– 2011 – February | தன்னம்பிக்கை

Home » 2011 » February

 
 • Categories


 • Archives


  Follow us on

  மு. மேத்தா கவிதை

  ஒரு பழமொழி உதிர்கிறது
  ….
  என்னுடைய சாதியை
  இழிவாகப் பேசினான்……
  துடிக்கிறது இரத்தம்!”
  துள்ளினான் நண்பன்!

  அருகில் இருந்த தோழன்
  ஆத்திரத்துடன் கேட்டான்:

  விபத்தில் அடிபட்டு
  விழுந்து கிடந்தாய்
  மரணப் படுக்கையில்……
  ஊரே சேர்ந்துனக்கு
  உதிரம் கொடுத்தது……

  அத்தனை சாதி இரத்தமும்
  ஒன்றாய்க் கலந்து
  ஓடுகிறது உன் உடம்பில்!

  இப்போது சொல்
  உனக்குள்
  எந்த சாதியின்
  இரத்தம் துடிக்கிறது?”

  கவிதைகள்

  வீழ்ந்ததில்லை
  -பாவலர் கருமலைத்தமிழாழன்
  நாணல்போல் வளைவதினை
  நலிவெனநீ எண்ணாதே
  கூனல்போல் பணிவுடனே
  குனிந்தவனோ தாழ்ந்ததில்லை!

  பொய்மையினால் வரும் செல்வம்
  பெரிதெனவே எண்ணாதே
  மெய்மையினைத் துறந்தவனோ
  மேதினியில் நின்றதில்லை!

  பிறர்பொருளைக் கவர்வதுவே
  பெருமறிவாய் எண்ணாதே
  அறம்வழுவிச் சேர்த்ததெல்லாம்
  அமைதிதனைத் தந்ததில்லை!

  வீண்பெருமை பேச்சுயர்வை
  விளைக்குமென எண்ணாதே
  மாண்புகழில் மயங்கியவள்
  மதிப்புடனே வாழ்ந்ததில்லை!

  தோல்விகளைக் கண்டஞ்சித்
  தொடருமென எண்ணாதே
  ஆல்விழுதாய் நம்பிக்கை
  அற்றவனோ வென்றதில்லை!

  உழைக்காமல் வாழ்க்கையிலே
  உயர்தற்கே எண்ணாதே
  தழைப்பதற்குத் தோள்களினைத்
  தந்தவனோ வீழ்ந்ததில்லை!

  போராட்டமே வாழ்க்கை
  –    கவிஞர் ஞானசித்தன், சென்னை
  துணிவும் பணிவும்
  துணையானால்
  திறக்காத கதவும் திறக்கும்

  முயற்சியொன்றே
  மூச்சாக இருந்தால்
  யார் உன்னைத் தடுக்க முடியும்
  எப்படி உன்னை ஒடுக்க முடியும்

  போராட்டமே வாழ்க்கை
  இதுவே இறைவனின் இயற்கை
  இடர்களையும்
  இன்னல்களையும்
  வெல்வதே மனித வாழ்க்கை!

  வெற்றி பெறு
  -க. செல்லக்கண்ணு, தேனி
  வெற்றி சுலபமாக
  கிடைத்துவிடாது

  சுலபமாக
  கிடைத்துவிட்டால்
  அதை நீ
  வெற்றியாக சொல்லக்கூடாது.

  கடினப்பட்டு பெறு
  கவலை மறந்துபோகும்

  உழைத்துப் பெறு
  பிறர் உன்னை
  உதாசீனப்படுத்தியது
  மறந்துபோகும்

  விடியலை
  நோக்கி இரு
  ஒவ்வொரு நாளும்

  உழைப்பை கைவிடாதே
  உன்
  அருகில்தான்
  நீ
  தேடியது இருக்கிறது

  உழைத்து மட்டும் பார்
  நீ தேடியது மட்டுமல்ல
  நீ தேடாத
  எத்தனையோ
  உன் காலடியில் கிடக்கும்

  மூளையை
  சும்மா வைத்து விடாதே
  பிறரை
  முந்திச் செல்ல
  அதுதான் உதவும்

  உன்
  லட்சியத்திற்காக
  வேதனைப்படு

  உன்
  குறிக்கோளுக்காக
  கஷ்டப்படு

  ஓயாத உழைப்புக்கு
  வெகுமதியே கிடையாது

  சோதனையிலும்
  சாதனை காணுங்கள்
  மலர்மாலைகள்
  கழுத்தில் விழும்

  தொடர்ந்து
  வெற்றியை உமதாக்குங்கள்
  தேகத்தின்
  கைதட்டல்கள்
  உமக்காகும்

  தடைகள்
  உம்மை வலுவாக்கும்
  படிக்கட்டுதான்
  அதை
  தாவிக்குதிப்பதில் தவறில்லை

  என்னைவிட
  உழைப்பவர் எவருமில்லை  என
  உழைத்திடல் வேண்டும்

  எனக்காக எவரும்
  உழைப்பதில்லை  என
  நம் பாதையை
  நாமே அமைத்திடல் வேண்டும்

  உம்
  லட்சியத்திற்காக
  நீர் சிந்தும்
  வியர்வைத் துளிகள் தான்
  பின்னாளில்
  உம்மையே அலங்கரிக்கும்
  வைரக்கற்களாய் மாறும்

  திடமான
  மனவலிமை கொள்ள வேண்டும்
  சமூக தீமைகளை
  நீர் தானே கொல்ல வேண்டும்

  ஓயாத உழைப்பு
  உமக்கான பிறகு
  மாறாத வெற்றி
  உமக்காகத் தானே…

  பாஸ்போர்ட் வாங்குவது எப்படி?

  திரு. ந. சசிக்குமார், IFS

  ஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியம்.
  விண்ணப்பம்
  வெளிநாடுகளில் படிக்க விண்ணப்பிக்கும் போதே, கடவுச் சீட்டுக்கும் விண்ணப்பத்திட வேண்டும். இதன் மூலம் கடைசி நேரத்தில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பதற்றத்தையும் ஓரளவு தவிர்க்க முடியும். சமீபகாலமாக ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்களிலும் தொடங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டுப் பிரிவில் பெறலாம்.
  ஆவணங்கள்
  முக்கியமாக இரண்டு ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
  1.    இருப்பிடச் சான்றிதழ், 2. பிறப்புச் சான்றிதழ்.
  இருப்பிடச் சான்றாக – குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம், குடிநீர் வரி, மின் கட்டண ரசீது, தொலைபேசிக் கட்டண ரசீது, வருமான வரி மதிப்பீட்டுச் சான்றிதழ் போன்றவற்றைக் காட்டலாம்.
  பிறந்த நாளுக்கான ஆதாரமாக பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்களையோ, உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, அல்லது பதிவுத்துறை வழங்கும் சான்றிதழ்களையோ ஆதாரமாகக் காட்டலாம்.
  சனவரி 26, 1989க்குப் பிறகு பிறந்தவர்கள், வருவாய்த்துறை அல்லது பதிவுத்துறை வழங்கிய பிறப்புச் சான்றிதழ்களையே ஆதாரமாகக் கட்ட வேண்டும்.
  விண்ணப்பத்துடன் மேற்குறிப்பிட்ட இரண்டு சான்றிதழ்களின் நகல்களின் இரண்டு படிகளை இணைக்க வேண்டும். நேரடியாக கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்
  கிறவர்கள் உண்மைச் சான்றிதழ்களை உடன் எடுத்துச் சென்றால், சமர்ப்பித்துள்ள நகல்களுடன் ஒப்பிட்டு சரிபார்ப்பார்கள்.
  சொந்த ஊர்விட்டு வெளியூர் சென்று படிப்போர், விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் அப்பகுதிகளிலேயே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது பெற்றோர்கள் வசிக்கும் பகுதியிலும் விண்ணப்பிக்கலாம்.
  அவ்வாறு படிக்கும் இடத்தில் இருந்து விண்ணப்பிப்பதாயின், தங்கிப்படிக்கும் இடத்தின் முகவரியைத் தற்போதைய முகவரியாக அளிக்க வேண்டும். அதற்கான ஆதாரத்தை அந்தக் கல்வி நிறுவன தலைவரிடம் / முதல்வரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
  விண்ணப்பத்தில் இருப்பிட முகவரி தெளிவாக இருத்தல் வேண்டும்.
  பொதுவாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, அந்த அலுவலகத்திலிருந்து விண்ணப்பத்தை காவல் துறைக்கு அனுப்பி, நீங்கள் அந்தப்பகுதியில்தான் வசிக்கிறீர்களா? நீங்கள் ஏதேனும் கிரிமினல் குற்றம் புரிந்தவரா? அப்படி ஏதும் குற்றங்கள் உங்கள் பெயரில் உள்ளனவா என உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து விசாரித்து நீங்கள் குற்றமற்றவர் என காவல்துறை அறிக்கை பெற்ற பிறகே கடவுச்சீட்டு வழங்குவர்.
  சிறுவர்-சிறுமியர்
  சிறுவர்-சிறுமியர்க்கு (14 வயதுக்கு உட்பட்டவர்) கடவுச்சீட்டு எடுக்க விரும்பினால், பெற்றோர்கள் கடவுச்சீட்டு இருப்பவராக இருந்தால், காவல்துறை அறிக்கை தேவைப்படாது. பெற்றோர்க்கு கடவுச்சீட்டு இல்லாவிட்டால் அவர்தம் விண்ணப்பங்களும் காவல் துறைக்கு அனுப்பி அறிக்கை பெற்ற பின்னரே கடவுச்சீட்டு அளிப்பர்.
  கட்டணம்
  பொதுவாக சாதாரண கடவுச்சீட்டு பெற
  ரூ. 1000/- செலுத்தினால் போதுமானது . ஆனால் ஜம்போ கடவுச்சீட்டு பெற ரூ 1500/- கட்டணம் செலுத்த வேண்டும்.
  ஜம்போ கடவுச் சீட்டு – அடிக்கடி வெளிநாடு செல்கிறவர்கள் (பெரு வணிகர்கள் போன்றோர்) பெறக்கூடியது. சிறுவர் சிறுமியர்க்கு கட்டணம்
  ரூ. 600/-.
  தத்கல் திட்டம்
  பொதுவாக, கடவுச்சீட்டு விண்ணப்பங்களை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் செலுத்தி 30 நாள்களில் கடவுச்சீட்டு வழங்கப்பட்டு விடுகின்றன.
  அவசரமாக வெளிநாடு செல்பவர்க்கு உதவியாக விரைந்து கடவுச்சீட்டு பெறவும் வகையிருக்கிறது. இதற்கு “தத்கல் திட்டம்” என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் சிறப்புரிமை அடிப்படையில் விரைந்து கடவுச்சீட்டு பெற முடியும்.
  காவல்துறை சான்றிதழ் பெற்றவர்கள், காவல்துறைச் சான்று தேவைப்படாத 14 வயதுக்கு உட்பட்ட (கடவுச்சீட்டு உடைய பெற்றோர்களின் குழந்தைகள்) சிறுவர் சிறுமியர், ஆட்சேபனை இல்லாச் சான்று  பெற்ற அரசு ஊழியர்கள், அவர்களது துணைவியர் மற்றும் கடவுச்சீட்டை தொலைத்துவிட்டோர் மட்டுமே தத்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன் பெற முடியும்.
  அவ்வாறு விரைந்து கடவுச் சீட்டு பெற விழைவோர் ரூ.2500/- கட்டணமாக செலுத்த வேண்டும். 3 ஆவணங்கள் கட்டாயமாக சமர்பிக்க வேண்டும்.
  புதுப்பித்தல்
  கடவுச்சீட்டு பெற்றவர்கள் அதை 10 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். பிறகு புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு
  ரூ. 1000/- கட்டணம் செலுத்த வேண்டும்.
  மேலும் விபரங்களுக்கு
  1. மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், சாஸ்திரிபவன், நுங்கம்பாக்கம், சென்னை -34.
  2.    மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், டபிள்யூ.பி. சாலை, திருச்சி – 620 008.
  மேலும், புதுவையிலும், மதுரையிலும் கடவுச்சீட்டு விண்ணப்பம் பெறும் மையங்கள் உள்ளன.
  1.     பாஸ்போர்ட் விண்ணப்ப மையம், ஒருங் கிணைந்த கோழிப்பண்ணை மேம்பாட்டுத் திட்டக் கட்டடம், கால்நடைப் பராமரிப்புத்துறை வளாகம், மறைமலை அடிகள் சாலை, புதுவை – 605001.
  2.     பாஸ்போர்ட் விண்ணப்ப மையம், பழைய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடம், மதுரை – 625 001.
  மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், அவிநாசி சாலை, உப்பிலிபாளையம், கோவை.
  இணையத் தளங்கள் வழியாகவும் விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம். முகவரிகள் :
  htttp:passport.tn.nic.in, http://passport.gov.in/
  விண்ணப்பங்களை மேற்கண்ட அலுவலகங் களிலோ அல்லது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திலோ அல்லது முகவர்களிடமோ சமர்ப்பிக்கலாம். கடவுச்சீட்டு விண்ணப்பத்துடன் வழங்கப்படும் தகவல் மடிப்பிதழிலேயே அனைத்து விபரங்களும் உள்ளன.
  திரு. S. சசிக்குமார், IFS
  திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு இவரது சொந்த ஊர். தந்தை திரு. சங்கரன், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்தவர். தாய் திருமதி. காந்தாமணி, கோவை மாவட்ட பதிவாளர் பணியில் இருக்கும் திருமதி. மீனாகுமாரி இவரது மனைவி ஆவார். இரு குழந்தைகள் ரீது, ரீவா.
  அரசுப்பள்ளியில் பள்ளிப் படிப்பும், மதுரை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் B.Sc. (Agri) இளங்கலையும், கோவை தமிழ்நாடு பல்கலைக்கழகத்தில்M.Sc. (Agri) முதுகலையும், இந்திய விவசாய தொழில்நுட்பக் கல்லூரியில் Phd யும் முடித்தவர். 2001லிருந்து இந்திய அரசுப்பணியில் தன்னை இணைத்துக் கொண்டவர். மாவட்ட வன அலுவலராக மேற்கு வங்கத்திலும், டெல்லி மத்திய உள்துறை அமைச்சகத்தில் இரண்டு ஆண்டுகளும், பொதுநல அமைச்சகத்தில் ஒரு வருடமும் பணி அனுபவம் பெற்று தற்பொழுது கோவை மண்டல கடவுச்சீட்டு அதிகாரியாக பணிபுரிந்து வரக்கூடியவர்.

  தவறு செய்தால் மன்னிப்புக்கேள்

  –    என். நடராஜன் நாகரெத்தினம்
  மகன் அழைக்கிறான். எனவே ராமசாமி, மனைவியுடன் அமெரிக்கா போகத் தயாராகிறார். பத்து அல்லது இருபது வருடம் முன்னால் இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அமெரிக்காவில் பல இடங்களைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டிருப்பார். வயது கூடிவரும்போது ஆசைகளை அது அழித்துவிடும் இல்லையா?
  இப்போது போவது பேரனுடன் சில மாதங்களைச் செலவழிக்க ஆசைப்பட்டுத்தான்.
  சிரமமான 18 மணி நேரத்திற்கு குறையாத பயணம். மகன் வீட்டை அடைந்து ஒரு சில நாட்கள் நன்றாகவே கழிந்தன. பேரனுக்கு பரிசு தர விரும்பாத தாத்தா உண்டா?
  மகனிடம் ஒரு உதவி கேட்கிறார். சமயம் கிடைத்தபோது தன்னை கடைகளுக்கு அழைத்துச் செல்ல கேட்டுக் கொள்கிறார்.
  உடனே மகன் கோபம் கொள்கிறான். “பணம் இங்கே கொட்டிக் கிடக்கவில்லை… இன்னமும் ஏதோதோ…” தந்தைக்குப் புரிகிறது. மகனுக்கு ஏதோ பணமுடை போலும். தந்தை இடை மறிக்கிறார். ‘தான் வரும்போது பரிசுகளை வாங்கத் தேவையான பணம் கொண்டு வந்திருப்பதாகவும், தான் கேட்பது, முடிந்தபோது கடைகளுக்கு அழைத்துச் செல்லும் உதவி மாத்திரமே’ என்று சொன்னார்.
  தனையன் தான் அவசரப்பட்டதை உணர்ந்து உடனே, தன் பணப் புழக்கத்தில் கஷ்டம் இருப்பதாகச் சொல்லியிருக்கலாம். அதோடு மரியாதை இல்லாமல் பேசியதற்கு மன்னிப்புக் கேட்டிருக்கலாம். பெரியவர்களும் அதோடு மறந்திருப்பார்கள்.
  ஆனால், மகனுக்கு அது சரி எனத் தோன்றவில்லையோ? தவறு செய்வதில் சிறிதும் குறையாத தனது தன்மானத்திற்கு தந்தையிடம் மன்னிப்புக் கேட்டால் குறைவுவரும் என்ற பயமா?
  ‘உன்னிடம் ஏது பணம்? எல்லாமே என் பணம் தான். என் பணத்தில் எனக்கே பரிசு தருவது என்ன ஒரு செயல்’ என்றெல்லாம் மேலும் மேலும் விடாமல் தொடர, பெரியவர்கள் இனிமேல் தன் வாழ்நாளுக்கும் இந்த மகனின் தொடர்பு போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, துயரத்துடன் நாடு திரும்பியதாக முடிகிறது இந்த கதை.
  பெற்றோர் துக்கத்தைச் சுமந்தாலும், தன் புத்திர செல்வங்களைக் கண்டு பயந்தாலும், அவர்களை முழுவதும் வெறுப்பதோ அல்லது அவர்களுக்கு கேடு செய்வதோ இல்லை.
  ஒருவர் மிகவும் தைரியசாலி என்றால், அவர் பொய் சொல்லாதவராக இருக்க வேண்டும். தான் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வதில் தயங்கக் கூடாது. இவை இரண்டும் இல்லாதவர் ஒரு கோழைதான். மன்னிப்புக் கேட்டவர் எவரையும் நாம் வாழும் சமூகத்தில் குறைவாக மதிப்பிட்டதில்லை. தவறு செய்தும் மன்னிப்புக் கேட்காதவர்கள், நிரந்தரமாக புண்பட்டவரின் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்கிறார்கள்.
  உங்கள் புத்திர செல்வங்களுக்கு நீங்கள் அளிக்கும் உண்மையான செல்வம், காசு, பணம், நிலம், வீடு அல்ல. அவர்கள் சிறு வயதிலே தவறு செய்யும்போது, மனதார மன்னிப்புக் கேட்கும் ஒரு குணத்தை, இது வீட்டிலும், வாழும் சமூகத்திலும், விரோதங்கள் வளராமல் செய்யும்.
  இந்த குணம் வளர்க்காதவர்கள், தோல்விகளைச் சுமப்பார்கள்.
  வெற்றிக்கு ஒரு வழி
  நமக்கு பாதகமான சூழ்நிலைகளை சாதகமாக மாற்றுவது.
  துயர் உன்னை தொடரும்போது  துவளாதே, துரத்து
  நல்லவரோ, தீயவரோ, வல்லவரோ, எளியவரோ, சாமியாரோ, குடும்பியோ, மனிதனோ, மிருகமோ யாரும் என்றுமே. எப்போதும் துயரம் தொடராமல் வாழ்ந்ததில்லை. துயரத்திலிருந்து தப்பித்ததில்லை. யாருமே வாழ்வின் ஆரம்பம் முதல் முடிவு வரை சாதகமான சூழ்நிலையில் மாத்திரம் வாழ்ந்து, மடிந்ததில்லை.
  துயரம் நம்மை பல உருவங்களில் துரத்தும். உதாரணமாக தொழில் நஷ்டம், வேலையில் தொல்லை, நமக்கும் நம்மை அடுத்தோர்க்கும் உடல் நலக்கேடு. முயற்சிகளில் தோல்வி, பிரியமானவரின் பிரிவு இதுபோன்ற துயரம் தரும் நிகழ்ச்சிகள் எல்லாருடைய வாழ்விலும், வெவ்வேறு கட்டங்களில் நுழைவது இயற்கையே.
  இவைகளை எவ்வாறு எதிர்கொண்டு வெல்லுவது என்ற சிந்தனை நமக்கு வேண்டும். அய்யோ, அப்பா என்று கதறி மற்றவரின் அனுதாபங்களைத் தேடுவதும், ஓடி ஒளிவதும், தற்கொலை, கொலை போன்ற அறிவற்ற செயல்களும், நமக்கு நல்ல பலனைத் தராது.
  மாறாக, முயற்சியும் துணிவும் கொண்டால், நாம் அடைந்த துயரத்தை நமக்கே சாதகமாகப் பயன்படுத்தும் வழிகள் பிறக்கும். அதனால் நமது வாழ்வு சிறப்பாக இருக்கும்.
  நாம் மனது வைத்தால், எந்த பாதகமான சூழ்நிலையையும் சாதகமாக மாற்றிக் கொள்ள முடியும்.
  இறைவனின் தூதுவராக நாம் வணங்கும் புனிதர் யேசு சிலுவையில் அறையப்பட்டார். மக்களை நல்வழிப்படுத்தப் பாடுபட்ட தீர்க்கதரிசியார் முகம்மது கல்லால் அடிக்கப்பட்டார். அப்படி இருக்கும்போது, பழி பாவங்களில் சிக்கி சாதாரண மக்களாக உழலும் நாம் எம்மாத்திரம்?
  அதுவும் உலகத்தின் எல்லாப் பகுதிகளிலும், இன்று நேற்றல்ல, காலம் காலமாக நடைபெறும் அதிசயம். இதனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,
  படைத்த கடவுளே ஆசைப்பட்டாலும், தீமையை என்றுமே தனியே பிரித்து அதை அழிக்க முடியாது. தீமை, நன்மையின் பிரிக்க முடியாத பாகம்.
  உயிரினமான நாம் எல்லோருமே நம்மை அறிந்தோ, அறியாமலோ, விரும்பியும் விரும்பாமலும், சாதகமான மற்றும் பாதகமான சூழ்நிலைக்கு மாறி மாறி தள்ளப்படுகின்றோம்.
  சாதகமான சூழ்நிலையிலும் குதூகலிக்கும் நாம், பாதகமான சூழ்நிலைகளில், நிலை தடுமாறி விடுகிறோம். இந்த கடவுளின் படைப்பில், ஏனோ தவிர்க்க வேண்டிய ஒரு தவறு நடந்து விட்டதைப் போல நினைத்துக் கொள்கிறோம். குமுறுகிறோம்.
  அப்படியானால், “துன்பம் வந்தால் என்னதான் செய்ய வேண்டும்?” என்ற கேள்விக்கு பதில், “அடுத்து வரும் கதையின் கதாநாயகனான கழுதையைப் பின்பற்ற வேண்டும்” என்பதே.
  துயரத்துக்கு நம்மேல் ஏன் அப்படி ஒரு பாசம்?
  முக்கியமான காரணம் என்று பார்த்தால்  நமது அநியாய ஆசைகள்  வழக்கமான தப்புக் கணக்குகள்  மற்றவரை ஏமாற்ற முயற்சி செய்வது  உழைக்காமல் உயர்வைத் தேடுவது  அதிக லாபம் தேடுவது  இது போல பல வழுக்கலான விவகாரங்கள் துயரமாக மாறி மனிதனைத் துரத்துகிறது.
  உயிரினம் எல்லாமே, எப்போதுமே மற்ற உயிரினத்தால் ஏதாவது ஒரு வகையில், பயனோ அல்லது பயமோ கொண்டு வாழ்ந்து வருகிறது. இதோடு இயற்கையும் கூட்டணி அமைக்கும்போது வாழ்க்கை சூடு பிடிக்கிறது.
  இங்கே பாருங்க அதிசயத்தை!
  எந்தவொரு உயிரோ அல்லது பொருளோ, நல்லதோ, பொல்லாததோ  மற்றவரை வெவ்வேறு விதமாகப் பாதிக்கும் அல்லது பலன் தரும். குழப்பமா? மேலே கூறின இயற்கையின் சீற்றம் பொது மக்கள் பலரின் உயிரைக் குடித்து, பலரின் வாழ்க்கையைச் சிதைத்தாலும், அதுவே, சில அரசு அலுவலர், சில அரசியல்வாதிகள் என்ற வேறு சில மக்களை பெரும் செல்வம் பெற்று பெருவாழ்வு வாழ காரணமாகிறது அல்லவா?
  சிலருக்கு நன்மை தரும் ஒரு உயிரோ, ஒரு பொருளோ, மற்ற பலருக்கு வெவ்வேறு அளவுகளில் தீமை தரும். சிலருக்கு தீமை தருமென நம்பப்படுபவை பலருக்கு பல்வேறு அளவுகளில் நன்மையும் தருவதால், எதையுமே, எவரையுமே, எக்காலத்திலும்  நன்மை, தீமை என்று இனம் காண முடியாது.

  ஜெயம் பிராணி நல அறக்கட்டளை

  ஜெயம் பிராணி நல அறக்கட்டளை என்று நிறுவி பணியாற்றவேண்டும் என்கிற எண்ணம் எப்படி உதித்தது?

  என்கிற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப நான் கால்நடை பராமரிப்புத் துறையில் 36 1/2 ஆண்டுகள் கால்நடை ஆய்வாளராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றபின்பு இந்த வாழ்க்கையின் உயர்விற்கு வாய்ப்பும், வசதியும் ஏற்படுத்திக் கொடுத்த கால்நடைகளுக்கும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் ஏதாவது நன்றிக் கடன் ஆற்றவேண்டும் என்கிற வெறியில் ஆரம்பிக்கப்பட்டது இந்த அறக்கட்டளை. செய்யத் தெரியாத வேலையைத் தேர்ந்தெடுத்து தோல்வியுறுவதைவிட, செய்யத்தெரிந்த வேலையைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெற மனம் எண்ணியதும் ஒரு காரணம்.
  மனிதன் வாழ்வதற்காக தன் ரத்தத்தையே பாலாக மாற்றி தரும் பசுக்களையும், ஏழைகளின் பொருளாதார நிலை மேம்பாடு அடைய உதவிடும் வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளையும், மனிதனின் சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டிற்கு சுழற்சியாகப் பயன்படும் கால்நடை உப பொருட்களாகப் பாதுகாத்து நம் சந்ததியினருக்கு இயற்கை சார்ந்த கலப்படமற்ற உணவுப்பொருட்களை வழங்கிட வேண்டும் என்கிற அவாவில் ஆரம்பிக்கப்பட்டது இந்த அறக்கட்டளை.
  பாலைப் பொழிந்து தரும் பாப்பா, அந்தப் பசு மிக்க நல்லதடி பாப்பா, வாலைக் குலைந்து வரும் நாய்தான் அது மனிதருக்கு தோழனடி பாப்பா என்கிற பாரதியின் வாக்கினையும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று ரத்தக் கண்ணீர் வடித்த வள்ளலாரின் வாக்கிற்கிணங்கவும் நமக்குதவும் கால்நடைகள் வாடிய போதெல்லாம் அதனைத் தேற்றிடவும், இயற்கை சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கவும் நினைத்தது மற்ற காரணங்கள்.
  இந்த அறக்கட்டளையின் நோக்கங்கள் என்னவென்று தெளிவாக தெரிந்து கொள்ளலாமா?
  கால்நடைகளுக்கு நலம் புரிய வேண்டும் என்பதும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், உலகம் வெப்பமயமாவதைத் தடுக்க விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் உடலுக்கு கேடு புரியும் அசைவ உணவைத் தவிர்த்து சைவ உணவில் மேல் பற்று ஏற்படுத்திடவும், விழிப்புணர்ச்சி முகாம்களை நடத்திடச் செய்வதும் பிரதான நோக்கங்கள். இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு பேரிழப்புகளை கொடுக்கும்போது நம்மாலான உதவிகளைச் செய்வதும் கால்நடை வளர்ப்பு பற்றியும், இயற்கை விவசாய மாதிரி விளக்கப் பண்ணைகள் அமைக்கவும், சுயஉதவிக் குழுக்களுக்கு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட கால்நடை வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளை அளித்து ஊக்கப்படுத்தவும், முதியோர் வாழ இல்லம் இருப்பது மாதிரி முடியாத கால்நடைகளுக்கு கருணை இல்லம் மற்றும் ஆநிரைக் காப்பகம் ஏற்படுத்தவும், வாயில்லா ஜீவன்களுக்கு இரக்கமுடைய இலவச வைத்திய வசதி ஏற்படுத்தவும், தெரு நாய்களுக்கு அதன் இனப்பெருக்கத்தைத் தடுக்க குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்திடவும், வெறி நாய்கடி நோய் பரவி மனிதர்களுக்கும், பிறபிராணிகளுக்கும் நோய் பரவா வண்ணம் இலவச வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம்கள் நடத்திடவும் இலக்கு. கோசாலா அமைத்து மாடுகள் வளர்த்து அதன் சிறுநீர், சாணம், பால், தயிர், நெய் முதலான உப பொருட்கள் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் வியாதிகளுக்கு மருந்துகள் தயாரிக்க திட்டமும் உள்ளது. பக்க விளைவுகள் இல்லாத அந்த மருந்துகள் மூலம் உலகளாவிய அந்த வியாதிகளுக்கு வரப்பிரசாதமாக அமையப்போகும் வகையில் அதிதீவிரமான திட்டங்கள் இருக்கிறது.
  பிராணிகளுக்கு துயரம் இழைக்கும் நிலை இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு உங்கள் அறக்கட்டளை என்ன செய்யப் போகிறது?
  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிராணிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் ஏராளமாக இருக்கிறது. கொடுமை என்று தெரியாமலேயே அது நடந்தேறி வருவது வேதனைக்குரியது. கோழிகளை தலை கீழாகத் தொங்கவிட்டுக் கொண்டு வருவதும், ஆடுகளை இரு சக்கர வாகனங்களில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி சந்தைக்குக் கொண்டு வருவதும் அவர்களுக்கு கொடுமையாகவே தெரியவில்லை. மினிடோர் வண்டிகளிலும், லாரிகளிலும் அளவிற்கதிகமான கால்நடைகளை ஏற்றி வருவதும் நிறையவே சகஜமாய் நடக்கிறது. பெரிய மாடுகளுக்கு குறைந்த பட்சம் இரண்டு முதல் இரண்டரை சதுர மீட்டர் பரப்பளவும், ஆடுகளுக்கு அரை சதுர மீட்டர் பரப்பளவும் கண்டிப்பாக இருக்க வேண்டும். படுக்க புல்லால் ஆன மெத்தை இருக்க வேண்டும். பிரயாணத்தின்போது அந்த கால்நடை பிரயாணத்திற்கு தகுதியானது என கால்நடை மருத்துவர் சான்று இருக்க வேண்டும் என்பதையும் யாரும் பின்பற்றுவதே இல்லை.
  யானைக்கு இந்திய அரசு பாரம்பரிய அந்தஸ்து வழங்கி கௌரவித்தாலும் பலபேர் வீதியில் கடைகடைக்கு பிச்சை எடுக்க துன்புறுத்துகிறார்கள். தலையில் துதிக்கையை வைத்து ஆசிர்வதிக்கக் கூடாது என சமீபத்தில் தமிழக அரசு தடை விதித்திருந்தாலும் ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் மனிதர்கள் தலையில் வைத்து ஆசிர்வதிப்பது வேதனையளிக்கிறது. தலையில் உள்ள புண், பொடுகு, அழுக்கு மூலம் யானைக்கு பாதிப்பேற்படலாம்.
  குரங்குகளை அடித்துத் துன்புறுத்தி குட்டிக்கரணம் போட வைப்பதும், கரடியைத் துன்புறுத்தி வீட்டிற்கு வீடு அழைத்துச் சென்று மந்திரித்த தாயத்து வழங்கி ஏமாற்றுவதும், மொன்னைப் பாம்பில் தங்கம் இருக்கிறது என்று புரளியைக் கிளப்பி அதைப்பிடித்து துன்புறுத்துவதும் குற்றச் செயல்களே. இதைப்போல இன்னும் ஏராளமாய் துன்பப்படுகிறது இந்த வாய் பேசாத அப்பாவி பிராணிகள்.
  சரி இதற்கு உங்கள் அறக்கட்டளை என்ன நடவடிக்கை எடுக்கிறது?
  மத்திய அரசுக்குட்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையைச் சார்ந்த பிராணி நல வாரியம் மிக அருமையாக செயல்பட்டுக் கொண்டுள்ளது. அந்த வாரியத்தின் சென்னை கிளை எனக்கு கௌரவ பிராணி நல அலுவலர் பதவி அளித்து பணியாற்றப் பணித்துள்ளது.
  ஒருமுறைசைபீரியாவின் கூளக்கடா என்று அழைக்கப்படும் 8 கிலோ எடையுள்ள ஆறடி நீளமுள்ள பறவை ஏதோ அடையாளம் தெரியாத வாகனத்தில் அடிபட்டது எங்களுக்கு தகவல் வந்தது உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அடிபட்ட இடத்தில் தையல் போட்டு காவல்துறைக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்து கடைசியில் அப்பறவை வெள்ளோடு சரணாலயத்தில் மிக நல்ல முறையில் சேர்ப்பிக்கப்பட்டது குறித்து இப்போது நினைத்தாலும் மகிழ்ச்சியாக உள்ளது.
  அந்தியூர் குருநாத சுவாமி கோவில் திருவிழாவின்போது நடைபெறும் கால்நடைச் சந்தை, வருடா வருடம் காங்கேய இன மாடுகள் மற்றும் காளைகள் மட்டுமே பல்லாயிரக் கணக்கில் கூடும் கண்ணபுரத்திலும், பல்வேறு கூட்டங்கள், கால்நடை கருத்தரங்கம், கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதன்வழி கால்நடைகளுக்கும் பிறபிராணிகளுக்கும் உதவி புரிந்து வருகின்றோம்.
  நீங்கள் ஆற்றுகின்றபணிக்கு அங்கீகாரம் கிடைத்ததாக கருதுகிறீர்களா? பாராட்டி கடிதங்கள் வழங்கப்பட்ட விருதுகள் பற்றி…
  அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சமூகப்பணி ஆற்றவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும் அப்படி நேரும்போது அது ஆற்றும் பணிக்கு ஒரு ஊக்குவிப்பு ஆகும் என்பது உண்மை. இலவச கால்நடை மருத்துவமுகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் முடிந்த பின்பு செய்தித்தாள்களில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது இவ்வளவு பணி ஆற்றியுள்ளோமா என்று எண்ணத்தோன்றும். அதோடு இன்னும் அதிக அளவில் பணியாற்றவேண்டும் என்கிறவேகமும் வெறியும் ஏற்படுவதென்னமோ உண்மை. எங்களது பணியைப் பாராட்டி பாரதியார் கல்சுரல் அகாடமி “சேவா ரத்னா” விருதும் “சிறந்த சமூக சேவகர்” பட்டமும் அளித்து கௌரவித்தது மறக்க முடியாத அனுபவம். பாரம்பரிய வைத்திய முறைகள் காலைக்கதிர் நாளிதழிலும் விவசாய உலகம் புத்தகத்திலும் வெளிவந்த பின்பும் கால்நடை மற்றும் இயற்கை விவசாய கருத்தரங்கம் தொடர்பாக டாக்டர் நம்மாழ்வார் பங்கேற்பது தொடர்பாக பசுமை விகடனில் வெளிவந்த பின்பும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கால்நடைகளின் வியாதிகளை அலைபேசியில் சொல்லி அதற்கான பாரம்பரிய வைத்திய முறைகளைக் கேட்டறிந்தும் அதன்பின்பு கால்நடை நலமுற்றதும் அவர்கள் நன்றி பாராட்டி தொடர்பு கொள்ளும்போது மனம் மகிழ்வதென்னமோ உண்மை.
  இறுதியாக மக்களுக்கு சொல்ல விரும்புவது…
  காட்டினை அழித்து மரங்களை வெட்டி கிடைக்க வேண்டிய சுத்தமான ஆக்ஸிஜனை தடுப்பவர்கள் ஒரு பக்கம்; சாயப்பட்டறைகளிலும், தோல் சுத்திகரிப்பு நிலையங்களிலும் வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் கலக்கும் நதி, நஞ்சாகி நிலத்தடி நீரும் நஞ்சாகிப் போனது ஒருபக்கம்; வாகனப் புகையால் காற்றும் மாசாகி உள் வாங்கும் மூச்சுக் காற்றும் நஞ்சாகி உடலைக் கெடுக்கும் நச்சுத்தன்மை ஒரு பக்கம்; பாலுக்கும் பயிருக்கும் ஆக்ஸிடோஸின் செலுத்தும் நயவஞ்சகர்கள் ஒரு பக்கம்; விலங்குகளின் வாழ்வுரிமையைத் துச்சமாக மதிக்கும் பாமரர்கள் ஒரு பக்கம்; விலங்கினம் மற்றும் பறவைகளின் இறைச்சிக்காகவும், தந்தம் போன்றவிலையுயர்ந்த பொருளுக்காகவும், வேட்டையாடும் கண் இருந்தும் மாற்றுத்திறனாளிகள் ஒரு பக்கம், தீ, புயல், இடி, மின்னல் போன்றசீற்றங்கள் ஒரு பக்கம்; காட்டை அழிக்கும் கும்பல் ஒரு பக்கம்; விலங்கினங்களின் இனப்பெருக்கத்திற்கு உதவாத ஆண், பெண் விகிதாச்சாரம் ஒரு பக்கம்; வேறு என்ன வேண்டும் விலங்கினம் அழிய?
  தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டு அடுத்த தலைமுறைக்கு விலங்கினங்களை புகைப்படத்திலும், அருங்காட்சியகத்திலும் பார்க்கின்றஅவலம் ஏற்படாது பார்த்துக் கொள்ளவேண்டிய பொறுப்பு அரசுக்கும் பொது சேவை நிறுவனங்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் இருக்கிறது என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.

  என்றவள்ளுவன் வாக்கிற்கிணங்க அசைவம் தவிர்ப்போம். பிராணிகளிடம் அன்பு செலுத்துவோம். அனைத்துயிர்களுக்கும் வாழ்வுரிமை வழங்குவோம். ஆரோக்கியமான உயர்ந்த லட்சியங்களை உள்ளத்தில் கொள்வோம். உயர்வடைவோம். நாம் என்னவாக ஆக வேண்டும் எனது உள்ளூற நினைக்கிறோம் அதாக கண்டிப்பாக ஆவோம். அது தான் தன்னம்பிக்கை.
  நன்றி
  கே.வி. கோவிந்தராஜன்
  தொடர்புக்கு:
  ஜெயம் பிராணி நல அறக்கட்டளை
  94425 41504, 98427 04504
  95244 40504

  முயன்றேன்… வென்றேன்…

  சமுதாயம் எங்களைப் பார்த்து பரிதாபப்படாமல், பெருமைப்பட வேண்டும் என்பதைப் போல ‘அகல்’ அமைப்பில் சமீபத்தில் பெற்றசாதனையாளர் விருது எங்களை மேலும் ஊக்கப்படுத்துகிறது என உற்சாகத்தோடு ஆரம்பித்தார் பிரியா பாபு.
  என்னைப்போலவே என் கணவரும், இரு கால்களும் போலியோவால் பாதிக்கப்பட்டவர். காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வார்கள். எங்களைப் பொறுத்தவரை இரு கால்களும் இல்லை. இருவருக்கும் பிறக்கும் குழந்தையும் ஊனமாக பிறக்குமோ என்றபயத்தில் குடும்பத்தார் மறுக்க, பல எதிர்ப்புகளையும் மீறி, மதம் மாறி திருமணம் செய்து கொண்டோம். திருமணம் முடிந்த நேரம் அவருக்கு அரசு மானியத்தில் சுந்தராபுரத்தில் ஒரு பெட்டிக்கடை கிடைத்தது.
  MBAபடித்துக்கொண்டே வேலைபார்த்து கிடைக்கும் சம்பளத்தில் எங்களுக்குப்போக, எஞ்சிய பணத்தில் எங்கள் பிறந்த நாள், திருமண நாளில் எங்களைப்போல கஷ்டப்படுவர்களுக்கு உதவியும் செய்கிறோம்.
  ஊனமுற்றோர்கள் வீடு சுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள் என ஆரம்பத்தில் வாடகை வீடு கிடைக்காமல் தவித்த இவர்கள், இதே ஊரில் சொந்த வீடு கட்டி வாழ வாழ்த்துவோம்.
  சொந்தக்காரர்களையும், சொந்த கால்களையும் இழந்தபோதும் தன்னம்பிக்கை கால்கள் வேரூன்றியிருக்கும் இவர்கள் மாற்றுத் திறனாளிகள் அல்ல, மற்றவர்களை மாற்றும் திறனாளிகள்!

  தளராத முயற்சி இருந்தால், வளராதா ஆக்கம்?

  தளராத முயற்சி வெற்றியைத் தரும்…
  நீங்கள் எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் தளராத முயற்சி வேண்டும். ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அந்தச் செயலின் மேல் உங்களுக்கும் அவ்வளவு விருப்பம். ஆனால் அந்தச் செயலைச் செய்வதற்கு முயற்சி வேண்டாமா? ஆக்கம், ஊக்கம், எல்லாம் இருந்தும் முயற்சி இல்லாவிட்டால் எந்தக் காரியமும் வெற்றி பெறுவதில்லை. மிகச்சிறந்த சாதனையாளர்களின் பட்டியலை எடுத்துப்பாருங்கள். அவர்கள் அனைவருமே தளராத முயற்சியின் மூலமே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
  முயற்சி திருவினையாக்கும்
  ஒரு தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என்று மிகுந்த ஆர்வத்தோடு இருக்கின்றீர்கள். ‘ஒரு பஞ்சாலைக்கு வேண்டிய உபகரணங்களைச் சொந்தமாக நாமே தயாரித்தால் என்ன?’ என்று நினைக்கின்றீர்கள். வங்கியில் பெருந்தொகையைக் கடனாக வாங்குகின்றீர்கள். தொழிலை ஆர்வத்துடன் தொடங்குகின்றீர்கள். பஞ்சாலைக்கு வேண்டிய உபகரணங்களை உருவாக்குகின்றீர்கள். பணிக்கு ஆட்களைச் சேர்த்துக் கொண்டு உழைக்கின்றீர்கள். உங்களுடைய தளராத முயற்சி வெற்றி பெறுகின்றது. ‘முயற்சி திருவினை ஆக்கும்’ என்றவள்ளுவரின் குறளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றீர்கள்.
  உழைப்பால் உயர்ந்த உங்களை இயற்கை வாழ்த்தும்
  ‘எவ்வளவு சோதனைகள் வந்தாலும் வெற்றி பெறுவேன்’ என்றமன உறுதியோடு இடைவிடாமல் உழைத்தால் இந்த உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் கன்னத்தில் நீங்கள் முத்தமிடலாம். இந்த உலகத்திற்குக் குளிர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலாவோடு நீங்கள் கைகோர்த்துக் கொண்டு உலா வரலாம். மலையளவு உயர்ந்த நீங்கள் மலையையே உங்கள் மடியில் வைத்துக் கொஞ்சலாம். உங்கள் உயர்வைக் கண்டு, நெடுங்கடல் கூடத் தன் அலைக்கரங்களை நீட்டியபடியே உங்களை அன்போடு அழைப்பதற்குப் பாய்ந்துவரும். உழைத்து உழைத்து வானளவுக்கு உயர்ந்துவிட்ட உங்களை ஆகாயம் கூடக்குளிர்ந்து போய் உங்கள் மேல் மழையைப் பெய்து உங்களை ஆசிர்வதிக்கும்.
  தளராத முயற்சியின் மூலம் முன்னுக்கு வந்தவர்கள்
  தளராத முயற்சியினால் மிகவும் கடுமையாக உழைத்து அமெரிக்க நாட்டின் அதிபரானார் ஆபிரஹாம் லிங்கன். அவருடைய முகத்தோற்றம் அனைவரும் விரும்பும்படி அவ்வளவு சிறப்பாக இருக்காது. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், தாழ்வு மனப்பான்மை என்னும் பேய் தன் உள்ளத்தில் புகாவண்ணம் விழிப்பாக இருந்து தன் கடின உழைப்பின் மூலம் முன்னுக்கு வந்தார்.
  உலக நாடுகளையெல்லாம் வென்று மாபெரும் சக்கரவர்த்தியாக விளங்கிய மாவீரன் அலெக்சாண்டரின் உயர்வுக்குக் காரணம் அவருடைய தளராத முயற்சி தான்.
  பிரான்சு நாட்டுப் படையில் சாதாரண சிப்பாயாகப் பணியாற்றிய நெப்போலியன், தன்னுடைய தளராத முயற்சியால் அந்த நாட்டுக்கே மன்னனானான்.
  தோல்வியில்லாமல் வெற்றி இல்லை
  மிகப்பெரிய சாதனைகளைப் படைத்த சாதனையாளர்கள் அனைவருமே தோல்வியின் வாயிலாகத்தான் சில உண்மைகளைக் கற்றுக் கொண்டார்கள். தோல்விகள் இல்லாமல் வெற்றியில்லை. தோல்விதான் ஒரு மனிதனுக்குச் சிறந்த மன உறுதியைத் தருகிறது. தோல்வித் தோட்டத்தில் அவர் துவண்டு போயிருந்தால், அவர் மிக உயர்ந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா? சிந்தித்துப் பாருங்கள்.
  அறிவியல் மாமேதை தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்க்கை கடுமையான போராட்டங்கள் நிறைந்தது. எடிசனின் இளமைப்பருவம் எத்தனையோ துன்பங்களைக் கடந்து வந்திருக்கிறது. எடிசன் தன்னுடைய ஆய்வில் பல தோல்விகளைக் கண்டார். எத்தனையோ தோல்விகளைக் கண்டபோதிலும் அவர் மனம் துவண்டு விடவில்லையே. தோல்விகளைத் தொல்லைகள் என்று அவர் ஒரு நாளும் நினைத்ததில்லை. தோல்விகளை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் எல்லைகள் என்றேநினைத்தார்.
  முயற்சியுடையவர், செல்வம் இழந்தாலும் கவலைப்படமாட்டார்
  இடைவிடாத முயற்சியை உடையவர்கள், ஏதேனும் ஒரு தொழிலில் ஈடுபட்டு அதனால் தன்னுடைய செல்வம் முழுவதையும் இழந்தாலும் கூடக் கொஞ்சம் கூடக் கலங்க மாட்டார்கள். இடைவிடாத முயற்சியை உடையவர் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தாங்கள் இழந்த செல்வத்தை அடைவார்கள்.
  ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம்
  ஒருவந்தம் கைத்துடை யார்
  என்று வள்ளுவரும் மிகச்சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.
  நீங்கள் கடுமையாக முயற்சி செய்தால் இந்த உலகில் முடியாத காரியம் எதுவுமில்லை. எதைப்பற்றியும் கவலைப்படாமல்  பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும் என்பதைக்கூட எண்ணிப்பார்க்காமல்  உழைப்பு உழைப்பு என்று நீங்கள் இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருந்தால் வெற்றித் திருமகள் உங்களைத் தேடிவரமாட்டாளா?
  திறமைகள் இருந்தாலும், தன்னம்பிக்கை வேண்டாமா?
  உங்களுக்குத் தன்னம்பிக்கை ஒன்று இருந்தாலே போதும். முயற்சி, உழைப்பு, ஊக்கம், ஆக்கம் என்று எல்லாமே இருந்தும் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அதனால் என்ன பயன்? சில பேர் மாடுபோல் உழைப்பார்கள். கடுமையான முயற்சிகள் செய்வார்கள். எவராவது தூண்டிவிட்டால் ஊக்கத்துடன் பணியாற்றுவார்கள். ஆனால் தன்னைப்பற்றி ஒரு நம்பிக்கை அவர்களுக்கு இருக்காது. “சிறந்த சாதனைகளைப் படைக்குமளவுக்கு என்னிடம் திறமைகள், ஆற்றல்கள் எதுவும் என்னிடத்தில் இல்லை” என்று தன்மேல் நம்பிக்கை இல்லாமல் பேசுவார்கள். இவர்கள் எப்படி முன்னுக்கு வரமுடியும்? எப்படி சிறந்த சாதனைகளைச் செய்ய முடியும்? தன்னம்பிக்கை என்பது ஆணிவேரைப் போன்றது. இது ஆட்டம் கண்டுவிட்டால், உங்கள் முன்னேற்றத்திலும் வாட்டம் வந்துவிடும்.
  விதியைக்கூட நீங்கள் வென்றுவிடலாம்
  தொடர்ந்து நீங்கள் முயற்சிகளைச் செய்து கொண்டே இருந்தால், நீங்கள் எதையும் சாதிக்க முடியும். முயற்சியில் தளர்வு வந்தால் மலராதே உங்கள் முன்னேற்றம். தளராத முயற்சிகளைச் செய்து கொண்டே இருங்கள். உங்களுக்குக் கடுமையான முயற்சி இருக்குமேயானால், விதியைக் கூட வென்றுவிடலாம். நீங்கள் தளராத முயற்சிகளைச் செய்யும்போது சில சமயம் தோல்விகள் வரும் வாய்ப்புண்டு. வெற்றிபெற்றஎவருமே தோல்வி என்றஅரக்கனைச் சந்திக்காமல் இருந்ததில்லை. அந்தத் தோல்வி அரக்களை எப்படி வீழ்த்த வேண்டும் என்று திட்டம் தீட்டி, கடும் முயற்சி என்றவலிமையின் மூலமாக அந்த அரக்கனை நீங்கள் வீழ்த்த வேண்டும். சாதனைகளை நீங்கள் நிகழ்த்த வேண்டும் என்று சொன்னால், சாதனைகளை நோக்கி நீங்கள் செல்ல வேண்டும். சாதனைகள் உங்களைத் தேடி வராது.
  துன்பங்களை ஏற்றுக் கொள்கின்றமனவலிமை வேண்டும்
  நீங்கள் எண்ணும் ஒரு செயலில் அல்லது ஒரு தொழில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் ஊக்கம் வேண்டும். உங்களுக்கு ஊக்கம் இருக்குமேயானால் உங்கள் செயல்பாட்டில் விரைவு இருக்கும். உங்கள் உள்ளத்தில் அச்சம் என்பதே கடுகளவு கூட உங்களுக்கு இருக்கக்கூடாது. உங்களுக்கு அச்சம் இருந்தால் எந்தச் செயலையும் செய்வதற்குத் தயங்குவீர்கள். எனவே அச்சத்தை உதறித் தள்ளுங்கள். துன்பங்களை ஏற்றுக் கொள்கின்றமனவலிமை உங்களுக்கு இருக்குமேயானால், எந்தத் தொழிலையும் மிகச்சிறப்பாகச் செய்ய முடியும். “எது வந்தாலும் வரட்டும். எனக்குக் கவலை இல்லை. நான் நினைத்ததை முடித்தே தீருவேன்” என்றஎண்ணம் உங்களுக்கு இருக்குமேயானால் நீங்கள் நினைக்கும் எந்தச் செயலும் வெற்றிபெறும். தளராத முயற்சி இருக்குமேயானால் வளராதா ஆக்கம்? மலராதா உங்கள் வாழ்க்கை?

  சுமையா? சுவையா?

  பொதுவாக நம்மில் பலர் அடிக்கடி நினைப்பதுண்டு அல்லது புலம்புவதுண்டு. “என்னோட தகுதிக்கு மேலே சோதனைகளும் சங்கடங்களும் வருகிறதே” என்று. அதுபோன்றசமயங்களில் வரும் சோதனைகள், பிரச்சனைகள் சுமைகளா? அல்லது நம் வாழ்க்கையைச் சுவையாக்குவதற்காக வந்தவையா என்பதை அமைதியாக ஆராய்ந்தால் பெரும்பாலும் சுவை கூட்டுவதற்காகத்தான் என்றதெளிவுவரும். சில சமயங்களில் நமது தவறான கணிப்பால் அல்லது செயலால் சுமைகளாகவும் வந்து சேரும். அனுபவித்துத்தான் தீர வேண்டும்.
  சுமைகள்
  பொதி சுமக்கும் உயிரினங்களைப் பலர் பார்த்திருக்கலாம். நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இந்த வாய்ப்பைப் பள்ளிக் குழந்தைகள் வழங்கி வருகின்றனர். பாடப் புத்தகங்களின் எடை சிறுகுழந்தைகளின் எடையில் பாதியளவு வந்துவிடுகிறது.
  குறைவான சுமைகள், நிறைந்த வசதி தரும் (Less Luggage; More Comfort) என்று கூறுகிறோம். ஆனாலும், செயலுக்கு வரும்போது பயணங்களில் தூக்க முடியாமல் சாமான்களைத் தூக்கிச் செல்லும் பெரும்பாலானவர்களாகவே இருக்கிறோம். காரணம், அடிப்படையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாததுதான்.
  சாதாரணமாகத் திருமணத்துக்குச் செல்பவர்கள், குறிப்பாகப் பெண்கள் பட்டுப்புடவை, தங்க நகைகள் அல்லது விதவிதமான கவரிங் நகைகள் அதீதமான ஒப்பனை என, இயல்புநிலைக்கு மாறாகத்தான் இன்றும் செல்கின்றனர். அவர்களிடம் மனமாறுதல் வந்தால் நிரந்தரமாக மகிழ்ச்சியைப் பெறுவார்கள். ஆனால், சிறிது நேர மகிழ்ச்சியைப் பெரிதாக அல்லவா எண்ணி எதிர்பார்த்துச் செல்கின்றனர்.
  சுமை என்றால் நம் உடல் மீது எடுத்துச் செல்லும் பொருட்கள் ஒருவகை, மனதுக்குள் வைத்துள்ள எண்ணங்கள் மறுவகை என இருவகைப்படுகிறது. முதல்வகை சுமைகள் கண்களுக்குத் தெரியும். அதிக சுமைகளைச் சுமந்து செல்ல சிரமப்படுவதையும் காண முடியும்.
  ஆனால், 2ம் வகைச் சுமை, அதாவது மனச்சுமைகள், மற்றவர்கள் கண்களுக்குத் தெரியாதது மட்டுமல்ல. பலசமயம் சுமையை சுமப்பவருக்கே தெரியாமலும்கூட அடிமனதில் நங்கூரமிட்டுப் பதுங்கியிருக்கும்.
  இந்த இருவகை சுமைகளை மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான சுவைகளாக மாற்றமுடியுமா?
  நிச்சயமாக முடியும்.
  முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை.
  “ஊழையும் உப்பக்கம் காண்பர்” என்றார் பொய்யாமொழி.
  எப்படி?
  உலைவின்றித் தாளாது உஞற்றினால்…
  என்று வழியையும் காட்டினார்.
  இடைவிடாமுயற்சி தான் தேவை. சுமைகளை வாழ்வின் சுவைகளாக்கத் தேவை இடைவிடாமுயற்சி தான். எப்படி எனப் பார்ப்போம்.
  ருசியான சமையல்
  பிறந்தது முதல் இறக்கும் வரை நாம் சாப்பிட்டே உயிர் வாழ்கிறோம். சாப்பாடு சுவையாக, ருசியாக இருப்பதைப் பல நாட்கள் அனுபவித்து சாப்பிட்டிருப்போம். மேலும் பல நாட்கள் ஏதோ சாப்பிட்டோம் என முடித்திருப்போம். ஒரு சில நாட்கள் கடனே எனச் சாப்பிட்டிருப்போம்.
  சாப்பாட்டுக்கு எப்படி சுவை வருகிறது? என ஆராய்ச்சி செய்து பாருங்கள். பயன்படுத்தும் பொருட்களினாலா? உபயோகிக்கும் நெருப்பினாலா? செய்பவர்களது விருப்பமான மனநிலையாலா? என உங்களுக்குத் தெரிந்தவாறெல்லாம் சிந்தியுங்கள். தெளிவு கிடைத்துவிடும். பிறகு சுமையில்லா வாழ்க்கைக்கு நீங்கள் தயாராகிவிட்டீர்கள்.
  விருப்பம்
  “எந்த ஒன்றைநாம் விரும்புகிறோமோ, அந்த ஒன்று நமக்கு சுவையாகத் தெரியாது” இது மூத்தோர் சொல். அடிப்படையே விருப்பம் தான். வண்டியின் அச்சாணி போன்றது வாழ்க்கைக்கான விருப்பம். இன்னும் பலர் வாழப்பிடிக்காமலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை அடிக்கடி சொல்லிக் கொள்கிறார்கள்.
  “என்ன வாழ்க்கை”
  “ஏதோ, உங்க தயவுலே”
  “ஏன் தான் பொறந்தேனோ?”
  “எல்லாம் என் தலையெழுத்து”
  “என்னாலே முடியாது”
  “எனக்கு மட்டும் ஏன் இவ்ளோ கஷ்டம்”
  இதுபோன்று பலவிதமான புலம்பல்களை அன்றாடம் ஆகாய வெளியில் கலக்கவிடும் பலர் உள்ளனர்.
  இவர்கள் செய்ய வேண்டியது ஒரு சிறுசெயல்தான்.
  வாய்க்காலில் நீர் ஓடி, சிறுசிறு வயல்கள் வழி பாய்ந்து செல்வதை, வேறு வயலுக்கு மாற்றமடைமாற்றம் செய்வது போல் தடை மற்றும் மாற்றம் இரண்டும் செய்ய வேண்டும்.
  இதுபோன்றபுலம்பல்களைத் தடை செய்ய வேண்டும். பிறகு சுவையாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்றவிருப்பத்தை ஆழ்மனதில் விதைக்க வேண்டும். விருப்பத்துடன் எதை எண்ணினாலும், பேசினாலும் செய்தாலும் மிக அதிக அளவு பலன்களே வந்துசேரும்.
  சில உதாரணங்கள்
  அண்ணல் காந்தியடிகள் சுதந்திர இந்தியாவை விரும்பி செயல்பட்டார். அவர் தலைமையில் இந்தியர்கள் அணி திரண்டதால், ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு அகன்றனர்.
  ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த ஜி.டி. நாயுடு மோட்டார் பைக்கை வாங்க விரும்பினார். வாங்கியதுடன் மிகப்பெரிய தொழில் அதிபராகவும் முன்னேறினார்.
  இதுபோல் பல உதாரணங்களை உங்கள் பகுதியில் தேடுங்கள். நிச்சயம் காண முடியும்.
  மனமிருந்தால் மார்க்கம் உண்டு
  என்னால் முடியாது என எண்ணிவிட்டால், உற்சாக ஊற்றுக்கண்கள் அடைபட்டுவிடும். தோல்வி தலைவிரித்து அணைத்துக் கொள்ளும். மனதளவில் ‘முடியும் முடியும்’ என்று சிந்தித்தால், முடிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் தேடிவரும். விழிப்பு நிலையிலிருந்து படித்துக் கொண்டோரெல்லாம் வெற்றிபெற்றார். தூங்கிவிட்டோரெல்லாம் இன்னும் புலம்பிக் கொண்டே இருக்கின்றனர்.
  எப்போது விருப்பம் வரும்
  விரும்புவது என்பது பேச்சுக்கு சுலபமாயிருந்தாலும், செயலுக்கு வரும்போது கடினமானதுதான். நம்மில்பலர் பெரிய பெரிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை மிகச்சுலபமாக மற்றவர்களுக்குக் கூறுகிறார்கள். தனக்கென்று வரும்போது முடங்கிவிடுகிறார்கள். இதற்குக் காரணம் ஈடுபாடில்லாத நிலையாகும் (Lack of Involvement).
  முன் அனுபவங்கள்
  சுய ஆதாயங்கள்
  மனத்திருப்தி
  உள்ளார்ந்த ஈடுபாடு
  ஆகியவைகளால் விருப்பம் வருவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். அதன்பிறகும் நாம் தான் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி விரும்ப வேண்டும்.
  அறிவுநிலை
  விரும்புவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி, செயலுக்குக் கொண்டுவருவதால் விருப்பம் உண்டாகும் என்பதைத் தெரிந்து கொண்டோம். அடுத்து நமக்குள்ள ஆறாவது அறிவு என்றபகுத்தறிவைக் கொண்டும் சுமைகளை மாற்றிக் கொள்ள முடியும்.
  “இதற்கு ஒன்றைவிட வேண்டும்;
  ஒன்றைப் பிடிக்க வேண்டும்”
  எதை விடுவது? … ஆத்திரத்தை … !
  எதை பிடிப்பது? … அறிவை … !
  “ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு” இது மூத்தோர் சொல். ஆத்திரப்பட்டால் புத்தி வேலை செய்யாது. ஆறாவது அறிவு வேலை செய்யாத போது, மிருக குணங்கள் மேலோங்கும். அவை செயலுக்கு வந்து சுமைகள் மேலும் பல தொல்லைகளைத் தரும்.
  கண்ணியம், திறமை, புத்தி இந்த மூன்றும் நமது ஆறாவது அறிவின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஆத்திரமும், தொடர்ந்து கோபமும் கொள்ளக் கூடாது. இவை இரண்டும் சேர்ந்து அறிவைத் துரத்திவிடும்.
  முயற்சி திருவினையாக்கும்
  முயற்சி, அதுவும் விடாமுயற்சி; மேலும் இடை விடா முயற்சி. இதுதான் இன்றைய தேவை. “கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” கிராமங்களில் இன்றும் பெரியோர்கள் கூறிவரும் சொற்கள் இவை. கல்லைக் கரைக்க முடியுமா? முடியும்.
  திருவள்ளுவர் ஒரு துணியில் மணலை மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு, பெண்பார்க்கச் செல்வாராம். இந்த மணலை சாதமாக சமைக்கும் பெண்ணையே மணந்து கொள்வதாய் கூறி, பல வருடங்கள் காத்திருந்தார். அவருக்காகவே பிறந்த வாசுகி அம்மையார், புத்திசாலித்தனமாக, மணல் துணி மூட்டையை வாங்கி, அடுப்படிக்குச் சென்று, அரிசியை உலையில் இட்டு சாதம் சமைத்தார். மணலை வெளியே கொட்டிவிட்டார்.
  இதைத்தானே, இந்த சமயோசிதமான, அறிவுபூர்வமான செயலைத்தானே திருவள்ளுவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவருக்குத் தெரியாதா? மணலில் சாதம் சமைக்க முடியாதென்று.
  இதுபோன்றேநாம் நம் வாழ்க்கையில் முயற்சி செய்து கொண்டு செயல்படுகிறோம். ஒருசில வெற்றிகளைப் பெறுகிறோம். பல தோல்விகளைத் தழுவுகிறோம்.
  மேலும் விடாமுயற்சி அதாவது தொடர் முயற்சி செய்கிறோம். பாதிக்குப்பாதி வெற்றி பெறுகிறோம்.
  முயற்சி, முயற்சி என்று இடைவிடாமல் சதாநேரமும், அதாவது எந்நேரமும் முயற்சியின் மீதே மூச்சாக, சிந்தனையாக இருப்பதே இடைவிடா முயற்சி. இந்நிலையில் தான் சுமைகள் எல்லாம் சுவையாக மாறுகின்றன. தொடர்ந்து சுகத்தைத் தருகின்றன.
  சுமை – என்ன?
  ஓர் ஆட்டோ வில், படகில் அல்லது லிப்டில் இவ்வளவு பேர்தான் பயணம் செய்யலாம் என வரையறைஉண்டு. அதற்கும் அதிகமாய் பயணம் செய்தால் என்ன ஆகும்? ஓவர்லோடு? விபத்துதானே.
  சுமைகளுக்கான காரணங்கள் என்ன?
  அதிக பொறுப்புகள் (Responsibilities)

  • பதவிக்கு ஆசைப்படுதல்
  • போலி கவுரவம்
  • தகுதிக்கும் மேலாக புகழ் எதிர்பார்த்தல்
  • விளம்பரங்கள்
  • தேவையில்லாத ஒப்பீடுகள்
  • வறட்டுத்தனமான டாம்பீகமான பேச்சுக்கள்

  இன்னும் இவைபோல் பல உங்கள் எண்ணத்தில் தோன்றும்.
  இவைகளையெல்லாம் தனித்தாளில் எழுதுங்கள். இவையெல்லாம் நம் இன்பமான வாழ்க்கையைப் பாதிக்கும் சுமைகள். எனவே, இந்தச் சுமைகள் நமக்குத் தேவையா? எனச் சிந்தியுங்கள்.
  வெரிகுட், தேவையில்லையென்று முடிவு செய்து விட்டீர்கள்.
  இனி அவைகளை நம்மிடமிருந்து நம் உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டியது தானே.
  ஆம்.
  நெருப்புவைத்து இந்தச் சுமைகளைக் கொளுத்துங்கள். சுமைகள் குறைய, குறைய வெற்றிடம் கூடும். இப்போது பாருங்கள். மனம் லேசாக இருக்கும். மகிழ்ச்சியாக இருக்கும். இந்நிலைதான் சுவையின் ஆரம்பம்.
  சுவை – அதிகரிப்பு
  சுவைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எனவே, யாருடனும் ஒப்பீடு செய்யக்கூடாது. உங்களுக்கு எப்படி எனக்கண்டுபிடியுங்கள்.
  சுவையே இல்லாதபோது சுவையை உணரும் நிலைதான் உயர்ந்த நிலை. இந்த நிலையை மனோசித்திரமாய் உணரவேண்டும். காட்சி என்பது இல்லாததைக் காண்பது (யண்ள்ண்ர்ய் ண்ள் நங்ங்ண்ய்ஞ் ஐய்ஸ்ண்ள்ண்க்ஷப்ங் ஞய்ங்). இப்படிப்படட நிலையில் வெற்றிகள் ஒருவரிடம் வரிசையாக நின்று, காத்திருந்து வந்து சேரும்.
  வெற்றியாளனுக்கு செயல் பாரமில்லை.
  தாய்க்கு குழந்தை பாரமில்லை
  மண்ணுக்கு மரம் பாரமில்லை
  எனவே, சுவையான, இன்பமான வாழ்க்கைக்கு சுமைகள் தடைகள் அல்ல என்றஎண்ணம் மனதில் கொலுவாக வீற்றிருக்க வேண்டும்.
  சரி, உங்கள் எடை சுமார் 60 கிலோ. உங்களால் 20 கிலோ எடையை மிகச் சுலபமாக எடுத்துச் செல்லமுடியும். ஆனால் 60 கிலோ எடையை எப்படி எடுத்துச் செல்வது?
  இங்கு தேவை திட்டமிடுதல் (டப்ஹய்ய்ண்ய்ஞ்) பகுதி, பகுதியாகப் பிரித்து எடுத்துச் செல்வதால், செயல்படுவதால் சுமையின் தாக்கம் தெரியாமல், பணி நிறைவில் சுவை தரும் சுகமே மேலோங்கும்.
  தவிர்க்க வேண்டியவை
  தன்னம்பிக்கையின்மை, அனுபவம் இல்லை என்றஎண்ணம், பயம், முந்தைய தோல்விகள், ஒப்பீடு போன்றபலவற்றைத் தவிர்க்க வேண்டும்.
  அதிகரிக்க வேண்டியவை
  சிறுவயது சாதனைகள், பெற்றவெற்றிகள், மற்றவர்களின் வழிகாட்டுதல்கள், பெற்றபரிசுகள், மகிழ்ச்சியான நாட்கள் போன்றவைகளை ஒவ்வொரு நாளும் நினைத்து, நினைத்து அதிகரித்துக் கொள்ள வேண்டும். இதனால் தன்னம்பிக்கை கூடும்.
  மாறும் சுவைகள்
  சுவை என்றால், உடனே நினைவுக்கு வருவது ஆறு சுவைகள் தான்.
  இனிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு இவைதான் நாம் உணவு மூலம் அறியும் ஆறு சுவைகள்.
  இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மையுண்டு. அதிகரித்தாலும், குறைந்தாலும் உடல் ஆரோக்கியம் கெடும்.
  இந்தச் சுவைகள் இயற்கை பருவங்களுக்கேற்ப (நங்ஹள்ர்ய்)வும், அவரவர் மன நிலைக்கேற்ப (ஙங்ய்ற்ஹப்ண்ற்ஹ்)வும் மாறுபடுகின்றன.
  நம் மனதுக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. இல்லாத சுவையை மனதில் உணர சுவைக்க முடியும். இருக்கின்றசுவையை மாற்றமுடியும்.
  எதிர்பார்ப்பு குறைகின்றபோது இந்தச் சுவைகளுள் எவை நமக்குத் தேவையோ அவை தானாகவே வந்துசேரும்.
  ஐஸ் கிரீம் சுவை, சாக்லேட் சுவை இந்த இரண்டும்தான் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த சுவை. இதுபோன்றேநம் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை ஐஸ் கிரீமாகவும், சாக்லேட்டாகவும் மாற்றும் திறமையைப் பெற்றுவிட்டால் என்றுமே இன்பம் தானே.
  சரி, இந்தச் சுவைகளைப் பெறுவதற்கு என்ன செய்வது?
  நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது, “உங்களது பல பணிகளுக்கு, இந்தப் புதிய பொறுப்பு சுமையாகிவிடாமல் செயல்படுங்கள்” என்றேன். அவர் சுமையல்ல, அய்யா இப்பொறுப்பு சுவையானதன்றோ என்றார். எப்படி அவரால் கூறமுடிந்தது?
  விருப்பமும், ஈடுபாடும் தான் காரணங்கள்
  இராமாயணத்தில் லட்சுமணன் மூர்ச்சையைத் தெளிவிக்க, சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்த அனுமனின் விருப்பம், ஈடுபாடு;
  அமெரிக்க நாட்டின் பொருளாதார பாதிப்புகளைப் பல நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டி, சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து சென்ற, அதிபர் பராக் ஒபாமாவின் விருப்பம், ஈடுபாடு;
  எத்தனை ஊழல்வாதிகள் இருந்தாலும் இந்தியாவை வல்லரசாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டுவரும் முன்னால் குடியரசுத்தலைவர் திருமிகு. ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் போன்றோரின் விருப்பம், ஈடுபாடு;
  அரசு சலுகைகளை, சுகங்களை, சுவைத்ததால் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக, கூட்டணிகளை மாற்றத்தயாராகும் அரசியல் தலைவர்களின் விருப்பம், ஈடுபாடு;
  அரசாணையில் மட்டும் இருந்தால் போதாது. செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்று, பக்கத்து மாநிலங்கள் போன்று ஆட்டோ ரிக்‘ôக்களுக்கு மீட்டர் கட்டண நடைமுறைக்கு, வழக்கு உள்ளிட்ட பல வழிகளிலும், முயன்றுவரும் பல நல் உள்ளங்களின் விருப்பம், ஈடுபாடு;
  இவைபோன்று பல கூறலாம்.
  எண்ணங்களை விதையுங்கள். கட்டாயம் முளைக்கும். களைகள் போன்றசுமைகளை இனங்கண்டு விலக்குங்கள். சுவைகளைத் தேர்வு செய்து, வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.
  வாழ்க வளமுடன்

  படி

  வீட்டினுள் நுழையும் போதே முணுமுணுத்த படி உள்ளே வந்தான் முரளி. அந்த வீட்டின் மூலையில் இருந்த ரோஜாக்களுக்கு நீர் ஊற்றி கொண்டிருந்தது ஒர் முதிர்ந்த கை. “ஒரு வாரமாம்! எப்பிடி முடியும்? நமக்கு எது வராதோ… அதையே பண்ண சொல்றதுல இந்த வாத்தியார்களுக்கு அப்பிடி என்ன தான் சந்தோஷமோ?” என்று முணுமுணுப்பின் சப்தம் அதிகரித்து கொண்டே இருந்தது! அந்த முதிர்ந்த கை கொண்ட விரல்கள் மெல்ல தான் அணிந்திருந்த மூக்கு கண்ணாடியை சரி செய்த படியே முரளியை கவனித்துக் கொண்டிருந்தது.
  “டேய்! காப்பி போடட்டுமா?” என்றஅம்மாவை பார்த்து, ஒரு முறைமுறைத்தான் முரளி. “என்னடா பாக்குற? வேணும்னா சொல்லு! போடறேன்!” என்றவளைப் பார்த்து, “என்னைக் கொஞ்சம் தனியா விடுமா! காபி! கீப்பின்ட்டு!” என்று சலித்து கொண்டான் முரளி. அம்மா ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்றாள். தனிமையில் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.
  கொத்து கொத்தாய் வளர்ந்திருந்த முரளியின் முடியினைக் கோதி விட்டது அந்த முதிர்ந்த கை. முரளி தலை நிமிர்ந்தான். அது அவன் தாத்தா. அவரை பார்த்து, சிரிக்க வேண்டுமே என்பதற்காக அவன் உதடு மெல்ல வளைந்தது. தாத்தா அவன் அருகே அமர்ந்தார். “என்னடா ஆச்சு? ஏன் இப்பிடி இருக்கே?” என்று கேட்டார். “ஒண்ணுமில்ல தாத்தா!” என்று மீண்டும் சலிப்பு தட்டிய குரலில் பதிலளித்தான். “முரளி! இங்க பாரு! ஏதோ குழப்பத்துல இருக்கேன்னு தெரியுது! என்ன விஷயம்ன்னு சொல்லு! அப்பத்தான் உன் குழப்பம் தெளிஞ்சு நல்ல வழி தெரியும்!” என்றார் தாத்தா, தன் மென்மையான குரலில்.
  “அடுத்த வாரம் ஒரு டெஸ்ட் வெச்சிருக்காங்க தாத்தா, காலேஜ்ல… அதாவது எல்லாரும் ஏதாவது ஒரு புத்தகத்தை முழுசா படிச்சிட்டு வரணுமாம். அதை பத்தி மேடையில பேசணுமாம்! அதுக்குதான் அதிக மார்க்காம்! இந்த வருஷம் தான் புதுசா செய்திருக்காங்களாம்!” என்று மீண்டும் தலை குனிந்தான் முரளி. “அதுல என்னடா பிரச்சனை?” என்றதாத்தாவின் கேள்விக்கு, சட்டென்று மீண்டும் தலை நிமிர்ந்து, “கீழே ஆடியன்ஸ் யார் தெரியுமா? எங்க சீனியர்ஸ்! சும்மாவே பர்ஸ்ட் இயர்ஸ்ன்னா ஓட்டித் தள்ளுவாங்க! இதுல இந்த சங்கடம் வேற!? தொலஞ்சோம்!” என்று நெற்றியில் அடித்த படி, தன் தரப்பு சங்கடங்களைத் தாத்தா முன் வைத்தான் முரளி!
  சிரித்துக் கொண்டே தாத்தா, “இவளோ தானா? நான் ஏதோ பெரிய பிரச்சனையா இருக்கும்ன்னு நினைச்சேன்!” என்றார். “ஆஹ! உங்களுக்கு இது சிரிப்பா இருக்கும்! அதுல இருக்குறசிக்கல், பிரச்சனை எனக்குத் தானே?” என்று பெருமூச்சை சூடாக விட்டான் முரளி. “இது நல்ல விஷயம் தான்! ஒரு புக் படிச்சு! நீ என்ன படிச்ச, என்ன உணர்ந்த, இதெல்லாம் மேடை ஏறி உன் சீனியர்ஸ், நண்பர்கள், ஆசிரியர்கள் முன்னாடி சொல்றது பெரிய விஷயம் தானே! சந்தோஷமான விஷயமும் கூட! வேற என்ன பிரச்சனை உனக்கு?” என்றார் தாத்தா.
  “ஸ்கூல்ல படிக்கிறவரைக்கும் சிலபஸ் இருக்கும்! அதுல என்ன கொடுத்திருக்கோ அதை தான் நான் படிச்சேன். வேறஎந்த புத்தகத்தையும் நான் படிச்சதில்லையே?! ஆமா…. தெரியாம கேக்குறேன் தாத்தா! நாம ஏன் புக் படிக்கணும்? அதனால என்ன நல்லது நடக்க போகுது? சும்மா… தூக்கம் தான் வரும்! போரு!” என்றமுரளியின் பேச்சில் அலுப்பு தட்டியது.
  அதற்கு தாத்தா, “இதுதான் பிரச்சனை முரளி கண்ணா! ஸ்கூல்ல படிக்கிறகாலத்துலேயே அவங்க சொல்றபாடத்தை மட்டுமே படிச்சு மனப்பாடம் பண்ணி, பரீட்சை எழுதி, நூறு மார்க் வாங்குறதால உன்னோட மேல் படிப்புக்கு மட்டும் தான் உன்னையே நீ தயார் பண்ணிக்கிட்டே! அவ்வளவுதான்! ஆனா உன் வாழ்க்கைக்கு? உனக்கு நல்லது கெட்டது எதுன்னு நீயே பிரிச்சுப் பார்த்து தெரிஞ்சுக்க?” என்றகேள்வியை முரளி முன் வைத்தார். “அதுக்கு தான் அனுபவம் இருக்கே தாத்தா! அனுபவ அறிவு தானே பெருசுன்னு சொல்லுவாங்க?” என்று தாத்தாவிற்கு கிடுக்குப்பிடி போட்டு, பதில் வேண்டி புருவம் உயர்த்திப் பார்த்தான் முரளி. “ஒரு புத்தகம் படிக்கிறதே அனுபவம் தானே கண்ணா! ஒரு நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு படிக்கும் போது, நீ ஒரு புது விஷயத்த, புது உலகத்த அனுபவிக்கிறடா! எங்கே நீ படிச்ச ஒரு நாவலோ சிறுகதையோ இல்ல கவிதை பத்தி சொல்லு பார்ப்போம்?” என்றதாத்தாவின் கேள்விக்கு, திருதிருவென முழித்தான் முரளி.
  அமைதியில் இருந்தவன் சட்டென்று, “தாத்தா! இந்த நாவல் கவிதை படிக்கிறது எல்லாம் மீடியா ஆளுங்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தான் தேவை! நான் மைக்ரோ பையாலாஜி மாணவன்! எனக்கு எதுக்கு இதெல்லாம்?” என்று வருந்திய குரலில் பதில் வந்தது முரளியிடமிருந்து.
  தாத்தா சற்றேயோசித்த படி, “ஆங்… நீ அப்பிடி வர்றியா… சரி! நீ சொல்றபடியே வர்றேன். நீ ஒரு மனுஷன். நீ இப்போ ஒரு கரையில இருக்க. உன் முன்னாடி ஒரு பெரிய கடல் இருக்கு! சாதாரண கடல் இல்ல! கடலுக்கு எல்லாம் கடல்! பெருங்கடல்! நீ இப்போ நிக்கிறகரையில இருக்கிற எல்லா இடத்தையும், அங்க இருக்குறசந்து பொந்து எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்ட. இனி அந்த கரையில நீ தேடவோ பார்க்கவோ எதுவுமே இல்ல. உன் கண்ணு முன்னாடி இப்போ ஒரு பெருங்கடல், அதை தாண்டி ஒரு கரை தெரியுது. நீ என்ன பண்ணுவ?” என்றகேள்வியை முன் வைத்தார் தாத்தா. “நான் இருக்குறகரையில எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன்னா… அந்த தொலைவுல தெரியுறகரைல என்ன இருக்குன்னு பார்க்க போவேன்!” என்றான் முரளி.
  “எப்படிப் போவ?” என்று தாத்தா வினவ,
  “நீந்தித் தான்!” என்றான் முரளி.
  “நீச்சல் குளத்துல நீந்தும் போது உனக்கு பாதுக்காப்பு இருக்கும் கண்ணா. ஆனா உன் முன்னாடி இப்ப இருக்கிறது பெருங்கடல்! அதோட ஆழம் எவ்வளவு?அலை அடிக்கும்! அதை சமாளிச்சு, போராடிப் போகணுமே! எப்பிடி நீந்துவே?” என்று கண் விழித்துக் காட்டினார் தாத்தா.
  “ம்ம்ம்… தெரியல தாத்தா! நீங்களே சொல்லுங்க!” என்று விடை அறிய ஆவல் முரளி கண்களில் தெரிந்தது.
  “சரி! நீ இந்த கரையில பார்த்து, படிச்சு, தெரிஞ்சிக்கிட்ட விஷயங்கள சேர்த்து ஒரு படகு நீ செய்யற… அந்த படகுல ஏறி, முன்னாடி இருக்குறபெருங்கடல்ல போற… அந்த பெருங்கடல் பேரு என்ன தெரியுமா?” என்று தாத்தா புதிர் போட,
  “அய்யோ தெரியல தாத்தா! சொல்லுங்க சீக்கிரம்!” என்று பறந்தான் முரளி.

  சிரித்த படியே தாத்தா, “அந்த பெருங்கடல் தான் உன்னோட புத்தக அறிவு! அதுதான் நான் சொன்ன நாவல்கள், கவிதைகள், வாழ்க்கை வரலாறுகள், புதினங்கள், சிறு கதைகள் எல்லாம்! அந்த அக்கரை தான் உன்னோட வாழ்க்கையோட அடுத்த படி! அங்க போகணும்னா, உன்னோட அனுபவ படகேறி, அந்த பெருங்கடல் வழியாத் தான் பயனிக்கணும்! அப்பிடி பயனிச்சாத்தான், அக்கரையில நீ நிறைய கத்துக்க முடியும். நல்லத கத்துக்க முடியும்! இப்ப புரிஞ்சுதா?” என்று தாத்தா வினவ, தெளிந்த கண்களுடன் சிரித்தான் முரளி!
  “இன்னொரு விஷயம் கண்ணா! நான் சொன்ன பெருங்கடல்ல நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும்! நல்லது படிச்சுப் போனா, நீ பண்ணப் போறது சாதனை! தேவையில்லாதது, எந்த விதத்திலும் உதவாதவைகளை படிச்சிட்டு போன உனக்கு தான் வீண் ரோதனை, அனாவசியமான தலை வேதனை! ஆஹா! பேசி பேசி புது பஞ்ச் டயலாக்கும் வருதே!” என்று கண் மலர்ந்து சிரித்தார் தாத்தா. முரளியும் அவருடன் சிரித்த படியே, “சரி! நீங்களே சொல்லுங்க! ஒரு நல்ல புத்தகத்த, அதிலிருந்து ஆரம்பிக்கிறேன்!” என்றான் முரளி. “ம்… முதல்ல சுவையான புத்தகத்திலிருந்து ஆரம்பி, வைரமுத்து எழுதுன ‘கொஞ்சம் தேநீர், நிறைய வானம்’ படி!” என்று பேசிய படி அந்த இனிய மாலைப் பொழுது கனிந்தது.

  வாங்க பழகலாம் வெற்றி பெற

  நண்பர் நாய் ஒன்றைவாங்கியிருந்தார். வீட்டில் கட்டிப்போடாமலும் எதுவும் கற்றுத்தராமலும் விட்டிருந்தார். அது தன்னிச்சைக்கு வீட்டிற்கு வெளியே கேட்டுக்குள்# சுற்றி திரிந்தது. இயற்கை உபாதைகளைக் கண்ட இடங்களில் செய்தது. நண்பர் ஆத்திரமடைந்தார். அடித்தார். பாவம் அதற்கு ஒன்றும் புரியவில்லை. பிறகு யோசித்த நண்பர் எந்த நேரத்தில் அப்படி செய்கிறது என்று கவனித்தார். அந்த நேரத்தில் வெளியே கொண்டு செல்ல அந்த பிரச்சனை நண்பருக்கும் நாய்க்கும் தீர்ந்தது. ஆனால் வெளியே கூட்டிச்செல்லும் போது கயிறு கொண்டோ சங்கிலியாலோ கட்டி கூட்டிச்செல்வதில்லை. அது தன்னிச்சைக்கு வெளியில் சுற்றும். இயற்கை உபாதைகளுக்குப் பிறகு வீட்டிற்குக் கூட்டி வந்து விடுவார். ஒரு நாள் வெளியில் இருக்கும் போது ஒரு தெரு நாய் அருகில் வர அதனுடன் விளையாடச்சென்றது. இன்னொருநாள் கேட் திறந்திருக்க அந்த தெரு நாயை பார்த்த நண்பரின் நாய் வெளியே ஒட, இவர் விரட்ட அடுத்த தெருவிற்கே ஓடிவிட்டது. நண்பர் மீண்டும் பொறுமை இழந்தார். ஆனால் நாய் வளர்க்கும் எண்ணத்தை மட்டும் விடவில்லை. சிறிது நேரம் கழித்து தேடிப்போனார். அடுத்த தெருவில் இருந்த நாய்க்கு இவரைக் கண்டதும் மகிழ்ச்சி. இவருக்கோ கோபம். பாவம் அதற்கு வழி தெரியவில்லை. பழக்கமிருந்தால் திரும்பி வந்திருக்கும். என்ன செய்ய? வந்ததும் நாய்க்கு அடி. பிறகு வருத்தப்பட்ôர். தவறு தன்னிடம் தான் உள்ளது என்பதை புரிந்து கொண்டார். நாயின் இயல்பு படி விட்டதால் தன்னிச்சைக்கு அது நடந்து கொண்டது. அடுத்த நாளில் இருந்து கயிறு கட்டி நாயை வெளியே கொண்டு சென்றார். எங்கேயும் ஓடுவதும் இல்லை கண்ட இடங்களில் அப்படி செய்வதும் இல்லை. அதனால் இருவருக்கும் பிரச்சனையும் இல்லை.
  சரி, இந்த நிகழ்வு இங்கு எதற்கு என்று யோசிக்கிறீர்களா? தொடர்ந்து ஒரு செயலைச் செய்வதால் அது நாளடைவில் பழக்கமாகிவிடுகிறது. அதுதான் நாய்க்கும் நண்பருக்கும் ஏற்பட்ட அனுபவம். பழக்கம் வழக்கமாகிவிடுவது நாய் வளர்ப்பதற்கு மட்டுமல்ல்.நமது மனதையும் உடலையும் பக்குவமாக வைத்துக்கொள்வதற்கும் இன்றியமையாதது.
  ஒருசில குழந்தைகள் அதிகாலை எழுந்து படிக்கிறார்கள், ஆனால் நம் குழந்நை ஏன் இப்படி என்று என்றாவது நினைக்கிறீர்களா? வருத்தப்பட வேண்டாம். அது பெரிய விசயமே இல்லை. குழந்தை அதிகாலை எழுந்திருக்க பழகி கொள்ளவில்லை அவ்வளவுதான். படிப்பது கூட அப்படித்தான். உலக சாம்பியன் பட்டம் பெற்றபழுதூக்கும் வீரர் தன்உடல் பலத்தை மட்டும் நம்பியிருந்தால் அவரால் நிச்சயம் அந்த பட்டத்தைப் பெற்றிருக்க முடியாது. மாறாக அவர் உடலை தயார் படுத்துவதோடு அதிக பழுவை எப்படி தூக்குவது என்பதை பழகிவந்திருப்பார். அந்த பழக்கம் தான் அவரை உலக சாம்பியனாக ஆக்கி இருக்கிறது. இதே பழக்கம் தான் உலக நாயகன், சூப்பர் ஸ்டார் போன்று மற்றதுறைதிறமையானவர்களின் அடையாளங்கள். எல்லாம் பழக்கத்தின் பலன் தான்.
  அடடா அந்த மாதிரி நல்ல பழக்கம் நம்மிடம் இல்லையே என வருத்தப்பட வேண்டிய அவசியமே இல்லை. அதை பெறுவதற்கான முயற்சி செயல்பாட்டின் தொடக்கம் இன்று கூட இருக்கலாமே. எனவே பயிற்சியும் பழக்கமும் வழக்கமாகிவிடும் நேரம் உங்கள் வெற்றி உங்களை நோக்கி ஓடி வரத்துவங்கி விட்டது என்று அர்த்தப்படுத்திக்கொள்ளுங்கள். எந்த ஒரு செயலும் ஆரம்பத்தில் ஆர்வத்தின் விளைவாக துளிர்விட்டு முயற்சி செய்வதால் பயிற்சி என்றசெயல்பாடு தொடர்ந்து பழக்கம் உங்களது வழக்கமாகி விடும். உங்கள் வழக்கமான பழக்கம் உங்கள் குணாதிசயங்களாக மாறிவிடுகிறது. அதன் பிறகு அதுவே உங்கள் அடையாளமாகிவிடுகிறது.
  அவரைத் தெரியுமா என்று கேட்டால் … ஓ தெரியுமே எப்போதுமே சிரித்த முகத்துடன் நம் தேவையைக் கரிசனமாக கேட்டுக்கொண்டு சேவைபுரியும் ஓட்டல் சர்வரில் இருந்து நாடாளும் அமைச்சர்கள் வரை நாம் அவர்களின் அடையாளமாக கொண்டிருப்பது அவர்களுடைய நெடுநாட்களின் அல்லது ஆண்டுகளின் பழக்கம் என்பதில் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை.
  உங்கள் உடல், மனம், உணவு முறைகள். நல்ல புத்தகங்கள் படிப்பது போன்றவற்றில் நல்லமுறையில் பழக்கப்படுத்திக்கொள்ள கற்றுக்கொள்ளுங்கள்.
  வெற்றியை நோக்கி உங்கள் செயல்பாடுகளை பழக்கி கொண்டால் வெற்றி உங்களை நோக்கி வருவது வழக்கமாகிவிடும். அதனால் வாங்க பழகலாம்… அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்……