October, 2010 | தன்னம்பிக்கை - Part 2

Home » 2010 » October (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  கோபத்தை அகற்றுங்கள்

  மனிதனுக்குரிய பல குணாதிசயங்களில் கோபமும் ஒன்று. தன் வாழ்நாள் முழுக்க முற்றும் துறந்தவர்கள் உட்பட யாராலும் கோபப்படாமல் வாழவே முடியாது என்பது சத்தியம். எல்லாவற்றிற்கும் ஒரு வரைமுறை இருக்கிறது. எப்போது அவசியமோ அப்போது கோபப்படலாம். ஆனால் அத்தகைய சமயங்களில் கூட மனதை கட்டுப்பாட்டில் வைத்து கடினமான வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் மௌனமாக நமது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்.

  அடிக்கடி கோபப்படுபவனை யாருமே பொருட்படுத்தமாட்டார்கள். “அவன் எதுக்கெடுத்தாலும் இப்படித்தான் கோபப்படுவான். விட்டுத்தள்ளு’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் கோபப்படாமல் வாழும் ஒருவன் எப்போதாவது கோபப்பட்டால் சுற்றியுள்ள அனைவரும் மிரண்டு போய்விடுவார்கள். எப்போதாவது வெளிப்படும் கோபத்திற்கு சக்தி அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் பெரியவர்கள் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்கள்.

  கோபப்படும்போது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மூச்சு வாங்குகிறது. வழக்கத்தைவிட படபடப்பு அதிகமாகிறது. இதயம் வழக்கத்தைவிட அதிகமாக துடிக்கிறது. இவை மொத்தமும் சேர்ந்து நமது உடலைக் கடுமையாக பாதிக்கிறது. இவை எல்லாவற்றையும் விட கோபப்படுபவனுக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அது அவனைச் சுற்றி உள்ளவர்களின் மனதில் அவனைப்பற்றி ஒருவித வெறுப்பை உண்டாக்கிவிடுகிறது. காரணமின்றி தேவையின்றி எதற்கெடுத்தாலும் கோபப்படுபவனை இந்த சமூகம் வெறுக்கிறது. அவனுக்கு பைத்தியக்காரன் என்றொரு பட்டத்தையும் வழங்கி அவனை ஒதுக்கியும் வைக்கிறது.

  அனாதைக் குழந்தைகளுக்காக ஒரு விடுதியைக் கட்ட முடிவு செய்த அன்னை தெரசா கொல்கத்தாவில் பல இடங்களுக்கும் சென்று நிதி திரட்டிக் கொண்டிருந்தார். ஒரு கடைக்குச் சென்று நிதியுதவி கேட்டார். கடைக்காரன் நிதி தரமுடியாது என்று சொல்லியிருக்கலாம். ஆனால் கோபக்காரனான அந்த கடைக்காரன் அவசரப்பட்டு தெரசாவின் மீது ஆத்திரம் கொண்டு அவர் முகத்தில் காறி உமிழ்ந்தான்.

  தெரசாவிற்கு கோபமே வரவில்லை. எச்சிலை தன் முகத்திலிருந்து துடைத்தெறிந்தார். மீண்டும் அந்த கடைக்காரனிடம் நிதி கேட்டார். இப்போது அந்த கடைக்காரன் அதிர்ச்சி அடைந்தான். ஏன் தெரியுமா?

  “என் முகத்தில் நீ உமிழ்ந்த எச்சில் எனக்குத் தந்த பரிசு. என் குழந்தைகளுக்காக ஏதாவது கொடுங்களேன்’.

  அந்த சுழ்நிலையிலும் கோபப்படாமல் அன்பாய் பேசிய அன்னை தெரசாவின் முகத்தைப் பார்த்த அந்த கடைக்காரன் அதிர்ச்சியில் உறைந்து போனான். அன்பின் சிகரமாய் விளங்கிய ஒரு பெண்மணியின் மீது கோபம் கொண்டு தான் செய்த காரியத்திற்காக வெட்கப்பட்டு தலைகுனிந்து நின்றான். இங்கே தலைகுனிந்தது அவன் இல்லை. கோபமே தோற்று தலைகுனிந்து நின்றது. அன்பும் அமைதியும் வென்று தலைநிமிர்ந்து நின்றது. கோபத்தை ஒழித்து அன்பை விரும்பினால் நீங்களும் தலைநிமிர்ந்து வாழலாம் என்பதை நமக்கு உணர்த்தும் நிகழ்ச்சியே இது.

  தேவையின்றி எதற்கெடுத்தாலும் கோபப்படுவதால் ஏதாவது நன்மை இருக்கிறதா? நிச்சயமாக இல்லை என்பதே உண்மை. கோபப்படும் போது எடுக்கப்படும் முடிவுகள் நூறு சதவீதம் தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதனால்தான் பெரியவர்கள் கோபமான மனநிலையில் எந்த ஒரு முடிவையும் எடுக்காதே என்று சொல்லியிருக்கிறார்கள். சிலர் தான் பணிபுரியும் நிறுவனத்தின் மீது கோபப்பட்டு யோசிக்காமல் உடனே வேலையை இராஜினாமா செய்து விடுவார்கள். நிறுவனமும் அவருடைய இராஜினாமாவை ஏற்று உடனே அவருக்குச் சேர வேண்டியதைக் கொடுத்து குட்பை சொல்லிவிடும். சில வருடங்கள் கழித்து தான் அவசரப்பட்டு வேலையை இராஜினாமா செய்துவிட்டோமே என்று அவர்கள் வருந்தும் நிலை ஏற்படும். இப்படி சிலர் தேவையின்றி கோபப்பட்டு அந்த கோபமான மனநிலையில் தவறான முடிவை எடுத்து தன் வாழ்நாள் முழுவதும் வருந்திய கதைகள் ஏராளம் உண்டு.

  பக்கத்து வீட்டுப் பையன் அதிக மதிப்பெண் வாங்கிவிட்டால் அவனையும் அவன் குடும்பத்தாரையும் பார்த்து கோபப்படுபவர்கள் கூட இருக்கத்தானே செய்கிறார்கள். தன் பையனைவிட அவன் அதிக மதிப்பெண் எடுத்துவிட்டானே என்ற ஆதங்கம் மற்றும் இயலாமை போன்றவையே இங்கே கோபமாக மாறுகிறது. அவன் ஏன் அதிக மதிப்பெண் வாங்குகிறான் என்பதை ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். ஒருவருடைய உழைப்பைக் கண்டு கோபப்படுவதில் எவ்வித நியாயமும் இல்லை. அவனைப் பாராட்டி அவன் எப்படி அதிக மதிப்பெண் வாங்குகிறான் என்பதை அவனிடமே கேட்டறிந்து நம் பையனுக்கும் அதை எடுத்துச் சொல்லி அவனைப் போலவே நம் பையனையும் அதிக மதிப்பெண் பெறச்செய்யலாம்.

  கொல்கத்தாவில் ஹீப்ளி நதிக்கரையினை ஒட்டி அமைந்திருந்த காளிகோயிலுக்கு அருகில் மாநகராட்சிக்குச் சொந்தமான தர்மசத்திரம் ஒன்று இருந்தது. அன்னை தெரசா ஆதரவின்றி நடைபாதைகளில் உயிர்விடும் மனிதர்களுக்காக இறப்போர் நல இல்லம் என்ற பெயரில் ஒரு இல்லத்தை உருவாக்க முடிவு செய்து கொல்கத்தா மாநகராட்சிக்கு விண்ணப்பித்தார். இதன் விளைவாக 1952 ஆம் ஆண்டில் கொல்கத்தா மாநகராட்சி தர்மசத்திரத்தை அன்னைக்கு இலவசமாகத் தந்தது. அந்த இடத்திற்கு அன்னை “நிர்மல் ஹிருதயம்” என்று பெயர் இட்டார். மாநகராட்சி தெரசாவிற்கு இடத்தைத் தந்ததை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அன்னையின் நோக்கம் சேவை அல்ல மதமாற்றமே என்று தவறாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அப்பகுதியில் இருந்த ஒரு அரசியல் தலைவரை அணுகி இது குறித்து புகார் செய்தார்கள். உடனடியாக தெரசாவை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கூறினார்கள்.

  உண்மை நிலையை அறிய விரும்பிய அந்த தலைவர் அன்னையின் ‘நிர்மல் ஹிருதயம்’ இல்லத்திற்குச் சென்றார். அவர் சென்ற சமயத்தில் அன்னை புற்றுநோயால் தாக்கப்பட்ட ஒரு நோயாளியின் உடலைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அந்த நோயாளியின் உடலிலிருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. அந்த இல்லத்தில் பலரது மரண ஓலம் கேட்டுக் கொண்டே இருந்தது. இந்த காட்சிகளைப் பார்த்த அந்த அரசியல் தலைவரின் கண்கள் நீரால் நிறைந்தன.

  இதன் பின்னர் அன்னைக்கு எதிரான கூட்டத்தினர் தலைவரை மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். பலர் கோபப்பட்டு அவதூறாய் பேசினார்கள். அன்னையின் தன்னலமற்ற சேவையைப் புரிந்து கொண்ட அந்த தலைவர் ஒருநாள் அவர்கள் அனைவரையும் அழைத்துப் பேசினார்.

  “நீங்கள் சொல்வது அனைத்தையும் நான் ஒப்புக்கொள்ளுகிறேன். தற்போது இல்லத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருப்பவர்களை நாம் நிராதரவாய் விட்டுவிட முடியாது. தற்போது இல்லத்தில் இருப்பவர்களுக்கு சேவை செய்ய நீங்கள் உங்கள் வீட்டுப்பெண்களை அழைத்து வருகிறேன் என்று எனக்கு உறுதி கொடுங்கள். நான் அன்னை தெரசாவை உடனடியாக இல்லத்தைவிட்டு வெளியேற்றுகிறேன்’.

  இப்போது அன்னையை வெளியேற்ற வேண்டும் என்று போர்க்குரல் உயர்த்தியவர்களில் ஒருவரைக் கூட அங்கே பார்க்க முடியவில்லை.

  கோபத்தை விரட்ட பல வழிகள் உள்ளன. உங்களுக்கென ஒரு வழியினை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். கோபம் வரும்போது தெருக்களில் ஓடியாடும் சிறு குழந்தைகளைப் பாருங்கள். உங்கள் தோட்டத்தில் உள்ள பூக்களைப் பாருங்கள். பசுமையான மரம் செடி கொடிகளைப் பாருங்கள். உங்கள் வீட்டில் தோட்டம் இல்லையெனில் ஒரு அறைக்குச் சென்று அமைதியாக கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து கொள்ளுங்கள். உட்கார உங்கள் மனம் இடம் கொடுக்கவில்லையெனில் படுத்துக் கொண்டு தூங்க முயற்சி செய்யுங்கள். அப்படியும் கோபம் அடங்கவில்லையெனில் உங்கள் சிறுவயதில் நீங்கள் செய்த குறும்புகளையெல்லாம் நினைவு கூர்ந்து பார்க்க முயற்சி செய்யுங்கள். இவை எதுவுமே உங்களுக்கு சரிபட்டு வரவில்லையெனில் இருக்கவே இருக்கிறது இசை. எம்பி3 பிளேயரை எடுத்து மென்மையான இசையினைக் கேளுங்கள்.

  கோபத்தை நம் வாழ்வில் இருந்து அகற்ற என்ன செய்ய வேண்டும்? ஒன்றும் கடினமில்லை. நம்மைச் சுற்றியுள்ளவர்களிடத்தில் நாம் அன்பு பாராட்ட பழகிக் கொள்ள வேண்டும். அக்கம்பக்கத்தில் உள்ள யாரேனும் சாதனை செய்ததாகக் கேள்விப்படுகிறீர்களா? நீங்கள் உடனே அவரைத் தேடிச் சென்று கைகொடுத்து உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். உங்கள் அண்டை வீட்டாருக்குப் பிறந்தநாளா? நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். உங்களுக்குத் தெரிந்த யாருக்கேனும் உடல்நலம் சரியில்லை என்று கேள்விப்படுகிறீர்களா? உடனே சென்று நலம் விசாரியுங்கள். அவர்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள். இதற்கெல்லாம் பெரியதாக பணம் எதுவும் செலவு செய்யத் தேவையில்லை. இதற்குத் தேவை மனம்தான். உங்களால் முடிந்தவரை உங்களைச் சுற்றியுள்ளவர்களை சந்தோஷப்படுத்துங்கள். உங்கள் மனம் மெல்ல மெல்ல லேசாவதை நீங்கள் நாளடைவில் உணருவீர்கள்.

  அமைதியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள். அமைதியாக வாழ்பவர்களுக்கு எப்போதும் இந்த சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கோபத்தால் எந்த ஒரு நன்மையும் விளைந்ததாக சரித்திரமில்லை. அன்பாய் வாழ்ந்தவர்கள் அழிந்து போனதாகவும் சரித்திரமில்லை. காந்திஜி அன்பை ஆயுதமாக ஏந்தியே நம் நாட்டு மக்களை சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தார் என்பது சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்ட உண்மை. கோபப்பட்டு அடக்குமுறைகளை ஏவிய பிரிட்டிஷ்காரர்கள் கடைசியில் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள் என்பதும் சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்ட உண்மை. இப்போது இந்த இரண்டையும் எடைபோட்டு எந்த ஆயுதம் சிறந்தது என்பதை முடிவு செய்யுங்கள்.

  நம்முடைய வாழ்க்கையில் அனைவருடைய குறிக்கோள் என்ன? மகிழ்ச்சியாக வாழ்வதுதானே? நீங்கள் மனது வைத்தால் அதற்கு ஒரு எளிமையான வழி இருக்கத்தான் செய்கிறது. அன்பு எனும் தீபத்தை மனதில் ஏற்றி கோபம் எனும் அறியாமை இருளை அகற்றுங்கள். நிம்மதிக் காற்றை வாழ்நாள் முழுக்க நிரந்தரமாய் சுவாசியுங்கள்.

  முற்றும்

  ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது?

  • சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது.
  • வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.
  • வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.
  • அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.
  • அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது.
  • வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது.
  • வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது.
  • உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது.
  • தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது.
  • அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது.
  • தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது.
  • தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது.
  • சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது.
  • விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது.
  • அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது.
  • குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது.
  • கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது.
  • நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது.
  • அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது.

  சாதனை வாழ்விற்கான சந்தோஷ வழிமுறைகள் 50

  21. ஆடுங்கள் பாடுங்கள் கொண்டாடுங்கள்

  சாதனைகளுக்கு அடிப்படை சந்தோஷம். நம் தொடர்ந்த சந்தோஷத்திற்கு அவ்வப்போது ஏற்படும் தடைகளுக்கு, தோல்விகள், அவமானங்கள், ஏமாற்றங்கள், துன்பங்கள் என எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் மாசுபட்ட மனமகிழ்ச்சியை எவ்வளவு வேகமாக திருப்பி எடுக்கின்றீர்களோ? அவ்வளவு வேகமாக நீங்கள் உங்கள் உயரிய இலக்கை நோக்கி புத்துணர்வோடு பயணம் செய்து, தொடர்ந்த சந்தோஷ சாதனைகளை சாத்தியமாக்க முடியும்.

  இழந்த மகிழ்ச்சியை வேகமாக மீண்டும் மீட்டெடுக்க அனுபவ பூர்வமாக அறிஞர்களால் சுட்டிக்காட்டப்படும் ஒரு வழிமுறை ஆடல், பாடல், மற்றும் கேட்டல் ஆகும். மேடையில் தான் ஆடவேண்டும், பாடவேண்டும் அரங்கில் தான் கேட்க வேண்டும் என்றில்லை. நண்பர்களோடு இணைந்து நட்பு ரீதியிலான கொண்டாட்டங்கள், சமூக இயக்கங்களில் இணைந்து அவர்களுடைய நிகழ்ச்சிகளில், குடும்பநிகழ்ச்சிகள் என எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கின்றதோ அங்கெல்லாம் ஆடுங்கள், பாடுங்கள், பாடல்கள் இசை மற்றும் உரைகளைக் கேளுங்கள்.

  வாய்ப்புகள் கிடைக்கவில்லையெனில், தனிமையிலாவது ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தை அனுபவியுங்கள். இது உங்களிடம் பல காரணங்களினால் காணப்படும் சோர்வு, எதிர்மறை சிந்தனை, மனஅழுத்தம், கோபம், துக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுதலை அடைய உதவி புரிகின்றது.

  இது மட்டுமல்ல மருத்துவ விஞ்ஞானிகள், ஆடல், பாடல்களில் ஈடுப்படுபவர் மற்றும் இசையை, உரைகளை ரசிப்பவர்களுக்கு உற்சாகம், உடல் நலம், மன நலம், ஞாபக சக்தி, தன்னம்பிக்கை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சந்தோஷம் அதிகரிப்பதாக கண்டு பிடித்துள்ளனர்.

  ஆகவே ஆடுங்கள், பாடுங்கள், கேளுங்கள். ஆனந்த சுதந்திரத்தைக் கொண்டாடுங்கள்.

  22. உடல் நலம் பேணுங்கள்

  “சுவரிருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்” என்ற முன்னோர் சொல் சந்தோஷ சாதனைகளை நோக்கி வீறுநடைபோடும் நம் ஒவ்வொருவருக்கும் தவிர்க்க முடியாத சொல்.

  எத்தனையோ, அன்பர்கள் புயலாய் புறப்பட்டு புதிய சாதனைகள் பலவற்றை சாதிக்கின்றனர். செல்வம், செல்வாக்கு, ஆடம்பரம் அனைத்தையும் அடைந்து விடுகின்றனர். ஆனால் அந்தோ பாவம், அடைந்த வெற்றியை அனுபவிக்க முடியாமல், தொடர்ந்து தக்கவைக்க முடியாத அளவுக்கு உடலில் இல்லாத நோய்களெல்லாம் குடிகொண்டுவிடுகின்றது.

  என்ன காரணம், உழைப்பு, உழைப்பு, உழைப்பு என உடல் நலம் பேணாமல் விட்டு விடுகின்றனர். ஆகவே அன்பு வாசகர்களே, தொடர்ந்த சந்தோஷத்திற்கு, சாதனை சரித்திரத்திற்கு, தயவு கூர்ந்து உங்கள் உடல் நலனில் தேவையான அளவு அக்கறை காட்டி வாருங்கள்.

  உடல்நலம் பேணும் வழிமுறைகள்

  கீழ்கண்ட சில வழிமுறைகள் உங்கள் உடல்நலத்தை, உங்கள் வேகத்திற்கு ஏற்ப பாதுகாப்பதற்கு உதவிகரமாக அமையும்.

  அ) சிறந்த உணவுமுறை பழக்கங்களை நடைமுறைப்படுத்துங்கள். உணவு முறையில் நார்சத்து மிக்க உணவு வகைகள் அதிகமாகவும், கொழுப்புச் சத்து மிகுந்த உணவுகள் குறைவாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். புலால் உணவுகளை விட்டு, அதிக அளவு இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உண்டு வருவது சிறந்த உடல் நலத்திற்கு வழி வகுக்கும்.

  ஆ) தேவையான அளவு தண்ணீர் அருந்துவது, நம் உடலில் தேங்கும் விஷம் மற்றும் அசுத்தங்களை உடனுக்குடன் வெளியேற்றி உடல் நலத்தைப் பேணுவதற்கு உதவி புரியும்.

  இ) உடற்பயிற்சி

  தொடர்ந்த உடற்பயிற்சி, உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுவதுடன், சிறந்த ஆளுமையையும் அளிக்கின்றது. மேலும் உடற்பயிற்சிகள், உடல் நலத்தையும் பேண உதவிபுரிகின்றது.

  ஈ) புகை மது போன்ற பழக்கவழங்களை நெருங்கவிடாதீர்கள். உடல்நலம் பாதுகாப்பாக தொடரும்.
  உ) மன அழுத்தத்தினை அண்டவிடாதீர்கள்.
  ஊ) தேவையான அளவு தூக்கம் மற்றும் ஓய்விற்கு நேரம் ஒதுக்குவது, நம் உடல் நலத்திற்கு உகந்த பழக்கவழக்கமாகும்.
  எ) நேர்மறை மனோபாவத்துடன் வாழ்ந்து வாருங்கள்.
  ஏ) காபி, தேயிலை போன்ற பானங்களை முடிந்த அளவு குறைத்து விடுவது நல்லது.

  மேற்கண்ட கருத்துக்களைத் தொடர்ந்து பின்பற்றவதுடன், சிறிய சிறிய உடல் உபாதைகள் வந்தவுடன் இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், சித்தா மற்றும் ஆங்கில மருத்துவர்களைச் சந்தித்து அவ்வப்போது உடல் நலத்தைப் பேணி வருவது தொடர்ந்த, சிறந்த உடல்நலத்திற்கு அடிப்படையாகும்.

  23. மனநலம் மகாபலம்

  எத்தனையோ அன்பர்கள், வேகமான செயல்பாடுகளிடையே, அவர்கள் மனநலத்தை பற்றி அக்கறை செலுத்தாமல், சாதனை பயணத்தின் முக்கியமான கட்டத்தில் மனநல மருத்துவர்களை நோக்கி பயணம் செய்து வருகின்றனர்.

  நண்பர் ஒருவர் வெண்ணை திரண்டு வர தாழி உடைந்த கதையாக தன் மகன் சிறப்பாக படித்து +2 முடித்து சிறந்த கல்வி நிறுவன அனுமதி பெற வேண்டிய முக்கிய தருணத்தில் மகனுக்கு அளவுக்கு அதிக அழுத்தம் கொடுத்து, பல சிறப்பு ஆசிரியர்களிடம் அழைத்து சென்று படிக்க வைத்து வந்தார்.

  திடீரென ஒரு நாள் மன அழுத்தம் அதிகரித்து, பள்ளிக்கு செல்வதை முழுமையாக நிறுத்திவிட்டார் அவர் மகன்.

  இப்பொழுது மூன்று வருடங்களாக அவர் தன் மகனை மனநல மருத்துவர்களிடம் அழைத்து சென்று வருவது தான், அவர் முக்கிய பணியாக அமைந்துவிட்டது. ஆகவே உங்கள், மற்றும் உங்கள் குடும்பத்தினரின் மனநலத்தில் தேவையான அக்கறை செலுத்துவது, உங்களை சந்தோஷ சாதனை வாழ்விற்கு இட்டுச் செல்லும்.

  மனநலத்தைப் பேணுவது எப்படி?

  கீழ்கண்ட வழி முறைகள், உங்கள் மனநலத்தினைப் பாதுகாக்க உதவிகரமாக அமையும்.

  • சிறந்த உணவு முறைகள்.
  • தன்னம்பிக்கை மற்றும் நம்பிக்கையை உருவாக்குங்கள்.
  • நல்ல உறவு முறைகளைப் பின்பற்றி சிறந்த நட்பு வட்டம் மற்றும் சுற்றத்தை உருவாக்கி வளர்த்து வாருங்கள்.
  • பொருளாதாரத்தைத் திட்டமிட்டு உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.
  • ஓய்வு, தூக்கத்திற்கு நேரம் ஒதுக்குவதுடன் மன அழுத்தத்தை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • கொடுக்கும் அருள் உள்ளத்தை உருவாக்குங்கள்.
  • ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் அவசியம்.
  • விட்டுக் கொடுக்கும் மனத்தை மதித்து செயல்படுங்கள்.
  • உடற்பயிற்சி, யோகா, தியானம், செய்துவாருங்கள்.
  • கோபம், பொறாமை, காமம் போன்ற எதிர்மறை தன்மைகளை வெற்றி கொள்ளுங்கள்.
  • நன்மைகளை அவ்வப்போது அசைபோடுவதுடன், அடுத்தவர் அவ்வப்போது உதவிக்கரம் நீட்டுவதற்கு தயக்கம் காட்டவேண்டாம். ஆகவே மேற்கண்ட கருத்துக்களை பின்பற்றி மனநலத்தில் கவனம் செலுத்துங்கள். சந்தோஷ சாதனைகளைச் சொந்தமாக்குங்கள்.

  24. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்

  உடற்பயிற்சியின் பயன்கள், வகைகள், தன்மைகள், வழிமுறைகள் என அனைத்து செய்திகளையும், தன்னம்பிக்கை வாசகர்கள் முனைவர் செ.சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் அவர்கள் எழுதிய “உடலினை உறுதி செய்” தொடர் மூலமாக முழுமையாக தெரிந்திருப்பீர்கள். அல்லாவிடில் அவர் எழுதிய “உடலினை உறுதிசெய்” புத்தகத்தினை வாங்கி தெரிந்து கொள்வது நல்லது. ஏனென்றால் உடற்பயிற்சி கீழ்கண்ட விலை மதிப்பற்ற நன்மைகளை வழங்குகிறது.

  அ) உடல் நலம் பல்வேறு நோய்கள் வருகிறதை தடுக்க உதவுகிறது. உடல்
  எடை, கொழுப்பு, இரத்த அழுத்தம், மற்றும் மூட்டுகள் இருதயம் போன்ற உடல் உறுப்புகளின் செயல்பாடு என உடல்நலத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கு உடற்பயிற்சி உதவி புரிகின்றது.

  ஆ) மனநலம் உடல் நலம் சிறப்படைவதுடன், உடல் அமைப்பு கட்டுக்கோப்புடன் இருக்க உடற்பயிறசி பயன்படுகின்றது. உடல் கட்டமைப்பு சிறப்பாக அமையுமானால், தன்னம்பிக்கை, சுயகௌரவம், துணிவு போன்ற பயன்கள் ஏற்படும். இத்தகைய பயன்கள் நம் மனநலத்தை காக்க பெரிதும் உதவும்.

  இ) புத்துணர்வு மற்றும் சாதனையை நோக்கிய செயல்பாட்டிற்குத் தேவையான சக்தியை உடற்பயிற்சி வழங்குகிறது.

  ஆகவே தொடர்ந்து முறையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள். சந்தோஷமான, சாதனைகள் மிகுந்த வாழ்வினை உறுதிசெய்யுங்கள்.

  25. உணவுப் பழக்கவழக்கத்தை முறைப்படுத்துங்கள்.

  மருத்துவ விஞ்ஞானிகளுடைய கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கும் பொழுது நமக்கு புலப்படும் ஒரு முக்கிய செய்தி என்னவென்றால் மனிதன் பயப்படும் பல்வேறு நோய்களுக்கும் அடிப்படை காரணம், நம் உணவுப் பழக்கவழக்கத்தில் காணப்படும் தவறுகளே.

  உணவுப்பழக்கத்தைப்பற்றி எழுதும்போது உடனடியாக என் கவனத்திற்கு வரும் கருத்து, ஒரு முறை மதுரை மாநகரில் ஒரு கடையில் ஒட்டப்பட்டிருந்த ஒரு சுவரொட்டியின் வாசகமே. அந்த வாசகம்.
  “இறந்த மிருகங்களின் பிணத்தை புதைப்பதற்கு என் வயிறு என்ன சுடுகாடா”

  மேற்கண்ட கருத்து சரியா? தவறா? என்று வாதிடுவது என் பணியல்ல. பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளின் முடிவுகள்படி இன்று மனிதனை தாக்கும் பல்வேறு நோய்களுக்கான ஒரு காரணம், நம் உண்ணும் புலால் உணவே.

  இதை தவிர கீழ்கண்ட உணவு ஒழுங்குமுறைகளை கடைப்பிடிப்பது நமக்கு சந்தோஷத்தினையும், தொடர்ந்து சாதனைகளையும் வழங்குகிறது.

  அ) மிதமான உணவை உண்பது நல்லது. அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ உண்ணாமல் இருப்பது நல்லது.
  ஆ) உப்பின் மற்றும் சர்க்கரையின் உபயோகத்தை குறைப்பது நல்லது.
  இ) சுண்ணாம்பு மற்றும் புரோட்டீன் உணவுகளாகிய நிலைப்படுத்தப்பட்ட
  பால், பீன்ஸ், சோயா, பருப்பு, பாதாம் போன்றவற்றை தேவையான அளவு உண்பது நல்லது.
  உ) பழங்கள், உலர் பழங்கள், முளை வைத்த கடலை, பயிறு வகைகள், கீரை வகைகள் அதிகம் உண்பது நல்லது.
  ஊ) துரித உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள் எண்ணையில் பொரிக்கப்பட்ட உணவு வகைகள், இராசாயனங்கள் கலக்கப்பட்ட உணவு மற்றும் பானங்கள், நிறங்கள் மற்றும் சுவை ஊட்டிகள் கலந்த உணவுகள், இனிப்பு மற்றும் சாக்லேட் போன்றவை அதிகம் பயன்படுத்தாமல் இருப்பது உடல்நலத்திற்கு நன்மை பயக்கும்.
  எ) நொறுக்குத் தீனிகளை குறைத்து, சரியான வேளைகளில் உண்ணும் உணவு முறையை பின்பற்றுவது மிகவும் நல்லது.

  உணவு உண்ணும் போது பொதுவாக அசைபோட்டு உண்ணுவதுடன் அதிகமாக இயற்கை விவசாயத்தில் விளைந்த இயற்கை உணவுப் பொருட்களை உண்பது நல்லது, உணவுப் பழக்கவழக்கத்தை முறைப்படுத்தினால் உடல்நலம் மற்றும் மனநலம் மேம்படுகின்றது. சந்தோஷம் தொடர்கின்றது. சாதனைகள் சாதாரண நிகழ்வுகள் ஆகின்றது.

  26. எதிர்மறையை ஏற்படுத்தும் செய்தியை பார்க்க வேண்டாம்.

  சாதனைகள் நிகழ்த்த தேவையான சந்தோஷ வாழ்வு வாழலாம் என முடிவெடுக்கும் போது ஏற்படும் முதல் தடை எதிர்மறை மனோபாவம். வாழ்வில் ஒரு புதிய முயற்ச்சியை எடுக்கலாம் என்று ஆலோசனை நடத்தும்போது, முதலில் பெற்றோர் (விதிவிலக்குகள் உண்டு) பின் உற்றார், உறவினர், நண்பர்கள் என பலரும் ஐய்யோ அவன் தோல்வி அடைந்தான். அவன் தொழில் தொடங்கி தற்கொலை செய்தான். நம் முன்னோர் கூட சொல்லியிருக்கின்றனர். “போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து” எனவே பேசாமல் இப்படியே டீசன்டா ஒரு தொழிலாளியாக வாழ்ந்து வா. உன் குடும்பத்தை தெருவில் கொண்டுவந்து விடாதே.

  இதே போன்று இன்று சமுதாயத்தில் எதிர்மறை மனோபாவத்திற்கு பஞ்சமே இல்லை. பத்திரிக்கை, சினிமா, வலை தளம், தொலைக்காட்சி என எதை எடுத்தாலும் கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்து, தீவிரவாதம், சண்டை, சச்சரவுகள் அதாவது எதிர்மறை செய்திகளின் தாக்கமே அதிகமாக காணப்படுகிறது. ஆகவே சந்தோஷம் வேண்டும் சாதனை வேண்டும் என எத்தனித்துவரும் என் அன்பு நண்பர்களே புறக்கணியுங்கள் எதிர்மறை செய்திகளை, எதிர்மறை காட்சிகளை, எதிர்மறை அறிவுரைகளை, எதிர்மறை எண்ணங்களை, எதிர்மறை கருத்தேற்றங்களை விழிப்புணர்வோடு இருங்கள். நம்பிக்கையோடு முடியும் என்று முடிவெடுங்கள்.

  உங்கள் வாழ்வில் சாதனை மிகுந்த சந்தோஷ வாழ்வு என்றென்றும் நிலை கொள்ளும்.

  (சந்தோஷ சாதனை தொடரும்)

  இடத்தை மாற்று வெற்றி நிச்சயம்

  இது என்ன புது செய்தியா இருக்குதே அப்டீனு பலர் நினைக்கலாம். எங்கே இடத்தை மாற்ற வேண்டும். பெரும்பாலானவர்களுக்கு இடமே இல்லையே ! இடத்தை மாற்றாவிட்டால் வெற்றிகிடைக்காதா ?
  வீட்டை மாற்றுவதா ? வீட்டில் உள்ள பொருட்களின் இடத்தை மாற்றுவதா ?
  பள்ளி, கல்லூரிகளை மாற்றுவதா ? அமர்ந்துள்ள இடத்தை மாற்றுவதா ?
  பணிபுரியும் இடத்தை, நிறுவனத்தை மாற்றவதா ? அமர்ந்துள்ள திசையை மாற்றுவதா ?
  இதுபோன்ற பல கேள்விகளைப் பலர் கேட்டார்கள்.
  இடம் : பொதுவாக இடம் என்றால் PLACE என்ற ஆங்கிலச் சொல்லின்
  விளக்கமே அனைவருக்கும் தெரியும்.
  வாஸ்து என்று ஒருபக்கம் கட்டிய வீட்டில் அங்கங்கு இடித்து, சரிசெய்து எதையோ மாட்டி வைக்கிறார்கள். ஜாதகம் என்று ஒருபக்கம் பரிகார பூஜை என மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
  பெயர் மாற்றினால் வெற்றி நிச்சயம் என்ற விளம்பரம் பார்த்து சிலர் வேகமாக வெற்றி பெற முயல்கிறார்கள்.
  வெற்றியை எப்படியாவது எந்த வழியிலாவது அடைந்தே தீருவது என்று ஒரு சாரார் முயற்சி செய்யும்போது வேறு சிலர் வாய்ப்பில்லை என எண்ணிக்கொண்டிருப்பவர்கள் நமக்கு வெற்றியே கிடைக்காதா என ஆழ்மனதில் ஏங்கிக் கொண்டுள்ளனர்.
  ஓட்டப்பந்தயத்தில் இத்தனாவது வரிசையில் ஓடினால் வெற்றி, ஒரு குறிப்பிட்ட திசை பார்த்து பேசினால் வெற்றி என்பது போன்ற கருத்துக்கள் வரலாம்.
  ஆனால் உண்மையில் இடத்துக்கும் வெற்றிக்கும் தொடர்பில்லை. என்பது தான் மொத்த முடிவு.
  வெற்றி வகைகள் :
  வெற்றியில் இரு வகை உண்டு. தான் வெற்றி பெறுவது ஒருவகை. மற்றவர்களை வெற்றி பெறச் செய்வது 2-வது வகை. உதாரணமாக விளையாட்டுப் போட்டிகளில் ஒருவருக்கும் அல்லது ஓர் அணிக்கு வெற்றி கிடைக்கும். மற்றவர்கள் வெற்றிக்காகக் காத்திருப்பார்கள்..
  சமீபத்தில் நடந்த உலக கால்பந்து கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளைப் பலர் பார்த்திருக்கலாம். ஒவ்வொரு வீரருமே தனது அணி வெற்றி பெற வேண்டுமென்று மிக ஆக்ரோசமாக விளையாடினார்கள். ஆனால், கடைசியில் ஒரு நாடு மட்டுமே வெற்றி பெறமுடிந்தது.
  கலந்து கொண்ட வீரர்கள் அடிக்கடி இடம் மாற்றியதால் வெற்றி பெற்றார்கள் என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும்.
  இதேபோல கிரிக்கெட் விளையாட்டில் பீல்டிங் செய்யும்போது இடம் மாற்றி விளையாடி வெற்றி பெற முடியுமா ? என்றெல்லாம் கேள்விகள் தோன்றும்.
  விளையாட்டு என்று வரும்போது பெரும்பாலும் ஒருவருக்கு அல்லது ஓர் அணிக்குத் தான் வெற்றி கிடைக்கும்.
  ஆனால் நாம் விரும்பும் வெற்றி நாம் எல்லோருமே பெற வேண்டியது. இதை WIN-WIN-FORMULA என்றும் கூறுவார்கள். பிறரை வெற்றியடையச் செய்து அவர்கள் மகிழ்வதைப் பார்த்து, நாமும் வெற்றி பெற்றாற் போல் மகிழ்வது தான் இந்த வெற்றி.
  எல்லோருக்கும் வெற்றி :
  இதற்கு நாம் செய்ய வேண்டியது சுலபமான வேலைதான்.
   அடங்கியிருப்பது
   பிறர் மனம் புண்படாமல் பேசுவது ?
   சுயபச்சாதாபம் தவிர்ப்பது
   எண்ணத்திலும் பேச்சிலும் செயல்களிலும் தெளிவாக இருப்பது.
  இதை நம்மால் செய்ய முடியாதா ? நிச்சயமாக நம் எல்லேராலும் செய்ய முடியும்.
  இன்று வன்முறை நாளும் நடந்து கொண்டிருக்கும்போது, எல்லோரும் அடங்கித்தான் இருக்கிறோம்.
  சமீபத்தில் காஷ்மீர் பயணம் சென்றிருந்தேன். பஸ் கண்ணாடியை கல்வீசி உடைத்தனர். எனது இருக்கைக்கு அருகில் முன்புறம் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர். நொடிப்பொழுதில் இருக்கையில் இருந்து கீழே இறங்கி பாதுகாப்பாக அமர்ந்து கொண்டார். இடத்தை மாற்றியதால் அவரைப் பொருத்தவரை பாதிப்பில்லை என்ற நிம்மதி.
  பிறர் மனம் புண்படாமல் பேசுவது என்பது எல்லோருக்குமே தெரியும்; இருந்தாலும் ஏதாவது ஒரு காரணத்தை நமக்கு சாதகமாய் பிடித்துக் கொண்டு, பிறரை வருத்தம் கொள்ளுமாறு பேசுவதில் நாம் கில்லாடிகள்.
  சுயபச்சாதாபம் என்பது – எல்லோருமே தெரிந்தோ, தெரியாமலே செய்வதுதான். மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டியது “என்னைவிட மோசமானவர்கள் எல்லாம் எங்கோ உயரத்தில் இருக்க நான் இந்த அவல நிலையில் இருக்கிறேனே” என்று வருத்தப்பட்டு வாய்ப்புக்களை இழந்து வருந்திக் கொண்டே வாழ்வது.
  எண்ணம், பேச்சு, செயலில் மாற்றம், இதை நம் தேவைக்கேற்றாற் போல் செய்யும் தகுதியும் திறமையும் நம் எல்லோரிடமுமே ஏராளமாக உள்ளது.
  உறவுகள்:
  தனிமரம் தோப்பாகாது: என்னதான் வசதி இருந்தாலும் தனி மனிதனாய் வாழமுடியாது. மற்றவர்களோடு, உறவினர்களோடு, நண்பர்களோடு சமுதாயத்தோடு இணைந்து தான் வாழ வேண்டும். எனவே உறவு முறைகள் என்பதை நம் வாழ்க்கையிலிருந்து பிரிக்கவே முடியாது.
  இந்த உறவுகள் பிறை போன்றவை. அதாவது நம் மனநிலையைப் பொறுத்து வளரும் அல்லது தேயும். இந்த உறவுகளைச் சரியான முறையில் பராமரிக்க நாம் செய்ய வேண்டியது உறவை நட்பாக மாற்றுவதே!
  ஓர் அறிஞர் கூறியுள்ளார்,
  MAINTAIN, LIFE IN RELATIONSHIP உறவுகளில் வாழ்க்கையைப் பராமரி/ வாழ்ந்துபார் வெற்றகரமான உறவு புரிந்து கொள்வதிலா உள்ளது. என்றால் இல்லை! தவறாகப் புரிந்து கொள்வதைத் தவிர்ப்பதில் தான் உள்ளது.
  இந்த அடிப்படை விதியை அறிந்து கொண்டால், வெற்றி நம் அனைவருக்குமே சொந்தமாகி விடும்.
  கண்களைத் திற:
  சில இடங்களில் கண்களை மூடிவிட்டால் சுலபமாக வெற்றி பெற்றுவிடலாம். ஆனால் நம்மால் அது முடியாதே எனப் பலரும் கூறுகின்றனர்.
  மற்றவர்களது குறைகளைக் காணுமிடத்து கண்களை மூடிக்கொள்வதும், கண் திறந்தவுடனே, அது போன்ற குறைகள் நம்மிடம் உள்ளதா எனப்பார்ப்பதும் முதல் மாற்றமாகும்.

  பிரச்சனைகள்:
  பிரச்சனை இல்லாமல் ஒருவருமே இல்லை; அவரவர் தகுதிக்கேற்ப பலவிதமான பிரச்சனைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்பிரச்சனைகளை இனம்கண்டு கொண்டால் வெற்றி நிச்சயம். எப்படி?
  இரண்டு வகையாகப் பிரிப்பதன் மூலம்.
  முதல் வகை:
  நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை.
  (உ.ம்) சிங்களர் – தமிழர் பிரச்சனை; காஷ்மீர் பிரச்சனை; கல்வி கட்டண உயர்வு பிரச்சனை; நதிகள் இணைப்பு பிரச்சனை போன்றவை.
  இரண்டாம் வகை:
  நம் கட்டுப்பாட்டில் உள்ளவை.
  (உ.ம்) தலைவி, குடும்பத்தில் உறுப்பினர்களுடன் சண்டை, படித்து அதிக மதிப்பெண் பெறுவது. குழந்தை வளர்ப்பு போன்றவை.
  மக்கள் வகை மூன்று :
  நம்முடன் வாழும் மக்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
  1. பிரச்சனைகளுடன் வாழ்பவர்கள்
  2. பிரச்சனைகளை உண்டாக்குபவர்கள்
  3. பிரச்சனைகளைத் தீர்ப்பவர்கள்
  இந்த மூன்றில் நீங்கள் எந்த நிலையில் குடும்பத்தில் மற்றவர்கள் எந்த நிலையில் உள்ளார்கள் என்று கண்டு பிடியுங்கள்.
  பெரும்பாலும் பிரச்சனைகளை உண்டாக்காமலிருப்பது. பிறகு பிரச்சனைகளை ஏற்றுக் கொள்வது. இறுதியில் அவைகளைத் தீர்ப்பது என்பது வெற்றி தரும் செயல்களாகும்.
  செய்யக்கூடாதவை :
  வெற்றி பெறுவதற்கு சிலவற்றை மறந்தும் செய்து விடக்கூடாது. அவற்றில் முதலில் வருவது.
  1. கோபத்தில் முடிவெடுப்பது
  2. மகிழ்ச்சியாக இருக்கும்போது வாக்களிப்பது (PROMISE)
  பொதுவான இடமாற்றம்
  நமது வாழ்க்கையில் நாம் எல்லோருமே ஏதாவதொரு இலக்கை நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பெரும்பாலான நேரங்களில் ஏதாவதொரு காரணத்தால் ஏதோ செய்து விடுவோம். இது செயல். (ACTION)
  அதன் விளைவுகள் நாம் எதிர்பார்த்தற்கு மாறாகவோ, வேறு விதமாகவோ, வரலாம். அப்போது நினைத்துப்பார்போம். “அடடா ! அப்பவும் மனதுக்குள் சிறு சந்தேகம் வந்தது. அதைக் கண்டு கொள்ளாமல் செய்தால் முடிவு வேறு மாதிரியாகி விட்டது.” என நினைப்போம். இது சிந்தனை (THINK)
  முடிவில் இந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, இனிமேல் எந்தக்காரியம் செய்தாலும் சரியாகத் திட்டமிட்டே செயல்பட வேண்டும் என்ற முடிவுக்கு வருவோம். இது திட்டமிடல் (PLAN)
  இப்போது நமது வழி (ACTION, THINK, PLAN)

  சோம்பலை சாம்பலாக்கி வெற்றி பெறு!

  மலைப்பாதையில் பயணம் செல்லும் போது ஓங்கி வளர்ந்த மரங்களும் பசுமைநிறைந்த செடி, கொடிகளும் கண்ணுக்குள் குளிர்ச்சியான சந்தோசத்தை தென்றலாக மனதை மகிழ்விக்கும் அனுபவம் பெற்றிருக்கலாம். அந்த சந்தோசதருணம் தரும் இன்னொரு உண்மை வெற்றியின் தத்துவம். மரங்கள் பூமியின் எந்தபகுதியில் வளர்ந்தாலும் தன்னை வித்திட்ட இடத்தில் தன்நிலையை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்கிறது. அதே சமயம் தன்னை மேல் நோக்கி மேலும்மேலும் வளர்த்துக் கொள்கிறது. பூமியின் பள்ளத்தாக்கில் இருந்தாலும் உயர்மட்டபகுதியில் இருந்தாலும் உயர வளர்கிறது. பக்கவாட்டில் படர்ந்தாலும் உயரவளர்வதை முன்னிருத்திக்கொண்ட நோக்கமே அதனிடம் இருக்கிறது. அதைவிட்டு சற்றும் விலகிச் செல்வதில்லை. அந்த மரங்கள் மடியும் வரை வளர்கிறது. மடியும் போதுகூட இன்னொரு தாவரத்திற்கு உணவாக மண்ணோடு மண்ணாக மறித்துப் போகிறது. நண்பர்களே, மனிதனின் ஒவ்வொரு வெற்றியும் அப்படித்தான் இருக்க வேண்டும். நீங்கள் இருக்கும் உங்கள் நிலையை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். உங்களது பிறப்பு, வளர்ப்பு எங்கே எப்படி என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் இருக்கும் நிலையை ஆதாரமாக கொண்டு உயர வளர – சமுதாய வளர்ச்சியில் உயர வளர செயல்பட வேண்டும். மரங்கள் உணர்த்தும் தத்துவத்தைப் போல வாழும் வரை தொடர்ந்திட வேண்டும். வாழ்க்கைக்குப் பிறகும் மற்றவர்களுக்கு பயன் தரும் வகையில் நம் வளர்ச்சி இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைளுக்கு கொடுக்கும் கல்வியறிவு மற்றும் சொத்துக்கள் கூட இந்த தத்துவத்தின் ஒருபகுதி தான். அது சமுதாய முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் மாறும்போது உங்கள் வெற்றி வெளிச்சமிட்டு பிரகாசிக்கும். அது தான் உங்கள் புகழ். தான் உயிர்பெற்று வளர்ந்து இன்னொரு மரத்திற்கு வித்தாக மாறுவதுதான் மரத்தின் வளர்ச்சி நோக்கமாக இருந்தாலும் வளர்ந்து மற்றவர்களுக்கு கொடுக்கும் நிழலும் காய் கனிகளும் எப்படி மற்றவர்களை சந்தோச படுத்துகிறதோ அந்த நிலையை ஒவ்வொரு மனிதனின் வெற்றியும் அடைய வேண்டும். அப்போது தான் அந்த வெற்றியின் உச்சகட்டபயன் – சந்தோசத்தை உணர முடியும்.
  வெற்றிக்கான உழைப்பு, ஒட்டம், பயிற்சி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் நின்றுவிடக்கூடாது. தொடர்ந்திட வேண்டும். செய்யலாம் ஆனால் எத்தனை கஷ்டங்கள் கடக்க வேண்டும் என எண்ணுகிறீர்களா? நண்பர்களே, வெற்றிக்கான அடையாளங்கள் சில காய வடுக்கள் தான். சில வேளைகளில் உடல், வேறு சிலவேளைகளில் மனதில் – பட்ட வடுக்கள் நிச்சயம் வெற்றியின் அடையாளமாகத்தான் திகழும். எப்போதாவது மனம் துவண்டுப்போனால் – போவதுபோல் உணர்ந்தால் சோம்பல் உங்களைச் ‘சேம்பிள்’ பார்க்கப் பார்த்தால் மகாகவி பாரதியின் இந்த கவிதை வரிகளை படியுங்கள்.
  தேடிச்சோறுநிதந் தின்று -பல
  சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
  வாடித்துன்பமிக உழன்று -பிறர்
  வாடப் பல செயல்கள் செய்து
  நரைகூடிக்கிழப்பருவமெய்தி-கொடுஞ்
  கூற்றுக்கிரையெனப்பின்மாயும்-பல
  வேடிக்கை மனிதரைப்போலே -நான்
  வீழ்வேனென்று நினைத் தாயோ!
  உரக்கப்படியுங்கள்.
  இந்தப் புரட்சிக்கவிஞனின் மின்சார வார்த்தைகள் உங்கள் சோம்பலை சாம்பாலாக்கிவிடும். பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின்
  வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
  வேடிக்கையாக கூட நம்பிவிடாதே-நீ
  வீட்டினுள் பயந்து கிடந்து வெம்பி விடாதே
  பாட்டு வரிகள் உங்கள் செயல்பாட்டின் முட்டுக்கட்டைகளை மூட்டைக்கட்டி
  வைக்க உதவும்.
  சமுதாய நலமிக்க கவிஞர்களின் நூல்களை படியுங்கள். படிக்கும் போதே
  கருத்துக்களை உங்கள் ஆழ்மனதில் வித்திடும் வித்தையை – விந்தையை கற்றுக்கொடுக்கும். மரத்தின் இயல்நிலையும் வளர்ச்சித் தத்துவமும் நல்ல கவிஞர்களின் ஞான வார்த்தைகளும் உங்கள் வெற்றிக்கான பாதையில் வெளிச்சமிடும். கம்பீரமாக நடந்து பாருங்கள், முன்னேற்றம் முடிவில்லாமல் உங்களைத் தொடரும்.

  வெற்றி விலாஸ்

  தன்னம்பிக்கை வாசகர்கள் போட்டியில் தேர்வு பெற்ற நட்சத்திரக்கதை

  ‘வெற்றி விலாஸில்’ கண்ணாடி அறைக்குள் அமர்ந்து கொண்டு, பரந்து விரிந்திருந்த தனது ஹோட்டலையே பார்த்துக் கொண்டிருந்தான் மதிவாணன்.

  சப்ளையர்கள், மாஸ்டர்கள், துப்புரவுப் பெண்கள் என நாற்பத்தைந்துபேர் சுழன்று சுழன்று பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

  கடலூர் டவுனிலுள்ள முக்கிய சாலையில், பிரம்மாண்டமாய் நின்றிருந்தது “வெற்றி விலாஸ்”. ஹோட்டலின் மாடியில் மதிவாணனின் வீடு. சுவையான ஆகாரத்திற்காக காலையிலேயே வரத்துவங்கும் கூட்டம், இரவு பதினொரு மணிவரை ஓயாது. ஊழியர்கள் எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள்.

  இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் மதிவாணனுக்கு உண்ண உணவும், இருக்க இடமும் இல்லை. ஆனால் இன்று… அவனுக்கு ஒரு உணவகமே சொந்தம்.

  “ஏம் மதி சோகமா இருக்க…”

  “………….”

  நண்பன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், பெருமாள் கோவில் கோபுரத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான் பதினைந்து வயது மதிவாணன்.

  “மதி……… அழுவுறியா?”

  “இல்ல……..”

  “பின்ன ஏன் தலை குனிஞ்சி ஒக்காந்திருக்க?”

  “விடிஞ்சா… சோத்துக்கு என்ன செய்யறது?”

  “வழி பிறக்கும்”

  “எப்படி?”

  “நீ மனசு வச்சா…”

  “புரியல…”

  “இந்த டவுன்ல மொத்தம் எத்தன ஆபிஸ் இருக்கும்?”

  “நூறு ஆபிஸ்கள் இருக்கலாம்”

  “ஆபிஸ் வேலை செய்யுறவங்கள்ல எத்தனை பேர் டூவீலர்ல வருவாங்க?”

  “எல்லாரும்”

  “இல்ல ஒரு ஐநூறுபேர் டூவீலர்ல வரலாம்”

  “அது எதுக்கு இப்ப…”

  “ஒவ்வொரு ஆபிஸா போய் டூவீலர் தொடைச்சுக் கொடு”

  “கொடுத்து…”

  “அதுக்காக அவங்க தர்ற காசு எவ்வளவா இருந்தாலும் வாங்கு. ஆளுக்கு ஒரு ரூபா கூடவா தரமாட்டாங்க?”

  “தரலாம்…”

  “காலைல பத்து மணிக்கு கிளம்பு. சுறுசுறுப்பா வேலை செய். சுத்தமா வண்டிகள தொட, சாயங்காலத்துக்குள்ளாற நிச்சயமா நூறு வண்டி தொடைக்கலாம். குறைந்தது நூறு ரூபா கிடைக்கும்”

  அன்பு காட்டிய வழி, மதிக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. எந்த முதலீடும் இல்லாத வேலை. அன்பு, மதியின் பால்ய சிநேகிதன். கணித ஆசிரியரின் ஒரே மகன் அன்பு. மதியின் அப்பாவும், அம்மாவும் ஒரு சாலைவிபத்தில் இறந்தபின், மதி அனாதையானான். கணித ஆசிரியர், மதியை மாணவர் விடுதியில் சேர்த்துவிட்டார். செலவுக்குப் பணம் கொடுத்தார். அன்பு பயன்படுத்திய பழைய பேண்ட், சர்ட்டுகளை உடுக்கக் கொடுத்தார்.

  தாய் தந்தையரை இழந்து, மதி கலங்கிய போதெல்லாம் ஆறுதலாயிருந்தது அன்பு தான்.

  “சார்… உங்களப் பார்க்க யாரோ வந்திருக்காங்க”

  மேனேஜரின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தான் மதி.

  “யாரு வந்திருக்கா…”

  “தெரியல சார். வரச் சொல்லட்டுமா?”

  “வரச்சொல்”

  மதியின் மாமா வந்திருந்தார். மதி, கடலூரில் ஒரு கடை போட்டதும், ஏதேதோ சொந்தம் சொல்லிக் கொண்டு பலபேர் வந்து போனார்கள். அவர்களில் இவரும் ஒருவர். சொந்தங்கள் யாரும் கஷ்டகாலத்தில் உதவவில்லை. உதவியதெல்லாம் அன்பு தான்.

  ஒரு வருடம், இரண்டு வருடமல்ல ஐந்து வருடங்கள்… டூவீலர் வண்டிகளை துடைத்தான் மதி. முதலில் சில நாட்கள் வரை முப்பது, நாற்பது ரூபாய் தான் கிடைத்தது. இவனது தொழில் நேர்த்தி, சுறுசுறுப்பு பார்த்தவர்கள் தங்களது கார், வேன் போன்றவைகளைத் துடைக்கச் சொன்னார்கள். கிடைத்த வேலைகளை சோம்பலின்றி செய்தான். வருமானம் பெருகியது. கடலூர் டவுனில் ஒரு அரையை வாடகைக்கு எடுத்தான். தூங்க மட்டுமே அங்கு செல்வான். மற்ற நேரமெல்லாம் ஏதோ ஒரு வேலையைப் பார்த்து சிறுகச் சிறுக பணம் சேர்த்தான்.

  “சார்… உங்களைப் பார்க்க பத்திரிக்கை ஆட்கள் வந்திருக்காங்க…”

  மீண்டும் மேனேஜர் அழைத்ததும் சுயநினைவிற்கு வந்தான் மதி. ‘எதிர்காலம்’ பத்திரிக்கையிலிருந்து சிலர் வந்திருந்தனர்.

  “வரச்சொல்”

  “சார்… வணக்கம்”

  “வாங்க… வாங்க… உட்காருங்க”

  “எங்க இதழ்ல… ‘வெளிச்சத்தை வென்றவர்கள்’னு ஒரு தொடர் கட்டுரை எழுதப்போறோம். அதுக்காக… உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடந்து வந்த பாதையைப் பற்றி தெரிஞ்சுகிட்டு போலாம்னு வந்தோம்”.

  “குருட்டு அதிர்ஷ்டம் அப்படினு சொல்ல மாட்டேன். ஒரு வேளை சோத்துக்குக் கூட நாதியில்ல. ஏதாவது ஒரு வேலை செஞ்சாத்தான் சோறுன்னு ஆயிடுச்சி, காலம் கொடுத்த நெருக்கடியில வெறித்தனமா-கௌரவம் பார்க்காம உழைச்சேன்… என் வெற்றிக்குக் காரணம் என் நண்பனும் என் ஆர்வமும் தான்”

  “அப்போ… ஒருவர் முன்னேற பணம் தேவையில்லையா?”

  “தேவையில்லை. ஆர்வம் இருந்தா… எல்லாம் நம்ம கூட வரும். முன்னேறியே ஆகனும்னு முடிவு பண்ணிட்டா, பணம் ஒரு மேட்டர் இல்லை. பணம் கோடி கோடியா இருந்து ஆர்வம் இல்லைன்னா… வீழ்ச்சி சர்வ நிச்சயம். ஆர்வம் இருந்து… பணம் இல்லேன்னா பிரச்சனை இல்ல”

  “அப்போ வேலையில்லா திண்டாட்டம் என்பது…”

  “ஒரு மாயை. சோம்பேறிகளின் ஒப்பாரி அது. பைசா காசு கையில் இல்லாத எனக்கு, ஆர்வமும் உழைப்பும் தான் மூலதனம்… ஒரு ரூபா ஒரு ரூபாயா சேர்த்து … ஒரு எறும்பு உணவு சேர்க்கிற மாதிரி நான் பணம் சேர்த்தேன். பைசா ஒன்றுமே இல்லாத நானே குப்பையிலிருந்து கோபுரத்திற்கு உயர்ந்திருக்கும்போது… கொஞ்ச நஞ்சம் வசதி படைத்த இன்றைய இளைஞர்கள் இன்னமும் உயரப் போகலாம்”

  “ரொம்ப ஈஸியா முன்னேற்றம் கிடைக்கும்னு சொல்றீங்க…”

  “இல்ல… ஈஸி இல்ல… முட்டி, மோதி, ரத்தம் வழிந்து, மனசு, உடம்பு எல்லாம் ரணமாகும் பாதை இது. துயரம்… அவமானம்… அசிங்கம்… எல்லாம் தாங்கி, சகிச்சுகிட்டு உரமா நின்னேன். ஜெயிச்சேன்”

  “விளக்கமா சொல்ல முடியுமா?”

  “கண்டிப்பா. வண்டி துடைக்கிற வேலைதான் முதலில் செஞ்சேன். கொஞ்சம் பணம் கையில தங்கினதும், வீடு வீடா போய் காரம், இனிப்பு வித்தேன். என் கூட படிச்சவங்களோட கேலி கிண்டல தாங்கினேன். வாங்கி சாப்பிட்டுட்டு காசு கேட்டா… நாளைக்கு வா, அப்புறம் வா… என பத்து ரூபாய்க்கு ஒரு மாசம் இழுத்தடிப்பாங்க. சிலர்கிட்ட காசு கேட்டா, அடிக்க வருவாங்க. கெட்ட பேச்சு பேசுவாங்க. சில ரவுடிகள் என் சரக்க புடுங்கி வச்சுகிட்டு துரத்துவாங்க. பல ராத்திரிகள் தூக்கமில்லாம அழுதிருக்கேன். பசிக்கு மட்டும் தான் சாப்பிடுவேன். ‘எதுக்கு இந்த வாழ்க்கை… பணத்துக்காகத்தானே பலபேர் கிட்ட பேச்சு வாங்குறோம். செத்துப் போயிடலாமன்னு’ பல நேரம் வேதனைப்பட்டிருக்கேன். அவமானம் தாங்காம ஏதுங்க வெகுமானம்? உசிரோடு இருந்தா ஒரு நாள் ஜெயிப்போம் என்கிற நம்பிக்கைல உழைச்சேன். இன்றைய வெற்றி ஈஸியா கிடைக்கல. இருப்பதஞ்சு வருஷம் பேய் மாதிரி அலைஞ்சேன். வசதி கிடைக்கிற வரை உழைக்கணும்ணு நான் எடுத்த முடிவு இது. இந்த நிலை கிடைக்க இன்னும் இருபது வருஷம் ஆகும்னாலும் நான் உழைக்கிறத நிறுத்தியிருக்க மாட்டேன்”

  “இன்றைய இளைய தலைமுறைக்கு உங்க ஆலோசனை என்ன?”

  “தான் விரும்பிய பெண் தனக்குக் கிடைக்க, ஒரு இளைஞர் எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறான். அதே அளவு ரிஸ்க்க, ஒரு தொழிலுக்காக எடுத்தான்னா, அவன் வாழ்க்கை செழிப்படையும் என்பது என் ஆலோசனை”

  பத்திரிக்கையாளர் போனதும், வீட்டிற்குச் சென்றான் மதி.

  செல்போன் அழைத்தது. மறுபக்கத்தில் அன்பு.

  “அன்பு…”

  “சொல்லு மதி… நலமா?”

  “நல்லா இருக்கேன். உன்ன பார்க்கணும் போல இருக்குடா”

  “தை மாசம் வர்ரேன். உன் குடும்பம் எப்படி இருக்கு? குட்டிப்பய விக்கி என்ன பண்றான்”
  அன்பு பேசும் போதெல்லாம்…….. மதிக்குத் தெம்பு வரும். தெம்பு தருவதுதான் அன்பின் வாடிக்கை. அவன் மட்டும் இல்லையென்றால்………
  “என்னடா சத்தத்தையே காணோம்?”
  “ஒன்னுமில்லடா, உன் நினைப்பு…… பழைய நினைப்பு வந்திருச்சு……… அமைதியாயிட்டேன்.”
  “என்ன நெனப்பு வந்துச்சி…………”
  “நீ கொடுத்த ஊக்கம் தான்டா என் வாழ்க்கை.”
  “ச்சே……………. ச்சே…………… அப்படியில்லடா. ஒன்னமாதிரி நிறைய பேருக்கு உபதேசம் பண்ணியிருக்கேன். அவங்களும் கேட்டாங்க. ஆனா, செயல்ல காட்டல. நீ என் பேச்ச கேட்டதோட நிக்காம, செயல்ல இறங்கிட்ட உன் முன்னேற்றத்துக்கும் நீ தாண்டா காரணம்.”
  “இல்லடா…………… உன் பேச்சுங்கற தீபம் இல்லேன்னா. …………… என் வாழ்க்கை இருண்டு போயிருக்கும்டா.”
  “நோ…………… மதி.…………… நோ…………… எல்லையற்ற ஆர்வம் ஒங்கிட்ட கொட்டிக்கிடந்திச்சி. அந்த ஆர்வம் தான் உன்னை இயக்குன என்ஜின். ‘ஐன்ஸ்டீன்கிட்ட நீங்க நோபல் பரிசு பெற்றதற்கு என்ன காரணம்னு கேட்டபோது, அவர் என்ன சொன்னார் தெரியுமா? ஆர்வம்…………… ஆர்வம். …………… ஆர்வம். ஆர்வத்தைத் தவிர வேறெதுவும் இல்லைன்னார்.’ அதே ஆர்வம்தாண்டா உன்னை உயர்த்தின எரிபொருள். நான் வெறும் கருவிடா.”
  “இந்த அடக்கம்தான்டா உன்கிட்ட எனக்குப் பிடிச்சது.”
  “பல பேருக்கு பணம் இருக்கு. சொந்தமான தொழில் பண்ண ஆர்வம் இல்ல. உனக்கு ஆர்வம் இருந்திச்சி…………… சிகரம் தொட்ட……………”
  ஆம்! கையில் கொஞ்சம் பணம் சேர்ந்ததும், கடலூர் டவுனில், தள்ளுவண்டியில் இட்லி, தோசையைச் சுடச்சுட விற்றான். ஐந்து ஆண்டுகளில் இப்படி. அதன்பிறகு கடைவீதியில் ஒரு சிறிய இடம் பிடித்து ஹோட்டல் துவக்கினான். நேர்மையான வியாபாரம், சுவையான உணவு, வாடிக்கையாளர்களை பணிவுடன் நடத்தியவிதம் என தனது தனிப்பட்ட தன்மையால் மக்களைக் கவர்ந்தான் மதி. காலம் சுழன்றது. இன்று…….. கடல்போல ஒரு ஹோட்டல், அதன் மீது தனது வீடு என வளர்ந்து விட்டான். இன்னும் அவன் சோம்பேறியில்லை., கூட்டம் அதிகமானால், பணியாளர்களோடு சேர்ந்து உணவு பரிமாறுவான், எச்சில் இலை எடுப்பான், கல்லாவில் உட்காருவான், வந்த வாடிக்கையாளர்களை நலம் விசாரிப்பான், ஆர்வம் என்பது எரிபொருள். அதை உள்ளத்தில் நிரப்பி விட்டால்…………… எப்படி ஒருவனால் ஓய்வெடுக்க முடியும்?

  உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்

  உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். இது எத்தனை பேருக்கு புரிகிறது. ஏன் சிலரது வாழ்க்கை ஆனந்த மயமாக, அமைதியாக, ஆரோக்கியமாக இல்லை. அதிர்ஷ்ட தேவதை சிலரைப் பார்த்து மட்டும் சிரிக்கிறாளா? சிலரது வீட்டுக் கதவை மட்டும் தட்டுகிறாளா? ஆண்டவன் சிலருக்கு மட்டுமே உதவ சௌபாக்கியங்களையும் தந்துவிட்டு சிலரை வஞ்சிக்கிறாரா?

  இது ஒரு மில்லியன் டாலர் கேள்விதான். உங்களது அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் யாவுமே உங்களது மனப்போக்கின் படியேதான் அமைகிறது. உங்களது சிந்தனை, செயல்பாடு, மனப்போக்கு, வாழ்க்கை முறையே இதற்குக் காரணம்.

  உங்களுடைய எண்ணங்கள் நீங்கள் சென்றடையும் இலக்கை நிர்ணயிக்கின்றன. எப்போதும் புதுமையாக சிந்தியுங்கள். அந்தத் தூய, நல்ல சிந்தனைகளை உங்கள் மனதிற்கு உரமிட்டு, நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வழி கோலுகிறது. மனவளத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். எப்போதும் நல்லதையே எண்ணுங்கள். நல்ல விதமாக கனவு காணுங்கள்.

  எதிர்மறையான எண்ணங்கள் உங்கள் மனதில் தோன்றி வாட்டும் போதெல்லாம், மாற்றி யோசியுங்கள். ஏனெனில் எதிர்மறையான எண்ணங்களே உங்களது வீழ்ச்சிக்குக் காரணமாகின்றன.

  ஆகவே, ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான எண்ணங்களை உரம்போட்டு வளர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் விழுந்தவன், நீந்தத் தெரியாவிட்டாலும், தைரியமாக இருந்தால் எப்படியாவது நீந்தி கரை சேர்ந்து விடுவான். மாறாக பயந்தால் தண்ணீரில் மூழ்கி விடுவான்.

  அடிக்கடி புதிய, புதிய நல்ல சிந்தனைகளை உங்கள் மனதில் நிரப்பிக் கொள்ளுங்கள். நீங்கள் புதிய மனிதராக மாறி விடுவீர்கள்.

  அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுங்கள். நீங்களும் சந்தோஷமாக வாழ முடியும்.

  மனதில் அமைதியும் நிலவும். நீங்கள் அமைதியாக வாழ்வீர்கள். ஆகவே உங்கள் மனதை எப்போதும் அமைதிப் பூங்காவாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதில் அமைதி எனும் பூங்காற்று எப்போதும் வீசிக்கொண்டிருந்தால் நீங்கள் உங்களைச் சுற்றி அமைதியான உலகத்தை உருவாக்க முடியும்.

  என்னுடைய வாழ்க்கையில் எது முக்கியமானது? நான் சென்றடைய வேண்டிய இலக்கு என்ன? அதை எப்படி அடைவது என்று சற்றுநேரம் சிந்தியுங்கள்.

  உங்கள் பிரச்சனை என்ன? அது உண்மையாகவே பிரச்சனையானதா? நீங்களாக ஒன்றுமில்லாத விஷங்களைப் பிரச்சனை என்று கருதுகிறீர்களா?

  பிரச்சனைக்குத் தீர்வு உண்டா? எப்படி முயன்றால் அதற்குத் தீர்வு காணலாம். எலிப் பொறியில் எலி சிக்கிக் கொள்வது போல, நீங்களாக பிரச்சனை வளைக்குள் சிக்கிக் கொள்கிறீர்களா?

  தீர்க்க முடியாத பிரச்சனை என்றால் அதை உடனே மறந்து விடுங்கள். மனதார ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது பிரச்சனை உங்களை வருத்தாது. வீணாகத் தீராத, தீர்க்க முடியாத பிரச்சனைகளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பீர்களேயானால், பிரச்சனை ஒருபோதும் தீராது. மாறாக உங்கள் கவலை உங்களை வருத்தத்தில் ஆழ்த்தும். மனவளமும், உடல் நலனும் கூட அதனால் பாதிக்கப்படும்.

  கடந்தவைகளை மறந்து விடுங்கள். அதனை மாற்ற முடியாது. அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் ஒரு பயனும் இல்லை. மாற்ற முடியாத அந்த நிகழ்வைப் பற்றியே ஏன் வீணாக நினைத்து நினைத்து மருகுகிறீர்கள்.

  எதிர்காலம் நமது கையில் இல்லை. அதைப் பற்றி எண்ணி ஏன் ஆகாயக் கோட்டை கட்ட வேண்டும். நிகழ்காலம் உங்கள் கையில் உள்ளது. இப்போது நிகழ்ந்துள்ள வாழ்க்கையை நன்கு அனுபவியுங்கள். நிகழ்காலத்தில் வாழ்வீர்களானால், கடந்தகால நிகழ்ச்சிகளோ அல்லது எதிர்கால எதிர்பார்ப்புகளோ உங்களை ஒன்றும் செய்ய முடியாது.

  நீங்கள் ஆனந்தமாக, அமைதியாக வாழ முடியும். தடைகளும், கஷ்டங்களும் நிறைந்ததுதான் வாழ்க்கை. அவைகள் உங்களை நிலைநிறுத்துவதற்காக வருகின்றன என்று எண்ணுங்கள். அதனை இடையூறாகக் கருதாதீர்கள். அவை உங்களை மிகவும் புத்திசாலியாக ஆக்குவதோடு நீங்கள் பல அனுபவங்கள் பெறவும், முன்னேறுவதற்கும் உதவக்கூடும்.

  தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருங்கள். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான எண்ணங்களையே மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

  ஒருநாள் மற்றொரு நாளைப்போல இருப்பதில்லை. இன்று புதிதாகப் பிறந்தோம் என்று எண்ணுங்கள். அந்தப் புத்துணர்ச்சி உங்களுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும், செயல் வேகத்தையும், மனத்தெளிவையும் தரும்.

  எதிர்வரும் தடைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருங்கள். உங்கள் வாழ்க்கை என்றும் வசந்தமாக அமைவதை உணர்வீர்கள்.

  உத்தரேத் மருத்மானம் நாத்மருமவ ஸாதயேத்
  ஆத்மைவ ஹ்யாத்மளோ பந்துராத்மைவ ரிபுராத்மள:

  என்கிறது கீதை (அத் 6-5)

  இதன் பொருள் தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஒருபோதும் தன்னை இழிவுபடுத்திக் கொள்ளலாகாது. ஏனெனில் தானே தனக்கு உற்ற நண்பன். தானே தனக்குப் பகை.

  வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
  உள்ளத் தனைய துயர்வு

  என்று வள்ளுவர் கூறுவதும் இந்த உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் தான்.

  உன்னைப்போல் அயலானையும் நேசி என்று ஏசுபிரான் சொல்வதும் இதுதான். முதலில் நம்மை நாம் நேசிக்கத் தெரிந்து கொண்டாலே, மற்றவர்களையும் நாம் நேசிக்க முடியும். தீதும், நன்றும் பிறர்தரவாரா என்றும், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்றும், நம்பினோர் கெடுவதில்லை என்றும் மூதுரைகள் சொல்லியிருப்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

  எல்லாமே நாம் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக அமைந்துவிடும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் தோல்வியையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் தோல்வி கண்டு மனம் துவண்டு போகக்கூடாது.

  தோல்வியைக் கண்டு மனம் துவண்டு போவோரும் உண்டு. மனம் தளராமல் எங்கே நாம் தவறு செய்தோம் என்று ஆராய்ந்து தெளிந்து வெற்றிக்கு வழி காண்போரும் உண்டு. தோல்வி மனப்பான்மை உடையவர்கள் மனம் துவண்டு, நொறுங்கிப் போய் தாம் தோற்றுவிட்டதாகவே கருதுகிறார்கள். வெற்றி பெறும் தகுதியோ, ஆற்றலோ தமக்கு இல்லை என்று மருகி மாய்கிறார்கள். இனி தம்மால் எதுவுமே செய்ய முடியாது என்று அடுத்தடுத்து முயற்சிகளை மேற்கொள்ளாமலே இருந்து விடுகிறார்கள்.

  தங்களுக்கு அதிர்ஷ்டமே இல்லை. இனி தாங்கள் செய்யக்கூடியது எதுவுமே இல்லை என்று எண்ணுகிறார்கள். சமுதாயத்தில் தாங்கள் மிகவும் தாழ்ந்துவிட்டதாகவே எண்ணி, தாழ்வு மனப்பான்மை கொண்டு தவிக்கிறார்கள். இந்தத் தோல்வியால் தங்கள் வாழ்க்கையே இருண்ட பாலைவனம் ஆகிவிட்டதாகவே தயங்குகிறார்கள்.

  இனி முயற்சியை மேற்கொண்டு என்ன செய்ய, என்று தன் முயற்சி முழுவதையும் கைவிட்டுவிடத் துணிகிறார்கள். தங்களால் எதையும் சாதிக்க முடியாது என்ற எண்ணம் மேலோங்கித் தவிக்கிறார்கள். கடவுள் ஓர் வஞ்சனை உடையவர். தங்களை அவர் கைவிட்டுவிட்டார் என்று எண்ண ஆரம்பித்து விடுகிறார்கள். நம்பிக்கையை இழந்து நடைப்பிணமாகி, தங்கள் வாழ்க்கை நாசமாகிவிட்டதாக எண்ணி, எண்ணி வேதனைப்படுகிறார்கள்.

  மாறாக, தோல்வியைக் கண்டு சற்றும் அஞ்சாதவர்கள், தாங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று எண்ணுவதோடு நின்றுவிடாமல், வெற்றி பெற என்ன வழி என்று தேட முனைகிறார்கள்.
  தோல்வி தனக்கு ஒரு படிப்பினை. தன் தவறுகளைத் திருத்திக் கொண்டு, அடுத்து முயன்று வெற்றி பெற வேண்டும். வெற்று பெறும் வரை தொடர்ந்து முயல்வேன் என்று உறுதியுடன் நம்புகிறார்கள்.

  தவறான சிந்தனைகளை செயல்முறையை விடுத்து, வேறுவழியில் சிந்திக்கவும், செயல்படவும் முயல்கிறார்கள். இனி சரியான முறையில் முயற்சியை மேற்கொண்டு வெற்றிப்பாதையில் செல்வேன் என்று நம்புகிறார்கள்.

  அதற்காகக் கடினமான முயற்சியை மேற்கொள்ளத் துவங்குகிறார்கள். எடுத்த எடுப்பிலேயே எதையும் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்து, சாதனைக்கு இன்னும் சில காலங்கள் ஆகும். அதுவரை பொறுமையுடன் காத்திருப்போம் என்று காத்திருக்கிறார்கள்.

  இறைவனை அவர்கள் முழுமையாக நம்பி இறைவன் தங்களுக்குச் சரியான முறையைக் காட்டியருளி, தன் பாதையைச் சீர்ப்படுத்துவார் என்று எண்ணுகிறார்கள். இந்த நம்பிக்கை அவர்களது மனதில் உரமிட்டு வெற்றிக்கு வழி கோலுகிறது.

  இப்படி இருவரது எண்ணப்போக்கும் மாறுபட்டே இருப்பதைக் காண்கிறோம்.

  தண்ணீர் வேண்டுமென்று ஆற்றுப்படுகையில் ஒரே இடத்தில் ஆழமாகத் தோண்டாமல் பல இடங்களில் தோண்டுவதால் என்ன பலன். படுத்துக் கிடந்தால் படுக்கையே உனக்குச் சாக்காடு. எழுந்துநட பூமியே உனக்கும் பூக்காடு. இதுதான், ஆரம்பத்தில் கீதையில் சொன்னதன் சாரமாகும்.

  ஆனால் எல்லோருமே முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்கிறார்களா? தோல்வியைக் கண்டு துவண்டுபோகின்றவர்கள் தானே நிறையப் பேர்.

  ‘Failure is a stepping stone to success’ என்பதைப் புரிந்து கொண்டால் மேன்மை அடையலாம்.

  ஸ்ரீ சுவாமி விவேகானந்தர் கூறும் அறிவுரை:

  உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் என்பதை உறுதியாக நம்புங்கள் என்கிறார் ஸ்ரீ சுவாமி விவேகானந்தர். உங்கள் உடலையும், உள்ளத்தையும், அறிவையும், ஞானத்தையும் பலவீனப்படுத்துகின்ற எந்த விஷயத்தையும் நஞ்சென ஒதுக்கித் தள்ளுங்கள்.

  போதுமான அளவுக்கு நீங்கள் கண்ணீர்விட்டு அழுதுவிட்டீர்கள். இனியும் அழத்தேவையில்லை. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விழித்தெழுந்து, செயலாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

  எழுமின், விழிமின், செயல் முடியும்வரை உழை மின் என்று உரத்த குரலில் நமக்கு அவர் உணர்த்துகிறார்.

  தைரியத்தையும், நம்பிக்கையையும் ஒரு போதும் கைவிடாதீர்கள். பலவீனமான மூளையால் நீங்கள் எதையும் சாதிக்க முடியாது. பலமற்ற மூளையை மாற்றி அதனைப் பலமுள்ள மூளையாக ஆக்க வேண்டியது உங்கள் முதற்கடமை. பலம் வந்தால் வெற்றி உங்களைத் தானே தேடி வரும்.

  தைரியமாக இருங்கள். எல்லாவற்றிற்கும் மேலானது இந்தத் தைரியமே. இவ்வுலகில் நீங்கள் வாழப்போகும் நாள் எத்தனை என்பது உங்களுக்குத் தெரியாது. வாழும் நாளில் ஏன் கோழைகளைப் போல துவண்டு போகிறீர்கள். எழுமின், விழிமின், செயல் கைகூடும் வரை உழை மின் என்று விவேகானந்தர் ஆணித்தரமாக நமக்கு உணர்த்துகிறார். அதற்கு அவரே உதாரணமாகத் திகழ்ந்தார்.

  நரேந்திரன் (சுவாமி விவேகானந்தர்) பள்ளியில் படிக்கும்போது, ஒருமுறை காரணமின்றி பள்ளி ஆசிரியரால் தண்டிக்கப்பட்டார். அவர் தன் அன்னையிடம் இதனை வேதனையுடன் கூறியபோது, அன்னை புவனேஸ்வரி தேவி, அவருக்கு இவ்வாறு புத்திமதி கூறுகிறார்.

  மகனே! நீ செய்தது சரியே என்று எண்ணும்போது, அதற்காகத் தண்டிக்கப்பட்டால் தான் என்ன? உனக்குவரும் எதிர்விளைவுகள் மகிழ்ச்சியற்றதாக அநீதியாக இருந்தாலும், மனம் தளராமல் உன் மனதில் சரியென்று தோன்றுவதையே எப்போதும் செய் என்றார்.

  அன்னையாரின் இச்சொல்லைக் கேட்ட விவேகானந்தர் மனம் ஆறுதலடைந்தார். தன் வாழ்வின் இறுதிக்காலம் வரையில் சுவாமிஜி மன உறுதியுடன் தளராமல், வாழ்வோ, தாழ்வோ கொண்ட கொள்கையில் உறுதியாக இரு என்று அன்னை சொன்னதைத் திடசித்தத்துடன் கடைபிடித்தார்.

  சுவாமிகளது அன்னை நேர்மை, தூய்மை, கண்ணியம் மற்றும் மனிதநேயம் போன்ற வாழ்வியல் நெறிகளைப் போதித்தார். அத்தூய நெறிகளைப் போதித்து சுவாமிகளுக்கு வாழ்விற்கு வேண்டிய மாறாத உயரிய வாழ்க்கையை கற்றுத் தந்தார்.

  இளம்வயதில் தாய் விதைத்த இந்த அறநெறிகள் தான் விவேகானந்தரை உலகப் புகழ் ஒளியாக்கியது.

  விதியைப் பொசுக்கி சாம்பலாக்கு
  விதி, விதி என்று சிலர் மதியிழந்து மருகிச் சாகிறார்கள். மதியினால் விதியை வெல்லலாம் என்பதை ஏனோ அவர்கள் அறிவதில்லை.

  விதியைப் பொசுக்கி சாம்பலாக்கு என்று கடுமையாகக் கூறுகிறார் ஸ்ரீ விவேகானந்தர். அவர் சொல்லும் கருத்து நமக்குப் புத்துயிர் ஊட்டக் கூடியது. உற்சாகத்தைத் தரக்கூடியது. ஊக்கமுடன் செயல்படத் தூண்டக்கூடியது.

  அவர் சொல்வதைக் கேளுங்கள்.
  நதியாக நட சமுத்திரத்திலே சங்கமிக்கலாம்.
  சத்தியத்தை நம்பு, சரித்திரத்தில் எழுத்தாகலாம்
  இமயம் நீ, தாழ்வு உனக்கில்லை
  கதிர் நீ, குளிர் உனக்கில்லை
  வானம் நீ, சுருக்கம் உனக்கில்லை
  மகாநதி நீ, சோர்வு உனக்கில்லை
  சமுத்திரம் நீ, ஓய்வு உனக்கில்லை
  கண்டம் நீ, உலகம் நீ, சந்திரன் நீ
  அண்ட சராசரங்கள் யாவும் நீ
  விதியால் உன்னை என்ன செய்ய முடியும்
  விதியைப் பொசுக்கிச் சாம்பலாக்கு
  வீறு கொண்டெழு, விதி வலியைவிட
  மதி வலியால் பெருஞ்சாதனை நீ புரிவாய்
  உற்சாகத்தை ஊட்டும் அதி அற்புதமான வாசகங்கள் விவேகானந்தரின் வார்த்தைகள்.
  சாதனையாளர்களின் வரலாற்றை நாம் புரட்டிப் பார்க்கும்போது, அவர்கள் எத்தனை, எத்தனை சிரமங்களை, இடையூறுகளை சந்திக்க வேண்டியிருந்தது. அதனை எப்படி அவர்கள் சமாளித்து, மீண்டு வந்தனர். சாதனைகளை படைத்தனர் என்பது நமக்குப் புரியும்.
  முயற்சி தம் மெய் வருத்தக்கூலி தரும் என்பதை முழுமையாக நம்புங்கள். உங்கள் வாழ்க்கை முறையை நன்கு சீரமைத்துக் கொண்டு, மேன்மையுற்று வாழ்வீர்களாக!

  வல்லமை தாரோயோ

  சிந்தனை செய் நண்பனே

  நண்பர்களே ‘நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும்’. இது ஆன்றோரின் வாக்கு. இந்த வாக்கு எந்த அளவிற்கு முக்கியம் என்பதைப் பார்ப்போம்.

  சிவசங்கரன் மிகவும் நல்லவர். யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாதவர். நன்கு படித்தவர். நல்ல உத்தியோகத்தில் இருந்தவர். உலக நடப்பு அறிந்தவர். அனைத்து விஷயங்களிலும் கைதேர்ந்தவர். இத்தனை இருந்தும் தனது 75 வயதிலும் வேலைக்குச் சென்றால்தான் பிழைக்க முடியும் என்ற நிலை. ஏன் அவருக்கு இந்த நிலை?
  சிறிது காலம் முன்னோக்கிச் செல்வோம். தொழில்நுட்ப கல்வி பயின்ற சிவசங்கரன், ஒரு சர்வதேச கம்பெனியில் மானேஜராக பணிபுரிந்து கொண்டிருந்தார். நல்ல சம்பளம், வசதிகள் அனைத்தும் இருந்தது. அவருடைய வீட்டுச் செலவு, குழந்தைகளின் பள்ளிச் செலவு போக மிச்சம் இருந்த பணத்தை சிறுக, சிறுக சேமித்து, ஒரு வீட்டை கட்டினார் சிவசங்கரன். சிறிது காலத்திற்குப் பிறகு, அவருடைய உற்ற நண்பர் ஒருவர் வீட்டிற்கு வந்தார். அவர் சிவசங்கரனின் பால்ய காலம் முதல் நண்பராக இருப்பவர். அவருக்கு சிவசங்கரனைப் பற்றி நன்றாகத் தெரியும்.
  வீட்டிற்கு வந்தவர் சிவசங்கரனிடம் தான் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும், கடன் தொல்லை அதிகமாக உள்ளது என்றும், இந்த நேரத்தில் அவர் தந்தைக்கு உடம்பு முடியாமல் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும் கூறினார். “உன்னுடைய வீட்டுப் பத்திரத்தைக் கொடு, ஒரு மாதத்தில் மீட்டுத்தந்து விடுகிறேன்” என்று கூறுகிறார். இதனை நம்பிய சிவசங்கரன் மறுபேச்சு இல்லாமல் வீட்டுப் பத்திரத்தைக் கொடுத்து, வெற்றுத்தாளில் கையெழுத்து இட்டுக் கொடுத்து விடுகிறார். தன் நண்பரிடம் இருக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையின் காரணத்தால் இப்படி செய்கின்றார்.

  ஒரு மாதம் ஆகிறது, இரண்டு மாதம் ஆகிறது. இப்படியே ஐந்தாறு மாதங்கள் ஓடி விடுகிறது. சிவசங்கரன் மிகவும் கவலை அடைகிறார். நண்பனின் வீட்டிற்குச் செல்கிறார். வீடு பூட்டி இருக்கிறது. பக்கத்து வீட்டில் கூறுகிறார்கள். அவர்கள் சிங்கப்பூர் சென்றுவிட்டார்கள் என்று பிறகு விசாரித்தால் தெரிகிறது. அவரின் நண்பர், சிவசங்கரனின் வீட்டை விற்றுவிட்டு, அவருடைய கடனை எல்லாம் அடைத்துவிட்டு, சிங்கப்பூர் சென்று விடுகிறார்.
  சிறிது காலத்திற்குப் பிறகு, இதே போல் அவருக்கு கீழே பணிபுரியும் ஒருவரிடம் தனது நகைகளைக் கொடுத்து, பாங்கில் வைக்குமாறு கூறுகிறார். சிவசங்கரனுக்கு அவரை 20 வருடங்களாகத் தெரியும். ஒரு விதத்தில் அவர் சிவசங்கரனின் தூரத்து உறவு. நல்ல மனிதர் என்று நம்பி கொடுத்து விடுகிறார். அவரோ, அந்த நகைகளை எல்லாம் விற்றுவிட்டு காசை வாங்கிக் கொண்டு ஊரை விட்டே சென்று விடுகிறார்.
  இதே போன்ற மற்றொரு சம்பவத்தில் சம்பளம் வாங்கிய அடுத்தநாள், சிவசங்ரனின் தம்பி, அவரிடம் வந்து, குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று கூறி ரூ.2000 கேட்கிறான். சிவசங்கரனின் தம்பி ஒரு ஊதாரி, ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல், பொய், பித்தலாட்டம் செய்து ஊரை ஏமாற்றுபவன். இவை அனைத்தும் தெரிந்தும், குழந்தையின் உடம்புக்கு முடியவில்லை என்று கூறியதால் பணம் கொடுத்து விடுகிறார். பிறகு ஒருநாள் அது பொய் என்று தெரிகிறது. அது மட்டுமல்லாமல், அடுத்த நாளே அவருடைய மகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட ரூ.2000 தேவைப்படுகிறது. தன்னிடம் இல்லாததால் சிவசங்கரன் கடன் வாங்கி ஃபீஸ் கட்டிவிட்டு, மாதத் தவணையில் கடனை அடைக்கிறார்.
  இப்படி பல சம்பவங்கள், அவருடைய வாழ்க்கையில் ஏற்படுகிறது. அதனால், அவரால் ஒரு உயர்ந்த நிலையை அடையவே முடியவில்லை. தான் சம்பாதித்ததையும் இழக்க நேரிடுகிறது. தனது வயதான காலத்திலும் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த 75 வயதிலும் யாருக்கும் தொல்லை கொடுக்காமல் வேலைக்குச் சென்று சம்பாதித்து தனது மனைவியைக் காப்பாற்றி, பிள்ளைகளுக்கும் செய்ய வேண்டியதைச் செய்கிறார் சிவசங்கரன்.
  சிவசங்கரனை எடுத்துக் கொண்டால், மிகவும் நல்லவர். முதலில் கூறிய சம்பவத்தில் அவருடைய உதவிபுரியும் குணம் தெரிகிறது. அடுத்த சம்பவத்தில் அவர் தனக்கு கீழே பணிபுரியும் நபரை மதிப்பவர், நம்பக் கூடியவர் என்பது தெரிகிறது. மூனறாவது சம்பவத்தை எடுத்துக் கொண்டால், நண்பர்கள் மட்டும் அல்லாது தனது குடும்பத்தில் உள்ளவர்கள் கஷ்டத்தையும் புரிந்து உதவிசெய்பவர் என்பது தெரிகிறது. இத்தனை நல்ல குணங்கள் இருந்தும், சிவசங்கரன் கடைசி காலத்தில் கஷ்டப்படுகிறார், ஏன்?
  சிவசங்கரன், நல்லவராக மட்டும் அல்லாமல் வல்லவராக இருக்க என்ன செய்திருக்க வேண்டும் என்று யோசித்துப் பாருங்கள் நண்பர்களே.
  நண்பன் பத்திரம் கேட்டவுடன், ஏன்? எதற்கு? எப்போது திருப்பிக் கொடுப்பாய்? வேறு வழி உள்ளதா? நண்பன் திருப்பிக் கொடுக்காவிட்டால் என்னவாகும்? போன்ற கேள்விகளுக்கு பதில் தேட வேண்டும்.
  அதேபோல், நகையை பாங்கில் சேர்த்தவுடன் சிவசங்கரன் பாங்க் மானேஜரிடம், தொலைபேசியில் பேசி இருக்கலாம். நகை வந்து சேர்ந்து விட்டதா என்று விசாரித்து இருக்கலாம்.
  தன்னுடைய தம்பிக்கு உதவுவதற்கு முன் அவர் கூறுவது உண்மையா, பொய்யா என்று ஆராய்ந்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், தன்னுடைய குடும்பம் இதனால் பாதிக்கப்படுமா என்று யோசித்து முடிவு செய்திருக்க வேண்டும்.
  நண்பர்களே நல்லவனாக இருங்கள். ஆனால் வல்லவனாக இருக்க மறந்து விடாதீர்கள்.

  உள்ளத்தோடு உள்ளம்

  இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நமது இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் தீவிரத்தை எப்படி அடக்குவது என்பது குறித்து கருத்துக் கேட்கப்பட்டிருக்கிறது.

  அப்போது சர்ச்சில், இந்த காந்தி துப்பாக்கி ஏந்தி போரிட்டால் நான் பீரங்கியால் நசுக்கி இருப்பேன். பீரங்கி கொண்டு போராடினால் விமானம் கொண்டு அழித்திருப்பேன். ஆனால் அவரோ

  Continue Reading »

  சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  ஈரோட்டில்…

  தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் Jc N. கருப்பண்ணசாமி
  இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

  நாள் : 24.10.2010,
  ஞாயிற்றுக்கிழமை
  நேரம் : மாலை 6 மணி
  இடம் : மாயாபஜார் ஹால்

  Continue Reading »