– 2013 – May | தன்னம்பிக்கை

Home » 2013 » May (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    காட்சிப் பிழை

    காட்சி நம்பிக்கையில் நடக்கின்றது

    கடந்த 1995ல் அன்றைக்கு நியூமராலஜி பரீட்சை என்று நினைக்கின்றேன், வேக வேகமாகப் படித்து நிறைய விஷயங்களை மனதிற்குள் நிறைத்து வைத்திருக்கலாம் என்று மாரியப்பன் கடும் முயற்சி மேற்கொண்டு இருந்தான். இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று, தேர்வு எழுத வேண்டிய நேரம் நெருங்கியதும் அறைக்குள் கடவுளை கும்பிட தொடங்கினான். கண்கள் நெக்குருக வேண்டிக்கொள்கையில் அவனுக்கு ஆசுவாச உணர்வு கிடைக்கும்போல் உள்ளது. தேர்வு அவனுக்கு கடவுளின் பரிசோதனையாக காட்சிப் பிழையாகித் தெரிகின்றது போலும். நம்பிக்கை ஒரு நல்ல விஷயமாக வளர்ந்து வந்து மனதை நிறைக்கின்றது. ஒரு குறிப்பிட்ட சட்டை மட்டுமே போட்டுக்கொண்டு தேர்வெழுத செல்லும் நண்பர்களுண்டு, எனக்கு. இந்த வரிசையில் பேனாதான் தேர்வு வெற்றிக்கு காரணகர்த்தா என நம்புவோர் உண்டு.

    புதுமையும் அறிவார்ந்த சொத்துரிமை சட்டங்களும்!
    புதுமை என்பது புதுக்கவிதையில் இருப்பது மட்டுமல்ல ஒவ்வொரு கண்டுபிடிப்புக்களுக்கும் உரிமை கொண்டாடுபவர்களிடத்தும் இருக்கவேண்டும் என்பது இந்திய அறிவார்ந்த சொத்துரிமை (காப்புரிமை) சட்டம், 1970 சொல்வது. சமீப காலத்தில் கண்ணுக்குப் புலப்படாத சொத்துக்கள் என்று சொல்லப்படும் படைப்புரிமை யுத்தங்கள் மிகுந்த ஆரவாரத்துடன் அதற்குரிய நீதிமன்றங்களிலும் மாண்புமிகு உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்று வருகின்றன.

    காட்சிப்பிழை என்பதுபோல ஒரு கண்டுபிடிப்பு மற்றொன்று போலவே இருப்பின் அது மாற்றியமைத்தல் (modification) என்கின்ற வகையில் வருமே ஒழிய, புதிய கண்டுபிடிப்பு என்று காப்புரிமை கோர இயலாது. தொடரும் காப்புரிமை சச்சரவுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் ‘எவர் கிரீனிங்’ (ever greening) என்ற ஒரு சொல்லாட்சி…. குறிப்பிடத் தகுந்தது. ஒரு ‘பேட்டன்ட்’ அல்லது காப்புரிமை பெற்றுவிட்டால் அது குறிப்பிட்ட (ஏழு) வருடங்களுக்குப் பிறகு பொது சொத்து ஆகிவிடுகின்றது. அதை தடுப்பதற்கான எதிர்மறை டெக்னாலஜிதான் எவர்கிரீனிங் என்பது. சிறுசிறு மாற்றங்களைச் செய்வதன்மூலம் தமது படைப்பு புதுமையானது என்று தொடர்ச்சியாக காப்புரிமையை பழைய கண்டுபிடிப்பு ஒன்றுக்கு செய்துகொண்டே இருந்தால், அதனை எவர்கிரீனிங் என்று சொல்கின்றார்கள். இது ஒருமுறை வாங்கிய தேனில் நீர் கலந்து கலந்து நீர்த்துப் போக செய்வது போல… இது காப்புரிமை உலகின் காட்சிப் பிழை என்று கொள்ளலாம். சமீபகால, நோவார்டிஸ் கம்பெனியாரின் வழக்குத் தோல்வி பேட்டன்ட் உலகில் சின்னச்சின்ன மாற்றங்களுக்குக் காப்புரிமை கொண்டாடும் செயல்களை ஊக்குவிக்காமல் பின்புறமாக தள்ளிச்செல்கின்றது.

    தற்காலிக வெற்றி மற்றும் தரமான வெற்றி:

    “நான் லீனியர் ஸ்டோரி டெல்லிங்” (Non linear story telling) டெக்னாலஜியின் குறிப்பிடத்தகுந்த இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தனது திரைப்படங்களில், காட்சிப் பிழையை நிறையப் புகுத்தியிருப்பார். அவரது பேட்மேன் பிகின்ஸ் என்கிற படத்திலிருந்து தமிழ்ப்படங்கள் நிறைய பிறந்திருப்பதாக பேச்சு. இவர் செய்த யுக்தி என்னவெனில், காட்சிகளை முன்னும் பின்னுமாக கலந்து கொடுத்து, புரிந்துகொள்ள சற்று யோசிப்பது போல அமைத்து தெரிந்துகொள்வதில் உள்ள மகிழ்ச்சியை அனுபவிக்க வைப்பதுவே.

    இதனையும் முதன்முறை பார்க்கும்பொழுது காட்சியை நாம் சரியாக பார்க்காமல் விட்டுவிட்டோமே என்று சந்தேகப்படுகின்ற காட்சிப் பிழையை அனுபவிக்க வைக்கின்றார்.

    வாழ்விலும் சில நேரங்களில் நாம் தோல்வியுற்றுவிட்டதாக நினைக்கையில் அல்லது நினைத்துப் பார்க்கையில் காட்சிப்பிழை போல அதுவே வெற்றி என்று தெரிய வருகின்றது. பல நேரங்களில் சின்ன வெற்றிகளின் சந்தோஷத்தில், வெளிச்சத்தில் பெரிய வெற்றிகளுக்கான கண் கூசுதல் ஏற்பட்டு விடுகின்றது. மேலும், முயற்சி செய்யாமலே இருந்துவிடுகின்றோம். சென்னை கால்பந்து கழகத்தின் இரண்டாவது டிவிஷன் லீக் போட்டிகளில் நேரு பார்க்கில் வெள்ளை ஜெர்ஸி அணிந்து விளையாடுகையில் கோல் கிராஸிற்கு (Goal Cross) கால் வைக்கவேண்டும். அதை சற்று முன்பாகவோ? அல்லது பின்பாகவோ? வைத்தாலும் கோலாக பந்து மாறுவதில்லை.

    அதைப்போல மிகச் சரியான நேரத்தில்தான் செயல்கள் நடைபெறுகின்றன. காட்சிகள் அவனால் அரங்கேற்றப்படுகின்றன. அவற்றை புரிந்துகொள்ள முயற்சிக்கின்ற சம்பந்தப்பட்டவர்கள் எப்படி எடுத்துக்கொள்கின்றார்கள் என்பதில் சூட்சுமம் அடங்கியிருக்கின்றது. இதையே இரமண மகரிஷி காண்பானைப் பொருத்தே காட்சி அமைகின்றது என்று சொல்லியிருக்கின்றார். காண்பானை ‘திருக்’ என்றும், காணப்படும் காட்சியை ‘திருச்சியம்’ என்றும் அவரது கருத்துக்களை சொல்லும் வசனாமிர்தம் என்னும் புத்தகம் சொல்கின்றது.
    மாக்கியவில்லியின் ‘இளவரசன்’ படித்தேன். அதில், “பார்க்கின்றவரெல்லாம், தான் என்ன பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகின்றனரோ அதையே காண்கின்றனர். எது உண்மையில் இருக்கின்றதோ அதை காண்பதில்லை” என்று எழுதியிருக்கின்றார். மாக்கியவில்லி 15ஆம் நூற்றாண்டில் இத்தாலிப் பக்கம் அனுபவித்து சொன்னதும், இரமண மகரிஷி 20ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் அருளிச் சென்றதும் ஆச்சரியமாக ஒன்றுபோலிருக்க கண்டதும் தோன்றியது காட்சிப் பிழைகள் சாதாரணமானவை என்பதே.

    மாடர்ன் ஆர்ட்கள் வண்ணக்கலவையாக தீற்றல்களாக, காணப்படலாம், அவையே கலையாற்றல் மிகுந்த கண்களுக்கு காட்சிப் பிழையற்ற கவர்ச்சியாக தெரியலாம். கொங்கன் இரயில்வே வழியாக சமீபத்தில் பயணித்தோம். SBC என்பது ஒரு நகரின் இரயில் நிலைய சுருக்கம், MAS என்றால் சென்னை, மெட்ராஸ் என்பதன் சுருக்கம் ஆகலாம்…. ஆனால் SBC என்றால் பெங்களூர் சென்ட்ரலாம்…. இந்தக் காட்சிப்பிழையை இந்து யங் வோல்ட்டு (Young World)ல் படித்தேன்.

    பட்கல் பயணம் :-
    பரமானந்தம் ஆசிரியர் ஒரு சுவாரஸ்யமான மனிதர். “பசங்க ரொம்ப முன்னேறிட்டாங்க சார்…. ரொம்ப பக்குவமா பேச வைக்கிறாங்க, டெய்லி, எச்சரிக்கையாவே இருக்க வேண்டி இருக்கு சார், உலகம் மாறிடுச்சு, ஆசிரியர்களுக்கு சாதுரியம் தேவைப்படுது சார்” என்று நிறைய எடுத்துக்காட்டுக்கள் மூலம் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் மாணவர் உறவின் கற்பித்தல் நிகழ்வுகளின் காட்சிப் பிழை குறித்துப் பேசிக்கொண்டு இருந்தோம். இந்தியாவின் துபாய் எனப்படும் கோவா அருகேயிருந்த பட்கல் என்கின்ற ஊரில்.

    காலகாலமாக இயற்கை காட்சி கண்கட்டு வித்தைகளைக் கழுவி சுத்தப்படுத்திக்கொண்டே இருக்கின்றது. இத்தகைய இயற்கைப் பரப்புகள் மனதிற்கு சுத்தமானதொரு பின்புலம் தருகின்றன. அந்தப் பின்னணியில் நம் நினைவுகளை வைத்துப் பார்ப்பது எஃக்ஸ் ரே படத்தை வெள்ளை ஒளிப்பெட்டி மீது வைத்துப் பார்ப்பது போல, பார்வைக்கு ஸ்படிகமான வரையரைகளைக் கொடுக்கின்றது. காட்சிப் பிழைகளைத் தெளிவாக்குகின்றது. மனித உறவுகளின் நிறங்களை வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றது. சாயம் போகின்ற பொழுது கூட சிரிக்கக் கற்றுக்கொடுக்கின்றது.

    கன்னட நூலகம் ஒன்றில் நீலகண்ட நாயக் என்கின்ற பாசமுள்ள நூலகர் ஒருவரின் உதவியோடு ஒரு மணி நேரம் தனித்துப் பிரிக்கப்படாத புத்தகங்களுக்கிடையில் ஆங்கில புத்தகங்களைத் தெரிந்தெடுத்துக் கொண்டிருந்தேன். பரமானந்தம் சார், இங்கியுமா சார்…. படிக்கணும்? என்று உள்ளூர ஆச்சரியப்பட்டுக்கொண்டே…. கெமிஸ்ட்ரி புத்தகமொன்றை புரட்டிக்கொண்டிருந்தார். ஒவ்வொரு அடுக்காக கண்கள் மேய்கையில் எண்ணற்ற காட்சிகள் கண் சிமிட்டி மறைந்தன. ஷேக்ஸ்பியரை படமாகத் தாங்கி அட்டையில் வட்ட ஜிலேபி கன்னட எழுத்துக்களோடு இருந்த புத்தகமொன்று அவரது நாடகங்களை மனது நிறைய காட்சிப் படுத்திக்கொண்டு இருந்தது.

    இன்னும் இலக்கியச் சோலைக்குள் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னை பல்கலைக் கழகத்தில் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கப் போகும் காட்சிப் பிழை கண்ணில் மின்னுகின்றது….

    காட்சிகள் தொடரும்….. பிழைகளும்….

    முயற்சியே வளர்ச்சிக்கு வேர்

    E for Efforts, Not for Excuses
    ஒரு கல்லூரி முதல்வரின் அறையில் நான் கண்ட வாசகம் இது. ஆம்Ð முயற்சிக்கு முக்கியம் கொடுக்காமல் சாக்கு போக்குகளை கண்டுபிடிப்பதில் சாமர்த்தியம் காட்டுவதால் தான் வெற்றி என்பது நம்மில் பலருக்கு வெகு தொலைவில் உள்ளது.
    சக்தி மசாலா சாந்தி துரைசாமி சொல்வார்கள், “முத்தெடுப்பதற்காக கடலில் மூழ்கியவன் வெறும் கையோடு வெளியே வந்தால், கடலில் முத்து இல்லை என்றா பொருள்? அவனுடைய முயற்சி முழுமையானதாக இல்லை என்றல்லவா பொருள்”
    ஆம், முயற்சி என்பதை ஏதோ பேருக்கு உழைப்பது, பிறகு ஓய்வெடுப்பது, உறங்குவது என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் அவர்களின் மீது வெற்றியின் நிழல்கூட படுவதில்லை.
    R for Results, Not for Reasons
    ஒரு தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனரின் அறையில் நான் கண்ட வாசகம் இது. முயற்சி என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை சுருக்கமாகச் சொல்லும் வாசகம் இது. “நீ எவ்வளவு முயற்சித்தாய் என்பது எனக்குத் தேவையில்லை. முடிவு என்ன ஆயிற்று? அதைச் சொல்” என்பதாகும்.
    முயற்சி என்பது எப்படித்தான் இருக்க வேண்டும்?
    முயற்சி, உடலோடு மட்டுமே சம்பந்தப்பட்டது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் உடனே அதை மாற்றிக் கொள்ளுங்கள். முயற்சி என்பது மூளையுடனும் சம்பந்தப்பட்டது என்பது தான் உண்மை. அதனால் தானே உழைப்பு என்ற சொல்லுக்கு முதல் எழுத்தாக உடலைக் குறிக்கும் ‘உ’வும், இறுதி எழுத்தாக புத்தியைக் குறிக்கும் ‘பு’வும் அமைந்திருக்கிறது.
    மூளையை உபயோகிக்காமல் வெறும் உடலை மட்டுமே நம்பி முயற்சி எடுப்பவர்கள் முன்னேற்றம் காண்பது என்பது முடியாத காரியம். பட்டிமன்றப் பேச்சாளர் ராஜாராம் ஒருமுறை சொன்னார்: “மாடா உழைக்கிறேன். நாயா அலையிறேன்னு சொல்றியே, எதுக்கு? மனுசனா உழையேன்” – சிந்திக்க வேண்டிய கருத்து இது.
    மாட்டுக்கும் நாய்க்கும் ஆறாம் அறிவு கிடையாது. உடலால் மட்டுமே உழைக்கின்றன. அதனால் காலம் காலமாக அப்படியே இருக்கின்றன.
    மனிதனுக்குத்தான் ஆறாம் அறிவு இருக்கிறதே. அவனும் உடலால் மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கலாமா? அப்படி உழைத்தால் நேற்று மாதிரியே இன்றும் இருப்பான். நாளையும் இருப்பான். அவ்வளவு தான்.
    ஆக, நமது முயற்சிகளில் முக்கால் பங்கு மூளையின் உழைப்பு இருந்தால் ஒழிய நிச்சயமாக முன்னேற முடியாது.
    சரி, மூளையின் உழைப்பு என்பது எது?
    – நான் என் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும்? என்னென்ன வேலைகளைச் செய்யக் கூடாது?
    – நான் யார் யாரிடம் நெருங்கியிருக்க வேண்டும்? யார் யாரிடம் விலகியிருக்க வேண்டும்?
    – இப்போது நான் செய்து கொண்டிருக்கும் இந்த வேலை எனது முன்னேற்றத்திற்கு உதவுமா? அல்லது நேரத்தைக் கொல்லும் வெட்டி வேலையா?
    – எனது லட்சியத்தை அடைவதற்கு இன்று என்ன செய்ய வேண்டும்? நானை என்ன செய்ய வேண்டும்?
    – எனது கடையின் அல்லது தொழிலின் லாபத்தை இரண்டு மடங்காக ஆக்க நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?
    – எனது பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுக்க, நான் எப்படியெல்லாம் படிக்க வேண்டும்?
    இப்படியெல்லாம்… சதாசர்வ காலமும் சிந்திப்பதும், முன்னேற்றத்திற்கான சரியான பாதைகளையும், யுக்திகளையும் தேர்ந்தெடுப்பதும், பிரச்னைகள் எதிர்பட்டால் அவற்றிலிருந்து மீண்டு எழும் உபாயங்களைக் கண்டுபிடிப்பதும்… ஆகிய எல்லாமே மூளையின் வேலை தானேÐ
    சரி, மூளையின் உழைப்பும் ஆயிற்று உடலின் உழைப்பும் எப்படி இருக்க வேண்டும்?
    – உடலை வருத்தி கஷ்டப்பட்டு உழைக்காமல், திறமையாக உழைப்பது.
    – ஏனோ தானோ என்று உழைக்காமல் முழுஈடுபாட்டுடன் முயற்சிப்பது.
    – அரைகுறையாக உழைக்காமல், முழுமையாக முயற்சிப்பது.
    – பிரச்னைகளைக் கண்டு பின்வாங்கி விடாமல், தொடர்ந்து முயற்சிப்பது.
    – விதவிதமாக முயற்சிப்பது.
    – வீரியமாக முயற்சிப்பது.
    – வித்தியாசமாக முயற்சிப்பது.
    இவைùல்லாமே உடல் சார்ந்த முயற்சிக் சில அடையாளங்கள்.
    நாம் எவ்வளவு முன்னேறினோம் என்பது, எவ்வளவு முயற்சித்தோம், எப்படியெல்லாம் முயற்சித்தோம் என்பதைப் பொறுத்ததே. அந்த முயற்சியிலும், மூளையின் பங்கு அதிகமா? உடலின் பங்கு அதிகமா? என்பதையும் பொருத்ததே. மனிதன் முன்னேறப் பிறந்தவன். காரணம் மூளையோடு பிறந்தவன். நாம் மனிதர்கள்Ð

    காலேஜ் கார்னர்

    பள்ளி, கல்லூரிகளில் இசை மற்றும் நடனம் போன்றவற்றில் பல்வேறு பரிசுகளைப் பெற்று தற்போது இசையில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்த தொடர்ந்து கற்றுக்கொண்டும் இடையிடையே பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பரிசுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டிருக்கும் கல்லூரி மாணவியின் பகிர்தலே இந்த மாத காலேஜ் கார்னர்…
    என் பெயர் கோமதி. சென்னையில் உள்ள எம்.ஜே.எம். கல்லூரியில் எம்.காம். படித்துக் கொண்டிருக்கிறேன். இசை என் வாழ்க்கையின் பன்முகத் தன்மைகளை கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. வெறும் பாடப் புத்தகங்களோடு மட்டும் என் நாட்கள் கழிந்துவிடக் கூடாது என்பதை இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டதன் விளைவுதான் என் ஆளுமைப் பண்புகளில் ஒன்றான இசையை கற்றுக்கொண்டது.
    இசையின் மீது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது எம்.எஸ். அம்மா அவர்களின் பாடல். குறிப்பாக அவரின் அழியாப் புகழ்பெற்ற ‘சுப்ரபாதம்’ இசையின் மீது என் ஆர்வத்தைத் திருப்பியதுடன் என்னுள் இருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து என்னை செதுக்கியது என்று கூடச் சொல்லலாம். அந்தப் பாடலின் ராகம், ஆலாபனை எல்லாம் நாமும் அப்படியே கற்றுக்கொண்டு பாடவேண்டும் என்று சிறுவயதிலேயே என்னுள் பதியவைத்தது.
    சிறுவயதில் கற்கத் தொடங்கிய நான் சில ஆண்டுகளில் கல்விக்கு நிறைய நேரம் ஒதுக்க வேண்டிய சூழ்நிலையால் எனது விருப்பமான இசையை கற்பதை தற்காலிகமாக நிறுத்திவிட்டேன். ஆனாலும் என் உள்ளத்தில் தொடர்ந்து இசை கற்கவேண்டும் என்ற வேட்கை என்னை தூண்டிக்கொண்டே இருந்தது. நம்முடைய எண்ணமே நம் வாழ்வை கட்டமைக்கும் என்பதைப் போல் இசையை கற்க வேண்டும் என்ற என் எண்ணமே மீண்டும் என்னை அதைநோக்கி இழுத்துச் சென்றது. கடந்த நான்கு வருடமாக என்னுடைய குரு —————— அவர்களிடம் முழுமையான ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டு வருகிறேன்.
    இசையின் அடிப்படையைக் கற்றுக்கொண்டிருக்கும் எனக்கு பிடித்தது தியாகராஜர் கீர்த்தனைகளில் சஹானா ராகத்தில் அமைந்த வந்தனம் மற்றும் தாலாட்டைப் போல உருகவைக்கும் குறிஞ்சிக் கீர்த்தனைகள்.
    இதற்கிடையில் கடந்தாண்டு திருவையாரில் நடைபெற்ற தியாகராஜர் ஆராதனை விழாவில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஐந்து நாட்கள் நடைபெற்ற பஞ்ச கீர்த்தனையில் ஒருநாள் நானும் கலந்து கொண்டு பாடியிருக்கிறேன்.
    ஸ்ரீ ஸ்ரீ பூஜ்ய ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் முன்னிலையில் 5,700 சங்கீத வித்வான்கள் கலந்துகொண்ட ஒரு நிகழ்வில் நானும் பங்குபெற்று பாடியிருக்கிறேன். சங்கீத மேதை பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் ஒரு கான்செப்டில் பாடியிருப்பது என் வாழ்வின் பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன்.
    என்னுடைய இந்த இசைப் பயணத்தில் திருவையாறில் தியாகராஜர் ஆராதனை விழாவில் பங்கேற்று பாடிய என்னை திரு. O.S. அருண் ஜி (வாய்ப்பட்டுக் கலைஞர்), திரு. ஸ்ரீ விஷ்ணு ராஜாராம், தவில் வித்வான் திரு. பழனியப்பன் போன்றோரின் பாராட்டியது என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கின்றது. என் இசைப் பயணத்தில் தேடல் மிக அதிகமாக இருக்கிறது. கீர்த்தனைகளில் எளிமையாக இருக்கும் தியாகராஜர் பாடல்கள் முதல் மிகக் கடினமாக இருக்கும் முத்துசாமி தீட்சதரின் கீர்த்தனைகள் வரை கற்றுத்தெளிய வேண்டும் என்பதே என் இலக்காகக் கொண்டு கற்றுக்கொண்டு வருகிறேன். முத்துசாமி தீட்சதரின் கீர்த்தனைகள் மிகவும் கடினமாக இருப்பதற்குக் காரணம் பெரும்பகுதி சமஸ்கிருதமாக இருப்பதால் தான். வர்ணம், கீர்த்தனை என்று அவரின் இசை ஆளுமையை கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டு வருகிறேன்.
    எதிர்காலத்தில் நான் கற்றுக்கொள்ளும் இசையை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு டிரீட்மென்ட்டாகப் பயன்படுத்தப் போகிறேன். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வார்த்தைகளைக் காட்டிலும் இசை வடிவில் கொடுக்கப்படும் இன்ஸ்ட்ரக்சன்ஸ் எளிதில் பயனளிக்கும் என்பதால் அந்த மாதிரியானவர்களுக்கு பஜன்ஸ் மூலம் டிரீட்மெண்ட் கொடுக்க முடிவு செய்துள்ளேன்.
    இசை என்பது மனிதனின் ஆளுமைப் பண்பை வளர்க்கும் கருவிகளில் ஒன்று. அதை வசதிபடைத்தவர்கள் முதல் வசதியற்றவர்கள் வரை பயன்படுத்த வேண்டும் என்பதே என் எண்ணம். என்னுடைய இசைப்பயணத்தில் எதிர்கால இலக்காக நான் நிர்ணயித்துக் கொண்டிருப்பது வசதியற்ற குழந்தைகளுக்கு இசையைக் கற்றுத்தந்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பது தான்.
    இவரைப்போன்றே இவருடைய தங்கை யோகா வீணை வாசிப்பதில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துவருகிறார்.

    பணிவும் துணிவும் அவசியம்

    உயர்வுக்குத் துணையாக இருப்பது பணிவும், துணிவும். கோழைத்தனம் கூடாது. கர்வம் ஆகாது. பணிவு பக்குவத்தை உண்டாக்கும். துணிவு எல்லையைத் தொடுகின்ற வல்லமையைத் தரும். பணிவும் துணிவும் இணைந்தால் சிறப்பாக வாழ்வு அமையும். சேதாரத்திற்கே இடம் இருக்காது. அற்புதமான வாழ்க்கை அமைவதற்கு ஆதாரமாக இருக்கும்.
    பணிவு பெருமையைத் தரும். துணிவு செயல்பட வைக்கும். துணிவு கொள்பவர்களுக்குத்தான் அறிவும் உணர்வும் துணிவு சேரும். துணிவு இல்லாத இடத்தில் சோர்வு குடிபுகுந்துவிடும்.
    துணிவு பிறந்துவிட்டால் அபாயத்தைக் கண்டு அஞ்சி ஆபத்துக்கு உள்ளாவதைத் தடுக்க முடியும். பயம் பிறந்துவிட்டால் உடலை வதைக்கும் உள்ளத்தைச் சிதைக்கும். அதற்காக எதற்கும் அஞ்சாமல் இருந்து விடவும் கூடாது. தீமையைக் கண்டு அஞ்சத்தான் வேண்டும்.
    துணிச்சல் பிறக்க வேண்டிய இடத்தில் அச்சம் பிறக்கக்கூடாது. வெற்றி பெறும் வரை துணிச்சலோடு செயலில் இறங்க வேண்டும். எதிர்காலத்தின் சிறப்பைப் பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும். சென்ற காலத்தைப் பற்றித் திரும்பிப் பார்க்கக் கூடாது. முன் வைத்த காலைப் பின் வைக்கக் கூடாது. முன்னேறிச் செல்ல வேண்டும். பின்னுக்குப் போகக்கூடாது. பின் தங்கியும் நின்றுவிடக் கூடாது. பணிவோடு தொடர்ந்து செயலில் ஈடுபட வேண்டும். துணிவு பெறுவதற்குப் பலவீனத்திற்கு இடம் தரக் கூடாது. துணிவு கொள்வேன் என்று நாவினால் சொன்னால் மட்டும் போதாது. செயலில் காட்ட வேண்டும்.
    ஆற்றின் இரு கரைகளைப் போன்றது பணிவும் துணிவும். கரை இல்லாத ஆற்றுநீர் கால்வாய் வழியாகப் பாயாது. கழனிகளில் புகாது. நெல்மணிகள் விளையாது. இதேபோல பணிவும் துணிவும் இல்லாத வாழ்வு வெற்றிகரமாக அமையாது. இதற்கு உறுதுணையாக இருப்பது நாவடக்கம்.
    எதைக் காக்காமல் இருந்தாலும் நாவை கட்டாயம் காத்துக் கொள்ள வேண்டும். நாவை அடக்காவிட்டால் வசைச் சொற்களை பேச வேண்டியிருக்கும். வாயை அடக்கி நாவை மடக்கிப் பணிவோடு பழகுபவர்களுக்குப் பாதகம் ஏற்படவே செய்யாது என்கிறார் சாலமன். பணிவுக்கு நாவடக்கம் முன் வாசல் ஆகும். அந்த வாசலில் உள்ள படிகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.
    அவசியம் ஏற்படும் பொழுது மட்டுமே வாயைத் திறக்க வேண்டும். சுருக்கமாகவும், சுவையாகவும் பேசுவது சிறப்பானது. கேட்பவரின் தன்மை அறிந்து நன்மை தரும் நல்ல சொற்களைத் தான் கூற வேண்டும். பேசும் சொற்களில் கோபக் காற்று வீசக் கூடாது. கடுஞ்சொல் கலக்கவே கூடாது. வசைமொழி எப்பொழுதுமே ஆகாது. இனிய சொற்கள் இருக்கும் பொழுது வன்மையான சொற்களை வாயாலும் உச்சரிக்காமல் இருப்பது நல்லது.
    மென்மையாகவும் இனிமையாகவும் சிந்தித்துப் பேச வேண்டும். மணி அடிப்பது போல கணீர் என்று பேசுவது சிறப்பானது. அளவுக்கு மேல் பேசக்கூடாது. சொல்லில் சிக்கனம் அவசியம் தேவை. அளந்து பேசுவது இனிமையானது. பேச வேண்டிய இடத்தில் கட்டாயம் பேச வேண்டும். எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பது விரும்பத்தக்கது அல்ல.
    கண்டபடி பேசிக்கொண்டு இருப்பதால் பலவிதமான இடையூறுகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். வாய்க்கு வந்தபடி உளறக்கூடாது. நிதானித்துப் பேசுவது நல்லது. தானத்திலும் பெரிது நிதானம் என்பதனை உணர்ந்து கொள்வது அவசியம். கருத்தோடும், காரியத்தோடும் பேசுவது நன்மையைத் தரும். நாவினால் வெளியேறும் சொற்களும் நறுக்காய் இருக்க வேண்டும்.
    சிக்கனமான பேச்சு என்றுமே சிறப்பைத் தரும். டிவியோன் புகழ்பெற்ற ஸ்பெயின் நாட்டுக் கவிஞர். பல்கலைக்கழகப் பேராசிரியர் கிறிஸ்துவ வேதத்தை ஸ்பெயின் மொழியில் மொழி பெயர்த்தார். அதைக் குற்றம் என்று கூறி ஐந்தாண்டுகள் சிறை வாசம் அளித்தனர். அவரது நாட்டை ஆண்ட ஆணவக்காரர்கள்.
    இருண்ட தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். சொல்ல முடியாத வேதனைகளுக்கு உள்ளானார். ஐந்தாண்டுகள் கழித்து அவர் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் பேராசிரியராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவர் பேசிய முதல் கூட்டத்திற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். அவர் சிறையில் பட்ட கஷ்டங்களை எல்லாம் தொடராகக் கூறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ ஐந்தாண்டுகளுக்கு முன்னே அவர் சொற்பொழிவு செய்த போது எங்கே நிறுத்தினாரோ அந்த இடத்தில் இருந்து பேசத் தொடங்கினார். சிறை வாழ்க்கையைப் பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை.
    கிரேக்க ஞானி சாக்ரடீசை ஒரு அற்பன் காலால் உதைத்துவிட்டான். இதைக்கண்ட அவருடைய நண்பருக்கு ஆத்திரம் பொங்கியது. சாக்ரடீஸ் பொறுமையாக இருந்தார். வாயைத் திறக்கவில்லை முகத்தைச் சுளிக்கவில்லை. ஆனால் சாக்ரடீஸின் நண்பருக்கோ நிலை கொள்ளவில்லை.
    நண்பரைப் பார்த்து சாக்ரடீஸ், “ஒரு கழுதை என்னை உதைத்தால், நான் அதை திருப்பி உதைப்பேன் என்று நினைக்கிறாயா நண்பா?” என்று கேட்டார். ஆத்திரத்திற்கு இடம் கொடுத்தால் மனம் பாழ்பட்டு போகும். நிதானம் தவறாமல் இருக்க வேண்டுமானால் நியாயமான கோபத்திற்கு கூட அதிக முக்கியத்துவம் தரக்கூடாது.
    பரபரப்பும், பதற்றமும், பணிவையும், துணிவையும் உண்டாக்காது. அப்படிப்பட்ட மனிதன் வலிமை மிக்கவனாக விளங்க முடியாது என்று ஜெர்மன் தத்துவ ஞானியான ஷோப்பன் கூறுகிறார்.
    பரபரப்போடு தெரிந்துதான் ஆகவேண்டும் என்ற காரியங்கள் ஒன்றும் கிடையாது என்று நான் எண்ணுகிறேன் என்கிறார் சாக்ரடீஸ்.
    நாம் வாழ்க்கையில் உயர்ந்து முன்னேற வேண்டுமானால் பணிவும் துணிவும் கொண்டு செயல்பட வேண்டும். இதுதான் நம்மை வெற்றி பெற வைக்கும்.

    என் பள்ளி

    வேர்களை நினைவுகூறும் விழுதுகளாக இருக்கும் சாதனையாளர்கள் வரிசையில் இந்த மாதம் தென்கொரியாவின் ஜிஞ்சுவில் (Jinju) உள்ள கெயின்சாங் (Gyeongsang National University) தேசிய பல்கலைக்கழகத்தில் முதுகலை முனைவர் பட்ட ஆய்வு (Post Graduate Doctorate Fellow) மேற்கொண்டுள்ள முனைவர் அருள் குமார் நாகப்பன் அவர்கள் தன்னுடைய வெற்றிப் பயணத்தில் வேர்களாக நின்று உதவிய ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்களைப் பற்றி பகிர்ந்து கொண்டது…
    என்னுடைய ஊர் இடப்பாடிக்கு அருகில் சித்திரபாளையம். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். எங்கள் ஊரில் இருந்து 1 மைல் தூரம் நடந்து சென்று படித்துவந்தேன். வகுப்பில் எப்போதும் முதல் இரண்டு இடங்களுக்குள் வந்துவிடுவேன்.
    சமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படித்தேன். அப்பள்ளியில் படித்த அந்த 5 ஆண்டுகள் என்னை எல்லாவிதத்திலும் வார்த்தெடுத்த காலகட்டமாகும். அதற்குக் காரணம் எங்கள் வகுப்பு ஆசிரியராக இருந்த திரு. ரங்கசாமி சார்.
    ஒன்றாம் வகுப்பு முதல் முதலிரண்டு இடங்களில் தேர்ச்சி பெற்றுவந்த நான் ஆறாம் வகுப்பிலிருந்து பின்தங்க ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் எனக்கு எட்டாம் வகுப்பு ஆசிரியராக வந்த வனவாசி திரு. ரங்கசாமி சார் தான் என் தன்னம்பிக்கை வளர்த்து மீண்டும் முதலிடத்தில் தேர்ச்சி பெறச் செய்தார்.
    மாணவர்கள் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் ரங்கசாமி சார் பரிசுகள் தருவார். நான் இரண்டு ஆண்டுகள் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்து பரிசுகள் பெற்றிருக்கிறேன். 9ம் வகுப்பு படிக்கும்போது அனைத்து பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்றதைப் பாராட்டி எனக்கு தனியாக விழா நடத்தி பாராட்டியதுடன் பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினார்.
    மேல்நிலைக் கல்வியை தாராமங்கலம் ஜோதி மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். அந்த பள்ளியில் படிக்கும்போது தான் என்னுடைய எதிர்பார்ப்புகள் கூடியது. பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு அடுத்தது என்ன? என்ற கேள்வி ஏற்பட்டதும் குழப்பமே ஏற்பட்டது. அந்த சமயத்தில் என் வாழ்க்கையில் பல திருப்புமுனைகளை ஏற்படுத்திய ஒரு ஆசிரியரைச் சந்தித்தேன்.
    தலைமை ஆசிரியராக இருந்து பணிநிறைவு பெற்ற ஆசிரியை ஜோதி அவர்கள்தான், ‘நீ பி.எஸ்.ஸி. அக்ரிகல்சுரல் எடுத்து படி. எதிர்காலத்தில் உனக்கு பயனுள்ள படிப்பாக அது அமையும்’ என்று கூறி எனக்கு வழிகாட்டினார். அவரின் வழிகாட்டலின் படி மதுரையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் பி.எஸ்.ஸி. அக்ரி எடுத்து படித்தேன்.
    கல்லூரியில் சேர்ந்தது முதல் எனக்கு பெரிய தலைவலியாக இருந்தது ‘இங்கிலீஷ்’. ஆரம்பத்தில் இருந்து தமிழ்வழியில் பயின்றதால் ஆங்கிலத்தில் எழுதவும், பேசவும் பெரிய தடுமாற்றம் ஏற்பட்டது. ஒருவழியாக முதல் இரண்டு செமஸ்டர் தேர்வை எழுதி ஓரளவிற்கு என் பயத்தைக் குறைத்துக் கொண்டேன். பி.எஸ்.ஸி. முடித்துவிட்டு எம்.எஸ்.ஸி. படிக்க கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்து, நேர்முகத் தேர்வில் வெற்றியும் பெற்று, ‘பையோடெக்’ படிப்பைத் தேர்ந்தெடுத்தேன்.
    கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் என் வாழ்க்கையில் பல திருப்புமுனைகளை எனக்காக வைத்துக் காத்திருந்தது. முனைவர் செந்தில் நடேசன் சார் தான் எனக்கு ஒருங்கிணைப்பாளராக (Co-ordinator) இருந்தார். அவரை சந்தித்தது தான் என் வாழ்வின் பெரிய திருப்புமுனையே என்பேன்.
    “உன் முயற்சியின் மீது நம்பிக்கை கொள். சரியான நேரத்தில் நீ மேற்கொள்ளும் முயற்சி உனக்கு உரிய பலனைக் கொடுக்கும். அத்தகைய செயல்களை மனதில் கொண்டு செயல்படு” என்று நம்பிக்கை வார்த்தைகளை எனக்குள் செலுத்தி என்னை உற்சாகப்படுத்தியவர் அவர். ஆங்கிலத்தில் எனக்கு இருந்த தடுமாற்றத்தைப் புரிந்துகொண்டு அதிலிருந்து மீண்டுவர வழிகாட்டினார். அவரின் வழிகாட்டல்களைப் பின்பற்றி பயிற்சியில் ஈடுபட்டேன். சில மாதங்களிலேயே சரளமாக பேசவும், எழுதவும் முடிந்தது.
    எம்.எஸ்.ஸி. முடித்துவிட்டு வேலைக்கு செல்லலாம் என்றிருந்த சமயத்தில் முனைவர் பட்டத்தைப் பெற்றால் ஏற்படும் வளமான வாழ்வைப் பற்றி எடுத்துக்கூறி முனைவர் பட்ட ஆய்வுக்கு என்னைத் தயார் செய்தவரும் அவரே.
    தென்கொரியாவில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள உதவியதுடன், அங்கு செல்ல தயங்கியபோது, “உன் வாழ்க்கையில் பல நல்ல ஆரம்பங்கள் அங்குதான் ஏற்படப் போகின்றன. உன்னுடைய திறமைக்கு அங்கு முழுமை கிடைக்கும். உனக்கு இருக்கும் வறுமையைத் தற்காலிகத் தடங்கல்களாகவே நினைத்துக்கொண்டு முயற்சியைக் கைவிடாமல் செல்” என்று ஊக்கம் கொடுத்தார்.
    அவர் இப்படி கூறிய அடுத்த நாளே வெளிநாடு செல்வதற்காக விசாவிற்கு விண்ணப்பித்தேன். விசா கிடைத்தது. முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு தற்போது முடித்துவிட்டேன். முனைவர் செந்தில் நடேசன் சார் கூறிய படியே தென்கொரியா என் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதுடன் பல புரிதல்களையும் கற்றுத்தந்தது.
    முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்ட கெயின் சாங் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கொல்சிட் கிங் அவர்களின் வழிகாட்டல்கள் என்றும் நினைவு கூறத்தக்கது.
    ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய ஆர்வத்தைப் பொறுத்தே அமையும் என்பதைப் போல் எனக்கு என் துறை சார்ந்த ஆய்வில் ஆர்வத்தை ஏற்படுத்தியவர் அவர். தவிர ஒவ்வொருவரையும் சரியாகப் புரிந்துகொள்ளுதல் என்பது வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் வெற்றி பெறுவதற்கு அவசியமான திறன்களில் ஒன்று என்று கூறியதுடன் அந்த நாட்டில் உள்ள பழக்கவழக்கங்களை கற்றுத்தந்தவர் அவர்.
    குறிப்பாக, அந்நாடுகளில் நடைமுறையில் உள்ள முக்கியமான வழக்கம் அனைவரும் அணியாக செயல்படுவது (Team Work). எந்த வேலையாக இருந்தாலும் அனைவரும் ஒருங்கிணைந்து தான் செயல்பட வேண்டும். தனியாக யாரும் செயல்படக் கூடாது. உங்களுக்கு புது ஐடியா தோன்றினாலும் அதை அனைவரிடமும் பகிர்ந்து (Share) கொண்டு ஒரு டீமாகத் தான் செயல்பட வேண்டும் என்பதையெல்லாம் எனக்குக் கற்றுத்தந்தவர் அவர்.
    இந்த உலகின் சக்திவாய்ந்த அம்சங்களில் முதலிடத்தில் இருப்பது நட்பு. என்னுடைய மனநிலை கட்டமைப்பில் என் நண்பர்களின் பங்கு முக்கியபங்கு வகிக்கிறது. என் ஆளுமையில் செல்வகுமார், நிர்மல்குமார், அமுதன் போன்ற நண்பர்களுக்கு பங்குள்ளது. பல சமயத்தில் என் குடும்பமும், உறவினர்களும் செய்ய முடியாதவற்றை இந்த நண்பர்கள் செய்திருக்கிறார்கள். ஒரு நல்ல நண்பன் எப்போதும் தனது சக நண்பனின் முன்னேற்றம் மற்றும் நலன் சார்ந்த விஷயங்களிலேயே அக்கறையாக இருப்பான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்றளவும் இந்த நண்பர்கள்.
    வறுமையில் உழன்று கொண்டிருந்த எங்கள் குடும்பநிலையை புரிந்துகொண்டு என்னுடைய படிப்பிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்த என் சித்தப்பா சுப்ரமணியும், சித்தி சாந்தாமணியும் என்னை இந்த உலகிற்கு அடையாளப் படுத்தியவர்களில் முக்கியமானவர்கள். அவர்கள் இல்லை என்றால் நான் படித்திருக்கவே முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை.
    என்னுடைய சுகம், துக்கம் அனைத்தையும் புரிந்துகொண்டு என்னுடைய வலிமைகளை மட்டுமல்லாமல் பலவீனங்களையும் முழுமையாக சுட்டிக்காட்டி நான் வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைக்கக் காரணமாக இருந்தவர்கள் இவர்களே.
    முனைவர் பட்ட ஆய்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு தற்போது முதுகலை முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளக் காரணமும் அவர்களே.

    பி.பி.ஓ.-வின் வீழ்ச்சியும் கே.பி.ஓ.-வின் வளர்ச்சியும்

    கடந்த வாரம் பெங்களூரில் உள்ள சி.டி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் என்னுடைய மாணவி கார்த்திகாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, வேறு வேலை தேடிக் கொண்டிருப்பதாகவும், கோவையில் நல்ல நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருந்தால் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். அவர் நல்ல சம்பளத்தில், அங்கு பணியாற்றுகிறார். பின்னர் ஏன் அந்த வேலையை விட முடிவெடுத்தார் என்று கேட்டபோது தான், பி.பி.ஓ. நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை புரிந்துகொள்ள முடிந்தது. அதுபற்றிய ஒரு நுணுக்கமான அலசல்.

    2000ம் ஆண்டில் இந்தியாவில் படித்த இளைஞர்களிடையே வேலை வாய்ப்பில் ஒரு புதிய கலாச்சாரமாக கால் சென்டர் கலாச்சாரம் ஏற்பட்டது. ஒய்2கே (Y2K)-வில் ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாகப் பரவிய இந்த கலாச்சாரம் 2004-2006ம் ஆண்டில் உச்சத்தைத் தொட்டது. அப்போது பி.பி.ஓ.(Business Process Outsourcing ) நிறுவனங்களுக்கு 40% லாபம் கிடைத்தது. ஆனால் இன்று 15% லாபமே கிடைக்கிறது. இப்படி மெல்ல மெல்ல மரணத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் கால் சென்டர் வர்த்தகத்தை பல இந்திய பி.பி.ஓ. நிறுவனங்கள் 60% அளவுக்குக் குறைத்துவிட்டன.

    தற்போது மேலும் பல கால்சென்டர் நிறுவனங்கள் தங்களின் பணி வாய்ப்புகளுக்காக கால் சென்டர்களை ஒட்டுமொத்தமாக பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கு மாற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் இந்தியா கடந்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் கால் சென்டர் வேலைகளை இந்நாடுகளிடம் இழந்திருக்கின்றது. 10 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 70 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைகொடுக்கும் இத்துறையின் இழப்பு அதிகரித்ததுடன் வளர்ச்சி விகிதமும் 10 சதவீதத்துக்கும் கீழே வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.

    இதற்கான காரணங்கள் என்ன?

    மொழி:
    மற்ற நாடுகளைவிட இந்தியாவில் பி.பி.ஓ.க்களின் வளர்ச்சி அதிகரித்ததற்கு மிக முக்கிய காரணம் இந்தியர்களின் ஆங்கில அறிவு. ஆனால் அதுவே இப்போது பாதகமாகிவிட்டது. பல கடுமையான பயிற்சிகளை கொடுத்தாலும், அதையும் மீறி அழுத்தமான உச்சரிப்புகளுடன் நாம் பேசுவதால் பல சமயங்களில் கிளையன்டுகள் புரிந்துகொள்ள கடினமாக இருப்பதால் பல சவால்கள் ஏற்படுகின்றன.
    இதற்கு நேர்மாறாக அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நீண்ட கலாச்சார பரிவர்த்தனைகளைக் கொண்ட பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் ஆங்கில உச்சரிப்பு கஸ்டமர்களுக்கு எளிதாக விளங்குவதால் அந்நாடுகளில் கால்சென்டர்களை அமைக்க பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம் கொள்கின்றன.
    சம்பள உயர்வு / திறமை குறைவு:
    ஒரு பக்கம் இந்தியாவில் சம்பள விகிதங்கள் உயர்ந்திருப்பதும், வேலைக்கு வருகிறவர்களின் திறமையின் அளவு குறைந்திருப்பதும் உள்கட்டமைப்புச் செலவுகள் அதிகரித்திருப்பதும் கால் சென்டர்கள் அமைக்கும் விஷயத்தில் இந்தியா தனக்கான வசீகரத்தை இழந்துவிட்டது. இதற்கு உதாரணம், மும்பையில் உள்ள வோடாஃபோன் நிறுவனம் தன்னுடைய 750 கால்சென்டர்களையும் ஆஸ்திரேலியாவில் உள்ள கிங்ஸ்டனுக்கு மாற்ற மேற்கொண்டிருக்கும் முயற்சியைக் கூறலாம்.
    கடந்த ஐந்தாண்டுகளில் ஜென்பாக்ட், டி.சி.எஸ்., பி.பி.ஓ., விப்ரோ உள்ளிட்ட 30 இந்திய பி.பி.ஓ. நிறுவனங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சென்றுவிட்டன. இதனால் 2.5 லட்சம் வேலைகள் பறிபோகும் வாய்ப்புகள் உள்ளன என்கிறது ஒரு புள்ளிவிபரம்.
    அடிப்படை பி.பி.ஓ. சேவைத் தொழிலில் ஊழியர்கள் மட்டுமின்றி தொழில் முனைவோரும் பல கசப்புகளை சந்திக்கிறார்கள் என்கிறது மற்றொரு புள்ளிவிபரம். அமெரிக்காவின் கொள்கை முடிவால் அவுட்சோர்சிங் குறைந்ததும் இத்துறையில் வாய்ப்புகள் குறையக் காரணமாகும். ஒரு மணிநேரம் ப்ராஜெக்டுகளுக்கு 50 டாலர் கிடைத்து வந்த காலம் மாறி இப்போது ஒரு மணிநேரத்துக்கு 20 டாலர் மட்டுமே கிடைக்கிறது அமெரிக்காவின் கொள்கை முடிவால்.
    மற்றொரு முக்கிய காரணம், தங்களின் சேவைக்காக சொந்தமாக அவுட்சோர்சிங் மையங்களை அமைத்த பல நிறுவனங்கள் கடந்து 5 ஆண்டுகளில் அதை மூடியிருக்கிறார்கள். சில நிறுவனங்கள் மூன்றாம் நபர்களுக்கு விற்றிருக்கின்றன. அடாப்டெக்கின் இந்திய டெக்னாலஜி சென்டரை எச்.சி.எல். நிறுவனம் வாங்கியதையும், அமெரிக்கா ஆன்லைன் கான்டாக்ட் சென்டரை எஸ்ஸார் நிறுவனத்தின் ஏஜிஸ் பி.பி.ஓ. வாங்கியதையும், ஆப்பிள் மற்றும் பெல்ஏர் நெட்வொர்க்ஸ் நிறுவனங்கள் தங்கள் பணிகளை பெங்களூரில் நிறுத்திக் கொண்டதையும் உதாரணமாகக் கூறலாம்.
    இதனால் இன்றைய இளைஞர்கள் பி.பி.ஓ. வேலைகளில் ஆர்வம் இழக்கத் துவங்கியுள்ளனர். பொறியியல் மாணவர்கள் மட்டுமே பி.பி.ஓ.வில் ஆர்வம் காட்டாமலிருந்த காலம் மாறி தற்போது கலை அறிவியல் மாணவர்களே ஆர்வமிழக்கும் சூழ்நிலை நிழவுகிறது. இதன் எதிரொலியாக ஆண்டொன்றுக்கு 30% ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தைவிட்டு வெளியேறுகிறார்கள்.
    நம்பிக்கை ஒளி:
    ஆங்கிலம் பேசத் தேவையிருக்கும் வழக்கமான கால்சென்டர் வேலைகள் மெதுவாக நாட்டைவிட்டு வெளியேறும் சூழ்நிலை இருந்தாலும், மற்றொருபுறம் இந்திய மொழிகள் பலவற்றில் தொலைதொடர்பு, காப்பீடு தொடர்பான உள்நாட்டு கால்சென்டர் வேலைகள் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பை வழங்கி வருகின்றன. ஊக்கத்தொகையுடன் சேர்த்து சுமார் 15,000 வரை இவர்களுக்கு ஊதியம் கிடைக்கிறது.
    இந்திய பி.பி.ஓ. துறையின் இந்த வீழ்ச்சி தற்காலிகமானது தான். இது ஒரு மாற்றத்தின் வலி மட்டுமே. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளால் எளிதில் தோற்கடிக்கப்படக்கூடிய அடிப்படை பி.பி.ஓ. சேவையில் இருந்து கணிதத் திறன்கள், அலசி ஆராயும் தர்க்க அறிவு, வணிக நுணுக்கம் தேவைப்படும் கே.பி.ஓ. (Knowledge Process Outsourcing) வின் யுகத்துக்குள் இந்தியா நுழைவதற்கான சரியான தருணமாக இதை எடுத்துக்கொள்ளலாம்.
    இதனால் அடிப்படை பி.பி.ஓ.வில் இழக்கும் வேலைவாய்ப்பை கே.பி.ஓ. துறைகளின் மூலம் புதிய வேலைவாய்ப்புகளையும், வர்த்தகத்தையும் உருவாக்க முடியும். கால்சென்டர்களில் கவனம் செலுத்தும் போது தான் மொழியாற்றல் ஒரு பிரச்சனையாகிறது. அதற்கு மாறாக கே.பி.ஓ. துறையில், அலசி ஆராயும் திறன்களே முக்கியமாக இருப்பதால் அத்துறையில் இந்தியா சிறப்பாக செயல்பட முடியும். எனவே கே.பி.ஓ. தொழில்களுக்கு இந்தியா மாறுவது காலத்தின் கட்டாயம். இந்தியாவை ஒரு பெரிய தரவுச் சுரங்க (Data Mining) வாய்ப்பு எட்டிப் பார்க்கிறது. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    தற்போதைய நிலையில் கிரெடிட் கார்டு சந்தாதாரர்கள் முதல் சில்லறை விற்பனைக் கடைகளின் வாடிக்கையாளர்கள் வரையிலானோரின் குணாம்சங்களை, செயல்பாடுகளை, அலசி ஆராய்ந்து வியூகம் அமைத்துக் கொடுப்பது ஒரு அறிவுசார்ந்த, மதிப்புக் கூட்டும் வேலையாக இருப்பதால் கணித திறனில் அபார திறமை பெற்றுள்ள இந்தியா இதில் உலகின் முன்னணியாக திகழ்வது உறுதி.


    5 ஆண்டுகளில் புதிய பி.பி.ஓ. நாடுகளால் இந்தியா இழந்தவை:
    • உயர்ரக சந்தை செயல்பாடு கொண்ட கனடாவால் இழந்த வேலைவாய்ப்புகள் 75,000
    • ஸ்பானிய மொழி பேசுவதை சாதகமாக்கிக் கொண்ட மெக்சிகோவால் இழப்பு – 50,000 வேலைகள்
    • ஆசிய, ஐரோப்பிய மொழி பேசுவோர் அதிகமுள்ள கோஸ்டா ரிக்காவால் இழப்பு – 50,000 வேலைகள்
    • பிரேசில் – 30,000 வேலைகள்
    • நிதி மற்றும் தணிக்கை சேவையில் வல்லமை கொண்ட போலந்தால் ஏற்பட்ட வேலைவாய்ப்பு இழப்பு – 50,000
    • மலேசியா – 50,000
    • உக்ரைன் – ஐ.டி. சேவையில் வலுவான கட்டமைப்பைக் கொண்ட உக்ரைனால் இழப்பு 50,000 வேலைகள்
    • எகிப்து: ஆங்கிலம், ஜெர்மனி, ஸ்பானிஷ் என்று பல மொழி தொழிலாளர்கள் நிறைந்த எகிப்தால் ஏற்பட்ட இழப்பு – 40,000 வேலைகள்
    • பல்கேரியா: கே.பி.ஓ.க்கான அனைத்து வசதிகளையும் கொண்ட மையமாக மாறிவரும் பல்கேரியாவால் ஏற்பட்ட இழப்பு 50,000 வேலைகள்
    • சீனா: விலை குறைவு, வேகமான பொருளாதார வளர்ச்சி போன்ற சாதகத்தைக் கொண்ட சீனாவால் ஏற்பட்ட இழப்பு – 75,000 வேலைகள்
    • பிலிப்பைன்ஸ்: அதிக பட்டதாரிகள், துல்லியமான ஆங்கில உச்சரிப்பு மற்றும் நவீன தொலைதொடர்பு சாதனைங்களைக் கொண்டுள்ள பிலிப்பைஸால் ஏற்பட்ட இழப்பு 2,00,000 வேலைகள்
    • ஆஸ்திரேலியா: குறைந்த செலவு, அதிக திறன்கொண்ட நபர்கள் என்ற சாதகத்தைப் பெற்றுள்ள ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட இழப்பு 60,000 வேலைகள்
    • செக் குடியரசு: ஐரோப்பிய மொழிப் பயனாளிகளுக்கு கலாச்சார மையமாகத் தோன்றும் செக் குடியரசால் ஏற்பட்ட இழப்பு 60,000 வேலைகள்

    சிரத்தை எடு! சிகரத்தைத் தொடு!!

    P. கோகுநாதன்B.E., M.B.A., PGDIP, MISTE

    தாளாளர், பாரத் பாலிடெக்னிக் கல்லூரி

    திருச்செங்கோடு

     

    ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு வகையான இலக்கு இருந்துகொண்டே இருக்கும். இலக்கு இல்லாவிட்டால் மனித வாழ்வு கலையிழந்துவிடும் என்பதற்கேற்ப தன்னுடைய வாழ்வை பொலிவுடன் அமைத்துக்கொள்ள ஒரு இலக்கை நிர்ணயித்து, அதை அடைவதற்கான திட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து சாதித்துக் கொண்டிருப்பவர்.
    நாம் ஒரு துறையில் வெற்றிபெற வேண்டுமானால், அதைப்பற்றி போதுமான அளவு கற்றால் மட்டும் போதாது. நம்முடைய நுண்ணறிவைப் பயன்படுத்தி பல புதுமைகளைச் சம்பந்தப்பட்ட துறையில் நிகழ்த்த வேண்டும். அதுவே வெற்றியின் தாரக மந்திரம் என்று தான் ஈடுபட்டுள்ள துறையில் புதுமைகளைப் புகுத்திக் கொண்டிருப்பவர்.
    பல்வேறு சவால்களை உள்ளடக்கிய இன்றைய தொழில் யுகத்தில் தலைமைப் பண்புகளைக் கொண்ட ஒருவர் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தை பெறமுடியும் என்பதை மாணவர்களுக்கு உணர வைத்து ஆளுமைப்பண்புகளை வளர்க்கும் கல்வியைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்.
    படித்து முடித்து வேலைக்குப் போய் கை நிறைய சம்பாதித்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மை அல்லாமல் பிறந்ததே சாதிப்பதற்குத்தான் என்று இலட்சியத்துடன் வாழும் இளைஞர் சமுதாயமே இந்தியாவிற்கு வேண்டும் என்று தன்னுடைய மாணவர்களை லட்சிய மாணவர்களாக உருவாக்கிக் கொண்டிருப்பவர். இப்படி பல்வேறு சிறப்புகளுக்கு உரியவரான திருச்செங்கோடு, பாரத் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் திரு. பி. கோகுல்நாதன் அவர்களை நேர்முகம் கண்டதிலிருந்து இனி நாம்…

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    Editorial

     

    வாழ்வை எப்படியும் மாற்றக்கூடிய பருவம் மேல்நிலைக் கல்வியை முடித்து, கல்லூரியில் காலடி பதிக்கும் பருவம். இப்பருவத்திலுள்ள பிள்ளைகளின் ஆற்றலைப் பெற்றோர்கள் உணர்ந்து அதற்கேற்ப அவர்களின் எதிர்காலத்தை அவர்களே சுதந்திரமாக தீர்மானிக்க உதவக் கூடியவர்களாக இருந்திட வேண்டும். மாறாக தங்களுடைய எண்ணங்களை திணித்து அப்படியே வர வேண்டும் என வரட்டுக் கௌரவம் பார்க்கக்கூடிய காலத்தில் இப்போது இல்லை என்பதையும் உணரத்தான் வேண்டும் பெற்றோர்கள்.

    ஆம்Ð விருப்பப்பட்டுச் செய்வதிலும், பிறரின் விருப்பத்திற்காக செய்வதிலும் ஒருவருடைய ஈடுபாடு பெருமளவு மாற்றத்தை தரும் என்கிற போது பிள்ளைகளின் ஈடுபாடு எத்துறையில் என கண்டுணர்ந்து “நல்ல பெற்றோர்களாக” பெயரெடுத்து, சரியான கல்லூரிகளைத் தேர்வு செய்ய உரிய விதத்தில் உதவி உற்சாகமாக செயல்படவும் வேண்டும் பெற்றோர்கள்.

    நல்ல வசதி, வாய்ப்புகள் உள்ள மாணவர்களுக்கே உயர்கல்வி நிறுவனங்களை தங்கள் விருப்பம் போல் தேர்ந்தெடுக்க முடியும் என்றாலும் அதற்காக வாய்ப்புகள் குறைந்த மாணவர்கள் தளர்ந்துவிடக் கூடாது. கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்தி நேரத்தை வீணாக்காமல் பாடப்புத்தக அறிவுடன் பொது அறிவினையும் மென்திறன்களையும் வளர்த்துக் கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி அடைய முடியும்Ð

    வெற்றி மட்டுமே குறிக்கோளாக இருந்தால், எங்கும் எப்படியும் “மதிப்பு” பெற முடியும் நீங்கள் எடுத்திருக்கின்ற “மதிப்பெண்களால்”…

    தன்னம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள்! எதிர்வரும் காலம் உங்கள் சாதிப்புகளால் பேசப்படட்டும்! வாழ்த்துக்கள்…

    Protected: May 2013

    This content is password protected. To view it please enter your password below:

    Success Fundamentals

    நீங்கள் வெற்றி பெற வேண்டுமானால், உங்கள் எதிர்காலத்தைப் பற்றிய வெற்றி பெறும் சிந்தனையையே எப்போதும், இடைவிடாது, உறுதியாக பிடித்துக் கொள்ளுங்கள்.

    Continue Reading »