Home » Articles » வெற்றி உங்கள் கையில்-59

 
வெற்றி உங்கள் கையில்-59


கவிநேசன் நெல்லை
Author:

பணிவு தரும் பெருமை

“நான்தான் பெரியவன்; நானே தலைசிறந்தவன்” (Superiority Complex) என்ற எண்ணத்தோடு சிலர் வாழ்கிறார்கள் – இது ஆணவத்தின் அஸ்திவாரம்.

“நீங்கள்தான் சிறந்தவர். நான் ஒரு உதவாக்கரை” (Inferiority Complex) என்ற எண்ணத்தை மனதில்தேக்கி சிலர் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் – இது தன்னம்பிக்கையற்றவர்களின் தனிப்பெரும் அடையாளம்.

தன்னை மிகப்பெரியவனாக எண்ணி, உயர்ந்த நிலையில் இருப்பதுபோன்று, சிந்திப்பது தவறல்ல. ஆனால், “உங்கள் யாருக்கும் ஒன்றும் தெரியாது. நான் மட்டும்தான் எல்லாம் தெரிந்தவன்” – என்று மார்தட்டுவதுதான் வீணாய்ப் போவதற்கான அறிகுறியாய் மாறுகிறது.

“மற்றவர்களும் அறிவில் சிறந்தவர்கள், அனுபவம் நிறைந்தவர்கள்” என்று எண்ணும்போதுதான் வெற்றியை நோக்கிய நமது பயணம் எளிதாக அமைகிறது.

இன்று –

“நீங்கள் படிக்கவில்லை. உங்களுக்கு ஒன்றும் தெரியாது. நான் காலேஜில் படிக்கிறேன்” என்றுசொல்லி தனது பெற்றோர்களையே பதம்பார்க்கும் சில கத்திகளும் இளையோர் வடிவில் நடமாடுகிறார்கள்.

“கையில் நாலு காசு இல்லை. நீ எல்லாம் ஒரு மனுஷனா” என்று பணத்திமிரில் அடுத்தவர்களின் சுயமரியாதையை சுட்டெரிக்கும் நெஞ்சங்களும் உண்டு.

– இப்படி வீண்பெருமை பேசி, வாழ்க்கைப் படகில் ஏறி, திசை தெரியாமல் அலைபவர்களும் உண்டு.

இந்த ‘வீண்பெருமை’ என்பது அகம்பாவம், ஆணவம், செருக்கு – என பல்வேறு வார்த்தை வடிவங்களில் பலரிடம் வலம்வருகிறது. வளர்ந்து செழிக்கிறது.

“தன்னைவிட்டால் இந்த உலகத்தில் யாரும் விவரம் தெரிந்தவர்கள் அல்ல” என்று நினைக்கும் ‘மனப்பாங்கு’ இன்று பலரிடம் காணப்படுகிறது. சமுதாயத்திலுள்ள பலரின் உதவியைப் பெற்றபின்பும், “நான்தான் இதைச் செய்தேன். என்னால்தான் இந்த வெற்றி வந்தது” – என்று தேவையில்லாமல் மற்றவர்களை மட்டம்தட்டி தானாய் முளைத்த காளானாய் மாறிப்போனவர்களும் உண்டு.

இந்த சமுதாயத்தில் வெற்றி பெற நினைப்பவர்கள், எல்லோரிடமும் பணிவுடனும், அன்புடனும், பண்புடனும் நடந்துகொள்வது அவசியமாகும்.

இதனால்தான், திருவள்ளுவர் “பெருமைகொண்ட பண்பு எந்தக்காலத்திலும் பணிந்து செயல்படும். பெருமைமிக்க பண்பு கொண்டவர்கள் எந்தக்காலத்திலும் பணிந்து நடந்துகொள்வார்கள். ஆனால், தன்னைத்தானே அதிசயித்துப் பாராட்டிக் கொள்பவர்கள் சிறுமையான பண்பு கொண்டவர்கள்” – என்கிறார்.

இதனை,

“பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து” – என்னும் திருக்குறளில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

மிகப்பெரிய பதவிகள் கிடைத்தாலும், புகழின் உச்சிக்குச் சென்றாலும், தனது உண்மையான நிலைமையை உணர்ந்து, எளிமையாகவும், இனிமையாகவும் மற்றவர்களோடு பழகும் தன்மையை வளர்த்துக்கொண்டவர்கள், இந்த உலகில் எல்லோராலும் மதிக்கப்படுகிறார்கள். வாழும் காலத்திலேயே மிக உயர்ந்த நிலையில் இருந்தாலும், அனைவரும் போற்றும்வகையில் செயல்களை இனிமையாகவும், எளிமையாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும்.

“உயர்ந்த நிலையில் இருக்கும்போது

உலகம் உன்னை மதிக்கும்

உன்நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால்

நிழலும்கூட மிதிக்கும்”

– என்ற கண்ணதாசனின் வரிகள், “எந்த நிலையில் இருந்தாலும், தனது உண்மைநிலையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். அகம்பாவத்தை அகற்ற வேண்டும்” என்பதை மனிதர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறது.

அவர் ஒரு மன்னர்.

வீதி உலா செல்வதற்காக ஒருநாள் அவரது அமைச்சரோடு அலங்கரிக்கப்பட்ட தேரில் புறப்பட்டார்.

வரும்வழியில், எதிரே ஒரு முனிவர் நடந்து வந்துகொண்டிருப்பதைக் கவனித்தார். அவரைப் பார்த்ததும், தேரைவிட்டு இறங்கினார். பின்னர், முனிவரது காலில் தலைவைத்து வணங்கினார்.

முனிவர் மன்னரை ஆசி வழங்கி வாழ்த்தினார். பின்னர், மன்னர் தேரில் ஏறி அரண்மனைக்குப் புறப்பட்டார். இந்த நிகழ்வைக் கவனித்த அமைச்சருக்கு வருத்தமாக இருந்தது.

“இந்த நாட்டையே ஆளுகின்ற மன்னர், ஒரு முனிவரின் காலில் விழுந்து வணங்குவது எப்படி முறையாகும்? இது ராஜ பரம்பரைக்கே இழுக்கு அல்லவா? பலர் முன்னிலையில் மண்டியிட்டு மன்னர் முனிவரை வணங்கினால், இந்த மக்கள் மன்னரை மதிப்பார்களா?” – என கவலைப்பட்டார் அமைச்சர்.

அரண்மனைக்கு வந்தபின்பு தனது எண்ணத்தை மன்னரிடம் பகிர்ந்துகொண்டார்.

“முனிவரின் காலில் நான் விழுந்ததற்கு நீர் வருத்தப்பட வேண்டாம்” – என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் மன்னர்.

மன்னரின் இந்தச் செய்கை அமைச்சருக்கு புரியாத புதிராக இருந்தது.

“மன்னர் ஏன் இப்படி விசித்திரமாக நடந்துகொள்கிறார்?” – என்று தனக்குள் கேள்வி எழுப்பிக்கொண்டு விடை தெரியாமல் தவித்தார்.

அமைச்சருக்கு பதில் சொல்லும் வகையில் மன்னர் உடனே ஒரு ஆணையிட்டார்.

“மிகவும் அவசரமாக எனக்கு மூன்று பொருட்கள் வேண்டும். அவற்றை உடனே எனக்கு கிடைக்குமாறு செய்ய வேண்டும். ஒரு மனிதனின் தலை, ஒரு புலியின் தலை, ஒரு ஆட்டின் தலை – ஆகிய மூன்றையும் உடனே இங்கே கொண்டுவருவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள்” – என்று மன்னர் கட்டளையிட்டார்.

மன்னரின் ஆணை பலரையும் திகைக்க வைத்தது. மன்னர் இட்ட கட்டளை என்பதால், அதனை எதிர்த்துப் பேசவும் வழிதெரியாமல் அரசப் பணியாளர்கள் திகைத்தார்கள்.

நாடு முழுவதும் இந்த மூன்று தலைகளையும் தேடும்பணி தொடங்கியது.

முதலில், ஆட்டுத்தலையைத் தேடுவதற்கான பணியில் ஈடுபட்டார்கள். மிக எளிதாக ஆட்டுத்தலையை இறைச்சி கடைக்குச்சென்று வாங்கிவிட்டார்கள்.

அடுத்து, “புலியின் தலையை எங்கே வாங்குவது?” – பணியாளர்கள் திட்டம் தீட்டினார்கள்.

காட்டில் வேட்டையாடும் வேட்டைக்காரர்களிடம் “மன்னருக்கு புலியின் தலை தேவை” என்பதைத் தெரிவித்தார்கள். மிகுந்த சிரமத்தோடு ஒரு புலியின் தலையை வேட்டைக்காரர் கொண்டுவந்துவிட்டார்.

இனி மனிதத் தலையை எவ்வாறு கொண்டுவருவது?

மன்னரின் கட்டளையை மீற முடியாமல் இடுகாடு, சுடுகாடு என அலைந்து திரிந்து முடிவில், ஒரு மனிதப் பிணத்தின் தலையைக் கொண்டுவந்தார்கள்.

ஆட்டுத்தலை, புலித்தலை, மனிதத்தலை – என மூன்று தலைகளையும் வரிசையாக ஒரு மேஜையின்மீது வைத்தார்கள். பின்னர், அமைச்சர் மன்னரிடம் வந்தார்.

“மன்னா! உங்கள் சொற்படி நாங்கள் இந்த மூன்று தலைகளையும் கொண்டுவந்துவிட்டோம். இனி நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார் அமைச்சர்.

மன்னர் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்.

“இந்த மூன்று தலைகளையும் எடுத்துக்கொண்டு சந்தைக்குச் சென்று விற்று பணம் கொண்டு வாருங்கள்” என்றார்.

சந்தைக்கு அரசப் பணியாளர்கள் சென்றார்கள்.

ஆட்டுத்தலை அதிக பணத்திற்கு உடனே விலைபோனது. ஆனால், புலித் தலையை வாங்க எல்லோரும் பயந்தார்கள். நெருங்கிவந்து வேடிக்கைப் பார்த்தவர்களும் விலகிப்போனார்கள். வீட்டில் அழகுக்காக புலித் தலையை மாட்டி வைக்கலாம் என்ற எண்ணத்தில், ஒரே ஒருவர் மட்டும் அதனை வாங்கிச் சென்றார்.

ஆனால், கடைசிவரை மனிதத் தலை விலைபோகவில்லை. தலையைப் பார்த்தவர்களெல்லாம் பயந்து தலைதெறிக்க ஓடினார்கள். மனிதத் தலையை நீண்டநேரம் சந்தையில் வைத்திருக்கவும் முடியாமல், அரண்மனைக்கு திரும்பக் கொண்டுவந்துவிட்டார்கள்.

அமைச்சர் மீண்டும் மன்னரை சந்தித்தார்.

“மன்னா… உங்கள் ஆணைப்படியே நாங்கள் சந்தைக்குச் சென்றோம். ஆட்டுத்தலையை வாங்க போட்டிப்போட்டார்கள். அது உடனே விலைபோனது. புலித் தலையை வாங்க யாரும் தயாராக இல்லை. இருந்தாலும் முடிவில், ஒரு வேட்டைக்காரர் தனது வீட்டை அழகுபடுத்துவதற்காக வாங்கிச்சென்றார். ஆனால், மனிதத் தலையை மட்டும் விலைகொடுத்து வாங்க மக்கள் யாரும் முன்வரவில்லை. அடுத்த அறையில் உள்ள மேஜையில் அந்த மனிதத் தலையை வைத்திருக்கிறோம்” – என்றார் அமைச்சர்.

“பரவாயில்லை அமைச்சரே! யாராவது இலவசமாக கேட்டால்கூட அதனை கொடுத்துவிட்டு வாருங்கள்” – என்று மீண்டும் அமைச்சரை சந்தைக்கு அனுப்பினார். மனிதத் தலையை இலவசமாக வாங்கக்கூட யாரும் தயாராக இல்லை.

மனிதத் தலையோடு திரும்பி வந்தார் அமைச்சர்.

“அமைச்சரே… இப்போது உங்களுக்குப் புரிகிறதா? நமது உடலிலுள்ள உயிர் போய்விட்டால், நமது உடல் யாருக்கும் பயன்படாது. இலவசமாகக் கொடுத்தால்கூட வாங்கமாட்டார்கள். நாம் இறந்துபோனபிறகு நமது உடலை யாரும் மதிப்பதில்லை. ‘பிணம்’ என்றுசொல்லி ஒருநாள் இரவுகூட வீட்டில் தங்கவைக்க உறவினர்களே விரும்புவதில்லை. இந்தநிலையை உயிரோடு இருக்கும்போதே நன்றாக அறிந்து, வாழ்க்கையை உணர்ந்தவர்கள், முற்றும் துறந்த முனிவர்கள். உயிரோடு இருக்கும்போது உடலுக்கு மதிப்பில்லை, உயிருக்குத்தான் மதிப்பு என்பதை உணர்ந்த அந்த முனிவர்கள் காலில் விழுந்து வணங்குவதுதான் ஞானம் பெறுவதற்கு சிறந்த வழி. நான் ஞானம் பெறுவதற்காக உயிரோடு இருக்கும்போதே உரியவர்களுக்கு மரியாதை செலுத்தி, பணிந்து நடக்கிறேன்” – என்றார் மன்னர்.

இதைக்கேட்ட அமைச்சர் அதிர்ந்து திகைத்து நின்றார்.

மேலே குறிப்பிட்ட நிகழ்வு நமக்கு ஒரு முக்கியமான உண்மையை உணர்த்துகிறது.

வாழும் காலத்தில் எந்தநிலையில் இருந்தாலும், அனைவருக்கும் மரியாதை கொடுத்து, இனிமையாகப் பேசி, பணிவோடு வாழப் பழகிக்கொள்வதுதான், வாழ்க்கையின் சிறப்புக்கும், சீரான வெற்றிக்கும் துணைநிற்கும்.

தொடரும்.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2018

நோபல்பரிசு – 2018
சின்ன சின்ன மாற்றங்கள் பெரிய மாறுதல்கள்
வெற்றி உங்கள் கையில்-59
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 2
இலட்சியத்தை நோக்கி
மண்ணின் மகத்துவம் மகாத்மா காந்தியடிகள்
எப்போதோ போட்ட விதை!
முயன்றேன் வென்றேன்…
தன்னம்பிக்கை மேடை
மற்றவர்களை வசீகரிப்பது எப்படி?
அற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா?
காய்ச்சலால் வரும் வலிப்பு (Febrile Fits)
வாழ நினைத்தால் வாழலாம் – 22
வின்னர்ஸ் அகாடமியின்
அலங்கரித்துக் கொள்…
துணிந்தவருக்கில்லை துயர்-நீங்கள் துணிச்சல் மிக்கவரா?
பயணங்கள் வெறுப்பதில்லை
சிந்திக்க வைக்கும் சீனா- 4
எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்… எதிர்காலத்தை நேர்த்தி செய்…
உள்ளத்தோடு உள்ளம்