Home » Articles » முதல் மதிப்பெண் சாதனை மங்கைகள்

 
முதல் மதிப்பெண் சாதனை மங்கைகள்


ஆசிரியர் குழு
Author:

வாழ்கையில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வத்தோடு போராடுபவர்களே  வாழ்வில் சாதனை புரிகிறார்கள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற வாய்மொழி ஆரம்ப காலத்தில் பெண் பிள்ளைகள் பிறந்த ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்துக் கொண்டே இருந்த காலம் வேறு. ஆனால் இன்றைய நிலையில் பெண்கள் தொடாத சாதனைகளே இல்லையென்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் செல்வி பவித்ரா, செல்வி நிவேதிதா அவர்கள்.

என் பெயர் நிவேதா. நான் கோவை மாவட்டத்திலுள்ள செல்வபுரம் என்னும் பகுதியில் வசிக்கிறேன். பெற்றோர் திரு. லட்சுமி நாராயணன், அருணாதேவி. தங்கை அக்ஷயா. அப்பா சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார். அம்மா இல்லத்தரசி.

நான் படித்தது கோவையிலுள்ள ஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. LKG முதல் 12ம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்ததால் இப்பள்ளியைப் பற்றி என்னால் முழுமையாக உணர முடிந்தது. பள்ளியின் முதல்வர் Dr. அனுராதா அவர்கள் அனைவரிடமும் அன்பாகப் பழகும் ஆற்றல் கொண்டவர். இவரின் அணுகுமுறை அனைவருக்கும் பிடிக்கின்ற வகையில் இருக்கும். அதுபோல் என் வகுப்பு ஆசிரியர் சங்கீதா அவர்கள், வின்து, சுதா, சுஜித்தா, சிவக்குமார், கோகிலா ஆகிய அனைவரும் தங்களுக்குரிய பாணியில் அனைவருக்கும் புரிகின்ற வகையில் பாடத்தை மிகவும் எளிமையாக நடத்துவார்கள். அன்றாடம் நடத்தக்கூடிய பாடத்தை அன்றே படிக்கும் பழக்கத்தை எங்களுக்கு இவர்கள் கற்றுக்கொடுத்தார்கள். முக்கியமாக எனக்கும் என்னைப் போன்ற பிற மாணவிகளுக்கும் படிப்பில் அழுத்தம் கொடுக்கமாட்டார்கள். எப்பொழுதும் எந்த சந்தேகம் கேட்டாலும் உடனுக்குடனே தீர்வினைச் சொல்வார்கள்.

படிக்கும்போது ஒரு திட்டம் வரையறுத்துக் கொண்டு படிக்க வேண்டும். நேரத்தை ஒருபோதும் வீணாக்காமல் படிக்க வேண்டும். அதிகாலையில் தான் நான் அதிகம் படிப்பேன். நான் படிக்கும் போதெல்லாம் என் பெற்றோர்கள் எனக்கு உறுதுணையாக உதவிகள் செய்து கொடுப்பார்கள். ஆர்வமும், ஊக்கமும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம்.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் கோவைப் பகுதியில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமிதம் ஏற்படுகிறது. நான் B.Com. வணிகவியல் துறை எடுத்து இத்துறையில் பெரிதும் சாதிக்க வேண்டும் என்பதே என் எதிர்கால கனவாகும்.

என் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் பெயர் பவித்ரா, நான் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பாப்பண்ணன் என்னும் கிராமத்தில் பிறந்தேன். பெற்றோர் ஜானகி ராமன், ராதா. அப்பா அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக இருக்கிறார், அம்மா இல்லத்தரசி. எனக்கு இரு சகோதரிகள் நிகிதா, பிரித்தி.

 நான் படித்தது திருப்பூரிலுள்ள ஊத்துக்குளி ரோடு கூலிப்பாளையம் விகாஷ் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில். நான் பெற்ற இந்தச் சாதனை வெற்றிக்கு இப்பள்ளி  மிகவும் உறுதுணையாக இருந்தது. இப்பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவர்களுடனும் ஒரே மாதிரியாக அன்புடன் நடந்து கொள்வார்கள். எல்லாத் துறை ஆசிரியர்களும் கொடுத்த ஊக்கம் தான் என்னை சாதிக்க வைத்தது என்றே சொல்லுவேன்.

பள்ளியில் ஆசிரியர்கள் எந்தளவிற்கு முழு ஊக்கம் கொடுப்பார்களோ,  அதே அளவிற்கு என் வீட்டிலும் என் பெற்றோர் மற்றும் என் பாட்டி சகுந்தலா அவர்களும் மிகுந்த ஊக்கமும், ஒத்துழைப்பும் கொடுத்தார்கள்.

நான் படிப்புக்கு என்று எந்த விதிமுறைகளும் வகுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற லட்சியம் மட்டுமே இருந்தது.

அந்த இலட்சியம் தான் என்னை வெகுவாக முயற்சியுடன் உழைக்க வைத்தது. நான் எப்பொழுதும் நேரத்தை வீணாக்கவே மாட்டேன். கிடைக்கின்ற நேரகத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்வேன்.

அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். அதிகாலை படிப்பு நன்றாக மனதில் நிற்கும். எனவே தூக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு இரவு நேரம் கண்விழித்துப் படித்தேன். பழைய வினாத்தாள்களைச் சேகரித்து வைத்து அதிலுள்ள வினாக்களையும் முழுவதுமாக படித்துப் பயிற்சிப் பெற்றேன்.

என் எதிர்காலத் திட்டம் சி.ஏ. படித்து, அத்துறையில் நன்றாக சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்தச் சமயத்தில் என் பெற்றோருக்கும், என் பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், என் நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2015

முதல் மதிப்பெண் சாதனை மங்கைகள்
சந்தோசம்
எண்ணங்களின் வலிமை
உயர்வுக்கு மூலதனம் இப்பொழுதே
மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவ-மாணவியரின் வெள்ளிவிழா சந்திப்பு!
இளம் பருவத்தில் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள்
தோல்விகள் தொடர் கதையா?
மனச்சோர்வை போக்குவது எப்படி?
நெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்
உழைப்பும் ஆரோக்கியமும்
இடைவெளியை புஜ்யமாக்குவோம்
ஆலோசனை
எண்ணம் விண்ணைத் தொட்டிட வியர்வை மண்ணைத் தொடட்டும்!
தன்னம்பிக்கை மேடை
உள்ளதோடு உள்ளம்