Home » 2017 » September

 
 • Categories


 • Archives


  Follow us on

  கல்லீரல் காப்போம்

  நாம் கல்லீரலைத் தரமாகக் காத்தால், நாம் விரும்பும் காலம் வாழ்ந்து முடிக்கும் வரை காலன் காத்திருப்பான். நம் கல்லீரலைக் காக்க நாம் நம் கல்லீரல் செரிமானத்தை தரமாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.கல்லீரல் செரிமானம் தரமாக நிகழ நான்கு முக்கிய அம்சங்கள் தேவை. அவை முறையே,

  1. பசி வெப்பம் தணிந்த நிலை: நம் மண்ணீரல் செரிமானத்திற்கு பசி வெப்பம் தேவை என்பது நமக்குத் தெரியும். ஆனால், நம் கல்லீரல் செரிமானத்திற்கு பசி வெப்பம் தணிந்திருக்க வேண்டும். பசியெடுத்து நாம் சாப்பிடும்போது மண்ணீரலானது மாவுச் சத்தை தரமாகச் செரித்து தனக்கு, உடலுக்கு மற்றும் கல்லீரலுக்கு உடனடிச் சக்தியை அளித்தவுடன் நம் பசி அளித்தவுடன் நம் பசி அனத்தல்( பசி வெப்பம்) அடங்கிவிடுகிறது. இந்த வெப்பம் தணிந்த சூழ்நிலையில்தான் நம் கல்லீரல் நொதிகள் சிறப்பாக வேலை செய்கின்றன. நமக்கு பசியின்மை இருப்பின், பசியை தூண்ட மசாலா அதிகம் சேர்ந்த உணவுகளை எடுக்கும் போது அது பசி உணர்வைத் தூண்டி மண்ணீரல் செரிமானம் நடக்கிறது. ஆனால், மண்ணீரல் செரிமானத்தைத் தாண்டி மிச்சமிருக்கும் மசாலா அமிலம் நம் கல்லீரல் செரிமானத்தை பதம் பார்க்கும்இ ஆகவே, பசித்து புசிக்க வேண்டும் என்பது கல்லீரல் செரிமானத்திற்கு பொருந்தும்.

  முழுமையான தூக்கமின்மையும் உடலை உஷ்ணப்படுத்தும். இதனாலும், நம் கல்லீரல் செரிமானம் கெடும். அமிலத்தன்மை அதிகம் உள்ள மசாலா உணவுகள், பச்சை மிளகாய், புளிப்பு அதிகம் உள்ள உணவுகள், இரசாயனம் கலந்த உணவுகள் மற்றுமும் ஆங்கில இரசாயன மருந்துகள் யாவையும் நம் உடலை வெப்பமாக்கி கல்லீரல் செரிமானத்தை கடுமையாக பாதிக்கும். சொல்லவே வேண்டாத குடிப்பழக்கம் நம் உடலை அமிலமாக்கி, வெப்பமாக்கி கல்லீரல் செரிமானத்தை பதம் பார்க்கும். கவலை, கோபம், வஞ்சம் மற்றும பொறாமை உணர்வுகளும் நம் வயிற்று  அமிலம் உஷ்ணத்தை அதிகரித்து கல்லீரல் செரிமானம் கெடும்.

  இந்த இதழை மேலும்

  துவிஜனாக ஆகுங்கள்

  இராமகிருஷ்ண பரமஹம்சரும், கதாதரனும் ஒருவரா, வேறுவேறா? சுவாமி விவேகானந்தரும், நரேந்திரனும் ஒருவரா, வேறுவேறா?  ஸ்வாமி ரிஷியோகியும், வைஷ்ணு தேவனும் ஒருவரா? வேறுவேறா? அன்னை தெரசாவும், ஆக்னஸ் கோன்ஜாவும் ஒருவரா? வேறுவேறா?

  ஒரே நபரின் வெவ்வேறு பெயர்கள்தான் இரண்டுமே என்பது ஓரளவு வாசிப்பு பழக்கமோ அல்லது கேள்வி ஞானமோ உள்ளவர்களுக்குக் கூட தெரியும்.

  ஆனால், விஷயம் இன்னும் ஆழமானது.

  கதாதரர் ஒரு காளிகோயில் பூசாரி, மனிதர்களிடம் வர்ண பேதம் பார்க்கும் ஒரு பழமை வாத அந்தணர். ஆனால், ராமகிருஷ்ண பரமஹம்ஷர் பிரம்மத்தை உணர்ந்து பேதங்களைக் கடந்து இறை நிலை அடைந்த மகாத்மா, அவர் பூசாரி மட்டுமல்ல, பூஜைக்குரியவரும் அவரே…

  நரேந்திரன் என்பவன்  படிப்பாளி, கேள்விகள் நிறைந்த இளைஞன்… ஆனால், அவரே விவேகானந்தராக ஆன பிறகு அவர் வெறும் படிப்பாளி மட்டுமல்ல ஞானவான். துடிப்பு மிக்க இளைஞன் மட்டுமல்ல, தெளிவு பெற்ற, உண்மையை உணர்ந்த செயல்வீரர்.

  வைஷ்ணுதேவன் ஒரு பொறியியல் பட்டதாரி, காடு, மலை என்று சுற்றும் சஞ்சாரி, சமூகத்தை பொறுத்த லௌகீக உலகத்திற்குத் தேவையான பணத்தைச் சம்பாதிப்பதை இலக்காக கொள்ளாத ‘கனவுகளற்ற ’இளைஞன். ஆனால், அவரே குரு ஓம்காரநாதரை சந்தித்த பிறகு, அவரால் ரிஷியோகி என்று பெயர் சூட்டப்பட்ட பிறகு அவரே உலகத்தில் பல இறை தாகமுள்ள மனிதர்களுக்கு வேடந்தாங்கல்.  யுக மறுமலர்ச்சியின் நவீன புத்தன்.

  ஆக்னஸ் ஒரு கன்னியாஸ்திரி. ஆனால், கொல்கத்தாவில் ஏழைகளுக்கு, தொழுநோயாளிகளுக்கு, வன்முறையால் பாதிக்கபட்டவர்களுக்கு உதவு என்ற உள்ளார்ந்த அழைப்பை செவி மடுத்து ‘பிராத்தனைக்காக குவிந்த கைகளை அவர்களின் காயம் துடைக்க நீட்டிய போது அந்தக் கன்னியாஸ்திரி, அநாதைகளின் அன்னையானாள்.

   பாரதி எழுதியதில் எனக்குப் பிடித்த- எல்லோருக்கும் பிடித்த – ஒரு கவிதை,

   “தேடிச் சோறுநிதந் தின்று- பல

  சின்னஞ் சிறுகதைகள் பேசி- மனம்

  வாடித் துன்பமிக உழன்று – பிறர்

  வாடப் பலசெயல்கள் செய்து- நரை

  கூடிக் கிழப்பருவம் எய்தி- கொடுங்

  கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல

  வேடிக்கை மனிதரைப் போலே – நான்

  வீழ்வே னென்றுநினைத் தாயோ”

  பாரதி குறிப்பிடுவது போல வேடிக்கை மனிதனாக வாழ்ந்து மறைய இந்தப் பூமிக்கு நான் வரவில்லை என்று நினைப்பவர்கள், தன் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைக் கண்டடைகிறார்கள். அந்த நோக்கத்திற்காக தன்னை அர்ப்பணிக்கும் போது அவர்கள் நிச்சயமாக முன்பிருந்த மனிதனாக இருக்கப் போவதில்லை. அவர்களின் நடத்தை, குணநலன், செயல்பாடு, ஏன் உணர்வுகள் அளவிலும், உடல் அளவிலும் கூட  மாற்றம் வருகிறது.

  இந்த இதழை மேலும்

  சமையல் அறையும் குப்பைக்கூடையும் ஸ்மார்ட் கிச்சன் தொடர்ச்சி

  தேவையற்ற இந்த குணங்கள் இருந்து விட்டுப் போகட்டுமே, இவ்வளவு பெரிய மனதில் இவைகளும் ஒரு மூலையில் இருக்கட்டுமே என சிலர் விளக்கம் கூறலாம். இந்த எண்ணங்கள் இருந்தால் எப்படி இருக்கும்? இதோ ஓர் உதாரணம்.

  சிறு பாம்புக்குட்டி, ஆசையாக வளர்த்து வருகிறோம். பாம்பினுடைய இயல்பு தெரியும் தானே. வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு அதைப் பார்க்கும் போதெல்லாம் பயம் வருமல்லவா?

  இதே போல், நம் வீட்டுக்குள் நாம் இல்லாத போது ஒரு தேள் புகுந்து விட்டதாய் பக்கத்து வீட்டுக்காரர் சொன்னால், நம்மனம் எப்படி இருக்கும் ?

  நம் வீட்டில் நிம்மதியாகப் படுத்து தூங்க முடியுமா? அந்தத் தேளை வெளியேற்றும் வரை பாதுகாப்பு உணர்வு இருக்குமா?

  இது போன்ற நிலை தான் மேலே கூறிய குணங்களை விடமாட்டேன் எனப் பிடிவாதமாய் இருப்பதும். நாம் நான்கு நாட்கள் வெளியூர் சென்றிருந்த போது வீட்டில் கரையான் பிடித்து விட்டது. வந்து பார்த்தால் அதிர்ச்சி. உடனே மருந்தடித்து அப்புறப்படுத்தா விட்டால், மிக வேகமாகப் பரவி விடும்.

  இதுபோல், இந்த தேவையில்லாத எண்ணங்கள் நம் மனதில் இருந்தால், நம் உடல் பெறும் வியாதிகளின் அட்டவணை இதோ ;

  கோபம்            : B. P, இருதய வியாதி, டென்சன்.

  கவலை            : முதுமைத் தோற்றம், அனிமிக்.

  அதிக ஆசை : கடன், முக வாட்டம்.

  பகையுணர்வு   : மூட்டுவலி, தொடைவலி.

  விமரிசித்தல்  : முழங்கால் வலி

  பிடிவாதம்        : கழுத்து, தோள்பட்டை வலி

  மேல் முதுகு வலி: எதிர்பார்ப்பதால் ஏமாறுதல்

  நடு முதுகு வலி : சுயபச்சாதாபம்

  கீழ் முதுகு வலி  : வரவுக்கு மீறிய செலவு, கடன்.

  இடுப்பு வலி    : ஒப்பிடுதல்.

  இவ்வளவு பாதிப்புகளைத் தரும் தேவையற்ற எண்ணங்களை நீக்கத் தானே வேண்டும். ஆனால், பலரும் அவர்கள் எனக்குச் செய்த தீங்குகளை நினைத்தால், அவர்களை இந்தப்பிறவி மட்டுமல்ல பல பிறவிகளிலும் மன்னக்கவே முடியாது என்று சொல்கின்றனர்.

  இந்த எண்ணங்களை பல ஆண்டுகள் நம் உள்ளத்திலே வைத்திருப்பதால் என்ன பலன்? மற்ற நல்ல எண்ணங்களையும் துருப்பிடிப்பது போல் அரித்து மாற்றி விடும்.

  2 வழிகள் உள்ளன. இவர்களைத் தண்டிப்பது அல்லது மன்னிப்பது.

  தண்டிப்பது: உங்கள் மனம் சொல்வது போல் அவர்களுக்கு கும்மாங்குத்து, சாட்டையடி, உறுப்புகளை வெட்டுதல், மரண தண்டனை என எதை வேண்டுமானாலும் கொடுங்கள்.

  உங்கள் மனதில் அவர்களை நினைத்து, அவர்களது எந்தச் செயல் பேச்சு உங்களை எப்படி பாதித்தது என விளக்கி, கடும் தண்டனைகளை மனதுக்குள்ளேயே கொடுத்து மகிழுங்கள். அதோடு அந்தப் பாதிப்பையும் மறந்து விடுங்கள்.

  இந்த இதழை மேலும்

  கல்வியைச் சர்க்கரையாய் தருவது…

  சமீபத்தில் எனது நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன், நானும் அவரும் இலக்கியம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். பேசிக்கொண்டே அவரது மகனை கவனித்தேன். அவன் வீட்டுப்பாடம் எழுதிக் கொண்டிருந்தான். பின் பாடம் படித்தான். எழுந்து போனான். மறுபடியும் அமர்ந்த வண்ணம் எழுத்து, படிப்பு என ஒரு இயந்திர மயமாகவே அவன் செயல்கள் இருந்தன. எனது நண்பர் அவனை இடையிடையே அழைத்தபோது, ம்…, ம்…,, என்ற ஒரே சொல்லின் பதில் சுவாரஸ்யம் இல்லாமல் வந்தது.

  இன்றைய குழந்தைகளிடம் கலகலப்பு இல்லை. பாரதியார் “ஓடி விளையாடு பாப்பா” என்று சொன்னார், ஆனால் இன்றைய நகரங்களில் குடியிருப்புகளெல்லாம் ஒரு செண்ட், இரண்டு செண்ட்களில் வீட்டைக் கட்டிக் கொண்டால் எப்படி விளையாடுவது? குழந்தைகள் இயல்பான நிலையிலிருந்து மாறி இயந்திரத்தனத்திற்கு அடிமையாகிவிட்டன. சந்தோஷத்தை காலணியைப் போல் கழற்றி வைத்துவிட்டு தூணில் கட்டிப் போட்ட நாய் குட்டியாய் நிற்கின்றனர். கல்வி என்ற பெயரில் பொதி சுமைக்கும் கழுதையைப் போல் புத்தகங்களை சுமக்கின்றார்கள். இன்றைய கல்வி கற்பிக்கிறோம் என்று கிளம்பி, குழந்தைகளை கசக்கிப் பிழிவது இனியொரு கொடுமையாக உள்ளது. கல்வி என்பது வெறும் மதிப்பெண் வாங்கும் வியாபாரமாக உள்ளதே தவிர ஒழுக்கம் சார்ந்ததாக பண்பாடு சார்ந்ததாக இல்லை. ஓடினால் தான் எல்லையை தொடமுடியும், உமியிருந்தால் தான் காற்றில் தூவ முடியும். உலை கொதித்தால்தான் அரிசியை சாதமாக்க முடியும். இதில் எது மாறுபட்டாலும் முடிவு முரண்பட்டதாக அமையும். வாழ்க்கைக்கு ஏற்ற கல்வியை ஆசிரியர்கள் பாடத்தோடு சேர்த்து தருவதில்லை, சமைப்பது எப்படி? என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு சமைப்பது சாதனையல்ல, அனுபவபூர்வமாக உணர்ந்து ருசியறிந்து சமைப்பதாகும்.

  கல்வி என்பது அறிவாளியை மேலும் அறிவாளியாக்குவது அல்ல, சராசரி மாணவனை சாதனை மாணவன் ஆக்குவதும் அல்ல, அவனை ஒழுக்கமானவனாக ஆக்குவது ஆகும். ஆசிரியர்கள் கேள்வி கேட்காமல் மாணவர்களுக்குள் கேள்வித் திறனை வளர்க்க வேண்டும், பிறரின் பதிலைக் கேட்டு அவன் பிரபஞ்ச அறிவைப் பெறுவது அல்ல கல்வி. அவனே பதில்களைத் தயாரித்துக் கொள்வது கல்வியின் ஒருவகை வளர்ச்சி ஆகும். ஆனால் இங்கு நடப்பது என்ன? மாணவனைக் கேள்விக் கேட்டுக் கேட்டு அவனை கேள்விக்குறியாக்கிவிட்டோம். எரிகிற நெருப்பைப் பார்த்து தொடாதே! என்று சொல்வது புத்திசாலித்தனம், ஆனால் காகிதத்தில் நெருப்பு என்று எழுதி அதைக்கூட வாசித்தால் சுட்டுவிடும் என்று சொன்னால் அது வடிகட்டிய பத்தாம்பசலித்தனம்.

  இந்த இதழை மேலும்

  நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 8)

  சமீப காலமாக உயிரியல் சம்பந்தமான பல்வேறு தரவுகள் (Biological data) அசுரவேகத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றனர். வரிசைப்படுத்தும் தொழில் நுட்ப வளர்ச்சியால் (Sequencing technologies) ஏற்கனவே, நூற்றுக்கணக்கான உயிரினத்தின் டி.என்.ஏ.,க்களைப் பற்றியும் (Complete Genome) அதில் உள்ள ஜீன்களைப் பற்றியும் மற்றும் அவற்றின் செயல்பாடுகளையும் (Functions) தரவுகளாக (Data) குவிக்கப்பட்டுள்ளனர்.

  தற்போது, வெள்ளம்போல் பெருக்கெடுக்கும் இந்தத்தரவுகளை தேக்கி வைக்க அதிக மெமரி (Memory) கொண்ட கணினி சேவையகம் (Computer Services) தேவைப்படுகிறது. மேலும், விலை மதிப்பில்லாத இந்த உயிரியல் தரவுகளை திறன் படகையாண்டு (Manage) அந்த தகவல்கள் அனைவரையும் எளிதில் சென்றடையச் (accessible) செய்வது இன்றியமையாதது. எனவேதான், தற்போது பல்வேறு உயிரி தரவுதளங்களை (Biological Databases) அமைத்து இத்தகைய தகவல்களை சீர்படுத்தி அனைவரையும் எளிதில் சென்றடைய செய்கின்றனர். மேலும், இத்தகைய தரவுதரளங்களால் அனைத்து தரப்பட்ட உயிரியல் ஆய்வுகளும் பல மடங்கு வேகமாக துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் தரவுகளை திறன்படகையாள அதிக அளவில் தரவுத்தளங்களை உருவாக்குபவர்களும் (Database Developer) அதை நிர்வகிப்பவர்களும் (Database administrators) தேவைப்படுகின்றனர். இத்தகைய பணிகளில் திறமை வளர்த்துக் கொள்வது லாபகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதை என் அனுபவத்தின் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். இனி இதைப்பற்றி சற்று விரிவாக காணலாம்.

  வெகுகாலத்திற்கு முன்பு, உயிரியலில் ஆய்வு மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் பெரும்பாலும் கணினி உபயோகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு இல்லாதவர்களாக இருந்தனர். ஆனால், கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இணையதள தேடுதலிலும், உயிரியல் தரவுத்தளங்களைப் பயன்படுத்துவதிலும் தம்மை மிகவும் மேம்பட்டவர்களாகவும், அதை தினசரி பழக்கமாகவும் மேற்கொள்கின்றனர். குறிப்பாக, சில தரவு தளங்கள் மிக அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. இவைகள், உலகத்தரம் வாய்ந்த கூட்டு முயற்சியால் நிர்வகிக்கப்படுகின்றன. அவைகளில், NCBI என அழைக்கப்படும் தேசிய உயிர் தொழில்நுட்ப தகவல் மையம் (National Center for Biotechnology Information) முக்கிய இடம் வகிக்கிறது. இந்த தரவுதளத்தில் பலதரப்பட்ட உயிரினங்களின் முழு டி.என்.ஏ.,  (Complete Genomes) ஜீன்கள் (Genes), புரதங்கள் (Protein Sequences) என மிகவும் பயன்படக்கூடிய தகவல்களும், அந்த தகவல்களைப் பகுப்பாய்வு (analysis) செய்வதற்கான மென் உபகரணங்களும் (Tools) மற்றும் விஞ்ஞானிகளுககு தேவையான ஆய்வு கட்டுரைகளையும் ஒரே தரவுதளத்தில் பெற முடிகிறது. இதுபோல, மனிதன் சம்பந்தப்பட்ட பல்வேறு ஆராய்ச்சி முடிவுகளும், ஜீன் தகவல்கள், மனிதர்களுக்கு இடையே டி.என்.ஏ.,வில் உள்ள வேறுபாடுகள், மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் மூலக்கூறு அளவில் இருக்கும் வேறுபாடுகள் என ஒரு கூட்டாக Ensemble மற்றும் UCSC Genome Browser போன்ற தரவுதளங்கள் எளிய முறையில், கற்பனை வடிவில் (Visualizion tools) காட்டும் விதமாகவும் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தரவுதளமும் வெவ்வேறு அடிப்படை தரவுதள கட்டமைப்பை உருவாக்கும் விதம் ஒன்றே (Architecturally similar) இந்த தரவு தள அமைப்பை மூன்று அடுக்காக (Three tier) பிரிக்கலாம்.

  இந்த இதழை மேலும்

  ஆசிரியர்ப்பணி அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி.

  2016-ம் ஆண்டிற்கான சர்வதேச ஆசிரியர் விருதுக்கு இந்தியாவைச் சேர்ந்த இயற்பியல் ஆசிரியை பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இந்த விருது பெறுவோர்க்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும். மும்பையில் உள்ள சர்வதேச பள்ளியில் இயற்பியல் ஆசிரியையான கவிதா சங்வி, இயற்பியல் பாடத்தை கற்பிக்கும் முறைக்காக பரிந்துரை செய்யப்பட்டார். புத்தகத்தில் உள்ள பாடத்தை வாழ்க்கையில் நேரடியாக சந்திக்கும் அனுபவங்களுடன் ஒப்பிட்டு கவிதா சங்வி பாடம் கற்பித்து வந்தார். மாணவர்கள் அனைவரையும் பொறுப்பானவர்களாகவும், சமூக வளர்ச்சியில் அக்கறை உடையவர்களாகவும் மாற்றும் பொறுப்பும் கடமையும் ஆசிரியர்களுக்கு உள்ளது.

  சர்வதேச அளவில் வர்கி அறக்கட்டளையால் வழங்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான விருதுப்பட்டியலில் நடப்பாண்டில் அகமதாபாத்தில் ரிவர்சைட் பள்ளிக்கூடத்தில் கல்வி புகட்டும் கிரண் பிர் சேத்தி இடம் பெற்றார்.

  முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனை கௌரவத் தலைவராகக் கொண்ட வர்கி அறக்கட்டளை ஆண்டுதோறும் உலக அளவில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த ஆசிரியருக்கு 1 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் 6 கோடியே 22லட்சம் ரூபாய்) பரிசுத்தொகையும் விருதும் வழங்கப்படுகிறது. ஆசிரியர் தொழில் ஈடுபடுவோருக்கான நோபல் பரிசாகக் கருதப்படும் இந்த சிறப்புக்கூரிய சர்வதேச ஆசிரியர் பரிசு தங்கள் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு மிகச்சிறப்பாக சேவையாற்றி ஆசிரியருக்கே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கென்யா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா உட்பட 127 நாடுகளைச் சேர்ந்த 5000 பேர் இந்தப் பரிசுத்தொகைக்காக பரிந்துரைக்கப்பட்டனர். இதில் 1300 பரிந்துஐரகள் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் சர்வதேச அளவில் சிறப்பாக பணியாற்றிய 50 பேர் முதல் கட்டமாக இறுதி செய்யப்பட்டனர். அதிலும், ஆசிரியர் தொழிலுக்கு பெருமை தேடித்தந்த 10 பேர் அடுத்த கட்டமாக தேர்வு செய்யப்பட்டனர். அதில் சிறந்த ஒருவருக்கே இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த 10 பேர் கொண்ட இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்தான் நமது கிரண் பிர் சேத்தி.

  பிள்ளைகளுக்கு பாடம் கற்பிக்கும் கலையில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு புத்தாக்கமிக்க அணுகுமுறைகளை கையாண்டு வருபவர் கிரண் பிர் சேத்தி. கல்வியை மாணவர்களுக்கு திணிக்க கூடாது என்பதுடன், புதுமையான முயற்சிகளை மேற்கொள்கிறார். அரசுப்பள்ளியில் பணியாற்றும் சிலர் தந் சொந்த செலவில் ஸ்மார்ட் வகுப்பறையை அமைப்பது, மாணவர்க் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் டிஜிட்டல் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் மாணவர்களை ஆர்வத்துடன் வகுப்புகளை கவனிக்கச் செய்கின்றனர்.

  மாணவர்களின் ஆசிரியர்கள்.

  அர்ப்பணிப்பு, பேரார்வம் இவைதான் கடன்பெற்றேனும் பள்ளிக்காக செலவு செய்து மாணவ சமுதாயத்திற்கு உதவத் தூண்டுகிறது. இவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்ல நடமாடும் சரஸ்வதிகள் எனலாம். மாணவர்களின் வெளியுலக வளர்ச்சிக்கு தடையாக இருப்பது ஆங்கில மொழி, அறிவு இல்லாமையாகும். மாணவர்களின்  ஆங்கில மொழி அறிவை மேம்படுத்த பாடுபடும் ஆசிரியர்கள் உள்ளனர்.

  இந்த இதழை மேலும்

  உலகம் ஒரு சபை

  உலகம் என்பது பாமரரும், அறிவாளிகளும், மூடர்களும் நிறைந்த சபையாகும். உலகம் உன்னை வதைத்தாலும் உலகத்தை நீ சிதைக்கவும், உதைக்கவும் வேண்டாம்.

  இவ்வையகம் வழுக்குப் பாறை போன்றது. விழுந்தால் எழுவது கடினம். வழுக்கி விழுந்து விடாதே.

  வாழ்க்கைச் சுமைகள் எதுவும் உன் முதுகுக்கு வந்தாலும் அச்சுமைகளைச் சுமப்பவனாக கம்பீரமாக எழுந்து நில்.

  நம்மை விட்டுப் போனால் வாழ்வில் என்றுமே சம்பாதிக்க முடியாதது நம் பெயர் ஒன்று தான்.

  வல்லவன் என்று பெயர் பெற்று விடலாம்; ஆனால் நல்லவன் என்று பெயர் பெறுவது கடினம்.

  ஆசையை எதிரியாக்கிக் கொண்டவன் தான் நிம்மதி என்னும் சாலைகளில் என்றும் பயணம் செய்பவன்.

  அனைவரது உள்ளத்தையும் சம்பாதிப்பவன் தான் உலகில் மிகப்பெரிய செல்வந்தன். அனைவரது இதயத்திலும் வாழுகின்ற ஒருவனுக்கு இறப்பு என்பது இவ்வுலகில் என்றும் இல்லை.

  இளைஞர்களது சக்தியே இவ்வுலகில் இமாலய சக்தி. மிகப் பெரிய உயர்ந்த சக்தி. எந்த விசயமும் என்னால் முடியும் என்று எண்ணும் மனமே எதிலும் வெற்றி பெறும் மனம்.

  தனக்குள் அனைத்து விசயங்களும் இருக்கின்றது என்று உணர்ந்தவன் தான் எந்த வேலையையும் தைரியமாகச் செய்யப் புறப்படுகின்றான். பிறரையும், உன்னையும் ஏசிய உலகம் தான் முடிவில் உன்னைப் பேசும். இப்படி ஏசிய உலகம் தான் இதுவரை தோல்வியடைந்துள்ளது என்று வரலாறு காட்டுகிறது, நமக்குச் சொல்கிறது.

  கொள்கை

  உனக்குள் காட்டுத் தீ போல் எரிமலை போல் யாராலும் எதுவாலும் அதை அணைக்க முடியாதபடி எந்நேரமும் உன் கொள்கை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் உன் இலட்சிய எண்ணம் ஒரு நாள் நிறைவு பெறும்.

  அந்தத் தீ உன் செயல்பாட்டுக்குத் தேவையான இலட்சிய உந்துதலைக் கொடுக்கும். உலகிலுள்ள எந்த ஒரு பயர் சர்வீசாலும் (தீயணைப்பு நிலையத்தாலும்) அணைக்க முடியாத அந்தத் தீயை உன்னால் முழுவதுமாக உணர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் முடியவேண்டும்.

  இளமை இனிமையானது

  இந்த இதழை மேலும்

  செப்டம்பர் மாத உலக தினங்கள்

  1. சர்வதேச எழுத்தறிவு தினம் (International Literacy Day) (செப்டம்பர் – 8)

  ஐ. நா. அமைப்பின் ஓர் அங்கமாகிய யுனெஸ்கோ எழுத்தறிவின்மையை அகற்றும் நோக்கத்துடன் 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் சூரான் தலைநகர் டெகரானில் உலக நாடுகளின் கல்வி அமைச்சர்களை அழைத்து மாநாட்டை நடத்தியது. எழுத்தறிவின்மையால் ஏற்படும் அரசியல், சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் அதில் விவாதிக்கப்பட்டன. மாநாட்டின் நிறைவில் எழுத்தறியாமையை அறவே அகற்றுவதற்கு ஆற்ற வேண்டிய உடனடி நடவடிக்கைகள் தயாரிக்கப்பட்டது.

  1966ஆம் ஆண்டு கூடிய யுனெஸ்கோவின் 14-வது பொதுக்குழுக்கூட்டம் மாநாடு நடைபெற்ற செப்டம்பர் 8 ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு தினமாகப் பிரகடனம் செய்தது.  அதைத் தொடர்ந்து 1967 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாள் உலக எழுத்தறிவு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

  இந்த தினத்தின் முக்கிய நோக்கம் மனித குலத்தின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடைக்கல்லாக உள்ள எழுத்தறிவின்மையைப் போக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இது தொடர்பாக அரசு மேற்கொண்டுள்ள சீரிய திட்டங்களை எடுத்துரைப்பதும் ஆகும்.

  ‘எழுத்தறிவின்மை என்பது ஒரு குற்றம் பாவம்.  அதை நாட்டை விட்டு அகற்றிட வேண்டும்’ என்றார் அண்ணல் காந்தியடிகள்.  மக்களின் கல்வி மதிக்கூர்மை ஆகியவற்றைப் பொறுத்தே ஒரு நாட்டின் முன்னேற்றம் அமையும் என்றார் சுவாமி விவேகானந்தர்.  எழுத்தறிவுதான் அடித்தள மக்களுக்கு ஆரோக்கியமான மாற்றங்களை வழங்க முடியும்,  நாட்டில் நிலவும் பல்வேறு விதமான சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண கல்வி ஒன்றினால்தான் முடியும்.

  கல்வி வளர்ச்சி என்ற அடிப்படை இல்லாமல் எந்த நாடும், எந்தச் சமுதாயமும் வளர முடியாது,  ‘சாலைகள் வைப்பதில், அன்ன சத்திரங்கள் அமைப்பதில், குளம் வெட்டுவதில், கோவில்கள் கட்டுவதில் கிடைக்கும் புண்ணியங்களை விட ஆயிரம் பங்கு அதிகமான புண்ணியம் ஓர் ஏழைக்கு எழுத்தறிவு தருவதால் கிடைக்கும்’ என்று பாரதி கூறினான்.

  ‘அறிவு‘ என்பது ஓர் ஆயுதம் என்கிறார் திருவள்ளுவர்.  ‘கல்லாதவன் வாழும் வீடு வெளிச்சமில்லா இருண்ட வீடு’ என்று கூறினார் பாரதிதாசன்,  அறியாமை இருளை அகற்றினால்தான் இந்தியா உண்மையான சுதந்திர நாடாக மாற முடியும்.  மனித உரிமைகளில் முதன்மையானது கல்வி பெறும் உரிமை.  கல்வி ஒன்றினால்தான் மனித உரிமையைக் காக்க முடியும்.

  இந்த இதழை மேலும்

  வாழ நினைத்தால் வாழலாம் – 8

  கல்விச்செல்வம்  

  வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

  செல்வங்கள் பல வகை.

  செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

  செல்வத்துள் எல்லாம் தலை – என்று சொன்னான் வாழ்க்கைக்காவலன்  வள்ளுவன்.

  கல்விச்செல்வம், பிள்ளைச்செல்வம், அறிவுச்செல்வம் – என்று இந்த பட்டியல் பிரபஞ்சத்தை விடவும் பெரியதாக மனிதனின் மனதில்.

  இன்றைய பரபரப்பான சூழலில், பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழும் பேறு எத்தனை மானுடர்க்கு கிடைத்திருக்கின்றது என்றொரு பட்டியலிட்டால் – பாதிக்குமேல் இடம் பாக்கி இருக்கிறது.

  பதினாறு இல்லையென்றாலும் – குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்கவேண்டும்.

  அந்த ஒன்றே – இல்லாத மீதம் பதினைந்தை ஈடு செய்யத்தகுமானால் அதுவே சிறப்பு.

  ஈடு செய்யத்தகும் அந்த ஒன்று தான் கல்விச்செல்வம்

  அனைத்தும் வியாபாரமாகிவிட்ட இன்றைய சூழலில் – கல்வி மட்டுமல்ல, கல்லூரியே விற்பனைக்கு என்ற ஒரு அவல நிலை.

  “அ” வையும், “ஆ” வையும் அறிமுகப்படுத்தும் அரிச்சுவடி படிப்பு தொடங்கி, அமைதியை போதிக்கும் ஆண்மீகப்படிப்பு வரை அனைத்தும் இன்று எவருக்கும் எட்டாக்கனியாக.

  பல பள்ளிகள் பெற்றோர்களை பார்ப்பது ஒரு பணம் காய்க்கும் மரமாகத்தான்.

  இன்றைய கல்வி முறையில் “கற்றதும் பெற்றதும்” என்ன – என்று கணக்கு பார்க்கும்போது, மாணவன் “கற்றது” குறைவாகவும் பள்ளி நிறுவனங்கள் “பெற்றது” அதிகமாகவும் இருக்கக்காணலாம்.

  “வரமாக” போற்றப்பட்ட கல்வி, வியாபாரம் என்ற வணிக சந்தையில் அலங்கரிக்கப்பட்ட காரணமாக அதன் “தரம்” என்ன என்று ஒரு சோதனை – ஒவ்வொருவரும் செய்து பார்க்கவேண்டியது நிதர்சன நிஜம்.

  மாணவர்களின் எதிர்காலத்தை விலைபேசுகிறது – விசுவரூபமாக காண்பிக்கப்படும் விளம்பரங்கள்.

  அரசாங்கம் அறிவிக்கும் புதுப்புது தேர்வு முறைகள், கல்வித்தரத்தை சோதித்து பார்க்கிறது.

  “மாணவர்களின்” தரத்தையா அல்லது “கல்வி நிறுவனங்களின்” தரத்தையா – என்பதே இப்போது விடையே கிடைக்காத கேள்வியாய்.

  ஒருபுறம் “கேள்வியே புரியாத மாணவனாய் தேர்வுக்களத்தில்

  மறுபுறம் “வியாதியே புரியாத மருத்துவனாய்” வெளி உலகத்தில்!

  ஒதுக்கி (நல்லதை) எடு – என்பது இப்போது அர்த்தம் மாறி “ஒதுக்கீடு” என்றாகிவிட்டது.

  சலுகைகள் சாமரம் வீச துவங்கிவிட்டால் – சோம்பேறியும் சொர்க்கவாசி ஆகிவிடுவான்.

  இன்றைய கல்வி முறை – எதை நோக்கி பயணிக்கிறது?

  உயர்ந்த எதிர்காலத்திற்கு, உயர்ந்த சமூகத்திற்கு உத்தரவாதம் அளிப்பதாக உள்ளதா?

  “கல்விச்செல்வம்” நம்மை பெருமை கொள்ள செய்கிறதா?

  “கல்விச்செல்வதின்” நோக்கம் என்ன? – என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடும் விட்டல் பூசிகளாய் இன்றைய சமூகம்.

  ஊரில் ஒரு மல்யுத்த மாவீரர் இருந்தார்.

  இந்த இதழை மேலும்

  நேற்று போல் இன்று இல்லை!

  இரும்பை யாராலும் அழிக்க முடியாது என்று கூறுவார்கள்; ஆனால் பயன்படுத்தாமல் சும்மா போட்டுவிட்டால் போதும். சில மாதங்களில் தானே பயனற்றதாகப் போய்விடும். அதன் முடிவு அதுதான். மனிதனும் அப்படித்தான். செயல்படத்தான் வாழ்க்கை; சோம்பிக் கிடப்பதற்கு அல்ல. சும்மா இருக்கும் சுகம் நமது அழிவின் ஆரம்பம் என உணர்தல் வேண்டும். தேங்கிக் கிடந்தால் குட்டை, நடந்தால் தான் நதி.

  ஏற்றமும் தாழ்வும் இருப்பது தான் நியதி. உயிரோட்டமும் கூட. ECG பார்த்திருப்பீர்கள். ஏற்றமும் இறக்கமுமாக கோடுகள் இருந்தால் நல்லது. நேர்கோடாக இருந்தால் ‘கதை முடிந்துவிட்டது’ என்று பொருள். நல்லதும் கெட்டதும், இன்பமும் துன்பமும், வறுமையும் செழுமையும், வாட்டமும் மகிழ்ச்சியும், நோயும் ஆரோக்யமும், அறியாமையும் அறிவுடைமையும், அன்பும் பகைமையும், அழுகையும் சிரிப்பும், பிறப்பும் இறப்பும், உயர்வும் தாழ்வும் நிறைந்ததுதான் வாழ்க்கை. அப்படி இருந்தால் தான் அது சுவையானதாக இருக்கும்.

  என்றைக்கும் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தொடங்குகிறது; முடிகிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புது செயல்பாடுகள், புதுப்புது வாய்ப்புக்கள், புதுப்புது சந்திப்புகள், புதுப்புது காட்சிகள்… அவற்றையெல்லாம் சிலர் புதுப்புது பிரச்னைகள் என்று எடுத்துக் கொள்கிறார்கள். அன்றாடம் நாம் புதிய பிறப்பெடுக்கிறோம்; வாழ்கிறோம். நாளை வேறு மாதிரி இருக்கும்.

  “என்ன சார், வாழ்க்கையில் மாற்றங்கள் தினம் தினம் எழுந்து காலைக்கடன்களை முடித்து அலுவலகம் சென்று அதே வேலைகளை திரும்பத் திரும்பச் செய்து அதே பள்ளியில் பயணித்து வீடுவந்து டி.வி. பார்த்துவிட்டு, உணவு உட்கொண்டு, படுத்துத் தூங்குகிறேன். அதே வேலையில் Promotion இல்லாமல் சலிப்போடு ஓடிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை!” என்று அலுத்துக் கொள்வோர் நிறைய உண்டு.

  இந்த இதழை மேலும்