Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி?

உணவு உண்ணவுடன் வெற்றிலைப் பாக்கு போட்ட காலம் போய் இன்று மாத்திரை சாப்பிடும் காலம் வந்து விட்டது. இந்த மாற்றத்தை மாற்ற என்ன மாறுதல்கள் செய்ய வேண்டும்?

தனபாக்கியம்,விழுப்புரம்

உணவு உண்டவுடன் வெற்றிலைப் போட்டார்கள் நமது முன்னோர்கள், ஆனால் நாம் மாத்திரை உண்கிறோம் என்று உங்களது ஆதங்கத்தைக் வெளிப்படுத்தி உடல்நலம் கெட்டுப்போனதை உறுதியாகக் கூறிவிட்டீர்கள். எனவே நமக்கு இன்னும் உடல்நலக்குறைவு ஏற்படாமல் இருக்க என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் உங்களது கேள்வி : இந்த கேள்விக்கான பதில் காண்போம்.

மாத்திரை: மாத்திரை என்றால் என்ன? உணவு உண்டபின் ஏன் ‘மாத்திரை’ சாப்பிடுகிறோம்? நோய்கள் வந்துவிட்டதால் அவற்றைக் குணப்படுத்த அல்லது ஒரு நோய் வந்துவிடாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக நாம் மருந்து சாப்பிடுகிறோம். இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனவே மாத்திரை மீது தவறு இல்லை. மாத்திரை மோசமானதும் இல்லை, மருந்துகள் மோசமாவை அல்ல.

பென்சிலின், ஆஸ்பரின், மார்பின், இன்சுலின், தடுப்பூசி போன்றவை மருத்துவத்திலும், மனித நலத்திலும் மறுமலர்ச்சி ஏற்படுத்திய மருந்துகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இதில் 1928ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பென்சிலின் உன்னத கண்டுபிடிப்பாகும். அலெக்ஸாண்டர் பிளெம்மிங் என்ற ஸ்காட்லாந்து அறிவியல் அறிஞர் பென்சிலின் என்ற பூஞ்சான் பல கொடிய நோய்களை மனிதனுக்கு ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும் சக்தி படைத்தது என்பதை ஆய்வுக்கூடத்தில் கண்டறிந்தார். இது மருந்துகளில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. நிமோன்யா, பாலியல் நோய்கள் போன்ற கொடிய நோய்களுக்கு ஒரே ஒரு ஊசி மூலம் தீர்வு கண்டது இந்தப் பென்சிலின். மாத்திரைகளால் பலகோடி மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டு வருகின்றன.

முதலில் நோய்கள் ஏன் ஏற்படுகின்றன என்று ஆராய வேண்டும்:

(அ)இயற்கை: சிலருக்கு பிறவியிலேயே நோய்கள் இருக்கும், அது மரபணு சம்பந்தப்பட்டது. பெற்றோருக்கு இருந்தால் மட்டுமே பிள்ளைகளுக்கு அந்த நோய்கள் வரும் என்பது இல்லை. சில தலைமுறைக்கு முன்னால் நோய் இருந்தாலும் அது பிள்ளைக்கு வந்துவிடும். இது அறிவியல் உண்மை. சர்க்கரை நோய், இருதய நோய், தோல் வெள்ளை நோய் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு. பிறந்த குழந்தைகளுக்கும் கூட சர்க்கரை நோய் மற்றும் இருதய நோய் இருக்கிறது.

(ஆ)செயற்கை: சிலர் அவர்களாகவே நோய்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அளவுக்கதிகமாக உணவு உண்பவர்களுக்கு உடல் பருமன் ஆகிவிடுகிறது. அதன்மூலம் அனைத்து நோய்களையும் அவர்களே வரவைத்துக் கொள்கிறார்கள். சிலர் புகைப்பழக்கம், குடிப்பழக்கம், போதைப்பொருள் பழக்கம் ஏற்படுத்தி பலவித நோய்களையும் சம்பாதிக்கிறார்கள். சிலர் அறிவியல் மருத்துவம் தெரியாத நாட்டு வைத்தியரிடம் சென்று விக்ஷத்தன்மை வாய்ந்த மருந்துகளைச் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.

(இ)சுகாதாரம்: சுகாதாரக் கேட்டால் பல நோய்கள் வந்துவிடுகின்றன. காலரா, டைபாய்டு, புழுக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வயிற்றில் புழு, தோல் வியாதிகள் நுண்கிருமிகளால் வருகிறது. அதாவது அழுக்கில் இருக்கும் அல்லது அசுத்தமான உணவு, நீர், காற்று ஆகியவற்றில் இருக்கும் வைரஸ் பாக்டீரியா, புரோட்டோசோவா, பூஞ்சான், புழுக்கள் போன்ற நுண்ணூயிரிகளால் ஏற்படுகின்றன. நம் நாட்டு மக்களில் படித்தவர்களுக்குக் கூட போதுமான அறிவியல் அறிவு இல்லாததால் அவர்களுக்கு தூய்மையின் முக்கியத்துவம் தெரியாமல் இந்த நோய்களை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.

(ஈ) சத்தான உணவு: உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம். என்னதான் பெரிய உடல் என்றாலும், என்ன பெரிய செல்வந்தர் என்றாலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால், நோய் உடனே பற்றிக் கொள்ளும். நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற, சத்தான உணவு உண்ண வேண்டும். அதில் வைட்டமின்கள், புரதம் போன்றவை அவசியம் வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரை, பருப்பு வகைகள், விதை வகைகள் (nuts) உணவில் அவசியம் இருத்தல் வேண்டும். இல்லை என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்காது.

(உ)உடற்பயிற்சி: நோய் வர ஒரு முக்கிய காரணம் உடற்பயிற்சி இல்லாமல் போனது. நமது முன்னோர்கள் விவசாயம் செய்தார்கள், நடந்தார்கள், சைக்கிள் ஓட்டினார்கள் எனவே உடலுழைப்பு இருந்தது. அதோடு அதிகப்படியான உணவும் கிடைக்கவில்லை. இன்று உணவு தாராளமாக கிடைக்கும் நிலையில் நாம் மனிதனின் தேவைக்கு மீறி அதிகம் சாப்பிடுகிறோம், ஆனால் உடலுழைப்பு சுத்தமாக இல்லை. நமது உடல், வேலை செய்து பராமரிக்கும் நிலையில்தான் உருவாகி இருக்கிறது. மனித இனம் யாராலும் உருவாக்கப்படவில்லை, அது ஆப்பிரிக்க வனங்கள் உருவாகி இருக்கிறது. அதுவும் சுமார் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உருவாகி இருக்கிறது. எனவே உடற்பயிற்சி செய்தால்தான் அந்த அரிய உடல் சரியாக இயங்கும்.

(ஊ)மனமகிழ்ச்சி: பல தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக மக்களிடம் மகிழ்ச்சி இல்லை! ஆனால் மனமகிழ்ச்சி இருந்தால்தான் உணவு உண்போம், உடற்பயிற்சி செய்வோம், ஆர்வம் காட்டுவோம், எல்லாவற்றுக்கும் மேலாக மன உழைச்சலைத் தவிர்ப்போம். மன உழைச்சல் இருந்தால் அதுவே நமது நோய் தடுப்பு சக்தியைக் குறைத்துவிடும். பல நோய்கள் வர மனத்தளர்ச்சி (stress) காரணமாக இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் அடித்துக் கூறுகிறார்கள். குடும்பப் பிரச்சனைகள், சச்சரவுகள், வருமானம் இல்லாத நிலை, திருமணம், பிரச்சனை, சடங்குகள், மூடநம்பிக்கை, பொருள் இழப்பு, நீதிமன்ற வழக்கு, வாகன விபத்து, ஒலிப்பெருக்கிகள், மாசுபட்ட காற்று போன்றவை நமது சமுதாயத்தில் மக்களின் மனமகிழ்ச்சியை சிதைத்து மன உழைச்சலைப் பெருக்கி பல நோய்கள் வரவும் காரணமாகிவிட்டன. இவற்றையும் மீறி மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள், சிரிப்பு சிறந்த மருந்து.

இந்த இதழை மேலும்


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2017

எண்ணியதை செய்யுங்கள்
வாழ நினைத்தால் வாழலாம் -11
நிர்வாகம் ஒரு நடைமுறை சார்ந்த அறிவியல்
சத்துச் சேமிப்புக் கூடங்கள்
மற்றவர்களைத் தாழ்வாக நினைக்காதீர்கள்
மனமாற்றமும், மகத்தான வெற்றியும்
தீவிர மூச்சுப்பாதை சுவாச மண்டல நோய்கள்
முந்தின கை ஜெயிக்கும்
உங்கள் ஆசைகள் நியாயமானதா? முறையற்றதா?
எண்ணத்தின் மேன்மை கொள்…
தோல்வியைத் தொடர விடலாமா?
டிசம்பர் மாத உலகதினங்கள்
மணவயல்
வெற்றி உங்கள் கையில்
துபாய்க்கு வாங்க!
சிறுகதைகளின் சிறப்பு அம்சங்கள்
மாற்றமே நம் முன்னேற்றம்…
தன்னம்பிக்கை மேடை
நினைத்ததை முடித்திடு… நிலவிலும் கால் பதித்திடு…
உள்ளத்தோடு உள்ளம்