July, 2015 | தன்னம்பிக்கை - Part 2

Home » 2015 » July (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  காலத்தின் காதலர்கள்

  பலருக்கு இந்த தலைப்பைப் பார்த்ததும் சற்றேவியப்பாக இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் ஆராய்ந்து நோக்குங்கள் அதிலுள்ள அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.

  வாழ்க்கையில் ஒரு பகுதி வரை பெற்றோர்ள் நமக்குத் துணையாக வருவார்கள். பின்பு இன்னொரு நிலையில் அந்தப் பொறுப்பை மனைவி வகிப்பார். அதே போலத்தான் அவரவர் வாழ்க்கையிலும் ஒரு  கட்டம் வரை தோல்வியே துரத்திக் கொண்டு வரும். ஒரு நிலையில் அதை எதிர்த்து நிமிர்ந்து நன்னடை போட்டால், வழிதெயறியாமல் வரும் தோல்வியானது, வழியறிந்து செல்லும். வெற்றியை நமக்கு காட்டிவிடும். ஆகவேதான், என்னைப்பொறுத்தவரையில் காலத்தின் காதலர்கள் என்றால் அது வெற்றியும், தோல்வியும்தான்.

  ஒருமுறைபிறக்கும் தோல்வியானது, மறுபிறவியில் வெற்றியாகத்தான் அவதரிக்கும். ஆனால், அந்த மறுபிறவியை அடைவது என்பது எளிதான வஷயமல்ல. அதற்கு உண்டான பங்களிப்பை அளித்தால் மட்டுமே நாம் மறுபிறவிக்குத் தகுந்தவர்களாக விளங்க முடியும்.

  இவ்விடத்தில் ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். இன்று பலரும் பயன்படுத்தக்கூடிய கார்களில் ஹோண்டா காரும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. அதனுடைய வளர்ச்சியைக் கண்டு பலரும் வியந்து போயிருக்கிறார்கள். ஏன், படித்தும் பார்த்தும் நானே அதிர்ந்து விட்டேன்.

  ஹோண்டா (Honda) என்பவர் முதலில் காரைப் பழுது பார்க்கும் ஒரு நபராக மோட்டர் துறையில் உள்ளே நுழைகிறார். பின்பு, தனது கடின உழைப்பால் மேலே வளர்ந்து ஒரு நிலையை அடைந்தது. வங்கியின்  மூலம் கடன் வாங்கி ஒரு தொழிற்சாலையை நிறுவுகிறார். ஆனால், விதி விளையாட ஆரம்பிக்கிறது. ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிப்படையும் நாடு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த நிலைநடுக்கமும், சுனாமியும் இரவருடைய தொழிற்சாலையைக் குறிவைத்தது. பின்பு, அவருடைய கனவான தொழிற்சாலையும், நீரோடு கலந்த மண்போல் வெள்ளத்தோடு கலந்து ஒன்றாக மாறியது.

  இது அவருடைய வாழ்வில் ஏற்பட்ட முதலாவது அடி, இப்பொழுது அவரின் முன்,  இரண்டு சாவல்கள் ஒன்று தொழிற்சாலையை மீண்டும் உருவாக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் வங்கியில், பாக்கிக்கடனையும் செலுத்த வேண்டும். என்ன செய்வது, என்றே தெரியாமல் இருந்த அவரை, முயற்சி என்னும் சக்தி மீண்டும், மீண்டும் ஒன்றையே அவரிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது. “மீண்டும் ஒருமுறைமுயற்சி செய்”

  எதற்கும் கலங்கவில்லை, துணிந்தார். வங்கியில் மீண்டும் கடன் வாங்கி தொழிற்சாலையை உருவாக்கினார். ஆனால், போதுமான அளவு விளைச்சல் இல்லாத காரணத்தால், வருமானம் குறைந்தது. “மீண்டும் ஒருமுறை முயற்சி செய்” என்றொரு வாசகம் மீண்டும் ஒருமுறைஒலித்தது. தோல்வியின் இரண்டாவது அடியையும் கடக்க முயற்சித்தார். அதாவது, புதுப்புது தொழில்நுட்பங்களை வடிவமைத்தார். ஆனால், கார்களின் வரத்து ஹோண்டாவில் அதிகரிக்கத் தொடங்கியது. இப்பொழுது, தோல்வியின் எல்லையை கடந்து, வெற்றியின் பகுதியை அடைந்ததும், இன்னொரு வாசகம் ஒலித்தது. “மீண்டும் ஒருமுறை முயற்சி செய்” என்று. இவற்றில் கவனிக்க வேண்டிய என்னவென்றால், தோல்வியில் இருக்கும் ஒருவரிடம், வெற்றியை அடையாளப்படுத்தி அறிமுகப்படுத்த வேண்டும். அதுவே, ஒரு வெற்றியில் இருப்பவரிடம், வெற்றியைக் கொண்டுடம், இன்னொரு வெற்றியை அடையாளப்படுத்தி அறிமுகப்படுத்த வேண்டும். இதைத்தான் ஹோண்டாவின் வாழ்க்கை அவருக்கு கற்றுக்கொடுத்த பாடம்.

  எனவே, பாடத்தை எப்படி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். குரு இருந்தும், அர்ஜூனனால் காண்டீபம் சரியாக எய்த முடியவில்லை. ஆனால், குருவின் தோற்றத்தை மட்டும் தனது மனதில் அடையாளப்படுத்திய ஏகலைவனால் காண்டீபம் சரியாக எய்த முடிந்தது. காரணம் ஏகலைவனிடம் இருந்த குருபக்தியும், அஞ்சா நெஞ்சமும்தான். தோல்வியை தாங்கும் உறுதிநிலையை பெற்று இருப்பவர்கள் என்றால், அவர்கள் 100ல் 10பேராகத்தான் இருக்க முடியும்.

  மீதமுள்ள 90-பேரின் நிலைமை, அதாவது தோல்வியை தாங்கிக்கொள்ளாத அல்லது அதிகரித்துக் கொள்ளாத தன்மை. சமூகம் நம்மை மதிக்காது என்றொரு எண்ணம். வாழ்க்கையே வெறுப்பாக்கி கொள்ளுதல், இறுதியில் யாரோ, எவரோ விட்ட வழி என்று வழியறியாமல் திசைமாறி போனவர்கள், ஆயிரம், ஆயிரம் ( இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பெரியவர்களை விட இளமையின் நாயகர்கள்தான் அதிகம்)

  இதுபற்றி மற்றுமொரு கோஷ்டி உள்ளது. அதுதான், காதலில் தோல்வி என்று தாடி வளர்க்கும் கோஷ்டி. இப்படிப்பட்டவர்களிடம் ஒன்றைகூறிக்கொள்கிறேன். காதலர்களே, காதலை விட காதல் உணர்ச்சி மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்றாகும். எனவே, அந்த ஒன்றைதாடி வளர்த்து, மது அருந்தி வெளிப்படுத்த வேண்டும் என்றொரு எண்ணம் கொண்டிருந்தால், அதை கானல் நீராய் எண்ணி, உங்களுக்காகவே காத்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை புனித நீரை சற்றேதெளித்த பாருங்கள்.

  பின்பு, அவற்றில் என்னாளும் வளரும் நம்பிக்கைக்கு இடமளித்து, வாழ்வு கொடுத்துப்பாருங்களேன். நீங்களே உங்களை அறியாத ஒரு புது மனிதனாய் இந்த பூமியில் அவதரித்தாய் எண்ணிக்கொள்வீர்கள். தோல்வியை யாரும் பொறுத்துப் பார்க்காதீர்கள். வாழ்க்கையும், வெறுப்பாகி விடும். ரசித்துப்பாருங்கள் அப்பொழுது நீங்கள் உணர்வீர்கள் தோல்வியிலும் ஒரு ரசனை உள்ளது. ஏனென்றால் நான் அதை உணர்ந்தேன்.

  இந்த இடத்தில் அவர் எழுதியதை கொடுத்தால்தான் பொருத்தமாக இருக்கும் 1957 முதல் 1961 வரை அவர், தமிழ் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது அரங்கேறிய ஒரு சம்பவம். படித்த 4 ஆண்டுகளிலும், அவர் பெரும்பாலும் முதல் அல்லது இரண்டாவது மதிப்பெண் எடுத்து வந்தார். பின்பு, இறுதித்தேர்வில் எப்படியேனும் மாநில முதன்மை பெறவேண்டும் என்றகுறிக்கோளுடன் படித்தார். அதற்கு, தகுந்தாற்போல் அவரின் பேராசிரியர்களும், அவரை ஊக்குவித்தனர். அதேபோல், இறுதித்தேர்வான தமிழ்நாடு அனைத்து தமிழ்க்கல்லூரி மாணவர்கள் எழுதும் புலவர் மாணவர் மன்றத்தேர்விலும் மாநில முதன்மை பெற்றுவிடுகிறார்.   ஒருநாள் கல்லூரி இறுதி தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அப்பொழுது, எதிர்பாராத விதமாக எவரோ ஒருவரிடமிருந்து அவருக்கு அழைப்பு வருகிறது. அதில் உனக்கு மாநில முதன்மை கிடைக்கும், அதற்கு 1000 ரூபாய் பரிசும் உண்டு, அதையும் மன்னரே கொடுத்துவிட வேண்டும் என்று சொல்கிறார்கள்.

  உடனே இவர், எனக்கு வந்தால் நேர்மையாக வரட்டும், இல்லாவிட்டால் அத்தகைய பரிசு எனக்கு வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். அழைத்தவர் கூறுகிறார் எனக்கு 60 வயது ஆகிறது. எனவே, நேர்மையை எனக்கா கற்றுத்தருகிறாய்…? கொஞ்சம் பொறு உன்னை எப்படி கவனிக்க வேண்டுமோ, அப்படி கவனித்துக்கொள்கிறேன் என்று எச்சரித்து விடுகிறார்.

  எதற்கும் கலங்கவில்லை, அதேபோல் அவர் எதிர்பார்த்தபடியே மாநில முதன்மையும் கிடைக்கவில்லை. ஆனால், எதற்கும் கோபம் கொள்ளாமலும், தோல்வியை நினைத்து வருத்தப்படாமலும், முயல்கிறார். ஒரு வேலை கிடைத்து விடுகிறது. அதன் மூலம் ஒரே குறிக்கோளுடன் பி.யூ.சி., பி.ஏ.எம்., ன்று தனிப்பட பல தேர்வுகளை எழுதி 1970ல் எம்.ஏ., தேர்வில் சென்னை பல்கலைக்கழகத்தில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கமும், பரிசுகளும் பெறுகிறார். அப்பொழுது அவருள் ஒரு எண்ணம் எழுகிறது. அதாவது 1961ல் நடந்த வித்வான் தேர்வில் தேர்ச்சியாகி இருந்தால், நாம் எம்.ஏ., வரை பயின்று இருப்போமா…? என்று, தனக்காகவே தோல்வியை கொடுத்து, வெற்றியை தன்னிடமே வசப்படுத்திய நம்பிக்கைக்குரியவர் யார் என்பதை இத்தனை தூரம் படித்தவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொண்டிருப்பார்கள்.

  எனினும், அவர்தான் விவசாயிகளின் மனதையும், பசியையும் அறிந்தவராகவும், மேலும், 20,000 த்திற்கும் மேற்பட்ட  குடும்பங்களில் “தன்னம்பிக்கை விளக்கேற்றி”  வரும், இளைஞர்களின் வாழ்வை அவர்களின் போக்கிலேயே எழுதி வசப்படுத்தியவரும், 5 லட்சம் இளைஞர்களை சிந்திக்க வேண்டும் என்றகுறிக்கோளும், பற்றும் கொண்டவரான மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய டாக்டர் இல.செ. கந்தசாமி ஐயா அவர்கள்தான் ( எந்நாளும் அவர் ஏற்றிவைத்த “தன்னம்பிக்கை விளக்குகளில்”  நானும் ஒருவன் என்பதை பெருமைபட கூறிக்கொள்கிறேன். ) ஒன்றைஇத்தருணத்தில் கூறுவதுதான் சிறந்தது. தோல்வியை மட்டும் எண்ணாதீர்கள், அதனுடன் வரும் வெற்றியை எண்ணுங்கள் வாழ்வே உங்களிடம் வசப்படும்.

  “இலை உதிர்ந்து காய்ந்து போன மொட்டை மரத்தின் நம்பிக்கைக்குப் பின்னால் ஆயிரம் வசந்தங்கள்” அடுத்து உங்களை அறியாமல், உங்களிடம் இருக்கும் ஒன்றைகூறுகிறேன். அதுவும் உங்களுக்குள்ளாகவே கேளுங்கள்….

  இன்னும் இளமை மாறாத இளமையுடன்….

  அஜந்தாவா எல்லோராவா

  மும்பையில் கிழக்கு நோக்கி சுமார் இருநூற்று ஐம்பது மைல் (250) தூரத்தில் முழுக்க, முழுக்க இந்தியரது கற்பனையில், கை வண்ணத்தில் இந்திய நாகரீகத்தை மட்டும் மையப்படுத்தி இந்திய பண்பாட்டை மட்டும் பிரதிபலிக்கும் படியான ஒப்புயர்வுற்ற கலைக் கரூவூலமாக உருவாக்கப்பட்டது தான் அஜந்தா. அஜந்தாவைப் போன்றே எல்லோராவும் மிக நுட்பமாக கலை நயத்துடன் தோற்றமளிக்கும் என்றால் அது மிகையாகாது. பாரதத்தின் இரு கண்கள் போல் திகழும் இவ்விரு கலை பொக்கிசமும் பௌத்த சந்நியாசிகளால் எழுபப்ட்ட கோயில் சிற்பங்களாகும்.

  இதிலே தூரிகையுடன் வண்ணமும், ஓவியனின் உள்ளத்து உந்துதலை வெளிப்படுத்துகிறது. அது போல் சுத்தியும், உளியும் அதற்குரிய சிற்பியின் சொன்னபடி கேட்கும் சக்தியை வெளிப்படுத்தும் வண்ணம் மிகப் பிரமாண்டமாக பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது கண்கொள்ளா காட்சியாகும்.

  ஓவியன் மற்றும் சிற்பியின் எண்ணத்தை வண்ணத்தில் வடிவத்தில் வடித்திருப்பது மட்டுமல்ல அதன் பெருமை இத்தனை ஆண்டுகள் கழிந்தும் அது புத்தம் புதிதாய் பூத்துக் குழுங்குவதுதான் அதன் மிகப் பெரிய சிறப்பாகும். இங்கே புத்தனையும், போதி சத்துவனையும் இத்தனை அழகாய் எடுத்துக் காட்ட எப்படி முடிந்தது என்று வியக்க வைக்கிறது. அது மட்டுமா மனித குலத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான எத்தனை எத்தனை நிகழ்வுகளை எண்ணில் அடங்காத வண்ணம் மலைக்குள்ளே ஒரு கலைப் பொக்கிமாகக் காட்சியளிக்க வைத்துள்ளனர். ஒவ்வொன்றிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட அதிசயத்தை உருவாக்கி வைத்திருப்பது சாதாரண காரியமில்லை.

  கல்லிலே துல்லியத்தை பிரமாண்டத்தை கன கட்சிதமாக தத்ரூபமாக வெளிப்படுத்துவது அஜந்தாவா, எல்லோராவா என பட்டிமன்றம் வைத்தால் இறைவனே வந்தாலும் தீர்ப்புச் சொல்லத் தினறித்தான் போவான் அந்த அளவு மனித மனதின் மகோன்மியத்தின் வெளிப்பாடு மட்டுமின்றி அது இந்தியத் திருநாட்டின் பண்பாட்டை, நாகரீகத்தை ஒட்டு மொத்த வகையில் வெளிப்படுத்துவதாக உள்ளது.

  அவுரங்காபாத்துக்கு போய்விட்டால் அங்கிருந்து வடக்கே 67 மைல் தொலைவில் உள்ளது தான் அஜந்தா என்னும் கிராமம், அதே போல் அவுரங்காபாத்திலிருந்து 23 மைல் மேற்கு நோக்கி சென்றால் அங்கே எல்லோரா இருக்கும்.

  அஜந்தா கிராமத்தில் இருந்து அஜந்தாவுக்குச் செல்லும் பாதை, பள்ளத்தாக்குகள் வளைந்து வளைந்து ஏழுமலை சென்றால் அஜந்தா மலையின் அடிவாரம் வரும். மலைமீது ஆறு பர்லாங்கு ஏறிப் போனால் அஜந்தா குகையை அடையளாம். அங்கே அழககாகப் பூத்திருக்கும் பாரிஜாத மலர்களை பார்த்தால் அவை நம்மை பார்த்து சிரிப்பது போல் இருக்கும். அந்தப் புன்னகைக்குள் ஒரு நொடியும் தாமதியாது புதைந்து போய் விடுவோம்.

  பௌத்த சந்நியாசிகளால் “வாகூரா நதிக்கரையில்’ உள்ள மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட அஜந்தா குடவரைக் கோயிலும் அதனுள் உள்ள சிற்பமும், சித்திரமும் புதர் மண்டிக் கிடந்திருந்தது. கிபி 1900- ஆம் ஆண்டில் முற்பகுதியில் இந்தப் பகுதிக்கு வந்த ஒரு ஆங்கிலேயர்தான் இக் குகைக் கோயிலைக் கண்டுபிடித்துத் தந்தார். அதன் பின்னரே அதை மூடிக்கிடந்த புதரையும், மண்ணையும் நீக்கி மக்கள் பார்வையிட அனுமதித்தனர்.

  ஏறக் குறைய இங்கே 30 குகைகள் வரை உள்ளன, அனைத்தும் பௌத்த சமயத்தாரால் அம்மதச் சிற்பம் மற்றும் சித்திரம்அடங்கியதாக உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இதனை கிமு 200 முதல் கிபி 500 வரை உருவானதாக அறியப்படுகின்றது.

  இக்கலைக் கோயில்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கும் என இன்றைய ஆய்வாளர்களின் கருத்து என்ன என்றால் அவர்கள் முதலில் கல்லின் மீது சாந்து பூசி, அந்த சாந்தின் ஈரம் உலர்வதற்கு முன்னே மூலிகைகளும், மணிக்கற்பொடிகளும் சேர்த்து அரைத்த வண்ணத்தைக் கொண்டு சித்திரம் தீட்டியிருக்க வேண்டும். அப்படி செய்து இருந்தால் மட்டுமே இவை இத்தனை ஆண்டு ஆகியும் புதுப் பொழிவுடன் தோற்றம் அளிக்க இயலும் என்கின்றனர்.

  அஜந்தா இப்படி என்றால் எல்லோராவை என்ன சொல்ல இவ்விரண்டு குடவரை கோயிலும் உணர்த்தக் கூடிய செய்தி என்ன என்றால்

  “எம்மதமும் என் மதமே”

  “ ஒன்றே குலம், ஒருவனே தேவன்”

  என்பதை அன்றே அறிவித்துவிட்ட ஆன்ம ஞானிகளை எவ்வளவு போற்றினாலும் ஈடாகாது.

  அஜந்தா, எல்லோரா இரண்டையும் மனித மனம் உள்வாங்கி மகிழ வேண்டும் என்றால் ஒரு நாள் போதாது வாழ்நாளே போதாது என்று கூடச் சொல்லலாம், அந்த அளவிற்கு அதிலே ஆச்சரியமும், அழகும், உண்மையும்…… இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.

  கடல் நீரைக் கையிலே அள்ளிவிட்டால் கடலையே அள்ளி விட்டதாகுமா அது போன்றது தான் இந்தக் கட்டுரையும்.

  அனுபவம்… ஆனந்தமாகட்டும்

  உலக மனித குல அறிவியல் ஆராய்ச்சிகளில், முதன்மையானதும், சிறந்ததும் எது?” என்றகேள்விக்கு, “மனிதன் தன்னை அறிந்து கொள்ள செய்யும், ஆராய்ச்சியே அறிவியல் ஆராய்ச்சிகளில் முதன்மையானது, சிறந்தது. அதுமட்டுமல்ல, மனித குல வளர்ச்சிக்கு மிக முக்கியமானதும் கூட” என்ற உண்மையே  பதிலாகிறது.

  ‘தன்னை ஆராய்தல்’ எனும் இந்த நிகழ்வு, உண்மையான ‘அனுபவத்தை’ குறிக்கிறது. ஆராய்தலை ஆரம்பித்ததும், நம் உள் மனதின் இயற்கைத் தன்மையில் சில மாறுதல்கள்  ஏற்பட  ஆரம்பிக்கும்.

  பல சமயங்களில் பெரியதொரு மனப் போராட்டமும் ஏற்படலாம். ஏனெனில், நாம் ஏற்கனவே உருவாக்கியுள்ள கட்டிடத்தின் அஸ்திவாரமே ஆடத் துவங்கும். அதாவது, நம்முடைய ஆழமான அபிப்ராயங்கள், கொள்கைகள், திட்டங்கள் வலுவிழக்கச்  செய்யும், நம் சூழ்நிலைகளை நண்பர்களாலும், உறவினர்களாலும்,  நாம் போட்டுக்கொண்டுள்ள முகமூடி கிழியத்துவங்கும். நம் பாதுகாப்பிற்காக பற்றிக் கொண்டுள்ள, நிலையற்ற மனிதர்கள் அல்லது பொருட்கள் மீதுள்ள இறுக்கமானப் பிடிப்புத் தளர துவங்கும். இப்போது இதுபற்றிய சில ‘உண்மை’ அல்லது ‘சத்தியம்’ என்னவென்று பார்ப்போம்.

  அனுபவ மாற்றத்தால் விடுதலை எப்படி சாத்தியமாகும் என்பதைப் பார்ப்போம். ‘அனுபவ மாற்றம்’ என்பதே, விடுதலைக்கான ஓர் பயணம் தான். நமக்கு, சில சமயங்களில், வாழ்வதற்கே ஆர்வமில்லாமல், ஏதோ ஒன்றைஇழந்து விட்டது போலவும், முழுமை அடையாததது போலவும் தோன்றும்.

  இதயத்தில், ஒரு வெறுமையும், அன்னியப்பட்டு விட்ட தனிமை உணர்வும் மேலோங்கிவிடும். பலருடன் வேலை செய்து கொண்டோ, நண்பர்களுடன் இருக்கும் போதோ, எதையும் மனம் நாடாமல், அந்த இடத்தை விட்டு அகல வேண்டும் என்று  தோன்றும்.

  பல சமயங்களில் குடும்ப உறவினர்களுடன், சந்தோஷமாக இருக்கும் போது கூட, இந்த ‘தனிமை’ உணர்ச்சியாலும், மன எரிச்சல் தன்மையாலும் பாதிக்கப்படுகிறோம்.  ஏதோ ஒன்று, நம்மையும், பிறரையும் பிரிக்கிறது.

  நாம் மற்றவர்களோடு, சில விஷயங்களைத்தான் பகிர்ந்து கொள்ள முடியும். பல விஷயங்களைப்  பகிர்ந்து கொள்ள முடியாமல் மனதில் புதைந்து விடுகிறது. ‘தான் ஒரு தனி மனிதன்’ என்றஉணர்வு, ஆழமாக நம்முள் இருப்பதே இதற்குக் காரணம்.

  நம்மில் பலர், ‘நான் ஆன்மீகவாதி, அறிவாளி, எல்லாம் தெரிந்தவர்கள்’ என்று நமக்கு நாமே கூறிக்கொண்டும், நடந்தும் கொள்கிறோம். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். ஏனென்றால், அதிகம் அறிந்து கொள்வதால் தவறில்லை. ஆனால், அறிந்து கொள்வதன் மூலம், ‘அபிப்பிராயங்கள்’ என்னும் கட்டிடத்தை மேலும், பெரிதாக கட்டுகிறோம் என்பதுதான் உண்மை.

  வாழ்க்கை என்பதே அனுபவங்களால் கற்றுக் கொள்ளும் வழிமுறை தான். ‘கற்றுக் கொள்வது’ என்பதன் பொருள், நாம் கற்றுக் கொண்டவைகளிலிருந்து தெளிவு பெறுவதுதான். விடுதலை என்பதும் கூட இதுதான். ஆகையால் .நாம், கற்றுக்கொண்டவைகளிலிருந்து தெளிவு பெறாவிட்டால் அதாவது, நாம் கட்டிய கட்டிடங்களை இடித்துத் தள்ளாவிட்டால், நம் வேஷத்தை, முகத்திரையைக்  கலைக்காவிட்டால், நாம் வாழவே இல்லை என்று அர்த்தம்.

  “கற்றுக் கொண்டவைகளிருந்து தெளிவு பெறுவது எப்படி?” என்பதைப்பற்றி நாம் இன்னும் சற்று ஆழமாகப் பார்ப்போம்.

  நம்முடைய கடந்த கால அனுவங்களைப்பற்றிய சில நினைவுகள், ஆழமான சில உணர்ச்சிகளை ஏற்படுத்தும், சக்தி வாய்ந்தவை. சில, சாதாரண அனுபவங்களால் இது போன்ற உணர்ச்சிகள் எதுவும் தோன்றுவதில்லை.

  நினைத்தால் பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த உணர்ச்சிகள், நம்மை நிகழ்காலத்திலும் பாதிக்கின்றன. நம் வாழ்க்கையில் சில நல்ல அனுபவங்களையும், சில துயர அனுபவங்களையும், அனுபவித்துள்ளோம். இந்த அனுபவங்கள், நம் குழந்தைப் பருவத்தில், பள்ளி பருவத்தில் அல்லது அதன் பிறகு கூட ஏற்பட்டிருக்கலாம்.

  இது போன்றஅனுபவங்கள், நம் கண்ணோட்டங்களை, அபிப்பிராயங்களை, நிர்ணயிக்கின்றன. நிகழ்காலத்தில் நாம் வாழ்க்கையை உள்ளதை உள்ளபடி அனுபவிக்க வேண்டும். அதற்கு, கடந்த கால அனுபவங்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளிலிருந்து நாம் முதலில் விடுதலை அதாவது, தெளிவைப் பெறவேண்டும். இதன் மூலம் நம் தேவையற்றபயங்கள், கவலைகள், எதிர்மறைஎண்ணங்கள் விலகும். நாம், ஈடுபடும் செயல்களில் நம் முழுத்திறமையும் வெளிப்படும்.

  இந்த ஆராய்ச்சியால் ஏற்படும் அனுபவ மாற்றம் நிகழும் போது, நாம் அனுபவிப்பது என்னவென்றால், நம்மை விட்டு நம்முடைய பற்றுகள், முகத்திரைகள், நாம் பிடித்து வைத்துள்ள தவறான கண்ணோட்டங்கள், நம்மை விட்டு விலகும். தேவையில்லாதவைகள் யாவும், நம்மை விட்டு விலகி, நம் மனமும், வாழ்க்கையும் இலேசாகி, சுதந்திரமாக, ஆனந்தமாக செயல்படும்.

  மன இயல்பு

  ‘மனம் ஒரு குரங்கு’ அங்கும், இங்கும் தாவிக்கொண்டே இருக்கும். ‘மனம் ஒரு குதிரை’ திக்குதிசை தெரியாமல், கட்டுப்படாமல் ஓடிக்கொண்டே இருக்கும்.         ‘மனம்

  ஒரு கழுதை’ முன்னால் சென்றால் கடிக்கும். பின்னால் சென்றால் உதைக்கும்.  பக்கவாட்டில் நின்றால் உரசும்.

  ஆக, மொத்தத்தில், மனம் அடங்காதது என்பதோடு, மிருக குணங்களோடு ஒப்பிட்டு சொல்லப்படுகிறது. மனம், நிகழ்காலத்தில் இல்லாமல், தொடர்ந்து,  நடக்காத எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி, நடந்து முடிந்த இறந்தகால நிகழ்வுகளைப் பற்றி மாறி, மாறி சிந்தனை செய்தபடியே இருக்கிறது.

  ஆனால், நமக்கு ஏற்படும் ஒவ்வொரு அனுபவமும், உணர்ச்சியும் திட்டமிட்டோ,

  தீர்மானித்தோ நடப்பதில்லை. அனைத்து உணர்ச்சிகளும், தன்னிச்சையாகவே எழுகின்றன. அதாவது, ‘நான் இப்போது கோபப்படப் போகிறேன், இன்று கவலைப்படப் போகிறேன், சந்தோஷப்படப் போகிறேன்’ என திட்டம் போட்டு செயல்படுவதில்லை.

  இவ்வுணர்ச்சிகளில்  கண்ணோட்டங்களில்,  நோக்கங்களில்,  அபிப்பிராயங்களில்,மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அது நம்முடைய முயற்சிகளால் முடியாது என முதலில் உணர வேண்டும்.

  நம் அனைத்துப் பிரச்சனைகளுக்கும்,  துயரங்களுக்கும், தோல்விகளுக்கும் முக்கிய

  காரணமே, நமக்கு அனுபவம் ஏற்படாததும், அனுபவமாக ஏற்றுக் கொள்ளாததும் தான்.   அனுபவம் நமக்கு கற்றுக் கொடுக்க விரும்புவதை கண்டு பயப்படுகிறோம்.

  அதனால், அதை விரும்பாமல், அந்த அனுபவித்தின் விருப்பத்திற்கு எதிராக செயல்படுகிறோம். அனுபவங்களைக் கற்றுக்கொள்ள, ஏற்றுக்கொள்ள முடியாமல்தான்,  அதிலிருந்து தப்பிப்பதற்காக, மனம் முதலில் சொன்னதைப் போல குரங்காக தாவி, குதிரையாக ஓடி, கழுதையாகத் திரிந்து கொண்டிருக்கிறது.

  ஆகவே, ‘உண்மையான மாற்றம்’ நிகழ வேண்டுமானால், நமக்கு நடக்கும் அனைத்தையும் அனுபவமாக, அனுமதிக்கவும், அனுபவிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

  ஒரு அரசன், ஒரு ஏழையானவனைச் சந்தித்தான்.

  “உனக்கு வேண்டியதைக் கேள்” என்றான்.

  அதற்கு, ஏழை “என் அடிமைகளில்  ஒருவனிடமே, நான் உதவி கேட்பது எனக்கு பிடிக்காது” என்றான். உடனிருந்த தளபதிக்கு கோபம் வந்து விட்டது.

  “மரியாதையின்றி இவ்வாறு அரசனிடம் பேசுவதற்கு என்ன தைரியம் உனக்கு? நீ கூறியதற்கு தகுந்த விளக்கம் கூறாவிட்டால் மரணமடைவாய்” என்றான். ஏழையானவன் சற்றும் பயப்படாமல், “என்னிடம் உள்ள ஒரு அடிமைதான், உங்கள் அரசனின் எஜமானன்” என்றான்

  “யார் அந்த எஜமான்?”

  “எதிரி நாட்டவனுக்கு, வரி கட்ட வைத்துக் கொண்டிருக்கும் அரசனின் பயம் தான் அது” என்றான் ஏழையானவன்.

  நம், இதயத்தின் ஆழத்தில் சென்று பார்த்தால், நாம் வெறும் பூஜ்யம் என்ற உண்மையை நேருக்கு நேர் சந்திக்கலாம். நம்முள் வெற்றிடம் உள்ளது. அது, பிரதமரானாலும் சரி அல்லது ஒரு சாதாரண தொழிலாளியானாலும் சரி, எந்த ஒரு மனிதனையும், வெறுமையை உணர வைக்கிறது.

  நம்மால், இதை எதிர்கொள்ள முடியாமல், தன்னைப் பற்றி, பல உருவகங்களை உருவாக்குகிறோம். நாம் செய்யும் வேலைகளிலும், இடங்களிலும், உறவு முறைகளிலும், சமூகம் முழுவதிலும், ஏன் நம்மிடம், நெருக்கமானவர்களிடம் கூட நாம் ஒரு நல்ல மனிதன்  என்று  உருவகப்படுத்திக் கொள்கிறோம்.

  ஆனால், வாழ்க்கை விநோதமானது. பொய் என்னும் அடித்தளத்தில். நாம் உருவாக்கியவை. ஓர் அடியை கொடுத்து உண்மையை நோக்கி நம்மை தள்ளுகிறது. அதனுடைய இடைவிடாத முயற்சியே, “நம்மை ஒரு பூஜ்யம்” என்று நமக்கு உணர்த்துவதுதான்.

  நமக்கு உள்ளேயும், வெளியேயும் உருவாக்கி வைத்துள்ள உருவகத்திற்கு அழிவு ஏற்படும், அபாயம் வந்தால், அப்போது, நமக்குள் பய உணர்வு எழுகிறது.

  பயம் என்பது செயலில் ஒருபோதும் இல்லை. அது, எதிர்பார்ப்பில், ஏமாற்றத்தில் நிகழும் உணர்வுதான் பயம். அது, மனதை அடக்கி ஆள்கிறது. பெரிதாக்கி காட்டுகிறது.

  அனுபவங்கள் பல வகையானவை. இவை அனைத்தும் படித்த  அறிவை  விட மேலானவை.  ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. அற்புதமானவை.  இந்த அனுபவங்கள் நமக்குள் ஆழப்பதிந்துள்ள நம்பிக்கையை, தன் முயற்சித் தன்மைகளைக் கண்டுபிடிக்கும் சக்தியைத்  தருகிறது.

  மனிதனுக்கு, அனுபவங்கள் தான் உண்மையான, முழுமையான, மாற்றத்தை தெளிவை, விடுதலையைக் கொடுக்கும். எல்லோருக்குள்ளும்,  இந்நிலை  வந்துவிட்டால்  சமூகத்தில், ஒருவருக்கு, மற்றவர்கள் மீது அக்கறை ஏற்படும்.

  இதனால் மதசம்மந்தமான சமூக ரீதியான, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுத்தும் பிளவுகள் விலகி, ஒற்றுமை வளரும். தான் தனி மனிதன் அல்ல. முழுமையின் ஓர் அங்கம் என்று உணர முடியும். ஆகவே, வாழ்க்கையில் ஏற்படும் இன்பதுன்பங்களை, வெற்றி தோல்விகளை, இலாப நஷ்டங்களை, அனுபவங்களாக  ஏற்றுக்கொள்ளுங்கள்.

  படித்து வரும் அறிவைவிட, பட்டு வரும் அனுபவம் சிறந்ததாகும். ஆக, அனுபவங்களை ஒதுக்காமல், அனுமதித்து அனுபவித்தால், அந்த அனுபவமே சிறந்த  ஞானமாகும். அதன்பின் பார்க்கும் அனைத்தும் ஆனந்தமாகும்.

  அனுபவத்தை அனுமதிப்போம்! ஆனந்தத்தை அனுபவிப்போம்!

  வெற்றி உங்கள் கையில்-19

  நன்றி மறக்கலாமா?

  அன்று ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

  அவர் உழைப்பால் உயர்ந்தவர். வறுமை நிலையிருந்து தன்னை மிகப்பெரிய நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு உயர்த்திக்கொண்டவர். மிகச்சிறந்த வெளிநாட்டு நிறுவனத்தில் “சி.இ.ஓ.”வாக பணிபுரிவதாக பெருமைப்பட்டுக் கொண்டிருப்பவர். அவரோடு கொஞ்சநேரம் தனியாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

  “சார்…. இந்தியாவில நான் படிச்ச படிப்புக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இப்ப பாருங்க வெளிநாட்டில எனக்கு நல்ல சம்பளம். நல்ல பதவி. சந்தோசமாக இருக்கிறேன். இப்போ நான் ஊருக்கு வந்தா என்னைச்சுற்றி ஒரு கூட்டம் வரும். நான் கஷ்டப்பட்டு பஞ்சாயத்து யூனியன் ஸ்கூல்ல படிக்கும்போது, ஒருத்தர்கூட எனக்கு உதவவில்லை. நானாகத்தான் படித்தேன். வீட்டில் அப்பா, அம்மாகூட என் படிப்புக்கு உதவவில்லை. கல்லூரியில் கஷ்டப்பட்டு படித்தேன். ஊர்க்காரர்களும், உறவுக்காரர்களும் கண்ணை மூடிக்கொண்டார்கள். இப்போது நான் நல்லநிலையில் இருக்கிறேன் என்பதை தெரிந்தவுடன் நெருங்கி வருகிறார்கள். அன்று உதவ மறுத்தவர்கள் இன்று உதவிகேட்டு நிற்கிறார்கள்” – என்று சற்று அழுத்தமாகவே கூறினார். “நன்றிகெட்ட உலகம்” என்று உலகத்தை நினைத்து வருத்தப்பட்டார்.

  தன்னுடைய முயற்சியால் மட்டுமே தான் இந்த நிலைக்கு வந்ததாகவும், இந்தநிலையை அடைந்ததாகவும் அவர் பெருமைப்பட்டுக்கொண்டார்.

  அந்த நண்பரது பேச்சு எனக்கு வித்தியாசமாகவே தெரிந்தது.

  “யாருடைய உதவியும் இல்லாமல், தானாகவே இந்த நிலையை அடைந்துவிட்டதாக அவர் பெருமைப்படுவது சரியில்லை” என்றே எனக்குத் தோன்றியது.

  “யாரும் உங்களுக்கு உதவ முன்வரவில்லையா? என்று நான் கேட்டேன்”.

  பெத்த “அம்மா அப்பாகூட உதவி செய்யவில்லையென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்” – என்று உணர்ச்சி வசப்பட்டு கூறினார்.

  எனது நண்பரது பேச்சு ஏன் இப்படி அமைந்தது? என்பதை சற்று சிந்தித்துப் பார்த்தேன்.

  “அடுத்தவர்கள் எல்லாம் எனக்கு உதவ வேண்டும்” என்றஎண்ணம் இளம்வயதில் பலரது மனதில் குடிகொண்டிருப்பதுதான் என் நண்பரது பேச்சுக்கு காரணமாக அமைந்தது என்பதை புரிந்துகொண்டேன்.

  “எனது இந்த எண்ணம் சரிதானா?” என்ற கேள்விக்கான விடையை அடுத்தவாரத்தில் நான் நடத்திய பயிற்சி வகுப்பில் தெரிந்துகொண்டேன்.

  அது தலைமைப் பண்புகளை வளர்ப்பது பற்றிய பயிற்சி. அந்தப் பயிற்சியில் சுமார் 40பேர் கலந்துகொண்டனர். பயிற்சியில் ஒரு பகுதியாக ஒரு கேள்வியை பயிற்சி பெறவந்தவர்களிடம் கேட்டேன்.

  “இன்று உங்களுக்கு யாராவது உதவி செய்திருக்கிறார்களா?. இப்போது காலை 11 மணி ஆகிறது. இந்த 11 மணிவரை இன்று உங்களுக்கு உதவி செய்தவர்கள் யார்?” என்றகேள்வியை கேட்டேன். வெள்ளைத்தாளில் பதில் எழுதித் தரும்படி சொல்விட்டு பதில் எழுத 10 நிமிடங்கள் அவர்களுக்குக் கொடுத்தேன்.

  மொத்தமுள்ள 40 பேரில் இரண்டு மூன்று பேரை தவிர, மற்றவர்கள் அந்த வெள்ளைத்தாளை அப்படியே திருப்பித் தந்தார்கள்.

  “இன்று காலை 11 மணிவரை யாருமே உங்களுக்கு உதவி செய்ததாக நீங்கள் உணரவில்லையா?” என்று அவர்களிடம் கேட்டேன். அவர்கள் “யாருமே எங்களுக்கு உதவி செய்யவில்லை சார்” – என்று சிரித்துக்கொண்டே ஒரே குரல் சொன்னார்கள்.

  “நான் சொல்வது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். இருந்தாலும் உங்கள் சிந்தனையில் கண்டிப்பாக மாற்றம் தேவை என்பதற்காக நான் இதனை சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறேன் என்று சொல்க்கொண்டே பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட ஒருவரை மேடைக்கு அழைத்தேன்”.

  “தம்பி நீங்கள் காலை 11 மணிவரை என்னென்ன செயல்களெல்லாம் செய்தீர்கள்? என்று கேட்டேன். அவர் தனது செயல்களைப் பட்டியட்டார்.

  “காலையில் படுக்கையிருந்து எழுந்தபின்பு, பல் துலக்கி, காபி குடித்து, பேப்பர் படித்து டிபன் சாப்பிட்டேன். பின்னர், பஸ்ஸில் ஏறி, பயிற்சி வகுப்புக்கு வந்துவிட்டேன் சார்” என்றார் அவர்.

  அவரிடம் இன்னும் சில கேள்விகளை நான் கேட்டேன்.

  “நீங்கள் காலையில் படுக்கையிருந்து எழுந்ததாகச் சொன்னீர்கள். உங்களுக்கு சுகமான உறக்கத்தை தந்த கட்டிலைச் செய்தவர் யார்? அதன்மேல் இருக்கும் மெத்தையை செய்தவர் யார்? அதன்மேல் விரிக்கப்பட்ட படுக்கை விரிப்பை செய்து உங்களுக்கு உதவியவர் யார்? தலையணையைத் செய்தவர் யார்? தலையணை உறையை தயாரித்தவர் யார்?

  நீங்கள் படுத்திருந்த படுக்கை அறையை கட்டியவர் யார்? அங்கு சுழலும் மின்விசிறியைச் செய்தவர் யார்? அதற்கு மின்சாரம் வசதியை உருவாக்கியவர் யார்? சுவிட்ச் செய்தவர் யார்? சிமெண்ட் தயாரித்தவர் யார்? பெயிண்ட் அடித்தவர் யார்?

  பின்னர் பல் துலக்கியதாகச் சொன்னீர்கள். உங்களது பேஸ்ட்டை செய்தவர் யார்? பிரஷ் செய்வதில் ஈடுபட்டவர்கள் யார்? குழாயில் தண்ணீர் வரச்செய்தவர் யார்? டேப்பை தந்தவர் யார்? வாஷ் பேஷனை தயாரித்தவர் யார்?

  பல் துலக்கியப்பின் காபி சாப்பிட்டதாகச் சொன்னீர்கள். அந்த காபியை விளைவித்தவர்கள் யார்? காபிப் பொடியை தயாரித்தவர் யார்? பாலை உங்கள் வீட்டிற்கு கொண்டு சேர்த்தவர் யார்? சீனியை தயாரித்தவர்கள் யார்?

  காபி குடித்தபின் பேப்பர் படித்ததாகச் சொன்னீர்கள். அந்த பேப்பரை தயாரித்தவர்கள் யார்? செய்தி எழுதியவர் யார்? அச்சடித்தவர்கள் யார்? அதனை உங்கள் ஊருக்குக் கொண்டுவந்தவர்கள் யார்? பேப்பர் படித்தபோது நீங்கள் அமர்ந்த நாற்காலியை தயாரித்தவர் யார்?

  பேப்பர் படித்து முடித்தபின்பு டிபன் சாப்பிட்டதாகச் சொன்னீர்கள். அதனை தயாரித்தவர் உங்கள் அம்மா என்பதையும் நீங்கள் மறந்துவிட்டீர்கள். பஸ்ஸில் வரும்போது டிரைவர், கண்டக்டர் என பலரது உதவி உங்களை அறியாமலேயே உங்கள்மீது படர்ந்திருக்கிறது. இதைக்கூட நீங்கள் உணரவில்லையென்றால் நன்றியை நீங்கள் எப்படி உணர்வுபூர்வமாக அறிந்துகொள்ள முடியும்?” – என்று கேட்டேன்.

  சிரித்தவர்கள் திகைத்தார்கள்.

  பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட இன்னொருவர் எழுந்தார். “நாங்கள் இப்படி நினைத்துப் பார்க்கவில்லை சார்” – என்றார்

  “நீங்கள் எப்படி நினைத்தீர்கள்?” என்று கேட்டேன்.

  “யாராவது பணம் கொடுத்து உதவினால்தான், அது உண்மையான உதவி என்று நினைத்திருந்தேன். பணத்தைக் கொடுத்துத்தான் இத்தனை வசதிகளையும் வாங்கியிருக்கிறோம். இதற்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்?” என்று அவர் கேட்டார்.

  பணத்தைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்? என்றபாணியில் சிலர் நினைப்பதால்தான் இன்று நம்மில் பலர் நன்றி மறந்தவர்களாக அலைகிறார்கள். “பணத்தைக் கொடுத்து நாயை வாங்கலாம். நாயின் அன்பை வாங்க முடியாது” என்பது சீன பழமொழி.

  பணம் கொடுத்தால்கூட பலருடைய அன்பும், பாசமும். உதவியும் இல்லையென்றால், எந்தச் செயலையும் சிறப்பாக நம்மால் செய்ய முடியாது.

  நம்மில் பலர் நமக்கு நேரடியாக உதவி செய்தவர்களை மட்டுமே, உதவி செய்தவர்களாக நினைத்து நன்றி உணர்வோடு இருக்கிறார்கள். பணம், பொருள், உடல் உழைப்பு, தர்மம், ஆதரவு, இரக்கம் என பல்வேறு நிலைகளில் நேரிடையாக நமக்கு உதவி செய்தவர்களை நம்மால் எளிதில் அடையாளம் காண இயலும். எனவே அவர்களுக்கு நன்றி சொல்வது கடினமான செயல் அல்ல. ஆனால், நமது நலனுக்காகவும், வளர்ச்சிக்காவும் நேரடியாக வந்து உதவாமல், மறைமுகமாக பலர்

  உதவியிருக்கலாம். சிபாரிசு, தொலைபேசிமூலம் ஆதரவு, நாம் பயன்படுத்துவதற்காக பொருட்களை உற்பத்தி செய்வது என வெவ்வேறு நிலைகளில் மறைமுகமாக நமக்கு உதவி செய்தவர்கள் பலர் இருப்பார்கள். அவர்களையும் இனம்கண்டு தகுந்த நேரத்தில் நன்றி சொல்ல பழகிக்கொள்ள வேண்டும்.

  ஆதரவு தந்த அம்மா, அப்பா, அரவணைத்து நிற்கும் அண்ணன், தங்கைகள், பக்கபலமாக இருந்த பக்கத்துவீட்டுக்காரர்கள், ஊக்கத்தோடு உற்சாகப்படுத்தும் உறவுக்காரர்கள், உங்களைப் பாராட்டும் ஊர்க்காரர்கள், அழகாய் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர்கள், இலவச கல்வி தந்த இந்திய அரசு – எனப் பலரிடம் பல்வேறு விதமான உதவிகளை நீங்கள் பெற்றிருப்பதை மறந்துவிடக்கூடாது.

  “ஒருவர் செய்த நன்றியை மறந்தவர்களுக்கு இந்த உலகத்தில் உயர்வு இல்லை என்பது திருவள்ளுவரின் அழுத்தமான சிந்தனை ஆகும். எனவே நமக்கு உதவியவர்களுக்கு நாம் நிச்சயமாக நன்றி சொல்ல வேண்டும். அதேபோல் மற்றவர்களுக்கும் பலனை எதிர்பாராமல் உதவ முன்வர வேண்டும்” – என எனது கருத்தைச் சொன்னதும் அதனை மகிழ்வுடன் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

  உலக அளவில் சிறந்த வெற்றியைப் பெற்றவர்கள் எல்லாம் தங்களுக்கு உதவிய நல்ல உள்ளங்களை நாள்தோறும் வணங்குகிறார்கள். கற்றுத்தந்த ஆசிரியர்கள், சிறப்பைப் பெற்றுத்தந்த நண்பர்கள், உறவினர்கள் என பட்டியலிட்டு, உதவி செய்தவர்களை நன்றியோடு நாள்தோறும் பேணி பாதுகாத்து வருகிறார்கள்.

  “இளம் வயதிலேயே நன்றியுணர்வை வளர்த்துக்கொண்டவர்களால்தான் வளமான வாழ்க்கையை வளர்த்து, மகத்தான வெற்றியைப் பெற்று, சிறப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும்” என்பதை உணர்ந்துகொண்டால் வெற்றி என்னும் சொல் நம்மோடு நிரந்தரமாக எந்நாளும் தங்கிவிடும்.

   

  அதிவிரைவு செயல்திறன் குறைபாடு

  (Attention Deficit Hyperactive Disorders – ADHD)

  அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கும் குழந்தைகளல் இருந்து சில குழந்தைகள் முற்றிலும் வேறுபட்டு காணப்படுவர். அதாவது அக்குழந்தைகளால் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக சிறிது நேரம் கூட அமர முடியாது. அவர்கள் தங்களை ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர் களாகவே காணப்படுவர். அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் முழுமையாக செய்து முடிக்க மாட்டார்கள். எதையும் செய்வதற்கு முன் அவர்கள் யோசிக்க மாட்டார்கள். இம்மாதிரிக் குழந்தைகள் வகுப்பறைகளல் சரியான கவனத்துடன் செயல்பட மாட்டார்கள். இவர்கள் மற்றவர்கள் கூறும் எந்த ஒரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள மாட்டார்கள்.

  இம்மாதிரி கவனமில்லாத மற்றும் உத்வேகத்தன்மை அதிகமாக வெளிப்படுத்தும் குழந்தைகளுக்கு ADHD என்ற குறைபாடு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

  காரணங்கள்

  இக்குறைபாடு ஏற்படுவதற்குப் பலவிதமான விஞ்ஞானப் பூர்வமான கோட்பாடுகள் மட்டுமே உள்ளன. அதன்படி மூளையில் ஏற்படும் சிறிதளவான பாதிப்பு கூட இந்நோய் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக உள்ளது. இக்குறைபாட்டிற்கும், வீட்டின் சூழ்நிலை அமைப்புக்கும் எந்த ஒரு தொடர்பும் இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

  ADHDக்கு உண்டான தனிப்பட்ட குணாதிசயங்கள்

  இக்குறைபாடு கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு சில பிரத்தியேகமான குணாதிசயங்கள் காணப்படும். அவை பின்வருமாறு

  • கவனமின்மை
  • எண்ணங்களல் தடுமாற்றம்
  • எந்த ஒரு விஷயத்திலும் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்த இயலாமை
  • அதிகமான செயல்திறன், சுறுசுறுப்பு (Hyperactivity)
  • எதையாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் (Impulsivity)

  கண்டுபிடிக்கும் முறைகள்

  *  கவனமின்மை (Inattention )

  பின்வரும் அறிகுறிகளல் ஆறு அல்லது அதற்கும் மேற்பட்டவை தொடர்ச்சியாக ஆறு மாதங்களாவது இருந்து அவை அக்குழந்தையின் செயல்களல் பக்குவமின்மையை ஏற்படுத்தினால் அது ADHD ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

  • அடிக்கடி கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயங்களல் கவனம் செலுத்தாமல் இருத்தல், பள்ள சம்பந்தமான வேலைகளல் அஜாக்கிரதையாகத் தவறிழைத்தல், மற்ற விஷயங்களலும் தவறிழைத்தல்.
  • பலமுறை தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வேலையை முடிக்க வேண்டிய இடங்களல் முடிக்க இயலாமல் சிரமப்படுதல் அல்லது விளையாட்டு சம்பந்தமான செயல்களல் தொடர்ச்சியாக ஈடுபட முடியாமல் இருத்தல்.
  • பலமுறை அவர்களுடன் நேரடியாக பேசும் போது அதை உற்றுக் கேளாமல் இருத்தல்.
  • பலமுறை குறிப்புகள் அளத்தும் அதன்படி நடக்காமல் இருத்தல் மற்றும் பள்ளயில் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதிலிருந்து தவறுதல்.
  • பலமுறை ஒழுங்குபடுத்தி முடிக்க வேண்டிய வேலைகள் மற்றும் செயல்களல் சிரமப்படுதல்
  • தொடர்ச்சியாக மனதை ஒருநிலைப்படுத்தி ஈடுபடும் வேலைகளை அடிக்கடி தவிர்த்தல் அல்லது தயக்கம் காட்டுதல். (எ.கா.) பள்ளக்கூட வேலைகள், வீட்டுப்பாடம் செய்தல்.
  • ஏதாவது ஒரு வேலையை முடிப்பதற்கு தேவையான பொருட்களை அடிக்கடி தொலைத்தல். உதாரணமாக பென்சில், புத்தகம், பேனா, பொம்மைகள்.
  • தினசரி செய்யும் செயல்களை அடிக்கடி மறந்து போதல்
  • அடிக்கடி கவனத் தடுமாற்றம் ஏற்படுதல்

  *  அதிகமான செயல்திறன் ( Hyperactivity )

  • ஒரே இடத்தில் தொடர்ச்சியாக அமர்ந்து அவர்களால் வேலை செய்ய இயலாதிருத்தல்.
  • வகுப்பறையில் உட்கார்ந்த இடத்தில் இருந்து அடிக்கடி எழுதல் அல்லது ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதற்குச் சிரமப்படுதல்.
  • விளையாட்டுப் பயிற்சிகளல் பங்கேற்பதிலும், அமைதியாக ஈடுபட வேண்டிய செயல்களை முடிப்பதிலும் பலமுறை சிரமப்படுதல்.
  • அடிக்கடி தேவையில்லாமல் அதிகமாகப் பேசிக்கொண்டிருத்தல்.

  *  உத்வேகத்தன்மை (Impulsivity)

  • பலமுறை, கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே யோசனையின்றிப் பதிலளத்தல்
  • எதையும் காத்திருந்து முறைப்படி செய்வதில் கஷ்டப்படுதல்.
  • அடிக்கடி மற்றவர்களைத் தடை செய்தல் அல்லது இடையூறு விளைவித்தல்.
  • சில அதிக செயல்திறன் – உத்வேகம் அல்லது கவனமின்மை அறிகுறிகள் ஏற்படுத்தும் குறைபாடுகள் 7 வயதுக்கு முன்னதாகவே காணப்படும்.
  • சில பேருக்கு இப்பிரச்சனைகள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட சூழ்நிலைகளலும் காணப்படும் (எ.கா. பள்ள மற்றும் வீடு)
  • சமுதாயம், கல்வி மற்றும் வேலை போன்றவற்றில் குறைபாடுகள் காணப்படும்.

  குழந்தைகளன் பெற்றோர்கள் மற்றும் ஆசியர்களை நேரடியாக அணுகுவதன் மூலம் குழந்தையைப் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். எந்த மாதிரி சூழ்நிலைகளல் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதையும் அறிய முடியும்.

  சிகிச்சை முறைகள்

  *  மருந்துகள்

  மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தைகளுக்கு மருந்துகளை அளக்க வேண்டும். இம்மருந்துகள் குழந்தைகளன் கவனத்தை அதிகரிக்கவும் மற்றும் உத்வேகத்தன்மையை குறைப்பதற்காகவும் தரப்படுகிறது.

  *  மனோதத்துவ சிகிச்சை ( Psychotherapy )

  இச்சிகிச்சையினால் மனோதத்துவ நிபுணர் குழந்தை களடம் தனிப்பட்ட முறையில் பேசி, அக்குழந்தைகளன் அடிப்படை பிரச்சனைகளையும் மன உணர்ச்சிகளையும் அறிந்து கொள்வர். அவர்கள் அக்குழந்தைகளடம் எவ்வாறு தங்களை மாற்றிக் கொள்ள முடியும் மற்றும் சூழ்நிலைகளல் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றியும் அவர்களுக்குப் பயிற்சி அளப்பர்.

  *  தொழில் வழி பயிற்சியாளர் மற்றும்

  சிறப்பு ஆசிரியர்

  தொழில் வழி பயிற்சியாளர் இக்குழந்தைகளன் அதிகமான செயல்திறன் மற்றும் உத்வேகத்தன்மையைக் குறைத்து அவர்களன் கவன சக்திக்கு பயிற்சியளப்பர். சிறப்பு ஆசிரியர் குழந்தையின் திறமைக்கேற்ற கல்வி பயிற்சிகளை அளப்பார்.

  *   நல்லொழுக்கப் பயிற்சி ( Behavioural Therapy )

  இச்சிகிச்சை முறை குழந்தைகளுக்கு தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்வதற்கும், அதிகப்படியான தூண்டுதல்களைச் சமாளத்து அவர்களை நல்வழியில் நடப்பதற்குப் பயன்படுகிறது. இது குழந்தைகள் தங்கள் வேலையில் கவனம் செலுத்துவதற்கும், தங்களுக்கு அளக்கப்பட்ட வேலையை முடிப்பதற்கும், மேலும் உணர்ச்சியான சூழ்நிலைகளல் அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் உதவி செய்கிறது. மேலும் அவர்களே அவர்கள் நடத்தையைக் கண்காணித்து மேலும் அதைச் சிறப்பான வழியில் நடத்துவதற்கும் உதவி செய்கிறது.

  சமூகம் சம்பந்தமான திறமைகளை வளர்ப்பதற்குப் பயிற்சி அளப்பதன் மூலம் குழந்தைகளுக்குச் சமுதாயத்தில் மற்றவர்களுடன் பழகுவது மற்றும் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும். மேலும் அவர்கள் மற்றவர்கள் கேள்விகளுக்கு எவ்வாறு சரியாகச் சிந்தித்துப் பதிலளக்க வேண்டும் என்பதற்கும் பயிற்சிகள் மூலம் கற்றுத்தருவர். இதன் மூலம் மற்றகுழந்தைகளுடன் நெருங்கி விளையாடுவதற்கும் மற்றும் படிப்பதற்கும் உதவியாய் இருக்கும்.

  *  பெற்றோர்களுக்கு ஆலோசனை

  பெற்றோர்களுக்குத் தங்கள் குழந்தைகளன் நடத்தை பற்றி விளக்கி அவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பயிற்சி அளக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு அளக்க வேண்டிய பயிற்சி முறைகள் பற்றி அவர்களுக்கு சொல்லித் தரப்படும்.

  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களை நிதானமாக அவர்களுக்குச் சொல்லித்தந்து பழக்க வேண்டும். இக்குழந்தைகளைப் பாராட்டுவதன் மூலம் அவர்களை உற்சாகமூட்டி அப்பழக்கத்தைத் தொடரச் செய்யலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கவனமாக ஆராய்ந்து அவர்களடம் உள்ள நல்ல பழக்க வழக்கங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அவர்களுக்குச் சிறுசிறு வேலைகளைக் கொடுத்து முடிக்கச் சொல்ல வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்து முடிக்கும் போது அவர்களைப் பாராட்டிப் பரிசுகள் வழங்கலாம். இதன்மூலம் குழந்தைகளுக்கு ஒரு வேலையை முழுமையாக முடிப்பதற்குப் பழக்க முடியும்.

  அதிவிரைவு செயல்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு அளக்கப்படும் சிகிச்சை முறைகளானது நீண்ட காலத்திற்குத் தேவைப்படும். அதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளைத் தொடர்ந்து அளக்க வேண்டும். இவ்வாறு அளக்கப்படும் பயிற்சி முறைகளாவது குழந்தைகளன் வாழ்க்கைத் தரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், அவர்கள் சமுதாயத்தில் எந்த வேறுபாடும் இன்றி மற்றவர்களுடன் இயல்பாகக் கலந்து வாழ்வதற்கும் அவர்களைத் தயார்படுத்துவதாகும்.

  மிகப்பெரும் வெற்றிக்குப்பின் கர்வம் கொள்ளுவது தவறா?

  சூரியன் மறைந்ததும் இரவில் தென்படுகிற மின்மினிப் பூச்சிகள் உலகத்திற்கு தாங்கள்தான் வெளிச்சம் தருவதாக நினைத்துக் கொள்கின்றன.

  ஆனால் நட்சத்திரங்கள் பிரகாசிக்கும் போது மின்மினிப்பூச்சிகளின் கர்வம் அடங்கி விடுகிறது

  ஆனால் முன்இரவில் சந்ரோதயம் ஆனதும் சந்திரன் ஒளியில் நட்சத்திரங்கள் மங்குகிறது அப்போது உலகம் முழுமைக்கும் வெளிச்சம் கொடுப்பது  தான்  தான் என்று சந்திரன் கர்வம் அடைகிறான்

  சூரியன் உதயம் ஆகும் போது  சந்திரன் மறைந்து மங்கிப் போகிறான் நமது செல்வம் குறித்தோ வேறு செல்வாக்குகள் குறித்தோ செல்வந்தர்கள் செருக்குற வேண்டாம்.

  “நம்மைக்காட்டிலும் பெரியோர் இந்த உலகில்  இருக்கின்றார்கள் என்று நினைக்க வேண்டும் என சொல்லித் தருகிறார்  பகவான்  இராம கிருஷ்ண பரமஹம்சர்” மித மிஞ்சிய தன்னம்பிக்கை தோன்றும் போது எனது கடந்த கால தொல்விகளை எண்ணுவேன் வரம்பில்லாது  எதையும் அனுபவிக்கும் நிலையில் எனது கடந்த கால பசியை எண்ணிக் கொள்வேன்;

  மெத்தனமாக இருப்பதை உணரும் போது எனது களத்திலுள்ள போட்டிகளை நினைவில் கொள்வேன்;

  எனது பெருமைகளை எண்ணி  மகிழும் போது  நான் அவமான  அடைந்த தருணங்களை  நினைவிற்கு கொண்டு வருவேன்; நான் வல்லமை மிக்கவன் என்றஉணர்வு வரும் போது வீசுகின்றகாற்றை நிறுத்த முயல்வேன்; அதிகளவு செல்வம் சேரும் போது உணவு கிடைக்காத வாய் ஒன்றை எண்ணிக் கொள்வென்;

  என்னைப்பற்றி கர்வப்படும் போது எனது பலவீனமான  குணங்களை நினைவில் கொள்வேன்; எனது திறமைகள் இணையற்றவை என பெருமைப்படும் போது உயரத்திலுள்ள நட்சத்திரங்களை நோக்குவேன்  என தன் அனுபவத்தைப் பதிவு செய்கிறார் ஓக் மாண்டினோ.

  நான் உங்களைவிட பணக்காரன் எனவே நான் உங்களை விடவும் உயர்ந்தவன்;

  நான் உங்களைவிட பேச்சாற்றல் மிக்கவன் ஆகையால் நான் உங்களை விடவும் உயர்ந்தவன் எனச் சொல்வது முரண்பாடனதாகும். வாதத்திற்கும் ஒவ்வாததும்கூட நான் உங்களை விடவும்  பணக்காரன் எனவே  எனது சொத்து  உனது

  சொத்தைவிட உயர்ந்தது எனவும், நான் உங்களை விட  பேச்சாற்றல் மிக்கவன் ஆகையால்  “எனது உரை உனது உரையை விடவும் மேலானது” .என்று சொல்வதே பொருத்தமானதாகும்.

  இத்தகைய செல்வத்தை விடவும்  பேச்சாற்றலை விடவும் மனிதன் சிறிதளவு உயர்ந்தவன் என்பதை அறிய வெண்டும் என வழிப்படுத்துகிறார் –

  ஞானி எபிக் டேட்டஸ்

  ஒரு மனிதன் தன் வாழ்வில் ஏதாவது ஒரு சாதனையைச் செய்து முடிக்கும் போது  வெற்றியின் களிப்பிலிருக்கும் போது விருதுகளை பெறும் போது  மற்றவர்களின் பாராட்டுக்கள் கிடைக்கும்  போது அறிவார்ந்த  தன்மனைவி, மக்கள் இவர்களால் பெருமை பெறும் போது கடுமையான போட்டிகளிலே வெல்லும் போது தான் நிர்வகிக்கும்  நிறுவனம் தர வரிசையில் தன்னால்  முதலிடம் பெறும் போது தான் சொன்ன யோசனைகள் ஒத்துக்கொள்ளப்பட்டு அமல்படுத்தும் போது  தன்னை ஊடகங்கள் படம் போட்டு  பாராட்டும் போது அரசு பல விருதுகளினால் கௌரவிக்கும் போது

  கல்வியில் சிறந்தவர்கள் தன் திறமைக்கான அங்கீகாரம் தரும் போது, தன் அறிவுக்கூர்மையால்  அவிழ்க்க முடியாத சிக்கல்களை எளிதாக தீர்க்கும் போது, வரலாற்றில் தன் பெயரை பதிவு செய்த  போது, சமுதாயத்தில் ஒரு அந்தஸ்தும்  அங்கீகாரமும் கிடைக்கும் போது, தன் உதவியால் உயிர் ஒன்று  காப்பாற்றப் பட்ட போது,  தன்னால் தான் சார்ந்த நிறுவனத்திற்கு பல கோடி  ரூபாய் லாபம் கிடைக்கும் போது  தன் தனிப்பட்ட வாழ்க்கையின் ஒழுக்கத்தினால்  பெருமைப்படும் போது,  விலை உயர்ந்த  உடைகள் அணியும் போது சொந்தமான விலை உயர்ந்த  கார்களிலே பயணிக்கும் போது விலை மதிக்கமுடியாத ஆபரணங்களை அணியும் பொது நீ அழகாக இருக்கிறாய் என்று மற்றவர்கள் நம்மை சொல்லும் போது மனதளவில்  ஒவ்வொருவரும் கர்வம் கொள்வது இயல்பாகும்.

  இப்படி வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் பல காரணங்களில் ஒவ்வொரு மனிதனும்  தன்னைப்பற்றி கர்வப்பட்டுக் கொள்வதுண்டு  இதைப் போன்று பெருமையில் வருகிற கர்வங்கள்  கண்டிப்பாக மனமகிழ்ச்சியையும் சந்தோஷ   அதிர்வுகளையும் உண்டாக்கும்.

  ஒரு மனிதனுடைய  கர்வம்  தனக்கோ, தன் குடும்பத்திற்கோ,   தான் சார்ந்துள்ள துறைக்கோ பணி புரியும் நிறுவனத்திற்கோ ஒரு மகிழ்ச்சியும், ஆனந்ததையும் தரும் என்றால் அதில்  எள் முனை அளவு கூட தவறில்லை.

  ஆனால் ஒரு மனிதனுடைய கர்வத்தினால்  மற்றவர்களுக்கு துன்பமும், தீங்கும் உண்டாகுமேயானால் சமுதாயத்திற்கு ஒரு பாதிப்பு உண்டாகுமேயானால் தான் சார்ந்துள்ள துறைக்கும்,  தான் பணி புரியும் நிறுவனத்திற்கும்  அதனால்   ஏதாவது ஒரு வகையில் இழப்பு  ஏற்படுமேயானால்  அந்த கர்வம் தவறானது.  தீங்கு  விளைவிப்பது,  தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

  மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. பாரத யுத்தம் முடிந்த பிறகு தர்மர் மாமன்னர் ஆக பதவியேற்றப்பிறகு ஒரு மாபெரும் விழா எடுக்கப்படுகிறது.  போரில் வெற்றி பெற்று, சாதனை புரிந்த வீரர்களுக்கு நடந்த பாராட்டு விழா  அது.  பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் அரங்கத்திலே நடக்கும் விழா.  ஒவ்வொரு பிரிவு  சாதனை புரிந்த போர் வீரர்களுக்கும் அவர்களது  முகமுன் கூறி அவரின் சாதனை முன்மொழியப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்படுகிறார்கள்.

  தேர்ப்படையில் தேரில் நின்று போர் புரிபவனுக்கு  அதிரதன் என்று பெயர் அதிரதர்கள் மைதானத்திற்கு தேரோடு வருவார்கள். கூட்டத்தில் தேர் வந்து நின்றதும் தேரோட்டி முதலிலே  இறங்கி தேரிலிருக்கும் வீரன் இறங்குவதற்காக கைதாங்கல் தர வேண்டும். தேரில் இருந்து இறங்கும் வீரன் இந்த தேரோட்டியினுடைய  இரு கரங்களின் மேல்  கால் வைத்து இறங்குவது மரபு.

  அர்ஜுனின் முறை  வருகிறது. இப்போது அர்ஜுனன் மனதிலே ஒரு சிறு கர்வம் உண்டாகிறது . மரபுபடி தான் இறங்கும் போது தனக்கு முன் தேரோட்டி  கண்ணன் இறங்கி  தான் இறங்குவதற்கு கைதர வேண்டும். தனக்காக கண்ணன்  தேரிலிருந்து முன்னதாகவே இறங்கி கையில் தாங்கு கொடுப்பதாக எதிர்பார்த்து சற்று மகிழ்ந்து கர்வம் கொள்கிறான்.

  தேர் நிற்கிறது.  தேரோட்டி கண்ணன் தேரை விட்டு இறங்கவில்லை.  முக்காலமும் அறிந்த கண்ணன் அர்ஜுனனுடைய மனத்தில் இருக்கும் கர்வத்தையும்  அறிந்து கொள்கிறான். கண்ணன் அர்ஜுனனை நோக்கி “அர்ஜுனா தேரை விட்டு இறங்கு”  என்கிறான்.  இதை சற்றும்  எதிர்பாராத அர்ஜுனன் திகைத்து

  “கண்ணா  மரபுப்படி நீ தானே முதலில் இறங்க வேண்டும்”  என்று கேட்கிறான்.

  “நீ முதலில் இறங்கு  மற்றதை பின்னால் பார்க்கலாம்” என்று கண்ணன் சொல்கிறான்.

  சற்று ஏமாற்றத்தோடு அர்ஜுனன் தேரிலிருந்து இறங்குகிறான். அர்ஜுனன் இறங்கி சற்று தள்ளி நின்றதும், தேரோட்டியான கண்ணபிரானும்  தேரை விட்டு இறங்குகிறான். கண்ணன் தேரை விட்டு இறங்கியதும்  தேரின் கொடியில் அமர்ந்திருந்த அனுமனும் தேரிலிருந்து  இறங்கி விடுகிறான்.  இவர்கள் இறங்கிய ஒரு வினாடியில் திடிரென்று தேர் தீப்பற்றி முழுவதுமாக எரிகிறது. அர்ஜுனன் அதிர்ச்சி அடைகிறான். கண்ணன் அமைதியாக சொன்னார்.  “அர்ஜுனா நீ சற்று கர்வப்பட்டதையும்  நான் அறிவேன் . நீ எதிர்பார்த்தப்படி  நான் தேரிலிருந்து  முதலில் இறங்கி இருந்தால் தேரின் கொடியிலிருந்த அனுமனும்  இறங்கி விடுவான்.  நாங்கள் இருவரும் இறங்கி விட்டால் போரின் போது இந்தத் தேரின் மீதும் உன் மீதும் வீசப்பட்ட  அஸ்திரங்கள் இந்தத் தேரை  எரித்து விடும் என்பது எனக்கு  தெரியும். நாங்கள் முன்பு இறங்கி இருந்தால்  தேரில்  இருந்த நீயும் தேரோடு எரிந்து இருப்பாய்.   அதனால்தான் உன்னை காப்பதற்காகத்தான்  தேரிலிருந்து  உன்னை முதலில் இறங்கச் சொன்னேன்”  என்று  சொன்னான்  கண்ணன்.

  இது போல  நாம் மனதளவிலே கொள்கிற கர்வங்கள்  மற்றவர்களுக்கு துன்பம் உண்டாகும் போது  நம்மை அது முழுமையாக பாதிக்கும். நம்மை விட திறமைமிக்கவர்கள்   இருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்து சாதனையாளர்கள் சற்று  கர்வத்தை  குறைத்துக் கொண்டு  பணிவோடு இருப்பது நலம்  தரும்.  கர்வத்தை தருகிற தன்னம்பிக்கையை விட அடக்கமான ஆற்றலை பெருக்குகின்ற, உந்து சக்தியையும்   உத்வேகத்தையும் தருகின்ற,  வெற்றியின் உச்சத்தை தொட்டுப்பார்க்கிற தன்னம்பிக்கையே மேன்மையானது.

  மிகப்பெரும் வெற்றிக்குப் பின் அதைப்பற்றி அளவுக்கு அதிகமான கர்வம்  கொள்ளாமல்  பெருமிதம் கொள்ளலாம்.  மகிழ்ச்சி அடையலாம்.  அளவுக்கு  மீறிய கர்வம் ஆபத்தை உண்டாக்கும்.  அடுத்து நாம் இறங்கும் முயற்சியில்  ஏற்கெனவே இதைப் போன்று வெற்றி பெற்று விட்டோம்  அதனால் இதையும்  வெற்றி அடைந்து விடுவோம்  என்றகர்வம்  ஒரு மெத்தனத்தை உண்டாக்கி அடுத்த முயற்சிகளில் ஒரு தொய்வினை ஏற்படுத்தி வெற்றி வாய்ப்பினை தடுக்கும்.

  அளவோடு கர்வம் கொள்வது ஆபத்தில்லை. அளவுக்கு மிஞ்சினால்  அமிர்தமும்

  நஞ்சாகும்.

  “வெற்றியோ தோல்வியோ எது வரினும் கடமையைச் செய்வொம்.

  கர்வம் கொள்ளாமல் இருப்போம்.

  யார் பாராட்டினாலும் பாராட்டா விட்டாலும் கவலை வேண்டாம்

  நமது திறமையும் நேர்மையும் வெளிவரும்  போது பகைவனும்  நம்மை  பாராட்டி   மதிக்கத்  தொடங்குவான்”.

  வெற்றித் திருமகள் ஆரத்தழுவுகிறாள்

  சாவியைப் பார்த்து, சுத்தியல் கேட்டது, உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அது எப்படி? அதற்கு சாவி சொன்னது. நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக்கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தை தொடுகிறேன். அதுபோல் ஒருவரை அறிவு ரீதியாக அணுகுவதை விட, உணர்வு ரீதியாக இதயத்தை தொடும்படி மென்மையாக அணுகினால் எதையும் சாதிக்க முடியும்.

  தற்காலத்தில் மனிதர்களின் சிந்தையை வசப்படுத்துவது எப்படி? வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? எண்ணற்ற சிந்தனையாளர்கள் கருத்தோவியங்கள் பலவற்றை எழுதிக்குவித்துள்ளனர். வாழ்க்கையில் வெற்றி பெற்ற மனிதர்கள் அனைவரும் இப்படி நூல்களைப் படித்தறிந்து தான் வெற்றிப் பெற்றார்களா? இல்லை! ஆனால் அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நாமும் வெற்றியடையலாம் என்பதே கருத்து.

  நான் பெற்ற சிறந்த ஆலோசனை என்ற தலைப்பில் ஆர்தர் கார்டன் பின்வருமாறு கூறுவர்: ஒருமுறை நான் பிரச்சனைகள் நிறைந்த விஷயத்தைப் பற்றி முடிவு எடுக்க வேண்டியிருந்தது. என்னை விட வயதில் மூத்தவரும் அனுபவமும் அறிவும் – உள்ள நண்பர் ஒருவரை அணுகினேன். நான் நிச்சியமாக இதைமுடித்திட இயலும் என நம்பினால் நான் இதனைத் தொடங்கிவிடுவேன். ஆனால்…

  என் நண்பர் என்னைச் சில நிமிடங்கள் உற்று நோக்கினார். பின் ஒரு காகிதத்தில் 10 வார்த்தைகளை எழுதி அதனை என்னிடம் கொடுத்தார். என்னுடைய வாழ்வில் நான் பெற்ற தலைசிறந்த ஆலோசனை அது. “BE BOLD – AND MIGHTY FORCES WILL COME TO YOUR AID” “துணிந்து நில் வலிவான சக்திகள் உனக்குத் துணை வரும்” எனது சிந்தனையை சிறகடித்து பறக்கச் செய்தன இந்த மந்திர வார்த்தைகள். கடந்த காலங்களில் நான் எங்கெல்லாம் தோற்றேனோ அங்கெல்லாம் நான் ஏன் தோல்வியைத் தழுவினேன் என்பதை அவை படம் பிடித்துக் காட்டின.

  “பல காரியங்களை நான் முறையாகச் செய்ய முயற்சித்துத் தோல்வியடையவில்லை – மாறாக தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்ச உணர்வே என்னை முறையாக முயற்சிப்பதிருந்து தடுத்துவிட்டிருக்கின்றது. எல்லா உணர்வுகளிலும் – அச்ச உணர்வே மிகவும் ஆபத்தானது. சிந்தனையைக் குழப்பி தன்னம்பிக்கையைத் தகர்த்தெறியும் – தன்மை படைத்தவை.

  எப்போதெல்லாம் நான் துணிவினால் உந்தப்பட்டு சிரமமான காரியங்களையும் – அச்சமின்றி ஏற்றுக் கொண்டேனோ அப்போதெல்லாம் – வெற்றி பெற்றுள்ளேன். ஊக்கத்துடன் செயல்படும்போது சந்தர்ப்பங்கள் என் எதிர்நீச்சலுக்கு துணை வருவதைக் கண்டிருக்கிறேன்.

  துணிவே துணை என நான் கூறும்போது கவனமின்றியும் புத்திசாலித்தனம் இன்றியும் செயல்பட நான் அழைக்கின்றேன் என்று பொருள் அல்ல. துணிவு தெளிவான தீர்மானத்தின் அடிப்படையில் இருத்தல் வேண்டும்.

  வலுவான சக்திகள் என்று நான் குறிப்பிடுபவை நமக்குள்ளேயே உள்ள சக்தி, தெளிவாக சீர்தூக்கும் திறன். புதுமையான கருத்துக்கள், உடல்வலிவு இத்தனையையும் குறிக்கும்.

  துணிவு உடல் கூறுகளிலேயே மாறுதல்களை ஏற்படுத்துகின்றது. ஒருமுறை தலைசிறந்த மலை ஏறுபவர் ஒருவர் கூறினார். “சில நேரங்கள் மலை ஏறுபவர் கீழே இறங்க இயலாது. மேலேதான் செல்லமுடியும் – என்ற சூழ்நிலையில் இருப்பார். அவர் மேலும் சொன்னார். பல சந்தர்ப்பங்களில் நான் வேண்டுமென்றே இத்தகைய இடங்களை அடைய முயன்றிருக்கிறேன். அப்போது மேலே தான் சென்றாக வேண்டும். தன்னம்பிக்கையுடன், துணிவுடன் எதிர்கொள்ளும் போது எதனையும் சமாளிக்க இயலும் வாழ்வில் ஏமாற்றங்களும் தோல்விகளும் வரத்தான் செய்யும். தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தின் காரணமாக எந்தமுயற்சியும் செய்யாதிருப்பவரை விட முயன்று தோல்வியடைபவர் எத்தனையோமேல்.”

  வணிக உலகில் வெற்றி மாலை சூடியவர்கள் சிறந்த தன்னம்பிக்கை, துணிவு மற்றும் நிலையான முடிவுகளுடன் செயல்படும் ஆற்றல் ஆகிய குணநலன்களைப் பெற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

  எனக்குத் தெரிந்த வணிக வல்லுநர் ஒருவர் முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதில் வல்லவர்? அவர் சொல்வார் குறைந்தபட்சம் என் தவறுகளையாவது நான் உடனுக்குடன் செய்து வருகின்றேன். அவரிடம் கேட்டார்கள் எண்ணித் துணிக கருமம் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? மகிழ்வுடன் அவர் சொன்னார். அந்தப் பழமொழியில் உள்ள சிரமம் – என்னவென்றால் எண்ணிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்… எந்த காரியத்தையும் செய்ய முடியாது.

  பாதுகாப்புடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் எதையும் எதிர்கொள்ளும் துணிவையும் முயற்சியையும் மழுங்கச் செய்து விடுகின்றது. “வாழ்வில் சவால்களை சந்திக்க அஞ்சாதீர்கள் உங்களுடைய சக்திக்கு அதிகமான முறையிலே வாழ முயற்சி செய்யுங்கள். நீங்கள் கனவிலே கூட காணாத அளவு சக்தி உங்களுக்கு இருப்பதை உணர்வீர்கள்”

  வெற்றி என்பது ஒரு தந்திரச் செயலோ அல்லது புரியாத புதிரோ அல்ல. அடிப்படைத் தன்மைகளை முறையாகவும் இடைவிடாமலும் பின்பற்றுவதன் விளைவாக இயற்கையாகவே வெற்றியை அடைய முடியும்.

  சந்தர்ப்பங்கள்  சராசரி மனிதனையும் – சாதனை மனிதனாக்கும். வேலை தேடித்திரியும் – ஒரு பட்டதாரி இளைஞன் – பத்திரிகை ஆபிஸில் வேலை என்ற விளம்பரம் கண்டு நேரில் செல்கிறான்.

  அங்கே மேலும் ஒரு இளைஞன் +2 மட்டுமே படித்தவனும் வேலை கேட்டு நிற்கிறான். இருவரில் யாருக்கு வேலை கொடுக்கலாம் என்று ஆபிஸில் ஆசிரியர் இருவருக்கும் ஒரு அஸைன்மெண்ட் கொடுக்கிறார். துறைமுக கப்பல் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்! – இதுவே அஸைன்மெண்ட் முதலாவதாக சென்ற பட்டதாரி இளைஞன் வந்தான். பத்திரிக்கை ஆசிரியர் அவனை பார்த்து கேட்டார். சுதந்திர தின விழா செய்திகளை சேகரித்தாயா? அதற்கு அவன் கூறினார். என் கெட்ட காலம் நான் மாவு விற்கப்போனால் காற்றடிக்கிறது! உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது. கப்பலில் எந்த கொண்டாட்டமும் நடக்கவில்லை. எனவே செய்தியை சேகரிக்கவில்லை. காரணம் கப்பல் ஓட்டை விழுந்திருக்கிறது. சுதந்திர தின விழா ஏற்பாடுகளில் மும்மரமாக இருந்ததால் யாரும் கவனிக்கவில்லை. தீடீரென ஓட்டைப் பெரிதாகி கடல் தண்ணீர் குபுகுபுவெனப்புகுந்து கப்பலே மூழ்கும்படி ஆகிவிட்டது. இப்படியிருக்க சுதந்திர தினம் எப்படி கொண்டாடமுடியும் என முடித்தான். பக்கத்திலிருக்கும் அறையில் சிறிது நேரம் உட்காருங்கள் என பத்திரிக்கை ஆசிரியர் கூற, அவனும் உட்கார்ந்து கொண்டான்.

  படுவேகமாக +2 படித்த பையன் ஆசிரியரை சந்தித்தான். என்ன தம்பி செய்தி சேகரித்தீர்களா? எனக் கேட்டார். ஆசிரியர் – ‘ஓ! செய்தி சேகரிப்பின் சிலதாள்கள் அடங்கிய கோப்பை – முழுவிபரத்தையும் ஆசிரியரிடம் நீட்டினான். அன்று மாலையே முதல்பக்க செய்தியாக – +2 படித்தவன் கொண்டுவந்த செய்தி பிரசுரிக்கப்பட்டது. பட்டதாரிக்கு பெரிய பிரச்சனையாக தெரிந்தது  +2 விற்கு தங்கமான வாய்ப்பாக தெரிந்தது – குறைந்த கல்வியை உடைய இரண்டாவதாக அஸைண்ட்மெண்ட் கொடுத்தவனுக்கே வேலையும் கொடுக்கப்பட்டது.

  இப்படி சந்தர்ப்பங்களை சாதுரியமாக பயன்படுத்துபவர்களுக்கே வெற்றிமாலை விரைந்து கிடைக்கிறது. சந்தர்ப்பங்கள் தானே வருவதும் உண்டு. பிரச்சனைகளிலும் சந்தர்ப்பங்களை உற்றுப்பார்த்து உள்வாங்கிக் கொண்டு எதிர்நீச்சல் போட்டு வெற்றிக் காண்பவர்களும் உண்டு. அவரவர் பார்க்கும் பார்வையிலும், நோக்கும் திசையிலும் சந்தர்ப்பங்கள் என்னும் தைரியத்தின் மீது சவாரி செய்பவர்களையே வெற்றித் திருமகள் ஆரத்தழுவி – அகமகிழ்கிறாள்.

  சந்தர்ப்பங்களை சாதகமாக்கும் துணிவு எவனிடமிருக்கிறதோ அவனே சாதனையாளன். வெள்ளப் பெருக்கில் ஒரு ஊர் சிக்கிச் கொள்கிறது. அந்த ஊரில் கடவுள் காப்பாற்றுவார் என்று ஒரு மனிதரும் வசித்து வந்தார். ஊர்களில் மக்களை ஏற்றிக்கொண்டு பாதுக்காப்பான இடத்திற்கு கொண்டு செல்கிறது. அரசு வாகனம் தண்ணீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. நம் கதைநாயகரை அதிகாரிகள் ஏறச்சொல்ல, அவரோ ‘என்னைக் கடவுள் காப்பாற்றுவார். நீங்கள் செல்லுங்கள் என்று அனுப்பிவிட்டார்.’ நீர்மட்டம் உயர்ந்து வீடுகளுக்குள் புக ஆரம்பிக்கிறது. அரசு அடுத்த கட்ட நடவடிக்கையாக படகுகளை அனுப்புகிறது. காப்பாற்ற வந்த படகை நோக்கி, என்னைக் கடவுள் காப்பாற்றுவார் என அனுப்பிவிடுகிறார். அந்த மனிதர் நீர்மட்டம் உயர்ந்து வீட்டின் மாடியை அடையும்போது நம் நாயகரும் மாடிக்கு சென்று விடுகிறார். ஊர்மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். எஞ்சியிருக்கும் சிலரைக் காப்பாற்ற அடுத்த நடவடிக்கையாக ஹெகாப்டர் – வானூர்தியை அரசு அனுப்புகிறது. ஊரில் இருக்கும் ஒருசிலரும் காப்பாற்றப்பட்டார்கள் இவரைத் தவிர அவர் ஹெகாப்டரில் வந்து அழைத்தவர்க்கும் ‘கடவுள் காப்பாற்றுவார் நீங்கள் செல்லுங்கள் என அனுப்பிவிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக நம்நாயகரையும் தண்ணீர்மட்டம் மூழ்கடித்தது.

  கடவுள்மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்த நம்நாயகர் கடவுளிடம் கேட்டார். “கடவுளே! உங்கள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன். என்னை நீங்கள் ஏமாற்றிவிட்டீர்களே சரிதானா? என்று அனுப்பினேன். நீ உதறி தள்ளிவிட்டாய் அடுத்துப் படகை அனுப்பினேன்.

  நீயோ தொடவே மறுத்துவிட்டாய். அடுத்து வானூர்தியை அனுப்பினேன். அதையும் நீ உதாசீனப்படுத்திவிட்டாய். எத்தனை சந்தர்ப்பம் கொடுத்தேன்? என்னை குற்றம் சொல்கிறாயே? என்ன நியாயம்? என்று கடவுள் பதிலுரைத்தார்.

  இப்படி எண்ணிப்பார்க்கும் எல்லாவற்றிலும் – ஏதோ ஒன்று – எதற்கூடவோ ஒட்டிக்கொண்டு, எதை நோக்கியோ பயணப்பட்டு சேரும் திசையிலும் தேன்கூட்டுச் செய்திகள் – சிகர சிம்மாசனத்திலும் பேரதிசயம் பிரமிப்பாய் கண் சிமிட்டுகிறது.

  இடைவெளியை பூஜ்யமாக்கும்

  ஏணி என்பது ஏறுவதற்கும், இறங்குவதற்கும் பயன்படுகிறது. பொதுவாக சுமார் 40 ஆண்டுகளுக்கு  முன் ஆசிரியர் சமுதாயத்தை ஏணிப்படிகளாய் இருந்து மாணக்கர்களை வாழ்க்கையில் முன்னேற்றி விடுகிறார்கள் என்று கூறினர், இன்று?

  எண்ணங்கள் தான் நம் வாழ்க்கையின் சிற்பி நல்ல சிற்பி என்றால், அவர் வடிக்கும் சிலை கட்டாயம் நன்றாகத்தான் இருக்கும்.

  இதுவே சுமாரான சிற்பி அல்லது மோசமான சிற்பி என்றால், அவர்கள் வடிக்கும் சிலைகள் சுமராகத்தான் இருக்கும்.

  அதனால்தான் எண்ணங்களைச் சிற்பி எனக் கூறியுள்ளனர். இதை வாழ்க்கையில் கடைப்பிடித்தோரெல்லாம் வெற்றியாளர்களாக வாழ்கிறார்கள்.

  எண்ணத்துக்கும் எதற்குமான இடைவெளியைக் குறைப்பது.? இருகைகள் உள்ளன, கண்ணுக்குத் தெரிகின்றன, இரண்டையும் இணைத்தால் இடைவெளி இல்லை.

  ஆனால், எண்ணங்களுக்கு உருவமில்லையே அரூபமான ஒன்றை எப்படி இன்னொன்றுடன் சேர்ப்பது. வெகு சுலபம் ஏற்கனவே இணைந்துதானே உள்ளது.

  காற்று எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது நறுமணத் திரவம் ஒன்றைத் தெளித்தால் காற்றில் அது கலந்து அந்த இடத்தைச் சுற்றிலும் மணம் வீசுகிறது, இது போலதான் எண்ணமும்.

  தோன்றுகின்ற எண்ணம் பேச்சாகவோ செயலாகவோ மாறுவது தான் இடைவெளியை பூஜ்யமாக்கும் நிலை.

  எண்ணம் தோன்றுமிடம் மனம், மனம் எங்கே உள்ளது? நமக்குள்தான் உள்ளது. ஆனால் அரூபமாக உள்ளது. வெண்ணெய் எங்கே உள்ளது? தயிருக்குள் உள்ளது. வெண்ணெயைப் பெற தயிரைக் கடைய வேண்டும்.

  இதுபோல தானா எண்ணமும்?

  எண்ணம் உருவாக தயிரைக் கடைவது போன்ற செயல் தேவையில்லை, சிந்தனை, விழிப்பு, தூக்கம் என்ற எந்த நிலையிலும் சரி மனித மனதில் எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.

  நெய் எங்கே உள்ளது?

  வெண்ணையில் உள்ள நெய்யைப் பெற என்ன செய்ய வேண்டும்? வெண்ணையை நெருப்பில் காய்ச்ச வேண்டும். கசடுகள் நீங்கி சுத்தமான நெய் கிடைக்கும்.

  இதுபோல எண்ணங்களைக் கையாண்டால் செயல்களுக்கான இடைவெளி பூஜ்யமாகி எல்லோருமே என்றுமே வெற்றியாளர்களாகவே வாழ முடியும்.

  “தீயவை தீய பயத்தலால் தீயவை

   தீயினும் அஞ்சப் படும்” – குறள் 202

  தீய செயல்கள் தீயை விடக் கொடியவை என்றார் திருவள்ளுவர்.

  தீய செயல்களுக்கு அடிப்படை தீய எண்ணங்கள்தான்

  “உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

  கள்ளத்தால் கள்வேம் எனல்”                     – குறல் 282

  மனம் என்பது பகுதறிவா? மனம் தான் நம் மனித இனத்தின் சிறப்பே.

  இந்த மனம் என்பது இருப்பதால்தால் தான் நாம் மனிதர்கள் எனக் கூறிக் கொள்கிறோம்.

  இதுவே பகுத்தறிவாகும் உலகில் மற்ற உயிரினங்களுக்கு இல்லாதது இது.

  இந்த மனம் செம்மையாக இருக்க வேண்டும்.

  மனதின் செயல்பாட்டுக்கு ஒருவரின் பெற்றோர், அவர் கற்கும் கல்வி, அவரது நட்பு வட்டம், பழக்க வழக்கம், வாழும் சுற்றுச் சூழல், உண்ணும் உணவுகள் மற்றும் இயற்கை ஆகியன காரணமாக உள்ளன.

  எனவே தான் மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்றனர் ஞானிகள். இந்த எண்ணங்கள் செயல்களாக மலரும் போது உண்டாகும் பதிவுகளும் மனதில் உள்ளன.

  “எண்ணமே இயற்கை தன் சிகரமாகும்

  இயற்கையும் எண்ணத்தில் அடங்கிப் போகும்

  எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை

   எண்ணத்துக் கப்பாலும் ஒன்றுமில்லை”

  என்பார் தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி. இதனால் தான் ஒருவரது எண்ணங்களை அவரது வாழ்கையின் சிற்பி என்றனர்.

  தோன்றக் காரணம்:

  தேவைகளின் அடிப்படையில் (பசி, தூக்கம் போன்றவை) பழக்கத்தின் காரணமாக பிறருடன் ஒப்பிடுவதால், சிந்திப்பதால், படிப்பதால், பார்ப்பதால், கேட்பதால் நமக்கு எண்ணங்கள் எப்போதும் தோன்றிக் கொண்டே உள்ளன.

  இந்த உடலில் உயிர் உள்ளவரை இந்த எண்ணங்கள் உண்டாகும். உயிர் பிரிந்த பின் எண்ணமே அந்த உடலுக்கு இல்லை. அது போலவே, உயிருடன் இருந்தாலும் இந்த உடலுக்குள் ஓடி நம் உறுப்புகளின் வழி வெளியேறிக் கொண்டிக்கும் சீவ காந்தம் தன் ஒட்டத்தை நிறுத்தி விட்டாலும் எண்ணமிருக்காது. இந்த நிலையை “கோமா” நிலை என்று மருத்துவத்தில் கூறுகின்றனர்.

  எண்ணங்கள் பேச்சாகவோ, செயலாகவோ மாற்றம் பெறுமிடம் தான் இடைவெளியில்லா பூஜ்ய நிலை என்று பார்த்தோம்.

  இதில் தடை கூடாது இதை

  “எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

  எண்ணுவம் என்பது இழுக்கு”    -குறள் 467

  என்றார் திருவள்ளுவர்.

  செயலை தொடங்கும் முன்பே, சரியாகத் திட்ட மிட்டுத் துவங்காவிட்டால், இடையில் குழப்பத்துக்கு உள்ளாகி பலன்கள் எதிர் மறையாக அமைந்துவிடும்.

  “நினைப்பு தான் பொழைப்பைக் கெடுக்குது” என்று கிராமத்தில் கூறுவார்கள்.

  “கொப்பளிப்பது பன்னீர்,

   குடிப்பது கூழ்”

  என்றும் சொல்வார்கள், இதெல்லாம் எண்ணங்கள் சரியாக இருந்தால் செயல்களும் மிகச் சரியாகவே இருக்கும் என்பற்காகக் கூறப்படும் சொற்கள்.

  வீட்டில் சமைக்கிறோம் ஒருவருக்குமே பசி என்ற உணர்வே இல்லை, அதனால் யாருமே சாப்பிடவில்லை, சமைத்த சாப்பாடு என்ன ஆகும்?

  வீணாகி விடும் தானே,இது போன்றது தான் நாம் எண்ணும் எண்ணங்களும்.

  உணவு தான் மட்டும் கெட்டு விடும். ஆனால் நமது எண்ணங்கள் செயலுக்கு வராவிட்டால் நம் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புக்களையும் கெடுத்து விடும்.

  கெட்ட மோசமான எண்ணங்கள்: “திருடனைத் தேள் கொட்டியது போல”  என்று நாம் சொல்லுகிறோம். மற்றவர்கள் அயர்ந்து தூங்கும் போது அல்லது அஜாக்கிரதையாக இருக்கும் போது சப்தம் செய்யாமல் எடுத்துக் கொள்வது திருட்டு.

  சப்தம் வந்தால் பொருளுக்குரியவர் உஷாராகி விடுவார், இந்த நிலையில் தேள் கொட்டினால், திருடன் சப்தம் போட்டால் பிடிபடுவான். எனவே தான் தேள் கொட்டின வலியையும் பொறுத்துக் கொண்டு தன் தொழிலை முடிப்பதில் கவனமாயிருப்பான் என்பதற்காக சொல்லப்பட்டது இது.

  நாம் எண்ணும் எண்ணங்கள் எல்லாவற்றையும் மற்றவர்களிடம் சொல்ல முடியுமா என யோசித்தால் சிலவற்றை மிக நெருக்கமாயுள்ள கணவன் மனைவியிடம் கூட அல்லது மிக நெருங்கிய நண்பர்களிடம் கூட சொல்ல முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. எனவே இது போன்ற எண்ணங்களை ( உதாரணமாய் மற்றவர்களது பொருளைத் தனதாகக்கும் எண்ணம் (பொருள் என்பது இங்கு ஆண், பெண் என்றும் கொள்க)) நம் மனதில் தோன்றவே இடம் தர கூடாது.

  நான் செய்யவா போகிறேன்? நினைத்துப் பார்ப்பதில் என்ன தவறு? என்ற சமாதானம் விரைவில் செயலுக்குள் தள்ளி விடும்.

  நண்பர் சிலர் உள்ளனர் மதுப் பழக்கம் உள்ளவர்கள், இல்லாதவர்கள் கலந்த குழு இது.

  பழக்கமில்லாதவர்களும் நாளடைவில், ஒரு நாள் குடித்துத் தான் பார்க்கலாமே என்ற எண்ணத்துக்கு அடிமையாகி விடும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே தான் உள்ளத்தால் உள்ளலும் தீதே சேருமிடமறிந்து சேர்  என்றனர்.

  நட்பு என்பது முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலை என்கிறது குறள்  789

  வீடுகளில் இன்று சிறுவர், சிறுமிகள் கூட செல் போன் வைத்துள்ளனர். இவர்கள் சில சமயம் பேசும் போது தனியே சென்று பேசுவதைப் பார்க்கலாம் தவறில்லை என்றால் பெற்றோர் முன் பேசாமல் ஏன் தனியே சென்று பேசுகிறார்கள்.

  ஏதோ தப்பு நடக்கிறது எனப் பெற்றோர் எச்சரிக்கையுணர்வுடன் விழிப்பாகச் செயல் பட வேண்டும்

  பொதுவாகச் சொல்லுவோம் நம் மகிழ்ச்சிக்குத் தடை மனம் தான் என்று, இங்கு மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்பதால் எண்ணமே நம் மகிழ்ச்சிக்குத் தடை என உறுதியாக நம்பலாம்.

  அதனால் தான் “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என கணியன் பூங்குன்றனார் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லிச் சென்றார்.

  எண்ணங்கள் செயல்களாக மலர்ந்து நமக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்சியைத் தர கீழ்க் கண்டவைகளைச் செய்ய வேண்டும்.

  1. அவரவர் உருவத்தை நன்கு நினைவில் வைக்கவும்
  2. சான்றோர் உருவப்படங்களை வீடுகளில் மாட்டவும்
  3. அதிகாலையில் கண்ணாடியில் முகம் பார்த்து தன்னை நேசிப்பதாய் கூறவும்

  மகா கவி பாரதி –

  “எண்ணிய முடிதல் வேண்டும்  நல்லவே எண்ணம் வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும்” என்று கூறியதை என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

  “வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

  உள்ளத் தனைய துயர்வு”   – குறள் 595

  என்ற குறளுக் கேற்ப நல்ல எண்ணங்கள் நிறைந்துள்ள மனம் ( உள்ளம்) அந்த மனிதனை மகிழ்ச்சியிலேயே மூழ்க வைக்கும்.

  ஆசையின்றி வாழ முடியுமா? முடியாதே

  ஆசை என்பது தான் என்ன?

                              தொடரும்

  நிதானம்

  கதிரேசனுக்கு மாறுதல் ஏற்பட்டுள்ளது.  மாறுதல் என்பது ஒரு நிரந்தரமான விஷயம் தான்.  சந்தோஷம் என்னும் பொருளைப் போல மாறுதலும் நிரந்தரமானது தான்.  வங்கியில் வாடிக்ககையாளர் சேவை பிரிவில் இருந்து வெளியே வந்து கிராமப்புறங்களை எல்லாம் சுற்றி வளர்ச்சி கடன் கொடுத்த பணிகளை பார்வையிடுவதைப் போன்ற பணி எனலாம்.  சற்றேறக் குறைய சரியாக இருக்கும்.

  பணி நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளும் பொழுது வாழ்க்கையும் அதற்குள்ளாகவே அடங்கிப் போய்விடுகின்றது.  பணியினை நேசிக்கத் தொடங்கினால் வாழ்வு நம்மை நேசிக்க தொடங்கிவிடுகின்றது.  ஒரு அறிவியல் அறிஞருடைய வாழ்வு, போர் வீரருடைய வாழ்வு, சமூக தேவையை தீர்க்க போராடும் சேவகருடைய வாழ்வு என எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை எடுத்துக் கொண்டால் பணிக்குள்ளேயான வாழ்க்கையை அவர்கள் அடையாளம் கண்டுபிடித்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.  உறவுகளுக்கு ஆன நேரத்தை பகிர்ந்தளித்திருக்க வேண்டும்.  இயற்கையாகவே உறவுகள் அவ்வாறான ஒரு சமநிலையை எய்திவிடுகின்றன.

  கதிரேசன் தன் இரு குழந்தைகளோடு போதுமான அளவு நேரம் செலுத்தும் பொழுது தன் வாழ்வை நிதானமாக மீண்டும் வாழ்ந்து பார்ப்பதாக உணர்ந்தார்.  திருவள்ளுவர் வாழ்க்கைத்துணை நலம், மக்கட் பேறு என்று அதிகாரங்களை அடுக்கி விட்டு துறவு என்கின்ற அதிகாரத்தையும், தவம் என்று இன்னொரு அதிகாரத்தையும் சேர்த்து வைத்து எல்லா வகையான வாழ்க்கைக்கும் பொதுவான வாழ்க்கையை வைத்து எடுத்துக்காட்டு கொடுத்து இருக்கின்றார்.

  மிக நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் போதும் அதற்குப் பிறகு ஒருவருக்கு இல்லாதது என்ன?  எல்லாமே அமைந்துவிடும்.  அப்படி ஒரு மனைவியைப் பெற்றபின்பு அவசரமாக மேலும் மேலும் பொருளை ஏன் தேடி நிதானம் இழக்க வேண்டும் . . .  என்று பொருள்படும் வண்ணம் . . .  இல்லதென். . .  என்கின்ற வார்த்தையில் தொடங்கும் குறட்பா எண்.53ல் அளித்திருக்கின்றார் அதற்கு நேர்மாறாக,  மனைவி இறந்த பின்னரும் குழந்தைகளை சீராக வளர்த்து நற்பெயர் பெற்ற காங்கேயம் பெரியவர் ஒருவர் நினைவு வருகின்றது.

  மனைவி குறித்தும், இல்லறம், துறவறம் குறித்தும் மட்டும் அன்றி பல்வேறு பொருட்களின் இருவித வேறுபட்ட தன்மைகள் குறித்தும் முப்பால் நிலவும் குறள் பொருள் குறித்தும் அவ்வப்போது அலசுகையில் வாழ்வு ஒரு நேர்கோட்டு வரையறைக்குள் தன்னை சிறையிட்டு விடுவதில்லை  எண்ணற்ற வளைவுகளை திருப்பங்களாக, கொண்டே செயல்படுகின்றது என்று கதிரேசனுக்கு தோன்றியது.

  சமீபத்தில் ‘குறள் வானம் ‘ என்கின்ற சுப வீரபாண்டியன் அவர்களது குறள் விளக்க புத்தகம் படிக்க நேர்ந்தது.  திருக்குறளுக்கான இருபது உரையாசியர்கள் கொடுக்கும் பொருள் விளக்கத்தின் சரிவிகித சாரமாக அமைந்திருந்தது புத்தகம். பரபரப்பாக சரசரவென குறளின் நெளிவு சுழிவுகளில் எல்லாம் புகுந்து ஒரு புத்துணர்ச்சியோடு வெளிவர முடிகின்றது.  பார்க்கின்ற கோணத்தில் எல்லாம் வார்த்தைகள் வளைந்தும் வளைக்கும் வாய்ப்பை உணர்த்தியும் இப்படியும் கூட வள்ளுவப் பெருந்தகை நினைத்திருப்பாரோ?  என்னும் அளவுக்கு பொருள் பரிமாறப்பட்டு உள்ளது.

  படிக்கும் பழக்கம் நிதானத்தை ஊக்குவிக்கின்றது.  நிறைய படித்துவிட்டு கொஞ்சமாக எழுதவேண்டும் என்று “”சிறுகதை மன்னன்” சொன்னதாக பூ.கோ.சரவணனின் ‘வரலாற்று மனிதர்கள்’ புத்தகத்தில் இருக்கின்றது.  இருநூறு வரலாற்று ஆளுமைகள் குறித்து குறிப்பு தேடி தொகுத்து முக்கியமானவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதப்பட்டு உள்ளது.  நாமே தேடி தனித்தனியாக ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாக படித்து முக்கியமானதை மட்டும் சத்து எடுத்து இடையே சலிப்படைந்துவிடாமல் சேகரித்தால் அடைய கூடும் மாபாசானில் இருந்து பப்லோ நெருடா வரை வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்த எடுத்துக் காட்டுக்களைத் தொகுத்து அவர்களைத் தனித்துக் காட்டும் மேற்கோள்களோடு எழுதிக் குவித்திருக்கின்றார்.  அண்ணா பல்கலைக்கழக சுற்றுச் சுவரை தாண்டி இன்னும் வெளியே வராத இந்த இளம் வயதிலேயே . . . .

  இவ்வளவு நிதானமாக கடும் உழைப்பை கட்டுரைகளில் காட்டியிருக்கின்ற இவரது சிரத்தையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  அதற்கு பதில் இவரது புத்தகத்தை நிதானமாக வாசிப்பதும் நன்றாக தகும்.

  கதிரேசன் ஒரு இந்திய ஆட்சிப்பணி நேர்முகத் தேர்விற்கு செல்ல உள்ள மாணவன் குறித்து தெரிந்து கொள்ள நேர்ந்தது.  படித்தது ஏரோநாடிகல் எஞ்சினியரிங்  ஆனால் பெர்னௌ தியரம் தெரியவில்லை.  இது ஒரு துயரமான நிலைதான்.  வேகம் அதிமாக இருக்கும் இடத்தில் காற்றழுத்தம் குறையும் அவ்வளவுதான்.  இதில் அழுத்தம், வேகம் இரண்டு தான் எதிர்மறை உறவின் தொடர்பில் உள்ளது.  ஆனால் நமது நண்பர் வேறேதோ பதட்டத்தில் புதுக் கோணத்தில் பதில் சொல்லியபிறகு, தெரியவில்லை மறந்து போனது என்றும் கூறினார்.  நிதானம் நினைவலைகளை நெறிப்படுத்துகின்றது.  அது வாசிப்பதை வார்த்தைகளோடு நிறுத்தி விடாமல் படிப்பது வரை எடுத்துச் செல்கின்றது.

  ஆங்கிலத்தில் “செமான்டிக்ஸ்’ என்றால் வரிக்கு வரி பொருள் என்பார்கள்.  பிராக்மாடிக்ஸ் என்றால் வரிகளுக்குள்ளே மறைந்திருக்கின்ற பொருள் குறித்துப் படிப்பது ஆகும்.  நிதானம் மட்டுமே இரண்டையும் வேறுபடுத்தி, புரிதலின் ஆழத்தை நீட்டிக்கும்.  புரிதன் மீது மேலும் மேலும் அடுக்கப்படும் தகவல்கள் சிமெண்ட் கம்பிகள் கொண்டு கட்டுவது போன்று இணைந்து ஏரோநாடிகல் எஞ்சினியரை பறக்கச் செய்கின்றன.  எந்தப்படிப்புக்கும் சில அடிப்படையான கொள்கைகள் ஆதாரமாக இருக்கின்றன.  அவை நிதானமாக புரிந்துகொள்ள வேண்டியவை.  அவை எவ்வளவு வருடங்களானாலும் திரும்ப தவறாக புரிந்து கொண்டதையெல்லாம் துப்புறவாக மறந்துவிட்டு மீண்டும் படிக்கப்பட வேண்டுபவை.  அதற்கு நிதானம் வேண்டும் அது இருந்தால், அடிப்படையை செப்பனிட ஆகும் காலவிரயத்தால் வரும் சேதத்தை சற்றும் பொருட்படுத்தி கவலைப்பட வேண்டாத சூழல் வரும்.

  அதாவது, எவ்வளவு நேரம் ஆனாலும் சரி, செலவிடலாம், ஒரு அடிப்படையான விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல் நினைவில் வைத்துவிட கூடாது.  எபிஃபேனி என்றொரு சந்தர்ப்பத்தை ஆங்கிலத்தில் சொல்வார்கள்.  அதாவது, புரிதனால் ஏற்படும் மகிழ்ச்சிக் கீற்று என்று மொழி பெயர்க்க கதிரேசன் விரும்புகின்றார்.

  மின்னல் கீற்று மாதிரியானதொரு மகிழ்ச்சி வேட்டை மூளையில் ஏற்படுத்தும் பரவசமான உணர்வு அது.  கதிரேசன் ஒரு சில விஷயங்களை  புரியவில்லை என்று விசனப்பட்டு, விட்டுவிட்டு, மீண்டும் பல நாட்கள் குறுகுறுப்போடே கழிந்த பிறகு  திடீரென ஒருநாள் புரிய வருகையில் ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது.  அதை அனுபவித்திருப்பீர்கள் நிறையப் பேர்.   “” நவில் தொறும் நூல் நயம்” என்று தொடங்கும் குறள் எழுநூற்றி எண்பத்து  மூன்றாவது நட்பு என்கின்ற அதிகாரத்தில் வைக்கப்பட்டு உள்ளது.  படிக்கும் பொழுதெல்லாம் புது புது அர்த்தங்களை தருகின்றது புத்தகம் என்று கூறியிருப்பார்.

  அந்த சந்தோஷத்தைப் பெரியவர்களுடன் பழகும்பொழுது கிடைக்கின்ற இன்பத்தோடு ஒப்பிட்டுப் பார்த்திருப்பார்.  ஒருமுறை படிக்கவே நமக்கு பொறுமையும் நிதானமும் வேண்டும்.  பலமுறை படிக்க வேண்டும் என்றால் எவ்வளவு நிதானம் வேண்டுமோ? தெரியவில்லை.  நிதானம் இருந்தால் நூல் படிக்கலாம், நூல் படித்தாலும் பொறுமை வரக்கூடும்.  புத்தகத்தை பலமுறை படிப்பது ஆனந்தத்தை அடைய வழிகோலும்.  கோலூன்றும் வயதில் . . .  திருநாவுக்கரசரின் . . . பாலனாய் கழிந்த நாளும் என்றொரு பாடல் . . . . குறிக்கோள் இல்லாமல் வாழ்ந்து வீணாகிவிட்டது என்று நிதானமாக யோசிக்காத வாழ்வைக் குறித்து பேசி இருப்பார்.  எனவே நிதானம் இளமையில் வரவேண்டும்.  சரியான காலத்தில்  பயிர் செய்ய – காலத்தே பயிர் செய் என்று சொல்வது போல.. . .

  ஐந்திலே வளைந்து பொறுமை காக்க வேண்டும்.  கதிரேசன் செய்தித்தாளில் துரித உணவொன்று சர்ச்சைக்குள்ளாவது குறித்து படித்தார்.  உணவில் மட்டுமல்ல வாழ்வே துரிதத்தை நோக்கிச் செல்லும் பொழுது நிதானமாக ஒரு தலைப்பில் அவர் கருத்துக்களைச் சொல்ல முற்படுவது சாலச் சிறந்தது என்று கருதினார்.

  நீடித்து நிலைக்கக்கூடிய விஷயங்களை அவசரகதியில் ஒருநாளும் உருவாக்கிவிட முடியாது என்று தோன்றியது.  குறைந்தபட்சமாக, இயற்கை, அவ்வாறு அவசரப்பட்டு எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்து விடுவதில்லை.  கதிரேசன் கள ஆய்வின் பொழுது சந்தனமரம் நடப்பட்டு இருந்த நிலத்தின் ஊடாக நடந்து கொண்டு இருந்தார்.

  ஈரோட்டில் அமராவதி நதிக்கரையைத் தாண்டிப் பயணித்த பொழுது கண்ட ஒரு தோட்டம்.  சந்தன மரங்களை பயிரிட்டு வளர்ப்பது விசித்திரமானது.  அது ஒரு ஒட்டுண்ணி வேர் கொண்ட மரம் என்று வேளாண்மை அறிவியல் படித்த நண்பர் ஒருவர் சொல்லக்கேட்டார்.  உடன் நான்கைந்து மரக்கன்றுகளைக் (சவுக்கு மரங்கள்) கூட நடவேண்டுமாம்.  சந்தன மர வேர் அவ்வாறு அருகே உள்ள மர வேரில் இருந்து நீர் மற்றும் சத்துக்களை உறிஞ்சி வளருமாம்.  ஆச்சரியமாக இருந்தது.  இதில் நிதானம் சொல்ல எதுவுமில்லை . . . . ஆனால் இன்னொரு தகவல் . .

  சந்தனமரம் நன்றாக வாசனை தைல எண்ணெய் பிடித்து செழிக்க வேண்டுமெனில் சுமார் 40 வருடங்கள் ஆகிவிடுமாம்.  பெரும்பாலான நிகழ்வுகளில் மரத்தை நட்டவர் அது வளர்ந்து முதிர்ந்து நல்ல பலன் தரும் வயதும் பருமனும் அடையும் வரை உயிர் வாழ்வார் ? என்பது சந்தேகமே.  அவ்வளவு நிதானமாக சந்தனம் பயிராகின்றது.  அடுத்த முறை ஊதுபத்தியிலும், சோப்பிலும் சந்தன வாசனையை நுகரும் பொழுது நாம் ஒரு தலைமுறையைத் தாண்டிய தியாக உணர்வின் வாசனையை நிதானமாக உணர வேண்டும் தான்.

  நிதானம் மாறுதல்களை வரவேற்கின்றது.  புதுப்புது வார்த்தைகள் அமைதியான மனதிலிருந்தே பிறக்கின்றன.  நிர்மலமான அதிகாலை சலனமில்லாத காலைக்காற்று மகிழ்ச்சிக்கு அடித்தளம் அமைக்கின்றது.  சட்டென உதட்டைத் தாண்டிவிழும் சொற்களை சற்றே வளைத்து சந்தனம் பூசி அனுப்பி வைக்குமளவு நிதானம் நமக்கு இருக்குமேயானால் கேட்பவர்களின் காது குளிர்கின்றது.  நிம்மதி பரவுகின்றது.  நம்பிக்கை பிறக்கின்றது. வெளிச்சம் நடக்கின்றது.

  தொல்லைகளை விட்டுவிடு! எல்லைகளைத் தொட்டுவிடு!

  ஜே. சதக்கத்துல்லா

  மண்டல இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கி

  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

  • உயரம் அவருக்கு உழைப்பினாலும், உயர்வு அவரது உள்ளத்தாலும் நிகழ்ந்திருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாய் ஒளிர்கிறவர்.
  • தன் வாழ்வில் ஏற்பட்ட சோதனைகளை சாதனைகளாக்கி இன்றைக்கு பலரும் போற்றும் வகையில் உயர்ந்தவர்.
  • இலக்கியம், மொழிசார்பு ஆர்வலர், ஆளுமை வளர்ச்சி நிபுணர், பொருளாதார வல்லுநர் என்று பல்வேறு துறைகளில் பன்முகத்திறமை கொண்டவர்.
  • தன்னைத்தானே செதுக்கி செதுக்கி சிற்பமாக வடித்துக்கொண்ட ஒரு தனித்துவம் மிக்க மனிதர்
  • செப்பிடு வித்தை அல்ல வாழ்க்கை, அது செப்பனிட்டுச் செப்பனிட்டு சீரமைக்க வேண்டிய நுட்பமான பணி என்பதை நிரூபணமாக்கியிருப்பவர்.
  • புதிய எல்லைகளைத் தொட முடியும் என்பதற்கான நம்பிக்கையாக இளைஞர்கள் நினைவில் வைக்கத் தக்கவர் இவர்.
  • வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை புரட்டிப்பார்ப்பதை விட, நாம் வாழும் காலத்திலேயே நம்மோடு காணப்படும் ஒரு வெற்றியாளரைத் தெரிந்து கொள்வது நல்லது என்று பிறரால் அடையாளம் காட்டக் கூடியவர்.
  • அறிவுத்திறனும், ஆளுமைத்திறனும் மனிதநேயமும் ஒருங்கே அமையப்பெற்ற அதிகாரிகளில் இவரும் ஒருவர்.
  • கீரை விற்று படிக்க வைத்த தந்தைக்கு, நல்ல பெயரை வாங்கித்தந்த தனயன்.

  இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் டாக்டர்,  ஜெ.சதகத்துல்லா அவர்களுடன் இனி  நாம்.

  உங்களின் இளமைக் காலம் குறித்து…?

  மதுரையிலிருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ள திருப்புவனம் என்னும் குக்கிராமத்தில்தான் பிறந்தேன். பெற்றோர் ஜனாப் கே.எஸ் ஜெயின் அலாவுதீன், தாயார் ஜெ. பசீரா பீவி.

  அப்பா திருப்புவனத்திலிருந்து கீரையை அறுத்துப்போய் மதுரையில் மொத்த சந்தையில் அதனை விற்கும் வியாபாரம் செய்து வந்தவர். நான் படித்தது மதுரையில் உள்ள புகழ்பெற்ற டி.வி.எஸ். பள்ளிக்கூடம். டி.வி.எஸ். நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட பள்ளிக்கூடம் அது. அவர்களின் குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கக்கூடிய அந்த வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. டி.வி.எஸ். பள்ளிக்கூடத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நன்கு படிக்கக் கூடிய மாணவர்களுக்கு என்று சில இடங்கள் ஒதுக்குவார்கள். அதன் அடிப்படையில்தான் அந்தப்பள்ளிக்கூடத்தில் சேருவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இன்றைய மாணவர்களுக்கு நான் கூறிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான், ‘எந்தச் சூழலில் இருந்தாலும் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நீங்கள் வெற்றியடைய முடியும்’.

  உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது…

  என்னுடைய தந்தை மிகவும் கண்டிப்பு, ஒரு கொள்கையை வகுத்துக்கொண்டு, அதற்கேற்றார் போல் வாழ்க்கையை வாழ்ந்தவர்.  எவரிடமும் கைகட்டி அடிமையாக வேலை பார்க்கக் கூடாது என்று நினைத்தவர். பொய் பேசினால் அப்பாவிற்குப் பிடிக்காது, எதையும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்ல மாட்டார், அதேசமயம் பிரச்சனைகளை சொல்லி விடுவார். அதற்கான தீர்வை எங்களிடமே கொடுத்து விடுவார். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது என் மூத்த சகோதரருக்கு வயது 5, பள்ளியில் சேர்ப்பதைப்பற்றி வீட்டில் பேசிக்கொண்டிருந்தார்கள். என்னுடைய இளைய தம்பி அப்பொழுது பிறந்த 8 மாதக்குழந்தை.

  அப்பொழுது எனக்கு தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த நேரம், தேர்வுக் கட்டணம் செலுத்த பள்ளியில் என்னிடம் சொல்லிவிட்டார்கள். இதை நான் வீட்டில் சொன்னேன், என் தந்தை பள்ளிக்கட்டணம் கட்டுவதற்கு பணம் கொடுத்தார்.  உனக்குப்பிறகு, இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள், இப்பொழுது குடும்பம் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறது. என்னுடைய உடம்பும், மிகவும் மோசமாக இருக்கிறது. படிப்பை இப்படியே நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்று குடும்பத்தை காப்பாற்றப்போகிறாயா…? அல்லது இந்தக் கட்டணத்தைக் கட்டி பள்ளியில் சேரப்போகிறாயா…? என்று என்னிடம் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டார்.

  அப்பா என்னிடம் சொல்லிய வார்த்தை இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது.. நானும் அந்தக் கட்டணத்தை  பள்ளிக்கு எடுத்துச் சென்றேன். இன்றுதான் நான் பள்ளிக்கு வருகின்ற கடைசி நாள் என்று என் மனம் சொன்னது. கடைசியாக படிப்பை விட குடும்பம்தான் முக்கியம் என்று கட்டணத்தைக் கட்டாமல் பணத்தை அப்படியே திருப்பிக்கொண்டு வந்து அப்பாவின் கையில் கொடுத்து விட்டேன். பணத்தைப் கையில் கொடுத்ததும், அப்பாவிற்கு மிகுந்த அதிர்ச்சி. என் வருந்திய முகத்தைப் பார்த்து என் அப்பா, மீண்டும் பள்ளிக்குச் செல், பள்ளிக்கட்டணத்தை நான் செலுத்துகிறேன் என்று ஆறுதலாக சொன்ன வார்த்தைதான் என்னை, இந்த இடத்திற்கு  கொண்டு வந்தது என்று சொல்வேன்.

  படிக்கும் காலத்தில் தங்களின் எந்தச் செயல்பாட்டை பெருமையாக கருதுகிறீர்கள்? 

  நான் கல்லூரி படிக்கின்ற காலத்தில், கல்லூரிக்கு அருகில் பூசாரிபாளையம் என்ற கிராமம் இருந்தது.  அங்கு ஒரு இரவுப்பள்ளி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்தப்பள்ளியில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஏழை மாணவர்கள் நிறையப்பேர் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஏழ்மையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இலவசமாக நான் வகுப்பு எடுத்தேன். படித்த நான்காண்டுகளும் இரவில் இலவசமாக வகுப்பு எடுத்து வந்தேன். இதன் மூலம் நிறைய மாணவர்களின் வாழ்க்கையில் கல்வி விளக்கை ஏற்றிய பெருமையை நான் பெரிதாக நேசிக்கிறேன்.

  உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு என்று எதைச் சொல்வீர்கள்?

  அன்று கல்லூரியின் கடைசி நாள், பல்கலைக்கழக விழா நடைபெற்றது. மேடையில், பரிசு கோப்பைகள் பல இருந்தன. பல்வேறு விளையாட்டு, வினாடி – வினா போன்ற போட்டிகள் நடைபெற்றது. இவ்விழாவில் நிறைய மாணவர்கள் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுச் சென்றனர்.

  இறுதியாக பெரிய பரிசுக் கோப்பை மட்டும் இருந்தது. துணைவேந்தர் மேடையில் பேசிக்கொண்டிருந்தார், மேடையிலிருந்த அனைத்து பரிசுக் கோப்பைகளும் கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த பெரிய கோப்பை மட்டும் மேடையில் இருக்கிறது என்றும் , யாருக்கு கொடுக்க போகிறோம் என்றும் குழப்பம் இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.

  ஆண்டுக்காண்டு திரு.வி.க., நினைவுப் பரிசு ஒன்று வழங்குவோம், ஆனால் இந்த விருது ஏதேனும் ஒரு வித்தியாசமான சாதனை செய்த மாணவர்களுக்குத்தான் இந்த விருது வழங்கப்படும்.  அந்த வகையில் இந்த நான்காண்டுகளாக எவ்வித உதவியும் எதிர்பார்க்காமல், கஷ்டப்படும் மாணவர்களுக்கு இரவு வேலையில் பாடம் கற்பிக்கப்பட்ட காரணத்திற்காக எனக்கு இந்த விருதை துணைவேந்தர் வழங்கினார். இவ்விருதை சற்றும் எதிர்பார்க்காமல் இருந்த எனக்கு மிகுந்த மகிழ்ச்சியும், மறக்க முடியாத தருணமாகவும் இது அமைந்தது.

  ஏற்றம் தந்த மாற்றம் இது எனக்கு என நீங்கள் சொல்ல விரும்புவது?

  எனது தந்தை மறைவிற்கு பின்னர், எனக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தவர், அக்பர் என்னும் மருத்துவர். என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்குப்பின்னால், அம்மாவுடன் டாக்டர் அக்பரும் துணையாக இருந்தார். ஒரு நாள் நான் என் வேலையை முடித்த பின்னர் அவரை சந்தித்தேன், அப்பொழுது முதுகலை வேளாண்படிப்பை படிக்கும்படி என்னிடம் ஆலோசனை கூறினார்.

  குடும்ப சூழ்நிலை ஒருபுறம், அவர் சொல்லியது மற்றொரு புறம் என்று இருவேறு மனநிலை ஏற்பட்டது. எனினும், அவர் என்மீது வைத்துள்ள அக்கறையை  என்னால் மீறமுடியவில்லை. வேலைக்குச் சென்ற மகன் சம்பாதித்து வருவான் என்று என் தாய் எண்ணும்பொழுது, மீண்டும் படிக்கிறேன் என்று அவரிடம் சொன்னால், அவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று மனதில் குழம்பிக்கொண்டு, என்தாயிடம் சொன்னேன்.

  அதற்கு, வாழ்க்கையில் கஷ்டத்தை பழகிக்கொண்ட என்னால், இன்னும் இரண்டு வருடம் நிச்சயம் சமாளிக்க முடியும் என்று என் தாய் என்னிடம் சொல்லிய வார்த்தை ஒரு ஏணிப்படியைப்போல் ஏற்றம் கொடுத்தது. என் உறவினர்கள்     என் மேற்படிப்பு படிக்க மிகுந்த உறுதுணையாக இருந்தார்கள், அவர்களின் ஊக்கம் எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

  மேற்படிப்பு படிக்கப் போகிறோம் என்ற எண்ணம் சற்றும் என் மனதில் எழவே இல்லை. இருந்தாலும், டாக்டர் அக்பரும், எனது பெற்றோரும் சொல்லியதால் மேற்படிப்பை படிக்க எண்ணினேன். ஆனால், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் அப்பொழுது விண்ணப்பம் வாங்குவதன் இறுதிநாள் முடிந்து விட்டது. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த பொழுது, கோயமுத்தூரிலிருந்து என்னுடைய அறை நண்பன் திரு. சதாசிவம் என்னைப்பார்க்க வந்திருந்தார். முதுகலைப்பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசையை அவரிடம் சொன்னேன். தமிழ்நாட்டில்தான் வேளாண்மை படிப்பிற்கான விண்ணப்பங்கள் முடிந்து விட்டன. ஆனால், டெல்லியில் உள்ள பூசா கல்விநிலையத்தில் சேர இன்னும் நாட்கள் இருக்கிறது என்று என்னிடம் சொல்லிய பின்னர், அக்கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பத்தை வாங்கி அனுப்பினார்.

  அப்பொழுது தமிழ்நாட்டிலிருந்து 10 பேருக்கு மேல் விண்ணப்பித்திருந்தார்கள்.  ஆனால், அந்தக் கல்வி நிலையத்திலிருந்து எனக்கு மட்டும்தான் சீட்டு கிடைத்தது. இது எனக்குப் பெரிய அங்கிகாரத்தைக் கொடுத்தது. அந்தக் கல்வி நிறுவனத்தின் சிறப்பு என்னவென்றால்,  சீட் கிடைத்து விட்டாலே போதும் மாதம் தோறும் சம்பளம் போல் உதவித்தொகை கொடுப்பார்கள். இத்தொகை எனது செலவிற்குப் போக, வீட்டிற்கும் அனுப்பி வைக்க உதவியது. இக்கல்லூரியில், முதுகலைப்படிப்புக்கு சென்று விட்டால் பி.எச்.டி., முடித்து விட்டுதான் வெளியில் வரமுடியும். ஆனால், இந்த முறைஎனது குடும்பத்தின் வறுமையின் காரணமாக நிச்சயம் மேற்படிப்போடு திரும்ப வேண்டும். குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணினேன்.

  அங்கு துறைத்தலைவராக இருந்த டாக்டர் ஓய். பி. சிங், என்னை பி.எச்.டி., படிப்பில் சேரச்சொன்னார். ஆனால், அவரிடம் என் குடும்ப சூழலைச் சொன்னேன். அதற்கு அவர் பணம் ஒரு காரணமாக இருந்தால், இப்பல்கலைக்கழகத்தில் ஏராளமான கல்வி உதவித்தொகை கிடைக்கும், அதை வைத்து குடும்பத்தை நன்றாக கவனிக்க முடியும் என்று என்னிடம் கூறினார்.

  கிராமப் புறத்தில் பிறந்த நீங்கள், ரிசர்வ் வங்கித் தேர்வை எதிர்கொண்ட விதம் குறித்து…

  மதுரை வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து கொண்டிருந்த காலம் அது. சிவில் சர்வீஸ் தேர்வும்  மற்றும் ரிசர்வ் வங்கித்தேர்வும் எழுதியிருந்தேன். சிவில் சர்வீஸ் தேர்வில் எழுத்துதேர்வு, நேர்முகத்தேர்வு எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்று விட்டேன். ஆனாலும்,  இறுதிப்பட்டியலில் என் பெயர் இடம் பெறவில்லை.  மனது கனத்துப்போன அந்த நேரத்தில், ரிசர்வ் வங்கித்தேர்வு முடிவுகள் வெளிவந்தது. இத்தேர்வில், நான் வெற்றி பெற்றேன். இதன் மூலம் சென்னையில் பணியில் சேர ஆணை வந்தது. அதே நேரத்தில் சிவில் சர்வீஸ் பணிக்கும் ஆணை வந்தது. எதில் சேர்வது என்று தடுமாற்றம். இறுதியில், ரிசர்வ் வங்கியில் சேர்வது என்று முடிவெடுத்து, சென்னையில் ரிசர்வ் வங்கியில் பணிக்குச் சேர்ந்தேன்.

  இலக்கியங்கள் மீது ஈடுபாடு எழக் காரணம்?

  என் தந்தைதான் இதற்கு முழுமுதல் காரணம் நான் பள்ளி படிக்கின்ற காலத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரானை என்னிடம் கொடுத்து முழுவதுமாக படிக்கச் சொன்னார். இதன் மூலம் அடிப்படையிலேயே நிறைய இலக்கியங்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.

  மதராஸா கல்வியில் சேர்ந்ததால், அடிப்படையில் ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு எனக்குள் ஏற்பட்டது. அதன்பிறகு, “விவேக சிந்தாமணி’ என்கின்ற அற்புதமான நூல் ஒன்றினை அப்பா பரிசளித்தார். இது மிகவும் அற்புதமான நூல், இதிலுள்ள அனைத்துப்பாடல்களும் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். அந்தளவிற்கு இலக்கியங்கள் மீது உயர்ந்த நெறியும், பற்றுதலும் ஏற்பட்டது.

  இன்று நான்,  3000  நூல்களுக்கு மேல் சேர்த்து வைத்திருக்கிறேன்.  இலக்கியத்தைப் போலவே, இசையின் மீதும் எனக்கு மிகுந்த ஆர்வம். ஒருமுறை பாஸ்டன் நகருக்கு சென்றிருந்தேன், அப்பொழுது “பசுமை நிறைந்த நினைவுகளே” என்கின்ற பாடல் வரிகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, நான் பாடியபொழுது அனைத்து நாட்டு நண்பர்களும் கண்கலங்கி நின்றார்கள். அது இன்றும் என் வாழ்வில் பசுமையான நினைவாக நீடித்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் அடிப்படையான பண்பை வளர்ப்பதற்கு இலக்கியம் ஒரு உந்துக்கருவியாக செயல்படுகிறது என்றேசொல்வேன்.

  எப்படிப்பட்ட செயல்பாடு நேரத்தை சரியாக கையாள வைக்கும்?

  எந்தவொரு செயலுக்கும், திட்டம் என்பது அவசியம். நான் என் வாழ்க்கையை திட்டமிட்டுத்தான் வாழ்கிறேன். அன்றாடப் பணிகளை செம்மையாகச் செய்யும்பொழுது நேரத்தை சரியாகப் பயன்படுத்த முடியும். அதுபோலதான் காலையில் எழுந்தவுடன் செய்தித்தாள் படிப்பது, அச்செய்தித்தாளில் வரும் பயனுள்ள நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதில் கலந்து கொள்வேன்.

  திட்டமிட்ட வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தது என் தந்தை. எனக்குள் இருக்கிற மதசார்பின்மைத் தன்மையும், ஜனநாயகத் தன்மையும் எல்லோரிடமும் என்னை கொண்டு சேர்த்த அடையாளம் ஆகும். நேரத்தை திட்டமிட்டாற் போல் வாழ்வதால் குடுபத்துடன் என்னால் நேரத்தை முறையாக செலவிட முடிகிறது.

  நீங்கள் பெற்றபட்டங்களும், பாராட்டுக்களும்…

  மதுரை வேளாண் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தேர்வு மற்றும் ஐ.ஏ.எஸ்., தேர்வு இரண்டிலும் வெற்றி…

  ரிசர்வ் வங்கி அலுவர்கள் வெளிநாடு சென்று படிக்க, அதன் பொன்விழா ஊக்கத்தொகை (Golden Jubilee Scholarship) பெற்றவர்களில் நானும் ஒருவன்.

  எப்பொழுதும் படித்துக்கொண்டே இருக்கும் பழக்கம் இருப்பதால், ரிசர்வங்கிப்பணியில் இருந்து கொண்டே, புனே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றேன்( பி.எச்.டி., ).

  அமெரிக்காவில் உள்ள ஆர்தர் டி. லிட்டில் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் கல்விக்கூடத்தில் எம்.எஸ்., பட்டம் பெற்றேன். ரிசர்வ் வங்கிப்பணியில் இருந்து கொண்டே 5 ஆண்டுகள் ஐரோப்பாவில் தங்கியிருந்து அந்நாட்டு மாணவர்களுக்கு மனிதவள மேம்பாட்டுப்பயிற்சி அளித்துள்ளேன்.

  வங்கிக்கடன்கள் குறித்து மட்டுமல்ல பல்வேறு ஆய்வுகளையும் செய்து கட்டுரைகளை எழுதியும், நிதி மனிதவளம் போன்ற பல்வேறு துறைகளில் தனக்குள்ள பரந்த  அனுபவத்தையும், ஞானத்தையும் பலப்படுத்தியுள்ளேன். இக்கட்டுரைகள் பல்வேறு இதழ்களிலும், மலர்களிலும் வெளியாகி உள்ளது.

  இந்திய முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தபொழுது, என்னை நேரில் சந்தித்து பாராட்டியது, எனக்கு மிகுந்த பெருமையை அளித்தது.

  நன்றிக்குரியவர்கள் என்று நீங்கள் சொல்ல விரும்புபவர்கள்…

  இத்தருணத்தில் மட்டுமல்ல, எப்பொழுதும் எனக்கு பெரிதும் நன்றிக்குரியவராக இருப்பவர்கள் எனது பெற்றோர்கள்.

  நான் பள்ளியில் படிக்கின்ற காலத்தில், தேசிய உதவித்தொகை கிடைத்த போது என்னை ஊக்குவித்த தலைமை ஆசிரியர் திரு. எஸ். இராமசாமி ஐயங்கார் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது தந்தைக்குப்பின்னர் எனக்கு பெரிதும் ஊக்கம் கொடுத்த டாக்டர் அக்பர் அவர்களுக்கும், என்னுடைய கல்லூரி முதல்வர் பேராசிரியர் கே.கே. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும், அறைத்தோழர் சதாசிவம் அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியைக் கூறவிரும்புகிறேன்.

  வங்கித்துறையில் பணிபுரிய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…

  1969ம் ஆண்டுதான் வங்கி நாட்டுடமையாக்கப்பட்டது. அப்பொழுது வங்கிப்பணியில் சேர்ந்தவர்கள் தற்போது ஓய்வு பெறும் வயதை அடைந்திருப்பார்கள். ஆகையால், இன்னும் இரண்டு அல்லது மூன்றாண்டுகளில் நிறைய பேர் பணி ஓய்வு பெறுவார்கள். இதனால், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் வங்கிப்பணிகளில் ஏற்படப் போகிறது. இதனை முறையாக உணர்ந்து கொண்ட இளைஞர்கள் இப்போதிலிருந்தே இதற்கான பணிகளைச் சரியாக செய்து கொள்ளுங்கள்.

  திறன் தேர்வு, பள்ளிக்கூட கணித அறிவு, அடிப்படை ஆங்கில அறிவு, கணினி அறிவு, பொது அறிவு போன்ற திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

  ஸ்டேட் வங்கியைத்தவிர, இதர வங்கிகள் அனைத்திற்கும் ஐ.பி.பி.எஸ்., (IBPS) என்றவாரியம்தான் தேர்வுகள் நடத்தும். இத்தேர்வு எழுதுபவர்கள் www.ibps என்ற இணைய தளத்தைப் பார்த்தால், இந்தத் தேர்வு குறித்த முழுமையான தகவலைப் பெறமுடியும்.

  தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது…

  வாய்ப்பு கிடையாது, வசதி கிடையாது என்று புலம்புவதற்குப் பதிலாக, வாய்ப்பையும் வசதியையும் நாம் தேடிச் சென்றால் நிச்சயம் வெற்றி பெறலாம். செய்யும் செயலில், உண்மை, ஒழுக்கம், நேர்மை, பண்பு ஆகியவை இருந்தாலே வெற்றி என்னும் எல்லைக்கோட்டைத் தொட்டு விடலாம்.