Home » Articles » வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 5

 
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 5


ஞானசேகரன் தே
Author:

உற்சாகம்தான் எல்லாமே!

(ENTHUSIAM MAKES THE DIFFERENCE)

இந்நூலின் ஆசிரியர் நார்மன் வின்சென்ட் பீல் ஆவார். (தமிழில் PSV குமாரசாமி மொழிபெயர்த்துள்ளார். ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் தமிழில் வெளியிட்டுள்ளது.) எல்லாவற்றையும் அடியோடு மாற்றிவிடக்கூடிய விலைமதிக்க முடியாத ஓர் அம்சமான உற்சாகத்தைப் பற்றித்தான் இப்புத்தகம் பேசுகிறது. வாழ்க்கை எப்போதும் சுகமானதாகவும், இலகுவானதாகவும் இருப்பதில்லை. பிரச்சினைகள், வலிகள், சவால்கள், விரக்திகள் ஆகியவை அதில் இரண்டறக் கலந்துள்ளன. ஆனால் அதற்கான தீர்வை இப்புத்தகம் அளிக்கிறது. கண்டிப்பாகப் பலனளிக்கும் தீர்வுகள் இந்நூல் முழுமையும் நிரம்பி வழிகின்றன. நடைமுறையில் ஏராளமான எதிர்மறைகள் உங்கள் வாழ்க்கையில் குறுக்கிட்டாலும் உங்களால் சிறப்பானதொரு வாழ்க்கையை வாழமுடியும் என்று இந்நூல் கட்டியம் கூறுகின்றது.

நீங்கள் சுவாரசியமற்ற மந்தமான ஒரு வாழ்க்கையை வாழவேண்டிய அவசியம் கிடையாது. அப்படிப்பட்டதொரு நிலையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். நீங்கள் விரும்பினால் உற்சாகம் பொங்கிவழியும் ஒரு வாழ்க்கையை உங்களால் வாழமுடியும் என்பதை இந்நூலின் செல்நெறி வாசகர்களுக்குச் சொல்லித்தருகின்றது. இந்நூல் பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பே அதனுள் இருக்கும் செய்தியைச் சொல்லுவதாக வடிவமைக்கப்பட்டுள்ள விதம் இந்நூலின் தனித்த சிறப்பு. அவை வருமாறு.

 • உற்சாகம் உங்களிடம் என்னென்ன மாற்றங்களையெல்லாம் விளைவிக்கும்.
 • உற்சாகம் ஒருபோதும் உங்களைக் கீழே சாய்த்துவிடாது.
 • உற்சாகத்தால் பிறரை இணங்க வைக்க முடியும்.
 • உற்சாகத்தால் பயத்தையும், கவலையையும் பறந்தோடிடச் செய்ய முடியும்.
 • உங்கள் வேலையில் உற்சாகத்தைக் கடைப்பிடித்துப் பாருங்கள்.
 • பதற்றமாக இருக்கிறீர்களா? படபடப்பாக இருக்கிறீர்களா? உற்சாகத்தை முயன்று பாருங்கள்.
 • உற்சாகம் பிரச்சனைகளை மாயாஜாலமாகத் தீர்த்து வைக்கும்.
 • நீங்கள் பலவற்றைச் சாதிக்க உற்சாகம் உங்களைத் தூண்டும்.
 • உங்கள் சிரமங்களிலிருந்து உற்சாகம் உங்களை மீட்டெடுக்கும்.
 • உற்சாகம் ஒரு தொற்றுநோய்.
 • உற்சாகமும் நமது எதிர்காலமும்
 • உற்சாகம்தான் எல்லாமே.

மேற்கண்டவாறு அமையும் நூலின் ஒவ்வொரு தலைப்பும் உற்சாகத்தால் மனித சமூகம் அடையும் நேர்மறை வாழ்க்கையை ஓர் அறிவியல் கோட்பாடு போன்று வெற்றிபெற்ற பல சாதனையாளர்களின் வாழ்க்கையை ஆதாரம் காட்டி விளக்கிச் செல்கிறது. எமர்சன் எனும் அறிஞர் “உற்சாகம் வாழ்வை ருசிகரமாக்கும் என்று நான் மனதார நம்புகின்றேன். உற்சாகத்தின் துணையின்றிப் பெரும் சாதனைகள் எவையும் நிகழ்த்தப்படவில்லை. நீங்கள் எதைச் செய்தாலும் உற்சாகத்துடனும், துடிப்புடனும் செய்யுங்கள்” என்று கூறுவார். வரலாற்று அறிஞரான அர்னால்டு டாயின்பி, “சுவாரசியமற்ற ஒரு நிலையை உற்சாகத்தால் மட்டுமே உடைத்தெறிய முடியும். உற்சாகத்தை இரண்டு வழிகளில் தூண்டிவிட முடியும். முதலாவது எல்லையற்றக் கற்பனையைத் தூண்டிவிடக்கூடிய உயர்ந்த சிந்தனை. இரண்டாவது, அந்த உயர்ந்த சிந்தனையை நடைமுறையாக்கக்கூடிய ஒரு புத்திசாலித்தனமான திட்டம்’ என்று சொல்லுவார்.

இந்நூல் முழுவதும் உற்சாகம் என்றால் என்ன? உற்சாகம் என்னவெல்லாம் பெற்றுத்தருமென்று ஒரு நாவல் போன்று பல வெற்றியாளர்களின் கதைகளைச் சான்றாக்கி; இந்த உலகில் நிகழ்த்தப்பட்டுள்ள எல்லாச் சாதனைகளும் உற்சாகம் மிகுந்தவர்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்பட்டுள்ளன. ரைட் சகோதரர்களின் உற்சாகமே விமானமாய் நமக்குக் கிடைத்தது. ஹென்றி போர்டின் உற்சாகம்தான் மோட்டார் வாகனமானது. எடிசனின் உற்சாகம்தான் இருட்டை வெளிச்சமாக்கிய மின்விளக்குக் கிடைக்கக் காரணமானது. பில்கேட்ஸின் உற்சாகம்தான் கணினி கிடைக்கக் காரணமானது. என்றவாறு உற்சாகமில்லாமல் எந்த வெற்றியும் சாத்தியமில்லை. பூரணத்துவமான ஒரு வாழ்க்கையின் அடையாளம் உற்சாகம்தான். எந்தத் தடை வந்தாலும் அதை எதிர்த்துப் போராடி உடைத்தெறியும் துணிச்சலை உங்களுக்கு அளித்து; உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் நீங்கள் ரசித்து அனுபவிக்க உங்களை அது அனுமதிக்கிறது. நாம் விழிப்புடன் இருக்கும் நாட்கள்தான் உண்மையான விடியல்கள். வீழ்ச்சியடைந்த மனிதனை உற்சாகம் தூக்கி நிறுத்தும்.

வெற்றிக்கான மாயாஜாலமான சூத்திரம்

வெற்றிக்கு ஒரு மாயாஜாலமான சூத்திரம் இருக்கிறது. அது இல்லாமல் எந்தவொரு நிறுவனத்தாலும் இயங்க முடியாது. தனி நபர்களுக்கும் அது பொருந்தும். அந்த ஐந்து வார்த்தைச் சூத்திரம் இதுதான்; ‘ஒரு தேவையைக் கண்டுபிடித்து அதை நிறைவேற்றுங்கள்’ பெரும் வெற்றியடைந்துள்ள நிறுவனங்கள் அனைத்தும் இந்த உத்தியை அடித்தளமாக வைத்தே அதை அடைந்துள்ளன. அப்படிப்பட்ட நிறுவனங்கள் பொதுமக்களின் ஒரு தேவையைக் கண்டறிந்து அதைச் செவ்வனே நிறைவேற்றி வைத்துள்ளன. அதன்மூலம் அவை அதற்கான வெகுமதியைப் பெற்றுள்ளன. வரலாற்றில் பெருவெற்றி பெற்ற நாயகர்களும் பொதுமக்களின் முக்கியமானதொரு தேவையைக் கண்டறிந்து அதை நிறைவேற்றிவைக்கத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களே. அதனால் மனித குலம் பயனடைந்தது. அவர்களும் பெரும் புகழ் பெற்றனர். அவர்கள் மக்களின் தேவை என்ன என்பதைக் கண்டறிந்தவர்கள், சூழ்நிலையைச் செம்மையாகக் கையாளக் கற்றிருந்தவர்கள். நீங்கள் ஒரு விஜயத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தால், உங்கள் முயற்சியைப் பெரும் நம்பிக்கையுடன் மேற்கொள்வீர்கள். அப்போது உற்சாகம் முடுக்கிவிடப்பட்டு வேலை செய்யத் தொடங்கும். உற்சாகம்தான் உலகிலேயே மிகவும் சக்திமிக்க தகவல் தொடர்பு சாதனமாகும் என்று இந்நூல் திரும்பத் திரும்பச் சொல்கிறது.

உற்சாகம்தான் வாழ்க்கை

மனிதர்களைப் பெருமளவுக்கு உந்தித் தள்ளக்கூடிய சக்தி உற்சாகத்திற்கு உண்டு. உற்சாகத்தால் சாதாரண மனிதர்களை மாயாஜாலமிக்கவர்களாக மாற்றமுடியும். அது துணிச்சலையும், தைரியத்தையும் வளர்த்தெடுக்கும், சந்தேகங்களைத் தூக்கியெறியும். உங்கள் மனம்தான் எல்லாமே, நீங்கள் எப்படிச் சிந்திக்கிறீர்களோ அப்படியே ஆகிறீர்கள். உங்கள் காலை நீங்களே வாரிக்கொள்ளாதீர்கள். உங்களிடம் ஏராளமான நல்ல விஜயங்கள் இருக்கின்றன. உங்களிடமிருந்த திறமை ஒரு சிறிதும் குறைந்துவிடவில்லை. மன உறுதியுடன் இருப்பவனால் உலகத்தையே தன் பக்கமாக வளைக்க முடியும் என்று நம்புங்கள். ஓர் இலக்கையும் அதை அடைவதற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். நடந்து முடிந்த விஜயங்கள் குறித்து மனவருத்தம் கொள்வதை நிறுத்துங்கள். இப்போது என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். கிளெமென்ட் ஸ்டோன் எனும் அறிஞர் இதை அற்புதமாக வருமாறு கூறுவார். “சிந்தியுங்கள், சிந்தியுங்கள், நீங்கள் ஆக்கப்பூர்வமாகச் சிந்தித்தால், உங்களுக்கு அற்புதமான விஜயங்கள் நிகழும்” என்று சொல்லியிருப்பது வெற்றி பெற நினைக்கும் எல்லோருக்குமானது ஆகும்.

உற்சாகம் பிரச்சனைகளை மாயாஜாலமாகத் தீர்த்துவைக்கும் ஆற்றலுடையது. கீழ்க்கண்ட ஏழு வார்த்தைகள் உங்களுடைய வாழ்க்கையில் அற்புதமான மாற்றங்களைக் கொண்டுவரும் ஆற்றல்மிக்கவை என்று நார்மன் சென்ட் பீலே குறிப்பிடுகிறார். “ஒவ்வொரு பிரச்சனையும் அதன் தீர்வுக்கான விதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது” என்பதுதான் அந்த வார்த்தை. வாழ்க்கையில் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் என்று எதுவுமில்லை. பிரச்சினைகள் கண்டு கவலைப்படத் தேவையில்லை. பொதுவாகத் தங்களுடைய நினைவில் அதிகமாக மூழ்கியிருப்பவர்கள்தான் கவலைக்கு அதிகமாகப் பலியாகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெற்றிபெற்றவர்களிடம் உங்கள் வெற்றி எப்படிச் சாத்தியமானது என்று கேட்டால் அதற்கு அவர்களின் பதில் இப்படி இருக்கும். “உங்கள் இதயத்தில் வெற்றிக் காட்சியை அரியணை ஏற்றுங்கள் உங்கள் கைகளில் கட்டாயம் வெற்றி வந்துசேரும்” என்பதாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்று விடாப்பிடியாக இருங்கள். உங்களைக் கைதூக்கிவிட உற்சாகம் வரிந்துகட்டிக்கொண்டு வரும். உங்களுடைய பிரச்சனைகள் உங்களை விழுங்கிவிட நீங்கள் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். எல்லா நேரத்திலும் அதை எதிர்கொள்ளும் உற்சாகம் உங்களிடம் இருந்தால்; நீங்கள் தோற்றுப்போக வாய்ப்பே இல்லை. வாழ்க்கை என்பதே உற்சாகம்தான் என்பது இப்புத்தகம் முன்வைக்கும் மையக் கருத்து ஆகும். இந்த நூலை வாசிப்பதன்மூலம் நாம் நமக்கான தேடுதலில் அதற்கான உற்சாகத்தைப் பெற்றிட முடியுமென்று உறுதியாக நம்புகின்றேன். உற்சாகத்தோடு வாழ நம்மைப் பெரிதும் உற்சாகப்படுத்திடும் நூல் இது என்பது என் ஆழ்ந்த கருத்து.

– வாசிப்புத் தொடரும்…

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment