– 2012 – March | தன்னம்பிக்கை

Home » 2012 » March

 
  • Categories


  • Archives


    Follow us on

    மாற்றி யோசிக்கலாம் வாங்க

    யோசித்தல் என்பது ஒருவகை திறமை. அதிலும் வித்தியாசமாக யோசித்தல் என்பது மிகச்சிறந்த திறமையாகும். நாம் விரும்பினால் அதை வளர்த்துக் கொள்ள முடியும் என்கின்ற உண்மையை முதலில் நாம் மனதார நம்ப வேண்டும். அப்போது நிச்சயமாக நம்மாலும் மிகச்சிறந்த அசத்தலான யோசனையை வழங்கமுடியும். அதற்கான வழிமுறையைப் பற்றி இனிபார்ப்போம்.
    யோசனை அல்லது சிந்தனை எங்கு தேவைப்படும். செக்குமாடு போல வாழ்க்கை என்பது ஒரே திசையில் பல்லாண்டு காலமாக போய்க்கொண்டு இருந்தால், அங்கே சிந்தனையின் அவசியம் தேவைப்படும். வழக்கமான வாழ்க்கைத் தரத்தை மாற்றி அமைக்க, மாற்றி யோசிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது. மேலும் ஒரு குழுவின் மத்தியில் செயல்படும்போது நாம் மட்டும் தனித்து தெரிய வேண்டும் என்றால், நாம் வித்தியாசமாக சிந்தித்து செயல்பட வேண்டும். மற்றும் நாம் ஏற்றிருக்கும் தலைமைப் பொறுப்பிலும், அது குடும்பமாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் அவ்விடத்தில் நம்மை நாம் வித்தியாசமாக வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் நமக்கு கீழ் பணியாற்றுபவர்கள், நம்முடன் முழுமனதுடன் இணக்கமாக பணியாற்றுவார்கள்.
    இப்படி மாற்றி யோசிக்கும் திறமையானது வாழ்வில் மிக மிக தவிர்க்க முடியாதபடி, ஒரு அவசியமான செயலாகிப் போய்விட்டது இன்று. ஆகையினால் அதை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இன்று அனைவருமே உள்ளோம்.
    எப்படி அந்தத் திறனை வளர்த்துக் கொள்வது? என்று பார்க்கப்போனால், முதலில் நாம் ஒரு விஷயத்தை பல கோணங்களில் பார்ப்பதற்கு தெரிந்திருக்க வேண்டும். அதாவது, ஒரு விஷயத்தை நேர்மறையாகச் சிந்திக்கத் தொடங்கினால், அதன் உச்ச எல்லையை தொட்டுவிட வேண்டும். அதுபோல் அதன் எதிர்மறை சிந்தனையிலும் அதன் உச்சநிலை வரை சென்றுவிட வேண்டும்.
    நேர்மறைத் தன்மையை (சாதகத்தை) யோசிக்கின்றபோது, எதிர்மறைத் தன்மைக்கு (பாதக நிலைக்கு) கொஞ்சமும் இடம் அளிக்கக்கூடாது. அதுபோல் எதிர்மறையாக சிந்திக்கின்றபோது, நேர்மறைக்கு துளியும் இடம் கொடுக்கக்கூடாது. இவ்வாறு சிந்தித்த இரு யோசனைகளிலும் இருந்து, எந்தவித விருப்பு, வெறுப்பு இன்றி, அதன் உள்ளே உள்ள உண்மைத் தன்மையைப் புரிந்து, இதன் முடிவு இப்படி இருந்தால் இன்னும் கொஞ்சம் இன்ட்ரஸ்டாக இருக்குமே என்ற முடிவை எடுக்க பழகிக் கொள்ள வேண்டும். இத்தகைய முடிவுகள் எப்போதும் வியப்பூட்டக் கூடிய வகையிலே அமையும். இதனால் நம் யோசனையின் எல்லை விரிவடைவதுடன், ஒரு யோசனையில் இருந்து இன்னொரு யோசனைக்கு செல்லும் முறை வளர்ச்சியடைகிறது.
    ஆக ஒரு விஷயத்திற்கான வித்தியாசமான தீர்வு என்பது, அதை நாம் பார்க்கின்ற தன்மையைப் பொறுத்து அமைகின்றது என்பது தெளிவாகிறது. பார்க்கின்ற தன்மை என்பது எதைப் பொறுத்து உருவாகின்றது என்றால், பல்வேறுபட்ட சூழலில் நாம் பெற்ற அனுபவம், கற்றகல்வி, எடுத்த சுயமுடிவுகளின் அடிப்படையிலே அமைகின்றது. மேலும் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ளும் தன்மை, விளங்கிக் கொள்ளும் விதம், அதை கவனிக்கும் பாங்கு முதலானவை கூட பார்க்கும் பார்வையைப் பொறுத்துத்தான் அமைகின்றது. ஆகையினால் நம் பார்வையை கூர்மையாக்கிக் கொள்வோம்.
    எப்போது நம் யோசனை ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும். இதுவரை நடைமுறையில் உள்ள பொதுவிதியை மீறிச் செல்கின்ற போது, அந்த முடிவு சரியான முறையில் சாத்தியம் ஆகக்கூடிய வழிமுறையில் அமைந்திருந்தால் நிச்சயம் அந்த முடிவு ஆச்சரியத்தை உருவாக்கி, மற்றவரை அசத்திவிடும்.
    எடுத்துக்காட்டாக, ஒரு புதிய கண்டுபிடிப்பு, அந்தக் கண்டுபிடிப்பை செய்துகாட்டும் போது பார்ப்பவர்க்கு ஜுஜுபியாகத் தோன்றும். அதையே அவர்களை செய்யச் சொன்னால் மிகவும் கஷ்டமாக இருக்கும். அவர்களால் அதுபோல் ஒரு வேளை செய்து காட்ட முடியாமலும் போகும். உடனே என்ன சொல்வார்கள், என்னடா இது லாஜுக்குÐ ஒன்னும் புரியலÐ அவன் செய்யும்போது சுலபமாக இருந்தது, நாம செஞ்சா வரமாட்டுங்கிதுÐ என்று உடனே கண்டுபிடிப்பாளரைப் பார்த்து சார், சார், எனக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்Ð அது எப்படி சார் என்று கேட்போம். அதை அவர் விளக்கமாக, நம்முன் செய்து காட்டிய உடன், அடÐ ஆமாÐ இது இவ்வளவுதானாÐ எப்படியா உன்னால மட்டும் இப்படி எல்லாம் யோசிக்க முடியுது என நாம் வியந்து போகின்ற விஷயங்கள் தான் எத்தனை, எத்தனை.
    ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் ஒரு வயது முடிவுக்கும், ஒன்பது வயது முடிவுக்கும் வேறுபாடு இருப்பது போல, இருபது வயது முடிவுக்கும், அறுபது வயது முடிவுக்கும் வித்தியாசம் இருக்கும். அதுபோல் எண்பது வயது முடிவுக்கும், நூறுவயது முடிவுக்கும் கூட பல்வேறு முரண்பாடுகள் இருக்கக்கூடும். என்றாலும், அந்தந்த காலகட்டதடதில் நம்முடைய முடிவுகள் மிகச் சிறந்தவையாக அமைய வேண்டும் என்றால் அதற்கான பயிற்சியையும், முயற்சியையும் நாம் மேற்கொள்கின்ற போது அது நிச்சயமாய் சாத்தியமாகும்.
    சிறந்ததிழும், மிகச் சிறந்தது இருக்கும் என்கின்ற எண்ணமே, மாற்றுவழி தேடி மனதை உந்தித்தள்ளும். மாற்று வழிகளைக் கண்டுபிடிப்பது பெரிய விஷயமல்ல, மாற்று வழிகளைத் தேட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதுதான் பெரிய விஷயம். பொறுமையாக, மனதை அதற்கேற்றவாறு பக்குவப்படுத்தி விட்டால் அது எளிதாகிவிடும்.
    சில நேரங்களில் மாற்று வழிகள் சிறப்பாக அமையாமல் போகக்கூட சாத்தியம் உண்டு. அப்போது நாம் பிடிவாதம் பிடிக்காமல், நம்மை மாற்றிக் கொள்ளத் தயாராகிக் கொள்ள வேண்டும். அதுமட்டும் போதாது நாம் மாற்றுவழி முறையைத் தேடுவதையும் நிறுத்திவிடக் கூடாது.
    மோசமான நிலைக்கு மட்டுமே, மாற்று யோசனை வேண்டும் என்றில்லை. வெற்றிகரமான செயல்பாடு கொண்டிருக்கும், ஒரு செயலுக்கும் கூடத் தேவைப்படும். எப்படி என்றால் இதை இன்னும் எளிமையாக்க, திறன்மிக்கதாக்க, இதைவிட சிறந்த வேறு முறையில் எப்படி செய்ய முடியும். இன்னும் ஒருபடி மேலே போக முடியுமா? என்பதற்கும் அது தேவைப்படும்.
    மாற்று யோசனையைப் பொறுத்தமட்டில், எந்த அளவுக்கு தகவல்கள் (தரவுகள்) இருக்கின்றதோ, அந்த அளவுக்கு சிறப்பாக நம் சிந்தனை அமையும். கைவசம் இருக்கும் விவரங்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு என்ன இல்லை என்பது பற்றிய அறிவும் முக்கியமாகும். தேவையான தகவல் இல்லை என்றால், சிலவற்றை ஊகித்தும், நமது மதிப்பீடுகளை, உணர்ச்சிகளை எல்லாம் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். சின்னஞ்சிறு தகவல் கூட முடிவு எடுக்க பேருதவியாக இருக்கும். எனவே கொஞ்ச நேரம் கிடைத்தாலும், ஏதாவது ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள முன் வர வேண்டும்.
    மாற்றி யோசிப்பவர்கள், அதிகமாகவே கேட்பார்கள். ஒரு விஷயம் சொல்லப்படும் விதத்தை வைத்தும், வார்த்தைகளை பயன்படுத்தும் முறையை வைத்தும், வார்த்தைகளுக்கு இடையே இருக்கும் அர்த்தத்தை வைத்தும், பல விஷயங்களை கிரகித்துக் கொள்ளுவார்கள். அதாவது சொல்லப்படுவதைத் தவிர வேறு என்ன அதில் இருக்கலாம், இருக்க முடியும் என்ற தீவிரமான கற்பனை ஆற்றல் கைவரப் பெற்றவர்களாக இருப்பார்கள்.
    மாற்று யோசனை, மகிமையுடையதாக இருக்க வேண்டும் என்றால், அதன் கருத்து நல்ல முறையில் உரிய இடம் சென்று சேர வேண்டுமானால், அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்றால், மாற்று யோசனையை கேட்பவரின் மொழியில் அது அமைந்திருக்க வேண்டும். இதுதான் மிக மிக முக்கியம்.
    மாற்று யோசனை முடிவு எடுக்கும் முன் கவனிக்க வேண்டியது
    பிரச்சனைதான் என்ன?
    என்ன சூழ்நிலையில் முடிவு எடுக்க வேண்டி இருக்கியது? இப்போது இருக்கும் நிலைமைதான் என்ன? முடிவு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? இப்போது எடுக்க வேண்டிய அவசியம் என்ன? பிரச்சனையை ஆறப்போட்டால் தானாகவே முடிந்து போக வாய்ப்புள்ளதா? அல்லது பிரச்சனை, தீவிரமாகுமா? முடிவு எடுத்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கிறதா? நமது நிர்பந்தமா, வேறு யாராவது நிர்பந்திக்கின்றார்களா? முடிவு எடுக்க எவ்வளவு நேரம் இருக்கியது? விளைவுகள் எப்போது தெரியும்? முடிவை எப்போது எடுக்க வேண்டும்? இன்று, நாளை அல்லது ஒரு மாதத்திற்குள் ஒரு ஆண்டுக்குள்… எப்போது? எடுத்த முடிவு சரியா? தவறா? என்று எப்போது தெரியும்? முடிவு அதிரடி ஆனதா? அட்ஜெஸ்ட்மெண்ட் முடிவா? ஒன்றை நிறுத்தப்போகிறோமா? தொடங்கப் போகிறோமா? முடிவு தவறானால் மாற்ற வழி இருக்கிறதா?
    அடேயப்பாÐ இத்தனை கேள்வியா? மலைப்பாக இருக்கிறதா? மனம் தளர வேண்டாம். சித்திரமும் கைப்பழக்கம்Ð செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல, இந்த முறையில் சிந்திக்கச் சிந்திக்க மனம் அந்த நிலைக்குத் தயாராகிவிடும். பின்பு நாமும் மிக விரைவாக வியக்கத்தகும் மாற்று வழிகளை கொடுக்கக்கூடிய மிக முக்கிய நபராகிப் போவோம். முயற்சிப்போம். முடியாதது எதுவுமில்லை.
    மாற்று யோசனை முடிவிற்குப் பிறகு என்ன நடக்கும்?
    நம்முடைய பாணி என்ன? நம்மைப் பற்றிய அடையாளம் எல்லாம் இங்கு தான் வெளிப்படுகின்றது. எனவே நம்முடைய இமேஜிற்கு சரியான முடிவை எடுக்கப் பழகுவோம். இல்லையென்றால், நீயா இப்படிச் செய்தாய்Ð என்கின்ற ஆச்சரியத்திற்கு ஆளாகிப்போவோம். எந்த முடிவாக இருந்தாலும் அதில் ரிஸ்க் இருக்கத்தான் செய்யும். எதையும் கவனமாகக் கையாண்டோம் என்றால் காரியச்சித்தி கைகூடும். நாம் என்ன அடைய விரும்புகிறோம் என்பதில் தெளிவு இருந்தால் எது முக்கியம் என்று தெரிந்திருந்தால் ஒரு விசயத்தை திட்டமிட்டுச் சிந்தித்து மனத்தை ஒருமுகப்படுத்தி நம்பிக்கையுடன் ஜாலியாக சுலபமாக ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்து மகிமை பெறலாம். வாருங்கள். மாற்றி யோசிக்கலாம். மகிழ்வோடு.

    சந்திப்பு…

    ஒரு நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதையின் கதை. நான்கு ஆஸ்கார் பரிசு பெற்ற திரைப்படக் கதை. புலிட்சர் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட நாவலின் கதை. மூவாயிரம் ஆண்டு பழைமையான மருத்துவ முறை ஆகிய அனைத்தும் பற்றி இந்த “சந்திப்பு” பேசுகின்றது
    அழகான மனது என்று ஒரு திரைப்படம். ஜான் நேஷ் என்கின்ற ஆங்கில கணித மேதையின் கதை. இவர் கணிதத்தில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர். இந்தப்படமும் ஆஸ்கார் விருது பெற்றது.
    திரைப்படங்கள் “தீ” போன்றவை. சமையலும் செய்யலாம்…. அச்சப்படவும் வைக்கலாம். பாட புத்தகங்கள் இது போன்ற படங்களால் வலு கூட்டப்படுகின்றன என்பது நம் கருத்து.
    இந்தப் படத்தில் சில காட்சிகளை விவரிக்கின்றேன்.
    கதாநாயகன் பிரின்ஸ்டன் நகரத்தின் பல்கலைக்கழக விடுதி அறைக்குள் முதல் நாள் அமர்ந்து இருக்கின்றார். அதே அறைக்கு அனுமதிக்கப்பட்ட மற்றொரு ஆராய்ச்சி மாணவர் போல இன்னொருவர் அறைக்குள் வருகின்றார். அந்த புதிதாக வந்த நபர் நல்ல உயரம். சுருட்டை முடி. நிறைய பேசக்கூடியவர். அவர் கதாநாயகன் ஜான் நேஷ்ஐ, தன்னோடு அன்புடன் பழக அழைக்கின்றார். ஆனால் நம் நாயகன் அவ்வளவாக பழகமாட்டார். அதை அவரே சொல்வார். எனக்கு பழகவராது. அதிக நண்பர்களும் கிடையாது. “என் அம்மா சொல்லி இருக்கின்றார்கள், கடவுள் எனக்கு மட்டும் ஒரு கவளம் இதயமும் இரண்டு கவளம் மூளையும் கொடுத்து அனுப்பி வைத்துவிட்டார்”, என்று நேஷ் கூறுவார். அதன் பிறகும் சார்லஸ் என்கின்ற அந்த அறைத்தோழர் விடமாட்டார். நேஷ் இருவரும் நெருங்கிப் பழகுவர்.
    இரண்டு நாட்கள் சாப்பிடாமல், கொள்ளாமல், நூலகத்திற்குள் அமர்ந்தே இருப்பார். பல இடங்களில் தேடிய பிறகு அங்கே வந்து சார்லஸ் தான் இவரை சமாதானம் செய்வார். படிப்பு ஆரம்பித்து ஆறுமாதமாகியும் தலைப்பு கூட கண்டுபிடிக்கமாட்டார் நம் நாஷ். அவருடைய வழிகாட்டி கோபித்துக் கொள்வார். அதற்காக, நம் நாயகன் மறைவாக உள்ள ஒரு தாழ்வான ஜன்னல் மீது அமர்ந்து கொண்டு, அதன் கண்ணாடி கதவுகளில், புறா கூட்டங்கள் எப்படி தானியம் கொத்திக்கொண்டு மேய்கின்றன என்பதற்கான கணித வாய்ப்பாட்டினை எழுதி வைத்திருப்பார். அந்த இடத்தில் வந்து, சார்லஸ், உணவு அருந்துவதும் முக்கியம் என்று புரிய வைத்து அழைத்து செல்வார்.
    உணவை மறந்து உணர்வோடு படிக்கின்ற நாட்கள் நம் கணக்கிலும் உள்ளன. இவனை, எவ்வளவு முறை அழைப்பது என்று அம்மாவும், அக்காவும் கோபித்துக்கொண்டது உண்டு. இவ்வளவு கேள்விகளை இரவு உணவுக்கு முன்பு முடிப்போம் என்று இலக்கு வைத்ததெல்லாம் நினைவு வருகின்றது. ஆனால் உணவை தியாகம் செய்தது கிடையாது. மிகைப்படுத்த வேண்டியது உண்மை இல்லாவிடில் அவசியமில்லை.
    பாதி படம் முடிவுற்ற பிறகு சார்லஸ் மீண்டும் கதாநாயகனை சந்திக்க வருவார். இம்முறை உடன் அவரது சகோதரியின் மகளோடு வருவார். இடையில் பல வருடங்கள் கழிந்து இருக்கும். அவருக்கு திருமணமான கதை எல்லாம் பேசுவார்கள். அந்தச் சின்னப் பெண்ணும் சூட்டிகையாக பேசுவாள், விளையாடுவாள். இந்தப்படத்தில் இரஸ்ஸல் க்ரோவ் என்பவர் நேஷ் பாத்திரத்தில் நடித்து இருப்பார். அவர் நடித்திருக்கின்ற க்ளாடியேட்டர், சின்ட்ரெல்லா மேன் போன்ற திரைப்படங்களையும் கண்டு இருக்கின்றோம், அவை அற்புதமானவை. இப்படத்தில், வகுப்பறைகளுக்குச் செல்வதில் ஆசிரியராக மாறிய பிறகும் அவருக்கிருந்த தயக்கம், மிகவும் அழகாக படம் பிடிக்கப்பட்டு இருக்கும். இதுபோன்ற காட்சிகள் எல்லாம் சில நிமிடங்களுக்குள் அல்லது வினாடிகளுக்குள் முடிந்து விடுகின்றன. வார்தைகள் எழுத்து வடிவில் துணையாக திரையில் விழுமாறு உள்ள ஒளித்தகடுகள் மூலமாகத்தான் நன்றாக புரிந்துகொள்ள முடியும். பெயர் புதிதாக உள்ள திரைப்படம், அதுவும் பிற மொழி படம் இதற்கு ஏன் இவ்வளவு அறிமுகம் செய்கின்றோம்? என்று தோன்றலாம். சென்றிடுவீர் எட்டுத்திக்கும், கலை செல்வங்கள் கொணர்வீர் என்ற பாரதியின் வரிகளே பதில்.
    இனிமேல்தான் இதில் “சந்திப்பு” எப்படி நிகழ்ந்தது என்பதை அறியப் போகிறீர்கள்… இதுவரை நாம் படித்ததில் சார்லஸ் என்கின்ற கதாபாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உண்மையில் அப்படி ஒருவர் இல்லவே இல்லை. பிரின்ஸ்டன் பல்கலைகழக குறிப்பேடுகளில் அப்படிப்பட்ட பெயரோடு யாரும் படிக்கவே இல்லையாம். ஒரு மன கற்பனையே! மாயத் தோற்றமோ! நாயகன் ஜான் நேஷ்ற்கு அப்படி ஒரு மன நோய். பாரனாய்டு சிசோபிரனியா என்பது பெயர். அவரின் அந்த மனக்காட்சி கற்பனையே தனக்கு ஒரு அறை தோழரை உருவாக்கிவிட்டது. தனக்குத்தானே பேசிக்கொள்வதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். சிலர் அனுபவித்தும் இருப்போம். தன் மனத்தையே வெளியே, இன்னொரு தோற்றமாக உருவாக்குதலை இந்த வகையில் சேர்க்கலாம். தன் மனமே உருவாக்கிய கதாபாத்திரத்தோடு விவாதித்தல், சண்டையிடுதல் எல்லாம் இப்படத்தில் காட்டப்பட்டு உள்ளது. அவ்வளவு ஏன்? இருவரும் சேர்ந்து இரண்டாவது மாடியிலிருந்து கனமான, ஒரு மேஜையை தள்ளிவிட்டு உடைப்பதாக ஒரு காட்சி வருகின்றது. உண்மையில், கதாநாயகன் மட்டுமே தனியாக இதை செய்திருக்கிறான். இதை புரிந்து கொள்ளவே, ஆழ்ந்த யோசனை தேவைப்படுகிறது.
    படம் நகர, நகர நாயகனுக்கு இன்னும் விசித்திரமான அனுபவங்கள்; – நமக்கும் தான். இரஷ்ய உளவாளிகள் தம்மை கண்காணிப்பதாகவும் கற்பனை செய்து கொள்கின்றார். அமெரிக்க துப்பறியும் ஏஜென்ட் ஒருவரையும் தன் கற்பனையால் நிஜமாக்கி, சந்திக்கின்றார். கை குலுக்குகின்றார். இருவரும் துப்பாக்கி குண்டுகள் துரத்த துரத்த வேகமாக கார் ஓட்டுகின்றனர். உண்மையில் இவர் மட்டுமே தனித்து ஓட்டிச் செல்கின்றார். மற்றவை அதீத கற்பனையே. அவருடைய மனைவி இதை கண்டுபிடித்து படிப்படியாக அவருக்கு விளக்கி பிரச்சனையிலிருந்து மீட்டுக் கொண்டு வருகின்றார். இது போன்றதொரு சிக்கலுக்கிடையில் ஜான் நேஷ் நோபல் பரிசு பெறும், புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்துகின்றார். நன்கு புரிந்துகொண்டு அவரது பாணியிலேயே, “இந்த பரிசோதனை முடிவு எப்படி இருந்தது?” என்று கேட்கின்ற மாணவி, மற்றும் மனைவியை சந்திக்கின்றார். அதுவே பெரிய திருப்புமுனை ஆகின்றது.
    வாசகர்கள் இந்தக் கட்டுரையால் படம் பற்றி ஈர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. ஒரு சிலர் இப்படத்தை ஏற்கனவே பார்த்திருக்கவும் கூடும். மற்றும் சிலர் இதனால், பார்க்க வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் நமது பார்வையில் தலைப்பிற்கான கருத்து எடுத்துக்கொள்ளப் படுகின்றது. ஆழ்ந்த கற்பனையே, சந்திப்பு ஆகின்ற வாய்ப்பு உள்ளது. கவனக் கூர்மை மிகுந்த பயனுள்ள தியானம் போன்ற வழிமுறைகள் இதனை சாத்தியம் ஆக்கக் கூடும். ஓரளவு உருவகப்படுத்திக் கொள்ளக்கூடிய ஆற்றல் உதவிகரமாக இருக்கக் கூடும்.
    திருமூலர் என்றதொரு முனிவர் வாழ்ந்ததாக தமிழ் வரலாறு உண்டு. அவர், “மூலன்”, என்ற ஒரு இடையர் குல இளைஞனின் உயிரற்ற உடலை கண்டுள்ளார். அவ்வுடலில் புகுந்து சுமார் மூவாயிரம் ஆண்டு வாழ்ந்துள்ளார் என்று இலக்கியங்கள் சொல்கின்றன. இக்கால அறிவியிலின்படி நம்புவதற்குச் சிரமமாக உள்ளது. அப்பர்பிரான் தனது பாடல் ஒன்றில் “காண்பார் யார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே” என்று கேட்கின்றார். அதாவது நாம் காண்கின்ற காட்சிகள், நிகழ்த்துகின்ற சந்திப்புகள் எல்லாம் இறைவன் சித்தம் என்று பொருள் தருகின்றது. கடிகார வரிசையில் காரியங்கள் திட்டமிடப்பட்டு, குறிக்கோள்கள் நிர்ணயிக்கப்பட்டு வரும் இக்காலம் கற்பனைகளுக்கும் இடம் தருகின்றது.
    கடவுள் நம்பிக்கையோடு மட்டுமன்றி கடமையும் செய்யவேண்டிய உணர்வு திட்டமிடுதலை ஊக்குவிக்கின்றது. சந்திக்க வேண்டியவர்களைச் சந்தித்துவிட்டதாகவே கற்பனை செய்து கொள்ளுதல் தீவிர ஆர்வத்தின் வெளிப்பாடு என்று கூறலாம்.
    திருமூலர் கூறுகின்றார், அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது; பிண்டத்தில் உள்ளது அண்டத்தில் உள்ளது என்று. அதாவது, அண்டம் என்று சொல்லக்கூடிய உலக வெளியில் காணப்படும் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், சோடியம், கால்சியம் முதலான பொருட்களால் உருவாகும் உடல் மீண்டும் உலகை அடைவதை குறிப்பிடுகின்றார். இதனை ஜீவாத்மா, பரமாத்மா என்று உடலையும் இறைத்தன்மையை காட்டி விளக்குவர். மக்கள் இறைவனின் வடிவம் என்று பொருள் படுகின்றது. விவேகானந்தரும், பாரதியும் நாம் கடவுள் என்று சொல்லி உள்ளனர். சிருஷ்டி கடவுள் பணி, எனில் நேஷ் செய்தது அஃதே. இல்லாதனவற்றை இருப்பதாக நம்பி சந்திக்கின்றார். உலகம் நம்பிக்கையில் ஆழமாக கட்டப்பட்ட கட்டிடம். நாம் சந்திக்க வேண்டியவர்களில் மிக முக்கியமானவர்கள் நாம் தான்; நமக்குள் வந்திருக்கின்ற தோல் அமைப்பில் இருந்து கண் பார்வையில் தூரப்பார்வை வரை மரபியலால் அமைகின்றது. உலகத்தின் ஒட்டுமொத்த புத்திசாலித்தனம் என்று ஒரு பொது கருத்து உண்டு. அது காலங்காலமாக பரம்பரையாக பரப்பப்பட்டு வந்துள்ளது. வள்ளுவர் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று இதனை கூறியிருக்கலாம். அதாவது உலகு எப்படி செயல்படுகின்றதோ, அவ்வாறான திறன் நமக்கும் அமைந்திருக்க வேண்டும். மேலோட்டமாக பார்க்கையில் தற்செயலாக நிகழும் நிகழ்வுகள் ஒரு திட்டமிட்ட ஒழுங்கோடே நிகழ்கின்றன என்று சொல்வது “கேயாஸ்” தத்துவம் ஆகும்.
    மேற்கூறிய கருத்துக்களில் பரம்பரை பண்பு மரபியலாக வருவது குறித்து “பனிமனிதன்” என்ற புத்தகம் கூறுகின்றது. இதனை எழுதியவர் திரு. ஜெயமோகன் இப்புத்தகத்தில் குழந்தைகளுக்கு சொல்வது போல அறிவியல் மற்றும் தத்துவ கோட்பாடுகளை விளக்கி இருப்பார். அது பிளந்து வைத்த மாதுளைப் பழம் போல பிரகாசிக்கின்றது. தியானக் கலை நம்மை நாமே சந்திக்க உதவுகின்றது. அதற்கும் அடுத்த படி நாம் சந்திக்க வேண்டிய தெரிந்தவர்களை சந்தித்தாக உருவகம் செய்வதாக இருக்கலாம். மூன்றாவது, அதாவது அதையும் தாண்டிய……படி….. தெரியாத……நேஷ் போன்று புதிய கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொள்வது…… அடுத்த படிகளாக ……நிஜத்திலேயே அவ்வாறான பாத்திரங்களைப் படைக்க முடியலாம்….. இந்த முயற்சியை சந்திப்பு ….சாதிப்பு ஆகிற முயற்சியாகக் கொள்ளலாம். திருமதி. பி.எஸ். இலலிதா என்கின்ற எழுபத்தி நான்கு வயது அறிவியலாளரை தொலைபேசி மூலம் சந்திக்க நேர்ந்தது.
    அவர் ரேகி என்கின்ற இயற்கையான தொடு மருத்துவ துறையிலிருப்பவர். அதன் இந்திய அளவிலான சங்க நிர்வாகி. அவர்களது இணைய தளத்தில் சென்று படிக்கையில் இன்னும் ஆழமான காந்த மருத்துவம் கல் மருத்துவம் முதலானவற்றை பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு இவற்றுக்கெல்லாம் இருப்பதாக சொல்கின்றார். கிளியோபாட்ரா குறித்த தற்போதைய படங்களை பார்த்திருக்கலாம். அந்த எகிப்து அரசி ஒரு பேரழகி. அவள் நெற்றியில் ஒரு கல் இருப்பது போல இருக்கும். அது ஒரு அலங்காரம் என நினைத்திருக்கக்கூடும். ஆனால் அது மருத்துவ பின்னனி வாய்ந்த, காந்த கல்லாம், அவளது இளமையை அக்கல் பாதுகாத்ததாம். காந்த அலைகளால், உடலுக்குள் சக்தி பாய்கின்றதாம். இன்றைய அறிவியல் இவற்றையெல்லாம் விளக்கவோ, விலக்கவோ முயற்சிக்கவில்லை. இவை ஜான் நேஷின் கண்களுக்குப் போல, ஒரு சிலருக்கு மட்டுமே சந்திக்க முடிந்தவை என்று இருக்கலாம்.
    இலலிதா அம்மையார் நமது மருத்துவம் நானூறு ஆண்டு பழமையானது, திருமூலரது தத்துவங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகள் கோலோச்சியது, அதில் பரிசோதனையும் இல்லை மருந்துகளும் இல்லை, பின் விளைவுகளும் இல்லை, என்று ஆச்சரியங்களை மும்மடங்கு ஆக்குகின்றார். மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு …… என்று வள்ளுவர் கூறியுள்ளார். அதன் பொருள், உடலுக்கு மருந்து என்று தனியாக எதுவும் வேண்டுவதில்லை என்பதாம்.
    இலலிதா அம்மையார் ஆழ்ந்த நம்பிக்கையுடன் பேசுகின்றார். சிற்சில எளிமையான உள, உடல் பயிற்சிகள் உள்ளன. கற்றுக்கொண்டால் இவ்வுலகு மேலும் வலு மற்றும் வளமாகும். அவற்றைக் குறித்து சங்கரா தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி முதலியவற்றில் பேசி வருகின்றார். அவரது பெயரிலான இணைய தளத்தை “கூகுள்” வழியே எளிதில் அடைய முடிகின்றது. முப்பத்து நான்கு வருடங்கள் ஆங்கில கால்நடை மருத்துவம் படித்த பின்பு பல முனைவர் பட்டங்கள் பெற்ற பேராசிரியர்களுக்கெல்லாம் வழிகாட்டிய பிறகும் அம்மையார் ஆற்றல் பெருக்கோடு பணியாற்றுகின்றார் என்றால் ஆச்சரியம் தான்.
    இவர்களைப் போன்ற பல நேர்முக சந்திப்புகளுக்கு முன்பு நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அண்மையில் ஹட்சன் என்கின்ற நகரத்து மேயரை மரியாதை நிமித்தம் சந்தித்த பொழுது அந்நாடு அந்நகரம் குறித்து படித்து தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. நேர்முகத் தேர்வுகளுக்கும் இவ்வாறே தயாரிக்கின்றோம்.
    தெக்கலூர் காதுகேளாதோர் பள்ளியிலிருந்து நமக்கொரு அழைப்பு கிடைத்தது. அந்த சந்திப்பு மானசீகமாகவே நின்று போனது. கண்ணொடு கண்ணினை நோக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனினும் இல, என்று கம்ப இராமாயணப் பாடல் உண்டு. இராமனும் சீதையும் பேசாமலே புரிந்து கொண்டனர் என்று பொருள். காதுகேளாதோர் அதனை அன்றாடம் செய்ய வேண்டி உள்ளது. இந்த மாணவர்களுக்குள்ள பாசத்தைப் புரிந்து கொள்ள மொழி திரைப்படம் உதவுகிறது. இது மிகையாகாது. நாள்தோறும் உறங்கப் போகையில் இரு குழந்தைகளுக்கும் கதை சொல்லப்படுகின்றது. அதில் வரும் கதாபாத்திரங்களை ஒரு நாள் நேரில் சந்திப்போம் என்கின்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு வருகின்றது. இவரு கும்பகர்ணன் போல, என்று நண்பர்களை அறிமுகப்படுத்தினால் சந்திப்பு கலகலப்பாகின்றது. அறிவுக்கு புலப்படும் சந்திப்புகள் கண்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை. சந்திப்பின் எதிர் முனையில்தான் எங்கோ? பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் நட்பு இருந்திருக்கின்றது.
    இவர்களின் கதை தெரியாதவர்களுக்காக அடுத்த சில வரிகள். இவர்கள் இவருவரும் உயிர் நண்பர்கள். கோப்பெருஞ்சோழன் உண்ணாவிரதம் இருக்கிறாரென தெரிந்து கொண்டார் பிசிராந்தையார். அவருக்காக துணையாக நோன்பிருந்து உயிர்கொடுத்தார். இதில் அழகென்ன எனில் அவர்கள் இருவரும் சந்தித்ததே, இல்லை.
    ஆக, வரலாறு அழகான மனதுகளின் சந்திப்பால் நிறைந்திருக்கின்றது.

    அவசரத் தேவைகள்

    கல்விமுறையில் பல்வேறு மாற்றங்கள் இப்போது நிகழ்ந்து வருகின்றன. கல்வியைக் கற்பிக்கும் முறையிலும், பாடத்திட்டத்திலும் மாற்றங்கள் உருவாகிக் கொண்டே வருகிறது. “இளம் வயது மாணவ – மாணவிகளின் கல்வி தரத்தை உயர்த்தவும் அவர்களின் மனநிலையில் நல்ல மாற்றங்கள் உருவாகவும் வழிவகை செய்யும் விதத்தில் இந்த மாற்றங்கள் அமைய வேண்டும்” என்ற நல்ல எண்ணத்தோடு கல்விக் கொள்கைகளை அரசு உருவாக்குகிறது.
    பொதுவாக – சிறு குழந்தையாக இருக்கும்போதே பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிடுகிறார்கள். சிறு வயதில் ஆரம்பிக்கும் இந்தக் “கல்வி கற்கும் பயிற்சி” சுமார் 15 முதல் 20 வருடங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் தொடர ஆரம்பித்துவிடுகிறது. ஒரு மனிதனின் உடலில் கல்வி என்னும் சக்தி பரவ ஆரம்பித்ததும், அறிவு என்னும் மிகப்பெரிய ஆற்றல் பெருக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் ஒரு மனிதன் சிந்திக்கத் தொடங்குகிறான். அந்த மனிதரின் சிந்தனையில் நல்ல குணங்கள் உருவாகும் போது நல்ல செயல்களைச் செய்வதற்கு ஆர்வம் ஏற்படுகிறது.
    தரம் வாய்ந்த ஒரு கல்வி குழந்தைகளுக்கும், இளம் பிள்ளைகளுக்கும் மாணவ – மாணவிகளுக்கும் தரமான வாழ்க்கையை அமைக்கவும் சிறந்த பண்புகளைக் கற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யவேண்டும். இந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்ட கல்வி நிலையங்களில் சில எதிர்பாராத நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்ந்துவிடுகின்றன.
    கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைக்கிறது.
    சென்னையிலுள்ள ஒரு பள்ளியில் படிக்கும்
    9 – ம் வகுப்பு மாணவன் தனக்கு பாடம் கற்பித்த ஆசிரியை உமா மகேஸ்வரியை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டான். இந்த சம்பவம் அவன் படித்த மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையில் நடந்திருக்கிறது.
    அந்த மாணவன் ஆசிரியையைக் கொலை செய்கின்றஅளவுக்கு என்னதான் நடந்துவிட்டது? என்று உற்று கவனித்தால் அதன் பின்னனி நமக்கு விளங்கும்.
    ஆசிரியை உமா மகேஸ்வரியை கொலை செய்த மாணவரிடம் விசாரணை செய்த போது சில திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளன.
    ஆசிரியை உமா மகேஸ்வரி மிகவும் நல்லவர். ஆனால் தவறு செய்தவர்களைக் கண்டிக்கும் குணமும் கொண்டவர். இவர் ஹிந்தி பாடத்தை அந்த மாணவன் ஒழுங்காக படிக்கவில்லை என்பதற்காக கண்டித்தார். அவனது ஃபுராகிரஸ் ரிப்போர்ட்டில் படிப்பில் அவன் நிலையைப்பற்றி குறிப்பிட்டிருந்தார். இந்த ரிப்போர்ட்டை வீட்டிற்குச் சென்று தனது அப்பாவிடம் காட்டினான் மாணவன். அப்பாவுக்கு எரிச்சல் வந்தது.
    “இனிமேல் உன் செலவுக்கு நான் பணம் தரமாட்டேன்” என்று கண்டிப்பாக சொன்னார் அப்பா. அப்பாவின் கோபம் அவனுக்கு மனதில் வலியை ஏற்படுத்தியது. இதனால் ஆசிரியை மீது கடுமையான கோபம் உருவானது. பின்னர் – ஒருநாள் ஹிந்தி பாடத்தை சரியாக படிக்காத சில மாணவர்களை அழைத்து சனிக்கிழமை சிறப்பு வகுப்புக்காக வரச்சொன்னார் ஆசிரியர் உமா மகேஸ்வரி.
    “ஒழுங்காக படிக்கா விட்டால் நீ பெயிலாகிவிடுவாய்” என்று கண்டிப்புடன் அந்த மாணவனைப் பார்த்துக் கூறிய ஆசிரியை உமா மகேஸ்வரியை பழிவாங்கத் திட்டமிட்டான் மாணவன். பின் வகுப்பறையில் ஆசிரியையைக் குத்திக் கொன்றுவிட்டான் அவன். அந்த மாணவனுக்கு வீட்டில் தனி அறை ஒதுக்கப் பட்டிருந்தது. அந்த அறையிலிருந்துதான் மாணவன் படிப்பான். தூங்குவான்.
    கொலை, வெட்டுக்குத்து, வில்லனை உதைக்கும் கதாநாயகன், சண்டைக் காட்சிகள் அதிகமுள்ள தமிழ் மற்றும் ஆங்கில படங்களை விரும்பிப் பார்க்கும் இந்த மாணவன், கொலை செய்வதற்கு முன்பு பார்த்த இந்தி படத்தின் பெயர் “அக்னிபத்” என்பதாகும். இந்தப் படத்தில் தோன்றும் கதாநாயகன், ஒரு வில்லனைக் கத்தியால் நெற்றியில் குத்துவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருக்கும். “இந்தக் காட்சி ஆழமாகப் பதிந்ததால்தான் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது” – என்று போலீஸ் விசாரணையில் கூறினான் ஆசிரியையை கொலைசெய்த மாணவன்.
    ஆசிரியை உமா மகேஸ்வரியைக் கொல்லவேண்டும் என்று தெளிவாக திட்டம் போட்டு, 14 முறைகத்தியால் குத்தும் அளவுக்கு
    9 – ம் வகுப்பு மாணவனுக்குள் தைரியம் எப்படி வந்தது. “மாதா, பிதா, குரு, தெய்வம்” – என்ற வரிசையில் தாய் – தந்தையர்களுக்குப்பிறகு முக்கியமாக மதிக்கப்பட வேண்டியவர்கள் குரு எனப்படும் ஆசிரியர்கள் என்பதை இன்றைய இளைய தலைமுறையினரில் சிலர் மறந்து விட்டு செயல்படுவது வேதனைக்குரிய செயல் அல்லவா!
    பாடம் நடத்தும் ஒரு ஆசிரியையை பட்டப்பகலில் வகுப்பறையில் பலமுறை குத்தி கொல்லும் அளவுக்கு “வக்ர புத்தி”, “டீன் ஏஜ்” பருவத்தில் ஏற்பட்டிருப்பது “பள்ளிக்கூடங்களிலும் கூட பயங்கரவாதம் உருவாகும்” என்ற அச்சத்தை பலருக்கும் ஏற்படுத்துகிறது.
    இந்தச் சம்பவம் நடந்து முடிந்த சில நாட்களுக்குள் – இன்னொரு கொலைவெறி மிரட்டலை சந்தித்திருக்கிறார் விருதுநகர் அருகேயுள்ள அருப்புக்கோட்டை பள்ளி ஆசிரியர். அந்த ஆசிரியரை மிரட்டிய 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். அந்த ஆசிரியர் செய்த குற்றம் என்ன? சுமார் 1000 பேர் படிக்கும் அந்தப் பள்ளியில் பள்ளி நாட்களில் தினமும் காலையில் இறை வணக்கத்துடன் பள்ளி தொடங்கப்படும் நடைமுறை இருந்து வந்தது.
    அன்று – நடைபெற்ற இறைவணக்கம் நிகழ்ச்சியில் பிளஸ் – 2 படிக்கும் சில மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால் அங்கு வந்த ஆசிரியர் அந்த மாணவர்களை இறை வணக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சொன்னார். அந்த மாணவர்களில் 2 பேர் இறை வணக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்தார்கள். ஆசிரியருடன் தகராறு செய்தார்கள். அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார்கள்.
    “சென்னையைப் போல இங்கும் சம்பவம் நடந்துவிடும்” – என்று ஆசிரியரை மிரட்டினார்கள். இதனைத் தொடர்ந்து அங்கு பணியாற்றும் 33 ஆசிரிய – ஆசிரியைகளும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று வகுப்புக்குச்செல்ல மறுத்தார்கள். முடிவில் அந்த 2 மாணவர்களை போலீஸ் கைது செய்தது.
    இந்த 2 சம்பவங்களும் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. “கல்வியைக் கற்றுத்தரும் ஆசிரியர்களை பழி வாங்குவதும், பழி வாங்க நினைப்பதும் பாவம்” என்று இளைய உள்ளங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
    வன்முறை எண்ணத்தை அதிகரிக்கும் சினிமாவைப் பார்த்து இளைய உள்ளங்கள் மனம் மாறுவதை அந்தத் துறையில் பணிபுரிபவர்கள் மனதில் கொண்டு திரைப்படங்களை உருவாக்கவேண்டும்.
    சில புதிய திரைப்படங்கள் சினிமா தியேட்டரின் திரைக்கு வருவதற்கு முன்பே நம் வீடுகளிலுள்ள சின்னத்திரைகளில் வந்து இளைய மனங்களை சிதைத்துவிடுகிறது.
    சுமார் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் முழுமையாக பல மொழிகளில் சாட்டலைட்டு சானல்கள் மூலம் தினமும் ஒளிபரப்பப்படுகிறது. இதுதவிர – காமெடி, திரைப்படப் பாடல், திரை விமர்சனம் என திரைப்படங்களை அவ்வப்போது துண்டுதுண்டாக்கி பல்வேறு நிகழ்ச்சிகளாக சின்னத்திரை மூலம் வீட்டுக்குள் கொண்டு வருவதும் பழக்கமாகிவிட்டது. இதுதவிர, வன்முறைகளைத் தூண்டும் தொடர்களும், பில்லி, சூனிய தந்திரக் காட்சிகளும், சண்டை காட்சிகளும் அவ்வப்போது அரங்கேறி அசுரத்தனமாய் இளையோரின் மனதிற்குள் புகுந்துவிடுகிறது.
    இந்த நிலையில் “டீன் ஏஜ்” பருவத்திலிருக்கும் பலர் தெளிவாக சிந்தனை செய்ய இயலாத நிலையும் உருவாகிவிடுகிறது. இதனால் பல்வேறு தீய பழக்கங்களுக்கும் அவர்கள் அடிமைகளாகி விடுகிறார்கள்.
    சினிமா அல்லது டி.வி.யில் தோன்றும் கதாநாயகன் வன்முறையின் வடிவமாக அமைந்தாலும் அந்த கதாநாயகன் சொல்வதே சரியான தீர்வு என்று இவர்கள் நம்புகிறார்கள். திரையில் தோன்றும் நாயகர்கள் செய்யும் அடாவடித்தனத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்த விரும்புகிறார்கள். இன்டர்நெட் மூலமும் இவர்களுக்கு தேவையில்லாத பல தகவல்களும் கிடைத்துவிடுகின்றன. செல்போன் கொண்டு வரும் செய்திகளும் அதன் மூலம் பறிமாறப்படும் தகவல்களும் இளைய உள்ளங்களில் சிலரின் வாழ்க்கையைப் புரட்டிபோட்டு தடம் மாறச் செய்து விடுகிறது. இதனால் அவர்கள் வாழ்க்கை தடுமாறுகிறது. சினிமா, டி.வி., இன்டர்நெட், செல்போன் – போன்ற கருவிகள் அறிவை வளர்க்கும் ஆயுதமாக அறியப்படுவதற்குப் பதில் அவைகள் அழிவை நோக்கி அழைத்துச் செல்லும் கருவிகளாக சிலருக்கு மாறத் தொடங்கிவிட்டன. இதனால் மனதில் தேவையில்லாத வக்கிரங்கள் மேடை போட்டு அமர்ந்து மனதுக்குள் வாழ்க்கையின் திசையை மாற்றிவிடுகிறது.
    இப்படிப்பட்ட பின்னனியில் கல்வி நிலையங்களுக்கு வருகின்ற சில மாணவ – மாணவிகளும் தங்கள் பாடங்களைப் படிப்பதற்கு தேவையான நேரத்தை ஒதுக்க முன் வருவதில்லை. பள்ளியில் முறையாக கற்றபாடங்களை வீட்டில் சென்று திருப்பிப் பார்ப்பதற்குக் கூட நேரம் இல்லாமல் கவனத்தை சிதைக்கும் கருவிகளை வைத்துக் கொண்டு இளைய உள்ளங்களில் சிலர் கனா காணுகிறார்கள்.
    “வாழ்க்கையில் உயர வேண்டும் வெற்றிகளை பெறவேண்டும்” என்றஎண்ணம் மனதில் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மனமில்லாமல் கவனத்தை சிதைக்கும் நிகழ்வுகளோடு இவர்கள் கைகோர்த்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் படிக்க நினைத்தாலும் அவர்களால் படிக்க முடிவதில்லை.
    இந்தச் சூழலில் ‘டீன் ஏஜ்’ பருவத்திலிருக்கும் இளைய உள்ளங்களை நெறிப்படுத்துவதற்கு பள்ளி, கல்லூரி நிர்வாகம், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ – மாணவிகள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். இளம் வயதில் “நரேந்திரன்” என்ற ஒரு இளைஞன் பி.ஏ., பட்டப்படிப்பை முடித்துவிட்டு தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஒரு பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார். பின்னர் 1886 – ஆம் ஆண்டு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வுப் பெற்றார். அந்த இளைஞர்தான் உலக அளவில் புகழ்பெற்ற சுவாமி விவேகானந்தர் ஆவார். ஒரு சாதாரண ஆசிரியர் மிகச்சிறந்து புகழ்பெற்று விளங்குவதற்கு காரணம் அவர் அன்று தேர்ந்தெடுத்த ஆசிரியர் தொழில்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
    டாக்டர். இராதாகிருஷ்ணன் அவர்கள் ஒரு சாதாரண ஆசிரியராக இருந்து இந்திய அளவில் புகழ் பெறுவதற்கு காரணம் இந்த ஆசிரியர் பணிதான். அது மட்டுமல்ல- இந்திய ஜனாதிபதியாக புகழ்பெற்று விளங்கிய டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தனக்குப் பிடித்தமான பணி ஆசிரியர் பணிதான் என்று அழகாக கூறியுள்ளார். அவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின்பும் சென்னையிலுள்ள தொழிற்கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருகின்ற நிலையையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். “இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கையில்தான் இருக்கிறது; அந்த இளைஞர்களின் எதிர்காலம் ஆசிரியர்கள் கையில் இருக்கிறது” – என்பது பெரியார் வாக்கு.
    இத்தனை சிறப்பு மிக்க ஆசிரியர் பணியில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களும், கல்வி நிறுவன பொறுப்பாளர்களும், பெற்றோர்களும் மாணவ – மாணவிகளின் கல்வி வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் அவர்களது மன வளர்ச்சிக்கும் உதவியாய் அமைய வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆளுமைத் திறன் வளர்ச்சிக்கும் உதவிக்கரம் நீட்டி மாணவ, மாணவிகளின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டும். இதுதான் இன்றைய அவசரத் தேவை மட்டுமல்ல அனைவரின் விருப்பம் ஆகும்.
    தொடரும்.

    டிஜிட்டல் தேவதை…

    15 ஆண்டுகளுக்கு முன்னர் ரோபோவுக்கும் மனிதனுக்குமான உறவுப் பிணைப்பும், ரோபோவுக்கு உருவாகும் மனித உணர்வுகளும் பற்றி ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தனது Artificial Intelligent படத்தில் பிரமிக்க வைத்திருப்பார். அப்போது என்ன தான் இருந்தாலும் ரோபோ ஒரு இயந்திரம் தான். அதற்கு மனித உணர்வுகள் வர சாத்தியமே இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. பின் ஆராய்ச்சிகள் கொஞ்சம் அடுத்த நிலைக்குத் தாவியதன் விளைவு, ஸ்பீட் ஒன் டெரா ஹெட்ஸ், மெமரி ஒன் ஸீடா பைட் (ஒன்றுக்குப் பின்னால் 21 பூஜ்ஜியம் போட்டால் எத்தனை பைட்டோ அதுதான் ஸீடா பைட்) என ஷங்கரின் எந்திரன் டெக்னிகலாக எக்ஸலன்ஸ் என்னும் பெயரெடுத்து ஓடியது. எந்திரன் குறித்த பேச்சுகள் திரை வட்டாரத்தில் பரபரப்பானதைப் போல உலகெங்கும் ரோபோ குறித்த ஆராய்ச்சியும் அடுத்த கட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன.
    2030ல் ரோபோக்கள் மனிதர்களின் வாழ்க்கையில் பின்னிப் பிணைவார்கள் என புது ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நட்டு போல்டுடன் உலவிய டெர்மினேட்டர் வகை ரோபோக்கள் இப்போது ஓல்ட் பேஷன். ஈரானிலுள்ள ‘சுரினா 2’ எனும் நடனம் ஆடும் ரோபோ போல இலகுவான மனித சாயலை மிக நெருக்கத்தில் பிரதிபலிக்கும் ரோபோக்கள் தான் இப்போதைய டிரென்ட். ஹுமனாய்ட் ரோபோ என விஞ்ஞான உலகில் அழைக்கப்படும் இத்தகைய ரோபோக்கள் இப்போதெல்லாம் என்னென்னவோ வேலைகளைச் செய்கின்றன. அப்படிப்பட்ட ரோபோவைப் பற்றிய பதிவு தான் இது.
    நாம் பல நேரங்களில் இப்படி நினைப்பதுண்டு அதிகமாக பேசிவிட்டோமோ என்று. இன்னும் சில நேரங்களில் பேசாமல் வந்தது தவறோ என்று மனது அலையடிக்கும். இதில் எப்படி இருந்தாலும் பேசும் நேரத்தில் சரியா? தவறா? என்பது தெரிவதில்லை. பேசி முடித்த பின்னர் அதன் விளைவுகளைப் பற்றி ஆராயும் போதுதான் இதெல்லாம் புலனாகிறது.
    இதுபோன்ற நேரங்களில் நமது மனசாட்சியின் குரல் நம்மை எச்சரிக்கும். வழிகாட்டும். ஆனால் அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பல நேரங்களில் அந்த மனசாட்சியின் குரலை நம்முடைய தடுமாற்றமாகவே கருதி விட்டு விடுகிறோம்.
    மனசாட்சியை விட, நல்ல நண்பன் தோளில் கைவைத்து எது சரி, எது தவறு என்று ஆலோசனை சொல்வதையே அதிகம் விரும்புகிறோம். இதில் என்ன பிரச்சனை என்றால் இதுபோன்ற தருணங்களில் அத்தகைய நண்பர்கள் எப்போதுமே நமது அருகில் இருக்கும் வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. இதுபோன்ற சூழ்நிலைகளில் நமது தோளுக்குப் பின்னால் ஒரு தேவதை அமர்ந்து கொண்டு, நீங்கள் பேசுவது சரி; தவறு என்று எச்சரித்தால் எப்படி இருக்கும். இப்படி யோசித்துப் பார்த்ததன் விளைவால் வந்தது தான் ‘டிஜிட்டல் தேவதை’ ரோபோ.
    அமெரிக்காவைச் சேர்ந்த ஆக் சென்டர் டெக்னாலஜிஸ் இத்தகைய டிஜிட்டல் தேவதையை உருவாக்கி இருக்கிறது. அதி நவீனமான சென்சார்கள், புளூ டூத் வசதி மற்றும் வயர்லெஸ் இணைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு செல்போனுக்குள் அடக்கிவிடக்கூடிய அளவில் தனி நபர்களுக்கான பயிற்சியாளராக இந்த டிஜிட்டல் தேவதையை ஆக் சென்டர் நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. இதை நாம் நமது காதில் பொருத்திக் கொண்டால், இதில் உள்ள சென்சார் ஒரு நல்ல நண்பனைப் போல மற்றவர்களோடு நாம் பேசுவதைப் பொறுமையாக கேட்டபடி இருக்கும். அது மட்டுமின்றி புத்திசாலி நண்பனைப் போல நாம் பேசும் பேச்சின் சாராம்சத்தைப் பகுத்துணரும் ஆற்றலும் இதற்கு உண்டு. இதனால் நமது பேச்சின் போக்கை வைத்துக்கொண்டு நாம் அளவாக பேசுகிறோமா? இல்லை அளவிற்கு மீறி பேசுகிறோமா என்பதை உணர்ந்து தகுந்த நேரத்தில் அது பற்றி நமக்கு எச்சரிக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது.
    இத்தகைய சென்சாரை முதல் கட்டமாக விற்பனைப் பிரதிநிதிகளுக்குப் பயன்படக்கூடிய வகையில் தயார் செய்ய முடிவெடுத்துள்ளது ஆக் சென்டர். விற்பனை பிரதிநிதிகளின் பேச்சுக்கள் வளவளவென்று இருக்காமல் சரியான முறையில் அமைந்து காரியம் சாதிக்க வல்லதாக அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வடிவமைக்கப்படுகிறது.
    முதலில் வாடிக்கையாளர் என்ன சொல்கிறார் என்று காது கொடுத்துக் கேட்க வேண்டும். அவரது தேவையறிந்து பேச வேண்டும். ஆனால் பல விற்பனை பிரதிநிதிகளோ இந்த விதியை மறந்துவிட்டு பேசிக்கொண்டே இருப்பதால் இந்தக் கருவியை பயன்படுத்தினால் இதைத் தவிர்க்க முடியும் என்கிறது ஆக் சென்டர்.
    இந்த டிஜிட்டல் தேவதையை இத்தகைய விற்பனை பிரதிநிதிகள் பயன்படுத்தினார்கள் என்றால் வாடிக்கையாளரிடம் தங்கள் நிறுவன தயாரிப்பைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கும் போது சரியான கட்டத்தில் குறுக்கிட்டு எச்சரிக்கை செய்வதுடன் புதிய உத்திக்கு விற்பனை பிரதிநிதிகள் மாறிக் கொள்ளவும் உதவுகிறது.
    விற்பனை பிரதிநிதிகள் சரியாக பேசியிருந்தால் இந்த டிஜிட்டல் தேவதை பாராட்டுவதுடன் ஊக்கப்படுத்தும் படியும் வடிவமைக்கப்படுகிறது. இதைத் தவிர நாம் எப்படி பேசினோம் என்பதை அறிய மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் நமது பேச்சு பற்றிய வரைபட திறனாய்வை டவுன்லோடு செய்தும் பார்த்துக் கொள்ளலாம்.
    ஒருவர் பேசும் விதத்தைக் கவனித்து அதன் செயல்திறனை அலசி ஆராய்ந்து இந்த தகவலை ஒரு அறிக்கையாகவும் சமர்பிக்கும். மற்றொரு சிறப்பம்சமாக ஒருவர் பேசும் போக்கை உன்னிப்பாக கவனித்து எப்போது அவர் மிகச் சரியாகவும், சிறப்பாகவும் தகவலை வெளிப்படுத்துகிறார், எப்பொழுது தடுமாறுகிறார் என்பது போன்ற பரிந்துரைகளையும் இந்த டிஜிட்டல் தேவதை கொடுக்குமாறு வடிவமைக்கப்படுகிறது.
    ஒரு நல்ல நண்பனைப் போல நம்முடைய பேச்சைக் கவனித்து ஆலோசனை வழங்கும் இந்த டிஜிட்டல் தேவதை மிகச்சரியாக தனி நபர்களுக்கான பயிற்சியாளராக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை. மிக விரைவில் இந்த டிஜிட்டல் தேவதை சந்தைக்கு வரும் என்று ஆக் சென்டர் அறிவித்துள்ளது.

    இலக்கு இன்னது என எழுது

    எதிர்கால இலக்கு இன்னது என உறுதி செய்தபின், ஒரு நோட்டுப்புத்தகத்தை எடு, அந்த இலக்கைத் தெளிவாக எழுது, ஒரு முறைக்கு இரு முறை படி, தெளிவாக அமையவில்லை என்றால் திருத்து. பெற்றோரிடம் படித்துக் காட்டு. அவர்கள் ஏதேனும் ஏற்றுக் கொள்ளத்தக்கக் கருத்தைச் சொன்னால் ஏற்றுக் கொள்.
    நீ விமானப் பொறியாளராக எண்ணியிருப்பாய், அப்பா, விமானியாகலாமே என்று சொல்லியிருப்பார். அது சரி எனப்பட்டால் உன் இலக்கை சற்றே மாற்றி எழுது. தினந்தோறும் காலையிலும், இரவில் படுக்கும் முன்பும் அதைப்படி, உற்று நோக்கு, ஆழ்மனதில் உள்வாங்கு. பின்வருமாறு உனக்கு நீயே சொல்லிக்கொள். உளவியலார் இதை Auto Suggestion என்பார்கள். இதற்குச் சக்தி அதிகம் உண்டு.
    நான் நாசா (NASA) விஞ்ஞானியாக வர விரும்புகிறேன். விண்வெளி விஞ்ஞானியாக வர விரும்புகிறேன். நோபல் பரிசு பெறுவது என் இலட்சியம். ஹார்வட் பல்கலைக் கழகத்தில் MBA படிப்பது என் நோக்கம். உலகப்புகழ் வாய்ந்த இதயநோய் மருத்துவராக வருவதே என் ஆசை. ஒரு IFS அலுவலராக வர வேண்டும். உலகத்தில் மிகப்பெரிய வணிகராக வர வேண்டும்.
    இவ்வாறு உள்ளத்தில் உறுதியோடு சொல். நம் திருவள்ளுவர் கூறும் வெற்றிச் சத்திரம் என்ன தெரியுமா?
    எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
    திண்ணிய ராகப் பெறின்.
    – குறள்
    காலத் திட்டத்துடன் கூடிய இலக்கு:
    இலக்கை அடைவதற்கான காலத் திட்டத்தை வகுத்துக் கொள். காலக்கெடுவை விதிக்காத யாரும் எந்த செயலிலும் வெற்றியடைய முடியாது.
    என்னுடைய பல்வேறு பணிக்கிடையிலும், எந்த கால நீட்டிப்பும் பெறாமல் முயன்று முனைவர் பட்டத்தைப் பெற்றேன். என்னுடைய நண்பர்கள் பலர் பதிவு செய்ததோடு சரி, பி.எச்.டி. பட்டம் பெற்றபாடில்லை. நீ ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாய் ஆக வேண்டும் என்றால் – 30 வயதுக்குள் – அதை அடைந்தாக வேண்டும்.
    ”பருவத்தே பயிர் செய்” – என்று கூறுகிறார் ஔவையார். காலத்தின் அருமையை உணர்த்த, தனி அதிகாரம் வகுத்தவர் திருவள்ளுவர். இந்தக் குறளை மிகப்பெரிய எழுத்துகளில் எழுதி, கண்ணில் படும்படி வை.
    ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின்.
    இப்போது காலக்கெடுவோடு கூடிய இலக்கை எழுது.
    – என்னுடைய 35-ஆம் வயதில் நாசா (NASA) விஞ்ஞானியாய் ஆவேன்.
    – 40 வயதில் நோபல் பரிசு பெறுவேன்.
    – ங.ஆ.ஆ.ந. படிப்புக்குப்பின் 20 ஆண்டுகளில் உலகப் புகழ்பெற்றஇதய நோய் மருத்துவராய் வருவேன்.
    – என் 50 வயதில் உலகப் பணக்காரர்களுள் ஒருவராய் வருவேன்.
    பல குறுகிய காலத் திட்டத்தை வகுத்துக் கொண்டு, மேற்காண் நீண்டகாலத் திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும். இத்தகைய காலத்திட்டம் இல்லாவிட்டால், கனவு. வெறுங்கனவாய் ஆகிவிடும். முக்கியமான ஒன்று. தள்ளிப்போடும் பழக்கத்தை விட்டொழி. ஒன்று செய், நன்று செய், அதை இன்றே செய்.
    எடுத்துக்காட்டாக, விண்வெளி விஞ்ஞானியாக வர வேண்டுமா? இப்படி ஒரு காலத்திட்டத்தையும் இலக்குகளையும் வகுத்துக் கொள்.
    மேல்நிலைப் பொதுத்தேர்வில் மிகச் சிறந்த மதிப்பெண் பெறுவது.
    – ஐஐப ல் இடம் பிடிப்பது.
    – நான்கே ஆண்டுகளில் விமானவியல் பொறியியல் பட்டம் பெறுவது.
    – அடுத்த இரண்டு ஆண்டுகளில் விண்வெளி தொழில் நுட்பத்துறையில் ஒரு முதுநிலைப் பட்டம் பெறுவது.
    – அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாசாவில் (NASA) பணியில் அமர்வது.
    – அடுத்த இரண்டு ஆண்டுகளில் விண்கல விமானிகள் குழுவில் இடம் பெறுவது.
    இப்படி படிப்படியாக ஏறித்தான், வெற்றி என்னும் மலை முகட்டைத் தொட வேண்டும்.
    இலக்கில் வெறி கொள்:
    இலக்கில் உனக்கொரு வெறி இருக்குமானால், உன் எண்ணமெல்லாம் அதையே சுற்றி வரும். சொல்லப்போனால் உன் ஆழ்மனதில் அந்த இலக்கு அடைகாக்கப்படும். கட்டிடக் கலைஞராவது உன் இலக்காக இருந்தால், ஓர் அழகிய கட்டிடத்தைப் பார்த்தால் உன் மனம் அதை மறுமுறையும் பார்க்கத் தூண்டும். அதாவது, நீ உன் இலக்கை நோக்கி ஈர்க்கப்படுகிறாய்.
    உன் இலக்கை எண்ணிப் பார்த்தால் மட்டும் போதாது. அதை உணர வேண்டும். நீ மருத்துவராக வர விரும்புகிறாயா? உன்னை மருத்துவராகவே கருதி உன்னுடைய சொந்த மருத்துவமனையின் அறுவை அரங்கில் நுழைவதாகக் கற்பனை செய். ஓர் இக்கட்டான அறுவையை வெற்றிகரமாக செய்து முடித்ததாகக் கற்பனை செய். உயிரைக் காப்பாற்றிய உன்னை, அந்த நோயாளி கையெடுத்துக் கும்பிடுவதை உணர். ஆழ்மனதில் இவ்வாறு எண்ணிப் பார்ப்பதை உளவியலார் Positive visualization என்பர். இவ்வாறு செய்வதால் உன்னுடைய ஒட்டுமொத்த செயல்பாடும் இலக்கை நோக்கி மாற்றியமைக்கப்படும். இலக்கை அறி, உணர், உரக்கச்சொல், உழை, ஒரு நாள் உன் கனவு நனவாகும்.
    இலக்கிலிருந்து விலகாதே:
    இலக்கில் தெளிவு இருந்தால் மட்டுமே அதனை அடைய முடியும். ”தெளிவு பெற்றமதியினாய் வா வா வா” என்பார் பாரதியார். அதோடு இலக்கின் பால் ஒரு வெறி வேண்டும். அர்ப்பணிப்பு வேண்டும். இலக்கில் நம்பிக்கை அற்றவர்கள் ஒரு போதும் வெற்றியடைய முடியாது.
    உலக வரலாற்று ஏடுகளில் பதிவாகியுள்ள ஒரு சம்பவம். அது 1502- ம் ஆண்டு. ஸ்பெயின் நாட்டுத் தளபதி, நான்கைந்து கப்பல்களில் ஏராளமான போர் வீரர்களுடன் கடற்பயணம் மேற்கொள்கிறான். தென் அமெரிக்க கடற்கரையை அடைந்ததும், கப்பல்களை வரிசையாக நிறுத்துகிறான். வீரர்கள் இறங்கி அணிவகுத்து நிற்கின்றனர். ஒரு கப்பலைத் தவிர அனைத்தையும் கொளுத்த ஆணையிடுகிறான். பிறகு வீரர்களைப் பார்த்துச் சொல்கிறான். அருமை வீரர்களே! நான் போரிட துணிந்து விட்டேன். எதிரியைக் கண்டு பயப்படுவோர் இருந்தால், அதோ நிற்கிற கப்பலில் ஏறிக்கொள்ளட்டும். நான்காயிரம் மைல்கள் கடந்து வந்த நாம் வெறுங்கையோடு திரும்பலாமா? இரண்டே வழிகள்தாம் – போரிட்டு வெற்றி வாகைச் சூடுங்கள் அல்லது எதிரிகளால் செத்தொழியுங்கள்.
    இந்த வீர உரையைக் கேட்ட வீரர்கள் உயிரைக் கொடுக்கத் திரண்டெழுந்தார்கள். வெகுண்டு எழுந்தார்கள். பிறகென்ன? வெற்றிக் கனியுடன் நாடு திரும்பினான் படைத் தளபதி கார்ட்டஸ்.
    அந்த கார்டடசைப் போல உன் இலக்கில் வெற்றியடைய மன உறுதியுடன் போராடு.
    ஒரு மன உறுதியுள்ள மனிதர் தான் நினைத்ததை அடைந்தே தீருவார் – எனக்குத் தெரிந்த பலர் ஐ.ஏ.எஸ். தேர்வில் பலமுறை தோற்றும், இறுதியில் வெற்றியடைந்துள்ளார்கள். நான் பயிற்சி அளித்த ஓரு மாணவி இந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்தியாவில் முதலிடம் பெற்றார். அவர் சென்றஆண்டு தேர்வில் முதல் கட்டத்திலேயே தோல்வியடைந்தவர். வெல்வது உறுதி என்றவெறியோடு இருந்ததால், அவர் தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல், வெற்றியிலிருந்து பாடங்கற்றுக் கொண்டார்.
    தோல்வி என்றால் கற்றுக் கொள்வோம்
    வெற்றி என்றால் பெற்றுக் கொள்வோம்.
    என்றசமநிலை உணர்வோடு தொடர்ந்து முயன்றதால் அவர்; வெற்றிவாகைச் சூடினார்.
    உனக்கு மனஉறுதி மட்டும் இருந்தால், எத்தகைய பலம் வாய்ந்த எதிரிகளையும் வெற்றி கொள்ள முடியும்.
    வரலாற்றுப் புத்தகத்தைக் கரைத்துக் குடித்து 100க்கு 95 மதிப்பெண் பெறுவதால் மட்டும் பயனில்லை. அந்த வரலாற்றிலிருந்து நீ என்ன கற்றுக் கொண்டாய்? கற்றதை உன் வாழ்வில் எவ்வாறு பயன்படுத்துகிறாய் என்பதைப் பொறுத்தே உன் வெற்றி அமையும்.
    இதோ ஜப்பானின் வரலாறு. 1945-ல் நடந்த உலகப்போரில் ஜப்பான் தரைமட்டமானது. அணுகுண்டு தாக்குதலில் நாட்டு மக்கள் வீடுகளை இழந்து நடுத்தெருவில் நின்றனர். அமெரிக்க நாடு உணவும் உடையும் கொடுத்ததோடு கடனும் கொடுத்து உதவியது. கடும் உழைப்பின் காரணமாக, பதினைந்தே ஆண்டுகளில் போருக்கு முந்தைய நிலையை எட்டியது ஜப்பான். ஆனாலும், அந்த கால கட்டத்தில் – அதாவது 1960-ல் உலகின் மிகப்பெரிய கடன் பெறும் நாடாக இருந்தது ஜப்பான். உலகின் மிகப்பெரிய கடன் கொடுக்கும் நாடாக இருந்தது அமெரிக்கா.
    தொடர்ந்து ஒரு வெறியோடு பாடுபட்டனர் ஜப்பானியர். 1985ம் ஆண்டு நிலை என்ன தெரியுமா? ஜப்பான் உலகிலேயே மிகப்பெரிய கடன் கொடுக்கும் நாடு, அமெரிக்கா மிகப்பெரிய கடன் வாங்கிய நாடு. இந்த தலைகீழ் மாற்றம் எப்படி நிகழ்ந்தது? ஆதி காலத்திலிருந்தே ஜப்பானியர் உழைப்பதில் கட்டுப்பாடும், களப்பாடும் கொண்டார்கள். அந்நாட்டின் சமுராய் வீரர்கள் அர்ப்பணிக்கும் பண்பாளர்கள். வெல் அல்லது மண்ணை விட்டு செல் என்பதுதான் அவர்களின் தாரக மந்திரம்.
    தன்னுடைய சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல, போரினால் வீழ்ந்தாலும், சுனாமியால் புதைந்தாலும் விழுந்த வேகத்தில் எழுந்து நிற்கிறார்கள் ஜப்பானியர்.
    வீழ்வது தவறல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் தவறு – வரலாறு போதிக்கும் இந்த பாடத்தை முதலில் கற்றுக் கொள், வெற்றி உனதே.
    கனவு தான் உனது வாழ்க்கை, எனவே அதனைப் போற்று, உழைப்பால் அதை நனவாக்கு. உன் இலக்கை எழுத்தில் வடி. நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவைப் பிடித்தார். டென்சிங் இமயத்தின் சிகரம் தொட்டார். லுட்யிஸ் பாஸ்டர் வெறிநாய்கடி நோயை ஒழித்தார். விஸ்வநாதன் ஆனந்த் உலகப் பட்டம் வென்றார். அபிநவ் பிந்த்ரா ஒலிம்பிக் சென்றார், தங்கம் வென்றார். ஏ.ஆர். ரஹ்மான் ஒரே கல்லில் இரு ஆஸ்கர் வென்றார். ஆமாம், நீ எதைச் சாதிக்கப் போகிறாய்? சாதிக்க எண்ணியிருப்பதை ஒரு தாளில் எழுதி சத்திரமாக்கு, சாதித்துக் காட்டி அதைச் சரித்திரமாக்கு. உன்னால் முடியும், உன்னால் மட்டுமே முடியும்.
    மகா அலெக்சாண்டர்
    2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மாவீரன் அலெக்சாண்டர், கிரேக்க நாட்டின் அரசரான தன் தந்தையுடன் பதினெட்டு வயதிலேயே படைநடத்திச் சென்றவன். தன் இளம் வயதில் பயம் என்பதை அணுவளவும் அறியாதவராய் இருந்தான். யாராலும் அடக்க முடியாத ‘புவிபேரஸ்’ என்றஅடங்காக் குதிரையை அடக்கி அதன் மீது சவாரி செய்தவன்.
    அவரது இருபதாவது வயதில், அவர் தந்தை கொல்லப்பட்டார். மனந்தளராத அலெக்சாண்டர் அடுத்த இரண்டே ஆண்டுகளில் தன்னந்தனியாக 3500 வீரர்கள் கொண்ட படையை நடத்திச் சென்று பெர்சியன் சாம்ராஜ்யத்தை வென்றான்.
    அவன் போர் நடத்திப் பெற்றவிழுப்புண்களுக்கு அளவே இல்லை. அதேபோல் அவன் வென்றநாடுகளுக்கும் அளவே இல்லை. ஒரு கட்டத்தில் வடமேற்கு இந்தியாவில் நுழைந்து பஞ்சாப் சிற்றரசர்களை வென்றான். ஆனால் அவனுடைய படைவீரர்களே அவனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதால் நாடு திரும்பினான். நலிவுற்றான் காய்ச்சலால். தனக்குத் தெரிந்த உலக நாடுகள் அனைத்தையும் வென்றமாவீரன், தன் 33-ம் வயதில் மறைந்தான்.
    இன்றும் உலகின் பல்லாயிரக்கணக்கான படைவீரர்கள் அவனை முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். அவனுடைய தாய் ஒலிம்பியா, அவனுடைய மூன்றாம் வயதிலேயே வீரத்தை ஊட்டி வளர்த்தார். உலகப்புகழ் பெற்றதத்துவஞானியும், விஞ்ஞானியுமான அரிஸ்டாட்டில் அவனுடைய ஆசானாக அமைந்தது அவன் செய்த பேறு.
    ஹோமர் எழுதிய இலியாத் என்னும் காப்பியத்தின் கதாநாயகன் அச்சிலீஸ். மகனே, நீ அச்சிலீஸ் பரம்பரையில் வந்தவன். உலகை வெல்வாய்” என்று தன் தாய் கூறிய சொற்களை கனவாக, இலக்காக ஏற்றுப் போற்றி, நனவாக்கிக் காட்டியவன் இந்த அலெக்சாண்டர். ஒருபடி மேலே போன அரிஸ்டாட்டில், சிறுவன் அலெக்சாண்டரை அச்சிலீசின் மறுபிறவி என்று பிரகடனப்படுத்தினார்.
    அன்னை கூற்றும், ஆசான் கூற்றும் அவனை போர்வெறி கொள்ளச் செய்தன. அந்தப் போர் வெறி உன்னுடைய ஆழ்மனதில் உருவாகி விட்டால் அல்லது நீயே அதை உருவாக்கி விட்டால் இறுதி வெற்றி உறுதி.
    அன்னையின் ஆசையைத் தெரிந்து கொள்.
    ஆசிரியரின் அறிவுரையை ஏற்றுக்கொள்.

    விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!!

    விவசாயமே வாழ்வாதாரமாக இருக்கும் நம் நாட்டில் ‘விவசாயம்’ என்றாலே ஓட்டம் பிடிக்கும் இளைஞர் கூட்டம் பெருகி வருகின்ற காலகட்டத்தில், விவசாயத்தில் எல்லோரும் கவனம் செலுத்தும் காலம் வரும் என்கின்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் விவசாயம் சார்ந்த தொழிற் கருவிகளைத் தயாரிக்கும் தொழிற்கூடத்தை பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னமே தொடங்கி அத்துறையில் தனி முத்திரை பதித்து வரும் இளைஞர் இவர்.
    சாத்தியமற்றவற்றைக் கூட முட்டி மோதினால் சாதிக்க முடியும் என்று எனக்குக் கற்றுக்கொடுப்பதே ‘தனிமை’ தான் என்று ‘இனிமை’ நிரம்பப் பேசும் இளம் ஆராய்ச்சியாளர் இவர்.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வு எப்போதாவது வருமா என்றால் இனி இல்லை என்றேகூறிவிடலாம். காரணம், இருக்கும் பிரச்சனைகளிலிருந்து வெளிவருவதற்குள் அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்துகொண்டே இருந்தால் எப்படித் தீர்வு வரும்.
    மாத வருமானத்தை அதற்கு இத்தனை, இதற்கு இத்தனை என்று பிரித்து பிரித்து ஒரு ரூபாய் மிச்சமின்றி செலவு செய்துவிட்டு ‘அப்பாடா’ இந்த மாதம் கடன் இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விடுபவர்கள் எண்ணிக்கையில் குறைவு. எப்படியும் கடன்பட்டே தீரவேண்டும் என்றநிலையில் ஒருவருக்கு இருவர் வேலை பார்த்து அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்பவர்களே எண்ணிக்கையில் அதிகம்.
    இப்படிப்பட்டவர்களை மனதில் வைத்துத்தான் ஆளும் அரசு தங்களது திட்டங்களை, செயல்பாடுகளை அதிகம் முன் வைக்க வேண்டும் என்பதைத் தான் அனைவருமே எதிர்பார்க்கிறார்கள். ஆனால்…
    சுமைதாங்கி கல்லுக்கு ‘சுமை’ சுகம் தான் என்றாலும் அதிகச் சுமை வேண்டாமே… ‘வாக்கு’ தந்தவர்களின் வாழ்விற்கு அதிகச் சுமைகளைத் தராமல் கொஞ்சம் சுகங்களையும் தாருங்கள் உரியவர்களே…
    அன்புடன்

    திருப்பூர் வாசகர்வட்டம்

    நாள் : 11.3.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி
    இடம் : அரிமா சங்க அரங்கம்
    குமரன் ரோடு
    திருப்பூர்
    தலைப்பு : “சிகரங்களை வெல்வோம்”
    சிறப்பு பயிற்சியாளர்: திரு. எஸ் சிவக்குமார், Softskills Trainer, சென்னை, தொலைபேசி : 99621 87272
    தொடர்புக்கு : திரு. மகாதேவன் – 94420 04254
    திரு. வடிவேல் – 99944 27992
    திரு. வெங்கடேஸ்வரன் – 94423 74220

    திருச்சி வாசகர் வட்டம்

    நாள் : 11.3.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
    இடம் : இயற்கை நலவாழ்வு மையம்
    50, 186, பெரியார் நகர் (மாம்பழ சாலை)
    ஆதிபராசக்தி கோவில் வழியாக
    வாட்டர் டேங் அருகில்
    திருச்சி.
    தலைப்பு : “ஆரோக்கிய வாழ்விற்கான உணவுத்திட்டம்’
    சிறப்பு பயிற்சியாளர் : டாக்டர் சமந்தா செம்மலர், ஈவந
    99423 12038
    தொடர்புக்கு :
    திரு. கே. நாகராஜன் 94437 14933
    திரு. தங்கவேல் மாரிமுத்து 93603 27848
    திரு. சுரேந்திரன் 98940 93595

    மதுரை வாசகர் வட்டம்

    நாள் : 18.3.2012; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி
    இடம் : தன்னம்பிக்கை பயிற்சி மையம்,
    42 / 20, சிபி பவுண்டேசன்,
    மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர்
    தபால்தந்தி நகர் ரோடு,
    பிரம்மகுமாரிகள் மடம் எதிர்புறம்
    மதுரை -17.
    தலைப்பு : “எண்ணங்கள் மேம்பட”
    சிறப்புப் பயிற்சியாளர் :
    திரு. பீட்டர் அருள்ராயன் M.A., M.Phil, B.Ed.
    ஆசிரியர், தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி, மதுரை
    தொடர்புக்கு
    தலைவர் – திரு. எ. எஸ். இராஜராஜன்: 9442267647
    செயலர் – கவிஞர். இரா. இரவி: 98421 93103
    ஒருங்கிணைப்பாளர் – திரு. திருச்சி சந்தர்: 9443743524