– 2017 – March | தன்னம்பிக்கை

Home » 2017 » March

 
 • Categories


 • Archives


  Follow us on

  என் பள்ளி

  திரு. இளங்கோ
  தலைமை ஆசிரியர்,
  கணேசபுரம் அரசு தொடக்கப்பள்ளி,
  கணேசபுரம்

  நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் எங்கே இருக்கிறது என்னுடைய சிகரம் என்று லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்ற அயல் நாட்டு அறிஞர் கூறுவார்.

  வெற்றி என்னும் சிகரத்தை அடையும் வரை ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். தடைகள் வரும் , இடையூறுகள் வரும் அதை கண்டு சற்றும் மனம் தளராமல் மனஉறுதியோடு போராடி வெற்றி பெற வேண்டும். போராட்டத்திற்கும் வெற்றிக்கும் இடையில் தான் வாழ்க்கையின் தன்னம்பிக்கை தெரியும். இங்கு கண்ணிருந்தும் குருடர்களான வாழும் பல பேர் மத்தியில் தன் கண் பார்வை இழந்தும் ஒரு வரலாறாக வாழ்ந்து வரும் குறிச்சி தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. இளங்கோ அவர்களை நேரில் சந்தித்தபோது அவரின் அனுபவ பகிர்வை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அவரோடு இனி நம் பயணம்.

  நான் கோவை மாவட்டம் சுந்தராபுரத்தில் ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் சுப்ரமணி மரகதமணி தம்பதினருக்கு மூத்த மகனாகப் பிறந்தேன். எனக்கொரு சகோதிரி இருக்கிறார். சின்ன வயதிலிருந்தே ஏழ்மையை அனுபவித்தவன் நான், பிறக்கும் போது வானம் தெரிந்தன வானம்பாடி பறவைகள் தெரிந்தன, ஆறு குளம் தெரிந்து, அரண்மனை தெரிந்தது மக்கள் தெரிந்தன மகான்கள் தெரிந்தார்கள் இப்படி எல்லாத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டு தான் இருந்தேன். எல்லோருக்குள்ளும் இருந்த எதிர்கால கனவு எனக்குள்ளும் இருந்தது. கனவை நினவாக்க கல்வி கற்க வேண்டும் அல்லவா?

  கல்வி மட்டுமே ஒரு மனிதனை சான்றோனாக்கும்,என்பதை என் பெற்றோர்கள் புரிந்து கொண்டவார்கள். இதனால் அருகிலிருந்த செங்கோட்டை அரசினர் பள்ளியில் சேர்ந்தார்கள். படிப்பு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லா வகுப்பிலும்நல்ல மதிப்பெணுடன் தேர்ச்சிப் பெற்றேன். வகுப்பில் நன்றாகப் படிக்கும் பிள்ளைகளை எப்பொழுதும் ஆசிரியர்கள் மிகுந்த அக்கரை செலுத்துவார்கள் அதுபோல தான் எனக்கும் ஆசிரியர்களின் அரவணைப்பு ஒவ்வொரு வகுப்பிலும் கிடைத்தது.
  நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு நாள் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டுயிருந்தேன். அப்போது கரும்பலகையில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எனக்கு சரியாகத் தெரியவில்லை. அதுபோலவே தூரத்தில் இருக்கும் எதையும் என்னால் சரியாகப் பார்த்துத் தெளிவு பெற முடியவில்லை. ஆனால் அருகில் சென்று பார்த்தால் புரிந்து கொள்ள முடிந்தது. அப்போது தான் புரிந்தது தூரப்பார்வை எனக்கு இல்லை என்று. இந்தக் குறையை என் பெற்றோரிடம் சொன்னேன். மிகவும் கவலைவுற்ற நிலையில் கண் மருத்துவரிடம் கிகிச்சைக்காகக் கூட்டிச் சென்றார்கள். அப்போது மருத்துவர் கண்ணிற்கும் செல்லும் சில நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளது, என்றும் கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள் என்றும் சொல்லி சில வைட்டமீன் மாத்திரைகளையும் கொடுத்தார். மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகளையும் சாப்பிட்டேன் எனினும் கண் பார்வைக் குறைபாட்டை என்னால் சரி செய்ய முடியவில்லை.

  பத்தாம் வகுப்பு வரை என்னால் புத்தகத்தைப் பார்த்துப் படிக்க முடிந்தது. அதன் பிறகு பகலும் இரவானது பார்வையும் இருளானது. என் கண்முன்னே நடக்கும் அசைவுகள் அனைத்தும் மறைந்தன, அனுதினமும் ரசித்து பார்த்த எதுவும் எனக்குத் தெரியவில்லை. திசை மாறிய பறவை போலவும், வழி மாறிய ஆடுகள் போலவும் என் வாழ்க்கை மாறிவிட்டது.

  இனி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டுயிருந்தேன். இவ்வுலகில் பார்வை பறிபோன முதல் ஆள் நான்   இல்லை என்பதை உணர்ந்தேன். இங்கு பார்வை இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் எல்லோரும் வாழும் போது நம்மால் வாழ முடியாத என்ற தன்னம்பிக்கை எனக்குள் தோன்றியது. இதனால் அடுத்த நிலையை அடைய வேண்டும் என்றால் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என்னால் புத்தகத்தை படிக்க தான் முடியாது ஆனால் படிப்பதைக் கேட்டு அதற்கு ஏற்றார் போல் மனப்பாடம் செய்து என்னை நானே தயார் படுத்திக் கொண்டேன்.

  அப்போது சி.ஏஸ்.சி பள்ளியில் பார்வையற்றோருக்கான ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் என்ற ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்கள். இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் மற்றப் பிள்ளைகளைப் போலவே பார்வையற்றவர்களும் ஒரே பள்ளியில் படிக்கலாம் என்பதே ஆகும். இதனால் நான் இப்பள்ளியில் சேர்ந்தேன். இத்திட்டம் பெரிதும் எனக்கு உறுதுணையாக இருந்தது. மற்றவர்களை போல ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்பதால் படிப்பதற்கு எளிமையாக இருந்தது. ஆனால் தேர்வு எழுதும் போது மட்டும் ஒருவரின் துணைத் தேவைப்பட்டது. அப்படி படிப்பதை நன்கு உள்வாங்கி படித்து ஒருவரின் உதவியோடு பன்னிரெண்டாம் வகுப்பை சிறந்த முறையில் தேர்வில் வெற்றி பெற்றேன்.

  பள்ளிப் படிப்பை முடித்த கையோடு பி.ஏ ஆங்கிலத்துறையை பி.எஸ்.ஜி கல்லூரியிலும், பி.எட் படிப்பை இராமகிருஷ்ணா கல்வியில் கல்லூரியிலும் படித்தேன். படித்து முடித்தவுடன் 1997 ஆம் ஆண்டு செங்கோட்டை அரசு பள்ளியில் ஆசிரியாராகப் பணியில் சேர்ந்தேன். சேர்ந்த பிறகு எம். ஏ ஆங்கிலமும் படித்த முடித்தேன். செங்கோட்டை பள்ளியில் 6 ஆண்டுகளாகப் பணியாற்றினேன். இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி இது நிரந்தர பணி கிடையாது. இப்படி தான் முதலில் பணியாற்றினேன்.

  அதன் பிறகு 2004 ஆண்டு கணேசப்புரத்திலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் எனக்கு அரசு பணியில் நியமனம் கிடைத்தது. இது எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. ஏழு ஆண்டுகள் இதே பள்ளியில் ஆங்கிலத்துறை ஆசிரியராகப் பணியாற்றினேன். 2011 ஆண்டு தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கிடைத்தது.

  நான் பாடம் நடத்தும் போது வகுப்பில் நன்றாகப்படிக்கும் இரண்டு மாணவர்களை எழுந்து நிற்க சொல்லி படிக்க வைப்பேன். ஒரு மாணவன் படிப்பான் அதற்கான விளக்கத்தை நான் சொல்வேன். இன்னொரு மாணவன் வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களை கவனித்துக் கொள்வான்.

  நான் கடந்து வந்த பாதையில் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை. இந்த இடம் வந்ததற்கு நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் போராட்டத்தை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நான் ஒருநாள் கூட நான் ஒரு மாற்று திறனாளி என்று எண்ணியதே கிடையாது. மாணவர்களும் மற்ற ஆசிரியர்களும் என்னிடம் மிகுந்து அன்போடு பழகுவார்கள். அவர்களின் ஒத்துழைப்பும் தான் என்னை வழிநடத்துகிறது என்றே சொல்வேன்.

  நான் வந்த இந்த 5 வருடத்தில் பள்ளிக்காக நிறைய திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். நீண்ட நாட்களாக பழைய கட்டிடமாக இருந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கொண்டு வந்தோம்.

  இப்பள்ளியின் முதன்மையான நோக்கமே அனைத்து மாணவர்களும் நன்றாகப்படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும், அவர்களின் முன்னேற்றத்தில் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய நோக்கமும் ஆசையும். அது மட்டுமின்றி தொடக்கப்பள்ளியாக இருக்கும் இப்பள்ளி நடு நிலை பள்ளியாக உயர வேண்டும் அதுவே என்னுடைய லட்சியம்.

  நான் பிள்ளைகளிடம் சொல்வது ஒன்று தான். நீங்கள் அனைவரும் விவசாயக்குடும்பத்திலிருந்து வந்தவர்கள். உங்களின் தந்தை வேலை செய்யும் இடத்தில் ஒருநாள் நேரடியாகச் சென்று பாருங்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அவ்வளவு கஷ்டப்பட்டு உங்களை வளர்க்கிறார்கள். அதைப்புரிந்து ஒவ்வொருவரும் வாழ்க்கை வாழக்கற்றுக் கொளள்ளுங்கள்.

  என் வாழ்வில் எனக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த எனது பெற்றோருக்கும், எனது சகோதிரிக்கும் இத்தருணத்தில் நான் பெரிதும் நன்றிக்கூற கடமைப்பட்டுயிருக்கிறேன். அது போல் இப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் என்னுடைய குரு திரு ஜெகநாதன் அவர்கள் என்னுடைய வழிகாட்டி நெறியாளர் நான் தளர்ந்து போதெல்லாம் எனக்கு தன்னம்பிக்கை வரிகளைக் கொடுத்து ஊக்கப்படுத்தியவர். அதன் பிறகு என்னுடன் பணியாற்றும் இதர ஆசிரியர்களான மங்கையர்க்கரசி, சுமதி, ஜெயசுவேதா, ஜெயசித்ரா போன்றவர்கள் எனக்குப் பள்ளியில் நிறைய உதவிகளைச் செய்து வருகிறார்கள். அது மட்டுமின்றி என்னுடன் பணியாற்றும் இதர ஆசிரியர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

  கொங்கு நாட்டுத் தங்கம்

  “நான் அன்று அவரை வரவேற்று மேடையில் பேசிய பேச்சின் சாரம் இது.

  விழ நாயகர் அருட்செல்வர் அவர்கள் ஒரு சாகப்தம்,

  வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வரும் ஞானதான வள்ளல்,

  நெஞ்சமெல்லாம் வள்ளலாôர் நந்தவனம் வைத்து அறம் வளர்த்த அண்ணல்,

  நினைவெல்லாம் எப்போதும் காந்தியம் மணக்கும் கருணாமூர்த்தி,

  நிலைவிளக்காம் கல்விக் கலைவிளக்கம் தந்த கலங்கரை விளக்கம்,

  நெடுங்கடலாய் செந்தமிழை நித்தம் வளர்க்கும் அருள்நிதி,

  தொண்டால் பொழுது அளந்து தொழில் வளர்த்த தியாகச் செம்மல்,

  தமிழ் ஆராய்ச்சிக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட  தயாநிதி,

  அள்ளி அள்ளி தானம் கொடுத்து ஆனந்தம் பூ பூக்கும் அமுத சுரபி,

  குற்றால அருவி தரும் கொடையும் ஒரு மூன்று மாதம்,

  மழை கொடுக்கும் ùôகடையும் ஒரு ஆறு மாதம்,

  பசு கொடுக்கும் கொடையும் ஒரு பத்துமாதம், ஆனால்

  அருட்செல்வர்க்கோ ஒவ்வொரு நாளும் கொடையே வாழ்க்கையாயிற்று,

  சூரியன் உதிக்காத நாள் இருக்கலாம்,

  அருட்செல்வர் கொடை தராத நாளே இல்லை,

  தமிழிசையை நாளும் போற்றி வளர்க்கும் கனக மணிச் சரவிளக்கு,

  எத்துறையை எடுத்தாலும் அத்துறையில் தோய்ந்த நுட்பமான,

  நுணுக்கமான அறிவு கொண்ட ஞான தீபம்,

  தங்கத் தறியிலே நெய்யப்பட்ட வைர நெசவு

  வானச்சூரியன் வம்சத்திலே வந்த ஞானச் சூரியன்,

  ஆட்சியாளர்களுக்கும், தொழில் புரிவோருக்கும்,

  தொழில் முனைவோருக்கும் எல்லா நிலையும் அறிவுரையையும்,

  ஆலோசனையையும் வழங்க  என்றுமே தயங்காத அறிவு ஜீவி.

  இவரின் இனிமையான பேச்சு மற்றவர்களை மயக்கும் ஒரு மந்திரக்கோல்.

  சொற்களை தங்கச்சங்கிலியாக்கவும் இவரால் முடிகிறது.

  சந்தனச் சிற்பமாகவும் சாத்தியமாகிறது.

  இவரிள் மந்திரச் சொற்களுக்குள் ஒரு சக்தி அலை பாய்ந்து கொண்டே இருக்கும்.

  வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடும் இவரின் மனித நேயமும், அனைவரையும்

  உறவாக கருதி அணைக்கும் கரங்களும் இவரை கருணை கடலாக்கியது.

  தாய் உள்ளத்தோடு பாசம் காட்டுவதில் இவர் தாயுமானவரானார்.

  இவரின் தத்துவ வேதமும், சத்திய மார்க்கமும் உயர்ந்த வாழ்வின் தாரக மந்திம் ஆகியது.

  இவரின் தெய்வ பணிகளும், திருப்பணிகளும் இவரை வற்றாத ஜீவ நதியாக்கியது. அந்த உன்னத புருஷரை, மாமேதையை, வாழும் தெய்வத்தை, ஞான மாணிக்கத்தை, நறுமணத் தென்றலை, ஓயாது அடிக்கின்ற தென்றலும், ஒயிலலாக செல்லுகின்ற நதியும் கூட புகழாகப்பாடும்.

  இவரின் மங்காத புகழை,

  சொன்னால் வாய் மணக்கும்

  அந்த கோகினூர் வைரத்தை இப்படிச் சொல்லி வரவேற்கிறேன்.

  மாசாறு பொன்னே! வலம்புரி முத்தே!

  காசாறு விரையே! கரும்பே தேனே!

  மானே! மணியே! மஞ்சள்! குங்குமமே!

  தேனே ! திருவே திருவருளின் கைப்பொருளே!

  மீனேறும் காவிரியே!

  விந்தியக் கோடும் உண்மை, விரிகடல் அலையும் உண்மை, சூரியக்கதிரும் உண்மை, சந்திரன் ஒளியும் உண்மை என்பது போல் அருட்செல்வர் அவர்கள் பலநூறு ஆண்டுகள் வாழ்வதும் உண்மை என்று சொல்லி வணங்கி அவர் வாழ்கின்ற காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்ற மகிழ்வோடு இந்த மாபெரும் சகாப்தத்தை உள மகிழ்வோடு உடுமலை பெருமக்கள் சார்பிலே வரவேற்கிறேன்.

  சித்தர்களும், யோகிகளும், மகான்களும், புனிதர்களும் ஒரு இடத்திலே தன் புனித பாதத்தைப் பதிக்கும் போது அந்த இடம் மேலும் புனிதமாகும்.

  ஞானம் வழங்கும் நாயகன் வந்தால்

  வானம் வழங்கும் என்றும் சொல்வார்கள்.

  அந்த வகையில் அருட்செல்வர் அவர்களின் அன்பு வருகையால் இங்கே அழகு ஜொலிக்கிறது. இது தேவர் உலகமோ என்று தென்றல் வியக்கிறது.

  அதனால் நாம் நெஞ்சமெல்லாமல் தேன்போல் இனிக்கிறது.

  நினைவெல்லாம் பூப்போல் மணக்கிறது

  புனிதம் இங்கே பூக்கோளாய் மலர்கிறது.

  புண்ணியம் இங்கே புனல்களால் நிறைகிறது.

  எனச் சொல்லி அவரை அன்புடன் வரவேற்கிறேன்.

  என்று முடித்தேன்.

  கூட்டம் பலத்த ஆரவாரத்துடன் எழுந்து நின்று கரவொலி எழுப்பி அவரை வரவேற்று மகிழ்ந்தது.

  நான் நிகழ்த்திய வரவேற்புரையை இன்று பதிவு செய்வதில் அளவுகடந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவரைப்பார்க்கும் போது மனதிலே தன்னம்பிக்கை துளிர் விடும்.  அவரிடமுள்ள ஆன்மீகத்தின் ஒளியும், தெய்வீக அதிர்வுகளும் அருகில் இருப்போருக்கும் பரவும். இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தமைக்கு பெரும் மகிழ்வு அடைந்தேன்.

  தீர்மானம்… தீர்வாகட்டும்

  இன்றைய கால சூழ்நிலையில், நம்மில் சிலருக்கு வாழ்வில் கல்வி, வேலை, வாழ்க்கைத்துணை, எதிர்கால வசதிகள் வரை வெற்றியையும், பல பேருக்கு தோல்வி, குழப்பங்களையும் தருவதாக அமைந்து விடுகிறது.

  அவசரத்தில் எடுத்த முடிவுகள், நிதானத்தில் சங்கடமாக முடிகின்றதை நாம்  அன்றாடம் அனுபவமாக பார்க்கிறோம். இதற்கு, ஒரு தீர்வு தெரியாமல், தெளிவு கிடைக்காமல், ‘விதியின் மீது பழி’ சுமத்தி விட்டு, வாழ்வை சிரமத்தில் ஓட்டுகின்றோம். இதன் உண்மையான காரணம் என்ன? என்பதை ஆராய்வதில்லை. இப்போது சற்றே அகத்தாய்வாய் ஆராய்வோம்!

  தீர்மானம்

  இந்த ஒற்றை வார்த்தையில் இருக்கிறது எதிர்கால வாழ்வின் உயிர் ஓட்டம். இன்று இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாழ்க்கை முறையை தீர்மானிப்பதே, அவரவர்கள், எடுக்கும் தீர்மானங்களே. இந்த தீர்மானம் என்பதை திடமாக, சுயமாக எடுத்தாலும் பிறரின் எண்ணத்தில் தீர்மானிப்பதால்தான் பல பிரச்சனைகளுக்கும், குழப்பங்களுக்கும் காரணமாக அமைகிறது. சுருக்கமாக சொன்னால்… தவறான தீர்மானங்கள், தவறான வாழ்விற்கு அஸ்திவாரமாக அமையும். அதனால், எடுக்கப்படும் தீர்வுகள் தவறாக அமையும்.

  பேருந்து ஏறும் முன் போகுமிடம், சேருமிடம், நேரம் காலம், முடிக்க வேண்டிய காரியங்கள் குறித்து ஆழ்ந்து சிந்தித்துவிட்டு பயணிக்க வேண்டும். ஏறியபின், தீர்மானிப்பதோ, பிறரின் வழி யோசனைகளையும் மேற்கொண்டால், பயணம் மட்டுமின்றி அந்த காரியமும் பாதியில் கெட்டு விடும். ஒரு நாள் பயணத்திற்கே ‘தீர்மானித்தல்’ என்பது இவ்வளவு முக்கியமாகிறது. என்றால், இந்த ஜென்மம் முழுவதும் தொடரும் வாழ்விற்கு எவ்வளவு முக்கியத்துவம் தீர்மானித்தலுக்கு தரப்பட வேண்டுமென்று யோசியுங்கள். முதலில், தீர்மானம் என்பது என்ன? தீர்வுக்கும், தீர்மானத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? இவைகள் நம் வாழ்வை எப்படி மாற்றுகிறது? அவற்றை அறிவோம்.

  பிரச்சனை வந்த பின்பு எடுப்பது தீர்வு. பிரச்சனை வரும் முன்பு தடுப்பது தீர்மானம். ஒரு சிலர் எடுத்தோம், கவிழ்த்தோம், வெட்டு  ஒன்று,  துண்டு இரண்டு என்ற பாணியில் காரியங்களுக்கு தீர்மானிக்காமல் முடிவு கட்டும் விதமாக ‘தீர்வு’ சொல்வார்கள். இந்த தீர்வு தற்காலிகமே தவிர, நாளடைவில் இந்த தீர்மானமற்ற தீர்வுகளே பிற்காலத்தில் பெரும் பிரச்சனைகளாக கிளைவிட்டு வளரும்.

  அதேபோல், தீர்மானம் என்பது முதலில் எடுத்துக் கொண்ட காரியத்தை பற்றி நிதானமாக சிந்தித்து, ஏற்படும் விளைவுகளை உணர்ந்து அதாவது ஏற்கனவே சரியாக திட்டமிட்டு, தீர்மானிக்காததால் ஏற்பட்ட சிரமங்களை உணர்ந்து ஒரு முறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டும் அல்லது அனுபவப்பட்டவர்களின் அறிவுப்பூர்வமான யோசனைகளை மனதில் வைத்து கொண்டு தன் மனதின் தீர்மானத்தையும் ஒரு சேர சிந்தித்து ஆலோசனை செய்து கல்வி, வேலை, வாழ்க்கை துணை, எதிர்கால திட்டங்கள் குறித்த தீர்மானங்களை நிர்ணயித்தால் தேவையில்லாத குழப்பங்கள் தவிர்க்கப்படலாம்.

  அதே சமயம், தீர்மானம் செய்யும் நோக்கத்துடன் சிந்திக்கும் போது, ஆலோசனை செய்யும் போதும், உணர்ச்சி வசப்படக்கூடிய நிலை வந்தால் கண்டிப்பாக அவசரப்படாமல் நிதானிக்க வேண்டும். உணர்வு நிலையில் செயல்பட வேண்டியவற்றைப் பற்றி முழுமையாக, அறிய வேண்டியவற்றை அறிதல் அவசியம். அதன் பிறகு நமது சிந்தனை, செயல், செயல்படுத்தக் கூடியதுதான் என்று திட்டவட்டமாக தீர்மானித்த பின், அதில் முழுமையாக இறங்க வேண்டும்.

  நம் அறிவுக்கு எட்டியவரை அது சரிப்பட்டு வராது என்று உணர்ந்தால், உடனே மாற்றி யோசித்தல் நல்லது. இதற்காக மனத்திடமும், மதிநுட்பமும் அவசியம். காரணம் என்னதான் தீர்மானம் பற்றி விழிப்புணர்ச்சியுடன் இருந்தாலும், செயல்முறை என்று வரும்போது, மற்றவர்களால் தடுமாற்றம் வரலாம். என்றாலும், தன் தீர்மான உரிமையை விட்டு விடக்கூடாது. தீர்மானம் எடுப்பதில் மிகுந்த கவனமும், எந்த தோல்வி வந்தாலும் இழக்காத தன்னம்பிக்கையும், பொறுமை, பொறுப்புடன் சிந்தித்தாலும், தீர்மானத்தில் திடமும் மிக முக்கியம்.

  பொதுவாக, ஒரு சிலரிடம் அவர்கள் எடுத்த தீர்மானத்தை குறித்து ஒன்றுக்கு, இரண்டுமுறை உரத்த குரலில் அழுத்தம், திருத்தமாக கறாராக, “சரியாக தீர்மானித்து விட்டாயா? அப்புறம் சங்கடப்படக்கூடாது” என்று கேட்டாலே, தன் தீர்மானம் தவறாகி விடுமோ என்ற சந்தேகமும், பயமும் வந்து குழப்பத்தில் விழுந்து, எடுத்த நல்ல தீர்மானத்தை கூட மாற்றிக் கொள்வார்கள்.

  ஆக, “பதறும் காரியம் சிதறும்” என்ற மெய்வாக்கின்படி உணர்ச்சிவசப்பட்ட குழப்ப நிலையில், தீர்மானிக்கும் செயல்கள் குறைகளாக, குற்றங்களாக, அவமானங்களாக மாற வாய்ப்புள்ளது. இன்றைய, இளைய சமூகத்தினரின் வாழ்க்கை முறை உணர்ச்சி வசப்படுதல்களால் பின்னப்பட்டிருப்பதால்தான், சமூக தவறுகளில் மிக எளிதாக சிக்கிக் கொள்ள நேரிடுகிறது. அதிலும், இதுபோன்ற சிக்கல்கள் ‘காதல்’ விஷயங்களில் தாராளமாக நடக்கிறது.

  எனது நண்பர் கல்லூரி மாணவியை காதலித்து, திருமணம் வரை ஏற்பாடானது. இருவர் வீட்டிலும் பலத்த எதிர்ப்பு. காரணம், அந்த மாணவியை சமூகத்தில் பெரிய அந்தஸ்தான பதவி, படிப்புக்காக பெற்றோர்கள் தீர்மானித்திருக்க, அதோடு, எனது நண்பரின் வேலையற்ற நிலையையும் பார்த்து எதிர்த்தனர். முடிவு, அவசரமாக தடையை மீறிய திருமணம் ஒரே ஆண்டில் பிள்ளைபேறு என சந்தோஷத்த ஜோடிகள் இன்று வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முடியாமல் வறுமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம்,    தீர்மானமில்லா திருமணம் என்பது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமாகிறது என்பதை அறிவோம்.

  ஒரு வகையில் தீர்மானம் என்பது கூட இலட்சியத்தை போலத்தான் வாழ்ககை முழுமைக்கும் இருத்திக் கொள்வது இலட்சியம். அந்த இலட்சியத்தை அடைய முயற்சிக்கும்போது, தடைகள், பிரச்சனைகள் வராமல் காப்பதுதான் தீர்மானம். இலட்சியத்தை தொட நல்ல திடமான தீர்மானமே காரணம்.

  கல்வி விஷயத்தில் மேற்கொண்டு “எதை படிப்பது?” என்ற குழப்பமான மனநிலையில், ஒவ்வொருவரும் ஒருகருத்தைச் சொல்ல, தீர்மானிக்கக் கூட அவகாசமின்றி, பிறரின் ஆலோசனைத் தூண்டுதலில் தீர்மானித்த எத்தனையோ இளைஞர்கள், ஆலோசனை சொன்னவர்கள் மீதும், தான் எடுத்து கொண்ட படிப்பின் மீதும் வெறுப்பு கொண்டு புழுங்குகிறார்கள்.

  இன்று பல  குடும்பங்களின் உறவுமுறை, பிரச்சனைகளுக்கு கூட இந்த திடனற்ற தீர்மானங்கள்தான் மூலக்காரணமாக உள்ளது. என் வாழ்க்கை இப்படி கெட்டுப் போக காரணம் இவர்கள், பெற்றோர்கள், கணவன் – மனைவி, நண்பர்கள், குழந்தைகள் தான் என்று வெறுப்பையும், பழியையும் கொட்டுகிறார்கள்.

  ‘நன்றாக தீர்மானிக்காதது நம் தவறு’, என்று யோசிப்பதில்லை. தீர்மானம் என்பது நம் தனி உரிமை. இதை மறந்து அவசரகதியில் முடிவெடுத்து, அவமானங்களால் தோல்வி, விரக்தி என்று தற்கொலை வரை செல்கிறார்கள் இதற்கு தீர்வாக…

  பெற்றவர்களும், பிள்ளைகளின் தீர்மானம் குறித்து அக்கறை எடுத்துக்கொண்டு, அவர்களுக்காக கலந்து ஆலோசிக்க வேண்டும். பிள்ளைகளின் தீர்மானங்கள் தவறிப்போவது போல தங்களின் தீர்மானங்களும்  தவற வாய்ப்புண்டு என்பதை உணர்ந்து, அவர்களின் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து, தடுமாறும் போது உடனிருந்து உதவ வேண்டும்.

  வளர்ந்துவிட்ட பிள்ளைகளின் அறிவுத்திறமான  தீர்மானங்களை பெற்றோர்கள் தற்காலிகமாக தீர்மானிக்க கூடாது. அதை அவர்கள் பொறுப்பில் விட்டுவிட்டு, அவர்கள் தீர்மானங்களின் அனுபவ தீர்மானத்துக்கு செவி சாய்ப்பார்கள். அவர்கள் சந்தோஷத்திலும், துயரப்பட்டாலும் அது பெற்றவர்களையும் வேதனைப்படுத்தும். பாச பந்தத்திற்கு ஆட்பட்டிருப்பதால், வாழ்வது நம் பிள்ளைகள்தானே என்ற தீர்மானங்களை புரிந்து கொண்ட பின் இளைய சமூகம் பெற்றவர்களையும் மதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தால்… உறவுகள் உன்னதமாகும். ஆக, பிரச்சனைகளுக்கு பின் வரும் தீர்வுகளை விட, முன் வரும் தீர்மானங்களுக்கு முன்னுரிமை, மதிப்பு கொடுத்து, சந்ததியர்கள் முன்னேற தீர்மானிப்போம். அதற்கு பிரச்சனைகளுக்கு தீர்மானமே! தீர்வாகட்டும்!

  பன்றிக்காய்ச்சல்

  பன்றிக்காய்ச்சல் என்பது ஏ இன்ப்ளூயென்சா (Influenze A) வகை வைரஸ் கிருமியினால் பன்றிக்கு வரக்கூடிய சுவாச நோய். ஆர்.என்.ஏ (RNA)வை அடிப்படையாகக் கொண்ட இந்த நுண்ணுயிர்களுக்கு உருமாறும் திறன் உண்டு. இந்நோய் ஏற்கனவே பன்றிக்காய்ச்சல் வந்த ஒருவரைத் தொடுதல் அல்லது அவருக்கு அருகில் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.

  பன்றிக்காய்ச்சல் ‘சுவைன் புளூ’ (Swine flu) என்ற வைரஸால் பரவுகிறது. இது ஆர்த்தோமைசோவெரிடேட் (Orthomyxoviridae) என்ற வைரஸ் ஆகும். இவ்வாறு மனிதனிடமிருந்து மனிதனுக்குப் பரவும் இந்தப் பன்றிக் காய்ச்சல், பன்றியின் மாமிசத்தை உண்பதால் பரவாது என்பது குறிப்பிடத் தக்கது.

  சுவைன் புளூ வைரசிலேயே 5 வகை உள்ளன.

  எச் – 1 என் 1 (H1 N1),

  எச் – 1 என் 2 (H1 N2),

  எச் – 2 என் 1 (H2 N1),

  எச் – 3 என் 1 (H3 N1),

  எச் – 3 என் 2 (H3 N2) மற்றும்

  எச் – 2 என் 3 (H2 N3).

  அதில் இப்பொழுது பரவியுள்ள வைரஸை எச்1 என்1 என்று பட்டியலிட்டு உள்ளனர்.

  வகைகள்

  மூன்று வகையான இன்ஃபுளூயன்சா வைரஸ்கள் மனிதர்களைத் தாக்குகிறது. அவை,

  • இன்ஃபுளூயன்சா ஏ (A)
  • இன்ஃபுளூயன்சா பி (B)
  • இன்ஃபுளூயன்சா சி (C)

  இன்ஃபுளூயன்சா ஏ (A) 

  இன்ஃபுளூயன்சா (A) பல துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை,

  • எச் 1 என் 1
  • எச் 1 என் 2
  • எச் 2 என் 3
  • எச் 3 என் 1
  • எச் 3 என் 2

  முக்கியமாக பன்றிகளில் மூன்று முக்கிய இன்ஃபுளூயன்சா வைரஸ்கள் காணப்படுகின்றன. அவை,

  • எச் 1 என் 1
  • எச் 1 என் 2
  • எச் 3 என் 2

  இதில் (எச் 1 என் 1) மட்டும் அதிகமான நோய் தாக்குதலுக்குக் காரணமாகிறது.

  இன்ஃபுளூயன்சா பி (B)

  இந்த வகையான இன்ஃபுளூயன்சா பன்றிகளில் காணப்படுவதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இன்ஃபுளூயன்சா சி (C)

  இந்த வகையான வைரஸ் மனிதர்கள் மற்றும் பன்றிகளையும் பாதிக்கிறது. பறவைகளை இது பாதிப்பதில்லை இந்த வகை வைரஸ் மிகக் கொடுமையான நோய் தாக்குதல்களை ஏற்படுத்துவதில்லை.

  பரவும் முறைகள்

  மூன்று முறைகளில் இந்நோய் மனிதனைத் தாக்குகிறது.

  • பன்றிகளுக்கிடையில் பரவுகிறது.
  • பன்றியிலிருந்து மனிதர்களுக்குப் பரவுகிறது.
  • மனிதர்களுக்கிடையில் பரவுகிறது.

  பன்றிகளுக்கிடையில் பரவும் முறை

  இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்கிலிருந்து பாதிக்கப்படாத விலங்கிற்கு நேரடித் தொடுதலின் மூலம் பரவுகிறது. முக்கியமாக விலங்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கூட்டாக ஒன்று திரட்டிக் கொண்டு செல்லும் போது பரவுகிறது. இதன்மூலம் விலங்குகளுக்கு வைரஸ் நேரடியாக பரவுகிறது மற்றும் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்குத் தும்மல் ஏற்படும் போது காற்றின் மூலமாக எளிதாகப்பரவுகிறது. குறிப்பிட்ட நாட்களில் அல்லது ஒரு சில நாட்களில் அனைத்து விலங்குகளுக்கும் பரவுகிறது.

  பன்றியிலிருந்து மனிதர்களுக்குப் பரவும் முறை

  முக்கியமாக மனிதர்கள் விலங்குகள் (பன்றிகள்) வளர்க்கும் இடத்தில் வேலைபார்க்கும் பொழுதோ, அவற்றிற்குப் பராமரிப்புக் கொடுக்கும் போதோ பன்றியிலிருந்து மனிதர்களுக்கு இந்நோய் பரவுகிறது.

  அறிகுறிகள்

  • காய்ச்சல்
  • மூக்கிலிருந்து நீர் வடிதல்
  • இருமல்
  • தொண்டை வலி
  • மூச்சுவிடுதலில் சிரமம்
  • பசி இல்லாமை
  • வாந்தி
  • வயிற்றுப்போக்கு
  • தசைவலி
  • நீலம் மற்றும் சாம்பல் நிறத் தோல்
  • தோல் எரிச்சல்
  • தண்ணீர் குடிக்க முடியாத நிலை
  • உடல் எடை குறைதல்
  • உடல் சோர்வு

  மனிதர்களுக்குப் பரவுதல்

  இருமல் மூலம் வைரஸ்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குக் காற்று வழியாக பரவும். வைரஸ் உள்ள இடங்களைத் தொட்டால் பின்னர் வாய் மற்றும் மூக்குப் பகுதியைத் தொடும் போது நமக்கு வைரஸ் பரவி விடும்.

  சிகிச்சை முறைகள்

  பன்றிகளுக்கு

  சுவைன் இன்ஃபுளூயன்சா பன்றிகளின் மூலமாகப் பரவுகிறது. பன்றிகளுக்குத் தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலமாக இந்நோய் பரவுதலைத் தடுக்கலாம்.

  முதலில் பாதிக்கப்பட்ட விலங்கை தனிமைப் படுத்த வேண்டும். விலங்குகளுக்குத் தகுந்த முறையில் தடுப்பூசி களைப் போடுவதன் மூலமாகவும் கிருமிகளைத் தாக்கும் மருந்துகளைப் பாதிக்கப்பட்ட விலங்கிற்குக் கொடுப்பதன் மூலமாகவும் இந்நோய் பரவுவதைத் தடுக்கலாம்.

  மனிதர்களுக்கு

  • பாதிக்கப்பட்ட மனிதர்களுக்குப் பன்றிக்காய்ச்ச லிற்கான அறிகுறிகள் ஏதேனும் தெரிந்தால் அவர்களைத் தனிமைப்படுத்தி முக உறையை அணிவித்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
  • மருத்துவர்களின் ஆலோசனைப்படி (ஆன்டிவைரல்) அதாவது வைரஸ்களைக் குறைக்கக்கூடிய மருந்து உட்செலுத்தப்படுகிறது.
  • இதன்மூலம் பின்விளைவுகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
  • மற்றும் முன்கூட்டியே சுவைன் ஃபுளூவிற்கான தடுப்பூசியைப் போடுவதன் மூலமாகவும் இந்நோய் வராமல் இருக்கலாம்.

  தடுப்பு முறைகள்

  • பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முதலில் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க வேண்டும்.
  • பன்றி வளர்ப்புத் தொழிலாளர்கள் பன்றிக்கு நோய் தாக்கப்பட்டதை அறிந்திருந்தால் அந்த விலங்கினைத் தனிமைப்படுத்த வேண்டும்.
  • பராமரிப்பு முறைகளைக் கையாளும் போது முகத்தில் முக உறைமற்றும்         கையுறைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட விலங்கிற்குத் தடுப்பூசி போட வேண்டும்.

  மனிதர்களுக்குப் பரவும் முறையைத் தடுத்தல்

  • இந்நோய் மனிதர்களுக்குப் பரவாமல் தடுக்க பாதிக்கப்பட்ட நபரைத் தனிமைப்படுத்த வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட நபர் மற்றவர்களைத் தொடுவதன் மூலமாகவோ தும்முவதன் மூலமாகவோ, இருமுவதன் மூலமாகவோ பரவுகிறது.
  • இதனால் அவர்கள் மற்றவர்களிடம் நேரடி தொடர்பு கொள்வதைத் தடுக்க வேண்டும்.
  • தொற்று ஏற்பட்ட முதல் ஐந்து நாட்களில் இந்நோய் எளிதாக மற்றவர்களுக்குப் பரவுகிறது.
  • குழந்தைகளும் இந்நோயினால் பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • முக்கியமாக முறையான கை கழுவும் முறையினைப் பின்பற்றுவதன் மூலமாக இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • தேவையில்லாமல் மற்றவர்களைத் தொடுவதோ கைகளைக் குலுக்கவோ கூடாது.
  • மற்றவர்களுக்கு முன்னால் இருமல் ஏற்படும் போதோ, தும்மல் ஏற்படும் போதோ கைக்குட்டையினை உபயோகப்படுத்த வேண்டும்.

  தடுப்பூசி போடுதல்

  • தடுப்பூசி போடுவதன் மூலமாக இந்நோயினைத் தடுக்கலாம்.
  • இதற்காக சுவைன் ஃபுளூ வேக்சின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  தடுப்பூசி போடுவதன் மூலமாக உடலுக்குத் தேவையான ஆன்டிபாடி கிடைக்கிறது. இதனால் உடலின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகிறது. இதனை வருடம் ஒருமுறைபோட வேண்டும்.

  வெற்றி உங்கள் கையில்- 39

  எல்லோரும் நண்பர்களே…?

  வாழ்க்கையில் நாள்தோறும் நாம் பலரை சந்திக்கிறோம். பலரோடு தொடர்புகொள்கிறோம். பலவித உறவுகளை வளர்த்துக்கொள்கிறோம். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இணைந்து பழகி, சேர்ந்து வாழ்கின்ற நிலை நம் வாழ்க்கையில் தவிர்க்க இயலாத ஒன்றாக அமைந்துவிடுகிறது.

  “நம்மிடம் பழகியவர்கள் அனைவரையும் நண்பர்களாக ஏற்றுக்கொள்ளலாமா?” என்ற கேள்வி இப்போது எழுகிறது. நன்றாக சிரித்துப் பேசுபவர்களையெல்லாம் நண்பர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது. இதேபோல், நம்மோடு சிரித்துப் பேசாதவர்களையும் நண்பர்கள் அல்ல என்று ஒதுக்கிவிட முடியாது. இந்தநிலையில், எது நட்பு? யார் நண்பர்கள்? என்பதை தெளிவாகப் புரிந்துகொண்டால், வாழ்க்கையில் வெற்றிக்கனியைப் பறிக்கலாம்.

  வாழ்க்கையில் ‘வெற்றி’ என்பது நல்ல நண்பர்களின் கூட்டணியால் உருவாக்கப்படுகிறது. “நண்பர்களின் அரவணைப்பு” மிகச்சிறந்த பொறுமையையும், அமைதியையும், தெளிவான வாழ்க்கை பாதையையும் ஒருவருக்கு வழங்குகிறது. ஆனால், அதேவேளையில் நல்ல நட்பை தேர்ந்தெடுப்பதில் தடுமாறுபவர்களின் வாழ்க்கையில் “தலைகீழ் மாற்றங்கள்” உருவாகிவிடுகிறது. அவர்கள் அதிகமான பிரச்சினைகளிலும் சிக்கிக்கொள்கிறார்கள்.

  நல்ல நட்புக்கு அடிப்படைத் தேவை “நம்பிக்கை” என்பார்கள். “இவர் எனது வளர்ச்சிக்கு கண்டிப்பாக உதவுவார்” என்ற நம்பிக்கையில்தான் இரண்டு மனிதர்கள் நண்பர்களாகிறார்கள். இந்த நம்பிக்கையில் “சிறு நூல் அளவு விரிசல்” ஏற்பட்டாலும், ‘நட்பு பாலம்’ உடைந்துவிடும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நட்பை பேணிப் பாதுகாக்கும்போதுதான் அந்த நட்பு சிறந்த நட்பாக மாறுகிறது.

  அது ஒரு பெரிய காடு.

  அந்தக் காட்டில் பல கொடிய வன விலங்குகள் வாழ்ந்து வந்தன.

  ஒருநாள் அந்த அடர்ந்த காட்டுக்குள் ஒரு மனிதர் சென்றுவிட்டார். அந்த மனிதரைப் பார்த்த காட்டு விலங்குகள் ஒவ்வொன்றும் பலவிதங்களில் அவரைப் பயமுறுத்தின.

  அப்போது – ஒரு புலி அந்த மனிதரை விரட்டத் தொடங்கியது. புலியைப் பார்த்த அந்த மனிதர் வேகமாக ஓடத் தொடங்கினார். புலி விடாமல் அவரைத் துரத்தியது. “புலியிடமிருந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும்” என்று எண்ணிய மனிதர் அருகில் இருந்த ஒரு மரத்தின்மீது மிக வேகமாக ஏறினார்.

  சிறிது நேரத்தில் – மரத்தின் உச்சியை அடைந்துவிட்டார். மரத்தின் உச்சிக்குச் சென்றதும், மிகப்பெரிய அதிர்ச்சி அவருக்குக் காத்திருந்தது. மரத்தின் உச்சியில் பெரிய மனித குரங்கு ஒன்று அமர்ந்திருந்தது. பயந்து நடுங்கினார் அந்த மனிதர்.

  “என்னை ஒரு புலி துரத்துகிறது. அதற்குப் பயந்துதான் நான் இந்த மரத்தில் ஏறினேன். என்னை ஒன்றும் செய்துவிடாதே. நீ எனக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என்று குரங்கிடம் கெஞ்சினார் அந்த மனிதர்.

  “மனிதா… நீ என்னைத் தேடி வந்துவிட்டாய். உனக்குப் பாதுகாப்பாக நான் இருப்பேன். நீ கவலைப்படாதே” என்றது அந்த மனிதக் குரங்கு.

  இரவு நேரம் வந்தது.

  மரத்தின் அடியில் புலி காத்திருந்தது.

  “எப்படியும் இந்த மனிதன் கீழே வராமலா போய்விடுவான்” என்று எண்ணி, நம்பிக்கையோடு இருந்தது. ஆனால், இரவு வெகுநேரம் ஆனபின்பும், அந்த மனிதர் கீழே இறங்கவே இல்லை. குரங்கும், அந்த மனிதரும் ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்கள். “குரங்கு தூங்கும்போது மனிதர் விழித்திருக்கவும், மனிதர் தூங்கும்போது குரங்கு விழித்திருக்கவும் வேண்டும்” எனவும் உடன்படிக்கை செய்துகொண்டார்கள். இரவு நேரத்தில் முதலில் அந்த மனிதர் தூங்க ஆரம்பித்தார். அப்போது, மனித குரங்கு அவரைக் காவல் காத்தது. பின்னர், அந்த மனிதக் குரங்கு தூங்க ஆரம்பித்தது. இப்போது மனிதர் குரங்கை காவல் காத்தார்.

  இந்தவேளையில், புலி தனது பசியைத் தீர்த்துக்கொள்ள ஒரு தந்திரம் செய்தது. “மனிதரையும், குரங்கையும் பிரித்துவிட்டு குறுக்கு வழியில் என் பசியைப் போக்க வேண்டும்” என புலி எண்ணியது. மெதுவாக மனிதனைப் பார்த்து அந்தப் புலி பேச ஆரம்பித்தது. “மனிதா நான் உன்னை விட்டுவிடுகிறேன். எனக்கு இப்போது பசி அதிகமாகிவிட்டது. உன் அருகிலிருக்கும் மனிதக் குரங்கு தூங்கிக் கொண்டிருக்கிறது. அதனை நீ கீழே தள்ளிவிடு. உன்னை நான் விட்டுவிடுகிறேன்” – என புலி சொன்னது.

  மனித மனமும் ஒரு குரங்குதானே? எனவே, அந்த மனிதர் குரங்கின் மனதைவிட மிக கீழ்த்தரமாக சிந்திக்க ஆரம்பித்தார். “உயிரோடு வாழ வேண்டும்” என்ற எண்ணம் அவருக்குள் மேலோங்கியது. இதனால், கிளையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த குரங்கை கீழே தள்ளிவிட்டுவிட்டார். “இந்த மனிதன் இப்படிச் செய்துவிட்டானே” என்று கீழே விழுந்த குரங்கு கவலைப்பட்டது.

  அப்போது, மிக வேகமாக குரங்கை நோக்கி புலி ஓடி வந்தது.

  “நீ பயப்படாதே. உன்னை நான் ஒன்றும் செய்யமாட்டேன். எனக்கு அந்த மனிதரின் மாமிசம்தான் வேண்டும். இந்த மனிதன் எவ்வளவு கீழ்த்தரமான புத்தியோடு இருக்கிறான் என்பதை நீ தெரிந்து கொள்வதற்காகத்தான் உன்னை கீழே தள்ளிவிடுமாறு அந்த மனிதரிடம் சொன்னேன்” – என்றது புலி..

  குரங்கு பயந்துபோனது.

  “நீ பயப்படாதே உன்னை நான் விட்டுவிடுகிறேன். ஆனால், நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். மரத்தில் ஏறி உச்சிக்குச் சென்று உன்னை கீழே தள்ளிய, நம்பிக்கைத் துரோகியான அந்த மனிதனை நீ கீழே தள்ளிவிடு. நான் அவனை கொன்று தின்றுவிடுகிறேன்” என்றது புலி.  “நீங்கள் சொல்வதுபோலவே கண்டிப்பாகச் செய்வேன். என்னை விட்டுவிடுங்கள்” என்று புலியிடம் சொல்லிவிட்டு மரத்தின் உச்சிக்குச் சென்ற குரங்கு, வேகமாக அந்த மனிதரிடம் வந்தது.

  “இந்தக் குரங்கு என்னை கீழே தள்ளிவிட்டுவிட்டால், என் உயிர் போய்விடுமே” என பயந்து நடுங்கினார் அந்த மனிதர்.

  “மனிதா நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை. என்னை நம்பி அடைக்கலம் கேட்டு நீ வந்தாய். உன் நம்பிக்கைக்கு நான் துரோகம் செய்யமாட்டேன். புலியிடமிருந்து உன்னைக் காப்பேன். புலியின் பிடியிலிருந்து நான் தப்பித்துக்கொள்ளவே உன்னை மரத்திலிருந்து கீழே தள்ளிவிடுவேன் என்று சம்மதித்தேன். நீ எந்தவித கவலையும் இல்லாமல் இருக்கலாம்” என்றுசொல்லி சிரித்தது அந்த குரங்கு.

  இந்த நிகழ்வு – “குரங்கிடம் இருக்கும் ‘நல்ல மனம்’ மனிதரிடம் இல்லை” என்பதை சுட்டிக்காட்டுகிறது. நட்பை எதிர்பார்த்து ‘நட்புணர்வோடு’ நம்மிடம் பழகியவர்களிடம், நாம் உண்மையோடு நட்பு பாராட்ட வேண்டும் என்ற நல்ல தகவலையும் இது விளக்குகிறது.

  உயிர்போகும் நிலை வந்தால்கூட பாசமுள்ள நட்பு மாறாத தன்மை கொண்டது. வாழ்க்கையில் வெற்றி பெற விரும்புபவர்கள் நல்ல நட்பைத் தேர்ந்தெடுத்து உண்மையுள்ள நண்பராக தங்களை தயார்படுத்திக்கொள்வது இன்றைய காலகட்டத்தின் அவசியத் தேவையாகும். இதனால்தான் திருவள்ளுவர்,

  முகம்நக நட்பது நட்பன்று; நெஞ்சத்து

   அகம்நக நட்பது நட்பு  – என்று குறிப்பிடுவார்.

  “புன்முறுவல் காட்டி, சிரித்து மகிழ்வதுபோல, பாசாங்குசெய்து நண்பர்களாய் இருப்பது, உண்மையான நட்பு அல்ல. நண்பர்கள் இருவரது மனங்களும் உண்மையிலேயே மகிழும்படி நட்பு கொள்வதுதான் உண்மையான நட்பு” – என்பது திருவள்ளுவர் நமக்குக் காட்டும் “வழிகாட்டல்” ஆகும்.

  நண்பர்களை நினைத்த நேரத்தில் உடனே உருவாக்கிவிட முடியாது. இதேபோல்;, நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பதற்கும் பழகிக்கொள்வது நல்லது. நல்ல நண்பர்களைப் பெற விரும்புபவர்கள், முதலில் தாங்கள் நல்லவர்களாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். மற்றவர்கள்மீது நம்பிக்கை வைக்கும் சிறந்த குணத்தையும் பெற்றிருக்க வேண்டும். நண்பர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் காலங்களில் “எனக்கென்ன?” என ஒதுங்கிவிடாமல், அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும். ஏதேனும் தவறு செய்துவிட்டால், “என்னை மன்னித்துவிடு நண்பா” என்று மன்னிப்பு கேட்பதற்கும் தயக்கம் காட்டாமல் இருக்க வேண்டும்.

  “எல்லோரையும் நண்பர்களாக மாற்ற வேண்டும்” என்ற முயற்சியில் ஈடுபடுவது நல்லதுதான். ஆனால், தரம் இல்லாத நபர்களை நண்பர்களாக மாற்ற முயற்சி செய்வது, தண்ணீர் இல்லாத கிணற்றில் தலைகீழாய் குதிப்பதற்குச் சமமாகும். நண்பர்களோடு அறிவுப்பூர்வமாக விவாதிப்பதும், அவசியமான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதும், நல்ல தகவல்களால் மகிழ்வதும் ஆரோக்கியமான நட்புக்கு வழிவகுக்கும். நண்பர்களோடு சேர்ந்து ஊர் சுற்றுவதும், அடிக்கடி சினிமா பார்ப்பதும், வீணாக நேரம் கழிப்பதும் நட்பில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், பலநேரங்களில் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கும் செயலாகவே மாறிவிடும். இதனால், “நண்பர்களோடு இருப்பதும், பழகுவதும் இந்த நேரத்தில் எனக்குத் தேவைதானா?” என்ற கேள்வியை நண்பர்களைச் சந்திக்கும்போதெல்லாம் மனதிற்குள் கேட்டு முடிவெடுப்பது விவேகமான நட்புக்கு வழிவகுக்கும்.

  எந்தச் சூழலிலும், நேர்மைக்கும், வளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் துணை நிற்காத நட்பை விலக்கி வைத்துவிடுவது நல்லது. அப்போதுதான் மனநிறைவான நட்பை உருவாக்கி, நல்ல நண்பர்களைப் பெற்று, வாழ்க்கையில் வெற்றி பெற இயலும்.

  வாழ நினைத்தால் வாழலாம்…

  வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே!

  “பற்று”!!!

  இந்த மனிதனை அழிவுப்பாதைக்கு அனுப்பும் ஒரு வாகனம்.

  அதீத பற்று – அவனை ஆழ்குழிக்கு அனுப்பிவைக்கும் அதள பாதாளம்.

  மனிதன் கொண்டுள்ள பற்றுகளில் முக்கியமானவை மூன்று பற்றுகளே.

  மண், பெண், பொன் – என்ற மூன்று பற்றுக்கள் – ஒவ்வொரு மனிதனையும் சூல்கொண்டு சுற்றி வருகின்றது.

  “மகாபாரதம்” – மண் மீது கொண்ட பற்றின் முடிவை சொன்னது. இப்போதும் வீடுகளாகிப்போன விவசாய நிலங்கள் அதற்கு சாட்சி சொன்னது.

  “இராமாயணம்” – பெண் மீது கொண்ட பற்றின் முடிவைச் சொன்னது. இப்போதும் சிலப்பதிகாரம் அதற்கு துணை நிற்கிறது.

  “முகமதியர்களின் வரலாறு”, பொன் மீது கொண்ட பற்றின் முடிவைச் சொன்னது. இப்போதும், வருமான வரித்துறையின் சோதனைகள் அதற்கு சான்றாக நிற்கிறது.

  அளவுக்குமீறிய ஆசையின் வெளிப்பாடே “பற்றாக” பரிணாமம் கொள்கிறது.

  இதற்கு ஆசை என்றும், லட்சியம் என்றும், வாழ்வின் தேவை என்றும் – தன் அளவில் ஒரு அர்த்தம் கொடுத்து – தவறான மன நிலையில் மனிதன் தர்க்கம் செய்கிறான்.

  “பற்றற்று வாழ்தல் பயனளிக்கும்” என்பது மகான்கள் நமக்களித்த மகத்தான போதனை. அதற்கெல்லாம் ஆசை என்ற அடைமொழி கொடுத்து அழிந்து கொண்டிருக்கின்றது மனித இனம்.

  ஒரு யுத்ததில் எதிரி நாட்டு இளவரசனை உயிரோடு பிடித்து ராஜா முன் நிறுத்தினர். இளவரசன் உயிர்பிச்சை கேட்டு உருகினான்.

  இன்னும் இன்பப்பூக்களை நுகரவில்லை என்றான். அரண்மனையில் இருந்தும் இன்னும் வாழ்வை அனுபவிக்கவில்லை என்றான். வாழ்க்கையை வாழத்துவங்க வேண்டும் என்று தனது ஏக்கத்தை எதிரொலித்தான். மனம் இறங்கிய மன்னன், “உனக்கு உண்டு உயிர்பிச்சை ஆனால், ஒரு நிபந்தனை ”!! என்றான்.

  நீடிக்கப்பட்ட நிமிடங்களால் அவன் நெஞ்சம் நிமிர்ந்தது. உயிர் பிழைக்க ஒரு உபாயம் கிடைத்ததால் நிம்மதி அடைந்து ஒரு நீண்ட சுவாசம் விட்டான்.

  “நிபந்தனை இதுவே”!

  விளிம்புவரை தண்ணீர் நிரப்பப்பட்ட பாத்திரம் ஒன்று உனக்கு தரப்படும். ஒரு மைல் தூரத்தை, குறிப்பிட்ட நேரத்திற்குள், ஒரு சொட்டு நீர்கூட எங்கும் சிந்தாமல் எடுத்துச் செல்ல வேண்டும். உன்னுடனேயே காவல் வீரர்கள் கத்தியுடன் வருவார்கள். நீர் சிந்தினால், நிமிடத்தில் உன் தலை தரையில். வெற்றிகரமாக வந்தால் விடுதலை நிச்சயம், என்றான் அரசன்.

  மறுபிறவி கிடைப்பதால், மறுக்காது ஒத்துக்கொண்டான் இளவரசன்.

  ஊரும் வந்தது! நீரும் வந்தது!!

  ஆளும் வந்தது! வாளும் வந்தது!!

  ஒருபுறம் – உன்னால் முடியாது! உயிர் போவது நிச்சயம்!! என்று தூற்றினார்கள்.

  மறுபுறம் – உன்வாழ்க்கை இப்போது உன் கையில். உன்னால் முடியும். வெற்றி உனதே! என்று உற்சாகப்படுத்தினார்கள்.

  இவற்றையெல்லாம் – இளவரசனின் காதுகள் கேட்கவில்லை.

  திரண்டிருந்த மக்களின் இரைச்சல் அவனை திசை திருப்பவில்லை. கண்களும் கவனமும் கையிலுள்ள பாத்திரத்தில்.

  நிதானமாக நடந்தான். பதறாமல் பயணித்தான்.

  பக்குவமாக முடித்தான். வெற்றியும் பெற்றான்.

  மகிழ்ந்தான் மன்னன்.

  உன் வெற்றியின் காரணம் என்ன? என்று வினாவினான்.

  இளவரசன் சொன்னான் என் உயிரின் மீது கொண்ட பற்று.

  “போற்றுவார் போற்றினாலும், தூற்றுவார் தூற்றினாலும் – என் பணியை நான் எப்போதும் செய்வேன்” – என்ற கவியரசரின் வரிகள் போல பற்று அவன் வாழ்வின் விளக்கைப் பற்ற வைத்தது.

  முறையான பற்று – நம்மை முழுமைப்படுத்தும்! முன்னேற்றும்!!

  ‘பற்று’ – சிந்திக்கத் தெரிந்தவனின் சீவகாந்தம்.

  ‘பற்று’ – சீர்தூக்கிப்பார்ப்பவனின் சிறந்த கண்.

  ‘பற்று ‘ – முன்னேறத்துடிப்பவனின் முதுகெலும்பு.

  ‘பற்று’ – முறையான வாழ்க்கையின் முதல்படி.

  ‘பற்று’ – ஆனந்தமான மனதுக்கு அஸ்திவாரம்.

  ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்பதுபோல், ‘கூடா பற்றும் கேடாய் முடியும்’. எது தேவையான பற்று என்று பட்டியலிட்டால் – பலவும் விளங்கும்.

  “அறம் செய்ய விரும்பு என்றாள் ஒளவை தர்மம் செய்யுங்கள், அன்பே தெய்வம் என்றார் பெரியோர் அன்புடன் – வாழுங்கள். யாரும் தீமை செய்தாலும் நீங்கள் நன்மை செய்யுங்கள். யாரும் பொய்யைச் சொன்னாலும் நீங்கள் மெய்யைச் சொல்லுங்கள். நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே”. என்று குழந்தைகளுக்கு சொன்ன பாடல் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே என்பதில் இரண்டாவது கருத்து இருக்குமா?

  பணம், புகழ், அதிகாரம் – என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் கொண்டு ஏங்கும் மனித மனம் – பக்குவப்பட வேண்டும்.

  எப்படி?

  கடலளவே கிடைத்தாலும் மயங்க மாட்டேன் – அது.

  கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்

  உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் என்று

  உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் – என்று விளங்க வேண்டும் அல்லவா?

  இயன்றதைச் செய்வோம் இல்லாதவருக்கு – என்ற தாராள குணம், இரக்க குணம், மற்றவருக்கு உதவும் நல்ல மனம் – இவற்றின் மீது பற்றுக் கொள்ளுதல் பாவம் இல்லை.

  “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு

  இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” – என்று சொல்வது தேவ குணம். இந்தப்பற்று பரிசுத்தமானது.

  “பாலென அழுவோர்க்கு பால் தருவோம் – பசி

  கூழென துடிப்போர்க்கு சோறிடுவோம்.

  தாயகம் காப்போரின் தாள் பணிவோம் – யாவும்

  தனக்கென நினைப்போரை சிறையிடுவோம்”, – என்ற சிந்தனை என்றும் சிறப்பு உயர்ந்த மனிதனாக, செல்வச் செழிப்பு கொண்ட ஜீவனாக வாழ விரும்பும் பற்று – நியாயம்தான்.

  “செல்வத்தின் அணைப்பில் கிடப்பேன், வெல்வெட்டின் விரிப்பில் நடப்பேன். ராஜனாக இன்பத்தின் வனப்பில் குளிப்பேன், என்றென்றும் சுகத்தில் மிதப்பேன் – வீரனாக. திருமகள் சம்மதம் தருகிறாள் என்னிடம், மனதிலே நிம்மதி மலர்வதோ புன்னகை”, – என்று தன் சொந்த வாழ்வின் லட்சியத்தின் மீதுள்ள பற்று பாராட்ட வேண்டிய ஒன்று.

  குறிப்பிட்ட சில வாழும் முறைகளின் மீது கொண்ட பற்று – பலராலும் பாராட்டப்படுவது மட்டுமல்ல, பறை சாற்றப்பட வேண்டிய விஷயமும் கூட.

  “உள்ளம் சொன்னதை மறைத்தவனில்லை ஊருக்கு தீமை செய்தவனில்லை. வல்லவன் ஆயினும் நல்லவன், சொல்லிலும் – செயலிலும் நல்லவன்”, – என்று நல்லவனாக வாழ்வதில் கொண்ட பற்று – நன்றே.

  பஞ்சமகா பாவங்கள் செய்யாமல் வாழ்வேன் – என்ற கொள்கையின் மீது பற்று கொண்டால் கொண்டாடாமல் இருக்க முடியுமா?

  ‘தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே’ – என்று இரக்கமற்ற மனிதர்களை அடையாளம் காட்டிய இருபதாம் நூற்றாண்டுக் கவிஞனை பாராட்டாமல் இருக்க முடியுமா?

  காற்றை நம்பும் நித்திய உடலில்

  சுற்றம் பின்னும் சூழ்ச்சி வலையில்

  சுழன்று சிக்கும் சத்திய மனமும்

  முற்றும் துறந்து முடிவைச் சொன்ன

  முந்தைய கால முனிவரை போலநாம்

  பற்றும் துறந்து வாழ்வை வாழ்ந்தால்

  பலரும் போற்றும் பெருமை கொள்வோம் – என்று தெளிவும் கொண்டு பற்று மீது பற்று கொள்வோம்…

  வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்?

  வையகம் யாவும் உன் புகழ் பேசும், கைவசமாகும் எதிர்காலம்.

  ஸ்ரீ லங்கா- சுற்றுலா

  மாத்தளை என்ற ஊர் மலைப்பாதையில் இருந்தது இரு உணவகங்களில் விசாரித்தோம். மதியம் தோசை இடியாப்பம் மட்டும்மே உள்ளது; சாப்பாடு இல்லை என்றனர். ஆட்டோவில் சென்று விசாரித்து மதியம் சாப்பாடு வழங்கும் மதர்ஸ் கிச்சன்() உணவகம் கண்டுபிடித்தோம்.

  ஆனால் ஒரு சாப்பாடு ரூ. 200 மக்கள் பாதிக்கு மேல் சாப்பிட முடியாது என்றனர். எனவே 10 பிளேட் சாப்பாடு வாங்கி 20 பேரும் நிறைவாய் சாப்பிட்டோம். பருப்பு, கத்திரிக்காய் பொறியல், முருங்கைக்காய், முட்டைக்கோசு இலை பொறியல், ரசம் என அனைத்துமே நன்றாக இருந்தது.

  புறப்பட்டு வழியில் சின்மயா மிஷன் அமைத்து பராமரித்து வரும் ஆஞ்சநேயர் ஆலயம் பார்த்தோம். இங்குதான் சீதையைத் தேடிச் சென்ற அனுமான் தரை இறங்கியதாய் செய்தி.

  அதன்பின் வழியில் புளூபீல்டு டீகார்டன் பேக்டரி சென்று தேயிலையிலிருந்து தூள் தயாரிப்பதைப் பார்த்தோம்.அதன் பின் கிரீன்டீ, விதவிதமான டீத்தூள் மக்கள் வாங்கினர். விலை அதிகம்தான்.

  சிறியது நேரம் ரம்போடா நீர்வீழ்ச்சி பார்த்து, நுவரேலியா என்ற மலை நகரம் சென்றோம். குளிர் அதிகம். மாலை 5 முதல் 6 மணி முடிய பஸ்நிலையம் அருகில் கடைகளில் மக்கள் சில பொருட்கள் வாங்கினர்.

  டிபன், பழங்கள் சாப்பிட்டு, இரவு ஸ்பிரவுட் ஹில் என்ற ஓட்டல் சென்று தங்கினோம். அறைகள் நன்றாக இருந்தன உரையாடி சிறிது நேரத்தில் உறங்கினோம்.

  காலையில் எழுந்து தயாரானோம். மழை லேசாய் தூறி நின்றது. மக்கள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர். காலை ஏழுமணிக்கு பேருந்து நிலையம் புறப்பட்டுச் சென்று ஸ்ரீஅம்மாள் கேப் உணவகத்தில் இட்லி, வடை, ரோஸ்ட் சாப்பிட்டோம் நன்றாக இருந்தது.

  புறப்பட்டு வழியில் ஒரு ஏரியைப் பார்த்து, மலைப்பாதையில் இறங்கினோம். சீதை சிறையிருந்த அசோகவனம் என்ற ஓரிடம் காண்பித்து, அங்கிருந்த சீதை கோயிலை தரிசிக்கச் சொன்னார்கள். அதன் பின் ஓரிடத்தில் சீதை தீக்குளித்த இடம் இருப்பதாய் கூறினார்கள்.

  சீதை தீக்குளித்தது அயோத்தி அருகில் என்பதால், அங்கு நில்லாமல் இராவணன் நீர் வீழ்ச்சி சென்றோம். இதை எல்லா நீர்வீழ்ச்சி என்றும் சொல்கின்றனர். அருகிலுள்ள ஊர் பண்டாரவிளை. இந்த நீர்வீழ்ச்சியில் நான் மட்டும் குளித்தேன்.

  நேரே கதிர்காமம் செல்ல நண்பகல் ஆனது. சுமார் 5கி.மீ., முன்பாக நடுரோட்டில் பெரிய, கரிய நிற யானை ஒன்று நின்று மரக்கிளையை முறித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அரிய காட்சியை வாகனத்திலிருந்து புகைப்படம் எடுத்தோம். பாதை ஓரமாக வாகனங்கள் சென்றதால் நாங்களும் சப்தம் போடாமல் சென்றுவிட்டோம். மயிர்க்கூச்செறியும் கணங்கள்.

  இந்த யாத்ரிகர் விடுதி கேண்டீனில் மதிய உணவு சாப்பிட்டோம். நன்றாக இருந்தது. அவர்களது தங்கும் விடுதி தினேஷ் ரெஸ்ட் ஹவுஸ் சென்று தங்கினோம். சிறிது நேர ஓய்வுக்குப்பின், புறப்பட்டு செல்லக்கதிர்காமம் என்ற இடம் சென்றோம்.

  ஏராளமான பழக்கடைகள் உள்ளன. மக்கள் காவடி எடுத்து, மத்தாளம் இசைத்து ஆடி வருகின்றனர். பெரிய திரைச்சீலையில் முருகனின் ராஜ அலங்காரம் பார்த்தோம். எங்கும் தமிழோசைதான். சுற்றிலுமுள்ள கோயில்களைப் பார்த்து, அதே கேண்டீனில் இரவு டிபன் சாப்பிட்டோம் நன்றாக இருந்தது. இன்று வாகனத்தில் வாழ்க்கைப் பற்றி அரை மணி நேரம் பேசி, அவரவரது மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்தோம்.

  10மணியானதும் உறங்கச்சென்றோம். காலை தாயாராகி அனைவரும் பங்கேற்க பஞ்சபூத நவக்கிரக தவம் செய்தோம். காலை 7 மணிக்கு மேல் புறப்பட்டு கேட்ண்டீன் சென்று இட்லி, வடை, ரோஸ்ட் சாப்பிட்டு பயணமானோம்.

  காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து பயணம். அம்பாந்தோட்டையில் மக்கள் சந்தை தங்காலை, டிக்கரவெல்லா, மாதரை, காலே என பல ஊர்களின் வழியே பயணித்தோம்.

  இரு இடங்களில் இறங்கி கடற்கரை சென்று கடல் நீரில் கால்களை நனைத்து திரும்பினோம். காலே என்ற நகரில் கடலை ஒட்டி இருந்த சிதைந்த கோட்டையின் இடிபாடுகளைப் பார்த்தோம். இந்த ஊரில் சரியான சைவ உணவகம் கண்டு பிடிக்க இயலாததால் எல்லோரும் பழக்கலவையை மதிய உணவாகச் சாப்பிட்டோம்.

  மாலை 5 மணியளவில் டீ சாப்பிட சாலையோரம் நிறுத்தி இறங்கினோம். அங்கு ரூ. 12க்கு ஆப்பம் – சாம்பார் கொடுத்தனர். வாங்கிச் சாப்பிட்டோம் நன்றாக இருந்தது. மாலை 6மணிக்கு மேல் டெஹிவாலா பகுதியில் சரவணபவனில் பூரி, ரோஸ்ட், சப்பாத்தி என சாப்பிட்டோம். நன்றாக இருந்தது. தங்குவதற்கு அறை பார்த்து வருவதாய் கூறிய டூர் கைடு நீண்ட நேரம் கழித்து வந்து, ஒரே இடத்தில் அறைகள் கிடைக்கவில்லை. வழக்கமாகத் தங்கும் வட்டாலை என்ற பகுதியிலுள்ள ஹேப்பி கெஸ்ட்ஹவுஸ் செல்லலாம் என மீண்டும் 15கி.மீ., அழைத்துச் சென்று மிக மோசமான ஒரு ஓட்டலில் தங்குமாறு கூறினார்.

  பார்த்தவுடனே இது வேண்டாமென்றேன். சரி, தொகை கொடுத்து விடுகிறேன். நீங்களே ஏற்பாடு செய்யுங்கள் என்றார். இரவு நேரம் 9 மணி, இனிமேல் 20 பேரையும் அழைத்துக் கொண்டு எங்கு சென்று தேடுவதென, இருந்த அறைகளில் சுமாரான அறைகளில் தங்கினோம். எங்களைத் தவிர வேறு யாருமே இல்லை. கொழும்பு நகரில் 2 நாட்கள் தங்க ஏற்பாடு செய்ய உத்தேசம் எனக் கேட்டதற்கு டூர்கைடு கூறிய வார்த்தைகள், இங்கு 12 மணி நேரம் மட்டுமே தங்க முடியும். பகலில் அறைகள் தரமாட்டார்கள் என்றார்.

  அவரை சபித்துக் கொண்டே இரவைக் கழித்தோம். மறுநாள் காலையில் தயாராகி அறைகளை காலி செய்து கொழும்பு நகர் சுற்றுலாவுக்கு புறப்பட்டோம். வாணிவிலாஸ் என்ற உணவகத்தில் காலை வழக்கம்போல் இட்லி,வடை, தோசை சாப்பிட்டோம்.

  பார்லிமெண்ட் உள்ள கட்டிடம் நீர்நிலையின் நடுவில் உள்ளது. உள்ளே செல்ல ஒரு சாலை மட்டுமே உள்ளது. எனவே, ஓரமாக வாகனத்தை நிறுத்தி போட்டோ எடுத்துக் கொண்டோம். ஜனாதிபதி, பிரதமமந்திரி, பாராளுமன்ற உறுப்பினர்கள் (MP) என உள்ளனராம். அதன்பின் பண்டாரநாயகே சர்வதேச கூட்ட அரங்கு (Conference Hall) சென்றோம். முன்புறம் நீரூற்று 4 தளங்களை உடைய கட்டிடத்தில் 2ம் தளத்தில் பொயி கூட்ட அரங்கு. பார்த்தோம்.

  அதன் பின் இண்டிபென்டஸ் ஸ்கொயர் என்ற இடம் சென்று பார்த்து, கல்ச்சுரல் சென்டர் சென்று, பெரிய தியேட்டர் ஒன்றைப் பார்த்தோம். தரை, 2பால்கனிகள் என மொத்தம் 1269 பேர் அமரலாம் என்றனர்.

  பின் மியூசியம் சென்று விசாரித்தோம் நுழைவுக்கட்டணம் ரூ. 600 பார்க்க சில மணிநேரமாகும் என்றதால், அதைப்பார்க்காமல் ஸ்ரீசரஸ்வதி கபே சென்று மதிய உணவு சாப்பிட்டோம்….

  அடுத்த இதழில் நிறைவு…

  வளரும் தலைமுறைக்கு இவர்கள் ஏன் வழிகாட்ட வேண்டும்…

  உலகம் இன்று எதையெதையோ நோக்கிப் பயணித்துக் கொண்டேயிருக்கிறது. வேடிக்கையாய்ப் பார்த்த நிலவில், விண்கலத்தை அனுப்பி, மனிதன் அங்கு வாழலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.  இது மனித வளர்ச்சியின் மைல்கல் சாதனை தான் இது மட்டுமா? கடலுக்கு அடியில் உணவு விடுதி, பறவையைப் போல பறக்கும் காற்றுபை மனிதர்கள், கட்டிய வீட்டை இடம் மாற்றும் வினோதம், மழை நீரை உறிஞ்சும் சாலை இது போன்ற எத்தனையோ புதுமைகளைச் சொல்லாம். இதையெல்லாம் பார்க்கும் பொழுது நிச்சயம் நாடு வளர்ந்து கொண்டு தான் போகிறது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

  இது ஒரு புறமிருக்க, விஞ்ஞான வளர்ச்சி ஒட்டுமொத்த நாட்டையே உறவினர்கள் ஆக்கிவிட்டது. வெளியே விளையாடும் குழந்தைகளை வீட்டுக்குள் வரச்சொல்லி அழைக்கும் பெற்றோர்களை விட, வீட்டிற்கு வெளியே சென்று விளையாடு என்று சொல்லும் பெற்றோர்கள் தான் இப்பொழுது அதிகம் இருக்கிறார்கள். இதற்கு காரணம் தொழில்நுட்பத்தின் தேவை இப்பொழுது உள்ள தலைமுறையினருக்கு அதிகம் தேவைப்படுவதாக உணருகிறார்கள். ஆனால் நல்லதை விட தீயவையே அதிகம் கற்றுக் கொள்கிறார்கள். இத்தகைய தவறு எங்கிருந்து பிறக்கிறது என்பதையும் நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

  குடும்பம்;

  குழந்தைகள் மீது வைக்கும் அளவுகடந்த அன்பும், அதே வேளையில் அன்பில்லா அடக்கு முறையும் தான் காரணம். அளவுகடந்த அன்பின் பிரதிபலிப்பு நான் என்ன செய்தாலும் என் பெற்றோர்கள் என்னைக் கண்டிக்க மாட்டார்கள், என்று பிள்ளைகள் மனதில் தோன்றிவிடும். அதன் விளைவு அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் கால் போன போக்கில் போய் மனம் சொல்வதைச் செய்து கொண்டிருப்பார்கள்.

  அடுத்து குழந்தைகளிடம் அன்பில்லா அடக்குமுறையைக் கையாள்வது, எதைச் செய்தாலும் நிராகரிப்புத் தொனியில் பேசுவது, அற்பப் பிரச்சனைகளுக்கு மிகப் பெரிய தண்டனை கொடுப்பது, அடிப்பது போன்ற செயல்கள் குழந்தைகள் மனதில் பெரும் விளைவை உண்டாக்கும். நல்லதை விட தீயவை செய்யவே மனம் மிகவும் விரும்பும், வீட்டில் கிடைக்காத சந்தோஷத்தை வெளிவட்டார நட்பில் தேடும். தவறான சேர்க்கை எனத் தெரிந்தும் அதையே மனம் நாடும். பிற்காலத்தில் குழத்தைகள் ஏதேனும் ஒரு பெரிய தவறு செய்தால், அதன் மூலம் வரும் பிரச்சனைகளை உங்களால் ஜீரணிக்கவே முடியாது. இந்நிலையையும் பெற்றோர்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்.

  ஆகவே பெற்றோர்கள் சகல வழிகளிலும் முன்மாதிரியாகவும், வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும். இளம் பருவத்தில் பதிகின்ற நற்குணமே அவர்களின் எதிர்கால வாழ்வின் அஸ்திவாரம், என்பதை பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டு வழி நடத்த வேண்டும். தன் பிள்ளை தவறு செய்கிறான் என்றால் அவனுக்குத் தண்டனை கொடுப்பதை விட, சுட்டிக்காட்டுங்கள் அவன் மேல் படும் உங்கள் கைகள் நிறைய உடல் மொழி பேசி, உள்ளத்தை மாற்றும்.

  வீட்டில் முதியவர்களோடு பழக விடுங்கள். முதியவர்கள் இல்லாத வீட்டில் கட்டுப்பாடு இருக்காது என்று சொல்வார்கள். அவர்களின் அனுபவங்களோடு பழக விடுங்கள், நிச்சயம் அவர்கள் மனம் அலைபாய விடாது. என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும்.

  ஆசிரியர்கள்;

  ஒழுக்கமும், உயர்ந்த பண்பும் கொடுக்கும் இடம் தான் பள்ளி. மாணவர்களிடையே ஒழுக்கத்தை விதைக்காத  கல்வியும் கல்வியல்ல, ஒழுக்கம் போதிக்காதவர்கள் ஆசிரியர்கள் அல்ல. வீட்டில் அடங்காத பிள்ளை பள்ளிக்கு அனுப்பினால் அடங்கிவிடுவான்      எவ்வளவு சொல்லியும் இவன் திருந்த மறுக்கிறான், இனி அவன் மீது அக்கறை செலுத்தப் போவதில்லை என்று நினைத்து விட கூடாது. உங்களை விட்டால் அடுத்த நிலை அவனை சீர்படுத்துவதற்கு யாருமில்லை. பதியாத பாடத்தைப் போதிக்கும் உங்களால் அவனின் பயணத்தை மாற்ற முடியாதா என்ன? எல்லாமே உங்களால் முடியும். அவனை செதுக்கி சிலையாக்கவோ, சிகரமாக்கவோ முடியும்.

  தவறு செய்யும் மாணவர்களைக் கண்டறிந்து அவனுக்கு சற்று கூடுதல் கவனம் செலுத்துங்கள், நல்லொழுக்கத்தைப் போதியுங்கள், எதிர்காலத்தைக் காண்பியுங்கள், உங்களின் அனுபவத்தை உரக்கச் சொல்லுங்கள், போட்டி நிறைந்த உலகில் எவ்வாறு போட்டிப் போட்டு வெல்வது என்பதை விளக்குங்கள், வீண் நிலம் என்று விட்டு விடாதீர்கள், விதைத்துப் பாருங்கள் நிச்சயம் விளைச்சல் வரும். அவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக மாற்ற முடியும்.

  சமுதாயம்;

  இன்றைக்கு படிக்காதவனை விட படித்தவனே அதிகம் தவறு செய்கிறான், அதற்கு முதன்மைக் காரணம் இந்த சமுதாயம் தான். இந்த சமுதாயத்தை முழுவதுமாக நான் குற்றம் சொல்லவில்லை, தவறு செய்பவன் தானாக திருந்தும் வரை தவறுகளை எந்த சூழ்நிலையிலும் தவிர்க்கவே முடியாது, இது உண்மை தான் ஏற்றுக் கொள்கிறேன்.

  தவறு எங்கு தோன்றுகிறது, தவறு என்று தெரிந்தும் அதற்கு மறுதவிர்க்க ஆட்கள் இல்லாத போது  தான் தோன்றுகிறது. ஒருவரின் கண் முன்னே ஒருவர் தவறு செய்யும் பொழுது கண்டும் காணாமல் போனால் இனி இங்கு எதுவும் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றி விடுகிறது.

  உதாரணமாக பள்ளி மாணவ மாணவியர்கள் இரவு நேரத்திலோ, அல்லது ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியிலோ இருந்தால் அதனைக் கேளுங்கள், அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள், அவர்களின்  மனதிற்குப் பதியுமாறு புரிய வையுங்கள். இங்கு எல்லாம் விதமான சுய நலமும் ஒரு குற்றம் தான். பட்டுத்திருந்திக் கொள்ளட்டும் என்று விட்டுவிடாமல், பார்த்தவுடன் அவர்களைத் திருத்த வேண்டும்.

  இன்று அதை அவர்கள் சங்கடமாக நினைத்தாலும், நாளை அது தான் சரி என்று உணர்வார்கள் தன்குடும்பம், தன் பிள்ளை, தன் வீடு என்று இருத்தல் கூடாது நம் கண்முன்னே தவறு நடப்பதை வேடிக்கை பார்க்காதீர்கள். இங்கு வேடிக்கை பார்ப்பதற்கு ஆயிரம் இருக்கிறது. விலங்கு சாகசம், ஒற்றைக் கயிறு மீது நடத்தல், விளையாட்டு, அதிசயம், அற்புதம் போன்றவற்றைப்பாருங்கள்.

  அதை விட்டுவிட்டு கண்முன்னே நடக்கும் கொலையை, சாலை விபத்தில் சாகக்கிடக்கும் உயிரை, பேருந்தில் பெண்களுக்கு ஏற்படும் சீண்டல்களை, பொது இடத்தில் காதலர்கள் செய்யும் தவறுகளை எல்லாம் ஒரு வேடிக்கையாய் பார்க்காமல் விழிப்புணர்வாகப் பார்க்க வேண்டும். இது பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகளைத்தரும். தவறு செய்யும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்க முடியும். இது ஆதங்கம் அல்ல, ஆசை. இவர்களுக்கு நல்ல பாதையை மட்டும் காட்டுங்கள், பயணத்தை அவர்களே தொடங்கி விடுவார்கள்.

  இங்கு இவர் இப்படி

  மோகன்ராஜா

  மனிதர்கள் தங்கள்  வாழ்வின் ஒவ்வொரு நகர்தலிலும் ஒரு தேர்வை எதிர்கொள்ள வேண்டும். அவ்வாறு எதிர்கொள்ளும் தேர்வில் எவ்வாறு வெற்றி அடைகிறார்கள் என்பதில் தான் வாழ்வின் வளர்ச்சியே அமைந்திருக்கிறது.  எதிர் கொள்ளும் தேர்வில் முதல் முறை எழுதி வெற்றி பெற்றவர்களும் இங்கு இருக்கிறார்கள்; பல முறை எழுதி அதற்குப் பின்னர் வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள்; இன்னும் வெற்றி பெற போராடிக் கொண்டு இருப்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி மனிதர்கள் வாழ்க்கையின் பலநிலைகளில் இருக்கிறார்கள். இங்கு மனிதர்களாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு சமுதாயக் கடமை இருக்கிறது. சிலர் அதை செய்கிறார்கள் சிலர் அதை செய்ய தவறுகிறார்கள்.  அவ்வாறு சமுதாய கடமை செய்பவர்களை இந்த நாடும் நகரமும் போற்றும் புகழும். அவ்வாறு போற்றுதலுக்கும் புகழுக்கும் சொந்தக்காராக விளங்கும் திரு. மோகன்ராஜா அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

  நான் பிறந்தது விழுப்புரம் அருகிலுள்ள தொரவி என்னும் குக்கிராமம். பெற்றோர் திரு. பரசுராமன் திருமதி சரஸ்வதி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தேன். எனது தாத்தா கடலூர் மாவட்டத்தில் முந்திரிப் பருப்பு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். எனது தாத்தாவிற்குப் பிறகு எனது அப்பா இந்தத் தொழிலை செய்து வந்தார். 1980 ஆம் ஆண்டு கோயமுத்தூருக்கு குடிபெயர்ந்தோம். இதனால் நான் கல்வி கற்றது எல்லாமே இங்கு தான். சிங்காநல்லூரில் உள்ள  Perks பள்ளியில் என்னுடைய படிப்பைத் தொடங்கினேன். அதன் பிறகு பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.எம் துறையை தேர்ந்தெடுத்துப் படித்தேன். நன்றாகப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் என்னுடைய 19 ஆம் வயதில் என்னுடைய அப்பா ஹார்ட் அட்டாக் மூலம் இறந்து விட்டார். படித்து கொண்டிருந்த என்னால் இனியும் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இனி குடும்பத்தை நான் பார்க்க வேண்டும் என்ற நிலைக்கு வந்தேன். இதனால் படிப்பை விட்டு  விட்டு, என்னுடைய அப்பா செய்த தொழிலையே தொடங்கினேன்.

  நான் சின்ன வயதிலிருந்தே விவசாயத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தேன். எனினும் என்னால் குடும்பத் தொழிலையும் பார்த்து கொண்டு விவசாயத்தையும் செய்ய முடியாத சூழல் இருந்தது. எனினும் விவசாயத்தின் மீதிருந்த பற்றுதலால் எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயத்தையும் பார்த்து வந்தேன்.  தினமும் செய்தித்தாள் படிக்கும் பழக்கமுண்டு. ஒரு நாள் பிறந்த குழந்தைக்கு சக்கரை வியாதி என்ற செய்தியைப் படித்தவுடன் ஒரு கணம் கலங்கிவிட்டேன். நம் தாத்தா அப்பா காலத்தில் சக்கரை என்ற வியாதி ஒன்றே இல்லை. இயற்கையான முறையில் மட்டும் இறப்பார்கள்.  ஆனால் இப்பொழுது பிறக்கும் குழந்தைக்கு வருகிறது என்றால் அதற்குக் காரணம் என்ன என்று யோசித்தேன். முடிவில் வளர்ச்சி என்ற பெயரில் நம்மிடையே தோன்றிய மாற்றங்கள் தான் காரணம் என்று கண்டறிந்தேன்.

  நம் முன்னோர்கள் மிகுந்த திறமைமிக்கவர்கள். மலையைக் குடைந்து நிலத்தைச் சீர் படுத்தி விவசாயம் பார்த்தவர்களுக்கு, மின்சாரத்தைக் கண்டுபிடிப்பதென்பது ஒரு சாதாரண வேலையாகத் தான் இருந்திருக்கும். ஆனால் இயற்கைக்கு மாறான ஒரு கண்டுப்பிடிப்பு நம் எதிர்காலத் தலைமுறையினரை பாதிக்கும் என்பதாலேயே அவ்வாறான கண்டுபிடிப்புகளை நம் முன்னோர்கள் செய்ய வில்லை என்று கருதுகிறேன். ஆனால் வளர்ச்சி என்ற பெயரில் நாம் இன்று பல விசயங்களில் அடிமையாகிக் கொண்டு வருகிறோம். அதிலும்

  நம்மைச்சிந்திக்க விடாமல் தடுக்க,  ஆங்கிலேயர்கள் கையில் எடுத்த முதல் தந்திரம் நாட்டு மாட்டுப் பாலைத் தடுக்க வேண்டும் என்பது.  நாட்டு மாட்டுப் பால் நன்றாக சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டும். நாட்டு மாட்டு உடம்பின் சீதோஷ்ணநிலையும் மனிதனின் சீதோஷ்ணநிலையும் ஒரே சீரானது. அதனால் தான்  தாய்ப் பாலின் மகத்துவத்தோடு, நாட்டு மாட்டுப் பாலின் மகத்துவமும் இணையாக இருக்கிறது.

  இதனால் தமிழர்கள் மிகுந்த  ஆற்றல் வாய்ந்தவர்களாகவும், அறிவுமிக்கவர்களாகவும் இருந்தியிருக்கிறார்கள். வீரத்தின் அடையாளமாக இருந்த நம் இனம், மீண்டும் மாற்றம் பெற வேண்டும் என்பது தான் என் ஆசை. நான் செய்யும் எந்த ஒரு தொழிலும் எனக்கு மட்டும் பயன்படுமாறு அல்லாமல் என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது என்னுடைய நோக்கமாகும்.

  இயற்கையான முறையில் நம்மாழ்வார் வழியில் விவசாயம் செய்து வருகிறேன். வீடுகளுக்கு சுத்தமான நாட்டு பால் விற்பனை செய்து வருகிறேன். ஒரு நாட்டு மாட்டின் சாணத்தைக் கொண்டு நன்றாக இயற்கை விவசாயம் செய்யலாம்.

  நமக்கு உடம்பில் ஏதேனும் குறை ஏற்பட்டால் கூட, கட்டி வைத்துள்ள நாட்டு மாட்டைச் சுற்றி நடந்தால் போதும் அத்தனை நோய்களும் குணம் ஆகும், என்று சொல்வார்கள்.

  இத்தகைய நாட்டு மாட்டின் பெருமையை விளக்கவும், இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தவும்,  இயற்கை விவசாயிகளுக்கு இலவசமாக காளை மாடுகளைக் கொடுத்து வருகிறேன். ஆரம்பத்தில் வருடத்திற்கு ஒரு மாடு கொடுக்க வேண்டும் என்று நினைத்து கொடுத்தேன்.

  இத்திட்டத்தில் நாட்டு மாடுகளைப் பெற வேண்டும் என்றால் குறைந்தது 2 ஏக்கர் நிலம் நிச்சியமாக வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமின்றி APEDA- Agricultural And Processed Food Products Export Development Authority என்று இந்திய வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இந்த சான்றிதழ் பெற வேண்டும். இந்தியா சான்றிதழ் யார் வைத்திருக்கிறார்களோ அவர்கள் உண்மையான முறையில் இயற்கை விவசாயம் செய்கிறார்கள் எனப்படும். இது தமிழ்நாடு அரசு கொடுக்கும் சான்றிதழ் ஆகும். இந்த சான்றிதழ் பெற குறைந்தது 4 ஆண்டுகள் ஆகும். இந்த ஆண்டில் நிச்சியம் இயற்கையான விவசாயத்தின்  அனைத்து வழிமுறைகளையும் அவர்களால் கற்று கொள்ள முடியும்.

  என்னுடைய நோக்கமே, இயற்கை விவசாயம், நாட்டு மாடு வளர்ப்பு,  அயல் இன மாடுகளை நிராகரித்தல் மக்களின் உடல்நலம் நோயில்லா வாழ்வு போன்றவை என்னுடைய ஒரே இலக்காகும்.

  இயற்கையான உரத்தைக் கொடுத்து நிலத்தின் சத்தை மேம்படுத்த வேண்டும். இயற்கையை நம்மால் வெல்ல முடியாது. அதோடு இணைந்து வாழ்ந்தால், நோய் நொடியில்லாமல் நம் முன்னோர்கள் போல் நாமும் நன்றாக வாழ முடியும்.

  முன்பெல்லாம் நம் முன்னோர்கள் சாப்பிட்டவுடன் வெற்றிலை பாக்கு போடுவார்கள், ஆனால் இப்பொழுது நாம் சாப்பிட்டப்பின்னர் மாத்திரை சாப்பிடுகிறோம். இது வளர்ச்சி என்ற பெயரில் நாம் செய்த தவறுகள் தான். இனியும் இந்தத் தவறு செய்யாமல் விழிப்புணர்வோடு இருப்போம் இயற்கையை காப்போம்.

  சிகரமே சிம்மாசனம் மனிதாபிமானத்திற்கு மகுடம் சூட்டுவோம்

  காயப்படாத மூங்கில் புல்லாங்குழல் ஆகாது. வலிபடாத வாழ்லில் வசந்தங்கள் நுழையாது. பின்னடைவது என்பது இழப்புகளல்ல அதுதான் முன்னேற்றத்தின் முகவரி. வாழ்க்கை, வாழ்ந்த வாழ்க்கையை விட,மரணத்தில் கூட சில மர்மங்களை மடித்து வைத்திருக்கிறது. மரண நிகழ்வுகள் கூட வாழ்ந்ததற்கான அர்த்தத்தை அகலப்படுத்தாமல், சில நேரங்களில் வாய் பிளந்து நிற்க வைத்து அது தன் வேலையை ஒரு முடிவோடு முடித்து விடுகிறது. மரணத்தை மௌனங்ளால் தரிசிக்கும் தருணங்களை விட, அவமானங்களையே வெகுமானமாக பெறும் அவலங்கள் சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது.

  ஒடிசா மாநிலம், மேல்கரா கிராமத்தை சேர்ந்த தானாமாஜியின் மனைவி அமங்கோவிற்கு வாழ்த்துடிக்கும் வயதில் காசநோயோடு காய்ச்சலும் ஒட்டிக் கொள்ள, தன் பிள்ளை ஒன்றோடும் மனைவியை மரணத்தின் பிடியோடு அரசு மருத்துவமனைக்கு காரில் பவானிபட்டனத்தை நோக்கி அழைத்து செல்லும் போது அவரின் கையிலிருந்த பணம் ரூ. 3500 மட்டுமே டாக்சிக்காரர் ரூ. 3000 த்தைப் பிடுங்கி கொண்டார். இலவசமாகப் பார்க்கும் அரசு மருத்துவனையில் 100 ரூபாய் இலவசமாக மருத்துவமனை சேர்க்கைக்காக வாங்கப்பட்டது. இரத்த பரிசோதனைக்காக 400 ரூபாயைக் கறந்துவிடட்டார்கள். கையில் இருந்த  பணம் காற்றாய் பறந்தது.

  இரத்த பரிசோதனை முடிவைப் பார்த்த மருத்துவர் 300 கீ.மீ தொலைவிலிருக்கும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆலோசனை கூறினார். கையில் பணமில்லாத மாஜி அங்கேயே சேர்க்கப்பட்டார். பேருக்கு இரண்டொரு மாத்திரைகள் மட்டுமே எழுதி விட்டு பணியிலிருந்த மருத்துவர் நகர்நது விட்டார். இந்த நேரத்தில் , மனைவியின் உறவினார் ஒருவர் கொஞ்சம் பணத்தோடும் நிறைய மனதோடும் வந்தார். அவர் கொடுத்த பணமும், சில மருந்து மாத்திரைகள் வாங்கியப் பின் அதுவும் கரைந்து போனது.  சாவின் விழிப்பை எட்டிப்பார்த்த மணைவி கணவிரிடத்திலும் குழந்தையிடத்திலும் இறந்த பின்பு இங்கே எங்கேயாவது வீசிவிடாமல் சொந்த மண்ணில் அடக்கம் செய்துவிடுங்கள் என்று கூறிய விநாடியே உடல்நிலை மோசமானது. ஓடிப்போய் பணிப்பெண்களையும், ஊழியர்களையும் கூப்பிட்டாலும் தூக்கத்தில் அவர்கள் எழுந்திருக்கவில்லை. இரவு 2 மணிக்கு தாஜியின் மனைவி  அமங்கோ சாவைத் தழுவிக் கொண்டார். கருனை காட்ட கடவுள் இல்லையா ?என்ற ஓலக்குரல் ஓங்கி ஒலித்தது. வாழ்க்கையில் வசந்தத்தை வீசியவள், தாஜீயின் மனதுக்குள் சகலமுமாய் நின்றாள். ஊழியர் வந்தார் விடியதற்குள் பிணத்தை எடுத்துச் சென்று விடுங்கள் என்றார். அமரர் ஊர்தி அமர்த்த அவரித்தில் பணமில்லை என்ன செய்வது அவரிடமிருந்த லுங்கி புடவையை எடுத்து, தன் மனைவியின் உடலை வாழத்துடித்தவளை வாகாகத் துணியில் சுருட்டி, சுற்றி தன் தோளில் சுமந்து கொண்டு அதிகாலை 4 மணிக்கு சவ ஊர்வலம் அமைதியாய் புறப்பட்டது. வாழ்க்கை மனிதனை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டு வேடிக்கை பார்க்கிறது. என்ன வாழ்க்கை.

  மருத்துவமனை கடந்த போது காவலாளிக்குள் சந்தேகம் எட்டிப்பார்த்தது. எதை கடத்திப் போகிறாய்? காவலாளிக்குப் பிணத்தை கீழிறக்கி, மனைவியின் உடலை காண்பித்த பின்னே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. விடிவதற்குள் இங்கிருந்து சென்று விடு என்று உபதேச வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார். தனது மனதை கடத்தியவளை மயான எல்லைக்கு கணவன் தோள் மீது சுமந்து கடத்தினான். இதய சிம்மாசனத்தில் இருந்தவள் சுடுகாட்டுக்கு சென்று அல்லவா படுக்க போகிறாள். செல்லும் வழி தோறும் போலீஸ்காரர்களின் மோப்பம். அரசியல்வாதி ஒருவனின் அபத்தமான வார்த்தை. பொது மக்களின் புலன் விசாரணை கடந்து நடத்துக் கொண்டிருந்தார்கள்.

  ஆறு கீ. மீ தூரத்தை அவர்கள் கடந்த போது, அடிவயிற்றுப் பசியும் தாகமும் வாட்டி எடுத்தது. அப்படியே உடலைப் போட்டுவிட்டு போய்விட நினைத்தாலும் தன்னை சுமந்தவளை அந்த மண்ணில் போட மனமில்லை. தன் குழந்தை அழுதுகொண்டே நானும் சுமக்கிறேன் என்று கூறிக்கொண்டே மகள் தம் பிடிவாதத்தை பிடித்துக் கொண்டே நடந்தார் அப்பா.

  சிறிது நேரம் பிணத்தை வைத்து ஓய்வெடுத்து தூக்கிக் கொண்டு நடந்தாலும் நேரமும் தூரமும் கடந்ததால் உடலைத் தூக்கவே துன்பப்பட்டு காட்டின் வழியே நடந்து குறுக்குவழி கண்டுப்பிடித்தார்கள். காட்டை நோக்கி நடந்த போது தொலைக்காட்சி நிருபரின் கண்ணில் இவாகள் பட்டுவிட்டார்கள் பக்கத்திலிருந்த வீட்டிற்குச் சென்று கேமராவோடு வந்த நிருபரும் கேள்விக் கணையோடு இவர்களோடே நடத்திருக்கிறார். நிருபருக்கு செய்தி அல்லவா சிக்கிருக்கிறது.

  காட்டின் அருகில் சென்றபோது, வன காவல் அதிகாரி, இதை செய்தியாக்க வேண்டாம்; செய்தியாக வந்துவிட்டால் மாநிலத்தின் மானம் போய்விடும் என்று நிருபரோடு நேர் மோதல் நிகழ்த்திருக்கிறார். நிருபரோ, செய்தியாக்குவதே எங்கள் கடமை என்று மானமும் கடமையும் இவர்களுக்குள் மாட்டிக்கொண்டது. வன காவல் அதிகாரியோ காட்டில் செல்லக் கூடாது ரோட்டில் செல்லுங்கள் என்று அறிவுறுத்தியதோடு நில்லாமல்  அதிகாரிக்குள்ளும் சோகம் சொந்தம் கொண்டாடிட ஆயிரம் ரூபாயை மகளின் கையில் மனசாட்சியாக வைத்துவிட்டு சென்றிருக்கிறார். ஆகா பூமி இன்னும் மெருகேறி ஒளிக் கொடுக்கட்டும்; ஆகா வானம் இதனால் தான் ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கிறதோ தொலைக்காட்சி நிருபரின் உதவியோடு, சமூகம் சார்ந்த அமைப்பென்று மனைவியின் உடலைக் கொண்டு செல்ல வாகனம் ஏற்பாடு செய்திருக்கிறது. மனைவி சொல்லே மந்திரமாய் மரிந்தப்பின்னும் செய்தி மாஜி போன்ற மனிதர்கள் உலகில் இருப்பதால்தான் பூமித்தாய் பூக்கிறாள், காய்க்கிறாள்,கனிகிறாள். தனது மனைவியின் உடலை சுமந்து கொண்டு 10 கீ.மீ நடந்திருக்கிறார் என்ற செய்தி ஊனை உருக வைக்கிறது.

  பக்ரைன்  மன்னன் இவருக்கு 8 லட்சத்து 87 ஆயிரம் ரூயாய் உதவி செய்திருக்கிறார்.கலிங்கா இன்ஸ்டிடியூட் என்ற பள்ளியில் விட்ட படிப்பை மூன்று பெண் பிள்ளைகளும் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுயிருக்கிறது.

  மரணம் தழுவும் தருணத்தில் அமங்கோ இறந்த பின்பு கிராமத்தில் அடக்கம் செய்து விடுங்கள் என்று சொல்லிய செய்திதான் பணமில்லாத பரிதசித்த வேளையிலும், அமரர் ஊர்தியை அமர்ந்த முடியதாத நிலையிலும், காவல் துறை,வனத்துறை, பொதுமக்கள் அரசியல்வாதி என அனைவரையும்கடந்து 10 கீ.மீ தூரம் தன் மனைவியின் உடலைத் தூக்கிச் சுமந்த செய்தியே பக்ரைன் மன்னருக்குள்ளும், மனதாபி மானத்தை மலரச் செய்தது; மனிதாபிமானம் மகுடம் சூட்டி மகிழ்ந்தது, மன்னருக்குள் இருந்த மனிதாபிமானம் இங்கே மனிதர்களுக்கு வர வேண்டாமா?