Home » Articles » டிசம்பர் மாத உலகதினங்கள்

 
டிசம்பர் மாத உலகதினங்கள்


மனோகரன் பி.கே
Author:

1.  உலக எய்ட்ஸ் தினம் (World AIDS Day) டிசம்பர் – 1

‘உலக எய்ட்ஸ் தினம்’ 1988 முதல் ஆண்டுதோறும் டிசம்பர் 1ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது,  எங்காவது, யாருக்காவது வரும் நமக்கு வராது என்ற நிலை மாறி எய்ட்ஸ் எங்கும் வரலாம், எவருக்கும் வரலாம் என்கிற நிலை ஏற்பட்டு விட்டது,  சாதி, மதம், மொழி பேதங்களைக் கடந்து, நாடு, கண்டம் ஆகிய எல்லைகளைத் தாண்டி ஒட்டு மொத்த உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் பேராபத்து எய்ட்ஸ்,  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அதன் காரணமாகப் பல நோய்களுக்கு ஆளாவதற்கு பெயர்தான் எய்ட்ஸ், எய்ட்ஸ் என்பது‘Acquired Immune Deficiency Syndrome’ என்பதன் சுருக்கம், எய்ட்ஸ் மேலும் பரவாது தடுக்க, அதன் பாதிப்பைக் குறைக்க, பாதிக்கப்பட்டோரிடம் பரிவு காட்ட மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் உலகளாவிய இந்த தினத்தின் நோக்கம்,   கிடைத்தற்கரிய மனிதப்பிறவி கிடைத்தும் வாழும் வகை தெரியாமல் வாழ்க்கையைத் தொலைத்தோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே செல்கிறது,  ‘ஓளி படைத்த கண்ணினாய் வா வா வா’ என்று மகாகவி பாரதி அழைத்த இளைஞர்கள் பலர் ஓளி இழந்த கண்களோடு, வலுவிழந்த உடலோடு பொன்னான வாழ்வை மண்ணாக்கிக்  கொண்டிருக்கிறார்கள்.  1981 வரை அறியப்படாத ஒன்றாக இருந்த எய்ட்ஸ் இன்று மனித குலத்துக்கே ஒரு சவாலாக விசுவரூபமெடுத்துள்ளது.  இந்த நிலை தொடருமேயானால் ‘மனிதன் என்றொரு இனம் ஒரு காலத்தில் இருந்தது’என்று வரலாறு சொல்லுமளவுக்கு மானிட வர்க்கம் வேரற்றுப் போகும்.

எச்.ஐ.வி, பாதிப்புக்குள்ளான மக்களை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா.  35% எய்ட்ஸ் நோயாளிகள் 15-24 வயதுக்கு உட்பட்டவர்கள்,  86% பாதுகாப்பற்ற உடலுறவின் காரணமாகவும், 4% எச்.ஐ.வி, உள்ள கர்ப்பிணிப் பெண்ணிடமிருந்தும், 2% சுத்தம் செய்யப்படாத ஊசிகளை பயன்படுத்துவதாலும், 2% பரிசோதிக்கப்படாத இரத்தம் மூலமாகவும் மீதி 6% பிற காரணங்களாலும் பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி.கிருமி தாக்கப்பட்ட ஒருவர் உடனடியாக எய்ட்ஸ் நோயாளியாகி விடுவதில்லை. அக்கிருமியின் காரணமாகப் பலவித நோய்கள் உருவாகிக் கட்டுப்படுத்த இயலாத நிலைக்கு செல்லும் போதுதான் அவர் எய்ட்ஸ் நோயாளி என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார். இக்கிருமியால் தாக்கப்பட்ட ஒருவருடன் பயணம் செய்யலாம், அவர் சாப்பிட்ட தட்டில் சாப்பிடலாம், கை குலுக்கலாம்,  ஆபத்து ஏதும் இல்லை,  ஆனால் அத்தகையோருடன் உடலுறவு, ஓரினச் சேர்க்கை, ஊசி பரிமாறிக் கொள்ளுதல், அவர்களது ரத்தத்தைச் செலுத்திக் கொள்ளுதல் ஆகியவை கூடாது,  அவை ஆபத்தானவை,  சுருங்கச் சொன்னால் ரத்தம், விந்து, பெண் பிறப்புறுப்புத் திரவங்கள், உமிழ்நீர் போன்ற உடல் திரவங்கள் வாயிலாக எச்.ஐ.வி.கிருமி பரவுகிறது.

எச்.ஐ.வி.கிருமியை ஒரு கூலிப்படைக்கு ஒப்பிடலாம்.  ஓர் அரண்மனைக்குள் பணிபுரியும் காவலர்களை கூலிப்படையினர் திடீரென்று நுழைந்து காவலர்களை வீழ்த்தி விட்டால் அதன் பிறகு யார் வேண்டுமானாலும் அரண்மனைக்குள் எளிதில் புகுந்து விடலாம். அது போல எச்.ஐ.வி.கிருமிகள் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் குறிப்பிட்ட வகை இரத்த அணுக்களை அழித்து விடுகின்றன,  இதனால் காச நோய், காய்ச்சல், ஜலதோசம், வாந்தி, பேதி போன்ற பலவித நோய்கள் அவர்களைச் சென்றடைகின்றன.  எச்.ஐ.வி.யின் இறுதிக் கட்டம் எய்ட்ஸ்,  சத்தான ஆகாரமும், மகிழ்ச்சியான சூழலும், குடும்பத்தாரின் அரவணைப்பும் கிடைத்தால் மட்டுமே மருந்துகளின் உதவியுடன் தற்காலிகமாக அதிலிருந்து விடுபட்டு வாழ முடியும்.

எச்.ஐ.வி.உள்ளோரின் உணர்வுகளை மதிக்க வேண்டும், அவர்தம் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்,   அவர்களது பணம், சொத்து, நகை நட்டு போன்ற உடமைகளை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் குடும்பத்தினர் அவர்களை ஏற்றுக் கொள்ள அஞ்சுவதுதான் கொடுமையிலும் கொடுமை.  குறிப்பாகப் பெண்கள் இத்தகைய கொடுமைக்கு ஆளாவதால் ஐ.நா.எய்ட்ஸ் எதிர்ப்பு அமைப்பு 2005ம் ஆண்டை ‘பெண் எச்.ஐ.வி, எய்ட்ஸ் நோயாளிகள்’ என்ற தலைப்பில் உலக எய்ட்ஸ் தினத்தை அனுசரித்தது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியைச் சீரழித்து விடக்கூடியது எய்ட்ஸ்,  தென்னாப்பரிக்க நாடுகள் சிலவற்றில் பஞ்சம் ஏற்பட்டதற்குக் காரணம் எய்ட்ஸ் எனக் கூறப்படுகிறது.  காரணம் எச்.ஐ.வி.கிருமி இளைஞர்களைக் குறி வைத்துத் தாக்குவதால் விவசாயத்தில் ஈடுபட இளைஞர்கள் இளைஞர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு மக்களை விழுங்கி விட்டது எய்ட்ஸ்,  வைத்திருந்த சேமிப்புகள் மருந்து மாத்திரைகளுக்குச் செலவானதே ஒழிய வளர்ச்சிக்கு மூலதனமாக மாறவில்லை.

எய்ட்ஸ்சால் பாதிக்கப்பட்டோரைத் தொடுவதாலோ, சேர்ந்து பணிபுரிவதாலோ, உணவு, உடை மற்றும் கழிப்பறையைப் பயன்படுத்துவதாலோ பரவாது,  திருமணத்திற்கு முன் உடலுறவைத் தவிர்த்தல், திருமணத்திற்குப் பின் தாம்பத்தியத்தில் ஒழுக்கம், பரிசோதிக்கப்பட்ட இரத்தம், ஊசி, பிளேடுகளை பகிர்ந்து கொள்வதைத் தவிர்த்தல் ஆகியவற்றின் மூலம் இதனைத் தவிர்க்கலாம்,

எய்ட்ஸ் பற்றிய அச்சம் இருந்தால் தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்,  அரைகுறை வைத்தியர், செக்ஸ் வைத்தியர் போன்றோரிடம் செல்லக் கூடாது.  போலி மருத்துவர்களின் விளம்பரங்களில் ஏமாறாமல் அரசு நடத்தும் ஆலோசனை மையங்களை அணுக வேண்டும்.  எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரைத் தனிமைப்படுத்தவோ, ஒதுக்கி வைக்கவோ அவசியமில்லை.  அவர்களால் மற்றவர்களுக்கு ஆபத்து இல்லை,  அவர்களை மனிதத் தன்மையுடனும், அன்புடனும் அணுகி அவர்களுக்கு உதவ வேண்டும்,  அவர்களைத் தொடுவதால் அன்பை அர்த்தப்படுத்தலாம், பழகுவதால் பண்பை ஆழப்படுத்தலாம். இன்றைய நிலையில் இளைஞர்களை மிக அதிக அளவில் கொண்டிருக்கும் நாடு இந்தியா.  இவர்கள் வளர்ந்து வரும்போது எச்.ஐ.வி. எய்ட்ஸ் தாக்கத்திற்கு உள்ளாகி பேராபத்துகளில் சிக்கிக் கொள்ள நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன.  இதிலிருந்து இந்த இளைஞர்களைக் காப்பாற்ற அவர்களைச் சுற்றி பெரிய தடுப்புச் சுவர் ஒன்றை அமைக்க முடியாது என்றாலும் ஏற்படக் கூடும் பேராபத்துகளை விளக்கிச் சொல்லி, சரியான தகவல்களை எடுத்துக் கூறி, நல்ல பழக்க வழக்கங்களை வகுத்துக் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பான ஒரு கவசத்தை அளிக்க இயலும்.

2005-06ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் நிதி ஆதரவில் ‘ரெட் ரிப்பன் கிளப்’ தொடங்கப்பட்டு உள்ளது, எய்ட்ஸ் பிடியிலிருந்து மக்களைக் காப்பாற்ற ‘கல்வி மற்றும் விழிப்புணர்வு‘ தான் சரியான சமூக மருந்து,   எய்ட்ஸ் பிடியில் எளிதில் சிக்கிக் கொள்பவர்கள் இளைஞர்கள்,  இளைய பாரதம் இதற்குப் பலியாகி விடாமல் பாதுகாக்க அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய மாநில அரசுகளும், அரசு சாரா அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு அமைப்புகளும் பன்முனைப் பிரச்சார இயக்கங்களை மேற்கொண்டு வருகிறது. விழாக்கள், நாடகங்கள், நாட்டியங்கள், தெருக்கூத்துகள் ஆகியவற்றில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு அம்சங்கள் இடம் பெறச் செய்ய வேண்டும்.  நாட்டு நலப்பணித்திட்டம், ரெட் ரிப்பன் கிளப், செஞ்சிலுவை சங்கம், நேரு யுவ கேந்திரா போன்ற இளைஞர் அமைப்புகள் அரசு இயக்கங்களுடன் இணைந்து மக்களிடையே எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் (International Day for Disabled Persons) டிசம்பர் – 3

உடல் ஊனமுற்றோர் தொடர்புடைய பிரச்சனைகள் மற்றும் அதன் போக்கு ஆகியவற்றை உலகம் அறிந்து கொள்ளச் செய்து ஒத்துழைப்பைப் பெறுவதும், ஊனமுற்றோரின் உரிமைகளை எடுத்துரைப்பதுமே ஊனமுற்றோர் தினத்தின் முக்கிய நோக்கங்களாகும்.  1992 ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக் கொண்டபடி டிசம்பர் 3ம் நாள் சர்வதேச ஊனமுற்றோர் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 1983 முதல் 1992 வரை ஊனமுற்றோருக்கான பத்தாண்டு என ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டது.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2017

எண்ணியதை செய்யுங்கள்
வாழ நினைத்தால் வாழலாம் -11
நிர்வாகம் ஒரு நடைமுறை சார்ந்த அறிவியல்
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
மற்றவர்களைத் தாழ்வாக நினைக்காதீர்கள்
மனமாற்றமும், மகத்தான வெற்றியும்
தீவிர மூச்சுப்பாதை சுவாச மண்டல நோய்கள்
முந்தின கை ஜெயிக்கும்
உங்கள் ஆசைகள் நியாயமானதா? முறையற்றதா?
எண்ணத்தின் மேன்மை கொள்…
தோல்வியைத் தொடர விடலாமா?
டிசம்பர் மாத உலகதினங்கள்
மணவயல்
வெற்றி உங்கள் கையில்
துபாய்க்கு வாங்க!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
மாற்றமே நம் முன்னேற்றம்…
தன்னம்பிக்கை மேடை
நினைத்ததை முடித்திடு… நிலவிலும் கால் பதித்திடு…
உள்ளத்தோடு உள்ளம்