Home » Articles » வெற்றி உங்கள் கையில்- 62

 
வெற்றி உங்கள் கையில்- 62


கவிநேசன் நெல்லை
Author:

அதிசய நிகழ்வுகள்

“சிறப்பாகத் திட்டமிட்டுவிட்டேன். என் வெற்றி உறுதிதான்” என்று தனது தௌல்வான திட்டத்தினால் வெற்றியை உறுதியாக்கிக்கொண்டவர்கள் உண்டு.

“எத்தனையோ வழிகளில் திட்டமிட்டபின்பும், என் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கவில்லையே” என்று ஏங்கித் தவிப்பவர்களும் உண்டு.

சிறந்த திட்டங்கள் அமைந்தாலும், சிலவேளைகளில் “வெற்றியின் சறுக்கல்கள்” சிலரது வாழ்வில் வந்து விழுந்துவிடுகின்றன.

சரியாகத் திட்டமிடுதல் ஒருவரின் வெற்றிக்கு அடிப்படையான காரணிதான். இருந்தபோதும் அவர் வாழுகின்ற சூழல் மிக முக்கியமானது. சிலவேளைகளில் சாதகமான சூழல் அமையாவிட்டால், ஒருவரின் வெற்றி பெருமளவு பாதிக்கப்படுகிறது.

ஒருவரின் வெற்றிக்கான சூழல் மிக அற்புதமாக இருந்தாலும், அவர் சார்ந்திருக்கின்ற சூழலிலுள்ள மற்றவர்களின் திட்டம் அவருக்கு எதிராக அமைந்துவிட்டால், வெற்றி என்பது கேள்விக்குறியாக மாறிவிடுகிறது.

இதனால்தான், தனது ‘சுற்றுப்புறச்சூழல்’ சிறந்ததாக மாற்றுவதற்கான முயற்சிகளிலும் ஒருவர் ஈடுபடுவது நல்லது.

சிலநேரங்களில் சுற்றுப்புறச்சூழல் பிரச்சினைகளை உருவாக்கிவிடும். சுற்றியிருக்கும் நபர்கள்கூட நம்மை சிக்கலில் சிக்கிக்கொள்ள வைத்துவிடுவார்கள். அமைதியாக இருந்தாலும், எதிரிகளாகக் கருதி போருக்கு நின்றிடுவதைப்போல, வெறுப்பின் நெருப்பைக் கக்கிக்கொண்டு சண்டைக்கு வடம்பிடிப்பார்கள். இன்னும்சிலர், சொல்லாததையெல்லாம் “அவர்தான் இப்படி சொன்னார்”. “இவர்தான் இப்படி நடந்துகொண்டார்” என்று மற்றவர்களிடம்போய் கோள்சொல்வார்கள். அங்குமிங்கும் அலையும் கோளாய் இயங்கி, உறவுகளில் கோளாறை உருவாக்குவார்கள்.

எனவே, வெற்றியைப்பற்றி சிந்தித்து செயல்படுபவர்கள் தங்களைச் சுற்றி நிலவும் சூழலைப்பற்றியும், அங்குள்ளவர்களின் மனநிலையைப்பற்றியும் தெரிந்துகொண்டு செயல்படுவது விவேகமான செயலாகும்.

அது ஒரு விவசாயியின் வீடு.

ஒரு குதிரையை பாசத்தோடு வளர்த்து வந்தார் அந்த விவசாயி.

குதிரைக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கண்போல காத்து வந்தார். குதிரையோடு சேர்த்து ஒரு ஆட்டையும் வளர்த்து வந்தார். குதிரையும், ஆடும் நண்பர்கள்போல நன்றாகப் பழகி வந்தார்கள்.

திடீரென ஒருநாள் குதிரையின் உடல்நிலையில் பிரச்சினை ஏற்பட்டது. மிகக்கொடிய வைரஸ் நோய் அந்தக் குதிரையைத் தாக்கியிருந்தது.

விவசாயி துடிதுடித்துப்போனார்.

அருகிலுள்ள கால்நடை டாக்டரை அழைத்துவந்தார். குதிரைக்கு மருத்துவ சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தார்.

குதிரையின் உடலை நன்கு பரிசோதித்த டாக்டர், குதிரைக்கு மிககொடிய வைரஸ் நோய் தாக்கியிருப்பதை உறுதிப்படுத்தினார். இரண்டு, மூன்று நாட்களுக்கு மருந்து கொடுத்துவிட்டு ஒரு முக்கிய தகவலையும் விவசாயியிடம் சொன்னார்.

“எனது மருந்து மூன்று நாட்களுக்குள் குதிரையின் நோயை குணமாக்கிவிடும். அதற்குள் அந்தக் குதிரை எழுந்து நடக்கும். இந்த மூன்று நாட்களுக்குள் குதிரை எழுந்து நடக்கவில்லையென்றால், எந்த டாக்டராலும் இந்த நோயைக் குணப்படுத்த முடியாது. நீங்களே அந்தக் குதிரையைக் கொன்றுவிடுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார் டாக்டர்.

டாக்டரும், விவசாயியும் பேசிக்கொண்டதை அருகிலிருந்த ஆடு கவனித்துக் கொண்டிருந்தது.

“மருந்து கொடுத்தும் குதிரையின் நோய் சரியாகவில்லையென்றால், நம் நண்பனான குதிரையை கொன்றுவிடுவார்களே” என்று பயந்தது ஆடு.

டாக்டரின் ஆலோசனையின்படி, குதிரைக்கு மருந்தைக் கொடுத்தார் விவசாயி.

ஆனால், குதிரைக்கு நோய் குணமாகவில்லை. ஆட்டுக்கு குதிரையின் உயிர்மீது பயம் ஏற்பட்டது. விவசாயி மருந்துகொடுத்து சென்றபின்பு குதிரையிடம் நெருங்கி வந்தது ஆடு.

“குதிரையே… நீ என் நண்பன். நீ தயவுசெய்து எழுந்து நடக்க முயற்சி செய். உனது நோயைப்பற்றி டாக்டர் பேசும்போது நான் கேட்டேன். நீ ஒழுங்காக எழுந்து நடக்காவிட்டால், நம் முதலாளியான விவசாயி உன்னை கொன்றுவிடுவார். உன்னைக் கொல்லவில்லையென்றால், உனது நோய் மற்ற விலங்குகளுக்கும் பரவி, வைரஸ் நோயை உருவாக்கிவிடும் என்று டாக்டர் எச்சரித்துச் சென்றிருக்கிறார்” என்று ஆடு தனது நண்பனான குதிரையிடம் சொன்னது.

இதைக்கேட்ட குதிரை அதிர்ச்சியடைந்தது.

தன்னால் நடக்க முடியாவிட்டாலும், எழுந்துநின்று மெதுவாக அங்கும், இங்குமாக நடந்து பார்த்தது. விவசாயி தனது அருகில் வந்தபோது அந்தக் குதிரை ஓடுவதற்கு முயற்சி செய்தது. இதைப்பார்த்த விவசாயி மகிழ்ந்தார். மறுநாள் டாக்டரை அழைத்து வந்தார். நோயினால் நடக்க முடியாத குதிரை ஓடிய அதிசயத்தைச் சொன்னார் விவசாயி.

குதிரையை பரிசோதனை செய்த டாக்டர் “நான் கொடுத்த மருந்தினால் உங்கள் குதிரையின் நோய் முழுவதுமாக குணமாகிவிட்டது. இனி பிரச்சினையில்லை” என்றார்.

விவசாயி மிகவும் மகிழ்ந்தார்.

“தீராத என் குதிரையின் நோயை நீங்கள் குணமாக்கிவிட்டீர்கள். உங்கள் உதவியை நான் என்றும் மறக்கமாட்டேன். நாளைக்கு எங்கள் வீட்டுக்கு வாருங்கள். உங்களுக்கு பிரியாணி விருந்து வைக்கிறேன்” – என்று சந்தோச துள்ளலில் டாக்டரையும் விருந்துக்கு அழைத்தார்.

மறுநாள் – குதிரையை ஊக்கப்படுத்திய ஆடு பிரியாணிக்கு சுவை சேர்த்தது.

“எனது உயிர் போய்விடும்” என்று பயந்த குதிரை உயிரோடு எழுந்து நடந்தது. “எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று மகிழ்ந்த ஆட்டின் உயிர் பிரிந்தது.

இதுதான் உலக வாழ்க்கையில் சிலநேரங்களில் நிகழும் அதிசய நிகழ்வுகள்.

“தனது உயிருக்கும் ஆபத்து ஏற்படும்” என்பதை முன்கூட்டியே ஆடு உணர்ந்திருந்தால், அதற்கு உயிர்போகும் பரிதாப நிலை ஏற்பட்டிருக்காது. “நம்மைச் சுற்றியிருக்கின்ற சூழலில் ஆபத்து எந்த வடிவிலும் வரலாம்” என்பதைத் தெரிந்துகொண்டு செயலாற்றத் தவறிய ஆடு உயிரிழந்தது.

“அசைவ பிரியாணி விருந்துக்கு தானும் இரையாகலாம்” என்பதை முன்கூட்டியே உணர்ந்துகொண்டு தப்பித்துச் செல்லும் முயற்சியில் அந்த ஆடு ஈடுபட்டிருந்தால், உயிர் பிழைத்திருக்கும் வாய்ப்பு உருவாகியிருக்கும்.

ஆனால், விவசாயியின் முடிவை எதிர்பார்க்காத ஆடு பலியானது.

பிறருக்கு உதவுவதும், மற்றவர்களை உற்சாகப்படுத்துவதும் சிறந்த செயல்தான். அது வெற்றிக்கு துணைநிற்கும் நடவடிக்கைதான். இருந்தபோதும், நமது உயிருக்கும், வெற்றிக்கும் ஆபத்து வரும் சூழல் ஏற்படும்போது மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

எந்தச்சூழலிலும் எச்சரிக்கை உணர்வோடு செயல்படுதன்மூலம், வாழ்க்கையில் நிரந்தர வெற்றியை நிலைநாட்டலாம்.

தொடரும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment