Home » Cover Story » முடியாததை முடித்துக்காட்டு! வெற்றிக்கு நீயே எடுத்துக்காட்டு!!

 
முடியாததை முடித்துக்காட்டு! வெற்றிக்கு நீயே எடுத்துக்காட்டு!!


ஆசிரியர் குழு
Author:

திருமிகு. பழனிச்சாமி

நிறுவனர், ஸ்ரீ சக்தி இன்வெஸ்ட்மென்ட்

காங்கேயம்.

பிறவியிலோ அல்லது இடையிலோ ஏற்பட்ட உடல்குறைபாடு என்பது வெற்றிகரமான எண்ணம், மகிழ்ச்சிகரமான மனநிலை, உறுதியுடன் செயல்படும் பழக்கம் உள்ளோரை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை என்பதற்கு இவர் சிறந்த உதாரணம்.

நற்செயல்கள், நற்சிந்தனைகள், எழுச்சியூட்டும் நம்பிக்கை நிரம்பப் பெற்றவர்களுக்கு சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை இன்றும் நிரூபித்து வருபவர்.

“நன்கு சிந்தித்து திறமையை வளர்த்துக் கொண்டு விடாமுயற்சியுடன் வாழ்ந்து, சாதித்து ஊர் போற்ற நற்பெயர் பெறுவதே உண்மையான, நன்மையான வாழ்க்கை” அத்தகைய வாழ்க்கையை சிறப்போடு வாழ்ந்து 06.12.2015-ல் “ஆயிரம் பிறை கண்ட அருள் விழா’ காணும் சிறப்பிற்குரியவர்.

நம்பிக்கை என்பது புயல் காற்றில் துவண்டு விழும் மெல்லிய மரமல்ல. அது அடிபெயரா இமயத்தைப் போன்றது என்பார் மகாத்மா; அந்த வகையில் வாழ்வதற்கும், வாழ்வில் உயர்வதற்கும், எப்போதும் ஓர் உந்து சக்தியாக இருக்கும் தன்னம்பிக்கையை நிரம்பப் பெற்றிருப்பவர்.

சிறந்த நம்பிக்கையுள்ளவர்களே அச்சமின்றி சிந்தித்து, சிந்தித்ததை செயல்படுத்தி, வெற்றியை நிலைப்படுத்தக் கூடியவர்கள். அதுவாய் மனத்தை வளப்படுத்தி, உடலை செம்மைப்படுத்தி, வாழ்க்கையை மாற்றி நல்வழிப்படுத்துகின்ற செயல்கள் நிரம்பிய வேதாத்திரி மகரிஷி அவர்களின்  மனவளக்கலை மன்றத்தின், காங்கேய மனவளக்கலை மன்றத்தலைவராக இருந்து நற்பணிகள் பல செய்து வருபவர்.

“கூட்டுக்குடும்பம்” என்கிற பண்பாட்டுக் கலாச்சாரத்தை இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்படுத்தி வருபவர்.

பாரம்பரியமாக நூறு ஆண்டுகளாக தொடர்கின்ற “அன்ன சேவையில்’ தன்னை இணைத்துக் கொண்டு பக்தி மார்க்கத்திலும், ஞானமார்க்கத்திலும் ஈடுபாடு கொண்டிருப்பவர்.

இப்படி பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட திருமிகு. பழனிச்சாமி அவர்களை நாம் நேர்முகம் கண்டபோது…

“வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற எண்ணம் எப்போது நிறைவேறுகிறது என்றால், துடிப்போடு, திறமையோடு செயல்படும்போதுதான்” என்றார்.

இனி அவரோடு நாம்…

உங்களின் பிறப்பு, இளமைக் காலங்கள் குறித்து?

காங்கேயத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பா.பச்சாபாளையம் என்னும் கிராமத்தில் பிறந்தேன். பெற்றோர் கருப்பண்ணசாமிக்கவுண்டர். கோவிந்தம்மாள். அப்பா அக்காலத்தில் அரசு நியாயவிலைக்கடையில் பொருட்கள் விநியோகத்தில் பொறுப்பாளராக இருந்தார். அக்கிராமத்தில் அப்பொழுது பேருந்து வசதியெல்லாம் இல்லை.

மடவிளாகத்தில் ஆரம்பக் கல்வியையும், அடுத்து காங்கேயம் உயர்நிலைப்பள்ளியில் நடுநிலைக்கல்வியையும் கற்றேன். அப்போது, பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால் சைக்கிளில்தான் செல்ல வேண்டும். இல்லையென்றால் நடந்துதான் செல்ல வேண்டும். அப்பொழுது சைக்கிள் வைத்திருந்த ஒரே குடும்பம் எங்கள் குடும்பம் மட்டும்தான்.

எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது என்னுடைய வலது காலில் ஒரு சிறிய கட்டி ஒன்று ஏற்பட்டது. அதை அப்பொழுது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

காலப்போக்கில் கட்டியின் அளவு பெரிதாகத் தொடங்கியது. இதனால் வலியும் வேதனையும் என்னை வெகுவாகப் பாதித்தது. பல மருத்துவமனைகள் சென்றும் குணப்படுத்த முடியவில்லை. வலது காலினை எடுத்துத்தான் ஆக வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்தாகி விடும் என்று என் தந்தையிடம் மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். கால் போனாலும் பரவாயில்லை, மகன் உயிரோடு இருக்க வேண்டுமென்று நினைத்து, என் தந்தை “உன் கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினால் தான் நீ உயிர் பிழைப்பாய்” என்றார். முடியாது என்றுதான் மறுத்தேன். என்றாலும், எடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதால் வலதுகால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஒரு கால் கொண்டு பள்ளிக்கு சென்றால் கேலி செய்வார்கள் என்று எண்ணி பள்ளிக்கு செல்வதை விட்டுவிட்டேன்.

படிக்கும் வயதில் காலை இழந்து நினைக்கவே மனநிலை ஒரு மாதிரி ஆகும்போது நீங்கள் அந்த வயதில் இதனை எப்படி எதிர் கொண்டீர்கள்?

எனக்கு அது ‘வலி’ மிகுந்த நேரம். பரிதாப பார்வை என் மீது விழுந்தது. அது எனக்கு கஷ்டமாகப் பட்டது. என் வாழ்க்கை இதோடு முடங்கி போய் விடக்கூடாது என உறுதியான மனநிலைக்கு மெல்ல மெல்ல வந்தேன்.

குறையை நினைத்தால் தானே வலி, அதை இனி மறந்து விட வேண்டும், என்று எண்ணி எப்பொழுதும் போல் என் வாழ்க்கையை இயல்பாக வாழத் துவங்கினேன்.

முடங்கிடந்தால் சிலந்திவலையும் ஒரு சிறைச்சாலை; எழுந்து நடந்தால் எரிமலையும் ஒரு ஏணிப்படி என்று ஒரே காலில் மிதிவண்டி ஓட்டிப் பழகினேன். காடு, மேடு, பள்ளம், மலை என எங்கு செல்ல வேண்டுமென்றாலும் மிதிவண்டியிலேயே பயணம் செய்தேன். “எல்லாம் விதி என்று ஒதுங்குபவன் அல்ல நீ, எதுவானாலும் எதிர்கொண்டு சாதிக்கும் வல்லமை படைத்தவன் நீ” என எனக்குள் தன்னம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு நாள்தோறும் உற்சாகமாக உழைக்க ஆரம்பித்தேன். ஒரு கால் இல்லையே என்கிற குறையை மறந்தே போனேன்.

சிறு தொழில் என்றாலும் அதை முழுமையாக கற்றபின்பே அத்தொழிலைச் செய்ய வேண்டும் என்று நினைத்து அதற்காக இடைவிடாத முயற்சியையும், பயற்சியையும் மேற்கொண்டேன். தொழிலில் இனி ஈடுபடலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

தொழிலை எப்படி தீர்மானித்தீர்கள்?

மனித வாழ்க்கையில் முதல் மூன்று தேவைகள் மிகவும் முக்கியம். அவை உணவு, உடை, இருப்பிடம் ஆகும். அந்த மூன்றிலும் மனிதனின் மானத்தைக் காப்பது உடை மட்டுமே. இதனால் உடை சார்ந்த தொழிலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதயமானது.

முதன்முதலில் K.P. சாமி என்ற பெயரில் டெய்லரிங் தொழிலை மேற்கொண்டேன். ரெடிமேட் ஆடைகள் இல்லாத காலகட்டத்தில் துணி எடுத்து தைத்து அணிவது மட்டும் இருந்தது. நான் மேற்கொண்ட டெய்லரிங் பணி பலருக்கும் பிடித்துப் போனது. சில மாதத்தில் அலுவலர்கள், அதிகாரிகள் என்று பலர் என்னுடைய தினசரி வாடிக்கையாளராகி விட்டார்கள். இது என்னுடைய அடுத்த பரிணாமமாக அமைந்தது.

அதனால் இன்னும் டெய்லரிங் சார்ந்த நுணுக்கங்களைக் கற்று ‘கோட் சூட்’ போன்ற ஆடைகளையும் தைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதனால் சென்னைக்கு சென்று ஒரு மாதம் பயிற்சியைத் தொடங்கி, கற்றுதேர்ந்த தையலக நிபுணராக வந்து என் பணியைத் தொடங்கினேன்.

தொழிலகம் வளர்ந்தது. இழந்த காலுக்கு செயற்கை காலை பொருத்திக் கொண்டேன். அந்தக் காலும் விசேஷ நாட்களுக்கு மட்டும்தான். மற்ற நாட்களில் ஒரு கால் கொண்டே என் பணிகளை திறம்பட செய்து வருகிறேன். எதிர்பாராத இழப்புக்களை உடல் சந்திக்கும் பொழுது ‘எல்லாம் போச்சு’ என்று புலம்புவதை விட, ஒன்று போனால் என்ன இன்னொன்று இருக்கே என துணிவை வரவழைத்துக் கொண்டால் “முடியும் எல்லாம் முடியும்”.

இந்த இதழை மேலும் படிக்க

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment