Home » Articles » இங்கு இவர் இப்படி

 
இங்கு இவர் இப்படி


ஆசிரியர் குழு
Author:

ந. சரவணக்குமார்

நிறுவனர் மற்றும் ஆலோசகர்

SRS ஆலோசனை மையம் தொண்டாமுத்தூர்,

கோவை

இவ்வுலகில் மனிதராய் பிறந்து விட்டாலே அவர்களுக்கென்று ஒரு சாதிப்பு காத்துக் கொண்டியிருக்கிறது என்பதை நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த சாதிப்பை எவ்வாறு எதிர் கொண்டு, எதிர்நீச்சல் போட்டு முன்னேற வேண்டும் என்பதில் தான் அந்தப் பிறப்பின் பயனே நமக்குப் புலப்படும். ஆற்றில் கூட இறந்த மீன் தான் தண்ணீரில் மிதக்கும். உயிருள்ள மீன் அனைத்தும் எதிர்நீச்சல் போட்டுக் கொண்டே தான் இருக்கும், உயிருள்ளவரை! அவ்வாறு தன் வாழ் நாளையே எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு, ஆலோசனை மையத்தை நிறுவி, அதன் ஆலோசகராகவும் பணியாற்றி வரும் திரு S. சரவணக்குமார் அவரோடு இனி நாம்.

நான் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் என்னும் சிற்றூரில் பிறந்தேன். அப்பா திரு. சாமிநாதன் ஓய்வு பெற்ற நேர்முக ஆட்சியர். தான் பணிக் காலம் முழுவதும் மிகவும் நேர்மையான முறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அம்மா திருமதி பத்மாவதி இல்லத்தரசி. குடும்பத்தை நிர்வகிப்பதில் வல்லவர். என்னுடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள்.

நான் பிறக்கும் போது மற்ற பிள்ளைகளைப் போல் இயல்பாகத்தான் பிறந்தேன். பெற்றோர்கள் மிகவும் சந்தோஷப் பட்டார்கள். ஆனால் ஆறு மாதத்திகுப் பிறகு தான் என்னுடைய கண் பார்வையில் குறைபாடு உள்ளதை அவர்கள்  உணர்ந்திருக்கிறார்கள். ஒரே ஆண் மகன் என்பதால், சிகிச்சைக்காக தமிழ்நாட்டிலுள்ள பல மருத்துவமனைகளுக்கு  என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கு  மருத்துவர்கள் சொன்ன ஒரே பதில் முழுமையாக கண் குறைபாடு இல்லை. ஆனால் காலப்போக்கில்,பார்வை போக வாய்ப்புள்ளது என்பது தான். இந்த வார்த்தையைக் கேட்டு என் பெற்றோர்கள் ஒரு கணம் கலங்கிவிட்டார்கள்.

கலங்கிவிட்டால் என்னுடைய தன்னம்பிக்கை பாதிக்கும் என்று எண்ணி என்னையும் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து தொண்டாமுத்தூர் அரசினர் பள்ளியில் சேர்த்தார்கள். ஏதேனும் ஒரு குறையுள்ளவர்களுக்கு ஒரு மாற்று அதீத சக்தியிருக்கும் அதுபோல எனக்கும் இருந்தது. எதைப் படித்தாலும் உடனே மனப்பாடம் ஆகிவிடும். அதனால் படிப்பு எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பள்ளிப்படிப்பு முழுவதுமாக முடித்து விட்டேன்.

ஆண்டுகள் போகப் போக,  என்னுடைய கண்பார்வை மங்கிக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில் முழுமையாக இருண்டது. பகலும் இருளானது, கண் முன்னே பார்த்து ரசித்தவைகள் அனைத்தும் இருளானது. என்னால் எதையும் உணர முடியவில்லை.  உலகத்திலேயே மிகவும் கொடுமையானது ஒன்று உள்ளது என்றால் பாதியில் வரும் பார்வைக் குறைபாடு தான். ரசித்த நேசித்த அனைத்தையும் இப்போது என்னால் பார்க்க முடியவில்லை. மிகவும் கவலைப்பட்டேன்.

இனி வாழ்க்கை அவ்வளவு தான் . வாழ்ந்தும் பயனில்லை. அவ்வாறு வாழ்ந்தாலும் என்னால் மற்றவர்கள் படும் துயரம் சொல்லி மாளாது என்பதை உணர்ந்தேன். என்னதான் ஆனாலும் காக்கைக்கு தன்  குஞ்சு பொன் குஞ்சு அல்லவா? நானே என்னுடைய நம்பிக்கை இழந்த நேரத்திலும் என்னுடைய கைக்கு ஒரு ஊன்று கோலாக இருந்து நல்வழியைக் காட்டினர் என் பெற்றோர்கள். சாதிக்க எப்போதும் குறை ஒருவனுக்கு தடையில்லை என்பதை அவர்களின் வாயிலாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

இருண்டது என்னுடைய கண்கள் தானே தவிர. என் எதிர்காலம் அல்ல என்பதை புரிந்து கொண்டேன். அப்போது என் சம்மந்தமான தேவைகளைத் தேடத் தொடங்கினேன். இத்தேடுதலின் மூலம் நல்ல மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தது. அதில் முதலானவர் திரு. ரவி அவர்கள் மத்திய பேங்கில் மேனேஜராக இருக்கிறார். அவரைப் போலவே திரு வெங்கடேசன் SBI பேங்கில் அசிஸ்டெண்ட் மேனேஜராகப் பணியாற்றுகிறார். மற்றொரு நண்பர் திரு.ஜெகன் கம்யூட்டர் டெக்னிக்கல் சென்டர் வைத்திருக்கிறார். இவர்கள் அனைவரும் என் போல குறைபாடுள்ளவர்கள் தான் இவர்களிடமிருந்து நிறைய ஆலோசனைகள் எனக்குக்கிடைத்தன.

இந்த ஆலோசனைகள் முழுவதையும் ஒரு வேதவாக்காக நினைத்து, என்னை நானே சீர்திருத்தவாதியாக நினைத்து, செம்மைப்படுத்திக் கொண்டேன். அவர்கள் சொன்ன பயிற்சியை 6 மாதம் கடுமையாகச் செய்தேன். அதன் பயன், இப்பொழுது என்னால் கணிப்பொறி சார்ந்த அனைத்து வேலைகளையும் செய்ய முடிகிறது. தமிழ், ஆங்கிலம் தட்டச்சு வேகமாக என்னால் செய்ய முடியும். எனக்குத் தேவையான எல்லா வேலைகளையும் யாருடைய உதவியும் இல்லாமல் நானே செய்து கொள்கிறேன். இதற்கு எல்லாம் காரணம் நான் எடுத்துக் கொண்ட பயிற்சிகள் தான்.

இயற்கையாகவே இறைபக்தியும், தியான சக்தியும் எனக்குள் உண்டு. என்னுடைய மாற்றத்தைப் பார்த்து என்பெற்றோர்கள் இந்த ஆலோசனை மையத்தை நிறுவிக் கொடுத்தார்கள். இந்த மையத்தின் முதன்மையான நோக்கமே, அதிகமான மன உளைச்சல், முறையற்ற எண்ணங்கள், மணவாழ்க்கை உறவு முறையில் விரிசல் குழப்பம், கவலை, பயம் தூக்கமின்மை, தற்கொலை எண்ணம் இப்படி பிரச்சனையுள்ளவர்களுக்கு நிரந்தரத் தீர்வு தர வேண்டும் என்பது தான்.

அது என்னால் முடியும் உளவியல் முறைகளைப் பயன்படுத்தி, அதற்கான தீர்வு கொடுத்து  அவர்களின்  வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவேன். பின்னால் வரக்கூடிய பிரச்சனைகளை முன்னரே அறிந்து அவற்றை வரமால் தடுத்து கொள்ள ஆலோசனை வழங்குவேன்.

இம்மையத்தில் அறிவியல் பூர்வமான உண்மைகளைக் கண்டறிந்து  ஆலோசனைகள் சிறப்பாக வழங்கப்படுகின்றன.

அது மட்டுமல்லாமல், கல்வி, ஞாபக சக்தி, அரசுத் தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணி பெறுவது, சுய தொழில் வளர்ச்சி, வீடு வாஸ்து, பண வரவு, கடன் தீர்வு, குடும்ப உறுப்பினர்களை தீய பழக்கத்திலிருந்து மீட்டல், திருமண வாழ்வு, குழந்தைப் பேறு,  உடல் நலம், ஆயுள் பாதுகாப்பு போன்ற பலவற்றிற்கு அறிவியல் ரீதியாக தீர்வு அளித்து வருகிறேன். இது ஜோதிடம் அல்ல உள்ளார்ந்த அறிவியல் சார்ந்த மனவளக் கலை ஆகும்.

2003 ஆம் ஆண்டு கோவை வந்த  முன்னால் குடியரசுத்தலைவர் ஆ.ப. ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பாராட்டு எனக்கும் என் நிறுவனத்திற்கும் கிடைத்தது.

25 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பயிற்சியைக் கொடுத்து வருகிறேன் என்னால் முடிந்தளவிற்கு என் குறைபாடு உள்ளவர்களுக்கும், ஏழ்மையானவர்களுக்கும் பயிற்சியை குறைந்த செலவில் அளித்து வருகிறேன். தமிழ்நாட்டில் மொத்தம் 6 லட்சம் பேர் கண் குறைபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் கூட நான் பயிற்சி கொடுத்து, அவர்களின் வாழ்க்கையில் நல்லதொரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.

சேவை மனப்பான்மை உள்ளவர்கள் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தால் நிச்சயம் நிறைய பேரின்  வாழ்வை வளம் பெற செய்யலாம் .

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2017

இங்கு இவர் இப்படி
முன்பு எப்போது சொல்லப்படாத ஒரு கதை
படைப்பாற்றல்
ஸ்ரீலங்கா – சுற்றுலா
என் பள்ளி
சோதனைகளை, சோதனை செய்…
பூமிப்பந்து பூத்துக் குலுங்கட்டும்…
உணவு முறைகள்
வாழ நினைத்தால் வாழலாம்
வெற்றி உங்கள் கையில்…37
விரும்பிய தருணங்களைத் திரும்பிப் பார்க்கிறேன்
மெய்நிகர்
புத்தாண்டு சிந்தனைகள்
தன்னம்பிக்கை மேடை
நெஞ்சில் துணிவிருந்தால்! நிலவுக்கும் போய் வரலாம்!!
உள்ளத்தோடு உள்ளம்