– 2015 – June | தன்னம்பிக்கை

Home » 2015 » June (Page 2)

 
 • Categories


 • Archives


  Follow us on

  சந்தோசம்

  மனிதனால் உருவாக்கப்பட்டதிலிருந்து அவனுக்கு கிடைப்பதல்ல உண்மையான சந்தோசம். ஒருவரது மனப்பதிவுகளுக்குத் தகுந்தாற் போன்றும், அதே வேளையில், அவரின் சூழலுக்கேற்ற எண்ண ஓட்டங்களைப் பொறுத்தும், ஒரு விசயத்தைக் குறித்த அவர் பார்க்கின்ற பார்வை, கண்ணோட்டம் மாறுபடும் என்பதால் சந்தோசத்திற்கான அளவுகோல்கள், மனிதருக்கு மனிதர் மாறுபடும். அது நிமிடத்திற்கு நிமிடம் வேறுபடுவதும் தவிர்க்க முடியாததாகும். உண்மையான சந்தோசம் என்பது இறையருள் நமக்குள் ஏற்படுத்தியுள்ள ஆழ்ந்த அமைதி நிலையாகும். அதை அடைவதே மனித குலத்தின் இறுதி நோக்கமாகும்.

  இதுவரை மனித சந்தோசத்தைக் குறித்து, நிறைய படித்தாகிவிட்டது. நிறையப்பேர் பேசியும் கேட்டாகி விட்டது. என்றாலும் மனமானது தினம் அதைத் தேடுவதை நிறுத்தியபாடில்லை. தொடர்ந்து அதைத் தேடிக்கொண்டே இருக்க என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தோமானால், ஒரு விசயம் தெளிவாகப் புரிகின்றது.

  சந்தோசம் என்பது மனித இதயத்திற்கு ஒப்பானதாகும். அது ஏதோர் வகையில் மனிதனுக்குத் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் அவன் வாழ்வு அர்த்தமற்றதாக அவனுக்குத் தோன்றத் தொடங்கும். சந்தோசமே, மனித வாழ்வை அளக்கின்ற அளவுகோலாக இன்றைக்கு கருதப்படுகின்றது என்றால் அது மிகையாகாது.

  ஒருவர் சந்தோசமாக இருந்தால், அவரை பாக்கியவான் என்றும், சந்தோசமாக இல்லை என்றால் பாவி என்றும் இந்தச் சமூகம் சித்தரிக்கின்றது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் சந்தோசத்தின் மகிமையை.

  உண்மையான சந்தோசம் என்பது, உயர்ந்த பண்புள்ள தெய்வீகத் தன்மை வாய்ந்த, மேன்மையான குணாதிசயங்கள் மூலமாக வருவதே. உள்ளத்துள்ளே வஞ்சத்தை வைத்துக்கொண்டு, உதட்டளவிலே சந்தோசத்தை வெளிப்படுத்தும் தன்மைதான் இன்றைக்கு அதிகரித்துள்ளது. நிறைவானதொரு மகிழ்வு நிலையை, உயர்வானதொரு சந்தோசத்தை, ஆத்மார்த்தமாக அனுபவிப்பது என்பது மிகுந்த கடினமானதொரு செயலாகவே இன்று இருக்கின்றது.

  சந்தோசம் குறித்து நம்மில் பெரும்பாலானோர் முடிவு என்ன என்றால், நாம் எண்ணியது எல்லாம் நடந்துவிட்டால், நம்முடைய பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிட்டால், நம்முடைய கையில் பெரும் பணம் வந்துவிட்டால், நாம் பலர் நடுவில் பேர், புகழ், அடைந்துவிட்டால், நாளுக்கு நாள் நம் வாழ்வில் உயர்வு ஏற்பட்டுவிட்டால், நாம் மிகுந்த சந்தோசம் உடையவராக மாறிவிட்டோம் என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

  மேற்கண்டதல்ல உண்மையான சந்தோசம் என்பது. இந்த உலகத்தில் பலரிடம் அளவுக்கு அதிகமான, பொன், பொருள், புகழ் உள்ளது. ஆனால் அவர்கள் உண்மையானதொரு சந்தோசத்தை, மனநிறைவை, அனுபவிக்காதவர்களாகவே அலைகின்றார்கள் என்பது யாவரும் அறிந்த மிகப்பெரிய உண்மையாகும். இப்படிப்பட்டவர்களில் பலர் இறுதி வரை, அந்த உண்மையான சந்தோசத்தை அடைந்து அனுபவிக்காமலே போய்விடுகின்றார்கள் என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.

  ஒவ்வொருவரின் சந்தோசமும், அவர்களின் சிந்தனையில் இருந்தே தோன்றுகின்றது என்பது அனுபவத்தில் உணரப்படவில்லை. அதுபோல், எளிமையான ஒன்றாக இல்லாமல் போவதும் தான் சந்தோசத்தை அவ்வப்போது இழக்க நேரிடுகின்றது என்பதையும் தெரிந்து கொள்வதில்லை. நான் மேலானவன், எனக்கு நீ கீழ்படிந்து நடக்க வேண்டும் என்கின்ற நினைப்பே நம் சந்தோசத்தைச் சீர்குலைக்கத் தொடங்கி, நம்மை சின்னாபின்னமாக்கி விடுகின்றது. ஒன்றை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். சர்வாதிகாரம் படைத்தவன் இந்த உலகில் எவனும் இல்லை என்று சர்வாதிகாரம் சஞ்சலத்திற்கே வழிவகுக்கும். சாந்தமும், சமத்துவமும், சகோதரத்துவமே என்றைக்கும் சந்தோசத்தைத் தரும்.

  அதுபோல் மனம் விடுதலை அடைந்த நிலையிலும் சந்தோசம் சீர் குலையாது. மனம் விடுதலை அடைந்த நிலை என்றால் நம்மிலும் மேலோன் நம்மை இழிவுபடுத்தும் போதும், நம்மாலும் கீழோன் நம்மை மீறிச்செல்லும் போதும், நாம் மனம் வருந்தக்கூடாது. யாருடைய கவுரவத்தையும், மரியாதையையும் எதிர்பாராத ஒரு எளிய நிலையை அடையக்கூடியதாகும்.

  மேற்கண்ட நிலையை எப்படி நாம் அடைவது என்ற கேள்வி எழுகின்றது இயல்பே. தன்னிலை உணர்கின்ற தன்மையினால் மட்டுமே அது நிகழக்கூடியதாகும். தன்னில் காணப்படும், பலம், பலவீனம் மற்றும் எளிமைத்தன்மையை அறிந்து கொள்வது ஒன்றேஅதற்கான வழியாகும்.

  தன்னிலை உணர்ந்தவன் என்றாலும் அவன் தன்னைத் தானே மிகுதியாக நம்பிவிடுவதும் கூடாது. அதுபோல் தன்னைத்தானே மிகுதியாக நம்பாது இருத்தலும் கூடாது. மேற்கண்ட இரண்டு காரணத்தால் வரலாற்றில் தோற்றுப்போனவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எப்போதும் சமஅளவு, நாம் நம்மை நம்பும் தன்மை இருக்க வேண்டும். அதற்கு மேல் இறைத்தன்மையையும் இருக்கின்றது என்கின்ற எண்ணத்துடன் எளிமையாக இயங்கக் கற்றுக்கொண்டால் என்றைக்கும் சந்தோசத்திற்கு குறையிருக்காது.

  உங்கள் சந்தோசத்தை உங்களைத் தவிர எவராலும் அழித்துவிட முடியாது. நீங்கள் எத்தகைய நேரத்திலும் எல்லாம்வல்ல இறையாற்றலுடன் இரண்டக் கலந்திருக்கும் வல்லமை பெற்று இருந்தால், என்றைக்கும் உங்கள் சந்தோசத்திற்கு குறையிருக்காது.

  சந்தோசமாய் இருங்கள்!

  சர்வமங்களம் உண்டாகும்!

  இந்த இதழை மேலும்

  எண்ணங்களின் வலிமை

  உங்களின் கடந்த கால எண்ணமே இன்று நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையாகும். தற்போது உங்களின் எதிர்கால வாழ்க்கையை உங்களின் எண்ணங்கள் மூலம் எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்.

  நீங்கள் உங்கள் வாழ்க்கையை உருவாக்குகிறீர்கள். எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். உங்கள் எண்ணங்கள் தான் விதை. உங்களது அறுவடை நீங்கள் விதைக்கும் விதையைப் பொறுத்தே இருக்கும். நீங்கள் எப்போதும் குறை கூறிக்கொண்டே இருந்தால் உங்கள் வாழ்க்கை எப்போதும் குறைகள் நிறைந்ததாகவே இருக்கும். உங்களுடைய தற்போதைய வாழ்க்கை, நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்த எண்ணங்களினால் ஏற்பட்ட விளைவு தான். நீங்கள் உங்களுடைய எண்ணங்களை மாற்றினால் உங்கள் வாழ்க்கை முற்றிலுமாக மாறிவிடும்.

  ஒருவர் தன்னுடைய எண்ணத்தின் மூலம் தன்னுடைய தலையெழுத்தையே மாற்றலாம். இன்றிருக்கும் நாம் நமது எண்ணங்களின் விளைவே – புத்தர்.

  நம் வாழ்வின் அனைத்துவிதமான வெற்றி மற்றும் தோல்விகளுக்கு நீங்களே காரணகர்த்தாவாகும். எனவே உங்களைப் பற்றி நீங்கள் உயர்வாக நினைத்து கொள்ளுங்கள். நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அப்படியே அதை தங்களின் மனக்கண்ணில் படமாக்கிப் பாருங்கள். இவை மனதிற்கு மகிழ்ச்சியும், உயர்ந்த மனப்பான்மையும், நேர்மறை எண்ணங்களையும் உருவாக்கும்.

  உங்கள் மனதில் எதை படமாக்கி பார்க்க முடிகிறதோ அவை கண்டிப்பாக உங்களை வந்தடையும். அப்படி இல்லையென்றால் உங்களால் அந்த விஷயத்தை கற்பனை கூட செய்ய முடியாது. எனவே நல்ல எண்ணங்களை மனதில் விதையுங்கள். அது நடக்கும் என்று நம்புங்கள். ஆனால் நம்பும்படியாக நடிக்காதீர்கள். நாம் நினைத்த விஷயம் உதாரணமாக கார் வாங்குவதாக இருப்பின் அக்காரின் புகைப்படத்தை நீங்கள் தூங்கி எழுந்த பின் உங்கள் கண்களில் படும்படியாக ஒட்டி வைத்துக்கொள்ளுங்கள். தினமும் அதைப் பார்த்துக் கொண்டே இருங்கள். உங்களின் கார் உங்களுக்கு சொந்தமாகிவிட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். உங்களின் விருப்பமான காரின் நிறம், எண் அனைத்தையும் தேர்வு செய்யுங்கள். அவை உங்களுடையது என்று நம்புங்கள். வெகு விரைவில் அந்தக் கார் உங்களை வந்தடையும்.

  எண்ணியவன் உறங்கி விடலாம். ஆனால் எண்ணங்கள் உறங்குவதில்லை  வேதாத்திரி மகரிஷி

  பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக்கூடிய காரியங்களை நீங்கள் ஒரு நிமிடத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீங்கள் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதீர்கள். இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்துவிடுவீர்கள். எனவே செயலோடு சிந்தனைகளை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். இவை நம்மை விழிப்போடு வைத்துக் கொள்ள உதவுகிறது.

  உங்கள் மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் அது கண்டிப்பாக உங்கள் கைகளில் தவழும்  பாப் பிராக்டர்

  உங்களது தேவை என்னவோ அதை பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால், உங்களது அந்த எண்ணத்தை ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியும் என்றால், கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை உங்களால் வாழ்வில் கொண்டு வரப்போவது உறுதி.

  சூழ்நிலை மனிதனை உருவாக்குவதில்லை. அடிப்படையில் இன்ன மனிதன் தான் உள்ளே இருக்கிறான் என்பதை அவனுக்குக் காட்டிக் கொடுக்கிறது.

  எனவே எந்த சூழ்நிலையிலும் உங்களின் மனதை நேர்மறையாக வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் உங்களை வார்த்தைகளால் காயப்படுத்தினாலும், நீங்கள் அதை எல்லாம் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் நம்மை அவமானப்படுத்தியதாக நினைக்கலாம். ஆனால் அவர்கள் அதற்கான பலனை விரைவில் அடைவார்கள். யாருடைய ஆத்மாவையும் யாராலும் தண்டிக்கவோ, உதாசினப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ முடியாது, தண்டிக்கும் உரிமை பரம்பொருளான லக்ஷ்மி நாராயணனுக்கு மட்டுமே உண்டு. எனவே எப்போதும் கடவுளை நம்புங்கள்.

  எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும், அதை களையும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம். அந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டால், வாழ்வில் நமக்குத் தோல்வி என்பதே கிடையாது. ஒரு எதிர்மறை சிந்தனையாளர், எப்போதும் பிறரிடம் குறைகளையே காண்பார். ஒரு ஆரோக்கிய மனிதரைக் கண்டால், அவர் நோயுற்றிருந்தால் என்ன ஆகும் என்ற வகையில் யோசனை செய்வார். அவர்கள் தங்களின் முழு வாழ்வையும், பிற விஷயங்களில் குறை கண்டுபிடித்தே வீணாக்குவார்கள்.

  அதே சமயத்தில் நேர்மறை சிந்தனையாளர் என்பவர் உலகிலுள்ள அனைத்து விஷயங்களிலுமே அதே எண்ணத்துடன் இருக்க முடியாது. ஒரு சில விஷயங்களில் அஹ்ர் எதிர்மறையாகத்தான் செயல்பட வேண்டியிருக்கும். அந்த விஷயங்கள் அந்தக் குறிப்பிட்ட நபருக்கோ அல்லது சமூகத்திற்கோ தீங்கு ஏற்படுத்துவதாக இருக்கலாம்.

  ஒருவருக்கு வாழ்வில் ஏதாவது சூழலில் அல்லது சூழல்களில் எதிர்மறை எண்ணங்களை வந்தே சேரும். உதாரணமாக, தேர்வை சரியாக எழுதாததால் அதில் தோல்வியடைந்து விடுவோமா? என்று நினைப்பது அதில் ஒருவகை. ஆனால் இதுபோன்ற எண்ணங்களிலிருந்து விடுபடும் வழிகளைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகள் சில,

  கவலைப்படுவதை நிறுத்துங்கள் கவலைகள் உங்களை சூழ்ந்திருக்கும்போது ஏதாவது நல்ல விஷயங்களைப் பற்றி நினையுங்கள்.

  கவலை தரும் கலந்துரையாடலில் கலந்து கொள்வதைத் தவிருங்கள். இது எப்போதும் உங்களைப் பாதிக்கும். ஒருவேளை அதுபோன்ற சூழலில் சிக்கிக்கொள்ள நேர்ந்தால், நேர்மறையான விஷயங்களை நீங்களே முதலில் பேச ஆரம்பிக்கவும். எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டு, தங்களின் தோல்விக்கு மற்றவற்றை குறைகூறும் நபர்கள் நிறைய உள்ளனர்.

  நேர்மறை எண்ணம் கொண்டவர்களின் நட்பை ஏற்படுத்திக் கொள்ளவும்.

  மற்றவர்கள் கவலையிலிருந்து விடுபட அவர்களுக்கு உதவி செய்யுங்கள். இதன் மூலம் உங்களின் தன்னம்பிக்கை மேம்படும்.

  இந்த உலகம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என்ற எண்ணம் வேண்டும். அதேசமயம் தூய்மையான கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு, அந்த நம்பிக்கையும் துணைபுரியும்.

  நேர்மறையாக சிந்தித்தல்

  உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் மீது நம்பிக்கை இல்லையென்றால் உங்களால் எதிலும் வெற்றியடைய இயலாது.

  மனஅமைதி என்பது ஒரு மனிதன் வெற்றிக்கும் நிம்மதியான வாழ்வுக்கும் தேவையான அடிப்படைத் தகுதியாகும். பிரச்சனைகளை நம்முடன் தேக்கி வைத்திருப்பது அல்லது அதை நினைத்துக் கொண்டே இருப்பதானது எதையும் செய்ய விடாது. எதிர்மறை எண்ணங்கள் நம்மை நிம்மதியாக வாழ விடாது. நாம் நினைத்த காரியத்தில் வெற்றியடைய தேவையான சக்தியை நாம் தான் உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்.

  எதிர்மறை சிந்தனையின் வெளிப்பாடுதான் கோபம். எனவே கோபமும், கவலையும் எப்போதும் இருக்கக்கூடாது. ஏனெனில், பலகீனமான மனிதர்களிடமிருந்து வாய்ப்புகளைத் தட்டிப் பறிக்க இந்த உலகில் பலர் காத்துக் கொண்டுள்ளனர். எதிர்மறை எண்ணங்கள் உங்களை பலவீனமானவர்களாக காட்டும். கோபம் மற்றும் கவலை போன்றவை எதிர்மறை எண்ணங்களின் தொடக்கப் புள்ளிகளாக உள்ளன. எனவே அவற்றை தவிர்க்க வேண்டும். இதன் மூலமே, நேர்மறை எண்ணத்தின் முதல் படியை நீங்கள் அடைகிறீர்கள்.

  வாழ்வின் மோசமானப் பகுதியை கடந்துவிட்டோம், இனிமேல் நமக்கு வசந்தம் தான் என்று நினைக்க ஆரம்பித்தால் எதிர்மறை எண்ணங்களை களைய முடியும்.

  நம் வாழ்வை உற்சாகமாக்கும் மாற்றம் நமக்கு வேண்டும். புதிய சிந்தனைகள் மற்றும் நமது எண்ணங்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடியவை எனவே, எப்போதுமே புதிய எண்ணங்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டும்.

  மருத்துவ அறிவியலில் நிரூபிக்கப்பட்ட ஒரு உண்மை என்னவெனில், ஒரு நோயாளி என்னதான் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், தனது உடல் நலம் விரைவில் தேறிவிடும். தான் பூரண குணமடைந்துவிடுவோம், நமக்கு எந்த சிக்கலும் இல்லை என்று நினைத்தால், அவரின் அந்த எண்ணமும், அவர் குணமடைவதில் குறிப்பிட்ட பங்கை வகிக்கிறது. அதேசமயம், ஒரு நோயாளி, தான் எளிதாக குணமடையப்போவதில்லை, எல்லாம் முடிந்தது, இனி ஒன்றுமில்லை என்று நினைத்தால் அவரின் முடிவுக்கு அந்த எதிர்மறை எண்ணமும் ஒரு முக்கிய காரணமாகிறது.

  மிகவும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட பலர் தங்களது அபார நம்பிக்கையால் மீண்டு வந்த வரலாறுகள் ஏராளம். சாதாரண விஷயங்களுக்கே, புல்தடுக்கி இறந்தவர்களும் ஏராளம்.

  இந்த உலகில் ஒவ்வொருவருமே, ஒரு தனித்திறமையுடன் பிறக்கின்றனர். ஒருவருக்கு நல்ல நினைவுத்திறன் இருக்கலாம். ஒருவருக்கு விளையாட்டுத்திறன் இருக்கலாம். ஒருவருக்கு குரல் வளம் இருக்கலாம். ஒருவருக்கு சிறந்த ஆராய்ச்சித் திறன் இருக்கலாம். ஒருவருக்கு நல்ல தோற்றப் பொலிவு இருக்கலாம். தனது தனித்திறமையை இளமையிலேயே கண்டுகொண்ட ஒருவர், வாழ்வில் நல்ல உயரத்தை எட்டுகிறார். ஆனால், இதுபோன்றவர்கள் குறைவாகவே உள்ளனர்.

  தோல்வியடைந்தவர்கள் தங்களின் குறைகளையும், தங்களின் சுற்றத்தையும் குறைகூறிக்கொண்டே இருந்து விடுவார்கள்.

  சச்சின் டெண்டுல்கரை உதாரணமாக எடுத்துக்கொண்டால், அவர் சராசரியைவிட குறைவான உயரம் கொண்டவர். ஆனாலும் தனது பேட்டிங் திறமையை சரியான நேரத்தில் அஹ்ர் அடையாளம் கண்டதால், அவர் இன்று இந்தளவிற்கு பிரபலமாகியுள்ளார்.

  நாம் கண்ட மற்றும் காணும் பலர் குறைகளை உடையவர்கள். ஆனாலும் குறைகளை ஒதுக்கித்தள்ளி, நிறைகளைக் கண்டு, அவற்றை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியதால் இன்று பெரிய மனிதர்களாக வந்துள்ளனர்.

  எனவே குறைகளை மறப்போம்ஙு நிறைகளை மட்டுமே எண்ணுவோம்ஙு வாழ்வில் வெற்றியடைவோம்ஙு

  எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

  எண்ணுவம் என்பது இழுக்கு

  எனும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டுவோம்ஙு

  வரலாறு படைப்போம்!

  இந்த இதழை மேலும்

  உயர்வுக்கு மூலதனம் இப்பொழுதே

  கமாகச் செல், வேகமாகச் செல். உன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேகமாகச் செல்”. இந்த எழுத்துக்கள் எட்டாம் ஹென்றியின் காôலத்தில் தபால் உறையின் மீது எழுதப்பட்டிருந்தது.

  தபால் போக்குவரத்து இல்லாத அந்தக் காலத்தில் அரசாங்கத் தூதுவர்களே கடிதங்களை எடுத்துக் கொண்டு செல்வார்கள். அவர்கள் வழியில் தாமதித்தால் என்ன தண்டனை தெரியுமா?

  மரண தண்டனை!

  நாம் இன்று சில மணிநேரத்தில் கடந்து செல்லக்கூடிய தூரத்தை, அன்று பல நாட்கள் நடந்து செல்ல வேண்டிய அந்தக் காலத்தில் கூட அனாவசிய தாமதமானது பெரும் குற்றமாகக் கருதப்பட்டது.

  அந்தக் காலத்தில் உள்ளவர்கள் ஒரு வாரத்தில் செய்யக்கூடிய காரியத்தை இன்று ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்கும் வகையில் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது

  அன்று அனாவசியத் தாமதத்திற்கு மரண தண்டனை என்றால் இன்று அவ்விதக் குற்றத்திற்கு என்ன தண்டனை அளிக்கப்பட வேண்டும்?

  சோம்பேறித்தனத்தின் காரணமாக ஏற்பட்ட அனாவசிய தாமதத்தால் உலகில் ஏற்பட்ட அழிவுகள் அளவிட முடியாதவை.

  எத்தனை பேரரசுகள் சரிந்து சாம்பலாகி இருக்கின்றன. எத்தனை முடியரசுகள் கவிழ்ந்து இருக்கின்றன.

  எனவே தான் நெப்போலியன் கூறினார், “இழந்துவிட்ட ஒவ்வொரு நிமிடமும் துன்பத்திற்கும், துயரத்திற்கும் சந்தர்ப்பம் அளிக்கிறது”.

  உடனுக்கு உடன் காரியங்களை ஒழுங்காகச் செய்து முடிப்பது போன்று, நமக்கு வெற்றி மாலை சூட்டக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.

  இதே போன்று

  செய்ய வேண்டியதை ஒத்திப்போட்டுக் கொண்டே போவது போன்று துன்பப் படு குழியில் தள்ளக் கூடியதும் வேறு ஒன்றும் இல்லை.

  காலம் என்ற கடிகாரத்தில் ஒரே ஒரு சொல் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால் “இப்பொழுதே” என்பது தான்.

  இதுதான் வெற்றி வீரனின் தாரக மந்திரமாகும். பின்பு என்பது தோல்வியின் தோழமைச் சொல்லாகும்.

  அன்றாடம் செய்யப்பட்டிருக்க வேண்டிய வேலைகள் ஒத்திப் போடப்பட்டதன் காரணமாக மலைபோல் குவிந்து மலைக்க வைத்துவிடும்.

  அதனால் நம்முடைய வாழ்வு சிறப்பு இன்றி சீதனம் குன்றி அமைந்து விடுகிறது.

  செய்ய வேண்டிய வேலையை உடனுக்கு உடன் செய்யாமல், வந்திருக்கும் மடலுக்கு பதில் எழுதாமலும் இருப்பது, வாழ்க்கைச் சக்கரத்தை ஓடச் செய்யாமல் தடைபோட்டு விடும்.

  ஒரு வேலையை ஒத்திப்போடுவது தான் என்றால் என்ன? அதைப் புதைகுழியில் போட்டு மூடிவிடுவது என்பது தான்.

  பின்பு பார்ப்போம் என்றால் பின்பு ஒரு போதும் அதனை ஏறிட்டுப் பார்ப்பது இல்லை என்பது தான்.

  ஒரு வேலையைச் செய்வது, விதையை விதைப்பது போலாகும். அது உரிய காலத்தில் நடப்படவில்லை என்றால் அது காலம் தவறிய நடவு தானே.

  காலம் தவறிய நடவின் பயன் அதற்கு ஏற்றால் போலதான் இருக்கும். எனவே இப்பொழுது என்பது நமக்கு அருளப்பட்டிருக்கும் மாணிக்கமாகும்.

  தோசையைச் சுடச்சுடச் சாப்பிடும் சுவை, அது ஆறிய பின்பு அந்த சுவை இருக்குமா? இது போன்றுதான் ஒத்திப்போடப்பட்ட செயலும் இருக்கும்.

  இதனால் நமக்கு உற்சாகம் குறைந்து விடுவதோடு, அது தன்னுடைய புதிய தன்மையை இழந்து விடுகிறது. நான் வெற்றி அடைந்ததற்குக் காரணம் நான் எப்பொழுதும் தயராக இருந்தது தான் என்கிறார் நெப்போலியன்.

  பத்து மணிக்கே வேலை செய்வதாக இருந்தால், நான் ஒன்பது மணிக்கே தயாராகிவிடுவேன். எனக்காக வேண்டி யாரையும் ஒரு நிமிடம் கூட காத்திருக்க விடுவதில்லை என்று அவர் விளக்கம் தந்தார்.

  இவ்வளவு குறுகிய நேரத்தில் இவ்வளவு அதிகமான வேலையை தங்களால் எவ்விதம் செய்ய முடிந்தது என்று அறிஞர் வால்ட்டர்லேயிடம் கேட்டபோது,

  நான் எதையும் செய்ய வேண்டியிருந்தால் அதனை உடனே செய்து முடித்து விடுகிறேன்” என்று அவர் கூறினார்.

  இவ்வளவு வேலைகளையும் செய்து கொண்டு தங்களால் எவ்விதம் பொது வாழ்வில் ஈடுபட முடிகிறது என்று பிரெஞ்சு அரசியல்வாதியிடம் ஒருவர் கேட்டபோது,

  இன்றைய வேலையை நான் ஒருபோதும் நாளைக்கு என்று தள்ளிப்போட்டது இல்லை” என்றார். வாழ்க்கையில் முன்னேறியவர்களைக் கவனித்தால் அவர்கள் நேரத்தைச் செலவிடுவதில் சிக்கனக்காரர்களாக இருந்திருக்கின்றனர்.

  உடல் அமைப்புக் கலைஞராகிய ஜான்ஹண்டர் முதுமையிலும் ஓயாது வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் இன்னுமா ஓயாது வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ஒருவர் கேட்டார்,

  “ஆம்! நான் இறந்து போன பின்பு மற்றொரு ஜான் ஹண்டரைக் காண முடியுமா?” என்று திருப்பிக் கேட்டார்.

  ஆகவே உயர்வுக்கு மூலதனம் என்பது “”இப்பொழுதே”

  இந்த இதழை மேலும்

  மதுரை வேளாண்மைக் கல்லூரி மாணவ-மாணவியரின் வெள்ளிவிழா சந்திப்பு!

  25 ஆண்டுகள் கழித்து உடன்படித்த கல்லூரி நண்பர்கள் சந்தித்துக் கொண்டால் சந்தோசத்திற்கு கேட்கவா வேண்டும்? கோரமண்டல கடற்கரையோரம் அமைந்த அழகு நகரம் பாண்டிச்சேரியில் (இப்போது புதுச்சேரி) மே மாதம் நடந்ததுதான் இந்த சந்திப்பு!

  மதுரை வேளாண்மைக் கல்லூரியில் 1986 முதல் 1990 வரை ஒன்றாகப் படித்த 36 பேர் தங்கள் குடும்பத்தினருடன் ‘ஆனந்தா இன்’ ஹோட்டலில் முதல் நாள் மாலையிலிருந்து அடுத்த நாள் காலை வரையில் வந்து சேர்ந்தனர். பிரிந்து சென்ற பறவைகள் மீண்டும் ஓரிடம் வந்து சேர்ந்தால் எத்தனை ஆரவாரமும் ஆர்ப்பரிப்பும் இருக்குமோ அத்தனையும் காணமுடிந்தது. “ஹாய்’, “ஹலோ’, “நண்பா’ என்ற விழிப்புகளை  நிறையவே கேட்கமுடிந்தது. “இவள்தான் என் மகள்; +2 தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறாள்’, “இவன் என் இரண்டாவது பையன்; எட்டாம் வகுப்பு படிக்கிறான்; ஒரே வால்!!’ போன்ற உரையாடல் காட்சிகளையும் பார்க்கமுடிந்தது.

  சரியாக 11 மணிக்கு ஆனந்தா இன்னின் வெர்சைல்ஸ் அரங்கத்திற்கு அனைவரும் வந்து சேர நிகழ்ச்சி தொடங்கியது. ‘எவர்கிரீன் பார்ம்ஸ்’ நிறுவனத்தை நடத்தும் திருமாவளவனால் வடிவமைக்கப்பட்ட பேனர் கண்களைக் கவர்ந்தது. நிகழ்ச்சி தொகுப்பாளராக குமார் (இவர் புதுடெல்யில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் விஞ்ஞானியாக உள்ளார்) அவருக்கு உதவியாக ‘ரெனர் ஹெல்த்கேர்’ல் மண்டல இயக்குனராக  இருக்கும் ரங்கநாதன் என்று நிகழ்ச்சி  தொடங்கியது. புதுச்சேரியில் வேளாண்மைப் பயிற்றுனராகப் பணியாற்றும் விநாயக வெங்கடாசலபதியின் “ஒன்றே குலம் என்று பாடுவோம்” என்ற பாடலுடன் நிகழ்ச்சி களைகட்டியது. திருச்சி வேளாண்மைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் திலகவதி வரவேற்புரை நிகழ்த்தியபின் ஒவ்வொருவரும் தத்தம் குடும்பங்களை மேடையில் அறிமுகம் செய்தனர்.

  சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த பங்கஜம் அவ்வப்போது அடித்த ‘கமெண்ட்’களில் அரங்கமே சிரிப்பலைகளில் மிதந்தது. பங்கஜமும் மைதிலியும் கலாய்த்துக் கொண்டதுதான் ‘ஹைலைட்’!! அத்தனை கலாய்ப்புக்கும் இடையில் இந்துமதி தனது தாயாரை அறிமுகம் செய்துவைத்தார். கோவையில் பேராசிரியராக உள்ள வெங்கடேசன் எப்படி மாணவர்களுடன் அனுசரணையாக இருப்பது பற்றி விளக்க சிரிப்பலைகள் மீண்டும் எழுந்தன. இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ரமணிதரன் தான் இந்தியாவில் படிக்க கிடைத்த வாய்ப்பை பற்றிக்கூறி அனைவரையும் ஒருமுறை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்தார்.

  ‘கார்டா கெமிகல்’சில் மண்டல மேலாளராக இருக்கும் சுதாகர் முதல்முறையாக குளிர்காலத்தில் டெல்லி சென்றபோது ஸ்வெட்டர் போட மறந்ததால் பட்ட அவஸ்தைகளைச் சொன்னார். ‘கோத்ரெஜ் அக்ரோவெட்’டில் மேலாளராக உள்ள ஜெயராதாகிருஷ்ணன், தான் எப்படி ஒரே கம்பெனியில் தொடர்ந்து 25 வருடங்களாகப் பணிபுரிகிறார் என்பதைச் சொல்லி ஆச்சரியப்படுத்தினார். ‘ரேஸ்’ நிறுவனத்தில் பணியாற்றும் குழந்தைவேல் அதிரடியாகப் பேசி அரங்கத்தில் ஆர்ப்பலைகளை ஏற்படுத்தினார். எல்ஐசியில் உயர்அதிகாரியாக உள்ள அசோகன் எல்லோரிடமும் நட்புடன் அளவலாவிக் கொண்டிருந்தார். வேளாண் அலுவலராகப் பணியாற்றும் சுரேஷும் அவரது மனைவியும் ஈஷா யோகாவின் மீதான ஈடுபாட்டைப் பற்றிச் சொன்னார்கள்.

  பிரேமலட்சுமியின் கணவர் ஆறுமுகமும் கண்ணாமணியின் கணவர் முத்தமிழனும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருப்பதாகக்கூறி பாராட்டினர். சபீனாவின் கணவரும் இதை பற்றிச் சொல்லிப் பாராட்டினார். கேரளாவில் வசிக்கும் சந்தோஷ்குமார் மலையாளம் கலந்த தமிழில் பேசியது அனைவரையும் கவர்ந்தது.

  காரைக்காலிலுள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கும் கிருஷ்ணன் வந்தபோது, “நீங்கள் என்ன டாக்டர்?’ என்று கேட்டு கலாய்த்தனர். வேளாண் அலுவலராகப் பணியாற்றும் சுப்புராஜ் தனது இரண்டு மகள்களையும் பெருமையோடு அறிமுகம் செய்தார். அதேபோல, வெற்றிச்செல்வியும் அவரது கணவரும் தங்கள் இரண்டு பெண்களையும் பெருமையுடன் அறிமுகப்படுத்தியது நினைவில் நின்றது. தேன்மொழி தனது மகளையும் மருமகனையும் அறிமுகப்படுத்தியபோது கரவொலிகள் எழுந்தன.

  ஒரு தனியார் கல்லூரியில் இயக்குனராக இருக்கும் பார்வதி தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ஷீலா தன் உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பையும் அதை எதிர்கொண்டு வெற்றிபெற்றதையும் சொல்லி கண்களை பனிக்கவைத்தார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஓட்டப்பந்தய வீராங்கனையாக இருந்த சுஜாதா இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்குப் பாராட்டினார். அலைஸ் தான் முதுகலையில் முதல் மதிப்பெண் பெற்றதைச் சொன்னபோது “ஓ’ என்று ஓசை எழுந்து அடங்கியது. தாமதமாக வந்தாலும் சாந்தா எல்லோரிடமும் பேசி மகிழ்ந்தார்.

  விழாவின்போது சுதாகரின் மகள் ரிவந்திகாஸ்ரீயின் பரதநாட்டியம் எல்லோர் மனதையும் கவர்ந்தது. கிறிஸ்டி நிர்மலா மேரியின் மகன் டேனி மார்டின் பாடிய பாடலும் அவரது கணவர் ஜெயசீலன் பாடிய பாடலும் மனதில் நின்றன. வேளாண் அலுவலராகப் பணியாற்றும் செல்வராஜ் டிஎம்எஸ் குரலில் “நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்” என்று பாட மற்றவர்கள் அதில் லயித்தனர். “காலங்களில் அவள் வசந்தம்’ என்று பாடிய அண்ணாஅரசு பொன்விழா சந்திப்பையும் அனைவரும் பார்க்க வேண்டும் என்று சொன்னது மனதில் நின்றது.

  கத்தார் டோஹாவிலிருந்து (Doha) கண்மணிசெல்வியும், இலங்கையிலிருந்து பார்த்தசாரதியும் தொலைபேசி மூலம் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர். காரைக்குடியிலிருந்து முத்துக்குமரனும் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார்.

  மதிய உணவுக்குப்பின் இரண்டு டீலக்ஸ் பேருந்துகளில் அனைவரும் சுன்னாம்பாறு காயல் (Chunnambar Backwaters) வந்து சேர்ந்தனர். அரைமணி நேரம் மெகா படகுகளில் பயணித்து பாரடைஸ் பீச் (Paradise Beach) சென்றதுவும் அங்கிருந்து பத்து நிமிடங்கள் நடந்து வங்காள விரிகுடா கடற்கரையை அடைந்ததுவும்தான் தெரியும். நேரம் போனதுதான் தெரியவில்லை!! ஆர்ப்பரிக்கும் அலைகள் கால்களைத் தொட்டுத்தொட்டுச் செல்ல நீல வானம் நினைவுகளுக்கு சாட்சியாக நின்று பார்த்தது. நண்பர்களின் அடுத்த தலைமுறை உற்சாகத்தில் திளைத்தது  கண்கூடாகத் தெரிந்தது. மதுரை வேளாண்மைக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் செந்தில் மகள் மிருதுளாவிற்கு அலைகளை விட்டுவிட்டு வர மனதேயில்லை. திரும்பி வரும்போது ‘டபுள் டெக்கர்’ படகு. இளைய தலைமுறை மேல்தளத்தில் இடம் பிடிக்க, மூத்த தலைமுறைக்கு கிடைத்ததென்னவோ கீழ்தளம்தான்!!

  இரவாவது? பகலாவது? இளையதலைமுறை ஏதாவது பொழுதுபோக்கு நிகழ்ச்சி வேண்டுமென்று சொல்ல, ரம்யாவும் ரங்கநாயகியும் சேர்ந்து ‘தம்போலா’ என்ற அதிர்ஷ்டப் போட்டியை நடத்த அது ஒரே உற்சாகத்தையும்  குதூகலத்தையும் அரங்கேற்றியது.

  அடுத்தநாள். அரைமணி நேரம் பயணம் செய்து அனைவரும் வந்து சேர்ந்த இடம் ஆரோவில் (Auroville) என்கிற சர்வதேசக் குடியிருப்பு. கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள சாராபர்வின்பானு ஆரோவில் செல்லவிருப்பதை உற்சாகத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததாகச் சொன்னார். ‘எரீக்’ என்கிற பிரெஞ்சு நாட்டுத் தன்னார்வர், ஆரோவில்லின் வரலாறு, நிர்மாணம் மற்றும் அதன் சிறப்பைப் பற்றிச் சொல்லி மாத்ரிமந்திருக்கு (Matrimandir) அருகில் அழைத்துச் சென்று அதனுடைய சிறப்பையும் விளக்கினார். 1968ல் 124 நாடுகளிலிருந்து வந்த பிரதிநிதிகள் தத்தம் நாட்டு மண்ணை எடுத்துவந்து அங்கு வைத்ததைப் பற்றி சொன்னபோது மெய்சிலிர்த்தது. ஆரோவில்லின் நடுநாயகமாக அமைந்திருந்த 100 வருடங்களுக்கும் மேலான பெரிய ஆலமரம் எல்லோர் மனதையும் கவர்ந்தது.

  ஆரோவில்லின் கண்காட்சியகத்தில் கொஞ்சநேரம் இருந்துவிட்டு அனைவரும் புதுச்சேரி தாவரவியல் பூங்காவை  வந்தடைந்தனர். கூடுதல் வேளாண்மை இயக்குனராக பணியாற்றும் ஜெயசங்கர் பூங்காவிலேயே  புகைப்படம்  எடுக்க  ஏற்பாடு  செய்திருந்தார். உத்திரப் பிரதேசத்தில் கலெக்டராக இருக்கும் சண்முக சுந்தரம் வந்திருந்த இளைய தலைமுறையினருடன்  Career Options மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் பற்றி சிறிதுநேரம் உரையாடினார். பிறகு அனைவரும் மீண்டும் ஹோட்டல் ஆனந்தா இன் நோக்கிப் புறப்பட்டனர்.

  தலைவாழை இலையில் மதியஉணவு உண்டு மகிழ்ந்தபின் ஒவ்வொருவராக புறப்படத் தொடங்கினர். உடன்படித்த 19 ஆண்களும் 17 பெண்களும் தத்தம் குடும்பத்தாரோடு விடைபெற முடியாமல் கண்கள் பனிக்க விடைபெற்றனர். இனி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை சந்திக்கவேண்டும் என்று எல்லோரும் ஒருமிதமாக கூறிக்கொள்வதைக் காணமுடிந்தது. பிறகென்ன? வாட்ஸப்பும், பேஸ்புக்கும் புகைப்படங்களால் நிறைந்தன!!

  இந்த இதழை மேலும்

  இளம் பருவத்தில் ஏற்படும் சுகாதார பிரச்சனைகள்

  இளம் பருவத்தினர் (Adolescent) என்பது லத்தீன் மொழியிலிருந்து வருவிக்கப்பட்டது. அடோலசண்ட் எனும் சொல் வளர்தல், முதிர்ச்சியடைதல் எனப் பொருள் தரும். 10 முதல் 18 வயது வரை இளம்பருவத்தினர் என்று அழைக்கிறோம். இந்தக் கால கட்டங்களில் உடல், மனம், பாலியல் மற்றும் உளவியல்ரீதியாக அதிகமான வளர்ச்சி ஏற்படுகிறது. இந்த மாற்றங்கள் என்பது பொதுவானது மற்றும் யூகிக்கக்கூடியது, இருந்தபோதிலும் ஆண், பெண் மற்றும் மனிதனுக்கு மனிதன் இவர்களின் வளர்ச்சியின் வேகத்தில் வேறுபாடுகள் உண்டு.  பொதுவாக இளம்பருவத்தினரின் இறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதால் அவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர் என்று தோன்றுகிறது. ஆனால் இந்தக்கால கட்டத்தில் இளம் பருவத்தினர் அதிக பாதிப்புக் குள்ளாகிறார்கள். அதிலும் பல பாதிப்புகள் சுகாதாரத்துடன் தொடர்புடையது.

  இளமைக் கால பிரச்சனைகள்

  இளம் பருவத்தினர் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் பல விதத்தில் வரையறுக்கப் பட்டுள்ளன. இந்த பிரச்சனைகள் இயற்கையாக லேசானது முதல் தீவிரமானது வரை மற்றும் வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடியதாகவும் இருக்கலாம்.

  இளம் பருவத்தினர் இடையில் ஏற்படும்

  பொதுவான சுகாதாரப் பிரச்சனைகள்

  இளம் பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து அதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இளம் பருவத்தினருக்கு வரக்கூடிய சில பொதுவான அறிகுறிகள் அதிக உடல்நோயை உண்டாக்குவதில்லை. தலைவலி, வயிற்றுவலி, முதுகுவலி, பொதுவான உடல்சோர்வு மற்றும் மிகஅதிகமான உடல்வலி ஆகிய அறிகுறிகள் மிக அதிகமான பதற்றத்தை உண்டாக்கு கின்றன. ஆனால் இவை மன அழுத்தத்திற்கான அறிகுறிகளே. மோசமான உணவுப்பழக்கங்கள் காரணமாக இரத்த சோகை ஏற்படுகிறது. இதனால் உடல் பலவீனம் மற்றும் உடல் சோர்வு ஏற்படுகிறது.

  பல நேரங்களில் அறிகுறிகளை இளம் பருவத்தினர் பெற்றோர் மற்றும் மருத்துவரிடம் குறிப்பிடத் தயங்குகின்றனர். எடுத்துக்காட்டு – காலதாமதமாக முக முடிவளர்தல், மாதவிடாய் பிரச்சனைகள். மருத்துவருக்குச் சுமூகமான முறையில் இவர்களிடம் பேச்சைத் தொடங்குவதற்கான திறமை தேவை. தக்க சமயத்தில் பொதுவான ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் அதிகமான பாதிப்புகளிலிருந்து காப்பாற்றலாம்.

  குழந்தைப் பருவத்தில் ஏற்படும் பிரச்சனைகள்

  குழந்தைப் பருவத்தில் ஏற்படும் வயிற்றுப்போக்கு, சுவாச நோய்கள், முழுவளர்ச்சியின்மை இளம்பருவத்தில் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக பிரச்சனைக்கு அடிக்கடி ஆளாகின்றனர்.

  குழந்தைப்பருவத்தில் கைவிடப்பட்டோர், உணவுபெற இயலாமை , குழந்தைத் திருமணம், உடல் மற்றும் பாலியல் பலாத்காரம் ஆகியவற்றுக்கு ஆளானோர் உடல், மனம் சார்ந்த பிரச்சனைகளுடன் வளருகின்றனர்.

  வாழ்நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் இளவயதினர் பிரச்சனைகள்

  இளம் வயதினருக்கு அதிக உணவு தேவை. இல்லையெனில் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தப் பிரச்சனைகள் வாழ்க்கை முழுவதும் தொடர்கின்றது. மேலும் பெண்களுக்கான இனப்பெருக்க உறுப்புகள் முழுவளர்ச்சியைக் கொடுப்பதில்லை.

  இளம் வயதில் புகையிலை, மது அல்லது சில மருந்து வகைகள் மற்றும் பல தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவதால் இளம்வயது மற்றும் முதிர் வயதிலும் பாதிப்புகளை உண்டாக்குகின்றன.

  மது மற்றும் சில போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் தீர்மானிப்பதில் தடை ஏற்படுகிறது. மற்றும் அதிக ஆபத்து விளைவிக்கக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன.

  இளம் வயதினர் மிக அதிக வேகம் மற்றும் ஆபத்தான விதத்தில் வாகனம் ஓட்டுவதால் விபத்தில் காயம், வன்முறை மற்றும் பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகள் ஏற்படுகிறது. இவைகள் அனைத்தும் வாழ்க்கை முழுவதும் தொடரக் கூடியவை.

  பாதுகாப்பற்ற உடலுறவினால் தேவையற்ற கர்ப்பம் மற்றும் உடலுறவினால் தொற்று நோய்களுள் ஒன்றான எச்.ஐ.வி. தொற்று நோயானது இளம் பருவத்தினரிடையில் வருகின்றன.

  இளம் வயதில் கர்ப்பம் அடைவதால் அதிகமாக கர்ப்பகாலம் மற்றும் மகப்பேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பச்சிளம் பருவம், இளம்பருவ இறப்பு விகிதத்துடன் தொடர்புடையது.

  பொதுவான பிரச்சனைகள்

  • பருவமடைதல் குறித்த குறைபாடுகள் மற்றும்

  அதன் பிரச்சனைகள்

  உடல் வளர்ச்சி பற்றிய பயம் மற்றும் மனஅழுத்தம், பருவமடைதலில் கால தாமதம் மற்றும் விரைதல், மாதவிடாய் கோளாறு, கருப்பைக் கோளாறு, பிறப்புறுப்பில் நீர் வெளியேற்றம், தோல் மற்றும் முடி சம்பந்தப்பட்ட நோய்களான முகப்பரு, முடி உதிர்தல் மற்றும் அதிகப்படியான தலைமுடி, உடல் தோற்றம் பற்றிய அக்கறைகள் மிகவும் பொதுவானது.

  இனக்கவர்ச்சி, பற்றிய கவலை இரவு நேரங்களில் விந்து தள்ளுதல், சுயஇன்பம் கொள்ளுதல், முன்கூட்டியே விந்து தள்ளுதல், பாலியல் நாட்டம் மற்றும் பாதுகாப்பற்ற பாலியல் தொடர்பு ஆகியவையும் காணப்படுகிறது.

  • இனப்பெருக்க சுகாதாரப் பிரச்சனைகள்

  இளம்வயது கர்ப்பம் மற்றும் குழந்தை பிறத்தல் சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் ஆபத்தை அதிகரிக்கக்கூடிய பிரச்சனைகள். அதிகமான தாய்வழி, பச்சிளங்குழந்தை மற்றும் பிறந்த குழந்தைகளின் இறப்புக் கணக்கு, கருக்கலைப்புத் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாகிறது.

  • ஊட்டச்சத்துப் பிரச்சனைகள்

  ஊட்டச்சத்துக் குறைபாடு, மிகக் குறைந்த ஊட்ட உணவுக் குறைபாடுகள் மற்றும் இரத்தசோகை, சாப்பிடுவதில் குறைபாடு, குறைந்த எடையுடையவர்கள் மற்றும் உடல் பருமன்.

  • மனநல பிரச்சனைகள்

  மனஅழுத்தம், கவலை, மனச்சோர்வு, தற்கொலை மற்றும் நடத்தைக் கோளாறுகள்.

  • போதைப்பொருள் பயன்படுத்துதல்

  புகையிலை, மதுபானம் மற்றும் போதை மருந்துகள்

  • காயங்கள் மற்றும் வன்முறை

  விளையாடும்போது ஏற்படும் காயங்கள், சாலைப் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய காயங்கள், தீக்காயங்கள், நீரில் மூழ்குதல் மற்றும் வன்முறை.

  • வயது வந்தோர் நடத்தைகளின் கீழ்வரும் ஆரோக்கியப் பிரச்சனைகள்

  இளம் வயதில் ஏற்படும் அனைத்து சுகாதார பிரச்சனைகளில் பல நடத்தை தொடர்புடையதாக உள்ளன. மிக முக்கியமான இளம்பருவ நடத்தைகள் மற்றும் வாழ்க்கை முறைகள், சுகாதார ஆபத்துடன் தொடர்புடையதாக உள்ளன.

  • உணவு உண்ணும் பழக்கவழக்கங்கள்

  என்ன வகையான உணவு உண்ண விரும்புகிறார்களோ அவை அவர்களின் ஊட்டச்சத்து நிலையைத் தீர்மானிக்கின்றன. நொறுக்குத்தீனியின் மேல் நாட்டம் கொள்வதால் உடல் பருமன் மற்றும் அதிக எடை உள்ளவர்களாக மாறுகின்றனர்.

  • உடல் உழைப்பின்மை

  அதிகப்படியாகத் தொலைக்காட்சி பார்ப்பதால் குறைந்த உடல்உழைப்பிற்கு வழிவகுக்கிறது. ஆபத்தை விளைவிக்கக்கூடிய கணினி மற்றும் வீடியோ விளையாட்டுக்களினால் அதிக எடை உள்ளவர்கள் மற்றும் உடல்பருமன் உள்ளவர்களாக வைக்கிறது.

  இந்த இதழை மேலும்

  தோல்விகள் தொடர் கதையா?

  எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளிவந்த நாள்.

  காலை 10.15 மணி.

  அவசரமாக எனது அலைபேசி அலறியது.

  எதிர்முனையில் பரபரப்பான குரலில் ஒரு நண்பர்.

  “நெல்லை கவிநேசன் சார்….. அவசரமாக உங்களிடம் பேச வேண்டும்” – என்றார் நண்பர்

  “சொல்லுங்கள்….” என்றேன்.

  “என் மகன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 500க்கு 494 மார்க் வாங்கியிருக்கிறான்” – என்றார்.

  “மகிழ்ச்சி. பாராட்டுக்கள் சொல்ல வேண்டும். உங்கள் மகனிடம் செல்போனைக் கொடுங்கள்” – என நான் சொல்லி முடிப்பதற்குள் அவர் பதற்றத்தை அதிகரித்துப் பேசினார்.

  “சார்…. அவன் அழுதுகிட்டே இருக்கிறான். அவனால் பேச முடியாது. ஏங்கி, ஏங்கி அழுகிறான்”.

  எனக்கு ஒன்றும் புரியவில்லை.

  “என்ன பிரச்சனை? ஏன் அழுகிறான்” – மெதுவாகக் கேட்டேன்.

  “சார்…. அவன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 500க்கு 499 மார்க் கிடைக்கும் என எதிர்பார்த்தான். கிடைக்கவில்லை. கதறி அழுகிறான். எனக்கு இந்த ஸ்கூல் பிடிக்கவில்லை. வேறு ஸ்கூலுக்கு என்னை மாற்றிவிடுங்கள் என திரும்பத் திரும்பச் சொல்லுகிறான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை” – என்றார் நண்பர். குரல் நடுக்கமும், வேதனையும் கலந்ததை புரிந்துகொண்டேன்.

  அவரை சமாதானப்படுத்த முயன்றேன். முடியவில்லை.

  “சார்…. பிறகு பேசிக்கொள்வோம்” – பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

  ஒரு மணி நேரம் முடிவதற்குள் மீண்டும் செல்போனில் வந்தார் நண்பர்.

  “சார்…. என் மகன் பிளஸ் 1 படிப்பை நாமக்கல்லில் படிக்க விரும்புகிறேன் என்கிறான். ராசிபுரம் நல்லது என்று என் மைத்துனர் சொல்கிறார். சென்னை தான் சிறந்தது என்கிறார். என்ன செய்யலாம் சார்? எனக்கு குழப்பமாக இருக்கிறது. அவனை ஸ்கூல் மாற்றி வேறு புதிய ஸ்கூல் படிக்க வைக்கலாமா? – கேள்விகளால் துளைத்தார் நண்பர்.

  நண்பரது மகனின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்பினேன்.

  “இப்போது உங்கள் மகனிடம் பேசலாமா? அவனிடம் போனைக் கொடுங்கள்” – என்று சொன்னேன்.

  வாழ்த்தையும், பாராட்டையும் பரிமாறினேன்.

  அவன் மகிழ்ந்தான்.

  “தம்பி…. உனக்கு இந்தப் பள்ளியில் படிக்க விருப்பம் இல்லையா? ஸ்கூல் மாற்றி படிக்க வேண்டுமா? கவலைப்படாதே! அப்பாவிடம் சொல்லி ஏற்பாடு செய்வோம்” – எனது ஆறுதலால் அவன் மகிழ்வதை அவனது குரல் ஒலிபரப்பியது.

  “மீண்டும் பிறகு பேசுவோம்” – என்று பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

  மதிய நேரத்தில் மீண்டும் அழைத்தார் நண்பர்.

  “சார்….. உங்கள் ஆலோசனை என்ன?” – நண்பர் தொடர்ந்து ஆலோசனை கேட்டார்.

  தந்தை, மகன் இருவரிடமும் தொலைபேசிமூலம் அவர்களது விருப்பத்தை அறிந்துகொண்டேன்.

  “இரவுக்குள் ஒரு முடிவுக்கு வந்துவிடலாம். இப்போது அமைதியாக இருங்கள்” – என சொன்னபோதும் “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” – என ஆர்வ மிகுதியால் கேட்டார் நண்பர். எனது கருத்தை நண்பரும், மகனும் சேர்ந்து கேட்டால் நல்லது என எனக்குத் தோன்றியது. “செல்போன் ஒலியை அதிகப்படுத்தச் சொல்லி, அவர்கள் இருவருக்கும் கேட்கும்படி ஒரு குறிப்பை விளக்கினேன்”.

  அது இதுதான்.

  “இந்தப் பாருங்க….. எந்தத் தேர்வு முடிவு வந்தாலும் மாணவ, மாணவிகள் மனதுக்குள் ஒரு ‘பதற்றம்’ அல்லது ‘மகிழ்வு’ வந்துபோகும். இது இயற்கைத்தான். மிக அதிக மதிப்பெண்களை எதிர்பார்த்தவர்கள், தங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்றால், ‘அடுத்து என்ன நடக்கும்?’ என வேகமாக சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள். இதனை ‘Anxiety’ என ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இந்த அவசியமற்றஎதிர்பார்ப்பு அதிகமாவதால்தான் இவர்கள் கவலைப்படுகிறார்கள். பயப்படுகிறார்கள். இவர்களுக்கு கோபம் அதிகமாக வருகிறது. ‘சாப்பிடமாட்டேன்’ என்றுகூட அடம்பிடிக்கிறார்கள். அழுது கண்ணீர் வடிக்கிறார்கள். இரவைக்கூட ‘தூங்காத ராத்திரிகளாக’ மாற்றுகிறார்கள். ‘தாங்கள் தவறு செய்துவிட்டதாக முடிவுசெய்து’ இவர்களே ‘தாழ்வு மனப்பான்மை’யை வளர்த்துக் கொள்கிறார்கள்.

  உங்கள் மகன் கொஞ்சம் அதிகமாக மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்துவிட்டார். விரும்பியது கிடைக்கவில்லை என வருத்தப்பட வேண்டாம். 5 மார்க் தானே கிடைக்கவில்லை. 494 மதிப்பெண்கள் பெற்றஉங்கள் மகன் சிறந்த வெற்றியாளன்தான்.

  பள்ளியை மாற்றினால் அவனது எதிர்கால பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என நீங்கள் எண்ணுகிறீர்கள். ஆனால், பள்ளியை மாற்றும்போது அதிக பிரச்சனைகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. பள்ளியை மாற்றி உங்கள் மகனை படிக்க வைப்பது என்பது ஒரு ரோஜா செடியை வேறு இடத்திற்கு மாற்றிக்கொண்டு செல்வதுபோல மிக முக்கியமான ஒன்றாகும். ரோஜா செடியை, வேறு இடத்துக்கு மாற்றும்போது வேர்களோடு ‘பிடிமண்’னை எடுத்துச் செல்வதுபோல, உங்கள் மகனுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் நீங்கள் செய்ய வேண்டும்.

  வேறு ஊரில் புதிய பள்ளியில் படிக்க வைத்தால், விடுதியில் தங்கிப்படிக்க வைக்க வேண்டும். அதிகப் பணம் செலவாகும். விடுதி பிடிக்கவில்லை என்றால் நீங்கள் குடும்பத்தோடு பள்ளி இருக்கும் இடத்திற்குபோய் தங்க வேண்டும்;. உங்கள் இன்னொரு மகன் உங்கள் ஊரில் படிக்கிறான். அந்த இளையமகனின் படிப்பு என்ன ஆகும்? நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு உங்களால் ‘லீவு’ போட முடியாது. உங்கள் மனைவியின் மதுரை வேலையை விட்டுவிட வேண்டியநிலை உருவாகும். எனவே, உங்கள் மகனிடம் விவரங்களைத் தெளிவாகப் பேசுங்கள். 5 மார்க் குறைந்ததற்காக அடுத்த இரண்டு ஆண்டுகள் பல்வேறு குழப்பங்களை குடும்பத்தில் இணைக்க வேண்டுமா?” – எனது கேள்வி கலந்த பதிலுக்கு மாலைக்குள் பலன் கிடைத்தது.

  மாலையில் தொலைபேசியில் அழைத்து “என் மகன் இந்தப் பள்ளியிலேயே தொடர்ந்து படிப்பதாக சொல்லிவிட்டான்” – என மகிழ்ந்தார் நண்பர்.

  இந்த நிகழ்வு நமக்கு சில உண்மைகளை உணர்த்துகிறது.

  வெற்றி பெறுவது முக்கியமல்ல. அந்த வெற்றியை ஏற்றுக்கொள்ளவும், கொண்டாடவும் தெரிய வேண்டும். ஆனால், தக்கவைப்பதும், மனநிறைவு கொள்வதும், மகிழ்ச்சி கொள்வதும் அவரவர் மனநிலையில்தான் இருக்கிறது.

  எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றஒரு மாணவன் மகிழ்ச்சியாக இருக்கிறான். ‘தோல்வி அடைந்துவிடுவேன் என நினைத்தேன். வெற்றி கிடைத்துவிட்டது’ – என ஆனந்தக் கூத்தாடுகிறான். ஆனால் 98 சதவீத மதிப்பெண்கள் பெற்றவன் அழுது புலம்புகிறான். வெற்றியைக் கொண்டாட முடியாத மனநிலையில் கண்ணீர் வடிக்கிறான்.

  மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் ‘வாழ்க்கையில் வெற்றி கிடைக்காது’ என்ற எண்ணத்தை கண்டிப்பாக இளைய உள்ளங்கள் மாற்றவேண்டும்.

  மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் அல்லது தோல்வி அடைந்துவிட்டால் மனதிற்குள் வேண்டாத சிந்தனையை வளர்க்காமல், பிரச்சனைகளை பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் சொல்லி பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும். மனதுக்கு மகிழ்ச்சி தரும் செயல்களிலும் ஈடுபடலாம். நூலகத்திற்குச் சென்று நல்ல புத்தகங்களைப் படிக்கலாம். நல்ல நண்பர்களிடம் கலந்துபேசி எதிர்காலத் திட்டத்தை வகுக்கலாம். தேவைப்பட்டால் ‘சினிமா’ பார்க்கக்கூடச் சொல்லலாம். டி.வி.யில் நல்ல நகைச்சுவை காட்சிகளைப் பார்க்கலாம்.

  எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வுகள் வாழ்க்கையில் மிக முக்கியத் தேர்வுகள் என்பதால் தேவையில்லாத ‘மன அழுத்தம்’ மனதில் ஏற்படாதவாறு அவர்கள் பார்த்துக்கொள்வது நல்லது.

  மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் கலங்கிப்போவதை முதல் தவிர்க்க வேண்டும்.

  அது ஒரு மிகச்சிறந்த நாடு.

  திடீரென அந்த நாட்டின் பிரதம மந்திரி இறந்துவிட்டார். புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். மிகச் சிறந்த அறிவாளியைத்தான் பிரதமராக நியமிக்க ஆட்சிப் பொறுப்பாளர்கள் விரும்பினார்கள்.

  பல்வேறு விதத்தில் சிலரை ‘மதிப்பீடு’ செய்தார்கள். முடிவில் இறுதிகட்டத் தேர்வில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

  இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க ஒரு போட்டி வைத்தார்கள். மூன்றுபேரையும் ஒரு தனி அறையில் வைத்து உட்புறமாக பூட்டினார்கள். அறையின் கதவில் நம்பர் பூட்டு பொருத்தியிருந்தார்கள்.

  “இந்தக் கதவிலுள்ள பூட்டின் மூன்று எண்களை ஒன்று சேர்த்தால் பூட்டை நீங்கள் திறந்து வெளியே வரலாம். பூட்டைத் திறந்து யார் முதல் வெளியில் வருகிறாரோ அவர்தான் நாட்டின் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படுவார்” – என்று போட்டி நடத்தியவர்கள் தெளிவாகச் சொல்விட்டார்கள். பின்னர் கதவைப் பூட்டிவிட்டார்கள்.

  போட்டியில் கலந்துகொண்ட 3 பேரில் இரண்டுபேர் தீவிரமாக சிந்தித்து தன் சட்டைப்பையில் இருந்த பேப்பரை எடுத்து கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘இப்படி செய்யலாமா? அப்படி செய்யலாமா? இந்த நம்பரா? அந்த நம்பரா? – என்றெல்லாம் சிந்தித்து நேரத்தைக் கடத்தினார்கள்.

  மூன்றாவது போட்டியாளர்கள் எதையும் சிந்திக்கவில்லை. கதவை ஓங்கித் தட்டினார். பூட்டப்படாத அந்தக் கதவு உடனே திறந்துகொண்டது.

  கதவைப் பூட்டாமலே போட்டி வைத்தார்கள். தைரியமுடன் கதவைத் திறந்து வெளி வந்தவருக்கு பிரதம மந்திரி பதவி தானாக வந்தது.

  “கதவு பூட்டப்பட்டிருக்கிறதா?” – என்பதைக்கூட சரிபார்க்காமல் பிரச்சனையைப் பற்றியே சிந்தித்தவர்களைவிட பிரச்சனையை நேரடியாக சந்தித்தவர் வெற்றியடைந்தார்.

  இதைப்போலத்தான் இல்லாத பிரச்சனைகளைப்பற்றி அதிக நேரம் சிந்தித்து மனம் கலங்குவதைவிட, பிரச்சனைகளை சந்திக்க எப்போதும் தயார்நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றிகள்கூட எளிதில் நம் வசமாகிவிடும். தொடர் கதையாகும் தோல்விகளைத் துரத்த இயலும்.

  இந்த இதழை மேலும்

  மனச்சோர்வை போக்குவது எப்படி?

  என்ற வரிசையில் முதல் ஐந்து விசயங்களை பட்டியலிடுதல் வேண்டும்.

  • தொழில் சம்பந்தமான பிரச்சனைகள் ஐந்து
  • குடும்பம் சம்பந்தமான பிரச்சனைகள் ஐந்து
  • உங்கள் வெளித்தொடர்புகள் சம்பந்தமான பிரச்சனைகள் ஐந்து
  • தனிப்பட்ட பிரச்சனைகள் ஐந்து

  இப்படி பட்டியலிட்டதை வரிசைப்படுத்தி மனதைவிட்டு தூக்கி தூர எறிந்துவிட முயற்சிக்க வேண்டும். என்ன ஆனாலும் பரவாயில்லை என்று தொடர்ந்து சில நாட்கள் அந்த பிரச்சனைகளை நினைக்கவே கூடாது. அந்த பிரச்சனைகளை மறந்து விடுதல் வேண்டும். மறதியைப் போல் ஒரு மாமருந்து ஏதுமில்லை. நாளாக நாளாக மனச்சுமை நீங்க நீங்க மனபாரம் குறையும். உற்சாகம் அதிகரிக்கும். நல்ல விசயங்கள் உள்ளே வர மனம் இடம் கொடுக்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். 2000கி எடையைச் சுமப்பதைவிட 20கி எடையைச் சுமப்பது எளிதாகயிருக்கும். மனம் தூய்மை அடையும். மனதிலே வெற்றிடம் உண்டாகும். உங்கள் முகத்திலே எப்பொழுதும் படிந்திருக்கிற கவலை ரேகை மாறி மகிழ்ச்சி அலைகள் உங்கள் முகத்தைப் பிரகாசமாக்கும்.

  ஒரு சிறு கதை இதற்கு பொருத்தமாக இருக்கும். தத்துவ பேராசிரியர் ஒருவர் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். ஒரு காலியான பெரிய ஜாடியை எடுத்து மேசை மீது வைத்தார். பிறகு இரண்டு அங்குலம் அளவு கொண்ட கற்களை அதனுள்ளே போட்டார். ஜாடி நிரம்பியது. மாணவர்களிடம் அதைக்காட்டி இந்த ஜாடி எப்படி உள்ளது? எனக் கேட்டார். நிரம்பிவிட்டது என்று மாணவர்கள் பதில் அளித்தார்கள். பிறகு அவர் சிறு கற்களை எடுத்தார். இந்த சிறு கற்களை ஒவ்வொன்றாக எடுத்து ஜாடியில் போட்டார். ஏற்கனவே போடப்பட்டிருந்த கற்களின் இடுக்குகளில் அவற்றிற்கு இடம் கிடைத்தன. இனி ஒரு சிறுகற்களை கூட போட முடியாத அளவு ஜாடி நிரம்பியது. இப்போது இந்த ஜாடி நிரம்பிவிட்டதா? என்று ஆசிரியர் மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.

  முழுவதுமாக நிரம்பிவிட்டது என்பதாக மாணவர்கள் தலை அசைத்தனர். ஆசிரியர் இன்னொரு பெட்டியை எடுத்து மேலே வைத்தார். அதில் முழுவதும் மணல் இருந்தது. அந்த மணலை ஜாடிக்குள் மெதுவாக போட ஆரம்பித்தார். எல்லா இடைவெளிகளிலும் சென்று ஜாடியின் அனைத்து இடுக்குகளிலும் மணல் நிறைத்தது.

  இப்போது ஜாடி எப்படி உள்ளது? எனக் கேட்டார். சிறிது கூட இடம் இல்லாமல் நிரம்பிவிட்டது என்றனர் மாணவர்கள். பேராசிரியர் பேச ஆரம்பித்தார். இந்த ஜாடி உங்கள் வாழ்வை பிரதிபலிக்கிறது. முதலில் போட்ட பெரிய கற்கள் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும், பெரிய இலக்குகளையும் குறிக்கின்றன. 2வது போட்ட சிறு கற்கள் சாதாரண ஆசைகளையும், சிறிய இலக்குகளையும் குறிக்கின்றன. மணல் உங்களை சோர்வடையச் செய்கின்ற ஒன்றுக்கும் உதவாத பிரச்சனைகளைக் குறிக்கின்றன.

  ஜாடி என்பது உங்கள் மனது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் முதலில் ஜாடியை மணலால் நிரம்பிவிட்டால் அதாவது மனச்சோர்வு அடைய வைக்கிற பிரச்சனைகளால் நிரப்பிவிட்டால் சிறு கற்களுக்கும் இடம் இருக்காது. பெரிய கற்களுக்கும் இடம் இருக்காது. உங்கள் மகிழ்ச்சிக்கும் இடம் இருக்காது. நல்ல எண்ணங்கள் மனதிலே நிறைய வேண்டுமென்றால் அங்கு இடமிருக்க வேண்டும். இடம் வேண்டும் என்றால் சுமைகளை வெளியே அனுப்ப வேண்டும். மனச்சுமைகளை தூக்கி எறிய வேண்டும். அப்பொழுதுதான் பெரிய கற்கள் என்று சொல்லப்படுகிற உற்சாகமும், தன்னம்பிக்கையும், ஊக்கமும், மகிழ்ச்சியும் உங்கள் மனதில் நிரம்ப வழி ஏற்படும்.

  உடலைத் தினமும் தூய்மை செய்வது போல மனதையும் தூய்மை செய்யுங்கள். மன அழுக்கை மனச்சோர்வை தருகிற பிரச்சனைகளை அடையாளம் கண்டு அவற்றை மனத்திலிருந்து முழுவதுமாக நீக்கி மனச்சுமையைக் குறைத்து, மகிழ்ச்சியும், உற்சாகத்தையும் அந்த இடத்தில் நிரப்புங்கள். மனம் தெளிவான பின்பு நல்ல சிந்தனைகள் வரும். நல்ல திட்டங்கள் தோன்றும். வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்கிற தெளிவும் அறிவும் மனதிடமும், தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகமாகும். வெற்றி கைக்கு வந்து சேரும். உயரங்களைத் தொடலாம். உச்சங்களை ரசிக்கலாம். உன்னத நிலையை அடையலாம். உயர்ந்த பலன்களை அடையலாம்.

  இந்த இதழை மேலும்

  நெருப்புக்குளியலைத் தன் இருப்புக் கூட்டில் நடத்த வேண்டும்

  தேடிச் சோறு நிதம்தின்று – பல

  சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்

  வாடித் துன்பமிக உழன்று – பலர்

  வாடப் பலசெயல்கள் செய்து – நரை

  கூடிக் கிழப்பருவம் எய்திக் – கொடும்

  கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் – சில

  வேடிக்கை மனிதரைப்போல – நான்

  வீழ்வேன் என நினைத் தாயோ?

  என்ற பாட்டுப் புலவன் பாரதி கனல் கக்கும் கவிதை வரிகளைக் கொட்டி வைத்தவன். ஆனாலும் வறுமையோடு இவனும் வாதிட்டிருக்கிறான்.

  ஒருவர் முன்னேறாமல் இருப்பதற்கு வறுமை ஒரு காரணமாக எப்போதும் இருந்ததில்லை; இருப்பதுமில்லை. வெற்றி எண்ணங்களின் அலைவரிசையில், வெற்றி எண்ணங்களை உருவாக்கி, அதை அடைய முயற்சி செய்யாததே உண்மையின் காரணம். ஏழையாகப் பிறந்தது குற்றமல்ல; ஏழையாக இறப்பேன் என்பதே மாபெரும் குற்றமாகும்.

  பணம் சம்பாதிப்பதுடன் இணைந்து வேறு ஒரு உயரிய நோக்கம் உங்களுக்குள் இருக்குமானால் நீங்கள் தேடும் பணம் உங்கள் மடியில் வந்து விழுந்து கொஞ்சும். அந்தப் பணத்திற்காக அலைந்து திரிய வேண்டிய அவசியமே இல்லை.

  எடிசன் உலகிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் விளக்கேற்ற எண்ணியதால் அவர் வாழ்க்கை ஒளிவிளக்கானது; பணமழையும் இவரிடமே பத்திரமாய் கொட்டியது. உலகின் ஒவ்வொருவரிடமும் ஒரு கணினி இருக்க வேண்டுமென்று பில்கேட்ஸ் நினைத்தார்; பணம் முகவரியை விசாரித்துக் கொண்டு அவர் வீட்டுக் கதவைத் தட்டியது. உலக பணக்கார அலைவரிசையில் இன்றளவும் இவர் பேரும் சேர்ந்தே வாசிக்கப்படுகிறது.

  உங்கள் வருமானம் குழாய்த் தண்ணீரைப் போன்றது. இதில் பணம் கொட்டு கொட்டுவென்று கொட்டினால் தான் சரிப்படும் என்பது சரியில்லை. அதில் எவ்வளவு நீங்கள் பிடித்து வைத்துக் கொள்கிறீர்கள்? எவ்வளவு செலவழிக்கிறீர்கள்? எவ்வளவு பாதுகாக்கிறீர்கள்? இதுதான் ஒரு ஏழை பணக்காரன் ஆகும் இரகசியப்புள்ளிகள். யார் இந்தப் புள்ளியை நோக்கி காயை நகர்த்துகிறார்களோ அவர்களுக்கே பணமழை பெய்யும் பாதை திறக்கும்.

  ‘வறுமையைக் கண்டு பயந்து விடாதே; திறமை இருக்கு மறந்து விடாதே’ என்றபாடல் வரிகளே இதற்குச் சான்று காட்டி கூத்தாட வைக்கும். உலகின் முதல் ஆங்கில அகராதியை தொகுத்த சாமுவேல் ஜான்சன் வறுமையில் வாழ்ந்த ஒரு புத்தக வியாபாரியின் மகனாக பிறந்தாலும் உலகம் போற்றும் இலக்கிய மாமேதையாகத் திகழ்ந்தார். இலக்கியம் வாழ்க்கை வசந்தத்தை அவருக்கு வாரிக்கொடுத்தது. இலக்கிய வீதியில் தெறித்து விழுந்த இந்தி நட்சத்திர நாயகனை இன்றளவும் சிகர சிம்மாசனத்தில் நிறுத்தி வைத்து அழகு பார்க்கிறது.

  மனதில் வளமையை, செழுமையைப் பற்றிய எண்ணங்களை எண்ணினால் நம்பிக்கையுடன் சிந்தித்தால், அவை நம்மிடம் படைப்பாற்றலை உண்டாக்கி செல்வ வளத்தை ஆயிரமடங்காய் அதிகரிக்கச் செய்துவிடும். வறுமை இதற்கு ஒரு தடையல்ல. செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், உயர்வையும் நம்பிக்கையுடன் சிந்திக்கும் பழக்கமே தலைவிதியை முதல் விதியாய் முகிழ்க்கச் செய்யும்.

  எந்த வயதிலும் சாதிக்கலாம்; வறுமையைப் போல் வயதும் ஒரு தடையல்ல. சாதிக்க வேண்டும் என்ற ஒரு நெருப்புக்குளியலைத் தம் இருப்புக்கூட்டில் நடத்த வேண்டும். ஹென்றிக் இப்சன் நார்வே நாடு தந்த நல்ல கவிஞர்; நாடக ஆசிரியர். இவரையும் வறுமை தழுவிக்கொள்ள துடித்தாலும், நாடகம் என்னும் நந்தவன வயல்களாம் மனதின் மனங்களில் உலகம் உள்ளவரை உச்சரிக்கப்படும். தம் 30 வயதில் வாழ்வு முடிந்தது என்று இப்சன் நினைத்தாலும் கவிதைகளில் களிநடனம் புரிந்தான்; இதய வாசல்களின் கதவுகளைத் திறந்தான்; கவிதையாகவே வாழ்ந்தான்; கவிதையில் வாழ்ந்தான். மரித்தான் என்பதை எழுத என் பேனாக்கிறுக்கி எழுத மறுக்கிறான். பொருளாதாரத் தடையை நினைக்காமல் உயர்ந்த இலட்சியத்தை உள்ளுக்குள் தேர்வு செய்து முயற்சியை மட்டுமே முதலீடாகக் கொண்டால் வாழ்க்கையும் மாறும்; வளமும் சேரும்.

  ஷேக்ஸ்பியர் குதிரை லாய மேற்பார்வையாளரின் மகன். ஷேக்ஸ்பியர் இலக்கியம் தந்த கொடை; ஆங்கில இலக்கியத்தின் அடையாளம்; மனித மனங்களின் இதயத்துடிப்பு அமர காவியங்களை அவனிக்கு கொடுத்தவர்; இந்த நாடகத்தின் நயாகரா நீர்வீழ்ச்சியை உலகம் கொண்டாடி மகிழ்கிறது.

  ஒன்பது வயதில் வறுமையின் கிடுக்கிப்பிடியில் சிக்குண்டு, பதினொரு வயது என்று கூறி இசைக்குழுவில் இணைந்த சார்லிசாப்ளினை ‘நடை சரியில்லை நடிக்க வராதே’ என்று தடைவிதித்தாலும், எதிர்காலத்தில் மக்களின் மனதில் மயக்கத்தை ஏற்படுத்திய நகைச்சுவை நடிகராகவும், இயக்குநராகவும் திரைப்படம் மாற்றியது என்பது  திரைப்படம் தந்த வரலாற்று உத்தரவு.

  மெழுகுவர்த்தி செய்து விற்கும் வியாபாரியின் மகனாகப் பிறந்த பெஞ்சமின் ஃப்ராங்ளின் மக்களுக்காக தானே உருகினார் என்பதை வரலாறு கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறது. மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்தார். மின்னலில் மின்சாரம் இருப்பதை பறைசாற்றினார். இயர்புக் இப்படி பலப்பல கண்டுபிடிப்பு. விஞ்ஞானியாகவும், அமெரிக்க இராஜதந்திரியாகவும் உயர்ந்தார்; மக்களின் மனங்களில் நிறைந்தார். வறுமையை தூர ஓட்டினார். நான்கு மொழிப்புலமை. இவர் அரசியலின் அதிசயமாக திகழ்ந்தார் என்பது இவரிடமிருந்து வந்த மன உறுதியே என்பதை வரலாற்று உண்மைகள் தெளிவுப்படுத்துகிறது. தடைகளையும், உடன் குறைகளையும் வைத்து எண்ணி வருந்தாமல் உழைப்பது ஒன்றே இலட்சியம்’ என்பதை மனித மனங்களுக்கு சொல்லி வைப்போம்.

  இத்தாலி நாட்டில் ஒரு மீனவரின் மகனாகப் பிறந்த கரிபால்டி, புரட்சிப் பூபாளம் பாடிய எரிமலைக் குழம்பு. இந்த அக்னி நெருப்புதான் பிற்காலத்தில் இத்தாலியை அடைகாத்தது; அர்த்தப்படுத்தியது. உலக வரலாற்றை எழுதி முடித்த ஒரு பெரிய சரித்திர ஆசிரியரிடம் மனித வரலாற்றில் அவர் அறிந்த மிகச்சிறந்த பாடம் எது என்று கேட்டார்கள். அவர் சொன்னார், “எப்போது வானம் இருள்படர்ந்து மிகக் கறுப்பாகிறதோ, அப்போது நட்சத்திரங்கள் தலைகாட்டுகின்றன.”

  மறைத்து விட்டார்களா?                 நல்லது தான்                            விதையாக விழித்துவிடு!

  ஒடித்துவிட்டார்களா?                   நல்லது தான்                      பலகிளைகளாக துளித்துவிடு!

  புறக்கணித்து விட்டீர்களா?            நல்லது தான்                      எரிமலையாய் எழுந்து விடு!

  என்ற கவிதாசன் கைபிடிப்போம்; சிகரசிம்மாசனத்தில் இடம் பிடிப்போம்!

  இந்த இதழை மேலும்

  உழைப்பும் ஆரோக்கியமும்

  அன்புத் தோழ தோழியர்களே! உழைப்பால் முன்னேறாதவர்கள் எவரேனும் இந்த உலகத்தில் உண்டா? ஆனால், அதே உழைப்பை ஆரோக்கியமற்ற விதத்தில் செய்ததால் வாழ்க்கையை இழந்தவர்கள் அதிகம். ஆகையால் நான் ஆரோக்கியமாக உழைக்கவும், முன்னேறவும் வேண்டும் என்று தான் வலியுறுத்துகிறேன். ஆக, நாம் உழைப்பைக் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால், அதை நாம் முழுவிருப்பத்தோடு செய்தால் நமக்கு உழைப்பால் உத்வேகம் தான் கிடைக்கும், சோர்வு தட்டாது. உண்மையில் இந்த உலகில் மிகப்பெரிய வெற்றிகளைக் குவித்தவர்களெல்லாம் கடுமையாக உழைத்ததோடு அதனை முழு விருப்பத்தோடு செய்தவர்களாகத்தான் இருப்பார்கள். நமக்குள் தீயாக தாகம் இருந்து, அதனை ஒட்டிச் செய்யும் எந்த ஒரு செயலும் நமக்குள் ஒரு ஆற்றலையும் ஆனந்தத்தையும் கண்டிப்பாகத் தரும்.

  நாம் விருப்பமில்லாத வேலை அல்லது தொழிலை கட்டாயத்தின் காரணமாக செய்ய வேண்டி இருந்தால், அது நம்முள் வேண்டாத உடல் இறுக்கத்தை அளித்து, அதன் பயனாய் உயிர் ஓட்டத்தில் உரசலையும், அதனால் மனஅழுத்தமும் ஏற்படுகிறது. இவ்விதமாக உழைப்பவர்கள் எவரும் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததாக சரித்திரமே இல்லை. பின் எதற்காக பிடிக்காத செயலைச் செய்து வீணாக வேண்டும்? ஆக, நீங்கள் உங்கள் பிடிக்காத வேலையிலிருந்து வெளியே வாருங்கள் அல்லது நீங்கள் செய்யும் வேலையை விரும்பும் விதமாக மாற்றிக் கொள்ளுங்கள். இந்த இரண்டில் ஒன்று நிகழாவிட்டால் நீங்களும் உழைப்பால் உயர முடியாது.

  அடுத்து, நம் உழைப்பானது நம் உடலை இறுக்கப்படுத்தி செய்வதாக இருக்கக்கூடாது. நாம் செய்ய வேண்டிய வேலை கடினமாக இருந்தாலும், அதனை உடல் இறுக்கமாகும் விதத்தில் செய்யக்கூடாது. இங்கேயும் நாம், விருப்பத்தோடு நம் வேலையைச் செய்தாலும் உணர்ச்சி வயத்தால் உடலை இறுக்கமாக்கக் கூடாது. ஆக, நம் உழைப்பு இறுக்கமற்று இருக்க வேண்டுமாயின் நாம் தினமும் உடற்பயிற்சி, பிராணயாமம் மற்றும் தியானம் பழக வேண்டும். அவை கொடுக்கும் அபரித ஆற்றலும், இலகுத் தன்மையும் மற்றும் உடல் உறுதியும் நம் உழைப்பைத் தரமான உற்பத்திக்கு இட்டுச் செல்லும்.

  அடுத்து, நாம் உழைப்பது நமக்கான முன்னேற்றமாக மட்டுமல்லாமல் அடுத்தவர்களுக்கும் அல்லது நம் சமுதாயத்திற்கும் அதிகம் பயன்படும் விதமாகவும் இருப்பின், மற்றவர்களின் வாழ்த்துக்கள் நம்மை முன்னேற வைக்கும். ஆகையால், நம் உழைப்பு சமுதாய நலன் கருதியும் இருப்பது மிக முக்கியம். அப்படிச் செய்யும் உழைப்பு தான் நமக்குள் உற்சாகத்தையும் ஆற்றலையும் தந்து ஆனந்தத்தை அள்ளித்தரும். வெறும் பலன் கருதிச் செய்யும் வேலை சலிப்பையும், மன அழுத்தத்தையும் தான் தரும்.

  அப்புறம் உழைப்பால் நம் உடல் தேய்மானம் ஆகாமல் இருக்க சத்துள்ள மற்றும் சக்தியுள்ள உணவுகளை நாம் எடுக்க வேண்டும். அதுபற்றி இன்னொரு அத்தியாயத்தில் பார்ப்போம். இப்பொழுது தரமாகவும் ஆரோக்கியமாகவும் உழைக்க நாம் எடுக்க வேண்டிய சத்துணவுகளைப் பற்றிப் பார்ப்போம். நம் உடலின் தேய்மானம் குறைவாக இருக்க சமச்சீர் புரதமும், நம் உடல் உழைப்பு நாள் முழுவதும் ஒரே சீராக இருக்க உயிர் சத்துக்களும், உடல் ஆற்றலாக இருக்க தாதுச் சத்துக்களும் அவசியம் வேண்டும். அப்புறம் நம் உடல் இலகுவாக விளங்க ஒமேகா-3 கொழுப்பும், உடல் இரும்பாக இருக்க இயற்கை கால்சியத் தாதும், சதை சுறுசுறுப்பாக இருக்க மெக்னீசியத் தாதும் அவசியம் வேண்டும். உழைப்பால் நம் நரம்புகள் இறுக்கமடையாமல் இருக்க ஜின்சங் தாவரச் சத்து வேண்டும்.

  அப்புறம், நாம் உடல் வியர்க்க உழைத்தால் உடலின் வேண்டாத விஷமும், அதிகப்படியான உப்பு மற்றும் வெப்பமும் வெளியேற வாய்ப்பாக அமையும். உடல் வியர்க்க உழைக்கும் சுகமே அலாதியானது என்பதை நாம் அப்படி உழைத்து அனுபவித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்

  இந்த இதழை மேலும்

  இடைவெளியை புஜ்யமாக்குவோம்

  வாழும் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய பணி – ஊதியம்; சோம்பல் இவற்றுக்கான இடைவெளியை பூஜ்யமாக்கினால் மட்டும் போதுமா?

  போதாது.

  எதிர்பார்ப்பு என்பது மனிதனின் இறுதிக்காலம் வரை இருக்கும் குணம் தானே!

  எதிர்பார்ப்பு இருந்தால், ஏமாற்றம் வரும் என்பதும் முன்னோர் கூறியது தான்.

  எதிர்பார்ப்பே இல்லாமல் வாழ முடியுமா?

  யாராலும் முடியாது என்பது தான் உடனடிப் பதில். சிறிது, சிந்தித்தால், கிடைப்பதை ஏற்றுக்கொள்வதும், இருப்பதை அனுபவித்து மகிழ்வதும் எதிர்பார்ப்பை எட்ட நிறுத்தும் மகிழ்ச்சித் தேரின் இரு சக்கரங்கள். அடிப்படையான ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்.

  என்ன நினைத்தாலும் அது நமது மூளை மற்றும் ஜீவகாந்தத்தில் பதிவாகும். திரும்பத்திரும்ப நினைக்கும்போது மறந்துவிடாத நினைவாற்றலில் மிதக்கும்.

  எதிர்பார்ப்பு எப்படி உருவாகிறது?

  மற்றவர்களைப் பார்ப்பது, பிறர் பற்றி கேட்பது, வாசிப்பது மற்றும் அவற்றுடன் தன்னை ஒப்பிடுவது இந்த இரண்டும் தான் எதிர்பார்ப்பின் அடிப்படை.

  பசிக்கிறது; பசி நீங்க உணவு தேவை. பசித்தவன் உணவை எதிர்பார்ப்பது தவறா? தவறல்ல.

  ‘ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை

  போகாறு அகலாக் கடை’                          – குறள் 478

  பசியைத் தணிக்கும் உணவு ரூ.50-க்கும் உள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் ரூ.500-க்கும் உள்ளது. நோக்கம் பசி தீரவேண்டுமென்றால் வருவாயை வைத்து ரூ.50-க்கும் சாப்பிடலாம்; ரூ.500-க்கும் சாப்பிடலாம். ஆனால் கடன் வாங்கி செலவு செய்தால் இடைவெளி அதிகமாகும்.

  சிலர் தன் காசு என்றால் ரூ.50; பிறர் காசு என்றால் ரூ.500 என்ற சுபாவத்துடன் இருப்பது நமக்குத் தெரியும்.

  வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கொண்டாட விரும்பியது கிடைக்காவிட்டால், கிடைத்ததை விரும்பு என்ற நிலைக்குச் சென்றுவிட வேண்டும்.

  சோறுகண்ட இடம் சொர்க்கம் என்பது போலப் பலர் “என் தலையெழுத்து இது தான் போலும்” என்று கிடைத்ததை மட்டுமே ஏற்றுக்கொண்டு குதிரை போல (வேறு எங்கும் பார்வையைத் திருப்பாதது) கண் படாம் அணிந்துகொண்டு ஏமாற்றத்துடனேயே வாழ்ந்து மடிகின்றனர்.

  இதை ஓர் அடித்தளமாக வைத்துக்கொண்டு, இந்த இடத்திலிருந்து முன்னேறிச் செல்ல என்ன செய்ய வேண்டுமென யோசித்தாலே போதும். எதிர்பார்ப்பும் நிறைவேறும்; இடைவெளியும் பூஜ்யமாகும்.

  வருவாய்  செலவு:

  வரவுக்குள் செலவு என்பது இன்றைய சூழலில் சிரமம் தான். விலைவாசி திடீரென உயர்ந்து விடுகிறது. எனவே முதல் கடமையாக மாத வருமானத்தில் குறைந்தது 10%ஐ சேமிப்பில் போட்ட பின்னரே மீதி 90%ஐ செலவு செய்ய முடிவெடுப்பது இடைவெளியின் அளவைக் குறைக்கும்.

  தேவையில் தெளிவு:

  நமக்கும் வீட்டில் உடன் வசிப்போருக்கும் தேவைகள் என்ன என்பதில் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். ஆடைகள் அவசியம் தேவை. ரூ.500லும் உண்டு; ரூ.5000லும் உண்டு. அன்பு மகள் கேட்கிறாள் என்பதற்காக கடன்பட்டு ரூ.5000க்கு உடை வாங்குவது சரிதானா என சிந்திக்க வேண்டும்.

  மகளுக்கு இந்த எண்ணம் எப்படி வந்திருக்கும்? தன்னுடன் பயிலும் செல்வந்தர் வீட்டுப் பெண்ணைப் பார்த்து அல்லது டி.வி. உள்ளிட்ட ஏதாவதொன்றைப் பார்த்து வந்திருக்க வேண்டும் என ஆய்ந்தறிந்து மகளிடம் சமாதானமாக குடும்ப வருமானம், செலவு விபரம் தெரிவித்து, முதலில் சமாதானப்படுத்த வேண்டும்.

  அதற்குத் தானே நல்ல முன் உதாரணமாக வாழ வேண்டும். இதுபோல் தினம், மாதம், வருடம் எனத் தேவைகள் என்ன என்பதில் மிகத்தெளிவாக இருப்பது அவசியம்.

  மற்றவர்களோடு ஒப்பிடுவதை மறந்துவிட வேண்டும். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பதை எப்போதும் நினைத்துக் கொள்ள வேண்டும்.

  யாரிடம் கேட்பது:

  தேவைப்பட்டியல் தயார், எப்படி அவைகளைப் பெறுவது. உதாரணமாக உழவர் சந்தை அல்லது காய்கறிக் கடைக்குச் செல்கிறோம். தேவைப்பட்டியல் நம்மிடம் உள்ளது. பொருட்கள் அங்கு உள்ளன. சில நாம் மதிப்பிட்டதை (உள்ற்ண்ம்ஹற்ங்) விட விலை குறைவாயிருக்கலாம். சில அதிகமாயிருக்கலாம். நம் எதிர்பார்ப்பின் படி செயல்பட இயலாது.

  இப்போது பொருட்களின் அளவைக் குறைத்தோ, கூட்டியோ நமது இருப்புக்குள் வருமாறு வாங்குவது தான் புத்திசாலித்தனம். இந்த சமயோசித புத்தி நம் எல்லோருக்குமே உள்ளது. ஆனால், ஆசைவயப்பட்ட நிலையில் அதிக அசைவடையும் மனதால், தெளிவான நிலையைத் தாண்டி பரபரப்பான சூழலுக்குச் செல்வதால், அறிவைப் புறம்தள்ளிய உணர்ச்சி நிலையில் முடிவெடுத்துச் செயல்பட்டு வருத்தப்படுவது பலரது வாடிக்கை நிகழ்ச்சியாகிவிட்டது.

  ஆட்சிமுறை:

  எதிர்பார்ப்பு என்பது ஆட்சி முறைகளின் அடிப்படையிலேயே அமைவது உலக இயல்பு. இன்று பொதுவுடைமைக் கொள்கையை அமல்படுத்தும் அரசுகள் மட்டும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான எல்லாவற்றையும் குறைவறத் தருகின்றன என நாம் நினைக்கிறோம்.

  ஏனென்றால் நாட்டின் வளங்கள் நிலங்கள், தொழில்கள் அனைத்தும் அரசுக்குச் சொந்தம். எல்லோரும் உழைக்க வேண்டும்; உழைப்புக்கு ஏற்றவாறு அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படும். இன்று அங்கும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாய் செய்திகள் தெரிவிக்கின்றன.

  வளர்ந்த நாடுகள் (Developed Countries) குழந்தைகள், கல்வி, மருத்துவம், முதியோர் பராமரிப்பு என எல்லாவற்றையும் தான் வசூலிக்கும் வருமான வரி வருமானத்தை வைத்துக் கொண்டு செயல்படுகின்றன. காரணம் லஞ்சமும் ஊழலும் அங்கில்லை.

  வளர்ந்து வரும் (Developed Countries) நாடுகளில் பொருளாதார ஏற்றத்தாழ்வு மிக அதிகமாக இருப்பதால், பொருள் மிகுந்தோர், குறைந்தோருக்கு நல உதவிப் பணிகள் செய்து, ஓரளவு இடைவெளியைக் குறைக்கும் நல்ல அறப்பணியில் ஈடுபடுவதைப் பாராட்டுவோம்.

  வளராத நாடுகள் (Under Developed Countries) தம் அடிப்படைத் தேவைகளுக்கு பிறநாடுகளை எதிர்பார்த்து, ஏதோ வாழ்ந்து கொண்டுள்ளன.

  தத்துவம்:

  “ஒன்றைக் கொடுத்தால் மட்டுமே வேறு ஒன்றைப் பெறமுடியும்” என்பது வாழ்க்கைத் தத்துவம். இதை உணர்ந்து கொண்டால் விரும்பிய வண்ணம் நல்ல முறையிலும் வாழலாம். கெட்டவராகவும் வாழலாம்.

  “அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்” உள்ளது என்பது தான் உண்மை. ஒருவரது வாழ்க்கைக்கு வேறு யார் தான் பொறுப்பேற்க விரும்புவார்கள்.

  தேர்வில் வெற்றி பெற- பரீட்சை எழுத வேண்டும்;

  அதிக மதிப்பெண் பெற- விருப்பம், உழைப்பு அவசியம்;

  பணம் தேவையெனில்  உழைக்க வேண்டும்;

  நோய் குணமாக – சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்;

  தூங்குவதற்கு  உடல் சோர்வடைய வேண்டும்;

  பாதிக்காமல் இருக்க – விழிப்பு நிலை அவசியம்;

  தொழிலில் லாபம் பெற- ஒற்றுமை உணர்வும், உழைப்பும் வேண்டும்

  இதுபோல் பல சொல்ல முயலுங்கள்.

  விருப்பமானதைப் பெறுவது:

  டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில், நமக்கு விருப்பமானதை, தேவையானதை நாம் விசாரித்து, தேடி எடுப்பது போன்றது தான் நமது எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வதும். இதற்குத் தடை ஒன்றேஒன்று தான்.

  அது தான் பயம்

  பயத்தை விரட்ட 3 படிகளில் செயல்பட வேண்டும்;

  1. உடலைத் தளர்வாக வைக்கவும்; உட்காரலாம் அல்லது படுக்கலாம்.
  2. விருப்பமானவைகளின் பெயர்களைத் திரும்பத் திரும்ப சொல்லுதல்.
  3. அவைகள் நம்மிடம் இருப்பது

  போல் அகக்காட்சியாக, மனோசித்திரமாகப் பார்த்தல்.

  இந்த மூன்று படிகளில் செய்யும் பயிற்சியால் நம் ஆழ்மனம் நமது எதிர்பார்ப்பை நிறைவேற்றச் செயல்படத் துவங்கும்.

  சவ்வூடு பரவல் முறையில் பேச்சுக்கள் அதிர்வலைகளாகி, மூளையில் பதிவாகி, அங்கிருந்து காந்த அலைகளில் பதிவாகும்.

  இந்தப் பதிவுகள் செயல்களாவதைத் தடுப்பவை  மற்றவர்களை விமர்சிப்பதும், மன்னிக்காமையுமாகும்.  இந்தத் தடைகள் இரண்டையும் நீக்கினால் மட்டுமே மனம் அமைதியடையும்.

  எப்படி மன்னிக்க முடியும்? இது 95% மக்களின் கேள்வி. என் வாழ்நாள் முழுதும் இவர்களை மன்னிக்கவே முடியாது என்று சொல்கின்றனர்.

  மன்னிக்காமலே இறந்து விடலாம். இவர்கள் எதிர்பார்ப்பு நிச்சயம் நிறைவேறாது. வாழ்க்கை ஒருமுறைதான். இதை மகிழ்ச்சியாக, எதிர்பார்ப்பை பெற்று எண்ணுவதை செயல்பட்டு வாழ வேண்டாமா?

  எனவே மன்னியுங்கள்.

  இயற்கையே மன்னிக்கிறது. நாம் மன்னிப்பதால், நாம் தான் பலனடைகிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம். தேவையற்ற விமர்சனங்கள் சொல்வதை உடனே நிறுத்துங்கள்.

  மனம் ஆக்கத்திறனுடையது. திரைப்படமும், மனப்படமும் இருட்டில் தான் உருவாகின்றன. இருட்டில் உருவானாலும் தெளிவாகவே தெரிகின்றன.

  இதோடு விட்டுக்கொடுக்கும் உயர்ந்த பண்பும் இணைந்து கொள்ள வேண்டும். மண்விட்டுக் கொடுத்ததால் தான் விதை முளைத்து செடியானது; மேகம் விட்டுக் கொடுத்ததால் தான் மழை பூமிக்கு வந்தது.

  நாம் விட்டுக் கொடுத்ததால், அமைதியான மனம் நம் நியாயமான எதிர்பார்ப்புகளைப் பெறுவதற்கான தகுதியைப் பெறமுதலில் திட்டமிட்டு நம்மைச் செயல்பட வைக்கும். செயல்படுதல் மிக முக்கியமானது.

  தொடர்ச்சியாக நமது எதிர்பார்ப்புகள் வரிசையாக நம்மை வந்து சேரும். இது உண்மை.

  நீங்கள் செய்ய வேண்டியவை:

  தேவையில் தெளிவு

  இருப்பதை அனுபவித்தல்

  உடலைத் தளர்வு செய்தல்

  எதிர்பார்ப்பு, விருப்பம்  சொல்லுதல்

  மற்றவர்களை மன்னித்து மனஅமைதி பெறுதல்

  மனம் கட்டளையிடுவது போல திட்டமிட்டு, செயல்படுதல்

  திட்டமிட்டு, செயல்படுதல், இவற்றால் மட்டுமே எதிர்பார்ப்புக்கும் பெறுவதற்குமான இடைவெளியை பூஜ்யமாக்க முடியும்.

  இலவசங்கள், தானங்கள் எல்லாம் தற்காலிக நிறைவை மட்டுமே தரும் கானல் நீர் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

  எண்ணங்களே வாழ்க்கையின் ஏணிப்படிகள் என்றால் எப்படி அதில் ஏறுவது?

  தொடரும்…

  இந்த இதழை மேலும்