கல்லறையா வகுப்பறையா
வாழ்க்கையில் நிச்சயிக்கப்பட்ட தருணங்கள் இரண்டு. அவை ஒன்று பிறப்பு. மற்றொன்று இறப்பு. எப்பொழுது பிறப்பு நிகழ்கிறதோ அப்பொழுதே இறப்பு என்ற ஒன்று நிகழப் போவது உறுதியாகிறது. பிறப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இறப்பு துக்கத்தைக் கொடுக்கிறது. பிறப்பைக் கொண்டாடி மகிழ்கிறோம், இறப்பை அழுது தீர்க்கிறோம். மகிழ்ச்சி தரும்; ஒன்றை திரும்ப திரும்ப நினைவுத்திரைக்கு கொண்டு வருகிறோம். துக்க நிகழ்வுகளை நினைவுகளில் இருந்து விலக்க முயற்சிக்கிறோம். எனவேதான் பிறந்த நாளை, திருமண நாளை கொண்டாடுகிறோம், புகைப்படங்கள் எடுத்து முகநூலில் பகிர்ந்து கொள்கிறோம். துக்க நிகழ்வுகளுக்கு இதுபோல் செய்வதில்லை, விரும்புவதுமில்லை. இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்ற எதார்த்த உண்மையைத் தாண்டி, தாமும் ஒரு நாள் இறந்து விடுவோம் என்றசிந்தனை தோன்றும்போது அது ஒரு நொடிப் பொழுதாவது நம்மை உலுக்கத்தான் செய்கிறது.
“நாம் ஒரேயடியாக மரணம் அடைவதில்லை, ஒவ்வொரு நாளும் மரணம் அடைகிறோம்” என்று ரோசி பிலிப் என்பவர் கூறுகிறார். நம் அன்பை ஒருவர் புறக்கணிக்கும் போது நாம் கொஞ்சம் செத்து போவதில்லையா! நம்மை ஒருவர் அலட்சியப்படுத்தும் போது நாம் சிறிது சிதைந்து விடுவதில்லையா! நமக்கு நெருக்கமானவர் ஒருவர் இறக்கும்போது நமக்குள் ஒரு பகுதி அவரோடு இறந்து போவதில்லையா! ஓரிடத்தைவிட்டுப் பிரிகிறபோதும், நட்பைவிட்டு நகருகிறபோதும், நெருங்கியவர்கள் தளர்கிறபோதும் ஏற்படும் வெற்றிடம் “இறப்பு” எனும் வகையைச் சார்ந்தது என்று கூறுகின்றார் டாக்டர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள்.
ஒவ்வொரு பருவம் முடிகிறபோதும் நாம் மரணம் அடைகிறோம் என்பதை நம் பண்டைய இலக்கியமான குண்டலகேசி அழகாக இயம்புகிறது.
“பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்பும் இன்னே
மேல் வரும் மூப்புமாகி
நாளும் நாம் சாகின்றோமால்
நமக்குநாம் அழாதது என்னோ”
பிறர் சாவதற்காக நாம் அழுகிறோம். ஆயின் தாயின் வயிற்றில் கருவான நிலை செத்து, பின் குழந்தையான நிலை செத்து, பின் இளைஞனான நிலை செத்து முடிவில் மூப்பெய்தி இவ்வாறு நாளும் நாளும் சாகின்றோம். இப்படியிருக்க நமக்கு நாமே அழாதது ஏன்? என்னும் சிந்தனையைக் குண்டலகேசி முன்வைக்கிறது. உறங்குவது போன்றது இறப்பு, உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு என்றகருத்தை வள்ளுவர் ‘உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’ என்கிறார். ஆகவே பிறப்பினை எவ்வாறு மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறோமோ அதனைப் போலவே இறப்பினையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
0 comments Posted in Articles