற்றாண்டு புகழோடு வாழட்டும்!! என்று கூறினார்.

  மேலும் அவர், மத்திய அரசு ஆகஸ்ட் 7 ஆம் தேதியை ‘தேசிய கைத்தறி தினம்’ என அறிவிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நாச்சிமுத்து அவர்கள்.  மத்திய அரசால் கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டப்பிரிவு 3 (1) ன் படி இந்திய அரசின் துணி நூல் அமைச்சகத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஆணையின் படி கைத்தறியில் மட்டுமே நெசவு செய்ய வேண்டும் என பதினொரு ரகங்களை அறிவிக்க முக்கியக் காரணமாக இருந்தவர் நாச்சிமுத்து அவர்கள். மேலும் நாச்சிமுத்து அவர்கள் பல பொறுப்புகளையும் பொதுநலச் சேவைகளையும் திறம்பட ஆற்றியுள்ளார் எனக் கூறினார்.

  அடுத்து நாச்சிமுத்து அவர்களின் மருமகனும், நீல்கிரீஸ் முன்னாள் சேர்மனுமான திரு.M.செல்லையா  அவர்கள், நாச்சிமுத்து அவர்களின் மருமகன் என தன்னை பெருமையாகக் கூறியதோடு, நீல்கிரீஸ் நிறுவனத்தை தனது தந்தை வெற்றிகரமாக நடத்தியதைக் குறித்துப் பேசினார்.

  அடுத்து பயிலரங்கின் நாயகர் திரு. சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் தன் எழுச்சி உரையில் மாணவ, மாணவியர் இந்தியப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறித்து தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அத்தோடு நில்லாமல் இந்தியப் பொருளாதார  மேம்பாட்டிற்கு நம்மால் ஆன பணிகளைச் செய்ய வேண்டும். இன்று வேலை தேடி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இந்தியர் செல்கின்ற நிலைமாறி புதுப்புது தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக வருங்காலத்தில் இந்தியாவில் வேலைவாய்பு அதிகமாகும். ஆகவே, மாணவர்கள் எந்தெந்த துறை எதிர்காலத்தில் வேலைவாய்ப்பைக் கொடுக்கும் ; எந்தத் துறையில் சாதனைகள் புரிய முடியும் என்பதை கவனித்து தங்கள் இலக்கைத் தீர்மானிக்க வேண்டும்.

  அடுத்ததாக இந்தியாவின் பொது சுகாதாரம் தொடர்பான முன்னேற்றங்கள் பிரம்மாண்டமாக இருக்கும். மனிதர்கள் வெளியேற்றும் கழிவுகளை ஆராய கழிவறையில் சிப்கள் பொருத்தப்பட்டு இருக்கும். அச்சிப்கள் உடனுக்குடன் அவர் உடல்நிலையை ஆராய்ந்து அவருடைய குடும்ப மருத்துவருக்கு தகவலை அனுப்பும். அதைப் பார்க்கும் மருத்துவர், அம்மனிதனின் உடலில் உள்ள நோய்களை அறிந்து அதற்கான மருந்துகளை கம்யூட்டரில் பதிவு செய்வார். கம்யூட்டர் அதை மருந்தகத்திற்கு அனுப்பி மருந்துகளை  பழ்ர்ய்ங் மூலமாக அவர் வீட்டிற்கே அனுப்பும். இது போன்ற தொழில் நுட்பங்கள் தற்போது பரிச்சாத்தமாக அமெரிக்காவில் செயல்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இது இந்தியாவில் செயல்பட வாய்ப்புண்டு. ஆகவே இது போன்ற துறைகளில் கவனம் செலுத்திப் படித்தால் வருங்காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை வேலைவாய்ப்பில் அடையலாம்.

  அடுத்தாக நமது செல்போன் தொழில் நுட்பம் பல மடங்கு அதிகரிக்கும். செல்பேன் நமது மனதில் சிந்திக்கக்கூடிய விஷயங்களைப் புரிந்து கொண்டு எல்லா பணிகளையும் செய்து முடிக்கும். இத்துறையில் வேலைவாய்ப்பு பிரகாசமாக உண்டாகக்கூடும். போக்குவரத்திலும் பிரமிக்க வைக்கும் முன்னேற்றம் காணலாம்.

  மாணவ, மாணவியர் திரு. சந்தீப் ராய் ரத்தோர் உரையை  மிகவும் ஆவலாக கேட்டிருக்க, அடுத்து அவர் மாணவர் மத்தியில் கேள்வி பதிலாக சாதனை இந்தியர்களான இந்திராநூயி, சுந்தர்பிச்சை, சத்யநடேலா ஆகியோர் கடந்து வந்த பாதைகளை விளக்கிக்கூறி தன்னம்பிக்கையை ஊட்டினார்.

  இலன்மஸ்க் என்பவரின் திட்டங்கள் உலகில் தேவையான நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். இது போன்ற துறையில் மாணவ, மாணவியர் சேர்ந்து பயனடைய தங்களை தயார் செய்து கொண்டு வெற்றியின் முகவரியாக நீங்கள் திகழ என் வாழ்த்துக்கள் எனக்கூறி தன் உரையை நிறைவு செய்தார்.

  முடிவாக திரு.N.சுகுமார் ASP/Chemistry/SVHEC அவர்கள் நன்றி உரை நிகழ்த்த பயிலரங்கம் இனிதே நிறைவு பெற்றது.[/hide]

  இந்த இதழை மேலும்

  சத்துணவும் பாதுகாப்பும்

  நம் பயணத்தின் எல்லா காலங்களிலும் தரமான மற்றும் ஊட்டச்சத்துமிக்க உணவுகள் கிடைப்பது என்பது அரிதான விஷயம். ஆகவே, நம் பயணகால உணவின் பற்றாக்குறைகளை ஈடு செய்யும் விதமாக நமக்கு துணை புரிவதுதான் துணை சத்துணவுகள். அவைகளைப் பற்றி இனி விரிவாகப் பார்ப்போம்.

  1. சமச்சீர் புரதம்: எல்லா அத்தியாவசிய அமினோ அமிலங்களைக் கொண்ட சமச்சீர் புரதம் நம் உடலின் செரிமான நொதிகளை (Digestive enzymes) உற்பத்தி செய்யவும் மற்றும் நம் உடலின் உயிர் வேதியல் தன்மாற்றத்திற்குத் (Metabolic reactions) தேவையான ஹார்மோன்களை உற்பத்திச் செய்யவும் உதவியாக இருந்து பயண காலத்தில் நம் உடலை சக்தியாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவும். சமச்சீர் புரதம் எடுப்பதால் நாம் களைப்பின்றி பிரயாணம் செய்யலாம்.
  2. உயிர் மற்றும் தாதுச் சத்துக்கள்: இயற்கையான உயிர் மற்றும் தாதுச் சத்து துணைவுணவுகள் நம் உடல் செயலாக்கத்திற்கு வேண்டிய எல்லா உயிர்ச் சத்துக்கள் (vitamins) மற்றும் நம் உடலின் வேதி வினைகளுக்கு வேண்டிய கிரியா ஊக்கிகளான (bio-catalyst) அனைத்து தாதுச் சத்துக்களையும் (minerals) கொண்டிருக்கும். இதனால் நம் உடலின் எல்லா உயிரியல் வினைகளும் சிறப்பாக நடைபெற்று, ஆற்றலாக இருக்க உதவியாக இருக்கும். பிரயாணங்களில் நாம் எல்லா உயிர்ச் சத்துக்கள் மற்றும் தாதுக்களைக் கொண்ட உணவுகளைத் தேடித் தேடி சாப்பிட முடியாது. அந்த பற்றாக்குறைகளை இத்துணை உணவு ஈடு செய்யும்.
  3. ஒமேகா-3 கொழுப்பு: நம் உடலை மென்மையாகவும், தோலை இளமையாகவும், இரத்தக் குழாய்களை இலகுவாகவும், நரம்புகளை தளர்வாகவும் வைக்க ஒமேகா-3 கொழுப்பானது உதவியாக இருக்கும். இதனால் நம் உடல் இயக்கத்தை நரம்பு மண்டலம் சிறப்பாக இயக்கி நம் உடலை வலுப்படுத்தும். பிரயாணக் களைப்பை குறைத்து நம் உடலை இலகுவாக்க ஒமேகா-3 கொழுப்பு மிகவும் உதவியாக இருக்கும்.
  4. நீரில் கரையும் நார்ச் சத்து: இந்த நார்ச் சத்தானது நம் உடலின் செல்லணுக்களின் அசுத்தங்ளை உள் உறுப்புகளுக்குச் சேதாரம் இன்றி வெளியேற்றம் செய்ய உதவியாக இருக்கும். நம் செல்லனுக்களில் கழிவு நீக்கப்பட்ட காலியிடத்தில் ஆகாச சக்தியே நிரம்பி ஆற்றலைக் கொடுக்கும். பிரயாணக் காலங்களில் நம் உடலின் கழிவுகளை எளிதாக வெளியேற்ற நீரில் கரையும் நார்சத்து மிகவும் உதவியாக இருக்கும்.
  5. காய்கனிகளின் செரிவுச் சத்து: இவ்வித துணை உணவுச் சத்தானது, நம் உடலின் இரசம் (ஜீரண மண்டலம்), இரத்தம், சதை, கொழுப்பு (பாதுகாப்பு மண்டலம்), எலும்பு, நரம்பு மற்றும் விந்து நாதம் ஆகிய ஏழு மண்டலங்களின் செயலாக்கத்திற்கு கிரியா ஊக்கிகளாக விளங்கும். இதனால், நம் இரசம், இரத்தம் முதல் விந்து நாதம் வரை வலுவாக்கம் சாத்தியப்படுகிறது. காய்கனிகளின் செரிவுச் சத்தானது நம் உடல் முழுமைக்கும் புத்துணர்வைத் தரும். ஆகையால், நம் பயணம் சிறக்க இதுவும் பக்கபலமாக இருக்கும்.[hide]
  6. ஜிங்சங் தாவரச் சத்து: இந்தத் தாவரச் சத்து நம் நரம்புகளை வலிமையாக்குகிறது. பிரயாண நேரங்களில் உடல் வலியை கனிசமாக ஜிங்சங் தாவரச் சத்து நீக்கும். பிரயாணக் காலத்தில் முழுமையாக தூங்காவிட்டாலும் ஜிங்சங் தாவரச் சத்தானது களைப்பை நீக்க உதவியாக இருக்கும்.
  7. சி மற்றும் ஈ-உயிர்ச் சத்துக்கள்: நம் உடலின் நீர்க் கழிவுகளை நீக்க சி-உயிர்ச் சத்தும் கொழுப்புக் கழிவுகளை நீக்க ஈ-உயிர்ச் சத்தும் உதவியாக இருக்கும். மேலும் இவைகளின் ஆண்டிஆக்சிடென்ட் (Anti-oxidants) தன்மையானது நம் ஆயுளை நீட்டிக்கும். பிரயாண கால மாசுக்களில் இருந்து நம்மைக் காக்க இவையிரண்டும் உதவியாக இருக்கும்.
  8. பி-உயிர்ச் சத்துக்கள்: இவை நம் மண்ணீரல் மற்றும் கல்லீரல் செரிமனத்தை ஊக்கப்படுத்தும். இதனால் பயண நாட்களில் உணவுச் செரிமானமும் சத்துக் கிரகிப்பும் தரமாக நடைபெறும்.
  9. கால்சியம் மற்றும் மெக்னீசியத் தாதுச் சத்துக்கள்: மெக்னீசியம் நம் சதையையும், கால்சியம் நம் எலும்பையும் வளமாக்கும். இதனாலும் பயணகால உடல் வலிகள் குறையும்.[/hide]

  இந்த இதழை மேலும்

  குடும்ப உறவுகளைப் பேணிக்காப்பது எப்படி…

  உலகம் சுருங்கி விட்டது, உறவுகள் பிரிந்து விட்டன. உறவுகளுக்கிடையே  நெருக்கம் குறையக் குறைய கலாச்சாரமும், பண்பாடும் கறைபடியத் தொடங்கிவிட்டன, விரிசல்கள் அதிகமாகிவிட்டது, நட்பின் வட்டாரம் சுருங்கிவிட்டது, பெற்றோர்களுக்கு  குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள்   அதிகமாகிவிட்டது, இளசுகளுக்கு எந்த இலக்கும் இல்லாமல் அலைபேசியே (Android) உலகம்; என்றாகிவிட்டது,  குடும்ப உறவுகளை அவர்கள் மறந்து விட்டார்கள்.

  குடும்ப உறவுகள் சீரடைய வேண்டுமென்றால் குழந்தைகளை, வருங்கால சந்ததிகளை இளைய சமுதாயத்தை மாற்றுவதற்கு முன்பாக பெரியவர்கள் மாறியாகவேண்டும். நாம் மனம் விட்டுப் பேசுவதை அரிதாக்கிக் கொண்டோம், இன்முகத்தோடு பேசுவதையும் நிறுத்திக் கொண்டோம், அன்பு காட்டுவதை மறந்து விட்டோம். அனுசரித்துப் போவதை தவறவிட்டோம், இதனால் குடும்ப உறவுகளை சிதைத்து விட்டோம்.  இப்போது இதை மாற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் கதை நம் கையை விட்டுப் போய்விடும்.

  நாம் ஒரு நிமிடம் யோசித்துப்பார்க்க வேண்டும், கீழ்க்காணும் குணங்கள் நம்மிடம் இருக்கின்றனவா  என்று சுய சிந்தனை செய்து பார்க்க வேண்டும்,இந்த குணங்களைப்  பின்பற்றினால் குடும்ப உறவுகள் மலர்ந்து மணம் வீசும்.

  கீழ்க்காணும் பட்டியலில் எத்தனை குணங்கள் நமக்கு உண்டு என்பதை எண்ணிப்பாருங்கள்.

  1. இன்முகத்தோடு பேசுதல், 2. மற்றவரிடத்தில் அன்பு காட்டுதல், 3. அனுசரித்துப் போதல், 4. அரவணைக்கும் பாங்கினை வளர்த்தல், 5. கோபத்தைத் தவிர்த்தல், 6. பொறுமை காத்தல், 7. சகிப்புத் தன்மையை வளர்த்தல், 8. நட்பினை மதித்தல், 9. உதவும் மனப்பான்மையை அதிகப்படுத்துதல், 10. வீண் விவாதங்களைத் தவிர்த்தல், 11. உறவுகளுக்கிடையே சந்திப்புக்களை அதிகப்படுத்துதல், 12. உறவுகளை மதித்தல், 13. நானே பெரியவன் என்ற கர்வத்தைத் தவிர்த்தல், 14. ஏளனமாகப் பார்ப்பதைக் கைவிடுதல், 15. எல்லோரையும் சமமாகப் பாவித்தல், 16. குடும்ப நலம் விசாரித்தல், 17. இன்ப நிகழ்வுகளில் மகிழ்ச்சியோடு கலந்து கொள்ளுதல், 18. துன்பத்தில் உடனிருந்து உதவி செய்தல், 19. சுற்றத்தை மதித்தல், 20, புறம் பேசாதிருத்தல். 21. அவதூறுப் பேச்சை அறவே ஒழித்தல், 22. வரவு செலவுகளிலே நேர்மையாக இருத்தல், 23. விட்டுப் போன உறவுகளைப் புதுப்பித்தல், 24. ஆறுதல் சொல்வதில் முதன்மையாக இருத்தல், 25. குற்றங்களைச் சகித்தல், 26. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்தல், 27. உறவுகளை வார்த்தைகளினால் அல்லது செயல்களினால் காயப்படுத்தமால் இருத்தல், 28. மனக்காயத்திற்கும், மன வலிக்கும் மருந்திட்டு ஆறுதல் சொல்லுதல், 29. சமாதானத்தையும், சமரசத்தையும் பின்பற்றுதல், 30. நான் சொல்லித்தான் எல்லோரும் செய்ய வேண்டும் என்ற பிடிவாதம் இல்லாதிருத்தல், 31. அமைதி காத்தல், 32. மௌனமாக இருத்தல், 33. மற்றவர்களின் சொல், செயல் இவைகளை மதித்தல், 34. பகைமை பாராட்டாமல் இருத்தல், 35. அந்நியோன்யத்தை அதிகப்படுத்துதல், 36. இல்லாதவர்களையும் சம மரியாதையோடு நடத்துதல், 37. எளிமையாக இருத்தல், 38. அடக்கத்தோடு நடத்தல், 39, விருந்தினர்களை உபசரித்தல், 40. இளைஞர்களை உற்சாகப்படுத்தி ஊக்கம் தருதல், 41. தளர்ந்து போனவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுதல்,           42. கோபத்திலிருந்து  தன்னை அறவே விடுவித்தல், 43. எல்லோரையும் அழைத்துக் கலந்து பேசுதல், 44. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற குணத்தைப் பின்பற்றுதல் 45. எல்லாம் எனக்குத் தெரியும் என்ற இறுமாப்பைத் தவிர்த்தல். 46. மன்னிக்கும் மனப்பாங்கினை  வளர்த்தல், 47. தன்னலம் இன்றி இருத்தல்.

  என இன்னும் சொல்லாத, சொல்ல விடுபட்ட, உயர்ந்த குணங்களுக்கு நம்மை ஆட்படுத்திக் கொண்டுவிட்டால் குடும்ப உறவுகள் மேம்படும், நெருக்கம் அதிகமாகும் சுற்றமும் நட்மும் பெருகும், சுகமும் மகிழ்ச்சியும் கூடும், மகிழ்ச்சி அதிகமாக அதிகமாக ஆயுளும் அதிகமாகும், மனவருத்தங்களும், மன அழுத்தங்களும் குறையும். போட்டி பொறாமை இல்லாமல் போகும். புறங்கூறுதல் அறவே ஒழியும். பொய்யான நடிப்பு குறையும், உண்மையான அன்பு துளிர்க்கும், உறவுகள் உயிர்க்கும்.

  இந்தக் குடும்ப உறவுகளைப் பேணி வளர்த்தல் என்ற வார்த்தை வரும்போதே எனக்கு நினைவில் வருபவர்   பாசமிகு நண்பர் உடுமலை மருதம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனர் திரு. ட. கந்தசாமி அவர்கள் அவருடைய உடையும் வெண்மை உள்ளமும் வெண்மை. எல்லோரிடமும் இனிமையாக, சமமாகப் பழகும் இயல்பு உடையவர். நல்ல குணங்களின்; தொகுப்பு, சிரித்துச்சிரித்து மகிழ்ந்து பேசும் இவரின் சிறப்பான குணம் இவர் மீது ஒரு தனி மரியாதையை வளர்க்கிறது.

  மழையும் வெய்யிலும் ஒரு சேரக் கிடைத்தால்தான் ஒரு பூ, பூக்க முடியும் என்பதைப்  போல நலம் தீங்கு இரண்டும் கலந்ததுதான் வாழ்வு என்பதை அறிந்த பக்குவமான மனிதர். பாராட்டையும் விமர்சனத்தையும் சரியாக ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மையானவர். எளிமையாகவும், இயல்பாகவும் இருப்பதை வழக்கமாகக்  கொண்டவர். மரங்கள் மண்ணை நேசிக்கின்றன, மீன்கள் தண்ணீரை நேசிக்கின்றன, தேனீக்கள் பூக்களை நேசிக்கின்றன, இவர் உழைப்பை நேசிக்கிறார், உழைப்பை நேசித்ததால் உயர்ந்து நிற்கிறார்.

  “எதிலும் முதல்தேவை, துடுக்கத்தனமான துணிவுதான்” என்பார்கள், அந்தத் துணிச்சல் இவரிடம் அதிகம் உள்ளது. இதனால் இவர் மற்றவர் களுக்கெல்லாம் வழிகாட்டியாக இருக்கிறார், நட்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

  ஒரு விவசாயியாக இருந்து இன்று தொழிலதிபராக தன்னை உயர்த்திக் கொண்டது, இவரது உழைப்பின்  பலனால் வந்தது. வாழ்க்கைப் போராட்டத்தில் இவர் கற்றுக்கொண்ட அனுபவங்களும் மந்திரங்களும்  ஏராளம். இனிமையான பேச்சும், அன்போடு பழகுவதும், அனுசரித்துப் போவதும், அரவணைக்கும் குணமும், விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கும், கோபப்படாது இருத்தலும், அடக்கமாக இருத்தலும், பொறுமையைக் கடைபிடித்தலும், சகிப்புத்தன்மையும், உறவுகளை அணைத்துச் செல்வதும் இவரின் தனித்துவங்கள்.[hide]

  தன் குடும்பத்தின் மீதும், பெண் குழந்தைகள் மீதும், ஈடில்லாத ஒரு அன்பும், பாசமும் அவர்கள் வளர்ச்சியில் இணையில்லா ஒரு அக்கறையும் கொண்டவர், தன்னை மெழுகுபோல் உருக்கிக் கொண்டு உறவுகளை வளர்த்தவர். இவரின் அன்பு, ஆனந்தமயமான நினைவுகள், அர்த்தமுள்ள கதைகள் இவரை  மிகுந்த மகிழ்ச்சியாய் வைத்திருக்கிறது.

  ‘பகையைக்கொண்டு பகையை முடிவுக்குக் கொண்டு வரமுடியாது. அன்பைக்கொண்டு தான் பகையை முடிவுக்குக் கொண்டுவர முடியும்’ என்பார் புத்த பெருமான், அவரின் சீடன் பூர்மா என்பவர் பௌத்த தர்மத்தை மற்றவர்களுக்கு போதிப்பதற்காகப் புறப்பட்டார்.

  “நீ தர்மத்தை போதிக்கும்போது, அந்தப்பகுதி மக்கள் உன்னை வசைச்சொற்களால் திட்டினால் என்ன செயவாய்?” என்று கேட்டார் புத்தர்.

  “இவர்கள் நல்லவர்கள்.கைநீட்டிக் காயப்படுத்தாமல், பேசுவதோடு நிற்கிறார்களே என்று மகிழ்வேன்.”

  “அவர்கள் கைநீட்டி அடித்தால்?”

  “எவ்வளவு நல்லவர்கள், ஆயுதங்களால் தாக்காமல் கைகளால் அடிக்கிறார்களே என்று ஆனந்தப்படுவேன்.”

  “சரி…ஆயுதங்களால் தாக்கத் தொடங்கினால்?”

  “இவர்கள் மிக மிக நல்லவர்கள், பிறவித் துன்பத்திலிருந்து விடுபட ஒவ்வொருவரும் என்னென்னவோ வழிகளைக் கடைப்பிடிக்கும் போது, இவர்கள் என்னுடைய முக்திப் பாதைக்கு வழி காட்டினார்களே என்று மகிழ்ச்சி அடைவேன்.”

  “பூர்மா… உனக்கு புத்த ஞானம் கனிந்து விட்டது. போய் வா” என்றார் புத்தர். கோபத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையும் நீக்கி   மன்னிக்கும் மனோபாவத்தை வளர்ப்பது தான் கடவுள் தரும் சீதனம். அதைத்தான் புத்தர் உலகத்துக்குக் கற்றுத் தந்தார். மன்னிக்கும் குணம் தான் உறவுகளை சேர்த்து வைக்கும். காலம் அதற்குத் துணைநிற்கும். காலம் தான் இறுதித் தீர்ப்பு சொல்லும் நீதி தேவன், நீங்கள் மன்னித்தால் காலம் உங்களை மன்னிக்கும்.

  சில உறவுகள் உங்களுக்கு துரோகம் செய்திருக்கும், சில உறவுகள் உங்களை காயப்படுத்தி இருக்கும், சில உறவுகள் நன்றி மறந்து  வஞ்சகமாக இருந்திருக்கக் கூடும், சில உறவுகள் உங்களை அவமானபடுத்தி புறம் பேசி தூசித்திருக்கக்கூடும். அதற்காக அவர்களை அறவே ஒதுக்குவது சரியா?

  கொலை செய்ய முயற்சி செய்து குடும்பத்தை அழிக்க நினைத்த எதிரிகளைக் கூட மன்னிக்கிறோம். சிறு தவறுகள் செய்த உறவுகளை மன்னித்தால் என்ன? நல்லதுதானே!

  “ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுங்கள் என்றார், இயேசுபிரான் காட்டினால் என்ன? நல்லதுதானே!

  “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

  நன்னயம் செய்து விடல்”

  என்றார் வள்ளுவர், மன்னித்து நன்மைகள் செய்தால்   என்ன? நல்லதுதானே!

  “தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ இயல்பு” அந்த தெய்வ இயல்புக்கு  மாறிக் கொண்டால் என்ன? நல்லதுதானே!

   பொறுத்தார் பூமி ஆள்வார்   மற்றவர் குற்றங்களைக் பொறுத்துக் கொண்டால் என்ன?  நல்லதுதானே!

  தன் குடும்பம், தன் பெண்டு, தன் பிள்ளை தன் வேலை என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் இல்லாமல் பொது நலத்தை, சுற்றத்தின் நலத்தை உறவுகளின் வளத்தை ஒரு முறை அன்போடு பார்த்தால் என்ன? நல்லதுதானே!

  குறைகளை மன்னித்து, அதை மறந்து விட வேண்டும். மறதியைப் போல் ஒரு மாமருந்து இல்லை. தவறு செய்தவர்கள் தவறுகளை உணர்ந்து வருந்தி, திருந்த ஒரு சந்தர்ப்பம் வழங்கினால் என்ன? நல்லதுதானே!

  எல்லாவற்றையும் விட உறவுகள் புனிதமானது. கவிஞர் கவிதாசன் அவர்களின் வரிகளிலே சொன்னால் “மனக்காயங்களை குணப்படுத்தும் ஆற்றல், மன்னிப்பு என்ற மாமருந்துக்கு மட்டுமே உண்டு, மன்னிக்கும் மனங்களில்தான் மகிழ்ச்சி பூக்கள் நொடிக்கு நொடி மலர்ந்துக் கொண்டே இருக்கும்.”

  குறைகாணும் போதெல்லாம் ஆனந்தத்தின் வாசல்களை அடைத்து விடுகிறோம். ஆம், “குறையே இல்லாத மனிதனும் இல்லை”, “குறையை மட்டுமே காண்பவன் மனிதனே இல்லை” என்பது சரிதானே.

  எதிரியாய் இருப்பவன் ஒரு நாள் நண்பனாவதும், நண்பனாய் இருப்பவன் ஒரு நாள் எதிரியாவதும் காலம் செய்கிற கோலம். எல்லாவற்றையும் மாற்றிக் காட்டும் மந்திரம் காலத்திற்கு மட்டுமே தெரியும்.

  பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு, காலம் ஒரு நாள் சரியான பதில் சொல்லும்.

  ஏதேனும் பெரிய இழப்பு என்று ஒன்று வந்தால், காலம் ஒரு நாள் அதை ஈடு செய்யும்.

  சூதினால் நல்லவரைக் குழிபறித்து அவமதித்தால், காலம் ஒருநாள் அவர்களைப் பழிதீர்க்கும்.

  ஏதும் பாவம் செய்யாமல் பழிமட்டும் வந்து சேர்ந்தால், காலம் ஒருநாள் பழி நீக்கி  புகழ் சேர்க்கும். [/hide]

  இந்த இதழை மேலும்

  ஈரம்..

  கடலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த இரண்டு மீன்கள் இப்போது ஜன்னலோரத்துக் கண்ணாடித் தொட்டியில் சின்ன மீன் பெரிய மீனைப் பார்த்துக் கேட்டது. நமது வீடு இப்படி திடு திப்பென்று குறுகி விட்டதே? காரணம் என்ன என்று.

  ஏ குட்டி மீனே இப்போது நாம் இருப்பது கடலல்ல… வீடு. வீட்டில் ஒரு சிறிய அறை. அந்தச் சிறிய அறைக்குள் ஒரு சிறிய கண்ணாடித் தொட்டி என்று பெரிய மீன் கூற சின்ன மீன் யோசித்தது கடலை விட சிறியதா வீடு என்று கேட்டது.

  வாலால் ஒரு தட்டு தட்டிய பெரிய மீன் வாய்க்கு வந்தபடி உளறாதே. கடலை விட வீடு மிக மிகச் சிறியது. வீட்டை விட சிறியவன். மனிதனை விட மனித மனம் மிக மிக சிறியது என்றது.

  இயற்கை பரந்து விரிந்தது. அதைப் பிரித்துப் பார்க்கத் துடிக்கும் மனித மனம் ரொம்ப ரொம்பக் குறுகலானது என்று பாவம் அந்தக்குட்டி மீனுக்கு எப்படித் தெரியும்.

  தானியம் அளக்கப்படுகிறது. அளந்து அளந்துக் கோணிப்பையிலே கொட்டப்படுகிறது. மிஞ்சியிருந்தது தரையிலே இன்னும் கொஞ்சம் தானியம். அப்படியும் இப்படியும் மேலும் கீழும் பையை வாவகமாக் குலுக்கக் குலுக்க மீதியிருந்த தானியத்திற்கும் இட ஒதுக்கீடு கிடைத்து விடுகிறது. அன்பை தானியமாக்கி அடுத்தவர்களின் மனம் என்ற பைகளில் கொட்டிப் பாருங்கள் கொட்டக் கொட்ட வாங்கிக் கொண்டே இருக்கும். இனி கொள்ளாது என்ற பேச்சுக்கே இடம் கொள்ளாது போகும்.[hide]

  ஒரே ஈரமாய் இருக்கிறது என்றார் ஒருவர். கொஞ்சங்கூட ஈரமே இல்லை என்றார் இன்னொருவர். இருவரும் நண்பர்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துக் கொண்டார்கள். இருவருடைய முகத்திலும் பெரிய வாட்டம்.

  ஒருவர் சொன்னார்; இப்போது தான் கட்டி முடித்தேன். வீடு முழுக்க ஈரம் கசிகிறது என்று.

  பல ஆண்டுகளாக நான் எனது உறவுகளைக் கட்டிக் காப்பாற்றினேன். கொட்டிக் கொட்டிக் கொடுத்தேன். எல்லாம் தீர்ந்து விட்டது. இப்போது நானே ஓட்டாண்டி. என் கையில் பொருளுமில்லை. என்னைச் சுற்றி எந்த உறவுகளும் இல்லை. நான் இப்போது வற்றிப்போன குளம் என்று இன்னொருவர் கூறினார்.

  இவருடைய வாழ்க்கையிலும் ஈரம் என்பது இடம் மாறி விளையாடி விட்டது. சிமெண்ட், மணல், ஜல்லி, என்கிற கலவை சரியில்லாததால் வீட்டுக்கட்டிடத்தில் ஈரக்கசிவு.

  மனித நேயம் மனிதாபிமானம் என்ற கலவை சரியில்லாததால் மனிதக் கட்டிடத்தில் இல்லாமல் போனது ஈரம்.

  முதலாமவர் பொறியாளரை நோக்கி ஓடினார் முறையிட. அடுத்தவர் கோயிலை நோக்கி ஓடினார் கடவுளிடம் முறையிட.

  ஈரமே நீ ஈரமில்லாமல் போகலாமா இப்படி ஈவு இரக்கமற்று? வாழ்க்கையை வருடங்களால் கணக்கு பார்க்காதீர்கள். இதயத் துடிப்புகளால் பாருங்கள் என்கிறார் பெய்லி. ஈர இதயமே இந்தியாவிற்கான பசுமை.[/hide]

  இந்த இதழை மேலும்

  மனப்பட்டாசு!

  1. வெயிலும் நிழலும்:

  கல்லூரி காலங்கள் இனிமையானவை, அவை முடிந்து போகும் என்று யாரேனும் சொல்லும்பொழுது நம்ப சிரமமாகத்தான் இருக்கும்.  இருந்தது.  நாடகங்கள் எழுதவும் நடிக்கவும் நேரம் இருந்தது.  மணிக்கணக்கில் 2000, 4000, 5000, 10000 என்று மீட்டர்கள் தூரத்தை ஓடிக்கடந்த நாட்களை திரும்பிப் பார்க்கின்றோம்.  நாமக்கல்லில் இருந்து மோகனூர் செல்லும் பாதையில் இலத்துவாடி என்னும் இடத்தில்… சாலையின் வலதுபக்கம் தூய்மையான சுவாசக்காற்றோடு ஆற்றல் வாய்ந்த நினைவுப் பதிவுகளையும் அளித்த கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சுமார் ஐநூறு ஏக்கர் பரப்பளவிற்கும் அதிகமாக அமைந்திருக்கின்றது.  நல்ல வெயில் நேரத்தில் விடுமுறை நாட்களின் பிற்பகல் நேரத்தில் தனியாக நடந்து போனால் கண்கள் மய மயக்க சூரிய கதிர்வீச்சை அனுபவிக்கலாம்.  அதன் பிறகு… தனியாக இருந்த அடுக்கு மாடி அல்லாத விடுதியின், நிழல்… அபாரமாக இருக்கும்.

  1. சென்னை நாமக்கல்:

  எங்கே பிராக்டிகல் மார்க்கை கட் செய்துவிடுவார்களோ!  என்கின்ற பயத்தோடு திரிந்த மாணவர்களுக்கு மத்தியில் வருடா வருடம் ஒரே வகுப்பில் படித்து… ஐந்து வருட படிப்பை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பத்து வருடங்களாக படித்து வந்தவர்களும் உண்டு.  அப்பொழுது அதுதான் இரண்டாவது கால்நடை மருத்துவக் கல்லூரி.  இன்னொன்று சென்னை வேப்பேரியில் இருந்தது. சென்னை கல்லூரி 1903 ல் தொடங்கிய பெருமை வாய்ந்த ஒன்று. பல தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடத்திருக்கிற கட்டிடம் அது. அதுபோல மின்னுகிற பாக்கியம் நாமக்கல்லுக்கு கிடைத்த மாதிரி தெரியவில்லை.  அது ஒரு பெரிய குறையுமில்லை.

  தோன்றின் புகழொடு தோன்றுக என்று வள்ளுவர் சொன்னது மிக ஆழமான பொருள் உள்ளது.  புகழைத் தேடி செல்ல வேண்டியது இல்லை அது தானாக வந்து சேரவேண்டிய ஒன்று என்று நாமக்கல் கல்லூரி நம்புகிறது.  புகழும் தேடி வந்துகொண்டுள்ளது.  சென்னையில் இருந்தால் படிக்க மாட்டாய்! என்று அப்பா ஏன் முடிவெடுத்தார் என்று தெரியவில்லை.  எவ்வளவோ பூடகமாக, சூசகமாக சொல்லிப்பார்த்தும்… கடைசியில் நேரிடையாக கேட்டுப் பார்த்ததும் ஞாபகம்.  படிக்க மட்டுமே, மாட்டாய்… என்று அவர் நினைத்திருக்கலாம்.  இப்போது இருபத்தியாறு வருடங்கள் கழித்தும் அவர் ஏன் நாமக்கல் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தார்!  என்று அவருக்கு மட்டுமே நியாயப்படுத்துகிற காரணம் இருக்கிறது.  சென்னையில் இடம், கேட்டிருந்தாலும் நிர்வாகம் என்ன கூறியிருக்கும் என்பது தனிக் கதை.  சென்னையில் படித்திருந்தால் எப்படி இருந்திருப்போம் என்பது கற்பனை குதிரை மீது சவாரி செல்வதற்கான வாய்ப்பு.  நாமக்கல்லில் படித்ததனால் எதையும் இழந்துவிடவில்லை.  என்ன கிடைக்க வேண்டியிருந்ததோ…  ஐந்து தங்கப் பதக்கங்கள் உட்பட… எல்லாம் கிடைத்துள்ளது… குறையொன்றுமில்லைதான்…

  அங்கே பெற்ற அனுபவங்களை படம் பிடித்துச் சொல்வது அலாதி இன்பமானது.  நானும் கல்லூரியும் தனித்து விடப்பட்ட ஏகாந்த நாட்கள் ஏராளம்.  மக்கள் அடர்த்தி குறைவாக இருந்த இடங்களில் ஒன்று 1992ல் இலத்துவாடி… பத்தொன்பதாம் நம்பர் ரூம்… மல்டி பர்பஸ்… Block… என்பது நாங்கள் முதலாமாண்டில் காலடி எடுத்து வைத்த இடம்.  பத்து பேருக்கு ஒரு ரூம்… நிறைய கட்டில்கள்… அடுத்த மூன்று வருடங்கள் அந்த அறை… அடைக்கலம் கொடுத்தது… நீண்ட காலம் கழித்து சென்று பார்த்தபொழுது… ஆர்வத்தோடு என்னை விழுங்கி… அன்பைப் பொழிந்து நனைத்தது…   நண்பன் விமல் நான் சேர்ந்த அன்றைக்கே சேர்ந்தான்.  பெருந்துறைக்காரன்.  உயரத்திலும் மனப்பாங்கிலும் எட்டிப்பிடிக்க முடியாதவன். வாலிபாலுக்கும் நெட்டுக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்திக்கொடுத்தவன். ஆச்சரியமாக… அவனுக்கு நாமக்கல்லில் படிக்க வேண்டுமென்று விருப்பம்.  அவங்கப்பாக்கு, அதற்கு நேர்மாறாக… விமலை சென்னையில் சேர்க்க வேண்டுமென்று ஆசை… இப்படி நான்கு பேருடைய விருப்பம் நாலுவிதமாக இருக்க…

  அப்பா, பையன் பேச்சை கேட்பதா… மகன் விருப்பத்தை…  தந்தை… நிறைவேற்றி வைப்பதா

  என்று நான்கு பேரும் பேசிக்கொண்டே, இருந்த இடத்திலிருந்து எதிர்காலத்தை எட்டிப்பார்த்துவிட முடியுமா? என்று முயற்சி செய்துகொண்டு இருந்தோம். எதிர்காலத்தைகாட்டும் கடிகாரம் இப்போதும் அப்போதும் கண்டறியப்படவில்லையே…[hide]

  1. கடிகார… முள்:

  கண்டறியப்படவில்லையே! என்று கடிகார கவலை ஆரம்பித்தவுடன்… கடிகார நிறுவனம் ஞாபகம் வருகின்றது.   கடந்த 1990 ல் என்று நினைவு.  டைட்டன் நிறுவனம் பல்லடம் அரசுப் பள்ளியில் தனது கம்பெனி பணிக்கு மாணவர்களை எடுத்துக்கொள்ள செய்முறை, எழுத்து தேர்வுகள் வைத்திருந்தது.  சிலபல செயல் முறைகளுக்கு பின்னர் நான் தேர்வாகவில்லை நண்பர்கள் இரமேஷ் பரமேஷ் தேர்வானார்கள் என்று தெரியவந்தது. பரமேஷ்… ஐ அவங்க அம்மா…  வெளியூர் போல் வேலை செய்ய வேண்டாம், என்று தடுத்தார்கள். இரமேஷ் இப்பொழுதும் டைட்டனில் பணிபுரிகிறான்.  அந்தப் பணி கிடைக்காத வருத்தம் சில நாட்கள் நீடித்ததாம்.  அக்கா சொல்வார்கள்.  தேம்பி தேம்பி அழுதாயேடா… என்று…  இப்பொழுது என், நினைவில் அழுத முகம், ஞாபகமில்லை… அழும்பொழுது யாரும் கண்ணாடியில் பார்ப்பதில்லை. ஒருவேளை அப்படிப் பார்த்தால்… அழவே தோன்றாதோ? என்னவோ! ஆனாலும் ஏமாற்றம் ஒரு கடிகார முள் போல குத்தும் அவ்வப்போது. சுத்தும். ஞாபகம் உள்ளது.  தோல்விகளை தாங்கி வளர இப்படி அனுபவங்கள் அவசியம் போலும்.  எப்பொழுதும் நண்பர்கள் கூட்டத்துடனே இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். டைட்டன் நிறுவனம் அழகான வாட்சுகளை உற்பத்தி செய்கின்றது வாட்சை பார்க்கும் போதெல்லாம் இரமேஷ் ஞாபகம் வருவான். ஒரு மணி இரவில் நட்ட நடுக்காட்டில் தண்ணி கட்டிவிட்டு… அங்கிருந்து காலையில் ஆறேழு கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி வந்த சலிப்போ களைப்போ இல்லாமல் உற்சாகமாக எங்களோடே சுற்றிக்கொண்டிருப்பவன்.  ஒரு பத்துப் பேருக்கும் மேலாக பசங்க வீட்டில் சைக்கிளை விட்டுவிட்டு எதிரே இருந்த பள்ளிக்குப் போவது வழக்கம்.  நண்பர்களிடத்து ஒரு அணி உணர்வை உருவாக்குவது அந்தக்கால வழக்கமாக ஆரம்பித்திருக்க வேண்டும்.

  1. கிரிக்கெட் அணி:

  அணி என்றாலே… எங்க ஊர் கிரிக்கெட் டீம் ஞாபகம். அங்கே, காவேரிக்காடு என்ற இடத்தில் கரடுமுரடான உழுதுவிட்ட நிலத்தை கொஞ்சம் சமன்செய்து அதில் கிரிக்கெட் விளையாடி வந்த காலம் நினைவில் பதிவாகி உள்ளது.  நண்பர் ஒருவர் கூறினார்.  கிரிக்கெட் மேட்ச் தினமென்றால் நேஷனல் செலக்ஷன் போல… ராஜாண்ணா நம்மை டீமில் எடுப்பாரா… மாட்டாரா… என்கின்ற பதட்டத்தோட பார்த்தது உண்டு.  அதற்காகவே அவர் வீட்டுக்குப் போய் நல்லபெயர் வாங்க முயற்சி செய்வதும் உண்டு.  நெசவுத் தொழில் செய்யும் ஊர்.  கைத்தறி நெசவில் அழகான புடவைகள் உருவாகும். ‘கண்டித்தார்’ என்பது ஊடு நூலை சுற்றி வைத்திருக்கும் ஒரு சிறு உருளை.  அதை அம்பு போன்ற அமைப்பில் மாட்டி குறுக்கு மறுக்காக பரிமாறி சேலை உருவாகும்.  அதற்காக ‘கண்டித்தாரை’ அறிமுகப்படுத்தவில்லை.வேறொரு விஷயம் முக்கியம்.   நெசவு செய்பவர்களுக்கல்ல… எதிர்கால விளையாட்டுத் தூண்களுக்கு.  அப்பொழு தெல்லாம் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்று நினைத்தது கிடையாது.  இப்பொழுதும் இடம் பிடிக்கவில்லை என்பதில் சந்தேகமில்லை.  ஆனால் எவ்வளவு யோசித்துப்பார்த்தாலும் கிரிக்கெட் விளையாடிய காலத்தை எப்படியும் அதிகரித்திருக்க முடியாது என்றுதான் தோன்றுகின்றது.  அவ்வளவு நேரம் சந்தோஷத்துக்காகவே செலவிட்டோம்.  கிலோமீட்டர் கணக்காக நடந்ததும் மணிக்கணக்காக வெயிலில் வாடியதும் (வாடவே இல்லை அன்று… நேரம் ஆக ஆக உற்சாகம் உயர்ந்துகொண்டுதான் இருந்தது) பெரிதாக தெரியவே இல்லை.  ஒரு சேலை அறுத்த பிறகு… முடித்த பிறகு அறுத்தெடுப்பார்கள்.  அந்த சேலை நிற கண்டித்தார்கள் நூல் பந்து சுத்துவதற்காக கிடைக்கும்.  வண்ண வண்ண பந்துகளை சுற்றி அதை தேங்கா மட்டை பேட்டில் அடித்து விளையாடுவது ஏக சந்தோசம்.  அதன் பிறகு கார்க் பந்தில் ஆடுவோம்.

  பல ஊர் இளைஞர்கள் ஓரிடத்தில் மேட்ச் விளையாடும் பொழுது அந்த இடத்தில் டீ விற்பவர், ஐஸ் விற்பவர் என்று சின்ன திருவிழா போல காணப்படும்.

  “எவனோ!  மாட்டாஸ்பத்திரி… டாக்டராமா… மாட்டடி அடிக்கிறான்!”

  என்று அடையாளம் தெரியாதவர்கள் மேக்காலூர் மேட்சில்… முள்ளுக்காட்டுப்பக்கம் பேசிக்கொண்டு இருந்தார்கள் என்று இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் கேள்விப்பட்டது இரண்டு நாள் முன்னாடி கேட்டது போல இருக்கின்றது.  ‘பவர் பாண்டி’ திரைப்படத்தில் கபடி போட்டியை பார்க்கும்பொழுது, ஊர்க்காரர்களுடன் கிரிக்கெட்டும் வாலிபாலும் ஆடியது நினைவு வருகின்றது.  சில சொற்கள் மனப்பட்டாசு, மனசாக்லெட்டு போன்றவை.  சில சொற்கள் ஆரஞ்சு மிட்டாய் போன்றவை. இரண்டு பக்கமும் வால் மாதிரி வெள்ளை மழைக்காகிதம் (பாலித்தீன் பேப்பர் – மழைக்கு தலைமீது குடையாவதால்… கிராமத்தில் இந்தப் பெயர்தான்)  இறக்கை போல இருக்க ஆரஞ்சு நிற மிட்டாய் மீது பல்தெரிய ஒரு முயல் சிரிக்கும் மிட்டாய்கள் இளம் வயது ஃபேவரிட்.  அவை வாயில் கரைய வெகு நேரமாகும்…  அதுபோல…  இந்த சொற்கள் மனசில் சிக்கிக் கொண்டு நினைக்கும் போதெல்லாம் இனிப்பைக் கசிய விட்டுக்கொண்டே இருக்கின்றன.  மிட்டாய் கூட சாப்பிட்டால்தான் சுவை… சொற்களை நினைத்தாலே சுவை.[/hide]

  இந்த இதழை மேலும்

  கர்ப்ப கால பராமரிப்பு

  வரையறை

  1. கர்ப்ப கால பராமரிப்பு என்பது ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தில் வரையறுக்கப்பட்ட கவனிப்பு (பரிசோதனை, அறிவுரைகள்) முறைகளைக் கடைபிடிப்பதே ஆகும்.

  கர்ப்பகால பராமரிப்பின் நோக்கம், கர்ப்ப கால பராமரிப்பின் மூலம் கீழ்க்கண்ட வியாதிகளைக் கண்டறியலாம்.

  • இரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய்
  • சிசுவின் வளர்ச்சியில் காணலாகும் குறைபாடு
  • இரத்த சோகை

  பரிசோதனைகள்

  • மருத்துவரிடம் கலந்தாய்வு
  • எடை பார்த்தல், உயரம் அளத்தல்
  • இரத்த அழுத்தம் அளவிடல்
  • இரத்த சோகை பரிசோதனை
  • இரத்த சர்க்கரை பரிசோதனை
  • சிறுநீர் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்
  • கணவன் மனைவி இருவருக்கும் எய்ட்ஸ் பரிசோதனை

  பராமரிப்பு முறைகள்

  • உறக்கம் (6-8 மணி நேரம்)
  • அதிக நீர் குடித்தல் (2-3 லிட்டர்)
  • தினமும் குளித்தல், தூய ஆடை அணிதல்
  • பல் சுத்தம், மார்பக பராமரிப்பு

  கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

  • பெண் கருத்தரிக்கும் முன் மருத்துவரைக் கலந்தாலோசித்து ஃபோலிக் ஆசிட் (Folic Acid) மற்றும் மருத்துவ ஆலோசனைகளைப் பெறவேண்டும்.
  • பெண் கருவுற்றவுடன் மருத்துவரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  • பேறு காலத்தில் குறைந்த பட்சம் மூன்று முறையேனும் முழு பரிசோதனை மற்றும் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.
  • தாய்க்கு நூறு நாட்கள் இரும்புச்சத்துடன் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் கொடுக்கப்பட வேண்டும்.
  • கால்சியம் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
  • 3, 5 வது மாதங்களில் இரணஜன்னி தடுப்பூசி போட வேண்டும்.
  • 10 மாத பேறு காலத்தில் தாய் 8 முதல் 10 கிலோ எடை அதிகரிக்க வேண்டும்.

  உடற்பயிற்சிகள்

  • தினமும் அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.
  • மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.
  • மனதில் மகிழ்ச்சி ஏற்பட யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.[hide]

  உணவுமுறைகள்

  • பழங்கள், காய்கறிகள்
  • இரும்புச் சத்து அடங்கிய உணவுகள்
  • கால்சியம் அடங்கிய உணவுகள்
  • கொழுப்புச் சத்து அடங்கிய உணவுகள்
  • பழங்கள்- ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், மாங்கனி, தக்காளி, சாத்துக்கொடி, திராட்சை, நன்கு பழுத்த பப்பாளி
  • காய்கறிகள்- கேரட், பீட்ரூட், கத்திரிக்காய், பீன்ஸ், தக்காளி, சவ்சவ், கிழங்கு வகைகள், கீரை வகைகள்.
  • இரும்புச் சத்து உள்ள உணவுகள்-ராகி, கோதுமை, நிலக்கடலை, பேரிச்சம்பழம், தேன், வெல்லம், கரும்புச் சர்க்கரை பீட்ரூட், இளம்சிவப்பு நிற உணவுகள், ஈரல். இரும்புச் சத்தினை உட்கிரகிக்க வைட்டமின் “C”நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். எ.கா. எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய்
  • புரதச் சத்துள்ள உணவுகள்- பால், முட்டை, இறைச்சி, மீன், நண்டு, அனைத்து வகையான பயறு வகைகள்.
  • கொழுப்புச் சத்துள்ள உணவுகள்-பால், பால் பொருட்கள், முட்டை, மீன், இறைச்சி
  • இவையனைத்தும் ஆரோக்கியமான முறைகளில் சமைத்து உண்ண வேண்டும்.

  எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும்?

  • பிரசவ வலி
  • பனிக்குடத்திருந்து நீர் கசிதல்
  • இரத்தப் போக்கு
  • குழந்தையின் அசைவு தெரியாமை
  • அதிகப்படியான வாந்தி

  இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஏனெனில், இதனால் குழந்தையின் உயிருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.[/hide]

  இந்த இதழை மேலும்

  இலைகளை எண்ணுகிறாயா? பழங்களை உண்ணுகிறாயா?

  நீ யார்? விலை மதிப்பில்லாத கேள்வி. இப்படிக் கேட்பது எளிது.

  நான் யார்? எனக் கேள்வி கேட்டு, அதற்குப் பதில் சொல்வது கஷ்டம்.

  இந்தக் கஷ்டத்தால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஏரளாம். ஏராளம்.

  ஏன் இந்த நிலை? தன்னை அறியாமல். தான் தோன்றித்தனமாக, சோம்பேறித்தனமாக, முயற்சி செய்யாமலும், பணிபுரியாமலும் முன்னேறத் துடிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டிருப்பது வருத்தப்பட வேண்டிய தகவல்.

  உலகிலேயே அதிக இளைஞர் பலமுள்ளது நம்நாடு. அவசரம், பரபரப்பு, குறிக்கோள் இல்லாத மேம்போக்கான வாழ்க்கை என இன்றைய இளைஞர்கள் மேல் நாட்டுக் கலாச்சாரம், உணவு, உடை என தம்மை அறியாமல் வாழ்ந்து வருகின்றனர்.

  உலகில் வாழும் உயிரினங்களில் மிக உயர்ந்தது மனித இனம். ஆறறிவு எனும் பகுத்தறிவுள்ளவன் மனிதன்.

  ஐந்தறிவுடைய உயிரினங்களை விலங்குகள், பறவைகள் என்று சொல்கிறோம் விலங்குகளில் வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடு, போன்றவைகளை கால்நடைகள் என்று அழைக்கிறோம்.

  9 வயது பேத்தியிடம், ஆடு, மாடு, போன்றவைகளை கால் நடைகள் என்று எதனால் அழைக்கிறோம்? என்று கேட்டேன்.

  அவள் புத்திசாலித்தனமாய் சொன்னாள் அவை காலால் நடப்பதால் கால் நடைகள் என்கிறோம்; என்று சொல்லி கூடுதலாக பறப்பதால் பறவைகள் என்றும் சொல்கிறோம் என்றாள்.

  புத்திசாலிச்சிறுமி.  மகிழ்ச்சியுடன் வாழ்த்தி விட்டு, மனிதர்கள் எப்படி எதால் நடக்கிறார்கள் என்று கேட்டேன்.

  யோசித்துவிட்டு பதில் சொன்னாள். மனிதர்களாகிய நாமும் கால்களால் தான் நடக்கிறோம்  என்று.

  பிறகு ஏன் மனிதர்களை கால்நடைகள் என்று சொல்லாமல் மனிதன் என்று சொல்லுகின்றனர் எனக் கேட்டேன.

  யோசித்து விட்டு தெரியவில்லை என்றாள். இதைப் படிக்கும் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் எனத் தெரியாது.

  நான் சொன்னேன். மனிதர்கள் மனதால் நடப்பதால் மனிதன் என்று பெயர் பெற்றான் என்று.

  மனதால் எப்படி நடப்பது தாத்தா? என ஆர்வமாய் கேட்டாள் பேத்தி.  மனம் என்பது நம் எண்ணங்களே. நம் பேச்சுக்களுக்கும், செயல்களுக்கும் காரணமாவதால் மனதால் நடப்பவன் மனிதன் என விளக்கினேன்.

  மனதின் எண்ணங்களைத் திட்டமிட்டு செயல்படுத்துவது மூளை. மூளை எல்லோருக்கும் ஒரே அளவில் தான் உள்ளது.

  அதை எந்த அளவு உபயோகிக்கிறோம்? மூளை செல்கள் புத்திசாலித்தனமாகச் செயல் பட என்ன பயிற்சிகள் ( தியானம், மவுனம், யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவை) செய்கிறோம் என்பதைப் பொறுத்தே அறிவாளியா இல்லையா என முடிவு செய்கிறோம்.

  பெரிய விஞ்ஞானிகள் கூடத் தம் மூளையில் சுமார் 10 சதவீதம் மட்டுமே உபயோகித்துள்ளதாய் படிக்கிறோம். இவர்களே இப்படி என்றால் மற்றவர்கள் எவ்வளவு சதவீதம் உபயோகிக்கின்றனர். என்பது தெளிவு.[hide]

  மூளையை முன்னேற்றத்துக்கு உபயோகிக்காதவர்கள் கால்நடை போல் பசி, தூக்கும், இனப்பெருக்கம் என்ற அளவிலே வாழ்பவர் களாவார்கள்.

  இவர்கள் இலைகளைக் கூட எண்ணுவதில்லை; மரத்தடியில் இருப்பவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

  சாதிக்கப் பிறந்தவன் மனிதன். அதனால் தான் தன் அறிவால் இயற்கை வளங்களை வாழ்க்கை வசதிகளாக மாற்றி உபயோகிக்கிறான்.

  மனிதனை விட பலம் வாய்ந்த பிற உயிரினங்களையும் கட்டுப்படுத்துகிறான். சாதனையாளர்களே உங்கள் தேவைகள் என்ன என்பதிலே தெளிவாக இருக்க வேண்டும்.

  சாதனையின் உச்சகட்டம் மகிழ்ச்சியும் மனநிறைவுமாகும் இதனால் கிடைப்பதே நிம்மதி.

  எல்லோருமே நிம்மதியை விரும்புகிறோம். எத்தனை பேர் நிம்மதியாக இருக்கிறார்கள்? நிம்மதியாக இருக்கிறேன் என்று சொல்பவர்களும் தொடர்ந்து நிம்மதியாக இருக்கிறார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.

  இன்று பலரும் சொல்கின்றனர்.  உடல் ஆரோக்கியம் தேவையான பணவசதி மற்றும் வீடு, வாகன வசதிகள் இருந்தாலே நிம்மதி தான். எதையும் சாதிக்கும் மனோபலம் வந்து விடுமென்று.

  இது ஓரளவு தான் உண்மை. மேலே சொல்லப்பட்ட எல்லா வசதிகளும் உள்ள எல்லோருமே நிம்மதியாக இல்லையே ஏன்?

  காரணம் மிகவும் சுலபமானது. ஒரு பையும் பணமும் எடுத்துக் கொண்டு சில பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றார் ஒருவர்.  சாமான்களை எடுத்த பின் பார்த்தால், சட்டைப் பையில் வைத்த பணத்தைக் காணவில்லை.

  சட்டைப்பையில் இருந்த ஓட்டை அப்போது தான் தெரிந்தது. ஓட்டை வழியாக வெளியே விழுந்து விட்டது. சாமான்களைத் திரும்பக் கொடுத்து விட்டு, முகம் வாடி, வருத்தமாய் வீடு திரும்பினார் காரணம் கேட்ட மனைவியிடம் விபரம் சொன்னார்.

  மறுபடியும் ஒரு நாள் இதே போல் கடைக்குச் செல்கிறார் வழியில் 7 வயது மாணவன் அழுது கொண்டிருப்பதைக் கண்டு மனம் வருந்தி, காரணம் கேட்கிறார், பள்ளிக் கட்டணம் செலுத்த பணமில்லை ; பெற்றோர்களது வறுமையால் முடியவில்லை என்றாள்.

  உடனே மனமிரங்கி, மனம் மகிழ்ந்து தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்து விட்டு காலிப்பையுடன், முகத்தில் சந்தோசத்துடன் வீடு திரும்பினார்.

  இவரது சந்தோச முகம், காலிப்பையைப் பார்த்த மனைவியிடம் இவர் சுருக்கமாய் சொன்னார்.

  முன்பு பணம் என்னை விட்டுப் போனதால் வருத்தம்

  இன்று பணத்தை விட்டு நான் வந்ததால் மகிழ்ச்சி”

  என்ன எளிமையான, அற்புதமான விளக்கம் இந்த மனநிலையை பெற முடியாமல் தான் எல்லோருமே இலைகளை எண்ணியே வாழ்நாளைக் கடத்துகிறோம்.

  ஒரு வீட்டில் அப்பா புதிய கார் வாங்கினார். எல்லோருக்குமே சந்தோசம். 4 வயது மகன் ஒரு சிறு கல்லை எடுத்து கார் கதவில் ஏதோ எழுதினான். வந்ததே கோபம் அப்பாவுக்கு.

  மகனின் கையிலிருந்த கல்லைப் பிடுங்கி எறிந்து விட்டு, அந்தப் பிஞ்சுக் கைவிரல்களால் கார் கதவில் வெறித்தனமாய் தேய்த்தார். வலி பொறுக்காமல் குழந்தை அழுதான்.

  மிரட்டி வீட்டிற்குள் அனுப்பினார். சில நிமிடங்களில் குழந்தையின் விரல்களில் வீக்கம். கடும் காய்ச்சல். மனைவி கணவனைத் திட்ட  இருவரும் மகனை டாக்டரிடம் எடுத்துச் சென்றனர்.

  டாக்டர் சோதித்து விட்டு, விரல்களில் எலும்புகள் உடைந்து விட்டன என்றார். தந்தையின் மனம் காரின் மோகத்திலிருந்து விடுபட்டு பாச வலைக்குள் வந்தது.

  பலமுறை சாரி சொல்லிவிட்டு கார் கதவில் கல்லை வைத்து என்ன கிறுக்கினாய் எனக் கேட்டார். அப்பா ஐ ல்வ் யூ என எழுதியதாய் கூறினான். ஓடிப் போய் காரைப் பார்த்தார். அப்பா ஐ லவ் என்று எழுதியிருந்தான். யு எழுதுவதற்குள் இவர் அவசரப்பட்டு விட்டார்.

  தொடரும். [/hide]

  இந்த இதழை மேலும்

  அறிஞர்களின் அறிவுரைகள்…

  நாம் நல்ல செயல்களைத் தீர்மானிப்பது போலவே, அவைகளும் நம்மைப் பற்றி தீர்மானிக்கின்றன. கோயிலில் மூன்று நாள் உபவாசம் இருப்பதை விட ஒரு நல்ல செயல் மேல்.

  பிச்சை அளித்ததால் எவரும் ஏழையாவது இல்லை. ஒரு நல்ல செயலுக்கு வெகுமதி கிடைத்தால் தான் மனிதன் அதை மதிக்கிறான்.

  காற்றை விதைத்தால் புயலை அறுவடை செய்ய வேண்டி இருக்கும். செயல் மறக்கப்படுகிறது. ஆனால் அதன் பயன் நினைக்கப்படுகிறது.

  தீமையிலிருந்து நம்மை வரும் என்று அதை ஒருபோதும் செய்ய வேண்டாம். நாம் செய்யும் தீங்கும், நமக்குச் செய்யும் தீங்கும் ஓரே தராசில் நிறுத்தப்படுவதில்லை.

  இன்பம் பனித்துளி போன்றது. அது சிரிக்கும் பொழுதே உலர்நது விடும்.இன்பம் நிலைத்து இருப்பதில்லை. அது சிறகு முளைத்து பறந்து விடும்.

  இன்பத்தைத் தொடர்ந்து சென்றால் இது ஒடிவிடும். அதை விட்டு விலகிப் போனால் நம்மை தொடர்ந்து வரும். ஒவ்வொருவரின் இன்பமும், தன் முதுகிலே துன்பத்தைத் தாங்கிக் கொண்டிருக்கும்.

  இன்பமாயிருக்க இயற்கை எல்லோருக்கும் வாய்ப்பு அளிக்கிறது. ஆனால் அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிய வேண்டும்.

  கொடுப்பதை சத்தமில்லாமல் கொடுத்துவிடு. பெறுவதனால் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள். சிரிக்கும் பொகுழுது எல்லா மரணமும் தள்ளிப் போடப்படுகிறது.

  கவலையினால் மனிதன் மரிப்பதில்லை. உலர்ந்து சருகாவான். சொற்ப கவலை பேசும் பெருங்கவலை மௌனமாக இருக்கும்.

  கவலையோடு தூங்கச் செல்வது முதுகிலே சுமையைக் கட்டிக் கொண்டு தூங்குவதாகும். படுக்கப் போகும் முன் கவலையை செருப்போடு கழற்றி வைக்க வேண்டும்.

  பின்னால் வரப் போகும் துன்பத்திற்கு இப்பொழுதே நாம் செலுத்தும் கடன் தான் கவலை. ஒரு மாத இன்பத்தை விட ஒரு நாள் தூக்கம் கொடியது.

  சோகம் ஒரு மேகம் போன்றது. கனமானால் விழுந்து விடும். அழுத கண்களை உடையவனுக்கே கண்ணீரின் மொழி தெரியும்.

  துக்கம் எல்லாம் முழங்காலுக்கு மேல் ஏறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்…

  ஒரு பறவை தன்னுடைய சிறகுகளையேயே நம்புகிறது. அமர்ந்திருக்கும் கிளைகளை அல்ல.

  நேர்மறையான பார்வையில் குவளை அரைவாசி நீர் நிரப்பபட்டிருக்கும். எதிர்மறையான  பார்வையில் குவளையில் அரைவாசி வெற்றிடமாக இருக்கும்.[hide]

  எந்த ஒரு அழகான ஓவியமும் சிறு புள்ளியில் தான் ஆரம்பிக்கிறது. அது போல எந்த ஒரு வெற்றியும் ஒரு தோல்விக்குப்பின் ஆரம்பமாகிறது.

  அன்பு தான் இந்த உலகித்திலே எல்லா நோய்களுக்கும் மருந்து. ஆனால் அந்த நோயே பொய்யானால்  உலகத்தில் அதை விடக் கொடிய நோய் எதுவும் இல்லை- தெரேசா.

  வாழ்க்கை என்பது இறக்கும் வரை அல்ல. பிறர் மனதில் வாழும் வரை. அன்பு இல்லாத உலகம், சூரியன் இல்லாத ஆகாயம்.

  அன்பு என்னும் அருமருந்து மனதில் ஏற்படும் காயங்களை முழுமையாகக் குணமடையச் செய்யும்.

  இறக்கும் போது நமக்கு வேண்டாத வரையும் பார்க்க விரும்புகிறோம். இருக்கும் போது வேண்டிய வரையும் பார்க்க மறுக்கிறோம்.

  நீ எதைச் சிந்திக்கிறாயோ, அப்படியே உன் வாழ்க்கை அமையும். தெரிந்ததைத் தெரியும் என்றும் ஒப்புக்கொள்வது அறிவு.மனிதன் தன்னைப் போலவே கடவுளை படைத்ததோடு தன் வாழ்வின் தன்மைகளோடு அந்த கடவுளுக்கு உருவகம் தந்தான்.

  உலகத்து முட்கள் முழுவதையும் எந்தப் பொருளாலும் மூடிவிட முடியாது. ஆனால் தன்னுடைய கால்களை ஒருவன் தோலினால் மூடிக் காத்துக் கொள்ள முடியும். – புத்தர்.

  நிலவை வான்த்தில் தான் தேட வேண்டும். நிழல் தெரியும் நீரில் அல்ல. பால் வேண்டும் என்றால் பசுவின் காம்புகளை தான் வருட வேண்டும் கொம்புகளில் அல்ல.

  ஒரு தூசியைக் கூட ஏளனமாக எண்ணாதே. நீ உயிரோடு நடமாடும் போது அது உன் காலடியில் மிதிபடுகிறது. இறந்த பின்பே அதன் கீழே தான் கிடக்கிறாய்- குருநானாக்.

  முரண்பாடுகள் இல்லாத மேதைகளே இந்த உலகில் கிடையாது. முட்டாள்களிடம் மட்டுமே முரண்பாடு இருக்கிறது.

  உள்ளத்தின் ஆழத்திலிருந்து வருகிறது பாராட்டு. உதட்டோரத்தில் இருந்து வருவது முகஸ்துதி. பாராட்டு பயன் நோக்காது. முகஸ்துதி பயனின்றி வேறு எதையும் பார்க்காது.  வாழை நாரால் மலர்தொடுக்கலாம். ஆனால் அதைக் கொண்டு யானைக் கட்ட முடியாது. ஏணி வைத்து மாடி மீது ஏறலாம். இமயத்தின் உச்சியில் ஏறி நிற்க முடியாது.

  எந்த மனிதனும் ஒரே ஆற்றில் இரண்டு முறை கால் வைக்க முடியாது. மனிதன் தன்னைப் போலவே கடவுளைப் படைத்ததோடு, தன் வாழ்வின் தன்மைகளோடே அந்தக் கடவுளுக்கு உருவம் தந்தான்

  மனிதன் தன் வாயை மூடி வாயில்களையும் அடைத்துக் கொண்டால் அவன் ஒரு போதும் களைத்துப் போகமாட்டான்.[/hide]

  இந்த இதழை மேலும்

  உள்ளத்தோடு உள்ளம்

  சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் சாக்ரடீஸ். மறு நாள் காலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. அப்போது பக்கத்து அறையில் இருந்த கைதி ஒருவன் இனிமையான குரலில் பாடிக்கொண்டிருந்தான். இதைக் கேட்ட சாக்ரடீஸ் அந்த நபரிடம் எனக்குப் பாட்டுப்பாட கற்றுக்கொடுப்பாயா? என்று கேட்டார்.

  இதைக் கேட்ட அந்தக் கைதி, ஐயா, நாளை காலை உங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் போகிறார்கள். இந்த நிலையில் பாட்டு கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களே என்றார். இதற்கு அவர்.

  சாகும் முன்பு எனது வாழ்க்கையில் மேலும் ஒரு கலையை கற்றுக்கொண்டேன் என்ற நிம்மதியில் நான் மரணத்தை ஏற்பேன் என்று கூறினார்.

  அழகான இந்த பூமியில் ஒவ்வொரு வினாடிக்கும் கடவுளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். தான் வாழந்த ஒவ்வொரு கணமும் விழிப்புடனும், புதியவற்றை அறிந்து கொள்ளும் தேடலுடனும் சாக்ரடீஸ் இருந்தார். அதனால் தான் அவர் சிறந்த அறிஞராகப் புகழப்பட்டார். வாழ்நாளில் நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு வினாடியையும், புதியவற்றை கற்றுக் கொண்டு நம்மை வளர்த்துக் கொள்ள பயன்படுத்த வேண்டும்.

  வெற்றி முத்தமிடும்

  – கவிச்சுடர் ஆர்வீ. பார்த்திபன்

  இளைஞனே

  காலம் மிகவிரைவாய்

  கருத்துடன் உன் வாழ்வை

  தயார் படித்துடு-நீ!

  விரைவாய் செயல்படு-

  அறிவை முடம்மாக்கும்

  அம்:மூடநம்மபிக்கையை-நீ!

  புறம் தள்ளிகூடு-

  அதிஷ்டம் வரும்,என்னும்

  வேதாந்த குருட்டு நம்பிக்கையை – நீ!

  விட் டொழித்திடு

  தன்னம்பிக்கை தனை-உன்

  நம்பிக்கை என்றே -நீ

  உன்னுல் நிறுத்திடு-எச்

  செயலுமே !முடிப்பேன்.

  என்னும் உறுதியுடனே.

  செயல்படு.

  அதோ-

  கதிரவன் வீச்சுமே!

  நொடுயையும்:வெல்லும்-

  தாமதம்:என்னும் சொல்லுக்கே!

  இதன் உடேஇல்லை.

  இதன் வீச்சாய் தான்-உன்

  செயலும்-உனதாகட்டும்.

  விடா முயற்ச்சியை மூலதனம்.

  ஆக்கிடு-நீயே!

  இம்:மூலதனம்:தோல்விகாணாது.

  இத்:தோல்வியும் தோற்று ஓடிஒழியும்

  ஆரத்தழுவும்.