4. எண்ணங்களும் கண்டுபிடிப்புகளும்

நாம் வாழுகின்ற இப்பூலகம் தோன்றி நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே வேளாண்மை தோன்றியிருப்பதாக நிபுணர்கள் ஆராய்ந்து அறிந்திருக்கிறார்கள்.

தொன்மைக் காலத்தில் விலங்கோடு விலங்காகக் காடுகளிலும், குகைகளிலும், மரப்பொந்துகளிலும் மனிதன் வாழ்ந்து வந்தான். அந்நிலையிலேயே இயற்கையில் நிகழ்கின்ற பல செயல்களைக் கண்டு அவற்றைப் பற்றி அறிந்து சிந்தித்துத் தெளிவு பெற்று அறிவியல் அடிப்படையில் தன்னுடைய செயல்களை ஆக்கப்பூர்வமாகச் செய்யத்துவங்கினான்.

எடுத்துக்காட்டாக, வேளாண்மையை அவன் கண்டுபிடித்த விதம் மிக வியப்பாக இருக்கிறது. மரம், செடி, கொடிகளிலுள்ள பழங்கள் விழுந்து அவற்றிலிருந்த விதைகள், கிளைகள் மீண்டும் ஒரு புதுச்செடியை உண்டாக்குவதை ஊன்றிக் கவனித்ததன் மூலம்தான் விதைகளைக் கண்டுபிடித்தான். விதை முளைப்பதற்கு நீர் இன்றியமையாதது என்பதையும், பறவை, விலங்குகள் ஆகியவை எச்சமிட்ட இடத்திலிருந்து முளைத்த விதைகளின் உரம் தேவை என்பதையும் அறிந்து கொண்டான். ஓரிடத்தில் மண்ணில் வளம் குறைந்தபொழுது வேறொரிடத்திற்குச் சென்று அங்கு வேளாண்மை செய்யத் தொடங்கினான்.

இதைப்போன்றே ஒவ்வொன்ûயும் நன்றாக எண்ணி எண்ணி அதன் நடைமுறைகளையும், செயல் திறன்களையும் அறிந்து வியந்து போற்றி அவற்றினைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டான்.

மனிதன் நெருப்பின் சக்தியைக் கண்டுபிடித்து, உணவைக் கண்டு, அதனைச் சமைக்க கற்றுக்கொண்டது அனைத்தும், அவனுடைய மனத்தின் கண் தோன்றிய ஆக்கபூர்வமான எண்ணத்தின் வித்துக்களிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட பசும்பொழில்கள்.

அதில் தொடர்ச்சியாக ஈடுபட்ட மனித வர்க்கத்தின் இன்றைய தலைமுறையைச் சார்ந்தவர்கள், அறிவியல் வளர்ச்சியில் அரிய பெரிய பல சாதனைகளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணமாக அமைந்திருப்பது மனிதனுடைய எண்ணுகின்ற சக்தியும் அதன் வலிமையும் தான்.

நியூட்டன் என்ற விஞ்ஞானி பூமிக்கு புவிஈர்ப்பு சக்தி இருப்பதால் மேலே எரிந்த கல் கீழே வீழ்கிறது. மரத்திலுள்ள பழம், இலை, காய் ஆகியவை கீழே விழுகின்றன என்பதைக் கண்டறிந்தார். மேலே எறிந்த கல் கீழே வீழ்கிறது என்பதை எத்தனையோ மனிதர்கள் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் அது ஏன் விழுகிறத என்று எவரும் எண்ணிப்பார்க்கவில்லை. அதைப்பற்றி, எண்ணி, அதையே கேள்விக்குறியாக்கி ஏன்? எதற்காக? எப்படி? எவ்வாறு? என்று மனம் ஒன்றி ஆராயப் புகுந்ததினால் தான் நியூட்டனால் ஒரு விஞ்ஞான மேதையாகி உலகிற்கு ஒரு புது அறிவியல் சித்தாந்தத்தைத் தர முடிந்தது.

தொலைப்பேசியைக் கண்டுபிடித்த கிரஹாம்பெல், தந்தியைக் கண்டுபிடித்த மோர்ஸ், மின்சக்தியை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன், வெறிநாய்க் கடிக்கு மருந்து கண்டுபிடித்த லூயி பாஸ்டர் ஆகிய அனைவரும் சாதாரண மனிதர்களே. ஆனால் அவர்கள் மாமேதைகளாக, விஞ்ஞானிகளாக ஆவதற்கும் அவர்கள் உலகிற்கு ஆற்றிய பணியினால் உலகமக்கள் சிறப்பான நன்மையை அடைவதற்கும் மூலக்காரணமாக இருந்தது எது? அவர்களுடைய மனத்தில் தோன்றிய எண்ணங்கள். அவை ஊற்றுக் கால்களாக வடிவெடுத்து வலிமையாக செயல்பட்ட விதம் ஆகியவைதான். எனவே எண்ணம் சிறக்குமானால், வலிவு அடையுமானால் அவற்றால் பின்னால் ஏற்படுகின்ற பலன்கள் மிக அற்புதமாக, ஆனந்தம் தருவதாக, நன்மை நிறைந்ததாக உலகில் உள்ள மக்களுக்குப் பயன் தந்து அவர்களைச் சொர்க்க பூமிக்கே அழைத்துச் செல்வதாகச் சீரிய முறையில் அமையும் என்பது புலனாகின்றதல்லவா? ஆதலால் நாமும் ஏன் சிறப்பான சிந்தனையில் உடனடியாக இறங்கக்கூடாது?

வளரும்

இளமையும் தலைமையும்

சொல் வேறாகவும், செயல் வேறாகவும், உடையவர்களின் தொடர்பு கனவிலும் கூட வேண்டாத ஒன்று என்றார்கள் அனுபவம் நிறைந்த நமது முன்னோர்கள். ஆனால் இன்றோ நாம் வெறுத்தாலும், வேண்டாம் என்று ஒதுக்கினாலும் சொல் வேறு செயல் வேறுபட்டவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதைக்கூட ஓரளவு பொறுத்துக் கொள்ளலாம். வேண்டாமென்றால் ஏதேனும் ஒருவகையில் தொடர்பைத் தவிர்த்துக் கொள்ளலாம். ஆனால் மக்களாட்சி முறையில் நமக்குத் தலைவர்களாக அமைச்சர்களாக அமர்ந்துவிட்ட பலரை நாம் என்ன செய்வது? நாம் வெறுத்தாலும் நம் குழந்தைகளுக்கு அவர்கள் பெயரைத்தானே சொல்லிக்கொடுக்க வேண்டியுள்ளது. அதனால் இந்தச் சூழ்நிலையை உடனே மாற்றி அமைக்க முடியாவிட்டாலும், காலம் வரும் வரை காத்திருப்போம் என்று கையைக் கட்டிக்கொண்டு காலத்தைக் கடத்தாமல் நமக்கு நாமே தலைவர்கள் ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏன் இந்த முடிவு?

நாட்டில் விடுதலைக்காகப் போராடியவர்கள் இருக்கிறவரை – அவர்கள் தலைவர்களாக இருந்தவரை – அவர்கள் நாட்டு நலனுக்காகவே செயல்பட்டார்கள், வாழ்ந்தார்கள். அவர்கள் ரத்தம் சிந்திப் பெற்ற, உயிர்களைத் தியாகம் செய்து பெற்ற விடுதலையை – இந்த நாட்டை – இந்த நாட்டு மக்களைத் தங்கள் உயிர் போலவே கருதிச் செயல்பட்டார்கள். அதனால் அவர்களை நமது ஒப்பற்ற தலைவர்களாக நம் இதயம் ஏற்றுக் கொண்டது.

விடுதலைப் போராட்டத்தைப் புத்தகத்தில் படித்தவர்கள் – சொல்லக் கேட்டவர்கள் – நாட்டின் பெருமையை அறியாதவர்கள், ஆட்சியில் அமர்ந்த பிறகு அவர்களுக்குப் பதவியும் நாற்காலிப் பைத்தியமுமே பெரிதாகப் போய்விட்டது. அதனால் இன்றைய தலைவர்களில் பெரும்பான்மையோர் அமைச்சர்களாக இருக்கும் தகுதியை ஏற்படுத்திக் கொண்டார்களே ஒழிய தலைவர்களாகும் தகுதியை – உண்மையான மனிதர்களாக நடந்து கொள்ளும் தகுதியை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. எங்கே தாவினால் பதவி கிடைக்கும்? எங்கே சேர்ந்தால் ஆளும் கட்சியின் சுகங்களை அனுபவிக்கலாம்? யாரோடு இருந்தால் நமக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என்று அலைகின்ற மனிதர்களே அதிகமாக, மிக அதிகமாகக் காணப்படுகிறார்கள். அதனால் இவர்களை நம்பி இவர்கள் பின்னால் போனால் இவர்களைப் போல் ஆகின்றவர்களுக்கு மட்டுமே வசதியாக இருக்கும். பெரும்பான்மையான மக்கள் நியாயமாகவே வாழ விரும்புவதால், இனி இத்தகையவர்களை நம்பி பயனில்லை. இந்த உள்ளொன்று வைத்துப் புறமொன்று போசுகின்ற மனிதர்களின் உறவு கலவாமல் வாழப்பழகிக் கொள்ள வேண்டும்.

இரண்டு கடமைகள்

இன்றைய இளைய தலைமுறையினருக்கு இரண்டு கட்டாயக் கடமைகள் முன் நிற்கின்றன. ஒன்று இத்தகைய இரட்டை வேட மனிதர்களை அப்புறப்படுத்துவது. மற்றொன்று தங்களுக்குத் தாங்களே அப்புறப்படுத்துவது. மற்றொன்று தங்களுக்குத் தாங்களே தலைமைத் தகுதிகளை – பொறுப்புகளை மேற்கொண்டு செயல்படுவது. முன்னது மூன்றே நாளில் முடித்துவிடும் செயல் அல்ல. காலம் கனியும் போதெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி நல்ல மனிதர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியினை மேற்கொள்ள, செயலாற்றிட வேண்டும். இது ஒரு தொடர்ந்த பணி; சலிக்காமல் செய்து கொண்டே இருக்க வேண்டும். எல்லோரும் முனைந்து நின்றால் இந்த அமைப்பு முறையினையே மாற்றி அமைக்க முடியும். நல்லவர்கள் மட்டுமே ஆளும் தகுதிக்கு வரமுடியும் என்ற நிலையினை உருவாக்கிக் காட்டலாம்.

இரண்டாவது கடமை

இதுதான் மிகவும் இன்றியமையாத கடமை இன்றைய சூழ்நிலையில் நமக்கு நாமே தலைவராவது. அவ்வாறு என்றால் “இனி நான்தான் தலைவன், என்னை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று தெருத் தெருவதாகச் சென்று சொல்லி வருவதில்லை. ஒரு தலைவனுக்கு உரிய தகுதிகளை நாம் ஏற்படுத்திக்கொண்டு செயல்படுவதுதான், அஃதாவது அவன் அன்றையிலிருந்து முழுமையான, முதன்மையான தொண்டன் ஆகிறான் என்பது பொருள். நல்ல காரியங்கள் செய்வதில் அவன் கௌரவம் பார்க்கமால் பொதுக் காரியங்களில் மானவுணர்ச்சி பார்க்காமல் செயலில் இறங்குகிறான் என்பது பொருள்.

நாமே தலைவர்கள் என்றால்?

தலைமை என்பது மலர்க்கிரீடம் சூடிக்கொள்வது அல்ல. பொறுப்புக்களை எடுத்துக் கொண்டு சமுதாயப் பொறுப்புணர்ச்சி உள்ள மனிதனாக நடந்து கொள்வதுதான். இவர்கள் முதலில் தங்கள் கடமைகளை, தங்கள் குடும்பத்துக் கடமைகளை ஏற்றுப் பொறுப்போடு செயல்பட வேண்டும். தன்னுடைய குடும்பத்துக்குச் செய்கின்ற இன்றியமையாத வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு ஊருக்கு உபதேசம் என்று போனால் யாரும் அந்த உபதேசத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இளைஞர்கள் முதலில் இதை நன்கு உணர வேண்டும்.

எடுத்துக்காட்டாக

தனது கடமைகள் என்பது பொருள்களை ஒழுங்காக வைத்திருத்தல், தனது அன்றாடக் கடமைகளை பணிகளைச் சரிவரச் செய்தல் முதலியனவாகும். அதே நேரத்தில், தனது குடும்பத்திற்கும் பெற்றோருக்கும் அன்றாடப் பணிகளில் உதவியாகவும் இருக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் பிறகுதான் பொதுக் கடமைகளில் இறங்க வேண்டும். அதற்கு என நேரம் ஒதுக்கிக் கொண்டு செயல்பட வேண்டும். நாம் குடியிருக்கும் தெருவில் தண்ணீர் வரவில்லை. தெருவிளக்கு எரியவில்லை. தெருவாருக்கு உணவுப்பொருள் அட்டை வழங்கப்படவில்லை. இதுபோன்ற பொதுப்பணிகளை நான்கைந்து இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு வேலையாக செய்து முடிக்க வேண்டும். யாருக்கேனும் நாம் இத்தகையதோர் உதவி செய்தால், அப்போது நாம் பொறுப்புணர்ச்சி உள்ள மனிதராகிறோம். அதைத்தொடர்ந்து செய்வதால் நாமே தலைவராகிறோம். இதுதான் தொடக்கம். இதிலிருந்து நமது கடமையை செய்து கொண்டே பொதுப்பணிகளில் ஈடுபடுவது நாட்டுக்கு நலம் பயக்கும் செயலாகும்.

வீதிக்கு நான்கு பேர்

இத்தகைய நல்ல முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்கள் வீதிக்கு நான்குபேர் சேர்ந்தால் போதும். அந்தத் தெருவின் நலன் பாதுகாக்கப்படும். மக்கள் நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்குவார்கள். அவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. பொதுக் காரியங்களுக்கு என்று செல்கின்றவர்கள் பொதுபணத்தில் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றவர்களாக இருக்கக்கூடாது. பொதுப்பணத்தில் வாழ்க்கையை நடத்துவதாலேயே அரசியல் என்பது தொண்டாக இல்லாமல் அது ஒரு தொழிலாக மாறிவிட்டது. அதனால் நமது உழைப்பு, நேரம், அறிவு இவற்றை நன்மைக்காக செலவு செய்வதும் பொதுப்பணத்தைச் சொந்த செலவுக்காக பயன்படுத்துவதும் தவிர்க்கப்பட்டால் – இத்தகைய தெளிவோடு முடிந்த நன்மைகளை செய்ய முடிந்தால் – அவ்வாறு செய்கின்றவர்கûளே தலைவராகக் கொள்ளலாம். அதை ஒரு கடமை என்று எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இந்த வகையில் நல்லவர்கள் எல்லோரும் தலைவர்களே. இதுபற்றி இளைஞர்கள் மேலும் சிந்திப்பார்களாக. இளமையும் தலைமையும் இணையுமாக.

சிகரத்தில் நீÐ

காலமென்னும் களர் மண்ணில்
இளமையென்னும் பருவத்தில்
நம்பிக்கை விதையூன்றி
ஆர்வம் எனும் நீரூற்றி
உழைப்பு எனும் உரமிட்டு
கவலை எனும் களை எடுத்து
ஏளனத்தை எருவாக்கி
உறுதியுடன் உழைத்திட்டால்
உனக்கும் இன்னும் உயர்வுண்டு

சோம்பலை மதிக்காதே… சுறுசுறுப்பை குறைக்காதே. உனக்குள்ளே உள்ள ஆற்றல் உணர்ந்து நீயும் செயலாக்கு, உயருகின்ற எண்ணத்துடன் உழைக்க நீயும் தொடங்கிவிட்டால் வெற்றி எனும் சிகரத்தை சீக்கிரமே எட்டிடுவாய்.

-மது

எப்போது துணிச்சல் வரும்?

1. நன்மை வரினும் தீமை வரினும் ஏற்றுக்கொள்வது என்ற சமநிலை மனம் உள்ளவர்கட்குத் துணிச்சல் வரும்.
2. எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற பொதுநலம் உடையவர்க்குத் துணிச்சல் வரும். தனக்கு என்ற தன்னலப் போக்கு உள்ளவர்களுக்குத் துணிச்சல் வராது. மாறாக அச்சமே மேலோங்கி நிற்கும்.
3. உண்மை பேசுகின்றவர்களுக்கு, நேர்மையாக நடந்து கொள்கின்றவர்களுக்கு துணிச்சல் வரும்.
4. நல்ல மனம் உடையவர்களுக்கு, தீமையைக் கண்டு மனம் கொதிக்கின்றவர்களுக்கும் துணிச்சல் வரும்.
5. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது நன்மையைச் செய்வோம். நடப்பது நடக்கும் என்ற உணர்வு உள்ளவர்களுக்குத் துணிச்சல் வரும்.

நல்ல மனம்

எல்லோரிடத்திலும் குறைகள் உண்டு. அந்தக் குறைகளை மறந்து நிறைகளை மட்டும் கண்டறிந்து பாராட்டுவதென்றால் அதற்கு ஒரு நல்ல மனம் வேண்டும்தான்.

நாகரிகம்

ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் பிறர் செயலில் தலையிடுவது நாகரிகம் அல்ல. எதிலும் ஒரு எல்லைக்குள் கட்டுப்பட்டு நிற்பதே நாகரிகம்.

தோல்விகள் ஏன் ஏற்படுகின்றன?

தோல்வி வந்ததும் சோர்ந்துவிடாமல், துன்பத்தில் ஆழ்ந்துவிடாமல், சமநிலையை இழக்காமல் இருப்பதுதான் முதல் கடமையாகும். பின்னர் குறிப்பிட்ட இந்த தோல்வி ஏன் வந்தது? எதனால் வந்தது? என்று ஆராய்ந்து காரணம் கண்டறிந்து செயல்பட வேண்டும்.

1. நாம் எடுத்துக்கொண்ட செயலில் போதிய அறிவு அல்லது அனுபவம் இல்லாமை.
2. ஒரே நாளில், ஒரே முறையில் முடித்துவிட வேண்டும். ஏராளமாகச் சேர்த்துவிட வேண்டும் என்ற பேராசை.
3. கால இடைவெளிவிட்டுச் செய்ய வேண்டிய பல செயல்களை அவசர அவசரமாகச் செய்வதால் ஏற்படும் விளைவு.
4. போதிய முதலீடு இல்லாமல் அகலக் கால்வைப்பது. பின்னர் பாதியில் செயல்கள் நின்று போவதால் ஏற்படும் சிக்கல்கள்.
5. நமது பழக்கவழக்கங்களும், சமூகத்தில் நாம் நடந்து கொள்கின்ற விதமும் இதமாக இல்லாமை.
6. சில தனிமனிதக் குறைபாடுகள். எதற்கெடுத்தாலும் கோபப்படுவது, எடுத்தெறிந்து பேசுவது, உண்மையாக நடந்து கொள்ளாமை போன்ற குறைபாடுகள்.
7. நாம் எடுத்துக் கொண்ட செயலில் லாபத்தை மட்டுமே பெரிதாக எதிர்பார்த்து அதற்கேற்றாற்போல் உண்மையாக உழைக்காமை.
8. வெற்று வார்த்தைகளால் வீரம் பேசி நம்மைச் சுற்றி உள்ளவர்களின் எதிர்ப்புகளை வளர்த்து கொண்டமை.

இதுபோன்ற பொது, சிறப்புக் காரணங்கள் தோல்வி ஏற்பட அடிப்படையானவை என்று கருதலாம்.

தோல்வியே வெற்றிக்காகத்தான்

தோல்வி கண்டவர்கள் முன்னிலும் மேலாகக் கடின உழைப்பை மேற்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் கூர்ந்து பார்த்தால் அறிந்து கொள்ளலாம்.

தோல்வி பலருக்கு வீரத்தையும் வேகத்தையும் தரும் நிகழ்ச்சியாக அமைந்துவிடுவது என்பதுதான் சரியான உண்மை. முன்னேறத் துடிப்பவர் தோல்வியா நேர்ந்துவிட்ட? விட்டேனா பார், வெற்றி பெற்றே தீருவேன் என்று சவால் விட்டு (Challenge) மும்மடங்கு வேகத்தோடு செயல்படத் தொடங்குகின்றார். 24 மணி நேரமும் அதே சிந்தனையில், அதே நோக்கில் செயல்படுகிறார். தூக்கத்தில்கூட அவரது ஆழ்மனம் தனது செயலைப் பற்றியே சிந்திக்கின்றது. அதனால் அடுத்தடுத்து அவருக்கு வெற்றிகள் குவிகின்றன.

உண்மையைச் சொல்லப்போனால் இன்றைய சாதனையளர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் எல்லாம் பெரிய தோல்விக்குப் பிறகே புதிய வேகம் கொண்டு அரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். அதனால் உங்களுக்கு தோல்வி நேர்ந்துவிட்டதா? இந்தத் தோல்வி தற்காலிகமானது. கவலைப்படாதீர்கள். முதலில் உங்கள் பேச்சைக் குறையுங்கள். வேண்டாத விவாதங்களில் இறங்கி உங்கள் ஆற்றலைச் சிதறடிக்காதீர்கள். அமைதியாகச் செயலில் இறங்குங்கள். நீங்கள் வெற்றியை நெருங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள். விழுவதே எழுவதற்குத்தான். உங்கள் முதுகை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள்.

பனித்துளிகள் கூட இமயமலை ஏறும்…!

அலைகடல் மேலே ஆலிலை போலே
அலைமோதும் பனி மனமே…Ð
ஆழ்கடல் மேவி அடங்கிய முத்தும்
அழகிய ஆபரணம் ஆவது உறுதி!

வாடையில் வதங்கிப் பழுத்திருக்கும் இலைகள்
வசந்தம் வந்தால் சிலித்திருக்கு மன்றோ?
கோடையில் வெந்து பொடிந்திருக்கும் மண்ணும்
மழையில் வளர்ந்து பூத்திருக்கு மன்றோ?

ஓடையில் ஒழுகி ஓடுகின்ற வெள்ளம்
ஆறு குளம் மேவி ஆழ்கடல் ஆகும்Ð

கோடையிடி முழங்கி கொட்டும் மழையாகும்Ð
கொஞ்சமென்று வருந்திக் கலங்குவது ஏனோ?

பனித்துளிகள் கூட இமயமலை ஏறி
பவனி வரும் போது கங்கைநதி ஆகும்Ð
மனித ஜென்மம் தேறி மாண்புடன் மாறி
மண்ணக மெங்கும் மகிமையே பொங்கும்…Ð

எனவே…
பதுங்காதே பனித்துளி… நீ பயனின்றி மறைவாய்…
பாயும் புலியாய்… பாவப்படாதே…!
பரந்த கடல் நீ… பயன்படுத்து பகலவனைÐ
உயர்ந்து உருமாறு… இமயத்தின் சிகரம் ஏறு…!

பாவலர் செந்தமிழ்வாணன்

கேளுங்கள் பகுதி

இப்படி ஒரு பிரச்னை தீர்வு என்ன?

“எனக்கு வயது 17. பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்துள்ளேன். கிராமத்தில் எனது பெற்றோரை விட்டுவிட்டு இங்கு ஒரு நகரத்தில் ஒரு டாக்டரிடம் நர்ஸாகப் பணி செய்கிறேன். எந்த நேரமும் வேலை வேலை என்று அலைந்து ஏதாவது ஒரு சிறிய தவறு செய்தால் அதற்கு திட்டுவாங்கி, வாரம் ஒரு நாள் கூட லீவு இல்லாமலும், ஊருக்குப் போய்வர அனுமதிக்காமலும், மருத்துவமனையின் வேலை இல்லாத போது டாக்டர் வீட்டில் மொட்டை மாடி கழுவுதல், வெள்ளையடித்தல், வீட்டைச் சுத்தம் செய்தல் போன்ற வேலை செய்ய வேண்டியுள்ளது. இந்த வேலையை கேவலமாகக் கருதவில்லை என்னை விட சர்வீஸ் உள்ளவர்களும் இந்த வேலையைச் செய்திருக்கிறார்கள். ஒரு நாள் எங்கள் அறையில் நானும் எனது தோழியும் பாட்டுப்பாடிக் கொண்டிருந்தோம். அதற்கு டாக்டரம்மா திட்டிவிட்டார்கள். அவருக்கு 55 வயதிருக்கும். அவர்களைப் போலவே இருக்கவேண்டுமென்று விரும்பினால் இருக்க முடியுமா? 17 வயதில் இவ்வளவு கஷ்டப்படவேண்டுமென்று நினைக்கும்போது தான் வருத்தம்”.

-ரத்தினமாலா

எப்போதும் எந்த நிலையிலும் மகிழ்ச்சியாக இருக்கப் பயிற்சி எடுத்துக்கொள்ளவும். “டாக்டர் இரக்கமற்ற சிடுமூஞ்சி, கொடுமை நிறைந்த உள்ளமுடையவர்” என்ற முடிவுக்கு வந்துவிட்டால் அவர் மீது வெறுப்பும் வேலை மீது வெறுப்பும் வளர்ந்து கொண்டேதான் இருக்கும். தன்னம்பிக்கையில்லாத, பலவீனமாக உள்ளம் உடையவராக அவர் இருக்கக்கூடும். அதனாலே மற்றவர்களை அடக்கியாள வேண்டுமென்ற எண்ணமும் அதிகாரமும் செய்ய வேண்டுமென்ற எண்ணமும் கொண்டிருப்பார். அப்போது தான் சமூகத்தில் தனக்குப் பாதுகாப்பும் மரியாதையும் கிடைக்கும் என்று நம்புகிறார் போலும். அதுமட்டுமல்ல, 50 வயது தாண்டினால், தன்னையறியாமலேயே பிறர்மீது ஆத்திரப்படும் குணம் மேலோங்கத் தொடங்கும். இளம் வயதிலேயே மனப்பக்குவம் பெற்றுவிட்டால் வயது முதிரும்போதும் பிறரும் பாராட்டும் வகையில் பண்போடும் அன்போடும் பழகமுடியும் என்பதைப் புரிந்து கொள்வதற்கு அவரையே முன்னுதாரணமாகக் கருதி உனது வாழ்விலும் உடன் இருக்கின்ற சகோதரிகளின் வாழ்விலும் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்வது தேனீயைப் போல சலிப்பில்லாமல் வேலை செய்து பழகவும் வேலை கொடுப்பவரை எதிரியாகவும், அன்னியப்பட்டவராகவும், விரும்பத்தகாதவராகவும், கொடுமைக்காரராகவும் கருதுவதால்தான் எல்லாமே கஷ்டமாகத் தெரிகிறது. ஒரு நோயாளிக்கு எப்படி சேவை செய்ய வேண்டுமோ அப்படியே டாக்டருக்கும் “உதவி தேவைப்படுகிறது” என்று கருதி அந்த வேலைகளைச் செய்தால் மனம் பேதலிக்காது. “தவறு நேரும்; திட்டுவார்கள்” என அஞ்சுவதால் தான் தவறுகள் நேருகின்றன. தவறு நேராமல் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செய்கின்ற வேலையில் கவனம் செலுத்தினால் முழு வெற்றியை அடைய முடியும்.

சுந்தரானந்தா

என்ன நடக்கிறது?

இப்போதெல்லாம் நாட்டுப்பற்று குறைந்து தேய்ந்து இல்லாமலே போய்விட்டது என்று சொல்லலாம். மாறாக நாற்காலி பற்று மிகப் பெரிய அளவில் சமுதாயத்தில் புகுந்து அமைதியாக இருக்கின்றவர்களைக் கூட அலைக்கலைத்து வருகின்றது. மிகவும் நேர்மையானவர்கள் என்று மக்களால் கருதப்படுகின்றவர்கள் எல்லாம் கூட சமயம் வரும்போது மிகக் கேவலமானவர்களாகக் காட்சி அளிக்கிறார்கள். இவர்களின் உண்மை சொரூபம் வெளிப்பட்டுவிடுகிறது. நாட்டிற்கு வளமும் பெருமையும் சேர்ப்பது போய், நாட்டின் வளத்தைத் தனதாக்கிக் கொள்கின்றவர்களே அதிகமாகி வருகின்றார்கள். தலைவர்களானவர்களும், தலைவர்களாக விரும்புகின்றவர்களும் பணத்திற்கும் பதவிக்கும் அடிமையாகி, இந்த நாட்டையும் இந்நாட்டு மக்களையும் வெவ்வேறு வகையில் அடிமைப்படுத்தி வருகின்றார்கள்.

உங்கள் முன் ஏழு கேள்விகள்

1. நீங்கள் எதற்கும் அஞ்சாமல் இருப்பது உண்டா?
2. நீங்கள் எப்போதும் உங்கள் செயல்களால் தலைநிமிர்ந்து நிற்பது உண்டா?
3. நீங்கள் பரந்த மனப்பான்மையுடன் பிறரது ஒற்றுமைக்கு வழிகோலுவது உண்டா?
4. நீங்கள் நினைத்ததை நினைத்தபடி யார் முன்னிலையிலும் உரிமையுடன் சொல்வதுண்டா?
5. நீங்கள் தோல்விகளைக்கண்டு சலிக்காமல் தொடர்ந்து உழைப்பது உண்டா?
6. பழைய மூடப்பழக்கவழக்கங்களுக்கு நீங்கள் அடிமையாகாமல் பகுத்தறிவு வழியே நடப்பதுண்டா?
7. மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் நீங்கள் தொலைநோக்குப் பார்வையைக் கொள்வதுண்டா?

இந்த ஏழு கேள்விகளுக்கும் நீங்கள் ஆம் என்று பதில் அளித்தால் தாகூரின் கருத்துப்படி நீங்கள் தன்னம்பிக்கை உடையவர்கள் ஆகிறீர்கள். இல்லாவிடில் அவற்றின் காரணங்களை ஆராய்ந்து தேவையானவற்றைக் கடைப்பிடித்து தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அஞ்சாமை உயர் பண்பு, பரந்த மனம், துணிவு, இடைவிடா முயற்சி, பகுத்தறியும் நோக்கு, தொலைநோக்குப் பார்வை ஆகிய விழுமிய பண்புகள். ஒரு மனிதனை நல்லவனாகவும், வல்லவனாகவும் ஆக்கும், நன்மையும் வன்மையும் இணைந்ததுதான் தன்னம்பிக்கை.

இதோ! இந்தப் பாடலை மனப்பாடம் செய்யுங்கள். உங்களுக்குச் சோதனை வரும் போதெல்லாம் ஒருமுறை, இருமுறை மனதுக்குள் சொல்லிப் பாருங்கள். ஓய்வுள்ள போதெல்லாம் எழுதிப்பாருங்கள். உங்கள் உள்ளத்தில் இந்தக் கருத்துக்கள் இரண்டறக் கலந்துவிட்டால், தளர்வு நீங்கும். தன்னம்பிக்கை மட்டுமே மேலோங்கும். நான் நூறுமுறை இந்தப்பாடலை எழுதி இருப்பேன். ஆயிரம் முறை படித்திருப்பேன். எனது தன்னம்பிக்கையின் ஊற்றே இந்தப் பாடல் தான்.

எங்கே மனம் அச்சமற்று இருக்கின்றதோ, எங்கே அது தலைநிமிர்ந்து நிற்கின்றதோ
எங்கே அறிவு உரிமையுடன் விளங்குகின்றதோ
எங்கே உலகம் சிறுசிறு குறுகிய குடும்ப எல்லைகளால் பிளவுபடாமல் இருக்கின்றதோ
எங்கே உண்மையின் ஆழ்ந்த அடிப்படையிலிருந்து சொற்கள் பிறக்கின்றனவோ?
எங்கே சலியாத உழைப்பு விழுதிய நிலையை நோக்கி நீளுகின்றதோÐ
எங்கே பகுத்தறிவு என்னும் தெளிந்த நீரோடை மூடப்பழக்கவழக்கம் எனும் வறண்ட பாலைவனத்தில் பாய்ந்து வற்றிப் போகமல் இருக்கின்றதோÐ
எங்கே எப்போதும் விரிந்த நோக்கிலும் பரந்த எண்ணத்திலும் உயர்ந்த செயலும் உன் மனத்தை நீ முன்னின்று அழைக்கச் செல்கிறாயோ…
அங்கே, அந்த உரிமையுள்ள உலகம்தான் இன்ப உலகம்.
என் தந்தையேÐ அத்தகைய உரிமையுள்ள இன்ப உலகாக – என் நாடு அமையுமாக

-கீதாஞ்சலி 35

கவிஞர் தாகூரே இயற்றிய ஆங்கிலப் பாடலையும் அறிந்து மனப்பாடம் செய்யுங்கள். தமிழும் ஆங்கிலமும் கைவந்தபின் தளிர்ப்பது, மலர்வது, காய்ப்பது, கனிவது உறுதி, உறுதி, உறுதி

Where the mind is without fear, and the
head is held high;
Where the knowledge is free
Where the world had not been broken up
into fragments by narrow domestic walls;
Where the words comeout from the depth of thruth;
Where the tireless striving stretches its arms
towards perfection;
Where the clear stream of reason has
not lost its way into the
dreay deseart sand of dead habit;

Where the mind is led forward by the into
ever widening thought and action –
Into that heaven of freedome, my Father,
let my country awake.

-Githanjali 35

நேரடிப் பார்வை வேண்டும்

ஆள் செய்வது அத்துவானம்; மகன் செய்வது மத்தியம், தான் செய்வது உத்தமம் என்று ஒரு பழமொழி உண்டு. இது சாதாரண பழமொழி அல்ல. அனுபவ மொழி. எல்லாச் செயல்களையும் ஒருவர் தானே செய்ய முடியாது என்றாலும் கட்டாயம் கவனிப்பு இருக்க வேண்டும். அவரவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்து இருந்தாலும் இதுவரை என்ன நடந்து இருக்கிறது என்று அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தால் ஒழிய எந்தக் காரியமும் விரைவில் நடைபெறாது. தாமதம் தோல்வியின் ஆரம்பக் கட்டம் என்பதை வெற்றி பெற எண்ணுவோர் தெரிந்து கொள்ள வேண்டும்.

வாக்கு வெடி…?!

மக்கள் நலனை
மறந்தே மடியேந்தி…
ரொக்கத்தைத் தேடி
அலைகின்ற – வாக்கற்ற
மாக்கள்… அரசியலில்
போக்கற்றே வந்தால்… நீ
வாக்கு வெடியால்… விரட்டு!?

சிந்தனைத் துளிகள்

எதுவும் தானாக வருவதில்லை. நல்லது எதுவும் நிச்சயமாக வருவதில்லை. எல்லாவற்றையும் நாமே கொண்டு வர வேண்டும் – ஸி. பர்ட்டன்

கைக்கு அருகில் உள்ள முதற்கடமையைச் செய்தால் அடுத்த கடமை என்னவென்று தானே புலப்படும் – தாமஸ் கார்னலல்

செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குதலே அதிகச் செலவும் ஊதாரித்தனமுமாகும் – கியோஃப்ரேஸ்டஸ்

யாராவது உன்னை குறைகூறினால் அது உண்மையாயின் திருத்திக்கொள்; பொய்யாயின் நகைத்துவிடு – எபிக் டெட்டஸ்

நாட்டுப்பற்று

குழந்தைப் பருவத்திலிருந்து நாட்டுப்பற்றை வளர்க்காதவரை நாட்டில் கொள்ளைக்காரர்கள்தாம் பெருகுவார்கள். அவர்கள் தனி மனிதர்களைவிட அரசாங்கத்தையே கொள்ளையடிப்பார்கள்.

அதி தீவிர ஆசையினால் வெற்றிபெறும் காரியங்கள் மிகச்சிலவே அமைதியான முன் யோசனையினால், வெற்றி பெறுபவைமிகப் பல – தூசிடைடஸ்

இளமைப் பருவத்தில் கல்வி பயிலாது பெருங்குற்றம். வருமானம் இல்லாமல் செலவு செய்து கொண்டே போவது அதைவிட குற்றம் – நான்மணிக்கடிகை

உன்னைத் தாழ்த்திட பேசும்பொழுது நீ அடக்காமலிருத்தல் பெரிய காரியமன்று. உன்னைப் புகழ்ந்துரைக்கும் பொழுது அடக்காமலிருத்தல் அரிய பெரிய வெற்றியாகும் – அர்ச். பெர்னார்டு

சோம்பல் உன்னை ஏமாற்றாமல் காத்துக்கொள். ஏனெனில் அதற்கு இன்று ஒரு நாளைக்கொடுத்தால், அது அடுத்த நாளையும் திருடிக் கொள்ளும் – குரோகுவில்

நான்

நான் என்று தொடங்கும் எந்தச் செயலும் துன்பத்திலேயே முடிகின்றது.
நாம் என்று தொடங்கும் எந்தச் செயலும் இன்பத்திலேயே முடிகின்றது.

நியாயமான மனிதர்கள்

நியாயமான மனிதர்கள் நியாயத்திற்குப் புறம்பான மனிதர்களுக்கு மத்தியில் நிம்மதியாக இருக்கவே முடியாது.