Home » Articles » வீர தீர பண்புகளில் நீங்கள் எந்த வகை?

 
வீர தீர பண்புகளில் நீங்கள் எந்த வகை?


சுவாமிநாதன்.தி
Author:

மனிதர்கள் மூன்று வகை. ஆபத்தான சூழ்நிலையில் தன்னுயிரைப் பற்றி கவலைப்படாமல் துணிவுடன் பிறரைக் காப்பாற்றுபவர்கள் முதல் வகையினர். தன்னை மட்டும் காப்பாற்றிக் கொள்ள அவ்விடத்தை விட்டு ஓடுவது அல்லது தனக்கு ஆபத்தில்லை என்ற நிலையில் பிறரைக் காப்பாற்ற துணிவின்றி ஒதுங்கி கொள்பவர்கள் இரண்டாவது வகையினர். கண்ணியமற்ற, நற்குணமற்ற, நேர்மையற்ற, பண்பற்ற, மனிதர்கள் அறநெறியற்ற செயல்களை துணிவுடன் செய்து விட்டு தன்னை வீரனாக, ஆண்மகனாக பறைசாற்றிக் கொள்பவர்கள் மூன்றாவது வகையினர். இதில் நீங்கள் முதல் இரண்டு வகை என்றால் தவறில்லை. மூன்றாவது வகையினர்தான் சமுதாயத்திற்கு ஆபத்தானவர்கள்.

ஆண்டுதோறும் குடியரசு தின விழாவையொட்டி தீரச்செயல் விருதுக்கு தேசிய அளவில் சிறுவர்-சிறுமியர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.  தாங்கள் உயிரை சிறிதும்  பொருட்படுத்தாமல் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் சிறுவர்களுக்கு தீரச்செயல் புரிந்தோர்க்கான விருது  ஜந்து பிரிவுகளில் வழங்கப் படுகிறது. பாரத் விருது, சஞ்சய் சோப்ரா விருது, கீதா சோப்ரா விருது, பாபு கைதானி விருது மற்றும் பொது தேசிய வீர விருதுகள் ஆகும். விருது பெறும் சிறார்களுக்கு ஒரு பதக்கம், சான்றிதழ், மற்றும் ரொக்கப் பரிசு அளிக்கப்படுகிறது. விருதைத்தவிர, இந்த குழந்தைகளுக்கு பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை இந்திரா காந்தி ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது. அதுபோலவே, போர்க்களத்தில் தீரச்செயல் புரிந்தமைக்கு இராணுவ வீரர்களுக்கு பரம் வீரசக்ரா, அசோக சக்ரா, மகாவீர சக்ரா, கீர்த்தி சக்ரா விருதுகள் வழங்கப்படுகின்றன.

பொதுவாக, பலரது உயிரைக் காப்பாற்றியதற்காகவே இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. அசாதாரண நிலையில் துணிவுடன் சிறப்பு மிக்க சேவை செய்ததற்க்காக மத்திய அரசு விருது வழங்கி கௌரவிக்கிறது. ஆண்டுதோறும் தழிழக அரசு தீரச்செயல் புரியும் பெண்ணுக்கு விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா விருது  வழங்கி கௌரவிக்கிறது.

தீரச்செயல்கள்:

நீர் நிலைகளில் மூழ்கிக் கொண்டிருப்பவர்களை காப்பாற்றுவது, சட்ட விரோதமாக இயங்கும் சூதாட்ட கும்பலைப் பிடிக்க போலீசாருக்கு உதவுவது, பாலியல் தொழில் புரியும் சர்வதேச கும்பலை பிடிக்க போலீசாருக்கு உதவுவது, குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்துவது, கொடிய விலங்குகளிடம் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுவது, பொதுமக்களை தீவிரவாதிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவது, தனி ஒருவராக தீவிரவாதிகளின் முகாமை அழித்து பயங்கரவாதிகளை அழிக்கும் ராணுவ வீரர்கள், வாகன விபத்துகளில் சமயோஜிதமாக செயல்பட்டு சக பயணிகளை காப்பாற்றுவது, தன் உயிரைப்பற்றி கவலைப்படாமல் தைரியமாக செயல்பட்டு பெரிய விபத்தை தடுத்து நிறுத்துவது, தீயை அணைத்து காப்பாற்றுவது, மின்சார விபத்திலிருந்து காப்பாற்றுவது உள்ளிட்ட வீர தீர செயல் புரிந்த சிறுவர்-சிறுமிகள் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இவர்கள் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதுடன், இவர்களுக்கு பிரதமர் விருது வழங்குகிறார். ஜனாதிபதி தனது மாளிகையில் விருந்து வழங்குகிறார்.

வட தென் துருவங்களை அடைவது, உலகின் ஏழு கண்டங்களிலும், உள்ள உயரமான மலைச்சிகரங்களை அடைவது, ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கு கயிறு மூலம் நடந்து செல்லுதல், பாறை ஏறுதல், சரிவில் இறங்கு தல், மற்றும் ஆறுகளை நீந்தி கடந்து செல்லுதல் உள்ளிட்டவையும் வீர தீர செயல்கள்தான். ஆனால், இவற்றிற்கு விருதோ, நிதியுதவியோ வழங்கப்படுவதில்லை.  கொலம்பஸ், வாஸ்கோடகாமா ஆகியோரின் கடற்பயணங்களும் வீர தீர செயல்கள்தான்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment