Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி…

செ.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பதில்கள்

தேவையைப் பூர்த்தி செய்யாமல் தேவையற்றவை மட்டுமே நமக்கு கிடைக்கிறது, அதனால் தான் புரட்சி, வன்முறை போன்றவை ஏற்படுகிறது என்று நினைக்கிறேன். இது சரிதானா?

அருள்மொழிநாச்சியார், கணக்கர், மதுரை.

தேவைகள் கிடைப்பதில்லை, தேவையற் றவை கிடைக்கின்றன, எனவே தான் புரட்சி, வன்முறை போன்றவை ஏற்படுகின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அது சரிதானா என்று ஆராய்வோம்.

மனிதனுக்கு என்னென்ன தேவை என்பதைப் பார்ப்போம். உணவு, உடை, இருப்பிடம், உடல்நலம், சுகாதாரம், மருந்துகள், தூய காற்று, சிறந்த வேலை, நல்ல குடும்பம், நண்பர்கள், எதிர்காலத்தின் மீது நம்பிக்கை, மகிழ்ச்சி போன்றவை எல்லா மனிதர்களுக்கும் தேவைப்படுகிறது. ஆனால் இவை அனைத்தும் இந்தியாவில் வாழும் நமக்கு கிடைக்கிறதா என்று கேட்டால், பலருக்கு கிடைக்கவில்லை என்று தான் கூறமுடியும்.

வறுமை :

நமது நாட்டில் 138 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இதில் 27 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழே உள்ளனர் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இவர்களது தினசரி வருமானம் ரூ. 75-ஐ விடவும் குறைவானது. ஆக, இந்த சொற்ப வருமானத்தை வைத்து அவர்களால் என்ன செய்ய முடியும்? இந்தியாவில் 20 லட்சம் குழந்தைகள் 5 ஆண்டுகள் முடியும் முன்னர் இறந்து போகிறார்கள். வறுமை நிலை அந்த அளவு கொடுமையாக இருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள்.

சமீபத்திய ஒரு அறிக்கை அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. அதாவது, கடந்த சில ஆண்டுகளில் நமது நாட்டில் உருவான வருவாயில் 70 சதம் ஒரு சதம் பணக்காரர்கள் கைகளுக்கே சென்றுள்ளது. அதாவது பணக்காரர்கள் பெரிய பணக்காரர்களாகவும், ஏழைகள் இன்னும் பெரிய ஏழைகளாகவும் மாறி வருகிறார்கள். இந்தியாவில் தனிமனித வருமானம் ரூ. 5 லட்சத்திற்கு மேல் என்று கணக்கு காட்டும் நபர்கள் 76 லட்சம் பேர். அதாவது ஆயிரம் இந்தியர்களில் 6 பேர் வசதி வாய்ப்புடன் வாழ்கிறார்கள். இந்த ஆறு பேர்களில் இரண்டு பேர்தான் உண்மையிலேயே பணக்காரர்கள், 4 பேர் அரசு ஊழியர்கள். அரசு ஊழியர்கள் அனைவரும் பணக்காரர்கள் அல்ல. அதாவது ஆயிரத்தில் இரண்டு பேர் தேசத்தின் சொத்துக்களைக் குவித்து வைத்துள்ளனர்.

நம்மைப் போன்றவறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் நிலைமை மிகவும் பாராட்டும் வகையிலும் இல்லை. படித்திருந்தாலும் வேலை இல்லை, வேலை இருந்தாலும் போதிய சம்பளம் இல்லை, விலைவாசியோ மிக அதிகம். பல குடும்பங்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல்தான் காலத்தை ஓட்டுகின்றனர். எனவே, நம்மில் பலருக்கும் தேவைகள் போதுமானதாகக் கிடைப்பதில்லை என்பது சரியெனத் தென்படுகிறது.

தேவையற்றவை :

இனி, நமக்கு தேவையற்றவை என்னென்ன கிடைக்கிறது என்பதையும் ஆராய்வோம். நம் நாட்டு மக்களுக்கு வெட்டிப்பேச்சு பேச வாய்ப்பு தாராளமாகக் கிடைக்கிறது, அதை கேட்கவும் ஆட்கள் கிடைக்கிறார்கள். நமது நாட்டில் இறைவழிபாடு மக்களுக்கு தடையின்றிக் கிடைக்கின்றன, அதற்கான இடங்களும் தெருவிற்கு தெரு இருக்கின்றன. சிலர் வீட்டின் மதில் சுவரில் கூட ஒரு வழிபாட்டு இடத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்து அனைத்து சேனல்களையும் எண்ணுங்கள். அதில் எத்தனை சேனல்கள் மதங்களைப் பற்றியது என்பதைப் பாருங்கள். இவை அனைத்தும் நமக்கு தேவைதானா என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். அறிவியல் போதிக்க ஒரு சேனலாவது உண்டா என்றும் சிந்தித்துப் பாருங்கள். அதோடு, நமக்கு தேவைக்கும் அதிகமான சினிமாக்கள் மற்றும் சீரியல்கள் கிடைக்கின்றன. அவற்றில் உள்ள நாட்டம் பலருக்கு வேறு எதிலும் இல்லை. இவைதான் மக்களின் பொழுதுபோக்கும் கூட. இதோடு சேர்த்து சினிமா பற்றிய செய்திகள், துணுக்குகள், சினிமா பாட்டு, அவற்றைப் பற்றிய ஆராய்ச்சி என்று தேவையற்றவை அதிகமாகவே கிடைக்கின்றன. இதற்குமேல் கிரிக்கெட் கிடைக்கிறது, அதுவும் தாராளமாக கிடைக்கிறது. இதில் பல இளைஞர்கள் பணத்தையும், நேரத்தையும் வீணடிக்கிறார்கள்.

அறிவியல் உண்மையில்லாத மருத்துவமுறைமலிந்து கிடக்கின்றன. எந்த மருத்துவ உண்மையும் தெரியாத, எந்த நவீன மருத்துவ அறிவை பல்கலைக்கழகங்களில் பயிலாத அல்லது அறிவியல் மருத்துவ பழக்கம் இல்லாதவர்கள் எல்லாம் மருத்துவர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு மக்களுக்கு உடல்நலம் பற்றிய கருத்துக்கள் சொல்வதும், அதற்கான மருந்துகள் விற்பனை செய்வதும் தாராளமாக நடந்து வருகிறது. இந்த ஆபத்தான மருத்துவமுறைகளை உலகின் வேறு எந்த நாகரீக மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் நம் நாட்டு மக்கள் இந்த மகான்களை பின்பற்றுகிறார்கள். படிக்காதவர்கள் மட்டும் அல்ல, படித்து பட்டம் பெற்றவர்கள் கூட இப்படிப்பட்ட போலி அறிவியல் மருத்துவர் களிடம் சிக்கிக் கொண்டு, அவற்றை பாமரர்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

இன்னொன்று மிகவும் ஆபத்தானது. புகையிலை, சிகரெட் மற்றும் மது, இவை தாராளமாகக் கிடைக்கின்றன. பலர் இதற்கு அடிமையாகிவிட்டனர்.

இப்படி இன்றைய நாகரீக மனிதர்களுக்கு தேவையற்றபல விஷயங்கள் நமது மக்களுக்கு தாராளமாக கிடைப்பதுடன் அவற்றில் மக்கள் ஈடுபட்டு, மகிழ்ச்சியாக இருப்பது போலவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவுதான் வறுமை, கல்வியின்மை, சிந்தனையின்மை, வேலை திறமையின்மை, மனிதர்கள் மீது வெறுப்பு போன்றவை.

புரட்சி, வன்முறை:

இனி உங்களது கேள்வியின் இரண்டாவது பாகத்திற்கு வருவோம். இப்படியாக தேவையானவை கிடைக்காமல் போனதாலும், தேவையற்றவை நிறைய கிடைப்பதாலும்தான் புரட்சி மற்றும் வன்முறைஏற்படுகிறது என்றஉங்கள் கருத்தில் உண்மை இல்லாமல் இல்லை. விரும்பத்தகாத சில புரட்சிகள் ஏற்பட்டன. ஆனால், விரும்பத்தக்கப் புரட்சிகள் பெரியதாக ஒன்றும் ஏற்படவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. பசுமை புரட்சி, கல்விப்புரட்சி, அறிவியல் புரட்சி, சிந்தனை புரட்சி, செயல்திறன் புரட்சி, மொழி வல்லமை புரட்சி போன்றவை ஏற்பட்டிருந்தால் நாம் அதைப் பாராட்டலாம்.

நமக்கு நல்ல ஒரு அரசியல் அமைப்பு ஏற்பட்டிருக்கிறது, பாராளுமன்றமக்களாட்சி முறை. அது சிறந்த முறைதான், அதில் குறையில்லை. நாம் தானே ஆட்சியார்களை தேர்ந்தெடுக்கிறோம். அதுவும் அவர்கள் சரியில்லை என்றால் நாமே அவர்களை மாற்றிவிடலாம். இதை விட சிறந்த முறைஉலகில் இல்லை. எனவே அரசியல் புரட்சி நம் நாட்டுக்குத் தேவையில்லை என்பது நம் பணிவான கருத்து. பொருளாதாரப்புரட்சி மிகவும் அவசியம், அதைச் செய்ய நாம் முற்பட வேண்டும். அதற்கு நமது செயல்திறனைப் பெருக்க வேண்டும்.

உண்மைக் காரணம் :

உங்களது கேள்வியின் ஒரு முக்கிய பகுதி ‘வன்முறை’. இந்த வன்முறைகள் இன்று ஜாதியின் பெயரிலும், மதத்தின் பெயரிலும், மாநிலங்களின் பெயரிலும், பாலினத்தின் பெயரிலும் நிகழ்கின்றன. இவை மாறவேண்டும், அப்படியே மறைய வேண்டும். வன்முறைகளுக்கு மூலக்காரணமான காரியங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் ஒரு காரணமாக இருக்கக் கூடும். எனவே ஒரு நாட்டு மக்களுக்கு அவசியம் தேவை என்பவற்றைமீண்டும் ஒருமுறைபட்டியல் இடுவதில் தவறில்லை.

(அ) உணவு, நீர், உடை, உறைவிடம், தூயகாற்று.

(ஆ) பொருத்தமான இணை.

(இ)  நல்ல தரமான கல்வி.

(ஈ) தாய்மொழி புலமை, அதோடு ஆங்கிலப் புலமை.

(உ) சிறந்த உயர்தர அறிவியல் மருத்துவம்.

(ஊ) உலக அறிவு, சிந்தனை திறன்.

(எ) நல்ல செயல்திறன்.

(ஏ) படிப்புக்கேற்றபிடித்த ஒரு வேலை.

(ஐ) போதுமான நிரந்தர வருமானம்.

(ஒ) நல்ல குடும்பம், நல்ல நண்பர்கள்.

(ஓ) உடல்நலம், மனநலம், சமூக நலம்.

(ஔ) மனமகிழ்ச்சி.

இவை நம் அனைவருக்கும் போதுமான அளவு கிடைக்கவில்லை. ஆனால், நமது சந்ததியினருக்கு கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் சமுதாயத்தில் தேவையற்றபுரட்சி ஏற்படவும், வன்முறைஏற்படவும் அவசியம் இருக்காது. இன்றைய சூழ்நிலையில், தேவையானது கிடைக்காமல் போனதால் வருத்தமும், கோபமும், போராட்டங்களும், வெறுப்பும் அவநம்பிக்கையுமம் மக்களிடம் இருப்பதைக் காண முடிகிறது. உங்களது கணிப்பு சரியாகத்தான் இருக்கிறது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2018

உயர்வுக்கு மூலதனம் தன்னம்பிக்கை…
வரலாற்றில் ஓளிவீசும் தைரியத் திலகங்கள்
மனிதர் புனிதர்
நவீன ஜீனோமிக்ஸ் (பகுதி – 11)
ஆயுளைக் கூட்டும் உணவுகள்
உள்ளத்திலே உள்ளது உலகம்
முயன்றேன் வென்றேன்
முயற்சியே முன்னேற்றம்
கரியடுப்பிலிருந்து கணினி வரை
இளைஞனால் முடியாதது உண்டா? மனிதனால் முடியாதது உண்டா?
தீக்காயம்
விடியலை நோக்கும் மண்ணின் விதைகள்
வாழ நினைத்தால் வாழலாம்- 14
வெற்றி உங்கள் கையில்
பாயும் ஆறு
பெண் இனத்தின் பெருமை பெண்மணிகள்
என்று மடியும் பெண்ணடிமை?
தன்னம்பிக்கை மேடை
மனதின் மலர்ச்சி! மாற்றத்தின் வளர்ச்சி!!
உள்ளத்தோடு உள்ளம்