– 2018 – October | தன்னம்பிக்கை

Home » 2018 » October (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    முதுமையா? முதிர்ச்சியா?

    ஒரு இலை பழுத்து உதிர்வது முதுமையாகும் (Senescence) அதுவே, ஒரு காய் பழமாகிக் கனிந்து இனிப்பது முதிர்ச்சியாகும் (Maturity). அதுபோலவே, ஒரு மனிதன் வளர்ந்த பின் தேய்ந்து, தளர்ந்து, உதிர்வது முதுமையாகும். ஆனால், அதுவே வளர்ந்து, பண்பட்டு, அனுபவத்தில் பழுத்து இன்முகத்தில் மலர்ந்து ஞானவான் ஆவதுவே முதிர்ச்சியாகும். என் பாட்டியம்மாள் திருமதி சொர்ணாம்பாள் நடேசன் அவர்களின் வாழ்க்கையை நீங்களும் தெரிந்துகொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆக, என் பாட்டி வாழ்ந்த கதை இதோ!

    என் பாட்டியின் ஆரம்ப திருமண வாழ்க்கையானது கொடுமையான வறுமையை ஒட்டியே அமைந்திருந்தது. ஒருமுறை அவர் சொல்லக் கேள்விப்பட்டது என்னவென்றால், நிறைய முறை காய்கறிகள் வாங்குவதற்கு பணமில்லாமல், வீட்டிற்கு வெளியே வளர்ந்திருக்கும் குப்பைக் கீரையை கிள்ளி வந்து துவட்டி வெந்த சாதத்தோடு கலந்து கிண்டிதான் சாப்பாடு போடுவாராம். அந்த வறுமைச் சூழலிலும் அவர்களுக்கு ஒன்பது பிள்ளைகள். அவர்கள் அனைவரும் வீட்டு சுகப்பிரசவத்திலேயே பிறந்தார்களாம். என் பாட்டியார் சர்வசாதாரணமாக இப்படிச் சொல்வார் “பிரசவத்தின் போது தலை தெரியும் குழந்தையை வெளியே இழுத்து கடாசிவிட்டு வேலைப் பொழப்பை கவனிக்கப் போய்விடுவாராம். அப்போதுதான் அடுத்த வேளைக்குச் சோறு கிடைக்குமாம். அப்புறம் பிள்ளைகள் வளர்ந்து பல தொழில்களில் சிறக்க ஆரம்பித்த போது அவர்களின் பொருளாதாரமும் முன்னேற்றம் கண்டது. ஆக, வறுமையிலும் அதிகமாகப் பிள்ளை பெற்றதன் பலனை பொருளாதார முன்னேற்றத்தில் கண்கூடாக கண்டனர்.

    அப்புறம் என் பாட்டிக்கு மருமகள்கள் வந்த பின்னர் ஒவ்வொரு மருமகளோடும் சதா சண்டைகள்தான் நடக்கும். இதை நாங்கள் வளர்ந்த பின்னர் பார்க்கும்போது என் பாட்டி மீதுதான் எனக்கு கோபம் வரும். காரணம் நான் அம்மா பக்கம் இருந்தேன். ஆனால், நான் பின்னாளில் பக்குவப்பட்டு நோக்கும்போதுதான் புரிந்தது என் பாட்டியிடம் சண்டைக்கு நிற்பது பக்குவப்படாத என் அம்மாதான் என்று. அப்புறம் என் பாட்டியை நான் புரிந்துகொள்ள ஆரம்பித்தபோதுதான் எனக்கு அவரின் ஆழ்ந்த அனுபவப் பக்குவமும், வாழ்க்கை ஞானமும் தெரிய ஆரம்பித்தது. ஆக, என் வாழ்க்கையின் முதல் ஞான குரு என் பாட்டிதான். அன்று அங்கு தொடங்கிய என் ஞானப் பாதைதான் இன்று பல ஞான குருமார்களின் ஞானத்தாலும் அருளாசியாலும் ஒரு ஆனந்தமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடிந்தது.

    அப்புறம் விஷயத்திற்கு வருவோம். என் பாட்டியார் ஒரு முறை பாத்ரூமில் வழுக்கி விழுந்து அடிபட்டு கோமா நிலைக்குப் போய்விட்டார். அவரின் பிள்ளைகளும் மகள்களும் அடுத்து அவரின் காரியங்களுக்கு என்ன செய்யலாம் என்று விவாதிக்க ஆரம்பித்தார்கள். அப்புறம் நானும் என் இரட்டையர் தம்பியும் ஊரிலிருந்து வந்து பார்த்ததும், எங்கள் ஹோமியோபதி மருத்துவரின் துணையோடு அவரை மீட்டெடுத்தோம். அப்புறம் எங்கள் பாட்டியின் முழு ஆசிர்வாதமும் எங்கள் இருவர்க்கு மட்டும்தான் கிடைத்தது. அப்புறம் அவர் இன்னும் இரண்டரை ஆண்டுகள் சுகமாக வாழ்ந்தார்.[hide]

    அப்புறம், என் பாட்டி ஒரு ஞானிதான் என்பதை அவரின் மரண தினத்தில் தெரிந்து கொண்டேன். அன்று காலை ஒரு ஒன்பது மணிக்கு என் பாட்டியார் குளித்து முடித்து, தன் துணிகளைத் தானே துவைத்து அலசி, மாடியேறி காயவைத்துவிட்டு, நாலு இட்லிகளைச் சாப்பிட்டுவிட்டு, தூணில் சாய்ந்து கொண்டு, சொன்ன வார்த்தைகள் “ஏண்டியம்மா! சீக்கிரம் மதியச் சமையலை முடித்து, சாப்பாட்டையும் முடிங்கடியம்மா! நான் மதியத்திற்குள் இறந்துவிடுவேன். அப்புறம் இழவு வீட்டில் சாப்பிட முடியாது” என்று எந்த ஒரு பதட்டமும் இன்றி கூறினார். வீட்டிலிருந்த எல்லோரும் “கிழவிக்கு கிறுக்கு பிடித்துவிட்டது. நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கடி” என்று கூறிக்கொண்டனர். ஆனால், அன்று காலை பதினோரு மணி அளவில் என் பாட்டியார் இறைவனடி சேர்ந்தார். நமக்கு வருமா இந்தப் பக்குவம்?

    நாம் வாழ்வது ஒரு முறைதான்;

    அப்படி வாழும் வாழ்க்கையை.

    நமக்கு அடுத்து வரும் தலைமுறைகள்

    அதை மறக்காதிருக்கட்டும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    அவர் ஒரு ஜப்பானிய சாமானியர். புதுமையாக ஏதாவது படைக்க வேண்டும் என்பது அவரது உத்வேகம். ஆனால் உத்வேகத்திற்கு ஏற்ற உந்து சக்தியாக குடும்பச் சூழலோ, பொருளாதாரச் சூழலோ அமையவில்லை. இருப்பினும்  அவர் முயற்சியை தன் மூச்சாகக் கொண்டிருந்தார்.

    அதனால் கார்களில் பொருத்தப்படும் பிஸ்டன்களைப் புதிய முறையில் பல போராட்டத்திற்குப் பிறகு வடிவமைத்தார். அதனை விற்பனை செய்ய டொயோட்டா கார் நிறுவனத்தை அணுகிய போது பலரின் கேலிகளே அவருக்கு கிடைத்தது. கேலிகளை வளர்ச்சிக்கான வேலிகளாக்கிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

    புதியதாகத் தொழிற்சாலை ஒன்றைக் கட்டத் தொடங்கினார் அது வெற்றி பெறும் தருணத்தில் ஜப்பானில் நிலநடுக்கும் ஏற்பட்டது. அனைத்தும் தரைமட்டம் ஆனது. இதனால் அவரை மனச்சுமை அழுத்தியது. பணச்சுமை இறுக்கியது. ஆனால் முயற்சியை மட்டும் அவர் விட்டபாடில்லை.

    மீண்டும் தொழிற்சாலை கட்டும் பணியைத் தொடர்ந்தார்.  விழாக்கோலம் பூண்டு திறப்பு விழாக் காணும் நேரத்தில் இடி விழுந்தது போல் இரண்டாம் உலகப் போர் மூண்டது.  போரில் தொழிற்சாலை மீண்டும் தரைமட்டமானது.

    தோல்விக்கு மேல் தோல்வி, ஆனால் எந்தத் தோல்விகளும் அவரை முடக்கவில்லை. மனச்சுமைகள் கூடக் கூட மனதைரியம் பெற்றார். இதன் விளைவு தான் தன்னைக் கேலி செய்த டொயோட்டா கம்பெனியை விட இன்று அதிக கார்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்துள்ளார்.  அந்த ஜப்பானிய சாமானியர் தான் ஹோண்டா. ஹோண்டா தன் தோல்விகளுக்குச் சன்மானமாகக் கொடுத்தது தனது பொருள், பணம், அறிவு, உழைப்பு முதலியவை மட்டுமே. ஆனால் பெற்றதே பெரும் வெற்றி.

    அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    சாதித்த ஆசிரியர்

    ப. சரவணன்,

    தலைமையாசிரியர்,

    அரசு உயர்நிலைப்பள்ளி,

    பாளத்தோட்டம்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாளேத்தோட்டம் கிராமத்தில் உள்ள இப்பள்ளி சீரும் சிறப்போடும் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 01-11-2011 முதல் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வரும் திரு. ப. சரவணன் பணியேற்ற நாள் முதல் பள்ளியில் மாணவர்களுக்கு கீழ்கண்ட தேவையான அடிப்படை வசதிகளை கொடை உள்ளம் கொண்ட நல்ல மனிதர்களை சந்தித்து பள்ளிக்குத் தேவையான பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி உள்ளார்.

    இதை ஆய்வு செய்த மாவட்டக்கல்வி அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் 2015-16 ஆம் கல்வி ஆண்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் சிறந்த தலைமையாசிரியருக்கான பாராட்டுச்சான்று வழங்கி பாராட்டினார்.

    மேலும் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றமைக்காக அன்றைய மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் IVDP தொண்டு நிறுவனத்தின் மூலம் சிறந்த தலைமையாசிரியராகத் தேர்வு செய்யப்பட்டு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

    தொடர்ந்து 2017-18 ஆம் கல்வி ஆண்டில் சிறந்த ஆசிரியர்க்கான தமிழக அரசின் டாக்டர் இராதகிருஷ்ணன் விருது கடந்த செப்டம்பர் 5 ஆம் நாள் சென்னை கலைவானர் அரங்கில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் தினவிழாவில் மான்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களால் பாரட்டுச்சான்றிதழ் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கி பாராட்டுப்பெற்றார்.

    இவர் பணி காலத்தில் பள்ளி மேம்படுத்திய அடிப்படை வசதிகள்:

    1. சென்னை ஹீண்டாய் கார் நிறுவனத்தின் மூலம் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் 150 செட் பென்ச் மற்றும் டெஸ்க் நன்கொடையாக பெறப்பட்டது.
    2. சாம்பல்பட்டி பவர் கம்பெனி மூலம் ரூ. 2.75 லட்சம் மதிப்பீட்டில் நீர் சுத்தகரிப்பு இயந்திரம் நன்கொடையாகப் பெறப்பட்டது.
    3. போச்சம்பள்ளி MGM மெட்ரிக் பள்ளியின் சார்பில் ரூ. 3.5 லட்சம் மதிப்பீட்டில் கலை அரங்கம் கட்டித்தரப்பட்டது.
    4. இரண்டு வகுப்பறைகளுக்கு தரைத்தளத்திற்கு VPN ஒப்பந்ததாரர் மூலம் நன்கொடையாக ரூ. 50 ஆயிரம் மதிப்பில் டைல்ஸ் பதிக்கப்பட்டது.
    5. பள்ளி வளாகத்திற்குள் சுமார் 250 மரங்கள் பசுமையாக உள்ளது.
    6. 2018-19 ஆம் கல்வி ஆண்டில் போச்சம்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள SHOE நிறுவனத்திடமிருந்து ரூ.6.4 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான நவீன கழிப்பறை கட்டுமான பணி தற்போது நடைப்பெற்று வருகிறது.

    இது போன்று பல்வேறு நிலைகளிலும் மாணவர்களுக்கு படிப்பதற்கு ஏற்ற நல்ல சூழலை உருவாக்கியதின் மூலம் மாணவர்கள் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் பள்ளிக்கு வருகைப்புரிந்து கல்வி கற்கின்றனர்.

    இவர் பணிபுரிகின்ற ஆசிரியர்களோடும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தோடும் ஒருங்கிணைந்து ஏற்றத் தாழ்வு இல்லாமல் நல்ல பண்பாளராய் நட்பு பாராட்டி வருகிறார் என்பதை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.