Home » Articles » எப்போதோ போட்ட விதை!

 
எப்போதோ போட்ட விதை!


அனந்தகுமார் இரா
Author:

இரத்தமும் வேர்வையும் சிந்தி உழைக்கும் ஒருவர்… தனக்கு அதற்கான பலன் கிடைக்கும்!  என்று எதிர்பார்க்கலாமா?  என்று ஒரு கேள்வி எழலாமா?  இப்படி இரண்டு கேள்விகளை கேட்டுவிட்டீர்களே? என்ற மூன்றாவது கேள்வியும் பிறந்துவிட்டது.  அ. முத்துலிங்கம் சாரை படிக்கத் தொடங்கிய பிறகு, அவரது… அங்கே இப்ப என்ன நேரம்? மற்றும் ஒன்றுக்கும் உதவாதவன் என்கின்ற இரண்டு புத்தகங்களில் உள்ள பல கட்டுரைகளை படிக்க ஆரம்பித்த பிறகு வாழ்வே வண்ணமயமாக மாறியது போல ஒரு உணர்வு என்றால் மிகையாகாது.  கொரிய திரைப்படங்கள், கார் விபத்துக்கள், கிரேக்க பண்பாடு, இரஷ்ய கூஸ்பெரிப்பழம், பழந்தமிழ் புறநானூறு என்று அவருடன் பயணப்பட்ட இலக்கியச் சோலையில் கிடைத்த கனிகள் தித்திக்கின்றன.  எதையாவது எழுத வராதா?  என்று ஏங்கிய காலங்கள்  போய்… பேனா மூடியை திறந்தால்… மடை திறந்தது போல வார்த்தைகள் கொட்டுகிற கலைநயம் சொட்டுகின்ற மனதை தந்திருக்கின்ற சொற்கள் அவருடையவை.  வாழ்க்கையை ஒரு புன்முறுவலுடன் பார்க்க பயிற்சி கொடுத்திருக்கின்றார்.  படைப்பாளிக்கென்று பிரத்யேகமாக சம்பவங்கள் நடப்பதில்லை… நடக்கின்ற தற்செயல் நிகழ்வுகளை தனித்தன்மையான கோணத்தில் பார்க்கும்பொழுதும் வாசகர்களின் மனசுக்குள் இருப்பதோடு அவரவர்கள் அதை தொடர்புபடுத்திப் பார்க்கும் வண்ணம் படைக்கும்பொழுதும், தானும் உணர்ச்சிவசப்பட்டு… படிப்பவர்களையும் உணர்ச்சிகளின் ஆழ்கடலுக்கு அழைத்துச்செல்ல எத்தனிக்கும் பொழுதும், தானாக நடக்கின்ற சம்பவங்கள் வரலாறாகின்றன.  அவை இலக்கியங்கள் ஆகின்றன.

அப்படியொரு ஏதேச்சையான நிகழ்வுதான் நாடியாவை?  நாங்கள் கண்டது.  கோபிகாவும் தீபிகாவும் பதிமூன்று, பதினொன்றாம் வயதில்… கொஞ்சநாளாக விடுபட்டுப்போன நீச்சல் பயிற்சியை மீண்டும் தொடங்கிய தருணம்.  கடுமையான பயிற்சியின் மூலம்தான் வெற்றியை அடைய முடியும்… ஆனால் அத்தகைய வெற்றியையே எதிர்பார்த்து காரியங்களை செய்ய முடியுமா? அப்படியொரு வெற்றி கிடைக்காவிடில் என்ன ஆகும்?  தேர்வுகளுக்கு படிப்பதும் அப்படிப்பட்டதுதானா?  மணிக்கணக்கில் ஒரு நீச்சல் வீராங்கனை பயிற்சி செய்கிறாள்.  நேரங்காலம் இன்றி ஒரு ஓட்டப்பந்தய வீரன் ஓடிக்கொண்டே இருக்கிறான்… கால்பந்தாட்ட வீரர்கள்… களமே கதியென கிடக்கிறார்கள்… அதுபோலத்தான் போட்டித்தேர்வாளர்கள், ஒவ்வொரு நூலகமாக… தங்கள் பயிற்சியை மணிக்கணக்கில் படித்து மேற்கொள்கின்றனர்.  அவரவர்களுக்கு பிடித்த களத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்றும் கருதலாம்.  அந்தப் பயிற்சியின் பலனை எதிர்நோக்கலாமா? என்பது தான்… முதல் வரியில் உள்ள கேள்விகளின்… பொருள்!

பொருள் தேடுவதே இலக்காக கொண்டு… விளையாட்டு அல்லது கலை, கல்வி துறையில் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களும் உண்டு. அவர்களது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது,  என்று ஆருடம் சொல்வதும் நமக்கு உதவும்.  ஜென் கதைகள் நிகழ்காலத்தை நேசி! என்று சொல்கின்றன.  நாடியா… தான் பயிற்சி செய்ததை… தான் நினைத்தவாறே…  பார்வையாளர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் நிறைந்த அரங்கிலும் செயல்படுத்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே கொண்டு இருந்தாராம் இப்படி அடிக்கொருதரம் நாடியா… நாடியா… என்று அவரை நாடிச் செல்கின்றோமே!  அவர் யார்?  ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் சிலர் கேட்கலாம்.

கேட்கின்ற மதிப்பெண்கள் முழுமையாக… நூற்றுக்கு நூறு சதவிகிதம்… அனைவருக்கும் கிடைப்பதில்லை.  சில களங்களில் ஒருவருக்கும் கிடைப்பதில்லை.  உதாரணமாக முன்பெல்லாம் மொழிப்பாடங்களில் (தமிழ் – குறிப்பாக) முழு நூறு சதவிகித மதிப்பெண்கள் கொடுக்கப்படுவதில்லை.  அதைப்போன்ற ஒரு துறைதான்… ஜிம்னாஸ்டிக்ஸ். உடலை வளைத்துத் தாவி… அந்தரத்தில் பாய்ந்து ஓடி…  பறந்து சுழன்று கரணமடித்து… குதித்து… வேகத்தை கட்டுப்படுத்தி சட்டென நிறுத்தி… இப்படி எலும்பா இரப்பரா?… என்று சந்தேகம் வரும்வண்ணம் உடற்கட்டை பராமரிக்கிற விளையாட்டுத் துறை.  கடந்த 1976 ல் நடந்த கதை இது.  இதை எழுதிக்கொண்டிருக்கிற எனக்கு ஒரு வயதுதான் அப்போது இருந்திருக்கும்.  நாடியா… ஒலிம்பிக்கில் 14 வயது இளம் சிறுமியாக ஓடிக்குதித்து மேற்சொன்ன காரியங்களை எல்லாம் செய்யும்பொழுது… நான் தரையில் தவழ்ந்துகொண்டு இருந்திருக்கலாம்.  படித்துக்கொண்டிருக்கும் உங்களில் பலர் பல்வேறு சூழ்நிலைகளில் இருந்திருக்கலாம்.  பிறந்திருக்கலாம்… பல வருடங்கள் பிறப்பதற்காக காத்திருந்திருக்கலாம்… இப்படி கடிகாரத்தை… நாட்காட்டியை… சற்றே நின்று யோசிக்க வைத்த முக்கிய நிகழ்வு… அப்பழுக்கில்லாத… முழு பத்துக்கு பத்து மதிப்பெண்களை நாடியா… அந்த மான்ட்ரியல் ஒலிம்பிக் 1976 ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில்… தான் கலந்துகொண்ட ஏழு பிரிவுகளிலும் முழுமையாக ஏழு முறை பெற்றதே ஆகும்.

நாடியா… ஒலிம்பிக் வரலாற்றில் ஓர் ஒப்பற்ற நட்சத்திரம்.  திருப்புமுனை… மின்னல்… அவருக்கு முன்பு முழு பத்துக்கு பத்து மதிப்பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸில் பெற்றவர் யாரும் இல்லை என்பது மட்டும் செய்தி அல்ல…  பெற முடியும்… முழு மதிப்பெண்களை எய்த முடியும் என்று எவரும் நினைத்தது கூட இல்லை.  இந்த எவருக்குள் யார் யார் அடக்கம்? போட்டியாளர்கள், பயிற்சியாளர்கள், பார்வையாளர்கள் இவர்கள் மட்டும் அல்ல… போட்டி நடக்கும் பொழுது… அதில் பெற்ற மதிப்பெண்களை மின்னணுத் திரையில்… பளீரென மின்னச்செய்கின்ற கருவி வடிவமைப்பாளர்களும் கூடத்தான்.  அவர்களிடம் போட்டி அமைப்பாளர்கள் பேசிய பொழுது… ஒற்றை இலக்கத்தில்தான் பொதுவாக மதிப்பெண்கள் இருக்கும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருந்தனர்.  நாடியா… இப்படியான அனைவருடைய கணக்கீடுகளையும் பொய்யாக்கிவிட்டார்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2018

நோபல்பரிசு – 2018
சின்ன சின்ன மாற்றங்கள் பெரிய மாறுதல்கள்
வெற்றி உங்கள் கையில்-59
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 2
இலட்சியத்தை நோக்கி
மண்ணின் மகத்துவம் மகாத்மா காந்தியடிகள்
எப்போதோ போட்ட விதை!
முயன்றேன் வென்றேன்…
தன்னம்பிக்கை மேடை
மற்றவர்களை வசீகரிப்பது எப்படி?
அற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா?
காய்ச்சலால் வரும் வலிப்பு (Febrile Fits)
வாழ நினைத்தால் வாழலாம் – 22
வின்னர்ஸ் அகாடமியின்
அலங்கரித்துக் கொள்…
துணிந்தவருக்கில்லை துயர்-நீங்கள் துணிச்சல் மிக்கவரா?
பயணங்கள் வெறுப்பதில்லை
சிந்திக்க வைக்கும் சீனா- 4
எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்… எதிர்காலத்தை நேர்த்தி செய்…
உள்ளத்தோடு உள்ளம்