Home » Articles » தன்னம்பிக்கை மேடை

 
தன்னம்பிக்கை மேடை


சைலேந்திர பாபு செ
Author:

நேயர் கேள்வி?

எங்கும் அறிவியல் யுகம், எதிலும் கணினி மையம் இது வளர்ச்சிப்பாதை தானா? இந்த வளர்ச்சி சாதாரண மக்களுக்கும் பயனா? பாதகமா?

கோவை தென்னரசு,

எழுத்தாளர் மற்றும் பேச்சாளர்,

கோயமுத்தூர்.

எங்கும் அறிவியல் யுகம், எதிலும் கணினி மயம். இது வளர்ச்சிப்பாதைதானா? என்பது உங்களது முதல் கேள்வி. இந்தக் கேள்வியை முதலில் ஆராய்வோம்…

அறிவியல் முன்னேற்றம்:

வீட்டில் மின்சார விளக்கு, தொலைக்காட்சி, குளிரூட்டும் சாதனம் என்று எல்லாம் அறிவியல் மயம். தோட்டத்தில் மின்சார மோட்டர், வீரிய நெல் பயிர், ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து, டிராக்டர் என விவசாய அறவியல் மயம். கணினி இருப்பதால்  வங்கிக்குப் போகாமலே பணப்பரிமாற்றம் செய்ய முடிகிறது, கடைக்குப் போகாமலே பொருள் வாங்க முடிகிறது. அறிவியல் யுகம் என்று நீங்கள் இதைத்தான் குறிப்பிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

அறிவியல் வளர்ந்ததால் ஏற்பட்ட நன்மைகள் இவை மட்டும் அல்ல. அம்மை நோய், காலரா நோய், இளம்பிள்ளை வாதம் போன்ற கொடிய நோய்கள் வருவதற்கு முன்னதாகவே தடுப்பூசி முறையில் தடுத்து விட்டது விஞ்ஞானம். ஆங்கிலேயர்கள் வரும் முன்னர் நிலைமை மோசமாக இருந்திருக்கிறது. 1901 ஆம் ஆண்டு இந்தியர்களின் சராசரி வயது 21 மட்டும் தான். 1950 ஆம் ஆண்டில் கூட சராசரி இந்தியர்களின் ஆயுட்காலம் வெறும் 31 ஆண்டுகள். ஆங்கில மருந்துகள் வந்த பின்னர்தான் உடல் நலம் மேம்பட்டு, இன்று 67 ஆண்டுகள் சராசரி வாழ்கிறோம். இன்று நீங்களும் நானும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்றால் அதற்கு, காரணம், இந்த நவீன மருத்துவ முறையின்றி வேறு இல்லை. ஆங்கில மருத்துவ முறை மட்டும்தான் ஆதாரங்களின் அடிப்படையிலும், ஆராய்ச்சியின் அடிப்படையிலுமான மருத்துவமுறை என்பதை நினைவில் கொள்க. ஆக, அறிவியல் நம்மை வாழ விட்டிருக்கிறது; அதோடு வாழ வைக்கிறது எனலாம்.

வளர்ச்சிபாதை தானா?

அறிவியல் மனித வாழ்வின் அனைத்து துறையிலும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மோட்டர், இரயில் மற்றும் விமான பயணத்தால் வந்த வளர்ச்சி அபரிவிதமானது. இரயிலும், விமானமும் கைப்பேசியும் உலகில் வாழும் மக்கள் ஒருவரையொருவர் அறிந்துகொள்ள வழிவகை செய்தன. இன்று கூட அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இளைஞன் அணியும் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் “T” சர்ட் யை திருப்பூர் இளைஞன் அடுத்த நாளே அணிந்து விடுகிறான். ஆக, உலக கலாச்சாரங்கள் சங்கமித்து புது கலாச்சாரம் ஒன்று உருவாகிவிட்டது. இது உலக ஒற்றுமையின் அடையாளம் அல்லவா?

மக்களுக்கு தெரியாத பல உண்மைகளை அறிவியல் தெரியப்படுத்தியது. பூமி உருண்டை என்றும், அது நான்கில் மூன்று பகுதி கடல் பகுதி என்றும், சூரியனைச் சுற்றிவருகிறது என்றும், அதோடு சேர்ந்து 8 கோள்கள் சூரியனைச் சுற்றுகின்றன என்றும், சூரியன் கூட ஒரு நட்சத்திரம்தான் என்றும், அப்படி 10,000 கோடி நட்சத்திரங்கள் சூரியனுடன் சேர்ந்து ஒரு நட்சத்திர கூட்டமாக உள்ளது என்றும், அப்படி 10,000 கோடி நட்சத்திர கூட்டங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் தென்படுகின்றன என்று கண்டறிந்தது அறிவியல். இவை எல்லாவற்றையும் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், ஜியாரிதினோ புருணய், கெப்ளர், கலிலியோ போன்ற உன்னத அறிஞர்கள் ஆராய்ச்சிகள் மூலம் கண்டு பிடித்தனர். இதன் மூலம் முந்தய மனிதர்கள் சொன்ன கதைகள் அனைத்துமே கற்பனை என்பதும் புரிந்து விட்டது. சூரியன், சந்திரன், வியாழன், புதன் போன்றவை மனிதர்களோ, தேவர்களோ அல்ல, அவை 460 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவை என்பதையும் அறிஞர்கள் கண்டுபிடித்தனர். அறிவியல் மனித சமுதாயத்தின் கண்களைத் திறந்தது. சிலரது கண்கள் இன்னும் திறக்கவில்லை என்பது வேறு விஷயம்.

விஞ்ஞானம் நம்மை இணைத்தது:

உயிரியல் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இன்னும் மகத்தானவை. அனைத்து உயிரினங்களுக்கும் உறவு உண்டு என்றும், நாம் அனைவருக்கும் மூதாதயர் ஒன்றே என்றும், மனிதக் குரங்கிலிருந்து( சாதாரண குரங்கு அல்ல) மனிதன் தோன்றினான் என்றும் அறிவியல் கூறியது. அதற்கு, ஆதாரம் தந்தார் சார்லஸ் டார்வின் என்ற மகத்தான அறிவியல் அறிஞன். இந்த ஆதாரம், மக்கள் நம்பிய பல கட்டுக்கதைகள் – மனிதன் தோன்றிய வரலாறு கதைகள் – மீது சந்தேகம் ஏற்படவும், வலுக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது. பல மருத்துவ முறைகளும் மருந்துகளும் இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டு மனிதர்கள் மகிழ்ச்சியாக நீண்ட காலம் வாழ உயிரியல் வழிவகுத்தது. நார்வே, ஸ்வீடன், ஜப்பான் போன்ற நாடுகளில் மனிதர்கள் 89 வயது வரை இன்றும் வாழ்கின்றனர் என்றால் அதற்கும் முழு காரணம் அறிவியல்தான். அவர்கள் அறிவியலை நம்பினார்கள், எனவே அறிவியல் வளர்ச்சிப்பாதையில் பயணிக்கிறார்கள். அவர்கள் மனிதர்களை நேசிப்பது போல, அனைத்து ஜீவராசிகளையும் நிஜமாகவே நேசிக்கிறார்கள். ஒரு நாயைக்கூட கல்லால் அடிக்க மாட்டார்கள். ஆனால், அறிவியலை நம்ப மறுக்கும் மக்கள் மற்ற ஜீவராசிகளை நேசிப்பது போல பேசுவார்கள், பாசாங்கு கூட செய்வார்கள். ஆனால், உண்மையில் சகமனிதனைத் தொடமாட்டார்கள். அறிவியல் ஞானம், மனிதர்கள் மனதில் சக மனிதர்கள் மீதும் உண்மையான பாசத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அறிவியல் இல்லாத அறம் ஒரு மனிதன் சக மனிதனை வெறுக்க வகை செய்திருக்கிறது.

ஆக, விஞ்ஞானம் வளர்ச்சிப் பாதைதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சாதகமா, பாதகமா?

இனி, உங்களது இரண்டாவது கேள்விக்கான பதிலைப் பார்ப்போம். விஞ்ஞானம் சாதாரணமானவர்களுக்கு பயனா? பாதகமா? என்று கேட்கிறீர்கள். விஞ்ஞானம் ஏழை என்றும் பணக்காரன் என்றும் வித்தியாசம் பார்ப்பதில்லை. ஆனால், விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஏழைகளுக்கு வந்து சேருவதில்லை! இன்று கூட, பாதுகாப்பு அம்சம் கொண்ட சொகுசு கார் உங்கள் கைக்கும் என் கைக்கும் வந்து சேரவில்லை. அப்படி ஒரு சொகுசு கார் கூட 30 லட்சம் வரை செலவாகும் என்கிறார்கள்! இதைப்போலவே ஒரு குளிரூட்டி சாதனம் (AC Machine) இன்று பல வீடுகளுக்கும் வந்து சேரவில்லை!. ஒரு பிரிட்ஜ்  கூட வாங்க முடியாத கோடிக்கணக்கான வீடுகளும் இந்தியாவில் உண்டு என்பது வருத்தத்திற்குரிய செய்தி. இதற்கு மேலாக இதயமே வெடிக்கும் செய்தி ஒன்றும் உண்டு. ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் 20 லட்சம் குழந்தைகள் 5 வயதினை அடைவதற்கு முன்னரே இறந்து போகிறார்கள். அவர்களுடைய தாயாரின் உடல் நலம் இல்லை, குழந்தைகளுக்கு உணவு இல்லை, மருந்துகள் இல்லை, சுகாதாரம் இல்லை என்பவை காரணங்கள் என்றும் கூறப்படுகிறது.

அனைத்து அறிவியல் சாதனங்கள் இருந்தும், அவை ஏழைகளுக்கு சென்றடைய மறுக்கின்றன. காரணம் வறுமை! அதோடு அறியாமை என்ற பரிதாப நிலை. எல்லாத்திற்கும் மேலாக மூட நம்பிக்கைகள் இந்த நிலை நல்லது அல்ல. ஆனால், அதற்கு அறிவியல் அறிஞர்கள் காரணம் அல்ல.

முன்னோரின் தவறு:

நாமும் நமது முன்னோர்களும் தான் இந்த மோசமான நிலைமைக்குப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று தோன்றுகிறது. குழந்தைகளை அளவோடு பெற்று, ஆரோக்கியமாக வளர்க்க வழிவகை செய்தது அறிவியல். அவற்றை மேல் நாட்டினர் கடைப்பிடித்து மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தினார்கள். நமது முன்னோர்கள், அவற்றை ஏற்க மறுத்ததுடன், மகப்பேறு நமக்கு கிடைக்கும் வரம் என்று நம்பி பல குழந்தையைப் பெற்று மக்கள் தொகையைப் பெருக்கி விட்டனர். அரசு வலியுறுத்தியக் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தைக் கூட புறக்கணித்தனர். 1950ஆம் ஆண்டு 30 கோடியாக இருந்து  மக்கள் தொகை இன்று 138 கோடியாக மாறிவிட்டது. அதிகப்படியான மக்களுக்கு உணவு, குடிநீர், வீடு, மின்சாரம், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், வாகனங்கள் என்று வசதிகள் எங்கிருந்து வரும்?

குறைகள்:

வெட்டிப்பேச்சு, சோம்பேறித்தனம், குறைகூறுவது, போராட்டம் நடத்துவது, சாதிக்கொடுமை, திருட்டு, மோசடி, ஊழல், பெண் அடிமைத்தனம், குழந்தை சித்திரவதை, மதங்களைப் பரப்புவது, இனக்கலவரம் போன்ற அறிவியலுக்கு எதிரான இழிவான செயல்களில் பலரும் அக்கரையுடன் ஈடுபடுகின்றனர். இந்தக் கொடிய செயல்களால் நம்மால் முன்னோக்கி நகர முடியவில்லை.

விஞ்ஞானம் மட்டுமே மனிதர்களுக்கு நல்ல நடத்தையை ஏற்படுத்தியிருக்கிறது; மக்கள் முன்னேற வழிவகை செய்திருக்கிறது. ஆக, ஏழைகளும் பணக்காரர்களும், ஆண்களும் – பெண்களும் அனைத்து மதத்தினரும் அறிவியலை சரியாகக்கற்று, புரிந்து கொண்டு அதன்படி நடந்தால் மக்களிடம் அன்பு பெருகும்; மக்கள் தொகை குறையும், உழைப்பு பெருகும், சுகாதாரம் மேம்படும் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கும். அப்படி ஒரு சூழ்நிலை 100 ஆண்டுகள் கழித்து உருவானாலும் கூட போதுமானது. அதற்கான வழித்தடத்தை 2017 ஆம் ஆண்டு வாழ்ந்த நீங்களும் நானும் உருவாக்கினோம் என்று நமது சந்ததியினர் நம்மை பற்றி உயர்வாகப் பேச வேண்டும்.

ஆதங்கம்:

உங்களது ஆதங்கத்திலும் பொருள் உண்டு; மறுக்கவில்லை. அறிவியலை சிலர் தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம் அல்லது அது, செல்வந்தர்களை பெரிய செல்வந்தர்களாக்க உதவியிருக்கலாம். ஏழைகளை இன்னும் பரம ஏழைகளாக மாற்றியிருக்கலாம். ஆனால், அது விஞ்ஞானத்தின் தவறோ அல்லது விஞ்ஞானிகளின் தவறோ அல்ல. அந்தந்த நாட்டு மக்களின் தவறு. அவர்கள் தேர்ந்தெடுத்த தலைவர்களின் தவறு என்றுதான் கூறவேண்டும்.

முடிவு:

உச்சகட்ட அறிவியல் வளர்ச்சி அடைந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது நமக்கு பெருமை. அறிவியல் மயம் (யுகம் அல்ல) மற்றும் கணினி மயம் என்பவை வளர்ச்சிப்பாதைதான். எனவேதான், பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு அறிவியல் பாடம் கட்டாயமாக 12-ம் வகுப்புவரை போதிக்கப்படுகிறது. உலகில் வளர்ந்த நாடுகள் அறிவியலை மையமாக வைத்துதான் வளர்ந்துள்ளன. அறிவியல் கற்றவர்கள் பயனடைந்தனர். அதற்கு எடுத்துக்காட்டு இஸ்ரேல். தண்ணீர் இல்லாத ஊரில் கூட விவசாயத்தில் உலகத்திற்கே தலைமை ஏற்கிறார்கள். அங்கு ஏழைகள் இல்லை. அறிவியல், ஏழைகளை உயரமான இடத்திற்கு எடுத்துச் செல்ல உதவும். அறியாமையையும், வறுமையையும் போக்க வல்லது அறிவியல் மட்டும்தான். ஆக, அறிவியல் வளர்ச்சி, ஏழைகளுக்கு சாதகம்தான்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2017

இளமையும் இனிமையும்
கோடிகளை குவிக்கும் புரோ கபடி வீரர்கள்
பயிற்சி+முயற்சி=வெற்றி
வாழ நினைத்தால் வாழலாம் – 5
வளமான வாழ்வுக்கு யோகா! ஆரோக்கியம் தரும் ஆசனங்கள்!!
ஊக்கமும் – உற்சாகமும் வெற்றிக்கான ஆயுதங்கள்
இதயத்தின் மொழியை வாசிப்பது எப்படி?
விரும்பிய தருணங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்
கடவுளே
கண்ணில் மின்னல்
முயன்றேன் வென்றேன்
ஆரோக்கியச் சிக்கனம்
நவீன ஜீனோமிக்ஸ் பகுதி – 5
கற்பனை சக்திக்குள்தான் எத்தனை அற்புதங்கள்
வெற்றி உங்கள் கையில் – 42
பல் பராமரிப்பு
தன்னம்பிக்கை மேடை
உள்ளத்தோடு உள்ளம்