– 2013 – February | தன்னம்பிக்கை

Home » 2013 » February (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    என் பள்ளி

    என் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியதில் என் பள்ளிக்கு சிறப்பிடம் உண்டு. அங்கிருந்து தான், என் வாழ்வில் முதல் பாடத்தையும், பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொண்டேன். என் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டு என்னை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களையும், ஆச்சரியப்படுத்தக்க பல நண்பர்களையும் பெறுவதற்கு வழிவகுத்துக் கொடுத்தது என் பள்ளி. சந்தோசமான, சோகமான பல தருணங்களைஎன் பள்ளியில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள் விலை மதிக்க முடியாதவை. என் பள்ளி தான் என்னை உருவாக்கி இருக்கின்றது. எனக்களித்த என் பள்ளி நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
    ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல் நிலைப்பள்ளியிலும் படித்தேன். ஆறாம் வகுப்பு வரை படிப்பில் பெரிய அளவில் நாட்டம் இருந்ததில்லை. ஆனால் ஆறாம் வகுப்பில் எப்படியோ ஒரு தேர்வில் நான் முதல் மதிப்பெண் பெற்றேன். அன்றுதான் படிப்பின் சுவையை முழுவதுமாக உணர்ந்தேன் என்றே கூறலாம். அதுவரை படிப்பில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாமல் இருந்த நான் அந்த முதலிடத்திற்குப் பிறகு இனி எப்போதும் முதலிடத்திலேயே இருக்க வேண்டும் என்று முடித்தேன்.
    நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் படித்த அந்த ஆறு வருடங்கள் நான் வாழ்வில் நன்றாக கிளைபரப்பி வளர உதவிய காலங்கள். பதினொன்றாம் வகுப்பில் எனக்கு உயிரியல் வகுப்பு ஆசிரியராக இருந்த பொன்ராஜ் சார் எப்போதும் என் மீது மிகுந்த பாசமாக இருப்பார். மதிப்பெண்ணுக்காகப் படிக்காமல் வாழ்க்கைக் கல்வியாகப் படிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார். தினமும் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை ஒரு கதையாக எங்கள் பாடத்தில் புகுத்தி வித்தியாசமாக பாடம் எடுப்பார். பின்னாளில் நான் உயிர் அறிவியல் (Life Science) பாடத்தை எடுத்துப்படிக்கத் தூண்டியது அன்று அவர் பாடம் நடத்திய விதம் தான்.
    பொதுவாக கிராமப்புரத்து மாணவர்களுக்கு ஆங்கிலம் எப்போதுமே பெரிய தலைவலியாகவே இருக்கும். ஆனால் எனக்கு ஆங்கிலத்தின் மேல் பெரிய அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தியது எங்கள் வகுப்பு ஆங்கில ஆசிரியரான முத்துவிஜய பாண்டி சாரின் பாடம் எடுக்கும் முறை. எப்போதுமே செம இன்ட்ரஸ்டாக பாடத்தை எடுப்பார். பாடப்புத்தகத்தில் இருப்பவற்றை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வில் எழுதுவதை ஒருபோதும் அவர் ஊக்குவிப்பதில்லை. சொந்தமாக வாக்கியங்களை அமைக்கச் சொல்லுவார்; தட்டிக்கொடுப்பார். நன்றாக எழுதினால் பாராட்டுவார். அவரிடம் பாராட்டு பெறுவதற்காகவே சொந்தமாக ஆங்கிலம் எழுத முயற்சியை மேற்கொள்வேன். மனப்பாடம் செய்யாமல் சொந்தமாக ஆங்கிலத்தில் வாக்கியங்கள் எழுத ஆரம்பித்தது அவருடைய தூண்டுதலால் தான். சொந்தமாக ஆங்கிலத்தில் எழுதினால் போனஸ் மார்க் போடுவார். மேல்நிலைத் தேர்வில் ஆங்கிலத்தில் பள்ளி முதல் மாணவனாக வந்ததைப் பாராட்டி எனக்கு ஒரு ஆங்கில அகராதியைப் (Dictionery) பரிசளித்தார். இன்று வரை நான் அதை பயன்படுத்தி வருகிறேன்.
    பள்ளி படிப்பிற்குப் பிறகு கல்லூரியில் சேர்ந்தபோது அங்கு என்னைச் சேர்த்து மொத்தம் மூன்று மாணவர்கள் மட்டுமே தமிழ் வழியில் பயின்றவர்கள். கல்லூரியில் ஆங்கிலத்தில் பாடம் எடுத்தபோது இரண்டு நாட்களிலேயே கல்லூரியை விட்டு நின்றுவிடலாம் என்று தோன்றியது. அப்போது முத்து விஜயபாண்டி சார் தான் எனக்கு தன்னம்பிக்கை கொடுத்தார். சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேல் தொலைபேசியில் பேசிய அவரின் வார்த்தைகள் என் வாழ்க்கையில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்தியது. எனக்கிருந்த தாழ்வுமனப்பான்மையைப் போக்கி தன்னம்பிக்கையை வளர்த்தியது அவரது வார்த்தைகள். இன்று கொரியாவில் முனைவர் பட்டபடிப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் அன்று அவர் கொடுத்த ஊக்கமும், தன்னம்பிக்கையும் தான்.
    ஆசிரியர்களைப் போலவே பல ஆச்சரியப்படத்தக்க நண்பர்களையும் என் பள்ளி எனக்களித்தது. அவர்கள்தான் என் உலகத்தைச் செம்மைப்படுத்தியவர்கள். பள்ளியில் என் நண்பர்களுடன் போட்டிபோட்டுப் படித்ததில் ஒவ்வொருவரிடமும் சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். புதிய விசயங்களைக் கற்றுக்கொள்ளும் ஆர்வம், வெற்றி பெறத் தேவையான உழைப்பு, சக மனிதர்களை நேசிக்கும் பண்பு, நல்ல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற மனநிலை என்று என்னை ஈர்த்த பல விழுமியங்களை எனக்களித்தது உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி.

    பேராற்றலை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!!

    திரு. URC தேவராஜன்,
    மேலாண்மை இயக்குனர், யூ.ஆர்.சி. கன்ஸ்ட்ரக்சன் (பி) லிட்.
    பிப்ரவரி 2013

     இன்றைய காலகட்டத்தில் சவாலான துறை என்றால் அது கட்டுமானத்துறை தான். அந்தத் துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் ஈடுபட்டு சவால்களை முறியடித்து சாதித்துக் கொண்டிருப்பவர்,
     பொறுமையுடன் கூடிய ஆழ்ந்த அனுபவமும், அந்த அனுபவத்தைச் சரியாக பயன்படுத்தி சாதிக்கும் தன்மையும் கொண்டவர்,
     உழைப்பும், தன்னம்பிக்கையும் தொலைநோக்குப் பார்வையும் ஒருசேரப் பெற்று கட்டுமானத்துறையில் பல சிகரங்களைத் தொட்டவர், தொட்டு வருபவர். தான் சார்ந்த துறையில் புதுப் புது விசயங்களைப் புகுத்துவதுடன் தரத்தில் முதன்மையையும், நேரம் தவறாமையையும் கடைபிடிப்பவர்,
     முன்னேற வேண்டும் என்ற துடிப்புள்ள இளைஞர்களுக்கு தேர்ந்த சிறப்பு பயிற்சியளித்து தன்னுடைய நிறுவனத்திலேயே பணியாற்றும் வாய்ப்பையும் வழங்குபவர்,
     ஆண்டுக்கு 500 கோடிக்கு மேல் வியாபாரம், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு தந்து வருபவர்,
     தன்னுடைய முன்னேற்றத்துக்குப் பின்னால் இருப்பவர்கள் தன்னுடைய பணியாளர்கள் தான் என்பதை நன்றியுடன் கூறிக்கொள்வதுடன் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பல்வேறுவகையிலும் உதவிக்கொண்டிருப்பவர்,
     சமூகப் பணியில் தனி அக்கறையோடு செயல்பட்டு பலரின் வாழ்வில் மறுமலர்ச்சியை உண்டாக்கி வருபவர்
     இப்படி பல்வேறு சிறப்புகளுடன் புகழ்பெற்ற கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள், இரயில்வே, விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், வீடுகள் என பலதரப்பிலும் கட்டுமானத் துறையில் முன்னிலை வகிக்கிற யூ.ஆர்.சி. கன்ஸ்ட்ரக்சனின் மேலாண்மை இயக்குநராகத் திகழ்ந்து வருபவர் தான் URC திரு. தேவராஜன் அவர்கள்
    எவ்வளவோ பணிகளின் பளுவுக்கு மத்தியில் நாம் அவரைச் சந்தித்தபோது, “தொழிலில் முழு ஈடுபாடும், அக்கறையும் இருந்தால் முன்னேற்றமும், வளர்ச்சியும் தானாகவே வந்து சேரும். அதற்காக தனியாக முயற்சிக்க வேண்டிய அவசியம் இருக்காது” என்றார். பேச்சுக்கு பேச்சு உற்சாகம் ததும்பும் தீர்க்கதரிசன வார்த்தைகளோடு நம்மை உற்சாகப்படுத்திக் கொண்டே வந்தவருடன் இனி நாம்…

    Continue Reading »

    விளையாட்டு

    உங்கள் உடல்நலத்தை வளர்த்துக் கொள்வது அவசியம். நிறையப் படித்துவிட்டு மென்பொருள் பொறியாளராக பெரிய நிறுவனங்களில் வேலை பார்க்கிறார்கள். வாரக்கடைசியில் (சனி ஞாயிறுகளில்) விருந்துண்டு மகிழ்கிறார்கள். அவர்களில் சிலருக்கு 30 வயதுகளில் இருதய நோய் வந்துவிடுகிறது. உடற்பயிற்சி செய்வதே கிடையாது. பிரபலமான மென்பொருள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தனியார் மருத்துவமனையுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸை அங்கேயே நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அலுவலகத்தில் இருந்து அசையாமல் பணிபுரியும் பலருக்கும் நோய்கள் வந்துவிட்டன.
    இதை நான் வருத்தப்பட்டுச் சொல்கிறேன். பல கல்லூரிகளில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பதே கிடையாது. சமீபத்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் விளையாட்டு விழாவிற்காக என்னை அழைத்தார்கள். அங்கிருந்த துணைவேந்தர், “நாங்கள் எங்கள் பிள்ளைகளை விளையாடவிட்டதே இல்லை. சும்மா ஒரு பேருக்காகத்தான் இந்த விழாவை நடத்துகிறோம்” என்று கூறினார். எனக்கு மிகுந்த கோபம் வந்தது. மாணவர்கள் விளையாடினால் தானே அவர்களுக்குத் தலைமைப் பண்பு வளரும்? விளையாடினால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
    தைரியம், வலியைத் தாங்கும் பண்பு போன்றவை விளையாடும் பொழுதுதான் வளர்க்க முடியும். கீழே விழுந்து அடிபட்டால் தான் தெரியும்; வலி என்பது என்னவென்றுÐ ஒரு கிலோமீட்டர் ஓடினால்தான் உடலில் எத்தனை உறுப்புக்கள் இருக்கின்றன என்பது உங்களுக்கே தெரியும். அத்தனை உறுப்புகளும் வலிக்கும். ஓடிப் பழக வேண்டும். பல மாணவர்களுக்கு ஓடவே தெரியவில்லை. இன்னும் ஓடிப்பழகவில்லை. தினமும் ஒரு மணிநேரம் ஓடும் மாணவனுக்கு உடல் ஆரோக்கியம் கிடைக்கும். அவனுக்கு தினமும் புத்துணர்ச்சி பெருகும். அவன் பெரிய சாதனையாளனாக வருவான்.
    எழுதி வைத்துக் கொள்ளுங்கள். காலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கும் பழக்கமிருந்தால் உங்களுக்குத் தோல்வியே கிடையாது. காலையில் 5 மணிக்கு எழுந்து ஒரு மணிநேரம் ஓடுங்கள். உடல் புத்துணர்ச்சி பெறும். ரத்த ஓட்டம் சரியாக நடக்கும். படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். படித்தது மறக்காது; சிறந்த மனப்பான்மை வரும். சாப்பிட பசி ஏற்படும். உடல் பருமன் ஆகாது.
    ஒரு வாலிபால் போட்டி என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் தான் அணித்தலைவன். உங்கள் குழுவை அழைத்துக் கொண்டு விஜயவாடா செல்ல வேண்டும். அந்த ஆறுபேரைக் கண்டுபிடித்து அவர்கள் பெற்றோர்களிடம் பேசி அனுமதி பெற்று அழைத்துச் செல்ல வேண்டும். அந்த ஆறுபேரின் பெற்றோரும் அங்கேயெல்லாம் நல்ல சாப்பாடு கிடைக்குமோ கிடைக்காதோ என்று கேட்பார்கள். அதற்கு பதிலளித்து அவர்களைச் சமாளித்து விளையாட அழைத்துச் செல்ல வேண்டும். இந்த ஆறுபேரையும் விஜயவாடாவிற்கு அழைத்துச் சென்று, விடுதி எடுத்துத் தங்கவைத்து விளையாட்டை சரியாக விளையாடி ஜெயித்தாலும் தோற்றாலும் திருப்பி நல்ல முறையில் அழைத்துவர வேண்டும். அதுதான் தலைமைப் பண்பு. அதுதான் மேலாண்மைத்திறன். தலைமைப் பண்புகளை செயல்கள் மூலம் தான் வளர்க்க முடியும்.
    குழு மனப்பான்மையை வளர்க்க வேண்டும். ஒரு விளையாட்டு வீரனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்; அவனை மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவன் காணாமல் போவான். அவனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் தலைமைப் பண்பு. அது விளையாட்டு வீரர்களுக்குத்தான் வரும். விளையாட்டு மைதானத்தில்தான் இப்பண்புகளை வளர்க்க முடியும்.
    இந்த முறை தோற்றால் அடுத்த முறை ஜெயிக்கலாம் என்று நினைக்கத் தோன்றும். தோல்விக்கு மேல் தோல்வி வந்தாலும் முயற்சி செய்யக்கூடிய ஒரு பண்பு விளையாட்டு வீரருக்குத்தான் வரும். எனவே, உங்கள் கல்லூரியில் அனுமதித்தாலும் சரி, அனுமதிக்காவிட்டாலும் சரி, தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். கால்பந்து விளையாடுங்கள். நான் அணித்தலைவனாக இருந்தால்தான் விளையாடுவேன் என்று அடம் பிடிக்காதீர்கள். ஒரு சாதாரண அணி வீரனாக விளையாடுங்கள். டீம் கேப்டன் என்ற ஒரு தகுதியைக் காட்டிலும் டீம் பிளேயர் என்ற தகுதி இன்னும் சிறந்தது. நல்ல தொண்டனாக இருந்தால் தான் நல்ல தலைவனாக முடியும். நல்ல வேலையாளாக இருந்து பழகியவன் தான் நல்ல மேலாளராக இருக்க முடியும்.
    நல்ல வேலையாளாக இருக்க வேண்டும்
    உங்களுக்கெல்லாம் முதன்முதலில் ஒரு நிறுவனத்தில் சேரும் போது குழு உறுப்பினராகத்தான் வாய்ப்பு கிடைக்கும். இங்கே என்ன பிரச்சனையென்றால், அனைவருமே தங்களைத் தலைவர்கள் என்று நினைக்கிறார்கள். பின்பற்றுபவர்களே கிடையாது. ஒரு தொழிற்சாலையில் பத்துபேர் வேலை பார்ப்பார்கள். அதற்கு சூப்பர்வைசர் ஐந்து பேர். இது நம் நாட்டுக் கலாச்சாரம்.
    விளையாட்டுத் துறையில் உள்ள பல்வேறு விளையாட்டுக் கழகங்களில் இரண்டு குழுக்களாக இயங்குவதைப் பார்க்க முடிகிறது. அவர்களுக்குள் தகராறு, வழக்குகள். அந்த பதவியில் தான் ஆசை இருக்கிறது. செய்யும் செயலில் அல்ல. இது இன்று பேஸ்கட் பால், வாலிபால், கிரிக்கெட் என்று அனைத்து விளையாட்டுகளிலும் உருவாகிவிட்டன.
    தென்கொரியாவில் வேலை பார்ப்பவர்கள் அனைவருமே வேலையாட்கள் தான். மேற்பார்வையாளர்கள் மிகமிகக்குறைவு. அனைவரும் அவரவர் வேலையைப் பார்ப்பார்கள். ஜப்பானிய பேருந்துகளில் ஓட்டுநர் மட்டும்தான் இருப்பார். கண்டக்டர் இல்லை. டிக்கெட் பரிசோதகர்களும் இல்லை.
    திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உலகத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை எட்டிப்பாருங்கள். நீங்கள் விரும்பும் வேலை கிடைப்பதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள். அந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
    இப்போதெல்லாம் நல்ல திறமைமிக்க வாகன ஓட்டுநருக்கே மரியாதை இருக்கிறது. நல்ல ஓட்டுநர் கிடைப்பதில்லை என்கிறார்கள் பஸ் உரிமையாளர்கள். திறமையுள்ள ஆசிரியருக்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. நல்ல பொறியாளர்களுக்கு மரியாதை கிடைக்கிறது. சொந்தமாகத் தொழில் தொடங்கும் ஆட்களுக்கு மரியாதை இருக்கிறது. தரமுள்ள ஆர்வமுள்ள வேலையாட்கள் மிகமிகக் குறைவு என்று தொழிலதிபர்கள் கூறுகிறார்கள். எனவே, இத்திறமைகளையெல்லாம் இந்தக் காலகட்டங்களில் நீங்கள் வளர்த்துக்கொண்டால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

    உள்ளத்தோடு உள்ளம்

    தவளை ஒன்று தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைப் பற்றி அறிந்துகொள்ள மிக ஆவலாக இருந்தது. புதிய உலகத்தைக் கண்டறியும் பொருட்டு சுற்றிக்கொண்டிருந்த வேளையில் எதிர்பாராதவிதமாக பால்குடத்தில் விழுந்துவிட்டது. குதித்து வெளியேற முற்பட்டது. பாத்திரம் உயரமாக இருந்ததால் முடியவில்லை. பாத்திரத்தின் அடிமட்டத்திற்காவது செல்லலாம் என்று நினைத்தபோது ஆழம் மிக அதிகமாக இருந்தது.

    Continue Reading »