– 2015 – May | தன்னம்பிக்கை

Home » 2015 » May (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    என் பள்ளி

    வசதி இருந்தும் வாய்ப்புகளைத் தவிர விட்டவர்கள் இவ்வுலகில் எத்தனையோ பேரை கண்கூடாகப் பார்க்கலாம். வாய்ப்புகள் ஒருமுறைதான் வரும் அதைச் சரியாகக் கடைபிடித்தவர்கள் எல்லையை அடைகிறார்கள். தவறியவர்கள் வாழ்க்கையில் தடுமாறிப் போகிறார்கள். கல்வி மட்டுமே ஒவ்வொருவரின் அழியாச் சொத்து. இந்த சொத்தை சரியான நேரத்தில் சரியான வகையில் கையாண்டால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். அவ்வாறு வெற்றி பெற்றுவரும் திரு. பாரதிவாசன் அவர்களின் கல்விக்கால அனுபவங்களை பகிர்கிறார் நம்மோடு.

    திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் கிராமத்தில் பிறந்தேன். கிராமம் என்றால் எப்படி இருக்குமோ அதில் சற்று மாறாவகையில் எங்கள் கிராமம் இருக்கும். அன்று பார்த்த என் கிராமம் எங்கள் மரங்கள், ஊரைச்சுற்றி ஓடைகள், எல்லா வீட்டிலும் இயந்திர ஓசை எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கும். ஊரிலிருந்து சற்று தொலைவில் தான் பள்ளி அமைந்திருக்கும்.

    என்னுடைய குடும்பம் பெரியது. என் உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். என் தந்தை கோபால்சாமி. வீட்டிலேயே நெசவுத்தொழில் செய்கிறார். தாயார் பூவாத்தாள். தந்தையின் வருமானம் என் குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கு மட்டுமே இருந்தது. இதனால் எங்களை படிக்க வைக்கமுடியாத சூழல் இருந்தது.

    இருந்தும் வறுமையை வெளிகாட்டவில்லை என் தந்தை.  தென்னம்பாளையத்திலுள்ள அரசுப்பள்ளியில் தான் கல்வி கற்றேன். இப்பள்ளியில் ஆசிரியர்களின் அரவணைப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. ஒரே சீருடை, பள்ளியில் மதிய உணவு, மாலை வேளையில் அப்பாவிற்கு உதவிகரமாக இருப்பேன்.

    ஒருநாள் வகுப்பில் ஏழ்மை சம்பந்தமான பாடத்தை ஆசிரியர் நடத்தினார். அப்பொழுது உணவு, உடை, இருப்பிடத்தில் இல்லை; ஏழ்மையும், இயலாமையும் அவரவர் மனதில் தான் இருக்கிறது என்றார். இந்த வார்த்தை எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது.

    பள்ளி காலங்களில் ஆசிரியர் கூறும் அறிவுரைகளைக் கேட்க தவறியவர்கள், நிச்சயம் வாழ்க்கையில் மேன்மை அடைய முடியாது என்பதை புரிந்து கொண்டேன். எனது ஆசிரியர் கூறும் வழிகளைப் பின்பற்றினேன். அவர்களின் கைகளும், கடமைகளும் என்னை ஒரு ஒளிமிக்க வாழ்க்கைக்கு அழைத்துச் சென்றது. இதனால் நேரத்தை சரியாக அமைத்து வாழ்க்கை முறையாக அமைக்க பழகினேன். காலப்போக்கில் ஒழுக்கம், பண்புடைமை இவற்றை எப்பொழுதும் தவறாமல் வாழ்ந்து வருகிறேன்.

    பள்ளிப்படிப்பை முடித்தவுடன் மேற்படிப்பை தொடங்க இழுபறி ஏற்பட்டது. இதனால் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டேன். வேலை தேடத் தொடங்கினேன். வேலைகளும் கிடைத்தன. எனக்கு சொந்தத் தொழில் ஏதேனும் தொடங்க வேண்டும், அதில் எனது சுவடுகளைப் பதிக்க வேண்டும் என்ற ஆவலும், வேகமும் எனக்குள் ஏற்பட்டது.

    அவரவர் திறமை அவரவர்க்கே தெரியாமல் இருந்தாலும், மற்றவர் நமது செயல்பாட்டைப் பாராட்டும் பொழுது நிச்சயம் தெரியவரும்.அப்படி வெளிப்பட்டது தான் எனது புகைப்படத்திறன். ஒரு துறையில் சாதிக்க வேண்டுமானால் தனக்கு எதில் திறமை அதிகம் என அறிந்து அந்தத் துறையை தேர்ந்து முயற்சிகளை மேற்கொண்டோமானால் வெற்றி நிச்சயம் என்பதை புரிந்து கொண்டேன்.

    எத்தனையோ புகைப்படக் கலைஞர்கள் இருந்தாலும் என்னுடைய தனித்திறமையை  இதில் எப்படி புகுத்துவது என்ற சிந்தனையில் ஆழ்ந்தேன். வேறுபட்டு சிந்திக்க ஆரம்பித்தேன்.வெறும் புகைப்படங்கள் மட்டும் போதாது, இந்தத் துறையில் வேறென்ன புதுமைகளைச் செய்யலாம் என்பதை கற்றுக்கொண்டேன்.

    பின்னர் குறும்பட தயாரிப்பு முறைகளைப் பற்றி தெரிந்து கொண்டு, ஒளிபரப்பு முறைகளையும் அறிந்து கொண்டு “ஒரு நாள்” என்ற குறும்படத்தை இயக்கினேன். இந்தப் படத்தை பாராட்டி உலகளவில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றேன். அமெரிக்கா, பிரான்ஸ் போன்றநாடுகளின் கவுரவத்தை அடையப் பெற்றேன். இது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம் ஆகும்.

    எனது திறமைகளை என்னோடு நிறுத்திக் கொள்ளாமல் குறும்படத்தின் நுணுக்கங்களைப் பற்றிய ஆய்வுகளையும் புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளேன். இப்புத்தகத்திற்கும் நிறைய பாராட்டுக்களும், அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இந்த ஊக்கங்களை அடித்தளமாகக் கொண்டு மேலும் சாதனைகள் செய்ய என்னை தயார்படுத்தி வருகிறேன்.

    நவீன மயமான இவ்வுலகில் எந்த ஒரு தொழிலையும், யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். அதில் தனக்கென தனித்திறமைகளையும், துறைசார்ந்த நுணுக்கங்களைப் பற்றியும் நன்கு தெரிந்து கொண்டு பல்வேறு புதுமைகளைப் படைக்கலாம். அவ்வாறு முயற்சிகளை மேற்கொள்ளும்போது வெற்றி என்னும் விண்ணை தொடுவது சாத்தியமே!

    இந்த இதழை மேலும்

    முயன்றேன்… வென்றேன்!

    திறமையும், முயற்சியும் இருந்தால் இவ்வுலகில் பெரிய சாதனைகளைச் செய்து விடலாம். சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை. எண்ணியதை சரியாக கடைபிடித்தால் வெற்றி நிச்சயம் எட்டும்.

    அந்த வகையில் தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கி அதில் வெற்றி பெற்று சாதனை புரிந்து வருகிறார் செல்வி ம. நிவேதிதா அவர்கள். பிங்க் அவன் (Pink Oven) எனும் பெயரில் தனது வீட்டிலேயே பல்வேறு வகையான கேக் வகைகளைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறார்.

    நான் பிறந்த ஊர் கோவை. தந்தை முனைவர் எம்.என்.ஜி. மணி, சர்வதேச நிறுவனமொன்றில் தலைமை செயல் அதிகாரியாகவும் தாயார் திருமதி சாரதா, பல்கலைக்கழக பேராசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். என்னுடைய சகோதரர் திரு. கார்த்திக் நரேன் அவர்கள் பொறியியல் படிக்கிறார். நான் படித்தது எல்லாமே கோவையில் தான். இளங்கலை பட்டப்படிப்பை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.டெக். (உயிரியல் தொழில்நுட்பம்) முடித்தேன். அதன்பிறகு எம்.பி.ஏ. (மார்க்கெட்டிங்) பி.எஸ்.ஜி. கல்லூரியில் கடந்த ஆண்டு முடித்தேன்.

    கேக் செய்வது என்பது சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று தான். எனது சித்தி திருமதி. நிர்மலா சுகுமாரன் அவர்களின் துணையோடு சிறுவயதிலிருந்தே பல்வேறு வகையான கேக் தயாரிக்கும் முறைகளை ஆர்வமுடன் கற்றுக்கொண்டேன். எனது இந்த ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அவர் பலமுறைநேரடி செய்முறைப் பயிற்சியாக கேக் தயாரிக்கும் முறைகளைப் பற்றி விளக்கியுள்ளார். பிறகு நேரம் கிடைக்கின்ற சமயங்களில் நானே தனியாக கேக் தயாரிக்க ஆரம்பித்தேன்.

    கல்லூரி முடித்தவுடன் அதிக நேரம் கிடைத்தது. அப்பொழுதெல்லாம் இந்த கேக் செய்முறையைச் செய்து கொண்டிருப்பேன். நான் தயாரித்த கேக்குகளை எனது நண்பர்களுக்கு கொடுப்பேன். மற்றகேக்குகளை விட தனிப்பட்ட சுவையில் இருந்ததால் எனது நண்பர்களும் இதை விரும்பினார்கள். அப்பொழுதுதான் முறையாக கேக் தயாரித்து விற்பனை செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது.

    எனது ஆர்வத்தை பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்களும் எந்தவித மறுப்பும் இன்றி சம்மதம் தெரிவித்தார்கள். ஒவ்வொருவரும் முன்னேறவேண்டுமென்றால் மற்றவர்களை எதிர்பாராமல் சுயமாக தொழில் தொடங்க வேண்டும் என்று என் அப்பா எப்பொழுதும் சொல்லுவார். அதை நிறைவேற்றும் விதமாகவே எனது இந்த தொழில் தொடங்கும் எண்ணத்தைத் தெரிவித்தேன்.

    மேலும் இது நான் விரும்பித் தொடங்கிய தொழில் என்பதால் என்னால் முழு ஈடுபாட்டுடன் இதில் வேலை செய்ய முடிந்தது. அனைத்து தரப்பிலும் எனக்கு ஊக்கம் கிடைத்தது. மார்ச் 2014 முதல் முழுநேர தொழிலாகவே இதைச் செய்ய ஆரம்பித்தேன்.

    தயாரித்த கேக்குகளை விற்பனை செய்வதைப் பொறுத்த வரையில், கடைக்கு சென்று வாங்கும் வழக்கமான முறையைப் போலல்லாமல் ஆன்லைன் (Online) மூலமாக www.facebook.com/the.pink.ovan எனும் ஃபேஸ்புக் பகுதியைத் தொடங்கி அதன் மூலம் விற்பனையை நவீனமாக செய்து வருகிறோம்.

    வழக்கமான வடிவங்களில் மட்டுமே இல்லாமல், வாடிக்கயைôளர்கள் எந்த மாதிரியான வடிவத்தில் கேட்கிறார்களோ (Customised Designs) அந்த வடிவில் கேக்குகளை செய்து கொடுக்கிறோம். மேலும் இதுவரை தயாரித்த பல வகையான கேக் வகைகள் ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. இதைப் பார்ப்பவர்கள் எந்த வடிவில் கேக் ஆர்டர் கொடுத்தாலும் அதே வடிவில் தயாரித்து அவர்களுக்கு டெலிவரி செய்து விடுவோம்.

    அதேபோல் பிறந்த நாள், திருமண விழா போன்றவிழாக்களுக்கு அதற்கு பொருத்தமான வகையில் கேக்குகளை வடிவமைப்பு செய்து கொடுக்கிறோம். கேக் வாங்க நினைப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் முகநுôலில் கேக்குகளை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

    மேலும் கேக் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் அனைத்துமே முதல் தரமானவை ஆகும். பெரும்பாலான மூலப்பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை.

    கேக் ஆர்டர் செய்ய விரும்புபவர்கள் ஃபேஸ்புக்கில் எங்கள் நிறுவன பக்கத்திற்கு வந்து ஆர்டர் செய்தாலே போதும். மிக எளிமையானமுறை என்பதாலும், பிடித்தவர்கள் நிறையபேர் தொடர்ந்து வாங்குவதாலும் எங்களது முகநுôல் பக்கத்திற்கு நிறைய விருப்பங்கள் (Likes) மற்றும் நல்ல கருத்துக்கள் (Comments) கிடைக்கிறது.

    நான் கற்றுக்கொண்ட இந்த கேக் தயாரிப்பு முறைபற்றி மற்றவர்களும் கற்றுப் பயன் பெறவேண்டும் எனும் நோக்கில் பல பயிலரங்கங்களை (Workshop) கோவையில் நடத்தி வருகிறேன். பலர் இதில் கலந்து பயன்பெற்றுள்ளனர்.

    வளர்ந்து வரும் இளைஞர்கள் எதைச் செய்ய நினைக்கிறார்களோ அதில் மட்டுமே முழுக்கவனத்தையும் செலுத்தினால் வெற்றி நிச்சயம். செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் ஈடுபாட்டுடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட்டால் வளர்ச்சி நிச்சயம்.

    இந்த இதழை மேலும்

    இதய வங்கியில் நிரம்புகின்ற அனுபவ இருப்புகள்

    இதய வங்கியில் நிரம்புகின்ற அனுபவ இருப்புகள்

    “வாழ நினைத்தால் வாழலாம்

    வழியா இல்லை பூமியில்

    ஆழ்கடலும் சோலையாகும்

    ஆசையிருந்தால் நீந்தி வா

    பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

    பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

    பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்”

    “இந்தத் திரைப்பாடல் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்” எப்படி வாழ வேண்டும்? என்ற காட்சிகளைக் கண் முன்னே விரியச் செய்கிறது. சாதனையாளர்கள் பலரும் சொல்லொண்ணா வேதனைகளைத் தாங்கி நின்றவேர்களாகவே வெளிப்பட்டிருக்கிறார்கள். அந்த வெளிப்பாட்டின் வெளிச்சம்தான் பின் தொடரும் பரம்பரைகளுக்குக் கலங்கரை விளக்காகக் காட்சி அளிக்கிறது.

    இன்பம், துன்பம் எவருக்கும் உரியது இதய வங்கியில் நிரம்புகின்றஅனுபவ இருப்புகளைக் கணக்கிட, இத்தொடர் போன்ற தணிக்கைகள் தேவைப்படுகின்றன.  மாற்றுத்திறானாளிகள் தமக்குள்ள உரிமைகளுடன் தலைநிமிர்ந்து வாழ முடியாவிட்டதாலும், உழைப்பால் உயர முடியும். இவர்தம் வாழ்க்கை வலி நிறைந்தது. கால்களின் இரத்தக்கசிவு, உதட்டோரம் உமிழும் எச்சில், முட்டிப்போட்டு நடந்தே முகவரியைத் தொலைத்தவர்கள், கண் பார்வை இழந்தாலும், கண்ணால் வானத்தை எதிர்நோக்கும் ஈரமுனகல்கள் இருந்தாலும் உயர்வுக்கு ஊனம் தடையில்லை. உள்ளத்தில் இல்லை ஊனம், வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தோடு, நம்பிக்கை வானின் நட்சத்திரமாகவும் திகழ்வோரை அடையாளப்படுத்துவது அவசியம் என்றமுறையில் என் பேனாவின் மை ஈரக்கசிவை கொட்டி வைக்கிறது மயிலிறகால் வருடுவதுபோல் இதயத்தை தொட்டு அசைக்கிறது.

    இடுப்புக்கு கிழே செயல் இழந்து எழுந்து நிற்கவும் முடியாமல் நடக்கவும் முடியாமல், விபத்துக்குள்ளான பிஜீசிவர்கிஸ் முழுவதுமாக கைகளாலேயே ஓட்டும் காரை வடிவமைத்திருக்கிறார். இவரின் வாழ்க்கையைப் பாடப் புத்தகத்தில் அரசு வெளியிட்டால் மாற்றுத்திறனாளியின் மகத்துவமும் எதிர்கால சந்ததி எழுந்து நடக்க உதவும் நெம்புகோலாகவும் பயன்படும்.

    சபரிமலையோடு தொடர்புடைய எருமேலியின் அருகில் முக்கூட்டுத்தரையில் பிறந்த இவர் பெற்றோரின் ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது பிள்ளை. இவர் கல்லூரியில் அறிமுகநிலை கல்வி. விபத்தில் கால் இழந்த நிலையில் 25 நாட்களுக்குப் பின் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் இவர் கண்விழித்தார். ஒன்றறைமாத சிகிச்சைக்குப் பின் இடுப்புக்கு கீழ் செயல் இழந்தவராக, கல்யாணமாகும் நிலையில் 3 சகோதரிகளை உடையவராக, அடுத்தவரின் உதவிக்காக காத்திருக்கும் அவர் நிலையை எண்ணிப் படுக்கையில் கிடந்தபடியே பல நாட்கள் ஆராத ரணத்தோடு அழுதாலும், அழுவது தீர்வல்ல, தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையை உடலின் ஒவ்வொரு செல்களுக்கும் சொல்லிக்கொடுத்து, மனதுக்குள் ஒரு நெருப்பு யாகம் வளர்த்து, தன்னாலும் சாதனையாளராக முடியும் என்று கால் இல்லாவிட்டாலும் கார் ஓட்டலாம் என்று சிரித்துக் கொண்டே தினத்தந்தி இதழுக்கு 25.1.2014-ல் பேட்டியளித்துள்ளார். இந்த நம்பிக்கை நாயகன் தன் ஒர்க்ஷாப் முன்னால் எழுதி வைத்திருக்கும் வாசகம், “சிறிய தோல்விகளைப் பார்த்து பதற்றமாகி விடுகிறவர்களே கவனியுங்கள் தோற்க தயாரில்லாதவர்கள் உங்கள் முன்னால் பாடமாக இருக்கிறார்கள்!”.

    அவரது மூளைக்கும் கடுமையான உழைப்புக்கும் ‘தேசிய விருதினை அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் 2007ல்  பிஜீவுக்கு நேஷனல் இன்னவேஷன் பவுண்ட்டேஷன் விருது வழங்கியது. இவரது கையிலேயே ஓட்டும் காருக்கு அரசு காப்புரிமையும் பல சோதனைகளுக்குப் பின் வழங்கினாலும், இதுவரை 500க்கும் மேற்பட்ட கார்கள் இந்தியா முழுவதும் இவர் பெயர் சொல்லி ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.

    பிறவியிலேயே பார்வையற்றவராகவும் காதுகோளாதவராகவும் பேசும் திறன் இல்லாதவராகவும் பிறந்த ஹெலன்கெல்லரை அமெரிக்காவின் வெள்ளை மாளிகை – கைகொட்டி வரவேற்று அன்றைய ஜனாதிபதி கிளீவ்லண்ட் முதல் எல்லா ஜனாதிபதிகளாலும் கௌரவிக்கப்பட்டார் என்றால் அவருக்குள்ளும் ஓடிக்கொண்டிருந்த பனி நதியை எதனோடு ஒப்பிட முடியும்?

    அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நைனிடால் சிறையிலிருந்து தன் மகள் பிரியதர்ஷினிக்கு (இந்திராகாந்தி) எழுதிய கடிதத்தில், கரும்பின் சுவையை சுவைக்கும் வயதில் என் எழுத்து வேம்பின் கசப்பாக இருந்தாலும், உன் எதிர்காலத்திற்கான ஏணிப்படியாக அமையும் என்று குறிப்பிட்டிருந்தார். அதுபோல் நீங்கள் வாசிப்பின் வசந்த மண்டபத்திலிருந்து வெளியேறும் போது நேசிப்பின் நிமிஷங்களை உணர்வீர்கள் என்பது உறுதி.

    39 வயதில் போலியோவால் சிக்குண்டு வலக்கால் முழுவதும் செயலற்று போனாலும் அமெரிக்காவில் நான்கு (4) முறை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஃபிராங்ளின் டி.ரூஸ்வல்ட் அமெரிக்காவையே தூக்கி நிறுத்தியவர். சக்கர நாற்காலி, கைக்கட்டைகளுடன் அன்றைய ஸ்டான்லி, முஸோலினி, ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளை நேரில் அவர்தம் நாட்டிற்கே சென்று சந்தித்த சாதனை சக்ரவர்த்தியாக திகழ்ந்தார் என்றவரலாறு சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும். வரலாற்று நாயகர்களின் வரலாறுகளை எவர் ஒருவர் தன் இதயப்பேனாவால் எழுதி வைத்துக் கொள்கிறாரோ; அவர் பெயரும் ஓர்நாள் சிகர சிம்மாசனத்தில் தங்க எழுத்துக்களால் மின்னும் மிளிரும்.

    மாலதி ஹொல்லா 11 வயதில் போலியோ தாக்கினாலும், கர்நாடகம் தந்த 53 வயது வீரமங்கை வீல்சேரில் உட்கார்ந்தபடி ஈட்டி எறிதல் குண்டெறிதல், வீல்சேர் சைக்கிள் ஓட்டப்போட்டி, வீல்சேர் பாட்மின்டன் போட்டி மூலம் ஆஸ்திரேலியா, ஸ்பெயின், சீனா, தாய்லாந்து, தென்கொரியா போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பெற்ற பதக்கங்கள் விருதுகள். 159 தங்கப்பதக்கம், 26 வெள்ளிப்பதக்கம், 5 வெண்கலப்பதக்கம், 1996ல் இந்திய உயரிய விருது அர்ஜீனா விருது 2001-ல் பத்மஸ்ரீ விருது.

    வாழுங்காலத்தே வரலாற்று பெட்டகமாக திகழும் மாலதி ஹொல்லா தற்போது வங்கியின் மேலாளராக உள்ளார் என்பதும் விளையாட்டுத் துறைக்காகவும் தான் வாழுங்காலத்தை வசந்தமாக்க துடிக்கும் வீரமங்கையின் பேட்டி வரலாறு உள்ளவரை வாழும் என்பதையே காட்டுகிறது. காது கேளாத தாமஸ் ஆல்வா எடிசன் விஞ்ஞானத்தின் தந்தை – 1039 கண்டுபிடிப்பின் காரணகர்த்தா. ஒரு பிரபஞ்சத்தின் விஞ்ஞானத் தோட்டத்தையே தன் சிறிய மூளைக்குள் செருகி வைத்துக் கொண்ட அறிவியலின் ஆச்சரியம். உலகிலேயே தன் 12 வயதில் ஒரு விபத்தில் கேட்கும் திறனை இழந்தார். கடைசி 72 ஆண்டுகளுக்கும் இவருக்கு காது கேட்கவில்லை. இதையே தன்முனைப்பாகக் கொண்டு (பாசிட்டிவ்) நிறைய உலகிற்கு கொடுத்த மாற்றுத் திறனாளியே தாமஸ் எடிசன் என்பதை மனசின் மைய மண்டபத்தில் மாட்டி வைப்போம். இவர் போன்றோரின் பாடங்களைப் படித்து வைப்போம், சிகர சிம்மாசனத்தில் நிறுத்தி வைப்போம்.

    இந்த இதழை மேலும்

    விரதம் முடிப்போம்

     நாம் காலையில் சாப்பிடும் உணவை ஆங்கிலத்தில் பிரேக்பாஸ்ட் (Breakfast) என்று கூறுவதன் அர்த்தத்தை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் முன்னாள் இரவு எட்டு மணிக்கு இரவு உணவைச் சாப்பிட்டு தூங்கப் போகிறோம். அதன்பிறகு காலை எட்டு மணிக்குத்தான் நாம் சாப்பிடுகிறோம். ஆக, நாம் 12 மணிநேரம் உண்ணாமல் விரதம் இருக்கிறோம். அந்த விரதத்தை முடித்து வைக்கும் காலை உணவைத்தான் நாம் பிரேக்பாஸ்ட் என்கிறோம். அப்படியில்லாமல் நாம் நம் காலை வேளையின் அவசரச் சூழலுக்கு ஆட்பட்டு காலை உணவை சாப்பிடாமலோ அல்லது தள்ளியோபோடும்போது நம் உண்ணாவிரதம் நீட்டிக்கப்படுகிறது. நாம் இரவு சாப்பிடாமல் இருக்கும்போது நாம் முழு ஓய்வில் இருக்கிறோம். ஆனால், அதுவே

    காலையில் நாம் வேலை பிஸியில் இருக்கிறோம். காலையில் சாப்பிடாமல் இருப்பது மிகவும் கெடுதலான விளைவைத் தரும். ஆகவே, நாம் காலையில் அவசியம் சாப்பிடவேண்டும். அதாவது விரதம் முடிக்க வேண்டும். நமக்கு காலை வேளையில் நம் வேலைதான் முக்கியமாக முன்வந்து நிற்கிறது என்றால், அதற்கு முன்னதாக நாம் அதிகாலையில் எழுந்து தயாராகும் பழக்கத்திற்கு வர வேண்டும். அப்படியில்லாவிட்டால், பிற்பாடு உடல் நலம் கெட்டு இப்பொழுது நாம் செய்துவரும் வேலையையும் செய்ய முடியாமல் போகும். இது பரவாயில்லையா?

    நாம் உண்ணாவிரதம் முடிக்கும்போது முதலில் எடுப்பது பழச்சாறாகத்தான் இருக்கவேண்டும். அப்படியில்லாமல், காலை எழுந்தவுடன் காப்பி அல்லது டீ குடித்தால்தான் வேலையே ஆகும் என்றால் நாம் மோசம்தான். அப்படிக் காலையில் நாம் குடிக்கும் காப்பியும், டீயும் நம் செரிமான சக்தியை காலி செய்கிறது. அப்புறம் மிச்சம் மீதி இருக்கும் செரிமான சக்தியைக் கொண்டுதான் அன்றைய நாளை நாம் கடந்தாக வேண்டும். ‘சரி, அதெல்லாம் இருக்கட்டும், டீ காப்பியை விடுவதெல்லாம் ஆகாத காரியம், வேறு வழி ஏதேனும் இருந்தால் கூறுங்கள் ‘ என்று நீங்கள் கேட்டால் என் பதில் இதுதான். நான் உங்களுக்கு ‘அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்  ‘ பற்றித்தான் சொல்ல வந்தேன், ‘அன்றாட வாழ்வில் அழிச்சாட்டியம்’ பற்றி அல்ல.

    நாம் காலையில் எழுந்து பல் துலக்கி, சவரம் செய்து, காலைக்கடன் முடித்து, எனிமா எடுத்து, தொட்டிக் குளயல் செய்து பின் குளத்து, எளய உடற்பயிற்சி முடித்து, பிராணயாமம் பயின்று, பின் தியானம் இயற்றிய பின், நாம் எடுக்கும் முதல் உணவு பழச்சாறாக இருந்தால் மிகவும் அற்புதமாக இருக்கும்.  அதற்கு நாம் கேரட் ஜூஸ் தயாரித்து அருந்தலாம். நான்கு பேருக்கு செய்யும் அளவு முறை பற்றி பார்ப்போம். கால்கிலோ கேரட்டைத் துருவி, அதனோடு ஒரு மூடித் தேங்காயையும் துருவிச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனோடு இயற்கை வெல்லம் தேவையான அளவில் சேர்த்து இரண்டு ஏலக்காய்களையும் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் ஓட்டிய பின்னர் வடிகட்டி அருந்தலாம். இப்படிக் காலையில் நீர்த்தன்மையோடு எடுக்கப்படும் கேரட் ஜூஸானது நம் மண்ணீரலைப் புத்துணர்வாக்கி அன்றைய செரிமானத் தன்மையை உத்வேகம் கொள்ளவைக்கும்.

    அடுத்து, நாம் காலையில் எடுக்கும் உணவானது செரிக்க இலகுவாகவும், வயிற்றை கெடுக்காததாகவும் இருக்க வேண்டும். காலையிலேயே நொறுக்குத் தீனிகளையும்  எதிர்மறை உணவுகளையும் எடுக்க ஆரம்பித்தால் அன்றைய தினமும் மற்றொரு மோசமான தினமாகவே கழியும். அப்புறம் காலை அவசரத்திற்கு பிரட்டையும் சாஸையும் சாப்பிடுவதும் நம் செரிமானத்திற்கு நாமே சங்கு ஊதுவதற்குச் சமமாகும். நாம் அதிகாலையில் எழுந்து பொறுமையாக நம்மைத் தயார்படுத்தி, தரமான காலை உணவை மெதுவாக உண்டு காலை வேலையை ஆரம்பிப்போமேயாயின் அன்றைய நாள் முழுமையும் உற்பத்தி திறன் வாய்ந்த நாளாக விளங்கும். ஆகையால் அன்றைய இரவில் நாம் நிம்மதியாகத் தூங்குவோம். ஆக, நல்ல தொடக்கம் என்பது பாதி வேலை முடிந்ததற்குச் சமம் என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர். இது வேண்டும்தானே?

    இந்த இதழை மேலும்

    எந்த படிப்பு யாருக்கு பொருந்தும்?

    கல்வி மட்டுமே மனிதனை மாமனிதனாக, சான்றோனாக, செல்வச் செழிப்பு மிக்கவனாக மாற்றுகின்றது என்பதில் யாருக்கும் ஐயமில்லை. சிலர் பெருமைக்கு கல்லூரிக்கு வந்தாலும், சிலர் கல்யாண பத்திரிக்கைகளில் தனது பெயருக்கு பின்னால் கூடுதல் எழுத்துக்கள் வர வேண்டும் என்பதற்காகவும், தான் படித்திருந்தால் மட்டுமே தனக்கும் படித்த வரன் அமையும் என்பதற்காகவும் என ஒரு சில காரணங்களுக்காகவும் கல்லூரி வந்து போகின்றனர் சிலர். அவர்களுக்கு எந்தமாதிரியான உயர்கல்வி அமைந்தாலும் அவர்கள் அதற்கு எந்தவித முயற்சியும் எடுக்கப்போவதில்லை. அதனால் அவர்கள் வாழ்வில் எந்தவொரு மாற்றமும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் செல்வந்தர்கள் தங்களிடமிருக்கும் செல்வத்தை தக்கவைப்பதே அவர்களது நோக்கம்.

    அடுத்த தரப்பு மாணவர்களோ ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர்கள் நினைப்பார்கள் தாம் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தமது குழந்தையும் தன்னுடைய கஷ்டங்களைப் படக்கூடாது என்று. தான் என்ன கஷ்டம் பட்டாலும் தனது மகனையோ, மகளையோ நல்ல கல்லூரியில், நல்ல பாடப்பிரிவில் சேர்த்துவிட வேண்டும் என்ற எண்ணங்கொண்டவர்கள் ஏராளம்.

    100க்கு 90% பெற்றோர்கள் தனது பிள்ளைகளுக்கு சிறந்த உயர்கல்வி கொடுப்பதன் மூலம் தமது குழந்தைகளை நல்ல மனிதர்களாக ஆக்கிவிட்டால் அதன்மூலம் செல்வமும், பெயரும் தமது குடும்பத்திற்கு வந்துவிடும். சமூகத்தில் தாமும் உயர்ந்த நிலைக்கு சென்றுவிடலாம் என்பதாகவே அவர்களின் எதிர்பார்ப்பு உள்ளது.

    பெற்றோர்களின் நிலை

    தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் உள்ள பெற்றோர்களின் கல்வி நிலை பள்ளிக்கல்வியில் இடைநிலை அதாவது 8ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பாகத் தான் இருந்திருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களால் எப்படி தமது குழந்தைகளை சரியான உயர்கல்வியில் சேர்க்க முடியும்? அதற்கு வழிகாட்டுதலாக தான் இக்கட்டுரையை எழுதுகிறேன்.

    தற்பொழுது 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ள மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அடுத்து என்ன படிப்பைத் தேர்ந்தெடுப்பது? என்ன படிப்பது? எது தனது குழந்தைக்கு பொருத்தமானதாக இருக்கும்? அதன்மூலம் அதிகம் சம்பாதிக்க முடியுமா? நினைக்கும் தொழிலை சொந்தமாக நடத்த முடியுமா? இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் சில பெற்றோர்களின் தூக்கத்தையும் இந்த எண்ணங்கள் கலைத்துக் கொண்டிருக்கிறது என்பதே 100% உண்மை.

    ஆழ்கடலின் ஆழம் தெரியுமா?

    கலை அறிவியல் படிப்புகள், பொறியியல், மருத்துவம், துணை மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், வழக்குறைகள், ஆடிட்டர், பொருளாதாரம், வணிகம் போன்ற எண்ணற்றபடிப்புகளும், அதில் வேலை வாய்ப்புகள் இருப்பது மிகப்பெரிய கடலில் நீந்தி மீன்பிடித்தும் கடலின் ஆழம் தெரியாது, நீளம் அகலம் தெரியாது, எந்த திசையில் செல்ல வேண்டும் என்பது தெரியாது, நம்மைவிட பெரிய மீன்கள் வந்தால் அது நம்மை வீழ்த்திவிடும். பாறைகளும், அபாயகரமான உயிரினங்களும் வசிக்கும் இடம். இவ்வளவு பெரிய கடலில் நாம் நீந்தி மீன்களுடன் கரை சேர்வதே வாழ்க்கையின் வெற்றி. அபாயகரமான கடலில் நீந்துவதற்கு தன்னம்பிக்கை என்ற துடுப்பு மட்டும் போதாது. அறிவு என்ற ஊன்றுகோலும் தன்னிடம் இருக்குமானால் படகினை எளிதில் ஓட்டி மீன்களுடன் கரை சேரலாம் என்பதே திண்ணம்.

    200/200 மதிப்பெண்கள் உதவுமா?

    2015ம் ஆண்டு ப்ளஸ் டூ-வின் போது தேர்வினை 9 லட்சம் மாணவர்கள் தேர்வெழுத முன்படுகின்றனர். ஒவ்வொருவரும் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் அரசு பள்ளி மாணவர்கள் ஒரு ஆண்டும், தனியார் பள்ளி மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகளும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

    ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் 200/200 மதிப்பெண்கள் பெற்றுவிட்டால் வாழ்வில் வெற்றி பெற்றுவிடலாமா? மதிப்பெண்கள் குறைவாக பெற்றவர்களும், தேர்வில் தோல்வி அடைந்தவர்களும் எதிர்காலம் இல்லை என்றாகிவிடுமா?

    தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வாழ்வில் தோல்வி அடைவதும், தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதும் அவர்தம் வாழ்க்கையில் எடுக்கப்பட்ட தனிப்பட்ட முடிவுகளின் தன்மையே. அதற்காக நான் தேர்வில் தோல்வி அடையலாம் என்று கூறவில்லை. தோல்வி அடைந்தாலும் சரியான வழிகாட்டுதலின் மூலம் நல்லதொரு எதிர்காலத்தை அடையலாம் என்பதே என் கருத்து.

    சரியான உயர்கல்வியை அடையாளம் காண்பது எப்படி?

    இயற்கையில் ஒவ்வொரு மனிதனின் கைவிரல் ரேகை எப்படி மாறுபட்டு தனித்தனியாக உள்ளதோ அதைப்போல் கடவுளால் படைக்கப்பட்ட ஒவ்வொருவரும் அவரவர்க்கென தனித்திறமைகளைப் பெற்றிருப்பர். அத்திறமைகளை வெளிக்கொணர்வதே கல்வி.அதாவது தன்னைத்தானே அறிந்து கொள்வதே கல்வி.

    “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்பார்கள். அதைப்போல ஒவ்வொருவரின் எதிர்காலமும் அவர்களின் செயல்பாடுகள் பள்ளிப்பருவத்திலேயே அறியப்படுகின்றது. மாணவர்களின் தகுதிகளும், திறமைகளுக்கேற்ப உயர்கல்வி பிரிவு அமையப்பட்டால் அவர்களின் செயல்பாடுகள் அதிகரிக்கப்படுவதுடன் அவர்களின் எதிர்காலமும் சிறப்பாக அமையும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை.

    ஒரு சில மாணவர்களுக்கு இளமையிலேயே எதையும் ஆய்ந்து கேள்வி கேட்கும் திறன் இருக்கும்.அவர்களுக்கு ஆராய்ச்சி தொடர்பான துறைகள் பொருத்தமாக இருக்கும். சில மாணவர்கள் கணக்கு பாடத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களும் அத்துறை சார்ந்து உயர்கல்வி அமையப் பெறலாம். அதேநேரத்தில் மாணவர்களின் திறமையும், ஆர்வமும், அத்துறையின் வளர்ச்சி விகிதம், வேலைவாய்ப்புகள் போன்ற எதிர்கால காரணிகளைத் தொடர்புபடுத்தி மாணவர்களின் ஆர்வம் சரியானதா? அவர்கள் தேர்வு செய்யவிருக்கும் துறைசரியானதா? இவற்றையெல்லாம் ஆய்வு செய்து மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டப்படுகிறார்கள்.

    உளவியல் தேர்வு

    சில மாணவர்கள் வெளிப்படையாக இது பிடிக்கும், இது பிடிக்காது என்று அவர்கள் தனது முடிவில் தெளிவாக இருப்பார்கள். ஒரு சிலர் அவர்களாக எதையும் தேர்வு செய்துகொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு உளவியல் தேர்வு, அதாவது ஆழ்மனதில் உள்ள திறமைகளை Psychometric Test என்பது உளவியல் தேர்வின் மூலமூம், Personal  Counselling எனப்படும் நேரடி கலந்தாய்வின் மூலமும் கல்வி ஆலோசகர் ஆய்வு செய்து மாணவர்களின் திறன், ஆர்வம் அடிப்படையில் உயர்கல்வி வழிகாட்டுதல் வழங்கப்படுகின்றது.

    பெற்றோர்கள் மாணவர்களின் கல்விக்கு செய்யும் தொகையினை ஒரு செலவாக கருதாமல் அதனை ஒரு மூலதனமாக நினைத்து சரியான முறையில், தமது குழந்தையின் வருங்காலத்தில் இந்த நாட்டின் நிர்வாகம் செய்யும் வல்லுனர்களாக வருவார்கள் என்பதில் உறுதியான செய்ய வேண்டும்.

    கல்வி ஆலோசகராகிய எனக்கு ஆண்டுதோறும் உயர்கல்வியினைத் தேர்வு செய்வதில் சில ஆண்டுகள் காலத்தையும், பொருட் செலவையும் வீண்செய்து பின்னாளில் தமது குழந்தைகளை நல்ல நிலைக்கு வர உளவியல் தேர்வின் மூலம் அறிந்து சரியான உயர்கல்வி மூலம் நல்லதொரு வாழ்வை அமைப்பதற்கு வழிகாட்டிய வெற்றிக்கதைகள் அதிகம்.

    தங்களது குழந்தையிடம் சரியான உயர்கல்வி தேர்வினை தேர்வு செய்ய உளவியல் தேர்வினை மேற்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய அன்பான வேண்டுகோள்.

    கல்லூரிகளின் தரம், வேலைவாய்ப்பு நிலைகள், எந்த துறை அதிக வளர்ச்சி கொண்டுள்ளது போன்ற அறிய தகவல்களை மத்திய மாற்றும் மாநில அரசிடம் இருந்து நேரடி தொடர்பு கொண்டு மாணவர்களின் சரியான ஒரு உயர்கல்விக்கு வழிகாட்டுவது எங்களின் சிறப்பான சேவையென்று கருதுகிறோம்.

    மேலும் விவரங்களை பெற 96553 21216 என்ற எண்ணிலோ அல்லது selvaec@gmail.com மின்னஞ்சல் முகவரியிலோ, இரவு 8 மணி முதல் 9 மணி வரை 94444 34118 என்றஎண் மூலமாக பெறலாம்.

    இந்த இதழை மேலும்

    எதிர் வரும் காலம் வேளாண்மைப் படிப்புக்கு ஏற்ற காலம்

    வேளாண்மை இந்திய பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 58 சதவிகிதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்தத் துறை கணிசமான வளர்ச்சியில் இல்லை. உண்மையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), அதன் பங்களிப்பு என்பது மிகவும் குறைந்துள்ளது. எனவே மாணவர்கள் இதை பெரிதும் பயன்படுத்த வேண்டிய காலகட்டம் இது.

    டாக்டர் டி.எஸ். கோத்தாரி 1960ல், யு.ஜி.சி. தலைவராக இருந்தபோது, ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது ஒரு விவசாய பல்கலைக்கழகம் வேண்டும் என்று முன்மொழிந்தார். இப்போது மாநில மற்றும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் 50க்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன.

    வேளாண்மைப் பட்டப்படிப்பு நான்காண்டு படிப்பாக இந்தியாவில் அனைத்து வேளாண்மைப் பல்கலைக்கழகங்களிலும் பாடமாக உள்ளது. இளநிலை வேளாண்மைப் படிப்பு பல்வேறு விவசாய துறைகளின் பாடங்களை உள்ளடக்கியதாக உள்ளது. உழவியல், மண்ணியல், பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு, தாவர மரபியல் மற்றும் பயிர் இனப்பெருக்கம், உயிரியல் தொழில் நுட்பம், தோட்டக்கலை, வேளாண்மைப் பொருளாதாரம், விரிவாக்கம் போன்றபல்வேறு துறைகளில் இளநிலை வேளாண்மைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதால், இவர்கள் வேளாண்மைப் படிப்பு முடித்தவுடன், வங்கிப் பணிகளில் பெரும்பாலானவர்கள் திறம்பட பணியாற்றி வருகின்றனர்.

    வேளாண்மைப் பாடத்திட்டத்தில் உள்ள இந்திய விவசாயம், பொருளாதாரம், கிராமப்புறமேம்பாட்டுப் பிரிவுகள் இந்திய ஆட்சிப்பணி எழுத்துத் தேர்வுக்கு மிகவும் உதவியாக உள்ளதால் நிறைய மாணவர்கள் இந்திய ஆட்சி தேர்வில் வெற்றி பெறுகின்றனர்.

    தற்போதைய உலகமயமாக்கப்பட்ட பொருளாதார சூழ்நிலையில் பன்னாட்டு நிறுவனங்களான, மான்சான்டோ, சின்ஜன்டா போன்ற நிறுவனங்கள் தரமான விதை, பூச்சி மருந்துகள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு நிறைய வேளாண்மைப் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதால் வேளாண்மைப் படிப்புக்கு உள்ள கிராக்கி அதிகரித்துக் கொண்டுள்ளது.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வேளாண்மைக் கல்லூரிகள் உள்ளன.மேலும் தனியார் வேளாண்மைக் கல்லூரிகளும் வேளாண்மைப் பட்டப்படிப்பு பிரிவுகளை நடத்துகின்றன.இது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பட்டத்தை வழங்குகின்றது.

    சென்ற ஆண்டு B.sc. (Ag.) அரசாங்க கல்லூரிகளில் BC பிரிவில் 194.0 (Cut off mark) தனியார் கல்லூரிகளில் 190.0 (Cut off mark)ஆக இருந்தது. இந்த வருடமும் அதே நிலையில் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து விவசாயம் சார்ந்த பட்டப்படிப்புகள் 2500  3000 இடங்கள் மட்டுமே இருப்பதால் போட்டிகள் அதிகமாகத்தான் இருக்கும்.

    தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் B.Sc.பாடப்பிரிவில் B.Sc. (Ag.) விவசாயம், B.Sc.காடுகள், B.Sc.தோட்டக்கலை, B.Sc.பட்டுப்பூச்சி வளர்ப்பு, B.Tech.பாடப்பிரிவில் உயிரியல் தொழில்நுட்பம், உயிரியல் தகவல் தொழில்நுட்பம், வேளாண் மேலாண்மை, வேளாண் தகவலியல், BE. (Ag.) பொறியியல், B.Tech.எனர்ஜி சுற்றுச்சூழல் பொறியியல், B.Tech.உணவுப்பதப்படுத்தல் போன்றபாடப்பிரிவுகள் உள்ளன.

    Agricultural  Science Programs

    1. B.Sc. (Agriculture)
    2. B.Sc. (Horticulture)
    3. B.Sc. (Forestry)
    4. B.Sc.. (Home Science)
    5. B.Tech. (Agricultural Engineering)
    6. B.Sc.. (Sericulture)

    Agricultural  Technology  Programs

    1. B.Tech. (Food Process Engineering)
    2. B.Tech. (Biotechnology)
    3. B.Tech. (Horticulture)
    4. B.Tech. (Energy and Environmental Engineering )
    5. B.Tech. (Bioinformatics)
    6. B.S(AgribusinessManagement)
    7. B.Tech. (Agricultural Information Technology)

    Visit: www.tnau.ac.in

    இந்த இதழை மேலும்

    முறையான உழைப்பு நிறைவான வெற்றி வெற்றி உங்கள் கையில் – 17

    நான் கஷ்டப்பட்டு படிக்கிறேன். என்னால் சிறந்த வெற்றியைப் பெறமுடியவில்லை”.

    “நாள் முழுவதும் நான் உழைக்கிறேன். என்னால் பணக்காரனாகி வாழ்க்கையில் வெற்றிபெறஇயலவில்லை”.

    “தினந்தோறும் கடினமாக உழைத்தாலும், என்னால் உயர்ந்த நிலைக்கு வரவே முடியவில்லை”

    இப்படி “வருத்தத்தின் வாசலில்” நின்றுகொண்டு, வாழ்க்கையைத் தொலைக்கின்றவர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகி வருகிறது.

    “உழைப்புக்கு ஏற்றஊதியம் கிடைக்கும்” என்றுதான் எல்லோரும் பலரும் நம்பிக்கையோடு நாட்களை நகர்த்துகிறோம். ஆனால் அந்த நம்பிக்கை சிலருடைய வாழ்க்கையில் கேள்விக்குறியாகிவிடுகிறது.

    இதற்குக் காரணம் என்ன?

    “வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும்” என்ற எண்ணத்தோடு கடினமாக உழைப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போவதற்குக் காரணம் அவர்கள் தங்களது வாழ்க்கையில் மேற்கொண்ட முரண்பாடான அணுகுமுறைகள்தான்.

    “பெரிய பணக்காரராக வேண்டும்” என்று ஆசைப்படுபவர்களில் சிலர் கடினமாக உழைத்தாலும்கூட, சரியான முறையில் உழைக்கும் முறையைப் புரிந்து கொள்ளாததானால் தான், அவர்களது “எதிர்காலத் திட்டங்கள்” நிறைவேறாமல் போய்விடுகிறது.

    இன்று உழைக்காமலேயே வாழ்க்கையில் வெற்றி பெற சிலர் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இதற்கு “முல்லாவின் கதை” உதாரணமாக அமைகிறது.

    ஒருமுறை முல்லா ஒரு ஊருக்கு வந்தார். அங்குள்ள மக்களிடம் ஒரு தகவலைத் தெரிவித்தார்.

    “வாழ்க்கையில் எந்த சிந்தனையும் இல்லாமல், எந்த வேலையும் இல்லாமல், எந்தவித உழைப்பும் இல்லாமல் பெரிய பணக்காரராக மாறவிரும்புபவர்கள் இந்த ஊரில் யாராவது இருக்கிறீர்களா? இருந்தால், நீங்கள் என்னிடம் உடனே வந்து ஆலோசனை பெறலாம்” என்று ஊர்மக்களிடம் தெரிவித்தார் முல்லா.

    முல்லாவின் அறிவிப்பு அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. எந்த உழைப்பும் இல்லாமல் பணக்காரராக மாறும் ரகசியத்தை தெரிந்துகொள்ள அனைவரும் விரும்பினார்கள். முல்லா குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தில் ஏராளமானபேர் வந்து குவிந்தார்கள். பெரும் கூட்டத்தைப் பார்த்து முல்லா திடுக்கிட்டுப் போனார். பின்பு அந்த கூட்டத்தினரிடம் எதுவும் பேசாமல் வேறு திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார் முல்லா.

    கூட்டமாக கூடிநின்ற மக்கள் முல்லாவைப் பார்த்து கோபப்பட்டார்கள். “எந்த உழைப்பும் இல்லாமல் பணக்காரராக மாறுவது எப்படி?” என்பதை எங்களுக்குச் சொல்லுவதாகச் சொல்லிவிட்டு இப்போது நீர் எங்கே செல்கிறீர்? உம்மை நாங்கள் போகவிடமாட்டோம்” என்றுகூறி அவரைத் தடுத்தார்கள்.

    முல்லா அவர்களைப் பார்த்து பலமாகச் சிரித்தார்.

    “உழைப்பே இல்லாமல் ஊதாரித்தனமாக இந்த ஊரில் இருப்பவர்கள் எத்தனை பேர்? என்று தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். உழைக்காமல் வெற்றிபெற நினைப்பது முட்டாள்தனமான செயலாகும் என்பதை இந்த ஊரில் உள்ளவர்களுக்கு சொல்ல நினைத்தேன். அதற்காகத்தான் உங்களை ஒரு இடத்தில் கூடும்படி அழைத்தேன். உழைக்காமல் வாழ்க்கையில் வெற்றி கிடைக்காது. நீங்கள் போய்வாருங்கள் என்று சொல்லிவிட்டு முல்லா தனது ஊரைநோக்கி புறப்பட்டுச் சென்றார்.

    முல்லாவின் கதை வேடிக்கையாகத் தோன்றினாலும், அது “உழைத்தால்தான் வெற்றி பெறமுடியும்” என்பதை அந்த நிகழ்வு தெளிவாக்குகிறது.

    கடினமாக உழைத்தாலும், அந்த உழைப்பு சரியான முறையில் முறைப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் அந்த உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிக்க முடியும்.

    ஒருமுறை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் ஒருவர் வந்து அறிவுரை கேட்டார்.

    “இந்தக் காலத்து இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் தகுந்த அறிவுரை சொல்லுங்கள்” என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு ஜவஹர்லால் நேரு தெளிவாகப் பதில் தந்தார்.

    “நான் இந்த இளைஞர்களுக்கு 3 அறிவுரைகளைத் தர விரும்புகிறேன். முதல் அறிவுரை “நன்றாகப் படிக்க வேண்டும்”. இரண்டாவது அறிவுரை “நன்றாகப் படிக்க வேண்டும்”. மூன்றாவது அறிவுரை “நன்றாகப் படிக்க வேண்டும்”. இந்த மூன்றும்தான் இளைஞர்களுக்கான எனது அறிவுரை என்றார் ஜவஹர்லால் நேரு.

    “இளமைக்காலத்தில் நன்றாகப் படித்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும்” என்பது ஜவஹர்லால் நேருவின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

    இளமைக்காலத்தில் உழைப்பு என்பது படிக்கின்ற பாடங்களை தெளிவாகவும், துல்லியமாகவும் படிப்பதைதான் குறிக்கும். படிக்கவேண்டிய பாடங்களை முறைப்படி படிக்கக் கற்றுக்கொண்டவர்கள் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள்.

    காட்டிலுள்ள மரங்களை வெட்டி, அந்த விறகுகளை விற்று அதன்மூலம் கிடைக்கின்ற பணத்தை வைத்து அதன்மூலம் வாழ்ந்துகொண்டிருந்தார்கள் இரண்டு விறகு வெட்டிகள்.

    அதில் ஒருவர் முதல் நாள்; 8 மணி நேரம் உழைத்தார்.100 கிலோ மரங்களை வெட்டினார்.இரண்டாம் நாள் அதேபோல் 8 மணிநேரம் உழைத்த பின்பும் அவரால் 90 கிலோ மரங்களைத்தான் வெட்ட முடிந்தது. மூன்றாம் நாள் 8 மணி நேர உழைப்பில் அவரால் 75 கிலோ அளவுக்குத்தான் மரங்களை வெட்ட முடிந்தது. நாளுக்குநாள் அவரது உழைப்பின் திறன் குறைந்தது.

    ஆனால், அதேவேளையில் இன்னொரு விறகு வெட்டி முதள்நாள் 8 மணி நேரத்தில் 100 கிலோ மரங்களை வெட்டினார். இரண்டாவது நாள் 110 கிலோ மரங்களை அவரால் வெட்ட முடிந்தது. மூன்றாம் நாளில் 120 கிலோ எடை அளவுக்கு விறகுகளை வெட்டினார்.

    விறகு வெட்டும் தொழில் செய்யும் அந்த இருவரும் ஒரே வயதுடையவர்களாக இருந்தாலும், அவர்களது உழைக்கும் திறனில் மாற்றம் இருப்பதைக் கவனித்தார் ஒருவர்.

    முதலாம் விறகு வெட்டியிடம் சென்று, “நீங்கள் இரண்டுபேரும் ஒரே மாதிரிதான் வேலை செய்கிறீர்கள். ஆனால் உம்மைவிட உமது நண்பர் அதிகமாக விறகுகளை வெட்டுகிறாரே” அது ஏன்?” என்று கேட்டார்.

    விறகு வெட்டிக்கு காரணம் புரியவில்லை. “இது ஏன் என்றே எனக்குப் புரியவில்லை. என்னால் முடிந்த மட்டும் உழைக்கிறேன். அவரைவிட என்னால் அதிகமாக விறகுகளை வெட்ட முடியவில்லை. இது என் தலைவிதி” என்றார்.

    இதே கேள்வியை அடுத்த விறகு வெட்டியிடம் அந்த நபர் கேட்டார்.

    “நான் விறகு வெட்டும்போது தொடர்ந்து விறகுகளை வெட்டுவதில்லை. இடையிடையே ஓய்வெடுத்துக் கொள்கிறேன். அந்த ஓய்வு நேரத்தில் எனது கோடரியை நான் கூர்மையாகத் தீட்டுவதற்கு நேரத்தை செலவு செய்கிறேன். அடிக்கடி தீட்டப்பட்ட கோடரியைக் கொண்டு வேலை செய்வதால் மரம் வெட்டும் வேலை எனக்கு எளிதாகப் போய்விடுகிறது. மிக அதிக அளவு மரத்தை என்னால் வெட்ட முடிகிறது” என்று சொன்னார்.

    “இந்த விறகு வெட்டிகளின் வாழ்க்கை இன்றைய இளைஞர்களுக்குப் பாடமாக அமைய வேண்டும். இருவரும் ஒரே அளவில் உழைத்தாலும், ‘முறைப்படுத்தப்பட்ட உழைப்பு’ என்பதுதான் வெற்றியைத் தருகிறது” என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    உழைக்கும்போதே ஓய்வெடுக்கவும், அவ்வப்போது கோடரியைத் தீட்டவும் அந்த விறகு வெட்டி முயற்சி செய்ததைப்போல, பாடங்களைப் படிக்கும்போதும் முறைப்படி அறிவை வளர்க்கும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

    வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் படித்து தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது சிறந்த உழைப்பைக் குறிக்கும். ஆனால், அதேவேளையில் பாடப் புத்தகங்களோடு பொதுஅறிவை வளர்க்கும் புத்தகங்களையும், வாழ்க்கைக்குத் தேவையான தன்னம்பிக்கையை வளர்க்கும் இதழ்களையும், நூல்களையும் முறைப்படி படித்து, கோடரியைத் தீட்டுவதைப்போல அறிவை தீட்டுவதிலும் அக்கறை கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எளிதாக மாறும்.

    “நாள் முழுவதும் படித்த பின்பும் என்னால் அதிக மதிப்பெண்கள் பெறமுடியவில்லையே” என்று வருத்தப்படுபவர்கள், படிக்கும் வழக்கத்தை முறைப்படுத்தவும், நினைவாற்றலை நெறிப்படுத்தவும் பழகிக்கொள்ள வேண்டும். தேவையான அளவுக்கு ஓய்வெடுக்கவும், அந்த ஓய்வு நேரத்திலும் அறிவினை அகலப்படுத்தவும், சிந்தனையை ஆழப்படுத்தவும் பழகிக்கொள்பவர்கள் மட்டுமே வெற்றியை எளிதில் பெற்று விடுகிறார்கள்.

    இந்த இதழை மேலும்

    ஈகோ என்கிற அகம்பாவம்

    ஈகோ என்பது என்ன?

    தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின் ஒட்டுமொத்த வெளிப்பாடாகும். மனிதனுக்கு பணம், பதவி, அழகு, செல்வாக்கு கூடும் பொழுது, அதே நேரத்தில் படிப்படியாக மமதை, ஆணவம், செருக்கு, திமிர், கர்வம் சிலருக்கு கூடி விடுகிறது.

    கடவுள் நம்மை விட்டு வெளியேறுவது என்பதன் சுருக்கம் தான் (Ending God out) ஈகோ என்பர். நமது பலவீனத்தை, தவறையாராவது சுட்டிக்காட்டினால் ஈகோ விழித்துக் கொள்கிறது. மோதல் ஏற்படுகிறது.

    ஈகோ மனிதர்களின் அடையாளம்:

    நம்மிடம் வணக்கத்தை கட்டாயம் எதிர்பார்ப்பர், நன்கு தெரிந்தவர் என்றாலும், கண்டும் காணாதது போல நடப்பர். அதிகம் பேச மாட்டார். தம் இனத்துடன் மட்டும் பழகுவர். தம்மை நாடியே பிறர் வர வேண்டும் என்று இருப்பர். தன்னை விட மற்றவருக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என எதிர்பார்ப்பர். தான் மட்டும் தான் சிறந்தவர் என நம்புவர். ஈரமும், இரக்கக் குணமும் அற்றதன்மை பேச்சில் வெளிப்படும். மற்றவர் தன்னை மதிக்க வேண்டும், புகழ வேண்டும் என்பதில் தீராத ஆசை கொள்வர், தன்னை முந்தி செல்வோர் மீது பொறாமைபடுவர். தன் சுயநலத்திற்காக பிறரை சுரண்டுவர்.

    தன்னைவிட குறைந்த படிப்பு, பதவி, அந்தஸ்து உள்ளவர்களிடம் அதிகம் பேச மாட்டார்கள். தவறு செய்தால் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். தன்னை சாதாரண மனிதர்களாய் நினைத்து கொள்வதே கனவிலும் கற்பனை செய்து பார்க்க முடியாத காரியமாகும். பிறர் தன்னை மிகவும் குறைவாக மதிப்பிடுவார்கள் என்றநினைப்பில் தங்களை பெரிய ஆளாக காண்பிப்பதற்கு முயல்வர்.

    எல்லா புனிதமான தோற்றத்திற்கு மறுபுறம் இன்னொரு மோசமான குரூரமான முகமிருக்கும். தகவல் தொடர்பு சரியான முறையில் இருக்காது. தெரியாதததைக் கேட்டு தெரிந்துகொள்ள தயங்குவர். அதிக  முக்கியத்துவம் யாருக்கு கொடுக்கப்படுகிறது என்பதில் தீவிரமாக இருப்பர். ஈகோ பிரச்சினையால் பல விஷயங்களில் முரண்டு பிடிப்பது. முட்டுக்கட்டை போட்டு இழுத்தடிப்பது இவர்களது வழக்கமாக இருக்கும்.

    ஈகோ மனிதர்களை சமாளிப்பது எப்படி?

    நமது வாழ்க்கைத் துணையோ, நமது அதிகாரியோ, நண்பர்களோ உறவினர்களோ ஈகோ குணம் உடையவர்களாக இருந்து விட்டால் இவர்களிடம் சற்று விலகியே வாழ வேண்டும். இவர்களுக்கு எதிராக நாம் செயல்பட்டால் அது அவர்களின் ஈகோவைக் கூட்டிவிடும். முடிவில்லாத தொல்லைகள், மனஉளைச்சல் ஏற்படும்.

    யார் பெரியவர் என்றசிக்கலுக்கு என்னதான் வழி? சிலர் இவர்களை விட்டு விலகி சென்று விடுகிறார்கள். இத்தகைய சூழல் அவர்களைக் காட்டிலும் மிகத் திறமையாக கையாண்டு சமாளிக்கிறவர்களும் உண்டு. சகித்துக் கொண்டு வேறு வழியின்றி அடிமையாக வாழ்க்கையை ஓட்டுகிறவர்களும் உண்டு.

    இறைவனது படைப்பில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் எவருமில்லை? அவரவர் திறமைக்கேற்ப வாழ்வில் உயரத்தை எட்டுகிறார்கள். வளர்ச்சி பெறுகிறார்கள். எல்லோரும் ஒரே மட்டத்தில் சம அந்தஸ்தில் இருக்க முடியாது.

    ஈகோ குணம் படைத்தவர்களை சமாளிப்பது மிகக் கடினம் தான். நமது ஒவ்வொரு நாள் அலுவலையும் நரகமாக்கி விடுவார்கள். நம்மைத் தீவிரமாக கண்காணிப்பார்கள். குறைச்சலாக பேசுவார்கள். மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். தங்கள் பணிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது. மனதில் வலியை உண்டாக்கும் நிகழ்வுகள் தொடர்கதை ஆகும். விலகிச் செல்லவும் முடியாது. அவஸ்தை பட நேரிடும். பாதிப்பின் தாக்கத்தால், எதிலும் கவனம் செலுத்த இயலாது. இவர்களை விட்டு விலகினால்தான் அமைதி திரும்பும்.

    ஈகோ மோதல்களும் விளைவுகளும்:

    மது அருந்துபவர் மதுவுடன் சோடாவை அல்லது தண்ணீரை கலந்துதான் அருந்துகிறார்கள். போதைக்கு காரணம் மதுவா? சோடாவா? எதற்கு முக்கியத்துவம் என்பதுதான் சிக்கலின் ஆரம்பம். கூட்டு முயற்சியால் தொடர்ந்து வெற்றியும், வரவேற்பும் பெற்றபலர் திடீரென ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பிரிந்த பின்னர் இருவருக்குமே பெரும் பாதிப்பு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் துறையே விட்டே ஒதுங்கும் நிலை பலரது வாழ்வில் ஏற்பட்டு உள்ளது. அரசியல், சினிமா, அலுவலகம், தொழில், கிரிக்கெட், உள்ளிட்ட பல துறைகளில் கூட்டு முயற்சியும் பங்களிப்புமே வெற்றிக்கு காரணமாக உள்ளது. கௌரவப்போட்டி பலரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. உரிய மரியாதை வழங்காததால் தொடர்ந்து பின்னுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால் புறந்தள்ளப்பட்டவர்கள் பலர்.

    இரண்டு ஆசிரியர்களுக்கு இடையே ஈகோ மோதல் ஏற்பட்டால் அது பல மாணவர்களின் கல்வியைப் பாதிக்கிறது. கணவன் மனைவி இடையே ஈகோ தகராறு ஏற்பட்டு வாழ்வில் விரிசல் விழுந்தால் பிள்ளைகளைப் பெரிதும் பாதிக்கிறது.

    ஈகோ மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது. பிறந்த வீட்டில் மாப்பிள்ளைகளில் யாருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என சகோதரிகள் யுத்தம் செய்கின்றனர். நண்பர்கள் ஈகோ மோதலால் பிரிந்தால் அவர்கள் செய்த பல நன்மைகள் மறந்து விடும். சில தீமைகள் மட்டும் பெரிதாகத் தெரியும். பிரிந்த உறவுகள் மீண்டும் இணைந்திட ஈகோ தடுக்கிறது. இதனால் பாதகங்களை சந்திக்க நேரிடுகிறது. அவல  நிலைக்கு தள்ளி விடுகிறது. அரிதான வாய்ப்புகள் வீணடிக்கப்படுகிறது.

    ஈகோ பிரச்சினையால், வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள் பலருண்டு. எல்லோரும் உயிரோடு இருந்தும் எந்த உறவும் இல்லாமல் அநாதையாக அவஸ்தைபடுபவர்கள் பலர். ஈகோவால் காதல், உறவு, நட்பு எல்லாம் நொறுங்கிப் போகிறது. அதிகமான குடும்ப உறவுக்கு ஈகோ தான் வேட்டு வைக்கிறது. வாழ்வில் வெற்றிக் கொடி நாட்டி முன்னணியில் இருந்தவர்கள் தடாலென சரிந்து விழுந்து சகதியில் புரண்டெதெல்லாம் ஈகோ என்கிற உயிர்கொல்லியால்தான். ஈகோவால் முகவரி இழந்து காணாமல் போனவர்கள் ஏராளம்.

    உலக அளவில் இந்தியா சில துறைகளில் தலை நிமிரக் காரணமாக இருந்தவர்கள் கூட ஈகோ மனிதர்களால் அவமானங்களையும், வேதனைகளையும் சந்தித்து இருக்கிறார்கள். உறவுகளை அழிப்பதற்கு, பாழ்படுத்துவதற்கு, நாசம் செய்வதற்கு ஈகோ என்கிற ஒன்று மட்டும் போதுமானது.

    அதிகப்படியான ஈகோ நமது திறமைகளை கொன்றுவிடுகிறது. உறவுகள் இயற்கையாய் இறப்பதில்லை. ஈகோவால் படுகொலை செய்யப்படுகிறது. ஈகோதான் மனிதனின் மிகவும் மோசமான எதிரியாகும்.

    நம்முள் இருக்கும் ஈகோ என்கிறமிகப்பெரிய ஆயுதம் நம்மையே கீழே தள்ள நம்மாலேயே பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் உச்சக்கட்ட சோகம். தொழில் பங்குதாரர்களின் ஈகோ மோதல் வியாபாரத்தில் நஷ்டத்தை தருகிறது.

    ஈகோ அற்றவர்களின் இயல்புகள்:

    ஈகோ இல்லாத மனிதர்கள் பதவி கிடைத்து விட்டது என்று அதிகப்படியான அதிகாரம் செய்ய மாட்டார்கள். பதவி நிலையானது அல்ல என்பது அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும். அழகு கூடுகிறது என கர்வம் கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு தெரியும். ஒருநாள் உடல் அழகு மங்கப்போகிறது என்று. பணக்காரர் ஆனாலும் பகட்டாக இருப்பதில்லை. பணத்தின் மதிப்பு குறைந்து கொண்டே போகிறது என்பதை நன்கு உணர்ந்தவர்கள். அந்தஸ்து வந்தாலும், உடன்பிறந்தவர்களை முற்றிலுமாக பிரிந்துவிட மாட்டார்கள். நட்பு கசந்து விடாமல், திருமண வாழ்க்கை சரிந்து விடாமல் கவனமாக நடந்து கொள்வார்கள்.

    விட்டுக் கொடுப்பதால் குறைந்து போவதில்லை என்பதை உணர்ந்தவர்கள். நல்லது, கெட்டதை ஒதுக்கி வைக்காமல் முக்கிய குடும்ப நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்பவர்கள். தானாக முன்வந்து, தவறுக்கு வருத்தம் தெரிவிப்பார்கள். கணவன் மனைவிக்குள் சிறு சண்டை என்றால் ஈகோ  பார்க்காமல் சரணடைந்து விடுவர். தாங்களே பேசித் தீர்த்துக் கொள்வார்கள். நடுவில் யாரையும் நுழைய விட்டால் சிறிய பிரச்சனை பூதாகரமாக வெடிக்க வாய்ப்புண்டு என்பதை நன்கு உணர்ந்தவர்கள். எரிகிறநெருப்பில் எண்ணெய் ஊற்றாமல் தண்ணீரை ஊற்றி அணைப்பவர்கள் இவர்கள்.

    பல நாடுகளை கைப்பற்றிய மன்னாதிமன்னர்களானலும் நோயுற்றபோது அவர்களது உயிரை மருத்துவர்களால் காப்பாற்றமுடியவில்லை. கோடி கோடியாய் குவிந்தவர்கள் ஒரு குன்றிமணிக்கூட தன்னுடன் எடுத்துச் செல்ல இயலாது. பூமிக்கு வரும் போது ஒன்றும் கொண்டு வரவில்லை. போகும் போது ஒன்றும் எடுத்து செல்வதில்லை.

    பக்குவப்பட்ட மிகப்பெரிய மாமனிதர்கள் தன் மீதான தவறு சுட்டிக்காட்டப்படும் போது கொந்தளிப்பதில்லை. திருத்திக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள். தம்மை விட்டு சுற்றத்தார், தோழர்கள், பாசமானவர்கள், நம் மேல் அக்கறைகொண்டு உள்ளவர்களிடம் இருந்து பிரிந்து தனித்தீவாக இருக்க விரும்புவதில்லை. ஈகோ வாழ்வை நிர்மூலமாக்கிவிடும் என்பதை நன்கு உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள். உயர்நிலைக்கு சென்றபின்பும் சாதாரணப் பணிகளைத் தயங்காமல் மேற்கொள்வர். மிகப்பெரிய சாதனை படைத்த மாமனிதர்கள் பேருந்தில், சைக்கிளில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பயணிக்கிறார்கள். மகாத்மா காந்தியடிகள் ரயிலில் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் மேற்கொண்டார். தொழில் அதிபர் ரத்தன் டாட்டா தனது கோப்புகளை தானே கை நிறைய எடுத்துக் கொண்டு லிப்டில், தனது அறைக்கு செல்லத் தயங்குவதில்லை.

    ஈகோவை விட்டுவிட்டால் வாழ்வு லேசாகி விடும் என்பதை உணர்ந்தவர்கள். வானம், பூமி, ஆறு, கடல், மலை எல்லாம் இறைவன் தந்தது. நாம் உருவாக்கியது அல்ல. நமது சக்தி, பலம், முயற்சி நமக்கு செல்வத்தை தந்து இருக்கலாம். ஞாபகமிருக்கட்டும்.நமது திறமைகள் கடவுளால் நமக்குத் தரப்பட்ட கொடை.

    மனிதனின் அறிவாற்றல் அதிகரிக்கும் போது ஈகோ குறைந்து விடுகிறது. அறிவாற்றல் குறைந்தவர்களிடம் ஈகோ அதிகரிக்கிறது.

    இந்த இதழை மேலும்

    குடும்ப நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பை யாருக்கு தருவது

    இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து

    அதனை அவன்கண் விடல்

     -குறள்

    மனிதனுக்கு வெளியே என்ன மாதிரியான உருவம் இருக்கிறது என்பது முக்கியம் அல்ல. மூத்தவனா? இளையவனா? என்பது முக்கியம் அல்ல. அவனுக்குள் என்ன இருக்கிறது என்பது தான் அவனை உயர்ந்த இடத்திற்கு இட்டுச் செல்லும். ஏனெனில் எல்லாம் மனிதருக்குள்ளும் சாதிப்பதற்கான திறன் இருக்கிறது. எல்லாம் மனிதருக்குள்ளும்  பெரிய சாதனைக்கான  விதை இருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளும் எழுதப்படாத சுயசரிதை ஒன்று இருக்கிறது.

    உறவுகளை ஒப்பந்தங்களின் மூலம் உருவாக்க முடியாது.  புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே உருவாக்க முடியும்.

    அடுத்தவருக்கு உதவி செய்பவராக இருக்க முடியாவிட்டால் பரவாயில்லை. தொந்தரவு தராதவராக ஆறுதல் அளிப்பவராக இருந்தாலே போதும்.

    “அடுத்தவரின் குற்றங்களைப் பார்த்து, ஆராய்ந்து நிரூபிப்பதன் மூலம் நம் வாழ்க்கை சரியாகாது. அடுத்தவரின் குறைகளை கண்டறியப்பயன்படுத்தும் அறிவையும், நேரத்தையும் நம் வாழ்க்கையை சரிசெய்ய பயன்படுத்தலாம்” என்கிறார் மஹாத்ரயாரா.

    குடும்ப நிறுவனத்தின் மேலாண்மையின் பொறுப்பை யாருக்கு தருவது? என்பது இந்த கால சூழலுக்கு பொறுத்தமான கேள்வியாகும்.

    ஒருவர் மிக கடினமாக உழைத்து, அரும்பாடுபட்டு ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதற்கு கிளைகளையும் தோற்றுவித்து உயர்ந்த நிலைக்கு கொண்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்.

    அந்த தனிமனிதனின் கடின உழைப்பாலும், புத்திசாதுரியத்தினாலும் சாமார்த்தியத்தினாலும் நிர்வாக  திறமையின் காரணமாகவும், சரியான முடிவு எடுக்கும்  ஆளுமையின் காரணமாகவும் அந்த நிறுவனத்தை மற்றவர்கள் போற்றி வியந்து பார்க்கிறஅளவு புகழ்பெற்றநிறுவனமாக அதை உருவாக்குவார். அந்த நிறுவனத்தின்  அடித்தளமாக அவரது முயற்சியும், கழன உழைப்பும், தியாகமும், சகல ஆளுமை திறனும் அமையும். அந்த நிறுவனர் இருக்கும் காலம் வரை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நிறுவனம் நடக்கும். அவருக்கு மூன்று மகன்கள் வாரிசாக இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த நிறுவனரின் காலத்திற்கு பிறகு அந்த நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பை யார் ஏற்பது? என்பதில் தான் பிரச்சனை எழும். நமது கடந்த தலைமுறை கலாச்சாரத்தின்படி மூத்தவருக்கு முன்னுரிமை என்றவகையில் நிர்வாகப் பொறுப்பு முதல் மகனுக்கு தரப்பட்டு வந்தது. மூத்தவர் என்றமுறையில் நிர்வாகப் பொறுப்பு தரப்பட்டு அவர் திறமை இல்லாதவராக இருந்த காரணத்தினால்  பல நிறுவனங்கள் நொடிந்து போனதைப் பார்த்திருக்கிறொம்.

    இரண்டாவது மகனுக்கோ அல்லது மூன்றாவது மகனுக்கோ பொறுப்பை தருவதால் குடும்பத்தில் பிரச்சனை உருவாகின்றன. குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக இன்னும் பிரச்சனைகள் அதிகமாகின்றன. குடும்பத்தினுடைய கட்டுகோப்பு குலைகின்றன. ஒற்றுமை சிதைகின்றது. மனவருத்தங்களும், மனகசப்புக்களும், மனக்காயங்களும் அந்த ஒட்டுமொத்த குடும்பத்தை உலுக்கி எடுக்கிறது.

    இதோடு மட்டுமல்லாமல் அந்த மகன்களின் மனைவிகளும்  இந்தப் பிரச்சனையில் கலக்கும் போது குடும்பத்தில் பூகம்பமே வெடிக்கிறது. சந்தேகப் பார்வைகள் படர ஆரம்பிக்கிறது. வருமானத்தில் கணக்கு கேட்க ஆரம்பிக்கிறார்கள். பல திசைகளிருந்து பல கேள்விக்கனைகள் வீசப்படுகின்றன. இந்த குழப்ப நிலையில் நிர்வாகம் செயலிழந்து போகிறது. அந்த நிறுவனம் தள்ளாட ஆரம்பிக்கிறது. அதன் உற்பத்தி திறன் மெல்ல மெல்ல குறைகிறது. பேரும் புகழும் மங்குகிறது. பணியாளர்களுக்குள் கோஷ்டி பூசல் உண்டாகிறது. திறமையான அலுவலர்கள் வெளியேறும் சூழல் உருவாகிறது. ஆக நல்ல நிலையில் இருந்த ஒரு குடும்ப நிறுவனம் நிர்வாகப் பொறுப்புக்கு ஒரு சரியான பொறுத்தமான நிர்வாகத் திறனுள்ள  ஒருவரை தெரிவு செய்யாமல் விட்டதால்தான் இந்த குறைகள் வந்தன.

    இதை சரிசெய்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன

    1)         இதனை இதனால் இவன்முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன் கண்விடல் என்ற குறளுக்கேற்ப குடும்ப உறுப்பினர்களுள் நல்ல திறமைசாலி ஒருவரை தேர்ந்தெடுத்து அவர் பொறுப்பில் நிர்வாக மேலாண்மையை விடவேண்டும். வருமானத்தை சமமாக பங்குதாரர்கள் பங்கிட்டுக் கொள்ளும் வசதிகளையும், ஒப்பந்தங்களையும் ஏற்படுத்த வேண்டும். நிர்வாகத்தில் மற்றகுடும்ப உறுப்பினர்களுடைய தலையீட்டை முழுமையாக தடுக்க வேண்டும். அந்த நிறுவனத்தின் மேலாண்மை பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் குடும்ப நலன் கருதி, குடும்ப ஒற்றுமை கருதி  தன்னலம் இல்லாதவராக தன்னை சேவைக்கு அர்ப்பணித்து கொள்பவராக மாற்றிக் கொள்ள வேண்டும்.

    நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு தவறுசெய்ய மனம் போகாத வகையில்  கணிசமான தனிப்பட்ட ஊதியம் அவருக்கு  தரப்பட வேண்டும். குடும்ப இலாப பங்குத் தொகை நீங்கலாக இந்த ஊதியம் அவருக்கு அமைய வேண்டும். இது பற்றிய ஒப்பந்தங்கள் குடும்ப உறுப்பினர் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படியாக இருத்தல் வேண்டும். இந்தமுறை எதிர்பார்த்த பலனைத்தரும். நிர்வாகம் சீரடையும். அடுத்தவர்களின் தலையீடு இருக்காது. குழப்பங்கள் குறையும். தன் சொந்த நிறுவனம் என்பதால் அவர் உயிரைக் கொடுத்துப் பாடுபடுவார். உற்பத்தியையும், இலாபத்தையும் அதிகமாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார். இரவு பகல் பாராமல் உழைக்க முயற்சிப்பார். நிறுவனத்தின் வளர்ச்சியும், குடும்ப வளர்ச்சியும் இரு கோடுகளாக வளரும். துணை தொழில்களும் பெருகும். கிளை நிறுவனங்கள் தோன்றும். அடுத்து வரும் வாரிசுகள் இதே முறையை பின்பற்றவேண்டிய அவசியம் உண்டாகும். ஒரு புதிய வழக்க முறை உருவாகும். பலன் சில சமயங்களில் எதிர்பார்த்ததைவிட அதிகமாகும்.

    2)         குடும்ப உறுப்பினர்களின் நிர்வாக திறமையும், மேலாண்மை திறமையும் யாருக்குமே இல்லாத பட்சத்தில் இரண்டாவது வழியை பின்பற்றுதல் நலம்.

    நிறுவனத்தை நல்ல முறையில் நடத்த திறமைபடைத்த தொழில் அனுபவமும், தொழில் சார்ந்த ஆழ்ந்த அறிவும், நிர்வாக மேலாண்மையும், உயர்ந்த படிப்பும் கொண்ட  ஒருவரை (Professionals) தேர்ந்தெடுத்து அவரை  CEO-வாக அல்லது நிர்வாக இயக்குநராக நியமித்து முழுபொறுப்பையும் அவரிடம் தந்துவிடுவது. திறமைமிக்க வெளியாட்களை தேர்ந்தெடுத்து பொறுப்பினை தந்து விட வேண்டும். நிறுவனத்தினுடைய முழுபொறுப்பும் அவரை சார்ந்ததாகும். அவருக்கு ஒரு இலாபகுறியீடு தரப்பட வேண்டும். அவருக்கென்று கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரமும், அவருக்கு தரப்பட வேண்டும். பணியாளர்களை நியமிக்கும் அதிகாரமும் அவருக்கு தரப்பட வேண்டும். அவருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். இயக்குனர் கூட்டங்களில் அவர் கேள்விகளுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர். இலாபத் தொகையில் அவருக்கும் பங்கு இருத்தல் வேண்டும். அவருக்கு எல்லா வசதிகளும் தரப்பட வேண்டும். இந்த நிலை இருந்தால் அந்த நிறுவனம் வளர்ச்சி காணும். துணை நிறுவனங்கள் தொடங்குவதற்கு வழிவகுக்கும். கிளைகள் விரிவுபடுத்தப்படவும் வாய்ப்புகள் உண்டாகும். நிறுவனத்தில் ஆரோக்கியமான சூழல் உண்டாகும். கோஷ்டி பூசல்களுக்கு இடம் இல்லாமல் போகும். அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும், வெற்றியும், தோல்வியும் அந்த தனி நபர் திறமை பொறுத்து அமையும் என்பதில் சந்தேகமில்லை.

    பல பெரிய நிறுவனங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் இவ்வாறு வெளியாட்களை தொழில் சார்ந்த துறைநிபுணர்களை CEO-வாக நியமிக்கும் பழக்கம் இருந்து வருகிறது. அந்த நிறுவனங்கள் எல்லாம் மிகச்சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. தொழில்சார்ந்த துறைநிபுணர்களை CEO-வாக நியமிக்கும் போது அந்த நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களோடு போட்டியிட்டு வெற்றி பெறுகின்ற சூழ்நிலைகளையும் நாம் பார்க்கிறோம்.

    அவருக்கு கீழே இருக்கின்ற இரண்டாம் நிலை அலுவலர்களுக்கும், அந்த அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் நல்ல வழிகாட்டுதலும், பயிற்சியும், அனுபவமும் அவர்களுக்கு கிடைக்கிறது. பணியாளர்களின் நலன் பாதுகாக்கப்படுகிறது. நிறுவனம் வணிக ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் ஆரோக்கியமான வளர்ச்சியை  எட்டுகிறது. வியாபார சிக்கல்களையும், நிர்வாக சிக்கல்களும் அந்த அனுபவமிக்க  அரிய முறையில் சீராக்கப்படுகின்றன. இதனால் காலதாமதம் தவிர்க்கப்பட்டு உடனடியாக  முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மற்றநிறுவனங்களுடைய அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. நிறுவனங்களிடையே ஒரு ஆரோக்கியமான போட்டி உருவாகிறது. மூலப்பொருட்களின் விரையமும் தவிர்க்கப்படுகிறது. உற்பத்தி சதவீதம் அதிகமாகிறது. உற்பத்தியாகும் பொருட்களுடைய தரமும் உயர்கிறது. எல்லா துறைகளிலும் நிறுவனம் முன்னிலை வகிக்கும் சூழல் உருவாகிறது. ஆகவே தற்கால சூழலுக்கேற்ப Professional Managment தான் சிறந்தது என்றமுடிவு வரவேற்கப்படுகிறது.

    ஆக நிறுவனங்களுடைய மேலாண்மை பொறுப்பு காலம்காலமாக இருந்து வருகிற மூத்தவருக்கே முன்னுரிமை என்பதை மாற்றி தற்கால சூழலுக்கேற்ப தொழில்சார்ந்த துறைநிபுணர்களில் திறமையுள்ளவருக்கே முதலிடம் என்பது காலம் கற்றுத்தரும் பாடமாகும்.

    இந்த இதழை மேலும்

    இடைவெளியை புஜ்யமாக்குவோம்

    உடல் எடுத்து வந்ததே உழைப்பதற்குத் தான்.ஆனால் உழைக்காமலேயே பொருளீட்டும் ஆசை பரவலாகிவிட்டது. பொருளின்றி வாழ முடியாது; பொருள் என்பது வாழ்வின் அர்த்தம் என்று கூறலாம்.

    உழைப்பு என்பது எங்கே முடிகிறது என்று பார்த்தால் நம் தேவைகளை நிறைவு செய்வதிலே தான் முடிகிறது.

    பசியை நீக்க உணவுக்கான தானியங்களை விளைவிக்கும் விவசாயம்;

    தட்ப, வெப்ப நிலையிலிருந்து உடலைப் பாதுகாக்க உடைகளைத் தயார் செய்யும் நெசவுத் தொழில்;

    பிறஉயிர்களிடமிருந்து பாதுகாப்பாக வாழ்வதற்குத் தேவையான வசிப்பிடங்களைக் கட்டும் கட்டுமானத் தொழில்;

    இவைகளை அமைப்பதற்குத் தேவையான பொருட்களைத் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்தல், இயக்குதல், பழுது நீக்குதல்

    என்ற நான்குடன் அன்று வாழ்ந்தோர் வாழ்க்கை நிறைவடைந்தது.

    இன்று பொழுதுபோக்கு, ஆடம்பரம், அரசியல் என்றவகையில் ஏராளமான தொழில்கள் உண்டாகிவிட்டன.

    கலைகள் என்றவகையில் டி.வி., சினிமா, சொகுசு என்ற வகையில் வீடு, உடை, ஒப்பனை என இன்று கற்பனைக்கு எட்டாத வகையில் பொருட்களை உற்பத்தி செய்து அனுபவிக்கிறோம். சேவை என ஆரம்பிக்கப்பட்ட அரசியல் இன்று முதலீடில்லாத, மிகுந்த லாபம் தரும் தொழிலாகவே மாற்றப்பட்டுவிட்டது.

    வர்ணாசிரமம் என்ற வகையில் முன்பும் மக்களைத் தொழில் அடிப்படையில் பிரித்தனர்.

    ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் சத்திரியர்;

    அறிவை அறியச் செய்வோர் அந்தனர்;

    விளைந்த, உற்பத்தி செய்த பொருட்களை விற்போர் வைசியர்;

    மற்றதொழில் புரிந்தோர் அனைவரும் சூத்திரர்.

    இதில் சூத்திரர் பிரிவினர் மேற்கொண்ட அனைத்துத் தொழில்களுமே அத்தியாவசியமானவை.

    சூத்திரதாரி என்று ஒரு சொல் நாம் அறிவோம். இயக்குபவன் என்று பொருள் சொல்லலாம்.எனவே இவர்களே முதன்மை நிலையில் போற்றப்பட்டனர் அன்று. பாரம்பரிய முறையில் பெற்றோர் செய்த தொழிலை அவரது வாரிசுகளும் செய்தனர். அதை ஒப்புக்கொண்டு நிறைவாக, இன்பமாக வாழ்ந்தனர்.

    பரிணாம வளர்ச்சியில் கல்வி கற்கும் வாய்ப்பு வந்தபின் முன்பிருந்த குலத்தொழில் கலாச்சாரம் முடிவிற்கு வந்தது.

    கல்வி கற்று, அந்தத் தகுதியின் அடிப்படையில் பல பணிகள் பார்க்கும் வாய்ப்பு உருவானது.

    வாழ்வதற்கு பணம் வேண்டும். பணம் பெற உழைக்க வேண்டும். சொந்தமாக ஏதாவது தொழில் செய்யலாம். அல்லது மற்றவர்களிடம் பணிபுரிந்து அதற்கு ஊதியம் பெறலாம்.

    இந்த உழைப்பு மட்டுமே நம் வாழ்வில் பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்யும். எந்த உழைப்பானாலும், இறுதியான அதன் வெளிப்பாடு, அவற்றை நுகரும் பொதுமக்களையே அடைகிறது என்பதை மறவாமல் செய்ய வேண்டும். இதனால் பெறும் ஊதியம் உபயோகமானதாகி நல்ல மனநிலைக்கு மனிதனை உயர்த்தும்.

    “ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க

    சான்றோர் பழிக்கும் வினை”                                                                      -குறள் 656

    இந்தக் குறளை நாம் எல்லா நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும், கண்ணில் படுமாறு வைத்து, இதன்படி பணிபுரிந்தாலே ஊழல், லஞ்சம் போன்ற சொற்கள் காணாமல் போய்விடும்.

    அன்னை என்பவள் தான் ஒவ்வொருவருக்கும் நடமாடும் தெய்வம். அந்த தெய்வமே பசியோடு இருந்தாலும், அவள் வயிற்றில் பிறந்த மக்கள், சமுதாயம் பழிக்கும் செயல்களைச் செய்யக்கூடாது என 2000 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் சொல்லியுள்ளார்.

    இன்று சிலர் அன்னையையே பராமரிப்பதில்லை, இந்தக்குறள் இருப்பதே தெரியாது என்போரும் உள்ளனர்.

    பழிச் செயல்கள் செய்து, ஊரை அடித்து உலையில் போட்டு, கோடிக்கணக்கில் சம்பாதிப்பவர்கள், இந்த உலகைவிட்டுச் செல்லும்போது அவர்கள் சம்பாதித்ததில் ஒரு பைசா கூட எடுத்துச் செல்ல முடியாது என்பதை, சம்பாதிக்கும்போது மறந்துவிட்டனர்.

    கோவையில் என் நண்பர் அசோகன் உள்ளார். “நாகர்கோவிலிலிருந்து பல ஆண்டுகளுக்குமுன் கோவைக்கு விற்பனைப்பிரதிநிதியாக வந்தபோது 2 பாய், 2 தலையணை, சில தட்டுமுட்டுச் சாமான்கள் தான் எங்கள் சொத்து”.

    “இன்று 40 குடும்பங்களை வாழவைக்கும் மனநிறைவுடன் வியாபாரம் செய்கிறேன். சம்பளம் போதவில்லை என்ற எண்ணம் உண்டாகாதவாறு தேவைக்கேற்ப தருவதுடன், மருத்துவச் செலவுகள், வருடாந்திர ஊதிய உயர்வு என எல்லாவற்றிலுமே தாராளமாய் இருப்பதால், நாளுக்கு நாள் வியாபாரம் அமோகமாய் வளர்கிறது. நானும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்”.

    “என் நிறுவனப் பணியாளர் குடும்பங்களிலும் அடிப்படை மகிழ்ச்சிக்கு உதவுகிறேன்”

    இது அவர் சொற்கள்.

    “எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

    திண்ணிய ராகப் பெறின்”                                                                                      -குறள் 666

    இந்தக் குறளுக்கு உதாரணமாய் வாழும் அவர் சொல்வது, “சோம்பல், தாமதம், கலக்கம்  நீக்கிதுணிச்சல், நேர்மறைநினைப்பு, நேர்மையுடன் வியாபாரம் செய்வது நம் வாழ்வின் இலக்குகளை அடைவதற்கு எளிய வழி”

    பொருளாதார நிலையை மேம்படுத்த உழைப்பில் முழுக்கவனத்துடனும், ஆர்வத்துடனும் ஈடுபட வேண்டும். பலருடன் இணைந்து பணிபுரியும்போது கடைப்பிடிக்க வேண்டிய அவசியமான எளிய நடைமுறைகள் எவை எனத் தெரிந்து கொண்டால், பணிக்கும் விருப்பமின்மைக்கும் இடையிலான வெளியை பூஜ்யமாக்கிவிடலாம்.

    • நாம் செய்யும் பணி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொதுமக்களுக்கான சேவை தான். எனவே விருப்பத்துடன் செயல்படுவதுடன் தேடிவரும் பொதுமக்களிடம் இன்சொல் பேசி, இயன்றவரை உதவி செய்ய வேண்டும்.
    • பணிபுரியமிடத்தில் ஆக்கபூர்வமான நட்பு அலைகள் அவசியம் தேவை. உடன் பணிபுரிவோருடன் ஒத்தும், உதவியும் செயல்பட வேண்டும்.
    • தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போது, மனமுவந்து நன்றி கூறி, திருத்திக் கொள்வதுடன், உடன் பணிபுரிவோருக்கு வழிகாட்டியாகவும் பணியாற்றவேண்டும்.
    • நேரம் உயிர் போன்றது என்பதால் ஒவ்வொரு மணிநேரத்தையும் திட்டமிட்டு பணிபுரிய வேண்டும்.
    • உற்பத்தி நிறுவனங்களை நடத்துவோர், மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை மட்டுமே தயாரிப்பது.

    இவைதான் இன்று பணிபுரிவோர் கடைபிடிக்க வேண்டிய இடைவெளி ஜூரோவுக்கான செயல்பாடுகள்.

    பொருள் உற்பத்தி மனித உபயோகத்துக்காகத்தான். ஆட்சி, அதிகாரம், காவல், நீதிமன்றம் அனைத்துமே மக்கள் பிணக்கின்றி பாதுகாப்பாக, தைரியமாக, ஆரோக்கியமாக வாழும் சூழலை உறுதிப்படுத்துவதற்குத்தான். இவர்களுக்கு வழங்கும் ஊதியம் மக்களிடமிருந்து வசூலிக்கும் வரிப்பணம் தான்.

    எனவே, தேசத்தந்தை காந்திஜி கூறியதுபோல் ஒவ்வொருவரும் தம் சகமனிதருக்கே சேவை புரிவதாகவும், அதற்கு ஈடாக, குடும்பத்தை சிரமப்படாமல் பராமரிக்கவே ஊதியம் பெறுவதாகவும் நன்றியுடன் நினைவுகூறவேண்டும்.

    ஆறறிவு இருப்பதால் தான் மனிதர்களுக்கிடையே வெறுப்பு, பகை, பொறாமை, உணர்வுகள் உண்டாகின்றன. சாதாரண எறும்பு, காகம் போன்றவை கூடத்தான் இனத்துடன் ஒத்து வாழ்வதைப் பார்த்தும் ஏன் நாம் மாற மறுத்து வாழ்கின்றோம்.

    வாழ்க்கை என்பது முடிவில்லாத பயணம் என்றும், அதில் மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாதது என்றும் ஞானியர் கூறியுள்ளனர்.

    இதைத் தெரிந்து கொண்டவர்களும், சாதாரண மனிதர்போல், தாம் மாறாமல், மற்றவர்கள் தான் மாறவேண்டுமென அடம்பிடித்து இடைவெளியை அதிகரித்துக் கொள்கின்றனரே!

    உழைப்பு என்பது சோர்வில்லாமல் தொடர்ந்து முயற்சித்துச் செய்வதுதான் என திருவள்ளுவர்,

    ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

    தாழாது உஞற்று பவர்                                                                                          -குறள் 620

    என்ற குறள் மூலம் மனிதனின் செயலுக்கு (மதி) இடையூறாக வரும் தெய்வத்தின் விருப்பத்தையும் (விதி) ஒரு காலத்தில் வெற்றி கொள்வர் என உரைத்துள்ளார்.

    தொழிற்சாலைகளில் தொழிலாளர், உரிமையாளர் என்றஇரண்டு பிரிவினர் உள்ளனர். தொழில் துவங்குவதன் முதல் நோக்கம் பணம் சம்பாதிப்பது தான். அதன் தொடர்ச்சியாய் வருவது பலருக்கு பணிவாய்ப்பைத் தருவது.

    பொருள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் தம் உழைப்பால், அந்த நிறுவனத் தலைவருக்கும் லாபம் ஈட்டித்தருகின்றனர். அதற்காக ஊதியம் போனால் மருத்துவச் செலவுகள் போன்றவை வழங்கப்படுகின்றன.

    எல்லா இடங்களிலும் மனதி நேயம் மேலோங்கி இருக்க வேண்டும். ஆனால் இன்று மனிதர் வாழ்க்கை எதிர்பார்ப்பிலேயே ஓடுகின்றது. இந்த ஓட்டத்தை மகிழ்ச்சியாக்கும் வழிகளைப் பார்ப்போமா…

    (தொடரும்)

    இந்த இதழை மேலும்