ஆரோக்கியமான வளர்சிக்கு ஆனந்தமான வாழ்க்கைக்கு “விரல்களின் ஒற்றுமை’ இன்று நமக்கு அவசியம் தேவைப்படுகிறது.

நம் ஐந்து கை  விரல்களும் மாறுபட்ட உயரத்தையும், பருமனையும் கொண்டது தான் என்றாலும் “வேற்றுமையில் ஒற்றுமை”  கொள்கிறது என்பது தான் உண்மை.

ஆள்காட்டி விரல்,  எதையேனும் சுட்டி காட்ட நீளும் போது மற்ற விரல்கள் மடங்கி கொண்டு அதன் பொறுப்பை நிறைவேற்ற வாய்ப்பு தரும்.

சுண்டு விரல், கை கூப்பி வணங்கும் போது மற்ற விரல்கள் சிறிது தானே என்று பாராமல் அவ்விரலை முன் நிறுத்தி அழகு பார்க்கும்.

கட்டை விரல், ஒரு பொருளை எடுக்கும் போது மற்ற விரல்கள் வளைந்து, நெளிந்து பொருளின் மறு பாகத்தைப் பற்றி எடுக்க உதவும்.

மோதிர விரல், அணிகலன் அணியப்படும் போது பிற விரல்கள் விலகி நின்று பெருமையுடன் பார்க்கும்.

நடுவிரல், எல்லா விரல்களையும் விட பெரிது என்றாலும் பிற விரல்கள் பொறாமை கொள்ளாமல் உதவும்.

இப்படி ஐந்து விரல்களும் வெவ்வேறு அளவு கொண்டது என்றாலும் ஒரு செயல் என்று வரும் போது வேறுபாடு மறந்து ஒன்றுபட்டு உழைக்கின்ற அந்த ஒற்றுமை நம் ஒவ்வொருவருக்குள்ளும் வர வேண்டும்.

“குடும்பம், தொழில், சொந்தம், பந்தம்” என எங்கும் எதிலும் ஆரோக்கியமான வளர்ச்சியும், ஆனந்தமான வாழ்க்கையும் பரவலாக வேண்டும் என்பதே நம் எல்லோரின் விருப்பமாகட்டும்!