– 2012 – February | தன்னம்பிக்கை

Home » 2012 » February

 
 • Categories


 • Archives


  Follow us on

  நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள் – 7

  குழந்தை மிகவும் செழிப்பான முறையில் வளரவேண்டும் என்று, இத்துறை சார்ந்த அறிவியலாளர்கள், பலவாறான ஆராய்ச்சிகளைச் செய்து, ‘பச்சிளங் குழந்தைகளுக்குப் பொருத்தமான உணவு’ எனும் பொருள்படத்தக்க, “Infant Formula” என்று ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.
  அதன் அடிப்படையில் தயாரிக்கப்படுவதுதான் குழந்தைகளுக்கான இந்தச் செயற்கை முறையிலான மாவுப்பால்.
  “சுண்ணாம்புச் சத்து மிகுதியாக இருந்தால், குழந்தை மிக நன்றாக வளர்ச்சி அடையும்” என்ற நம்பிக்கையில், இவர்கள், அந்தப்பாலில், அளவுக்கு மிஞ்சி அந்தக் கேல்சியம் எனும் சுண்ணாம்புச் சத்தைச் சேர்க்கிறார்கள்.
  உங்கள் குழந்தைக்குக் கொடுப்பதற்காகவோ, அல்லது, நீங்கள் உட்கொள்ளுவதற்காகவோ மாவுப் பால் வாங்கி வீட்டில் வைத்திருப்பீர்களானால், அதில் எழுதப்பட்டுள்ள விவரங்களை இப்போதே படித்துப் பாருங்கள். அதில் உள்ள சுண்ணாம்புச் சத்து எவ்வளவு என்று அறியும்போது, பெரும்பாலும், உங்களுக்கு மனப் பதைப்பு ஏற்படும்.
  அதிக அளவிலான சுண்ணாம்புச் சத்தைப் பாலில் சேர்ப்பதற்கு அவர்கள் சொல்லும் மற்றொரு காரணம், “பாலில் இருக்கும் அவ்வளவு சுண்ணாம்பும் உடம்பினுள் உறிஞ்சிக் கொள்ளப்படுவதில்லை. எனவே, அதற்கு ஈடுகட்டுவதற்காகவாவது கூடுதலாகச் சுண்ணாம்புச் சத்தைச் சேர்க்கத்தான் வேண்டும்” என்பதே.
  யாவருடைய குடலிலும் இயற்கையாகவே அமிலம் சுரக்கின்றது. அந்த அமிலமானது, நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சுண்ணாம்பை உறிஞ்சிக் கொள்ளப் பெரிதும் உதவுகிறது என்ற உண்மையை நாம் மறந்துவிடலாகாது.
  இத்தருணத்தில், மற்றொரு தகவலை உங்களுக்கு உணர்த்தவிரும்புகிறேன். அது என்னவெனில்:
  “புட்டிப் பால்” எனும் மாவுப்பாலில் ஒவ்வொரு சத்தும் எவ்வளவு இருக்கவேண்டும் என்று ஆராய்ச்சி செய்து முடிவெடுப்போர் பெரும்பாலும் மேலைநாட்டாராகவே இருந்துள்ளனர்.
  பெருத்த உடலை உடைய மேலைநாட்டோர், கடுங்குளிர் உட்படப் பலதரப்பட்ட தட்பவெப்ப நிலையில் வளரும், பெருத்த அளவிலான தங்களுடைய குழந்தைகளுக்குத் தேவைப்படக்கூடிய அளவுகளை அடிப்படையாக வைத்தே இந்த மாவுப்பாலைத் தயாரிக்கிறார்கள்.

  சூடான சூழ்நிலையில் வளரும், சற்று சிறிய உருவமுள்ள நமது குழந்தைகளுக்கு அந்த அளவுகள் எப்படிச் சரிப்பட்டு வரும்?
  அவர்கள் பரிந்துரைக்கும் அளவுப்படி, பெரும்பாலான தாய்கள், ஒன்றுக்கு ஒன்று என்ற அளவில் பால் மாவினையும் நீரையும் கலந்து கொடுப்பார்களானால், குழந்தைக்கு அது ஒத்துக்கொள்ளாமல் போகக்கூடிய வாய்ப்பிருக்கிறது.
  இதுபோன்ற காரணங்களாலும் குழந்தைக்கு நீர்ப்பதமாகவும், குழகுழப்பாகவுமுள்ளவாறு மலம் வெளியேறும் வாய்ப்புமிருக்கிறது. இதனால், குழந்தையின் உடல் எடை மிக அதிகமாகக் கூடிவிடவும் முடியும்.
  எனவே, மாவுப்பாலூட்டும் தாய்கள், அல்லது, மாவுப்பாலைக் குடித்துவரும் ஆண்களும் பெண்களும் சிந்தித்துச் செயல்படவேண்டியது மிகவும் முக்கியம் எனக்கொள்ளுக.
  இயற்கையாகவே, குழந்தைகளுக்குத் தேவைப்படும் அளவிற்குச் சுண்ணாம்புச் சத்து உடம்பினுள் உறிஞ்சப் படாது போனாலும், அல்லது மிகமிக அதிகமாக – நாள் ஒன்றுக்கு 15 தடவைகளைப்போலச் சிறுநீர் வெளியேறினாலும், உடம்பினுள் உள்ள சுண்ணாம்புச் சத்து வெளியேறி, அதன் காரணமாகக் குழந்தை மிகவும் மெலிந்துபோய்விடும்.
  இத்தகைய குழந்தை, தனது குழந்தைப் பருவத்திலேயே, “எலும்புந் தோலுமாய் உள்ளோர்” என்ற பிரிவைச் சார்ந்தது ஆகிவிடும்.
  சென்ற தன்னம்பிக்கை இதழில், இந்த ‘மிக-மிக மெலிந்தவர்களைப் பற்றி மிக விரிவாக எழுதியிருந்தேன். அவற்றில் பெரும்பகுதியானவை இந்தமாதிரியான குழந்தைகளுக்கும் பொருந்துந்தான்.
  எலும்புந்தோலுமாய் உள்ளோர் என்ற பிரிவிற்கு அடுத்தபடியாக உள்ளோர், “ஒல்லியாய் உள்ளோர்”.
  அதற்கும் அடுத்த நிலையில் உள்ளோர், “செம்மையானோர்.
  அதன் பின்னர் வருவோர்தாம் தடிப்பு வரிசையினர். இத்தகையோருள் முதல் நிலையினர், இரண்டாம் நிலையினர், மூன்றாம் நிலையினர் என்றவாறு உள்ளோர்களையெல்லாம்விட மிகவும் பெருத்துத் தடித்த உடலை உடையோர்தாம் நான்காம் வகையினர்.
  நமது இவ்வெழுத்து வரிசையில், அடுத்து வரும் இதழில் நான் எழுதவிருப்பது, இந்த நான்காம் வகையினரைப்பற்றியே.
  எதற்காக இவ்வாறு திடீரெனத் தாவப் போகிறேன் என்ற விளக்கத்தையும், ஏனையவற்றையும்பற்றி அடுத்த திங்களின் தன்னம்பிக்கை இதழில் காணலாம்.

  Subscribe for new post

  வேளாண்மை அன்றும்… இன்றும்… இனியும்…

  இந்திய விவசாயிகளின்
  சாதனைகளை இந்திய அரசு
  இன்னும் அங்கீகரிக்க
  முயலவில்லை.
  அதிகமான உற்பத்திப்
  பெருக்கத்திற்கும்,
  விவசாயிகளின்
  பொருளாதார சமநிலைக்கும்
  ஏற்ற சூழ்நிலைகளை
  உருவாக்க வேண்டிய
  கட்டாயத்தில் இருக்கிறது.

  இந்திய விவசாயிகள் தங்களிடம் உள்ள 2.4 சதவீதம் உலக விளைநிலத்தில் 4.5 சதவீதம் நீரைக் கொண்டு உலகத்தின் 17 சதவீதம் மக்கள் தொகைக்கு உணவு அளிக்கிறார்கள். இதிலும் 60 சதவீதம் விவசாயம் வானம் பார்த்த பூமியாக இருந்தும் 45 சதவீத நிலங்கள் மட்டுமே ஒரு பயிருக்கு மேல் விளைவிக்க முடியும் என்ற நிலையிலும் 11 சதவீதம் கால்நடைகளுக்கு தீவணத்தையும் கொடுத்து வருகிறார்கள்.
  இந்த இந்திய விவசாயிகளின் சாதனைகளை இந்திய அரசு இன்னும் அங்கீகரிக்க முயலவில்லை. அதிகமான உற்பத்திப் பெருக்கத்திற்கும், விவசாயிகளின் பொருளாதார சமநிலைக்கும் ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதற்குப் பல காரணங்களை என்னால் எடுத்துக்கூற முடியும். அதுவும் துல்லியமான பொருளாதாரக் காரணிகளையும் கூற விரும்புகிறேன்.
  இந்திய வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி 15,000 கோடி. இதுவே (MGNREGA) செலவிடும் நிதி 40,000 கோடி மற்றும் உணவுத் தள்ளுபடிச் செலவு 60,000 கோடி. இது மேலும் உயர்ந்து 1,00,000 கோடியைத் தொடவுள்ளது. இந்த உயர்வு புதிதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைவருக்கும் உணவு உரிமை மசோதா (Right to Tool Bill 2011) மூலம் இந்திய அரசு ஒரு மில்லியன் கோடி வரை செலவு செய்யத் தயாராக உள்ளது.
  இந்திய வேளாண்மைத் துறைக்கு அரசு செலவிடும் நிதி குறைவாக இருப்பது ஒருபுறம் இருக்க, இந்திய விவசாயத்தைச் சார்ந்து இன்றும் 55 சதவீதம் மக்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இந்தத் துறை மூலம் கொடுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வெறும் 14 சதவீதம் மட்டுமே. இதுவே 1.5 சதவீதம் வேலை செய்து கொண்டு இருக்கின்ற வாகனத்துறை மூலம் இதே 15 சதவீதம் உணவு உற்பத்தியை இன்னும் சில ஆண்டுகளில் கொடுக்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.
  ஏன் இந்த நிலைமை விவசாயத் துறைக்கும், விவசாயம் சார்ந்தத் தொழில் துறைக்கும் என்று நீங்கள் கேட்கலாம்? இது அனைத்திற்கும் காரணங்கள் பல உள்ளன. இதுவரை பல ஐந்தாண்டுத் திட்டங்களில் முதல் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களைத் தவிர, விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய திட்டங்கள் எதுவும் தீட்டப்படவில்லை. விவசாயத்தை ஒரு தொழிலாகச் செய்ய இயலாமல் இளைஞர்கள் நகரத்தை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் இந்திய விவசாயத்தில் இளைஞர்களின் பங்கு குறைய ஆரம்பித்துவிட்டது. 40 வயதைத் தொட்டுவிட்ட இந்திய விவசாயிகள் இனிமேல் விவசாயம் செய்வது என்பது இனிவரும் காலங்களில் நடக்காத ஒன்றாகவே இருக்கும். எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், தனக்கு அடுத்த தலைமுறை தொடர்ந்து நடத்த முயற்சி செய்வார்கள். உதாரணமாக, டாக்டர்கள், என்ஜினியர்கள், வழக்கறிஞர்கள் என தன்னுடைய பெற்றோர்கள் செய்த தொழிலைத் தொடர்ந்து செய்யும் நிலையில், விவசாயத்தில் மட்டும் தான் விவசாயத்தை நம்பி உள்ள குடும்பங்கள் அடுத்த தலைமுறை வேறு தொழிலை நோக்கிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த காரணங்கள் தான் விவசாயத்தை ஒரு தொழிலாகச் செய்ய இயலாமைக்கான காட்சியாகிறது.
  இந்தச் சூழ்நிலையில் விவசாயத் தொழிலை ஊக்குவிக்க வேண்டுமானால் அந்தத் துறையில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட வேண்டும். இந்திய அரசு உர மானியமாக 60,000 கோடி செலவு செய்கிறது என்பது உண்மைதான். இது உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைத்திருக்கத்தான் உதவி செய்கிறது.
  உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். ஏனென்றால், இதன் மூலம் விலையேற்றம் சார்ந்த சமுதாயப் பிரச்சனைகளைச் சமாளிக்க முடியும். அதே நேரத்தில் விவசாயிகளுக்கு, தங்கள் பொருள்களுக்குக் கட்டுபடியான விலையை கொடுப்பதும் முக்கியக் கடமையாகும். அப்படி செய்யாத சமயத்தில் விவசாயிகளுக்கு எப்படி இலாபகரமான தொழிலாக விவசாயம் அமையும்?
  அந்த வகையில், இந்திய விவசாயிகள் உலகத்தின் உணவு உற்பத்தியைக் குறைத்துவிட்டார்கள். இந்தியா உலக உணவுச் சந்தையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இந்தியா தான் உலகத்தின் இரண்டாவது பெரிய பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியாளர். மாம்பழம், பப்பாளி, மாதுளை போன்ற பழ உற்பத்தியில் இந்தியர்கள் தான் முதலிடம் வகிக்கிறார்கள். கோதுமை, நெல், மக்காச்சோளம் போன்ற தானியங்கள் உற்பத்தியிலும் இந்தியா தனக்கென ஓர் முக்கிய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது. அதிக அளவில் உற்பத்தி செய்தாலும் நிறை பயிர்களின் உற்பத்தித் திறன் இன்றும் குறைவாகவே உள்ளது. அதாவது, உயர் விளைச்சல் தரும் ரகங்களின் உற்பத்தித்திறன் மற்றும் விவசாயிகளின் பயிர் உண்மை விளைச்சல் இரண்டிற்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது இன்றுவரை.
  இந்த உற்பத்தித் திறன் இடைவெளி குறைய வேண்டுமானால் தரமான விதை, தரமான தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்குச் சென்றடைய வேண்டும். அரசாங்கத்தின் பார்வை இந்த வேளாண்மைத் துறையின் மீது அதிகம் பட வேண்டும். அதிக முதலீடுகள் மூலம் வேளாண்மைத் துறையை ஊக்குவிக்க வேண்டும். மேலும் புதிய நன்மை பயக்கும் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். விவசாயத்தில் இடைத்தரகர்களின் பங்கு குறைக்கப்பட வேண்டும். அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகளைச் சரிசெய்ய வேண்டும். புதிய விவசாய உபகரணங்கள், விவசாயப் பொருட்களைப் பதப்படுத்துதல் என மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மட்டுமே வேளாண்மையை இலாபகரமான தொழிலாக மாற்ற முடியும். அப்போதுதான் இந்தியா உலகத்தின் உணவுத் தேவையை சமாளிக்க முடியும்.

  Subscribe for new post

  ஒரு நேரத்தில் ஒரே வேலை

  நாம் செய்யும் எந்தச் செயலும் வெற்றியுடன் அமைவதற்கு ஒழுங்குமுறை கட்டாயம் இருக்க வேண்டும். ஒழுங்கு என்பது நம்மைச் சரியான பாதையில் நடத்திச் செல்லும்.
  ஒழுங்கான முறையில் செயலாற்றியவர்கள் வெற்றியின் வரலாற்றில் இடம்பிடித்து இருக்கிறார்கள். அவர்களுடைய இடத்தில் நாமும் உட்கார வேண்டும் அல்லவா!
  அப்படியானால் நாம் நிச்சயம் ஒழுங்குமுறையைக் கடைபிடித்தே ஆகவேண்டும். என்னுடைய அறையில் அதாவது மூளையில் பல அலுவல்கள் ஒழுங்காகவும், வரிசையாகவும் தனித்தனியே அமைக்கப்பட்டு உள்ளன.
  ஒரு அலுவலக வேலையை மறந்து மற்றொரு அலுவலைப் பற்றி செயல்பட வேண்டி இருந்தால் முதல் அறையை மூடிவிடுவேன். இப்பொழுது தேவையான அறையைத் திறந்து கொள்வேன்.
  இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதில்லை. வீணான சிந்தனைக்கு என மூளையில் இடமே இல்லை. உறங்கச் செல்லும்போது மூளையில் உள்ள எல்லா அறைகளையும் மூடிவிடுவேன்.
  உடனே அயர்ந்து தூங்கிவிடுவேன். இப்படி கூறியவர் யார் தெரியுமா?
  அவர்தான் பிரான்ஸ் நாட்டின் அதிபதி நெப்போலியன்!
  ஆனால், நாம் எப்படி செயல்படுகிறோம்? சாப்பிடும்போது உணவை நன்கு சுவைத்துச் சாப்பிடுவதற்குப் பதிலாக நம்முடைய வரவு செலவு கணக்கைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
  அலுவலக வேலையைச் செய்யும்பொழுது வீட்டுவிவகாரங்களைப் பற்றி நினைத்து மூளையைக் குழப்பிக் கொள்கிறோம்.
  ஒரு சமயத்தில் ஒரே செயலைச் செய்து முடிப்பதுதான் பல செயல்களைச் செய்வதற்கான குறுக்கு வழியாகும். ஒழுங்கு என்பது ஒரு பெட்டியில் சாமான்களை அடுக்கி வைப்பதுதான்.
  சரியாகச் சாமான்களை அடுக்கி வைப்பது, தாறுமாறாகச் சாமான்களை அடுக்கிவைப்பதைவிட அரைமடங்கு பொருட்களை அதே பெட்டியில் வைக்கமுடியும்.
  ஒரே நேரத்தில் ஒரு வேலை என்பது இயற்கையின் சட்டம். நான் சில முக்கிய காரியங்களை செய்ய வேண்டி இருந்தால், அதனை முடிக்கும் வரையில் நான் வேறு ஒன்றையும் பற்றி எண்ணமாட்டேன் என்கிறார் இங்கிலாந்து நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதி டிவிட்.
  இப்படி ஒரு நேரத்தில் ஒரு வேலை என்ற ஒழுங்குச் சட்டத்தைத் தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்டு யார் மனம் ஒன்றி வேலையைச் செய்கிறார்களோ…
  அவர்களே வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள் என்பது உறுதி! அவர்கள் அவசரப்படவும், ஆத்திரப்படவும் மாட்டார்கள். கடிகாரம் போன்று அவர்களுடைய வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கும்.
  எடுத்துக்காட்டாக, காந்திஜியின் வாழ்க்கையைக் கவனித்தால், அவர் அரசியல்வாதியாக மட்டும் இல்லாமல் ஆன்மீக ஞானியாகவும் விளங்கினார். இரண்டும் ஒருவரிடத்தில் இருப்பது எளிதானச் செயல் அல்ல! அவருக்கு அளிக்கப்பட்ட நேரம் போலவே, நமக்கும் ஒரு நாளுக்கு இருபத்து நான்கு மணிநேரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
  ஆனால், அவர் அதனை எவ்வாறு பல காரியங்களுக்கு என்று வகுத்துக் கொண்டார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
  பிறரால் ஏற்பட்ட தாங்க முடியாத அரசியல் சுமைகளைத் தாம் ஒருவரே தனித்துச் சுமக்கவேண்டிய நிலை ஏற்பட்ட போதிலும் அவர் பிரார்த்தனைச் செய்வதை நிறுத்தவில்லை.
  உலாவச் செல்வதை நிறுத்தவில்லை. பத்திரிக்கைகளுக்குக் கட்டுரை எழுதினார். அறிக்கைகள் வெளியிட்டார். நண்பர்களையும், நோயாளிகளையும் சந்தித்தார். அரசியல்வாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நூல் நூற்றார்.
  அதற்கு என்று ஒதுக்கப்பட்ட நேரத்தில் அதை மட்டும் செய்யும்போது குறைவு ஏற்படாது, வாழ்வில் குழப்பமும் தோன்றாது. நேரம் போதவில்லையே என்ற முணுமுணுப்பும் வராது.
  மலை போன்ற வேலைகளுக்கு இடையிலும் மற்ற மொழியை கற்றுக்கொள்வதற்காக நேரத்தை ஒதுக்கி காந்திஜி செயல்பட்டது ஆச்சரியம் அல்லவா!
  ஜார்ஜ்மில்லர் கூறுகிறார், “உன்னுடைய எண்ணங்களை எல்லாம் அழகாக ஒழுங்குபடுத்து. சுமையானது அங்கும் இங்கும் தொங்கிக் கொண்டிருந்தால் அதிகமான சுமைகளைச் சுமக்க முடியாது.
  ஆனால் அதை ஒழுங்காகக் கட்டிவைத்தால் அதிகமான சுமையை தூக்கிக்கொண்டு செல்ல முடியும்.
  ஒவ்வொரு நாள் காலையிலும், அந்த மணி நேரத்திற்குச் செய்ய வேண்டிய காரியங்களைத் திட்டமிட்டு செயலாற்றினால் வாழ்வில் வெற்றியைப் பெற முடியும்.
  நம்முடைய நேரத்தை ஒழுங்காக வகுத்துக்கொண்டால் ஒளிக்கதிர் போல பிரகாசமாக இருக்கும்.
  திட்டமிட்டு ஒழுங்குடன் செயலாற்றினால் குறுகிய கால எல்லைக்குள் பெரிய செயல்களை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க முடியும்.
  ஒரு வேலையைச் செய்யும்பொழுது அதிலேயே மனம் ஒன்றி செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுது வேறு வேலையைப் பற்றி சிறிதும் எண்ணிப்பார்க்கக் கூடாது.
  கால்பந்து விளையாட்டில் கேப்டன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தை அளித்து அவரவர்களுக்குரிய வேலையை வரையறுத்து வைப்பார்.
  இப்படி இல்லாவிட்டாலும் பந்து வந்ததும் எல்லோரும் தங்களுடைய இடத்தைவிட்டுச் சென்று பந்தை நோக்கி ஓடி எதிர்அணிக்கு எளிதில் வெற்றியைத் தேடித் தந்துவிட முடியும் அல்லவா!
  நம்முடைய வேலை எதுவாக இருந்தாலும், அதை உயர்ந்த நிலைக்கு உட்படுத்த விரும்பினால் வரையறுக்கப்பட்ட ஒழுங்கான திட்டத்துடன் செயலாற்ற வேண்டும்.
  ஒழுங்கின்றி திட்டமின்றி செயலாற்றினால் அவசரம் ஏற்படும். குழப்பத்திலும் வேகத்திலும் நம்முடைய நேரம் வீணாகக் கழிந்துவிடும்.
  அதன்பயன் நம்முடைய மேஜை, அலமாரி எல்லாம் குவியலாக இருக்கும். அதை ஒழுங்கு செய்யக்கூட நேரம் கிடைப்பது அரிதாகிவிடும்.
  நேரம் அமைந்தாலும் அவற்றை எங்கு வைப்பது என்று கூடத் தெரியாமல் போய்விடும். அதை ஓரிடத்தில் வைத்தால் அப்புறம் அதனை எங்கு வைத்தோம் என்பது மறந்துவிடும்.
  பின்பு அது தேவைப்படும்பொழுது கண்டபடி கலைத்துவிட்டு குழப்பத்தில் ஆழ்ந்துவிட நேரிடும். இறுதியில் காட்டைக் கலைத்து வேட்டையாடும் கதைபோல ஆகிவிடும்.
  ஒழுங்குடன் திட்டமிட்டு செயலாற்றினால் இப்படிப்பட்ட ஒருநிலை ஏற்படாது. அவசரமும் தோன்றாது.
  எப்பொழுதும் நிதானமாகவும் அமைதியாகவும் இருக்கும் சூழ்நிலையை உண்டாக்கும். அமைதியாக வேலை நடந்துகொண்டு இருக்கும்.
  ஒழுங்கற்று செய்வதைவிட ஒழுங்குடன் செய்யும் வேலை நூறு சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்பது உண்மை.
  இன்று கணிதக்கலையில் அற்புத சாதனைகள் எல்லாம் அந்தப் பத்து எண்ணிக்கைகளை ஒரு ஒழுங்குடன் பயன்படுத்துவதில் தான் இருக்கின்றன.
  நம்முடைய உடலின் உறுப்புகளும், ஓர் ஒழுங்குக்குக் கட்டுப்பட்டுதான் வேலைசெய்கின்றன. இதனை எல்லாம் அறிந்துகொண்ட நாம் இனிமேலாவது ஒழுங்கைக் கடைபிடித்து வெற்றி பெற முடியும் அல்லவா?

  Subscribe for new post

  நிறுவனர் நினைவுகள்

  “நதிகளை இணைக்கச் சொன்ன
  நல்லறிவாளர் டாக்டர் இல.செ.க.’

  “தண்ணீர் தரமாட்டோம். தடுப்பணை கட்டாமல் விடமாட்டோம். உச்ச நீதிமன்றம் சொல்வதையும் கேட்க மாட்டோம். உயர் மட்ட நிபுணர் குழுவின் கருத்தையும் ஏற்க மாட்டோம்” என்று முல்லைப் பெரியாற்றங்கரையிலே நின்றுகொண்டு, நமது முகத்தில் முள்ளைத் தூக்கி வீசுவதைப்போல், சுடுசொல்லை வீசுகின்றது நமது சொந்தச் சகோதர மாநிலம்.
  “நாமெல்லாம் இந்தியாவுக்குள் தான் இருக்கிறோமா? அல்லது வேறு ஏதாவது வெளிநாட்டவரா?” என்ற ஐயம் எழுகிறது. சுயநலம் ஓங்கிவிட்டதைக் காணும்போது, “சொந்த சகோதரர் துன்பத்திற் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே” என்ற பாரதியின் பாடல் வரிகள் தான் ரீங்காரமிடுகின்றன.
  தமது சொத்துக்களை விற்று, சொந்தப் பணத்தைச் செலவு செய்து, நமக்காக அணையைக் கட்டிக்கொடுத்த (திரு. பென்னி குயிக் என்ற) அந்த ஆங்கிலேயப் பெருந்தகை எங்கே? அவர் கட்டித் தந்த அணையிலிருக்கும் நீரை, பக்கத்து மாநிலத்திற்குத் தர மறுக்கும் நம்மவர் எங்கே?
  இதைக் காணும்போது, சுமார் 30 வருடங்களுக்கு முன்னால், அய்யா இல.செ. கந்தசாமி அவர்கள் நதி நீர் பகிர்வு பற்றி சொன்ன கருத்துக்கள் நினைவில் நிழலாடுகின்றன.
  1980க்கு முன்னும் பின்னுமான ஆண்டுகளில், இதேபோல ஒரு தண்ணீர்ச்சண்டை, பக்கத்து மாநிலத்தோடு வந்தது. “காவேரி நீரைத் தமிழ்நாட்டுக்குத் தர முடியாது” என்று சொல்லிவிட்டார்கள். சொன்னதோடு மட்டுமல்லாமல், அந்த மாநிலத்தில் குடியேறி, வெறும் நிலத்தையெல்லாம், விளை நிலமாக்கி, வேளாண்மை செய்து கொண்டிருந்த தமிழர்களையெல்லாம், தள்ளியும் விடத் தொடங்கினார்கள். கலகங்கள், காட்டு வெறித்தாக்குதல்கள், பேருந்தைக் கொளுத்துதல், வாகனங்களில் வரும் காய்கறிகளை நாசம் செய்தல் போன்ற பல்வேறு அக்கிரமங்கள் நடந்தன. உயிர் தப்பினால் போதும் என்று ஓடிவந்தவர்கள் பலப் பலர். உடமைகளையெல்லாம் உதறிவிட்டு, சொந்த ஊரை நாடி வந்தவர்கள் பலப் பலர். காவிரியாற்றில், நமது கண்ணீர் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஓடியது.
  அதுசமயம், தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் வெகுண்டெழுந்தனர். நமக்குரிய தண்ணீரைத் தரவேண்டும் என்று குரல் எழுப்பினர். அப்போது கோயமுத்தூரில் நடந்த இளைஞர் இலக்கிய மன்றக் கூட்டமொன்றில் அய்யா அவர்கள் பங்கேற்கப் போயிருந்தார். அவரோடு, நாங்கள் ஐந்தாறு மாணவர்களும் போயிருந்தோம். அய்யா பேசத் தொடங்கும்போதே, “இங்கே எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பைப் பற்றி நான் பேசப்போவதில்லை. மாறாக, நம்மைத் தகித்து எரித்துக் கொண்டிருக்கும் நெருப்பைப் பற்றிப் பேசப் போகிறேன். இந்த நேரத்தில் மக்கள் மத்தியில், இதைப்பற்றி நான் பேசவில்லையென்றால், எனது கடமையைச் செய்யாத குற்றத்திற்கு ஆளாகிவிடுவேன்” என்று ஆரம்பித்தார். கூட்டத்தினர் குழப்பத்தோடு நோக்கினர்.
  “அந்த நெருப்பு, ஒரு நீரால் வந்த நெருப்பு. காவேரி நீரால் எழுந்த நெருப்பு” என்று புதிரை விடுவித்தார் அய்யா. தொடர்ந்து அவர் ஆற்றிய உரையை நாங்கள் குறிப்பெடுத்துக் கொண்டோம். அதில் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன்.
  “நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று ஐம்பூதங்கள் உள்ளன. அவற்றில் முதலாவதாக, நிலத்தைப் பாகம் பிரித்துக் கொண்டான் மனிதன். இரண்டாவதாக, நீரையும் பாகம் போட முயற்சிக்கிறான். சுயநலம் மேலோங்கியிருப்பதையே இது காட்டுகிறது. இனி, படிப்படியாக நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்தையும் பங்கு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
  நமது நாட்டை மொழிவாரி மாநிலங்களாகப் பிரித்ததால், வந்த துன்பமே இது. கிழக்கும் மேற்குமாக ஓடிக் கடலில் கடக்கும் நதிவாரி மாநிலங்களாகப் பிரித்திருந்தால், குறைந்தபட்சம், “தண்ணீர்ச் சண்டை”யாவது வந்திருக்காது. அதனால் விவசாயம் பாதித்திருக்காது. உணவு உற்பத்தி குறைந்திருக்காது. எல்லோரும் நிம்மதியாகவாவது இருந்திருப்பார்கள்.
  நமது நாட்டிலே எல்லா ஆறுகளுமே, ஆண்டு முழுவதுமே வற்றாமல் ஓடுகின்ற ஜீவநதிகள் அல்ல. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா போன்ற சில நதிகளில் மட்டுமே, ஆண்டு முழுவதும் நீர் உற்பத்தி உள்ளது. மற்ற ஆறுகளிலே, பருவ மழையைப் பொறுத்தே, நீரின் வரவு கூடவும் குறையவும் செய்கிறது. இதனால் இந்த ஆற்றில் வரும் நீரின் அளவு, எங்கே நமது மாநிலத்திற்கே போதாமல் போய் விடுமோ என்ற அச்சம் அந்தந்த மாநில அரசுகளுக்கு ஏற்படுகிறது. அதனால், இருக்கின்ற நீரைத் தமக்காக மட்டுமே தக்க வைத்துக் கொள்ள அந்த அரசுகள் முடிவெடுக்கின்றன. அதனால், தமது மாநில மக்களையும் திருப்திப்படுத்த முடியும். அடுத்த தேர்தலிலும் வாக்கு வாங்க முடியும் என்று கணக்குப் போடுகின்றன. இதன் விளைவு தான், தண்ணீர் தர மறுப்பதும், புதிய தடுப்பணைகள் அமைப்பதும் போன்றவை.
  இதற்கு இரண்டு தீர்வுகள் இருக்கின்றன. ஒன்று தற்காலிகத் தீர்வு. அது என்னவென்றால், ஒரு ஆண்டில் அந்த ஆற்றிலே உற்பத்தியாகும் மொத்த நீரின் அளவென்ன? அதனால் பயன்பெறும் மாநிலங்களுக்குத் தேவையான நீரின் அளவென்ன? அந்தத் தேவை, எந்த மாதங்களில், எத்தனை அளவு தேவை? என்றெல்லாம் கணக்கிட வேண்டும். அந்த ஆற்றில் உற்பத்தியாகும் நீரை, அந்தந்த மாநிலங்களின் நீர்த் தேவைக்கு ஏற்ப, அந்த விகிதத்தில் பிரித்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு அதிகம் கிடைக்கலாம். சிலருக்குக் குறைவாகக் கிடைக்கலாம். அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், கணக்குப் பாடத்திலே வருமே; ஒரு கடையில் கிடைத்த லாபத்தை மூன்று பங்குதாரர்கள் தமது முதலீட்டுக்குத் தகுந்தபடி 1 : 2 : 3 என்ற விகிதத்தில் பிரித்துக் கொள்வதைப் போல… தேவைக்கு ஏற்ப நதி நீரைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.
  இன்னொன்று நிரந்தரத் தீர்வு. அது என்னவென்றால், அனைத்து நதிகளையும் இணைத்துவிடுவது. கங்கை போன்றவற்றாத ஜீவநதிகளிலே உற்பத்தியாகி, பயன்படுத்திய பின்னரும், உபரியாகி, வீணாகக் கடலில் சென்று சேரும் நீரை நிறுத்தி, திசை திருப்பி, மற்ற ஆறுகளுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். இதனால், தண்ணீரும் வீணாகாது. வீணாகும் நீரை மற்ற மாநிலங்கள் பயன்படுத்தியும் கொள்ளலாம். இதைத்தான், சமூகநல ஆர்வலர்கள் கங்கை காவிரி இணைப்பு என்று சொல்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், பெருஞ்செல்வந்தர்களின் கல்யாண வீடுகளிலே மிச்சமாகும் உணவை, எடுத்துக்கொண்டு போய் ஏழைகளின் வீடுகளுக்கும், அனாதை இல்லங்களுக்கும் தருமம் தருவதைப் போல… உணவும் வீணாகாது. உண்பவர்களின் பசியும் ஆறும்”.
  … என்று கட்டங்கட்டமாக அய்யா அவர்கள் ஆற்றிய உரை அனைவரையும் கவர்ந்தது. கைதட்டியும், தலையசைத்தும், கைகொடுத்தும் எல்லோரும் பாராட்டினர். அதுமட்டுமல்ல, இலக்கியங்களிலே உதாரணம் காட்டினார்.
  “நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
  உடம்பும் உயிரும் படைத்தி சினோரே”
  என்று புறநானூறு புகழ்கிறது. நீரையும் நிலத்தையும் உருவாக்கிக் கொடுப்பது மன்னர்கள் கடமை. அத்தகையவனே உடம்பையும் உயிரையும் படைத்தவனாகவும் கருதப்பட்டான். ஆகவே, அக்காலத்திலேயே அரசு தான் நீர்நிலைகளை அமைக்க வேண்டும் என்பதும், நீர்நிலைகள் தனிமனித உடமையல்ல என்பதும், நாட்டின் பொதுவுடைமையாகும் என்பதும் தெளிவாகிறது. ஆகவே, அனைத்து நதிகளையும், அரசு நாட்டுடைமையாக்க வேண்டும். நமது மைய அரசு, நாட்டு நலனைக் கருத்தில் கொண்டு, எல்லா நதிகளையும் ஒன்றோடொன்று இணைத்தாக வேண்டும். முன்னுரிமை தந்து இதைச் செய்ய வேண்டும். இல்லாவிடில், நீர் நிலைகளால், நாட்டில் நெருப்புத்தான் மூளூம்” என்று முடித்தார். அவரது கருத்துக்களை அறிஞர் பெருமக்களும், பொதுமக்களும் பெரிதும் வரவேற்றனர்.
  அவரது கருத்து, முல்லைப் பெரியாறு சிக்கலுக்கும் தீர்வாக அமையுமன்றோ?.

  Subscribe for new post

  நவீன ஓவியங்களில் ஒளிரும் நட்சத்திரம்

  ஒரு சமூகத்தின், பண்பாட்டின், கலாச்சாரத்தின் மேன்மையை உணர்த்தும் சாதனமான
  அரிய கலைதான், மிருகங்களிடம் இருந்து மனிதனை வேறுபடுத்தி, அவனை மேலும்
  பண்புள்ளவனாக மாற்றித் தருகிறது. இனம், மொழி, தேசம் கடந்த மனிதம் ஒன்றே என்பதை
  நமக்கு உணர்த்தும் மகத்தான பொருளாக விளங்குவது ஓவியம் தான்.

  சில வியப்பான விஷயங்களை நாம் கேட்கும் போதோ அல்லது வாசிக்கும் போதோ நம்மில் பலர் பெருமூச்சு விடுவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பற்றி வாசிக்கும் ஒவ்வொரு நொடிகளும் நமக்கு பெரு மூச்சாகவே நீளும். இதயங்கள் சிறை பிடிக்கப்படுவதற்கும், சிறைபட்டுப் போவதற்கும் இருக்கும் வித்தியாசத்தை அவர் கடந்து வந்த வாழ்க்கை தான் நமக்கு வேறுபடுத்திக் காட்டும்.
  இந்த உலகத்தில் எப்பொழுதும் இளமை மாறாத பொக்கிஷம் ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற கலைப்படைப்புகள் தான். உலகத்தில் இதுவரை அதிகம் விற்கப்பட்ட அனைத்துத் துறை சார்ந்த பொருட்களிலும் முதல் பத்து இடங்களுக்குள் ஓவியமும் இருக்கும். அத்தகைய கலைகளில் சிறந்த ஓவியத்தை தன் வாழ்வின் ஆதார மூச்சாகக் கொண்டு அதற்காகவே வாழ்ந்து கொண்டு, தினந்தோறும் வாழ்வின் ஒவ்வொரு மூச்சையும் ஓவியத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் திருச்சி என்.ஐ.டி. (சஹற்ண்ர்ய்ஹப் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ர்ச் பங்ஸ்ரீட்ய்ர்ப்ர்ஞ்ஹ்) கட்டிடக் கலைத் துறையின் ஃபைன் ஆர்ட்ஸ் பிரிவில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் திரு. பி. மாணிக்கவாசகம் அவர்களுடன் ஒரு சந்திப்பில்…
  தங்களின் இளவயது பற்றிய நினைவுகள்…
  எனது சொந்த ஊர் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பூளவாடி. என்னுடைய பள்ளிப்படிப்புகள் அனைத்தும் பூளவாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தான். அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பாக இருக்கிறது. அந்தப் பள்ளி தான் எனக்கு தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் கற்றுத்தந்தது. அந்தப் பள்ளி தான் இசை, நாடகம், ஓவியம், பேச்சுத்திறன், ஆளுமைப்பண்பு என்று என்னைச் செதுக்கியது. பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியலில் எப்போதும் என் பெயர் இடம் பெற்றிருக்கும். முதல் மாணவனாகத் தேர்வுற்றும், எனக்கு அப்போது கல்லூரி சென்று படிக்க முடியாத சூழல். உடனடியாக வேலையில் சேர்வதற்கான படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாக கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சியை முடித்தேன். ஆசிரியர் பயிற்சி முடித்து வெளியே வந்தவுடன் இந்திய தொலை தொடர்புத் துறையில் பணிகிடைத்து கோத்தகிரி மற்றும் பொள்ளாச்சியில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதன் பிறகு சென்னை ஓவியக் கல்லூரியில் ஓவியத்துறையில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பை முடித்து திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் பேராசிரியராகப் பணியில் என்னை இணைத்துக் கொண்டேன்.
  ஓவியத்தின் மீது ஈடுபாடு ஏற்படக் காரணம்…
  ஒரு சமூகத்தின், பண்பாட்டின், கலாச்சாரத்தின் மேன்மையை உணர்த்தும் சாதனமான அரிய கலைதான், மிருகங்களிடம் இருந்து மனிதனை வேறுபடுத்தி, அவனை மேலும் பண்புள்ளவனாக மாற்றித் தருகிறது. இனம், மொழி, தேசம் கடந்த மனிதம் ஒன்றே என்பதை நமக்கு உணர்த்தும் மகத்தான பொருளாக விளங்குவது ஓவியம் தான்.
  ஓவியம் என்ற வார்த்தை உச்சரிப்பதற்கு எவ்வளவு எளிமையோ, அதற்கு எதிர்மறையாக இருக்கிறது ஓவியம் வரைவது. சிறுவயதில் வண்ண வண்ண பென்சில்களைக் கையில் கொடுத்து நான் கிறுக்குவதை எல்லாம் பார்த்து ரசித்த என் பெற்றோர்களின் மகிழ்ச்சி எல்லையில்லாதது. ஓவியங்களைக் குறித்த அறிதலும், புரிதலும் இல்லை என்றாலும் அதன் மீது ஒரு அபரிமிதமான ஈடுபாட்டை ஏற்படுத்தியது என் பெற்றோர்களின் மகிழ்ச்சி. எங்கேயாவது ஓவியங்களைப் பார்க்கும் போதெல்லாம் அதில் கலக்கும் ஒவ்வொர் துளியிலும் ஓவியனின் மனசும் கரைந்திருப்பதாகத் தோன்றும் எனக்கு. மூன்று மணிநேரம் நாம் பார்க்கும் சினிமா படங்கள் ஏற்படுத்தாத ஒரு தாக்கத்தை அத்தகைய ஓவியங்கள் எனக்கு ஏற்படுத்தியது. அதன் பிறகு ஓவியங்களைப் பார்ப்பதும், ரசிப்பதும் ஓர் சுகமான அனுபவமாக மாறியது. இப்படிப் படிப்படியாக ஓவியங்கள் என் இதயத்தில் வண்ணங்களைப் பூசிச் சென்றது.
  எனது தந்தைக்கு இசையின் மீது அதிக ஈடுபாடு உண்டு. ஓய்வு நேரங்களில் எனது தந்தை ஹார்மோனியம் மற்றும் மிருதங்கம் வாசித்துக் கொண்டே இருப்பார். அவருடன் இருந்த எனக்கு இசையின் மீதும், கவிதைகளின் மீதும் நெருங்கிய நேசம் ஏற்பட்டது. அதேபோல் என் பள்ளி ஓவிய ஆசிரியர் திரு. ஆபிரஹாம் அவர்களின் ஊக்கம் எனக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தது.
  தொடர்ந்து இராமகிருஷ்ணா வித்யாலயாவில் ஓவியர் திரு. இராஜகோபால் அவர்கள் என் வாழ்க்கையைப் புரட்டிப் போடப் போகும் ஓவியங்களை வரையக் கற்றுக் கொடுத்தார். ஓவியங்களின் அனைத்துப் பரிமாணங்களிலும் வரையக் கூடியவர் அவர். பழமையான முறைகள் மட்டுமின்றி நவீன ஓவியங்களையும் வரையக் கூடியவர் மட்டுமல்ல கை தேர்ந்த சிற்பியுமாவார். ஓவியங்கள் வரைவதுடன் நின்றுவிடாமல் அதன் கூறுகளையும், தன்மைகளையும், பேச்சிலும், எழுத்திலும் கொண்டுவந்து முனைப்புடன் சொல்லிக் கொடுத்தார். ஆசிரியப் பயிற்சிக்குப் பின் ஆசிரியனாக மட்டுமின்றி ஒரு ஓவிய ஆசிரியனாகவும் வெளியே வந்ததற்கு முழுக்காரணமும் அவரைச் சாரும்.
  சென்னை ஓவியக் கல்லூரி எனக்கு மேற்கு உலக ஓவியங்களைப் பற்றியும், வண்ணங்களின் வரலாற்றைப் பற்றியும் கற்றுத்தந்தது. ஒரு ஓவியம் எப்படி உருவாகிறது, அடுத்த எத்தனை அடுக்குகளாக வரைவது, முதலில் எதை வரைவது, கடைசியாக எதை வரைவது, ஏன் அப்படி? என்பன போன்ற நுணுக்கமான விளக்கங்களைக் கற்றுக் கொடுத்தது. ஊடகங்களோ, புகைப்படக் கலையோ உருவாகாத காலகட்டத்தில் ஓவியங்களின் பங்களிப்புகள் எப்படி இருந்தன என்பதையும், எப்படி ஓவியர்கள் மரபுகளை உடைத்தனர் என்பன போன்ற பல விஷயங்களைக் கற்றுக் கொண்டதும் சென்னையில் தான். சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்றபோது இந்தியாவின் தலைசிறந்த எனது பேராசிரியர்கள் திரு. முனுசாமி, திரு.ஆர்.பி. பாஸ்கரன் மற்றும் திரு.அல்போன்ஸோ போன்றோர் எனது படைப்புக்களை வெளிக்கொணர உதவினர்.
  தங்களின் ஓவியம் எதைப்பற்றி பேசுகிறது…
  என்னுடைய ஓவியங்கள் சமூக சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாகவே இருக்கும். பெரும்பாலும் நான் நேரிலும், மனதிலும் கண்ட காட்சிகளையே எனது வண்ணங்கள் பிரதிபலிக்கும். இந்தியாவின் கலாச்சாரம், பெண்களின் நிலை, தமிழர்களின் பண்பாடான வீரம் என்று எனது கோடுகள் விரிவடைந்து கொண்டே செல்கிறது. பிறர் செய்த பிரதியிலிருந்து பிரதியெடுக்காமல் எனக்கென்று ஒரு தனித்த அடையாளத்தை அமைத்துக் கொண்டு தனித்துவத்துடன் சமூகப் பிரச்சனைகளைத் தீவிரமாக இட்டு நிரப்புகிற வண்ணங்களாக என்னுடைய ஓவியங்கள் இருக்கும் எப்போதும். “ஒரு பொருளை எப்படிப் பார்க்கிறேனோ அப்படி வரைவதில்லை, எப்படி சிந்திக்கிறேனோ, அப்படியே வரைகிறேன்” என்னும் பிக்காஸோவின் வார்த்தைகள் என் ஓவியங்களைப் பார்க்கும் போதெல்லாம் ஒலிக்க வேண்டும் என்று நினைத்தே என் வண்ணங்களைக் கலக்குகிறேன்.
  மறக்கமுடியாத நிகழ்வுகள்…
  1989ம் ஆண்டில் அப்போதைய மண்டல இன்ஜீனியரிங் கல்லூரியில் ( த.உ.இ ) என்னுடைய ஓவியக் கண்காட்சியை அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த திரு. ஆர். வெங்கட்ராமன் அவர்கள் தொடங்கி வைத்துப் பாராட்டினார்.
  1983ல் சென்னையில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியைப் பார்வையிட்ட அயல்நாட்டுத் தூதர், நான் வரைந்திருந்த என் கிராமமான பூளவாடியின் சந்தையைப் பார்த்துப் பிரமித்துப் போய் அதேபோல் ஐந்து படங்களை வரைந்து தருமாறு கேட்டுப் பெற்றுக்கொண்டு பல்வேறு வெளிநாட்டுத் தூதரகத்திற்குப் பரிசளித்துள்ளார்.
  சமீபத்தில் எனது ஓவியங்களைப் பார்வையிட்டதாக தொலைபேசியில் இந்தியாவின் விமானப்படை ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் திரு. வைத்தியநாதன் அவர்கள் பெங்களூரில் இருந்து பாராட்டினார்.
  என்னிடம் கட்டிடக்கலை பயின்ற மாணவி வனிதா ஹாலிவுட் அனிமேஷன் படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்றிருக்கிறார். இப்படிக் கலவையான அனுபவங்கள் நிறைந்ததாக சென்று கொண்டிருக்கிறது வாழ்க்கை. இது போன்ற ஊக்குவிப்புகள் தான் என்னை மேலும் மேலும் என் பணியைச் செழுமைப்படுத்துகிறது.
  வாசிப்பின் மீது தங்களுக்கு உள்ள நேசம்…
  நூல்களின் மீது எனக்கு எப்போதும் நெருங்கிய நேசம் உண்டு. வாழ்க்கை குறித்த அறிதலையும், புரிதலையும் கொடுக்கும் நூல்களின் மீது ஒரு அபரிமிதமான காதல் எப்போதும் எனக்குண்டு. தன்னம்பிக்கையைத் தரும் நூல்களைத் தேடித்தேடி வாசிப்பதற்கு அதுதான் முழுமுதற் காரணம். முடியாது என்ற வார்த்தையை அகராதியை விட்டே உதறித் தள்ளுங்கள் என்ற பிரான்ஸ் நாட்டின் மாவீரன் நெப்போலியன் போனாபட் சொன்ன சரித்திர வார்த்தைகள் பள்ளி நாட்களிலேயே எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.. உங்களால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும். நம்மிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப் போல, அதை விலக்கும் சக்தியும் உள்ளது. எண்ணமே நம்மில் தூண்டும் சக்தி. மனதை உயர்ந்த எண்ணங்களினால் நிரப்புங்கள். நாட்கணக்காகச் சிந்தியுங்கள், தோல்வியைப் பற்றி பொருட்படுத்தாதீர்கள் என்று எனக்கு கற்பித்தது திரு. உதயமூர்த்தி அவர்களின் நூல்கள்.
  இரக்கமுள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக் கூடிய கைகள் ஆகியவை நமக்குத் தேவை. பலவீனத்திற்கான பரிகாரம் ஓயாது பலவீனத்தைப் பற்றிச் சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது என்று தன்னம்பிக்கையை தரும் பௌலோகோலா நூல்கள், வெற்றியை நோக்கிய பயணத்தில் வெற்றியை நிர்ணயம் செய்யும் திட்டமிடலைப் பற்றிக் கூறும் ராபின் சர்மாவின் நூல்கள், வெற்றிக்கான சூட்சமத்தைக் கற்றுத்தரும் நெப்போலியன் ஹில் மற்றும் காப் மேயரின் நூல்கள் என்று தன்னம்பிக்கையை விழித்து எழும்படிச் செய்யும் நூல்கள் என்று பட்டியல் நீளும்…
  ஓவியத்திற்கு தங்களின் எதிர்கால அர்ப்பணிப்பு…
  எதிர்வரும் சில மாதங்களில் இந்தியாவில் இருந்து சுமார் 40 வெவ்வேறு துறை அறிஞர்கள் மேற்குலக நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டு, இந்தியாவின் தொன்மையை எடுத்துக் கூறப்போகும் குழுவில் நானும் ஒருவன்.
  கனடா, சுவீடன், இத்தாலி போன்ற நாடுகளில் இந்தியாவின் கட்டிடக் கலை மற்றும் ஓவியக்கலை பற்றி, பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுவதும், இந்தியாவின் பாரம்பரியத்தைத் தெரியப்படுத்தும் ஓவியக் கலைக்கும், மேற்கு உலக ஓவியங்களுக்கும் உள்ள தொடர்பையும், வேறுபாட்டையும் விளக்க உள்ளேன். இன்றைக்கு ஓவியங்கள் குறித்த நூல்கள் ரொம்பவே அருகி வருகின்றன. வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாத ஓவியங்களைக் காட்சிப்படுத்தி ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது இந்த ஓவியக் கலைக்கு நான் செய்யும் கடமையாக நினைக்கிறேன்.
  இலக்கியத்தைப் பொறுத்தவரையில் ஓவியங்களுக்கென எப்போதுமே சிறப்பு இடம் ஒன்று உண்டு. மேற்குலகில் கோலோச்சிய ஓவியர்களில் சட்டென நினைவுக்கு வரும் மைக்கேல் ஆஞ்சலோ, லியானர்டோ, ரபேல், டிசியன், ரூபன்ஸ், , வான்கா, மோனே, பிக்காஸோ, ரோஜர் வாண்டா வேடன், போன்று தமிழ்நாட்டு ஓவியர்களின் வாழ்க்கை, அவர்களுடைய வண்ணங்களின் ஸ்பரிசங்களால் அடையும் பரவசம், ஓவியத்தின் உள்முக தரிசனம் என்று ஓவியத்தின் செழுமைகளையும், ஓவியர்களின் பார்வையையும் பதிவு செய்ய வேண்டும் என்பதும் என்னுடைய கனவு.
  ஓவியம் என்பது நடந்து செல்லும் புள்ளி என்பார்கள். ஓவியங்கள் இல்லாத வாழ்க்கை ஜீவன் இல்லாத இசை போன்றது. சிலர் மனதில் தோன்றுவதை கற்பனையில் வரைவார்கள். இன்னும் சிலர் உருவங்களே இல்லாத ஏதேனும் ஒன்றை வரைந்து அதற்கு ஏதேனும் ஒரு புதுமையான கதைகளைச் சொல்லி ரசிக்க வைக்கும் ஓவியர்களும் உண்டு. ஓவியம் வரைவது என்பது தெரிந்தவர்களுக்குப் பூக்கள் பறிப்பது போல, தெரியாதவர்களுக்கு கத்தி மேல் நடப்பது போல. சிலரின் எளிமையான கோடுகள் கூட மிகவும் புகழ்பெற்ற ஓவியங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. தற்கால இந்திய ஓவியர்களான திரு.ஹுசைன், டைபி மேத்தா மற்றும் ராஷா போன்றோரின் ஓவியங்கள் உலக அளவிலான சந்தையில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பது ஓவியத்துறைக்கு மிகவும் நம்பிக்கையளிக்கிறது. இப்படி ஒவ்வொரு ஓவியனுக்குள்ளும் வார்த்தைகள் எதுவும் இல்லாத பல புதுமைகளும், ரசனைகளும் ஓவியங்களாக தூரிகைகளின் தீண்டலில் உயிர்பெறுவதைப் போன்றே பேராசிரியர் திரு. மாணிக்கவாசகம் அவர்களின் ஓவியங்கள் உயிர் பெறுகிறது. தனது ஓவியத்தினால் பல ஆயிரம் ரசிகர்களின் இதயங்களிலும் வண்ணங்களைப் பூசிக் கொண்டிருக்கும் அவரைப் போன்றே அவருடைய மகன் அருண்பிரகாஷ் அகமதாபாத்தில் உள்ள என்.ஐ.டியில் Film and Video Communication-ம், மகள் ஷர்மிளா பெங்களூரில் உள்ள என்.ஐ.டியில் Interface Designing-ம் படித்துக்கொண்டிருக் கிறார்கள். ஓவியங்களின் வண்ணங்களுடன் தங்களின் எண்ணங்களைப் பொருத்திப் பார்க்கும் இவரை தன்னம்பிக்கை வாழ்த்தி மகிழ்கிறது.

  Subscribe for new post

  உனக்குள்ளே உலகம்

  கடந்த ஜனவரி மாதம் சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன்.
  சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்திய 35 – வது புத்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ‘வெற்றி நிச்சயம்’ என்றதலைப்பில் உரையாற்றுவதற்காகத்தான் இந்தப் பயணத்தை மேற்கொண்டேன். அந்த எக்ஸ்பிரஸ் ரயில் கோவில்பட்டியை நெருங்கியபோது நான் பயணம் செய்த ரயில் பெட்டியின் இன்னொரு மூலையிலிருந்து ஒரு ஓங்கிய குரல் ஒலித்தது.
  “ஒய் திஸ் கொலைவெறி”
  “கொலைவெறி டீ” – என்று ஒரு சிறுவன் சத்தம்போட்டு திரும்பத்திரும்ப பாடிக்கொண்டிருந்தான்.
  அவன் அருகில் சென்று அவனைக் கவனித்துப் பார்த்தேன். என்னை பார்த்ததும் அவன் பாடலை நிறுத்திவிட்டு ‘ஹிந்தி’ மொழியில் அவன் பெற்றோரிடம் பேச ஆரம்பித்தான். கொஞ்சநேரம் அவனது குடும்பத்தினர் அனைவரும் ஹிந்தி மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்குத் தமிழ் தெரியாது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். தமிழில் பேசத் தெரியாதவர்களுக்கு இன்று ‘கொலைவெறி’ பிடித்த சொல்லாகிவிட்டது.
  “கொலைவெறி” என்பது தமிழ் வார்த்தையாக இருந்தாலும் இதற்கு அர்த்தம் தெரியாமலேயே அதனுடன் ஹிந்தி மற்றும் ஆங்கில வார்த்தைகளைக் கலந்து உருவாக்கப்பட்ட ‘கொலைவெறி பாடல்’ இன்று பலரையும் சென்றடைந்திருக்கிறது.
  இந்தியாவிலுள்ள எல்லா மொழியைச் சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் பாடலாக ‘கொலைவெறிப்’ பாடல் மாறிவிட்டது. அதுமட்டுமல்லாமல் இணையதளத்திலும் இந்தப்பாடல் வெளியிடப்பட்டு உலகமெங்கும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு தமிழ்க் கவிஞர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.
  இந்தப்பாடலைப் பாடிக்கொண்டிருந்த சில சிறுவர்களிடமும், பெரியவர்களிடமும் கொலைவெறி என்றால் என்ன? என்று கேட்டுப் பார்த்தேன். “கொலைவெறி” என்பது எந்த மொழியின் வார்த்தை என்றுகூட இன்னும் சிலரால் உணரப்படவில்லை.
  ஆர்வமிகுதியால் ‘கொலைவெறி’ (Kolai veri) என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வதற்காக ‘விக்கிபீடியா’ (Wikipedia) இணையதளத்தில் வலம் வந்தேன். கொலைவெறி என்பதை ‘மெட்ராஸ் பாஷா’ என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் அதற்கு அர்த்தமாக ‘ஸ்ட்ராங் டிசையர்’ (Strong Desire) என்று குறிப்பிட்டுள்ளார்கள். ‘கொலைவெறி’ என்னும் தமிழ் வார்த்தைக்கு ஆங்கிலத்தில் அர்த்தம் புரிந்து அதனை தமிழ்ப்படுத்தும்போது “மிகவும் அதிக ஆர்வம்” என்று அர்த்தம் புரிந்துகொள்கிறோம். கொலைவெறி என்பது மிகுந்த அதிக ஆர்வம் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகத்தான் உபயோகப்படுத்தப்பட்ட சொல் என்பதை இதன்மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
  “எப்படியாவது இந்தமுறைதேர்வு எழுதி வெற்றிபெறவேண்டுமென என் நண்பன் கொலைவெறி பிடிச்சி அலையுறான்” – என்று தமிழகத்தில் சிலர் பேசுவதை இன்றும் நாம் கேட்கலாம். ஆனால் வேறு சில இடங்களில் இந்த கொலைவெறிக்கு அர்த்தம் வித்தியாசமாகவே இருக்கிறது.
  சமீபகாலமாக – “பிறரை கொலை செய்ய வேண்டும். அல்லது தான் தற்கொலை செய்துகொள்ளவேண்டும்” என்றஎண்ணம் சில இளைஞர்களிடம் – குறிப்பாக “டீன் ஏஜ்” பருவத்தினரிடம் அதிகமாகவே காணப்பட்டு வருகிறது.
  சில மாதங்களுக்குமுன்பு நடந்த நிகழ்வு இது.
  மதுரையிலுள்ள ஒரு தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஐடிஐ (I.T.I.) படிக்கும் மாணவர் பாண்டியராஜன். இவர் பிட்டர் (Fitter) பிரிவில் படித்து வந்தார். ஒரு நாள் மோட்டார் சைக்கிளில் வந்து சிலர் அந்த மாணவரிடம் தகராறு செய்தார்கள். தகராறு முற்றியதால் ஆத்திரம்கொண்டு தாக்கினார்கள். அந்த இடத்திலேயே மயக்கமடைந்த பாண்டியராஜன் மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் இறந்துபோனார். “பாண்டியராஜனோடு ஐடிஐ – யில் படித்த இன்னொரு மாணவனோடு ஏற்பட்ட பிரச்சனைதான் பெரிதாகி அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட காரணமாக இருந்ததாகவும், இந்த முன்விரோதம்தான் இவரது கொலைக்கு காரணம்” என்று மதுரை கே.கே. நகர் போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
  இதைப்போலவே இன்னொரு கொலைவெறித் தாக்குதல் சென்னையில் அரங்கேறியிருக்கிறது.
  சென்னை – நந்தனம் அரசுக் கல்லூரி முன்பு மாணவர்கள் மோதல் நடைபெற்றது. சுமார் 30 மாணவர்கள் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை போன்றபயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டார்கள். மாணவர்கள் ஒருவரையொருவர் மாறிமாறி விரட்டி தாக்குதலில் ஈடுபட்டார்கள். தமிழகத்தின் தலைநகரான சென்னையின் முக்கிய சாலையான அண்ணாசாலையில் பகல் 1 மணி அளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. ஆயுதம் இல்லாத அப்பாவி மாணவர்களும் இதில் மாட்டிக்கொண்டார்கள். இந்தத் தாக்குதலில் சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த மாணவர் அருண்குமார் தலை, கை, முதுகு ஆகிய இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டு பலத்த காயமடைந்தார். இந்தக் கொலைவெறி தாக்குதலுக்கு காரணம் என்ன? என போலீசார் விசாரித்து அவரைத் தாக்கிய எண்ணூர், திருவொற்றியூர், அயனாவரம் ஆகிய இடங்களைச் சேர்ந்த மாணவர்களை கைதுசெய்தார்கள்.
  ஒருபுறம் மாணவர்களிடம் ‘கொலைவெறித் தாக்குதல்’ நடந்து கொண்டிருப்பதை செய்திகள்மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். தன்னைத்தானே தாக்கிக்கொள்ளும் “தற்கொலை நிகழ்வுகளும்” தமிழகத்தில் தற்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
  தூத்துக்குடி ராஜகோபால்நகரைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்ற மாணவி எட்டாம் வகுப்பு படித்து வந்தாள். விடுமுறைநாளில் திடீரென தனது வீட்டில் மின்விசிறியில் சேலையைக் கட்டி தூக்குப்போட்டுக்கொண்டாள். அவள் கைப்பட ஒரு கடிதமும் எழுதிவைத்திருந்தாள். அந்தக் கடிதத்தில் தனது அப்பா, அண்ணன் என வீட்டில் அனைவருக்கும் குடிப்பழக்கம் இருப்பதாலும், குடும்பப் பிரச்சனை அதிகமாக உள்ளதாலும் அவள் இந்த முடிவுக்கு வந்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாள்.
  இந்தப் பள்ளி மாணவியின் செயல் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
  இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்குள் இன்னொரு செய்தி நம்மை உறைய வைக்கிறது.
  விழுப்புரம் மாவட்டம் கண்டாஞ்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் வினோ டெண்டுல்கர். அவருக்கு வயது 17. திருப்போரூர் அருகிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் இ.சி.இ (உஇஉ) என்னும் பாடப்பிரிவில் சேர்ந்து முதல் ஆண்டு படித்துவந்தார். ஒருநாள் காலையில் கல்லூரித் தேர்வை எழுதிவிட்டு விடுதிக்குத் திரும்பிவந்தார். தனது 5 நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார். பின்னர், மீண்டும் கல்லூரிக்குச் செல்லவில்லை. “எனக்கு தூக்கம் வருகிறது. நான் தூங்கப் போகிறேன். வகுப்புக்கு நான் வரவில்லை” – என்று கூறிவிட்டார். நண்பர்கள் வகுப்புக்குச் சென்றுவிட்டார்கள். வகுப்பு முடிந்து விடுதிக்கு வந்த மாணவர்கள் கதவை தட்டினார்கள். கதவு திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியாகப் பார்த்தார்கள். விடுதி அறையிலுள்ள மின்விசிறியில் பிணமாக தொங்கினார் வினோ டெண்டுல்கர். “வினோ டெண்டுல்கர் ஏழ்மையான விவசாய குடும்பத்தைச் சேர்ந்த மாணவன். கல்லூரிக் கட்டணத்தை கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். வங்கிக் கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் மனம் வருந்தினான்” என்று அவனுடன் படித்த மாணவர்கள் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்கள்.
  இளம் வயதிலேயே – “எனக்கு இந்த வாழ்வு பிடிக்கவில்லை” என்று தற்கொலை வெறியோடு செயல்படும் இந்த இளம் தளிர்களின் செயல்கள் நம் நெஞ்சத்தில் வேதனையை விதைக்கிறது அல்லவா?
  “கொலை வெறியோ, தற்கொலை வெறியோ – எந்த வெறியாக இருந்தாலும் அந்த வெறி பிறஉயிரைக் கொல்லுவதிலும், தன் உயிரைப் போக்கிக் கொள்வதிலும் தொடர்பு கொண்டிருந்தால் அது வேதனைக்குரிய செயல் அல்லவா?
  ‘வெறி’ என்பது மிகுதியான அதிக ஆர்வத்தைக் குறிக்கிறது. இளம் வயதில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும், மாணவ – மாணவிகளுக்கு நேர்மறையான (டர்ள்ண்ற்ண்ஸ்ங்) அதிக ஆர்வம் கண்டிப்பாகத் தேவை. தங்கள் பாடங்களைப் படிப்பதில் அவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கவேண்டும். தங்கள் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு உதவும் நல்ல குணங்களை கற்றுக்கொள்வதில் இவர்கள் அதிக ஆர்வம் செலுத்தவேண்டும். பெரியவர்களை மதிப்பதிலும், இறைவழிபாட்டிலும் அதிக ஆர்வத்தோடு இவர்கள் செயல்படவேண்டும். நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக்கொள்வதற்கான பயிற்சிகளை மேற்கொள்வதிலும் இவர்கள் அதிக அக்கறையுடன்கூடிய ஆர்வத்தை செலுத்தவேண்டும். உண்மைப் பேசுவதற்கும், பிறருக்கு நன்மை செய்வதற்கும் அதிக ஆர்வத்தை இளம் வயதினர் மனதில் வளர்த்துக் கொள்ளவேண்டும்.
  கொலைவெறி என்பது மிகுந்த அதிக ஆர்வத்தோடு செய்யப்படும் நல்ல செயல்களோடு தொடர்புடையதாக இருந்தால் மட்டுமே அது வரவேற்கத்தக்கது. மாறாக – அந்த வார்த்தைக்கு அர்த்தத்தை தவறாக புரிந்துகொண்டு, பிறரை கொலைசெய்வதிலும், தன்னை அழித்து தற்கொலை செய்வதிலும் கவனம் செலுத்தினால் நிச்சயம் அது ஆபத்தைத் தந்துவிடும்.
  அதிக ஆர்வம் நல்லவற்றில் தொடரட்டும். நலமே நம் வாழ்வில் நிறையட்டும்.
  தொடரும்….

  Subscribe for new post

  தகவல் தொழில் நுட்பம் – அதிகரிக்கும் வேலை வாய்ப்பு

  இன்றைய நிலையில் இந்தியா, உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாகத் திகழ்கிறது. வரும் 2020ம் ஆண்டில், உலக அளவில் ஒரு முக்கிய சக்தியாக மாறி, பல நிலைகளில் முக்கியப் பங்காற்றும் நாடாக இந்தியா விளங்கும் என்று கணிக்கப்படுகிறது.
  ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது சில குறிப்பிட்ட துறைகளின் வளர்ச்சியை வைத்தே மதிப்பிடப்படுகிறது. ஏனெனில் இந்த சில குறிப்பட்ட துறைகள் பிற துறைகளைவிட வேகமாக வளர்ச்சியடையும். எனவே எதிர்காலத்தில் கிடைக்கவிருக்கும் அபரிமிதமான வேலைவாய்ப்புகள் அந்த சில குறிப்பிட்ட துறைகளைச் சார்ந்ததாகவே இருக்கும்.
  வரும் 2020ம் ஆண்டு முதல் இந்தியா, உலகப் பொருளாதாரத்தை வழிநடத்தும் என்ற நம்பிக்கையுள்ளது. தகவல் தொழில் நுட்பம், விவசாயம், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் உள் கட்டமைப்பு போன்ற துறைகள் அடுத்த 10 ஆண்டுகளில் பெரிய மாறுதல்களைச் சந்தித்து, தனக்குள் மிகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளைக் கொண்டிருக்கும். இப்படி அதிக அளவிலான வேலைவாய்ப்புகளைத் தரும் துறைகளில் முதலிடம் வகிப்பது, 1. தகவல் தொழில் நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகள் (Cloud Computing and Network Security) மற்றும் 2. அனிமேஷன் அன்ட் கேமிங் (Artificial Intelligence and 3D Models).
  தகவல் தொழில் நுட்பத்துறை:
  உலகின் மிகப்பெரும் தொழில்களில் ஒன்றாகத் தகவல் தொழில் நுட்பத்துறை விளங்குகிறது. உலக அளவில் ஆண்டுக்கு 70 லட்சம் கோடி ரூபாய் இத்துறையில் புழங்குகிறது. இத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 2010ல் ஏற்பட்ட வளர்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளில் அதிகரித்துக் கொண்டே சென்ற இத்துறையில் 2012ம் ஆண்டில் 2 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இன்ஜினியரிங் படிப்பில் எந்தப் பிரிவு படித்தாலும் ஐ.டி. துறைக்கு வர முடியும். பி.எஸ்.சி. படித்தவர்கள் கூட இத்துறைக்கு வர முடியும். இனிவரும் காலங்களில் அரசின் சேவைகள் தகவல் தொழில் நுட்பத்தின் மூலம் வழங்க உள்ளதால் இத்துறையில் வேலைவாய்ப்புகள் பெருகும். இத்துறையில் மாதம் ரூ. 20 ஆயிரம் சம்பளத்தில் சேர்பவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் மாதம் ரூ. 1 இலட்சம் வருமானம் பெறும் வாய்ப்புள்ளது.
  அனிமேஷன் துறை:

  அனிமேஷன் துறையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பொழுதுபோக்கு சார்ந்த துறை என்பதால், இதற்கு ஏற்றத்தாழ்வு இருக்காது. ஏற்றம் மட்டுமே இருக்கக்கூடிய துறை இது.
  வால்ட் டிஸ்னியின் மிக்கி மவுசுக்குப் பிறகு அனிமேஷன் துறையில் குவியத் துவங்கிய வாய்ப்புகளால் இன்று தொழில் முறையிலான அனிமேஷன் படிப்புகள் வளரத் தொடங்கியுள்ளன. தொழில் நுட்பம் வளர அந்த நுட்பங்களை அனிமேஷன் துறை இழுத்துக் கொண்டது.
  அனிமேஷன், கிராபிக்ஸ் துறைக்கு முக்கியமானது கிரியேட்டிவிட்டி. அதாவது எண்ணங்களுக்கு உருவம் தருவது; செயல் வடிவம் அளிப்பது. அது ஆடியோ, வீடியோ என எவ்வடிவத்திலும் இருக்கலாம்.
  கற்பனைத் திறன், விடாமுயற்சி, கடின உழைப்பு கொண்டவர்களுக்கு இத்துறை சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கித் தரும். சர்வதேச அளவில் எடுக்கப்படும் டி.வி. தொடர்கள், சினிமா, இன்டர்நெட் என ஏராளமான துறைகளில் அனிமேஷன் பயன்படுகிறது. இத்துறைகள் நாள்தோறும் வளர்வதுடன் பணியாளர்களின் தேவை அதிகரிப்பதாலும் நல்ல வேலை வாய்ப்பு உருவாகியுள்ளது.
  அனிமேஷன் என்பது 2டி, 3டி என வகைப்படுத்தலாம். 2டி அனிமேஷன் என்பது பிளாட் அனிமேஷன். இதில் இல்லஷ்ட்ரேட்டர், கோரல்ட்ரா, போட்டோஷாப், ஃபிளாஸ், இன்டிசைன் ஆகியவை அடங்கும். 3டியில் 3டி எஸ், மாயா அடங்கும். 3டியைப் பயன்படுத்தி இன்டீரியர், வெப்டிசைன் கான்செப்ட்ஸ் ஆகியவற்றைத் தயாரிக்கலாம்.
  ஒரு வேலை செய்வதற்கு ரூ. 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை ஊதியமாகப் பெறலாம். கல்வித்துறை, விளம்பரத் துறை, வெப் டிசைனிங், ஃபேசன் டிசைனிங், இன்டீரியர் டிசைனிங் போன்ற துறைகளில் பணியாற்றலாம். கம்ப்யூட்டர் கேமிங், மல்டி மீடியா துறையில் நல்ல ஊதியத்துடன் வாய்ப்புகள் உள்ளன. உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
  இந்த இரண்டு துறைகளைப் பொறுத்தவரை காலம், கடின உழைப்பு, முடியும் என்ற மனப்பான்மை ஆகிய மூன்றும் மிக முக்கியம். வரும் ஆண்டுகளில் 15 சதவீத வேலை வாய்ப்பு இந்தத் துறைகள் மூலம் கிடைக்கும்.

  Subscribe for new post

  மண் குதிரை

  பல முறை வரவேண்டிய இடம் தான் பெங்களூரு நகரத்தின் தேசியச் சட்டப்பள்ளி இவ்விடம் குறித்து பேசப்படவேண்டுமெனவும் பலமுறை தோன்றியிருக்கின்றது. “குடியரசு”குறித்துப் படித்த பொழுது அல்லது குடியரசின் சில பல பக்கங்களைப் படித்த பொழுது என்று ஞாபகம். “பிளோட்டோ” ஏற்படுத்தியிருந்த பள்ளி குறித்து ஒரு நினைவுப் பதிவு இருந்தது அது இதுதானோ என்று எண்ணும்படியான வளாகம் இது. ஒன்பதாவது தாளையும் (பத்தில்) நான்கு வருட முயற்சியில் தாண்டிய பொழுது ஒன்றாக முடிந்திருக்கலாகாதா? என்று தோன்றினாலும், அப்படி முடித்த பிறகு இங்கு வரும் வாய்ப்பு அருகிவிடுமோ? என்கின்ற ஏக்கமும் ஒருசேர தோன்றுவதுதான் இதன் சிறப்பு.
  நமக்குப் பிடித்தவர் யாரையாவது சொல்லுங்கள் என்று கேட்டால் சட்டென்று ஒருவரைச் சொல்ல முடியாது எழுத்தாளர்கள் ? என்று கேட்டால் இன்னும் சிக்கல். நீண்ட நாட்கள் குதிரை ஜாக்கியாக இருந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் குதிரைப்பந்தய அனுபவங்களைக் கதைத்த புத்தகப் புயல், டிக் ஃப்ரான்ஸிஸ் என்று ஒருவர். சும்மா ! வேகம்! வேகம்! என்று அதிவேகத்தை அனுபவித்த நாட்கள் திடீரென நின்று போனதும், கவலை அதிகப்பட்டுப் போவது குறித்து யோசிக்கமால் சரியான திசையில் பேனாவோடு திரும்பியதுதான் ஆச்சரியம். பேனாவும் உலகில் நமக்கும் அவருக்கும், பிடித்த பொருளென்றால் மிகையாகாது.
  மனக்குதிரைக்கு கடிவாளமிட பேனா கற்றுத்தரும். சமீபத்தில் ஒரு இலக்கிய பத்திரிக்கையில் இப்பொழுதைய சூழ்நிலையில் படிப்பவர்களை விட, எழுத்தாளர்களே அதிகமாக இருக்கின்றார்கள் என்று இருந்தது. நிறைய யோசிக்க வைத்த வரிகள். ஒரு வகையில் பார்த்தால் நிறைய படிக்காமல் எழுதுகிறோமோ? எனும் பொருள்பட்டுப் போகின்றது. பேனா அவ்வளவு கவர்ச்சிகரமான பொருளோ? என்றால் தயக்கப்படாமல் ஆமெனலாமோ? மேடையில் சில நல்லுள்ளங்களிடத்தில் மைக் மாட்டிக் கொண்டால் அவரும் எல்லோரும் அனுபவிக்கின்றஉணர்வு, மழைக்காலத்தில் சாலையில் தேங்கியுள்ள முழங்காலளவு நீரில் கார் போகும் பொழுது சைலன்ஸருக்குள் நீர் புகுந்து வண்டி நின்று விடும் நிகழ்வு எந்த கணத்தில் நிகழுமோ? என்பதற்கு நேர் எதிர்மறையாக இருக்கும். அந்தமாதிரியின்றி எழுதுதல் நிரம்பப் படித்தபின் நிகழின் சரியே. ஒரே இடத்தில் இருந்தால்தான் எழுத முடியும் என்றில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் காரிலும் எழுத இயல்கின்றது. மண் குதிரைகளுக்கும் மன குதிரைகளுக்கும் என்ன வித்தியாசம் என்று தலைப்பை டிக் ஃபிரான்சிஸ்க்காக கொடுத்துவிட்டு, யோசித்து பார்க்கின்றேன். நம்பிக்கை, பாதிக் கட்டுரை முடிந்த பிறகும், நிறைய வழிகளைக் காட்டுகின்றது.
  மண் குதிரை ஐயனார் கோவில்களில் இருக்கின்றது. கட்டுசாதம் கட்டிக்கொண்டு நெடுஞ்சாலை வழியே பயணிக்கையில் இன்றும் இருக்கின்ற மிச்ச மீதி பண்பாட்டு நிஜமான அடையாளங்களில் இந்த அஜானுபாகுவான குதிரைகள் குழந்தைகளுக்கு குதூகலமளிப்பவை.
  நாம் சொன்ன நிஜக்குதிரை வித்தகர் அவசரமாக இல்லாமல் நிதானமாகத்தான் எண்பத்தி ஒன்பது வயசில் இனிமேல் உடலோடு நடமாட வேண்டாம் என இறைவன் சொல்லியதால் உள்ளத்தில் நடனமாட, அதுவும் குதிரைகளோடு தொடங்கியிருக்கின்றார். குதிரை பந்தயங்களைப் பற்றிய விறுவிறுப்பான தமக்கேயுரித்தான தகவல்களை அள்ளித்தெளித்து, வீரம் உதிரத்துக்குள் கொப்பளிக்கும் வண்ணம் கதையை நகர்த்திச் சென்று ஸ்டீபிள் சேஸில் குதிரைகள் துள்ளி இறங்கும் இலாவகத்தோடு மனதில் மழைபொழிய வைக்கும், மலர் பூக்க வைக்கும், காதல் காட்சிகளையும் குதிரைகளோடே பின்னிப்பிணைத்து எழுதிக் கொண்டிருந்து; இதெல்லாம், ‘ஒரு இடத்தில ஏதேச்சையாப் பாதை மாறிப் போனதால் ஏற்பட்ட மாற்றம்ங்க,’ என்று அழகாகச் சொன்னவர் டிக் ஃபிரான்ஸிஸ். இவர் ஒன்றல்ல இரண்டல்ல முன்னூற்று ஐம்பத்தி மூன்று முதல்தர குதிரை பந்தயங்களில முதலிடம் பெற்ற குதிரை ஒட்டுனர். இதெல்லாமே இரண்டு முறைஇந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் இந்து நாளிதழில் வந்த செய்தியை மட்டுமே படித்ததில் வந்த விளைவுதான் . . இனிமே தான் கூகிள் வழியாப் போய் இவரோட சொந்த புத்தகத்தில ஏதாவது படிச்சு மனசுக்குள்ள தூக்கிப்போட்டுக் கொள்ள வேண்டும்.
  ஒவ்வொரு முடிவிலிருந்தும், ஏதாவதொன்று, ஆரம்பிக்கின்றது என்பதற்கு டிக் ஃபிரான்ஸிஸின் வாழ்க்கையை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.
  ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதில் பிறந்து ஐம்பத்தாறில் இங்கிலாந்தின் மிக முக்கியமான ஐந்து லட்சம்பேர் அப்பொழுது கூடிப்பார்த்த ஒரு குதிரைப் பந்தயத்தில் வெற்றிக்குச் சில அடிகள் தூரமிருக்கையில், ‘டேவின் லாச்’, என்கிற இவர் பயணித்த அல்லது ஓட்டிய குதிரை ஏனென தெரியாமல் மர்மமாக ‘ஸ்பெரட் ஈகிள்’, என்கின்ற வடிவத்தில் விழுந்து இவரையும் தூக்கிப் போட்டுவிட்டது. அப்பொழுது இவர் மனசில இருந்ததை அவரே சொல்லும் பொழுதுதான், “இராணி எலிசபெத் இருந்தாங்க அவர்களின் பெண் மார்க்கரெட் இருந்தாங்க… நான் தான் அனைவருக்கும் முன்னாடி இருந்தேன். என்ன நடந்ததென தெரியவில்லை”, என்கிறார். இனிமேல் குதிரை ஓட்ட முடியாத நிலைமைக்கு அந்த விபத்து காரணமாகிவிட்டது. ஆனாலும், என்ன? அவர் விழுந்திராவிடில், விழுந்து எழுந்திராவிடில் மனகுதிரைக்கு அவர் திரும்பியிராவிடில் நண்பர் அருண் வீட்டில் டிக் பிரான்ஸிஸ் புத்தகமும், இவர் போல எண்ணற்றவாசகர் மனதில் அவருக்கு இடமும் இருந்திருக்காது . . .. . குதிரை ஓடுகிறது …
  குழந்தைகளுக்கு குதூகலமளிப்பதாகச் சொன்ன பல வண்ண மண்குதிரை ஒன்றின் காலடியில் சங்ககிரி அருகே இருந்த ஒரு ஐயனார் கோவிலில் அமர்ந்து, ஒரு நாள் நெடும்பயணத்தில் இடையே பசியாறத் துவங்கினோம். நினைத்துப் பார்க்க வேண்டிய அனுபவம்தான்.
  குதிரையைப் பிடித்துக்கொண்டு நிற்கின்ற வீரன் ஒருவனின் சிலைமீது கவனம் போனது. அவசர யுகத்தில் மண்குதிரைகளின் பொலிவெல்லாம் மண்ணோடு மண்ணாய் போய்விடுகின்றது. தார்பாச்சிக்கட்டிய வேட்டி, பள்ளிநாள் நாடகத்தின் பொழுது வரிந்து தார்பாச்சிய ஞாபகத்தைக் கிளரியது. முறுக்கு மீசை கொய்யா கன்னம் (ஆப்பிளையே எவ்வளவு நாள் விலையுயர்ந்த அயல்தேச கனி உதாரணமாக சொல்வது?) பிரமிக்க வைத்தது பிரேமிக்கவும் வைக்கும்.
  இந்த வீரன் தோளில் கைபோட்டுக் கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன் மிக மகிழ்ச்சியாயிருந்தது.
  விலை குறைவாயிருக்கின்றது அல்லது விலை இல்லாமல் இருக்கின்றது என்பதற்காகவே நிறைய சந்தோஷங்கள் உலகில் புறக்கணிக்கப்படுகின்றன என்று ஒரு பொன்மொழி பார்த்தேன் உண்மைதான்.
  மண் குதிரைகள் மனதுக்குள் ஆழமாக வண்ணச்சாயலை அள்ளிப் பூசி பதியச்செய்கின்றன. வேண்டுமானால் அடுத்த முறை சத்தியமங்கலப் பாதையில் செல்கையில் சாலையோர மண் குதிரைகளைப் பாருங்கள்! நம் ஓரக் கண்களைத்தாண்டி ஒய்யாரமாய் உள்ளத்துக்குள் ஓடிப்போகும் தகுதி இவைகளுக்கு இருக்கின்றது. இவ்வளவு குதிரைகளும் காலச்சக்கரத்தில் கரைந்து காணாமல் போகும், என்று இதைச் செய்தவரால் நம்ப முடிந்திருக்குமா ? என்று தெரியவில்லை! நம்மால்…
  மரக்குதிரைகள் கிராமத்துப்பரிச்சயம். கீழே வளைந்த பரப்பாய் இருக்கும், (தர்ஸ்ரீந்ண்ய்ஞ் ஏர்ழ்ள்ங்) பக்கத்து வீட்டு குழந்தைக்காக இருந்தது. ஏன் இவ்வளவு ஞாபகமிருக்கிறது என்று ஆச்சரியம் கூட ஓடி வர, ஞாபகமும் வளருகின்றது. கவனியுங்களேன்! அசைந்தாடும் குதிரையில் அமரும் ஆசை இருப்பது தெரிந்தால், அந்த குழந்தை அமர்ந்து கொள்ளும்: அதை அலட்சியப்படுத்தினால் அமரும் வாய்ப்புக் கொடுக்கும். இதையே, “தோற்றேன் என நீ, உரைத்திடும் போதிலே வென்றாய்”, என்று பாரதி பேசியது ஞாபகமிருக்கின்றது. மார்க்கஸ் ஆரலியஸ் என்கின்ற ஞானியும், இதே பொருளில் ‘பல விளக்குகள் தந்த ஒளி’ என்னும் அற்புதமான புத்தகத்திற்குள் மேற்கோள் காட்டப்பட்டு உள்ளார். அவர் சொல்கின்றார், ‘நம்மிடம் உள்ளவற்றிலேயே மிகச்சிறந்த ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை அதற்காக எவ்வளவு ஏங்கியிருப்போம்… என்று யோசித்தால், கையில் உள்ளவற்றின் பொருளும், புகழும் விளங்கும். இந்த மார்க்கஸ் ஆரலியஸ் பற்றி சொல்ல பேனா, குதிரைக் கால்போல் பரபரக்கின்றது, “கிளாடியேட்டர்” படத்தில், “மகனாக உனது தோல்வி, அப்பாவாக எனது தோல்விக்கு சமம்”, என்கின்றஅற்புதமான பஞ்ச் டயலாக் பேசும் ராஜா இவர்தான். சீனத்து கன்பூசியஸ் சொல்வார், ‘ஒரு தத்துவஞானி ராஜாவாக இருக்க முடியாது’ என்று, அதை உடைத்தவர் இவர். அந்தப்படத்தில், ரஸ்ஸல் க்ரோவ், மாக்ஸிமஸ் எனும் கதா பாத்திரமாக, நாயகனாக, வீரராக, வருவார். அவரை, தன் புகழ்பெற்ற, ‘மெடிடேஸன்ஸ்’, எனும் புத்தகத்தில் போற்றுகையில், ‘பேசுகின்றவேகத்தில் சிந்திக்கின்றவன்’ என்று, ஒற்றைவரியில் சிக்ஸர் அடித்திருப்பார் ஆரலியஸ் என்னும் யோசிக்க வைக்கும் Rocking Horse.
  மனக்குதிரை மரக்குதிரை இரண்டையும் ஒன்றாக வைத்திருப்பவர்கள் உண்டு. சுற்றிச்சுற்றி வரும் “பீச்” குதிரை இராட்டினங்கள், லகான் போடப்படாதவை; லகான் தேவைப்படாதவையும் கூட! ஒரே பாதையில் சுற்றி வருவதற்கு பழகிப்போனவைகளைப் பிறகு என்ன சொல்வது?
  காலை நான்கு மணிக்குக்கிளம்பி பெரியவரோடு செம்பரம்பாக்கம் ஏரி மீது ஐந்து பத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்பது மணி வரை பத்து கிலோமீட்டர்கள் அறிவும் அனுபவமும் கலந்த காற்றைவாங்கினால் மனகுதிரைகளுக்கு சரியான திசைகளுக்குத் திரைகள் தேவைப்படுவதில்லை எனப் புரியும்.
  கம்பல்ஸீவ் திங்கிங் (Compulsive Thinking) என்பது ஒரே விஷயத்திற்குள் ழ்ர்ஸ்ரீந்ண்ய்ஞ் செய்து கொள்வது போல, அசைப்போடுவது போல மென்று கொண்டே இருப்பதுவும் அப்படியே.
  பெண்பார்க்கத் தம்பியுடன் போன அனுபவம் ஒரு புதுமைப் பூ. இறுக்கத்தைத் தளர்த்துகின்ற தேர்ந்தெடுத்த வார்த்தைப் பிரயோகங்கள் நிகழ்த்துகின்ற, அற்புதங்கள் அலாதியானவை. நிறைய படிக்கையில், சிந்திக்கையில் அந்த பக்குவம் கைகூடும். கிரிக்கெட்டில் நெட் ப்ராக்டீஸ் மாதிரி செய்து சாட் (shot) செலக்ட் (select) செய்வது போலத்தான். ஆயிரங்காலத்துப் பயிரை விளைவிக்க ஆண்டவன் வாய்ப்புக் கொடுத்தால்! இயற்கை வழியேற்படுத்திக் கொடுத்தால்! பாதையில் பயணம் நீண்டால்! மரக்குதிரை மனக் குதிரையாக இயலும். செம்பரம்பாக்கம் ஏரிக்கரை மீது பெரியவர் ஓடி ஏறிச்செல்வதைப் பார்க்கும் பொழுது மனத்திற்கும் வயதிற்கும் சம்பந்தமில்லை என்று உறுதியாகத் தெரிந்தது.
  எண்ணற்றஅனுபவங்கள் கிடைக்கையில் அவைகளை தரையில் பரப்பி அதன் மீது வாய்ப்புக் கிடைக்கையில் மரக்குதிரையில் அசைந்தாடினால் நந்தா சொல்வது போல திரைப்பட பஞ்ச் டயலாக்குகள் பலமுறை ரூம்போட்டு யோசிச்சதோட விளைவுகள்ணா? அதுமாதிரி நிஜ வாழ்க்கையில் பேச முடியுமா என்ன? என்று கேட்டால்…
  மனக்குதிரைக்கு கடிவாளமும்
  மரக்குதிரை மேல் சிந்தனையும்
  மண் குதிரைபோல் பளபளப்பும் உற்சாகமும்
  இருந்தால் பேசுகின்றவார்த்தைகள் எல்லாம் தவமிருந்து பெற்றவைகளாகும். புதுப் பழக்கமாக, தலைப்புக்கு யாரும் விளக்கம் கேட்டால். பெங்களூர் சட்டப்பள்ளி மரக்குதிரைகளும், இராபர்ட் மேயரின் மண்குதிரை விஷய பளபளப்புச் சேகரிப்பும், ‘மேக்ஸிமஸ்’ உடைய மனசு போன்ற மனக்குதிரையும் நமக்கு வேண்டும்தான்.

  Subscribe for new post

  ஸ்டீவ் ஜாப்ஸ்

  3. ஆப்பிள் ஐ : பெர்சனல் கம்ப்யூட்டரின் முன்னோடி
  சர்க்யூட் போர்டாகக் காட்சியளித்த கம்ப்யூட்டரை மேம்படுத்தி புதிய வசதிகளுடன் தயாரிக்கவும், ஆப்பிள் கம்ப்யூட்டர் கம்பெனியை தொடர்ந்து நடத்தவும் உறுதுணையாக இருந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் ரான் வேய்னே. ஆப்பிள் கம்ப்யூட்டர் என்ற நிறுவனம் தொடங்க ஆவணப் பணிகளைச் செய்தவர். ஆப்பிள் கம்ப்யூட்டர் என்பதற்குப் பத்திரம் எழுதியவரே இவர்தான் என்று கூடக் கூறலாம். ஆப்பிள் நிறுவனத்தின் முதல் லோகோவை வடிவமைத்தவர் இவரே.
  ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகளை ஜாப்ஜுக்கு 45, வாஸ்ஸீக்கு 45 தனக்கு 10 பர்சன்டேஜ் என பார்ட்னர்ஷிப் டீலை முடித்தவுடன் நிர்வாகத்தின் பல வேலைகளில் மிகவும் ஒத்தாசையாக இருந்தார். ஆப்பிள் கம்ப்யூட்டரை எப்படி வளர்த்தெடுக்கலாம் என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டும், கனவு கண்டு கொண்டும் இருந்தார்.
  ஆனால் வேய்னே எதிர்பார்த்தபடி ஆப்பிள் கம்ப்யூட்டர் பெரிய அளவில் வருமானம் ஈட்டவில்லை. உழைப்பு பெரிதாகவும், லாபம் மிகவும் குறைவாகவும் இருந்தது. ஆனாலும் தொடர்ந்து தன்னுடைய உழைப்பையும், முதலீட்டையும் கொடுத்துக் கொண்டிருந்தார்.
  இனி ஒன்றும் செய்வதற்கில்லை. காலம் கை மீறிக் கொண்டிருக்கிறது. சுற்றிக் கொண்டிருக்கும் பம்பரம் சுருண்டு விழும் நேரம் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தார். சொல்லிக்கொண்டு விடைபெறும் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
  வெல்வதோ வீழ்வதோ பொருட்டல்ல. தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டியது முக்கியம் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் தன் முடிவை மாற்றவில்லை வேய்னே. விடைபெற வேண்டிய நேரம் நெருங்கியது. வெறும் 800 டாலர்கள் மட்டுமே வாங்கிக் கொண்டு விலகிச் சென்று விட்டார் வேய்னே. வேய்னே விலகிச் சென்றது வருத்தம் தான்; வேதனை தான்; மனச்சோர்வு தான். ஆனாலும் ஆப்பிள் கம்ப்யூட்டரை வெற்றிகரமாக நடத்த வேண்டும். அதற்கு எப்படி வியூகம் வகுக்க வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டிருந்தார் ஸ்டீவ்.
  அப்போது சிலிக்கான் வேலியில் கணினித் தொழில் நுட்பங்களில் புதுமைகளைப் புகுத்தி புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தது ஹெச் பி (HP). ஹெச்.பி. கம்பெனியில் தான் வாஸ் வேலை செய்து கொண்டிருந்தார். இந்த சமயத்தில் தான் வாஸ் பல புதிய வடிவங்களைச் (Design) செய்திருந்தார். உண்மையில் வாஸ் செய்த டிசைன்கள் எல்லாம் HP கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கும் போது செய்யப்பட்டதால் அத்தனையும் HP-க்குத் தான் சொந்தம்.
  ஸ்டீவ், வாஸ் ஆகியோரின் முதல் கம்ப்யூட்டரான ஆப்பிளை விற்கலாம் என்று முடிவு செய்தபோது, இப்படி ஒரு டிசைனை நான் செய்துள்ளேன். இதை HP கம்பெனி தயாரிக்க வேண்டும் என்று கூறினார் வாஸ்.
  HP-யின் தரத்திற்கு அந்த டிசைன் இல்லை என்று முகத்தில் அறையாத குறையாகத் திருப்பி அனுப்பிவிட்டனர் வாஸை. மேலும் வாஸ் தயாரித்த இந்த டிசைனுக்கும் HP-க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் எழுதிக் கொடுத்தனர். இப்படி நிராகரிக்கப்பட்ட டிசைன் தான் ஆப்பிள் I-ஆக விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது. இப்படி ஹெச் பி-யின் நட்டம் ஆப்பிளின் நினைத்துப் பார்க்க முடியாத பிரமிப்பான லாபமானது.
  மூன்றாவதாக ஆப்பிள் கம்ப்யூட்டரின் வளர்ச்சியைத் துரிதப்படுத்த மேற்கொண்ட வியூகத்தில் விழுந்தது கனடாவைச் சேர்ந்த கம்மோடர் கம்பெனி. ஆப்பிள் கம்ப்யூட்டர் ஆரம்பித்து ஓரளவிற்கு பெயர் வெளியில் தெரிய ஆரம்பித்தவுடன் அதன் கிளைகளை ஆரம்பித்து அதனை வளர்ப்பதற்குத் தேவையான பணத்தைத் திரட்டும் பொருட்டு தன்னுடைய ஆப்பிள் I-ஐ கம் மோடர் கம்பெனிக்கு டெமோ காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் அந்த கம்ப்யூட்டரை வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் விலை கேட்டவர்கள் அதிர்ந்து போனார்கள். அவர்கள் மட்டுமல்ல வாஸே அதிர்ந்து போனார். ஸ்டீவ் சொன்ன சில லட்சம் டாலர்களைக் கேட்டு.
  சில நிமிடங்களில் அவர்கள் சாத்தியமில்லை என்று கூறிவிட்டு முட்டாள்கள் என ஸ்டீவ்வை மனதில் திட்டிக்கொண்டே நடையை கட்டினார்கள். இப்படி வேய்னே 800 டாலர்களில் வெளியேறியது, டிசைன் மட்டமானது என்று HP நிராகரித்தது, தகுதிக்கு மேலான விலை என்று கம்மோடர் எண்ணியது என்று ஸ்டீவ்விடம் இருந்து ஆப்பிள் கம்ப்யூட்டரை பிரிக்காமல் அவரிடமே வளர உதவியது என்று கூட கூறலாம். ஒரு வேளை இவர்கள் ஸ்டீவ்விடம் இருந்து ஆப்பிள் கம்ப்யூட்டரைப் பெற்றிருந்தால் நாம் ஸ்டீவ் என்ற பொக்கிஷத்தை பார்க்கும் வாய்ப்பும், சந்தர்ப்பமும் கிடைக்காமலேயே போயிருக்கலாம்.
  இந்தக் காலங்களில் ஸ்டீவ் தன்னுடைய சந்தைப்படுத்தலில் திறமையை, நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தார். இந்த நகரத்தில் தனக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என்று திடமாக நம்பினார். தன்னுடைய திறமையின் மீது ஸ்டீவ்வுக்கு அபார நம்பிக்கை இருந்தது. நம்பிக்கையை விட புதிய கம்ப்யூட்டர்களைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் இருந்தது. முதன்முதலில் பவுல் டெரல்லுக்கு விற்பனை செய்திருந்த ஆப்பிள் I-ஐ முழுமையான கம்ப்யூட்டராக ஏற்றுக் கொள்ளாததும், எங்கே கம்ப்யூட்டர் என்று கேட்காத குறையாக பார்த்ததையும் நினைவில் வைத்துத் தான் செய்தவற்றை மேலும் மேலும் சிறப்பாக்க வேண்டும் என்ற வாஸ்ஸின் எண்ணத்தையும் எடுத்துக் கொண்டு தனது வாழ்வில் மிகச் சிறந்ததாக ஒரு கம்ப்யூட்டரை கட்டமைக்க வேண்டும் என்று முயற்சியை மேற்கொண்டார்.
  ஒரு தனி மனிதனால் கணினி உலகையே தொழில்நுட்பத்தால் அச்சுறுத்த வேண்டும் என்று தீராத தாகத்துடன் இருந்த ஸ்டீவ்வுக்கு சரியான ஒத்துழைப்பாக இருந்தது வாஸின் திறமை. கனவுகள் காண்பதற்குச் சுகமாகத்தான் இருக்கும். ஆனால் நடைமுறைப்படுத்துவது அவ்வளவு சுலபமாகாது என்றாலும், உழைத்தனர் தன்னம்பிக்கையுடன். ஒரு வருட உழைப்பில் தன்னுடைய தொழில்நுட்ப கனவுகளுக்கு விடை கிடைத்தது ஆப்பிள் II என்ற வடிவில்.
  தான் கண்ட கனவுகளும், லட்சியங்களும், தொழில்நுட்பத்தில் புதுமையும் ஆப்பிள் II-ல் இருப்பதை உணர்ந்தார் ஸ்டீவ். அப்படி என்ன தொழில்நுட்பப் புரட்சி ஆப்பிள் II-ல்…
  ஸ்டீவ் எப்போதும் மென்மையான உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார். எப்படியாவது முன்னேறிவிட முடியும் என்கிற நம்பிக்கை ஒன்று மட்டும் தான் அவரிடம் இருந்தது. அந்த நம்பிக்கை தான் அவரை ஆப்பிள் II கண்டுபிடிக்க உதவியது.
  அந்தக் காலத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள் பிளாக் அண்ட் ஒயிட். ஸ்டீவ்வின் புத்தியே அவரின் மூலதனமாக இருந்தது. யோசித்தார். இருண்ட காலத்தில் இயங்கிக் கொண்டிருந்த பிளாக் அண்ட் ஒயிட் கம்ப்யூட்டருக்குக் கலர் அடித்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தார். கலர் அடித்தார். அதுவரை கம்ப்யூட்டரை ஆன் செய்தால், ஒவ்வொரு லைனாக படித்துவிட்டு பின்னர்தான் நாம் பயன் படுத்தும் ஸ்கிரீனுக்கு வரும். கம்ப்யூட்டரை ஆன் செய்தவுடன் பயன் படுத்துவதற்கு ஏதுவாக இருக்க, கம்ப்யூட்டர் இயங்குவதற்கான பேஸிக் புரோகிராமைத் தானே தயார் செய்தார்.
  1977ல் இப்படி ஸ்டீவ்வின் சிந்தனைப் போக்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வெளிவந்த இரண்டாம் ஆப்பிள் என்றழைக்கப்பட்ட இந்த கணினி கலர் கிராபிக்ஸ் உடன் பெரும் வரவேற்பைப் பெற்றது. கலர் கிராபிக்ஸ் மட்டுமின்றி முதல்முறையாக கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவதற்கான வழிவகைகளும் செய்யப்பட்டிருந்தது.
  முதன்முதலில் Coding-ஆக இருந்த கம்ப்யூட்டர் துறையை GUI என்றழைக்கப்படும் கிராபிக்கல் யூசர் இன்டர்ஃபேஸ் (Graphical User Interface) என்னும் எளிய தொழில்நுட்பத்தின் மூலம் சராசரி மனிதனும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்த முடியும் என்பதை ஆப்பிள் II-வின் மூலம் நனவாக்கினார். தம் கனவுகளில் திரும்பத் திரும்ப கண்ட தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் II-க்குச் சரியான மரியாதையைச் செய்ய வேண்டும் என்று எண்ணினார். இதன் புதுத் தொழில்நுட்பத்தைச் சரியான அளவில் விளம்பரம் செய்தால் தான் வியாபாரத்தை வளர்க்க முடியும் என்று நினைத்த ஸ்டீவ் அதை ஹோம் புரூ கிளப்பில் அறிமுகப்படுத்தும் எண்ணத்தைக் கைவிட்டார். மிகுந்த முன் யோசனையுடன் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்தார். முதன்முதலாக பெர்ஸனல் கம்ப்யூட்டர் திருவிழா நடந்த அட்லாண்டிக் சிட்டியை நோக்கிப் பயணித்தார்.
  வாடிக்கையாளர்களிடமிருந்தும், போட்டி நிறுவனங்களிடமிருந்தும், பங்குதாரர் களிடமிருந்தும் கற்பதற்கு நிறைய விசயங்கள் இருக்கின்றன என்று நினைத்த ஸ்டீவ், தான் உருவாக்கிய பொருள்களைப் பற்றி பல்வேறு பின்னணியில் உள்ள வாடிக்கையாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார். அவர்கள் கூறிய முக்கிய கருத்தான சிறப்பான பொருள் இருந்தால் மட்டும் போதாது அதற்கு விளம்பரம் மிகவும் முக்கியம் என்பதை கவனத்தில் கொண்டார்.
  போட்டி நிறுவனங்கள் குறிப்பாக இன்டெல்லின் விளம்பரங்கள் மற்றவர்களைக் காட்டிலும் புதுமையாகவும், எளிதில் ஈர்க்கக்கூடியதாகவும் இருப்பதாய் உணர்ந்தார். பொதுவாக சராசரியான மக்களை டெக்னிக்கல் சமாச்சாரங்கள் எளிதில் புரியாது. ஆனால் இன்டெல்லின் விளம்பரமோ டெக்னாலஜியின் சமாச்சாரங்களை சொல்லாமல் அதன் டெக்னிக்கல் விஷயம் எளிய மக்களை கவரும் விதத்தில் விளம்பரம் செய்திருந்தது ஸ்டீவ்வை மிகவும் கவர்ந்தது.
  தன்னுடைய பொருளுக்கும் இந்த விளம்பரத்தை தயார்செய்த ஏஜென்சி தான் தயார்செய்து தர வேண்டும் என்று முடிவெடுத்த ஜாப் விளம்பரக் கம்பெனியை அணுகினார். அந்த விளம்பரக் கம்பெனியோ வாயடைத்துப் போனது. ஆச்சரியப்பட்டல்ல ஸ்டீவ்வின் அதீத தன்னம்பிக்கையை நினைத்து. ஒருவாறு சமாளித்து இதோ பாருங்கள் நாங்கள் விளம்பரம் செய்து தருமளவிற்கு நீங்கள் இன்னும் வளரவில்லை. வேறு நிறுவனங்களை அணுகுங்கள் என்றனர். விடவில்லை ஸ்டீவ். ‘நான் சொல்வதைக் கேளுங்கள். எங்களுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. சிறந்த டெக்னாலஜியை வைத்திருக்கிறோம். கண்டிப்பாக நாங்கள் ஒரு பெரிய கம்பெனியாக வளருவோம். அவசரப்பட்டு வேண்டாம் என்று கூறாதீர்கள்’ என்று பிடிவாதம் பிடித்த ஸ்டீவ்வின் வழிக்கு வந்தது அந்த விளம்பரக் கம்பெனி.
  ஸ்டீவ்வின் எண்ண ஓட்டம் காலத்துக்குக் காலம் எப்படி வளர்ந்து உருப்பெற்று வந்திருக்கிறது. எப்படி தன் கருத்துக்களைப் பதிவு செய்வது என்பதையெல்லாம் இந்த விளம்பர யுக்தியின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். எங்கே, எப்படி விளம்பரம் செய்வது என யோசித்தார்கள். இறுதியில் தன்னுடைய ஆப்பிளின் பெரும்பான்மையான கஸ்டமர்கள் யார் என்று ஒரு சர்வே செய்ததில் கிடைத்த பதில் ஆண்கள். ஆண்கள் அதிகம் விரும்பிப் படிக்கும் பத்திரிக்கை எது என்று தேடியதில் கிடைத்தது ஒரு பத்திரிக்கை, பிளேபாய்.
  பிளேபாய் அன்றைய காலகட்டத்தில் அதிகமாக விளம்பரக் கட்டணம் பெற்றுக்கொண்டிருந்த பத்திரிக்கை. அதில் விளம்பரம் என்று முடிவானதும் விளம்பரக் கட்டணம் கட்ட முடியவில்லை. ஸ்டீவ்வுக்கு அது ஒரு சறுக்கலாகத்தான் இருந்திருக்கும். சரியாக எடை போடாத சறுக்கல் இது என்றாலும் உங்களுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்று அந்த விளம்பர ஏஜென்சியே ஒரு வழியையும் காட்டியது. தன்னுடைய கஸ்டமர்களின் எண்ணைக் கொடுத்து யாராவது உங்கள் கம்பெனியில் முதலீடு செய்வார்களா எனக் கேட்டுப் பார்க்கச் சொல்லியது.
  எண்களை டயல் செய்து, லைன் கிடைத்ததும் தன் கம்பெனியின் அருமை பெருமைகளையும், கம்ப்யூட்டரின் தொழில்நுட்பத்தையும் விலாவாரியாக விவரித்தும் யாரும் முதலீடு செய்ய முன்வரவில்லை. ஒவ்வொரு முறையும் புதுபுது கஷ்டமர்களைப் பார்த்துவிட்டு திரும்பும்போது சில நிமிடங்கள் கவலைப்படுவார். பிறகு சுதாரித்துக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கிப் போகத் தொடங்கிவிடுவார். அப்படிப் பார்க்கப்போனபோது அகப்பட்டார் வேலைண்டின்.
  வேலைண்டின் – சிலிக்கான் வேலியில் கம்பெனி ஆரம்பிப்பவர்களுக்கு கனவு நாயகன். எத்தனையோ புதிய கம்பெனிகள் தொடங்க முதலீட்டைக் கொடுத்தவர் ஸ்டீவ்வுடன் பேசினார் முதலீடு சம்பந்தமாக. தன்னால் பெரிய அளவில் முதலீடு செய்ய முடியாது என்று கூறியவரிடம் நிச்சயமாக பல மில்லியன் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்ய முடியும், பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றெல்லாம் சொன்னார் ஸ்டீவ். இப்படி சொற்களில் இருப்பது எல்லாம் நடைமுறை சாத்தியமில்லை என்று எண்ணத்தில் இருந்த வேலைண்டின் முதலீடு செய்ய மறுத்துவிட்டார். ஆனாலும் முதலீட்டுக்கு ஒரு வழியையும் காட்டினார். தன்னுடைய நெருங்கிய நண்பரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் மைக் மார்குலா.
  மைக் மார்குலா இன்டெல்லின் மார்க்கெட் லீடராய் இருந்தவர். எல்லோரும் சம்பாதிக்க ஆரம்பிக்கும் காலமான 30 வயதில் ஓய்வு பெற்றார் சம்பாதித்த திருப்தியுடன். என்னை நம்புங்கள், என் கண்டுபிடிப்பை விளம்பரம் செய்து விற்பனை செய்ய உதவுங்கள் என்றெல்லாம் பேசிய ஸ்டீவ்வின் பேச்சில் உடன்பட்ட அவர் மைக் ஸ்டீவ்வின் காரேஜ்ஜிற்கு வந்தார். பார்த்தார். ஸ்டீவ்வுடன் இணைந்தார். அந்தத் தருணத்துக்காகவே காத்திருந்த ஸ்டீவ் தன்னுடைய எண்ணங்களை விவரித்தார்.
  கேட்டுக்கொண்ட மைக் தன்னுடைய சொந்தப் பணம் 91,000 டாலரை முதலீடு செய்ததுடன் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி 25,000 டாலர் வங்கியில் கடனாகப் பெற்றுக் கொடுத்தார். இது இன்னும் இரண்டு வருடங்களில் ஆப்பிள் பார்ட்டூன் 500 கம்பெனியாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும், தனக்குக் கம்பெனியில் 30% பங்கும், ஒரு நிபந்தனையும் விதித்தார். அது ஹெச்.பி.யில் இருந்து வாஸ் ராஜினாமா செய்வது. வாஸ் மறுத்தார் வேலையைவிட. காரணம் இல்லாமல் இல்லை. 5 மில்லியன் டாலர் கம்பெனியாக இரண்டாண்டுகளில் மாறுவதே கடினமான சூழ்நிலையில் பார்ட்டூன் 500 எல்லாம் மலையைத் தலையில் முட்டி உடைப்பதைப் போல என்று உணர்ந்தார்.
  விடவில்லை ஸ்டீவ். தொடர்ந்து பேசினார். வாஸிடம் மட்டுமின்றி அவரின் நண்பர்கள், உறவினர்கள் என்று ஒவ்வொருவரிடமும் பேசினார். வாஸை கன்வீன்ஸ் பண்ணவைத்தார். இறுதியில் வென்றவர் ஸ்டீவே. ஹெச்.பி.-யை விட்டு ஆப்பிளை நோக்கி வந்தார் வாஸ். விளம்பரம் தயாரானது. ராப் ஜனாஃப் என்ற கலை இயக்குனரை அழைத்து புதிய லோகோவை வடிவமைக்க வைத்தார் ஸ்டீவ் ஒரு நிபந்தனையுடன். ஆப்பிள் அழகாக இருக்கக்கூடாது என்பதுதான் நிபந்தனை. சிறிது நேரத்தில் ராப் தான் கடித்த ஆப்பிள் ஒன்றைக் கொண்டுவந்தார். அதே வடிவமைப்பில் அதே நிறங்களை வலியுறுத்தி வரைய வைத்தார்.
  முதல் வெஸ்ட் கோஸ்ட் கம்ப்யூட்டர் ஃபேரில் தான் அதுவரை செய்யப்பட்ட மூன்றே மூன்று ஆப்பிள் II கம்ப்யூட்டர்களை வைப்பதற்கு 5000 டாலர் செலவில் ஸ்டால் அமைக்கப்பட்டது. குவிந்தது ஆர்டர்கள் கன்னாபின்னாவென்று. 300 ஆர்டர்களை ஒரே நாளில் அள்ளியது ஆப்பிள் II. தன்னுடைய விற்பனை கனவில் கூட இல்லாத ஜப்பானில் இருந்து வந்திருந்த ஒருவர் தன் நாட்டில் விற்பனை செய்ய தனக்குத்தான் உரிமை வேண்டும் என்று பெற்றுக் கொண்டார்.
  யாரும் எதிர்பாராத விதமாகப் பள்ளிகள், கல்லூரிகள் என்று தன்னுடைய விற்பனைக்கு அப்பாற்பட்ட கஸ்டமர்களிடம் இருந்து ஆர்டர்கள் குவிந்தன. இதன் பிறகு எந்தக் கண்டுபிடிப்பாக இருந்தாலும் மாணவர்களையும், கல்வி நிறுவனங்களையும் குறிவைத்து வியாபாரம் செய்ய வேண்டும் என்ற யுக்தியை ஏற்படுத்தியது இந்நிகழ்வு.

  Subscribe for new post

  ஆளை அசத்தும் ஆளுமை

  ஆளுமைப் பண்பு மேம்பட வேண்டுமானால்
  ஒருவர் தன்னைத்தானே ஓரளவு சரியாக
  மதிப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.

  ஆளுமை பற்றிய அறிவியலின் பதிவு
  ஆளுமைப்பண்பு ஒரு மனிதனைப் பிறரிடமிருந்து பிரித்துக் காட்டும் தனித்துவமானதாகும். நமது எண்ணம், உணர்ச்சிகள், பேச்சு, செயல்கள் மூலம் நமது ஆளுமைப் பண்பு வெளிப்படுகிறது. நமது சுற்றுச் சூழலுக்கு ஏற்றபடி இணக்கமாக நடந்து கொள்வதையும் சமுதாயத்தில் நமக்குரிய மதிப்பினையும் நமது நல்வாழ்வினையும் நமது ஆளுமைப்பண்பு நிர்ணயிக்கிறது.
  நமது மதிப்புகள் (Values) நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளை நமது ஆளுமைப்பண்பு நிர்ணயிக்கிறது. ஒருவரது ஆளுமைப்பண்பை நிர்ணயிப்பதில் அவரது பாரம்பரியம், சுற்றுச்சூழல் இரண்டுமே பெரும்பங்கு வகிப்பதாக கூறப்படுகின்றது.
  குறிப்பிட்ட சமூகத்திலே வாழ்பவர்களின் ஆளுமைப்பண்பை ஒரே வழியிலேயே பாரம்பரியம் நிர்ணயிப்பதையும் காண்கிறோம். காரணம் அதே சமூகச்சூழலில் வாழும் மக்களுடனான பாரம்பரிய உறவுகளே. நமது பாரம்பரிய உடலியல் மற்றும் உளவியல் திறன்கள் பிறர் நம்மை எவ்வாறு கருதுகிறார்கள் என்பதையும் விளைவாக நம்மைப்பற்றியே நாம் எவ்வாறு நினைக்கிறோம் என்பதையும் நிர்ணயிக்கின்றன.
  தாயின் கருப்பையிலிருக்கும்போதே ஆளுமைப்பண்பின் வளர்ச்சி ஆரம்பித்துவிடுகின்றது என்பது ரேங்க் போன்ற உளவியல் நிபுணர்களது கருத்து.
  ஒரு குழந்தையைச் சுற்றியோ அல்லது ஒரு நபரைச் சுற்றியோ, நடக்கக்கூடிய நிகழ்வுகள் அனைத்தும் அதன் ஆளுமைத்தன்மையைப் பாதிக்கின்றன அல்லது தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்கிறார் ஃப்ரூயிட் அவர்கள்.
  பொதுவாக ஆளுமைப்பண்பு மேம்பட வேண்டுமானால் ஒருவர் தன்னைத்தானே ஓரளவு சரியாக மதிப்பிடக் கற்றுக்கொள்ள வேண்டும்.
  நான் யார்? நான் எவ்வாறு நடந்து கொள்கின்றேன்? நான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றேன்? இந்நிலைக்கு எப்படி வந்தேன்? என்கிற பாணியிலே நம்மை நாம் ஆய்வு செய்து நடுநிலையான பதிலை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். பின்பு மற்றவர்களின் எதிர்பார்ப்புக்கும் மேலாக நம்மை நாம் மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் சொந்த வாழ்வில் நீங்கள் ஒரு தலைவராக விளங்க முடியும்.
  வாழ்வில் பெரும்பாலானவர்கள் பின்பற்றுபவர்களாகவே இருக்கிறார்கள். தமக்கு வழிகாட்டவும், தம் சிக்கல்களில் தமக்கு உதவவும் கூடிய ஒருவரை எப்போதும் எதிர்பார்த்தே இருக்கின்றார்கள். ஆகையினால் நீங்கள் வழிநடத்தக்கூடிய நல்ல தலைவராகும் வாய்ப்பு கனிந்து வருகின்றது. கைப்பற்றுங்கள். கவனமாக முன்னேறுங்கள். இதைவிட ஒரு நல்ல தருணம் இனிவராது.
  ஆளுமைப்பண்பு மேம்பட, புதிய தொடர்புகளை மும்முரமாகத் தேடுங்கள். புதிய மனிதர்களுடன் கருத்தாகப் பேசுங்கள். ஒரு நிகழ்ச்சியில் அல்லது கூட்டத்தில் அல்லது ஒரு பொது இடத்தில் நீங்கள் இருக்க நேரும் போதெல்லாம் புதுப்புது மனிதர்களைச் சந்திக்க முயலுங்கள். அவர்களைப் பற்றியும், அவர்கள் செய்வதைப் பற்றியும், அவர்களிடம் கேள்விகள் கேளுங்கள். அவர்கள் கூறுவதில் எதுவும் நீங்கள் அக்கறை கொண்டிருக்கும் எதனோடும் தொடர்புடையாக இருந்தால் பேச்சுக்கான ஒரு தொடக்கமாக அவர்களிடம் மேலதிகக் கேள்விகள் கேளுங்கள். அவர்கள் சொல்ல இருப்பவற்றில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் அவர்கள் உங்களுக்கு உதவக்கூடுமா எனப் பாருங்க

  Subscribe for new post