என் பள்ளி
தமிழ்நாட்டின் கல்வி மாவட்டம் என்று அழைக்கப்படும் நாமக்கல் மாவட்டத்தில் தான் பிறந்தேன்.. இதே ஊரில் என்னுடைய தந்தை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிப்புரிந்தார். என் தாயார் ஆசிரியராக இருந்து விருப்ப ஓய்வுப் பெற்றார். எனது தங்கை திருமதி நந்தினி அவருடைய கணவா திரு. சு.அறிவுடைநம்பி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் துறைப் பேராசிரியராக இருக்கிறார். இருவரும் தற்போது சிதம்பரத்தில் வசித்து வருகிறார்கள்.
என்னுடைய தாத்தா மற்றும் அவருடைய அண்ணன் தம்பிகள் மற்றும் சித்தப்பா, பெரியப்பா என்று அனைவருமே அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வுப் பெற்றவர்கள். அதனால் எங்கள் குடும்பத்தை வாத்தியர் வீட்டு குடும்பம் என்று வாத்தியார் பரம்பரை என்றும் அழைப்பார்கள். அதனால் தான் சின்ன வயதிலிருந்தே ஆசிரியர் பணியின் மீது ஆர்வம் எனக்குள் வந்தது.
மேலும் ஒரு ஆசிரியரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன் இறைவன் அருளால் அதுவும் எனக்கு கிடைத்தது. வள்ளியம்மாள் என்பரை மணந்து கொண்டேன். எங்களின் ஆசிரியர் குடும்பத்தின் அடுத்த வரிசு நிரஞ்சன் எட்டாம் வகுப்பு படிக்கிறார்.
நாமக்கல் நகரின் நடுவே அமைந்துள்ள சந்தைப்பேட்டைப் புதூர் அர்த்தனாரி நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளியில் என்னுடைய முதல் வகுப்பு கல்விப்பயணம் அமைந்தது. இப்பள்ளியில் திருமதி. பார்வதி ஆசிரியையின் பொற்கரங்களால் விரல் பிடித்து எழுதவும் படிக்கவும் தொடங்கினேன். இப்பள்ளி வரலாற்று சிறப்பு மிக்க நூற்றாண்டு கொண்டியப் பள்ளி.
0 comments Posted in Articles