Home » Articles » வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 2

 
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 2


ஞானசேகரன் தே
Author:

இரகசியம் (Secret)

இரகசியம் என்ற இந்த ஆங்கில நூலின் ஆசிரியர் ரோன்டா பைர்ன் (Rhonda Byrne) ஆவார். (தமிழில் மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. தமிழில் PSV குமாரசாமி மொழியாக்கம் செய்துள்ளார்) இந்த நூலின் ஒட்டுமொத்தமான கருத்து எது என்று பார்த்தால் “மனித மனம் எதை இடையறாது நினைக்கிறதோ அதை அடைந்துவிடுகிறது” அதாவது “நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய்” என்ற சிந்தனையை அறிவியல் நெறியில் நிறுவிட முற்படுகின்றது.

இந்த உலகத்தை தனது சிந்தனைகளால் மாற்றியமைத்த பிளாட்டோ ஷேக்ஸ்பியர், கலிலியோ, பித்தோவன், எடிசன், கார்னெகி, ஐன்ஸ்டீன், லிங்கன் ஆகிய எல்லோருமே நம்மால் எதுவும் முடியும் என்று நம்பியவர்களே ஆவர். இவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது “மனம் எதை நம்புகிறதோ அதை உறுதியாக அடைந்துவிடுகிறது” என்ற இரகசியத்தை இவர்கள் அறிந்திருந்ததுதான் என்று இந்த நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இந்த வாக்கியத்தை நாம் அடிக்கடி பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம்; நாமே பல நூல்களில் அடிக்கடி படித்திருக்கின்றோம். ஆனால் நம் வாழ்க்கையில் அதைக் கடைப்பிடித்து வெற்றிபெற வேண்டுமென்று சிந்தித்ததில்லை; இந்த நூல் அத்தகைய வெற்றிச் சிந்தனையை நம்முள் உறுதியுடன் விதைக்கிறது. இந்த நூலில் பல வெற்றியாளர்களின் சிந்தனைகள் வரிசையாகச் சொல்லப்பட்டு; அவர்கள் வெற்றி பெற்ற விதம்; அவர்கள் இரகசியம் எனும் இந்தக் கோட்பாட்டை அறிந்திருந்ததே ஆகும் என்று ரோன்டா பைர்ன் உறுதிபடக் கூறுகிறார்.

இரகசியம் என்பதன் விளக்கம்

  • இரகசியம் நீங்கள் விரும்பும் எதையும் உங்களுக்கு அளிக்கும்; மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் என்று எதுவென்றாலும்.
  • நீங்கள் விரும்பும் எதையும் பெறலாம், எதையும் செய்யலாம்; எதுவாகவும் ஆகலாம்.
  • நாம் தேர்ந்தெடுக்கும் எதை வேண்டுமானாலும் நாம் பெறலாம்; அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல.
  • உங்களது ஒவ்வோர் எண்ணமும் உண்மையில் ஒரு மெய்யான பொருள்தான். அது ஒரு சக்தி.

மேற்சொல்லப்பட்ட சிந்தனைகளை இந்து மதம், புத்த மதம், யூத மதம், கிறித்துவ மதம், இஸ்லாம் போன்ற மதங்களும், பாபிலோனியா, எகிப்து போன்ற நாகரீகங்களும் தங்களுடைய எழுத்துக்களிலும், கதைகளிலும் பொதிந்து வைத்துள்ளன என்பதை நாம் தெரிந்திருக்கின்றோம்.

உலகில் சம்பாதிக்கப்படும் மொத்தப் பணத்தில் தொண்ணூறு சதவீதத்தை, மக்கட் தொகையில் ஒரு சதவீதமே வகிப்பவர்கள் ஈட்டுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? இது ஒரு விபத்தென்றா நீங்கள் கருதுகிறீர்கள்? அது அப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏதோ ஒன்றைப் புரிந்து இருந்தனர். அவர்கள் இரகசியத்தை அறிந்திருந்தனர். இப்போது அதே இரகசியம் இங்கே அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. அது வருமாறு.

தங்களுடைய வாழ்வில் செல்வத்தை ஈர்த்தவர்கள் தெரிந்தோ தெரியாமலோ இரகசியத்தை உபயோகித்திருக்கின்றனர். அவர்கள் அபரிமிதமான செல்வச் செழிப்பான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்திருக்கின்றனர். அதற்கு முரண்பாடான எண்ணங்கள் முளைவிடாமல் பார்த்துக் கொண்டனர். அவர்களுடைய சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த எண்ணங்கள் எப்போதும் செல்வச் சேகரிப்பு குறித்துத்தான் இருந்து வந்துள்ளது. அவர்கள் செல்வத்தை மட்டும்தான் அறிந்திருந்தனர்; அவர்களுடைய மனத்தில் வேறு எதுவும் நிலை கொண்டிருக்கவில்லை. அவர்களிடம் குடி கொண்டிருந்த செல்வச் செழிப்பு குறித்த ஆதிக்க எண்ணங்களே அவர்களுக்குச் செல்வத்தையும், செழிப்பையும் கொண்டுவந்து கொடுத்துள்ளன. அது ஈர்ப்பு விதியின் இயக்க விதி. ஈர்ப்பு விதி என்பது குறித்து; விளக்கும் ஒரு மேற்கோள் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.

“ஈர்ப்பு விதி என்பது, என்னைப் பொறுத்தவரை, நான் என்னை ஒரு காந்தமாக எண்ணிக்கொள்வதற்கு ஒப்பானது. காந்தம் ஈர்ப்பு சக்தி உடையது என்பதை நான் அறிவேன்” என்று சொல்லும் ரோன்டா பைர்ன் உலகிலுள்ள எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் அதீத ஆற்றல் பெற்ற காந்தத்திற்கு இணையானவர்கள் என்கின்றார். பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த காந்தம் நீங்கள்தான். உலகத்திலுள்ள மற்ற எல்லாவற்றையும்விட ஆற்றல் மிக்க இச்சக்தி உங்களினுள் உறைந்துள்ளது. இந்த அளவிட முடியாத காந்த சக்தி உங்களது எண்ணங்கள் மூலமாக வௌல்ப்படுத்தப்படுகிறது. அதாவது ஒத்தவை தன்னை ஒத்தவற்றையே கவர்ந்திழுக்கும் என்று ஈர்ப்பு விதி கூறுகிறது. ஆகவே நீங்கள் ஓர் எண்ணத்தை எண்ணும்போது அதை ஒத்த எண்ணங்களை நீங்கள் உங்கள்பால் ஈர்க்கிறீர்கள். இதற்கான சில உதாரணங்கள் வருமாறு.

  • நீங்கள் துன்பமான சூழலில் இருந்தால் அது தொடர்பான பல துன்பியல் எண்ணங்கள் தோன்றி நம்மை மேலும் துன்பப்படுத்தும். அதனால் நாம் மனக்கலக்கம் அடைவோம்.
  • நாம் ஒரு மகிழ்வான சூழலில் இருக்கும்போது; ஒரு பாடல் இசைக்கப்பட்டால் அப்பாடலில் நாம் இலயித்துப்போய் விடுவோம். இதுவெல்லாம் நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்துவதால் ஏற்படுவது.
  • இந்த எண்ண அலைகளையே இந்நூல் இரகசியம் என்கின்றது. உங்கள் மனக் கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால்; அது கண்டிப்பாக உங்கள் கைகளில் தவழும். இந்தக் கோட்பாட்டை மூன்றே வார்த்தைகளில் விவரிக்கலாம், அது “எண்ணங்கள் பொருட்களாகப் பரிணமிக்கும்” என்பதே ஆகும். மன ஆற்றலின் துடிப்புகள்தான் இருப்பதிலேயே மிகவும் சிறந்தவை; அதனால் அவை இருப்பதிலேயே அதிக சக்தி வாய்ந்தவையாக விளங்குகின்றன. நாம் எதை விரும்புகிறோமோ அது நமக்கும் கிடைக்கும் என்பதே இரகசியம் என்ற கோட்பாட்டின் எளிய விளக்கம் ஆகும்.

இரகசியத்தைப் பயன்படுத்துவது எப்படி

 உங்களுக்கு அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை நினைவிருக்கிறதா? அலாவுதீன் விளக்கை எடுத்துத் தேய்த்தவுடன் அதிலிருந்து ஒரு பூதம் கிளம்பும், அப்பூதம் எப்போதும் ஒன்றே ஒன்றைத்தான் கூறும்.

“தங்கள் கட்டளை என் பாக்கியம்”

தற்போது கூறப்பட்டுவரும் கதையில் அது மூன்றே மூன்று கட்டளைகளைத்தான் நிறைவேற்றும். ஆனால் இக்கதையின் மூலம் வரை சென்று பார்த்தால்; கட்டளைகளுக்கு கணக்கில்லை என்பது புரியும்.

இந்தக் கதையில் வரும் பூதம் பிரபஞ்சத்தின் குறியீடு; நீங்கள் பிரபஞ்சத்தின் எஜமான். பூதம் உங்களின் சேவகன். அப்பூதம் உங்களுடைய கட்டளைகளைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கிறது. நீங்கள் சிந்தித்தவுடனேயே அப்பூதம் உங்களுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காக மக்கள், சந்தர்ப்பங்கள் மற்றும் நிகழ்வுகள் மூலமாகப் பிரபஞ்சத்தை உங்களுக்குச் சாதகமாக இயங்க வைக்கத் துவங்குகிறது. இரகசியத்தைப் பயன்படுத்த மூன்று படிகள் உள்ளன.

முதற்படி – கேட்பது; பிரபஞ்சத்திற்கு ஆணையிடுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்பது பிரபஞ்சத்திற்குத் தெரியட்டும்; உங்கள் எண்ணத்திற்குப் பிரபஞ்சம் செயல்விடை அளிக்கும்.

நம்புவது; இரண்டாவது படி : நீங்கள் விரும்பியது எதுவோ அது ஏற்கனவே உங்களுடையதாகிவிட்டதென்று நம்புங்கள். நான் அதை, அசைக்க முடியாத நம்பிக்கை என்றழைக்கிறேன். கண்ணுக்குப் புலப்படாத ஒன்றின் மீது இருக்கும் நம்பிக்கை.

மூன்றாவதான கடைசிப்படி – பெறுதல் ஆகும். நீங்கள் கேட்டது கிடைக்கும்போது உங்களுக்கு ஏற்படவிருக்கும் உணர்வு குறித்து அற்புதமாக உணரத்துவங்குங்கள். அது வந்து சேரும்போது எப்படி உணர்வீர்களோ அதே உணர்வை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதை இக்கணத்தில் உணருங்கள். வேண்டியது கிட்டிவிட்டது போன்றே உணருங்கள். நீங்கள் அனைத்தையும் உங்களை நோக்கி இருக்கும் ஒரு காந்தம் என்பதை நினைவில் வைத்திருங்கள். உங்களுக்கு என்ன தேவை என்பதைத் தௌல்வாக உங்கள் மனத்தில் இருத்தும்போது அப்பொருட்களே உங்கள் வசம் ஈர்க்கும் காந்தமாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.

ஈர்ப்பு விதியின் செயல்பாடு

நாம் எதை விரும்பினாலும் அது உண்மையாகவும், வலுவாகவும் இருக்கையில் அது நமக்குக் கிடைத்தே தீரும் என்பதை இந்த இரகசியம் எனும் நூலில் ரோன்டா பைர்ன் வெற்றி பெற்ற ஏராளமானவர்களின் வாழ்க்கையைச் சான்றுகாட்டி விளக்கிச் செல்கின்றார். இந்த நூலைப் படிக்கப் படிக்க நாம் அதிர்ஷ்டசாலியானவராக ஆனதுபோல் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. நினைத்தது நடக்கும், நினைத்ததை முடிப்பேன்; முடியாதது எதுவும் இல்லை: ஆனால் நாம் முயற்சிப்பதில்லை என்பது மட்டுமே உண்மை என்ற கருத்து இந்த நூலை வாசிக்கும் எல்லோருக்கும் ஏற்படும். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள வளம் அளப்பரியது; யாரெல்லாம் எது கேட்கிறார்களோ அதை வாரி வாரி வழங்கக் காத்திருக்கிறது என்பதை இந்த நூல் தனது செய்தியாக முன் வைக்கின்றது. செல்வம் வேண்டுமா? அதைப் பற்றி நினையுங்கள், மகிழ்ச்சி வேண்டுமா? அதைப் பற்றி நினையுங்கள், உறவு வேண்டுமா? அதைப் பற்றி நினையுங்கள், ஆரோக்கியம் வேண்டுமா? அதைப் பற்றி நினையுங்கள், கேட்பது எல்லாமே கிடைக்கும். இவ்விதி உங்களுக்காகச் செய்யக்கூடிய விஜயங்களுக்கு எல்லையே கிடையாது. நாம் சாதிப்பதற்கு ஏதாவது எல்லையிருக்கிறதா? இல்லவே இல்லை. நாம் எல்லையற்ற சக்தியுடையவர்கள், உச்சவரம்பு எதுவும் கிடையாது. உங்களால் முடியும் என்று சிந்தித்தாலும் சரி, முடியாது என்று சிந்தித்தாலும் சரி. இரண்டுமே சரிதான். அதே வேளையில் நீங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் சக்கரவர்த்தி என்பதை மறந்துவிடாதீர்கள்.

– வாசிப்பு தொடரும்   

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2018

நோபல்பரிசு – 2018
சின்ன சின்ன மாற்றங்கள் பெரிய மாறுதல்கள்
வெற்றி உங்கள் கையில்-59
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 2
இலட்சியத்தை நோக்கி
மண்ணின் மகத்துவம் மகாத்மா காந்தியடிகள்
எப்போதோ போட்ட விதை!
முயன்றேன் வென்றேன்…
தன்னம்பிக்கை மேடை
மற்றவர்களை வசீகரிப்பது எப்படி?
அற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா?
காய்ச்சலால் வரும் வலிப்பு (Febrile Fits)
வாழ நினைத்தால் வாழலாம் – 22
வின்னர்ஸ் அகாடமியின்
அலங்கரித்துக் கொள்…
துணிந்தவருக்கில்லை துயர்-நீங்கள் துணிச்சல் மிக்கவரா?
பயணங்கள் வெறுப்பதில்லை
சிந்திக்க வைக்கும் சீனா- 4
எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்… எதிர்காலத்தை நேர்த்தி செய்…
உள்ளத்தோடு உள்ளம்