– 2015 – December | தன்னம்பிக்கை

Home » 2015 » December

 
 • Categories


 • Archives


  Follow us on

  முயன்றேன் வென்றேன்

  Dr.S அருண் M.D.S

  அருண் டெண்டல் கேர்

  கோவை

  திருப்பூருக்கு அருகில் உடுமலைப்பேட்டையில் பிறந்தேன். அப்பா திரு.சோமசுந்தரம் எங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் பார்க்கிறார். அம்மா திருமதி. லலிதா இல்லத்தரசி.

  எனது பள்ளி படிப்பு முழுவதும் உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுப் புறத்திலேயே அமைந்தது.  சின்ன வயதிலிருந்தே என்னை ஒரு மருத்துராக்கிப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய பெற்றோரின் கனவாகவே இருந்தது. இதனால் படிப்பின் மீது ஆர்வமும், ஈடுபாடும் ஏற்பட்டது. பெற்றோர்களுக்கு ஒவ்வொரு பிள்ளைகளும் செய்யும் கடமைகள் என்னவென்றால் அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான்.  அவ்வாறு ஒரே லட்சியத்தோடு படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். அதுபோலதான் எனது மதிப்பெண்ணும் அமைந்தது.

  எழுதிய அனைத்து தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றேன். அதன்மூலம் மருத்துவத்துறையைத் தேர்தெடுத்தேன். எம்..ஜி.ஆர் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதுகலைப்படிப்பை முடித்தேன். அதன்பிறகு ஒரு கிளினிக் ஆரம்பித்து இப்பிரச்சனையால் வருபவர்களை முறையாக சிகிச்சையை செய்து அவர்களை குணப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தேன்.

  பல்லும் அதன் அவசியமும்:

  • மனிதன் உயிர் வாழ உணவு உட்கொள்ளுதல் மிகவும் அவசியம். உட்கொள்ளுவதற்கு பல்லும் வாயும் அதிகளவில் துணைப் புரிகிறது. இதை முறையாக கவனிக்கவில்லை என்றால் பல்லில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.
  • வலி வந்தவர்களுக்கு தான் தெரியும் அந்த வலி சார்ந்த வேதனை, இதனால் சுகாதாரத்தில் மிகவும் அக்கறை அவசியம்.
  • அதிலும் குறிப்பாக வாய் மற்றும் பல்லிற்கு கூடுதல் அக்கறை தேவைப்படுகிறது.

  கிளினிக் சிறப்பம்சங்கள் :

  • இங்கு வரும் ஒவ்வொரு நோயாளிகளும் முழு திருப்திவுடன் செல்ல வேண்டும் அதுதான் இந்தக் கிளினிக்கின் முதன்மையான நோக்கம்.
  • இங்கு பயன்படுத்தப்படும் அனைத்து சிகிச்சை இயந்திரங்களும் விலையுயர்ந்தாகவும், நோயாளிகளுக்கு எவ்வித பின்விளைவும் ஏற்படாதவாறுதான் சிகிச்சை செய்யப்படுகிறது.
  •  வாய் சார்ந்த பிரச்சனைகள் என்று வந்துவிட்டால் இங்கு இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது. வேறு இடத்திற்கு கொண்டு சொல்லுங்கள் என்று ஒருவரையும் நாங்கள் அனுபவதில்லை. அந்தளவிற்கு எல்லா சிகிச்சைகளும் இங்கேயே செய்யப்படுகிறது.
  • அது மட்டுமல்லாமல் என்னுடைய தனிச்சிறப்பான பணி பல்லே இல்லாத இடத்தில் புதிதாக பல்லை கட்டுவதே ஆகும்.
  • எலும்புகளில் சிறிய அளவு (Serew) திருகு வைத்து பல் கட்டுவது, அதன் பிறகு அருகிலுள்ள பல்லைக் கொண்டு இல்லாத இடத்தில் பல்லைக் கட்டுவது போன்ற சிகிச்சைகள் செய்யப்படுகிறது.

  பல்லினால் வரும் இதரப் பிரச்சனைகள் :

       மனித உடலில் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு உறுப்புடன் நெருக்கிய தொடர்புடையதாகவே இருக்கிறது. அந்த வகையில் பல்லில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதன் விளைவாக பல பிரச்சனைகளுக்கு அடிகோடிடும்.

  • இதயத்திற்கு அதிகளவு பாதிப்பு ஏற்படுத்துதல்.
  •  கால், கைகள் இடையே உள்ள மூட்டுகளில் தளர்வு ஏற்படுத்துதல்.
  • வாய் புற்றுநோய் பிரச்சனை ஏற்படுதல்.

  பல் பிரச்சனைக்கு பல் எடுத்தல்தான் தீர்வா?

       பல்லை நான்கு முறைகளாகப் பிரிக்கலாம் அதில் ஒருவகை வெண்மை நிற பற்கள் மற்றும் எவ்வித பிரச்சனையும் இல்லாத பற்கள்.

  பல் கூச்சம், பல்தேய்மானம், பல் துலக்கும் பொழுது ஈறுகளில் இரத்தம் வருதல்  போன்ற எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவர்களின் பல் திடமான இருக்கிறது. இவர்கள் எதிர்காலத்தில் பிரச்சனையும் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

  இந்த இதழை மேலும் படிக்க

  என் பள்ளி

  ய. சுந்தரராமன்

  வித்யா கிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி

  காரைக்குடி.

  காரைக்குடிக்கு மிக அருகில் உள்ள பாசுரக்குடி என்னும் ஊரில் பிறந்தேன். பெற்றோர் S.வெங்கடாசலம் உதவி தலைமை ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர். அம்மா V.சகுந்தாள் இல்லத்தரிசி. மனைவி கிரிஜா ஆசிரியராக உள்ளார்.

  ஊரின் நடுவில் ஒரு ஓட்டுக்கட்டிடம் இதுதான் எனது பள்ளி, நா.பதூர் நகர் மன்றப் பள்ளி. இங்கு தான் பள்ளி வாழ்க்கைத் தொடங்கியது. இன்றும் என் நினைவில் இருக்கிறது நான் பள்ளி சென்ற அந்த முதல் நாள்.

  வெற்றிலைப் பாக்குடன் மிட்டாய் வைத்து தலைமையாசிரிடம் கொடுத்த நினைவு இன்னும் பசுமையாகவே இருக்கிறது. ஆசிரியர்களின் அரவணைப்பு, மதிய உணவு மணி சத்தம், பள்ளி முடியும் தருவாயில் அடிக்கும் ஓசை கேட்டு கத்திக் கொண்டு வீடு திரும்புவது போன்றவை எல்லாம் மீண்டும் கிடைக்காத பொக்கிஷம்.

  பின்பு அந்தப் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு செல்லும் சூழல் ஏற்பட்டது. 4ஆம் வகுப்பு 5ஆம் வகுப்பு சிவன் கோவில் நகர் மன்றப் பள்ளியும், 6ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு வரை S.M.S.V மேல்நிலைப்பள்ளி காரைக்குடியில் படித்தேன். இப்பள்ளி படிப்பிற்கும், பண்பு நலனுக்கும் பெயரெடுத்தப் பள்ளி என்றே சொல்லலாம்.

  ஆசிரியர்கள் மிகுந்த அனுசரணையோடு நடந்து கொள்வார்கள். அவர்களின்  வாழ்க்கையில் கற்ற அனுபவத்தை எங்களிடம் சொல்லி மிகுந்து ஊக்கமளிப்பார்கள்.

  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றதால் காரைக்குடியில் உள்ள தேவக்கோட்டை என்னும் ஊரில் N.S.M.V.P.S மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்தேன். அதன்பிறகு 12ஆம் வகுப்பு அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி காரைக்குடியில் படித்தேன்.

  இப்படி பல பள்ளிகளில் படித்து என்னுடைய பள்ளிக் கல்வி இனிதாக முடித்தேன்

  B.Sc, M.Sc, M.Phil அனைத்தையும் அழகப்பா கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் முடித்தேன்.

  இந்த இதழை மேலும் படிக்க

  ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று

  நம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் நாம் சிறப்பாகச் செயலாற்ற முடியாது. அதேபோல் நாம் பார்க்கும் ஒவ்வொரு நபரிடமும் எல்லாமும் போற்றக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொருவரிடமும் இருக்கும் தன்மைகளில் நமக்குத் தேவையான ஒன்றை நாம் உள்வாங்கி நம் வாழ்க்கை மேம்பட பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவரிடமிருக்கும் சிறப்பு குணத்தன்மையை நாம் உள்வாங்கிக் கொள்ள அவர் சிறப்பானவராகவோ அல்லது மிகப்பெரிய வெற்றியாளராகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல், வெற்றியாளராகவோ, சிறப்பானவராகவோ இருப்பவரின் எல்லாத் தன்மைகளும் நமக்கு அவசியம் பிடித்திருக்க வேண்டும் என்றில்லை. ஆக, ஒருவரின் நல்ல குணங்களை காப்பியடிக்க நமக்கு அவர் பற்றிய விருப்பு வெறுப்பற்ற தன்மை இருந்தால் போதும்.

  அன்பு நண்பர்களே! தரமாகவும் அதிகமாகவும் படித்ததால் உண்டான தலைக்கணமும், அடக்கியும் ஒடுக்கியும் வளர்க்கப்பட்ட விதத்தால் ஏற்பட்ட தன்னம்பிக்கைக் குறைவும், வெளியுலகத் தொடர்பும் விளையாட்டும் மற்ற விதத்தில் கழிந்த இளமைக் காலத்தால் உறவுபாராட்டுதல் இல்லாமலும் இருந்த இந்த அனுராதா கிருஷ்ணன் தான் இன்று உங்களோடு பல புத்தகங்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் தொடர்பு நிலையில் இருக்கும்படி வளர்ந்துள்ளேன். இதற்குக் காரணம் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களிடமிருந்து நான் உள்வாங்கிக்கொண்ட விருப்பு வெறுப்பு விட்டு யாரையும் எதனையும் பார்க்கும் தன்மையே காரணமாகும். இந்த ஞானத்தை உள்வாங்கிக்கொள்ள நான் மகரிஷியை ஆராயவில்லை. அதற்குப் பதிலாக நான் என்னை ஆராய்ந்து பார்த்தேன். அது எனக்குத் தேவையாகப்பட்டது. உடனே எடுத்துக்கொண்டேன்.

  இந்த இதழை மேலும் படிக்க

  அவன் தான் மனிதன்

  வாழ்வில் வெற்றிக் காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே!

  ஒரு சராசரி மனிதன் சந்திக்கும் சிலப்பல சம்பவங்கள் அவன் வாழ்வுக்கு மட்டுமல்ல – மற்றவர்களுக்கும் ஒரு படிப்பினையாக அமைவதுண்டு.

  வாழ்கையில் கிடைக்கின்ற ஒவ்வொரு நிகழ்வையும், சம்பவத்தையும் எப்படி கையாள்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டால், அதை சரியாக கையாளாமல் – தவறான முடிவுகள் எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டால், அல்லது தெரியாமல் எடுத்த முடிவுகள் தவறாக இருந்துவிட்டால் – அந்த மனிதனின் வாழ்க்கை நரகத்தை விட கொடுமையனதாகத்தான் இருக்க முடியும்.

  எத்தனை பொறுப்புகள் ! – எத்தனை கடமைகள்.!

  பிள்ளைகளை ஆசையாக பெற்றால் மட்டும் போதுமா?  முறையாக வளர்க்க வேண்டாமா ? –  என்ற வினா எழுப்பும் “பிள்ளை வளர்ப்பு’

  எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்து, குடும்ப உறவுகளில் மனஸ்தாபம் ஏற்பட்டு – சோகத்தை தரும் “குடும்ப நலன்’

  வரவுக்கும், செலவுக்கும் இடையில் இருக்கின்ற இடைவெளியை “கடன்’  எனும் கரன்சி பாலத்தால் இணைத்து – இரண்டு முனைகளுக்கும் செல்ல முடியாமல் நடுவில் தடுமாறி திண்டாட வைக்கும் “பொருளாதார சுமை’!

  அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறத்தெரியாமல் – “நித்திய கண்டம் பூரண ஆயுசு’ என்ற பழமொழிக்கு நடமாடும் உதாரணங்களாக மனிதனை ஆக்கும் “வேலைவாய்ப்பு’!

  தேநீர்கடைகளுக்கு அடுத்தபடியாக அதிக கடைகளை வீதியில் கண்டு வியந்த காரணத்தால் – மயக்கம் தெளியாமல், Pass  Mark  பிடித்ததை போலவே TASMAC  கும் பிடித்துப்போய் “மாத வருவாய் – மொத்தம் தருவாய் – மறுபடி வருவாய்’ என்ற மந்திர அசரீரியின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வாழ்க்கையையும் வருமானத்தையும் இழக்க வைக்கும்  “போதைக் கலாசாரம்’!

  போலி கவுரவம் பார்த்து – அடுத்தவரின் படாடோர் வாழ்வை தன் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்து, தன் தகுதிக்கு மீறிய வேண்டாத பொருட்களை வாங்க “Shopping Complex” இல் அனைத்தும் தொலைத்து – பணத்துக்கு கஷ்டப்படும் நிலைகளில் இருந்து மீள முடியாது என்ற ‘Inferiority Complex’ ஐ வாங்க வைக்கும் “வியாபார நிர்பந்தம்’!

  “Pre – School “கூட இப்போது “Free School” ஆக இல்லாத நிலையில், அரிச்சுவடி பாடத்துக்கும் ஐம்பதாயிரம் Donation  கேட்கும், ‘கல்வி முறை’ !

  இதுபோன்ற எண்ணற்ற விஷயங்கள் சராசரி மனிதனின் வாழ்வில் அன்றாடம் வந்து போகும் அவல நிகழ்வுகள், அறிவாளிகளையும் கூட அஞ்ச வைக்கும், அசரவைக்கும் அசாதாரண நிமிடங்கள்.

  நிற்கக்கூட முடியாத கால்களைக் கொண்டு – நீச்சலடிப்பது எப்படி ?

  ‘கெட்டது என்ன’ என்று வாரியார் சுவாமிகள் ஒரு பட்டியல் தருகிறார்.

  இந்த இதழை மேலும் படிக்க

  சாதனையைச் சிந்தி… சோதனையைச் சந்தி…

  “வெற்றியில் துள்ளி விழுவதும்,

  தோல்வியில் துவண்டு விழுவதும்

  வெற்றியை நினைப்பவரின் பலவீனங்கள்

  அனுபவம் இல்லாத அறிவிலித் தனங்கள்! அறியாமை குணங்கள்” எனலாம்.

  இன்றைய காலகட்டத்தில் இளைய சமூகம் சந்திக்க வேண்டிய சவால்கள் ஏராளம். எங்கும் பிரச்சனைகள், எதிலும் தோல்விகள், மனத்துயரங்கள். இதுதான் இன்று இளைஞர்களின் நிலைப்பாடு! பொதுவாக, இளைய சமூகத்தின் இந்த ‘தோல்வி’ க்கு காரணங்களாக, அதிர்ஷ்டத்தையும், குடும்ப சூழ்நிலைகளையும், தன்னைச் சுற்றியுள்ள சமூக அமைப்பையும் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதுதான், வழக்கமாகிவிட்டது. உண்மையில் தோல்வியில் விழுவது பிரச்சனையில்லை. மீண்டு(ம்) எழாமல் விழுந்தே கிடப்பதுதான் பிரச்சனை.

       தோற்றபின், தோல்வியை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதும், எதிர்பாராமல் தோல்வியில் விழுந்தாலும், எழுந்திருக்கும் போதே, தன்னால் தோல்வியை, வெற்றியின் அனுபவமாக, வழிமுறையாக கற்றுக் கொள்ளாததும் தான் தொடர் தோல்விகளாக, பிரச்சனைகளாக மாறி விடுகிறது. இந்த உண்மையை உணராத வரை வெற்றி வாழ்க்கை என்பது வெறும் எண்ணமாகவே நின்று விடும்.

  முதலில், எது உண்மையான வெற்றி?

  வெற்றியும், தோல்வியும் எங்கு ஆரம்பித்து, எங்கு முடிகிறது?

  நாம் பெரும் வெற்றிகள் ஏன் நிரந்தரமாவதில்லை?

  தோல்விகளையே, வெற்றியாக மாற்றும் மார்க்கம் என்ன? என்கின்ற கேள்விகளுக்கு ஓரளவு “அனுபவமாக” பதில் கிடைத்தால்தான் அறிவுப் பூர்வமாக சிந்தித்து, ஆக்கப்பூர்வமாக வெற்றிகளை சந்திக்க முடியும். அதற்கு முதலில், உண்மையான வெற்றி எதுவென கற்றுக் கொள்ளுதல் முக்கியம்.

  இளைய சமூகம், எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திக்க வழிகாட்டும் சிந்தனை விதைகளை விதைப்பது பற்றி சிந்திப்போம்! முதலில், வெற்றி என்பது இரண்டு வகைகளில் இருக்கிறது. ஒன்று சந்தர்ப்ப வெற்றி. மற்றொன்று… தனித்த (சுய) சாதனை வெற்றி, சந்தர்ப்ப வெற்றி என்பது அவ்வப்போது, சமய சந்தர்ப்பங்களில் எதிராளிகளின் உதவியால் பெறுவது.

  “சாதனை வெற்றி என்பது சிந்தனையால் ஞானத்தால், அடிப்படையாக, ஆதாரமாக, கால சூழ்நிலையிலும் மாறாத வகையில் இருப்பது. சந்தர்ப்ப வெற்றி அன்றைய சந்தோஷத்தை மட்டும் கொடுக்கும். சுய சாதனை வெற்றி, நமக்கும், நம்மை சார்ந்தவர்களுக்கும் ஆனந்தத்தை மட்டுமல்ல, தொடர் வெற்றி வாய்ப்புகளை, சாதனைகளை பெற வைக்கும்.

  வெற்றி என்பது, வெற்றி எனும் உணர்வை மட்டும் தரும் மாயை. உதாரணமாக,

  ஒருவர் தோல்வியில்தான், மற்றொருவர் வெற்றி பெறுகிறார் என்றால், சிந்தித்துப் பாருங்கள் அந்த வெற்றியின் காரண கர்த்தா … யார்? ஜெயித்தவரா? தோற்றவரா…?

  நிச்சயமாக தோற்றவர்தானே. தோற்றவர் இல்லையென்றால் வெற்றியாளர் ஏது? ஆக, இதை, “வெற்றி” என்று வார்த்தைகளால் வெளிக்காட்டிக் கொள்ளலாமே தவிர, உண்மையான சுய வெற்றி என்று சொல்ல முடியாது.

  ஒருவரின் தோள் பற்றி எழுபவன், தோள் கொடுத்தவன் விலகி விட்டால், எழுந்தவன் விழுவானே! இங்கே எழுபவனின் வெற்றியும், தோல்வியும், தோள் கொடுத்தவன் தயவுதானே! இதுதான் சந்தர்ப்ப வெற்றி.

  இங்கு சந்தர்ப்பம், சூழ்நிலைகள் வெற்றி பெற உதவவில்லையென்றால், தோல்விகள்தானே வெற்றி பெறும். ஆகவே, சமூகத்தில் எந்த துறையிலும், எந்த வகையிலும் மற்றவரின் தோல்விகளில் பெறும் வெற்றி என்பது, “ஜெயித்தோம்” என்னும் சந்தோஷம் தருகின்ற தற்காலிக உணர்வே அன்றி, உண்மையான வெற்றியல்ல. ஆனால், இதற்கும் முயற்சியும், திறமையும், தன்னம்பிக்கையும் தேவைதான். ஆனால், இவைகளை வைத்து, எதிராளியின் பலவீனத்தை, தன் பலமாக கொண்டு நோகடித்து, தோற்கடித்து பெறுவது வெற்றியாகாது.

  இந்த இதழை மேலும் படிக்க

  ஆஸ்துமா

  ஆஸ்த்துமா நுரையீரல்களை பாதிக்கக்கூடிய ஒரு நோய். குழந்தைகளைப் அதிகம் பாதிக்கக்கூடிய நோய். இதனால் அடிக்கடி இளைப்பு, சுவாசிக்க முடியாத நிலை, மார்புக்கூட்டில் ஓர் இறுக்கம், இருமல் போன்றவை வரும். எப்போதுமே ஆஸ்த்துமா இருந்தாலும் ஒவ்வாமை ஏற்படும் போது இதன் தீவிரம் அதிகரிக்கும். குடும்பத்தில் யாருக்கேனும் ஆஸ்த்துமா இருந்தால் குழந்தைக்கு இந்நோய் வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். எனினும் ஆஸ்த்துமா வருவதற்கு என்ன முக்கியக் காரணம் என்பது இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளப்படவில்லை.

  அதேபோல இதை முற்றிலும் குணப்படுத்துதலும் முடியாது. மருந்துகளால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். கட்டுப்பாட்டில் இருக்கும் போது இளைப்பு, மூச்சுத் திணறல் வராமல் இருக்கும், நன்றாக தூங்க முடியும் என்பதால் பள்ளிக்குச் செல்வதோ விளையாடுவதோ தடைபடுவதில்லை.

  ஆஸ்த்துமாவை கண்டறியும் வழிகள்

  ஆஸ்த்துமாவை கண்டறிவது மிகக் கடினம். அதுவும் 5 வயதுக்குள்ளான குழந்தைகளிடம் கண்டறிவது இன்னும் கடினம். மருத்துவ பரிசோதனைக்குச் செல்லும் போது மருத்துவர் கேட்கும் சில கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலை வைத்தே கண்டறிய முடியும். அதன்பின் நுரையீரல் பரிசோதனை செய்து அதை ஊர்ஜிதம் செய்து கொள்வார்கள்.

  பரிசோதனை செய்யும் மருத்துவர் இரவில் மூச்சுத்திணறல் இருக்கிறதா? வீட்டில் யாருக்கேனும் ஆஸ்த்துமா இருக்கிறதா? மார்பு தசைகளில் இறுக்கமான உணர்வு இருக்கிறதா என்று கேட்பார். ஸ்பைரோமீட்டர் என்ற குழாய் மூலம் அதிகப்படியாக குழந்தையால் எவ்வளவு காற்றை உள்ளிழுக்க முடியும் என்பதையும் பார்க்க முடியும். இந்த காற்று அளவு ஆஸ்த்துமா மருந்து எடுத்துக் கொள்வதற்கு முன், மருந்து எடுத்துக் கொண்டதன் பின் கணக்கிட்டுப் பார்க்கப்படும். அதிக முறை ஒவ்வாமை விளைவுகள் ஏற்படும் போது அது ஆஸ்த்துமாவாக மாற வாய்ப்பு இருக்கிறது. காற்று மூச்சுக்குழாய்கள் மூலம் நுரையீரலுக்குள் செல்கிறது. ஆஸ்த்துமா விளைவு ஏற்படும் போது அந்த குழாய்கள் சுருங்கிவிடுவதால் தேவையான காற்று செல்ல முடியாமல் தடைபடுகிறது. அதிக மியூக்கஸ் எனப்படும் திரவம், சளி சுரந்து இருமலை இன்னும் அதிகமாக்கும். பிறகு இது மூச்சு இளைப்பில் முடியும். சில சமயம் தக்க மருந்து கொடுத்து மூச்சுக் குழாய்களை விரிவடையச் செய்ய முடியாவிட்டால் உயிரிழக்கவும் நேரிடும்.

  ஆஸ்த்துமாவை எப்படி கட்டுப்பாட்டில் வைத்திருப்பது?

  மருத்துவர் தரும் மருந்துகளைத் தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல சுற்றுப்புறத்தில் உள்ள மாசினைத் தவிர்க்க, கூடிய மட்டும் முயற்சி செய்யுங்கள். வீட்டில் புகை பிடிப்பவர்கள் இருப்பின் வெளியே சென்று புகை பிடித்தல் அல்லது வீட்டுச் சன்னல்களைத் திறந்து வைத்தல் போன்றவற்றைச் செய்யவும். ஆஸ்த்துமாவிற்கு சில மாத்திரைகள் அல்லது ஒரு மூச்சு இழுக்கும் குப்பியிலோ மருந்து  இருக்கும். பெரும்பாலும் இவை மூச்சுக் குழாய்களை விரிவாக்கும் மருந்துகளே. அடிக்கடி உபயோகிக்காமல் தேவைக்கேற்ப மருத்துவரின் அறிவுரையைப் பின்பற்றிக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

  ஆஸ்த்துமா வரக்காரணங்கள்

  சுற்றுப்புறச் சூழலில் உள்ள மாசு, சிகரெட் புகை போன்றவை முக்கிய காரணங்களாகும்.

  இந்த இதழை மேலும் படிக்க

  2016 புத்தாண்டை வரவேற்போம்

  இன்னும் சில தினங்களில் பிறக்கப்போகும் 2016 புத்தாண்டை வரவேற்க காத்திருக்கிறோம்.  நம் வாழ்க்கைப் பயணத்தின் பார்வையிலிருந்து 2015, இரயில் பயணத்தின் போது வேகமாய் பின்னுக்குச் சென்று மறையும் இரயில் நிலையத்தைப் போன்று,  மறையவிருக்கிறது.

  வருடம் முடியும்போது ஏக்கத்தோடு பிரிய மனமில்லாமல் விடைகொடுப்பதும், தொடர்ந்து வரும் புத்தாண்டை உற்சாகத்தோடும், மிகுந்த எதிர்பார்ப்போடும் வரவேற்பதும் ஆண்டுதோறும் நடந்து வரும் நிகழ்வுதான்.  இருந்தாலும் நூறு முறைபிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு சென்றிருந்தாலும், நூற்றியோராவது முறைபிறந்த வீட்டை விட்டு வரும்போதும்  ஒரு ஏக்கம், தவிப்பு மகளின் நெஞ்சில் நிழலாடும்.  அதுபோன்றதொரு உணர்வுதான் 2015-ஐ பிரியும் போதும்.

  மகிழ்ச்சி, துக்கம், சாதனை, வேதனை, கோபம், போட்டி, பொறாமை, ஏமாற்றம், ஏக்கம் என எண்ணற்றஉணர்வுகளாலும் நிகழ்வுகளாலும் கட்டப்பட்ட 365 நாட்கள் முடிவுக்கு வருகிறது. திரும்பிப் பார்த்தால், நினைத்துப் பார்க்க நிறைய நினைவலைகள்!

  மேலோட்டமாகப் பார்த்தால், காலண்டர் வெறும் காகிதமாகத் தெரியும்.  அகக்கண் கொண்டு பார்த்தால் காலண்டரின் பக்கங்கள் வாழ்க்கையின் பக்கங்களாகத் தோன்றும்.  பழைய காலண்டரை கழற்றும் போது, ஆண்டு முழுவதும் நம்முடைய இன்ப துன்பங்களில் பங்கு கொண்ட ஒருவர் நம்மை விட்டு பிரிந்து செல்வது போன்றதொரு ஏக்கம்.  புதிய காலண்டரை மாட்டும்போது ‘ஏதோ ஒரு புதிய பலம், நம்பிக்கை நம்மை நாடி வருவது போன்றதொரு உணர்வு.

  ஆண்டுகள் மாறினாலும், மனித மனங்களின் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் மாறுவதில்லை.  எந்த ஒரு ஆண்டும் எதிர்பார்ப்பது போலவே அமைந்து விடுவதில்லை. இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. என்றாலும் வாழ்க்கை இன்பமானதாகவே அமைய வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வாக்கிற்கேற்ப, ‘நடந்தது நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லதாக அமையட்டும்’ என்று நினைத்துக் கொண்டு ‘இந்த ஆண்டு முதல் இதைச் செய்ய வேண்டும், அதைச்செய்ய வேண்டும்’ என புத்தாண்டு மலரும் போது நமக்கு நாமே புதுப்புது சப்தங்களை, உறுதிமொழிகளை எடுத்துக் கொள்கிறோம்.

  ‘இது வெறும் சம்பிரதாயம்தான்’ என்று உள் மனது ஏளனம் செய்தாலும்கூட நம்மை மேம்படுத்திக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. புத்தாண்டு உறுதிமொழிகளை புத்தாண்டின் பரபரப்பு அடங்கிய உடன் மறந்து விடாமல் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்ற உறுதிமொழியையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்,

  வாழ்த்து அட்டைகள்

  புத்தாண்டு, பொங்கல் என்றாலே நினைவுக்கு வருவது வாழ்த்து அட்டைகள்.  தமிழர்களின் விழா என்ற தனித்துவத்தை உலகுக்கு உணர்த்தும் விழா தைப்பொங்கல்.  முன்பெல்லாம் இத்தகைய விழாக்காலங்களில், யார் யாருக்கெல்லாம் வாழ்த்து அட்டைகளை அனுப்ப வேண்டும் என்று முன்கூட்டி யோசித்து பெயர் பட்டியலை தயாரிப்பார்கள்.   வாழ்த்து அட்டைகளை வாங்குவதற்காக தனியாக நேரம் ஒதுக்கி கடைகடையாய் ஏறி இறங்குவார்கள்.

  சுருண்ட முடி நெற்றியில் விழ பெருமிதமாகச் சிரிக்கும் நடிகர் திலகம், கையில் சாட்டையுடன் நிற்கும் மக்கள் திலகம் தொடங்கி ரஜினி, கமல் உள்ளிட்ட திரைப்பட நடிகர்களின் படங்கள் அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகள் கடைகளில் தோரணமாகத் தொங்கும். வாழ்த்து அட்டை விற்பனைக்காகவே புதிதாக வீதியோரத்தில் முளைத்த கடைகளிலும் விதவிதமான வாழ்த்து அட்டைகள் கண்ணைக் கவரும்.  தேடித்தேடி வாழ்த்து அட்டைகள் வாங்கி தங்கள் கைப்பட நாலு வார்த்தை எழுதி, வீட்டில் இருப்பவர்களின் பெயர்களை பட்டியலிட்டு, ஸ்டாம்ப் ஒட்டி தபால்பெட்டியில் போட்டு விட்டுத் திரும்பும்போது மனம் முழுக்க பரவுகிற மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

  இந்த இதழை மேலும் படிக்க

  முடியாததை முடித்துக்காட்டு! வெற்றிக்கு நீயே எடுத்துக்காட்டு!!

  திருமிகு. பழனிச்சாமி

  நிறுவனர், ஸ்ரீ சக்தி இன்வெஸ்ட்மென்ட்

  காங்கேயம்.

  பிறவியிலோ அல்லது இடையிலோ ஏற்பட்ட உடல்குறைபாடு என்பது வெற்றிகரமான எண்ணம், மகிழ்ச்சிகரமான மனநிலை, உறுதியுடன் செயல்படும் பழக்கம் உள்ளோரை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை என்பதற்கு இவர் சிறந்த உதாரணம்.

  நற்செயல்கள், நற்சிந்தனைகள், எழுச்சியூட்டும் நம்பிக்கை நிரம்பப் பெற்றவர்களுக்கு சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை இன்றும் நிரூபித்து வருபவர்.

  “நன்கு சிந்தித்து திறமையை வளர்த்துக் கொண்டு விடாமுயற்சியுடன் வாழ்ந்து, சாதித்து ஊர் போற்ற நற்பெயர் பெறுவதே உண்மையான, நன்மையான வாழ்க்கை” அத்தகைய வாழ்க்கையை சிறப்போடு வாழ்ந்து 06.12.2015-ல் “ஆயிரம் பிறை கண்ட அருள் விழா’ காணும் சிறப்பிற்குரியவர்.

  நம்பிக்கை என்பது புயல் காற்றில் துவண்டு விழும் மெல்லிய மரமல்ல. அது அடிபெயரா இமயத்தைப் போன்றது என்பார் மகாத்மா; அந்த வகையில் வாழ்வதற்கும், வாழ்வில் உயர்வதற்கும், எப்போதும் ஓர் உந்து சக்தியாக இருக்கும் தன்னம்பிக்கையை நிரம்பப் பெற்றிருப்பவர்.

  சிறந்த நம்பிக்கையுள்ளவர்களே அச்சமின்றி சிந்தித்து, சிந்தித்ததை செயல்படுத்தி, வெற்றியை நிலைப்படுத்தக் கூடியவர்கள். அதுவாய் மனத்தை வளப்படுத்தி, உடலை செம்மைப்படுத்தி, வாழ்க்கையை மாற்றி நல்வழிப்படுத்துகின்ற செயல்கள் நிரம்பிய வேதாத்திரி மகரிஷி அவர்களின்  மனவளக்கலை மன்றத்தின், காங்கேய மனவளக்கலை மன்றத்தலைவராக இருந்து நற்பணிகள் பல செய்து வருபவர்.

  “கூட்டுக்குடும்பம்” என்கிற பண்பாட்டுக் கலாச்சாரத்தை இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருபவர்.

  பாரம்பரியமாக நூறு ஆண்டுகளாக தொடர்கின்ற “அன்ன சேவையில்’ தன்னை இணைத்துக் கொண்டு பக்தி மார்க்கத்திலும், ஞானமார்க்கத்திலும் ஈடுபாடு கொண்டிருப்பவர்.

  இப்படி பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட திருமிகு. பழனிச்சாமி அவர்களை நாம் நேர்முகம் கண்டபோது…

  “வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் எப்போது நிறைவேறுகிறது என்றால், துடிப்போடு, திறமையோடு செயல்படும்போதுதான்” என்றார்.

  இனி அவரோடு நாம்…

  உங்களின் பிறப்பு, இளமைக் காலங்கள் குறித்து?

  காங்கேயத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பா.பச்சாபாளையம் என்னும் கிராமத்தில் பிறந்தேன். பெற்றோர் கருப்பண்ணசாமிக்கவுண்டர். கோவிந்தம்மாள். அப்பா அக்காலத்தில் அரசு நியாயவிலைக்கடையில் பொருட்கள் விநியோகத்தில் பொறுப்பாளராக இருந்தார். அக்கிராமத்தில் அப்பொழுது பேருந்து வசதியெல்லாம் இல்லை.

  மடவிளாகத்தில் ஆரம்பக் கல்வியையும், அடுத்து காங்கேயம் உயர்நிலைப்பள்ளியில் நடுநிலைக்கல்வியையும் கற்றேன். அப்போது, பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால் சைக்கிளில்தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் நடந்துதான் செல்ல வேண்டும். அப்பொழுது சைக்கிள் வைத்திருந்த ஒரே குடும்பம் எங்கள் குடும்பம் மட்டும்தான்.

  எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது என்னுடைய வலது காலில் ஒரு சிறிய கட்டி ஒன்று ஏற்பட்டது. அதை அப்பொழுது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

  காலப்போக்கில் கட்டியின் அளவு பெரிதாகத் தொடங்கியது. இதனால் வலியும் வேதனையும் என்னை வெகுவாகப் பாதித்தது. பல மருத்துவமனைகள் சென்றும் குணப்படுத்த முடியவில்லை. வலது காலினை எடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று என் தந்தையிடம் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். கால் போனாலும் பரவாயில்லை, மகன் உயிரோடு இருக்க வேண்டுமென்று நினைத்து, என் தந்தை “உன் கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால் தான் நீ உயிர் பிழைப்பாய்” என்றார். முடியாது என்றுதான் மறுத்தேன். என்றாலும், எடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதால் வலதுகால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஒரு கால் கொண்டு பள்ளிக்கு சென்றால் கேலி செய்வார்கள் என்று எண்ணி பள்ளிக்கு செல்வதை விட்டுவிட்டேன்.

  படிக்கும் வயதில் காலை இழந்து நினைக்கவே மனநிலை ஒரு மாதிரி ஆகும்போது நீங்கள் அந்த வயதில் இதனை எப்படி எதிர் கொண்டீர்கள்?

  எனக்கு அது ‘வலி’ மிகுந்த நேரம். பரிதாப பார்வை என் மீது விழுந்தது. அது எனக்கு கஷ்டமாகப் பட்டது. என் வாழ்க்கை இதோடு முடங்கி போய் விடக்கூடாது என உறுதியான மனநிலைக்கு மெல்ல மெல்ல வந்தேன்.

  குறையை நினைத்தால் தானே வலி, அதை இனி மறந்து விட வேண்டும், என்று எண்ணி எப்பொழுதும் போல் என் வாழ்க்கையை இயல்பாக வாழத் துவங்கினேன்.

  முடங்கிடந்தால் சிலந்திவலையும் ஒரு சிறைச்சாலை; எழுந்து நடந்தால் எரிமலையும் ஒரு ஏணிப்படி என்று ஒரே காலில் மிதிவண்டி ஓட்டிப் பழகினேன். காடு, மேடு, பள்ளம், மலை என எங்கு செல்ல வேண்டுமென்றாலும் மிதிவண்டியிலேயே பயணம் செய்தேன். “எல்லாம் விதி என்று ஒதுங்குபவன் அல்ல நீ, எதுவானாலும் எதிர்கொண்டு சாதிக்கும் வல்லமை படைத்தவன் நீ” என எனக்குள் தன்னம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு நாள்தோறும் உற்சாகமாக உழைக்க ஆரம்பித்தேன். ஒரு கால் இல்லையே என்கிற குறையை மறந்தே போனேன்.

  சிறு தொழில் என்றாலும் அதை முழுமையாக கற்றபின்பே அத்தொழிலைச் செய்ய வேண்டும் என்று நினைத்து அதற்காக இடைவிடாத முயற்சியையும், பயற்சியையும் மேற்கொண்டேன். தொழிலில் இனி ஈடுபடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

  தொழிலை எப்படி தீர்மானித்தீர்கள்?

  மனித வாழ்க்கையில் முதல் மூன்று தேவைகள் மிகவும் முக்கியம். அவை உணவு, உடை, இருப்பிடம் ஆகும். அந்த மூன்றிலும் மனிதனின் மானத்தைக் காப்பது உடை மட்டுமே. இதனால் உடை சார்ந்த தொழிலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதயமானது.

  முதன்முதலில் K.P. சாமி என்ற பெயரில் டெய்லரிங் தொழிலை மேற்கொண்டேன். ரெடிமேட் ஆடைகள் இல்லாத காலகட்டத்தில் துணி எடுத்து தைத்து அணிவது மட்டும் இருந்தது. நான் மேற்கொண்ட டெய்லரிங் பணி பலருக்கும் பிடித்துப் போனது. சில மாதத்தில் அலுவலர்கள், அதிகாரிகள் என்று பலர் என்னுடைய தினசரி வாடிக்கையாளராகி விட்டார்கள். இது என்னுடைய அடுத்த பரிணாமமாக அமைந்தது.

  அதனால் இன்னும் டெய்லரிங் சார்ந்த நுணுக்கங்களைக் கற்று ‘கோட் சூட்’ போன்ற ஆடைகளையும் தைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதனால் சென்னைக்கு சென்று ஒரு மாதம் பயிற்சியைத் தொடங்கி, கற்றுதேர்ந்த தையலக நிபுணராக வந்து என் பணியைத் தொடங்கினேன்.

  தொழிலகம் வளர்ந்தது. இழந்த காலுக்கு செயற்கை காலை பொருத்திக் கொண்டேன். அந்தக் காலும் விசேஷ நாட்களுக்கு மட்டும்தான். மற்ற நாட்களில் ஒரு கால் கொண்டே என் பணிகளை திறம்பட செய்து வருகிறேன். எதிர்பாராத இழப்புக்களை உடல் சந்திக்கும் பொழுது ‘எல்லாம் போச்சு’ என்று புலம்புவதை விட, ஒன்று போனால் என்ன இன்னொன்று இருக்கே என துணிவை வரவழைத்துக் கொண்டால் “முடியும் எல்லாம் முடியும்”.

  இந்த இதழை மேலும் படிக்க

  வாய்ப்புகளை உணருவோம்!

  என் தலையில் கடவுள் இப்படி எழுதிவிட்டார் நடப்பது நடக்கட்டும்.”

  “என்னால் நன்றாக படிக்க முடியவில்லை. எல்லாம் என் தலைவிதி”.

  “என் வாழ்க்கையில் எப்போதும் தோல்வியைத்தான் நான் சந்திக்கிறேன். கவலைப்பட்டே நான் கரைந்து போய்விட்டேன்” – என விரக்தியின் விளிம்பில் நின்று சிலர் சோக கீதம் பாடுவது அவ்வப்போது நம் காதில் விழுகிறது.

  “வெற்றிக்கான அறிகுறி” வாழ்வில் தென்படாத காரணத்தால் சிலர் இப்படிப் பேசுவதுண்டு.

  கணிதத்தில் பயன்படுத்தப்படும் “பார்முலா” போன்று வெற்றிக்கு என தனியாக ஒரு “பார்முலா” கிடையாது. வாழ்க்கையில் வெற்றி பெற சில வழிமுறைகள் இருந்தாலும், வெற்றியின் அளவு என்பது – மனிதர்களின் மனநிலை, தகுதி, திறமை, சூழல் போன்றவைகளுக்கு ஏற்ப மாறுபடும் தன்மை கொண்டவை.

  இவைகளைப் புரிந்து கொண்டவர்களுக்கு, வாழ்க்கை வசந்தமாகிறது. வெற்றி கீதங்களால் சிறப்பு பெறுகிறது.

  நம்மைச்சுற்றி ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளைத் தனதாக்கிக்கொண்டு உழைப்பவர்கள், வாழ்க்கையில் வெற்றிகளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்த வாய்ப்புகளை அடையாளம் கண்டுகொள்ளத் தெரியாத சிலர், வாழ்க்கையை ரசிக்கத் தெரியாமலும், வெற்றிபெற இயலாமலும் தவிக்கிறார்கள். எனவே, வாய்ப்புகளை அடையாளம் கண்டுகொள்ள இளம் வயதிலேயே பழகிக்கொள்வது நல்லது.

  இந்த வாய்ப்புகளைப்பற்றி இளம்வயதிலேயே சிலர் அறிந்துகொள்ள இயலாமல் போய்விடுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் “பயம்” (Fear) எனப்படும் “அச்சம்” முக்கியப் பங்கு வகிக்கிறது.

  இளமைப்பருவத்தில் எதிர்காலத்தைப்பற்றிய பயம் பலரை நிலைகுலையச் செய்துவிடுகிறது. “அடுத்து என்ன நடக்கும்?” என்று அடிக்கடி தேவையில்லாமல் சிந்திக்கும்போது “அவசியமற்ற எதிர்பார்ப்பு” மனதிற்குள் உருவாகிறது. இது – நிகழ்காலத்தை மறந்துவிடவும், எதிர்கால பயத்தை உருவாக்கிவிடவும் அடித்தளம் அமைத்துவிடுகிறது. இதனால் – பொறுமையை இழக்கவும், நேர்மையை மறக்கவும், தன்னம்பிக்கை இல்லாமல் செயல்படவும் பலர் தானாக முன் வந்து விடுகிறார்கள். இந்தக் குணங்களால்தான், இவர்களால் வெற்றி பெறமுடியாமல் போய்விடுகிறது. எனவே – சிந்தனையில் நேர்மறை எண்ணங்களை (Positive Thoughts) உருவாக்கி எதிர்காலப் பயத்தை விரட்டும் முயற்சியில் ஈடுபடுவது நல்லது.

  சுமார் 35 வருடங்களுக்குமுன்பு, நான் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எனது கல்லூரி முதல்வர் டாக்டர் இரா. கனகசபாபதி அவர்கள் அடிக்கடி மாணவர்களிடம் ஒரு கருத்தை வலியுறுத்திக் கூறுவார்.

  அந்தக் கருத்து இதுதான் – “Problem is a sign of grow” என்று அவர் சொன்னபோது மாணவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

  இந்த இதழை மேலும் படிக்க

  நட்பின் நெருக்கத்தை பேணி காப்பது எப்படி? நட்பின் நெருக்கத்தை அதிகப்படுத்துவது எப்படி?

  1. உள்ளார்ந்த அன்போடு பழகுதலும், உண்மையோடு நேசிப்பதும், மனதில் எள்ளவும் கள்ளமில்லாமல்  இருப்பதும்,  உள்ளத்தாலும், சொல்லாலும், செயலாலும், உணர்வுகளினாலும், ஒத்தக்கருத்தோடு இருப்பதும் நட்பின் நெருக்கத்தை அதிகப்படுத்தும்.
  2. குற்றம் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் இருப்பதும், புறம் பேசாமல் இருப்பதும் நெருக்கத்திற்கு உதவும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. நட்பும் இல்லை.
  3. நண்பரிடம் எக்காரணம் கொண்டும் கோபம் கொள்ளாது இருத்தலும், அனுசரித்துப் போவதும், விட்டுக்கொடுத்துப் பழகுவதும், பல நேரங்களிலே அமைதி காப்பதும் இதற்கு வழிவகுக்கும்.
  4. எப்பொழுதும் மென்மையாக பேசுவதும், இனிமையான வார்த்தைகளைப் பேசுவதும் கஷ்டகாலங்களிலே உடனிருப்பதும் அவசியமாகிறது.
  5. நண்பன் தவறு செய்கிறபோது கடிந்து பேசி திருத்தி, நல்வழி காட்டுவதும், மனம் நோகாமல் அவரை தீயவழியிலிருந்து காப்பதும் நல்ல நண்பனின் கடமை.
  6. தேவையில்லாத விவாதங்களை தவிர்த்தலும், விமர்சனங்களை செய்யாமல் இருத்தலும், தவறான கண்ணோட்டத்தில் பழகாமல் இருப்பதும் அவசியம்.
  7. சுயநலமில்லாமல் இருப்பதும், சுயக்கட்டுப்பாடு பேணுவதும், நண்பனின் நலமே தன்நலன் என்று இருப்பதும் அவசியம்.
  8. நண்பனின் நல்லகுணங்களைப் போற்றி பாராட்டுவதும், நயம்பட பேசுவதும், தோழமையோடு ஏழமை பேசாது இருத்தலும் முக்கியமாகும்.
  9. வேடிக்கைக்குகூட நண்பனின் மனம் புண்படும்படி நடக்காமல் இருப்பதும், பேசாமல் இருப்பதும், கேலியும், கிண்டலும் வரம்பு மீறாமல் இருப்பதும்  அவசியமாகும்.
  10. மகிழ்ச்சியான நேரங்களிலே நண்பனோடு இருப்பதை விட, கஷ்டமான நேரங்களில் நண்பனோடு இருப்பதுதான் அவர்களுக்கு ஒரு ஆறுதலைத்தரும்.
  11. எக்காரணங்கள் கொண்டும் நன்றி சொல்ல மறப்பதும், நன்றி பாராட்டாமல் இருத்தலும் கூடாது.  நன்றி பாராட்டுதலும்  நட்பிற்கு வலுவினை சேர்க்கும்.
  12. நண்பன் இல்லாத நேரத்தில் நண்பனுக்கு வரும் பிரச்சனைகளில் நண்பனுக்கு பதிலாக, முன்னின்று நண்பனுடைய நிலையை தான் எடுத்துக் கொண்டு உதவி செய்வதும், கட்டிக் காப்பதும், அரணாக இருப்பதும், எக்காலத்தும் எந்த நேரத்திலும் எந்த நிலையிலும் நண்பனை கைவிடாது காத்து நிற்பதும்,   நட்பின் நெருக்கத்திற்கு மேலும் வலுசேர்க்கும்.
  13. நண்பருடைய வீட்டு விசேஷங்களில் உறவுக்கு மேல் முக்கியத்துவம் கொடுத்து முதல் ஆளாக நின்று கலந்து கொள்வது.

  இந்த இதழை மேலும் படிக்க