திருமண வயதை எட்டிய இளைஞன் அவன். முழுச்சோம்பேறியாக இருந்தான்.“தினசரி உழைத்துநூறுரூபாய் கொண்டு வந்தால் தான் இனி சாப்பாடு உனக்கு” என்றுகோபத்தில் கத்தினார் அவன் தந்தை.

இளைஞனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தாயிடம் புலம்பினான், அந்தத் தாய் இரக்கப்பட்டாள். “எங்காவதுபோய் வா.நான் பணம் தருகிறேன். அதை அப்பாவிடம் கொடுத்துவிடு” என்றாள் அவன் தாய்.

இளைஞனும் அப்படியே செய்தான். பணத்தை அவன் தந்தை வாங்கி, “நீயும், உன் பணமும்” என்றுதூக்கி எறிந்தார்.ஒவ்வொருமுறையும் இப்படியே நடந்தது.

சில நாட்களுக்குப் பின் தாயிடம் பணம் இல்லாமல் போனது. கடன் வாங்கிக் கொடுத்தாள். அப்போதும் அவன் தந்தை பணத்தை தூக்கி எறிந்தார்.

ஒரு கட்டத்தில் அந்தத் தாயால் பணம் கொடுக்க முடியவில்லை.இளைஞன் வேறு வழியின்றி வெளியே சென்று எந்த வேலையையும் செய்யத்தயார் என்று உழைக்க ஆரம்பித்தான். மூட்டை தூக்கினான். நூறு ரூபாய் சம்பாதித்தான்.

பெருமை பொங்க தந்தையிடம் கொடுத்தான். அன்றும் வழக்கம்போலவே பணத்தை தூக்கி எறிந்தார். அவனவன் மூட்டை தூக்கி கல் சுமந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து வந்தால் இப்படி தூக்கி வீசுகிறீர்களே! என்று அந்த இளைஞன் வருத்தப்பட்டான்.

வீசி எறிந்த பணத்தை எடுத்து அதை முத்தமிட்டு தன் பைக்குள் வைத்த தந்தை சொன்னார், “இது என் மகன் உழைப்பில் வந்த பணம், இனி எனக்கு என் மகனைப் பற்றிய கவலை இல்லை” என்று…

உயர வேண்டும், வளர வேண்டும், முன்னேற வேண்டும் என்று விரும்புபவர்கள் எல்லோருமே முதலில் உண்மையாக உழைக்க முன் வர வேண்டும். அப்போது தான் உயர்வு வரும்.

அனைவருக்கும்“உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்!”