Home » Articles » திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும்…

 
திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும்…


மனோகரன் பி.கே
Author:

திருவள்ளுவர் தினம் (சனவரி-16)

திருவள்ளுவர் பிறந்த தினம் வடமாநிலங்களில் உள்ள பள்ளிகளில் கொண்டாடப்படும் என இந்திய அரசின் மனித வளமேம்பாட்டு அமைச்சகம் சிலஆண்டுகளுக்கு முன் அறிவித்தது.  மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் குறிப்பிடுகையில், நம் நாட்டில் குறிப்பாக வட மாநிலங்களில் வால்மீகி, துளசிதாசர் ஆகியோரை மட்டும்தான் மொழிப் புலமை வாய்ந்தவர்களாக போற்றுகிறோம். அவர்கள் மட்டுமே இந்தியாவின் அடையாளம் அல்ல,  திருவள்ளுவர், கண்ணகி, சுப்பிரமணிய பாரதி போன்றோரைப் பற்றி குறிப்பிடாமல் இந்தியாவின் அடையாளத்தை நம்மால் முன்னிலைப்படுத்தமுடியாது.  எனவே, தமிழை கௌரவிக்கும் வகையிலும், திருக்குறளின் பெருமையை இந்தியர்களும் அறிந்துகொள்ளும் வகையிலும் திருவள்ளுவர் பிறந்தநாள் கொண்டாடப்பட வேண்டும்,  இதுபோன்ற நடவடிக்கைகள் தான் வட இந்தியாவுக்கும், தென் இந்தியாவுக்கும் இடையிலான பாலத்தை வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார்,  அந்த வகையில் தமிழகமே பெருமைகொள்ளும் திருவள்ளுவர் தினத்தைப் பற்றிய சில சிந்தனைகளை நினைவு கூர்வோம்.

உலகமகாகவி என்று போற்றப்படுபவர் திருவள்ளுவர்,   உலகப் பொதுமறை, என்று புகழப்படுவது அவர் படைத்த திருக்குறள்,  மத நூல் வரிசையில் இடம் பெறாத ஒருமறை நூல் திருக்குறள், தமிழையும், தமிழரையும் திருவள்ளுவம் அடையாளப்படுத்துகிறது.  வாழ்வியல் நெறிகளை வகுத்துக் காட்டுவது திருக்குறள்.

ஆட்சியாளர்களின் பண்பு நலன்களை பட்டியலிட்டுக் காட்டுவது திருக்குறள்,  தனிமனித ஒழுக்கத்தையும், அறச்சிந்தனைகளையும் அறிவுறுத்துவது திருக்குறள்,  இறைவன் மனிதனுக்குச் சொன்னது பகவத்கீதை,  மனிதன் இறைவனுக்குப் பாடியது திருவாசகம்,  மனிதன் மனிதனுக்கு வழங்கியது திருக்குறள்.

வள்ளுவரின் குறளை அவர் எழுதிய தமிழ் மொழியில் படிப்பதற்காகவே நான் தமிழ் கற்க விரும்புகிறேன் என்றார் மகாத்மா காந்தியடிகள்,  திருவள்ளுவரின் சிந்தனைகள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே பொருந்தக் கூடியது என்கிறார் ரவீந்திரநாத் தாகூர்.  வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்த வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்று மனநிறைவோடு பாடுகிறான் மகாகவிபாரதி.  தமிழ் சமுதாயத்திற்குள்ளோ இந்திய துணைக்கண்டத்தின் எல்லைக்குள்ளோ அடங்காது உலகு தழுவிய உயர்வுடையது வள்ளுவம் என்பது மகாகவியின் மதிப்பீடு,  எக்காலத்தவரும், எந்நாட்டவரும், எம்மொழியினரும், எம்மதத்தவரும் ஏற்றுப் போற்றும் பொதுமறையாய் விளங்கும் திருக்குறள் 90 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

பொதுமை நோக்கு: தனித்தனிப் பொருள்களுக்கு விதிகள் காண்பது ஆய்வின் முதல் நிலை.  எல்லாப் பொருள்களுக்கும் பொதுவான விதிகள் காண்பது ஆய்வின் முதிர்ந்த நிலை,   வள்ளுவர் பேசுவதுஅனைத்தும் பொதுப்பெயரைக் கொண்டதாகவே உள்ளது,  அவர் எந்த ஒரு மொழியின் பெயரையும், தமிழ் உட்பட, குறிப்பிடவில்லை.   நாடுகளைப் பற்றி பேசுகிறார், எந்தஒருநாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை, நதிவளம் பற்றிப் பேசுகிறார், ஆனால் எந்த ஒருநதியின் பெயரையும் குறிப்பிடவில்லை.  எண்ணி எண்ணி வியக்கத்தக்க சிறப்பு இது.

வள்ளுவர் கருவி என்ற சொல்லை பல இடங்களில் பயன்படுத்துகிறார்.  ஆனால் என்ன கருவி என்று எந்த இடத்திலும் கூறவில்லை.  கருவி என்று சொல்லி அத்துடன் விட்டுவிட்டார்.  கருவி என்ற இடத்தில் அன்றைய கலப்பையைக் கூறலாம்.  அல்லது இன்றைய கணிப்பொறியைக் கூறலாம்.  அல்லது நாளை வரக்கூடும் இன்னொன்றைக் கூறலாம். ஆக எக்காலத்துக்கும் ஏற்றவகையில் பொருள் கொள்ளும் வகையில் இடம் வைத்துவிட்டுப் போனதுதான் வள்ளுவரின் சிறப்பு.

கல்வி: எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்றைய காலகட்டத்தை கல்வி யுகம் என்கிறோம்.  17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பேகன் அறிவே ஆற்றல் என்றார்.  ஆனால் பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவே அனைத்தும் என்று கூறியிருக்கிறார் வள்ளுவர்.  அறிவைப் பற்றிக் கூற வந்த வள்ளுவர்  அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடையரேனும் இலர் என்கிறார். 

அறிவியல்: அறிவியல் அணுகுமுறைக்கு இலக்கணமே வகுக்கிறார் வள்ளுவர்,  எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு, எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு,  உண்மைகளைஅறிவதுதான் அறிவியல்,  திருக்குறளில் காண்கின்ற படிவாழ்வில் செம்மையுற நடந்தால் அறிவியலான் வெற்றி பெறுவான், அறிவியலும் வளர்ச்சிபெறும்,

திட்டமிடுதல் : திட்டமிடுதலைப் பற்றி வள்ளுவர் கூறுகையில் பின்னால் வரக்கூடிய இடர்களையும், முன் கூட்டியே ஆராய்ந்தறிந்து அவ்விடர்களுக்கான தீர்வுகளை முன்கூட்டியே தயாராக வைத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சி உள்ளாக்குகிற தோல்விகள் ஒருபோதும் கிடையாது என்கிறார்.  இந்தப் பணியை, இந்தக் கருவியால், வேர் முடிக்கிற வல்லமை உடையவரா என்று ஆராய்ந்து, அந்தப் பணியை அவரிடம் ஒப்படைந்தால் அப்பணி சிறப்பாக நடக்கும் என்பதை இதனை இதனால் இவன் முடிக்கும் என்றுஆய்ந்து அதனைஅவன்கண் விடல் என்கிறார்.

எல்லாப் பொருளும் இதன்பால் உள இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை என்று திருக்குறளின் பெருமையை பறை சாட்டினார் மதுரைத் தமிழ் நாகனார்,  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இளமைகாத்து, வழிகாட்டி, எக்காலத்துக்கும் பொருந்தும் கருத்துக் கருவூலமாக திகழ்கிறது திருக்குறள்.  வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற தன் குறளுக்கே இலக்கணமாய் வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகையின் ஒப்பற்ற திருக்குறளைù பருமிதத்தோடு நினைவு கூர்ந்து தமிழர் ஒவ்வொருவரும் உள்ளம் மகிழ்ந்து போற்ற வேண்டியநாள் இது.

உழவர் திருநாள் (சனவரி-17)

உலக மக்களை வாழ்வித்து, காப்பது உழவர்களே,  தேரைப் பார்த்து மகிழ்பவர்கள், அந்தத் தேருக்கு ஆதாரமானது அச்சாணிதான் என்பதை அறியமாட்டார்கள்.  அது போல மக்கள் சமுதாயத்தை வாழவைப்பவர்கள் உழவர்கள்,  அவர்களுடைய உழைப்பு இல்லாவிட்டால் உலகமக்களுக்கு உணவு கிடையாது.  உழுது பயிரிட்டு விளைச்சலை உண்டாக்கக் கூடிய உழவர்கள்தான் உலகமக்களின் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றனர். 

உழவர்களே உலகுக்கு அச்சாணி போன்றவர் என்று கூறுகிறது இந்தக் குறள்.  உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது எழுவாரையும் எல்லாம் பொறுத்தது,  உழவுத் தொழில் நின்றுவிட்டால் உலகில் எந்தத் தொழிலும் நடக்காது என்று தீர்க்கதரிசனமாய் கூறிய உழவியல் விஞ்ஞானி திருவள்ளுவர். 

மக்கள் தொகைப் பெருக்கத்தால் உலகில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும் என்ற மால்தஸின் கூற்றை பசுமைப் புரட்சி பொய்யாக்கிவிட்டது.  என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில், என்ற திரைப்பாடல் வரிகளுக்கு ஏற்ப உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது இந்தியா.

உணவு வாழ்வின் ஆதாரம்,  துரித உணவுக் கலாச்சாரம் இளைய தலை முறையை வெகுவாக பாதித்துவருகிறது. பசிக்குச் சாப்பிடுவது என்பது போய் ருசிக்குச் சாப்பிடுவது என்றகாலம் வந்துவிட்டது.  பாதுகாப்பான முறையில் வீட்டில் சமைத்த உணவைத்தான் சாப்பிட வேண்டும் என்ற நிலை மாறி, இன்று பலரும் துரித உணவு வகைகள், பதப்படுத்தப்பட்ட, டின்களில் மற்றும் பாலிதீன் பைகளில் அடைக்கப்பட்ட உணவுகள் என்ற மாயவலையில் சிக்கித் தவிக்கின்றனர்.

புதியஉணவுக் கலாச்சாரத்தால் பலவகை தானியங்கள் இப்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.  தினை, சாமை, கம்பு ஆகியவற்றை இளம் தலைமுறையினர் பார்த்திருப்பார்களா என்பது கூட சந்தேகமே.  கேழ்வரகுக் கூழும், கொள்ளு-அரிசிக் கஞ்சியும் போன இடம் தெரியவில்லை.  நீர் மோரும், நீராகாமும், பதநீரும் மறைந்து வருகின்றன.  அவற்றின் இடத்தை வண்ண வண்ண நிறத்தில் குவியும் வகைவகையான குளிர்பானங்கள் பிடித்துக் கொண்டன.  உணவானது உடலை வளர்த்துஉ யிரைக்  காப்பதற்கு பதிலாக உடலைக் கெடுத்து உயிரைக் குடிப்பதாக அமைந்துவிடக்கூடாது.

உழவு செய்து அதன் பயனால் கிடைப்பதை உண்டு வாழ்கின்றவர் உரிமையோடு வாழ்கின்றவர்,  மற்றதொழில் செய்பவர் அனைவரும் அவர்பின் செல்பவர்கள் என்பதை உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் என்கிறது குறள்.  உழுபவர்களின் உழைப்பில் விளைந்தவைகளை பெற்று வாணிகம் செய்கின்றவர்கள் மாடமாளிகைகளில் வாழ்கிறார்கள்.  ஆனால் உழைக்கின்ற உழவனோ இன்னும் ஓட்டைக் குடிசைக்குள் தான் வாழ்கிறான் என்பது வேதனை தரும் உண்மை.

இற்கையின் உற்பத்தி நிலை வேறு,  மனிதன் கண்டுபிடித்த விஞ்ஞான உற்பத்திகளின் நிலை வேறு.  எடுத்துக்காட்டாக – பஞ்சு ஒரு மூலப்பொருள்.  அதை நூற்றால் நூலாகும், நூலை நெய்தால் ஆடையாகும்,  ஆடையைக் கிழித்தால் கந்தலாகும். ஆனால் பஞ்சு மறுபடியும் கிடைக்காது.  ஒரு மூலப் பொருள் பல்வேறு உற்பத்திநிலைகளைக் கடந்து, தயாரிக்கப்பட்ட பொருளாகும் போது அதன் துணைப் பொருளாக வேறு மூலப்பொருள் மறுபடி கிடைக்காது.  இதுதான் மனித உற்பத்தியின் நிலை.

இற்கையின் உற்பத்தியைப் பாருங்கள்.  ஒரு மாம்பழத்தைத் தின்று, மாங்கொட்டையை வீசி எறிகிறோம்.  அது மண்ணில் புதைந்து முளைவிட்டு, செடியாகி, மரமாகி, பூவாகி, பிஞ்சாகி, காயாகி, கனியான பின்பும் அதன் உள்ளே ஒருமாங்கொட்டை – மூலப் பொருள் – இருக்கும்.  உற்பத்தியான ஒரு பொருளின் ஒரு பகுதியாகவே, அதன் மறு உற்பத்திக்கு உரிய மூலப் பொருளும் கிடைப்பது இயற்கையின் உற்பத்தி நிலை.

விஞ்ஞானத்தின் உயர்வை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.  அது சாதித்த அற்புதங்களை யாரும் மறுக்க முடியாது.  இயற்கை எனும் மாமன்னரின் நம்பிக்கைக்கு உரிய ஆற்றல் மிக்க தளபதியாக வேண்டுமானால் விஞ்ஞானம் இருக்கலாம். ஆனால் எவ்வளவு வலிமை வாய்ந்த தளபதியாக இருந்தாலும் தளபதி சக்கரவர்த்தி ஆகிவிட முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நாட்டின் உயிர்நாடியான உழவுத் தொழிலில் நுழைந்திருக்கும் உலகமயமும், தாராளமயமும் நமது உழவர்களை மீளாத்துயரில் ஆழ்த்தியிருக்கின்றன.  வேருக்குநீர் இல்லாவிடின் செடி செத்துவிடும்.  அச்சாணி முறிந்து விட்டால் தேர் ஓடாது.  வேருக்குநீர் போலவும், தேருக்கு அச்சாணி போலவும் உள்ள உழவர்களைப் பேணிக் காக்க வேண்டும்,  உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற பாரதியின் வரிகளுக்கு இணங்க உழைப்போரை, உழுவோரை இந்நாளில் போற்றுவோம். 

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2018

மனமே நலம்! மாற்றமே வளம்!!
ஆறும் நீரும்
ஒன்பது வயதிற்குள் முதல் நூல் வெளியிட்ட முதல் சிறுவன்
இளம் பருவ நிலையில் ஏற்படும் மனநிலை மாற்றம்
உள்ளத்தோடு உள்ளம்
“வாழ நினைத்தால் வாழலாம்” – 12
புதிய வருடமே புகழைச் சேர்…
தன்னம்பிக்கை மேடை
நம்பிக்கைக்கு… உயிர் கொடுப்போம்!
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
நவீனஜீனோமிக்ஸ் (பகுதி -9)
திருவள்ளுவர் தினமும் உழவர் திருநாளும்…
தமிழர் வீரத்தின் அடையாளம் கபாடி…
மேம்படட்டும் மனிதவளம்
அறிவுப்பூர்வமான வீரமே அவசியம் தேவை…!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
கோபப்படுவதில் நீங்கள் எந்த வகை?
வெற்றி உங்கள் கையில் – 49
ஒத்திப் போடும் குணம் நன்மை தருமா? தீமை தருமா?
துபாய் வாங்க!