– 2010 – October | தன்னம்பிக்கை

Home » 2010 » October

 
 • Categories


 • Archives


  Follow us on

  கிராமம் என முடங்காதே சிகரம் உண்டு மறக்காதே!!

  நேர்முகம் : – டாக்டர் செந்தில் நடேசன்

  டாக்டர் எஸ்.ஜி. திருமலைச்சாமி
  மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் KMCH கோவை

  Continue Reading »

  சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல

  நேர்முகம் அருள்நிதி பன்னீர் செல்வம்

  தமது 63வது வயதில், 2009ம் ஆண்டு பின்லாந்து நாட்டில் நடந்த 18வது மூத்தோர் பிரிவு ஒலிம்பிக் தடகள விளையாட்டில் போல்வால்ட் (கழி ஊன்றித் தாண்டுதல்) பிரிவில் கலந்து கொண்டு, வெண்கலப் பதக்கம் வென்று கோவைக்கும், நம் பாரத நாட்டுக்கும் பெருமை சேர்த்தவர் திருமதி லட்சுமி லோகநாதன் அவர்கள்.

  தமது பேரக் குழந்தைகளுக்கு கனவுப் பதக்கப் பாட்டியாகவும் விளங்குகிறார். 2009ல் தாய்லாந்தில் நடந்த 15வது ஆசிய தடகளப் போட்டியில், உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கமும், 80 மீ. தடை தாண்டி ஓடும் போட்டியில் வெண்கலப் பதக்கமும் பெற்று ‘தங்கத் தாரகை’ என்ற விருது பெற்றார்.

  2003ம் ஆண்டில் தம் 57வது வயதில் தடகளப் போட்டிகளில் உயரத் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், கழிஊன்றித் தாண்டுதல் மற்றும் தடைதாண்டி ஓடுதல் ஆகிய பிரிவுகளில் பயிற்சிகளை சுய ஆர்வத்தாலும், கணவரின் ஊக்குவிப்பாலும் மேற்கொண்டு, இதுவரை இந்தியாவில் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் 32 தங்கம் உள்ளிட்ட 54 பதக்கங்களும், ஆசிய அளவில் ஆறு பதக்கங்களும் பெற்று ரோட்டரி சங்கத்தின் சிறந்த சேவையாளர் விருது பெற்று, அந்த விருதுக்கு பெருமை சேர்த்தவர். டிசம்பர் 2010ல் மலேசியா-ஆசியாட்டிக் மற்றும் 2011 கலிபோர்னியா உலக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள அவருடன்… இனி நாம்…

  எல்லோரும் ஓய்வு பெறும் வயதில் உங்களுக்கு இந்த எண்ணம் எப்படி வந்தது?

  குடும்பப் பொறுப்புகள் முடிந்த நிலையில், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், மறைந்துள்ள திறமைகளை வெளியே கொண்டு வரவும், சிறு வயது ஆசை மற்றும் என்.சி.சி. மூலம் பெற்ற உணர்வுகளின் வடிகாலாகவும் இந்த எண்ணம் வளர்ந்தது.

  இந்த சாதனைகளுக்குப்பின் புலமாக இருப்பவர் யார்?

  சந்தேகமின்றி என் கணவர் திரு. லோகநாதன் அவர்கள் தான். உன்னால் முடியும் என்று ஊக்கப்படுத்தி, இன்று நான் பல பதக்கங்களைப் பெறுவதற்கு முழு முதற்காரணமாக இருக்கிறார்.

  பயிற்சி பற்றி

  தினமும் காலை 6.30 முதல் 8 மணி வரை கோவை நேரு விளையாட்டு அரங்கில் தொடர் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். பயிற்சியாளர் திரு. சீனிவாசன் மற்றும் தடகள சங்கத் தலைவர் திரு. பாலசுந்தரம் இருவரையும் நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.

  இளைஞர்கட்கு உங்களது ஆலோசனை

  தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடுமையான உழைப்பு, இறை நம்பிக்கை ஆகியவற்றுடன் செயல்பட்டால் எந்தச் சாதனையையும் முடிக்கும் ஆற்றல் இளைஞர்களிடம் உள்ளது. இதை அறிந்து கொண்டதால் தான் நானும் பதக்கம் பெறுகிறேன்.

  உலகிலேயே மிக அதிக அளவில் இளைஞர்களைக் கொண்ட நாம் விளையாட்டில் பிற சிறிய நாடுகளுடன் கூட போட்டியிட முடியாத நிலைக்கு உங்கள் கருத்து

  திறமைசாலிகளின் வறுமைதான் காரணம். இன்று நம் நாட்டில் பல புதிய சாதனைகளை நடத்தும் வல்லமையுள்ளவர்கள் பலர் உள்ளனர். அவர்களது பொருளாதார நிலையால், குடத்தில் இட்ட விளக்காக உள்ளனர். அரசாங்கம், விளையாட்டு ஆர்வலர்கள் மூலம் இவர்களை இனம் கண்டு, தேர்வு செய்து, முறையான பயிற்சி கொடுத்து, முழுச் செலவையும் ஏற்று போட்டிகளுக்கு அனுப்பினால், நாம் நிறைய சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாகி விடுவோம்.

  உங்களது நேரம்… சேவை

  நான் வசிக்கின்ற ஹோப்ஸ் காலேஜ், ஸ்ரீ நகர் காலனியில் குடும்பப் பெண்களுக்கும், சி.ஐ.டி. கல்லூரி மாணாக்கர்களுக்கும் இலவசமாக யோகா கற்றுத்தருவதை எனது விருப்பமான செயலாகச் செய்து வருகிறேன்.

  தன்னம்பிக்கை இதழ் பற்றி

  தன்னம்பிக்கையால் உயர்ந்தோர் பேட்டி, அதிலும் குறிப்பாப பெண்களைப் பேட்டி கண்டு வெளியிடுவது பெண்களை ஊக்கப்படுத்துவதாய் உள்ளது. பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிப்பதில் முன்னணியில் உள்ளதைப் பெருமையாக குறிப்பிடுகிறேன்.

  ஆசியாடிக் பதக்கப் பட்டியல்

  13வது போட்டி 2004 – தாய்லாந்து – உயரம் தாண்டுதல் – வெண்கலம்

  14வது போட்டி 2006 – இந்தியா பெங்களுர் – 1. உயரம் தாண்டுதல் – வெண்கலம்
  2. மும்முறை தாண்டுதல் – வெள்ளி
  3. 300 மீ. தடை ஓட்டம் – வெள்ளி

  15வது போட்டி 2009 – தாய்லாந்து – 1. உயரம் தாண்டுதல் – தங்கம்
  2. 80. மீ தடை ஓட்டம் – வெண்கலம்

  இத்தனை பெருமைகளுக்குச் சொந்தக்காரர் ஆன திருமதி. லட்சுமி லோகநாதன் அவர்கள் 32 ஆண்டுகள் உடற்கல்வி இயக்குநராகப் பல கல்வி நிலையங்களில் பணிபுரிந்துள்ளார்.

  தடகள விளையாட்டு நுணுக்கங்களுக்கான டிப்ஸ்கள் பெற இவரைத் தொடர்பு கொள்ள வேண்டிய எண் 0422 – 2575324 மற்றும் 99444 00495.

  வரி சில வரிகளில்

  முதலில் வரும் வரிகள்

  இறப்பையும் வரிகளையும் (TAX) தான் தவிர்க்க இயலாது என்று ஆங்கிலப் பொன்மொழி ஒன்று உண்டு. பர்சூய்ட் ஆஃப் ஹேப்பினெஸ் என்றொரு ஆங்கிலப்படம் வரி படுத்தும் பாட்டினை எவ்வளவு அழகாக வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றதென்று தெரியுங்களா? சொந்தப் பையனையே கூட மகனாக நடிக்க வைத்துக்கொண்டு வில்பர் ஸ்மித் மனதை உருக்கி வழிந்தோட வைக்கின்றார். வரிகள், வருமான வரி, விற்பனை வரி, கேளிக்கை வரி, நுழைவு வரி, சுங்க வரி, சேவை வரி, உள்நாட்டு வரி, சொத்து வரி, கொடை வரி, மத்திய ஆயத்துறை வரி என்று பரந்துபட்டுக் கிடக்கின்றன. நேரடி வரி, மறைமுக வரி என்றும் இதனை இருவகைப்படுத்திப் பார்க்கலாம். இவ்வளவு வரிகளா என்று நெற்றியில் வரி வரியாக சுருக்கங்களை வரவழைத்துக் கொள்ளாமல் ஒவ்வொன்றாக எடுத்து அலசி ஆராய்ந்தால் வரிகள் தெளிவாகப் புரிய வரும்ங்க.

  வரிப்புலிகள்? வரிக்குதிரைகள்.:-

  ‘தாரே ஜமீன் பர்’ என்றொரு அமீர்கானின் திரைப்படத்தில் வரும் நிஷான் என்ற முன்பல் நீட்டிக் கொண்டிருக்கும் சுட்டிப் பயல் எந்த நம்பர்களைப் பார்த்தாலும் அவை கிளம்பி ஊர்வலம் போய்வருவது போல குழம்பிப் போய்விடுவான். அதைப்போல எண்களை எண்ணாமல் இருப்பதே நலமென்று இருப்பவர்களுக்கு மத்தியில், கணக்குப் போட்டுக் கொண்டே வாழ்கின்ற வரியில் பிரபுத்துவம் பெற்றுள்ள கணக்காளர்களும் நாட்டில் உள்ளார்கள். கணக்கு எனக்கு வராது என்று பாரதியார் அளவிற்கு முடிவு செய்தவர்கள் கூட கொஞ்சம் விருப்பத்தை வரவழைத்துக் கொண்டால் வரிப்புலிகள் ஆகிவிடலாம். வரிக்குதிரைகள் இயற்கையாகவே கணித கண்ணோட்டம் வாய்ந்தோர் என வைத்துக் கொண்டால் வரிப்புலிகள் வரவழைத்துக்கொண்ட ஆர்வத்தால் வரிகளைக் குறித்து கற்றுத் தெளிந்தவர்கள் என்று வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக கால்நடை மருத்துவ முதுகலைப் பட்டப்படிப்பிற்குப் பின்னர், தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் முதுகலை வணிக சட்டங்களைப் படித்துக் கொண்டும், வணிக வரிகளில் பணியாற்றிக் கொண்டுமிருக்கின்ற நம்மைக் கொள்ளலாமே! மனமிருந்தால் மார்க்கம் உண்டு. ‘ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரோ?’ என்று தேவாரத்தில் அப்பர் கேட்பதைப்போல், படிக்க முயற்சி செய்தால் சட்டமும், வரியும் சரிசமமாக நம்மோடு உறவாடத்தான் செய்யும்.

  ஆதாரமான அரசியலமைப்பு :-

  இந்திய அரசியலாமைப்புச் சட்டம், எந்த வரியும் மக்களின் மீது சட்டபூர்வமான அதிகாரமின்றி விதிக்கப்படலாகாது என்று பாதுகாப்பு அளித்துள்ளது. (ஷரத்து 265) இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் (schedule) இரண்டு பட்டியல்கள் (list) உள்ளன. அவற்றில் முதலாவது மத்திய அரசு பரிபாலனம் செய்ய வேண்டிய பட்டியல். இவற்றில் ஏற்றுமதி இறக்குமதி வரிகள் எண்பத்தி மூன்றாவது வரிசையிலும், குழுமங்களின் மீதான வரிகள் எண்பத்தைந்திலும் காணப்படுகின்றன. சட்டம், சட்டப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் பொழுதுதான் சட்டத்தை, மானுடவியல் பாடங்களின் அரசி (Queen of Humanities) என்று சொல்வார்கள் என தெரிய நேர்ந்தது. குழந்தை ஆணா பெண்ணா என கதிர்வீச்சு மூலம் தெரிந்து சொல்வதைப் பற்றியும், கட்டுமானப் பொருட்கள் மணல், இரும்பு உதிரிபாகங்களை கனரக வாகனங்களில் எடுத்துச் சென்று வரி ஏய்ப்புக்கு வாகாக போக்குவரத்துச் செய்வதை எப்படித் தடுப்பது என்பது குறித்தும், ஒரே சமயத்தில் சட்டம் பேசுகின்றது. வரிகளும் அதிலொரு வகையே, காலச்சக்கரம் உருண்டோட எல்லாத்துறைகளும் வளர்ந்தது போல சட்டமும் வரிகளும் வளர்ந்து விட்டுள்ளது. படிக்கப் படிக்க தெளிவாகின்றது சட்டம். படிப்பதற்கு முயற்சி செய்தால் நம்பிக்கை வளர்வதோடு பல்துறை அறிவும் பெருகலாகின்றது. உதாரணமாக திருப்பூர் சாயத் தொழிற்சாலைகளின் சூழல் மாசுபாடு குறித்து படித்துத் தெரிந்து கொள்ளாமலேயே, சாயப்பொருட்கள் எப்படி துணியில் ஒட்டுகின்றனவா? இல்லையா? எவ்வளவு வீணாகின்றன? அது பாகப்பொருளா? ஒரே பொருளா? என்று வரிவிதிப்பின் பொழுது எழுகின்ற கேள்விகளுக்கு விடையளிக்கின்ற பொழுது சூழல் பாதுகாப்புக் குறித்து தெரிந்து கொள்கின்றோம். இவ்வாறு ஒப்பிட்டுப் படிக்கையில் சட்டம் இனிக்கின்றது.

  மொழி வளம்

  சட்டத்துறையின் மொழிவளம் குறித்துப் பேசுகையில் சாணக்கியரின் தர்க்க வலிமையும், மனக்கூர்மையும் சட்டத்தாலே பிறந்தது என்று புரிந்து கொள்கிறோம். லார்டு எம். ஆர். டெனிங் என்ற ஆங்கிலேய நீதிபதி அகில உலகத்திலும் புகழ்பெற்ற ‘ட்யு ப்ராஸஸ் ஆஃப் லா’ என்றொரு புத்தகம் எழுதியுள்ளார். அவரது ‘விட்’ எனப்படும் சமயோசிதம் எல்லோராலும் பாரட்டப் பெற்றது. சட்டம் வறட்சியானது என்று நண்பர்கள் சொல்லக் கேட்டால் நகைப்பு வரலாமா? என்று அனுமதி கேட்கின்றது. எண்களுக்குள்ளே எவ்வளவு உணர்ச்சி உள்ளது என எடுத்துக்காட்டும் முன்மாதிரி வழக்குகள் (case laws) அதில் முடிந்துரைக்கப்பட்ட அசல் தீர்ப்புகளைப் படிக்கையும் நம் மனதை பிடித்து முறுக்கிப் பிழிகின்ற மனுநீதிச் சோழன்களாய் மாறிப்போய் விற்ற ஒப்பற்ற நீதியரசர்களின் வார்த்தைகள், என ஏகமாய் முந்திரியும், திராட்சையும் சிந்திக் கிடக்கின்ற பாயசம் சட்டம். இவ்வளவு பீடிகை அல்லது முன் தயாரிப்பு நம் வரிகள் குறித்ததான கட்டுரைகளுக்கு எழுதுவது யாருக்குப் பயனுள்ளதாக இருக்கின்றதோ? தெரியலைங்க! ஆனா நமக்குப் பயன்படுகின்றது. அரசியலமைப்புச் சட்ட ஏழாவது அட்டவணையின் இரண்டாவது பட்டியல் மாநிலங்கள் எந்த பொருள்கள் (subject) மீது வரி விதித்து உரிமை கொண்டாடலாம் என்று சொல்கின்றது.

  இதில் சொல்லத் தகுந்தன எல்லாமே என்றாலும் ஐம்பத்தி நாலாம் வரிசையில் வருகின்ற பொருட்கள் (goods) விற்பனை வரி, ஐம்பத்தி ஒன்றில் விழுகின்ற மது மற்றும் போதையூட்டும் வஸ்துக்கள் கலந்த மருந்துப் பொருட்கள் மீதான வரி முதலியன குறிப்பிடத்தகுந்தன.

  இரண்டாவது பட்டியலிலுள்ள வரிகளை மாநில அரசுகள் விதித்து வசூலித்து அவைகளே வைத்துக்கொள்ளலாம், முதல் பட்டியலில் உள்ளதை மத்திய அரசு விதித்து வசூலித்து வைத்துக் கொள்ளலாம் அல்லது பகிர்ந்தும் அளிக்கலாம். மத்திய விற்பனை வரியினை மாநில அரசுகள் சட்டப்படி வசூலித்து வைத்துக் கொள்ளலாம் என்பது தற்பொழுதைய நிலைப்பாடுங்க.

  முதுகெலும்பாய் வணிக வரிகள்.

  பொதுவாக மாநில அரசுகளின் வருவாயின் முதுகெலும்பாய் திகழ்வன வணிக வரிகள் என்று அசராமல் சொல்லலாங்க. அறுபத்தேழு சதவிகித வருவாயை ஈட்டித்தரும் துறை இதல்லவா? எதிர்வரும் நாட்களில் சரக்குகள் மற்றும் சேவை (Goods and Services Tax) வரிகள் குறித்துப் பேசும்பொழுது இத்ததைய வரிகளின் வருமானப் பகிர்வு குறித்துப் பேசுவதற்கு இந்த தகவல்கள் ஒரு நல்ல தளம் அமைத்துக் கொடுக்கும்.

  மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?

  ஒரு ஆள் செய்கின்ற காரியத்திற்காக மாற்றி அனுப்ப முடியாமல் அவர் மீதிலேயே வரி விழுந்தால் அது நேர்முக வரிங்க. உதாரணமாக நீங்க சம்பாதித்தது மேலே நீங்க கட்டக்கூடிய வரி வருமான வரி. இந்த மாதிரி நேர்முக வரியிலே பரிமாற்றம், எதுவும் இருப்பதில்லை. ஆனா மறைமுக வரியிலே ஒருத்தருடைய செயலுக்கு, பொருளுக்கு உண்டான வரியை இன்னொருவருக்கு மாற்றம் செய்ய முடியும் ஏனென்றால் இதிலே பரிமாற்றம் உண்டு. விற்பனை வரியில் ஒருத்தர் விற்க இன்னொருவர் வரியோட சேர்த்து வாங்கிய விலையிலே கொடுத்து வாங்கிப்பார். இரண்டு பேருக்கு மத்தியிலே பண்ட பரிமாற்றம் நடக்கின்றது. இந்த வரிகளுக்கு மேலும் வரி போட்டு போட்டு அதிகமாகிட்டே போன காலம் ஒரு காலம். 2007 ஜனவரி வரை தமிழ்நாட்டில் அப்படி. அதற்குப்பின் மதிப்புக் கூட்டு வரி (value Added Tax) வந்தது. அதில் வரி தனியாக, விலை தனியாக பிரிப்பதற்கான முயற்சி நடந்தது. பல்கிப்பெருகல் (cascade) பிரச்சனை இந்த முறையிலான வரி விதிப்பால் மறைந்தது.

  எளிமை கண்டு இரங்குவாய்…. வா, வா, வா…

  நண்பர் ஞானகுமார் மதுரை அமெரிக்கன் கல்லூரி கரும்பலகை சிரிப்பொன்றை (joke) சொல்வார், யாரோ ஒரு குறும்புக்காரர், கடவுள் எப்பொழுதுமே தவறுவதில்லை! God Never fails! என்று எழுதப்பட்டிருந்த வரியின் கீழ் அவரை சி.ஏ. (C.A) எழுதிப் பார்க்கச் சொல்லுங்கள் என்று எழுதி விட்டாராம்…

  அதைப்போல குழப்பமான படிப்பென்று பேசப்படுகின்ற கணக்கீட்டியலில், வரிகள் குறித்த செவ்வியல் பொருளாதாரத்தின் தந்தை என்று போற்றப்படும் ஆடம் ஸ்மித்தின் வரிக் கோட்பாடுகளலில் ஒன்று… வரிவிதிப்பு எளிமையானதாக இருக்க வேண்டும் என்று பேசுகின்றது. நாட்டின் வணிகர்களும், தொழில் முனைவோர்களும், பொதுமக்களும் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ள ‘வரி’ என்கின்ற நாள்தோறும் புழங்குகின்ற ஒரு விஷயம் அனைவருக்கும் சந்தோஷத்தை தருவதாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுவது எவ்வளவு குழந்தைத்தனமானதோ அவ்வளவு எளிமையாக மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

  வரிகள் வரும் வழி

  பொருளின்றி அமையாத உலகை, பொருளில்லார்க்கு, இவ்வுலகமில்லை என்று பொய்யா மொழியார் சொல்லியுள்ளார். கூகுள் இணைய தளத்தில் ஐ.எம்.டி.பி (imdb)) என்றொரு வலைதளம் உள்ளது. இன்டர்நெட் மூவி டேடா பேஸ் எனப்படும் இதில் Great movies உலகின் மிகச்சிறந்த திரைப்படங்கள் என்று கொடுத்தால் முதல் பத்து இடங்களில் ‘ஷா ஷெங்க் ரிடம்ப்ஸன்’ என்கின்ற திரைக்காவியம் வருகின்றது. இதில் வங்கியாளர் ஒருவர் உலகின் மிகக்கடுமையான சிறைச்சாலையின் கற்பனை செய்து பார்க்க முடியாத கொடுமைகளலிருந்து தன்னுடைய ‘வரிகள்’ குறித்த அறிவைப் பயன்படுத்தி எப்படி பிழைத்து வாழ்கின்றார் என்று காட்டியிருப்பார்கள். கட்டிக் காப்பாற்றிய செல்வத்தை முறைப்படி பேண வணிகத் திறமை அவசியம். வணிக வரிகளைப் புரிந்து கொள்ள வணிகக் கட்டமைப்பை, வணிகம் செய்யும் குழுமங்களை நிர்ணயிக்கும் சட்டங்களை (Company Act) ஒப்பந்த கொள்கைகளை (Principles of Contract) புரிந்துகொள்வதும் அவசியமாகின்றது. இவற்றோடு தமிழையும் ஆங்கில இலக்கியத்தையும் சரிவிகிதத்தில் கலந்த ஒரு கதம்ப மாலையாக உருவாவதற்காக கருவுற்று இருக்கின்றது இக்கட்டுரை.

  இந்த காலத்தில் சிலப்பதிகாரமும், அபிதான சிந்தாமணி போலவும் ஒரு காப்பியம் இயற்றியிருக்கின்றேன். அரங்கேற்ற அரங்கநாதன் கோவில் மண்டபம் வாரீர் என்றால் நீங்களும் நாமும் போவோமா? திரைப்படங்கள் காலத்தின் கட்டாயம்.! அவற்றிலிருந்து கற்றுக்கொள்தல் நமது சுதந்திரம்! அதனால் சீரிய கருத்துக்களைப் பேசும் படங்கள் குறித்த குறிப்புகளும் கட்டுரைகளில் விரவச் செய்திருக்கின்றோம்.

  தன்னம்பிக்கை இதழுக்காக நம் மீது நம்பிக்கை வைத்துக் கேட்ட பேராசிரியர் செந்தில் சார் அவர்கள் அடியெடுத்துக் கொடுத்ததால் வடிவெடுத்த இக்கட்டுரை வரிகள் பலபேரின் வாழ்கை வரலாற்றில் சில வரிகளையாவது நிர்ணயிக்கட்டுமே!

  ..வளரும்

  உடலினை உறுதி செய்

  சுகாதாரம்

  உடல்நலத்தில் மூன்றில் இரண்டுபகுதி
  சுகாதாரம் தான்
  – லெபனான் நாட்டு பழமொழி
  சுத்தம் சோறுபோடும் என்பார்கள். சுத்தம் சோறு போடுமோ, இல்லையோ நோய்கள் நம்மைத் தொற்றிக் கொள்ளாமல் காக்கும். பல நோய்கள் கூட நோய்க் கிருமிகள் முலம்தான் வருகின்றன. இந்த உண்மையைக் கண்டுபிடித்த லூயி பாஸ்டர் (கி.பி. 1822 – 1895) மருத்துவ விஞ்ஞானிகளிலேயே முதன்மையானவராகக் கருதப்படுகிறார். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் கூட அவர் கண்டுபிடித்த உண்மைகள் மக்களைச் சென்றடையவில்லை. பலர் இவற்றைப் பற்றி தெரிந்திருந்தாலும். நோய் தாக்காவண்ணம் தங்களை தற்காத்துக் கொள்வதும் இல்லை.
  பாக்டீரியா, ஈஸ்ட், மோல்டு, பூஞ்சை, வைரஸ் போன்றவை நுண்ணுயிரிகள். நம் கண்களுக்கு இவை தெரிவதில்லை. இவற்றை நுண்ணோக்கி மூலமாகத்தான் பார்க்க முடியும். மனிதனு;ககு நோய்களைத் தோற்றுவிக்கும் நுண்ணுயிர்களைத் தான் நோய்க்கிருமிகள் என்கிறோம்.
  நம்மைச் சுற்றி இருக்கும் நோய்க்கிருமிகள் உணவு, நீர், காற்று மூலமாக நம் உடலினுள் சென்றுவிடுகின்றன. அங்கு ஊட்டச் சத்துக்களையும் ஆற்றலையும் அபகரித்துக் கொண்டு நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்றன. இந்த நச்சுப் பொருட்கள் உடலில் தங்கிவிட்டால் காய்ச்சல், தும்மல், இருமல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகிய நோய்க்கான அறிகுறிகள் ஏற்படுகின்றன. நல்ல சுகாதாரமாக இருப்பதன் மூலம் இந்த நோய்க்கிருமிகள் நம்மை அணுகாமல் பார்த்துக் கொள்ளலாம்.
  நோய்க்கிருமிகள் நோய்களை ஏற்படுத்துகின்றன
  கீழ்க்காணும் நோய்கள் வீடுகளில் காணப்படும் கிருமிகளால் ஏற்படுகின்றன.
  1. டைபாய்டு (Typhoid)
  2. டெங்குக் காய்ச்சல் (Dengu Fever)
  3. சிக்குன் குனியா (Chikun Gunay)
  4. எலிக்காய்ச்சல் (Leptospirosis)
  5. ஜலதோஷம் (Common cold)
  6. மஞ்சள் காமாலை (Hepatitis)
  7. மூளைக் காய்ச்சல் (Meningitis)
  8. வயிற்றுப்போக்கு (Diarrhoea)
  9. நிமோனியா (Pnemonia)
  இதில் ஜலதோஷம் என்னும் நோய் உங்களுக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் வருவதைக் கவனித்திருப்பீர்கள். தொண்டையில் கரகரப்பு, இருமல், காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. ஒருவருக்கு வந்ததும் மற்றவர்களுக்கு இந்நோய் உடனே தொற்றிக் கொள்கிறது. இது ரைனோ வைரஸ் (Rhinovirus) என்னும் வைரஸால் ஏற்படும் நோயாகும். இந்த நோய் கண்டவர்கள் உடலைத் தொட்டுவிட்டால் இந்த வைரஸ் நமது கைக்கு வந்து பின்னர் நமது விரல் மூக்கிலோ, வாயிலோ, கண்களிலோ படும்பொழுது வைரஸ் நமது உடலினுள் செல்கிறது. சில மணி நேரங்களில் அந்த வைரஸ்கள் பல ஆயிரங்களாகப் பெருகி நமது உடலில் உள்ள செல்களைத் தாக்குகின்றன. ஜலதோஷம் போன்ற தொற்று நோய் கண்டவர்களின் அருகில் போகாமல் இருப்பதன் மூலமாகவும் அல்லது அவர்களது துணிமணிகளைத் தொடாமல் இருப்பதன் மூலமாகவும் இந்நோய்கள் நம்மைத் தொற்றாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
  பெரும்பாலும் நோய்க் கிருமிகள் இருக்குமிடம் குளியலறைதான். குளியலறையை உலர்த்தி சுத்தமாக வைப்பதன் மூலமும். கிருமிநாசினிகளால் சுத்தம் செய்வதன் மூலமாகவும் நோய்க் கிருமிகள் வளர்ந்து பெருகாமல் பார்த்துக் கொள்ள முடியும்.
  தனிமனித சுகாதாரம்
  தனிமனித சுகாதாரம் மிகவும் முக்கியமானது. தினமும் குளிக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறை உள்ள நகரங்கள் என்றாலும் கூட சிக்கனாக ஒரு பக்கெட் தண்ணீரில் சுத்தமாகக் குளிக்க முடியும். பற்களைச் சுத்தமாகவும், வாயைச் சுகாதாரமாகவும் வைத்துக் கொண்டால் பல் நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். காலையிலும், இரவிலும் பிரஷ் மற்றும் பேஸ்ட்டுடன் பற்களைத் துலக்க வேண்டும். மணல், கரி, சாம்பல், மரக்குச்சிகள் போன்றவற்றின் மூலம் பல் துலக்கினால் பற்களும், ஈறுகளும் சேதமடையும். சிலரின் பற்களில் அழுக்குப் படிந்து துர்நாற்றம் வீசும். அவர்களுடன் பேசுவது என்பது மிகவும் வேதனையான அனுபவமாக இருக்கும். இப்படிப்பட்டவர்களுடன் எப்படித்தான் குடும்பம் நடத்துகிறார்களோ என்று எண்ணத் தோன்றும். ஆனால் இவர்களுக்கு வாயின் துர்நாற்றம் இருப்பது தெரியாமல் போனாலும் கூட பற்களில் கறை இருப்பது தெரிந்திருக்கும்.
  ஹைரோ (கி.பி. 46-120) என்னும் மன்னன் ஒருமுறை தனது எதிரியிடம் பேசும்பொழுது. “உங்கள் வாயில் துர்நாற்றம் அடிக்கிறது” என்று எதிரி சுட்டிக்காட்டிவிட்டான். வீட்டிற்கு நேராக வந்து தனது மனைவியிடம் கோபித்துக் கொண்டான் இம்மன்னன். எனது வாயில் துர்நாற்றம் அடிப்பது உனக்குத் தெரியாமல் இருக்காது. அதை நீ ஏன் என்னிடம் கூறவில்லை என்று கேட்டானாம். அதற்கு அந்தப் பெண்மணி. எல்லா ஆண்களுக்கும் இப்படி வாய் நாற்றம் இருக்கும் என்று நினைத்துவிட்டேன் என்று சொன்னாராம். மனைவியின் அப்பாவித்தனத்தைப் புரிந்து கொண்ட மன்னன், தனக்கு இருக்கும் மிகவும் அசிங்கமான வாய்நாற்றத்தைப் புரிந்து கொண்டு அதனைப் போக்க நடவடிக்கை எடுத்தானாம்.
  நம்மிடம் இருக்கும் பல குறைபாடுகள் நமது எதிரிகள் மூலமாகத்தான் நமக்குத் தெரியவரும். இருப்பினும் அந்தக் குறைபாடுகளைக் களைவது நமது முன்னேற்றத்திற்கு நல்லது. பற்கள் மிகவும் மிகவும் அவசியமான உறுப்பாகும். எனவேதான் அதைப் பராமரிக்க தனி மருத்துவத்துறை ஒன்றுள்ளது. பல் டாக்டர்களுக்கென்று BDS என்ற பட்டப்படிப்பும், MDS என்ற பட்டமேற்படிப்பும் உள்ளது. பற்சிதைவு ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். அப்படி ஏற்பட்டுவிட்டால் உடனே ஒரு பல் டாக்டரை அணுகி சிகிச்சைப் பெற வேண்டும். வலியில்லாமல் பல் சிகிச்சைப் பெற மயக்க ஊசிகள் வந்துவிட்டன. எனவே, சிகிச்சையால் வலி ஏற்படாது. பல் வலி என்றால் காலம் கடத்தக்கூடாது. கடத்தினால் சிதைவு அதிகமாகி வலியும் அதிகமாகும். காலம் கடத்தி, வாயில் உப்பு அல்லது மூக்குப் பொடி அல்லது கிராம்பு வைப்பதால் எந்த ஒரு பலனும் ஏற்பட்டுவிடாது. வருடம் ஒரு முறை பல் டாக்டரிடம் சென்று பற்களைப் பரிசோதிப்பதும் நல்லது தான்.
  பொது சுகாதாரம்
  தனிமனித சுகாதாரத்தைப் போல பொதுச் சுகாதாரமும் மிகவும் முக்கியமானது. பொது இடங்களில் சுகாதாரக்கேடு மிகவும் அதிகம். பொதுக் கழிப்பறை, சாலைகள், பேருந்து நிலையம், புகைவண்டி, ஆறு, குளம் போன்ற இடங்களைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கும் பழக்கம் இன்னும் வரவில்லை என்றே கூறலாம். நமது நாட்டின் மிகப் பெரிய குறைபாடும் இதுதான்.
  பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றிய ஆய்வில் பல கருத்துகள் சொல்லப்பட்டன. பெண் சிசுக்கொலை, வரதட்சணைக் கொடுமை, குடும்பங்களில் வன்முறை, வன்கொடுமை, பாலியல் பலாத்காரம் போன்றவற்றின் வரிசையில் இன்னொன்றும் கூறியிருந்தனர். போதுமான பொதுக் கழிப்பிடம் இல்லை என்பதுதான் அது. பெண்கள் வேலைக்குப் போக முன்வராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். சுத்தமான கழிப்பிடங்கள் எங்கும் ஏற்படுத்தப்பட வேண்டும். அவை நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.
  வீட்டைச் சுத்தமாக வைக்கும் நாம், தெருவைச் சுத்தமாக வைப்பது இல்லை. இன்னும் சொன்னால் தெருவை அசுத்தப்படுத்துகிறோம். வீட்டிலுள்ள குப்பைகளைத் தெருவில் கொட்ட யாரும் தயங்குவதில்லை. கடைகளில் உள்ள கழிவுப் பொருட்களைக் காலையில் தெருவில் கொட்டுவதை நாம் பார்க்க முடியும். ஓர் ஓறு என்றால் அதில்தான் துணி துவைப்பது, குளிப்பது, மாடுகளைக் குளிப்பாட்டுவது போன்ற சுகாதாரக் கேடுகளைச் செய்கிறோம். ஆற்றின் கரைகள் பொதுக் கழிப்பிடமாகவே மாறிவிட்டன. சிலர் இப்படிப்பட்ட ஆற்றுத் தண்ணீரை அப்படியே குடிக்கவும் செய்கிறார்கள். ‘லூயி பாஸ்டர் கண்டுபிடித்த, நோய்க் கிருமிகள் தான் நோயை ஏற்படுத்துகின்றன என்ற உண்மையைத் தெரிந்த யாராவது ஆற்று நீரை அப்படியே குடிப்பார்களா?’ இந்த விஷயத்தில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ஒற்றுமை நிலவுகிறது.
  மினரல் வாட்டர் குடிப்பது செலவு என்றாலும் ஒரு வகையில் நல்லது தான். நோய் வந்து ஆயிரக்கணக்கில் அதற்காக செலவு செய்வதை விட ஒரு லிட்டர் தண்ணீருக்கு 15 ரூபாய் கொடுப்பது மேல் என்று தான் தெரிகிறது.
  பொதுச் சுகாதாரத்தை யாரும் கடைபிடிக்கவில்லை என்பதற்கு கூவம் ஆறுதான் நல்ல சான்று. இன்று ஒட்டு மொத்த சாக்கடையாகிவிட்டது கூவம் நதி. இது முன்னொரு காலத்தில் நன்னீர் நதி. 1911ம் ஆண்டு இந்நதியின் நீரை தீவுத்திடலில் தங்கியிருந்த இராணுவ வீரர்கள் குடிநீராக பயன்படுத்தியதற்கான ஆதாரம் உள்ளது. நம்ப முடிகிறதா? மற்ற நதிகளும் இந்த நிலைக்கு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நிலை வராமல் தடுப்பதும் இந்நூலின் ஒரு நோக்கமாகும்.
  பொது இடங்களில் குப்பைக் கொட்டுவதும், எச்சில் துப்புவதும், சிறுநீர்க் கழிப்பதும், மலம் கழிப்பதும் சமுதாயத்திற்கு எதிரான குற்றங்களாகும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். இதனால் நோய்கள் மற்றவர்களுக்கு ஏற்படும் என்பது தெரிந்தால் அவற்றைச் செய்யமாட்டோம். ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கூடுகின்ற மெரினா கடற்கரையில் கூட இவ்வனைத்து சுகாதாரக் கேடுகளும் மலிந்து கிடக்கின்றன. சுகாதாரக் கல்வி மற்ற எல்லாவித கல்வியைக் காட்டிலும் அடிப்படையானதும், அவசியமானதும் ஆகும். இந்நூலைப் படிக்கும் உங்களிடம் நான் விரும்பிக் கேட்டுக் கொள்வது, நீங்கள் பொதுச் சுகாதாரத்தைக் காப்பதோடு மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டும் என்பதாகும்.
  சென்னையில் ஒரு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் நான் வசிக்கிறேன். இங்கு மழை நீர் வடிகால் ஒன்றுள்ளது. வடிகாலில் மழைக்காலத்தில் நீர் ஓடும். மற்ற நேரங்களில் காய்ந்து கிடக்கும். கடந்த நான்கு ஆண்டுகளில் இது ஒரு சாக்கடையாக மாறி இப்பகுதியில் வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. புதிதாக வீடு கட்டுபவர்கள் குடிநீர் வடிகால் வாரிய இணைப்பு வாங்காமல் வீட்டின் கழிவு நீரை இந்த மழை நீர் வடிகால் வாய்க்காலில் விட்டுவிடுகிறார்கள். வீட்டுச் சுகாதாரம் காக்கத் தெரிந்த மக்கள் பொதுச் சுகாதாரம் பற்றிக் கவலைப்படாமல் இருந்ததால், இப்படி ஒரு சாக்கடை உருவாகி. நூற்றுக்கணக்கான வீட்டார்களுக்கு பெரும் தொல்லையும், சுகாதாரக் கேடும், மன உளைச்சலும் ஏற்பட்டிருக்கிறது. தனி மனித சுகாதாரம், பொதுச் சுகாதாரம் இரண்டுமே இரண்டு கண்களைப் போன்றவை. இவை இரண்டையும் நாம் காக்க வேண்டும். அப்பொழுதுதான் நாம் அனைவரும் நலமாக வாழ முடியும்.
  அளவான உணவு, உடற்பயிற்சி, உறக்கம் ஆகியவற்றின் மகத்துவம் புரிகிறது. இவற்றை நாம் விரும்பி வரவேற்கிறோம். ஆனால், நாம் உயிர் வாழும் வரை வெறுத்து நம்மை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. அது தான் உடல் பருமன்.

  விதை

  ஒரு கடுகு விதைக்கு இருக்கும் நம்பிக்கை உங்களுக்கு இருக்குமானால், உங்களால் மலையைக் கூட ஆட்டிப் படைக்க முடியும்.
  – இயேசு
  லாஸ் ஏஞ்செல்சில் ஹாலிவுட் ஸ்டுடியோ உள்ளது. நான் ஒரு முறை சென்றிருந்தேன்.
  நுழைவுச்சீட்டு வாங்கி உள்ளே சென்றேன்.
  பார்வையாளர்களை அழைத்துச் செல்ல ‘டிராலி’ தயாராக இருந்தது. சுமார் 200 பேர் செல்லலாம். ஏறி அமர்ந்தோம். ‘டிராலி’ புறப்பட்டது.
  சிறிது தூரம் சென்றோம். ‘அங்கே பாருங்கள்’ என்றார் வழிகாட்டி. நாங்கள் திரும்பிப் பார்க்கிறோம். உயரமான கட்டிடம் தீப்பிடித்து எரிகிறது. அனைவரும் பதற்றமடைகிறோம். சிறிது நேரம் பார்த்த பிறகு எரியும் தீ நின்றுவிடுகிறது. அதற்கு முன்பு இருந்ததைப் போன்று, ஒன்று நடக்காதது போன்று, பற்றி எரிந்த சுவடே தெரியாத அளவிற்கு அந்தக் கட்டிடம் காட்சியளித்தது.
  இரண்டாவது காட்சி
  எங்களின் ‘டிராலி’ ஒரு சிறு கால்வாயைக் கடந்து செல்கிறது. மறுபுறம் சென்றபிறகு நிறுத்தப்பட்டது. பின்புறம் பாருங்கள் என்றார் வழிகாட்டி. திரும்பிப் பார்க்கிறோம். நாங்கள் வந்த மரப்பாலம் அப்படியே இடிந்து விழுந்துவிட்டது. நாங்கள் அனைவரும் ‘நல்ல காலம் தப்பித்தோம்’ என்று நினைத்தோம். ‘இப்பொழுது பாருங்கள்’ என்றார் வழிகாட்டி. நாங்கள் அனைவரும் பார்க்கிறோம். விழுந்த தூண்கள், பலகைகள் மீண்டும் ஒவ்வொன்றாக இயந்திரத்தின் மூலமாக சிறிது நேரத்தில் அமைக்கப்படுகிறது. மீண்டும் சில நிமிடங்களுக்குப்பிறகு அதே பாலத்தைக் கடந்து வந்தோம்.
  மூன்றாவது காட்சி
  சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘பத்து கட்டளைகள்’ (Ten commendments) என்ற ஆங்கிலப்படம் தமிழ்நாட்டில் பல இடங்களில் வெற்றிகரமாக ஓடியது. அதில் ஒரு காட்சி. மோசஸ் செங்கடலைக் கடந்து செல்ல வேண்டும் தனது ஆட்களோடு. ஆண்டவரை வேண்டுகிறார். வழி கிடைக்கிறது. கடல் நீர் இடது பக்கமும், வலது பக்கமும் அப்படியே நின்று விடுகிறது. அனைவரும் அடுத்த கரையை அடைகின்றனர். மீண்டும் நீர் முன்பிருந்ததைப் போன்று காட்சியளிக்கிறது. இதனைப்படத்தில் பார்த்ததை நேரில் கண்டபோது வியந்தேன்.
  நான்காவது காட்சி
  சில ஆண்டுகளுக்கு முன்னால் சென்னை தியேட்டர் ஒன்றில் ‘ஜாஸ்’ என்ற ஓர் ஆங்கிலப்படம். அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதில் வரும் இராட்சத் திமிங்கலம் அட்டகாசமானச் செயல்களை நிகழ்த்துகிறது. அதை அப்படியே இன்றும் காட்சிப் பொருளாக வைத்திருக்கிறார்கள். பார்க்கும்போது பிரமிப்பு அடைகிறோம்.
  ஐந்தாவது காட்சி
  இரவு 7 மணி. ‘விலங்குகள் ஊர்வலம்’ என்று ஒரு காட்சி. அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையான விலங்குகள் பங்கேற்கும் என எண்ணிக் கொண்டிருந்தோம். ஆனால் ஏமாற்றம். விலங்குகளின் உருவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட (மூங்கில்களினால் தயாரிக்கப்பட்ட)வைகள் ஊர்வலமாகச் சென்றன. ஒரு ரம்மியமான காட்சி.
  ஆறாவது காட்சி
  பல புகழ்பெற்ற நட்சத்திரங்கள் ‘கிளியோபாத்ரா’ படத்தில் நடித்த எலிசபெத் டெய்லர் போன்றவர்கள் நடிக்கின்றபோது பயன்படுத்தப்பட்ட அத்தனை ஆடைகளையும், அணிகலன்களையும் காட்சிப் பொருள்களாக வைத்திருந்தனர்.
  இவ்வாறு பல காட்சிகள்.

  நமது சென்னையில் புகழ்மிக்க ஸ்டுடியோ ஜெமினி ஸ்டுடியோ. பல ஸ்டுடியோக்கள் இன்று மறைந்துவிட்டன.
  ஜெமினியில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான படம் சந்திரலேகா. ‘டிரம் டான்ஸ்’ அனைவராலும் பாராட்டப்பெற்றது. இவைகளை எல்லாம் காட்சிப் பொருள்களாக வைத்து, கட்டணத்தின் மூலம் பார்வைக்கு ஏற்பாடு செய்திருந்தால், பணமும் சம்பாதித்திருக்கலாம். பிறரும் பயனடைந்திருப்பர்.
  அமெரிக்கர்கள் எதையும் பணமாக்கிவிடுவார்கள்.
  அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் கலைவாணர் நடித்த ‘நல்ல தம்பி’ படத்தில் ஒரு காட்சி.
  தெருவில் நடக்கும்போது, காலில் பாண்ட்ஸ் பவுடர் காலி டப்பா அடிபடுகிறது. கையிலெடுப்பார். ‘இது மட்டும் ஜப்பான்காரன் கையில் கிடைத்திருந்தால், ஒட்டைகளைப் போட்டு, கம்பிகளைப் பொறுத்தி சக்கரங்களை அமைத்து, வண்ணம் தீட்டி, ஒரு பொம்மையோ அல்லது ஒரு பொம்மை மோட்டராகவோ மாற்றி நம்மிடம் விற்றிருப்பார்கள்’ என்றார்.
  வீணாகும் பொருளிலிருந்த விலை மதிக்க முடியாத பொருள்களையும் உருவாக்கலாம்.
  சென்னையில் அழகான தங்கக் கடற்கரை உள்ளது. கடற்கரையில் தங்கம் கிடைக்குமா?
  கிடைக்காது, ஆனால் கிடைக்கும்.
  எப்படி?
  கடற்கரை ஓரத்தில் பல ஏக்கர் நிலங்களை வாங்கினார்கள். எதற்கும் உதவாத நிலப்பாகம்.
  பனைமரங்களை வெட்டினார்கள். ஆறடி அல்லது ஏழடி உயரத்திற்கு அதில் பனை ஓலைகளை வைத்து குடைகளை அமைத்தார்கள். நாற்காலிகளைப் போட்டார்கள். பலவகையில் அழகுபடுத்தினார்கள்.
  நுழைவுக்கட்டணம் செலுத்தி சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணமுள்ளனர். சினிமாவிற்கு தேவையான பல காட்சிகள் அங்கு படமாக்கப்படுகின்றன.
  மணல் கடற்கரை, பணம் கொட்டும் தங்க கடற்கரையாகிவிட்டது.
  இதற்கெல்லாம் மூலகாரணம் என்ன?
  It is not the money that gives you ideas
  But it is the idea that gives you money
  எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. அதனைச் செயல்படுத்த தன்னம்பிக்கை என்னும் திறவுகோல் தேவை.
  வங்காளத்திலிருந்து ஒரு குடும்பம் இந்தோனேஷியாவிலுள்ள ஜாகர்ந்தா என்ற நகரில் குடியேறியது.
  காலப்போக்கில் கடுமையான உழைப்பினால் பல கட்டிடங்களுக்குச் சொந்தக்காரரானார்கள்.
  ஆனால் எதிர்பாராதவிதமாக இனக்கலவரம் ஏற்பட்டபோது அனைத்தையும் இழந்துவிட்டனர்.
  குடும்பமே மீளாத்துயரிலிருந்தது. அப்போது அங்கு சுவாமி மித்திரானந்த அவர்கள் வந்திருந்ததால் குடும்பமே சோகத்தில் மூழ்கி இருப்பதைப் பார்க்கிறார். ஆனால் குடும்பத்தலைவர் கதிகலங்காமல் இயல்பு நிலையில் இருப்பதைப் பார்க்கிறார். அவரைப் பார்த்து சுவாமி அவர்கள் ‘உன்னால் மட்டும் எப்படி இவ்வளவு பெரிய இழப்பைத் தாங்கிக் கொள்ள முடிகிறது’ என்று கேட்கிறார்.
  அதற்கு அவர் ‘நான் ஜாகர்தா வந்தபோது என்னிடம் எதுவுமில்ûல் நிறைய சம்பாதித்தேன். இன்று எனக்கு சொந்தமான இரண்டு தியேட்டர்களையும், செல்வங்களையும் கலவரக்காரர்களால் இழந்து குடும்பத்தோடு தெரிவிலிருக்கிறேன். கவலையில்லை. காரணம் இங்கு வந்தபோது என்னிடம் பணம் இல்லை. ஆனால் தன்னம்பிக்கையிருந்தது. வளர்ந்தேன்; இழந்தேன் செல்வத்தை மட்டும். ஆனால் அந்த தன்னம்பிக்கை என்னிடம் இன்னும் உள்ளது. மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவேன்’ என்றார்.
  மலை குலைந்தாலும் நிலை குலையாத மனம் வேண்டும்.
  தன்னம்பிக்கை உள்ளவருக்கு எல்லாம் கிடைக்கும்.
  இல்லாதவருக்கு இருப்பவையும் விடைபெற்றக் கொள்ளும்.

  –பேராசிரியர் இரத்தின நடராசன்

  தன் வினை தன்னை சுடும்

  இது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டவை!

  என் வீட்டை தாண்டி சில தூரம் நடந்தால், ஓட்டு வீடுகளும் கூரை வீடுகளும் அடுக்கி இருக்கும் ஓர் நெரிசலான வீதி வரும்.
  அங்கு வசிப்போர் எல்லாம் கூலி வேலை, குடிசை தொழில் போன்றவைகளுக்கு செல்பவர்களே.
  அங்குள்ள ஓர் தேனீரகத்தில் தான் நானும் என் நண்பர்களும் ஒன்று சேர்வோம். வாரம் ஒரு நாள் அங்கு அரட்டை, சிரிப்பு என்று அந்த தேனீரகமே ஜொலிஜொலிக்கும்!

  சென்ற ஞாயிற்றுக்கிழமை அங்கு ஓர் சம்பவம்.
  நாங்கள், முக்கியமாக நான்! சிரித்து சிரித்து என் வயிறு புண்ணாகி போன நேரமது!!!
  அந்த தேனீரகத்தின் எதிரில் ஒருவர் வசித்து வருகிறார்.
  அவர் தான் இக்கதையின் நாயகன்!
  அவரை பற்றி என்ன சொல்ல… எப்படி அறிமுகப்படுத்துவது….
  ‘புது பணக்காரன்’ என்ற ஓர் அடைமொழி இவருக்கு சரியாய் பொருந்தும் என்று நினைக்கிறேன்!

  சரி! இனி வரும் சிறு சம்பவத்தை நீங்கள் படித்து முடிக்கும் போது இப்பெயர் இவருக்கு சரியாக தான் பொருந்துகிறது என்று தோன்றும்!
  சென்ற ஞாயிற்றுக்கிழமை அந்த தேனீரகத்தில் வழக்கம் போல் தேனீரொன்றில் மூழ்கி இருந்தோம், நானும்
  என் நண்பர்களும்.
  நல்ல மழை!
  வீதியெங்கும் இருந்த சிறு சிறு குழிகளினுள் மழை தன்னை தானே தேக்கி கொண்டாள்.
  வழக்கம் போல், சிறிது நேரம் மட்டும் மேடை மேல் அன்ன நடை போட்டுவிட்டு திரை பின் மறைந்து போகும்
  மாடல் அழகி போல் மேகங்களுக்கிடையே காணாமல் போனாள் மழை அழகி.
  மழை பெய்யும் வரை, பேய் கடந்த வழி போல ஆள் அரவமற்றிருந்தது அந்த வீதி.
  அதன் பின் வண்டிகள் சரமாரியாய் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தது.
  அப்போது நம் ‘புது பணக்காரர்’ அவர் வீட்டின் முன் தென்ப்பட்டார்
  தன் சுருங்கிய கண்களை கொண்டு சுற்றியும் முற்றியும் பார்த்தார்.
  அப்போது அங்கு ‘வீர்’ரென்று கடந்த வண்டி ஒன்று, புது பணக்காரரின் வெள்ளை சொக்காவின் மேல் ‘மாடர்ன் பேயிண்டிங்’யிட்டு சென்றது
  சேற்றை கொண்டு அபிஷேகம் செய்த நிலைமையில் நம் நாயகன்!
  கடுப்பில் அவருக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகள் அவருடைய உலர்ந்த உதடுகள் அருவியாய் கொட்டின
  நாங்கள் இதையெல்லாம் தேனீரகத்தில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தோம்.
  “டேய்! யாராவது போய் ஹெல்ப் பண்ணுங்கடா! பாவம்…” என்றேன் நான்
  அதற்கு என் நண்பன் ஒருவன், “தம்புடு! இவனுக்கு இது வேணும்டா!! ஏன் சொல்றன்னு கேளு!” என்றான்.
  ஏன் என்பது போல் எங்கள் விழி முன் வந்து நிற்க,
  “டேய்! இவனிருக்கானே… மகா அயோகியன்! மூணு நாலு மாசத்துக்கு முன்னாடி, இந்த தெருவோட நடுவால போற பைப் லைன் எடுத்து அவன் வீட்டுக்குள்ள ஒரு கனெக்ஷன் கொடுத்துக்கிட்டான். அவன் வீட்டுக்கு முன்னாடி இருக்கிற அந்த குழிய மூடாம விட்டுட்டான். அதுல ஒரு ஸ்கூல் பொன்னு சைக்கிள்ள போகும்போது விழுந்து அடி பட்டிச்சு. அந்த பொன்னொட அம்மா இந்த மாக்கான் கிட்ட சொன்னாங்க, ‘ஐயா! இந்த குழிய மூடிடுங்க. ஏன்னா வேற யாரும் இதுல விழுந்து அடி பட வேணாம்’ன்னு! அதுக்கு இவன் பெரிய இவன் மாதிரி சிரிக்கிட்டே’ஏங்க ரோடுல ஏதோ குழி இருந்துச்சுன்னா அத நான் எதுக்குங்க என் காசை போட்டு மூடணும்? இது நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச காசு.. நான் ராபகலா உழச்சு சம்பாதிச்ச காசுங்க! ஏன் உங்களுக்கு வேணும்னா நீங்க செலவு பண்ணி மூடிக்கிங்க! இல்லேன்னா சர்க்கார் ஆளுங்க வந்து மூடுவானுங்க! நானெல்லாம் ஒரு சல்லி காசு செலவு பண்ண மாட்டேன்’ன்னு சொல்லிட்டான். தெருவுல இருக்கிற வேற ஆளுங்க எல்லாம் சொல்லியும் கேக்கல… நாய்! இப்போ அவன் வெட்டுன குழி அவனுக்கே ஆப்பாயிடுச்சு மச்சி!!!” என்று சிரித்தான்.
  ‘இவருக்கு இது சரியான தண்டனைதான்!’ என்று நானும் சிரித்தேன்.
  அவர் வீட்டின் முன் வண்டிகள் கடந்து கொண்டுதான் இருந்தன, சேற்றை வாரி வீட்டின் முற்றத்தில் தெளித்து அபிஷேகம் செய்து கொண்டும்தான் இருந்தன!

  பயத்திற்கு குட்பை

  “வாழ்வில் வெற்றி பெறுவதற்கு மன உறுதியுடன் செயல்பட வேண்டும். மன உறுதி பெறுவதற்கு எதிரியாக இருப்பது பயம். நாம் மன உறுதி பெறும்போது நம்மிடம் உள்ள பயம் நம்மைவிட்டு பறந்தோடி விடுகிறது”. இவை அனைத்தும் நாம் அறிந்துள்ளவை.

  மன உறுதி பெறுவதற்கு மனதில் உள்ள பயத்தை விரட்டிவிடுவதே சிறந்த வழி. “அது சரிதான். ஆனால், சொல்வது சுலபம், செய்வது கடினம்” என்று சொல்லும் குரல் கேட்கிறது. ஆகவே, பயத்தை எப்படி விரட்டிவிடுவதென சுருக்கமாகக் காண்போம்.

  நமது ஆழ்மனதில் பயம் இடம்பெறும்போதே நமக்கு அந்த உணர்வு ஏற்படுகிறது. அது இரண்டு வகையாக இருக்கலாம். முதல்வகை, ஆழ் மனதில் வேரூன்றி பதிந்துள்ள நிரந்தர பயமாக இருக்கலாம். இரண்டாவது வகை, அவ்வப்போது ஏற்படும் தற்காலிக பயமாக இருக்கலாம். அது எந்த வகையாக இருந்தாலும் மனதிலிருந்து அகலும் வரையில் நம்மை தனது பிடிக்குள் வைத்துக் கொண்டு ஆட்சி செய்கிறது. அது தைரியத்தை, தன்னம்பிக்கையை, திறமையை இழக்க வைக்கிறது.

  மனதில் பய உணர்வை வேரூன்றி பதிய வைக்கும் சூழ்நிலையில் வளர்வதும், வாழ்வதும் நிரந்தர பயம் ஏற்பட பிரதான காரணமாக இருக்கிறது. அது நம்மை மற்றவரிடமிருந்து பிரித்து தனிமைப்படுத்தி, செயலிழக்க வைக்கும் அளவுக்கு இருந்தால், மனோ தத்துவ, மருத்துவ உதவி பெறுவதே சிறந்த வழி.

  மனதில் உள்ள பய உணர்வை விரட்டி விடுவதற்கு தைரிய உணர்வை நிரப்பிக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும். இந்த முயற்சிக்கு இரண்டு வழிகள் உதவக்கூடும்.

  1. எண்ணத்தை மாற்றிக் கொள்வது
  2. சுற்றுப்புற சூழ்நிலையை மாற்றிக் கொள்வது

  இந்த இரண்டு வழிமுறைகளும் கற்பனையால் ஏற்படும் தற்காலிக பயத்தை விரட்டிவிட உதவுகின்றன.

  எண்ண மாற்றத்தை ஏற்படுத்துபவை

  1. மனதில் பய உணர்வு தோன்றும்போது நமது கவனத்தை திசை திருப்பிக் கொள்வது.
  2. பயத்திற்கு எதிர் உணர்வான தைரியத்தைப் பற்றிச் சிந்திப்பது.
  3. தைரிய உணர்வை தூண்டிவிடும் நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்ப்பது.
  4. தைரியமளிக்கும் பாடல்களைக் கேட்பது.
  5. வீரதீர செயல்களைப் புரிந்த மாவீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை படிப்பது.
  6. அநியாயத்தை எதிர்த்து நியாயத்திற்காக போராடும் கதாபாத்திரமுள்ள திரைப்படங்களைப் பார்ப்பது.
  7. நாம் நம்மைப் படைத்த இயற்கையின் ஒரு பகுதியாக இருப்பதால், நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கென நமக்குள் இயற்கையான தைரிய சக்தி இருப்பதை நம்புவது.
  8. இதை இடைவிடாமல் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால், அது நமது ஆழ்மனதில் இடம்பெற ஆரம்பித்துவிடும்.
  9. அங்கே குடியிருக்கும் பயம் படிப்படியாக வெளியேறிவிட ஆரம்பிக்கும்.
  10. மனம் தெளிவடைந்துவிடும். தன்னம்பிக்கை பிறந்துவிடும்.

  சூழ்நிலை மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள

  1. வசிக்கும் இடம், தொழில் புரியும் இடம் பய உணர்வைத் தூண்டுவதாக இருந்தால், அந்த இடத்தை விட்டு மாறிச் சென்றுவிட முயற்சி செய்ய வேண்டும்.
  2. நம்மைச் சுற்றி உள்ளவர்களில் பலர் எதிர்மறையாகப் பேசி நமக்கு பயத்தை உருவாக்குபவர்களாக இருப்பார்கள். நாம் அவர்களுடன் பழகுவதை தவிர்த்துவிட வேண்டும்.
  3. அதைப்போலவே, நேர்மறையாகப் பேசி நமக்கு ஊக்கமளிப்பவர்கள் சிலர் இருப்பார்கள். அவர்களது பேச்சும் செயலும் ஆக்க பூர்வமானவையாக இருக்கும். அவை நமக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கும். அது போன்றவர்களுடன் அதிகமாகப் பழக வேண்டும்.
  4. இந்த முயற்சி நமது பய உணர்வை விரட்டிவிட பெரும் உதவி அளிக்கும்.

  நம்மிடம் உள்ள பய உணர்வு நீங்கி தைரியம் பெறும் வரையில் எண்ணத்தையும் சுற்றுப்புற சூழ்நிலையையும் மாற்றிக்கொள்ளும் முயற்சிகளை இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். பின்னர், உங்கள் தைரியத்தையும், திறமையையும், செயல்பாட்டையும் கண்டு நீங்களே வியப்படைவீர்கள்.

  —விமலநாத்

  ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க ஆலோசனைகள்

  தி. ரங்கசாமி:

  உழைப்பு, கட்டுப்பாடு, நேர்மை, நீதி, கண்ணியம் ஆகியவற்றைப் புறந்தள்ளி பணம் ஒன்றே பிரதானம் அதை எப்படி வேண்டுமானாலும் திரட்டலாம், அரசுக்குப் போட்டியாக திறமையிருந்தால் அச்சடித்துக் கொள்ளவும் செய்யலாம். அவற்றை வெளிநாடுகளில் கருப்புப் பணமாகப் பதுக்கி வைத்துக் கொண்டு அதைக் காட்டியே இதர நாடுகளில் இடம் பிடித்து ஆதிக்கம் செலுத்தலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டதன் மூலம் அது ஓரளவு ஏற்புடையது தான் என்று மக்கள் நம்பும் முறையில் பிரச்சாரமும் செயல்பாடும் உள்ளது. இந்தப்பணி சமுதாயத்தின் மேல்மட்டத்திலுள்ள அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் நடவடிக்கைகளே வசதியைத் தேடுகின்ற மக்களுக்கு நல்ல வழிகாட்டியாக உள்ளது. எனவே துணிவு பெற்றவர்கள் தமது தவறான செயல்கள் வெற்றிதரும் என்ற தன்னம்பிக்கையில் லஞ்சம் கொடுத்து ஊழலை ஊக்குவிக்கின்றனர். மனிதன் மனிதனாக வாழ்வதற்குத் தன்னம்பிக்கை வேண்டுமென்று பிரச்சாரம் செய்கின்ற செயல் ஒரு புறமிருக்க தவறான முறைகளும் தன்னம்பிக்கையிருந்தால் செயல்பட முடியும் என்று ஊழலையும் லஞ்சத்தையும் ஊக்குவிக்கின்றனர்.

  சமூகம் மனிதத் தன்மையுடன் கூடிவாழும் பண்பிழந்து தனிமனிதச் சுதந்திரச் சிந்தனையுடன் வாழலாம் என்று குழந்தை முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்ற உண்மையைப் பார்க்கத் தவறிவிட்டோம். கூடிவாழும் பண்பு அறவே அற்றுப்போகும் முறையில் கல்வியளிக்கப்படுகிறது. மனதைப் பக்குவப்படுத்துகின்ற ஆன்மீக சிந்தனை அகற்றப்பட்டு பணமே வாழ்வு என்று எண்ணுமளவு பாடத்திட்டங்களும் கல்வி முறையும் அமைந்துள்ளது. இதையும் கவனத்தில் கொண்டுதான் மாற்றம் காண வேண்டும்.
  1. கல்வித்துறையில் மாற்றம் வேண்டும்
  2. மனித மனங்களின் சீரழிவிலிருந்து விடுவிக்க வேண்டும்.
  3. சட்டங்களில் மாற்றம் வேண்டும்.
  4. ஊழல் லஞ்சம் சமுதாயக் கேடு என்பதை உணர்ந்திட வேண்டும்.
  5. மந்திரிமார்கள் பொய்பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.
  6. லஞ்சம் பெற்ற அதிகாரிக்கு தண்டணை தருவதில் பாதியளவு கொடுத்தவருக்கு அளிக்க வேண்டும்.
  7. ஊழல் செய்ய உதவிய அதிகாரிக்கு அளிக்கும் தண்டனையில் பாதி அதற்கு உதவி செய்தவருக்கு அளிக்க வேண்டும்.
  8. அரசியல் கட்சிகள் சிறியவை, பெரியவை என்றில்லாமல் பதிவு பெற்றவை சம அந்தஸ்துள்ளதாகக் கருதப்பட வேண்டும்.
  9. கூட்டணி அமைப்புக்கள் யாவும் சம உரிமை பெற்றவைகளாகத் திகழ வேண்டும்.
  10. முதலாளித்துவத்திற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும்.
  11. மதச்சார்பின்மை என்று சொல்வதைத் தவிர்த்து மதங்களின் ஜனநாயக உரிமைக் காக்கப்பட வேண்டும்.
  12. ஒரு மனிதனின் நியாயமான உரிமையில் மற்றவர் தலையிடாமல் இருக்க வேண்டும்.
  13. கட்சித் தலைவர்களின் சொந்தமான அல்லது பொதுவான ஆசைகளை மக்கள் மீது திணிக்கக்கூடாது.
  ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க…???

  எஸ்.ஏ. முத்துபாரதி, திருப்பூர்:

  இரண்டிற்கும் அடிப்படைக் காரணங்கள் ஒன்றுதான் அதுதான் பேராசை. அதைப் போக்குவதைப் பற்றி சிந்திப்பதற்கு முன் பேராசை ஏன் தோன்றியது என ஆராய வேண்டும். பல்வேறு சமூக காரணங்களே ஒரு மனிதனுக்கு பேராசை ஏற்படக் காரணம். அதற்காக சமூகத்தை குற்றம் சொல்ல முடியாது. தனிப்பட்ட மனிதனின் குற்றமாக இருக்கலாம். ஆனால் காலத்தினால் அது சமூகத்தின் தூண்டுதலாகவும் இருக்கலாம். எனவே தனிமனிதர்களைக் கொண்டதுதான் சமுதாயம் எனும்போது, தனிமனித குற்றமும் சமுதாய குற்றமாகிறது. எனவே தனி மனிதனுக்கு நல்லது கெட்டது எதுவென கற்றுத் தரப்பட்டிருக்க வேண்டும். இது இடையிலே சாத்தியமல்ல. சிறு குழந்தை முதல் செய்ய வேண்டியது.

  தான் செய்வத தவறு என்றுகூட தெரியாமல் செய்வது மன்னிப்பதற்குரியது என்றாலும் ( ) என்றும் சொல்லப்பட்டுள்ளது. வாழ்க்கையைப் பற்றியும், வாழும் முறை பற்றியும் அறியாததே இதற்கு காரணம். நாம் வாழ்ந்த பின்னும் நம்பேரை மறவாமல் மக்கள் மனதில் போற்றும்படி இருப்பதே நல்ல வாழ்க்கை. இது அனைவருக்கும் சாத்தியமான ஒன்றா என்றால் இல்லை. ஆட்சி அதிகாரத்தாலோ, அமைப்புகளின் தலைமைப் பொறுப்பிலோ நியாயமாக நடந்தால்தான் சாத்தியம். மற்றவர்கள் தங்களால் தங்கள் செயல்பாட்டினால் நாடு என்ற அளவில் புகழ் பெற இயலாவிடினும், தாங்கள் வசிக்கும் ஊர் என்ற அளவிலாவது முயற்சிக்க வேண்டும். அதுவும் இயலாதவர்கள் யாருக்கும் தீமை தராமல் வாழப் பழகினாலே போதும்.

  இந்த எண்ணம் ஒருவருக்கு ஏற்பட வேண்டுமானால் அடிப்படையில் சில குணநலப்பேறுகளை கடைபிடிக்க வேண்டும். சிறுவயது முதலே ஒருவனுக்கு நல்லது, கெட்டது எதுவென கற்றுத்தந்து வளர்க்க வேண்டும். அதைவிடுத்து நன்றாக வளர்ந்து தவறான வழியில் வாழ்நது கொண்டிருக்கும்போது நல்லது இதுவென சொல்லி மாற்ற இயலுமா?

  தன்னையும், உண்மையும், நியாய தர்மங்களையும் ஒருவர் உணர்ந்தால் மட்டுமே இது சாத்தியம். இதைத்தான் “தன்னையறிய தனக்கொரு கேடில்லை” என மகான்கள் சொல்லியுள்ளனர். எனவே இலஞ்சம், ஊழல் மட்டுமல்ல சினம், கடும்பற்று, உயர்வு தாழ்வு, மனப்பான்மை, முறையற்ற பால்கவர்ச்சி, லஞ்சம் போன்ற குணங்களைப் பற்றிய அறிவும், விழிப்புணர்வும் கற்றுத்தந்து வளர்த்தாலே போதும். பிற்காலத்தில் அந்த குழந்தை நன்மக்களாய் வளர்ந்து வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் என்பதோடு மனிதகுலம் பெருமைப்படும் வகையில் செயல்படும். எனவே வளர்ப்பு முறைதான் இவை அனைத்திற்கும் அடிப்படை என்பதை உணர்ந்து, குழந்தை பருவத்தில் கல்வியில் தெளிவாக உணர்த்தி வளர்த்தலே சிறப்பு. தவறு செய்தபின் தண்டணை செய்வதைவிட தவறு செய்யாமல் இருப்பதும், தவறு செய்ய தூண்டாமல் இருப்பதுமே சிறந்தது.

  அருட்தந்தை, தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி எனும் மகான் அவர்களின் வழிகாட்டுதல்படி மனித வாழ்வின் துன்பங்களுக்கு அடிப்படைக் காரணங்களாக 6 குணங்களைக் கூறுகிறார். அவை பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வுதாழ்வு மனப்பான்மை, லஞ்சம் போன்றவை. ஒருவன் தான் செய்யும் செயலை ஆராய்ந்து அதில் யாருக்காவது பாதிப்பு ஏற்படுமா என உறுதி செய்ய வேண்டும். அதற்காக மகரிஷி அவர்கள் இரண்டொழுக்க பண்பாடு என்ற ஒன்றை வகுத்துள்ளார். இதை ஒரு மனிதன் கடைபிடித்தாலே போதும் வாழ்க்கையில் சிறந்து விளங்க முடியும். அவை.

  1. நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும், மனதிற்கும் துன்பம் தரமாட்டேன்.
  2. துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்

  ஒரு செயல் தவறானது என்பதை ஒருவர் எப்படி உணர முடியும்? அதற்கும் மகரிஷி வழி சொல்லியுள்ளார். ஒரு செயல் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, துன்பம் தராமல் இருக்க வேண்டும். அதுவே நல்ல செயலாகும்.

  ஒரு பணியை செய்வதற்காக ஊதியம் தரப்படுகிற போது அதையும் மீறி அந்தப் பணியை செய்வதற்கு கூடுதலான பணத்தை தவறான வழியில் கேட்டுப்பெற (லஞ்சம்) முயற்சிப்பது பாவமான செயலாகும். ஒரு பணியை முடிக்க அரசு நிர்ணயிக்கும் தொகையில் பாதி பொருட்களை மட்டும் வைத்து முழு வேலையையும் அரைகுறையாக முடித்து முழுவேலைக்கான பணத்தையும் பெறுவது என்பதும் (ஊழல்) ஒரு பாவமான செயலாகும். அதுபோல ஒரு பொருளுக்கு உண்டான தொகையைவிட அதிக விலைக்கு அரசுக்கு விற்று அதன் பலனை விற்பனையாளரிடமிருந்து பெற்றுக்கொள்வதும் (ஊழல்தான்) பாவமான செயலாகும்.

  தான் செய்வது பாவம் என்றுகூட அறியாமல் ஒருவர் இருப்பது எவ்வளவு பெரிய அறியாமை. படித்தவர்கள் செய்யும் ஊழலும், லஞ்சம் பெறுதலும் தான் தற்கால சமுதாயத்தில் பெரும் பங்கு தீமையாக இருக்கிறது. எனவே படித்தவர்கள் முட்டாள்களாக, அறியாமை மனிதர்களாக, பாவம் செய்பவர்களாக இருக்கிறார்கள் என நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. இதைத்தான் பாரதியார் “படித்தவன் சூழ செய்தால் போவான் போவான் ஐயோவென்று போவான்” என்றார். காரணம் சமூகத்தை ஏமாற்றி செய்யும் எதுவும் சரியானதல்ல. அதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். “காத்திருப்போம் காலமதின் பதிலுக்கு”.
  ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க ஆலோசனைகள்

  அ. சம்பத்:

  ஊழலால் லஞ்சமா, லஞ்சத்தால் ஊழலா என்பது முட்டையிலிருந்து குஞ்சா, குஞ்சிலிருந்து முட்டையா என்பதற்கு ஒப்பாகும். லஞ்சமும் ஊழலும் இரட்டைப் பிறவிகள் எனலாம்.

  சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு சாப்பிட்டவுடன் சாக்லெட் தருவேன் என்பதும், பள்ளி செல்ல மறுக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி சென்று திரும்பினால் அள்ளித் தருவேன் அவர்களுக்குப் பிடித்தமானவற்றை என்பதும் ஒரு வகை லஞ்சம் தான். பிஞ்சு உள்ளங்களில் லஞ்ச உணர்வுகளை ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

  பள்ளி ஆசிரியர்க்குப் பிடித்தமானவற்றை பெற்றோர்களை நச்சரித்துப் பெற்று அளித்து வீட்டுப் பாடம் எழுதாமையை கண்டிக்காமல் இருக்கவும், மதிப்பெண்கள் அதிகம் போடவும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் செய்கைகளும் பள்ளிப் பருவ லஞ்சம். இப்போக்கும் தவிர்க்கப்பட வேண்டும்.

  அடுத்து அரசு அலுவலகங்கள், இன்னென்ன கோரிக்கைகள் நிறைவேற்றப்பட இன்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என அலுவலக விளம்பரப் பலகைகளில் எழுதி வைக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் குறைந்த பட்ச அதிக பட்ச கால வரம்பு என்ன என்பதும் அறிவிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் தொடர்புடைய அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

  அடுத்து கட்டுமான ஊழல்கள். ஒவ்வொரு பணிக்கும் பல்வகை செலவு விகிதங்கள் ஷெட்யூல் ஆஃப்ரெட் என்று ஆண்டுதோறும் வரையறுக்கப்படுகின்றன. இவை தயாரிக்கப்படுவதே காண்டிராக்டர்கள், அளவு மேற்கொள்ளும் ஆய்வர்கள். மேலளவை செய்யும் பொரியாளர்கள் ஆகியோர் குறிப்பிட்ட அளவு பயன்பெறும் விதத்தில் நிர்ணயிக்கப்படுகின்றன. உதாரணமாக ரூ.1000 மதிப்பீடு என்றால் பணியின் அளவு ரூ.700 தான் எஞ்சிய ரூ.300 மேற்கண்டவாறு பங்கு பிரிக்கப்பட அனைத்து ஷெட்யூல் ஆஃப்ரெட்டுகளையும் ஆய்வு செய்து மாற்றியமைக்க திறன்மிக்கப் பொறியாளர்களைக் கொண்டு குழு நியமித்து சரியான அளவில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

  அலுவலக நடைமுறைகளை எளிதாக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு கோரிக்கை நிர்ணயிக்கப்பட்ட ஆவணங்களுடன் சரியான முறையில் இருந்தால் தபால் பார்க்கும் அதிகாரியே அதில் அனுமதிக்கப்பட்டது, வழங்கப்பட்டது போன்ற ஆணைகளை பிறப்பித்தால் கீழ்ப்பணியாளர்கள் ஆணைகளை உடன் தயாரித்து அனுப்பி விடலாம். மாறாக அடிமட்டத்தில் எழுத்தர் அலுவலகக் குறிப்பு தயாரித்து பிரிவுத் தலைவர் பார்வையிட்டு அதிகாரிக்கு ஒப்புதலுக்கு அனுப்பி, ஒப்புதல் கிடைத்த பின்னர் மறுபடியும் வரைவு ஆணை தயாரித்து பிரிவு அலுவலர் மூலம் அதிகாரிக்கு அனுப்பி ஆணையில் கையொப்பம் பெறும் நடைமுறை சிவப்பு நாடா எனப்படும் சிக்கலான நடைமுறை இலாகா வாரியாக இயன்ற வரை இம்முறையை மாற்றியமைக்க வேண்டும்.

  அரசியல்வாதிகளிடம் ஊழல் லஞ்சம் நிலவுவது ஜனநாயத்திற்கே ஆபத்து. தேர்தல் சமயம் வாக்காளர்கள் விழிப்புணர்வுடன் ஊழல் அரசியல்வாதிகளை வாக்குச் சீட்டு மூலம் விரட்டியடிக்கலாம். வாக்களிக்கவே பணம்பெறும் ஒரு சில மக்கள் இதற்குத் தடையாக இருப்பார்கள். இந்தப் போக்கும் மாற வேண்டும்.

  கதையும் கருத்தும்

  1. தன்னம்பிக்கை
  நமது வாழ்க்கை அமைதியாக ஆனந்தமாக அமைய விரும்புவது இயற்கை. ஆனால் விருப்பம் மட்டும் நல்வாழ்வை தந்து விடாது. நல்வாழ்வை அடைய பல தடைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். அத்தகைய தடைகளுள் ஒன்று தாழ்வு மனப்பான்மை.
  தன்னம்பிக்கை எங்கே குறைகிறதோ, அங்கே தாழ்வு மனப்பான்மை தலை தூக்கும். தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிந்து தன்னம்பிக்கையை விதைக்க வேண்டும்.
  ‘நம்மால் முடியாது’ என்று எண்ணினால் அந்த எண்ணமே நம் திறமையை குறைத்துவிடும். அல்லது அழித்து விடும். ‘நம்மால் முடியும்’ என்று எண்ணினால் அந்த எண்ணமே நம் திறனையும், ஆற்றலையும் முடுக்கி விடும்.
  தேர்வு அறையில் வினாத்தாளை கையில் வாங்கும் போதே ‘இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம்மால் சரியாக பதில் எழுத முடியுமா?’ என்ற எண்ணம் ஏற்பட்டால் நினைவாற்றல் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். நமக்கு தெரியாதொன்றும் இதில் கேட்டுவிடப் போவதில்லை என்ற நம்பிக்கையோடு வாங்கினால், படித்த அனைத்தும் மனத்தில் பளிச்சென்று தோன்றும்.
  தன்னம்பிக்கை என்றால் என்ன? ‘முடியும், கிடைக்கும், நடக்கும், ஆகும்’ என்று உறுதியாக எண்ணுகிற ஒரு மனநிலைதான். ஒன்றை நம்பிக்கையோடு பார்க்கும்போது அதன் நல்ல அம்சங்கள் தெரியும். அவநம்பிக்கையுடன் பார்க்கும்போது தீய அம்சங்களே தெரியும்.
  காந்தியடிகளிடம் இருந்த தன்னம்பிக்கையைத் தகர்க்க முடியாமல்தான் ஆங்கிலேயப் பேரரசு தடுமாறியது. நாலு முழ வேட்டி கட்டிய ஒரு மனிதனைச் சமாளிக்க முடியாமல் திண்டாடியதற்குக் காரணம் காந்தியடிகள் மனதில் ஆழமாக வேர்விட்டிருந்த தன்னம்பிக்கைதான்.
  தலைவன் தன்னம்பிக்கையை இழந்தால் அடுத்த நிமிடம் தோல்வியின் நிழல் தொண்டர்கள் மீது படர்ந்து விடும்.
  மண்ணுக்குள் ஊன்றப்பட்ட விதை ‘தன் வாழ்க்கை அவ்வளவுதான்’ என்று நினைப்பதில்லை. மாறாக தன்னை அழுத்தியிருக்கும் மண்ணையும் கல்லையும் உடைத்துக்கொண்டு நம்பிக்கையோடு முளைக்கிறது. நம்பிக்கை என்பது ஆறுதல் வார்த்தை அல்ல. அது செயலின் ஊற்றுக்கண்.
  வீட்டில் உள்ள பீரோவைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதில் துணிமணிகள் துவைத்து, தேய்த்து, அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தால் எப்படி இருக்கும்? துவைக்காத துணிகளைக் கசக்கி, சுருட்டி திணித்து வைத்தால் எப்படி இருக்கும்? மனம் எண்ணில் பீரோவில் அவநம்பிக்கை எண்ணங்களை அடித்துத் துவைத்து சுத்தப்படுத்தி நம்பிக்கை எண்ணங்களாக மாற்றி அடுக்கி வைக்க வேண்டும்.
  மலைப்பகுதியில் வாழ்ந்த சிறுவன் ஒருவன் மரத்தின் உச்சியில் பருந்து கூடு கட்டியிருப்பதைப் பார்த்தான். அந்தக் கூட்டில் பருந்தின் முட்டை இருந்தது. அந்த முட்டையை வீட்டிற்கு எடுத்துச் சென்று அடைகாக்க வைத்திருந்த கோழி முட்டைகளோடு சேர்த்து வைத்தான்.
  சில நாட்களுக்குப் பிறகு கோழி முட்டைகளின் குஞ்சுகளோடு பருந்து முட்டையிலிருந்து பருந்து குஞ்சும் வெளிவந்தது. பருந்துக் குஞ்சு கோழிக் குஞ்சுகளுடன் சேர்ந்து விளையாடியது. தானும் ஒரு கோழிக்குஞ்சுதான் என்று அது எண்ணிக் கொண்டது. அப்படியே நம்பியதால் கோழிக்குஞ்சைப் போலவே அதனுடைய நடவடிக்கைகளும் அமைந்தன.
  பருந்து குஞ்சு பறக்க முயற்சிக்கவில்லை. கோழிக்குஞ்சுகளுடன் அந்த இடத்திற்குள்ளாகவே சுற்றிச்சுற்றி வந்தது. பருந்துக் குஞ்சு பெரிதாக வளர்ந்தபோது கோழிக்குஞ்சுகளைவிட தான் மேலானது என்பதை உணரத் தொடங்கி பறக்க முயற்சித்தது. பலமான சிறகுகளை விரித்துப் பறக்கத்தொடங்கியது. உயரே உயரே பறந்து சென்றது.
  பறக்க முடியும் என நம்பியதால் கோழிக்குஞ்சாக இருந்த பருந்தால் பறக்க முடிந்தது. வெறும் காற்றை மட்டும் சுவாசித்தால் உயிர் வாழலாம். அத்தோடு நம்பிக்கையையும் சேர்த்துச் சுவாசித்தால் நல்வாழ்வு வாழலாம்.
  உழைப்பு
  வாழ்க்கையில் வெற்றி பெற எல்லோருமே விரும்புகின்றோம். அதற்கு என்ன வழி? சாதித்துக் காட்ட வேண்டும். சாதிக்க முடியுமா? நிச்சயம் முடியும். நினைத்ததை நடத்திக் காட்டும் வல்லமை உழைப்புக்கு உண்டு.
  நாம் வியர்வை சிந்தி உழைக்க வேண்டும். அதற்காகத்தான் இயற்கை நமக்குத் தேவையானவற்றை மறைத்தே வைத்திருக்கிறது. உண்பதற்கான உணவை மண்ணுக்குள் மறைத்து வைத்திருக்கிறது. உடுப்பதற்கு ஆடையாக கொடுக்காமல் நெய்து தயாரிக்கப் பஞ்சு கொடுத்திருக்கிறது. வசிப்பதற்கு அப்படியே வீடாக படைக்காமல் கட்டிக் கொள்ள கல்லையும், மண்ணையும் படைத்திருக்கிறது.
  பிற செல்வங்களை சேமிக்கலாம். ஆனால் உழைப்புச் செல்வத்தை சேமிக்க முடியாது. இன்றைய வருமானத்தை நாளை செலவழித்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைக்கு பயன்படுத்த வேண்டிய உழைப்பை நாளைக்கு பயன்படுத்த முடியாது. அன்றைய தினம் பயன்படுத்தாத உழைப்பு என்றைக்கும் வீணானது. சேமிக்க முடியாத உழைப்பை சிறந்த வழியில் மூலதனமாக்க வேண்டும்.
  ‘உழைப்பால் உயர்ந்தவர்’ என்று பிறரால் போற்றப்பட வேண்டும். ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தால் முன்னுக்கு வந்தவர் என்று தூற்றப்படக் கூடாது.
  எழுத்தாளர் கல்கியிடம் நண்பர் ஒருவர், ‘உங்கள் பெயருக்கு ஜாதகம் பார்ப்பதுதானே’ என்று சொன்னாராம். அதற்கு கல்கி ‘தம்பி, ஜாதகம் பார்க்கிற பைத்தியம் எனக்கு கட்டோடு பிடிக்காது. காலில் நகம் முளைத்த காலத்தில் இருந்து எத்தனையோ இடத்தில் அடிபட்டு மிதிபட்டு கஷ்டப்பட்டு நான் ஒவ்வொரு படியாக முன்னேறியது என் சொந்த உழைப்பினால்தான். ஆனால் ஜோசியரிடம் போய் கேட்டால், ஏதோ செவ்வாய், சுக்கிரன், சூரியன் தான் காரணம் என்று சொல்வார். இதை எப்படி சகித்துக் கொள்வது’ என்றாராம்.
  உழைப்புதான் உண்மையான அதிர்ஷ்டம். காலையில் கண் விழித்ததும் ராசி பலன் பார்த்து அதன்படி செயல்படக்கூடாது.
  உழைப்பில் ஒரு சுகம் உண்டு. ஈடுபாட்டோடு உழைத்தால் அதில் சுகம் இருக்கும். கடனே என்று உழைத்தால் சுமை மட்டும் தான் தெரியும். ஆசையோடு குழந்தையை அள்ளி எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு நடந்து பாருங்கள். அதில் சுமை தெரியாது. ஆனால் விருப்பமில்லாமல் வேண்டா வெறுப்பாக ஒரு பொருளை தூக்கிக்கொண்டு நடந்து பாருங்கள். சுமை தெரியும். சுகமும், சுமையும் உழைப்பின் கடினத்தில் இல்லை. ஈடுபாட்டில் இருக்கிறது.
  ஓர் அரசன் மாறுவேடத்தில் வலம் வந்து கொண்டிருந்தார். வயதான மூதாட்டி ஒருத்தி கூடை முடைந்து கொண்டிருந்தாள். அரசன் மூதாட்டியை அணுகி, ‘அம்மா நீ மட்டும் தனியாக இருந்து கூடை முடைந்து கொண்டிருக்கிறாயே? வேறு ஒருவரையும் இந்த கிராமத்தில் காணோமே? எல்லோரும் எங்கே போயிருக்கிறார்கள்?’ என்று கேட்டான். ‘அரசரை தரிசிக்க அரண்மணைக்கு போயிருக்கிறார்கள்’ என்றாள் மூதாட்டி. ‘நீ ஏன் போகவில்லை’ என்று கேட்டான் மன்னன். ‘செய்ய வேண்டிய காரியத்தை செய்து முடிக்காமல், அரசரை தரிசிக்கப் போவது முட்டாள்தனம்’ என்று உறுதியான குரலில் மறுமொழி சொன்னாள் அந்த மூதாட்டி.
  ‘அரசரை தரிசிப்பதால் பயன் ஒன்றும் கிட்டாது என்பது உன் கருத்தா’ என்று கேட்டான் அரசன். ‘பயன் கிட்டுமோ? கிட்டாதோ? நான் அறியேன். எனக்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை உதறித்தள்ளிவிட்டு, ஒரு நாள் வேலையை பாழ்படுத்திக் கொண்டு அரசரைக் காண செல்வது அறிவீனம் ஆகாதோ?’ என்று தெளிவாக எடுத்துரைத்தாள் அந்த மூதாட்டி. இதைக் கேட்டு அரசன் அளவிலா ஆனந்தம் கொண்டு தான் யார் என்ற உண்மையைச் சொல்லி ‘இந்தப் பொன் நாணயத்தை என் பரிசாக வைத்துக்கொள். அரசனை தரிசிக்க சென்றவர்கள் திரும்பியதும் அரசன் வந்து உன்னை தரிசித்துவிட்டுப் போனான்’ என்று சொல் என்று சொல்லிச் சென்றாராம்.
  வெற்றி பெற முடியாமல் போவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் வெற்றி பெறுவதற்கு நிச்சயமாக ஒரு காரணம் உண்டு. அது தான் உழைப்பு.
  முயற்சி
  முயற்சி என்பது தேவைக்கான ஒரு தேடல். அதனை வெளியே தேட வேண்டாம். அது நமக்குள்ளேயே உறங்கிக் கொண்டிருக்கிறது. முயற்சி இல்லை என்றால் வளர்ச்சி இல்லை.
  முயற்சி என்றால் தன்னிடம் உள்ள ஆற்றலை, வலிமையைக் கொணர்ந்து உபயோகிப்பது. எதிர்வரும் துன்பத்தை எதிர்த்துப் போராடி வெல்லும் ஒரு உந்த சக்தியே முயற்சி. செய்ய வேண்டிய செயலை உரிய நேரத்தில் நம்மையே நாம் செய்யும்படி வற்புறுத்தும் ஒரு தன்னியக்கம்.
  வாகனம் வேகமாகச் செல்ல ‘ஆக்சிலேட்டரை’ அழுத்துவார்கள். அதிக சக்தி கிடைப்பதால் வாகனம் வேகமாகச் செல்லும். அதுபோல நம் ஆற்றலுக்குக் கொஞ்சம் அழுத்தம் கொடுத்துப் பயன்படுத்துவதைத் தான் முயற்சி என்கிறோம்.
  முயற்சி என்பது தேடல் என்றால் விடாமுயற்சி என்பது ஒரு தீவிரத் தேடல். ‘எல்லா வித்துகளும் முளைப்பதில்லை அதுபோல எல்லா முயற்சிகளும் வெல்வதில்லை’ வெற்றியடையப் பலமுறை முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.
  முயற்சி தொடர் முயற்சியாகவும் இருக்க வேண்டும். நடைப்பயிற்சி செய்கின்றவர் ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடம் என்று அவ்வப்போது நடந்தால் பலனிருக்காது. மாறாக அரைமணி நேரமே என்றாலும் விடாமல் தொடர்ந்து நடந்தால் பலனிருக்கும்.
  ‘நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக் கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது’ என்கிறார் விவேகானந்தர். மின்மினிப் பூச்சி தன்னிடமுள்ள ஒளியைக் கொண்டே இரவில் பறந்து இரை தேடுகிறது. அதனிடம் பெட்ரோல், டீசல் எதுவும் இல்லை.
  மரங்கொத்திப் பறவையிடம் வாள் இல்லை. கோடரி இல்லை. ஆனாலும் தன் அலகைக் கொண்டே மரத்தைக் கொத்தித் தன் குறிக்கோளை நிறைவேற்றுகிறது. இயற்கையின் இத்தகைய முயற்சிகளை நாம் பாடமாகக் கற்க வேண்டும்.
  ‘என்னால் முடிந்த வரை முயற்சி செய்கிறேன்’ என்பதைவிட ‘இந்தக் காரியம் நிறைவேறும்வரை முயற்சி செய்கிறேன்’ என்பதே சரியான அணுகுமுறை. ‘இரண்டு மணிநேரம் படித்துவிட்டுத் தூங்குவேன்’ என்பதைக் காட்டிலும் குறிப்பிட்ட பாடத்தை ‘படித்து முடித்துவிட்டுத் தான் தூங்குவேன்’ என்பது இலக்கு நோக்கிய முயற்சி.
  ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டைக் கதவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும். வெற்றிபெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.
  ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தான். ‘போட்டியில் தோற்றுவிட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?’ என்றார்கள். அவன் சொன்னான், ‘ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரில்லையே’ என்று கூறிவிட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான்.
  என்ன அதிசயம்! கதவு சட்டென திறந்து கொண்டது. ஏனென்றால் கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை. திறந்துதான் இருந்தது. பலபேர் இப்படித்தான் இருக்கிறார்கள். தோற்றுவிடுவோமோ, எதையாவது, இழந்து விடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டுவிடுகிறார்கள்.
  அனைவரும் அறிந்த ‘முயல்-ஆமை’ கதையில் முயலின் தோல்விக்கு ‘முயலாமையே’ காரணம். நம்புங்கள்! ‘முயற்சி திருவினை ஆக்கும்’.

  உனக்குள்ளே உலகம்-5

  மாற்றங்கள்… ஏமாற்றங்கள் அல்ல.

  தங்கள் பிள்ளைகள் டாக்டர் ஆக வேண்டும் என சில பெற்றோர்கள் எண்ணுகிறார்கள். வேறுசிலர் பொறியியல் வல்லுநராக தங்கள் பிள்ளைகளை மாற்ற வேண்டும் என முடிவு செய்கிறர்கள். இன்னும் சில பெற்றோர்கள் அவர்கள் கலெக்டராக வேண்டும் என்ற கனவுகளோடு வாழுகிறார்கள். சிலர் தங்கள் வாரிசுகளைத் தொழிலதிபராக்கி அழகு பார்க்க நினைக்கிறார்கள்.

  பெற்றோர்கள் தங்கள் சந்ததியினர் வளர்ச்சி படிகளில் ஏறும்போது சரிந்து விழாமல் சாதனை படைக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறார்கள்.

  “நான்தான் படிக்காமல் போய்விட்டேன். என் பிள்ளையாவது என் விருப்பத்தை நிறைவேற்றட்டும்’ என்று ஆசைப்பட்டு பலவித முயற்சிகளை மேற்கொள்ளுகிறார்கள்.

  இதனால் ஆயிரக்கணக்கில் பணத்தைச் செலவு செய்து பெற்றோர்கள் சிறந்த பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள். ஆங்கிலப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க இயலாத பெற்றோர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்குக் கல்வியோடு இணைந்த பல வசதிகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.

  குறிப்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் கிடையாது. இலவச மதிய உணவு வழங்கப்படுகிறது. பள்ளியில் எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு ‘இலவச சீருடைகள்’ வழங்கப்படுகின்றன. மாணவ, மாணவிகள் பணவசதி இல்லை என்ற காரணத்தால் படிப்பை இடையில் நிறுத்திவிடக் கூடாது என்பதற்காக இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படுகின்றன. நோட்டுப் புத்தகங்களை கொண்டு வருவதற்காக புத்தகப்பை கூட சில கல்வி நிறுவனங்களில் இலவசமாக வழங்கப்படுகின்றன.

  கிராமப் பகுதியிலிருந்து பள்ளிக்கு படிக்க வருகின்ற மாணவ, மாணவிகளுக்கு இலவச காலணிகள் (செருப்புகள்), சற்று தொலைவிலிருந்து வருகின்றவர்களுக்கு சைக்கிள்கள், வெகு தொலைவிலிருந்து வருகின்றவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வசதிகள் வழங்கப்படுகிறது.

  மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடி இன மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் பல பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச கண் பரிசோதனை நடத்தப்பட்டு இலவச கண்ணாடிகளும் வழங்கப்படுகிறது. இலவச பல் பரிசோதனையும் நடத்தப்படுகிறது.

  இத்தனையும் மாணவ, மாணவிகளுக்கு நேரடியாகவே வழங்கப்படுகிறது. இவைதவிர, கம்ப்யூட்டர் வழி கல்விமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டு, இலவச இண்டர்நெட் வசதியும் பல பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

  ஆளுமைத் திறனை வளர்க்கவும், ஆங்கிலத் திறனை அதிகரிக்கவும் பல பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. நல்ல தரம் வாய்ந்த ஆசிரியர்களும் இந்தப் பள்ளிகளில் இருக்கிறார்கள்.

  “இத்தனை வசதிகள் இருந்தும் சில மாணவ, மாணவிகள் என்னால் படிக்க முடியவில்லை. எங்கள் ஸ்கூல் ரொம்ப சுமார்தான்’ என்று எண்ணி தங்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள்.

  ஆனால் அதேவேளையில் “இந்தப்பள்ளிதான் என்னை வளர்த்தது. எனக்கு வாழும் முறையை கற்றுக்கொடுத்தது. அந்தப் சின்னப் பள்ளிக்கூடம்தான் என்னை நல்ல நிலைக்கு கொண்டு வந்தது’ என்று தாங்கள் படித்த பள்ளியை மனதுக்குள் நினைத்து தங்கள் வெற்றியை பகிர்ந்துகொள்ளும் மாணவ, மாணவிகளும் உண்டு.

  சந்திராயன் திட்ட இயக்குனர் திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கோதவாடி என்கிற குக்கிராமத்தில் பிறந்தவர். இவர் பதினொன்றாம் வகுப்பு வரை கிராமத்துப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர். இன்று மிகச்சிறந்த அறிவியல் அறிஞராகவும் இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் விஞ்ஞானியாகவும் திகழ்கிறார். “எனது சிந்தனைக்கும், வளர்ச்சிக்கும் தாய்மொழியில் நான் கற்ற பள்ளிப் பாடங்கள்தான் அடிப்படை காரணம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

  படிக்கின்ற காலத்தில் இளம் மாணவிகளுக்கு பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. எல்லா இளைஞர்களுக்கும் ஏற்படும் வளர் இளம்பருவ பிரச்சனைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்படையச் செய்துவிடுகிறது. இதனால் சிலர் பாடத்தில் மதிப்பெண்கள் குறைவாக எடுக்க நேரிடும்.

  “நீ படிப்பதற்கு ஏற்றவள் அல்ல. பேசாமல் வீட்டில் போய் ஏதேனும் ஒரு வேலையைப்பார்’ என்று கோபப்படும் ஆசிரியர்கள் ஒருபுறம்.

  “நான் மட்டும்தான் படிக்காத முட்டாளாக இருக்கிறேன். என்னைப்பற்றி ஊரில் என்ன நினைப்பார்கள்?’ என எண்ணும்போது சில மாணவ, மாணவிகளுக்கு அவமானம் அதிகமாகும்.

  “உன்னைப் படிக்க வைப்பதற்குப் பதில் பேசாமல் விவசாய வேலைக்கு அனுப்பியிருக்கலாம், நீ பெயில் ஆகிவிட்டாய். இனி வீட்டோடு இருந்துவிடு பள்ளிக்கு போக வேண்டாம்’ என படிப்புக்கு பெற்றோரே தடைபோடும் சூழ்நிலையும் உண்டு.

  இப்படி ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோர் மனநிலைகள் இருக்கும்போது இளைய சமுதாய கல்வி வளர்ச்சி நிச்சயமாகப் பாதிக்கத்தான் செய்யும். சில மாணவ, மாணவிகள் இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண இயலாமல் தடுமாறுவார்கள். இதனால் பாடத்தில் நாட்டம் குறையும். பாடத்தில் நாட்டம் குறைந்ததும் இவர்கள் பள்ளித் தேர்வுகளில் தோல்வி அடைவதற்குக்கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

  இதனால்தான் தமிழக அரசு சமீபத்தில் ஒரு அரசு ஆணையை வெளியிட்டுள்ளது. அந்த அரசு ஆணையில் “6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச, கட்டாய கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் 1.4.2010 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இந்த சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் அருகில் உள்ள பள்ளியில் இலவசமாக படிப்பதற்கு உரிமை உள்ளது.

  இந்தச் சட்டம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆலோசணைக் குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறது. 6 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட (ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) எந்த மாணவரையும் “பெயில்’ ஆக்கக் கூடாது. படிக்கும் பள்ளியில் இருந்து நீக்கக் கூடாது.

  தொடக்கக் கல்வியில் சேராத குழந்தைகளை அவர்களின் வயதுக்கு ஏற்ற வகுப்பில் சேர்த்து சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்களிடம் நன்கொடை வசூலிக்கக் கூடாது. மாணவர் சேர்க்கைக்காக பெற்றோருக்கு தேர்வு வைக்கக்கூடாது. எந்த மாணவரையும் உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ காயப்படுத்தக் கூடாது. எவ்வித தேர்வும் வைக்காமல் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும் என பல்வேறு பரிந்துரைகள் ஆலோசனை குழுவால் அளிக்கப்பட்டுள்ளன.

  தமிழக அரசு இந்த ஆலோசனை குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது.

  தமிழக அரசின் இந்த அதிரடி உத்தரவு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை தூண்டுமா? தூண்டாதா? என்றுகூட சந்தேகத்தை உருவாக்குகிறது.

  ஏனென்றால் “நான் படித்தாலும் படிக்காவிட்டாலும் ‘பாஸ்’ ஆகிவிடுவேன் என்ற எண்ணத்தில் 8-ம் வகுப்பு வரை முறைப்படி படிப்பில் கவனம் செலுத்தாமல் ஒரு மாணவன் அல்லது மாணவி இருந்துவிட்டால் அவர்களால் எப்படி 9-ம் வகுப்பில் கவனம் செலுத்தி படிக்க இயலும். 8-ம் வகுப்புவரை எல்லா மாணவர்களையும் கண்டிப்பாக பாஸ் ஆக்கிவிட்டுவிட்டால் எதிர்காலத்தில் கல்வித்தரம் எப்படி இருக்கும் என்றெல்லாம் கேள்விகள் உருவாகத்தான் செய்கின்றன.

  சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவனை 6-ம் வகுப்பில் பெயில் ஆக்கியதை எதிர்த்து அவனது பெற்றோர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அந்தப்பள்ளி மாணவனை பாஸ் ஆக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி, அதே பள்ளியில் அந்த மாணவனை மீண்டும் படிக்க வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுத்துவிட்டது.

  பள்ளிக்கு ஒழுங்காக வருகை தராமலும், படிப்பில் அதிக ஆர்வம் காட்டாமலும், அதிக மதிப்பெண்கள் பெறாமலும் இருப்பதனால்தான் பல பள்ளிகள் மாணவ, மாணவிகளை பெயில் ஆக்கிவருகிறார்கள். இருந்தாலும்கூட இன்று மாணவ, மாணவிகளுக்கு ஆதரவாகவே சட்டம் செயல்பட்டு வருகிறது.

  மாணவ, மாணவிகள் அனைவரிடமும் அறிவு (Knowledge), திறமைகள் (Skills) மற்றும் மனப்பாங்கு (Mindset) ஆகியவை ஒரே சீராகத்தான் இருக்கின்றன. இருந்தபோதும் ஒரு சிலரிடம் “Mindset’ எனப்படும் மனநிலை எதிர்பார்த்த அளவில் அமைவதில்லை. அந்த “மனநிலை’ தெளிவாக இருந்தால்தான் ஒரு மாணவன் அல்லது மாணவியின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் நல்ல மாற்றங்களாக வடிவம் பெறும். இப்படி நல்ல மனநிலை இல்லாவிட்டால் நல்ல மாற்றம் ஏற்படாமல் வாழ்க்கையில் பிரச்சினைகள் உருவாகும்.

  எனவே படிக்கின்ற காலத்தில் நல்ல மனநிலையை உருவாக்குவதற்கு நல்ல பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பள்ளியில் பெறப்படும் சரியான பயிற்சிதான் இளைய உள்ளங்களை சிறந்தவர்களாக மாற்றும்.

  நல்ல மனநிலையை பாதிக்கின்ற வகையில் கோபம், பயம், எரிச்சல், ஆத்திரம், அவசரம் போன்ற சில காரணிகள் அடித்தளமாக அமைந்து விடுகின்றன. இதனால் கூர்மையாய் இருக்க வேண்டிய ஐம்புலன்களான மெய், வாய், கண், காது, மூக்கு போன்றவைகள் மூலம் கண்டறியப்படும் உணர்வுகள் (Emotions) சரியாக அமைவதில்லை. சீராக சிந்தித்து ஒழுங்காக படித்து, நேரான பாதையில் பயணம் செய்ய விரும்பும் இளைஞர்கள் தடைக்கற்களையெல்லாம் படிகற்களாக மாற்றுவதற்கு மன வலிமை (Mental Strength) பெற்றிருக்க வேண்டும். நல்ல மன வலிமை உள்ளவர்களால் மட்டுமே நினைத்ததை பெறுகின்ற அளவுக்கு மனநிறைவோடு செயல்பட முடியும்.

  மனநிலை சீராக இல்லாததால் பல்வேறு பிரச்சனைகள் இளம் மாணவ, மாணவிகளிடம் உருவாகிறது. சமீபத்தில் தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூர் அருகேயுள்ள ஒரு பள்ளியில் மாணவர்களில் சிலர் செல்போன்களில் ஆபாச படங்களை பார்ப்பதாக தகவல் பரவியது. இதையடுத்து மாணவர்களிடம் செல்போன் இருக்கிறதா? என ஆசிரியர்கள் சோதனை செய்தனர். அந்த பள்ளியில் படிக்கும் விக்ஷ்ணு பிரியன் மாணவரிடம் சிகரெட் லைட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சிகரெட் பிடிக்கும் பழக்கம் விக்ஷ்ணு பிரியனிடம் உள்ளதாக நினைத்த ஆசிரியர்கள் அவனுக்கு தண்டனை வழங்கினர்கள். இதனால் மனமுடைந்த விக்ஷ்ணு பிரியன் வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டு இறந்துபோனான்.

  சிலநேரங்களில் விளையாட்டு கூட வினையாகி போய்விடுகிறது. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ஒரு கல்லூரியில் படித்த மாணவர் இசக்கி செல்வம். சிறந்த கபடி வீரர். கபடி விளையாட்டில் ஏற்பட்ட கோக்ஷ்டி மோதலில் இரு அணியினர் சண்டையிட்டுக்கொண்டார்கள். முடிவில் இசக்கி செல்வம் சரமாரியாக வெட்டப்பட்டு, உயிரிழந்தார்.

  நெல்லை மாவட்டம் களக்காடு என்னும் ஊரில் 10-ம் வகுப்பு படித்து வந்த மாணவி இராமலெட்சுமி. இவருடைய பள்ளி ஆசிரியர் அவளது அப்பாவை நேரில் வந்து மதிப்பெண் பட்டியலில் கையெழுத்திட அழைத்துவரச் சொன்னார். இராமலெட்சுமியின் தந்தை “எனக்கு வேலை இருக்கிறது. நீ பள்ளிக்குப் போ. நான் பின்பு வருகிறேன்’ என தனது மகளிடம் கூறினார். இதனால் தனது ஊரிலுள்ள ஒரு தோட்டத்திற்கு மண்எண்ணெயை எடுத்துச் சென்று தனது உடலில் தீ வைத்துக்கொண்டு இறந்துபோனாள் அந்தச் சிறுமி.

  இப்படிப்பட்ட சம்பவங்களெல்லாம் மாறுபட்ட மனநிலையோடு கல்வி பயிலுவதால் ஏற்படும் விபரீதங்களாகும்.

  படிக்கின்ற காலத்தில் நல்ல மனநிலையை உருவாக்குவதற்கு மாணவ, மாணவிகள் சிறந்த மாணவர்களை நண்பர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும். பிரச்சனை வரும்போதெல்லாம் பெற்றோர்களிடம் ஆலோசனை கேட்கலாம். மனதுக்கு பிடித்த ஆசிரியர்களிடம் மனம்விட்டு பேசலாம். உறவுக்காரர்களில் உண்மையான அன்பு உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் தங்கள் பிரச்சனைகளை எடுத்துக்கூறி பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முயற்சி செய்யலாம். ஓய்வு நேரங்களில் நூலகத்திற்குச் சென்று நல்ல புத்தகங்களை வாசிக்கலாம். செய்தித்தாள்களில் வரும் நல்ல செய்திகளை கண்டு குறிப்பெடுத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்கலாம். தன்னம்பிக்கை சம்பந்தப்பட்ட பயிலரங்குகளில் பங்கு பெறுவதன் மூலம் நல்ல மனநிலையை மாணவ, மாணவிகள் எளிதில் உருவாக்கிக் கொள்ளலாம்.

  பள்ளியில் படிக்கின்ற மாணவ, மாணவிகள் அனைவரும் மற்றவர்கள் போற்றும் வகையில் நல்ல சிந்தனைகளை கண்டிப்பாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் ஏமாற்றங்களாகிவிடும்.