Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி…?

ஒரு நல்லதலைவன் எப்படியிருக்கவேண்டும் என்றுசொல்லுங்கள்?

அருள்மொழிநாச்சியார்,

மதுரை.

ஒருதலைவன் ஒரு நல்ல மனிதனாக இருக்கவேண்டும். ஒரு நல்லமனிதனால் மட்டுமே ஒரு நல்லதலைவராக இருக்கமுடியும். நல்ல மனிதனுக்குத் தலையானது கல்வியா? செல்வமா? வீரமா? என்பது மிகப்பழமையான ஒரு விவாதம். இது மூன்றையும் மிஞ்சியது குணம் தான் என்றுஅடித்துச் சொல்லிவிடலாம்.

தலைமையின் நோக்கம் என்பது புகழ் அல்ல; அது நேர்மைத்திறன். அதிகாரம் அல்ல;நோக்கம். பதவி அல்ல, அது திறமை .வருமானம் அல்ல அது செல்வாக்கு.

நல்ல குணத்தை மட்டுமே நமது முன்னோர்கள் வலியுறுத்துவதற்கு சிலகாரணங்கள் உண்டு. எல்லா செல்வங்களும் ஒருங்கே பெற்ற ஒருவர் நடத்தையில் சற்று சறுக்கிவிட்டால் சிறுக சிறுக சேர்த்து வைத்த மற்ற எல்லா தலைமைப் பண்புகளும் ஒரே நாளில் அழிந்துபோகும். செல்வந்தர் ஒருவர் சூதாட்டத்தில் ஈடுபட்டால், அவரது செல்வம் ஒரேநாளில் கைவிட்டுப்போகும். அதுபோல இளைஞர் புகைப்பிடிக்க பழகினால் அவருக்கு புற்றுநோய் வந்துவிடும். ஏமாற்றும் குணம் உடையவன் தலைவனாக இருந்தாலும் அவன் சிறையில் வாடுவதை யாராலும் தடுக்கமுடியாது.

ஒருசெயலை மீண்டும் மீண்டும் செய்யும் போது அது பழக்கம் ஆகிவிடுகிறது. அந்தப் பழக்கம்  தான் காலப்போக்கில் உறுதியாகி நமது நடத்தை ஆகிவிடுகிறது. எனவே தலைவனாகத் துடிக்கும் நீங்கள் இந்தப் பழக்கங்களைஉடனே கைவிடவேண்டும்.

  1. வழக்கமாகப் பொய் பேசுவது.
  2. மற்றவர்கள் மீதுபழிபோடுவது.
  3. பிறரைக் குறை கூறுவது.
  4. முடியாததை வாக்குறுதி வழங்குவது.
  5. வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது
  6. மற்றவர்களின் உழைப்பில் வாழ்வது
  7. கெட்ட வார்த்தை உபயோகிப்பது
  8. சகமனிதர் மீது வெறுப்புணர்வுகொள்வது.
  9. எளியவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வது.
  10. பெண்களையும் குழந்தைகளையும் கொடுமைப்படுத்துவது.

சில நல்ல பண்புகள் ஒரு மனிதனுக்கு தலைமை ஏற்கும் வாய்ப்பைபெற்றுத் தரும்.

தைரியம்: தைரியமாக கடினமான போட்டித் தேர்வை எழுத துணிய வேண்டும். 10 கி.மீ தூரம் ஓடவும், கட்டுரைஎழுதவும்,மேடை ஏறிபேசவும் வேண்டும். மற்றவர்கள் குறை கூறுவார்களோ என்றுகூச்சப்படக்கூடாது.

உண்மை: பேசுகின்ற பேச்சிலும்,செய்யும் செயலிலும்,உண்மை வெளிப்படையாகத் தெரியவேண்டும். நாம் செய்ததை செய்தோம் என்று ஒப்புக் கொள்வதும்,தெரியாததைத் தெரியாது என்று ஏற்றுக் கொள்வதும் உண்மையின் வெளிப்பாடு. எல்லாம் தெரியும் என்று நடிப்பது நேர்மையற்ற செயல், எல்லாம் தெரிந்தவர் இவ்வுலகில் யாருமில்லை.

நேர்வழி: நேர்மையற்றவர்கள் சிலர் செல்வந்தர்களாகவும் அதிகாரத்தில் தலைமை பதவிகளில் உள்ளவர்களாகவும் இருப்பதால்  நேர்மைக்கு மதிப்பில்லை என்று பலரும் நினைக்கக்கூடும். ஆனால் நேர்மைக்கு மதிப்பும் மரியாதையும் எப்போதும் இருக்கும். காமராஜரைப் பற்றி மட்டும் ஏன் எல்லாமக்களும் இன்னும் உயர்வாகப் பேசுகிறார்கள்? நேர்மையால் தானே! நேர்வழியில் பயணிப்பது பெரிய தலைமைப்பண்பு.

மதிப்பளிப்பது: நமக்கு மற்றவர் எவ்வளவு மதிப்பளிக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதே அளவு மதிப்பு நாம் மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும். எந்த உதவியும் திருப்பி செய்ய முடியாதவரிடம் ஒருவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை வைத்து அவரது தலைமையை அளவிடலாம்..

அன்பு: நல்லமனிதர்கள் என்பது மதம், இனம்,சாதி,மொழி சார்ந்ததுஅல்ல. அது மற்றவர்களை எப்படி நடத்துகிறோம் என்பதில் இருக்கிறது. பிறமக்கள் இழிவானவர்கள் என்று தத்துவ ரீதியாக நம்பிவிட்டவனுக்கு பிறரிடத்தில் அன்பு காட்ட முடியாமல் போய்விடும், நானும் அன்பானவன் என்ற பொய்யை அவன்; மீண்டும் மீண்டும் சொல்லநேரிடும்.

எளிமை: ஆடம்பரமில்லாமல் வாழ்வது நல்ல தலைமைக் குணம்.  சொகுசை விரும்புபவர்கள் எல்லா இடங்களுக்குப் போய் வரமுடியாது, அங்கு அவர்களுக்கு சொகுசு அறைகள் கிடைக்காது. ஆடம்பரம் விரும்பியின் வருமானமும் சூரியன் உதித்த பின் மாயும் பனியைப்போல் மறைந்துவிடும். வாரன் பஃபே போன்ற உலகின் மிகப்பெரியசெல்வந்தவர்கள் கூட எளிமையாகவாழ்கிறார்கள்.

அக்கரை: காந்தி ஒருநாள் ரயிலில் பயணம் செய்தார். ரயில் நிலையத்தின் போது அவரது ஒருகாலணி கீழே தண்டவாளத்தில் விழுந்து விட்டது. அதை எடுக்க முயற்சி செய்தும் முடியவில்லை, ரயில் புறப்பட்டு விட்டது. உடனே அவர் செய்த காரியம் அனைவரையும் திடுக்கிட வைத்தது. அவரிடம் இருந்த மற்றொரு காலணியைக் கழட்டி கீழேபோட்டு விட்டார். ஏன் இதைசெய்தீர்கள் என்று கேட்ட போது, ஒரு காலணியை எடுக்கும் ஏழைக்கு ஒரு ஜோடியாக இருந்தால் பயன்படும் அல்லவா? என்றாராம்.

கருணை: விலங்குகள் கூட பலவீனமான உயிரினங்கள் மீது கருணை காட்டுகின்றன. மனிதன் மட்டும், பலவீனமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்று துடிக்கின்றனர். சிறு தவறுக்குக்கூட கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பதுஅதிகாரத்தில் இருக்கும் சிலரது கருத்து. மதவாதம் அரசாட்சி செய்யும் நாடுகளில் தலையை வெட்டுதல்,உடல் உறுப்புகளைத் துண்டித்தல் போன்ற காட்டு மிராண்டி தண்டனை முறை உள்ளது. இங்கு கருணைக்கு இடமில்லை. உண்மையில் அவன் தப்பு செய்தவனா? என்று கண்டுபிடிக்கவும் வழியும் இல்லை. ஆனால் அறிவியல் நம்பும் நாகரீக மக்கள் வாழும் நாடுகளில் சாட்டப்பட்ட குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தால் மட்டுமே குற்றவாளிக்கு தண்டனை. குற்றவாளி திருந்த வழி வகுக்கும் வகையில் இங்கு தண்டனை வழங்கப்படுகிறது. அறிவியல் கற்ற இளைஞராகிய நீங்கள் மனிதர்கள் மீதும் ஜ÷விகள் மீதும் கருணை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

கல்வி: நற்குணங்களை ஏற்படுத்துவது கல்வி. ஆனால் கல்விகற்ற பின்னரும் நல்ல குணங்கள் சிலரிடம் ஏற்பட்டுவிடவில்லை. நல்ல குணங்களை உடையவன் எனகாட்டிக் கொள்பவர்ளே போலி மனிதர்களாக உள்ளார்கள். இளைஞர்களாகிய நீங்கள் தான் உலக சிந்தனையாளர்களின் நூல்களைக் கற்று நல்ல குணம் படைத்தவர்களாக ஒரு முன் மாதிரியாக விளங்க வேண்டும். மற்றவர்கள் கவனிக்காமல் இருக்கும் போது ஒருவர் என்ன செய்கிறார் என்பதை வைத்துத்தான் ஒருவரை நல்லமனிதன் என்று சொல்லமுடியும்.

நன்றியுணர்வு: 

சிலருக்கு அதிகாரம் கையில் வந்ததும், அதிகாரமமதை ஏற்பட்டு விடுகிறது. கர்வம் தலைக்கேறி துன்பப்படுகிறார்கள், மற்றவர்களையும் அவமதிக்கிறார்கள். ஒருவனுக்கு பணமோ அதிகார மோகையில் வந்தால் அவன் உண்மையான குணம் வெளிப்படும். ஆனால் நீங்கள் இறுதிவரை இயற்கையாக,நன்றியுள்ளவராக இருக்கவேண்டும்.

சிந்தனையில் பிறப்பது நடத்தை, நடத்தையில் பிறப்பது ஒருவரின் குணம். பேசும் வார்த்தை, பேசும் விதம், முகபாவம், கண்களின் அசைவு ஆகியவற்றை வைத்து குணத்தை கணக்கிடலாம். வளரும் நீங்கள் இந்தக் கலையையும் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

நமது நடத்தையைப் பற்றி கவலைப்பட வேண்டும்,நாம் யாரின் தலைமையை ஏற்கிறோமோஅவர்களின் பண்புகளை பற்றியும் கவலைப்பட வேண்டும். நடத்தை சரியில்லாதவரின் பின் அணிவகுத்தல் ஆகாது. அதுதேசவிரோதச் செயலன்றி வேறில்லை.

முகத்திற்குப் பதிலாக உங்களது நடத்தையை கண்ணாடியில் பார்த்துப் பழகுங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி ஒருசில அவதுறு பேசினால் கூட அதை மற்றவர்கள் நம்பாத வகையில் உண்மையான அப்பழுக்கற்ற வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள்.

உங்கள் வாழ்வில் என்னதான் நடந்திருந்தாலும்,மற்றவர்களுக்கு நல்லவர்களாகவே இருந்துவிடுங்கள். அப்படி ஒரு பாரம்பரியம் ஏற்படுத்தினால் தலைமை குணங்களும், தலைமைப்பதவியும் உங்களைத் தேடிவரும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment