– 2013 – August | தன்னம்பிக்கை

Home » 2013 » August (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    வாழ்க்கை வசப்படும்

    D. ராஜலட்சுமி

    கூடுதல்தொடக்கக்கல்விஅலுவலர்(AAEO)

    ஈரோடு

    போன்: 97886 93280

     

    எப்படி? வாய்ப்புகள் தாமே வராது. நாம்தான் உருவாக்க வேண்டும். வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்றுமே வெற்றியைத் தொடவே முடியாது. வாய்ப்புகளை உருவாக்குபவர்களே சாதனையாளர்கள். நாமும் சாதனையாளர்களாக முயற்சி செய்வோம்.

     நீ முடியாது என்று சொல்வதை எல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டு தான் இருக்கிறான். எவன் தலையிலும் எழுதப்படவில்லை, ‘இவன் தான் சாதிக்கப் பிறந்தவன்’ என்று. நீ சாகப் பிறந்தவன் அல்ல. சாதிக்கப் பிறந்தவன். “நமக்கு பாதகமான ஒவ்வொரு நிகழ்விலும் நமக்கு சாதகமான ஏதோ ஒன்று இருக்கிறது” என்பதை உணர்ந்து கொண்டால் நம் மனம் ராக்கெட் போல் மேலே சென்று கொண்டே இருக்கும்.

     Always do not wait for your second opportunities, because it may be hardened than the First One (Dr. APJ Abdul Kalam). “எப்போதும் இரண்டாம் வாய்ப்புக்காக காத்திருக்காமல் முதல் வாய்ப்பிலே செயலினை முடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் இரண்டாம் வாய்ப்பு முதல் வாய்ப்பை விடவும் கடினமாக இருக்கக்கூடும்” என்று சொல்லி இருக்கிறார் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள்.

     சாதனை கனவுகள் ஒரே நாளில் நிகழ்வதல்ல. ஒரு நாளில் நிச்சயம் முடியும். நீந்துங்கள் அல்லது மூழ்குங்கள், கரையிலே நிற்பது எதற்கும் உதவாது.

     So many people can be responsible for your success. But only you are responsible for your failure. சவால்கள் தான் நம்மை எப்போதும் சுறுசுறுப்புடனும் உத்வேகத்துடனும் வைத்திருக்கின்றன. எனவே பிரச்சனையை எதிர்கொண்டால் தான் வாழ்க்கை வசப்படும். நம்மிடம் உள்ள ஆற்றல் தனித்திறமை, உழைப்பு, இவை வெளிப்பட்டால்தான் நாம் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு நின்று ஜெயிக்க முடியும்.

     பலம் + பலகீனம் = மனிதன். நம்மிடம் உள்ள பலகீனங்களை அறிந்து அவற்றை நீக்க முயற்சி செய்ய வேண்டும். பணக்காரனுடன் உறவாடினால் பணக்காரன் ஆக மாட்டாய். ஆனால் அறிஞருடன் உறவாடினால் நீயும் அறிஞனாவாய்.

     “தகுதி உள்ளவை தப்பிப் பிழைக்கும்” (டார்வின்). எனவே நம் தகுதியை உயர்த்திக் கொண்டால் வெற்றி நிச்சயம். “உன் தகுதியை நீயே உரக்கச் சொல். பிறருக்காக காத்திருக்காதே” (ஜூலியஸ் சீசர்). நன்னூலிலும், ‘உன் பெருமையை நான்கு இடங்களில் கூறால் அது தற்பெருமை ஆகாது’ என்று சொல்லப்பட்டுள்ளது.

     அலுவலகம் என்பது பணம் கொடுக்கும் கேந்திரமாக இல்லாமல் உங்கள் திறமையை வெளிப்படுத்த ஒரு மேடையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் எதுவும் தங்கத்தட்டில் வைத்து உன் முன் நீட்டப்படாது. அதற்காக போராட வேண்டும். வாழும் ஒவ்வொரு வினாடியும் வாழக் கற்றுக்கொள்வோம். ஏனெனில் வாழ்க்கை ஒரு பொக்கிஷம். நீ பலமுள்ளவனாக விரும்பினால் உன் பலவீனங்களைத் தெரிந்து கொள்.

     “படிக்கும் பழக்கம் முழுமையான மனிதனை உருவாக்கும்” (கார்லைஸ்). படிப்பதை ஒருநாளும் நிறுத்த வேண்டாம். எந்த பணியில் இருந்தாலும் பேச்சுத்திறன் அவசியம். சொல்லின் வல்லவரானால் நம்மைப் பற்றிய நல்ல மதிப்பீடுகளை உருவாக்கிவிடலாம். பிறரை பாராட்ட வேண்டும் என்று உள் மனம் நினைத்தாலும் தயக்கம் நம்மைத் தடுத்துவிடும். பிறர் சிறப்பினையும் உதவியினையும் பாராட்டுங்கள். அதுவும் உடனடியாக பாராட்டுங்கள். பாராட்டப்படுவீர்கள்.

     வெற்றியின் விலாசம் விசாலம் – விடாமுயற்சி. கனவுகளும், கற்பனைகளும் வெற்றிக்கு முதல்படி. பொறுமை அறிவின் அணிகலன். “பொழுதை பொன்னாக்கு” என்பது கரிச்சான் குஞ்சுவின் புகழ்பெற்ற வாக்கியம். நேரத்தைத் திட்டமிட்டு பயனுள்ளதாக கழிப்போம். நாளைய தினத்தை இன்றே படைத்திடுவீர்.

     கூப்பிடும் தூரத்தில் தான் குவிந்து கிடக்கிறது வாய்ப்பு. ஒவ்வொரு மனிதனும் ஒரு சிறப்போடு தான் படைக்கப்பட்டிருக்கிறோம்.

     வாழ்வோம் சாதிப்போம்

    வரலாற்றில் இடம் பிடிப்போம்

    முன் கோபம்

    கலைமாமணிபெரு. மதியழகன்

    எதிர்ப்பும் எதிரிகளும் இல்லாத மனிதர்கள் யாராவது உண்டா? நமக்கெதற்கு ஊர் வம்பு என்று, தான் உண்டு, தன் குடும்பம் உண்டு என்று தன்னலத்தோடு இருப்பவர்க்கே கூட எதிரிகள் இருப்பார்கள். பொதுவாழ்வில் அடுத்தவரைப் பற்றி அக்கறை கொள்கிறவர்களுக்கு எதிரிகள் ஏராளம் இருப்பர். அதுசரி, நமது முதல் எதிரி யார்?

    முன்கோபமே நமது முதல் எதிரி. இதற்குச் சினம் என்றும் பொருள் உண்டு. கோபத்தின் பல்வேறு பரிமாணங்களை விளக்குவதே இந்த கட்டுரை. உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் கோபத்தைத் தவிர பகை வேறு உள்ளதோ? என்பார். நகையையும் உவகையையும் இது கொன்றுவிடும் என்றும், கோபம் வராமல் காக்கத் தவறினால் ‘தன்னையே கொல்லும் சினம்’ என்றும், கோபப்படாதவன் நினைத்ததை நிறைவேற்றுவான் என்றும், கட்டுக்கடங்காது கோபப்படுபவன் இறந்தவரைப் போன்றவன், சினத்தை அடியோடு துறந்தவன் துறவிக்கு ஒப்பானவன் என்றும் பலவாறாக கோபம் குறித்து பத்து குறள்களில் பகுத்தும் வகுத்தும் தொகுத்தும் அளித்துள்ளார்.

    கோபப்படுபவன் இறந்தாரைப் போன்றவர், அதாவது ‘இறந்தார் இறந்தார் அனையர்’ என்பார் அவர். கோபப்பட்டு உணர்ச்சி மேலீட்டால் கொலைபுரிகிறவர்களைச் சிறையில் அடைத்து ஆயுள் கைதி ஆக்குகிறார்கள். இது வாழ்க்கையை வாழ்ந்து பார்ப்பதாகுமா? இவர்கள் இறந்தவர்க்கு ஒப்பானவர்கள் தான். ஆக வள்ளுவர் மொழிந்தது சரிதான். ஆனால் ‘சினத்தைத் துறந்தார் துணை’ என்பதுதான் சிந்தனைக்கு உரியதாக இருக்கிறது.

    முற்றும் துறந்தவர்களாகச் சொல்லப்பட்டவர்களும் முடிவாய் துறக்க முடியாமல் திணறியது முன்கோபத்தால் என்பதற்குப் புராணங்களில் நாம் படித்த முனிவர் விசுவாமித்தரும், துர்வாசரும் முன்னுதாரணம்.

    இப்போது நாம் காணும் பல துறவியர் ‘கோபம் கொல்’கிறவர்களாக இல்லை, ‘கோபம் கொள்கிறவர்களாகவும் கோபியரைக் கொள்கிறவர்களாகவுமே’ இருக்கிறார்கள். ஆனால் புத்தர் கோபம் துறந்தவராக நம்மால் அறியப்படுகிறார். ஆசைகளை அடக்கச் சொன்ன புத்தர் முதலில் அறிந்துகொண்டது கோபத்தை அடக்கத்தான்.

    அந்தி மாலை நேரம். ஆட்டிடையன் ஒருவன் மேய்ச்சலுக்குப் போன ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். அந்த மந்தையில் குட்டியொன்று காடு, மலையில் மேய்ந்து வந்ததில் காலில் காயப்பட்டு நொண்டி நொண்டி வந்தது.

    அந்த வழியாக வந்தத் துறவி கேட்டார், அந்த ஆட்டுக்குட்டிக்கு என்ன ஆச்சு? என்று. துறவியை முறைத்துப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டான். மீண்டும் மெல்லக் கேட்டார் துறவி… குட்டிக்கு என்ன ஆச்சு?

    அடிபட்டுக் காயமாயிடுச்சு… நீ என்ன வைத்தியம் பார்க்கப் போறியா? என்று இரைந்தான் இடையன். துன்பப்படுதே குட்டி தூக்கிக்கிட்டுப் போன என்ன? என்றார் துறவி.

    அப்படியாÐ சரி பட்டி வரைக்கும் நீயே குட்டியத் தூக்கிவர உன்னால் முடியும்னா தூக்கிவாÐ என்றான் இடையன். தூக்கினார் குட்டியைத் துறவி. தோளில் போட்டுக் கொண்டு நடந்தார். அடுத்து ஊரின் எல்லையில் பட்டியை அடைந்ததும், குட்டியை இறக்கிவிட்டார் துறவி.

    ஆமாÐ வழியில பார்த்தவங் எல்லோரும் உன்னக் கையெடுத்துக் கும்பிட்டாங்களேÐ உம் பேரு என்னனு இடையன் கேட்டான். அவர் சொன்னார், “எனக்குப் பல பேரு இருக்கு, ஆனா எல்லோரும் என்னை ‘புத்தன்’னு கூப்பிடுவாங்க” என்றார். அவரை விழுந்து வணங்கினான் இடையன்.

    இன்னொரு நாள், புத்தர் ஒரு சிற்றூர் வழியாக சென்று கொண்டிருந்தார். அவரை வேலையற்றதுகள் சில கேலி செய்தன. அதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து சென்றார். எந்தச் சலனமும் இல்லாத புத்தரைப் பார்த்துக் கேட்டார்கள். இவ்வளவு கேலி கிண்டல் செய்தும் உங்களுக்குக் கோபம் வரவில்லையா? என்று.

    புத்தர் சொன்னார், ‘பக்கத்து கிராமத்தில் மக்கள் பிரியமாக இனிப்புகளைக் கொடுத்தும் போற்றினார்கள். ஆனால் நானோ இனிப்பு சாப்பிடுவதை நிறுத்தி இரண்டாண்டு ஆகிவிட்டது. அதனால் அந்த இனிப்புகளை ஏற்கவில்லை. அப்படியானால் அவை யாருக்குச் சொந்தம்?

    ஊர் மக்கள் ‘அந்த இனிப்புகள் அனைத்தும் கொடுக்க முன்வந்தவர்களுக்கே சொந்தம்’ என்றனர். ‘இப்போது நீங்கள் கேலி கிண்டல் செய்து அவமானப்படுத்தியதை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்பொழுது அவை யாருக்குச் சொந்தம்’ என்றார் புத்தர். ‘எங்களுக்கே’ என்றனர் மக்கள்.

    அதனால் யார் கோபமூட்டினாலும் அதை மனதளவில் ஏற்றுக்கொண்டால் தான் கோபம் ஏற்படும். இல்லையெனில் கோபத்திற்கே இடமில்லை.

    கோபம் ஓர் அடிப்படையான உணர்ச்சி. கோபம் வருவது இயற்கை. அதைக் கையாளுகிற விதத்தைப் பொறுத்தே வாழ்க்கையில் வளர்ச்சியா; வீழ்ச்சியா என்பது அடங்கிக் கிடக்கிறது.

    தன்னலம் சார்ந்த கோபம், தன்னையே அழிக்கும். பொதுநலம் சார்ந்த கோபம் நன்மையே நல்கும். காந்தியடிகள் கோபப்படாமல் இருந்திருந்தால் தென்னாப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் வெள்ளையரின் ஆதிக்கத்திற்கு முடிவு ஏது? சமூக அநீதிக்கு எதிராக பெரியார் கோபப்படாமல் இருந்திருந்தால் பிறவி பேதங்களில் இருந்து இங்கே மீட்சி ஏது? நிறவெறிக்கு எதிராக லிங்கன் கோபப்படாமல் இருந்திருந்தால் ஒபாமா போன்றவர்க்கு உயர்வு ஏது? இவையெல்லாம் ஆக்க சக்தியாக வெளிப்பட்ட கோபம்.

    ‘இயல்பாகவே போர்க்குணம் உள்ள மிருகம் தான் மனிதன்’ என்பார் சிக்மண்ட் பிராய்டு. ஆகவே கோபம் என்பது இயல்பான உணர்வு (Natural Instinct). அறிவியல் வழியாக பார்த்தால் கோபம் என்பது ஒரு சக்தி.

    இதை, தற்காப்பு சக்தியாக, ஆக்க சக்தியாக, அழிவு சக்தியாக எப்படி வேண்டுமானாலும் கையாள முடியும். நாம் எப்படிக் கையாளுகிறோம் என்பதில் தான் வாழ்க்கையில் இனிமையும், இனிமை இன்மையும் இருக்கிறது.

    பாம்பு படம் எடுப்பதும், தேள் கொடுக்கைத் தூக்குவதும், புலி உறுமுவதும், சிங்கம் கர்ஜிப்பதும், முள்ளம்பன்றி சிலிர்ப்பதும், மாடு முட்டுவதும், கழுதை உதைப்பதும் தற்காப்புக்கான கோபம்.

    பாம்பு படம் எடுக்காது, தேள் கொட்டாது, புலி பாயாது, கழுதை உதைக்காது என்று இருந்தால் இவை எல்லாம் அழிந்து இயற்கையின் சமநிலை இழந்து போயிருக்கும்.

    அடர்ந்த காடு. அங்கே ஒரு பாம்பு அந்த வழியாக போவோர் வருவோரை எல்லாம் போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தது. அது கடித்ததால் பலர் காலியானார்கள். அதனைக் கண்ட ஞானி ஒருவர், “பாம்பே இனி யாரையும் கடிக்காதே. இது மிகவும் கொடுஞ்செயல்” என்று அறிவுறுத்தினார். ஞானி சொன்ன பிறகு, தன் தவறுக்கு நாணி, இனி யாரையும் கடிப்பதில்லை என அவரிடம் சத்தியம் செய்து கொடுத்தது.

    திங்கள்கள் சில தீர்ந்தன. திரும்பவும் அந்த வனத்தின் வழியாக வந்தார் ஞானி. பாம்பு, உயிருக்குப் போராடும் அவஸ்த்தையோடு முனகிக் கொண்டு முடங்கிக் கிடந்தது ஒரு முட்புதரில். வலியால் வதைபடும் உயிரின் ஓலம் ஒலிப்பதைக் கேட்டு ஒரு கணம் நின்றார் ஞானி.

    மகானே, என்னைத் தெரிகிறதா? என்றது பாம்பு. இல்லை என்றார் அவர். “கடந்த முறை என்னைக் கடந்து சென்றபோது, கடிக்கக்கூடாது யாரையும் எனச் சத்தியம் வாங்கினீர்களேÐ அந்தப் பாம்பு தான் நான்” என்றது.

    ‘அடடாÐ என்னாச்சு உனக்கு?’ என்றார் ஞானி. யாரையும் கடிக்கக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டீங்க. அதிலிருந்து யாரையும் கடிக்கவில்லை. இந்த வழியாக போவோர் வருவோர் எல்லாம் என் மீது கல்லெறிந்து காயப்படுத்தினார்கள். சத்தியத்தைக் காப்பாற்றப்போய் இப்போது சாகக்கிடக்கிறேன் என்றது.

    அதற்கு ஞானி சொன்னார், “நான் கடிக்கக்கூடாதுன்னு தான் சொன்னேனே தவிர சீறக் கூடாதுன்னு சொல்லவில்லையேД என்று.

    இந்தக் கதை நமக்கு உணர்த்துவது என்ன? சரியான இடத்தில் சரியான அளவுக்குக் கோபப்பட வேண்டும். சரியாக கோபப்படுவது குறித்து கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடில், “கோபப்படுவது எவர்க்கும் எளியது. ஆனால், சரியானவரிடம் சரியான அளவுக்கு, சரியான நேரத்தில், சரியான காரணத்திற்காக, சரியான வழியில் கோபப்படுதல் என்பது எளிதன்று” என்று கூறியுள்ளார்.

    ஆகவே சில நேரங்களில் சினம் காட்டாமல் இருந்தாலே நமக்கே சிரமங்கள் வந்து சேரும். சில நேரங்களில் சில மனிதர்களிடம் சிக்கனமாக சினப்படுவது சூழலைச் சீர்படுத்தும். அதற்காக எல்லா நேரங்களிலும் எல்லாரிடமும் எரிந்து விழுகிறவனுக்கு எப்போதும் நிம்மதி இல்லை. எல்லா பக்கமும் அவர்களுக்கு எதிரிகளே நிறைந்திருப்பர். முன் கோபமே முதல் எதிரி.

    கோபத்தில் எந்தச் செயல் செய்தாலும் பல நேரங்களில் சீர்மையாகச் செய்ய இயலுவதில்லை. “கோபத்திலே கோபுர வாசலில் தலை நுழையாது, குண்டுச்சட்டியில் கை நுழையாது” என்பது பழமொழி.

    சரியான நேரத்தில் சரியான சினம் எதையும் சரியாக செய்யத் துணைபுரியும். “சினமென்னும் பாம்பிறந்தால் தாண்டவக்கோனே – யாவும், சித்தியென்றே நினையோடா தாண்டவக்கோனே” என்பார் இடைக்காட்டுச் சித்தர்.

    “கோபம் உள்ள வீட்டில் தண்ணீர்க் குடம் கூடக் காய்ந்து போய்க்கிடக்கும்” என்கிறது மூதுரை. குடம் மட்டுமல்ல இதயமும் வற்றிப் போகும். நுரையீரல், செரிப்பு மண்டலம், மூளை போன்ற எல்லா உறுப்புகளுமே பாதிக்கப்படும்.

    தலைவலி, தூக்கமின்மை, மனக்குழப்பம், மனப்பதற்றம், இரத்தக்கொதிப்பு, நெஞ்சு படபடப்பு, மாரடைப்பு, வயிற்றுபுண், உடல் வலி, செரிப்புக் கோளாறு, மனச்சோர்வு போன்ற பல்வேறு பாதிப்புகளும் நீடித்த கோபத்தால் ஏற்படுகின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை நினைத்து இன்று கொதிப்பேறி கோபம் கொப்பளிப்பவர்கள் உண்டு.

    தற்காப்பு, சமூக நலன், பணிச்சீர்மை போன்றவற்றிற்கு எப்போதாவது கோபப்படுவது, சரியான அளவுக்குக் கோபப்படுவதால் (Righteous Indignation) பாதகம் இல்லை, பயனே விளையும்.

    ஆனால் எப்போதும், சரியில்லாதவற்றுக்கெல்லாம் சட்டெனக் கோபப்படுகிறவர்கள் (Chronically Angry Persons). இவர்களை எல்லா தீமைகளும் வந்து சேரும். ‘சினம் சேர்ந்தாரைக் கொல்லி’ என்பது இவர்களுக்குத்தான். இத்தகையவர்களுக்கு இருதய நோய் – மாரடைப்பு ஏற்படுவதாக ஜேனிஸ் வில்லியம்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் அறிவித்திருப்பதை அமெரிக்கன் நோய் நிகழ்வியல் இதழ் (American Journal of Epidemiology) குறிப்பிட்டுள்ளது.

    கோபம் வரும் போதும் முகத்தில் இருக்கும் 43 தசை நார்கள் விரைத்துப் புடைத்துப் போகின்றன. ஆனால் சிரிக்கும்போது சில தசைநார்களே (17 மட்டுமே) பயன்படுத்தப்பட்டு இதம் அளிக்கின்றன என்கிறது அறிவியல். அதிகம் தசைகள் பயன்படுத்தப்படும்போது பாதிப்பும், சக்தி விரையமும் அதிகம் தான்.

    மனித மூளையில் கீழ்ப்பாகத்தில் அமைந்திருக்கும் டெம்போரல்லோப் (Temporal Lobe) என்ற பகுதியில் ஏற்படும் வேதிவினை கோபத்திற்குத் தூண்டுதலாக இருக்கிறது என்கிறது அறிவியல்.

         சித்தம் கலங்க வைக்கும் சினம்Ð

         சிறுபொழுதில் சிலரை ஆக்கும் பிணம்Ð

         துக்கம் தொடங்கும் அந்தக் கணம்Ð

         சிறிதேனும் வேண்டும் இதிலே சிக்கனம்Ð

         முதல் எதிரியாம் முன்கோபத்தை முனைமுறியக் கையாள்வது எப்படி?

    ஆறுவது சினம். ஆகட்டும் அடுத்தவாரம் காணலாம்…

    உனக்குள்ளே உலகம்-39—மதிப்பீடுகள்

    நெல்லைகவிநேசன்

     

          “என்னைப்பற்றி மற்றவர்கள் சிறப்பாக நினைக்க வேண்டும். மதிக்க வேண்டும். மரியாதை செய்ய வேண்டும். பாராட்ட வேண்டும்” – என்றெல்லாம் மனிதமனம் நாள்தோறும் விரும்புகிறது. தன்னை மற்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக மனிதர்கள் நாள்தோறும் பல்வேறு செயல்களை செய்துவருகிறார்கள். தன்னைப்பற்றி ஒரு மதிப்பை உருவாக்கிக்கொண்டு அந்த மதிப்பின்படி செயல்படவும் விரும்புகிறார்கள். இதனை “சுயமதிப்பு” என அழைப்பார்கள். சுயமதிப்பின் அடிப்படையில் மனிதர்கள் இயங்குவதால் இளம்வயதிலேயே சிலரது செயல்பாடுகள் வித்தியாசமாக அமைந்துவிடுகின்றன.

          ஊரிலுள்ள குளத்தில் தண்ணீர் நிரம்பியிருக்கும்போது செழிப்பு காணப்படுகிறது. மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். இதைப்போலவே ஒருவரின் சுயமதிப்பு அதிகமாக இருக்கும்போது மட்டும்தான் மனிதர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைகிறது. குளம் வறண்டபோது வளங்கள் பாதிக்கப்படுவதைப்போல சுயமதிப்பு குறையும்போது மனித வாழ்க்கையில் நலன்கள் பாதிக்கப்படுகிறது.

          எனவே – ஒவ்வொருவரும் தங்களைப்பற்றிய சுயமதிப்பை தரமானதாகவும், சிறந்ததாகவும் அமைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

          சின்னஞ்சிறு வயதிலேயே தன்னைப்பற்றி மற்றவர்கள் சிறந்தமுறையில் மதிப்பீடு செய்து “மதிப்பு” தரவேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் உருவாகிவிடுகிறது.

          பள்ளிக்குச் செல்லும் சிறுவன் ஒருவன் வேகமாக சைக்கிளில் வந்தான். பாதையில் இருந்த கல்லில் மோதி கீழே சரிந்தான். அவனுக்கு சற்று பலமாக அடிபட்டுவிட்டது. விழுந்தவன் எழ முயற்சிசெய்தான். சுற்றுமுற்றும் தனது பார்வையை சுழலவிட்டான். “யாராவது நம்மைப் பார்க்கிறார்களா?” என்று கூர்ந்து கவனித்தான். “நல்லவேளை யாரும் பார்க்கவில்லை” என்று ஒரு முடிவுசெய்து மகிழ்ச்சியோடு எழுந்தான். எழுந்து சைக்கிளை சரிசெய்வதற்குள் வேகமாக மோட்டார் சைக்கிளில்வந்த பக்கத்து வீட்டுக்காரர் “பிரேக்”போட்டு நிறுத்தினார். “அய்யோ… தம்பி உங்களுக்கு பலமாக அடிபட்டுவிட்டதோ?” – என்று இரக்கப்பட்டார்.

          விழுந்த சிறுவன் மனம் நொறுங்கிப்போனது. “போயும் போயும் இந்த மனுஷன் கண்ணில் பட்டுவிட்டோமே” என்று அவமானம் பிடுங்கித்தின்னதால் நெளிந்தான். “அடி ஒன்றும் படவில்லை” என்று சொல்லி சமாளிக்க முயன்றான். “தம்பி நல்லாப்பாரு உனது கால் பக்கம் இரத்தம் வருகிறது” என்றுசொல்லி மீண்டும் அவனைக் குத்திக்காட்டிப் பேசினார் பக்கத்துவீட்டுக்காரர்.

          பின்னர் “நன்றாகப் பார்த்து சைக்கிளை ஓட்டக்கூடாதா?” என்ற அறிவுரையையும் அள்ளித் தெளித்துவிட்டு நகன்றார்.

          எதிர்பாராமல் நடந்த இந்த விபத்து சில விபரீதங்களை உருவாக்கிவிட்டது.

     1.   “எனக்கு நன்றாக சைக்கிள் ஓட்டத்தெரியும்” என்று சிறந்தமுறையில் தன்னை சுய மதிப்பீடு (Self Assessment) செய்து வைத்திருந்த சிறுவனின் “மதிப்பு” குறைந்துவிட்டது.

    2.   “சைக்கிள் நன்றாக ஓட்டத்தெரியவில்லை” என்பதை பக்கத்து வீட்டுக்காரர் வலியுறுத்திச் சொல்லியது அவமானத்தை ஏற்படுத்தியது.

    3.   “சைக்கிளைக்கூட ஓட்டத்தெரியாத பையனாக இருக்கிறானே” என்று அவர் சுட்டிக்காட்டியது தன் சுயமதிப்பை தாழ்த்திவிட்டதாக சிறுவன் உணர்ந்தான்.

          இப்போது – காலில்பட்ட பலமான அடிகூட சிறுவனுக்கு வலிக்கவில்லை. ஆனால், நெஞ்சில்பட்ட அடி அவனை சின்னாபின்னாபடுத்தியது.

          இந்தச் சம்பவம்போலவே – நாள்தோறும் சுய மதிப்பை பாதிக்கின்ற வகையில் பல்வேறு சம்பவங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் இளைஞர்கள் வாழ்வில் நிகழ்ந்துவிடுகின்றன. அறிந்தோ, அறியாமலோ அடுத்தவர் பேசும் வார்த்தைகள் நல்லவிதமாக முடிவு செய்துவைத்த சுய மதிப்பை தாக்குகின்றன.

          சிலரது செயல்கள்கூட இளைஞர்களின் சுயமதிப்பை பாதிப்பதால் அவர்களது மனம் காயப்பட்டுவிடுகிறது. இதனால் இளம்வயதிலேயே முறைதவறி, நெறி வாழ்க்கையை வாழ இயலாமல் சில இளைய உள்ளங்கள் தவிக்கிறார்கள்.

          “சுயமதிப்பு” என்பது ஒருவர் தன்னைப்பற்றி நினைத்து வைத்திருக்கும் “மதிப்பீடு” ஆகும். அந்த மதிப்பீடு உண்மையாகவும் இருக்கலாம். சிலவேளைகளில் கற்பனையாகவும் அமையலாம். உண்மையான மதிப்பீடுசெய்து ஒருவர் தனது சுயமதிப்பை நிர்ணயம் செய்துகொண்டால் அவரது செயல்பாடுகள் அனைத்தும் நல்லதாகவே அமைந்துவிடுகின்றன. கற்பனைசெய்து தனது சுய மதிப்பை உண்மைநிலையைவிட மிக அதிகமாக நிர்ணயம் செய்தவர்கள்  சொல்லிலும், செயலிலும் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள்.

          “உனது முகம் அழகாக இல்லை” – என்று தோழி சொன்னாள்.

          “தனது முகம் மிகவும் அழகாக இருக்கிறது” என்று நினைத்து அலங்காரம் செய்து வந்தவள் தோழியின் வார்த்தையைக்கேட்டு வாடிப்போனாள். ஆனால் அதேவேளையில் “அழகு என்பது உருவத்தில் இல்லை. உள்ளத்தில்தான் இருக்கிறது” என்று எண்ணி தனது மனநிலையை சரியாக வைத்துக்கொண்ட இன்னொரு தோழி அழகைப்பற்றி கவலைப்படவில்லை. தோழியின் வார்த்தைகளால் தனது மதிப்பு குறைந்துவிட்டதாகவும் அவள் நினைக்கவில்லை.

          ஒருவர் எந்த அளவுக்கு தனது சுய மதிப்பை உருவாக்கிக்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு அவரது எண்ணங்களும், செயல்பாடுகளும் அமைகின்றன.

          சுயமதிப்பை 3 முக்கியப் பிரிவுகளாகப் பிரித்துக்கொள்ளலாம். அவை –

     1.   உயர்வான சுயமதிப்பு

    2.   தாழ்வான சுயமதிப்பு

    3.   உண்மையான சுயமதிப்பு

         ஆகியவை ஆகும்.

    1. உயர்வானசுயமதிப்பு

          சிலர் தன்னைப்பற்றி எப்போதுமே மிகவும் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். தன்னிடம் இல்லாத ஒரு திறமையை தன்னிடம் இருப்பதுபோல காட்டிக்கொள்ள முயல்வார்கள். இதன்மூலம் மற்றவர்கள் தன்னைப் பாராட்ட வேண்டும் என்று விரும்புவார்கள். ஒருவர் மிக உயர்ந்த அளவு தன்னைப்பற்றி மதிப்பு வைத்துக்கொள்வதை “உயர்வான சுயமதிப்பு” என அழைக்கலாம்.

          இப்படி – இல்லாத ஒன்றை தன்னிடம் இருப்பதுபோல காட்டிக்கொண்டு தன்னைப்பற்றி பெருமையாக நினைப்பவர்களை “ஈகோ” அதிகம் கொண்டவர்கள்” என மற்றவர்கள் நினைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்கள் எப்போதும் மற்றவர்களின் பாராட்டுக்காக ஏங்குவார்கள். யாராவது தன்னை குறைசொன்னால் அவர்களை எதிரிகளாகப் பார்ப்பதற்கும், எதிர்ப்பதற்கும் துணிந்துவிடுவார்கள். “உன்னிடம் திறமையில்லை” என யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுக்கவும், விட்டுவிலகவும் தயாராக இருப்பார்கள். தன்னைச்சுற்றி “ஆமாம்” போடும் ஆசாமிகள் எப்போதும் இருக்கவேண்டும் என்ற நினைப்பில் வாழ்வார்கள். தகுதிக்கு அதிகமாக தனக்கு பெருமை வரவேண்டும் என நினைக்கும் குணம் உள்ளவர்களாக இவர்கள் திகழ்வார்கள்.

          எனவே பள்ளி – கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகள் இல்லாதவற்றை இருப்பதுபோல எண்ணி தங்களைப்பற்றி கற்பனையாக சிந்தித்து வீண் பெருமைப்பேசி அலையும் குணத்தை மாற்றிக்கொள்வது நல்லது.

    2. தாழ்வானசுயமதிப்பீடு

          தனக்கு உண்மையிலேயே அதிகமாக திறமைகள் இருந்தாலும்கூட அந்த திறமைகளெல்லாம் தன்னிடம் இல்லை என எண்ணுவது “தாழ்வான சுயமதிப்பு” ஆகும்.

          தனது திறமைகளை மிகவும் குறைத்து மதிப்பிடுபவர்களில் பலர் மற்றவர்களுடைய உண்மையான திறமையையும் பெரும்பாலும் மதிக்க விரும்புவதில்லை. யாராவது ஒரு நல்ல கண்ணோட்டத்தில் தங்களைப் புகழ்ந்தால்கூட, அதனை சரியான முறையில் ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலும் இவர்கள் இருப்பதில்லை.

          “இன்றைக்கு மேடையில் நீங்கள் பேசிய பேச்சு நன்றாக இருந்தது” என்று ஒருவர் பாராட்டினாலும்கூட, “இன்று மட்டும்தான் என்பேச்சு நன்றாக இருக்கிறது என்று சொல்கிறீர்களா? மற்ற நாட்களில் எல்லாம் நான் நன்றாக பேசவில்லையா?” என்று ஏட்டிக்குப் போட்டியாக பேசும் மனநிலையில் இவர்கள் இருப்பார்கள். இவர்களது “புரிதல் தன்மை” (Understanding) வித்தியாசமாக இருக்கும். யாரைப்பற்றியும் குறைசொல்லும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களது உண்மையான உணர்வுகளையும், பாராட்டுகளையும் இவர்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதில்லை ஏதேனும் அதிக பொறுப்புகளை (Responsibilities) கொடுத்தால்கூட அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள். இவர்களது மனம் எப்போதும் சஞ்சலத்தோடு காணப்படும் இதனால் திருப்தி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பார்கள். பல நேரங்களில் மகிழ்சியற்ற நிலையில் உலா வருவார்கள்.

          எனவே – இளம்வயதிலேயே தன்னைப்பற்றிய “தாழ்வு மனப்பான்மையை” நீக்கிக்கொள்ள பள்ளி – கல்லூரி மாணவ – மாணவிகள் பயிற்சி மேற்கொள்வது நல்லது.

    3. உண்மையானசுயமதிப்பு

          தன்னைப்பற்றி சரியாகப் புரிந்துகொண்டு சிறந்த முறையில் தன்னை ஒருவர் மதிப்பீடு செய்துகொண்டால் அதனை “உண்மையான சுயமதிப்பு” என அழைக்கலாம்.

          ஒருவர் தன்னைப்பற்றி உண்மையான சுயமதிப்பை ஏற்படுத்திக்கொண்டால் அவர் தேவையில்லாமல் எதற்கும் பயப்படுவதில்லை. தோல்விகள் வரும்போதுகூட வருத்தப்படாமல் அவற்றிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளும் மனநிலையை அவர் உருவாக்கிக்கொள்வார். ஏதேனும் ஒன்றை பொறுப்பேற்று நடத்தும்போது தவறு ஏற்பட்டால்கூட, அந்தத் தவறுக்கான பொறுப்பை தானே ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட முயற்சிகளை மேற்கொள்வார். தன்னைப்பற்றி மற்றவர்கள் குறைசொன்னால்கூட அவர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. தன்னைப்பற்றிய “உண்மையான மதிப்பு” அவருக்குத் தெரியும் என்பதால் மற்றவர்களின் அவதூறு பேச்சுக்களால் அவர் மனம் தளர்வதில்லை. மனநிறைவோடு எப்போதும் அவர் காணப்படுவதால் பிறரை பாராட்டவும் அவர் தயங்குவதில்லை. மன மகிழ்ச்சியோடு எப்போதும் அவர் காணப்படுவார். பிறருக்கு நன்மை செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடி நாளும் முயற்சி செய்வார்.

          எனவே – பள்ளிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவிகள் தனது இளமைப்பருவதிலேயே தங்களைப்பற்றி மதிப்பீடு செய்து தங்களின் உண்மையான மதிப்பை உணர்ந்துகொள்ள வேண்டும். இதன்மூலம் மனமகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழலாம்.

          நமக்கு வருகின்ற நன்மைகளும், தீமைகளும் நம்மால்தான் வருகின்றது என்பதை உணர்ந்துகொண்டு சிறந்த முறையில் தங்களை “மதிப்பீடு” செய்வதற்கு இளைய உள்ளங்கள் பழகிக்கொள்ள வேண்டும்.

          தாழ்வு மனப்பான்மையை நீக்க விரும்புபவர்கள் தன்னைப்பற்றிய உண்மையான மதிப்பீட்டை அவ்வப்போது செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இளமைக்கால வாழ்க்கை இனிமை பெறும். எதிர்கால வாழ்க்கை சிறப்பு பெறும்.

    என் பள்ளி

    . ஃபர்ஸானா

    துணைவட்டாச்சியர்

    இருபது ஆண்டுகள் கழிந்துவிட்டன… ஆனாலும் என் நெஞ்சில் நினைவுச் சின்னமாக நிலைத்திருக்கிறது என் பள்ளிப்பருவத்து நினைவுகள்… நினைவுச் சின்னமாக பதிந்துவிட்ட அந்த நினைவுகளை திரும்ப மீட்டெடுத்து தன்னம்பிக்கை மாத இதழின் வாசகர்களுக்காக எழுதும்போது என் மனப்பறவை மகிழ்ச்சி வானத்தில் சிறகு விரித்துப் பறக்கிறது.

         உணர்வுப் பூர்வமான சிரிப்பும், சந்தோஷமும் பொங்கிய உற்சாகமான நாட்கள் நான் ஜி.ஆர்.டி. மெட்ரிகுலேசன் பள்ளியில் படித்தவை. அபரிமித குதூகல உணர்வுகொண்ட நண்பர்கள், ஆரோக்கியமான சூழ்நிலை நிலவிய சூழல், அர்ப்பணிப்புடன் பாடம் கற்பித்த ஆசிரியப் பெருந்தகைகள் என்று சூழ்ந்திருக்க ஒரு சந்தோஷமான குழந்தையாகவே பள்ளிக்குச் சென்று வந்தேன்.

    ஜி.ஆர்.டி. பள்ளியின் பெருமையை வார்த்தைகளில் வடித்தெடுப்பது என்பது சிரமம். அடுக்கடுக்கான ஆடம்பரமற்ற, அற்புதக் கலையுணர்வுகளோடு கட்டப்பட்ட கட்டிடங்களின் அணிவகுப்பையும், அங்கு கோலோச்சி நிற்கும் அமைதியான, சுத்தமான சூழலையும், சின்னஞ்சிறு சிட்டுக்கள் வானில் சிறகடித்துப் பறப்பது போல மாணவிகள் ஒழுங்குமுறை பேணி வலம் வந்தது என்று எல்லாமே கண்களுக்கும், மனதுக்கும் மிகப்பெரிய விருந்தாகவே இன்றுவரை உள்ளது.

         ஜி.ஆர்.டி. பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு முடிய படித்தபோது எனக்கு தலைமையாசிரியராக இருந்தவர் திருமதி நாபெல் சார்லஸ். அவர் எனக்கு இன்னொரு தாயைப் போலவே இருந்த ஒரு ஆசான். இதைவிட ஒரு அற்புதமான சூழல் எனக்கு வேறு எங்கும் வாய்த்திருக்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு அந்த பள்ளியில் நான் படித்த நாட்கள் என்னை முழுமையாக்கின. அதனால் தான் பள்ளியில் சிறப்பாக படிக்க முடிந்தது.

         என் நினைவுப் பெட்டகத்தில் மறக்க முடியாத ஆசிரியை எங்கள் தமிழாசிரியை சிவகாமி அம்மா. அவர்கள் காட்டிய கனிவும், புரிதலும், இலக்கியச் செழுமையும், உணர்வுப் பூர்வமாக பாடங்களை கற்பிக்கும் அனுபவமும் புதுமணம் மாறாமல் இன்னும் என்னுள்ளே பசுமையாக பயணிக்கிறது. அவரின் வழிகாட்டலுடன் கூடிய தூண்டுதலால் எனக்கும் தமிழ் மீது ஆர்வம் பன்மடங்கானது… பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும், பாராட்டுக்களையும் பெற்றேன். இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும், பட்டி மன்றங்களிலும் சிறப்பாகச் செயல்படுகிறேன் என்றால் அதற்கான விதை விதைக்கப்பட்டது என் தமிழாசிரியையால் தான்.

         இன்றும் அவர்களை நினைத்தால் என் மனதில் தோன்றும் ஒரு நிகழ்வு நமது முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி அவர்கள் மறைவு. 1984ம் ஆண்டு இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் மறைந்த செய்தியை அழுதபடியே எங்களுக்குத் தெரிவித்தார். அவர் அந்த செய்தியை வெளிப்படுத்திய விதம் ஒரு செய்தியை உணர்வுப் பூர்வமாக எப்படி சொல்ல வேண்டும் என்பதை உணர்த்தியது. தவிர புறநானூறு, கம்ப ராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற இதிகாசங்களை பாடமாக நடத்தும்போது அந்த பாத்திரமாகவே (Character) மாறி எங்களுக்கு பாடம் எடுப்பார். இன்றும் அப்படியே என் கண்முன் விரிகிறது அந்தக் காட்சிகள்…

         எங்கள் பள்ளியில் அப்போது ஒரு பழக்கம் இருந்தது. யாராக இருந்தாலும் இரண்டு பேர் சேர்ந்தே எங்கும் செல்ல வேண்டும். எங்கு சென்றாலும் இரண்டு மாணவிகளாக செல்ல வேண்டும். அப்படி எனக்கு ஜோடியாக என்னுடனே எப்போதும் இருந்தவர் என் தோழி நிர்மலா. தற்போது அமெரிக்காவில் ஆடிட்டராகப் பணியாற்றும் அவள் இன்றுவரை என்னுடன் நட்பில் இருக்கிறார்.

         என் பள்ளி நாட்களில் அவளின் நட்பு வார்த்தை விவரிப்புக்கு அப்பாற்பட்டு இருந்தது. அன்பாக, இதமாக, உணர்வுப் பூர்வமாக என்னோடு பழகியதை, இன்றளவும் என்னால் மறக்க இயலவில்லை.

         பள்ளியில் கண்ட நாள் முதல் இன்று வரை என்னை ஒரு சகோதரியாகவே நடத்தினார் என்று கூட கூறலாம்.

         இப்படி உணர்வுப் பூர்வமான நிகழ்வுகளுக்கு இடையில் கூட சில சுவாரஷ்யமான மாணவப் பருவத்திற்கே உரிய நிகழ்வுகளும் நடந்தன.க

         நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது எங்கள் வகுப்பு தலைவியாக ஒரு மாணவி இருந்தார். பிறந்த நாள், பண்டிகைகள் போன்ற முக்கிய தினங்களில் சாக்லெட் கொடுத்தால் அவள் மட்டும் சாதாரண சாக்லெட் வேண்டாம் என்று என்னை மிரட்டி 5 ஸ்டார் சாக்லெட் தான் வேண்டும் என்று வாங்கிக் கொள்வாள். அப்போதெல்லாம் அவளது மிரட்டலான செயல்பாடுகளுக்குப் பயந்து 5 ஸ்டார் சாக்லெட்டுக்களாக கொடுத்துக் கொண்டிருப்பேன். அவள் இப்போது எங்கே இருக்கிறாளோ? என்ன செய்கிறாளோ? எனத் தெரியவில்லை.

         தமிழாசிரியைக்கு அடுத்ததாக என்னை ஈர்த்தவர்கள் ஆங்கில ஆசிரியை ஸ்ரீலா, வரலாற்று ஆசிரியை ஷியாமளா, ஹென்னா நிர்மலா    , கணித ஆசிரியை இந்திராணி, சசிகலா. இவர்களின் அர்ப்பணிப்பு பாடம் கற்பிப்பதில் தெரியும். பள்ளியின் தமிழாசிரியைக்கு ஈடான ஆர்வத்தை எனக்குள் விதைத்தவர் என்னுடைய அப்பா.

         நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் என்னுடைய அம்மா அரபு நாட்டில் இருந்தார். அம்மாவுக்கு அப்பா நாள்தோறும் கடிதம் எழுதுவார். மிக நேர்த்தியாகவும், அழகாகவும் வடிவமைக்கப்பட்ட கடிதமாக அது காட்சியளிக்கும். அந்தக் கடிதங்களால் எனக்கு, தமிழின் மீது ஆர்வமும், எழுத்துகளின் மீது ஈர்ப்பும் ஏற்பட்டது.

         இன்றுவரை என்னை மிகவும் நேசித்து, எனது எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவுக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறார் என்னுடைய அப்பா.

         மேல்நிலைக் கல்வி முடித்து பி.எஸ்.ஸி., எம்.பி.ஏ., பி.எட். என எனது கல்வி காலங்களிலும், தற்போது பணியாற்றுகின்ற காலத்திலும் எப்போதும் தன்னம்பிக்கை, தளராத நம்பிக்கை, ஆளுமைப் பண்பு போன்றவற்றை கற்றுக்கொண்டது பள்ளி செல்லும் காலத்தில் தான்.

             இன்று என் குழந்தைகள் நான் படித்த பள்ளியில் தான் படிக்கிறார்கள். சில நேரங்களில் அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போது எனது பள்ளி நினைவுகளையும் மீட்டிக்கொள்கின்றேன்…

    “கேஸ் சிலிண்டர் மெசின்”

    பேரா. மூர்த்திசெல்வக்குமரன்

    ஈரோடு

    தற்போதைய நடைமுறையில், சமையலுக்குப் பயன்படுத்தும் எரிபொருள் ‘LPG’ எனப்படும் கேஸ் எரிவாயுவை, இந்தியாவில் சுமார் 10 கோடி குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அடிக்கடி நாம் நாளிதழ்களில் படிக்கும் செய்தி, சிலிண்டர் வெடிப்பும், அதனால் உயிர்ச்சேதமும் தான்.

     NCRB-2011ம் ஆண்டின் கணக்குப்படி சென்னையில் மட்டும் 96 விபத்துகளில் 91 நபர்களும், தமிழகத்தில் ஏற்பட்ட 632 விபத்துக்களில் 586 நபர்களும்  கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்துகளால் இறந்துள்ளனர் என்பது அதிர்ச்சி தரும் தகவல். இறந்தவர்களில் 82% பெண்களே என்பது மேலும் குறிப்பிடும் வகையிலான தகவல்.

     எந்த அளவிற்கு கேஸ் எரிவாயு பயன்பாடு இருக்கின்றதோ அதே அளவிற்கு தற்காப்பும் தேவைப்படுகின்றது. இதற்கு தீர்வு காணும் நோக்கத்தில், விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் மூர்த்தி செல்வக்குமரன் அவர்கள் கண்டுபிடித்த “கேஸ் சிலிண்டர் மெசின்” சமையல் கேஸ் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வாக அமைந்துள்ளது.

     Smart Gas Cylinder Machine மூன்று விதமான வேலைகளைச் செய்கின்றது. தற்போதைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் கணவன் மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் நிலையில், உபயோகிக்கும் சிலிண்டர் எப்போது தீரும் என்பதே தெரியாது. அதைத்தொடர்ந்து அடுத்த புதிய சிலிண்டருக்கான பதிவை எப்பொழுது செய்ய வேண்டும் என்பதும் தெரியாது.

     இந்த கேஸ் சிலிண்டர் மெசின் மூலம் புதிய சிலிண்டர் வந்தவுடன் அதனை மெசின் மேல் வைத்து சிலிண்டரின் துல்லியமான எடையைத் தெரிந்து கொள்ளலாம். தினமும் உபயோகிக்கும் அளவிற்குத் தகுந்தாற்போல் கேஸ் எடை குறைந்து கொண்டே வரும். அதை மைக்ரோ கண்ட்ரோலர் தொடர்ந்து கவனித்து வரும். கேஸ் எடை 2 கிலோ அளவிற்கு வரும்போது மெசின் உடனடியாக GSM எனப்படும் தகவல் தொடர்பு சாதனம் வழியாக கேஸ் வழங்கப்பட்ட ஏஜென்சிக்கு புதிய சிலிண்டருக்கான பதிவினை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்புவதும், பயனாளி வீட்டிற்கு வெளியில் இருந்தால் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிந்து கொள்வதும், பஜர் ஒலி மூலம் வீட்டில் உள்ளவர்கள் தெரிந்து கொள்வதுடன் சரியான நேரத்தில் கேஸ் சிலிண்டர் பதிவு செய்யப்படுகின்றது.

     இதன் இடைப்பட்ட நாளில் கேஸ் எடையை மெசின் உள்ள டிஸ்பிலே மூலம் அறியலாம். புதிய சிலிண்டர் எப்பொழுது நமக்கு டெலிவரி தரப்படும் என்பதை ஆயில் கம்பெனிகள் அனுப்பும் எஸ்.எம்.எஸ். மூலம் மெசினில் உள்ள டிஸ்பிலேயில் தெரிந்து கொள்ளலாம்.

     முழுவதும் நிரம்பப்பெற்ற கேஸ் சிலிண்டரின் மொத்த எடை 35 கிலோவாக இருப்பதால் இதை பெண்களும், முதியோர்களும் தூக்குவதற்கு கடினமாக இருக்கும். இதை போக்கும் பொருட்டு மெசின் நான்கு சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் எளிதில் இதனை நகர்த்தலாம்.

          நாம் அடிக்கடி சிலிண்டரை மாற்றி மாற்றி அடுப்பிற்கு இணைப்பைத் தருவதால் ரெகுலேட்டர், டியூப் மற்றும் அடுப்பு இணைப்புப் பெற்ற பகுதிகளில் கேஸ் கசிவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. பல நேரங்களில் ‘O’ வடிவ ரிங் வாசர் சரியாக இல்லாத காரணத்தினால் சிலிண்டர் வாய் பகுதியிலிருந்து கேஸ் கசிவு ஏற்படும். இந்த மெசின் கேஸ் சென்சார் மூலம் கசிவு அறியப்பட்டு அதனை எஸ்.எம்.எஸ். மூலம் வீட்டுக்கு வெளியில் இருப்பவருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் பஜர் ஒலி மூலம் கசிவினைத் தெரிந்து கொள்ளலாம்.

     விபத்து ஏற்படும் என்ற செய்தியை தெரியப்படுத்தவும் அதனை தவிர்க்கும் பொருட்டு கேஸ் கசிவு ஏற்பட்ட உடன் Zigbee எனப்படும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மின்சாரத்தினை அனுப்பும் மெயின்சுவிச் போர்டில் உள்ள மின்சாரம் தடை செய்யப்படுகின்றது. கேஸ் கசிவு நின்றவுடன் மீண்டும் மின்சாரம் தொடர்ந்து அனுப்பப்படும். அனைத்து கேஸ் கசிவு விபத்துக்களும் மின்சார ஒயரில் இருந்து ஏற்படும் தீ பொறியால் தான் ஏற்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கேஸ் சிலிண்டர் வெடிப்புகள் 100% தடுக்கப்படுகின்றது.

     இதுபோன்ற புதிய கண்டுபிடிப்புகள் மனிதர்களின் விலைமதிப்பில்லா உயிர்களைக் காப்பாற்றுவதுடன் இந்த மிசினைத் தயாரிப்பதனால் புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும், பொறியியல் கல்வி படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவும் வழிவகை செய்கின்றது.

     பேராசிரியர் மூர்த்தி செல்வக்குமரன் இதைப்பற்றிக் கூறும்போது, “மற்ற வளர்ந்த நாடுகளை விட நமது நாட்டில் இதுபோன்ற கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. புதிய தொழிற்சாலைகள் தொடங்கி பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோமானால் பொருளாதாரம் உயரும். அதன் மூலம் நமது மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பும் கிடைக்கப் பெறும்.

     இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற, சென்னை கிண்டியில் உள்ள இந்திய காப்புரிமை கழகத்தில் விண்ணப்பித்துள்ளோம். ஸ்ரீ செல்வக்குமரன் நிறுவனம், ஈரோடு, இந்த கேஸ் சிலிண்டர் மெசினை ரூ.4000க்கு சந்தையில் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. அரசு மானியம் கிடைக்கப் பெறுமாயின் இதனை குறைவான விலைக்கு விற்கலாம். அதனால் அனைவரும் இம்மெசினின் பயனைப் பெறலாம் மேலும் இக்கண்டுபிடிப்பிற்கு துணை நின்ற “ராணா பவர் சொல்யூசன்ஸ், சேலம்” அவர்களுக்கும் தனது நன்றி”

    வால்ட் டிஸ்னி கூறிய உண்மை

    மெர்வின்

         கார்ட்டூன் சித்திரங்களைத் திரையில் நடமாடவிட்டதோடு பேசவும் செய்து சாதனை புரிந்த வால்ட் டிஸ்னியைச் சந்தித்த ஒருவர், “நீங்கள் உங்கள் முயற்சியில் வெற்றியைப் பெறுவதற்கு எடுத்த தீவிரமான செயல் முறை என்ன?” என்று கேட்டார்.

         வால்ட் டிஸ்னி உடனே, “முயற்சி தான் வாழ்க்கையில் முக்கியமாகச் செய்ய வேண்டிய ஒன்று. வெற்றி என்பது தானாகவே வந்து அமையக்கூடிய ஒன்றாகும்.

         ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ள நகரத்துக்குப் போக வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அந்த நகரத்தை அடைவது தான் என்னுடைய லட்சியம்.

         அந்த நகரத்தை நான் சென்று அடைவேனா, மாட்டேனா என்று எல்லாம் ஓரிடத்தில் அமர்ந்து யோசனை செய்து கொண்டிருந்தால் போய்ச்சேர வேண்டிய இடத்தை அடைந்துவிட முடியுமா?

         நாம் செய்ய வேண்டியது அதற்கான சரியான முயற்சி தான். விமான நிலையம் அல்லது ரயில் நிலையத்திற்குச் சென்று முறைப்படி அனுமதி சீட்டுப் பெற்று விமானம் அல்லது ரயிலில் ஏறி செல்ல வேண்டும்.

         இந்த முயற்சியை நாம் சரியாக செய்துவிட்டால் போக வேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர முடியும். இதுபோன்றே நாம் எடுத்துக்கொண்ட லட்சியத்தை அடைவதற்கான முயற்சியை ஒழுங்காக, சரியாக, சீராக செய்து வந்தால் வெற்றியை நிச்சயம் அடைவோம். இதில் சந்தேகமோ, ஐயமோ கிடையாது. இவருடைய கூற்று முற்றிலும் உண்மை. வெற்றியின் வழியை அழகாகச் சொல்லிவிட்டார்.

         நம்முடைய உண்மையான ஆற்றலை உள்ள படியே உணர்ந்து கொள்ளும்போது தான் வாழ்க்கையில் பிடிப்பாகவும், சீராகவும் துரிதமாக வெற்றியைப் பெற முடியும். ஆற்றலை நாமே உணர்ந்து விளங்கிக் கொள்வது என்பது தனித்த சாமர்த்தியமாகும். வாழ்க்கையில் வெற்றி பெற முடியாமல் தேங்கி நிற்கும் சிலருக்கு, அவர்களிடம் எத்தனையோ அற்புதமான ஆற்றல் அமைந்து இருந்தாலும் ஏன் வெற்றி பெற முடியாமல் இருக்கிறார்கள் என்றால்… வாழ்க்கை முறையை நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தால் அவர்களிடம் அமைந்திருக்கும் உண்மையான ஆற்றலை விளங்கிக்கொண்டு அதனைப் பயன்படுத்தாமல் இருந்ததுதான் காரணம் என்பது தெளிவாகத் தெரியும்.

         இந்த மாதிரி நாமும் இருந்துவிடக் கூடாது. நம்முடைய ஆற்றல் என்ன, திறமை என்ன என்பதை நன்கு விளங்கிக்கொண்டு அதற்கேற்ற வழியில் முயற்சி செய்யும்போது நிச்சயமாக வெற்றிபெற முடியும்.

         “ஒரு மனிதன் லட்சியப்பிடிப்பும், திட்டமிட்ட முயற்சியும், கடுமையான உழைப்பும் கூடிய தகுதியைப் பெற்றவனாக இருந்தால் அவனால் அற்பமான சந்தர்ப்பங்களைக் கூடப் பயன்படுத்திக்கொண்டு பெரிய வெற்றிகளை எட்டிவிட முடியும்” என்கிறார் வில்லியம் ஆலன்.

         வாழ்க்கையில் நமக்கு என்று ஒரு லட்சியத்தைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்வது மட்டும் போதாது. அந்த லட்சியத்தை அடைவதற்கான முயற்சியில் தெளிவும், உறுதியும் வேண்டும். அப்பொழுதுதான் வெற்றியை எளிதாகப் பெற முடியும்.

         லட்சிய நோக்கத்துடன் வெற்றிபெற விரும்பினால் நாம் நிற்கும் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதிலேயே கண்ணாக இருக்க வேண்டும். சாதாரணமாக நாம் நடக்கும்போது கால்களைத் தரையில் அழுத்தி ஊன்றியபின், அடியெடுத்து வைத்தால் தானே சரியாக நடக்க முடியும்.

         வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள விரும்பும் நம்மிடம் இருக்க வேண்டிய சிறப்பான தகுதி வாழ்நாள் முழுவதும் வளர்த்துக் கொள்ள வேண்டும். உன்னதமான ஒரு நிலையை எட்டிப்பிடித்து உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்களின் வரலாற்றினைப் பார்த்தால்… அந்த உயர்வு நிலையை அடைவதற்கு முன்னால் அவர்கள் தங்கள் முயற்சியில் திறமையில் உழைப்பாற்றலில் எவ்வளவு தீவிரமான நம்பிக்கை வைத்து இருந்தனர் என்பது திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ள முடியும்.

         ஜி.டி. நாயுடுவை அவருடைய இல்லத்தில் மேல்நாட்டு பத்திரிக்கையாளர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவர்கள் கேட்ட முதல் கேள்வி “உங்கள் தொழிலுக்கென்று நீங்கள் போட்ட பெரிய மூலதனம் எது?”

         “அன்றைய தினத்திலிருந்து இன்று வரை என்னிடம் உள்ள உயரிய மூலதனம் முயற்சியும், உழைப்பும் தான். முயற்சியும், உழைப்பும் வெறும் மூலதனம் என்று மட்டும் நான் நம்பவில்லை. உழைப்பை என் உயிராகவே மதிக்கிறேன்” என்றார் ஜி.டி. நாயுடு.

         உழைப்பை ஒரு தகுதி என்று மதித்தார். அதில் நம்பிக்கை வைத்தார். தொடர்ந்து முயற்சி செய்ததன் பலனாக ஜி.டி. நாயுடு அதிசய மனிதர் என்று போற்றப்படும் நிலைக்கு உயர்வு பெற்றார்.

         “வாழ்க்கையில் வெற்றி அடைந்து உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால் உயர்ந்த நிலை தானாகவே வந்துவிடும் என்று எண்ணி சோம்பி இருந்து விடக்கூடாது. வெற்றியை நோக்கி நாமாகவே வலியச்சென்று முன்னேற வேண்டும்” என்றார் சர்ச்சில்.

         ஒரு பாதையில் நடந்து செல்லும்போது அந்தப் பாதை சரியாக இல்லை என்றால் நாம் நடப்பதை நிறுத்திவிடுகிறோமா என்ன? பாதையில் ஏதாவது குறுக்கே கிடந்தால் அதைத் தாண்டி சரியான பகுதியில் கால்வைத்து நடந்து செல்கிறோம்.

         அதேமாதிரி நமது சூழ்நிலையில் என்ன இடையூறு குறுக்கிட்டாலும் அதைப்பற்றி நினைத்து சோர்ந்துவிடாமல் எதிர்கால வெற்றிக்கான செயலில் நமது முயற்சியையும் உழைப்பையும் பயன்படுத்த வேண்டும்.

    உள்ளத்தோடு உள்ளம்

    ஒவ்வொருவரும் தேசத்தின் உண்மைக்கும், தேசத்தின் நன்மைக்கும் எப்போதும் முழு மூச்சாய் பாடுபடுவேன் என உறுதி எடுத்துக்கொள்ள வேண்டிய சுதந்திர தின மாதம் இது.

    உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு அவர்களின் பூர்வீக இல்லம் தான் ‘ஆனந்த பவன்’. வருமான வரி அதிகாரிகள் நேருஜி அவர்களின் வருமான வரியைக் கணக்கிடுவதற்காக ‘ஆனந்த பவன்’ இல்லத்திற்கு ஒருமுறை வருகை புரிந்திருக்கிறார்கள். அவர்கள் மாளிகையின் மதிப்பை 36,000 ரூபாய் என்று கணக்கிட்டு சென்றுவிட்டார்கள்.

    நேருஜி அவர்களுக்கு விசயம் தெரிய வந்ததும் மாளிகையின் மதிப்பு குறைவாக கணக்கிடப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 1,75,000 ரூபாய் என்று வருமான வரிக் குறிப்பில் திருத்தம் செய்தாராம்.

    அந்த உண்மையும், நேர்மையும் தான் தேசத்தின் மீது நேருஜி அவர்கள் கொண்ட பற்றுதலின் வெளிப்பாடு என்று சொல்ல முடியும். ஆனால் இன்று தேசத்தை நேசிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, செயலில் தந்திரமாய் வாழும் குள்ளநரிக் கூட்டங்களைச் சார்ந்தவர்களே அ(சி)நேகம். இவர்கள் நல்ல மனிதர்களாக மாறும்போது தான் பெற்ற சுதந்திரம் மதிப்பு பெறும்.

    அதுவரை, பழம்பெருமைகளைப் பேசிப்பேசியே ஆறுதல்பட்டுக் கொள்வோம்

    அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

    இப்படியே…

    இரா. நவமணி

                    நிஜங்கள்

    தோற்றுக் கொண்டிருப்பதே

    வழக்கமாகிக் கொண்டிருந்தால்

    வாழ்க்கையென்பது

    வக்கற்றதாகி விடாதா?

     

    உழைப்பும் உயர்வும்

    பண மூட்டைகளுக்கே

    பட்டுவாடா செய்யப்பட்டால்

    வெளிச்சமும் வெற்றியும்

    வீணாகிப்போய் விடாதா?

     

    பண்பாட்டை மறந்த கையோடு

    துறந்துவிடவும் துணிகட்டுகிறீர்களே…

    தூய்மையென்பது தூரத்தில் தெரியும்

    நிலவை விடவும்

    தூரமாகிப் போய்விடாதா?

    இப்படியே எல்லாம் போனால்

    மனிதம்?…

    வெற்றிக்கு வழி

    கே.பி. பத்மநாபன்

    சிங்காநல்லூர்

              குப்புறவே படுப்பதற்குத் தான்முயலும் மழலை

                    கொண்டதொரு முயற்சியிலே தோற்றதில்லை என்றும்;

               எப்படியோ தரையினிலே நீந்தியப் பொம்மையை

                    எடுப்பதெனும் முயற்சியிலே தோற்றதில்லை என்றும்;

               தப்படியாய் நடக்கையிலே வீழ்ந்திட்ட போதும்

                    தானெழுந்து ஓடுவதில் தோற்றதில்லை என்றும்;

               இப்படியே வளர்ந்திங்கு இளைஞரான பின்னர்

                    ஏன் மனதில் சோர்வெல்லாம்? எழுந்திடுவாய் இன்றேÐ

               காலிரண்டும் இழந்தாலென்? கைவேலை பழகு;

                    கரமிரண்டும் இல்லையிலென்? களிநடனம் பழகு;

               நூலிங்கு கற்பதற்கு நுண் விழிகளற்றோர்

                    நொந்திங்கே அமராது இலக்கியம் படைத்தார்;

               சோலியிலே சாதனைகள் செய்திட்டோர்க் கெல்லாம்

                    சுமையாக ஊனமுமே இருந்திட்ட தில்லை;

               வேலியெலாம் உன்மனதின் அவநம்பிக்கைதான்;

                    வெற்றிக்கு வழியொன்று தன்னம்பிக்கைதான்

    எறும்பும் எள்ளல் செய்யும்

    பாவலர்கருமலைத்தமிழாழன்

     

               எழுகதிரைப் பார்க்காமல் உறங்குகின்ற

               எவருமிங்கே புதுச்சுவட்டைப் பதித்ததில்லை

               தழுவாத புதுச்சிந்தை மாந்தரென்றும்

               தரைமாற்றும் புதுப்பாதை அமைத்ததில்லை

               உழுது மண்ணைப் பண்படுத்தா நிலத்திலென்றும்

               உயிர்ப்புடனே பசும்பயிர்கள் வளர்ந்ததில்லை

               எழுச்சியுடன் உழைக்காதோன் ஞாலம் தன்னில்

               எந்தவொரு சாதனையும் படைத்ததில்லை

               நடக்காதான் கால்களிலே சிலந்தி கூட

               நாக்காலே வலைதன்னைக் கட்டப் பார்க்கும்

               முடங்கி மூலை சோம்பலிலே மூழ்கியிருந்தால்

               முதுகேறி எலும்பு கூட எள்ளல் செய்யும்

               அடக்கமின்றிச் சினம்கொண்டோன் செயல்களென்றும்

               ஆக்கத்தைத் தாராமல் அழிவே செய்யும்

               இடமறிந்து காலத்தே செயல் செய்யாதான்

               இடம்தேடித் தோல்விகளே முகத்தைக் காட்டும்