இலக்கு நெறிகளுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டு

இளைஞர்களின்  வாழ்வில் தன்னம்பிக்கையை விதைத்தவரும் நீவீர்…

தேமாவையும் புளிமாவையும் நயத்தோடு நல்கி

சுவைபட உரைத்தவரும் நீரே

இலக்கிய இன்பச்சுவையை தேன் கலந்த

அமிழ்தத்தை தெவிட்டாமல் கொடுத்தவரும் நீரே

உம் எழுத்துக்களிலோ போலியில்லை; பகட்டு இல்லை;

ஆடம்பரமில்லை; ஆபாசமில்லை; அருவெறுப்புமில்லை;

உம் எழுத்துக்கள்  எல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல

அவை வாழ்க்கையின் சாதகம் வரலாற்றின் காவியம்

செந்தமிழோடும் செழுந்தமிழோடும் உம் படைப்பு

அத்துணையும் தேன்சுவை, அமுத ஊற்று,

அறிவின் சுரங்கம் ஆனந்தத்தின் வெளிப்பாடு

கண் விழிக்காத கிராமத்தில் பிறந்து காலமெல்லாம் கண் விழித்து,

இன்று எழுத்துலகில் இமயத்தைத் தொட்டவரும் நீரே

வாழ்வில் எத்தனையோ சிரமும் சிலுவைப்பாடும் பெற்றவரும் நீயே

வெற்றிக்கு ஏங்கியவர்களின் எதிர்காலக் கனவுக்கு வித்திட்டு

அவர்களின் அரியாசனத்திற்கு சரியாசனமாக்கியதே

உம்முடைய முன்னேற்றத்திற்கு மூன்றே படிகளும் சொற்களும் தானே

நடுநிசி நள்ளிரவிலும் தூக்கத்தைத் தொலைத்து

தொய்வில்லாமல் உழைத்தவரல்லவா நீங்கள்

கதிரவனுக்கு முன்பே கண்விழித்து விடுகிறது அல்லவா?

உம் பேனாவின் கற்பனையும் கவித்துவமும்

பாரதியும் பாவேந்தரும் பாரை உயர்த்த பாடிய

பாவினம் போல் உள்ளதல்லவா .. ?

உம் எழுத்தும் கருத்தும்

தொல்காப்பியம் சொல்லாத இலக்கணமா?

திருக்குறள் சொல்லாத அறமா? உம்

படைப்புகளில் சொல்லாத தத்துவமா? உம்முடைய

எழுபது நூல்களில் எதைச் சொல்வேன் நான்…?

எட்டும் வரை தட்டு, இலக்கும் இமயமும்

கிட்டும் வரை முட்டு என்று தன்னம்பிக்கையைக் கொடுத்து

தட்டி எழுப்பியவரும் நீங்கள் தானே…?

நீங்கள் காட்டிய வழிப்பாதையில் தான்

நாங்கள்  பயணப்படுவோம்…