– 2013 – August | தன்னம்பிக்கை

Home » 2013 » August (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    மந்திரங்களை முழங்கு

    எஸ். ஆரோக்கியம்

    பிஷப் ஆம்புரோஸ் கல்லூரி

    கோயம்புத்தூர்

    முயற்சியினை மூச்சாக்கு

               தன்னம்பிக்கையினை வெற்றி கனியாக்கு…

               தோல்வியை உரமாக்கி,

               வெற்றியினை சாதனை மரமாக்கு…

               சுயநலத்தை, மரத்தின் இலையாக்கு

               அவை – உதிர்ந்து விடும் …

               பொதுநலத்தை மரத்தின் வேராக்கு

               சாய்ந்தாலும் முயற்சியால் முளைத்து விடும்…

               பொறுமை கொண்டால்

               உலகத்தை ஆளலாம்

               முயற்சி செய்தால்

               வெற்றி பெறலாம்

               தன்னம்பிக்கை கொண்டால்

               சாதனையைத் தன் வசமாக்கலாம்…

               முயற்சி, தன்னம்பிக்கை

               என்ற இரண்டு மந்திரங்களை

               உயிருள்ளவரை மனதில்

    முழங்கி கொண்டு இரு – மனிதா

    முயற்சியற்ற உனக்கு…

    இரா. மணிஜோதி பவிதா

    மதுரை

    போன்: 98652 63768

    கரையில் நின்றுகொண்டு

         கப்பலில் செல்ல வேண்டும்

         என்பது வெறும்

         கனவாக இருந்துவிடக் கூடாது

         நிறைவேற்றக்கூடிய

         நிலைப்பாட்டை

         நிர்மானிக்க வேண்டும்

         நீங்கா துயரத்திலும்

         நாளை வரும் வாய்ப்புக்கு

         நம்பிக்கையாய் இருந்தபோதும்,

         நழுவாமல் இருப்பதற்கு

         நல்ல தீர்மானம் கொண்டிரு மனதில்

         எடுத்த முயற்சியினை

         எளிதில் வெற்றிபெற

         எத்தனையோ வழிதெரிந்தும்

         எந்த திறவுகோலும் எடுக்காமல்

         இருப்பது நீ தான்

    வேகமாய் வருகிறது வெற்றி – 9

    ஜெ. கமலநாதன்

         நீங்கள் படித்த பள்ளிக்கூடத்தை அதன்பிறகு எத்தனை தடவை சென்று பார்த்திருக்கிறீர்கள். யோசித்துப் பாருங்கள். அந்தப் பள்ளிக்கூடத்தை பார்க்கும்போது படிக்கும் காலத்தில் கண்ட கனவுகளையும் இப்போது அடைந்துள்ள நிலையையும் நாற்பதைக் கடந்தவர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

         ஒருவேளை கனவு கண்டதை அடைய முடியாமல் போயிருக்கலாம் அல்லது கனவு கண்டதைவிட பெரிய உயர்நிலையை அடைந்திருக்கலாம். எதுவாயினும் கனவுக்கும் சாதனைக்கும் இடையே இடைவெளி இருப்பது இயல்புதான். ஆனால் அதற்காக கனவே கூடாது என்றோ இலட்சியம் கூடாது என்றோ கூறிவிட முடியாது. ஏதேனும் இலட்சியம் இருந்தால்தான் வேகம் இருக்கும்; ஊக்கம் இருக்கும்; உழைக்கின்ற வேட்கை தூண்டப்படும். வாழ்வில் பிடிப்பு ஏற்படும். மனதில் எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் உருவாகும்.

         போராட்டம் தான் நீரோட்டம். நீரோட்டம் இல்லாத நதிக்கு மதிப்பில்லை; போராட்டம் இல்லாத வாழ்க்கைக்கும் மதிப்பில்லை. ஓடினால் தான் நதி; தேங்கினால் குட்டை என்பார்கள். போராட்டம், போராட்டம் காலத்தோடு போராட்டம்; கனவுகளோடு போராட்டம்; மனிதர்களோடு போராட்டம்; இயற்கையோடு போராட்டம்; எதிரிகளோடு போராட்டம்; இல்லாமையோடு போராட்டம்; சமூகத்தோடு போராட்டம்; விதியோடு போராட்டம்… இப்படி திருப்பங்கள் நிறைந்த நாவலைப்போல நமது வாழ்க்கை செல்வது இயற்கையில் முரண் அல்ல; அழகு. இவை தான் வாழ்க்கையை சுவைமிக்கதாக்குகின்றன. நிறைந்த செல்வங்களும் வசதிகளும் நிறைவான அமைதியும் கூடிவிட்டால் வாழ்க்கை சுவையற்றுப் போய்விடும்.

         நிறைய துன்பங்களும் எதிர்ப்புகளும் இழப்புகளும் ஏற்பட ஏற்பட, அதை வெல்லக்கூடிய ஆற்றலும் அனுபவ அறிவும் சக்தியும் கூடும். நம்மால் இவ்வளவு எதிர்ப்புகளை சமாளிக்க முடிகிறதே என்ற வியப்புகூட ஏற்படும். “இவ்வளவு பலம் எனக்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை” என்று நீங்களே கூறும் அளவுக்கு செயற்கரிய செயல்களைச் செய்திருப்பீர்கள்.

         “கடலுக்கு பயந்தவன் கரையில் நின்றான் – அதைப்

    படகினில் கடந்தவன் உலகைக் கண்டான்;

    பயந்தவன் தனக்கே பகையானான்;

    துணிந்தவன் உலகிற்கு ஒளியாவான்”

    கவியரசு கண்ணதாசனின் இந்த வரிகளை நமது நெஞ்சில் நங்கூரமிட்டு நிறுத்திக் கொண்டால் போராட்டங்களை வாழ்வின் அங்கங்களாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிடும். இந்த மனப்பக்குவம் நமக்கு எல்லையற்ற சக்தியையும், பலத்தையும் அளிக்கும்; இந்த பலமும் சக்தியும் நமது செயல்களை சீராக அமைத்து வெற்றி காண்பதற்குரிய ஆற்றலைத் தரும். துணிச்சலும் அச்சமின்மையுமே நமது வாழ்க்கைப் படகை போராட்ட அலைகளின் ஊடே வெற்றிகரமாக செலுத்த உதவும். பயந்து பயந்து அச்சத்திற்கு இதயத்தில் இடமளித்து கோழைகளாக வாழப் பழகிவிட்டால் எந்தச் செயலையும் சிறப்பாக செய்து முடிக்க முடியாது.

    எனவே நல்லவராக இருத்தல், பேச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ளுதல், சரியான முறையில் திட்டமிடுதல், தனது திறமைகளை இனம்கண்டு கொள்ளுதல், இவற்றோடு வெற்றிக்கான வழிமுறைகளில் அச்சமின்மை என்ற அரிய பண்பினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

     உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

     இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

    பிச்சைவாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

    நச்சை வாயிலே கொணர்ந்து நண்பர் ஊட்டும் போதிலும்

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

     இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்றபோதிலும்

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

     இது மகாகவி பாரதியின் முழக்கம். ராணுவ வீரர்கள் எல்லையில் அணிவகுப்பு மரியாதையோடு நடைபோடும் வேளையில் பாட வேண்டிய பாடல் அல்லவா இது. ஒவ்வொரு தமிழனும் தனது உள்ளச் சுவற்றினில் ஒட்டிவைக்க வேண்டிய வரிகளல்லவா இவை.

     ஆஹா என்ன ஒரு கம்பீரம், எத்தகைய வீரம், எவ்வளவு வலிமை இந்தப் பாட்டினில் புதைந்து கிடக்கின்றது. “உச்சிமீது வானமே இடிந்து விழுந்தாலும், பிச்சை எடுத்து வாழும் நிலை உருவாகிவிட்டாலும், நண்பனே நஞ்சினைக் கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டாலும், இந்த உலகமே நம்மை எதிர்த்து நின்றாலும் அச்சம் கிடையாது; வா தோழா, அதனையும் சந்திப்போம்” என்றல்லவா மகாகவி அறைகூவல் விடுக்கின்றான்.

     இத்தகைய சூழல்களைவிடவா நமது சூழ்நிலை ஆபத்தானது. நினைத்துப் பாருங்கள். நமக்கு ஏற்படும் துன்பங்களெல்லாம் மிக மெலிதானவை; இவற்றை நீக்கி தூக்கி எறிய நம்மால் முடியும். ஆனால் எடுத்ததற்கெல்லாம் பயம் என்று வாழும் மனிதன் எப்படி வெற்றிகாண முடியும். அச்சப்படும் கோழை அவனுக்கு அவனே சுமையாகிப் போகிறான். பிறருக்கும் சுமையாக மாறுகிறான். இவன் ‘தயக்கங்களும் மயக்கங்களுமே என் வாழ்க்கைப் பாதையாகிவிட்டதே’ என்ற வருத்தத்திலேயே வாட்டம் அடைந்து மனம் உடைகிறான்; குமைகிறான்; அழுகிறான்.

     ஆனால் எதற்கும் அஞ்சாத வீரன் தோல்விகளால் துவண்டுபோவதில்லை. புடம்போட்ட பொன்னாக அவன் தோல்விகளால் அனுபவம் பெற்று தவறுகளைத் திருத்திக்கொண்டு மீண்டும் மீண்டும் செயல்முயற்சிகளை மேற்கொள்கிறான். அடுத்தடுத்து வரும் துன்பங்களை தன்னை செப்பனிட வந்த கருவிகளாக ஏற்றுக்கொண்டும் வெற்றியிலிருந்து பாடம்படித்து தவறுகளைக் களைந்து முன்னேறுகிறான். இறுதியில் வெற்றி காணுகின்றான்.

     “நாளென் செயும்; வினைதான் என்செயும். எனை நாடிவந்த கோள் என்செயும்; கொடுங்கூற்று என்செயும்; குமரக்கடவுள் இருக்கும்போது எனக்கென்ன பயம்?” என்று அச்சமற்று குரல் ஏழுப்பினார் ஒரு புலவர். உங்கள் கடவுள் யாராயினும் அவர் உங்களுக்கு துணைநிற்கிறார் என்று முழுமையாக நம்பினால் அச்சம் அகன்றுபோய்விடும்; வீரம் தோன்றும்; வெற்றி கிட்டும்.

    நீங்கள் சாதனையாளரே

    அருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம்

                     நம்மால் முடியும். உடல் உறுப்புகளில் மிக முக்கியமான கண்பார்வையை இழந்த பின்னும், சாதிக்கின்ற அன்பர்கள் வாழும்போது, நம்மால் சாதிக்க முடியும் தானே?

     இதற்கு நாம் செய்ய வேண்டியது நம்மிடமுள்ள எதிர்மறை எண்ணங்களை இழக்க வேண்டும் என்றும் பார்த்தோம். “பட்ட காலிலேயே படும்” என்ற பழமொழிக்கேற்ப, இந்த எதிர்மறை எண்ணங்கள் அவ்வளவு எளிதில் நம்மை விட்டுப் போய்விட்டது.

     ஜேம்ஸ் ஆலன் என்ற அமெரிக்க நாட்டு மன ஆராய்ச்சியாளர், முள்ளை முள்ளால் எடுப்பது போல எதிர்மறை எண்ணங்களின் இருப்பிடமாயுள்ள மனதின் ஆற்றலைக் கொண்டு, இடைவிடாது முயன்றால் தான், பிரபஞ்ச சக்தியும் இணைந்து, அவைகளை வெளியேற்றிவிடும் என்றார்.

     பெஞ்சமின் பிராங்களின் என்ற அமெரிக்க விஞ்ஞானி இதைக் கடைப்பிடித்து, எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றி, நல்ல பண்புகளின் இருப்பிடமாக மாறினார். தனது எதிர்மறை எண்ணங்களை 13 தலைப்பின் கீழ் தொகுத்தார். அதற்கு ஈடான நேர்மறையான, ஆக்கபூர்வமான எண்ணங்களை வகைப்படுத்தினார்.

     வாரத்துக்கு ஒன்று என்ற வீதம் 13 வாரங்கள் இடைவிடா முயற்சி செய்து எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் வெளியேற்றி, நல்ல எண்ணங்களே மனதில் இருக்குமாறு விழிப்புடன் செயல்பட்டார்.

     ஆனாலும், மனம் ஒரு குரங்கு தானேÐ முன்பு அனுபோகித்த சோம்பேறித்தனமான, பயமான சூழலை முழுதும் இழந்துவிடாமல் அவ்வப்போது நினைத்துக் கொண்டது. இதனால், அந்த எதிர்மறை எண்ணங்கள் மீண்டும் மீண்டும் மனதை ஆக்கிரமித்தன. இவரும் விடாப்பிடியாக கடுமையாக முயன்று ஆக்கபூர்வமான சிந்தனைகளை மனதில் விதைத்து, அவைகளை செயல்படுத்தினார்.

     செயல்பாடு என்பது கடுமையான, முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு. விளைவு – பல அரிய கண்டுபிடிப்புகளான இடிதாங்கிக் கருவி, பை-போகல் லென்ஸ் எனும் கண் கண்ணாடி போன்றவைகளை உலகுக்கு வழங்கினார்.

     இன்று நம் பகுதியில் வறுமை என்பது சாதாரணமாக உள்ளது. அறிவாளியான, நல்ல சிந்தனையுள்ள இளைய சமுதாயமும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. படிப்பு என்பது வியாபாரமாகி விட்ட நிலையில், அவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதை நினைத்தாலே, முடியாது என்ற எண்ணம் முடிசூடிக் கொள்ளும்.

     அரசாங்கம் கல்விக்கடன் வழங்கினாலும் கூட, இதுபோன்ற வாய்ப்புகளைத் தேடிச்சென்று நாட்களைச் செலவு செய்ய இயலாமல், தினமும் உழைத்தால் மட்டுமே உண்ண முடியும் என்ற நிலையில் வாழும் குடும்பங்கள் ஏராளமாயுள்ளன. அதில் ஒன்றின் வெளிப்பாடு இதோ

     ஜிபின் 17 வயது மாணவன். அவனது பெற்றோர் ஜோஷி-ராதா; வசிப்பது கேரளா, மலப்புரம் மாவட்டம் வளாசேரி. பெற்றோர் தொழில் அப்பளம் தயாரிப்பது. ஜிபினின் இலக்கு வாழ்க்கையில் ஒரு மருத்துவராக வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கான ஆலோசனைகளை தன் உறவினரான ஆசிரியர்கள் மூலம் பெற்றான். பிளஸ் 2 படிப்பை அரசு பள்ளியில் முடித்தான்.

     டெல்லியிலுள்ள ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் அல்லது கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, படித்து, மருத்துவராக ஆசை. இங்கு பணம் கொடுத்தாலும் சீட் கிடைக்காது. கொடுப்பதற்குப் பணமும் இல்லை.

     நன்றாகப் படித்தான். அகில இந்திய மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வு எழுதினான். அகில இந்திய அளவில் 320வது ரேங்க் பெற்றான். கேரள மருத்துவ நுழைவுத் தேர்வில் 331வது ரேங்க் கிடைத்தது.

     இதில் என்ன பெரிய சிறப்பு என எண்ண வேண்டாம். குடும்ப நிலை, பொருளாதாரத்தில் சுமார் தான். படிப்பறிவில்லாத பெற்றோர். மனம் முழுமையாகத் தனது விருப்பத்தை நேரான வழியில் கொண்டு செல்லாது என்பதால், மனம் எதிர்மறையாகச் சிந்திக்காதவாறு உடலால் உழைத்தான்.

     தினமும் குறிப்பிட்ட நேரம் தன் பெற்றோருடன் அப்பளம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு, மாவு பிசைந்து கொடுத்தான். எண்ணத்தை நிறைவேற்ற செயல்பாட்டின் துணை மிகவும் முக்கியம். அந்த வகையில் ‘எனக்கு இந்தத் தேர்வில் ரேங்க் கிடைக்குமா?’ என்று சந்தேகப்படாமல், இலக்கு ஒன்றையே குறியாகக் கொண்டு, மனதை அலைபாய விடாமல், மனதுக்கு வேலை கொடுத்தான் உடல் உழைப்பின் மூலமாக சாதித்தான். இனி அப்பளத்துக்கு மாவு பிசைந்த கைகளில் ஸ்டெதாஸ் கோப்

     இதுபோன்ற சாதனை இளைஞர்கள் நம் பகுதியில், நம்மைச் சுற்றிலும் பலர் உள்ளனர். ஆனால், அவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பை நாம் உருவாக்கவில்லை. முயன்று பாருங்கள். இதோ, இன்னொரு இளைஞர்.

     தனது அறிவாற்றலை உபயோகித்து அன்றாட வாழ்வில் உபயோகமாகும் தண்ணீரில் ஓடும் சைக்கிளை மிகக் குறைந்த செலவில் வடிவமைத்துள்ளார். சூர்யா, வேதாரண்யம் அருகில் செம்போடையில் ஆர்.வீ. பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்.

     ஆற்றங்கரையில் அமைந்துள்ள பல கிராமங்களில் ஆற்றைக் கடந்து அக்கரைக்குச் செல்ல போதுமான வசதிகள் கிடையாது. பாலம், படகு போன்றவை எல்லா இடங்களிலுமே இல்லை. பல கி.மீ. தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை தான். குறிப்பாக மழைக்காலங்களில் இவர்களின் பாடு திண்டாட்டம் தான். பலர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்படுவதும் வாடிக்கை.

     இதற்கு என்ன தீர்வு என யோசித்த சூர்யாவின் எண்ணத்தின் வெளிப்பாடு தான் மிதவை சைக்கிள். சாதாரண சைக்கிளில் ரூ. 1500 கூடுதல் செலவு செய்து, இவர் தன் மிதவை சைக்கிளை உருவாக்கியுள்ளார். இதோ அவர்:

     “லாரியின் டயர் டியூபை அரைவட்ட வடிவில், இரண்டாகப் பிரித்து, காற்று நிரப்பி, சைக்கிளின் முன் டயரில் ஒன்றும், பின்டயரில் ஒன்றுமாக இணைத்தேன். இரும்புத் தகடுகளால் செய்யப்பட்ட சிறப்பு விசிறியை, இரு புறத்திலும் இணைத்தேன். டியூபால், சைக்கிள் நீரில் மிதக்கும். பெடலை அழுத்தும்போது, பின் சக்கரம் சுற்ற, விசிறியும் சேர்ந்து சுற்றி, சைக்கிள் முன்னோக்கிச் செல்கிறது. கூடுதலாக சாதாரண பேரிங்கிற்கு பதிலாக, சக்கரங்களில் புஷ் பேரிங் பொருத்தினேன்.

     பெடலை மெதுவாக அழுத்தினாலே மணிக்கு 15 முதல் 20 கி.மீ. வேகத்தில் தண்ணீரில் செல்ல முடியும். இந்த சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பொருட்களுமே, உள்ளூர் சந்தைகளில் எளிதில் கிடைக்கும் குறைந்த விலையுள்ளவையே. மிதக்கும் அமைப்பை எளிதில் மாற்றி சாதாரண சைக்கிளாகவும் பயன்படுத்தலாம்.

     இந்த மிதவை சைக்கிள் தண்ணீரில் மூழ்காது. சிறு மீனவர்கள், படகு வாங்க முடியாதவர்கள், ஏரி, குளம், ஆறு போன்றவற்றில் மீன் பிடிக்க இது மிகவும் உபயோகமாகிறது. சாதாரண சைக்கிளில் கூடுதலாக இணைக்கப்படும் மொத்த எடை ஏழரை கிலோ மட்டுமே”. இது ஒரு சிறு உதாரணம்.

     இது போன்ற பல சாதனையாளர் நம் கண் முன்னே நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை இனம் காண விரும்பினால், கிடைப்பார்கள். அடிப்படை தேடல் தான்.

     தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும் – இது கேட்டது. இத்துடன் ‘தேடுங்கள் கிடைக்கப்படும்’ என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

     அனைத்துக்கும் அடிப்படை நம் மனம் தான். வெற்றியை விட தோல்வியைத் தான் மனம் அதிகம் விரும்புகிறது. ஏனென்றால் மனம் எனும் கூடை நிறைய எதிர்மறை எண்ணங்களை நிரப்பி வைத்துள்ளோம்.

     நீ எதை விரும்புகிறாயோ, அதனைப் பெறும் தகுதி மட்டும் இருந்தால் எப்படியாவது, அதுவே உன்னிடம் வந்து சேரும். இது நிதர்சன உண்மை.

     ஜிபின் விரும்பியது டாக்டர் பணி. இப்போது கைக்கு வந்துவிட்டது. சூர்யாவின் விருப்பம், கஷ்டப்பட்டு பல மைல் தூரம் சென்று வருபவர்களது நேரம், உழைப்பைக் குறைத்தல். அதற்கான வழிவகைகளை அவரது அறிவின் மூலம் இயற்கை மிதவை சைக்கிளாக இந்த உலகுக்கு அளித்துள்ளது.

     நாமும் இதுபோன்ற சாதனையாளர்கள் தான். இளைஞர்கள் மட்டுமா? எனக் கேட்பது காதில் விழுகிறது. முதியவர்களும் சாதிக்கிறார்கள். பலர் சேர்ந்தும் பெரியதாய் சாதிக்கிறார்கள். அவர்களைச் சந்திக்க பொறுத்திருங்கள்…

    நேசத்தால் சிறு பாலம்

    இன்று உணவு, உடை, மொழி என்று மட்டும் இல்லாமல் எது வேண்டுமென்றாலும் நாம் மேலை நாட்டையே பார்க்கிறோம். இதற்குக் காரணம், அயல்நாட்டு விஷயம் மிகச் சிறந்ததாக இருக்கும் என்ற ஒரு எண்ணம்.

    இன்று, மேற்படிப்புக்காகவோ அல்லது வேலை வாய்ப்புக்காகவோ வெளிநாட்டுக்குப் போவதே நம்முடைய இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் மிகவும் பிடித்தமான குறிக்கோளாகிவிட்டது. அமெரிக்காவுக்கோ, ஐரோப்பாவுக்கோ போனால் போதும். தங்கள் விருப்பம்போல், சுகபோகமான வாழ்க்கை வாழலாம் என்ற திடமான நம்பிக்கை அவர்களுக்கு. ஆனால் நடைமுறையில் அங்கே இருக்கும் நிலையே வேறு.

    அறிவியலால் மனித வாழ்க்கையை எந்த அளவுக்கு இன்பமயமாக்கலாம் என்று கண்டுபிடித்தவர்கள் தான் ஜெர்மன்காரர்கள். உலக வாழ்க்கையில் எவ்வளவு விதங்களில் இன்பங்களைக் கண்டறிந்து அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்தவர்கள். அவர்கள் வாழ்க்கையில் திருப்தி அடைந்தவர்களா? இல்லை என்று தான் ஆய்வுகள் கூறுகின்றன.

    பணத்தால் அடைய முடியாத எதற்காகவோ அவர்கள் தேடி அலைகிறார்கள். பணத்தால் அடைய முடியாத ஏதோ ஒன்றுக்காக அவர்கள் பரிதவிக்கிறார்கள். நிறைவும், நிம்மதியும் இல்லாமல் வாழ்கிறார்கள்.

    அதே ஆய்வில் ஸ்பானியர்களைப் பற்றியும் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜெர்மானியர்களைப் போல பொருளாதார ரீதியில் அவ்வளவு ஒன்றும் பெரிய வசதி இவர்களுக்கு இல்லை என்றாலும், ஸ்பானியர்கள் திருப்தி உடையவர்களாவார்கள். குடும்ப உறவுகளை முக்கியமாகக் கருதி போற்றி பாதுகாப்பவர்கள். இடையிடையே ஒன்று சேரும் குடும்ப நிகழ்ச்சிகளும், ஆட்டம், பாட்டம் என்று எல்லாமும் சேர்ந்து அவர்களைத் திருப்தி உடையவர்களாக்குகிறது.

    உலக தரத்தில் முதலிடத்தில் நிற்கும் அமெரிக்காவிலும் இது போன்ற ஒரு ஆய்வு நடந்தது. வேலை இடத்தில் உள்ள அழுத்தமும், நண்பர்களோடும், சொந்தங்களோடும் உள்ள தொடர்புகள் அற்றுப்போனது போன்றவை எல்லாம் காரணமாக அங்கிருப்பவர்களுடைய மகிழ்ச்சி குறைந்து கொண்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    எல்லா செயல்களிலும் மேலை நாட்டவர்களைப் பார்த்து அப்படியே ‘காப்பி’ அடிக்க நினைக்கும் நமக்கு இந்த ஆய்வு முடிவுகள் ஒரு பாடம். இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டாமா? ‘பணம் இல்லாவிட்டால் பிணம்’, ‘பணத்தின் மேலே பருந்தும் பறக்காது’ போன்ற பழமொழிகளுக்கு இடையில் ஒரு புதிய தலைமுறை வளர்ந்து வருகிறது.

    வயதாவதற்கு முன்பாகவே எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் சம்பாதித்துவிட வேண்டும். அதை வைத்து சுகபோகமாக வாழவேண்டும். இந்த ஒரே குறிக்கோளுக்காக படிக்கும் பிள்ளைகளை, அவர்களைப் படிக்க அனுப்பும் பெற்றோரை நம்மைச் சுற்றிலும் பார்க்கிறோம்.

    இப்படிப் படிக்கும் சில இளையதலைமுறையினருடைய வாழ்க்கையின் குறிக்கோளாக இருப்பது அடிதடி நடத்தியாவது தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதே. இதுவே அவர்களின் லட்சியம். நம் வாழ்க்கை இப்படி ஆர்ப்பாட்டமாக ஆக்கி ஆரவாரம் செய்வதற்கு உள்ளதா? இல்லை, மற்றவர்களுக்கு உபகாரமாக வாழ்வதா? சமுதாயத்திற்கு நன்மைகள் செய்து வாழ்வதா? என்ற கேள்விகள் அவர்கள் மனதில் எழுவதில்லை.

    நம்முடைய நாட்டில் நிலைமை இப்படி இருந்திருக்கவில்லை. வளமிக்க ஒரு சமூக வாழ்க்கை நமக்கு இருந்தது. கூட்டுக் குடும்பங்களும், கூட்டுறவுகளும் அன்று வாழ்க்கையின் அங்கங்களாக விளங்கி வந்தன. கொடுக்கல், வாங்கல்களுக்கு மட்டுமல்லாமல், இன்பங்களையும், துன்பங்களையும் பங்கிட்டுக் கொள்வதற்காகவும் அவை இருந்தன. அதிக உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்களில் அல்லறை சில்லறை சண்டைச் சச்சரவுகள் வந்துபோகும் என்றாலும், அந்த வாழ்க்கை பாதுகாப்பு உணர்வையும், பரஸ்பர நம்பிக்கையையும், இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் மனப்பக்குவத்தையும் இளம் மனதுகளில் வளர்த்து வந்தது. தாத்தா, பாட்டி, மாமா, மாமி, பெரியப்பா, பெரியம்மா என்றும்… அவர்களுடைய குழந்தைகளும்… இப்படி இழைகள் ஆறுந்து போகாத ஏராளமான உறவுகளின் பின்பலம் அன்றைய வாழ்க்கையில் இருந்தது.

    வளர்ந்து பெரிய ஆளாகி எங்கே பிரிந்து போனாலும் இந்த நேசங்கள் ஒரு மயிலிறகின் வருடலாக எப்போதும் உடனிருந்து வந்தது. எவ்வளவு தூரம் போய் வந்தாலும், ஊரில் வருடத்திற்கு ஒரு தடவை நடக்கும் ஊர்த்திருவிழாவுக்கும், வேண்டியவர்களுடைய இறுதிச் சடங்குகளிலும், சொந்தக்காரர்களுடைய கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காகவும் என்று ஏதோ ஒரு காரணத்திற்காக ஊருக்கு வரும் வழக்கம் இருந்தது. பின்னப்பட்ட சொந்தங்களை இழை பிரித்து சேர்ப்பதற்கு கிடைத்த அரிய வாய்ப்புகளாகும் இந்த சடங்குகள். ஆனால் இன்று நிலை மிகவும் மாறிவிட்டது.

    இயந்திரமயமான வாழ்க்கைக்கு இடையில் அன்பையும், பாசத்தையும் ஊட்டி வளர்ப்பதற்கும், அன்னியோன்யங்களை சொந்தக்காரர்களின் வீடுகளுக்குப் போய்விட்டு வருவதன் மூலம் உறுதிப்படுத்தவும் முடியாத நிலை… கோயில் சுற்றுப்புறத்தில் பெரியவர்களுடைய கோலாகலமான சிரிப்பும், பேச்சுகளும், கொஞ்சதூரம் தள்ளி நிற்கும் இளைஞர்களின் விவாத சர்ச்சைகளும் இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. ஒரு சாயங்காலத்தில்; இல்லை, ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஒரு நண்பன் வீட்டுக்கு வந்துபோவது ஒரு வழக்கமான சம்பவமாக இருந்தது. இன்று அது நினைத்துப் பார்க்கக்கூட முடியாத ஏதோ ஒன்றாக ஆகிவிட்டது.

    தகுதித்தேர்வுக்கு படித்துக் கொண்டிருக்கும் மகன், இரண்டு வருடங்கள் கழித்து நுழைவுத்தேர்வுக்குப் படிக்க வேண்டிய மகள்… அப்புறமோ ஆயிரத்தெட்டு வேலைகள்… கிடைப்பதோ ஒரு நாள் விடுமுறை… இதில் எங்கே வீட்டுக்கு வரும் நண்பர்களை, விருந்தாளிகளை, உறவினர்களை வரவேற்று உபசரிப்பது? இரண்டு வார்த்தைகள் எப்படி நிம்மதியாக அவர்களிடம் பேசுவது? மனதுக்குள் ஆயிரமாயிரம் பதட்டங்களையும், கவலைகளையும் மூட்டை கட்டி வைத்துக் கொண்டிருக்கும் நாம் நம்மைச் சுற்றிலும் மதில்களை ஒவ்வொரு நிமிடமும் உயர்த்தி உயர்த்திக் கட்டிக்கொண்டே இருக்கிறோம்.

    உற்சாகம் தரும் தோழமைகளின் அழைப்பையும், சொந்தங்கள் கட்டித்தரும் பாதுகாப்பையும் இழந்து நாம் இன்று பாதுகாப்பு இல்லாத உணர்வுடன் அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டிருக்கும் உளவியல் பிரச்சனைகளை நோக்கி ஒவ்வொரு நிமிடமும் அவர்களைப் போலவே நாமும் நெருங்கிக்கொண்டே இருக்கிறோம்.

    இலகுவாக கையாள வேண்டிய எளிமையான பிரச்சனைகளை நம் மனதில் இரும்பாகப் போட்டுக்கொண்டு அவதிப்படாமல் இருக்க நாம் செய்யவேண்டியது, நேசத்தால் சிறு பாலம் கட்ட வேண்டும். வீட்டிற்கு வருபவர்களோடு, வழியில் பார்க்கும் நண்பர்களோடு ஒரு சிறிய புன்சிரிப்பும், ஒன்றிரண்டு வார்த்தைகள் குசலம் விசாரிப்பும்… நமக்கு ஒன்றும் இதனால் நஷ்டம் வந்துவிடப் போவதில்லை என்பது மட்டும் இல்லை… மனதுக்குள் மத்தாப்பாக கொஞ்சம் குளிர்ச்சியான குற்றால சாறலும் விழும்.

    சிதம்பரம் ரவிச்சந்திரன்

    எனக்குள் ஒரு கனவு…

          1963 ஆகஸ்ட் 28, முற்பகல் 11 மணி. 2,50,000 மக்கள். அவர்கள் முன் தோன்றி  17 நிமிடங்கள் அமெரிக்க வரலாற்றிலேயே மிகப் புகழ்பெற்ற உரை ஒன்றை நிகழ்த்தினார் அமெரிக்க காந்தி என்றழைக்கப்படும் அமெரிக்காவின் அப்போதைய அதிபர் மார்டின் லூதர் கிங் .

    ‘எனக்குள் ஒரு கனவு’ என்ற புகழ் வாய்ந்த அந்த உரையில் தனது கனவுகளை விவரித்திருந்தார். அது,

         “எனக்குள் ஒரு கனவு இருக்கிறது…

         என்றாவது ஒருநாள் மனிதர்கள் எல்லோரும் சமம்

         என்பதை இந்த நாடு உணர்ந்து செயல்படும்.

         எனக்குள் ஒரு கனவு இருக்கிறது…

         என்றாவது ஒருநாள் ‘ஜார்ஜியாவின்’ சிகப்பு மலைத்தொடரில்

         அடிமைகளின் குழந்தைகளும் எஜமானர்களது குழந்தைகளும்

         சகோதரத்துவத்துடன் ஒரே மேஜையில் அமர்ந்து கொள்வார்கள்.

         எனக்குள் ஒரு கனவு இருக்கிறது…

         என்றாவது ஒருநாள் அநீதியிலும், அடக்கு முறையாலும்

         தகிக்கும் பாலைவனமான ‘மிஸ்ஸிஸிப்பி’ மாகாணம்

         விடுதலையும் நீதிநெறியும் தழைக்கும்

         பாலைவனச் சோலையாக மாறிவிடும்.

         எனக்குள் ஒரு கனவு இருக்கிறது…

         என்றாவது ஒருநாள் எனது நான்கு குழந்தைகளும்

         மறுமலர்ச்சியடைந்த இந்த நாட்டில் வாழ்வார்கள்.

         மறுமலர்ச்சியடைந்த இந்த நாட்டில்

    அவர்கள் தோல் நிறத்தை வைத்து எடைப் போடப்படாமல்

    அவர்களது நன்னடத்தையுடன்

    உள்ளடக்கத்தை வைத்து எடை போடப்படுவார்கள்” – என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உரையொன்றை நிகழ்த்தினார்.

    “பாதை இல்லையென்று கலங்காதே”

    லெனின், 17வது வயதில் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டுவரப்பட்டார். லெனினிடம் போலீஸ் அதிகாரி ‘உன் அண்ணன் ஜார் மன்னருக்கு எதிரான தீவிரவாதத்தில் இறங்கியதால் தூக்கிலிடப்பட்டு உயிர் இழந்தான். நீயும் ஏன் சுவருடன் மோதி மண்டையை உடைத்துக் கொள்கிறாய்? என்றார்.

    ‘என் எதிரே சுவர் இருப்பது உண்மை தான். ஆனால், அது பலவீனமானது. முட்டினாலே உடைந்து போகும்’ என்றார் லெனின் கோபத்துடன்.

    ‘தீவிரவாதம், மக்கள் போராட்டம் போன்றவற்றை நசுக்கி விடுவோம். உன்னால் எதுவும் செய்ய முடியாது’ என்றார் போலீஸ் அதிகாரி.

    ‘பாதை இல்லையென்று கலங்காதே… பாதையை உருவாக்கு என புரட்சி இலக்கியங்கள் எனக்கு போதித்திருக்கின்றன’ என்று உறுதியுடன் சொன்னார்; அப்படியே உருவாக்கவும் செய்தார்.

    லெனின்

    “நான் யார் என்பதை நான் தான் சொல்ல வேண்டும்”

           25 வயதில் சட்டதிட்டங்களில் நிபுணத்துவம் பெறுவதற்காக, கிரேக்க நாட்டிற்கு கி.மு. 75ம் வருடம் கடல் வழிப்பயணத்தை மேற்கொண்டார் ஜூலியஸ் சீசர். எதிர்பாராத விதமாக கப்பலில் இருந்த அனைவரும் கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டார்கள்.

    ‘20 தங்க காசு கொடுத்தால, உங்கள் நபர்களை விடுதலை செய்கிறோம்’ என ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக தகவல் அனுப்பினார்கள்.

    சீசர் கோபமாகி, ‘என் விலை 20 தங்கக் காசுகள் தானா? என்னûக் கேவலப்படுத்தாதீர்கள். 50 தங்கக் காசுகளாவது கேளுங்கள்’ என்றார்.

    கொள்ளையர்கள் அலட்சியமாகச் சிரித்தார்கள்.

    ‘உங்கள் அனைவரையும் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட என்னால் முடியும்’ என்றார் சீசர்.

    கொள்ளையர்கள் இதற்கும் அலட்சியமாகச் சிரித்தார்கள். சக பயணி ஒருவர் சீசரிடம், ‘எதற்காக உன்னை நீயே உயர்வாகப் பேசிக் கொள்கிறாய். அது உனக்கே ஆபத்தாக முடியலாம்’ என்று எச்சரித்தார்.

    ‘நான் யார் என்பதை நான் தான் சொல்ல வேண்டும்’ எனக்காகப் பிறர் விளம்பரம் செய்யமாட்டார்கள். அரச நீதி நூல்களில் சொல்லி இருப்பதைத் தான் நான் கடைபிடித்து வருகிறேன் என்றார் சீசர்.

    ஜூலியஸ் சீசர்

    “வாய்ப்புகள் வராது; நாம் தான் உருவாக்க வேண்டும்”

    1965ம் வருடம். அப்போது அவனுக்கு வயது 25. ‘இருவரும் சண்டை போடுவோம். நான் ஜெயித்தால், உன் பள்ளியை இழுத்து மூடிவிட வேண்டும். நீ ஜெயித்தால் நான் சொல்லிக் கொடுப்பதை நிறுத்திக் கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா? என்று புதிதாக தற்காப்புக் கலைகளைக் கற்றுத்தரும் புரூஸ்லியிடம் குங் ஃபூவில் புகழ்பெற்ற ஆசிரியரான வோங்க் ஜாக்மென் சவால்விட்டார்.

    எந்தவித தயக்கமும் இன்றி சவாலுக்குச் சம்மதித்தார் புரூஸ் லீ. சண்டை ஆரம்பித்தது. பத்தே நொடியில் தோல்வியைத் தழுவினார் வோங்க். அந்த ஒரே நிகழ்வில் அமெரிக்கா மற்றும் சீனாவில் லீயின் புகழ் கிடுகிடுவென பரவியது. நிருபர்கள், ‘என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக் கொண்டீர்கள்?’ என்று லீயிடம் கேட்டனர்.

    ‘நான் தத்துவத்தைப் பாடமாக படித்திருக்கிறேன். வாய்ப்புகள் தாமே வராது. நாம் தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் கவலையின்றி நானும் என் கலையும் புகழ்பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்’ என்றார் லீ. அதுவரை சாதாரண தொலைக்காட்சி நடிகராக இருந்த லீ உலகப் புகழ்பெற்றது அந்த நிகழ்வுக்குப் பிறகுதான்.

    புரூஸ் லீ

    “இரண்டாவதாக வருபவரை உலகம் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை”

                1964ம் வருடம், அப்போது அவர் 22 வயது இளைஞன். உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டைப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வைத்திருந்த லிஸ்டைனை எதிர்த்து நின்ற முகமது அலியை பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பார்வையாளர்கள்.

    இரண்டு சுற்றுகள் சாதாரணமாகவே முடிந்தது. 3வது சுற்றில் முகமது அலியின் குத்து, லிஸ்டனின் புருவத்தைப் பதம் பார்த்தது. காயத்துக்கு மருந்து போட்டுவிட்டு வந்து கடுமையான ஆக்ரோஷத்துடன் குத்துக்களை விட்டார் லிஸ்டன். லிஸ்டனின் புருவத்தில் இருந்த மருந்து முகமது அலியின் கண்ணுக்குள் விழுந்துவிட, பெரும் உறுத்தலுடன் அடுத்த இரண்டு சுற்றுகள் சண்டை போட்டார் அலி.

    ஒரு வழியாக கண் உறுத்தல் ஆறாவது சுற்றில் சரியானது. அதிரத் தாக்குதலில் இறங்கினார் அலி. அந்த சுற்றின் இறுதியில் தான் கைமூட்டு இடம் பெயர்ந்திருப்பதை உணர்ந்தார் லிஸ்டன். தொடர்ந்து போட்டியில் லிஸ்டனால் பங்கேற்க முடியாமல் போக, முகமது அலி உலக ஹெவிவெயிட் சாம்பியனானார்.

    அலியிடம் நிருபர்கள், ‘இந்த வெற்றியை எதிர்பார்த்தீர்களா?’ என கேட்க, உற்சாகமாக அவர், ‘இரண்டாவதாக வருபவரை உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக் கொள்வதில்லை என்று எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார், என்னுடைய பயிற்சியாளர் ஃபிரட்ஸ் டோனர். அதனால் முதல் இடம் தவிர எதையும், எப்போதும் நான் ஏற்றுக்கொள்வதில்லை’ என்றார் தன்னம்பிக்கையுடன். முகமது அலி தான் கலந்துகொண்ட போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்று இறுதிவரை முதல்வனாகவே திகழ்ந்தார்.

    முகமது அலி