மோகன்ராஜ்
அக்குபஞ்சர் கிளினிக்
திருப்பூர்
ஒவ்வொருவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப்பெரிய பொறுப்பு பள்ளி கல்விக்கு தான் இருக்கிறது. பள்ளியில் கற்றபாடம், கற்பிக்கப்பட்ட ஆசிரியர்கள், கற்றுக்கொள்ளப்பட்ட ஒழுக்கநெறிகள் ஒவ்வொருவரையும் உன்னதமாய் மாற்றும் என்பதில் சற்றும் ஐயமில்லை. இப்படி கற்றவர்கள் தான் வாழ்க்கையில் மேன்மை அடைகிறார்கள்.
நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சேலம் மாவட்டத்தில் தான். அப்பா நாகராஜன் அரசு ஊழியர். அம்மா நாகரத்தினம். அப்பா மின்வாரியத் துறையில் இருந்ததால் அடிக்கடி பணிமாற்றம் ஏற்படும். பணிமாற்றம் காரணமாக சேலத்திலிருந்து திருச்செங்கோடு செல்ல வேண்டியதாக இருந்தது. இதனால் என் ஆரம்பக்கல்வி சொந்த ஊரில் அமையாமல் போய்விட்டது.
திருச்செங்கோட்டில் உள்ள ஔவைக்கல்வி நிலையம் என்றபள்ளியில் சேர்ந்தேன். சில காரணங்களால் இப்பள்ளியிலிருந்து மாறும் சூழல் ஏற்பட்டு அங்கேயே MGV மெட்ரிக் பள்ளியில் 6ம் வகுப்பு சேர்ந்தேன். மீண்டும் அப்பாவிற்கு சேலத்திலேயே பணி, சேலம் சென்றோம். அடுத்து ஏழாம் வகுப்பை ‘கோகுல்நாத இந்து மகாஜன’ என்றபள்ளியில் படித்தேன். பள்ளி அடிக்கடி மாறியதால் பாடத்தில் அவ்வளவாக என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. படிப்பில் மிகவும் குறைவாகவே கவனம் செலுத்த முடிந்தது. அப்பொழுது ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்துவிட்டேன்ன. இந்தத் தோல்வி என்னை பெரிதும் பாதித்தது. மீண்டும் ஒன்பதாம் வகுப்பையே படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. என் கஷ்டத்தை என் பெற்றோர்கள் புரிந்துகொண்டு எனக்கு நல்லதொரு ஊக்கம் கொடுத்தார்கள். இந்த ஊக்கம் தான் என்னை வெற்றி பெறவேண்டும் என்று தூண்டியது. அதன்பிறகு ஒன்பதாம் வகுப்பை முடித்து பத்தாம் வகுப்பை அதே பள்ளியில் படித்தேன்.
அப்பொழுது அந்தப் பள்ளியில் எனக்கு தமிழாசிரியராய் இருந்தவர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களின் தாயார். இவரிடம் கற்றபாடம் என்னையும், என் வாழ்வையும் மாற்றியது என்று வெளிப்படையாகவே சொல்வேன். அந்த அளவிற்கு பாடத்தை எளிமையாக நடத்துவார்.
பாடத்தையும் பாடம் நடத்தும் ஆசிரியர்களையும் பிடித்துவிட்டாலே நிச்சயம் தேர்வாகிவிடலாம் என்று அப்பொழுது எனக்கு தெரியவில்லை. வகுப்பிற்கு வந்த அனைத்து ஆசிரியர்களும், எங்களின் தேர்ச்சியிலும், ஒழுக்கத்தில் வெகு ஈடுபாட்டோடு நடந்து கொண்டார்கள். இதனால் பத்தாம் வகுப்பு தேர்வை முறையாக கையாண்டு தேர்வு பெற்றேன்.
மதிப்பெண் அடிப்படையில் தான் ஒவ்வொருவரும் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். பத்தாம் வகுப்பை முடித்த பின்னர் டிப்ளமோ படிப்பைப் படிக்கலாம் என்று நினைத்து சேலம் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தேன். பாடத்தை ஆசிரியர்கள் நன்றாக நடத்தினாலும் படிப்பின்மீது ஆர்வம் வரவில்லை. தொழில் சம்பந்தமான வேலைகளைச் செய்யும் அளவிற்கு படிப்பின் மீது அவ்வித ஈடுபாடு இல்லை.
இதனால் பல சிரமங்களுக்கு மத்தியில் டிப்ளமோவை முடித்து திருப்பூருக்கு வேலைக்கு சென்றேன். நிறைய நிறுவனங்கள் சென்றேன். அதன்பிறகு ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன்.
வேலை சேர்ந்த சில மாதங்களில் என் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நேரத்தில் பல போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்தது. எத்தனையோ மாத்திரை மருந்துகள் என் உடல்நிலை தேறிய பாடில்லை. இதனால் இம்மருந்து முறைகளை தூரம் தள்ளிவிட்டு இயற்கை மருந்துகளைத் தேடினேன்.
அப்பொழுது தான் அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறையைப் பற்றி தெரிந்து கொண்டேன். இம்மருந்து என்னை மிகவிரைவில் குணப்படுத்தியது. குணம் அடைந்தவுடன் இம்மருத்துவமுறையை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் வந்தது. இதனால் இந்த அக்குபஞ்சர் சார்ந்த பாடங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் என்னுள் தோன்றியது. ஒரு செயலைப் பற்றி புரிதல் இருந்தால் அதை நாம் முழுமையாக கையாள முடியும் என்பதை நம்புபவன் நான்.
படிப்பு என்றாலே வெறுத்து ஒதுக்கிய நான் எனக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் என்னை குணப்படுத்திய மருத்துவ முறைகளைச் சரியான முறையில் தேர்ந்தெடுத்து படித்ததால் இன்று ஒரு கிளினிக் வைத்து அதை சரியான முறையில் நடத்தி வருகிறேன்.
எத்தனை முறை தோல்வி அடைந்தாலும், துவண்டுவிடாமல் துணிந்து எழுந்து வா… கல்வியையும் வெல்வாய்; வாழ்வையும் வெல்வாய் என்று தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்த திரு. மோகன்ராஜ் அவர்களை வாழ்த்துகிறோம்.