Home » Articles » நினைப்பதே நடக்கும் – 3

 
நினைப்பதே நடக்கும் – 3


வித்யாசாகர்
Author:

உயிர் பற்றிய துர்நாற்றம் எவருக்குமே உறுத்தவில்லை. உயிர் பற்றிய ஆராரணம் எல்லோருக்கும் வலிப்பதேயில்லை. உயிர் பற்றிய வாசனை யாருக்குமே அதுவாகப் புரிவதேயில்லை. உயிர் அவரவருக்கு அவரவரின் கற்பிதத்தை மட்டுமே போதிக்கிறது. அவரவர் கற்ற கேட்ட வளர்ந்த விதத்தினூடாகவே ஒரு உயிரினை பெரிதாகவும் சிறிதாகவும் காண்கிறது இவ்வுலகம்.

உயிரோடிருப்பதில் பெரும் வேதனையையும் அவமானங்களையும் அனுபவிப்பது இன்றைய காலக்கட்டத்தில் பெரியோர்களே. அதிலும் கை முறிந்து கால் முறிந்து வீட்டில் படுத்த படுக்கையாய் இன்னலுறும் எத்தனை அம்மா அப்பாக்களை தாத்தா பாட்டிகளை நாம் நன்றாகப் பார்த்துக்கொள்கிறோமென மனசாட்சியோடு ஒரு கணம் எல்லோரும் யோசித்துப் பாருங்கள். கால் கை உடைந்தால் பொதுவாகப் பார்த்துகொள்வோம் தான், ஆனால் இது தான் குத்துக்கல்லாட்டம் இருக்கே, இதுக்கென்ன கேடு என்று எண்ணுபவர்களும் நம்மிடையே இல்லாமலில்லை.

எது எப்படியோ வீட்டிலிருந்தும், உறவுகளிடமும், நிறுவனங்களிலும் என பல வசவுகளை வாங்கிக்கொண்டும் மறைத்துக்கொண்டும், மனதழுத்தும் பல வலிகளோடும் தான் நாம் ஒவ்வொருவரும் மருத்துவமனை நோக்கி ஓடுகிறோம். நானும் ஓடி அவசரம் அவசரமாக மேல்மாடி சுற்றி ஐந்தாம் தளம் புகுந்து எனது அலுவளுள் ஓடி அமர்ந்தேன்.

எனக்கு நினைவெல்லாம் வெப்பம் தகித்தது. மருத்துவமனை வாசனை உள்ளே மனசெல்லாம் பரவிக்கிடந்தது. அதிலும் நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணொருத்தி கத்தியதும், கால் உதைத்துக்கொண்டு துடித்ததும் கண்ணுக்குள்ளேயே விழித்திருந்தது. எப்படி முனகினாள் அவள். அத்தனை அழகுப் பெண்ணாயினும் பாவம் வலி என்றதும் அக்கம்பக்கம் கூட மறந்துவிடுகிறது அவளுக்கு. எனக்கு மட்டும் முடிந்திருந்தால் கொடம்மா உன் பிள்ளையை நான் பெற்றுத் தருகிறேன் என்று கேட்டு நானே வாங்கிக் கொண்டிருப்பேன். அப்படியொரு வலிபோல் அவளுக்கு. அமர்கிறாள் அமரமுடியவில்லை. நிற்கிறாள் நிற்கமுடியவில்லை. அவ்வளவு இருந்தும் அப்படியொருப் பெண்ணை தனியே மருத்துவமனைக்கு அனுப்பும் ஆண்களை என்ன சொல்வது??!!

ஆயிரம் கருத்து வேறுபாடோ, பிரச்சனையோ, பிடித்து பிடிக்காதோ போகட்டும்; மரணத்தையும் ஜனனத்தையும் அதனோடு சேர்த்துப் பார்ப்பதற்கில்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணிற்கு ஆற்றவேண்டிய கடைமைதனில் ஒன்று அவளுடைய பிரசவ காலத்தில் அவளை தனது கண்ணாகப் போற்றி காத்துகொள்ள வேண்டியதும். அவ்வளவு வலியில் அவள் துடிக்கையில் ஒரு குழந்தையைப் போல மார்மீது அவளை அணைத்துக்கொள்ளும் கணவனை எந்தப் பெண்ணும் தான் சாகும்வரை தன்வாழ்நாளில் அந்த நெருக்கத்தை மறப்பதில்லை.

பொதுவாக உதவுவது என்பதே விதைப்பது தானே, நீ ஒன்றை விதைதுப்பார், அதிலிருந்து நூறு முளைக்கும். கொடுப்பதும் அப்படித்தான் திரும்ப இரட்டிப்பாய் கிடைக்கும். எதை கொடுக்கிறோம், யாருக்கு, எவ்விடத்தில் அது நிகழ்கிறது என்பதைப் பொறுத்தே அதன் பலன்களும் மாறுகிறது. எனக்கு எப்போதுமே இதில் ஆழமான நம்பிக்கையுண்டு, எதை கொடுக்கிறோமோ அது கிடைக்குமென்று. எதை நினைக்கிறோமோ அது நடக்குமென்று. அதற்காக உடனே ஜீபூம்பா நான் ஒரு அமெரிக்க அரசனாக ஆகவேண்டும் என்றுக் கேட்டால் இப்போதைய பிரசிடெண்ட் ட்ரம்ப்ட் வந்து நம் தலையில் பெரிய ஒரு குண்டை தூக்கி போட்டாலும் போடுவார்.

நினைப்பதென்பது நல்லது சார்ந்திருக்க வேண்டும் என்பது இயற்கையின் இயல்பு விதி. எதையும் பிறர் நன்மைக்காக, ஒரு நல்ல நீதிக்கு வேண்டி எண்ணல் வேண்டும். இது செய்தால் நான் நல்லாருப்பேனா என்று நினைப்பதை விட, இதை செய்தால் பிறர் நன்றாக வாழ்வாரா’ என்று எண்ணிச் செய்யுங்களேன், நீங்கள் தானாகவே நன்றாகிப் போவீர்கள்.

நினைத்தல் என்பது ஒரு செய|ன் ஆணிவேரைப் பிடுங்கி அதை நம் மனதுள் ஆழ நடுவதற்குச் சமம். நட்டால் போதுமா, ஒரு விதையை மண்ணில் அப்படி ஊன்றிவிட்டால் முடிந்ததா? நீர் ஊற்றவேண்டும், வெயில் படவேண்டும்,கற்றடிக்கவேண்டும், தேவைப்பட்டால் உரமும் இடவேண்டும். அப்படிதான் நமது எண்ணங்களும்.

நினைத்ததோடு நின்றுவிடாமல், அதை முதலில் ஆழமாக நம்பவேண்டும். நம்பி அது நடப்பதற்கான முயற்சிகளை ஏற்பாடுகளை செய்யவேண்டும். நடந்துவர வர அதை மேல்கொண்டுப்போக பெரிதாக முழுதாக உழைக்கவும் வேண்டும். ஆக நம்பி, முயற்சித்து, மேலே உழைக்கவும் துவங்கினால், நினைப்பில் இட்ட விதை முளைத்து செடியாகும், மரமாகும், பூத்துக் குலுங்கும். அதற்கிடும் உரம் தான், அந்த நினைப்பு சார்ந்த நற்கனவுகளும், பிறர் நலமும் பேணும் சிந்தனைகளும்.   எனவே, நினைப்பதை தனக்கு மட்டுமே சாதகமாக நினைக்காமல் ‘இது இப்படி நடந்தா அது அப்படி எல்லோருக்கும் பயனளிக்குமே’ என்பதுபோன்ற பொதுநலன் பற்றிய கனவுகளும் நமக்குள் இருத்தல் வேண்டும்.

எப்படின்னா “எனக்கு நாளைக்கே ஒரு ரெண்டு கோடி பணம் அடிச்சிடனும், நேரா ஆப்பிரிக்கா காட்டுல போய் செட்டுலாயிடுவேன்னு” கனவு கண்டா பின்னாடி அண்டார்டிக்கா யானை வந்து காரி த்தூனு முகத்திலேயே துப்பும் இல்லையா??!! அப்போ கனவென்பது எப்படி இருக்கணும்? “நான் வளர்ந்தா கூட இருப்பவர்களும் வளர்வார்கள். கூட உள்ளோர் உயர்கையில் தூர உள்ளவருக்கும் உதவி கிடைக்கும். எல்லோருக்கும் உதவி கிடைக்கையில் பாகுபாடு அற்று போகும். பாகுபாடு இல்லையெனில் பெரிது சிறிது இராது. ஆக, தூரத்திலிருந்து என் அருகாமை வரை நல்லோர் புழங்கத் துவங்குவர். நல்லோர் கண்டு நல்லோர் கண்டு ஊர் மெல்ல மாறும். ஊர் மாற மாற நாடு மெல்ல திருந்தும். என் நாடு எனது. என் தேசம் எனது. எனது மக்களுக்கான நன்மை என்னில் இருந்தே துவங்கும். எனவே நான் முத|ல் சரியாக வேண்டும். நான் தூய அன்போடு எல்லோரிடமும் பழக வேண்டும். யாரையும் பழிக்காமல், யாரையும் கெடுக்காமல் நானொரு நதி போல எல்லோருக்குமான சமத்துவத்தோடு பாயவேண்டும். அப்படியொரு சமத்துவ நதியின் கரைகளில் வந்து நீரருந்தும் அனைவருக்கும் பசி தீர, பசியில் அமர்ந்து ஓய்வுகொள்ளும் பல மரங்களும் வளர்ந்து செழிக்க, ஒரு அழகிய வனம் அங்கே எம் ஆதி மனதோடு அமைந்துவிட கனவு விரிபடவேண்டும்.

அப்படி ஒரு சுகமான கனவு துவங்கும் நாளில் நமக்குள் பேதம் ஒழிந்துப் போவோம். காரணம் என்றைக்கு நாமெல்லோரும் எனக்காக’ என் வீட்டிற்க்காக மட்டுமென்று என்று எடுத்துவைக்க ஆரம்பிடித்தோமோ, பதுக்கிக்கொள்ள பழகினோமோ அன்றிலிருந்து தான் நாம் மறைமுகமாக திருட்டையும் பிறருக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறோம்.

இந்த உலகம் நான் எனும் ஒரு புள்ளியிலிருந்தே துவங்குகிறது. இங்கு எது ஒன்றுமே தானே நடப்பதில்லை. எது நடக்கவும் நான் காரணமாகிறேன். நல்லதை மட்டுமே சுந்துள்ள காற்று போல இல்லை நான். நல்லதாக மட்டுமே பொழியும் மழையைப் போல் இல்லை நான். நல்லதை நினைத்தாலும் கேட்டதை விதைத்தாலும் எண்ணியதை எண்ணியபடியே அமைத்துத் தரும் இந்த வானும் மண்ணும் போல இல்லை நான். பொதுத்துவததோடு இல்லவே இல்லை நான்.

வெளிச்சம் தரும் நெருப்பை கூட எரிக்கக் கற்றவன் இந்த நான் தான். அதை தடுக்கமுடிந்தவனும் இந்த நான் தான். இந்த நான் ஒழியுமிடத்தில் மட்டுமே பிறர் நுழைய முடிகிறது. பிறரோடு வாழும் வாழ்க்கைக்கு மட்டுமே வெற்றி தேவைப்படுகிறது, மகிழ்ச்சி தேவைப்படுகிறது, பண்பு தேவைப்படுகிறது, ஒரு வாழ்த|ன் அர்த்தம் துளிர்ப்பது நாம் பிறரோடு சேர்ந்து வாழ துவங்கியப் பின்தான். தனித்து வாழ்க்கையில் அல்ல. பிறகு நல்லதை எண்ணுகையில் மட்டும் தனக்கென எண்ணிக் கொள்வது மட்டும் எத்தகைய சரி? எனக்கு காரு வேண்டும், எனக்கு சோறு வேண்டும், எனக்கு பங்களா வேண்டும்? எனக்கு சாவே நிகழக்கூடாது என்றால், இந்த இயற்க்கை என்ன செய்யத் துணியும் நமை?

ஒரு உண்மையை மிக அழகாக புரிந்துக்கொள்ளுங்கள்; நமைக் கொல்வது நாம் தான். நமது ஒற்றைச் சுயநலம் தான். என்னை நான் மட்டும் தான் கொல்கிறேன். யார் ஒருவரையும் யாராலும் கொல்லஇயலாது. நமை நாம் தான் கொன்று குவிக்கிறோம்.  நம் சுயநலம் மட்டுமே நமக்கு நம்மையே எதிரியாக்கி சிரிக்கிறது. அந்த சுயநலத்தை வேரருக்கத்தான் ஐயா கௌதம புத்தர் நமை ஆசைபடாதீர்கள் என்றார்.

ஏனெனில் ஆசை என்பது ஒரு பூஞ்சையைப் போல, அது மனது பாழ்ப்படும்போதேல்லாம் தானே கணக்கற்று முளைத்துக்கொள்ளும். எனவே ஆசையை கொல் என்றுச் சொல்லவில்லை. ஆசையை கொள்ளாதே என்றார். ஆசை அதுவாக துளிர்ப்பது, மேலும் நீ அதிகமாக ஆசைப்படாதே, அது உன்னைக் கொன்றுவிடும் என்றார். அதுவாக உனது வாழ்வுபொருத்து எழும் ஆசைகள் எழட்டும், அது இயல்பாக எழும் இயல்பாக வினை செய்யும்.  மேலும், நீயாக வேறு தனியே ஆசைப்படுவானேன், அது உனை முற்றிலும் உனது ஆசைத் தீக்குள் தள்ளி எழவிடாது மூழ்கடித்துவிடும், எனவே ஆசையற்று இறுக்கப் பழகு என்றார் அந்த புத்த ஞானி.

ஆக, ஆசையை முற்றிலும் கொன்றுவிடாதீர்கள். ஆசை இயல்பில் வேண்டும். வாழ்வின் இயல்பாக இருக்கும் ஆசை எண்ணவிதைகளை ஆழ்மணத்துள் தூவி பின் மெல்ல பல கிளைகளாக கனவுகளாக ஆசை விரிபட்டு பின் அந்தக் கனவுகள் செயல்களின் காரணிகளாக விரிந்துபோகும். அதற்காக பேராசை கொள்ளாதீர்கள். பேராசை என்பது நமையும் அழிக்கும் நம்மோடுள்ளோரையும் அழிக்கும்.

ஒரு காட்டில் ஒரு பெரிய குளம் இருந்தது. அந்த குளத்தின் கரையருகே தங்கக் காசுகள் கொட்டிக் கிடந்தன. வெகு நாட்களாக வறுமையில் வாடிய ஒரு பெரியவருக்கு கனவில் அந்த குளம் தெரிகிறது. எப்போதேனும் அந்த குலத்தைக் கண்டுவிட வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொள்கிறார். பிறகு நாடுகள் நகர்கிறது.

ஒரு வருடம் பத்து வருடங்கள் இருபது வருடங்களென காலம் உருண்டோடி விடுகிறது. பெரியவருக்கு மனதுள் விதைத்த அந்த கனவின் ஆசை இன்னும் மறக்கவேயில்லை. அதை சொல்லிச் சொல்லியே தனது பிள்ளைகளை வளர்க்கிறார். பெரியவரின் நான்கு பிள்ளைகளும் பெரிய ஜாம்பவான்களாக வளர்ந்துவிடுகிறார்கள்.

பெரியவருக்கு ஒரு பெரிய நம்பிக்கை, எப்படியும் அந்தக் குளக்கரையில் இருக்கும் வெள்ளிக்காசுகள் ஒரு நாள் நமது வீட்டிடையே வந்துசெருமேன்று. அன்றிரவு திடீரென மீண்டும் அந்த கனவு வந்தது பெரியவருக்கு. குளமெங்கும் தங்கக் கட்டிகள். ஐயோ ஐயோ தங்கக் கட்டிகள் கண்டேனே தங்கமாய் தங்கமாய் எங்கும் தங்கத்தை மட்டுமே கண்டேனே என்று எழுந்து புலம்புகிறார்.

பிள்ளைகள் ஆளுக்கொரு அறையிலிருந்து அப்பா அலறும் சத்தம் கேட்டு ஓடி வருகிறார்கள். அவருக்கு தண்ணீர் குடிக்கக் கொடுத்து படுக்கச்சொல்கிறார்கள். அவர் அதை விடுவதாக இல்லை. அந்த தங்கத்தின் கனவைப் பற்றியே புலம்பித தீர்கிறார். ஒரு கட்டத்தில் இந்தாளுக்கு பயித்தியம் என்றுச் சொல்|விடுகிறது வீடு. வீட்டின் முனுமுனுப்பை ஒற்றிருந்துக் கேட்டு ஊரும் பேச ஆரம்பித்துவிட்டது. பெரியவரை எல்லோரும் பயித்தியமென்று கூற ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் கொஞ்ச நாட்கள் ஆக ஆக பெரியவரை எல்லோரும் “லூசு ரங்கநாதன்” லூசு ரங்கநாதன் என்றே கூப்பிட ஆரம்பித்துவிட்டனர்.

தனது கனவினால் இப்படி அவருக்கு பெயரே “லூசு ரங்கநாதன்” ஆனது குறித்து பெருவருத்தம் அவருக்கு. நெஞ்சு பொறுக்கவில்லை. ஒருநாள் திடீரென்று கோபம் பொங்கியவராய் விருட்டென்று எழுந்தார். துண்டை எடுத்து தலையில் கட்டிக் கொண்டார். உடல்சூடும் வெயில் தகிக்க அதை பொருட்படுத்தாமல் முறுக்கி மீசையை முறுக்கி மேலேற்றி விட்டுகொண்டு சரக் சரக்கென நடக்கிறார்.

நடந்து நடந்து சுடுகாடு புகுந்து வேற ஊர் திரும்பி, புதியதொரு காட்டுக்குள் நுழைந்து, கடைசியில் ஆற்றாமை பொறுக்காமல் அந்தக் காட்டிற்கு நடுவே இருந்த கிணற்றுள் விழுந்து விடுகிறார். மூக்கிலும் நாக்கிலும் நீர் ஏறி மூச்சடைத்து கைகால் துடிக்க துடிக்க உயிர் பிரிகிறது. பிள்ளைகள் அவரை தேடியலைந்து, இங்கு போனார் அங்கு போனார், இப்படி பார்த்தேன் அப்படி பார்த்தேனென்று அவரவர்’ கண்டவர் எல்லாம் சொல்ல’ அதை வைத்து ஒவ்வொருவரையாய் கேட்டு கேட்டு நால்வரும் தேடி தேடி பெரியவர் விழுந்த கிணறு நோக்கி வருகிறார்கள். வந்தால் அந்த கிணறு அருகே பெரிய குளம் இருக்கிறது. அந்த கிணறு குளத்தோடு சேர்ந்து இருக்கிறது. அந்தக் குளத்தின் கரையெங்கும் தங்கக் காசுகள் இரைந்துகிடக்கின்றன.

ஐயோ அப்பா அப்பா என்று அழுது புலம்புகிறார்கள். ஒருவன் சொல்கிறான் ‘தோ அப்பாவோட துண்டு கிடக்குதே, ஒருவேளை அப்பா அநேகம் இந்த குளத்தில் தான் விழுந்திருப்பார் வாங்கடே தேடுவோம்’ என்றுச் சொல்லி எல்லோரும் கிணற்றில் குதித்து குளத்திற்குள் வருகிறார்கள். குளத்தின் உள்ளே எங்கும் தங்கக் கட்டிகள். தங்க வளையல்கள். தங்க ஆபரணங்களும், தங்கத்திலான பொருட்க்களும், பெரிய பெரிய தங்கச் சுவர்களுமாய் குளம் தங்கத்தால் மின்னுகிறது. அதிலொரு தங்கச் சுவற்றின் மீது அப்பா மிக ஒய்யாரமாய் அந்த பரந்தாமனைப் போல பள்ளிகொண்டிருக்கிறார். மொத்தத்தையும் கொண்டுவந்தார்கள் பிள்ளைகள் ஊருக்கெல்லாம் அப்பாவின் பெயர்சொல்| தங்கமாய் தங்கமாய் வழங்கி மகிழ்ந்தார்கள்.

இதுல பாருங்க; தங்கம் பெரியவருக்கு கனவுல வந்தது. காரணம் அவரோட ஏழ்மையின் ஏக்கத்தில் மனது பாழ்பட உள்ளிருந்து அதுவாகப் பூத்த பூஞ்சைகள் போலத்தான் அவருக்கு கனவில் வந்த அந்த தங்கத்தின் ஆசையும், அந்த கனவும். அந்த இயல்பாக வந்த ஆசை தவறில்லை. அதுபோல் ஒரு நாள் இந்த தங்கமெல்லாம் எனது வீடுவரும் என்று நம்பினார் அதுவும் நடந்தது. எங்கோ கனவில் பார்த்த ஒரு தங்க குளத்தை நிஜமாகவே அடைந்தும் விட்டார். ஆனால் தப்பென்ன யோசித்தீர்களா? அந்த தங்கமெல்லாம் தனக்கே வேண்டும் என்றுக் கண்ட பேராசை, அதற்காக வாழ்க்கையையே தொலைத்தது, அது மட்டுமே இருந்தா போதுமென்றுக் காத்திருந்ததால் கடைசியில் அது மட்டுமே கிடைத்தது, ஆனா வாழ்க்கை போச்சு.

எது நாம நினைக்கிறோமோ அது தாங்க நடக்கும். எண்ணங்கள் தான் செயல். அதுக்குத்தான் நல்லதை எண்ணவேண்டும் என்பது. யாருக்கும் நல்லதையே நினைக்கவேண்டும் என்பது. ஒரு நதி போல மழைபோல பிறருக்கு நன்மையைச் சேர்க்க ஆசைப்பட்டுப் பாருங்களேன், உங்களை இந்த உலகமே மழையைப் போல நதியைப்போல கொண்டாடவும் துவங்கிவிடும்..

இன்னும் கொண்டாட நிறைய இருக்கு உலகில்.. எண்ணுங்கள், நல்லதையே எண்ணுங்கள், நல்லதே நடக்கும்.. (தொடரும்..)

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment