– 2014 – September | தன்னம்பிக்கை

Home » 2014 » September (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    திருப்பம்

    “மண்ணுக்கு கீழிருந்து தோண்டி எடுப்பார்கள்

    ஆனால் பெட்ரோல் இல்லை!

    கல்யாணத்திலே  பரவலாகக் காணப்படும்

    ஆனால்  பூமாலை இல்லை!

    தினமும் உணவில் சேர்க்கிறார்கள்

    ஆனால்  உப்பு இல்லை!

    வானத்தில்  அவ்வப்போது தெரியும்

    ஆனால்  நட்சத்திரம் இல்லை!”

    என்று புதிர்களை கேட்பதில் குழந்தைகளுக்கு ஒரே சந்தோஷம். பதில்… தண்ணீர் என்று சொல்லி தவித்தார்கள். ‘தப்பு’ என்று தெரிந்ததும், அவர்கள் மூளை வேகவேகமாக பணி செய்ததைக் காண முடிந்தது. புதிர்கள் சில, பல திருப்பங்களைக் கொண்டுள்ளன. வாழ்வின் சுவை, திருப்புமுனைகளைச் சுவைக்கையில் தனித்துவமாக கூடுகின்றது. திருப்பங்கள் மனதை ஒருமுகப்படுத்துகின்றன. திருப்பம் வாழ்வில் சுவாரஸ்யம் கூட்டுகின்றது.

    பொதுவாக நேர்கோட்டில் செல்லும் சிந்தனைப் பாதையில் அடுத்து என்று பழகிய, எதிர்பார்க்கின்ற நிகழ்வுகளே அடுக்கடுக்காக நடைபெறும் பொழுது, சட்டென்று எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்தது என்று கொண்டால் அதை திருப்பம் என்று கூறலாம். மனது நேர்கோட்டுச் சிந்தனைக்கு, பழகிப் போயுள்ளது. அது திடீரென புதிதாக நிகழும் சூழ்நிலைக்குள், கற்பனையாகவேனும் செல்லும் பொழுது திருப்பம் நிகழ்வதாகக் கூறலாம்.

    ஒரு புதிரினை உருவாக்கும்பொழுது, பல திருப்பங்கள் அதனுள் புதைக்கப்பட வேண்டும். குழந்தைகள் புதிர் விளையாட்டு விளையாடலாம் என ஆசைப்பட்ட பொழுது கூகுள் தளத்தில் கிடைக்கும் என்று தோன்றியது. ஆனால் அதில் கிடைப்பது இந்தக் கட்டுரையின் முகப்பில் உள்ள புதிர் போல அவ்வளவு சுவையாக இல்லை.

    விடையை மனதில் வைத்துக்கொண்டு இட்டுக்கட்டி, வழிமாறுவதற்காக அங்கங்கே அழைத்துச் சென்று மண்ணிலிருந்து விண்ணுக்குப் பாய்ந்து இடையே கல்யாண மங்கல இசை இசைத்து, மலர் மாலை வாசனையை நுகர வைத்து, சாப்பிட்டு வயிறாறவும் செய்து அனைத்து ஐம்புலன்களுக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கிக்கொடுத்த புதிர் இது. குழந்தைகளோடு அவர்கள் அம்மாவும், ஓட்டுனரும் சேர்ந்து தேங்காய், அரிசி என பலவாறு யோசித்த அரைமணி நேரம் அமர்க்களமாக இருந்தது.

    இந்த இதழை மேலும்

    தோல்வியிலிருந்து மீண்டெழுக

    ஒவ்வொரு முறையும் வரும் தேர்வு முடிவுகள் பலரை மகிழ்ச்சியில் துள்ள வைக்கிறது. சிலரைச் சோகத்தில் துவள வைத்திருக்கிறது. வெற்றி பெற்றவரை ஓங்கி வாழ்த்துகிற அதே நேரத்தில், தவறியவர்களை தாங்கிப் பிடிப்பதும் நமது கடமையாகும். தேர்வில் தோல்வியும், தேர்தலில் தோல்வியும் சாதாரணம். ஒரு தேர்வில் தோற்றவர்களும், தேர்தலில் தோற்றவர்களும் அடுத்த தேர்வில், தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். இந்தத் தேர்வில் வென்றவர்கள் அடுத்த தேர்வில் தவறிவிடக்கூடும். கடந்த தேர்வில் மிகச்சிறந்த மதிப்பெண் பெற்று மிகச்சிறந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கச் சேர்ந்த 1500 பேரில் முதலாண்டுத் தேர்வில் 1000 பேர் தோல்வி அடைந்தனர். இது வேடிக்கை அன்று, வாடிக்கை. இதுதான் எதார்த்தம்.

    ஆறுதலும் தேறுதலும்

    குன்றும், குழியும், மேடும், பள்ளமும், பசுமையும், வெறுமையும், சோலையும், பாலையும் இருப்பது போலத் தான் மானுட வாழ்வும் இன்பமும், துன்பமும், வெற்றியும், தோல்வியும் நிறைந்தது. தேர்வில் தோல்வியடைந்தவர்கள் வாழ்வில் தோல்வியுற்றவர்கள் அல்லர். தேர்வு முடிவு அறிந்ததும் சிலர் வாழ்வை முடித்துக் கொள்கிறார்கள். ஆண்டுதோறும் அங்கும், இங்கும் இத்தகு அவலம் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களை இனங்கண்டு ஆறுதல் சொல்ல தேறுதல் அளிப்பது மிக முக்கியம். ஒவ்வோர் உயிரும் விலைமதிக்க முடியாதது. மனித வளமே இந்தியாவின் மகத்தான வளம்.

    ஒப்பிடாதீர்கள்

    பெற்றோர்களே! தேர்வில் தவறிய உங்கள் பிள்ளைகளைக் காய்ச்சொற்களால் காயப்படுத்தாமல் கனிச்சொற்களால் அணியப்படுத்துங்கள். உங்கள் மற்றபிள்ளைகளுடனோ அல்லது அண்டை வீட்டு, அயல்வீட்டுப் பிள்ளைகளுடனோ ஒப்பிட்டுச் சொல்லி ஊனப்படுத்தாமல், ஊக்கப்படுத்துங்கள்.

    பெற்றோர்களே! தேர்வில் தவறிய உங்கள் பிள்ளைகளைக் காய்ச்சொற்களால் காயப்படுத்தாமல் கனிச்சொற்களால் அணியப்படுத்துங்கள். உங்கள் மற்றபிள்ளைகளுடனோ அல்லது அண்டை வீட்டு, அயல்வீட்டுப் பிள்ளைகளுடனோ ஒப்பிட்டுச் சொல்லி ஊனப்படுத்தாமல், ஊக்கப்படுத்துங்கள்.

    மறு கூட்டலுக்கு விண்ணப்பித்து மகத்தான வெற்றி பெற்றவர்கள்கூட உண்டு. மராட்டிய மாநிலத்தில் தேர்வில் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவன் ஒருவன் மறு கூட்டலுக்கு விண்ணப்பித்தபோது அவன் தான் மாநிலத்திலேயே முதலாவது மதிப்பெண் பெற்றிருந்தான். தோல்வி அவனைத் தொடர்ந்து தோல்வி கண்டது. எனவே மனம் உடைந்து கிடக்கும் மாணவக் கண்மணிகளே ஊக்கப்படுத்தி நன்கு எழுதியும் தோல்வி கண்டிருந்தால் மறுகூட்டலுக்கு மனு கொடுக்கலாம்.

    மற்றவர்களுக்கு மாற்று வழியையும் அரசு செய்துள்ளது. ஆம், எத்தனை பாடங்களில் தேர்ச்சி தவறி இருந்தால் உடனே சிறப்புத் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதலாம். சில சமயங்களில் ஆண்டு முழுவதும் நன்கு படித்திருந்தாலும் தேர்வு நாளில் உடல்நிலையும், எதிர்பாராத சூழ்நிலைகளினால் விளையும், மனநிலையும் தேர்வைச் சரியாக எழுத முடியாமல் ஆக்கி இருக்கக்கூடும். அதனால், மதிப்பெண் இழக்கவும் இன்று மதிப்பிழக்கவுமான நிலை உண்டாகி இருக்கலாம். கவலை வேண்டாம், ஒவ்வொரு விடியலும் ஒரு தேர்வு தான். தோல்வி இல்லாமல் வெற்றி ஏது? யானைக்கும் அடி சறுக்கும். ஆனால், கண்களில் கனவுகளோடும், நெஞ்சத்தில் கல்லூரி நினைவுகளோடும், இருந்தவர்களுக்குச் சறுக்கலின் இரணம் சாதா இரணமில்லை. சறுக்கலில் இருந்து மீண்டெழுவதும் சாதாரணமில்லை. எனினும் மீண்டெழுந்தாக வேண்டும். தோல்வி என்னும் புதை மணலில் அமிழ்ந்து மூழ்கிவிடக்கூடாது.

    எழுமின்! விழுமின்!

    தோல்வியில் துவண்டு போனால் உலகம் நம்மைத் துண்டாடும். தோல்வியிலிருந்து மீண்டெழுந்தால் உலகம் நம்மைக் கொண்டாடும். தோல்வியைத் தொட்டுக்கூட பார்க்காமல் வெற்றிகளை மட்டுமே கண்டவர்கள் யாரேனும் உண்டா?

    வாழ்க்கையின் முதல் அடியே தோல்வியோடு தானே ஒவ்வொருவருக்கும் தொடங்கியது. பூமித்தாயின் மீது நம் பூந்தளிர்ப் பாதங்களை ஊன்றி முதல் அடி எடுத்து வைத்த போதே தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்து, உருண்டு புரண்டு மீண்டெழுந்த போது வலியோடுதானே பயணம் தொடங்கியது. வலியோடு அடியெடுத்து வைத்தால் கால்கள் வலிமையானதே. மனம் உரம் பெற்றதே! எழுமின், விழுமின், வீழ்ச்சியிலிருந்து மீட்சி அடையாமல் முடங்கிக் கிடப்பது முட்டாள்தனம். அதையும் தாண்டி வாழ்வை முடித்துக் கொள்ள நினைப்பது அறிவீனம். நீ வாழப் பிறந்தவன். உலகை ஆளப் பிறந்தவன்.

    தேர்வில் தோற்றவரும் வாழ்வில் வென்றவரும்

    செந்தமிழ் நாட்டின் சேது கடற்கரையில் படகோட்டியின் மகனாய்ப் பிறந்து பாரத குடியரசுத் தலைவரான அப்துல்கலாம் விமான ஓட்டியாக விரும்ப விமானப் படையில் சேர தேர்வுக்குச் சென்று தேர்ச்சி பெறாமல் திரும்பினாரே அவர் வாழ்வில் தோற்றவரா? வென்றவரா?

    சில சம்பவங்களின் வெற்றி தோல்வி உங்கள் வாழ்வின் வெற்றி தோல்வி ஆகிவிட முடியாது. தோல்வி என்பது வெற்றிக்கான படிக்கட்டு என்று எத்தனை முறைகேட்டிருப்பாய். படிகளில் முன்னேறி… முன்னேறிச் செல்லும்போது வழுக்குவது இயல்புதான். வழுக்கிய பின்னும் நிலைப்பதும், வாழ்வதும் முக்கியம். சறுக்கிய பின்னும் சாதிப்பது முக்கியம்.

    தோல்வி தாமதமான வெற்றி

    சின்னச்சின்ன தோல்விகளைக்கூடத் தாங்கிக் கொள்ள இயலாமல் வாழ்வொழித்துக் கொள்வது ஆறறிவுள்ள மனிதன் செய்யக் கூடியதன்று. விலங்குகள் ஒருபோதும் தற்கொலை செய்துகொள்வதில்லை. தோல்வி என்பது தாமதமான வெற்றி தான். தோல்வி என்பதைக் கண்டு முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி இட்டிருந்தால் மன்னர்கள்கூட அனுபவிக்க முடியாத வாழ்க்கையை இன்றைக்கு ஒரு சராசரி குடிமகன் அனுபவிக்கக்கூடிய சூழலை உருவாக்கித் தந்திருக்கிற அறிவியல் தொழில்நுட்பங்களின் வெற்றி நிகழ்ந்திருக்குமா, முதல் நூற்றாண்டோடு முடிந்து போயிருக்குமே!

    தோல்வியில் உன்னைத் தொலைத்துவிடாதே; துணிந்து எழு! விழுந்தால் ஊரே உன்னை மிதித்துவிடும். தோல்வி என்னும் முள்கிரீட நேரத்தில் உலகமே உனக்கு எதிராகக் கொடி பிடிக்கும். விழுந்துவிட்டாயே என்று… ஏளனம் செய்து கைதட்டிக் குதூகலிக்கும். தனிமையும், கையறு நிலையும் கைகோர்த்து அரவணைத்து, ஆரத்தழுவி, நட்புக் கொண்டாடி நலிய வைத்துவிடும். நீ எலியல்ல, புலி. கரப்பான் பூச்சியல்ல கானகத்துச் சிங்கம்.

    வாழ்வின் முக்கியமான திருப்பத்தைத் தரக்கூடிய தேர்வு என்பதால், தொடக்கத்திலேயே தோல்வி என்பதால் நொறுங்கிவிடாதே

                தொடக்கத்திலே தோல்வி கண்டால்

                துவண்டுபோய் விலகுகிறாய்! அந்தத்

                தோல்வி என்பதே தொடக்க வெற்றி

                என்பதறியாது கலங்குகிறாய்

    காரணத்தைக் கண்டறி

    ஆக்கப்பூர்வமாக இனி ஆக வேண்டியது என்ன? ஆய்ந்து பார்! தேர்வில் தவறியதற்கான காரணத்தைக் கண்டறிந்து தவற்றை ஏற்றுக்கொள். சற்று திறந்த மனத்துடன் கவனித்தால் நீயே உம்மைக் கவிழ்த்துக் கொண்டதற்கான காரணம் புரியும். வீட்டிலிருந்து படித்தாயோ அல்லது விடுதியில் இருந்து படித்தாயோ, வெட்டிப் பேச்சும், வீண் அரட்டையும் வெற்றிக்கு விரோதிகள். தோல்விக்குத் தோழர்கள். தொலைக்காட்சி உன் நேரத்தைத் தொலைத்துவிட்டதா எத்தனை கூர்ந்த மன நிறைந்தவராயினும், வெட்டி வரச் சொன்னால் கட்டி வருமளவுக்குக் கெட்டிக்காரத்தனம் கொட்டிக் கிடந்தாலும், வரங்கொடுக்கும் தேவதைகள் வந்தபோது தூங்கிவிட்டு வாழ்க்கையெல்லாம் ஏங்குவதில் பயனில்லை.

    நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும். தோல்வியைத் துரத்துக. தோல்வியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தால் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது. திடமான மனத்துடனும், தீர்க்கமான சிந்தனையுடனும், தெளிவாக முடிவெடு. உன் தோல்விக்குத் துணை நின்ற காரணிகளைத் தூக்கி எறி.

    முயன்றால் முயலை ஆமை வெல்லும்

    விடாது முயல்க! முயலாமையினால் நீ கிடந்தால் வெற்றி பெறமுடியாது. முயன்றால் முயலை, ஆமையும் வெல்லும்!இந்தத் தருணத்தில் உம்மைச் சோர்வடையச் செய்யும் எதுவும் உனக்கு விஷம் தான். உன்னைச் சோர்வடையச் செய்வது எதுவோ அதை நஞ்சென்று ஒதுக்கிவிடு என்றார் விவேகானந்தர்.

                கன்னத்தில் கையை ஊன்றிக்கொண்டு

                கவலையில் கிடப்பது முடமாக்கும்! உன்றன்

                எண்ணத்தில் நுழைந்து சோர்ந்திடச் செய்யும்

                எதுவும் உனக்கு விஷமாகும்.

                ஊனமாய் உள்ளத்தை முடக்கிவிடாதே

                உடனே உறவிடம் நட்பிடம் பகிர்ந்து கொள்!

                ஆமை, முயலை வென்றகதையின்

                ஆழத்தை உணர்ந்து வெற்றி கொள்!

    புறப்பட்டுவிட்டால் புயல்

    வாழ்க்கையில் சாதனையாளர்களாகிச் சரித்திரம் படைத்தவர்கள் எல்லோரும் தங்களுக்கு அடாது தோல்விகள் வந்தாலும் விடாது தொடர்ந்து பன்மடங்கு முனைப்புடன் மீண்டும் சிறப்பாக… மாபெரும் வெற்றிகளைக் குவித்திருக்கிறார்கள். எதிர்ப்படும் தோல்விகளால் தங்களை மாய்த்துக் கொள்வதோ அல்லது எடுத்த செயலை விட்டுவிட்டு விலகிப்போவதோ கோழைத்தனம். அது ஒருபோதும் உம்மை வெற்றியாளனாக்காது. புதிய வேகத்தோடும், புதிய செயல்திட்டத்தோடும் புறப்படு. நீ புறப்படும் வரைக்கும் காற்றுÐ புறப்பட்டுவிட்டால் புயல் என்று கவிஞர் சொன்னதை நிரூபி.

    சாதனையாளர்களின் வாழ்க்கையும் வரலாறும் நமக்கு அறிவிக்கும் பாடம் இதுதான். மின்விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை இன்றைய உன் நிலைக்கு ஏற்றஎடுத்துக்காட்டு. எடிசன் இரண்டாயிரம் பரிசோதனைகள் செய்து தோல்வியுற்றார். அப்போது அவரைப் பார்த்துத் தங்களின் நேரமும் உழைப்பும் வீணாவதைக் கண்டு மனம் தளர்ந்து போய்விட்டீர்களா? என்று ஒருவர் கேட்டார். அதற்குச் செயலாற்ற இயலாத இரண்டாயிரம் வழிகளை அல்லவா நான் அறிந்து கொண்டேன். ஆயிரக்கணக்கான இந்த வழிகளில் எல்லாம் மின்சாரம் வேலை செய்யாது என்று கண்டுபிடித்தேன் என்றார் எடிசன். தொடர்ந்து வந்த தோல்விகளையே தோல்வியுறச் செய்து மின்சார விளக்கைக் கண்டவர், வென்றவர் எடிசன். எனவே தோல்வியை எருவாக்கு வெற்றியை உருவாக்கு.

                வந்த தோல்வியைத் தூக்கியெறி இனி

                வருகிற இன்னல்கள் தவிடுபொடி

                எந்தத் துயரையும் மோதித் தாக்கு! வரும்

                எல்லாத் தேர்வையும் சாதகமாக்கு.

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    முயற்சி செய்யுங்கள் பலனை எதிர்பார்க்காதே என்று கூறுகிறீர்கள். அதே வேளையில் சாதிக்க ஆசைப்படு பெரிதாக… என்று புத்தகம் எழுதியிருக்கிறீர்கள். சாதிக்க ஆசைப்படு என்றாலே பலனை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறதே. இது முரண்பாடாக இல்லையா?

    சிவப்பிரகாசம்

    நாகர்கோவில்

    பெரிதாக சாதிக்க ஆசைப்படுங்கள் என்பதே எனது புத்தகம். அதில் நான் உறுதியாகவே இருக்கிறேன். நீங்களும் பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் அடிப்படையாகக் கொண்டிருந்தால் மட்டும் தான் அந்தச் சாதனையை படைப்பதற்கான திட்டத்திலும், முயற்சியிலும் இறங்க முடியும். எனவே ஆசைப்படு என்பது அடிப்படை அவசியமாகிறது. ஆனால் ஒரு இலக்கை நோக்கி பயணம் செய்யும்போது அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபடும்போது பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தக் கூடாது என்றும் கூறுகிறோம்.

    ஓர் உலகம் அறிந்த மருத்துவர், சாதனை படைத்த பொறியாளர், திறமைமிகு பேராசிரியர், உயர்ந்த அரசு அதிகாரி என்ற ஒரு பெரிய இலக்குக்காக தன்னை தயார்படுத்திக் கொள்ளும் இளைஞர் தனது முயற்சிக் காலங்களில் பெரிய எதிர்பார்ப்பை (பலனை) எதிர்பார்த்துக் கொண்டே வேலை செய்யக்கூடாது என்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

    1. எதிர்பார்ப்பு மனப்பான்மை இருந்துவிட்டால் கவனம் முழுவதும் அந்த பலனில் இருக்குமே தவிர நாம் செய்யும் முயற்சியில் இருந்துவிடாது. எனவே இறுதியாக நாம் அடைய இருக்கும் பலனைப் பற்றி கவலைப்படாமல் இன்று இங்கு இந்த நிமிடம் செய்ய வேண்டிய பணியில் உடல் பொருள் ஆவியைச் செலுத்தி வேலை செய்வது தான் சிறப்பாக இருக்கும்.

    2. பலனைப் பற்றி கவலைப்படாமல் செயலில் மட்டும் கவனம் செலுத்தியவர்களுக்கு வெற்றி எளிதில் கிடைக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் ஒருவேளை இந்தப் போட்டி உலகில் வெற்றி கிடைக்கத் தவறிவிட்டால் பெரிய ஏமாற்றம் வந்துவிடாது. ஏனென்றால் அதிக எதிர்பார்ப்போடு ஒரு வேலையில் ஈடுபடக்கூடியவர்கள் அந்தப் பலன் கிடைக்கவில்லை என்றால் பெரிய ஏமாற்றமும், மனச்சோர்வும், மன அழுத்தமும் அடைந்துவிடுவார்கள்.

    பலனைப்பற்றிய கவலை இல்லாமல் பணியில் மட்டும் கவனம் செலுத்துபவர்கள் தோல்வி அடைந்தாலும் கூட அதனால் பெரிய அளவில் ஏமாற்றம் அடைய மாட்டார்கள்.

    எனவே ஒரு வெற்றியில் உறுதியாக இருந்து போராடுவதற்கும், அதே வேளையில் பலனையும், வெற்றியையும் மட்டும் எதிர்பார்த்து அதற்காக முயற்சி செய்வதும் வேறு வேறு. பலனை எதிர்பார்க்காமல் முயற்சியில் மட்டும் ஈடுபடுவது என்பதற்கும், சாதிக்க ஆசைப்படுவதற்கும் எந்த முரண்பாடும் இல்லை.

    இறுதியாக சொல்லப்போனால் பெரிய சாதனை செய்ய ஆசைப்படுங்கள். அந்த ஆசையை நிறைவேற்ற நிகழ்காலத்தில் முயற்சியை மேற்கொள்ளுங்கள்.

    வெற்றி கிடைத்தால் நல்லது. வெற்றி பெறத் தவறிவிட்டால் அதைப்பற்றி கவலை இல்லை. “வெற்றி ஒரு முடிவும் அல்ல, தோல்வி என்பது இறுதியும் அல்ல”. மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள். அப்போது உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

    “தன்னம்பிக்கை மேடை பகுதியில் முனைவர் செ.சைலேந்திரபாபு, ஐ.பி.எஸ்., அவர்கள் அளிக்கும் பதில்கள் வாழ்வில் முன்னேற துடிப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக உள்ளது. என் வாழ்வில் என்றும் அவர் புத்தகமும் அவர் எழுத்தும், அவருமே எனக்கு முன் மாதிரி.”

    தன் திறமைகளை ஒருவர் எப்படி அடையாளம் கண்டுகொள்வது?

    டி. யோகானந்தன்

    போயம்பாளையம், திருப்பூர்

    மற்றவர்களின் திறமைகளைப் பாராட்டுகின்ற நாம் நமது திறமையைப் பாராட்டத் தவறுகிறோம். மற்றவர்களை ரோல் மாடலாக நினைக்கின்ற நாம் நம்மை ஒரு ரோல் மாடலாக எடுத்துக் கொள்வதில்லை.

    மற்றவர்கள் திறமையை வெளிப்படுத்தும்போது அதைக்கண்டு ஆச்சர்யப்படும் நாம் நமக்குள்ளேயே புதைந்து கிடக்கும் அபாரத் திறமைகளைக் கண்டு கொள்வதில்லை. இதற்குக் காரணம் மற்றவர்களை தினம் தினம் ஆராயும் நாம், உலக விசயங்களை ஆராயும் நாம், நம்மைப்பற்றி ஆராயத் தவறிவிடுகிறோம்.

    நன்றாக ஓட முடிகின்றது. கண்பார்வை நல்லதாக உள்ளது. காது நல்லபடியாக கேட்கிறது. ஒரு செய்தியைக் கேள்விப்பட்டால் அது மறப்பதில்லை. மற்ற நபர்களுடன் சகஜமாக பழக முடிகிறது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வேலை பார்க்கும் பழக்கம் இருக்கிறது. ஒரு செயலைச் செய்ய மேற்கொண்டால் அந்த செயலிலேயே முழுக் கவனமும் செலுத்த முடிகிறது. எதைச் செய்தாலும் தரம் இருக்கிறது. இதுபோன்ற சிறந்த குணங்கள் தான் நமது ஆற்றல்கள். இப்படிப்பட்ட ஆற்றல்களைக் கொண்டு எதையும் சாதிக்க முடிகிறது.

    ஆற்றல்கள் நம்மிடத்தில் இருக்கிறதா? இல்லையா? என்பதைக் கண்டறிய செயல்களில் ஈடுபட வேண்டும். ஓட்டப்பந்தயத்தில் ஓடிப்பார்க்க வேண்டும். ஒரு கடிதம் எழுதிப் பார்க்க வேண்டும். ஒரு மொழியைக் கற்க முயற்சிக்க வேண்டும். ஒரு நூலை எழுதிப் பழக வேண்டும். நமது தொழிலை புதுவிதமாக (Novelty) செய்துபார்க்க வேண்டும். ஒரு கூட்டத்தில் பேசிப் பார்க்க வேண்டும். ஒரு பாடத்தை மனப்பாடம் செய்து பார்க்க வேண்டும்.

    இப்படியாக, ஒரு செயலில் ஈடுபடும்போது மற்றவர்களைவிட சில செயல்களை நம்மால் எளிதில் சிறப்பாக செய்ய முடியும் என்பதை நம்மால் உணர முடியும். அந்த வகையில் நமது ஆற்றல்கள் நமக்கு நன்றாக புலப்படும். நமது ஆற்றல்களைக் கண்டு வியந்து மகிழ வேண்டும்.

    நம்முடைய தனித்திறமைகளைப் பலரும் பாராட்டுவார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லி நாம் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். உதாசீனப்படுத்தக் கூடாது. சுருங்கச் சொன்னால் நாமே நமக்கு ரசிகர்களாக மாறவேண்டும். நாமே நமது விமர்சகராகவும் மாறவேண்டும். நாம் மற்றவர்களோடு சகஜமாக பழகாமல் ஒதுங்கி இருக்கிறோம், என்பது உண்மையானால் அதை உணர வேண்டும். அந்த நிலைமையை மாற்றியமைக்க புறப்பட வேண்டும். இல்லையென்றால் அதையே ஒரு பலமாக மாற்றிக்கொண்டு அதற்கேற்ற பணியில் தீவிரமாக ஈடுபட்டு ஒரு எழுத்தாளராகவோ, இசை ஞானியாகவோ, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியாகவோ வர முடியும். ஆக, உங்கள் திறமைகள் பல உங்களிடத்தில் இருக்கிறது என்பது உண்மை. அதை நீங்கள் தேடிப்பார்க்க வேண்டும் என்பது மிகமிக அவசியம்.

    திறமைகளைப் பயன்படுத்தி ஒரு தொழிலில் முன்னேற முடியும் என்பதில் ஒரு சந்தேகமும் கிடையாது. இன்றிலிருந்து வெளியில் நடக்கும் காரியங்களை மட்டும் சிந்திக்காமல் உங்களுக்குள்ளேயே கிடக்கும் பொற்குவியல்களையும், நடக்கும் மாற்றங்களையும், வளரும் திறமைகளையும், தொடர் போராட்டங்களையும் உணர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். “மற்றவர்களைப் பற்றி தெரிந்தவன் அறிவாளி, தன்னைப் பற்றி உணர்ந்தவன் ஞானி”  இன்றிலிருந்து நீங்களும் ஞானி.

    இந்த இதழை மேலும்

    பயணங்கள் இனிதாகட்டும்! பலன்கள் பரவலாகட்டும்!!

    திரு. T. நடராஜ், M.B.A.

    நிறுவனர், மக்கள் ஆட்டோ, கோவை

    மக்களுக்கான சேவையில் உண்மையாக தங்களை இணைத்துக் கொள்பவர்கள் எப்போதும் ‘கை தட்டல்கள்’ பெறக் கூடியவர்கள் தான். அந்த வகையில் மக்களின் மனம் திறந்த பாராட்டுதல்களையும், கை தட்டல்களையும் பெற்றவர் இவர்.

    • தொழில் செய்கிறோம் என்பதைவிட அந்தத் தொழில் மூலம் பிறரின் பயன்பாட்டுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று ஆராய்ந்து மக்களுக்காக ‘மக்கள் ஆட்டோ’ நிறுவனத்தைத் துவக்கிய பெருமைக்குரியவர் இவர்.
    • அனுபவங்களை மூலதனமாக்கி, மூளைத்தனத்தை செயல் வடிவமாக்கி புதுமையாய் அதே சமயம் பலரும் வியக்கும் விதமாய் சிந்திக்கும் சிந்தனையாளர் இவர்.
    • மாறுபட்ட அணுகுமுறை, மாற்றிவிட்ட பயண முறை இவர்கள் வளர வேண்டிய தலைமுறை என பயணாளிகள் பாராட்டும் ‘மக்கள் ஆட்டோ’

    உங்களின்பிறப்பும், கல்வியும்

    நான் பொள்ளாச்சி நெகமம் அருகிலுள்ள கொண்டே கவுண்டன் பாளையம் என்ற குக்கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். அங்குள்ள அரசு பள்ளியில் தான் என்னுடைய தொடக்கக் கல்வி அமைந்தது. அதன்பிறகு அருகிலுள்ள நெகமம் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தேன். அதற்குப் பின்னர் எம்.பி.ஏ. முடித்தேன். படிக்கும்போதே கம்ப்யூட்டர் சம்பந்தமான நுட்பங்களை சரிவரக் கற்றுக்கொண்டதால் அதிலுள்ள சின்னச்சின்ன நுணுக்கங்களைக் கூட என்னால் சரியாக சீர் செய்யும் ஆற்றலைப் பெற்றேன். அப்போது எனது அண்ணன் திரு. T. செல்வராஜ் அவர்கள் ஸ்ரீ சிஸ்டம்ஸ் கம்ப்யூட்டர் சேல்ஸ் & சர்வீஸ் என்கிற நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தார். அவருடன் நானும் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தேன்.

    காலத்தின் வேகத்தில் அதை விட்டுவிட்டு வேறு ஏதாவது தொழில் தொடங்கலாம் என்ற முடிவுக்கு இருவரும் வந்தோம். அப்போது நான் கால் டாக்சி ஓட்டுநராக சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். இப்படி பல தொழில்கள், பல போராட்டங்கள் எனச் சந்தித்தோம். என் வாழ்க்கைப் பயணம் என்பது பல மேடுபள்ளங்களையும், கற்கள் முட்களையும் கடந்து தான் நகர்ந்தது.

    ‘மக்கள் ஆட்டோ’ எண்ணம் எழக் காரணம் என்ன?

    நான் சென்னையிலிருந்து கோவைக்கு வருவதற்கான ரயில் கட்டணத்தை விடவும் கோவை ரயில் நிலையத்திலிருந்து வீட்டிற்குச் சென்ற ஆட்டோ கட்டணம் மிக அதிகமாக இருந்தது. அன்று எடுத்த முடிவு தான், ஆட்டோ நிறுவனம் ஒன்றைத் துவங்கி நியாயமான கட்டணத்தில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது. அதுமட்டுமில்லாமல், ஏதேனும் தொழில் தொடங்கலாம் என்று யோசனை செய்த நேரமும் அது. வெறுமனே தொழில் தொடங்கினால் போதும் என்றில்லாமல் மக்களுக்கு உகந்த வகையில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது தான் இந்த மக்கள் ஆட்டோ நிறுவனம்.

    எனது சகோதரர் திரு. T. செல்வராஜ் அவர்கள் பொதுவாகவே மக்களுக்கு ஏதேனும் ஒருவகையில் நற்சேவை புரிய வேண்டும் என்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அதனால் அவருடன் இணைந்து இந்நிறுவனத்தை நடத்துவது சரியாக இருக்கும் என்று உணர்ந்து சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று அங்கிருக்கும் ஆட்டோ கட்டண விபரங்கள், ஆட்டோ ஓட்டுநர்களின் அனுபவங்களைப் பெற்று முடிவில் ‘கோவையில்’ மக்கள் டிரான்ஸ்போர்ட் என்கிற பெயரில் இந்நிறுவனத்தை சேவை மனப்பான்மையுடன் துவக்கினோம்.

    12.2.2014-ல் 38 ஆட்டோ முதலாளிகளையும், ஓட்டுநர்களையும் எங்களுடன் இணைத்துக் கொண்டு இச்சேவையை தொடங்கினோம். இப்போது இது 65 ஆட்டோக்களாக கோவை முழுவதும் மக்களின் சேவைக்காக இயங்கிக் கொண்டு இருக்கிறது.  எந்த நோக்கத்திற்காகத் தொடங்கினோமோ அந்த நோக்கத்தை நன்கு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

    மற்ற ஆட்டோக்களை விட மக்கள் ஆட்டோவின் சிறப்புகள் என்ன?

    முதலில் மக்கள் பார்த்தவுடனே இது ‘மக்கள் ஆட்டோ’ என்று அடையாளப்படுத்தும் எங்கள் பெயர் பலகை. எங்களின் சேவை என்பது அதிகாலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை.

    அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டணங்கள் தான் எங்கள் ஆட்டோவில் வசூலிக்கப்படுகிறது. முதல் 2 கி.மீ. ரூ. 14, அதன்பின் ஒரு கி.மீக்கு ரூ. 6 மட்டுமே கடந்த 6 மாதங்களாக வசூலிக்கிறோம். சரியான மீட்டருக்கு தகுந்த பணத்தைக் கொடுத்தால் மட்டும் போதும். பயணியர் அவர் அடைய வேண்டிய இடத்திற்கு வந்ததும் அவருக்கு கட்டண ரசீது கொடுக்கப்படுகிறது. இதனால் அவர்களும் முழுவதுமாக எங்களை நம்புகிறார்கள். மேலும் தமிழக அரசின் போக்குவரத்து விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கிறோம்.

    ஆட்டோவில் செய்தித்தாள், குடிநீர், அன்றாடம் அனைவரும் பயன்படுத்தும் எல்லாவிதமான செல்போன்களுக்கும் சார்ஜர் போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆட்டோ பயணமும் கால் சென்டர் மூலம் கண்காணிக்கப்படுவதால் பாதுகாப்பான பயணங்களை வழங்க முடிகிறது.

    தொலைபேசியின் மூலம் (0422 4000 8000) தொடர்பு கொண்டாலே போதும்.

    மக்களிடம் வரவேற்பு எவ்வாறு உள்ளது?

    எங்கள் ஆட்டோவை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். பேருந்து கட்டணத்தைப் போல, போக வேண்டிய இடத்திற்கு மிகக்குறைந்த கட்டணத்தில் மக்கள் தங்கள் இடத்தைச் சென்றடைகிறார்கள். பெரும்பாலான நடுத்தர மக்கள் இதனால் பயனடைந்துள்ளார்கள். அவர்கள் உளமார வாழ்த்துகிறார்கள். இதனால் தொடர்ந்து எங்கள் மக்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் உற்சாகத்துடன் பணியாற்றுகிறார்கள்.

    அதுபோல ‘கால் ஆட்டோ’ (Call Auto) என்ற ஒன்றை தமிழ்நாட்டில் முதன்முதலாக நாங்கள் தான் தொடங்கினோம். புதுமையான முயற்சி. மக்கள் நம்பி பயன்பெறுவார்களா என்ற கேள்விகள் எல்லாம் முதலில் எழுந்தது. ஆனால் இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் ஓய்வெடுக்க முடியாத அளவிற்கு எப்பொழுதும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு மக்களின் நன்மதிப்பு கிடைத்துள்ளதை எண்ணி பெரிதும் மகிழ்கிறோம்.

    மக்கள் ஆட்டோ சர்வீஸ் கோவையில் எங்கெங்கு உள்ளது?

    கோவை முழுவதும் டவுன் பேருந்து எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் எங்கள் ஆட்டோக்கள் செல்கின்றன. ஆட்டோ நிறுத்துவதற்கான தனி ஆட்டோ நிறுத்தம் என்று ஏதும் இல்லை. ஆட்டோ டிரைவர்கள் தாங்களாகவே பயணிகளை ஏற்றமாட்டார்கள். எங்கள் கால் சென்டர் மூலம் தான் ஏற்றிச் செல்கிறார்கள்.

    மக்கள் ஆட்டோவை இயக்கும் ஓட்டுநர்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

    இந்தத் தேர்வு செய்யும் முறை சற்று வித்தியாசமாக இருக்கும். முதலில் ஆட்டோ ஓட்டும் ஆர்வமுள்ளவர்களை வரவழைத்து அவர்களிடம் நேர்காணல் செய்து யார் தகுதியாக இருக்கிறார்களோ அவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து பணி அமர்த்துகிறோம்.

    முதலில் 700 பேர் வந்திருந்தார்கள். அவர்களில் 50 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து முதல் கட்டமாக ஓட்டுநர் பணியைக் கொடுத்தோம். ஆட்டோ ஓட்டுநர்கள் முதலில் நல்ல அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

     பின்னர் அவர்களின் தகுதிகள், குடும்பப் பின்னணி முதலியவற்றை அறிந்த பிறகு, அவர்கள் குடும்பத்துடன் நேர்காணல் நடத்திய பின்பு தான் பணிக்கு தேர்வு செய்வோம். பின்பு நிறுவன விதிமுறைகளை அவர்களிடம் கூறி அதற்கு அவர்கள் சம்மதித்த பின்னரே அவர்களை நாங்கள் தேர்வு செய்கிறோம்.

    அப்படியென்றால் நிறுவன விதி முறைகள் பற்றி சொல்லுங்களேன்?

    மக்கள் ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோ ஓட்டும்போது சீருடை அணிய வேண்டும். அடையாள அட்டை அணிய வேண்டும். பெயர் பொருந்திய அட்டை போட்டிருக்க வேண்டும். ஷூ போட வேண்டும் என்ற விதிமுறைகளை நிச்சயம் அவர்கள் பின்பற்றி இருக்க வேண்டும். இவையெல்லாம் இலவசமாகவே வழங்குகிறோம்.

    ஒவ்வொரு ஓட்டுநருக்கும் வங்கிக் கணக்கு கொடுத்திருக்கிறோம். அவர்களின் சம்பளத்தை நேரடியாக ஏ.டி.எம். இயந்திரத்தில் எடுத்துக் கொள்ளும் வசதி செய்து கொடுத்திருக்கிறோம்.

    ஓட்டுநர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கிறோம். அவர்களின் ஈடுபாடே எங்களின் வெற்றி. அவர்களின் நிறைகுறைகளை எப்பொழுது வேண்டுமென்றாலும் எங்களிடம் சொல்லி நிவர்த்தி செய்து கொள்ளலாம். முக்கியமாக மக்கள் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு “சேவை” குறித்த பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்பே பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.

    தங்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விரும்புபவர்களுக்கு நீங்கள் தரும் செய்தி?

    எங்கள் நிறுவனத்தில் ஓட்டுநராக மட்டுமே இணைந்து கொள்ளலாம். அல்லது ஏற்கனவே சொந்தமாக ஆட்டோ வைத்திருக்கக் கூடியவர் தன்னுடைய ஆட்டோவை எங்கள் நிறுவனத்தில் இணைத்துக் கொண்டு தினசரி நல்ல வருமானம் பெறலாம்.

    சொந்தமாக ஆட்டோ வாங்கி நிர்வாகத்தில் இணைந்து செயல்பட விரும்பும் ‘பேஜ்’ உள்ள ஓட்டுநர்களுக்கு அவர்கள் பேரிலேயே ஆட்டோ வாங்கித் தரப்பட்டு நிறுவனத்தில் இணைந்து செயல்படலாம். விருப்பம் உள்ளவர்கள் 90038 38308 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    வேறுபட்ட ஒரு தொழில் முயற்சி என்றாலே பிரச்சனைகள் ஏராளம் வரும்? அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?

    எல்லாத் தொழில்களிலும் போட்டிகள் நிச்சயம் இருக்கும். அப்படி போட்டியில்லை என்றாலும் புதுமையைப் புகட்ட முடியாது.

    கோவையில் சுமார் 12000 ஆட்டோக்கள் உள்ளன. நாங்கள் மட்டும் அரசு ஆணைப்படி இயக்குகிறோம். எங்களது ஆட்டோவிற்கு எனத் தனியாக ஆட்டோ ஸ்டான்டுகள் கிடையாது. தொலைபேசியின் மூலம் அழைக்கும் வாடிக்கையாளருக்கு மட்டும் அனுப்புகிறோம். இதனால் பிரச்சனைகள் வருவதில்லை. அதை பெரிதுபடுத்தினால் தான் தீங்கு. நாங்கள் அதை கண்டுகொள்வது இல்லை. மேலும் மற்றஆட்டோ ஓட்டுனர்களுக்குப் போட்டியாக நாங்கள் பயணிகளை ஏற்றுவதில்லை. எங்களின் ஒரே இலட்சியம் மக்களுக்கு உதவ வேண்டும். அவர்களின் நன்மதிப்பைப் பெறவேண்டும் என்பது தான். ஆனால் ஆரம்ப நாட்களில் எங்களைப் பற்றி தவறான புரிதல் காரணமாக மற்ற ஆட்டோ நண்பர்களால் பிரச்சனை வரத்தான் செய்தது. அதுவே எங்களுக்கு பெரிய விளம்பரமானது.

    பயணிகளின் வரத்தும், தங்களின் சேவை குறித்தும்?

    வளர்ந்து வரும் காலகட்டத்தில் போக்குவரத்துத் துறைகள் அனைத்திலும் நெரிசல்கள், பெண்கள் கூட படியில் நின்று பயணம் செய்து வரும் நிலை என்றிருக்கிறது. அந்த நேரங்களில் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாகவும், நெரிசல் இல்லாமல் பயணிக்கும் வகையில் எங்கள் ஆட்டோ சேவை துவங்கியது.

    மக்களும் நாளுக்கு நாள் எங்கள் சேவையை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்கிற புரிதல் எங்களுக்கு எழுந்திருக்கிறது. அதற்காக இன்னும் எங்கள் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறோம்.

    தனியாக குழந்தைகளை எங்கள் நிறுவனத்தை நம்பி அனுப்பி வைப்பதெல்லாம் மக்கள் தந்த மிகப்பெரிய நன்மதிப்பாகவே பார்க்கிறோம். இப்படிப்பட்ட சேவையை எதிர்வரும் காலத்தில் இன்னும் இன்னும் சிறப்பாக்கவே முயற்சிகள் மேற்கொள்வோம்.

    தொழிற்சங்கங்களின் பார்வையில் நீங்கள்?

    எங்களின் மீது ஆரம்பத்தில் இருந்த கண்ணோட்டம் இப்போது மாறியுள்ளது. நாங்கள் மற்றவர்களுக்கு எதிரி அல்ல என்பதைப் புரிந்து கொண்டனர். சில தொழிற்சங்கங்கள் அரசிடமிருந்து எந்தவொரு கட்டண ஆணையும் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். மீட்டர் கட்டணம் வந்த பிறகு அனைத்து ஆட்டோக்களும் மீட்டர் முறையில் ஓட ஆரம்பித்துவிட்டால் ஸ்டான்ட் கலாச்சாரம் இல்லாமலே போகும். அங்கங்கு ஆட்டோக்கள் மக்களுக்கு கிடைக்க ஆரம்பித்துவிடும். அப்போது ஸ்டேன்ட் கலாச்சார தொழிற்சங்கங்களுக்கு சற்றுப் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் முறையில்லாத கட்டணமுறை தொடர்வதையே விரும்புகிறார்கள் என நினைக்கிறோம்.

    தவறு எல்லோரிடமும் தான் இருக்கிறது. ஆனால் ஒருவர் செய்யும் தவறை மற்றொருவர் செய்யக்கூடாது என்பதில் எங்கள் மக்கள் ஆட்டோ பெரிதும் மாறுபட்டதாக காணப்படுகின்றது.

    கோவையைத் தவிர வேறு இடங்களில் இதே போல் மக்கள் ஆட்டோ இயங்குகிறதா?

    தமிழ்நாட்டில் இந்த மக்கள் ஆட்டோ கோவையைத் தவிர வேறு எங்கும் இல்லை. ஆனால் இப்போது இதன் வரவேற்பைப் பார்த்து மதுரை, சென்னை, ஈரோடு போன்ற மாநகரங்களிலும் தொடங்க எங்களிடம் ஆலோசனைகளைக் கேட்டு வருகிறார்கள்.

    இதனால் அடுத்தகட்டமாக ஈரோடு, மதுரை, சேலம் போன்ற பெரிய நகரங்களில் தொடங்கி கோவையைப் போலவே மக்களுக்கு இச்சேவைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் எங்களிடம் இதைப்பற்றி ஆலோசனைகளைக் கேட்கிறார்கள். அனைத்தையும் கலந்தாலோசித்து பின்னர் முடிவை சரியாக எடுத்து செயல்பட இருக்கிறோம்.

    இனிவரும் காலங்களில் மக்கள் ஆட்டோவிற்கான தேவையாக நீங்கள் கருதுவது?

    எங்கள் ஆட்டோ கால்சென்டருக்கு வரும் அழைப்புகளின் படி 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் தேவைப்படுகிறது. ஆனால் எங்களிடமிருக்கும் ஆட்டோக்களின் எண்ணிக்கை வெறும் 65 ஆட்டோக்கள் மட்டுமே. மீதமுள்ளவர்களுக்கு எங்களால் சரியாக ஆட்டோ கொடுக்க முடியவில்லை. இதனால் எங்களிடம் பிற ஆட்டோ உரிமையாளர்கள் இணைந்து செயல்பட்டால் அவர்களுக்கும் எங்கள் நிறுவனத்தின் சார்பில் தேவையான வசதிகளை செய்து கொடுக்க தயாராக உள்ளோம்.

    அப்படிவரும் ஓட்டுநர்களுக்கு எரிபொருள் செலவைத் தவிர மீதி எல்லாவற்றையும் முழுமையாக இலவசமாகவே செய்து கொடுக்கிறோம். சீருடை, மீட்டர் இதுபோன்ற எல்லாமும். இதன்மூலம் பெறும் தொகையில் நாங்கள் எந்தவித பிடித்தமும் செய்வதில்லை. எங்களின் ஒரே நோக்கம் தங்குதடையின்றி வாடிக்கையாளர் கேட்கும் பொழுது இல்லை என்று சொல்லாமல் அவர்களுக்கு சேவை செய்வது தான்.

    இது ஒரு பரந்த மனப்பான்மை நோக்கில் செயல்படுவதாகும். இப்பொழுது 25 ஆட்டோக்கள் இணைப்பு ஆட்டோக்களாக எங்களுடன் இணைந்து செயல்படுகின்றன. இவர்களுக்கு இலவசமாகவே தேவையான வசதிகளைச் செய்து வருகிறோம்.

    எங்களிடம் ஒருமுறை வந்து இணையும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீண்டும் எங்களை விட்டு போகக்கூடிய சூழல் அவர்களுக்கு ஏற்படவில்லை; இனியும் ஏற்படாது. அதேபோல் எங்கள் மக்கள் ஆட்டோவில் மது அருந்துபவர்கள், புகை பிடிப்பவர்கள் என்று எவரும் இல்லை. பல ஆண்டுகளாக மது அருந்தும் ஒருவர் எங்களிடம் இணைந்த பிறகு முற்றிலும் மாறுபட்டவராக மாறியிருக்கிற நிகழ்வுகளும் உண்டு. உதாரணமாக ஒரு ஓட்டுநரின் மனைவி என்னிடம் வந்து, எனது கணவர் இப்பொழுதெல்லாம் சம்பளம் முழுவதையும் வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விடுகிறார். மது அருந்துவதை நிறுத்திவிட்டார் என்று பெருமையுடன் சொல்லியதை நினைத்து மகிழ்கிறோம்.

    எனவே எங்கள் ஆட்டோ ஓட்டுநர்களையும், அவர்களது குடும்பத்தையும், எங்களது வாடிக்கையாளர்களையும் எல்லாவிதத்திலும் திருப்தி செய்து வருகிறோம் என்பதில் பெருமிதம் அடைகிறோம்.

    குடும்பப் பின்னணி

    எங்களது பெற்றோர் திருமலைசாமி, ஈஸ்வரி இன்னும் விவசாயம் பார்த்து வருகிறார்கள். எனது அண்ணா ப. செல்வராஜ் அவர்களின் மனைவி செரின் ஆசிரியை. என் அண்ணனின் மகன் சிபின், மகள் சுருதிகா இருவரும் பள்ளியில் படிக்கின்றனர். இம்மாதம் 10ம் தேதி வித்யா அவர்களை நான் கரம் பிடிக்க உள்ளேன். வாழ்த்துங்கள் வளர்கிறோம்.

    உங்களால் மறக்க முடியாத பாராட்டாக நீங்கள் கருதுவது?

    எங்கள் நிறுவனத்தைப் பாராட்டி எத்தனையோ நிறுவனங்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் கொடுத்துள்ளன. இது மனதிற்கு சந்தோசமாக இருந்தாலும் எங்கள் ஆட்டோவில் பயணம் செய்த பயணிகள் எங்கள் நிறுவனத்தையும், ஓட்டுநர்களையும், ஆட்டோவில் உள்ள வசதிகளையும் பற்றி எங்களுக்கு எழுதும் பாராட்டுக் கடிதங்களே எங்களைப் பெருமைப்படுத்துகின்றன.

    இதுவே எங்களது சேவைக்கு உந்துதலையும் அளிக்கிறது. வெளிமாநிலத்தில் இருந்தும் கூட எங்களது நிறுவனத்தைப் பாராட்டி கடிதங்கள் வந்துள்ளன. இதில் மறக்க முடியாத நிகழ்வு என்னவென்றால் 80 வயதிற்கும் மேற்பட்ட ஒரு முதியவர் எங்கள் ஆட்டோவில் பயணம் செய்தார். இதில் பயணிகளுக்காக வைத்திருந்த ஏற்பாடுகள் (குடிநீர், தினசரி பத்திரிக்கை, செல் சார்ஜர்) அவரை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அது மட்டுமின்றி, இன்று அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தில் ஆட்டோ ஓட்டுகிறார்கள் என்று பாராட்டி ஒரு பக்க அளவில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதைப்படித்த பின்னர் எங்களை மேலும் மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. மேலும் எங்கள் நிறுவன ஆட்டோ ஓட்டுநர்கள் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் எங்களுக்குத் தெரியப்படுத்தும்போது உண்மையிலேயே எங்கள் சேவை குறித்து மகிழ்வு கொள்கிறோம்.

    மக்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் அல்லாத ஏனைய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது?

    ஆட்டோவைத் தேடும் பணிகளுக்கும் பயணிகளைத் தேடும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் ஒரு பாலமாக அமைக்கப்பட்டது தான் “மக்கள் ஆட்டோ”. அதனால் நாங்கள் யாருக்கும் எதிரி அல்ல. மாறாக ஆட்டோத் துறையை நவீனப்படுத்திடவும், ஆட்டோ துறைசார்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும் இலட்சியமாகக் கொண்டுள்ளோம். தனிப்பட்ட ஆட்டோ ஓட்டுநரின் “வாடகையில்” நாங்கள் தவறியும் தலையிடுவதில்லை. எக்காலமும் மக்கள் ஆட்டோ ஸ்டான்டு கலாச்சாரத்திலிருந்து விலகி “கால் சென்டர்” மூலமாக செயல்படும். எனவே மற்ற தனிப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் எங்களின் நேர்மை மீதும், தொழிற் பக்தியின் மீதும் தவறான புரிதல் கொண்டிருக்க வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

    இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

    பரந்து விரிந்த இவ்வுலகில் பல தொழில்கள், பல வேலைகள் இருக்கின்றன. வேலை தேடிவரும் என்று வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டாம். வெளியில் வேலையைத் தேடி நடைபோடுங்கள். வேகமாக ஓடுங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

    படித்துமுடித்த, படிப்பிற்கேற்ற வேலைக்காக காத்திருங்கள். தாமதமானால் சுயமாய் தொழில் துவங்குங்கள். ஆனால் ஆண்டுக்கணக்கில் அல்ல. பல வேலைகளை கையில் வைத்திருங்கள். ஒன்று கைவிட்டாலும் மற்றொன்று உங்களை தூக்கிவிடும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் எந்தச் சூழலிலும் எதிரிகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அதனால் ஆயுள் குறையும். ஆனந்தம் தொலையும்.

    எதிர்காலத் திட்டம்?

    எங்கள் நிறுவனத்தின் எதிர்காலத்திட்டம் ஏராளமாக உள்ளது. முக்கியமாக இரண்டு. முதலில் கோவையை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, சேலம், மதுரை போன்ற பெரிய நகரங்களுக்கு இந்த மக்கள் ஆட்டோ சேவையைக் கொண்டு வர வேண்டும்.

    கணவனை இழந்த ஆதரவற்ற பெண்கள், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பெண்களை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் இனம் கண்டு அவர்களுக்கு முற்றிலும் இலவசமாக பயிற்சியளித்து பெண் ஆட்டோ ஓட்டுநர்களை உருவாக்க வேண்டும். அதன்மூலம் அவர்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகளைச் சமாளிக்கும் அளவுக்கு அவர்களை உருவாக்க வேண்டும் என்பதே.

    சமுதாயப் பங்களிப்பில் தாங்கள்?

    எங்கள் நிறுவனத்தின் மூலம் முழுக்க முழுக்க மக்களுக்கு குறைந்த செலவில் அரசு கட்டணத்தில் ஆட்டோ பயணங்களை பொதுமக்களுக்கு தொழில் நுட்பம் மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய பாதுகாப்புடனான சேவையாகவே இதைச் செய்கிறோம். ‘லயன்ஸ் கிளப்’, ‘ரோட்டரி கிளப்’ மற்றும் சமூகநல அமைப்புகள், ஆர்வலர்களிடமிருந்து எங்களுக்கு நிறைய ஒத்துழைப்புகள் கிடைக்கின்றது.

    பொதுமக்களே ஏதேனும் விழாக்காலங்களில் எங்களை அழைத்து கௌரவிக்கிறார்கள். இது எங்களுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய அங்கீகாரம் என்று நினைக்கிறோம்.

    என்றும் உங்கள் நன்றிக்குரியவர்கள் இவர்கள் என்று சொல்ல விரும்புபவர்கள்…

    நிதி தொடர்பாக எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பைத் தந்த கோவை, இருகூர் கனரா வங்கி கிளை வங்கிக்கு எங்கள் நன்றிகள். கோவை மாநகர காவல் துறைக்கும் எங்களது நன்றிகள். நேரம் காலம் பார்க்காது பணிபுரியும் அலுவலக ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றிகள்.

    இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவி வருபவர்கள் மக்கள். அவர்களை இந்த நேரத்தில் பெரிதும் மரியாதை செய்ய நாங்கள் கடமைப் பட்டிருக்கிறோம்.

    எல்லாவற்றிற்கும் மேலாக ஆட்டோ ரிக்ஷா துறையில் ஒரு புதிய மாற்றத்தை விரும்புவதை கடின உழைப்புடன் கூடிய ஆட்டோ ஓட்டுநர்கள் எங்களுடன் இணைந்துள்ளனர். அவர்களுக்கும் என்றென்றும் என் நன்றிகள்.

    இந்த இதழை மேலும்

    உள்ளத்தோடு உள்ளம்

    நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சர்.சி.வி. ராமன் அவர்களுக்கு பாராட்டு விழா. அந்த விழாவில் பல உள்நாட்டு, அயல்நாட்டு பிரபலங்கள் பலரும் கலந்திருந்தனர். விழாவின் முடிவில் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தில் கலந்து கொண்டவர்களிடையே சலசலப்பு. அந்தச் சலசலப்புக்குக் காரணம் ராமன் அவர்கள் மது அருந்துவாரா மாட்டாரா என்பது தான். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அங்கு மதுக்கோப்பையுடன் சர்.சி.வி. ராமன் அவர்கள் வர எல்லோரும் அவரையே ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கிறார்கள். அப்போது அவர் “நண்பர்களே ‘ராமன் எஃபக்ட்’ என்னவென்பது (ஊடுருவிச் செல்லும் பொருள்களின் தன்மையைப் பொறுத்தே ஒளி அலைகள் மாறுதல் அடைகின்றன என்பது தான் ராமன் விளைவு) நீங்கள் அறிவீர்கள். ஆனால் ராமன் மீது ஆல்கஹாலுக்கு எந்த எஃபக்டும் இருக்க முடியாது” என்று கூறி கோப்பையை அப்படியே கீழே கவிழ்த்துவிட்டார்.

    பணம், பதவி, புகழ் என்று வந்தவுடனே சூழ்நிலையின் காரணமாகவோ, சொந்த விருப்பத்தினாலோ தடம்புரண்டு விடுபவர்களின் எண்ணிக்கை, படிக்கும் காலத்திலேயே “பார்ட்டி” என்கிற பேரில் மாணவ சமுதாயத்தின் எண்ணிக்கை என நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவது கவலை தரும் விசயம். வாழ்வில் என்ன மாற்றம் வந்தாலும் நேர்மை தவறாத வாழ்வு வாழ்ந்தவர்கள் தான் இன்றும் வாழ்கிறார்கள்; என்றும் வாழ்வார்கள்.

    உறவுகளில் இருந்து உடலின் உள்ளுறுப்புகள் வரை அழித்து மனித வாழ்வை சிதைத்து வரும் ‘மதுவை’ ஒழிக்க தனிமனித விழிப்புணர்வு எழும் காலம் எப்போது? அரசே சட்டம் இயற்றி மதுவை ஒழிக்கும் காலமும் எப்போது? காத்திருப்பே காலமாகுமா? இல்லை விரைவில் காலம் நமக்காகுமா?